Pages

Tuesday, October 22, 2013

தீராக் காதல்...!கரடு முரடான
காய்ந்த நிலமாய்
நான் கிடந்த பொழுதொன்றில்
சிறு மழையாய் வந்து
என்னை மிருதுவாய்
நனைத்துச் சென்றவள் நீ...

உயிர் பறிக்கும்
வாழ்க்கையினூடே
நான் களமாடிக் கொண்டிருந்த
மிருக பொழுதுகளில்
எனக்காய் எங்கிருந்தோ
நீ வாசித்த கவிதை வரிகளை
சுவாசித்து சுவாசித்து
என் இரவுகளை
உன் கனவுகளால் மட்டுமே
நான் நிரப்பிக் கொண்டு
என் இரணங்களுக்கு
உன் காதலால்தான்
மருந்திட்டுக் கொண்டேன்..!

உன் நினைவுகள்
ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும்
இந்த மயான இரவில்
என் கர்ஜனைகளால்
உனக்காக எழுதிக் கொண்டிருக்கும்
வார்த்தைகளுக்குள்
மண்டியிட்டுக் கிடக்கும்
என் வீரத்தை....
தீராக்காதலென்று அறிக பெண்ணே...!தேவா சுப்பையா...
Saturday, October 12, 2013

சாமி....!


ஒரு மிகப்பெரிய இழப்பிற்கு பின் நான் சிவன் கோயிலுக்கு வந்திருந்தேன். படைத்தவன் இல்லாத போது படைப்புகளே படைத்தவன் இருந்தான் என்பதற்கு  சாட்சியாக எஞ்சி நிற்கின்றன. என்னை படைத்தவன் அன்று கோயிலுக்கு நான் சென்ற போது இல்லை. நான் என்னைப் படைத்தவனையும் படைத்தவனை பார்த்துக் கொண்டிருந்தேன். இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவே இல்லை. சிவலிங்கம் எப்போதும் போல மெளனமாயிருந்தது. அந்த கோயில் மிகப்பழமையானது அல்ல. மிக புதியதும் அல்ல. மத்திம காலத்தில் அது கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று மனது சொன்னது.

பழைய மதுக்கூர் சுற்றிலும் வயல்கள் நிறைந்த அழகிய கிராமம். வேளாண்மை செய்து வாழும் மக்கள் நிறைந்த ஊர். இயற்கையோடு தொடர்பில் இருந்து இருந்து மிகப்பெரிய பக்குவ நிலைக்கு வந்திருக்கும் மக்கள் நிறைந்த இடம். இயற்கையோடு இயைந்த வாழ்க்கை  வாழ்க்கையின் நிலையாமையை எளிதாக போதித்து விடுகிறது. மழை பெய்ய வேண்டும், ஆற்றில் தண்ணீர் வரவேண்டும், இன்ன பிற காலச் சூழல்கள் பொருந்தி வரவேண்டும், பல மனிதர்களின் கூட்டு உழைப்பு வேண்டும். ஆமாம் விவசாயம் மனித வாழ்வின் சூட்சுமத்தை மனித தொடர்புகளின் அவசியத்தை, விட்டுக் கொடுத்தலின் தாத்பரியத்தை மனிதர்களுக்கு  எளிதாக புகட்டி விடுகிறது. ஆடு, மாடுகள், கோழிகள், போன்ற சிற்றுயிர்களோடு ஒர் தினசரி வாழ்க்கை வாழும் போது வாய் பேசா அந்த ஜீவன்களை தங்கள் வீட்டில் ஒருவராய் எண்ணி, அவற்றோடு பேசவும், அவற்றின் அசைவுகளை வைத்து தேவைகளை புரிந்து கொள்ளவும் முடிகிறது.

மாடுகளோடும் ஆடுகளோடும் மனிதர்களைப் போல புரிந்துணர்வோடு தங்களின் சோகங்களையும் சந்தோசங்களையும் பகிர்ந்து வாழும் ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்கை ஒரு விவசாயிக்கு கிடைத்து விடுகிறது. ஒரு விவாசாயி நிலத்தோடு தொடர்பில் இருப்பவன். நிலம் மாதிரியேதான்...அவனது பொறுமையும் கோபமும். அடங்கிக் கிடந்தால் அடங்கிக் கிடப்பான் வெகுண்டு எழுந்தால் சுற்றி இருக்கும் யாரும் அவனை எதிர்கொள்ள முடியாது.

கோயிலுக்குள் இருந்த அமிர்த கடேஸ்வரர் என்று எழுதி இருந்த பிளக்ஸ் போர்டை வாசித்தேன்.எனக்குள் இருந்த அமிர்த கடேஸ்வரரும் கருவறைக்குள் இருந்த அமிர்த கடேஸ்வரரும் மெளனமாய் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.சிவலிங்கத்தைப் பற்றி பல்வேறு கதைகளைச் சொல்வார்கள். ஆண்குறியும் பெண்குறியும் போன்ற ஒரு அமைப்பு என்றெல்லாம்...

என்னைப் பொறுத்தவரை பல உருவங்களை வழிபாடு செய்து, செய்து  கடைசியில்சிவனை வணங்க வரும் இடம் அதி ரகசியமானது. என்னதான் இறைவனுக்கு உருவம் இல்லை என்று பயிற்றுவித்தாலும் மனம் அதை கேட்காது. உருவம் இல்லை என்பதை அறிய உருவத்தைப் பார்த்தே பழகியவர்கள் எப்படி அறிவார்கள்...? உருவம் இல்லை என்பதை அறிய உருவத்தைதான் பழக வேண்டி இருக்கிறது. எது வேண்டாமோ அதை அழிக்க அதன் அருகில் செல்வீர்களா இல்லை அதை விட்டு திரும்பி வேறெங்கோ முகம் திருப்பிக் கொள்வீர்களா?

