Pages

Wednesday, November 28, 2012

கவிதையெனப்படுவது யாதெனில்...

நொடிக்கு ஒரு முறை
என்னைப் பார்....
கவிதைகளென்ற பெயரில்
ஏதேனும் கிறுக்கு....
நிறைய பேசு...
அவ்வப்போது மெளனமாயிரு...
சண்டையிடு...
கோபத்தில் கண்கள் சிவந்து போ...
காற்றில் கலையும் கேசம் சரி செய்...
நான் கடந்து போகையில்
என்னை கவனிக்காதே...
தூரமாய் சென்று திரும்பிப் பார்...
சொல்லாமல் கொள்ளாமல் தொலைந்து போ...
எதிர்பாராமல் எதிரே வா...
எப்போதாவது புன்னகை செய்..
உன் தோழிகளோடு உரக்கப் பேசு...
சப்தமாய் சிரி....
சோகமாயிரு...
சந்தோசமாயிரு...
பிடித்த புத்தங்களை
நான் பார்க்கும் படி சுமந்து போ...
பிடித்த பாடலை முணு முணுப்பாகவாவது பாடு....
மழையில் நனை...
குளிரில் நடுங்கு...
வெயிலை திட்டு....
வராத பேருந்துக்காய் முகம் சுழி...
மணிக்கட்டு கடிகாரத்தை முறைத்துப் பார்...
ஓவியமாய் தலை வாரிக் கொள்...
கவிதையாய் பூச்சூடிக் கொள்..
......
......
......
........
எல்லாம் செய்து கொள்...
என்னை தூரமாய் நின்று....
உன்னைப் பார்க்க மட்டும் விடு....


தேவா. SSaturday, November 24, 2012

அவள் அப்படித்தான்...1978!


ருத்ரையா போன்ற படைப்பாளிகள் மீது விழாத வெளிச்சங்கள் எல்லாம் வெளிச்சங்களே அல்ல, அவை, அடர் இருட்டு என்றே நாம் கற்பிதம் கொள்ள வேண்டும். 1978களின் வாக்கிலேயே திரைப்படங்கள் பொழுது போக்க மட்டுமல்ல அதையும் கடந்த வாழ்வியல் பார்வைகளைப் பதிவு செய்பவை என்று  உணர்ந்து, அதைப் புரியவைக்க முயன்ற ஒரு மாபெரும் கலைஞன்தான் இந்த ருத்ரைய்யா. எதார்த்தத்தை பதிவு செய்ய முயல்பவர்களை வெகுஜனம் எப்போதுமே புறக்கணித்தான் செய்திருக்கிறது. அது எழுத்துலகாய் இருந்தாலும் சரி, திரையுலகாய் இருந்தாலும் சரி, அரசியல் வாழ்க்கையாய் இருந்தாலும் சரி...!

பிரமாண்டங்களைப் பற்றிய கனவினில் எப்போதுமே பரம ஏழையாய் வாழ பழக்கப்பட்டுக் கொண்ட தமிழ் ரசிகர்களுக்கு " அவள் அப்படித்தான் " என்னும் படத்தை புரிந்து கொள்ள காலம் அப்போது வாய்ப்பளித்திருக்கவில்லை. அதனாலேயே அந்தப் படம் பெரும் தோல்வியைத் தழுவி இருக்கக் கூடும். தற்போது தொழில்நுட்ப வசதிகள் பெருகிப் போயிருக்கும் சமகாலத்தில் கூட மாஸ் என்டெர்டெய்னர் என்று சொல்லக்கூடிய பொழுது போக்குச் சித்திரங்களை மட்டுமே ரீமேக் செய்யத் தமிழ் தயாரிப்பு  உலகமும் இயக்குனர் உலகமும் முண்டியடித்துக் கொண்டிருக்கின்றன. காலங்கள் கடந்தும் கலைப்படைப்புக்களை ரசிக்க முன் வராத வறட்சியான ரசிப்புத் தன்மையிலேயே இந்த சமூகம் இன்னமும் இருப்பதற்கு இதற்கு மேலொன்றும் சாட்சி தேவையில்லை.

மூன்று மணிநேரம் நான் காணும் சினிமாவில் நிறைய பொய்கள் எனக்கு வேண்டும், அந்த மூன்று மணி நேரமும் நான் என்னை மறந்து திரையில் நிகழும் அசாகாய சூர நிகழ்வுகளில் வாய் பிளந்து லயித்திருக்க வேண்டும்..அதாவது ' என் பணம் என் என்ஜாய்ன்மெண்ட்... '  என்ற சுயநலத்துக்குள் நாம் விழுந்து கிடப்பதாலேயேதான்...ஆகச் சிறந்த கலைப் படைப்புக்களை நாம் பெரும்பாலும் ஆதரிப்பதில்லை.

நான் என்னை மறக்க வேண்டும் என்று போதை ஊசிப் போட்டுக் கொள்வதும், மூன்று மணி நேர சினிமாவில் நான் சந்தோசமாய் மட்டுமே இருக்கவேண்டும் என்று நினைப்பதும் சற்றேறக்குறைய ஒரே மாதிரியான மனோபாவங்கள்தான். நிதர்சனத்தை உற்றுப் பார்க்க எல்லோருக்கும் பயம். உண்மையைப் ஒளித்து வைத்துவிட்டு அரிதாரம் பூசிக் கொண்டு பொய்யான புன்னகையோடு வலம் வரும் மனப் பிறழ்ச்சி கொண்ட வாழ்க்கையை நாமே விரும்பி தேர்ந்தெடுத்துக் கொண்டு விட்டோம். அதனாலேயே திரையில் மஞ்சுக்கள் " அவள் அப்படித்தானு" க்காய் பேசும் போது நம்மால் எதிர்கொள்ள முடியாமல் போகிறது.

வாழ்க்கையைப் பற்றி யோசிக்காமல் காதல் படிக்கட்டுகளில் ஏறி வந்து ஒரு பெண்ணின் கையைத் தொட்டவனுக்கு வசதியான வேறு ஒரு பெண் கிடைத்தவுடன் அவன் குடும்ப சூழலுக்காக காதலை துறக்க முயல்கிறான். சமூகத்தின் பார்வையில் அவனும் தியாகி, அவளும் தியாகி என்றாகிறது ஆனால் இழப்பு பெண்ணின் மீது மட்டுமே நிழலாய் படிந்து கொள்கிறது.

தாம்பத்யம், கற்பு, வாழ்க்கை, தாலி, ஒருத்தனுக்கு ஒருத்தி என்பதையெல்லாம் ஒரு தாய் இச்சைகளுக்காக உடைத்தெறிவதும், பின் தகப்பன் முன்பு பத்தினி என்று பொய் சொல்லி அழுவதும், எல்லாம் தெரிந்தும் சமூகத்திற்கு பயந்து அந்த தகப்பன் நடத்தை சரியில்லாத தன் தாயோடு ஒண்டிக் கொண்டு வாழ்வதும் என்று பார்க்குமொரு சிறுமி என்ன யோசிக்க முடியுமென்று சொல்லுங்கள்....?

திருமணம் என்னும் போலியான கட்டமைப்பையும் கட்டுப்பட்டு வாழும் வாழ்க்கையையும் அவள் நடிப்பாகத்தானே பார்க்க முடியும்...? யாரும் பார்க்கவில்லை...எந்தப் பிரச்சினையும் இல்லை என்றால் பிடித்தவர்களுக்காக எல்லை தாண்ட யாரும் இங்கே தயங்கமாட்டார்கள்...என்று நான் அடிக்கடி சொல்வதைத்தான்...மஞ்சு என்னும் கதாபாத்திரம் உணர்ந்து நகர்வதாக எனக்கு படம் பார்க்கும் போது புரிந்தது.

புரிதல் இல்லாமல் திருமணமென்னும் சடங்கினுள் அகப்பட்டுக் கொண்டு நித்தம் இங்கே சங்கடங்களை அனுபவித்துக் கொண்டே கலாச்சாரம் பற்றி பேசும் அறியாமைகள் கிழித்தெறியப்படத்தானே வேண்டும்...? விட்டு கொடுத்தல் என்பது தியகமாய் இங்கே பார்ப்படுகிறது. விட்டுக் கொடுத்தல் என்பது தன்னை கஷ்டப்படுத்திக் கொண்டு தனது விருப்பங்களை மறைத்து வாழும் ஒரு நடிப்பு  என்று சொல்லப்படும் போது...இங்கே மிகைப்பட்டவர்கள் அதை எதிர்க்கிறார்கள். ஏனெனில் நடித்து நடித்து இங்கே நடிப்பே இயல்பாகிப் போயிருக்கிறது.

மஞ்சுவின் உளவியல் வெளிப்பாடாய் கட்டியமைக்கப்பட்டிருக்கும் அவள் அப்படித்தானில் அவள் சந்திக்கும் மனிதர்கள் எல்லாம் அரிதாரம் பூசிக் கொண்டவர்கள். மற்றவர்கள் முன்பு தன்னை நிலை நிறுத்திக்கொள்ள நடிக்கும் நடிகர்கள். இப்படியான போலி மனிதர்கள் நிறைந்த நம் சமூகத்தால் மஞ்சுக்கள் பேசும் எதார்த்ததை எதிர்க் கொள்ள முடியாமல் போவதால் இயல்பான மஞ்சுக்கள் வித்தியாசமானவர்களாகிப் போய் விடுகிறார்கள்... . வித்தியாசமான போலிகள் இயல்பானவர்களாய் பார்க்கப்படுகிறார்கள்.

