Pages

Sunday, January 30, 2011

ஓடம்...!


அது ஒரு நடு நிசி என்று தெரிந்தேதான் எழுந்தேன். சப்தங்களற்ற அந்த தருணத்தில் என்ன நிகழ்கிறது இந்த பூமியில் என்றறிய நான் கொண்டிருந்த பெருங் கனவினை பெரும்பாலும் தூக்கம்தான் ஜெயித்திருக்கிறது. இன்று நான் தூக்கத்தை புறமுதுகிட்டு ஓடச்செய்து....கான்கிரீட் தடுப்புகளுக்க்குள் இருந்து வெளி நோக்கி வந்தேன் என்று சொல்வது சரியான வார்த்தையாய் இருக்காது...உண்மையில் பாய்ந்தேன்.

எல்லோரும் உறங்கிக் கொண்டிருந்த பொழுதில் நான் எப்போதும் அமரும் நதிக்கரை என்ன செய்து கொண்டிருக்கும் என்று காணும் ஆசை துளிர்க்க கால்கள் அனிச்சையாய் நடக்கத் தொடங்கியிருந்தன....

சில் வண்டுகளின் சப்தமும், சில்லென்ற காற்றும் ஒன்றாய் என்னைச் சூழ எப்போதும் போல நிலவு மேகங்களுடன் சல்லாபித்துக் கொண்டிருக்கையில் பக்கத்து தெருவில் நாய் மட்டும் ஏனோ ஊளையிட்டுக் கொண்டிருந்தது. பேயை கண்டால் நாய் ஊளையிடுமாமே? உண்மையா?மனது கேட்ட கேள்வியை புத்தி ஆராய்ந்து கொண்டிருக்கையில் மனமே மீண்டும் ஒரு பதிலைச்சொன்னது... ஆமாம் பேய் இருக்குமென்று.....ஆராய்ச்சியை நிறுத்திய மூளை உடல் முழுதும் பயத்தை பரவவிட்டு மீண்டும் மனமே சொன்னது திரும்ப வீட்டுக்கு சென்று விடு என்று...

நடந்து கொண்டே உள்ளே நடந்த இந்த போராட்டத்தை விடுத்து ஏதோ ஒரு உணர்வு பேய் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? பேய் வந்தால் பேயோடு சினேகம் கொள் வராவிட்டால் இல்லை என்று போய்விடு.. இதற்கு போய் ஏன் தர்க்கம் என்று மனதின் முயற்சிகளை அறுத்தெரிந்தது. மூணாவது தெருவை கடந்து நான் கடக்கும் போதுதான் தவசி தாத்தாவின் நினைவு வந்தது....போனவாரம்தான் இறந்து போயிருந்தார்....

ஆஜானுபாகுவான உடல் எப்போதும் முறுக்கிய மீசை என்று தாத்தாவை கண்டாலே எல்லோருக்கும் பயம். வாசலிலேயே எப்போதும் கயிற்றுக் கட்டிலில் படுத்து இருப்பார். உடலின் கட்டுக்கு பின்னால் அவரின் இளவயது உடற்பயிற்சியும், சரியான உணவும் இருந்தாகச் சொல்வார்கள். தாத்தாவிற்கு கோவம் வந்துச்சுன்னா எவனும் முன்னால நிக்க முடியாதாம் அப்படி ஒரு முரடனாம். வயக்காட்டு வேலையும் கொளுத்த பணமும் அவருக்கு ஆங்காங்கே கூத்தியாள்களையும் கொடுத்திருந்தாம்.

யாருக்குமே மசிஞ்சு போகாத தாத்தா கோவில், கடவுள்னு எவனச்சும் பேசிட்டு வந்தா போட்டு நொறுக்கி அள்ளிப் போட்டுடுவாராம். களாவாணிப் பயலுகளா...களவாணிப்பயலுகளான்னு ஈட்டிக் கம்ப எடுத்துட்டு தொறத்துவாராம்...

எல்லாம் சரிதான்...இது எல்லாம் நான் சொல்லக்கேட்டதுதான் ஆனா... அவரோட கடைசிக்காலத்துலதான் நான் பக்கத்துல இருந்து பாத்து இருக்கேன்...! முரட்டு சம்சாரியா இருந்தவரா? இவருன்னு ஆச்சரியமா இருந்துச்சு.... மூட்டு வலி அதனால நிக்க முடியாது......தோளெல்லாம் சுருங்கிப் போய் முடியெல்லாம் கொட்டிப் போய், முறுக்குன மீசையில் நாலைஞ்சு முடி மட்டும் பூனைக்கு இருக்குறது கனக்கா இருந்துச்சு...! ஊரெல்லாம் கூத்தியா வச்சிருந்த மனிசனுக்கு கடைசி காலத்துல கண்ணும் தெரியாம போச்சு....

கண்ணத்தா அப்பத்தாதான் அவருக்கு எல்லாமே செஞ்சுகிட்டு இருந்துச்சு, புள்ளை குட்டிய எல்லாம் கட்டிக் கொடுத்து தூரத்தில இருக்காங்க. கயித்து கட்டில்ல இருந்த படியே ....ஏய் கண்ணாத்தா... ஏய் கண்ணாத்தானு கத்திகிட்டு இருப்பாரு....பசிச்சாலும் சரி, மத்த இயற்கை உபாதைகளுக்கும் சரி.., இடுப்புல இருக்குற வேஷ்டி அவுந்தா கூட கட்டத் தெரியாது அதுக்கும் கண்ணாத்தா அப்பத்தாதான்னா பாருங்களேன்....