நம்மைச் சுற்றி இயங்கும் வாழ்க்கைதான் கடவுள். நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்கள்தான் கடவுளின் தோற்றங்கள். பெரு மழையும், சிறு நதியும், யானையும், தேரையும் கடவுளரின் தோற்றங்கள்தான் என்று அறிய ஏதோ ஒன்றை  கடவுள் என்று விழுந்து விழுந்து கும்பிட வேண்டி இருக்கிறது. நான் ஏன் இப்படி விழுந்து விழுந்து கும்பிட வேண்டும், இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தையும் தோற்றுவித்தது எப்படி இதுவாய் இருக்க முடியும்..? அல்லது அதுவாய் இருக்க முடியும் என்று ஒரு புள்ளியில் யோசிக்க வைக்க இவ்வளவு வேடிக்கை செய்ய  வேண்டி  இருக்கிறது.

மிகவும் களைப்பானால் என்ன செய்வோம். எல்லாவற்றையும் விட்டு விட்டு முதலில் உறங்க வேண்டும் என்று உறங்கச் செல்வோம். எனக்கு ஓய்வு தேவை என்று எல்லா செயல்களையும் நிறுத்தி விட்டு கண்களை மூடி படுத்துக் கொள்வோம். சிவலிங்கம் ஓய்வைப் போன்றது. அங்கே இங்கே ஓடி ஓடி பல தெய்வங்களை வணங்கி களைத்துப் போய் சிவன் என்று ஏதோ ஒரு உருவத்தைக் காட்டி பின் இதுவும் சிவன்தான் என்று ஒரு சிவலிங்கத்தை காட்டும் இடத்தில்...

இது எப்படி சிவன் ஆக இருக்க முடியும்...? இது ஏதோ ஒரு உருவம் போன்று தோன்றுகிறது ஆனால் என்ன உருவம் என்று தெரியவில்லையே என்று யோசித்து யோசித்து சிவலிங்கத்தோடு முட்டி மோதி அந்த உருவத்தை பார்த்து பார்த்து அது மூளையில் அதுவே பதிந்தும் போய் விடுகிறது. சிவம் தான் கடவுள் அதுவும் சிவலிங்கமே சிவம் என்று  உணரும் போது ஏற்கெனவே மூளையில் ஏறி உட்கார்ந்து இருக்கும் எல்லா கடவுள் உருவங்களும் மெல்ல மெல்ல அழிந்து போய்....உருவ அருவமான சிவலிங்கத்தை சிவமாய் பாவிக்கும் ஒரு பக்குவ நிலை நமக்கு வந்து விடுகிறது. சிவலிங்கத்தையும் மனதில் இருந்து அழிக்கத்தான் அதற்கு அடுத்த நிலையான பஞ்ச பூதங்களும் சிவம் என்று போதனை நமக்குப் புகட்டப்பட்டது. அப்போது சிவம் என்பது உருவமும் அல்ல, உருவம் அருவம் இரண்டும் சேர்ந்த சிவலிங்கமும் அல்ல என்று சொல்லி நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு இந்த பஞ்சபூதங்கள்தான் சிவம்...இந்த பஞ்ச பூதங்கள் எங்கெல்லாம் இருக்கிறதோ அவை எல்லாம் சிவம் என்று...ஒரு மெல்லிய திறப்பின் வழியே நாம் ஒரு மிகப்பெரிய பேருண்மைக்குள் மெல்ல நகர்த்தி வைக்கப்படுவோம்.

அமிர்த கடேஸ்வரர் ஞான மூர்த்தியாய் மெளனித்திருந்தார். பிரதோஷ தினத்தில் அல்லோல கல்லோலப் படும் அமிர்த கடேஸ்வரர் முன்னாள் வெகு நேரம் அமர்ந்திருந்தேன். என் தந்தையின் மரணத்தால் ஏற்பட்டிருந்த லெளகீக வலிகள் கண்ணீராய் பல்கிப் பெருக... ஏன்.. இப்படி எல்லாம் நிகழ்கிறது என்ற ஒரு பெரும் கேள்வியை அந்த பிரபஞ்ச  பேரிறுப்பிடம் வைத்து விட்டு எந்த வித அபிப்ராயமும் கொள்ளாமல் அமர்ந்திருந்தேன். எல்லாவற்றையும் உன்னிடம் சொல்லியாயிற்று, வாழ்வின் சூத்திரம் புரிந்தாலும், நம்மைச் சுற்றி நிகழும் யாவற்றையும் மறுக்க இயலாது ஏற்றுதான் ஆகவேண்டும் என்று அறிந்தாலும், வலிக்கின்ற போது அது வலிதானே?  என் மன பாரத்திற்கு ஒரு பதிலும் சொல்லாமல் அமிர்தகடேஷ்வரர் மெளனமாய் இருந்தார்.