இது ஒரு மனித முரண்.

' முழு வானில் ஒரு பாதை ' என்று பெண்களின் பிரச்சினையை ஆவணப்படம் எடுக்கும் அருண், அருணுக்கு உதவி செய்ய மஞ்சுவை அனுப்பும் அவன் நண்பன் தியாகு என்று இயக்குனர் செதுக்கி இருக்கும் பாத்திரங்களின் நிஜப் பெயரை சொல்லவே எனக்கு தயக்கமாயிருக்கிறது. நடிகர்களின் பெயரைக் குறிப்பிட்டு அந்த கலைப்படைப்பை நான் களங்கப்படுத்த விரும்பவும் இல்லை, ஆதாலால் பாத்திரத்தின் பெயர்களுடனேயே நாம் பயணிப்போம்.

தியாகுவிற்கு வாழ்க்கை கொடுத்திருக்கும் பாடம் வேறு....! அவனை பொறுத்தவரைக்கும் பெண் என்பவள் சந்தோசத்திற்கு மட்டுமே...அப்படியாய் அனுபவிப்பதற்காகவே பெண்ணை போற்றவேண்டும் என்று அந்த பாத்திரம் பேசுவதும் இயல்பு, அழகு. ஒரு கட்டத்தில் தனியறையில் மஞ்சுவை சந்திக்கும் போது ' எனக்கு ஆண் தேவைதான் ஆனால் அந்த ஆண் நீ இல்லை..' என்று கூறி மஞ்சு தியாகுவை தனது மேனேஜர் என்று பார்க்காமல் கன்னத்தில் அறையும் இடம் எதார்த்தம் என்றால்....

அதற்கு அடுத்த காட்சியில் தியாகு பாத்திரம்....தனது அலுவலக அறையில், ' ஒரு ஆண் தனிமையில் ஒரு பெண்ணை சந்திக்கும் போது பெரும்பாலும் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படித்தான் நான் நடந்து கொண்டேன்.....ஒரு பெண் அந்தச் சூழலில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நீ நடந்து கொண்டாய்....இட்ஸ் ஓ.கே....' என்று கூறிவிட்டு எதார்த்தமாய் நகரும் இடம்....அட்டகாசம்...!

கூடப்படுத்து படுக்கையைப் பகிர்ந்து கொண்ட நாய் ஒன்று சமூகத்தின் முன்பு அவளை தங்கை என்று அடையாளப்படுத்தும் போது அதற்கு பதிலாய் தன்னை தேவடியா என்றே கூறியிருக்கலாம் என்று...மஞ்சு சீறி எழும் இடத்தில் பெண்களை போகத்திற்காய் பயன் படுத்திக் கொள்ளும் பெரும்பாலான ஆண்களை தூக்கிலேற்றுகிறார் படத்தின் இயக்குனர்.

நிஜத்திற்கு அரிதாரம் தேவையில்லை அது எப்போதும் இயல்பாகவே நகர்கிறது.  பெண்களைப் பற்றிய புரிதல் கொண்ட மென்மையான கதாபாத்திரமாய் வரும் அருண் மிகவும் பாதுகாப்பானவன் தான் என்றாலும், கடந்த காலம் கொடுத்திருக்கும் வடுக்கள் அருணையும் மஞ்சுவிடம் நெருங்கவிடாமல் சுட்டுப் பொசுக்கி விடுகிறது. அந்த வடு எழுப்பியிருக்கும் பாதுகாப்பு சுவரே அவளை  மீண்டும் தனிமையில் தள்ளியும் விடுகிறது.

குறைந்த பட்சம் இன்னும் ஒரு மாதத்திற்கு என் தூக்கத்தை இந்த திரைப்படம்  பறித்துக் கொள்ளப் போவதோடு பல பரிமாணங்களில் சிந்திக்கவும் வைக்கப் போகிறது. பெண்ணை போகமாக பார்க்கும் மனோபாவம் இன்னமும் இந்த சமூகத்திலிருந்து போய்விடவில்லை. அது நவீன சமூக இணைவுத்தளங்களின் வழியே நாகரீகமாய் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அதே போல பெண்களும் முழுமையாக தங்களை அறிவு சார்ந்து வெளிப்படுத்திக் கொள்வதும் இல்லை...பெரும்பாலும்க் அழகு சார்ந்தே தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றனர்.

ஒரு பெண், ஆணிடம் ஏமாந்து போகும் அளவிற்கு இன்னமும் இருப்பது அவள் பலவீனம் அல்ல....அவள் நம்பிக்கையின் ஆழம் அத்தகையது. ஆணும், பெண்ணும் அறிவு சார்ந்த பார்வைகளோடு....பழகி காமம் என்னும் ஒரு உணர்வினைக் கடந்து நிற்கும் காலம் இன்னும் நம் சமூகத்திற்குள் அடியெடுத்து வைக்கவில்லை. இன்னமும் பெண்ணின் புகைப்படத்தைப் போட்டு அவயங்களைக் கிண்டலடித்துக் கொண்டு அது இயல்புதான் என்று சப்பைக்கட்டுக் கட்டிக் கொள்ளும் மேதாவிகளாலும், பாரதி கண்ட புதுமைப் பெண்கள் தாங்கள் என்று கூறிக் கொண்டு எல்லோரையும் எடுத்தெறிந்து பேசும் பெண்களாலும் இந்த சமூகம் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது.

இந்தக் கறைகள் எல்லாம்  களையப்படவேண்டுமெனில் இந்த சமூகம் ருத்ரையாக்கள் போன்றவர்களுக்கு ஆதவளித்து ' அவள் அப்படித்தான்..'  போன்ற படங்களை வெகு விமர்ச்சையாக வரவேற்கவும் வேண்டும்.  மீண்டுமொரு முறை....அவள் அப்படித்தான்...மீள் உருவாக்கம் செய்யப்படவேண்டும். தமிழின் கடைசி கருப்பு வெள்ளைத் திரைப்படமான அவள் அப்படித்தான்....வண்ணங்களில் ஜொலிக்க வேண்டிய வைரம் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை....!

எரிந்து போன வீடு, 
முறிந்து போன உறவு,
கலைந்து போன கனவுகள்,
சுமக்க முடியாத சோகங்கள்,
அவள் மீண்டும் இறந்து போனாள்,
அவள்...
இறப்பாள், பிறப்பாள், இறப்பாள். . . .
....
....
....
....
' அவள் அப்படித்தான்....'


தேவா. S


Wednesday, November 21, 2012

தேம்பித் திரியும்.. வார்த்தைகள்...!

இந்தக் கணம் எழுதிச் செல்லும்
சுவாரஸ்யமான நினைவுகளின்
எல்லா பக்கங்களிலும்
உன் பெயரே எழுதப்பட்டிருக்கிறது...!

விடிவதற்கு முன்பாகவே
எழுந்து விடும் உன் நினைவுகளை
ஒரு குழந்தையாய் என் நெஞ்சில்
சுமந்து கொண்டுதான்
என் தினசரிகளைக் கடக்கிறேன்...!

யாரோடும் பேசப் பிடிக்கமால்
மீண்டும் மீண்டும் உன் ஞாபகங்களோடு
நான் பேசிப் பேசியே
கழிந்து கொண்டிருக்கும் என் பொழுதுகள்
உன்னால்தான் நிரம்பி வழிகின்றன...!

கைகோர்த்து நடக்கும் காதலர்களின்
கைவிரல்களாய் நானும் நீயுமே
இருப்பதாய் எனக்குள் தோன்றுவதும்...
யாரோ யாருக்கோ தலை கோத....
கோதும் தலை எனதாகவும்
விரல்கள் உனதாகவுமே
கற்பிதங்கள் கொள்கிறேன்..!

தாயின் முந்தானை பிடித்து...
அலையும் குழந்தையாய்...
உன் நினைவுகளை  பற்றிக் கொண்டு
திரியும் என் காதலின் மொழியற்ற ...
தேம்பல்களை நான் கவிதைகளென்று
சொல்வதும்  உன்னால்தானே...?!

எப்போதும் சுவாசிப்பது போல
உன்னை நேசிக்கும் ஒருவனிடம்
என் மீதான உன் காதல் எப்படியானது
என்ற உன் கேள்விகான பதிலை
எழுதத் தெரியாமல்....
இதோ ஏதேதோ கிறுக்கிக் கொண்டிருக்கிறேன்...
எப்படி முடிப்பது என்று தெரியாமல்...


தேவா. SMonday, November 19, 2012

இசையோடு இசையாக...தொகுப்பு 9!
காரணம் இல்லாமலேயே கண்ணீரை வரவழைத்து விடும் இந்தப்பாடல் இப்போது எனக்கு கண்ணீர் வரவைக்கும் காலச்சூழலில் எதையோ நான் தேடுகையில் எதேச்சையாய் என் முன் வந்து விழ....மனதை அழுத்தும் நினைவுகளை எப்படி நான்உள்ளுக்குள் வைத்துக் கொள்வது....? வலியை தாங்கிக் கொண்டு வாழ்வதெப்படி...? பிரிவைச் சுமந்து கொண்டு நகர்வெதப்படி என்று கை பிடித்து விளையாடிய காலங்களில் எனக்கு தெரியாமலேயே போயிற்று என் உயிர் அக்காவிற்கும் எனக்கும் இப்படி ஒரு தூரம் ஒன்று வந்து விழுமென்று....

