Skip to main content

அது அந்தக் காலம்....!


1985 களின் டபுள் ஸ்பீக்கர் நேசனல் பானோசானிக் டேப்ரிக்கார்டர் காலம் அது. மலேசியாவிலிருக்கும் மாமா கொண்டு வந்து அதைக் கொடுத்திருந்தார் எங்களுக்கு. ஓட்டை ரேடியோவுக்கு ஏரியல் கட்டி ஆல் இந்திய ரேடியோவின் விவித பாரதிக்குள்ளும், சிலோன் வானொலிக்குள்ளும் குதிரை ஓட்டிக்கொண்டிருந்த எங்களுக்கு அந்தப் புது விருந்தாளி பல வகையில் ஆச்சர்யமான விசயம்தான். ரேடியோ பெட்டியை ஒரு நாள் கரண்ட் இல்லை என்று  அம்மா கீழே இறக்கி வைத்து பேட்டரி கட்டையில் பாட விட்டிருந்த போது நான் அந்த ரேடியோப் பெட்டியையே சுற்றி வந்த அந்த ஐந்து வயது எனக்கு நன்றாக இன்னமும் பசுமையாய் நினைவிருக்கிறது...?

இதற்குள் இருந்து கொண்டு எப்படிப் பாடுகிறார்கள்? எப்படி இதற்குள் வாழ்கிறார்கள்? இதன் உள்ளே வசிப்பவர்களுக்கு பசிக்குமா பசிக்காதா என்றெல்லாம் என்னை யோசிக்க வைத்த அந்தக் காலத்தின் அறிவு விஸ்தாரம் அவ்வளவுதான். அது ஒரு போதும் இப்போதைய ஐந்து வயது பிள்ளையுடைய அறிவாய் இருந்ததில்லை. ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் ஒன்றும் கிடையாது என்று சிந்தித்து வாழ்ந்து கொண்டிருந்த சமூக ஒழுங்குக்குள் வேறென்ன யோசித்து விட முடியும். 12 கிலோ மீட்டருக்குள் இருந்த பக்கத்து ஊருக்கு பேருந்தில் போய் வருவது ஏதோ கண்டம் விட்டு கண்டம் சென்று வருவதைப் போன்ற ஆயாசத்தை அல்லவா அப்போது நமக்குக் கொடுத்தது. வெளிநாடு செல்வது போலத்தான் ஒருவன் சென்னையிலோ அல்லது இன்ன பிற இடத்திலோ வசிப்பதென்பது. கடிதங்கள் மட்டுமே உச்ச பட்ச உறவு இணைப்பின் பாலமாய் இருந்தது அப்போது.

நேசனல் பானாசோனிக் டேப் ரிக்கார்டர் ஏதோ ஒரு ப்ளாஸ்டிக் டப்பாவை உள்ளே வாங்கிக் கொண்டு பாடுகிறது, கதை சொல்கிறது, திரைப்படங்களின் ஒலிச்சித்திரத்தை ஒலிபரப்புகிறது, நாம் பேசுவதை பதிவு செய்து நமக்கே திருப்பிச் சொல்கிறது என்பதெல்லாம் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதித்ததை விட அதிசய விசயமாகத்தான் எங்களுக்கு அப்போது தோன்றியது. குரலை பிடிக்கிற பெட்டிக்குள்ள சங்கிலிக் கருப்பன் உக்காந்து இருக்கான், அவன் தான் எல்லாருடைய குரலையும் பிடிச்சு வச்சுக்கிட்டு அப்புறமா வெளிய விடுறான்... மரியாதையா சாப்டுருன்னு அம்மா கொமட்ல குத்தி சோறு ஊட்டி விட்டபோது நிஜமாவே சங்கிலிக்கருப்பன்  உள்ள இருப்பான் போலன்னு பயந்து போய் குமட்ட குமட்ட பருப்பு சாதத்தை மருக்கி மருக்கிக்கிட்டு சாப்ட்டு தொலைச்சது எல்லாம் ஒரு காலம்னு வச்சுக்கோங்களேன்.