நாளை என் பிள்ளை இப்படி ஏதேனும் ஒரு கோயிலில் போய் அமர்ந்து கேள்வி கேட்டு தன் மனபாரம் குறைக்க முயலலாம் என்ற ஒரு எண்ணம் எனக்குள் எட்டிப் பார்த்தது. ஒரு வேளை அப்பாவும் இப்படியாய் ஏதேனும் கோயிலில் வந்தமர்ந்து அவர் தந்தையின் இறப்பினை நினைத்து அந்த வலியை இறக்கி வைக்க முயன்றிருக்கலாம். இன்று அவர் எங்கிருக்கிறாரோ அங்கு நானும் நாளை இருப்பேன். இது சுழற்சி, பொருட்களை கை மாற்றி விட்டு விட்டு கரைந்து போகும் ஒரு வித்தை. இங்கே ஜனித்தது சிறப்பும் அல்ல, மரித்தல் வலியும் அல்ல. ஒரு காட்சியாய் தோன்றி மறு காட்சியாய் ஒடுங்கும் ஒரு நிகழ்வு.

மனதில் இருந்த வலி நிறையவே குறைந்திருந்தது. ஒரு பேரமைதி மனதில் சூழ்ந்திருந்தது. கோயில்கள் மட்டும் இல்லாமல் போயிருந்தால் பாதிக்கு மேற்பட்ட மனிதர்கள் ஒன்று பைத்தியம் பிடித்துப் போயிருப்பார்கள் அல்லது மன அழுத்தம் வந்து கடும் நோய்களுக்கு ஆளாகி இருப்பார்கள் என்று எனக்குத் தோன்றியது. இந்தியா முழுதும் பரவலாய் எழுப்பப்பட்டிருக்கும் ஆலயங்கள் எதற்காக எழும்பி இருக்கின்றன என்று உணர முடிந்தது.  கடவுளை தன்னையும் உள்ளடக்கிய ஒரு ஒட்டு மொத்த சக்தியை, ஒரு தாயாய், தந்தையாய், பிள்ளையாய், தன்னைப் போலவே ஒரு உருவத்தில் படைத்து வைத்துக் கொண்டு அவர்களிடம் பேசி பேசி மன அழுத்தத்தை குறைத்துக் கொள்ளும் ஒரு ராஜ வைத்தியத்தை சூட்சுமமாய் செய்து வைத்த அந்த ஆதியோகியை எனக்குள் மனம் குவித்து வணங்கினேன்.

கோயிலைச் சுற்றி விட்டு பிரகாரம் தாண்டிய போது எப்போதும் பார்க்கும் கோயிலை சுத்தம் செய்யும் வயதான தாத்தாவை பார்த்தேன். வணக்கம் சொன்னவரின் அருகில் சென்று அமர்ந்து என்ன தாத்தா  நீங்க எந்த ஊர் என்று கேட்டேன்.....மன்னார்குடி பக்கம் இருக்கும் ஏதோ ஒரு கிராமத்தின் பெயர் சொன்னார். பதினாறு வயதில் அவருக்கு திருமணம் ஆனதையும், முதல் மனைவி வயதுக்கு வந்த மறுநாள் இறந்ததையும் வெற்றிலை பாக்கு சீவலோடும் கண்ணீரோடும் சொல்லிக் கொண்டிருந்தார்...இரண்டாம் மனைவியை சொந்தங்கள் எல்லாம் கூடி அவருக்கு மணம் முடித்து வைத்த கதையையும் முதல் மனைவி போல் அவள் இல்லை என்றாலும் ஆதரவாய்தான் இருந்தார் என்று சொன்னார். இரண்டாவது மனைவி மாடு மேய்க்கச் சென்ற போது நாகம் தீண்டி இறந்து போனதைச் சொல்லி விட்டு அப்போ எனக்கு 22 வயசி என்று கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.

அதன் பிறகு அவருக்கு அந்த ஊரில் இருக்கப் பிடிக்காமல் ஏதேதோ செய்ய அவர் மனநிலை தப்பிப் போனதாம். 6 வருடமோ இல்லை ஏழு வருடமோ வேலூரில் மனநிலை காப்பகத்தில் கை கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு, வாயால் மட்டுமே உணவருந்தி நீர் குடித்து அவஸ்தைப் பட்டாராம். அதன் பிறகு வெளி உலகுக்கு மீண்டும் வந்த போது இருந்த ஒரு ஓட்டு வீடும் கொஞ்சம் நிலமும் உறவுகளால் சூறையாடப்பட்டு விட...தனிமையை தனது துணையாக தேர்ந்தெடுத்துக் கொண்டு ஆங்காங்கே வேலை செய்து பழையமதுக்கூர் அமிர்த கடேஸ்வரரை வந்து சேர்ந்தாராம்...

" என்னா சாமி வாழ்க்கை  எல்லாமே இம்புட்டுட்டூண்டு வவுத்துக்கு....." என்று ஒட்டிப் போயிருந்த வயிற்றில் அடித்துக் காட்டினார். 

" ஒரு நாளைக்கு அய்யர் பத்து ரூவா கொடுப்பாரு....நான் காலையில எந்திரிச்சு கோயில திறந்து சுத்தம் பண்ணி தண்ணி எல்லாம் எடுத்து வச்சி....அந்தா அங்க கிடக்கு பாருங்க தேங்காய்... அது எல்லாம் சிதறு காய் அடிச்சது...எடுத்து கழுவி வச்சேன்... இங்க பாருங்க புல்லு அது எல்லாம் நான் சீத்தி வச்சதுதான்... எட்டு மணிக்கு பெரமையா கோயில்கிட்ட போயி ரெண்டு இட்லி சாப்டுவேன்....மத்தியானம்....5 ரூபாய்க்கு சோறு கொடுப்பாவோ சாப்டுவேன்...சாங்காலத்துக்கு ஒரு டீ...அவ்ளோதான்...ஏதோ என் பொழப்பு ஒடிக்கிட்டு இருக்கு.. கோயிலுக்கு போறவோ வர்றவோ உங்களாட்டம் ஏதாச்சும் காசு கொடுத்துட்டு போவாவோ...