கல்லூரி வரை கைப்பிடித்து அழைத்து சென்று... திருமணமென்னும் கப்பலில் ஏற்றி விட்டு தனியாய் கரை நின்று கை அசைத்த பிடிபடாத வாழ்க்கை கண்ணீராய் வந்து விழுந்தது. எத்தனை அழுதாலும் பெண் என்பவள் பிறந்த வீட்டுக்கா சொந்தம் அவள் எப்போதும் வாழப் போகும் வீட்டுக்கு நாம் வாரிக் கொடுக்கும் செல்வம் தானே..., 

ஒரு வருடம் எனக்கு முன்னதாக பிறந்த அந்த உயிர் வாசம் செய்த பின் தானே கடவுள் எனக்கு கருவறையை பரிசளித்தான். வளர்ந்து இருவேறு வாழ்க்கைச் சூழலுக்குள் வந்து விட்ட பின்பே...அவ்வப்போது பேசிக் கொள்ளும் தொலைபேசி பேச்சுக்களையும் காலம் என்ற கத்தி அடிக்கடி அறுத்துப் போட சிங்கப்பூரும், துபாயும் தொப்புள் கொடி உறவுகளின் தூரமாகிப் போனது....

எனக்கு ஒரு வாழ்க்கையை விதி வகுத்துப் போட அவளுக்கொன்றை பிரித்துப் போட்டது. விடுமுறைகள் வேறு வேறாகிப் போனது, கட்டிய துணைகளால் விருப்பங்களும் வெவ்வேறாகிப் போனது....வாழ்க்கையின் துரத்தலில் எங்கோ நாங்கள் ஓடிக் கொண்டிருக்க....

அவள் கைப்பிடித்து நடந்து சென்ற பால்யத்தின் வீதிகளுக்குள் என் நினைவுகளால் நடந்து பார்க்கிறேன். செல்ல சண்டையிட்டு அவளைச் சீண்டிப்பார்த்த நாட்கள் எல்லாம் மீண்டும் வரவே மாட்டோமென்று மனதுக்குள் நிதர்சனத்தை எழுதிப்பார்க்க..., எல்லா சண்டைகளிலும் எப்போதும் விட்டுக் கொடுத்து என் விருப்பத்திற்காய் தோற்றுப் போகும் அவளை இப்போது உள்ளுக்குள் தேடிக் கொண்டிருக்கிறேன். சூழல்களை வார்த்தைப்படுத்தி நான் இங்கே அடுக்க நினைத்தால் நான்  எழுதிக் கொண்டே இருப்பேனே தவிர முடிக்க முடியாது....! 

யாரை வேண்டுமானலும் அக்கா என்று அழைத்து விடலாம்... ஆனால் நினைத்து விட முடியாது... அப்படியாய் நினைத்து அழைக்கும் போது உடன் பிறந்தவள் என்றில்லாமல் அந்த உறவுக்குள் சிக்கிக் கொண்ட எல்லோருமே அன்பின் வெளிப்பாடாய்த்தான் இருப்பார்கள்...! 

தாயென்ற உறவின் இன்னொரு பிரதியான அக்காவை எப்படித்தான் நான் பிரிந்தேன் என்ற துயரம் என் நெஞ்சில் ஊஞ்சலிட்டு ஆடிக் கொண்டிருக்கிறது. ஏ.....ஏ...பால்யமே.... மீண்டும் ஒரே ஒரு முறை என் வாழ்வில் வந்து சென்று போ... அப்படியாய் வருகையில் என் அக்காவையும்  உன் கையோடு கூட்டிவா.... அவள் இல்லாத என் பால்யம் பாலைவனம் என்பது உனக்கும் எனக்கும் மட்டும் தானே தெரியும்...


ஒவ்வொரு ஆணிற்கும் ஒரு சகோதரி கண்டிப்பாய் இருக்க வேண்டும். அது அவனை ஆசுவாசப்படுத்தும். அவன் வாழ்க்கையை நிதானப்படுத்தும். அவன் பொறுப்பினை அதிகப்படுத்தும். வாழ்க்கையில் எதிர்ப்படும் பெண்களைப் பற்றிய புரிதலைக் கொடுக்கும். சீற்றத்தைக் குறைக்கும். தெளிவினை அதிகப்படுத்தும். சகோதரி என்னும் பெண் கொடுக்கும் ஆதரவில் தாயின் அன்பும் நண்பனின் நேசமும் தந்தையின் கண்டிப்பும் சேர்ந்தே இருக்கும்....

டி.எம் செளந்தராஜனும், சுசீலாவும் பாடியிருக்கும் இந்தப்பாடலை வெறும் பாடல் என்ற அளவோடு நாம் கடந்து சென்று விட முடியாது. இரண்டு குரல்களும், பாடல் வரிகளும் ஒரு பெரும் வாழ்க்கை ஓட்டத்தின் தவிர்க்க முடியாத சூழலை வலுவாய் பதிவு செய்து சென்றிருக்கும் காலத்தால் வெல்ல முடியாத காவியம். சிவாஜி சாரின் நடிப்பைப் பற்றி நாம் தனியே சொல்ல வேண்டியதில்லை...

வாழ்க்கையில் பிரிவு தவிர்க்க முடியாதது.....ஆனால் உடன் பிறந்து வளர்ந்து பட்டென்று ஒரு நாள் வேறு ஒருவனின் சொந்தமாய் ஆகிப் போய் அந்த வாழ்க்கைச் சூழலுக்குள் நம் கண் முன்னே இடம் பெயரும்... ஒரு சகோதரியின் பிரிவு...வாழ்க்கை முழுதும் சுமக்க வேண்டிய ஒருவிதமான சுகமான சுமை...

ஹ்ம்ம்ம்ம்ம்ம்  என்னிடம் இருந்து வார்த்தைகள் தற்காலிகமாய் விடை பெற எத்தனிக்கின்றன..... உயிரின் வலி என்னவென்று உணரவைக்கும் இந்தப்பாடலை....நீங்கள் கேளுங்கள்...

நான் கொஞ்ச நேரம் அழ வேண்டும்....!தேவா. SSaturday, November 17, 2012

துப்பாக்கி... A REAL GUN!!!!

துப்பாக்கி படம் நல்லா இருக்கு பாஸ். இளைய தளபதி ரொம்பவே சார்மிங்கா அழகா, கொடுத்திருக்கிற வேலைய கனகச்சிதமா செஞ்சு முடிச்சு இருக்கார். ஒரு பெரிய மாஸ் என்டெர்டெயினர் பாஸ்... துப்பாக்கி படம். வத்திக்குச்சிய கிழிச்சா மாதிரி கோர்வையான காட்சிகளும், செம த்ரில்லா நம்ம கைய பிடிச்சுக் கூட்டிக்கிட்டே ஓடுறமாதிரியான ஸ்கிரீன் ப்ளேன்னு ...எல்லாமெ ஜிவு ஜிவுன்னு அட்டகாசமா இருக்கு...

முருகதாஸ் மாதிரி ஆளுங்களுக்குத்தான் மொக்கை கதைகளை எப்படி செதுக்கி எடுத்து அதை சாறாப் புழிஞ்சு,  ஸ்ரிஞ்ல ஏத்தி கிளு கிளு போதை ஊசியா மாத்தி, அதை படம் பாக்குற ஆடியன்ஸ்க்கு எல்லாம் போட்டு விடலாம்ன்ற வித்தை தெரியுது. ஒரு படைப்பாளியா அவரோட திறமைய நாம பாராட்டித்தான் ஆகணும். அதே மாதிரி எவ்வளவுதான் எதிர்ப்பு இருந்தாலும் ரஜினிக்கு அப்புறமா  சின்னக் குழந்தைகள்ள இருந்து வயசானவங்க வரைக்கும் பிடிக்கிற ஒரு சூப்பர் ஹீரோவா விஜய் வளர்ந்து இருக்கார்ன்றதையும் நாம ஒத்துகிடத்தான் வேணும்.

லாஜிக் இல்லாம நிறையப் பண்றாரேன்னு கிண்டல் பண்ணிட்டு இருக்கவங்களையும் சேர்த்தேதான் விஜய் தன்னோட கிரேட் அட்ராக்சனால கரெக்ட் பண்ணி வச்சு இருக்கார். இந்த துப்பாக்கி படம் முழுதும் ரொம்ப அசால்ட்டாவே அட்டகாசமா நடிச்சு தன் ரசிகர்களுக்கு தீனி போட்டு இருக்கார். அதுவும் அந்த பன்னெண்டு தீவிரவாதிகள கொல்ற சீன் தமிழ்  திரையுலக ரசிகர்களை எல்லாம் சீட்டின் நுனிக்கே கொண்டு வந்துடுது. யாரோ ஒர் இராணுவ வீரரை எதிரி நாட்டு முகாம்ல கொடுமைப் படுத்தி கொன்னதுக்கு  பிறகு பதினாலே நாள்ள அவரோட தம்பி "ஆர்மில வந்து சேந்துட்டான்டா..." ன்னு விஜய்  சோ கால்ட் தீவிரவாதிகிட்ட எக்ஸ்ப்ளெய்ன் பண்ற இடத்துல அவரோட டயலாக் டெலிவரி செம.. செம செமன்னு காலர நாம தூக்கி விட்டுக்க கூட செய்யலாம்...

ஒத்த ஆளா நின்னு எதிரிகள துவம்சம் பண்ணிட்டு  போட்ல திரும்பி வர்ற அசாகாய சூரர் விஜய், தமிழ் சினிமா ரசிகன் ரஜினிக்கு அப்புறம கண்டு பிடிச்ச ஒரு சூப்பர்  ஹீரோவேதான்னு சூடம் கொளுத்தி சத்தியமே கூட நாம பண்ணலாம்....

