Pages

Wednesday, July 30, 2014

செல்லம்..ப்ரியம்....இம்சை...!


உங்களுக்கு எல்லாம் ஒன்று தெரியுமா? அவளை நான் இதுவரையில் சந்தித்ததே இல்லை. பேசி இருக்கிறோம் நிறைய நிறைய...! கவிதைகள் பரிமாறிக் கொண்டிருக்கிறோம். அவை யாவும் ஒன்று யாரோ யாருக்கோ எழுதியனவாய் இருக்கும்  அல்லது நான் யாருக்கோ எழுதியதாய் இருக்கும் அதுவும் இல்லையென்றால் அவள் யாருக்கோ எழுதியதாய் இருக்கும். நிறைய காதல் கவிதைகள், ருஷ்ய புரட்சி பற்றிய பார்வைகள், ஹிரோஷிமா நாகசாகி இன்றளவும் ஏற்படுத்தி சென்றிருக்கும் அதிர்வலைகள், சோழர்கள் காலத்தில் தழைத்தோங்கி இருந்த தமிழர் பெரும் நாகரீகம், ராஜராஜ சோழனின் மனைவிகள், நிசும்ப சூதனி எப்படி சோழர்களின் காவல் தெய்வமானாள், கற்றளிகள் எழுப்ப வேண்டுமென்ற எண்ணம் எந்தச் சோழனின் மனதில் முதலில் உதித்தது, சிறு குழுவினராய் இன்று இருக்கும் யூதர்கள் ஏன் உலகம் முழுதும் பேசப்படுகிறார்கள்...? என்பதில் ஆரம்பித்து, காரல்மார்க்ஸ், சே, பிரபாகரன், சாலமன் ருஷ்டி, தஸ்தயேவ்ஸ்கியின் நாவல்கள், திமுக, அதிமுக, காங்கிரஸ், இந்தியா... என்று நமீதாவின் குத்தாட்டம் வரை எல்லாம் பேசுவோம்.....

எங்களுக்குள் என்ன உறவு இருந்தது, அவள் என்னவாக என்னை நினைத்திருப்பாள் என்று கூட நான் இதுவரையில் யோசித்துப் பார்த்திருக்கவில்லை. ஏதோ ஒரு உறவோடு நிறைய நிறைய பரிமாறல்கள் அங்கே இருந்தன. ஆங்கிலத்தில் கம்பெனியன் என்று ஒரு வார்த்தை உண்டு. கம்பெனியன் என்பதை தமிழில் எப்படி வகைப்படுத்திச் சொல்ல என்று எனக்குத் தெரியவில்லை. ஆங்கிலத்தில் விளங்கிக் கொண்டு ஆங்கிலத்திலேயே ஊறி நான் உணர்ந்த படிமம் அது. துணை என்று சொல்லும் போது யாரோ ஒருவருடன் பயணிக்கும் என்ற ஒரு சாதாரண அர்த்தத்தை அது கொடுத்து விடுகிறது. நட்பு என்ற வார்த்தை மிகவும் தடிமனானது, அழுத்தமான ஒரு உறவும் கூட... இப்படியாக காதலி, மனைவி என்று எந்த வார்த்தையாலும் நிரப்ப முடியாத ஆங்கில வார்த்தைதான் கம்பெனியன்.

கம்பெனியன் என்பது தொடர்பில் இருத்தல், தொடர்பில் லயித்தல், எதிர்பார்க்காமலிருத்தல், எதிர்ப்பார்த்து ஏமாந்து அந்த வலியைச் சுமத்தல், நல்ல கம்பெனியன்கள் அழுத்தமான உணர்வுகளை, நினைவுகளை இடைவிடாது நமக்குள் விதைத்துக் கொண்டே இருக்கிறார்கள். அவளும் அப்படித்தான் எனக்கு ஒரு நல்ல கம்பெனியனாக இருந்தாள். ஒரு நாளின் எல்லா நிமிடங்களிலும் சுவராஸ்யமானவளாய் இருந்ததாலோ என்னவோ அந்த சுவாரஸ்யத்துக்குள் மூழ்கிக் கிடந்ததாலோ என்னவோ... எங்களின் உரையாடல்கள் கொடுத்த போதையில் திளைத்துக் கிடந்ததாலோ என்னவோ... என்னைப் பற்றி அவளும்... அவளைப் பற்றி நானும்... உடல் சார்ந்து முன்னிலைப் படுத்திக் கொள்ளும் வாய்ப்பு அற்றுப் போயிருந்தது.

ஒரு நாள் கலீல் ஜீப்ரானைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். 

"ஒரு கவிஞன் தனது கவிதையை நேசிப்பது போல நேசிக்கத் தொடங்கு,  அமைதியான குளத்தில் தாகத்துக்காய் நீர் பருக இறங்கிய ஒரு நெடுந்தூரப் பயணி அந்தக் குளத்தில் கண்ட தன் உருவத்தை எப்படி நினைவில் வைத்திருப்பானோ அப்படி என்னை நினைவில் வைத்துக் கொள்...., பிறந்து கண் திறந்து இவ்வுலகின் ஒளியைக் காணும் முன் இறந்து போன தன் குழந்தையை நினைவில் வைத்திருக்கும் ஒரு தாயைப் போல என்னை நினைவில் வை...

எவ்வளவு வலியோடு கூறியிருப்பாள் செல்மா..." என்று தன் கண்ணில் நீர் ததும்ப அவள் என்னிடம் சொன்ன போது அவளுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. வாழ்க்கை சில நேரங்களில் வேறு ஒருவரின் வாழ்க்கையைப் போலவே இன்னொருவரின் வாழ்க்கையை பிரதி எடுத்து விடுகிறது. ஜீப்ரானிற்குள் விதையாய் செல்மா விழுந்தது போல அவளும் எனக்குள் விழுந்திருந்தாள். பேசுவதற்கு எதுவும் இல்லாமல் இருந்த அந்த சில மணித்துளிகளில் கடவுள் எங்கள் முன் தியானித்து கொண்டிருந்தார்.

நம் காதற்பெரும்பொழுதின் கதவுகள் இதோ கூப்பிடு தூரத்தில் நமக்காய் திறந்திருக்கின்றன. யுகங்களாய் பிரயாணப்பட்டு நாம் அதை நெருங்கும் தருணத்தில் நீ என்னிடம் விடைபெற்றுக் கொள்ள வந்திருக்கிறாய். என் காதலை உன் விழிகளுக்குள் ஊற்றி விட்டேன்...., உன் இதய துடிப்பின் இடைவெளிகளுக்குள் என்னை நிறைத்துக் கொண்டு விட்டேன். நான் என்ற ஒன்றும் நீ என்ற ஒன்றும் இப்போது உடைந்து நொறுங்கி எல்லையற்றதின் கனவுகளைச்  சுமந்து செல்லும் ஒற்றை பறவையாகி விட்டது. நாம் ஒன்று செய்யலாம் மெளனத்தின் மொழியை மனதிற்குள் அசை போட்டபடி சிறகு வலிக்க இந்த வானப் பெருவெளி முழுதும் பறந்து செல்வோம். என்றோ ஒரு நாள் நம் சிறகுகள் வலித்து, வலித்து அதற்கு மேல் நகர முடியாதென்ற நிலை ஒன்று வரும் போது எவ்வித முயற்சிகளுமின்றி....

ஒரு வனத்தின் மீதோ, மலையின் மீதோ, புற்களின் மீதோ, மணலின் மீதோ அல்லது கடலின் மீதோ.....அசையாமல் இருக்கிறதே அனாதியான காலம் அது போல வீழ்ந்து போவோம். இப்படியே நம்மை இருக்க யார்தான் விடுவார்..? இந்த பூமி கணவன் மனைவிகளுக்கானது...., காதலர்களுக்கானது அல்ல....!!!! காமத்தை வைத்தே உறவுகளைத் தீர்மானிக்கும் இந்த ஒழுங்கிற்குள் நின்று நியாயங்கள் பேசும் நம்மைப் போன்ற சிறுபான்மையினர்களுக்கு காலம் காலமாய் மெளனம் மட்டுமே மொழியாய் இருந்திருக்கிறது, தியாகம் மட்டுமே பரிசளிக்கப்பட்டிருக்கிறது. கனவுகளை காலம் பிரித்துப் போடுகையில் அதை எதிர்த்து நிற்பதென்பது வீரம் அதை ஏற்று வாழ்வதே வீரம். காதலிக்கவே தெரியாதவர்களுக்கு எப்படி புரியும் காதலின் மொழி...? எப்படித் தெரியும் காதலின் வலி...? உருவங்களைப் பிரிக்கத் தெரிந்தவர்கள் உணர்வுகளை என்ன செய்து விட முடியும்....?

அவளின் இயலாமயை, அந்த சோகத்தை சிரிப்பாய் உதிர்த்தாள் அவள்...

இன்னமும் அவளின் கிசுகிசுப்பான பேச்சுக் குரலோடு உருண்டோடிக் கொண்டே இருக்கிறது காலம்.

சாப்டீங்களா? எப்போதும் கேட்பாள். சாப்பிடும் பொழுதெல்லாம் அது நினைவுக்கு வருகிறது. கவிதைகளை எழுதும் போது கற்பனையில் ஒரு பெண்ணும் வந்து இம்சிக்கக் கூடாது..... கவிதை எப்போதும் இதுவரையில் காணாத ஒரு பெண்ணுக்காய் எழுதப்பட வேண்டும் என்பாள் ஆனால் என் கவிதை வரிகளுக்குள் வியாபித்துக் கிடக்கும் அவளை எப்படி என்னால் விரட்டி விட முடியும்?

"சூரியனைக் காதலி...
நிலவை மணந்து கொள்...
பூமியை புணர்....
காற்றை கட்டியணைத்துக் கொள்....
கனவுகளோடு துயில்
கவிதைகளை துணைக்கு அழை...
மேகம் பார்த்து புன்னகை செய்...
சமவெளிகளுக்குள் தனியாய் நடந்து சென்று
முயலாய் பதுங்கிக் கொள்...
முடிந்த வரை மனிதர்களை தூரமாய் வை....
புலன்களை அறுத்தெறி....
புத்தகங்களோடு வாழ்க்கை நடத்து...."

என்றுஅவள் சொல்லி முடிக்கும் முன்பே சொல்வேன்... நீ என்னோடு இரு....
இது எல்லாம் நடக்கும் என்று...!