அதை வச்சிக்கிட்டு பொழப்பு ஓடுது சாமி....ஒடம்பு கிடம்பு சரிப்படலேன்னா அறிவழகன் டாக்டர்கிட்ட போவேன்...ஊசி கீசிய போட்டு மாத்திரையும் வாங்கிக் குடுத்து அனுப்புவாவோ...காசு வாங்க மாட்டாவோ..." கொடுத்த பத்துரூபாயை படக்கென்று வாங்கி கைக்குள் சுருட்டிக் கொண்டு நல்லா இருங்க சாமி என்றார். நான் இல்ல சாமி...அங்க உள்ள இருக்கு பாருங்க அதான் சாமி...நான் சிவலிங்கத்தைக் கை காட்டினேன்....

எனக்கு எல்லாமே சாமிதான்.. அதுஞ்சாமிதான், நீங்களும் சாமிதான், அய்யரும் சாமிதான், அறிவழகன் டாக்டரும் சாமிதான், கோயிலுக்கு வர்றவோ, போறவோ எல்லாரும் சாமிதான்...இங்க இருக்குற எல்லாராலயும் தானே சாமீ நான் பொழச்சு கிடக்குறேன்...

கோயில் விட்டு வெளியில் வந்தேன். 

கோயிலைச் சுற்றி இருந்த மரமும், கோயிலுக்கு எதிரே இருந்த குளமும் மனசை குளிரவைத்திருந்தன. ஏதோ ஒன்று விளங்கியும் விளங்காமலும்... வீடு நோக்கி நடந்து கொண்டிருந்தேன்...

கோயிலில் பூஜைக்காக மணி அடித்துக்  கொண்டிருந்தது.தேவா சுப்பையா...


Pic Courtesy: Isha 
Thursday, October 10, 2013

அந்திமக் கனவுகள்...!


உன்னை சந்தித்த நாளும் கிழமையும் எனக்கு ஞாபமில்லை என் சித்திரமே..ஆனால் முதல் சந்திப்பிலேயே என்னை ஐ லவ் யூ என்று தட்டச்சு செய்ய வைத்த உன் காதலை எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. எத்தனையோ அபத்தங்களை தருவித்திருக்கும் இணையத் தாய் நம்மைப் போன்ற காதல் குழந்தைகளையும் பெற்று தான் போட்டிருக்கிறாள். முகமறியாமல் அகம் அறிந்து காதல் கணைகளை வீசிக்கொள்ளும் ஒரு அற்புத அனுவத்தை ஒரு காலத்தில் கடிதங்களும், பின்பு தொலைபேசிகளும், தற்போது இணையமும் செய்து கொண்டிருக்கின்றன.

ஏதோ ஒன்றைத் தேடி நான் வலைவீசிக் கொண்டிருக்கையில் என் வலைக்குள் விழுந்த மீன்கள் உன்னுடைய எழுத்துக்கள். முதன் முதலாய் உன் கவிதை வரிகளை எதேச்சையாய் பார்த்த நான் திணறித்தான் போய்விட்டேன்.  யோசித்த படியே நான் அவற்றை வாசிக்க வாசிக்க அவற்றை நான் சுவாசிக்கத் தொடங்கி இருந்தேன். உன் கவிதைப் புத்தகத்தில் கவிதையை நான் பார்க்கவில்லை வார்த்தைகளாய் துடித்துக் கொண்டிருந்த என் இதயத்தை நான் பார்த்தேன். எதார்த்தமாக என் இணைப்பில் வந்த நீ எனக்கு எல்லாமாகிப் போன கதையை காதலின் வெற்றி என்பதா இல்லை நாம் காதலை வென்றோம் என்பதா?

முதல் இணைய உரையாடலில் நீ என்னிடம் உரையடிக் கொண்டிருந்தாய், உன் மந்திர வார்த்தைகளோடு நான் உறவாடிக் கொண்டிருந்தேன். காதலிக்க வேண்டும் என்ற உணர்வை எப்படி வெறுமனே வார்த்தைகள் கொடுத்துவிட முடியும் என்று நான் என் புத்தியோடு மல்லுக் கட்டிக்கொண்டிருக்கையில் எதார்த்ததை கனவு வென்றேதான் விட்டது. நான் ஒரு ஓவியன்... என்று எத்தனையோ பேரிடம் நான் என்னை அறிமுகம் செய்து கொண்டிருக்கிறேன் ஆனால் முதல் முறையாக...ஒர் ஓவியத்திடம் நான் ஓவியன் என்று அறிமுகம் செய்து கொண்டது எனக்கு ஒரு வித்திசமான அனுபவம்தான்.

என் காதலை உன்னிடம் சொன்னேன். ஒரு கைக்குழந்தையை வாங்கிக் கொள்ளும் கவனத்தோடும் பரிவோடும் நீ காதலை வாங்கிக் கொண்டாய்....

அது ஒரு நீண்ட இரவு...நாம் இருவரின் இம்சைகளையும் இரு வீட்டு தட்டச்சுக்களும் சகித்துக் கொண்டிருந்த ஒரு வசீகரமான ராத்திரி.  ஐ லவ் யூ என்று அடித்து அடித்தே நாம் களைத்துப் போயிருந்த பொழுதில் போனால் போகிறது என்று வெகு நேரமாய் போரடிக் கொண்டிருந்த உறக்கத்திடம் வேறு வழியின்றி நாம் இருவரும் தோற்றுப் போனோம்....