படம் பாத்தாச்சா.. ஓ.கே....டன்... !!!!

ஒன் செகண்ட் ப்ளீஸ்....

முருகதாஸும் விஜய் சாரும் நம்மள நோக்கி பிடிச்ச துப்பாக்கிய கொஞ்சம் இப்போ நாம அவுங்க பக்கம் திருப்பிப் பிடிப்போமா...???!!!!!வண்டில இருக்க பிள்ளைங்களையும் சேத்து கொல்ற அளவுக்கு தீவிரவாதிகளுக்கு என்ன மாதிரியான உக்கிரம் இருக்கும்னு நாம லாஜிக்கோட யோசிக்கிற மொன்னை யோசனைகளை எல்லாம் ஒரு ஓரமா தூக்கி வச்சுடுவோம்..., 

ஒரு தரப்பு நியாயத்தையும் அதை தட்டிக்கேக்குற ஹீரோவையும் மட்டுமே காட்டி படத்தை ஹிட் பண்ணிக்கிட்ட முருகதாஸ் மாதிரி டைரக்டரஸ்...., தீவிரவாதிங்க ஏன் உருவாகுறாங்கன்னு சொல்லி விளக்கி கூட படம் எடுக்கக் கூடத் தேவையில்லை...,

குண்டு வைக்கிறவன வெறுமனே ஒரு தீவிரவாதின்னு எந்த ஒரு மதத்தையும் அடையாளப்படுத்தாம காட்ற ஒரு ஜெண்டில் மேனா கூட முருகதாஸ் இருந்திருக்க வேண்டாம்....

ஆனா...

குறைந்த பட்சம் வெளிநாட்டை சேர்ந்த தீவிரவாதிகள்னு வழக்கப்படி அரைக்கிற மாவையாவது அரைச்சு தொலைச்சுட்டுப் போயிருக்கலாம் இல்லையா....?

இந்தியாவில் வெடிக்கும் ஒவ்வொரு குண்டுக்கும் ஒரு முஸ்லீம்தான் காரணமா இருக்க முடியும் அப்டீன்ற ஒரு பொது புத்திய இந்தியர்கள் (தமிழர்கள்) மீது திணிக்க முயன்றிருக்கும் ஒரு வன்முறையாத்தான் என்னால இந்தப்படத்த பார்க்க முடியுது. ஒவ்வொரு படத்திலயும் வில்லன்களைப் பார்த்தா கோபம் வரும் நமக்கு, அடப்பாவின்னு ஒரு எரிச்சல் வரும் ,ஆனா இந்தப்படத்துல காட்டி இருக்குற சோ கால்ட் தீவிரவதிங்களப் பாத்தா எனக்குப் வருத்தமாத்தான் இருந்துச்சு....

ஸ்லீப்பர் ஷெல்ஸ் ஏன் உருவாகுதுன்னு......? தில்லா படம் எடுக்குற அசாகாய சூரப்புலிகள் யாராச்சும் நம்ம நாட்ல இருக்காங்களா என்ன? அப்படி எடுத்தாலும் வெளியிட்ற முடியுமா என்ன?  ஆனாலும் இந்த மாதிரி ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவங்கள நேரடியாவே பாயிண்டவுட்  பண்ணி எடுக்குற படங்களை மதச்சார்பில்லாத ஒரு நாட்டோட மதச்சார்பில்லாத சென்சார் போர்டு எப்படி அனுமதிக்குதுன்னுதான் தெரியலை...!

சினிமா வாழ்க்கையை பிரதிபலிக்கிறது. வாழ்க்கையும் சினிமாவைப் பிரதிபலிக்கிறது. துப்பாக்கின்ற பேர்ல நீங்க காட்டுன சினிமா பக்கத்து வீட்டுக்காரனையும், எதித்த வீட்டுக்காரனையும் ஸ்லீப்பர்செல்லா இருப்பானோன்னு சந்தேகிக்க வைக்கிற ஒரு கொடும் விசத்தை மனுசங்ககிட்ட பரப்பிக்கிட்டு இருக்குன்ற பயங்கரம் உங்களுத் தெரியுமா? 

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இருக்குற அங்காளி, பங்காளி சண்டையில இந்தியாவை வஞ்சம் தீர்க்க நினைக்கிற பாகிஸ்தான்ல இருக்க முஸ்லீமும், இந்தியாவுல வாழ்ந்துகிட்டு இந்தியாவையே உயிர்மூச்சா நினைச்சுக்கிட்டு வாழுற கோடாணு கோடி முஸ்லீம்களும் ஒண்ணு இல்லைன்னு எந்த புண்ணியவான் வந்து படமா எடுத்து சொல்லுவானோ தெரியலை...?!!!!

இந்திய அரசியலை சின்னாபின்னமாக்கிக்கிட்டு இருக்குற அரசியல் ஓநாய்களின் முகத்திரையைக் கிழிக்கிற மாதிரி படம் எடுக்கத் திரணியற்ற இயக்குனர்கள் முஸ்லீம் தீவிரவாதம் அப்டீன்ற கேவலமான விசயத்தை சினிமாவுல விதம் விதமா அரங்கேற்றி காசு பாக்குற கொடுமைய சமகாலத்து அறிவிற் சிறந்தவர்கள் புரிஞ்சுக்கிடணும். ஒரு படத்துல ஹீரோவ நியாயப்படுத்த வில்லன கெட்டவனா காட்றது சகஜம்தான்னு வச்சுக்கிட்டாலும்......

இந்திய தேசப்பற்றை ஊட்ட இஸ்லாமியர்களை தீவிரவாதிகளா காட்ற அதுவும் இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்தும் வகையில் வெளி வர்ற சினிமாக்கள்......மதச்சார்பில்லாத நாட்டில் வாழும் மானமுள்ள மனிதர்களுக்கு கொடுக்கப்படும் சாட்டையடிகள்ன்ற உண்மையை நாம வெளங்கிக்கிடணும்.....!

இஸ்ரேல் பாலஸ்தீனத்துல பண்ணி வச்சு இருக்குற அட்டூழியத்தையும், அசிங்கத்தையும் காஸாவுல செத்துப் போன பச்சை பிள்ளைங்களையும் பத்தியும் படம் எடுக்கத் துணிச்சல் இருக்குமா என் இந்திய(தமிழ்) சினிமாவுக்கு...?

ஈராக் மீது போர் தொடுக்க காரணங்கள் சொன்ன அமெரிக்க  ஏகாதிபத்தியம் அந்தப் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு சதாம் தூக்கிலிடப்பட்டு இத்தனை ஆண்டுகள் ஆகியும் ஈராக்கில் இருந்த ஆபத்தான அணு ஆயுதங்களை காட்சிப்படுத்த முடியாமையை விளக்கி படம் எடுக்க யார் இருக்கிறார் அகில உலகில்...?

காஷ்மீர் மக்கள் ஏன் போராடுகிறார்கள் என்பதின் அடிப்படையை விளங்கிக் கொள்ள முடியாத என் மக்கள்....எது நீதி? யார் தீவிரவாதிகள்?ன்னு எப்டி சார் தெரிஞ்சுக்குவாங்க...? 

ஈழத்தில் நிகழ்த்தப் பெற்ற மிகப்பெரிய தீவிரவாதத்தையும் அதன் கொடுமைகளையும் வெறும் காட்சிகளாய், செய்திகளாய்  கடந்து விட்ட நாம்...

நாளைக்கே கூடங்குளம் அணு உலையை எதிர்த்துப் போராடுற மக்களின் போராட்டத்தையும் தீவிரவாதம்னு   சித்தரித்து எடுக்கப்படும் சினிமாக்களுக்கும் விசில் அடித்து கைதட்டி கொண்டாடும் ஒரு ஈன சாதியாய்த்தான்இருப்போம். ஏன்னா நமக்கு பொழுது போக்கு ரொம்ப ரொம்ப முக்கியம்...அதுவும் விறு விறுப்பான  சீன்ஸ்டோட நம்ம ஆதர்சன ஹீரோவும்...அட்டகாசமான ஹீரோயினும், செம கிக்கா பாட்டும் இருந்துட்ட போதாதா என்ன நமக்கு...?

சக மனிதர்களை ஆதாரமில்லாமல் வர்த்தகத்திற்காய் தவறாய் சித்தரித்து வரும் எந்த ஒரு சினிமாவும் பொழுது போக்கு அல்ல...அவை நம் சமூகத்தின் மீது சுமத்தப்பட்டிருக்கும் சாபக் கேடுகள். விதி விலக்குகள் எல்லா இடத்திலும் இருக்கலாம் என்னும் உண்மையை நாம் ஏற்றுக் கொண்டு நகரும் அதே நேரத்தில் விதிவிலக்குகளையே இவர்கள் மிகைப்படுத்தி அதுவும் ஒரு சாராரையே குறிவைத்துச் செய்கிறார்கள் என்பதையும் உணரவேண்டும்..!

திரைக்கதையை வசீகரப்படுத்தி மாஸ் ஹீரோவை வைத்து  துப்பாக்கி இப்போது வென்றிருக்கலாம்......

விஜய் இன்னொரு படத்தில் இஸ்லாமியராய் நடித்து  இதைச் சரிக்கட்டி விடுவார் என்பன போன்ற தாமதமான சால்ஜாப்புக்கள் கூறி சமாதானமும் கூட சொல்லிக் கொள்ளலாம்...