டேபிளின் மீதிருந்த டீயை எடுத்து உதடுகளுக்குக் கொடுத்தேன். அவளின் நினைவுகள் மலைப்பிரதேசத்துக் குளிராய் என்னை நடுங்கவைத்துக் கொண்டிருந்தது. நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து கொண்டேன்.  வாழ்க்கை உணர்வுகளால்  நிரம்பியது. எது எதுவோ பிடிக்கிறது. எது எதுவோ பிடிக்காமல் போகிறது. ஆசைகளுக்கு நடுவே வாழும் வாழ்க்கையில் ஆன்மாவின் தேவையை யார்தான் அறிவார்? எப்போதோ கேட்ட பாடல் ஒன்று புத்திக்குள் நின்று கொண்டு படுத்தி எடுக்குமே அந்த சுகத்தை நான்குவரியில் ஒரு கவிதையாக்கத் தெரிந்தவன் பாக்கியவான். குழந்தை எடுத்து வைக்கும் முதல் அடியைப் போல இன்னமும் ஒரு குறு குறுப்பாய்த்தான் இருக்கிறது ஒவ்வொரு நிமிடத்தை கடக்கும் பொழுதும்....

உலகம் முழுதும் கோடிக் கணக்கில் செல்மாக்களை ஜீப்ரான்கள் தொலைத்துக் கொண்டே  இருக்கிறார்கள். வருடம் முழுதுதும் பூக்கள் பூத்துக் கொண்டே இருக்கிறதே அதைப் போல....பூக்களைச் சுமந்து கிடப்பதை விட வேறென்ன சுகம் வேண்டியிருக்கிறது இந்த பூமிக்கு.....

அழகாய் பூக்களை போர்த்திக் கொண்டு படுத்திருந்ததும், படுப்பதும் போதாதா என்ன...? போதும் என்றே தோன்றியது எனக்கு.....

எங்கோ இருந்து அவளும் இதோ போல எனக்கான காதலைத் தேம்பிக் கொண்டிருக்கலாம், என்னைப் போலவே பட்சிகளோடு பேசிப் பேசி மிச்சமிருக்கும் எனக்கான வார்த்தைகளை உதிர்த்துக் கொண்டிருக்கலாம் காமத்தில் அவள் உடம்பு எரிந்து கொண்டிருக்கையில் அதிலிருந்து ஒரு சிறி பொறியாய் என் ஞாபகங்கள் தெறித்து விழுந்து அவள் புத்திக்குள் ஏதேதோ நினைவுகளை மீட்டெடுக்கலாம், தினமும் என்னைப் போலவே அவளும் யாருக்கோ எழுதுவதாய் நினைத்துக் கவிதைகள் எழுதி கொண்டிருக்கலாம்.....

உடல்களைப் பிரித்து விட்டாலும் உன்னால் பிரிக்க முடியாத எங்கள் ப்ரியங்களை என்ன செய்வாய் காலமே...? 

அவளை ஒருமுறை கூட நேரில் சந்திக்காமல் போனது மனதை ஏதோ செய்தது. 

வானத்தை வெறித்துக்கொண்டே....

அவள் எழுதி அனுப்பிய கடிதங்களைப் புத்திக்குள் புரட்டிக் கொண்டிருந்தேன்....!
தேவா சுப்பையா...Photo Courtesy: Ashok Arsh

Wednesday, July 23, 2014

எப்பவும் நான் ராஜா - IIஎன்கிட்ட கதை ஒண்ணு இருக்கு அதுக்கு ஒரு மெட்டுப்போடு பார்க்கலாம் என்று பஞ்சு அருணச்சலம் அந்த இளைஞனிடம் கூறியதுதான் தாமதம். மெட்டோடு சில வார்த்தைகளையும் சேர்த்து அவன் பாடவே தொடங்கி இருந்தான். தன்னத் தனனா... தனானானே......தன்னனானேனனனா... அன்னக்கிளியே உன்னைதேடுதே......என்று அவன் உச்சரித்த பின்புதான் நாம் இன்று கட்டுண்டு கிடக்கும் இசைபெருவெளி மெல்ல விரியத்தொடங்கியது. அவன் உச்சரித்த வார்த்தையே அந்தப் படத்தின் பெயரும் ஆனது. 

எவ்வளவு தேடல் நிறைந்தது தனது பயணம் என்பதை வெளிப்படுத்திக் கொள்ளுமொரு வாய்ப்பாய் ராஜா சாருக்கு அமைந்து போனது அந்தப் பாடல். ஏக்கம் என்பது ஒரு உணர்வு அதை எப்படி இவ்வளவு சரியாய் ஒரு இசைக்குள் பதியம் போட முடியும் என்ற பிரமிப்பிலிருந்து அந்தப்பாடலைக் கேட்கும் யாராலும் மீள முடியாது. ஒரு மாதிரியான சந்தோசமான பாடல்தான் அது என்றாலும் அதற்குள் நிறைந்து கிடக்குமொரு வெறுமையும், நிலையாமையும்  அலாதியானது. நீ யாரென்று எனக்குத் தெரியாது,  நீ எவ்வடிவமாய் இருப்பதையும் நானறியேன், ஆனால் நீதான் எனக்கு வேண்டும்...

என்ற இலக்கற்ற ஆசையை ஒரு பெண் வெளிப்படுத்துகிறாள்.  அந்த நளினத்தை ஏந்திக் கொண்டு தத்தித் தத்திப் பயணிக்கிறது ராஜாவின் பேரிசை இந்தப் பாடலுக்குள். பாடலைக்  கேட்டுக் கொண்டிருக்கும் போதே வெறுமனே அதைக் கடந்து சென்று விடாமல் சில இடங்களில் பலமாய் நம் மனதை பாடலோடு முடிச்சுப் போட்டுவிடுகிறார் ராஜா சார்....”மழைபெய்ஞ்சா.....” என்று ஜானகி அம்மாவின் குரல் நம்மை வாரி அணைத்து இழுத்து வைத்து உச்சிமுகர்ந்து கட்டியணைத்துக் கொண்டிருக்கும் போதே அதற்குப் பின்னால் உருளும் தபேலா மீண்டும் அழுத்தமின்றி நம்மைப் பாட்டுக்குள் கொண்டும் வந்து விடுகிறது. பாடலின் மூன்று சரணங்களிலும் அவர் இப்படியான மூன்று முடிச்சைப் போட்டு வைத்திருப்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்கள்...?

எப்படி யோசித்திருப்பான் இந்தக் கலைஞன்? ஒரு சூழலைச் சொன்னவுடன் எங்கிருந்து ஊற்றெடுக்கிறது அந்த மெட்டு என்பதெல்லாம் நம் கற்பனைகளுக்குள் எளிதாய் சிக்கிவிடாது. அழகு எப்போதும் ரசிக்கப்படவேண்டியது ஆராயப்படவேண்டியதல்ல அது போலத்தான் ராஜா சாரின் இசையும் அந்த முழுமையை உணரும் போது உள்ளுக்குள் பூ பூக்கத் தொடங்குகிறது. என் மண்ணிற்கு என்று ஒரு உணர்விருக்கிறது, ஒரு கலாச்சாரம் இருக்கிறது, ஆசைகள், அபிலாஷைகள், கோபங்கள், என்று எல்லாவற்றையும் இசையாய் சொல்ல வேண்டுமெனில் அவன் எல்லா உணர்வுகளுக்குள்ளும் தன்னை கரைத்துக் கொள்ளக் கூடியவனாய் இருக்கவேண்டும். ராஜா சார் வெறுமனே பாடலுக்கு மெட்டுப் போடும் கார்ப்பரேட் ரெடிமேட் மியூசிக் டைரக்டர் கிடையாது.....

அவர் ஒரு கதையைக் கேட்கும் பொழுதே அந்தக் கதைக்குள் வாழத் தொடங்கிவிடுகிறார். ஒவ்வொரு சூழலிலும் அந்த கதாபாத்திரத்தின் மனோநிலை என்ன? காட்சிச்சூழல் என்ன? இதற்கு எங்கிருந்து தொடங்கவேண்டும்? இப்படி கதைக்காய், சூழலுக்காய் நான் அமைக்கும் இசை என் பாடலைக் கேட்க வரும் ரசிகனுக்குள் எப்படி இருந்தால் சரியாய் போய் உட்கார்ந்து கொள்ளும்....என்றெல்லாம் அவர் ஆராய்கிறார்....பின் அந்த சிந்தனையில் ஊறி ஊறி மெளனிக்க அந்த மெளனம் அந்த பெரும் சூன்யமாய் மாறிப்போக அவருக்குள் மெட்டுக்கள் மெல்ல பூக்கத்தொடங்குகின்றன.

எந்த இசைக் கருவியைத் தட்டினால் மனித உடலில் என்ன மாற்றம் நிகழும் என்பதெல்லாம் ராஜா சாருக்கு அத்துப்படி. உங்களுக்கு எல்லாம் ஒன்று தெரியுமா தமிழர்களின் ஒட்டு மொத்த உணர்வுகளையும் இன்றைக்கு மறைமுகமாய் ஆளுமை செய்து கொண்டிருப்பது ராஜா சாரின் இசை தான்! 1970 களுக்குப் பிறந்த பிள்ளைகள் அத்தனை பேரும் பாக்கியவான்கள்....அவர்களை எல்லாம் ராஜா சாரின் இசைதான் வளர்த்தெடுத்தது... உண்ணவும், உறங்கவும் அவரது பாடல்களே பெருமளவில் உதவின....!

இன்னும் சொல்லப்போனால் தமிழர் வாழ்வின் மனச் சிக்கல்களை அவரின் இசை சுமூகமாய்த் தீர்த்தும் வைத்திருக்கிறது. காதலைச் சொல்லவும் அவர் உதவி இருக்கிறார், திருமணம் செய்த பின்பு வாழ்க்கையை ரசித்து நகரவும் அவரது இசை உதவி இருக்கிறது, வெற்றியின் போதும் தோல்வியின் போதும் துரோகங்களின் போதும்...ராஜா சாரின் இசையே நமக்குத் துணை. ராஜா சாரின் மெட்டுக்கள் நிறைய கவிஞர்களை உருவாக்கியது, வளர்த்தெடுத்தது.. கவிஞர் வைரமுத்துவின் முற்பாதி சினிமா வாழ்கையில் வந்த பாடல்களை எல்லாம் எடுத்துப் பாருங்கள்...அத்தனையும் வைரமாய் ஜொலிக்கும். ராஜா சாரின் மெட்டுக்கள் கொடுத்த ரசனையில் விரிந்த தாமரைகள் அவை....

” ஓ... கொத்து மலரே...
அமுதம் கொட்டும் மலரே
இங்கு தேனை ஊற்று இது தீயின் ஊற்று....” என்றெல்லாம் வைரமுத்து மெட்டுகளுக்காய் எழுதிய வார்த்தைகளின் வசீகர ஆளுமையும், ராஜா சாரின் இசையும் தோளோடு தோள் நின்று பாடலுக்கு வலுவூட்ட நமக்கு ஏற்பட்டதுதான் ஆயிரம் தாமரை மொட்டுக்களே என்னும் பரவச அனுபவம்.