காதலை உரையாடலாய் தொடங்கி நகர்த்திக் கொண்டிருப்பது வலியோடு கூடிய ஒரு சுகம். அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து போ என்று உடம்பிலிருக்கும் அத்தனை ஹார்மோன்களும் கட்டளையை பிறப்பிக்க அவற்றை நிதானமாய் பார்த்துக் கொண்,டு பார்க்காமல் காதலிக்கும் ஒரு பக்குவ நிலைக்கு நகர்ந்து செல்தல் என்ன அவ்வளவு எளிதா..? நவீனத்தின் வளர்ச்சியில்

ம் என்றால்...வாய்ஸ் சாட்....
ஏன் என்றால் வீடியோ சாட்....
உடனடியாய்
தொலைபேசி எண்கள் பரிமாற்றம்...
எதிர்ப்பார்ப்புகளோடான சந்திப்புகள்
ஏமாற்றமான திருப்பங்கள்...

என்று மூன்று நாளில் ஒடிந்து விழும் காதல்கள் கோடியைத் தாண்டும். என் கவனமெல்லாம் நீ எப்படி இருப்பாய் என்பதாய் இல்லை. நான் எப்படி உன்னிடம் நடந்து கொள்ளவேண்டும் என்பதாய்தான் இருந்தது. பார்த்துக் கொள்ளாமல் பேசுகையில் உருவத்தைப் பற்றிய அக்கறைகள் இல்லாமல் உணர்வுகளால் தழுவிக் கொள்ளும் நிஜ சுகத்தை நாம்  அனுபவித்துக் கொண்டிருந்தோம். அதிகமாய் மனம் ஈடுபடாத போது கற்பனைகள் இல்லாத உணர்வின் தன்மைகளை நம்மால் உணரமுடியும். நீயும் நானும் காதலை காதலாய் செய்து கொண்டிருக்கையில்....காதலால் நமக்கு  போதும் போதுமென்னும் அளவிற்கு கவிதைகள் கிடைத்தன. பல நேரம் நம் வார்த்தைகள் இனிக்கவும் சில நேரம் கரிக்கவும் செய்யும். கண்ணீரோடு நாம் போட்டுக் கொண்ட சண்டைகள் எல்லாம் காதலோடு மீண்டும் வலுவாய் நம்மை கட்டியணைக்கச்  செய்தன.

மூன்று வருடங்கள் கழித்து உன்னை முதன் முதலாய் நேராய் பார்த்த அந்த காலைப் பொழுதில் உன் விழிகளில் அத்தனை நாள் தேக்கி வைத்திருந்த காதல் கண்ணீராய் ததும்பிக் கொண்டிருந்தது. விழிகளால் சொல்ல முடியாத ஒரு காதல் காதலே இல்லை. உன் விழிகள் என் விழிகளை வாஞ்சையாய் வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தது எவ்வளவு நேரம் என்று எனக்கு தெரியாது ஆனால் உன்னை பார்த்துக் கொண்டிருந்த போது நான் உயிரோடிருப்பதற்கான காரணம் என்னவென்று மட்டும் தெளிவாக உணர்ந்து கொண்டேன். காதலிப்பது பெரிய விசயமில்லை அந்தக்காதலை திருமணமாக மாற்றும் போது காதலை நிறைய பேர்கள் தொலைத்து விடுகிறார்கள் என்று நான் உன்னிடம் சொன்ன போது...நீ சப்தமாய் சிரித்தாய்...

யாரென்று அறியாது பேசிக் கொண்டிருந்த போதும் காதலே விஞ்சி நின்றது, உருவமாய் அறிமுகம் ஆன பின்பும் காதலே விஞ்சி  நிற்கிறது திருமணத்துக்குப் பிறகு வேறென்ன எஞ்சி நிற்கும்..? என்று கேட்டாய்....

உன் கரம் பிடித்த அந்த நொடியில் நிச்சயிக்கப்பட்டது நம் திருமணம். திருமணம் என்னும் நிர்ப்பந்திக்கப்பட்ட சமூக சடங்கை சம்பிரதாயத்திற்காய் செய்து கொண்டது நமது காதல். இதோ எனக்குள் ஜீவனாய் நிறைந்து போயிருப்பவளே உன்னுடைய உயிரை பற்றிக் கொண்டு படரும் கொடியாய் வளர்ந்து செழித்து பூத்து நிற்கிறது என் காதல்....

என் இரவுகளுக்கும் பகல்களுக்கும் உன் பெயரைதான் எழுதி வைத்திருக்கிறேன் அம்மு.......என் சுவாசம் நீ....

நீர் வேண்டாம் என்று...
பூமி சொன்னால்...
வேறெங்குதான் பெய்யும்
மழை....?!
........
........
........
வாசித்து விட்டு டைரியை பெருமூச்சோடு மூடி வைத்து விட்டு கண்ணாடியைக் கழற்றி வைத்து விட்டு கண்ணீரைத் துடைத்துக் கொண்டேன்.

ஏன் தாத்தா...... எப்ப பாத்தாலும் அந்தப் பழைய டைரிய எடுத்துப் படிச்சுட்டே இருக்கியே...என்னதான் இருக்கு அதுல...யார்ட்டயும் கொடுக்கவும் மாட்டேன்ற....

பத்தாவது படிக்கும் பேரன் அருகில் வந்து அமர்ந்து கொண்டான்...

சொல்லு தாத்தா....மறுபடி கேட்டான்....

" காதல் " என்று சொல்ல நினைத்தேன்....