ஆனால்...சத்தியத்தின் கையில் இருக்கும் துப்பாக்கி அதர்மத்தின் குரல்வளைகளை தயவு தாட்சண்யமின்றி சுட்டுத்தள்ளும் என்பது மட்டும் உறுதி...!!!!!


" யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத
அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யகம்
"


தேவா. S


Monday, November 12, 2012

பொன்நிலவில் என் கனாவே....!ஆதர்ஷன காதலியொருத்தியின் நினைவுகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களா நீங்கள்...? ஆம் என்றால் சபாஷ்....உங்கள் வாழ்க்கை ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறது. ப்ரியங்களை நெஞ்சோடு தேக்கிக் கொண்டு சிலிர்க்கும் அலைகள் மோதிச் சிதறும் அழகினை ரசிக்கும் ஒரு பாறையாய், குளுமையின் அரவணைப்பில் லயித்துக் கிடக்கும் சுகமும், அந்த ஆதர்ஷண காதலி பற்றிய நினைவுகளும் ஒன்றே...!

பகிராத எல்லாமே பரம சுகமானது மட்டுமல்ல அவை தேவ ரகசியத்தை ஒத்தது. வார்த்தைகளுக்குள் வெளிப்பட்டு செவி சென்று சேரும் போது அது சாதரணமென்ற எல்லைக் கோட்டைத் தொட்டுவிடுகிறது. காதலிக்கும் ஒருத்தியே அறியாவண்ணம் அவளை மனதில் வரிந்து கொண்டு வாழும் சுகம் இந்த வாழ்க்கையோடு தொடர்பில்லாத  காந்தர்வ உறவாகிப் போகிறது.

காதலிப்பவளிடம் சென்று காதலிக்கிறேன் என்று சொல்லி, அவளின் காதலை மறுமொழியாய்ப் பெற்றுக் கொள்ளும் வியாபாரத்தில் காதல் வென்று விட்டதாகத்தானே நீங்கள் நினைக்கிறீர்கள்...? நிஜத்தில் காதலில் வெல்லவும், தோற்கவும் ஒன்றுமில்லை என்பதை அறியாத பொதுபுத்திகள் போட்டுக் கொள்ளும் நாடகங்களே வெற்றி, தோல்வி என்ற மாயைகள். 

வென்றால் திருமணமென்னும் சடங்குக்குள் சென்று காமப்போர்வை போர்த்திக் கொண்டு கழிக்கும் ஒரு வாழ்க்கையும், தோற்றால் சோகமென்னும் உணர்வினை ஏந்திக் கொண்டு நான் தோற்றுவிட்டேன் என்ற சோகத்தோடு வேறொருத்தியை அல்லது வேறொருவனைக் கைப்பிடித்து மறுபடியும் காமப்போர்வையைப் போர்த்திக் கொண்டு வாழும் வாழ்க்கையும் என்றாகிப் போகிறது. இரண்டிலுமே காதல் வெல்ல வேண்டுமனால் உடன் வாழவேண்டும் என்ற ஒரு நிர்பந்தம் இருக்கிறது என்பதோடு மட்டுமில்லமால் பெரும்பாலும் எதிர்பார்ப்புகளுக்குள் சிக்கி காதல் சின்னாபின்னமாகியும் போய்விடுகிறது.

இந்த இரண்டையும் கடந்த ஒன்றை நான் மொழியாக்குகையில், புரிதலில் சிக்கல் ஏற்பட்டுப் போய் நான் சிக்கலானவனாகவும் உங்களுத் தெரியலாம். உண்மையில் காதல் என்ற ஒன்று பிறப்பதே பிரிதலில்தான் என்று நான் சொன்னால் என்னை அடிக்க வருவீர்கள்தானே..?

காதல் என்பது பரஸ்பரம் சொல்லிக் கொள்வதில்லை. காதல் என்பது யாரைக் காதலிக்கிறோம் என்று உலகத்திடம் அறிவிப்பதில்லை. இன்னும் சொல்லப் போனால் காதலிக்கப்படுவதை காதலியோ, காதலனோ அறியவேண்டிய அவசியமுமில்லை. காதல் என்பது காமத்தில் முயங்கிக் கிடக்கும் வழிமுறைக்கான துருப்புச் சீட்டும் இல்லை...! காதல் என்பது காதலிப்பவரை முழுமையாய் நேசித்தல். தனக்குள்ளேயே அந்த காதலை ஒரு செல்லப் பிராணியை வளர்ப்பது போல தலை தடவி, வாஞ்சையாய் நெஞ்சோடு சேர்த்துக் கொண்டு  அந்த உணர்வுகளில் மூழ்கிப் போதல்....!

நமக்குப் பிடித்த ஒருவரை நாம் நேசிக்கவேண்டுமெனில் அவரும் நம்மை நேசிக்க வேண்டும் என்று திரும்ப, திரும்ப சொல்லிக் கொடுத்து நம் நேசத்துகுரியவர்களை நேசிக்காமல் போவது எப்படி என்றுதான் மறைமுகமாய் கற்றுக் கொடுத்து இருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் யாரையேனும் உங்களுக்குப் பிடிக்கிறது அல்லது காதலிக்கிறீர்கள் என்றால்...அந்தக் காதல் எப்போதுமே காதலாய் இருக்கவேண்டும் என்று நீங்கள் விரும்பினால்....

அந்தக் காதலைச் சொல்லாமல் கொள்ளாமல் உங்களுக்குள் பொக்கிஷமாய் பூட்டி வைத்துக் கொள்ளுங்கள்...! தூரத்தில் தெரியும் மலைகளின் ரம்யமான அழகு எல்லாம் மலையின் அருகில் இருந்து பார்க்கும் போது நமக்குக் கிடைப்பதில்லை. இப்படியாய் எதிர்பார்ப்புகள் இல்லாமல் கனகச்சிதமாய் உள்ளுக்குள் உட்கார்ந்து கொண்ட காதலொன்று....தீரவே தீராமல் என்னுள் அலைந்து கொண்டே இருக்கும் சுகத்தை எப்படி நான் சொல்லி தீர்ப்பதென்றே தெரியவில்லை...

இடைவெளி விட்டு 
அமர்ந்து கொள்ளும் கனவுகளில் கூட
என் கவிதைகளை வாசிக்க மட்டுமே
அவள் வந்து செல்கிறாள்...!

நான் காதலிக்கிறேன் என்பதை
எப்படி சொல்லாமலிருக்கிறேனோ...
அப்படியே கூட அவளும் 
சொல்ல விரும்பாலிருக்கலாம்..

வார்த்தைகள் மோதிக் கொண்டு
பிறக்கும் சப்த அரக்கன் 
காதலென்ற பெயரில்
ஒரு மாற்று வித்தையை ...
நடத்தி விடக்கூடாது என்று
என்னைப் போலவே
அவளும் பயந்திருக்கலாம்..!

என்றெல்லாம் எழுதிப் பார்த்து நான் பலமுறை குப்பையில் கிழித்தெறிந்து விட்டு அதிலும் திருப்தியுறாமல் அந்த காகிதங்களை எரித்து காற்றில் கரைத்துக் கூட விட்டிருக்கிறேன். தினசரிகளில் அடிக்கடி சந்திக்கும் அவளை காதலிக்கிறேன் என்னும் லோகாதாய நினைவினை விட்டு நகர்ந்து நின்று இயல்பாக நடித்துக் கொண்டே உள்ளுக்குள் அவளுக்காக ஏதேதோ எழுத முயலுகிறேன் நான்....

வார்த்தைகளில்லாத
என் கவிதைகளில்
அவளின் நினைவுகளே 
நிரம்பிக் கிடக்கின்றன...!
வர்ணிக்க இயலாத 
வர்ணனைகள் நிரம்பிய
உணர்வுகளிலிருந்து
எழும் சங்கீதத்திற்கு
யாதொரு வடிவமுமில்லாமல்
பிரபஞ்சம் எங்கும் 
பரவிக் கிடக்கிறது ....
அவளுக்கான எனது இசை....!

***

மை நிரப்பப்படாத
என் எழுது கோலின் பரவச நிலையின்
உச்சத்தில்........
அவளுக்காய் அரங்கேறிக் கொண்டிருக்கிறது
யாரும் வாசிக்கமுடியாத 
காவியமொன்று....!

உறவுகளை அதுவும் பிடித்த உறவுகளை ஏதேனும் ஒரு அடைப்புக்குறிக்குள் கொண்டு வந்து நிறுத்தி விட்டு, நேசிக்கிறேன் பேர்வழி என்று தொல்லைப்படுத்தி, விட்டுக் கொடுக்கிறேன் பேர்வழி என்று நடித்துக் கொள்ளும் வாழ்வியல் முரண்களுக்கும் காதலுக்கும் யாதொரு தொடர்புமில்லை என்று உணரவைத்த என் காதலிக்கும் எனக்குமான ஒரே ஒரு உறவு காதல் மட்டுமே...! நான் அவளைக் காதலிக்கிறேன் என்ற உணர்வினைச் சரியாய் எனக்குள் பதியம் போட்டு விட்டு, அவள்  எனக்குத் தூரமாய்ப் போய்விட அந்த நினைவுகளில் இருந்து  நித்தம் பூக்கும் ரோஜாக்களை  ரசிக்கும் பாக்கியவானகிப் போனேன் நான்.

காலச் சுழல் மனிதர்களைப் பிரித்துவிடும்..... ஆனால்...காதலென்னும் உணர்வினைப் பறித்துப் போட மரணத்தால் கூட முடியாது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.  மனிதர்கள் மரித்துப் போகும் போது உடல் சார்ந்த நினைவுகள் அழிந்து போகலாம் ஆனால்....பிரபஞ்ச இயல்புகள் எப்போதும் நித்திய ஜீவனாய் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும்......!