வைரமுத்துவின் பிற்பாதி அதாவது ராஜா சாரை விட்டு அவர் நகர்ந்த பின்பு அவருக்கு வேண்டுமானால் தேசிய விருதுகள் கிடைத்திருக்கலாம்...ஆனால்....அவரது கவிதை வரிகள் அவ்வளவு ஆழமாய் தமிழர்களின் மனதில் விழுந்து விருட்சமாகாமல் மேற்கத்திய சப்தங்களுக்குள்ளும், பேரிறைச்சலுக்குள்லும் தன்னை முடக்கிக் கொண்டு வெற்று முனகலாய்த்தான் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. பிறரின் இசை வைரமுத்துவின் கவிதை வரிகளைத் தின்று செரித்து ஏப்பம் விட்டு விட்டு வெறும் வாத்தியக் கூச்சலாய்தான் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது...ஆனால் ராஜா சாரின் இசை அப்படியானது அல்ல அது தாயன்பு மிக்கது.

மண்டையைப் பிளக்கும் ஒரு உச்சி வெயிலில் காதில் ஹெட்போனோடு சென்னை அண்ணா சாலையின் ஒரு போக்குவரத்து நெரிசலுக்குள் நீங்கள் மாட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். வியர்வை சட்டையை நனைக்க இங்கும் அங்கும் நகரமுடியாத அளவு வாகனங்களும், வாகனங்களின் புகையும் உங்களை எரிச்சல் படுத்த வெகு கடுப்பில் நீங்கள் இருக்கிறீர்கள் ...

அந்த சூழலில்....உங்கள் ஸ்மார்ட் போனிலோ அல்லது எம்.பி3 ப்ளேயரிலோ ஹேராமின் இந்தப் பாடலை தட்டி விடுங்கள்,  பிறகு பாருங்கள் உங்களுக்குள் என்ன நிகழ்கிறது என்று....

பாடல் ஆரம்பிக்கும் போதே ஒரு போதை கிறு கிறுவென்று உங்கள் தலைக்கேறும்...., அதிரடியான இசை உங்களைப் பல்லக்கில் தூக்கிக் கொண்டுபோய் ஒரு குளு குளு அறையில்  கிடத்தி  அந்த மயக்கும் பாடலை அஜய் சக்கரவர்த்தி பாடத் தொடங்குகையில் நீங்கள் பகுதி விழிப்பு நிலைக்குள் சென்றே விடுவீர்கள்...! உங்களின் எரிச்சலூட்டும் புறசூழல் ஒடுங்கிக் கொள்ள ஒரு ராட்சசனாய் ராஜா சாரின் இசை உங்களை ஆளும் அற்புதத் தருணம் அது. கிறக்கம் என்பது வேறு ஏக்கம் என்பது வேறு போன ’அன்னக்கிளியே உன்னைத் தேடுதே’ என்று ஒரு பெண்ணின் ஏக்கம் நிறைந்த உணர்வுகளைப் பரிமாறிய இசை.....

இப்போது இந்தப்பாடலில் மூலம் கிறக்கம் நிறைந்த ஒரு மனிதனின் காதலை, காமத்தை, மதுவின் போதையை, குளுமையான அந்த இரவின் வாளிப்பை நமக்குக் கொடுத்து ஒரு கதகதப்பையும் உருவாக்கி விடுகிறது. இப்போது சொல்லுங்கள்...

நம்மை ஆட்டிவிக்கும் ராஜாசாரின் இசை எத்தகையது....? ராஜா சார் யார் என்று....? வடஇந்தியச் சாயலைப் பிழிந்தெடுத்து அந்த சாயத்தில் ராஜா சார் நிகழ்த்தி இருக்கும் அந்த அதிசயத்தை நீங்கள் இப்போது வேண்டுமானலும் கேட்டுப்பாருங்களேன்....


மேலே நான் சொன்ன எல்லாம் உங்களுக்குள் நடக்கும்....

உயிர்களே...
உயிர்களே உயிர்களே உலகிலே
இன்பத்தை தேடி தேடி
கிரஹத்துக்கு வந்ததே......


                              (ராஜாவின் படையெடுப்பு தொடரும்...)
தேவா சுப்பையா...


Tuesday, July 22, 2014

எப்பவும் நான் ராஜா - I

ஏதோ ஒரு தளத்தில் நின்றபடி கிடைக்கும் நேரத்தில் அந்தக் கதையை எழுதிக் கொண்டிருந்தேன் நான். இடை இடையே மனதுக்குள் மென்று கொண்டிருக்கும் ஒரு காதல் கட்டுரை, பார்க்க வேண்டிய படங்கள் என்று மெதுவாய் நான் நகர்ந்து கொண்டிருக்கையில்தான் வசந்த் டிவியில் ராஜா சாரின் பாடல்களைப் பற்றிய மனுஷ்ய புத்திரனின் நிகழ்ச்சி ஒன்றை பார்க்க நேர்ந்தது. தலையை சிலுப்பிக் கொண்டு அவர் அரசியல் பேசும் கொடுமையை எல்லாம் சகித்துக் கொள்ள முடிந்த என்னால்....

வசீகரமான ராஜா சார் பாடல்களைப் பற்றி அவர் சிலாகித்து ஆடிக் கொண்டிருந்த டான்ஸ் கடுப்பைக் கிளப்பியது. கவிஞன், இலக்கியவாதி என்ற அடைப்புக்குள் நின்று கொண்டு மனுஷ்யபுத்திரர்கள் இந்த சமூகத்திற்குள் செய்யும் அட்ராசிட்டி மிகக் கொடுமையானது. எது பற்றி வேண்டுமானலும் பேசுவேன், எனக்கு எல்லாம் தெரியும் என்பது அதிகபிரசங்கித்தனம். மனுஷ் எப்படிப்பட்டவர் என்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.

பனிவிழும் மலர்வனம்....
உன் பார்வை ஒருவரம்...

இரும்புக் குதிரைகள் நாவலை வாசித்தவர்களுக்குத் தெரியும் இடை இடையே கதோயோடு சேர்த்து பாடல் வரிகளைப் பற்றி அருமையாய் சிலாகித்திருப்பார் பாலா சார். பாடலை மீண்டும் கேட்டு ரசிக்க வேண்டு என்ற ஆவல் அந்த நாவலை வாசித்த அத்தனை பேருக்குமே வந்திருக்கும். ரசனை என்பது எப்போதும் அறிவோடு தொடர்புடையது கிடையாது. அது அறியாமையோடு தொடர்புடையது. விழி விரித்து ஒரு பூவை பார்த்து ஆச்சர்யப்படும் குழந்தையின் உணர்வினை ஒத்தது அது. ராஜா சாரின் பாடல்களுக்கு மனுஷ்யபுத்திரன் கொடுத்துக் கொண்டிருந்த தத்துவார்த்தமான விளக்கங்களும், இலக்கிய நடைக்காக அவர் மெனக்கெட்டு தேடி எடுத்து பேசிய வார்த்தைகளும் எனக்கு உவ்வ்வ்வே என்று குமட்டலைத்தான் உண்டாக்கியது.

அவர் பேசி முடித்து பின் அந்த இடைவெளியில் பாடலில் நான்கு நான்கு வரிகளை ஒளிஒலிப்பரப்பிய போது அந்த பாடலில் லயித்துக் கிடக்க முடிவில்லை. காரணம் என்னவென்றால் பாடலின் அழகை வர்ணிக்கிறேன் என்ற பெயரில் மனுஷ் போட்டு விட்ட மேக் அப் நம் புத்திக்குள் ஏற்படுத்தும் ஒரு அயற்சி அப்படியானது. ராஜா சாரின் பாடல்களை எல்லாம் ரசிக்கவும் அது பற்றி சிலாகித்து பேசவும் எந்த வித விசய ஞானங்களும் இல்லாத சாதரண மனிதன் போதும். இது போன்ற நிகழ்சிகளைத் தொகுக்க கொஞ்சமேனும் தன் மேதாவிக் கொம்புகளைக் காட்டிக் கொள்ளாத வெகு இயல்பான யாரோ ஒரு மனிதர் தேவைப்படுகிறார். அந்த மனிதர் அந்த இசை தனக்குள் எப்படியான பரவசத்தை ஏற்படுத்தியது...எந்த மாதிரியான மாற்றத்தை உருவாக்கியது... அந்த இசையால் எப்படி தன் மனது மகிழ்ந்தது அல்லது கனத்துப் போனது என்று சாமனியனின் தோளில் கை போட்டுக் கொண்டு பேசவேண்டுமே அன்றி.....

அடர்த்தியான பொறுக்கி எடுத்த சொற்களோடு ஆஜானுபாகுவான ஒரு முரட்டு ரவுடியைப் போல ஆட்டம் போடக் கூடாது. இதை ஏன் சொல்கிறேன் தெரியுமா? ராஜா சாரின் இசை ஆச்சர்யமானதுதான் என்றாலும் அது மிக எளிமையானது. வெகுஜன இதயத்துடிப்பின் தாளத்தை எளிதாய் மாற்ற வல்லது. ” மரி மரி நின்னே....”என்று ராஜா சாரின் சாஸ்திரிய சங்கீதத்துக்குள் கதைக்காய் போய் உலா வந்தாலும் சடாரென்று... ” தண்ணித் தொட்டு தேடி வந்த கண்ணுக்குட்டி நான்...: என்று குப்பு சாமியையும், முனுசாமியையும் தாளம் போடவும் வைக்கும். உறக்கம் தொலைந்து போய் மன அழுத்தத்கோடு இருக்கும் மனிதனை....தூளியிலே ஆட வந்த என்று அது தாலாட்டவும் செய்யும்..... 

” பொறுப்பது புழுக்களின் இனமே
ஆம் அழிப்பது புலிகளின் குணமே
எட்டிப்போ இதோ புலி வருகுது...” என்று நம்மை உறும வைக்கவும் செய்யும். அந்தக் காலம் போல பாடலை எழுதி விட்டு அப்புறம் இசை அமைத்தால் என்ன என்று கூட நான் நினைத்திருக்கிறேன்....ஆனால் பின்னர்தான் புரிந்து கொண்டேன், சூழலை இயக்குனர் இசையமைப்பாளரிடம் விவரிக்க அந்த உணர்வினை உள்வாங்கிக் கொண்டு இசை பிறக்கிறது அந்த மெட்டு கதையின் சூழலோடு சேர்ந்து கொண்டு கவிஞனை உலுக்குகையில்.....சிவனின் டமருகத்திலிருந்து பிறக்கும் சப்தமாய் கவிதை பிறக்கிறது. இசையும் மெட்டும் சாட்டையை எடுத்து வீச....பாடல் பிறக்கிறது. மெட்டுக்கு பாட்டெழுதுவது கடினமெல்ல....மெட்டுப் போடுவதுதான் கடினம் என்பது கவிப்பேரரசர்கள் அத்தனைப் பேருக்குமே தெரியும்.