பிறகு.. ஒண்ணும் இல்லப்பா சும்மா...நீ போய் படி.....அவனை விரட்டினேன்.

தனிமை எனக்கு தேவைப்பட்டது. எல்லாமாய் இருந்து விட்டு ஒரு நாள் அவள் போய்விட்டாள்...

நான் காத்துக் கொண்டிருக்கிறேன்....!

நினைவுகளைத் துணையாக்கி விட்டு
நீங்கா துயில் கொண்டவள்
என் நெஞ்சுக்குள் மட்டும்
விழித்துக் கொண்டிருக்கிறாளே...
அது எப்படி...?தேவா சுப்பையா..
Friday, October 4, 2013

ராஜா ராணி....!


இரண்டு கனத்த ப்ளாஷ் பேக்குகள் ஒரு மையக்கதை. ராஜாவாகவும் ராணியாகவும் என்னை கற்பனை செய்து பார்த்துக் கொண்டே படம் பார்த்தேன், முழுத் திரைப்படத்தையும்  அலுப்பு வராத வகையில் ஜஸ்ட் லைக் தட் காட்சிப்படுத்திக் காட்டி இருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள். ஒரு மழையில் நனைவது போன்ற காட்சிகளின் தொகுப்பு. என்னதான் காமெடி காட்சிகளில் நாம் சிரித்தாலும் மீண்டும் நம்மை ஒரு மென் சோகத்துக்குள் கொண்டு வந்து விடும் திரைக்கதை என்று... லயித்துப் போய் பார்த்து முடித்தேன் ராஜா ராணியை...ஆங்காங்கே தென்பட்ட சில சொதப்பல்களை சகித்தபடியே

மென் சோகம் என்பதை எப்படி வார்த்தைப்படுத்த என்று எனக்கு தெரியவில்லை.  சுகத்தை கொடுக்கும் வலிகளை மென்சோகம் என்று சொல்லலாம். இரண்டு தோற்றுப் போன காதல்களை பதியம் போட்டுக் கொண்ட ஒரு ரோஜா செடியில் மெல்லிய மொட்டொன்று அரும்பி அது இதழ்களை விரிக்கும் அழகினை விழிவிரிய பார்க்கும் சுகம் அலாதியானது. நயன்தாரா படபடக்கும் பட்டாம்பூச்சியாய் பரபரக்கும் போதும் சரி, ஜெய்க்காக  ரிஜிஸ்தர் ஆபிசில் காலையிலிருந்து மாலை வரை காத்திருக்கும் மென்மையிலும் சரி, தன் அப்பாவான சத்யராஜ் சொல்வதைக் கேட்டு நடு ராத்திரியில் ஜெய்யின் வீட்டுக் கதவை தட்டி அவனை வெளியே அனுப்புங்க என்று கோபம் காட்டும் இடத்திலும், காரில் சத்யராஜுடன் வெடித்து அழுவதிலும்....நடிப்பின் உச்சாணிக் கொம்பை  தொட்டிருக்கிறார். கவர்ச்சி வேடங்களைக் கொடுத்து அவரை வீணடித்த இயக்குனர்கள் நயனை நயமாக பயன்படுத்தினால் இன்னும் அவரது அற்புத நடிப்பினை பார்த்து ரசிக்கும் கொடுப்பினை தமிழ் ரசிகர்களுக்கு கிடைக்கும்.

ஒரு அட்டகாசமான அப்பா மகள் உறவை, புரிதல் கொண்ட நவீன அப்பா சத்யராஜும், நயனும் தூள் கிளப்பி இருக்கிறார்கள். மகள்கள் அப்பாக்களுக்கு பியர் வாங்கிக் கொடுத்து சந்தோசமாய் தோளோடு தோள் சேர்த்து நடந்து இனி வரும் காலங்களில் செய்திகளை பகிரலாம். அப்பாக்களும் காதலை எதிர்க்கும் முரட்டு பெற்றோர்களை "அதிகமா டிவி நாடகம் பார்த்து கெட்டுப் போயிருப்பாம் போலம்மா.." என்று இயல்பாய் கூறி புரிந்தும் கொள்ளலாம். இயல்பான இது போன்ற மென்மையான வாழ்க்கை உறுத்தல் இல்லாமல் அமைந்தால் வாழ்க்கை சுவாரஸ்யமாய்த்தான் இருக்கும். 

ஜெய் நயனின் காதலைத் துறந்து அமெரிக்கா செல்வதற்கு அவரது போலீஸ் அப்பாவின் பிடிவாதம்தான் காரணம் என்று கூறுவது அவ்வளவு வலுவானதாய் இல்லை. திரைப்படம் தான் என்றாலும் சட்டென்று தன்னை நேசிக்கும் உயிருக்குயிரான பெண்ணை அதுவும் முழு ஆதரவு கொடுக்கும் அவளின் பணக்கார அப்பா இருக்கும் போது எந்த ஆணும் விட்டுச் செல்ல மாட்டான் என்பதே உண்மை. ஜெய் ஜஸ்ட் லைக் தட் நயன்தாராவை பிரிந்து செல்வதற்கு சொல்லப்படும் காரணம் படு மொக்கை. பிரிதல்தான் கதையை தூக்கி நிமிர்த்தி கொண்டு செல்லும் என்று முடிவு செய்த பின்பு அந்த இடத்தை இயக்குனர் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.