' உற்று நோக்கினாலும் எதைப் பார்க்கமுடியவில்லையோ
அது வெறுமை எனப்படுகிறது....!
செவிமடுத்தாலும் எதைக் கேட்க முடியவில்லையோ 
அது அரிது எனப்படுகிறது '

- லாவோட்சு.

காதலை வாழ்க்கையை விட்டு என்னால் தனித்துப் பிரித்தெடுத்துப் பார்க்க முடிவதில்லை. காதலை ஊக்குவிக்கும் கிரியா ஊக்கியாய் அவள் இருப்பதாலோ என்னவோ அவளிடம் காதலைச் சொல்லும் போது மட்டுப்பட்ட விசயமாய் காதல் போய் விடுமென்ற பயத்திலே கூட நான் அவளிடம் காதலைச் சொல்லாமல் கூட இருந்திருக்கலாம். 

எது எப்படியோ...அற்புதமான உணர்வுகளுக்குள் என்னை உந்தித் தள்ளியிருக்கும் அவளது நினைவுகளை சிறகுகளாக்கி....பறக்கிறேன் வாழ்க்கையின் ரகசியங்கள் அடர்ந்து கிடக்கும் ஒரு பரந்த வெளிக்குள்......

நினவுகளுமில்லை நேசங்களுமில்லை
என்ற புரிதலின் உச்சத்தில்....
அழிந்தே போகின்றன.....
வாழ்வியல் உண்மைகள்...!

***

பெயரில்லாத ஒன்றிலிருந்துதான்
எல்லாமே தோன்றியது,
பெயரிடப்படாதது எல்லாம் இல்லாததாகி விடுமா என்ன...?
இருக்கும் எல்லாவற்றையும் இல்லாத ஒன்றுதான்
இழுத்துப் பிடித்து வைத்திருக்கிறது,
பிரபஞ்சம் தோன்றிய பின்னும்...
அதற்கு முன்னும்...
இல்லாமல் இருந்தது...
பெயரிடப்படாமலேயேதான் இன்னமும் இருக்கிறது...!


தேவா. SSunday, November 4, 2012

சீனிச்சாமித் தேவர்...!

எங்கூரு நாடி ஊரூருக்கு மொளக்கூட்டுத் திண்ணையின்னு ஒண்ணு இருக்கும். மாரியாத்தா மேடயின்னும் சொல்லுவாய்ங்க.. கோயிலு திருவிழாக்கு மொளப்பரி கட்டி அந்த மேடையில வச்சிதான் தூக்குவாய்ங்க...இதுல பாருங்க கழுத வருசத்துக்கு ஒருவாட்டி வர திருவிழாவுக்கு அம்புட்டு பெரிய திண்ணைய கட்டி வச்சுருப்பாய்ங்க...

திருவிழா முடிஞ்சு போனதுக்கப்புறம் பாத்தீயன்னா....காலேலயும் சாங்காலமும் அங்கனதேன்...ஒலக நீசு ஊரு நீசு அம்புட்டும் ஓடும். சீனிச்சாமி ஐயா வாட்ட சாட்டமான ஆளு, மறவூட்டு ஆளுகன்னா அப்டிதேன் இருப்பாகன்னு பொதுவாவே ஊருக்குள்ள பேசிக்கிருவாய்ங்க..... அதுவும் சீனிச்சாமி ஐயா குடும்பம் தலக்கட்டு நிறைஞ்ச குடும்பம், வயலு வெள்ளாமை, அடிதடி சண்டை பஞ்சாயத்துன்னு ஒரு காலத்துல மல்லுக்குன்னே நிக்கிற ஆளுகளாம்..

எம்புட்டு வருசம் ஆனா என்ன.. நாவரீகம் பெருத்துப் போயி அம்புட்டுப் பேரும் பேண்டும், சட்டையும் போட்டுக்கிட்டு வந்தாத்தேன் என்ன......தேவனும், பிள்ளைமாரும், நாடாரும், பள்ளனும், பறையனும்னு சாதிய வெளியச் சொல்லிப் பொசுக்குன்னு பேச ரோசிக்கிர இந்தக்காலத்துலயும்.. மொளக்கூட்டுத்திண்னையில வந்து ஒக்காரரு ஆளுக சாதியச் சொல்லித்தான் பேசிக்குறுவாக...

எலேய்....சாதியச் சொல்லி பேசிக்குறுவோம் அம்புட்டுதேன் அதுக்காக அடிச்சிக்கிறமாட்டோம்னு சீனிச்சாமி ஐயா கடாமீசைய வெரப்பா முறுக்கிக்கிட்டு சிரிக்கையில அம்புட்டு வெள்ளை மசுரும் சேந்தே சிரிக்குமப்புன்னு வண்ணாவீட்டு முருகேசன் சாயக்கடை வாசல்ல நின்னு சத்தமா சொல்லி சிரிச்சுக்கிட்டே.. மொளக்கூட்டுத் திண்ணையில இருக்குற ஆளுகளுக்கு சாயா வாங்குவாக...

சாதின்னா என்ன பொறப்பா... ? கிறுக்குப்பலே.. செஞ்ச தொழிலுடான்னு....சுருட்ட குடிச்சுக்கிட்டே சீனிச்சாமி ஐயா பேசுறத....வெத்தலைய போட்டுக்கிட்டு, புளீச் புளீச்சுன்னு துப்பிக்கிட்டு... ஏப்பு கொஞ்ச பொயிலை கொடுங்கப்புன்னு வாங்கிப்போட்ட மேனிக்கு ஊருச்சனமே அவர் வாயப்பாத்துக்கிட்டு கேக்கும்.....

சீனிச்சாமி ஐயா ஆமில இருந்தாகளாம்...அப்போ வெள்ளைகாரனை எதித்து சண்டை போட்டப்ப...கால்ல அடிப்பட்டு பொறவு ஊருக்கு வந்துட்டாகளாம்...கரண்டக்காலுக்கு மேல வேட்டிய தூக்கி பெரிய தழும்ப ஆளுகளுக்கு காட்டி பேசுறத பாக்காத ஊருச்சனமே இல்லையின்னு சொல்லலாம்...

மொளக்கூட்டுத் திண்ணையின்னா சீனிச்சாமி ஐயாதேன்.. சீனிச்சாமி  ஐயான்னா மொளக்கூட்டுத் திண்ணைதேன்னு ஊருச்சனத்துக்கே தெரியும்...! 1980 வாக்குல டிவி பொட்டியெல்லாம் அல்லாரு வீட்லயுமா இருந்துச்சு...மொளக்கூட்டுத் திண்ணைதேன்.... ஊரு நாட்ல நடக்குற அம்புட்டு சேதியவும் பேசுற இடமா இருந்துச்சு...

கோடாங்கி மயன் குமாரு சாயா கடைக்கு வர்ற ஒத்த தினத்தந்திப் பேப்பர வரி விடாம சீனிச்சாமி ஐயா காலையிலயே படிச்சிருவாக...! சாயவுல கொஞ்சம் டிக்காசன் கொறஞ்சாலும் போதும்...பேப்பர படிச்சுக்கிட்டே....ஏண்டா பேதில போவ.. என்னடா சாயா போட்டு இருக்க .. நீயி.... கொங்கப்பன போல நீயும் கோடாங்கி அடிச்சு பொழச்சு இருக்கலாம்லனு வெட காலு  வெட்றாப்ல கத்தி, சாயாத்தண்ணிய ஊத்திப்புட்டு மறுக்கா மருவாதையா போடுறா கிறுக்குப்பலேன்னு சொல்லி மீசைய முறுக்கிக்கிட்டே மேக்கொண்டு பேப்பர படிப்பாக...

இப்போ ரொம்ப ரோசனையா இருக்கும்லே....வெள்ளக்காரனே ஆண்டு இருந்தா கொஞ்சமாச்சும் நல்லா இருந்து இருப்பமோண்டு இருக்கு...போக போக ரொம்ப மோசமாத்தேன் நாடு போவும் போல .. வெலவாசி எல்லாம் ஆத்தே... கடகடன்னு கடகப் பொட்டியில பாம்பு ஊறிப்போற மாதிரியில ஏறிப்போச்சு....அரசியலாம்லே நடத்துறாக இப்போ எல்லாம்....சுத்த அதிகப்பிரசிங்கித் தனமவுள்ள இருக்கு.....காமராச தோக்கடிச்சு சாகடிச்ச ஊருதானய்யா இது...இந்த நாட்டுக்கு இனிமேல ஒரு காமரசான் பொறந்து வர முடியாதுப்பேன்னு பேசிக்கிட்டே....

...மொளக்கூட்டுத் திண்ணையில சாங்காலம் அஞ்சு மணிக்கு வந்து சீனிச்சாமி ஐயா ஒக்காந்த ஒடனேயே...ஆளுக கூட்டம் ஒவ்வொண்ணா வந்து சேர ஆரம்பிச்சுரும்...இது எப்புடீன்னா.....கம்மாயிக்கு பக்கத்துல கிடந்த பொட்டல்ல எம். எம். டாக்கீஸ் டெண்ட் கொட்டாயி ஒண்னு தொறந்த ராக்கப்பன் செட்டியாரு சீனிச்சாமி ஐயாகிட்ட வந்து கெஞ்சுற அளவுக்குப் போயிருச்சு.....எப்பேய்.... அம்புட்டு சனமும் ஒங்க வாயப்பாக்க வந்து ஒக்காந்துட்டா கொட்டாயிக்கு யாருப்பே வருவாக, எம் பொழப்புல மண்ணு போடதியப்பேன்னு அவரு கெஞ்ச...