ராஜா சாரின் பாடல்களை இப்படி மனிதர்கள் ஆங்காங்கே தாங்கள் பிரபலம் என்பதால் கொடுக்கப்பட்ட வாய்ப்பினைப் பயன்படுத்தி ரசனை என்ற பெயரில் குத்திக் குதறிக் கொண்டிருக்கையில்தான் எனக்குத் தோன்றியது...சிலாகித்து ரசிக்கும் ஒவ்வொரு பாடலையும் ” எப்பவும் நான் ராஜா...” என்ற பெயரில் ஒரு தொகுப்பாய் எழுதத் தொடங்கினால் என்ன என்று....


வாத்தியங்களைப் பற்றியோ தாளக்கருவிகளைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. சங்கீதம் பற்றிய எனது உச்சபட்ச அறிவு ராஜாசாரின் இசை மட்டுமே. ஸ்வரங்களைப் பற்றியும் எனக்குத் தெரியாது, ஸ்ருதியைப் பற்றியும் எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்த ஒரே ஒரு விசயம்...ராஜா சாரின் இசைக்குள் அந்தப் பாடலுக்குள் விழுந்து ஜீராவுக்குள் ஊறும் ஒரு  குலோப்ஜாமூனாய் அமிழ்ந்து கிடப்பது, அவரின் இசை கூட்டிச் செல்லும் இடத்துக்கெல்லாம் ஆராய்ச்சியோ கேள்வியோ ஒப்பீடோ இன்றி தாயின் கைபிடித்துக் கொண்டு கடைத்தெரு செல்லும் குழந்தையாய்  பயணிப்பது. நகரத்து நெரிசலுக்குள் நான் இருக்கும் போதே வயல்வெளிகளுக்கு நடுவே வாழும் சுகத்தை அவர் எனக்குக் கொடுத்திருக்கிறார்...., இனிமேல் ஒன்றும் இல்லை என்று உடைந்து உட்கார்ந்த பொழுதெல்லாம்....வீறு கொண்டு எழச் சொல்லி இருக்கிறது அவரது இசை....

இப்படி ரசிக்க மட்டுமே தெரிந்தவனின் ஒரு சாதரண உணர்வெழுச்சிப் பயணமாய் இந்த தொகுப்பு இருக்கக் கூடும். பேரறிவோடும், பெரும் ஆராய்ச்சியோடும் இருக்கும் இசை வல்லுனர்களுக்கும், உலக இசையை நெட்டுரூ போட்டு வைத்துக் கொண்டு உலகமகா இசைக்கலைஞர்கள் பற்றிய செய்திகளை அறிந்த மேதைகளுக்குமானது அல்ல ”இந்த எப்பவும் நான் ராஜா....”

இது ராஜா சாரின் இசையை சுவாசிக்க விரும்பும் சாதாரண ராஜா சாரின் ரசிகனுக்கு சொந்தமானது...!

இனி....

வழக்கமாய் எழுதும் கட்டுரைகளுக்கும், கதைகளுக்கும் நடுவே......”எப்பவும் நான் ராஜாவைத்” தொடர்ந்து எழுதுகிறேன்....

ராஜாவின் ராஜாங்கத்துக்குள் நுழைந்து தொலைந்து போவோம் வாருங்கள் நண்பர்களே....தேவா சுப்பையா...
Thursday, July 17, 2014

பார்த்த ஞாபகம் இல்லையோ....!


அந்தப் பெரியவரை அப்போதுதான் பார்த்தேன். 75 வயதுக்கு மேல் இருக்கும் என்று தோன்றியது. தொள தொள பேண்ட்டுக்குள் இன்சர்ட் செய்திருந்தார். தலை மெல்ல ஆடிக் கொண்டிருந்ததைப் போலவே கைகளும் நடுங்கிக் கொண்டிர்ந்தன. வயிற்றுக்குM மேல் பேண்ட்டை தூக்கிப் போட்டிருந்தார். சூ, பேண்ட் ஷர்ட் என்று ஒரு ஒழுங்கு இருந்தது அவர் உடையில். 

சீக்கிரம் காசு கொடுங்க சார்....அடுத்து கஸ்டமர் நிக்கிறாங்கல்ல....ஆங்கிலம் கலந்து அந்த கவுண்ட்டரில் இருந்தவன் அந்த தாத்தாவை கொஞ்சம் அதட்டலாகவே சொன்னான். நான் மணியைப் பார்த்தேன்....நள்ளிரவு பன்னென்டு மணிக்கு அழைத்து வாழ்த்துச் சொல்லவில்லை என்ற  மஞ்சுவின் கோபத்தை சரிக்கட்ட பொக்கேயோடு வருகிறேன் என்று சொல்லி இருக்கிறேன். நேற்று பிறந்த நாள் கொண்டாடியவளுக்கு இன்று வாழ்த்துச் சொல்வது அதுவும் ஒரு காதலன் வாழ்த்துச் சொல்வது எவ்வளவு அவஸ்தையா இருந்திருக்கும் அவளுக்கு...!  நாட்கள்ள என்ன இருக்கு மஞ்சு என்று கேட்டதற்கு ஷேம் ஆன் யூ மேன்....லவ்வரோட பிறந்த நாள் கூட தெரியாம இருக்க நீ எல்லாம்...என்றுஅவள் போட்ட சண்டை முடித்த போது விடியற்காலை 3 மணி. இப்படி இப்படி இருக்க வேண்டுமென்று எவ்வளவு தீர்மானித்தாலும் 24 மணி நேரமும் துரத்தும் சாஃப்ட்வேர் உத்தியோகம் காதலை எல்லாம் கபளீகரம் செய்து விடுகிறது பலநேரங்களில்....

எத்தனை பேர் வாழ்த்துச் சொன்னாலும் தனக்குப் பிடித்தவர்கள் வாழ்த்துச் சொல்லாவிட்டால் அவ்வளவுதான்; அதுவும் உயிருக்கு உயிராய் நேசிக்கும் நான் எப்படி மறந்தேன்? எனக்கு என் மீதே எரிச்சல் வந்தது....

தாத்தா விலை 300 ரூபாய்தான் வாட் டாக்ஸ் எல்லாம் இருல்ல அது எல்லாம் சேத்து 325 ரூபாய்....கேஷ் கவுண்டரில் இருந்தவனும் என்னைப் போலவே பொறுமை இழந்திருந்தான். தாத்தா மறுபடி மறுபடி அவர் வாங்கிய பொருளில் இருந்த விலையை மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தார்....அவருக்கு விற்பனை வரிபற்றி ஒன்றும் புரியவில்லை....

பேண்ட் பாக்கெட்டிற்குள் கையை விட்டு மறுபடித் நடுக்கத்தோடு துலாவிக் கொண்டிருந்தார் அந்தப் பெரியவர். எல்லாமே டாக்குமெண்ட்ரி படம் பார்ப்பது போல மெதுவாக நிகழ்ந்து கொண்டிருந்தது என் முன்னால்...மஞ்சு என் கண் முன் வர எனக்கு கோபம் வந்து கத்தியே விட்டேன்....

அவர்கிட்ட வேணும்னா பொறுமையா வாங்கிக்கங்க சார்...லெட் மீ பே அண்ட் ரஷ்....சம் ஒன் இஸ் வெயிட்டிங் ஃபார் மீ....

என் சப்தம் அந்தப் பெரியவரை ஒன்றும் செய்யவே இல்லை....கிட்ட தட்ட சயின்டிஸ்ட் ஐன்ஸ்டீன் போன்ற தோற்றத்தில் இருந்த அவர் பொறுமையாய் பாக்கெட்டைத் துலாவிக் கொண்டிருந்தார். முதுமை அவரை நிற்க விடாமல் தள்ளாடச் செய்து கொண்டிருந்தது.

ஒருவேளை காசு எதுவும் இல்லாமல் இருப்பாரோ.....முதல் முறையாய் எனக்குள் ஒரு பச்சாதாபம் எழுந்து என் கோபத்துக்குள் சதக்க்க்க் என்று குற்ற உணர்ச்சிக் கத்தியை சொருகியது....ச்ச்ச்ச்சே ஏண்டா கத்தினோம் என்று தோன்றியது.

கேஷ் கவுண்டர் ஆளே வெளியே வந்து பெரியவரின் பாக்கெட்டிற்குள் கையை விட்டு பணம் எடுத்து அதில் இருந்து 25 ரூபாயை எடுத்துக் கொண்டு மீதியை அவரது கையில் திணித்து விட்டு தேங்க் யூ என்று சொன்னான்...

பெரியவர் என்ன வாங்கினார் என்று அவசரத்தில் என்னால் கவனிக்க முடியவில்லை. மஞ்சுவிற்கு இந்த பூங்கொத்துப் ரொம்பப் பிடிக்கும் இதுவும் இந்த வயலட், மஞ்சள்,பிங்க், நிற பூக்களைக் கண்டால் அவள் துள்ளிக் குதித்து என்னைக் கட்டிக் கொள்வாள் கூடவே என் கவிதைகளையும் வைத்து சரிக்கட்டி கொள்ளலாம்.....


நீ என்றும் நான் என்றும்
யார்தான் இருக்கிறார்கள் இங்கு...
வாழ்த்துச் சொல்லவும்
வாழ்த்தைப்  பெற்றுக் கொள்ளவும்...?

***

நீ எதற்கு பிறந்த நாள்
கொண்டாட வேண்டும்...?
இந்த நாளல்லவா
கொண்டாடிக் கொள்ள வேண்டும்
நீ பிறந்தாயென்று....!

***

பணத்தைக் கொடுத்து விட்டு வெளியில் வந்தேன்....! குறுகலான அந்த புட் பாத்தில் சற்று முன் பார்த்த அந்தப் பெரியவர்  மெல்ல நடந்து போய்க் கொண்டிருந்தார். மழை நீர் தேங்கிக் கிடந்தால் கீழே இறங்க முடியாமல் நானும் அவர் பின்னால் மெதுவாய் போய்க் கொண்டிருந்த போதுதான் கவனித்தேன்....அவருடைய கையிலும் ஒரு பூங்கொத்து இருந்தது....