அப்பாவியாய் ஏற்கெனவே ஜெய்யை எங்கேயும் எப்போதும் படத்தில் நாம் பார்த்தாயிற்று. அது போன்று நடிப்பது அவருக்கு நன்றாகத்தான் வருகிறது என்றாலும் மெலிதாய் ஒரு அலுப்பு தட்டுவதையும் தாண்டி அவர் வரும் ஆரம்பக் கட்டக் காட்சிகள் நம்மை சிரிக்க வைத்து விடுகின்றன. இயல்பாய் நடிப்பதில் ஆர்யா கில்லாடி. அவரது டயலாக் டெலிவரிகள் எல்லாமே அழுத்தம் திருத்தமாய்  இது நடிப்புடா என்று தொடை தட்டாது. ஏங்க வீட்டு சாவிய என் வொய்ஃப் வந்தா கொடுத்துடுறீங்களா நான் கொஞ்சம் வெளில போறேன்.... என்று கேட்கும் பக்கத்து வீட்டுக்காரரின் குரல் தொனிதான் ஆர்யாவின் டயலாக் டெலிவரி ஸ்டைல். நயன் தாராவின் தோற்றுப் போன காதலைக் கேட்டு அவருக்குள் மெலிதாய் துளிர்க்கும் காதலை அவர் வெளிப்படுத்தும்  இடம் அட்டகாசம். ஆர்யா + நயன் தாரா கெமிஸ்ட்ரி மட்டும் இல்லை பிஸிக்ஸ், பையாலஜி, மேத்தமெட்டிக்ஸ், தமிழ், ஆங்கிலம் எல்லாமே அட்டகாசம். 

ஆர்யாவிற்கு இயக்குனர் வைத்திருக்கும் ப்ளாஷ் பேக்கில் நஸ்ரியா பிரதர் பிரதர் என்று ஆர்யாவை  வெறுப்பது போல நடிக்கிறார். ஆர்யா அவரை துரத்தி துரத்தி காதலிக்கிறார். அப்பா அம்மா யாரும் இல்லாமல் ஹோமில் வளரும் நஸ்ரியா அம்மா மடியில் இதுவரையில் நான் படுத்தது இல்லை என்று கூறி விட்டு ஆர்யாவின் மடியில் படுக்கிறார். ஆர்யா கிறிஸ்துவர், நஸ்ரியாவின் பிறந்த நாளுக்கு அவரை கோயிலுக்கு அழைத்துச் சென்று தாலி கட்டி மனைவியாக்கிக் கொள்கிறார். சிறிது நாள் கழித்து பெற்றோர்களிடம் சொல்லி முறைப்படி திருமணம் செய்து கொள்கிறேன் என்றும் கூறுகிறார்.

ஏன் பெற்றோர்களிடம் சொல்லி முறைப்படி திருமணம் செய்தால்தான் என்ன..? அவர் கிறிஸ்துவர் இவள் இந்து என்பது பிரச்சினையாய் இருக்குமோ என்று நாமே யூகம் செய்து கொள்ள வேண்டி இருக்கிறது. அந்த ப்ளாஸ்பேக்கில் எப்படி ஜெய் நயனை விட்டுப் பிரிவதற்கு ஒரு வலுவான காரணமில்லையோ அதே மாதிரி இந்த இடத்தில் இயக்குனர்....மீண்டும் டொட்டடாய்ங் ஆகிறார்.

தாலி கட்டிய நஸ்ரியாவின் பிறந்த நாள் அன்று அவரோடு ஊர் சுற்றுகிறார் ஆர்யா.  சாலையின் இந்தப் பக்கத்திலிருந்து அந்த பக்கம் சென்று ஏதோ வாங்கிவர செல்லும் நஸ்ரியா திரும்புகையில் எதிர்பாராத விதமாக கார் ஆக்ஸிடண்டில் மரணமடைகிறார். விரக்தியில் இருக்கும் ஆர்யா பெற்றோர்கள் வற்புறுத்தலுக்காய் நயனை கைப் பிடிக்கிறார்.

நயனுக்கும், ஆர்யாவிற்குமான வாழ்க்கைக்கு மெளனராகம் படத்தின் கதையை மையக்கருவாய் எடுத்திருக்கிறார் இயக்குனர். காதலில் தோற்று பிறகு திருமணம் செய்துகொண்டு வாழும் இடத்தில் புரிதல் வருவதாய் காட்டித் தொலைப்பது தமிழ் சினிமாவின் மரபு. அதையே வழுவாமல் இந்த இயக்குனரும் செய்திருக்கிறார். வேறு வழி திரைப்படத்தை பார்க்கும் அத்தனை பேரும் சமூகம் கொடுக்கும் நிர்ப்பந்தம் அது. நயனை பிரியும் ஜெய் இறந்து போய்விட்டதாய் கேள்விப் பட்டுதான் நயன் தன் காதலை விட்டு விட்டு வேறு ஒருவரை மணம் முடிக்கிறார்...அதே ஜெய் க்ளைமாக்ஸில் சென்னை ஏர்போட்டிலேயே வேலை பார்க்கிறார்...என்று வேறு இயக்குனர் காட்டுகிறார்...

அமெரிக்கா போயாவது உன் காதலனை அழைத்து வருவேன்னு சொல்ற ஒரு பவர்புல் தொழிலதிபர் அப்பாவை வச்சுக்கிட்டு இந்தப் பொண்ணு ஜெய் செத்தது உண்மையா இல்லையான்னு விசாரிக்காம, அந்த ஊர்லயே வேல பாக்குற ஜெய் பத்தி ஒண்ணுமே தெரியாம இருந்துச்சுன்றது எல்லாம்... ஹ்ம்ம்.. ஓ.கே.. ஒ.கே...ன்னு சொல்லி நாமஓவர் ரூல் செய்யத்தான் வேண்டும்.