நாளாக, நாளாக, டேப்ரிக்கார்டர் ரொம்ப சினேகமாகிப் போக காரணம் அதோட ஆப்பரேட்டிங் மெத்தட்ஸ் எல்லாம் எனக்கு மனப்பாடமாகிப் போனதுதான் பர்ஸ்ட் பட்டன் தற்காலிகமாய் நிறுத்திவைக்க, ரெண்டாவது பட்டன் மொத்தமாய் நிறுத்த, மூணாவது பட்டன் ப்ளே செய்ய, நாளாவது பட்டன் ஃபார்வேர்டிங், அஞ்சாவது பட்டன் ரிவைண்ட், ஆறாவது பட்டன் சும்மாதான் இருக்கும் ஆனா ஆறாவது பட்டனையும் மூணாவது பட்டனையும்  சேத்து அமுக்கினாதான் உள்ள இருக்க சங்கிலிக் கருப்பன் நாம பேசுறத புடிச்சு வைப்பான்னு சொல்லி அம்மாவுக்கே பிறகு நான் ட்யூசன் சொல்லிக் கொடுத்த கொடுமையும் வேற அப்ப நடந்துச்சு.

பாலு அத்தான் லீவுக்கு வரும் போது மட்டும் அடிக்கடி அதுல கமலஹாசன் பாட்டா பாடி பதிவு பண்ணி வைப்பார். இந்தியன் நேவில அவர் வேலை பார்த்துட்டு  இருந்ததால இந்திக்காரங்க சகவாசம் அவருக்கு கூடுதல். அதனாலேயே நிறைய இந்திப்பாட்டுகளா பாடி பதிவு பண்ணி வைப்பார். தேரே மேரே பீ ச்ச்சும்மே எல்லாம் அவர் பாடித்தான் முதல் தடவையா நான் கேட்டு இருக்கேன். தொடர்ச்சியா ஓடிட்டு இருந்த வாழ்க்கையில ஒவ்வொரு ராத்திரியும் ஏதாவது ஒலிச்சித்திரம் கேட்டுகிட்டே படுக்கறது எங்களுக்குப் பழக்கமா போச்சு....! புதுசு புதுசா வாரம் வாரம் எல்லாம் கேசட் வாங்க மாட்டோம். ஒரு நாலைஞ்சு ஒலிச்சித்திரம் எப்பவும் ஸ்டாண்ட் பையா வீட்ல இருக்கும், தில்லானா மோகனாம்பாள், திருவிளையாடல், சரஸ்வதி சபதம் அப்புறம் மெரீனாவோட தனிக்குடித்தனம்னு ஒரு நாடகம்.... இதுமாதிரி. தில்லானா மோகனாம்பாள் எல்லாம் கேட்டு கேட்டு மனப்பாடமா நானும் எங்க அக்காவும் அந்த ஒலிச்சித்திரத்தை ஒப்பிப்போம்னா பாத்துக்கோங்களேன்...

அதுவும் நான் ஒரு படி மேல போய் ஒரு சீனுக்கும் இன்னொரு சீனுக்கும் இடையில டொய்ய்ய்ய்ய்ங்ன்ன்னு மியூசிக் வருமே அதுவரைக்கும் சொல்வேன். திருவிளையாடல் தருமியும், தில்லானாமோகனாம்பாள் வைத்தியும் எங்க கூடவேதான் வாழ்ந்திட்டு இருந்தாங்க அப்போ. கண்ண மூடிக்கிட்டு ஒவ்வொரு கேரக்டரும் பேசுறதுக்கு உள்ள ஒரு உருவம் கொடுத்துக்கிட்டே அழுது, பதறி, சிரிச்சு, கோபப்பட்டு ஒலிச்சித்திரம் கேக்குற சுகத்தை இன்னிக்கு சேட்டிலைட் டிவிகளும், இன்ன பிற யூ ட்யூப் வகையறாக்களும் கெடுத்துடுச்சுன்னுதான் நான் சொல்லுவேன். எந்த விசயமா இருந்தாலும் அது பத்தி நாம நிறைய,நிறைய பேசணும், நிறைய கேட்கணும், அது பத்தி தேடித் தேடி படிக்கணும். ரொம்ப நாள் அந்த விசயம் நமக்குள்ளேயே ஊறணும், ராத்திரியும், பகலும் அது பத்தி யோசிச்சு யோசிச்சு, குளிக்கும் போது சாப்டும் போது விளையாடும் போது, படுக்கும் போதுன்னு ஏங்கி ஏங்கி  அப்புறம் ஒரு நாள் அந்த விசயம் நமக்கு கிடைச்சுது இல்ல பாக்க வாய்ப்பு இருந்துச்சுனா அதுல இருக்குற சுவாரஸ்யமே வேறதானே?!