கெக்க்க்கெக்கேன்னு... கெக்காளி போட்டு சீனிச்சாமி ஐயா சிரிச்சுப்புட்டு, " கிறுக்குப்பலே நல்ல படம் ஆடுனா தன்னால வரப்போறாய்ங்க...போடா போன்னு...வெறட்டி அடிச்சுப்புட்டு....நமக்கு பேசலேன்னா....மக்க மனுசங்கள பாக்கலேன்னா.... தூக்கம் வராதெப்பேன்னு" ஆளுக கிட்ட எல்லாம் சொல்லிச் சிரிக்கிற சத்தத்தை கேட்டு....

கம்மாக்கரையில பொழுது சாஞ்சு போச்சேன்னு கொஞ்சம் கண்ணசந்த காக்கா குருவி எல்லாம் கேட்டுப்புட்டு....ஆத்தே  இது என்ன சத்தம்னு...பதறிக்கிட்டு எந்திரிச்சு கத்த ஆரம்பிசுரும்னா பாத்துக்கிடுங்களேன்....!

பொண்டாட்டிய சாக கொடுத்துட்டு, ஒத்த மகனையிம் மருமக கையில தூக்கிக் கொடுத்துப்புட்டு...வெருண்டு போயி கிடந்த சீனிச்சாமி ஐயாவுக்கு.. தம்பி மக சரசுதேன் ஒத்தாசை...! சோத்த கீத்த ஆக்கி வச்சு தண்ணிய தூக்கி வச்சுட்டு அது பாட்டுக்குப் போயிறும்....! சீனிச்சாமி ஐயாவுக்கு மொளக்கூட்டுத் திண்ணையின்னா அம்புட்டு உசுரு....

ஆண்ட பரம்பரை, ஆண்ட பரம்பரைன்னு சொல்லிக்கிட்டு  மீசைய திருகிட்டு திரிஞ்ச காலம் எல்லாம் போச்சப்பே....எம்புட்டுதான் வீர, சோரமா, திமுறா, காசோட பணத்தோட திரிஞ்சாலும் .... தனியா ஒத்தையில கொண்டாந்து போட்றுமப்பா காலம். ரவைக்கு படுத்து.. காலையில எந்திரிக்கையில ஊட்டி எலும்பு வலிக்கும், நடு முதுகு வலிக்கும், முட்டி ரெண்டும் விண், விண்ணுண்டு தெரிக்கும்.....அப்ப யாருகிட்ட போயி சொல்றது நம்ம வீரக்கதைகளன்னு....

பேசிக்கிட்டே  இருந்த சீனிச்சாமி ஐயா படக்குன்னு நெஞ்சு வலிக்குதுன்னு சொல்லிக்கிட்டே மாரப்புடிச்சுக்கிட்டு ஒரு நா.....பொசுக்குன்னு செத்துப் போனாரு....

ஊருரூக்கு இருக்குற மொளகூட்டுத் திண்ணைகள பாக்குறப்பல்லாம் சீனிச்சாமி ஐயாவோட நாவகம் அந்தூரு ஆளுகளுக்கு வராம இருந்துச்சுன்னா அவுக புத்தியிலதேன் கோளாறுன்னு சொல்லணும்....!

எல்லா மொளக்கூட்டுத்திண்ணையிலயும் பெருசுக இருக்கத்தேன் செய்யும்...ஆனா..." ஏய்..!!ஏய்....!!! வடுவாப் பயலே.. அது என்ன சினீச்சாமி தேவரய்யான்னு  கூப்ற..கொங்காப்பயலே.....சீனிச்சாமின்னு சொல்லு... இல்ல ஐயான்னு சொல்லு..." ன்னு சொல்லி அதட்டிப் பேசுற தெளிவு இருக்குமான்றது சந்தேகந்தேன்...

சீனிச்சாமி ஐயா செத்துப் போனதுக்கப்புறம் மொளக்கூட்டுத் திண்ணை அனாதையாகிப் போக...

ராக்கப்பஞ்செட்டியாரோட டாக்கீஸ்..சூப்பர் டீலக்ஸ் தேட்டரா மாறி பொறவு டீலக்ஸ் தேட்டர்லயும் கூட்டம் இல்லாம...அதையிம் இழுத்து மூடிட்டுப் போனது எல்லாம் தனிக்கதை....!


தேவா. S

Thursday, November 1, 2012

பாலுமகேந்திரா....என்னும் மெளனம்...!


ஆள் அரவமற்ற சாலையொன்றின் இரு புறங்களிலிருந்தும் வளர்ந்து சாலைக்கு குடை பிடிக்கும் மரங்களையும் கடந்து, தார்ச்சாலைகளில் பட்டு தெறித்து, கவிதை படைத்துக் கொண்டிருந்த கனமானதற்கும் மிதமானதற்குமிடையேயான ஒரு  மிருதுவான மழையில் நனைந்தபடியே நடந்து கொண்டிருப்பதை ஒத்த அனுபவத்தை நான் சுகித்துக் கொண்டிருந்தேன்.

அனுபவித்தலுக்கும் சுகித்தலுக்கும் கனமான,  அதிகனமான வித்தியாசத்தை நீங்கள் உணர்ந்து இருக்கிறீர்களா? 

அனுபவித்தலெனும் போது அனுபவம் வேறு அனுபவிப்பவர் வேறென்றாகி விடுகிறது. இங்கே அனுபவம் நின்று போனால் அனுபவிப்பவனை வெவ்வேறு சூழல்கள் ஆக்கிரமித்துக் கொள்கின்றன. சுகித்தல் அப்படியானது அல்ல.. சுகித்தலில்  பெரும் இன்பம் நம்மிடமிருந்தேதான் நமக்குக் கிடைக்கிறது.. அங்கே அனுபவங்கள் மலை முகட்டை உரசிச் செல்லும் மேகமாய் சென்று விட குளுமையில் நனைந்து கிடப்பது நாம் மட்டுமே....! தானே தானாய் கிடக்கும் பேறு நிலை...

காமெரா கவிஞன் என்று அறியப்பட்ட தொப்பியணிந்த தொங்கு மீசைக்குச் சொந்தக்காரனான பாலு மகேந்திரா  தனக்குள் நிரம்பிக் கிடக்கும் வாழ்வியல் உணர்வுகளை கன கச்சிதமாய் காட்சிப்படுத்தி, அந்த காட்சிகளின் மூலம் தான் சுகித்ததை ரசிகர்களுக்கு இடம் மாற்ற . அவன் மீட்டிய சந்தியா ராகம் என்னை மேகமாய் மோதிச் செல்ல.....

இதோ குளுமையில் நனைந்து கிடக்கிறேன் நான்...

சம்பவங்களுக்குள் வாழ்க்கையை கரைத்துக் கொண்டு இயந்திரமாய் ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு மெல்லிய உணர்வுகளைக் காட்சிப்படுத்தும் கலையை எங்கே இருந்து கற்றாய் பாலுமகேந்திரா....? என்று அவரது கரங்களைக் பிடித்துக் கொண்டு கதறத்தான் தோன்றுகிறது. தகப்பனுக்கு சமர்ப்பணம் என்று வாக்கியப்படுத்திவிட்டு ஆரம்பிக்கும் திரைக்கதையில் தொடர்ச்சியாய் வசனங்களோ, இசையோ சி(ப)ல நிமிடங்களுக்கு இல்லை...

எதார்த்தத்தைப் படைக்கிறேன் பேர்வழி என்று எருமைமாடுகளுக்கு எல்லாம் அரிதாரம் பூசி படமெடுக்கும் ஒரு காலச்சூழலில் பாலுமகேந்திராக்களின் கேமாரா சரியாய் காட்சிகளை பதிவு செய்வதே மிகப்பெரிய கவிதைதான். பாலுமகேந்திரா தனது ஒவ்வொரு திரைப்படத்திலும் தனக்குள் அடர்ந்து கிடக்கும் மெளனத்தையும், மெல்லிய இழையோடும் சோகத்தையுமே, வாழ்க்கையினூடே படர்ந்து கிடக்கும் நிலையாமையையுமே தொடர்ச்சியாய் சொல்ல முயன்று கொண்டிருப்பதாகவே எனக்குப் படுகிறது. பாலுமகேந்திராவின் படத்தைப் பார்த்து முடித்தவர்களுக்கு ஆழமான படத்தின் தாக்கம் இருக்குமே அன்றி, பெரிதாய் ஒரு செய்தியும் பகிரஇருக்காது .. என்னைப் போலவே... ஆனால்...

ஏதோ ஒன்றை சொல்லவேண்டுமென்ற தாகத்தோடு, கரடு முரடாய் நான் உணர்ந்ததை இங்கே வார்த்தைப்படுத்த முயன்று கொண்டிருக்கிறேன்.

முதுமையின் விடியல் சோம்பலானது மட்டுமல்ல சோகமானதும் கூட....அது ஏழை பணக்காரன் என்ற பேதங்களுக்கு அப்பாற்பட்டது. இடுப்பு எலும்பிலே வலிக்கும், கணுக்கால்கள், ஆடுதசைகள், முட்டி, முழங்கால், தோள்பட்டை, கழுத்து, புஜங்கள் என்று எல்லா பிரதேசங்களிலும் இழைவுத்தன்மை வற்றிப் போயிருக்க .... வலி என்பது முதுமையின் விடியலில் நாம் விழித்து
எழும்போதே 
உடன் எழுந்து விடுகின்றன....