இவர் யாருக்கு பொக்கே வாங்கிக் கொண்டு போகிறார்...? எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது...? பேரன் பேத்திகளுக்காய் இருக்குமோ  அப்படி இருந்தாள் யாராவது பிள்ளைகளோடு வந்திருக்கலாமே...யோசித்தபடியே அவருக்குப் பின்னால் நடந்து கொண்டிருந்த எனக்கு நேரம் வேறு ஆகிக் கொண்டிருந்தது....

ஷர்க்க்க்க்... ஷர்ர்க்க்... .ஷர்க்க்க்க்....

ஷரிக்க்க்.. ஷர்க்க்... ஷர்க்க்க்

ஷர்க்க்க்.. ஷர்க்க்க்க்.......ஷர்க்க்க்க்க்க்.....ஷ்ஷ்ஷ்ஷ்ட்

பெரியவர் நடப்பதை நிறுத்தி விட்டு மெல்ல என் பக்கம் திரும்பி....புன்னகைத்தார். அனுபவம் அவரது முகத்தில் சுருக்கங்களாய் படர்ந்து கிடந்தது. அவர் அணிந்திருந்த சட்டையும் காற்றில் அடர்த்தியா பறந்து கோண்டிருந்த அவரது முடியும் தும்பைப் பூ நிறத்தில் வெள்ளையாய் இருந்தன. அடர்த்தியான மீசை உதட்டைத் தொட்டபடி இருபுறமும் தொங்கிக் கொண்டிருந்தது. ஒரு வாழ்க்கை வாழ்ந்து முடித்திருந்த அயற்சி அவரது கண்களில் படிந்து கிடந்தது. எந்த வித பதட்டமும் இல்லாத அவரிடம் நிதானமும் அலட்சியமும் மிகுந்து கிடந்தது. என் அருகே அவர் வந்தார்.......

சாரி தம்பி.....அவர் என் கையைப் பிடித்த போது அவரது கண்கள் லேசாய் கலங்கிப் போயிருந்தது.

இல்லை...சார்.... எதுக்கு சாரி எல்லாம் சொல்றீங்க என்றேன்...நான் தழு தழுத்தபடி....

ஒரு கணம் போதும் எந்த ஒரு மனிதருக்குள்ளும் நாம் நம்மை ஊன்றிக் கொள்ள..., எல்லாம் ஒன்றிலிருந்து வந்து மனிதராய், விலங்குகளாய், தாவரங்களாய், அசையும், அசையா எல்லாமாய் ஆகி இருப்பது அப்போது விளங்கும். 

ஆன்மாவின் பாஷையை 
மெளனமே யுகங்களாய் பேசிக் கொண்டிருக்கிறது....
புரிதல்கள் எந்த திட்டமும் தீட்டுவதில்லை...
அவை ...நள்ளிரவில் விழித்துக் கொள்ளும்
மொட்டுக்களைப் போல சட் சட்டென்று
மலர்ந்து விடுகின்றன...
அன்பென்றால் என்னவென்றறிய...
அன்பு செய்தலைத் தவிர வேறு 
ஒரு வழியும் இல்லை நமக்கு...!

இரண்டு நிமிடங்களை விழுங்கிக் கொண்ட அந்த அழுத்தமான பேரமைதியை அந்தப் பெரியவர்தான் மெதுவாய்த் திறந்தார்....

இல்ல தம்பி அங்க கவுண்ட்டர்ல பணம் கொடுக்க நேரமாயிடுச்சே....நீங்க வேற அவசரமா இருந்தீங்க அதுக்குத்தான் சாரி கேட்டேன்...

முதுமையைப் போல ஒரு அற்புதமான விஷயம் இருக்க முடியாது என்று எனக்குத் தோன்றியது. அதை அனுபவிக்காமல் இறந்து போய்விடுபர்கள் துரஷ்டசாலிகள். வாழ்க்கையின் மையம் என்று நம்மை நினைத்துக் கொண்டு வாழ்ந்து விட்டு.... மெல்ல மெல்ல காலம் நீ இந்த வாழ்க்கைக்கு அவசியம் கிடையாது என்று நம்மை புறந்தள்ளத் தொடங்கும் அந்த நாட்களை மெதுவாய் நாம் சுவைக்க வேண்டும். முதுமையில் பெரும்பாலும் எந்தத் தொந்தரவும் இல்லாமல் நாமே நாமாய் இருக்க முடியும். நமக்குப் பிடித்த விசயங்களை நாம் செய்து கொண்டே இருக்கலாம். யாரும் வந்து தொந்தரவு செய்ய மாட்டார்கள். நம்மை கொண்டு ஆவது ஒன்றும்  இல்லை என்று உலகம் நம்மை ஒதுக்கும் போதுதான் நிஜமாகவே நமக்கான வாழ்வு ஒன்று தொடங்குகிறது.....
நீ கூட ஏதோ பொக்கே வாங்கி இருக்கப் போல தம்பி.....நடுங்கிக்கொண்டே வெளிவந்த அந்த குரலை ரெக்கார்ட் செய்து மூர்க்கமாய் பேசுபவர்களிடமும், அவசர அவசரமாய் பேசுபவர்களிடமும் போட்டுக்காட்டி இதற்குப் பெயர்தான் நிதானம்....அறிந்தீர்களா....? என்று உரக்க கேட்க வேண்டும் என்று தோன்றியது எனக்கு.....

ஆமாம்...சார்....என்னோட காதலிக்குப் பிறந்த நாள்..இன்னைக்கு...அதான்....

நம் எதிரே பேசுபவர்களின் குணம் நமக்கு சட்டென்று வந்து விடுகிறது. ஒரு வித ரிஷப்டிவ் மனோநிலையில் இருக்கும் போது இது 100% சாத்தியமே...! நான் என்னைப் பெரியவரைப் போல உணர்ந்தேன்...

நானும் கூட பொக்கே என்னோட காதலிக்குதான் வாங்கி இருக்கேன்...கூறி விட்டு புன்னகைத்தார்....

எனக்கு சந்தோசமாயிருந்தது. வீட்டிலிருக்கும் அந்த பாட்டிக்கு எவ்வவு சந்தோஷமாயிருக்கும் இந்த பூங்கொத்தைப் பார்த்தால்.....வேரூன்றி படர்ந்து வியாபித்திருந்த அந்தக் காதல் எனக்கு காதலின் வேறு பரிமாணங்களைப் போதித்தது.

வாவ்... தட்ஸ் வெரி நைஸ் ....என்று சொன்னதை அவர் சட்டை செய்ய வில்லை....

என் மனைவிக்குப் பூங்கொத்து என்றால் எப்போதும் ப்ரியம். எங்களுக்கென்று யாரும் இல்லை.....எங்களுக்கென்று இருந்த ஒரே மகனும் ஒரு விபத்தில் இளம் வயதில் இறந்து போய்விட்டான். செடிகளை விற்கும் நர்சரி ஒன்று வைத்திருந்தேன் நான்....அதன் கூடவே பறவைகளையும் வாங்கி விற்று வந்தேன். எங்கள் வாழ்க்கை தனிமையால் நிறைந்தது. எங்கள் உலகத்தில் நாங்கள் இருவர் மட்டுமே....கூடுமான வரை அதிகமாய் மனிதர்களை நாங்கள் சேர்த்துக் கொள்ளவில்லை...

மரங்கள், அருவிகள்,மலைகள், ஆறுகள், பூக்கள், செடிகள், பறவைகள்....இவைதான் எங்கள் உறவு....

சொல்லிக் கொண்டே எங்கோ வெறித்துப் பார்த்து கொண்டிருந்தார்....

சார்..... வீடு எங்கன்னு சொன்னா போற வழியில நான் வேணும்னா இறக்கி விட்டுடுப் போகவா....? கேட்டேன்....

நான் வீட்டுக்குப் போகலை தம்பி.....என்னை பக்கத்துல இருக்கிற.....சிமிட்ரில இறக்கி விடமுடியுமா?...அட்ரஸ் சொன்னார்....

சிமிட்ரிலயா.....????????? கல்லறைக்கு எதுக்கு சார்....? எனக்குத் தொண்டை அடைத்தது....

போன மாசம் என் மனைவி இறந்து போய்ட்டா தம்பி......அவர் கண்கள் கலங்கி இருந்தன.....

சார்....???????? தழு தழுத்தேன்...

போன மாதம் ஒரு புதன் இரவு அவளுக்கு கைகால்கள் எல்லாம் வலிக்கிறதென்றாள். பிடித்து விட்டேன்....இரவு வெகு நேரம் அவள் உறங்கவில்லை. குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தாள். கம்பளையைப் போர்த்தி விட்டு, ஜன்னல்களை எல்லாம் அடைத்து வைத்தேன்...விடியற்காலையில் அவளுக்கு உறக்கம் வருகிறதென்று கூறி என் தோளில் தலை வைத்து என் கழுத்தினைக் கட்டிக் கொண்டாள்.....

அவளின் தலை கோதியபடியே உறங்கிப் போனேன்...அடுத்த நாள் எனக்கு மட்டுமே விடிந்தது...அவள் நிரந்தரமாய் உறங்கிப் போனாள்......

எவ்வளவு உயிருக்குயிரான கணவன் மனைவியாய் வாழ்ந்தாலும் யாரோ ஒருவரை முதலில் பிரித்து விடுகிறது காலம். தனது துணையின் மரணத்திற்குப் பிறகும் அவள் மீது கொண்டிருந்த காதலை ஒருவரால் தொடர முடியுமாயின்....அந்தக் காதலி அல்லது காதலன் எவ்வளவு அதிர்ஷ்டசாலி....

அந்தப் பெரியவர் என் தோளைத் தொட்டார்....மை சன்...வில் இட் பி பாஸிபில் டு ட்ராப் மீ இன் த சிமிட்ரி...?

இன்று வியாழக்கிழமை அவள் இறந்த நாள்....ஒவ்வொரு வியாழனும் அவளைப் பூங்கொத்தோடு வந்து சந்திக்கிறேன் என்று கூறியிருக்கிறேன்....அப்படி நான் போகாத அன்று ஒன்று நான் இறந்திருப்பேன்...அல்லது எனக்கு சுயநினைவு இல்லாமல் போயிருப்பேன்....

....
....
...

காரை சிமிட்ரி நோக்கி ஓட்டிக் கொண்டிருந்தேன். பெரியவர் எதுவும் பேசாமல் கண்களை மூடி அமர்ந்திருந்தார்....

வாழ்த்துச் சொல்ல மறந்து போயிருந்த மஞ்சுவின் பிறந்த நாள் ஏனோ என்னை நெஞ்சுக்குள்  இம்சித்துக் கொண்டிருந்தது....தேவா சுப்பையா...Thursday, July 10, 2014

கேபிள் சங்கரின் தொட்டால் தொடரும்...!