படத்தோட மொத்த மையக்கருவா இயக்குனர் சொல்ல வர்றது.. எவன் செத்தாலும் உன் வாழ்க்கை ஓடிட்டுதான் இருக்கும் அதுக்காக போனவங்களுக்காக வருத்தப்படாதீங்கன்ற ஒரு மொக்கை அபத்தமான ஒரு மேட்டர்தான். காதல்ல தோத்தா வேறு காதல் கிடைக்கும்னே ரெண்டு காதலை தோக்க வச்சு அதுக்கு  பிறகு ஒரு கல்யாணத்த வச்சு....முடியலை பாஸ்.....

ஒருத்தர் போனா இன்னொருத்தர் வருவாங்க  இயக்குனர் சார்...ஆனா ஒருத்தர் போனதோட வலி இருக்கே அது சாகுற வரைக்கும் மனசுல இருந்து போகாது. காதல் ஒருத்தர் வாழ்க்கையில பல தடவை வந்துட்டுப் போகும் ஆனா ஒவ்வொரு தடவையும் அது உயிரைக் கொடுத்து உயிரை எடுக்கும். ஜெய் நயனை ஏமாத்திட்டுப் போய் அமெரிக்க வேலை, அது இதுன்னு காட்டி அவர் செத்துப் போனதா நயனை நம்பவைச்சு அப்புறம் வேற பொண்ண கல்யாணம் பண்ணிட்டு....அப்டியே வாழ்ந்துட்டு இருக்காரு.. நயனை பார்த்த பின்னாடி கூட கண்டுக்காம கல் நெஞ்சா இருக்காருன்னு சொல்ற இடம் எல்லாம் சுத்தமா ஏத்துக்கவே முடியாது.

என்னமோ பசங்க எல்லாம் பொண்ணுங்களை கழட்டி விட்டுட்டு வசதி வாய்ப்பு வந்தா ஓடிப்போய்டுவாங்கன்னு எப்டி சார் இளவரசன்களின் மரணத்தை பார்த்த பிறகும் உங்களால படம் எடுக்க முடியுது...? ஒரு காதலை இழக்க எப்படி ஒரு பெண் தயாரில்லையோ அதுக்கு கொஞ்சம் கூட பசங்களும் குறைஞ்சவங்க கிடையாது. எத்தனை வலிகள் இருந்தாலும் பெண்ணை அடையணும்னு ஒரு ஆண் தான் நினைப்பான்... நம்ம சமூக கட்டுப்பாட்டுல பெண் தான் தன்னுடைய மனதை மாத்திக்க ஓராயிரம் வாய்ப்புகளை அவளோட குடும்பம் திணிக்குது.

தோற்றுப் போன காதலை இதைவிட நாகரீகமா சொல்ல முடியாத அளவுக்கா தமிழ் சினிமா படைப்பாளிகள் வறட்சியா இருக்காங்க..? காதலில் தோற்றுப் போய் வேறு வழி இல்லாமல் வேறு ஒருவனின் கையைப் பிடிக்கும் ஒரு ஆணும் சரி ஒரு பெண்ணும் சரி....கடைசி வரை தனது காதலை மறக்க முடியாது. இங்க படத்துல அவுங்க மறக்க வசதியா ஒருத்திய கொன்னுட்டு இன்னொருத்தனை ஏமாத்துனவனா காட்டி இருக்க உங்களோட  நியாயம் சர்வ நிச்சயமா துரோகம்னு நான் அடிச்சு சொல்லுவேன்.

படத்தில் பாத்திரங்களின் நடிப்பு, காட்சியமைப்பு, ஓரளவிற்கு இசைன்னு உங்களை கை தூக்கி விட்டு இருந்தாலும்....ஒட்டு மொத்த கதையும் செம சொதப்பல். ஏன்னா நீங்க படத்துல சொல்லி இருக்க மாதிரி யாருக்கும் காதலும் வராது...அப்படியே வந்தாலும் இப்படி சினிமாத்தனமா காட்சிகளின் வசதிக்காக தோற்க வச்ச மாதிரி தோத்தும் போகாது... அப்படியே தோத்துப் போனாலும் உடனே சூடு ஆறுவதற்கு முன்னால வேற கல்யாணமும் பண்ணிக்க மாட்டாங்க....அப்டியே கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் தன்னுடைய காதலனையோ காதலியையோ அவ்ளோ சீக்கிரம் மறந்தும் தொலைக்க மாட்டாங்க....

படம் முழுதும் என்னை ராஜாவாக கற்பனை செய்து கொண்டேன்...ராணியாக கற்பனை செய்து கொண்டேன்...ஆனால் உங்கள் கதையில் வந்த ராஜ ராணிகள் இல்லை எனது உணர்வுகள்...

அவர்கள் கடந்த கால காதலை கண்ணியப்படுத்திக் கொண்டு நிகழ்காலத்தில் புரிதலோடு நகரும் ராஜா ராணிகள்...!

என்னடா இவன் எழுத ஆரம்பிக்கும் போது படம் நல்லா இருக்குன்னு சொல்றமாதிரி இருந்துச்சு முடிக்கும் போது சொதப்பல்ன்ற மாதிரி முடிக்கிறானேன்னு யோசிக்கிறீங்களா..?

நான் என்ன பாஸ் பண்றது எது எது நல்ல இருக்கோ அதை நல்லா இருக்குனுதான் சொல்லிட்டோம்ல..


அப்போ வர்ர்ர்ர்ர்ட்ட்டா....!!!!!! 


தேவா சுப்பையா...