இப்ப எல்லாம் ம்ம்ம்ம்ம் என்றால் கூகிள் சர்ச் ஏன்ன்ன்ன்ன் என்றால் யூ ட்யூப்ன்னு சொல்லி அடுத்த செகண்ட் ஒரு விசயத்தை தெரிஞ்சிக்கிட்டுப் போய்ட்டே இருக்காங்க. கைலாஷ் மலையா இருக்கட்டும் இல்லை தார் பாலைவனமா இருக்கட்டும் அடுத்த க்ளிக்ல மேட்டர் நமக்கு கிடைச்சுடுது. நிறைய செய்திகள் நமக்கு உடனுக்கு உடன் தெரிஞ்சுடுது அப்டீன்ற ஒரு பாஸிட்டிவ்  மூவ் இப்போ இருக்கு அப்டீன்றது உண்மைதான் என்றாலும்.... எவ்ளோ அவசரமா கத்துக்குறோமோ அவ்ளோ அவசரமா மறந்துடுறோம் அப்டீன்ற வலிக்கிற உண்மையும் இதுக்குப் பின்னால இருக்கு. நிறைய, நிறைய புதுசு புதுசா தெரிஞ்சுக்கணும் படிக்கணும் அப்டீன்ற ஆசையில தெரிஞ்சுக்கிட்ட விசயத்துல ஊன்றி நிக்க முடியலை யாராலயும், அதுலயே ஊறிக் கிடக்க முடியாம அது கடந்து போக இன்னொன்னு வந்துடுது.... அது போனா இன்னொன்னு....இப்டியே போய்கிட்டு இருக்கும் போது எதைத்தான் ரசிக்க முடியும்? எதில் லயித்துக் கிடக்க முடியும்? ரசனையற்ற ஓர் சமூகமாய் நாம் மாறிப் போய் இயந்திரங்களாய் ஓடிக் கொண்டிருப்பதற்கு நவீனத்தின் வளர்ச்சியும் ஒரு காரணிதானே?

1980கள் வரைக்கும் பிறந்தவர்களுக்கு இந்த கொடுப்பினை இருந்தது. அவர்கள் வாழ்க்கையில் ஒரு நிதானமும் ரசிப்புத் தன்மையும் மிகுந்திருப்பதற்கும் காரணமாய் அப்போதைய வாழ்வியல் சூழலும் மனிதர்களும் இருந்தார்கள் என்பதே உண்மை.

.....பேக் டூ பானாசோனிக் டேப்ரிக்கார்டர்....

1985, அல்லது 1986களில் அப்பாவின் வயது 40 களில் நின்று கொண்டிருந்தது. அடிக்கடி அதட்டி ஒரு ஸ்ட்ரிக்ட் ஆஃபிசராய் இருந்த அப்பா கூட அவ்வப்போது பானாசோனிக்கில் தன் குரலை பதிய வைத்து ரசித்துப் பார்ப்பது எனக்கு அதிசயமாய் இருந்தது. அப்பாவே எழுதி அவரே மெட்டமைத்து பாடிய பாடல் ஒன்று இன்னமும் எனக்கு நினைவிருக்கிறது.

அட நீ என்ன நினைச்சுக்கிட்டிருக்க.....
அட நீ என்ன நினைச்சுக்கிட்டிருக்க....
நான் நீராகாரத் தண்ணிய கேட்டா....
நீ நீட்டி நிமிந்துகிட்டுதான் போற...
அட என்ன நினைச்சுக்கிட்டு இருக்க....
அட நீ என்ன நினைச்சுக்கிட்டு இருக்க....