தமிழ் இணைய வெளிக்குள் உலாவும் அத்தனை பேருக்கும் கேபிள் சங்கரைத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை அதுவும் வலைப்பதிவர்களுக்கு எல்லாம் கிட்டத்தட்ட அவர் பீஷ்மர் மாதிரி. எவ்வளவு வேலைகள் இருந்தாலும் தொடர்ச்சியாய் தனது உணர்வுகளை சமூகம் பற்றிய பார்வைகளை அவர் பதிவு செய்யாமல் இருந்ததே இல்லை. ஒரு திரைப்படத்தை இயக்குவது என்பது சாதாரணமான வேலை இல்லை என்றாலும் அதற்கு இடையிலும் அவர் வலைப்பக்கத்தில் எழுதிக் கொண்டுதான் இருந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்...!

கே.ஆர்.பி செந்தில் மூலம்தான் கேபிள் அண்ணா எனக்கு அறிமுகமானார். கேபிளின் கடுமையான உழைப்பையும், திட்டமிடலையும், சினிமா பற்றிய அறிவையும் பற்றி அடிக்கடி அவர் சிலாகித்துப் பேசுவார். இணைய உலகில் கேபிளின்  சினிமா விமர்சனங்கள் வெகு பிரலபமானது. ஒரு திரைப்படம் சரியாய் இல்லை என்றால் தயவு தாட்சண்யம் பார்க்காமல் கிழித்து தொங்க விட்டு விடுவார். சினிமா விமர்சனம் எழுதியவர், கதைகள் கவிதைகள், கட்டுரைகள், என்று எழுதியவர் திரைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறாரே.... அதெல்லாம் அவருக்கு சரியாய் வருமா என்ற நிறைய பேர்களின் நினைப்பை... புட்பாலாக்கி ஸ்ட்ரெய்ட்டாக கோல் அடித்து பரபரப்பை உண்டாக்கியது தொட்டால் தொடரும் படத்தின் முதல் டீசர் பாடல்.

சமகால இளையர்களுக்கு என்ன வேண்டும்? அவர்கள் எதை ரசிப்பார்கள் என்பதை இளைஞர்களுக்கு மத்தியில் இருந்து கொண்டு சமூகப் பிரச்சினைகளை பார்க்கும் ஒருவரை விட வேறு யாரால் தெளிவாய்ச் சொல்லி விட முடியும்.....?

கேபிள் சங்கர் 100 படங்களுக்கு உதவி இயக்குனராய் பணியாற்றி சினிமா மரபுகளையும் இன்ன பிற தயவு தாட்சண்யங்களையும் பின்பற்றி தன்னை அதற்கு ஏற்றார் போல மாற்றிக் கொண்டு இயக்குனர் ஆனவர் அல்ல....


அவர் 1000க்கும் மேற்பட்ட படங்களை ரசிகர்களோடு ரசிகர்களாக அமர்ந்து பார்த்து  ரசிகனுக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது என்பதை தெளிவாய் அறிந்து வைத்திருப்பவர். என்னைப் போன்ற வலைப்பதிவர்களுக்கு எல்லாம் வலைப்பதிவர்களின் முன்னோடியான கேபிள் சங்கர் படம் இயக்கப் போகிறார்  என்ற செய்தியைக் கேட்டதில் இருந்து ரஜினி புதுப்படம் அறிவித்ததைப் போலத்தான் இருந்தது. தொட்டால் தொடரும் படத்தின் செய்திகள் இணையத்தில் வரும்போதெல்லாம் வெகு ஆவலாய் அதைப் பார்ப்பதும் படிப்பதுமாய் இருந்த எங்களுக்கு வெகு சீக்கிரமே படம் வெளியாகப் போகிறது என்ற செய்தி வெகு இனிப்பானதுதான்.

தொட்டால் தொடரும் படத்தின் பாடல்கள் வெளியாகி இருக்கும் இந்த நேரத்தில் அந்தப் படத்தின் முதல் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. பட்டாசு வெடிப்பதற்கு முன்பு திரி பற்றிக் கொள்ளுமே சர...சரவென்று....அதே வேகத்தில் படத்தின் ஷாட்களும், பின்னணி இசையும், வசனங்களும் ஸ்க்ரீனில் பரபரக்க....பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்குள்ளும் பற்றிக் கொள்கிறது அந்தப் பொறி....!

ஒரு வெற்றிப்படத்திற்குரிய சகல குணாதிசயங்களுடன் வெளியாகி இருக்கும் தொட்டால் தொடரும் பாடல்களும், ட்ரைலரும்  இணையத்தில் இப்போது பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றன...! 


தொட்டால் தொடரும் படம் மிகப்பெரிய வெற்றியடைந்து அண்ணன் கேபிள் சங்கர் எட்ட முடியாத உயரங்களை எல்லாம் எட்டிப் பிடிக்க  எனது அன்பான வாழ்த்துகள்...!


தேவா சுப்பையா...
Tuesday, July 8, 2014

அது அந்தக் காலம்....!


1985 களின் டபுள் ஸ்பீக்கர் நேசனல் பானோசானிக் டேப்ரிக்கார்டர் காலம் அது. மலேசியாவிலிருக்கும் மாமா கொண்டு வந்து அதைக் கொடுத்திருந்தார் எங்களுக்கு. ஓட்டை ரேடியோவுக்கு ஏரியல் கட்டி ஆல் இந்திய ரேடியோவின் விவித பாரதிக்குள்ளும், சிலோன் வானொலிக்குள்ளும் குதிரை ஓட்டிக்கொண்டிருந்த எங்களுக்கு அந்தப் புது விருந்தாளி பல வகையில் ஆச்சர்யமான விசயம்தான். ரேடியோ பெட்டியை ஒரு நாள் கரண்ட் இல்லை என்று  அம்மா கீழே இறக்கி வைத்து பேட்டரி கட்டையில் பாட விட்டிருந்த போது நான் அந்த ரேடியோப் பெட்டியையே சுற்றி வந்த அந்த ஐந்து வயது எனக்கு நன்றாக இன்னமும் பசுமையாய் நினைவிருக்கிறது...?

இதற்குள் இருந்து கொண்டு எப்படிப் பாடுகிறார்கள்? எப்படி இதற்குள் வாழ்கிறார்கள்? இதன் உள்ளே வசிப்பவர்களுக்கு பசிக்குமா பசிக்காதா என்றெல்லாம் என்னை யோசிக்க வைத்த அந்தக் காலத்தின் அறிவு விஸ்தாரம் அவ்வளவுதான். அது ஒரு போதும் இப்போதைய ஐந்து வயது பிள்ளையுடைய அறிவாய் இருந்ததில்லை. ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் ஒன்றும் கிடையாது என்று சிந்தித்து வாழ்ந்து கொண்டிருந்த சமூக ஒழுங்குக்குள் வேறென்ன யோசித்து விட முடியும். 12 கிலோ மீட்டருக்குள் இருந்த பக்கத்து ஊருக்கு பேருந்தில் போய் வருவது ஏதோ கண்டம் விட்டு கண்டம் சென்று வருவதைப் போன்ற ஆயாசத்தை அல்லவா அப்போது நமக்குக் கொடுத்தது. வெளிநாடு செல்வது போலத்தான் ஒருவன் சென்னையிலோ அல்லது இன்ன பிற இடத்திலோ வசிப்பதென்பது. கடிதங்கள் மட்டுமே உச்ச பட்ச உறவு இணைப்பின் பாலமாய் இருந்தது அப்போது.

நேசனல் பானாசோனிக் டேப் ரிக்கார்டர் ஏதோ ஒரு ப்ளாஸ்டிக் டப்பாவை உள்ளே வாங்கிக் கொண்டு பாடுகிறது, கதை சொல்கிறது, திரைப்படங்களின் ஒலிச்சித்திரத்தை ஒலிபரப்புகிறது, நாம் பேசுவதை பதிவு செய்து நமக்கே திருப்பிச் சொல்கிறது என்பதெல்லாம் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதித்ததை விட அதிசய விசயமாகத்தான் எங்களுக்கு அப்போது தோன்றியது. குரலை பிடிக்கிற பெட்டிக்குள்ள சங்கிலிக் கருப்பன் உக்காந்து இருக்கான், அவன் தான் எல்லாருடைய குரலையும் பிடிச்சு வச்சுக்கிட்டு அப்புறமா வெளிய விடுறான்... மரியாதையா சாப்டுருன்னு அம்மா கொமட்ல குத்தி சோறு ஊட்டி விட்டபோது நிஜமாவே சங்கிலிக்கருப்பன்  உள்ள இருப்பான் போலன்னு பயந்து போய் குமட்ட குமட்ட பருப்பு சாதத்தை மருக்கி மருக்கிக்கிட்டு சாப்ட்டு தொலைச்சது எல்லாம் ஒரு காலம்னு வச்சுக்கோங்களேன்.

நாளாக, நாளாக, டேப்ரிக்கார்டர் ரொம்ப சினேகமாகிப் போக காரணம் அதோட ஆப்பரேட்டிங் மெத்தட்ஸ் எல்லாம் எனக்கு மனப்பாடமாகிப் போனதுதான் பர்ஸ்ட் பட்டன் தற்காலிகமாய் நிறுத்திவைக்க, ரெண்டாவது பட்டன் மொத்தமாய் நிறுத்த, மூணாவது பட்டன் ப்ளே செய்ய, நாளாவது பட்டன் ஃபார்வேர்டிங், அஞ்சாவது பட்டன் ரிவைண்ட், ஆறாவது பட்டன் சும்மாதான் இருக்கும் ஆனா ஆறாவது பட்டனையும் மூணாவது பட்டனையும்  சேத்து அமுக்கினாதான் உள்ள இருக்க சங்கிலிக் கருப்பன் நாம பேசுறத புடிச்சு வைப்பான்னு சொல்லி அம்மாவுக்கே பிறகு நான் ட்யூசன் சொல்லிக் கொடுத்த கொடுமையும் வேற அப்ப நடந்துச்சு.