சொக்கலிங்க பாவதர் உடல் மடக்கி காலையில் விழித்து எழும், சில நொடிகளை கேமரா மேலே நான் சொன்ன எல்லாவற்றையும் காட்சிப்படுத்தி விடுகிறது. வயதான காலத்தில் யாருமில்லை என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டு வழியில் நொண்டியடித்து ஆடிப்பார்க்கும் சில்லுக்கோடு ஆட்டமும், தண்ணீரில் ஓட்டினை விட்டெறிந்து அந்த சந்தோசத்தை பேரனுபவமாய் அந்தக் கிழவர் கிரகித்துக் கொள்ளும் நிமிடங்களும்.....அதி அற்புதமனவை.

காட்சிப்படுத்த முடியாத
கதையொன்று எனக்குள்
ஊறிக்கிடக்கிறது எப்போதும்....
என் கனவுகளில் நான் கட்டும்
ஆலமரத்து ஊஞ்சலில்...
அந்தக் கதையேறி ஊஞ்லாடும்....
நதிகள் நடை பயில்கையில்
நதியின்மேல் அது நடை பயிலும்..
பெருமழையினூடே சிலிர்க்க வைக்கும்
குளிராய் பூமி எங்கும் பிரயாணம் செய்யும்....
வயல்வெளியினூடே காற்று செய்யும்
சில்மிசங்களை அது கண் கொட்டாமல்
பார்த்துச் சிரிக்கும்....
என் கதை என்னவோ நல்ல கதைதான்..
ஆனால்...என்ன ஒன்று...
என்னால் காட்சிப் படுத்த முடியவில்லை...
அவ்வளவுதான்...!

இப்படித்தான் சந்தியா ராகம் எனக்குள் புகுந்து விளையாடி தாக்கத்தைக் கொடுத்து விட்டு ....சப்தமில்லாமல் ஒதுங்கிக் கொண்டது.

சோகத்தையும் மெளனத்தையும் சேர்ந்து கொடுக்கும் முதுமை எல்லோருக்கும் பிடித்து விடாது. எனக்கு என்னவோ... சொக்கலிங்கபாகவதரின் முதுமையும், தனிமையும், வாழ்க்கையின் கோர முகங்களை வாயைப் பாதி திறந்து கொண்டு பகுதி நாக்கை காட்டி எதிர்கொள்ளும் பொறுமையும் நிரம்பப்பிடித்துப் போய்....இன்றே எனக்கு முதுமை வாராதா என்ற ஒரு எண்ணத்தை பெரும் வேட்கையாய் நிறைத்துப் போட்டுவிட்டது.

பாலு மகேந்திரா கேமராக் கவிஞன் மட்டுமல்ல.....உணர்வுகளின் நாயகன்...!

இத்தனை ஜாலங்களையும் பாலுமகேந்திரா சாரை நிகழ்த்தச் சொல்லி விட்டு பிரளயமொன்று மெளனமாய் இதன் பின் நின்று கொண்டிருந்து விட்டு .. சொக்கலிங்கபாகவதரின் மனைவி இறக்குமிடத்தில்.....ஒற்றை புல்லாங்குழலாய் ...சோகத்தை இறைத்துப் போட்டு..... நம்மை கதறவைக்கிறது. அந்தப் பிரளயத்தின் பெயர் பின்னணி இசை.....!!!!!!!

இங்கே இந்தப்படத்தில் அதிகமாய் பின்னணி வாசித்திருக்காவிட்டாலும்..எப்போதெல்லாம் அவரின் வாத்தியம் இசைக்கத் தொடங்குகிறதோ அதற்கும்...அதற்கு அடுத்த இசைக்கும்.....இடையேயான இசையில்லாத மெளனம் முழுதும் இசையாகவே பிரம்மாண்டமாய் விசுவரூபமெடுத்து நிற்கிறது.

வாசிக்கும் போது வாத்தியக்கருவிகளால் மகிழ்விப்பவன் இசைக்கலைஞன் ஆனால் வாத்தியம் இசைப்பதை நிறுத்திய பின்பும் மெளனத்திற்குள் நம்மை பிடித்துத் தள்ளி ஆளுமை செய்பவன் கடவுள்...!இந்தப் படத்தில் நம்மை ஆள்வது இசை அல்ல.. ஒரு இசைக்கடவுள்...!

 பாலுமகேந்திரா எடுப்பது எல்லாம் வெறும் செல்லுலாய்டு படங்கள் இல்லை... அவை எல்லாம் உயிருள்ள ஜீவன்கள்...! அவனின் கதைக்கு உயிர் இருக்கிறது, பாத்திரங்களுக்கு உயிர் இருக்கிறது, அவன் காட்சியமைப்பிற்கு உயிர் இருக்கிறது, படத்தில் அவ்வப்போது வந்து போகும் இசைக்கும் துடிப்பான உயிர் இருக்கிறது.

சிங்கக் கதையை பேத்தியிடம் சொல்லும் சொக்கலிங்க பாகவதர் சாதாரணமாய் அலுப்போடு போனால் போகிறதென்று கதை சொல்லும் சாதாரண தாத்தா அல்ல....

அவர் நிஜமாய் சிங்கமாகவே மாறி, சொல்லும் கதையில் பேத்தி ஆழ்ந்து லயித்து சந்தோசப்பட வேண்டுமென்ற பிரயாசைக் கொண்டவராய்,  மனைவியை இழந்து விட்டு தம்பி மகனின் வறுமையினூடே அவனுக்குச் சுமையாய் வந்திருக்கிறோமே .... என்ற இயலாமையில் இந்தக் கதையையாவது  சொல்லி பயனாய் இருப்போமே என்ற சிரத்தைக் கொண்டவராய், தான் கதை சொல்லும் அந்த கணத்தில் லயித்துப் போய் குழந்தையாய் மாறியே போனவராய் அத்தனை உணர்வுகளையும் கொட்டி கதை சொல்லும் ஒரு உணர்ச்சிப் பிழம்பான பாவமான தாத்தா....மேலே நான் சொன்ன அத்தனையையும் விளக்கிச் சொன்னது ஒரு சிறு அறையும், ஒரு சிறுமியும், சிறு விளக்கும், சொக்கலிங்க பாகவதரின் குரலும் மட்டுமே....

சந்தியா ராகத்தை வார்த்தைப்படுத்த முடியாது நண்பர்களே..... அது மெளனத்தின் மொழி....!!!! இவ்வளவு நேரம் நான் இங்கே மொழிப்படுத்திக்கொண்டிருப்பது எனது ஆற்றாமையையும் காலங்கள் கடந்து  காட்சி வழியாய் சத்தியத்தையும், அன்பையும், வரலாற்றினையும் சாட்சிகளாய் எடுத்துக்காட்டவேண்டிய சினிமா என்னும் கலை...பொழுது போக்கு என்னும் அடையாளத்தை சாக்கு போக்கு சொல்லி தனது கழுத்தில் மாட்டிக் கொண்டு சீரழிந்து போய்க் கொண்டிருக்கிறதே என்ற வருத்தத்தையும் தான்....

பாலு மகேந்திரா போன்ற கலைதாகம் கொண்ட ஞானிகள்....ஒரு காட்டில் குயில் மட்டுமே கூவ வேண்டுமா என்ன....? இனிமைக்கு மட்டுமே சொந்தமானது அல்ல காடு. அது எல்லா ஜீவராசிகளுக்க்குமே பொதுவானது என்று  கூறலாம்...ஆனால் ஒரு காடு முழுதும் குயில்களே கூவிக் கொண்டிருக்க வேண்டும் கட்டுப்பாடுகளின்றி என்பதுதான்  நம்மைப் போன்ற ரசிகர்களின் ஆசை.

அபஸ்வரங்களே மிகையாய் ஒலித்துக் கொண்டிருக்கும் சினிமா உலகத்தில் பாலு மகேந்திராக்களின் ஸ்வரங்கள் கர்ண கம்பீரமானவை..... நிஜமாய் உள்வாங்கிக் காணும் மனிதர்களை ஆழ்நிலை தியானத்திற்குள் தரதரவென்று இழுத்துச் செல்லும்....சக்தி பீடங்கள்....

மெளனத்தை விவரிக்க நான் எத்தனை ஆயிரம்  பக்கங்கள் எழுதினாலும் முடியாது என்னும் என் இயலாமையை ஒத்துக் கொண்டு  தோல்வியோடு என் பேனா தற்காலிகமாய் வாய் மூடிக் கொள்ள...

நான் மீண்டும் சந்தியா ராகத்திற்குள் மூழ்குகிறேன்....


தேவா. S 

பின் குறிப்பு: சந்தியா ராகமென்னும் அற்புதக் கலைபடைப்பில் நிலை தடுமாறி அதன் தாக்கத்தை பதிவு செய்ய முனைகில் திரைப்பின்னணி இசைக்கு சொந்தக்காரர் இளையராஜாவாகத்தான் இருக்க முடியும் என்று அனுமானித்து சறுக்கி விட்டேன். 

வாசித்து, பின் யார் இசை என்பதை இணையத்தில் சரியாய் தேடி பின்னணி இசையை வாசித்தது எல். வைத்தியநாதன் என்று கூறி சரிப்படுத்திய வாசக நண்பர் சுரேஷ் அவர்களுக்கு இனது அன்பான நன்றிகளும் வணக்கங்களும்...!