அம்மா கோயிலுக்குப் போயிருந்த ஒரு விடுமுறை தினத்தின் காலையில் எழுதி எழுதி பேப்பரில் மீண்டும் மீண்டும் திருத்தி அவர் பாடியதை நான் பக்கத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அம்மா வந்தவுடன் அதை நான் போட்டுக் காட்ட அம்மா அதைக் கேட்டுவிட்டு அப்பாவிடம் யார நினைச்சுக்கிட்டு எழுதுனீங்கன்னு கேட்டு தகராறு பெரிசாகறதுக்கு முன்னாடி அப்பா சைக்கிள எடுத்துக்கிட்டு ஆபீஸ்க்கு போறேன் பேர்வழின்னு எஸ்கேப் ஆனது வேறு ஒரு ஜாலியான கதை. ஆறு சோனி 90 கேசட்டுகளை அதே மலேசியா மாமா கொண்டு வந்து அடுத்த தடவை கொடுத்து விட்டுப் போக....

அப்பாவின் செலக்சன் ஆஃப் சாங்க்ஸோடு நான் குரங்குப் பெடலடித்த படியே மெலொடியஸ் ம்யூசிக் சென்டர் போய் பாட்டையெல்லாம் ரெக்கார்ட் பண்னி கொண்டு வந்து அப்பாவிடம் கொடுத்திருக்கிறேன். விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவேயில் ஆரம்பித்து அமுதை பொழியும் நிலவே வழியே பயணித்து, ஊரார் உறங்கையிலே உற்றாரும் தூங்கையிலே நல்ல பாம்பு வேடமிட்டு நான் வருவேன் சாமத்துலே என்று போய், கொடுத்தவனே பறித்துக் கொண்டாண்டி என்று குலுங்கி.....

சிங்கார வேலனே தேவா....என்று முடியும் அந்தக் கால பாடல்கள் எல்லாம் எனக்கு இன்றும் பசுமையாய் நினைவிலிருப்பதற்கு காரணம் அப்பாதான்.

ஒரு நாள் ஒரு பாடலைக் கேட்டுக் கொண்டே அப்பா தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தார். 

என்னாச்சுப்பா... என்று மெதுவாய் கேட்டேன்....

எங்க அப்புவும் (அவருடைய அப்பாவை அப்படித்தான் அழைப்பார்) நானும் மதுரைக்கு போயிருந்த போது எங்க அப்பு என்னைய கூட்டிக்கிட்டுப் போய் நாங்க ரெண்டு பேரும் பாத்த படம்டா இது..... படம் பேரு சதாராம் 1956ல வந்துச்சு இந்தப் படம். நான் படம் பாக்கையில் எனக்கு பத்து வயசு என்று அவர் என்னிடம் சொன்ன போது  என் தாத்தா இறந்து நான்கு வருடம் ஆகி இருந்த என்னுடைய ஏழு வயது. எனக்கு மனசுக்கு சங்கடமாயிருந்தது அப்போது. அப்பாவை கட்டிப் பிடித்துக் கொண்டேன் தோளோடு....

காலம் கட கடவென்று ஓடி விட்டது. 

இன்றைக்கு எதேச்சையாய் கூகிளைப் புரட்டிக் கொண்டிருந்த போது....சதாரம் படம் பற்றிய ஒரு செய்தி என் கண்ணில் பட உடனே அப்பா சொன்ன அந்தப் பாடல் எனக்குள் ஓட....தேடிப் பிடித்து அந்த பாடலை தரவிறக்கம் செய்து கேட்க ஆரம்பித்தேன்....

" மண் மீது மானம் ஒன்றே பிரதானம்...
 என்றெண்ணும் குணம் வேண்டும்...
இதை மறந்தாலே வாழ்வில்....
 கிடைக்கும் சன்மானம் மாறாத அவமானம்....."


அப்பா இன்று எங்களோடு இல்லை, ஆனால் அவர் ஏன் அன்றைக்கு தேம்பித் தேம்பி அழுதார் என்பதை உணர்ந்தபடியே நானும் தேம்பிக் கொண்டிருக்கிறேன் இப்போது....


தேவா சுப்பையா...






Comments

மறக்க முடியாத பாடல்...
அருமையான பாடல்...
டேப்ரெக்கார்டரில் பாடல் கேட்ட காலம் கனாக் காலம்...
வாழ்த்துக்கள்.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த