பாலு அத்தான் லீவுக்கு வரும் போது மட்டும் அடிக்கடி அதுல கமலஹாசன் பாட்டா பாடி பதிவு பண்ணி வைப்பார். இந்தியன் நேவில அவர் வேலை பார்த்துட்டு  இருந்ததால இந்திக்காரங்க சகவாசம் அவருக்கு கூடுதல். அதனாலேயே நிறைய இந்திப்பாட்டுகளா பாடி பதிவு பண்ணி வைப்பார். தேரே மேரே பீ ச்ச்சும்மே எல்லாம் அவர் பாடித்தான் முதல் தடவையா நான் கேட்டு இருக்கேன். தொடர்ச்சியா ஓடிட்டு இருந்த வாழ்க்கையில ஒவ்வொரு ராத்திரியும் ஏதாவது ஒலிச்சித்திரம் கேட்டுகிட்டே படுக்கறது எங்களுக்குப் பழக்கமா போச்சு....! புதுசு புதுசா வாரம் வாரம் எல்லாம் கேசட் வாங்க மாட்டோம். ஒரு நாலைஞ்சு ஒலிச்சித்திரம் எப்பவும் ஸ்டாண்ட் பையா வீட்ல இருக்கும், தில்லானா மோகனாம்பாள், திருவிளையாடல், சரஸ்வதி சபதம் அப்புறம் மெரீனாவோட தனிக்குடித்தனம்னு ஒரு நாடகம்.... இதுமாதிரி. தில்லானா மோகனாம்பாள் எல்லாம் கேட்டு கேட்டு மனப்பாடமா நானும் எங்க அக்காவும் அந்த ஒலிச்சித்திரத்தை ஒப்பிப்போம்னா பாத்துக்கோங்களேன்...

அதுவும் நான் ஒரு படி மேல போய் ஒரு சீனுக்கும் இன்னொரு சீனுக்கும் இடையில டொய்ய்ய்ய்ய்ங்ன்ன்னு மியூசிக் வருமே அதுவரைக்கும் சொல்வேன். திருவிளையாடல் தருமியும், தில்லானாமோகனாம்பாள் வைத்தியும் எங்க கூடவேதான் வாழ்ந்திட்டு இருந்தாங்க அப்போ. கண்ண மூடிக்கிட்டு ஒவ்வொரு கேரக்டரும் பேசுறதுக்கு உள்ள ஒரு உருவம் கொடுத்துக்கிட்டே அழுது, பதறி, சிரிச்சு, கோபப்பட்டு ஒலிச்சித்திரம் கேக்குற சுகத்தை இன்னிக்கு சேட்டிலைட் டிவிகளும், இன்ன பிற யூ ட்யூப் வகையறாக்களும் கெடுத்துடுச்சுன்னுதான் நான் சொல்லுவேன். எந்த விசயமா இருந்தாலும் அது பத்தி நாம நிறைய,நிறைய பேசணும், நிறைய கேட்கணும், அது பத்தி தேடித் தேடி படிக்கணும். ரொம்ப நாள் அந்த விசயம் நமக்குள்ளேயே ஊறணும், ராத்திரியும், பகலும் அது பத்தி யோசிச்சு யோசிச்சு, குளிக்கும் போது சாப்டும் போது விளையாடும் போது, படுக்கும் போதுன்னு ஏங்கி ஏங்கி  அப்புறம் ஒரு நாள் அந்த விசயம் நமக்கு கிடைச்சுது இல்ல பாக்க வாய்ப்பு இருந்துச்சுனா அதுல இருக்குற சுவாரஸ்யமே வேறதானே?!

இப்ப எல்லாம் ம்ம்ம்ம்ம் என்றால் கூகிள் சர்ச் ஏன்ன்ன்ன்ன் என்றால் யூ ட்யூப்ன்னு சொல்லி அடுத்த செகண்ட் ஒரு விசயத்தை தெரிஞ்சிக்கிட்டுப் போய்ட்டே இருக்காங்க. கைலாஷ் மலையா இருக்கட்டும் இல்லை தார் பாலைவனமா இருக்கட்டும் அடுத்த க்ளிக்ல மேட்டர் நமக்கு கிடைச்சுடுது. நிறைய செய்திகள் நமக்கு உடனுக்கு உடன் தெரிஞ்சுடுது அப்டீன்ற ஒரு பாஸிட்டிவ்  மூவ் இப்போ இருக்கு அப்டீன்றது உண்மைதான் என்றாலும்.... எவ்ளோ அவசரமா கத்துக்குறோமோ அவ்ளோ அவசரமா மறந்துடுறோம் அப்டீன்ற வலிக்கிற உண்மையும் இதுக்குப் பின்னால இருக்கு. நிறைய, நிறைய புதுசு புதுசா தெரிஞ்சுக்கணும் படிக்கணும் அப்டீன்ற ஆசையில தெரிஞ்சுக்கிட்ட விசயத்துல ஊன்றி நிக்க முடியலை யாராலயும், அதுலயே ஊறிக் கிடக்க முடியாம அது கடந்து போக இன்னொன்னு வந்துடுது.... அது போனா இன்னொன்னு....இப்டியே போய்கிட்டு இருக்கும் போது எதைத்தான் ரசிக்க முடியும்? எதில் லயித்துக் கிடக்க முடியும்? ரசனையற்ற ஓர் சமூகமாய் நாம் மாறிப் போய் இயந்திரங்களாய் ஓடிக் கொண்டிருப்பதற்கு நவீனத்தின் வளர்ச்சியும் ஒரு காரணிதானே?

1980கள் வரைக்கும் பிறந்தவர்களுக்கு இந்த கொடுப்பினை இருந்தது. அவர்கள் வாழ்க்கையில் ஒரு நிதானமும் ரசிப்புத் தன்மையும் மிகுந்திருப்பதற்கும் காரணமாய் அப்போதைய வாழ்வியல் சூழலும் மனிதர்களும் இருந்தார்கள் என்பதே உண்மை.

.....பேக் டூ பானாசோனிக் டேப்ரிக்கார்டர்....

1985, அல்லது 1986களில் அப்பாவின் வயது 40 களில் நின்று கொண்டிருந்தது. அடிக்கடி அதட்டி ஒரு ஸ்ட்ரிக்ட் ஆஃபிசராய் இருந்த அப்பா கூட அவ்வப்போது பானாசோனிக்கில் தன் குரலை பதிய வைத்து ரசித்துப் பார்ப்பது எனக்கு அதிசயமாய் இருந்தது. அப்பாவே எழுதி அவரே மெட்டமைத்து பாடிய பாடல் ஒன்று இன்னமும் எனக்கு நினைவிருக்கிறது.

அட நீ என்ன நினைச்சுக்கிட்டிருக்க.....
அட நீ என்ன நினைச்சுக்கிட்டிருக்க....
நான் நீராகாரத் தண்ணிய கேட்டா....
நீ நீட்டி நிமிந்துகிட்டுதான் போற...
அட என்ன நினைச்சுக்கிட்டு இருக்க....
அட நீ என்ன நினைச்சுக்கிட்டு இருக்க....

அம்மா கோயிலுக்குப் போயிருந்த ஒரு விடுமுறை தினத்தின் காலையில் எழுதி எழுதி பேப்பரில் மீண்டும் மீண்டும் திருத்தி அவர் பாடியதை நான் பக்கத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அம்மா வந்தவுடன் அதை நான் போட்டுக் காட்ட அம்மா அதைக் கேட்டுவிட்டு அப்பாவிடம் யார நினைச்சுக்கிட்டு எழுதுனீங்கன்னு கேட்டு தகராறு பெரிசாகறதுக்கு முன்னாடி அப்பா சைக்கிள எடுத்துக்கிட்டு ஆபீஸ்க்கு போறேன் பேர்வழின்னு எஸ்கேப் ஆனது வேறு ஒரு ஜாலியான கதை. ஆறு சோனி 90 கேசட்டுகளை அதே மலேசியா மாமா கொண்டு வந்து அடுத்த தடவை கொடுத்து விட்டுப் போக....

அப்பாவின் செலக்சன் ஆஃப் சாங்க்ஸோடு நான் குரங்குப் பெடலடித்த படியே மெலொடியஸ் ம்யூசிக் சென்டர் போய் பாட்டையெல்லாம் ரெக்கார்ட் பண்னி கொண்டு வந்து அப்பாவிடம் கொடுத்திருக்கிறேன். விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவேயில் ஆரம்பித்து அமுதை பொழியும் நிலவே வழியே பயணித்து, ஊரார் உறங்கையிலே உற்றாரும் தூங்கையிலே நல்ல பாம்பு வேடமிட்டு நான் வருவேன் சாமத்துலே என்று போய், கொடுத்தவனே பறித்துக் கொண்டாண்டி என்று குலுங்கி.....

சிங்கார வேலனே தேவா....என்று முடியும் அந்தக் கால பாடல்கள் எல்லாம் எனக்கு இன்றும் பசுமையாய் நினைவிலிருப்பதற்கு காரணம் அப்பாதான்.

ஒரு நாள் ஒரு பாடலைக் கேட்டுக் கொண்டே அப்பா தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தார். 

என்னாச்சுப்பா... என்று மெதுவாய் கேட்டேன்....

எங்க அப்புவும் (அவருடைய அப்பாவை அப்படித்தான் அழைப்பார்) நானும் மதுரைக்கு போயிருந்த போது எங்க அப்பு என்னைய கூட்டிக்கிட்டுப் போய் நாங்க ரெண்டு பேரும் பாத்த படம்டா இது..... படம் பேரு சதாராம் 1956ல வந்துச்சு இந்தப் படம். நான் படம் பாக்கையில் எனக்கு பத்து வயசு என்று அவர் என்னிடம் சொன்ன போது  என் தாத்தா இறந்து நான்கு வருடம் ஆகி இருந்த என்னுடைய ஏழு வயது. எனக்கு மனசுக்கு சங்கடமாயிருந்தது அப்போது. அப்பாவை கட்டிப் பிடித்துக் கொண்டேன் தோளோடு....

காலம் கட கடவென்று ஓடி விட்டது. 

இன்றைக்கு எதேச்சையாய் கூகிளைப் புரட்டிக் கொண்டிருந்த போது....சதாரம் படம் பற்றிய ஒரு செய்தி என் கண்ணில் பட உடனே அப்பா சொன்ன அந்தப் பாடல் எனக்குள் ஓட....தேடிப் பிடித்து அந்த பாடலை தரவிறக்கம் செய்து கேட்க ஆரம்பித்தேன்....

" மண் மீது மானம் ஒன்றே பிரதானம்...
 என்றெண்ணும் குணம் வேண்டும்...
இதை மறந்தாலே வாழ்வில்....
 கிடைக்கும் சன்மானம் மாறாத அவமானம்....."


அப்பா இன்று எங்களோடு இல்லை, ஆனால் அவர் ஏன் அன்றைக்கு தேம்பித் தேம்பி அழுதார் என்பதை உணர்ந்தபடியே நானும் தேம்பிக் கொண்டிருக்கிறேன் இப்போது....


தேவா சுப்பையா...


Saturday, July 5, 2014

தக்க்ஷின் குட் ஈவினிங் - 3


இதுவரைஇனி...

12 வருடம் என்பது ஒரு சிறு காலச் சுழற்சி. அந்த சுழற்சிக்குள் எதுவுமே நடந்து விடாதது மாதிரி தோன்றினாலும் காலம் மிகையானவற்றை விழுங்கியபடியே வேகமாய் நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கற்பனைகளும் கனவுகளும் நிறைந்த இந்த வாழ்க்கையில் இன்பம் துய்க்க வேண்டிய ஆசையில் ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு மறுக்காமல் காலம் கொடுக்கும் பரிசுதான் மரணம்.

ஆனந்த்குமார் சார் இறந்து போய்விட்டார் என்பதை கேட்ட நான் நிஜமாய் ஸ்தம்பித்துப் போனேன். இதே போலத்தான் என்னுடைய அப்பா எப்போதும் துணி தைக்க என்னை அழைத்துச் செல்லும் பியூட்டி டெய்லர்ஸ்க்கு நான் கடந்த முறை சென்ற போது எப்போதும் அப்பாவுக்கு அளவெடுக்கும் சிவதாசன் சார் போட்டோவிற்கு மாலையிடப்பட்டிருந்தது. அவரின் மகன்கள் இப்போது அந்த தொழிலை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். என்னை கடைக்கு சிறுவயதில் அழைத்துச் சென்று ஒரு அறிமுகத்தைக் கொடுத்த என் அப்பாவும் இன்று இல்லை அப்பாவுக்கு துணி தைத்த சிவதாசன் சாரும் இல்லை. எல்லாமே மாறிக்கொண்டிருக்கிறது. மாறாமல் ஒரு பேரியக்கம் மட்டும் இங்கே நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

என்ன தேவ்... அப்டியே நின்னுட்ட....? எம்.டி சாரும் இல்லை அவுங்க மனைவியும் இப்ப இல்லை..ரெண்டு பேருமே இறந்துட்டாங்கப்பா.....ஹரி அண்ணா என் தோளில் கை வைத்தார். நான் எம்.டி சாரின் ஜீப்பை பார்த்துக் கொண்டே அதன் அருகில் சென்றேன். துருப்பிடித்து நொறுங்கிப் போய் கிடந்தது அது. ஸ்டேரிங்கில் கை வைத்து  தடவிப் பார்த்தேன். சூட்சுமமாய் அங்கே ஒரு இருப்பு இருப்பது போல எனக்குத் தோன்றியது. மனிதர்கள் மரித்துப் போன பின்பு அவர்கள் உபயோகம் செய்த பொருட்கள் கைவிடப்பட்டு விடுகின்றன. அவர்கள் உடுத்திய உடை. உபயோகம் செய்த பொருட்கள், வைத்திருந்த பொருட்கள் எல்லாமே..... ஒரு மிகப்பெரிய அமைதியைச் சுமந்தபடிதான் ஏதோ ஒரு மூலையில் கிடக்கின்றன.

என் தாத்தாவின் சட்டையும் வேஷ்டியும், அப்பத்தாவின் சுங்கிடிச் சேலைகளும் இன்னமும் கிராமத்தில் இருக்கும் சொந்த வீட்டின் அறைவீட்டிற்குள்  ஒரு ட்ரங் பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கின்றன. ரகசியம் என்று அவர்கள் காத்து வைத்திருந்த கடிதங்கள், பத்திரங்கள், இன்ன பிற பாண்டங்கள் எல்லாம் பொதுவில்  வந்து விட்டன. அவர்கள் உபயோகம் செய்தவற்றை வேறு யாரிடமும் கொடுக்க பெரும்பாலும் நமக்கு மனம் வருவதுமில்லை, நாம் பயன்படுத்துவதும் இல்லை. 

மிகப்பெரிய சோகத்தோடு நின்று கொண்டிருந்த அந்த ஜீப்பிற்குள் தலையை விட்டு பார்த்தேன். தூசி படிந்து கிடந்தது அங்கே என்னுடைய பழைய நினைவுகள். வண்டியில் சிறு சப்தம் வந்தாலும் துடி துடித்துப் போய் சர்வீசுக்கு வண்டியை அனுப்புய்யா என்று சப்தம் போட்ட அந்த மனிதர் எங்கே இப்போது? துருப்பிடித்து இத்துப் போயிருக்கும் இந்த வண்டியைப் பார்த்தால் அவர் என்ன சொல்லுவார் இப்போது? பாழடைந்து இன்னமும் கைவிடப்பட்டுக் கிடக்கும் இந்த ஹோட்டலைப் பார்த்தால் அவர் இன்னும் வேதனைதானே அடைவார்...? ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி காலம் மனிதர்களைக் கொண்டு சென்று விடுவது நல்லதுதானோ என்று எனக்குத் தோன்றியது.

எங்கே சென்று கொண்டிருக்கீறீர்கள் மனிதர்களே? 
உங்கள் அங்கீகாரத்தை விழுங்கப் போகும்
காலப் பெரும்பாறையின் உங்கள் நுனிக்கா?
பேசிக் கொண்டே இருக்கும் உங்கள் நாவுகளை
இந்தக் காலம் ஒரு நாள் எழும்பவே விடாது...
என்பது தெரியுமா உங்களுக்கு..?
நான் இல்லாமல் ஒன்றும் நகராது என்று சப்தமிட்டவர்களெல்லாம்
எங்கே போனார்கள் இன்று...?
சிரஞ்சீவியாய் ஜீவித்து நிற்பேன் என்றவர்களும்
யுகங்களின் நாயகர்கள் என்று வர்ணணை செய்யப்பட்டவர்களும்
பதுங்கிக் கிடக்கும் பிரதேசம் எதுவென்று தெரியுமா
இந்த பிரபஞ்சத்தில்...?

இல்லண்ணா.... திடீர்ன்னு கேட்ட உடனே அதிர்ச்சியாயிடுச்சு. சமாளித்தபடியே எப்டிண்ணா இறந்தாங்க  என்று ஹரி அண்ணாவிடம் கேட்டதற்கு நான் எதிர்ப்பார்த்திருந்த ஹார்ட் அட்டாக்கே பதிலாய் வந்தது. இறப்பதற்கு முன்பு மிகவும் சங்கடமான சூழலில் அவர் இருந்ததாக ஹரி அண்ணா சொன்னார்.  கேட்டுக் கொண்டே மெதுவாக ஹோட்டலைச் சுற்றி வந்தேன். மீண்டும் ஹோட்டல் லாபிக்கு வந்தேன். ரிஷப்சன் கவுண்டருக்குள் சென்று நின்று பார்த்தேன்.  அங்கேதான் என்னுடைய உத்தியோகம் வாழ்க்கை தொடங்கியது. இன்றைய நானின் ஆரம்ப நுனி அந்த ரிஷப்சன் கவுண்டர்தான். 

" தக்க்ஷின் குட் ஈவினிங்....." மனதிற்குள் கூறிப்பார்த்தேன்.  அழுகை வந்தது. கவுண்டர்  டெஸ்க்கை கையால் துடைத்து விட்டு கையை மடித்து முகம் வைத்து கொஞ்ச நேரம் படுத்திருந்தேன். என்னை மீறி மீண்டும் கண்ணீர் வந்தது. தக்க்ஷின் மீண்டும் எழாது என்றே எனக்குத் தோன்றியது. ஹரி அண்ணா கூல்ட்ரிங்ஸ் வாங்கிக் கொண்டு வந்திருந்தார். குடிக்க சொல்லி விட்டு அவரது குடும்ப சூழல் மற்றும் பிள்ளைகள் பற்றி பேசினார். கல்லூரி இறுதியாண்டில் இருக்கும் அவரது மூத்த மகனைப் பற்றிச் சொன்னார். வாய்ப்பு இருந்தால் துபாய்க்கு கூட்டிட்டுப் போப்பா....சொல்லி விட்டு தோளில் கைபோட்டு இறுக்கிக் கொண்டார்.

பைண்ணா... என்று  சொல்லி விட்டு....மீண்டுமொரு முறை தக்க்ஷினைப் பார்த்தேன்.


கட்டிடம் என்பது உயிரில்லாததுதான் ஆனால் அதன் உள்ளே மிகப்பெரிய வாழ்க்கை இருந்தது. எத்தனையோ குடும்பங்களின் பிழைப்பு இருந்தது. யார் யாருக்கோ  அந்த  கட்டிடத்தால் திருமணம் நடந்திருக்கிறது, பிள்ளைப் பேறுகள் நடந்திருக்கின்றன. எத்தனையோ குடும்பங்களின் கடன்கள் அடைக்கப்பட்டிருக்கின்றன்.  பிள்ளைகள் படித்து பட்டதாரி ஆக்கப்பட்டிருக்கிறார்கள். வந்த விருந்தினர்கள் அத்தனை பேரும் உற்சாகமாய் வந்து தங்கிச் சென்றிருக்கின்றார்கள் என்னைப் போல எத்தனையோ பேர்களுக்கு வாழ்க்கையை வாரி வழங்கி இருக்கிறது அந்த கட்டிடம். எந்த ஒரு நிறுவனமோ அல்லது வீடோ வெறுமனே ஒரு கட்டிடம் மட்டுமல்ல அது அங்கிருக்கும் சூழலாலும் மனிதர்களாலும் ஜீவன் நிறைந்தே எப்போதும் இருக்கிறது.

சரிகளும் தவறுகளும் இடைவிடாது நிகழ்ந்த அந்த தக்க்ஷின் என்னும் கட்டிடம் இப்போது அந்திமத்தில் தன் இளமையை நினைவு கூர்ந்த படி வீட்டின் மூலையில் கிடக்கும் வயதான மனிதரைப் போல சென்னை, நந்தனம் வெங்கட்நாராயணா சாலையில் மெளனமாய் நின்று கொண்டிருக்கிறது. அன்றாட வாழ்க்கையின் அவசர வேலைகளுக்காய் ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு அதுவும் ஒரு கட்டிடம் அவ்வளவுதான்....

ஆனால்....

என்னைப் போன்ற எத்தனையோ பேர்களுக்கு இது போன்ற வாழ்க்கையை அளித்த, அளிக்க காத்திருக்கும் கட்டிடங்கள் எத்தனை எத்தனையோ கோடிகள் இந்த உலகம் முழுதும் இருக்கின்றன. 

சென்னையின் மதியம் 3 மணி கோடை வெயிலைத் தாங்க முடியாமல் ஹெல்மெட்டின் புழுக்கத்தில் வண்டியை போரூர் நோக்கி விரட்டிக் கொண்டிருந்தேன். நான்...!  

மனம் முழுதும் தக்க்ஷின் வலியாய் நிரம்பிக் கிடந்தது.......!தேவா சுப்பையா...