என்ன ஆச்சு இவரோட உடற்கட்டுக்கு? எங்க போச்சு இவரோட திமிரு எல்லாம்? எங்க போய்ட்டாளுங்க இவரோட கூத்தியாங்க எல்லாம்?

அனிச்சையாய் எழுந்த கேள்வியை அடக்க முடியாமல் கேட்டு விட்டு.....வெறுமையாய் கிடந்த கயிற்றுக் கட்டிலுக்கு என் பெருமூச்சை கொடுத்துவிட்டு... நான் நடந்தேன்...

தெருக்களை கடந்து வயல்களைக் கடந்து காட்டுக்குள் ஊடுருவிய பொழுது மீண்டும் பயம் வந்தது. பெரும்பாலும் மனதுக்கு கூட்டமும் மனிதர்களும் பேச்சுக்களும் தேவைப்படுகிறது. ஆள் அரவமற்றுப் போனால் உடனே ஒரு வித சோகத்தை பரப்பி அதை பயம் என்று மூளைக்குச் சொல்கிறது.

யாருமற்றுப் போனால் என்ன? ஏன் பயம் வரவேண்டும்? என்ற கேள்விக்கு பதிலாய் அது மரணபயம் என்ற பதில் கிடைத்தது. மரண பயம்தான் எல்லா பயத்தின் மூல காரணம். மரணம் என்ற ஒன்று இல்லையெனில் இங்கே கடவுளர்களும் இல்லை தத்துவங்களும் இல்லை. வலு இருப்பவனே எல்லாவற்றையும் ஆளும் சக்கரவர்த்தியாய் இருந்திருப்பான் என்று எண்ணும் போது கடவுளும், கற்பிதங்களும் இதற்காகத்தான் படைக்கப்பட்டிருக்கவேண்டும் என்று தோன்றியது.

இதோ நெருங்கியே விட்டோம் நதியை.....அதோ அங்கே அமைதியாய் ஓடிக் கொண்டிருக்கிறது பாருங்கள் சலனமின்றி அதுதான் நான் சொன்ன நதி. ஆழமாய் உள்வாங்கிக் கொள்ளுங்கள்...நிலவின் ஒளியை போர்த்திக் கொண்டு பள பளவென்று ஓடும் நதிக்கும், கரையில் நின்று கொண்டு காற்றோடு ரகசியம் பேசிக் கொண்டிருக்கும் மரங்களுக்கும் கர்வங்கள் இருக்குமா? திமிர்கள் இருக்குமா? இல்லை தவறான உறவுகள் இருக்குமா? வலிவுகளும் இல்லாமல் கற்பிதங்களும் இல்லாமல் ஒரு வாழ்க்கை இருக்கத்தானே செய்கிறது.

சிந்தித்தபடியே நதிக்கரையில் நாணல்கள் இல்லாத ஒரு இடத்தில் நான் அமர்ந்தே விட்டேன். சில்லென்ற தரை உடலுக்குள் சிலிர்ப்பூட்டி நிலவோடு ஒரு தொடர்பை எனக்கு சூட்சுமமாய் முடிச்சே போட்டு விட்டது. சட்டென்று நான் எதிர்பார்க்கா வண்ணம் நடு நதியில் ஏதோ ஒன்று மிதந்து வர...அட..அது என்ன என்ற எண்ணத்தில் எனக்குள் ஆச்சர்யம் முளைத்திருந்தது...

ஒரு சலனமுமின்றி நீரின் ஓட்டத்தோடு எந்த வித முரணுமின்றி நகர்ந்து கொன்டிருந்த ஓடத்தினை பார்த்துக் கொண்டே இருந்த என்னின் நினைவுகள் சட்டென்று நின்றே போயிருந்தன.....! வாழ்க்கை ஒட்டமும் ஒரு நதியைப் போலத்தான் முரணற்ற ஓடம் சுகமாய் நதியின் ஓட்டத்தோடு பயணித்து சேரும் இடம் சேர்கிறது...!

அலைக்கழிப்புகளோடு சேர்ந்தே அலைகிறது, கரையின் ஓரம் ஒதுங்கினால் ஒதுங்கிக் கிடக்கிறது.. மீண்டும் நகரும் சூழல் வந்தால் நகர்கிறது. மொத்தத்தில் ஒரு ஓடம்
ஓடமாய்த்தான் தன்னை காட்டிக் கொள்கிறது....

மனிதன் மட்டும் தான் தன்னை அகந்தையுள்ளவனாகவும், வலுவுள்ளவனாகவும், அடக்கியாள்பவனாகவும் காட்டிக் கொள்கிறான்....! உலகமே தன் காலடியில் என்ற எண்ணம் கொள்கிறான். எல்லாம் தொலைந்து போகும் வயோதிகத்தில் கடைவாயில் எச்சில் ஒழுக அதை துடைக்கக் கூட திரணியற்று...இடுப்பு செத்துப் போய் மரணமென்றால் ஏதோ என்னவோ என்று பதறி வாழ்க்கை நதி ஒரு பக்கம் இழுக்க...கடந்த கால இறுமாப்புகள் ஒரு பக்கம் இழுக்க...என்னவென்றியா ஒரு பயத்தில் வாழ்க்கையை ஜெயிக்கவிட்டு வாய் பிளந்து மரிக்கிறான்.

சம்பந்தமே இல்லாமல் தவசி தாத்தா ஏனோ எனக்கு நினைவுக்கு வந்தார்....

நானும், நதியும், கடந்து போன ஓடமும், நதிக்கரை நாணலும்...மரங்களும், காற்றும் நிலவும் சலனமின்றி வாழ்க்கை ஓட்டத்தில் நீந்திக்கொண்டிருந்தோம்......

விடியத் தொடங்கியிருந்தது அந்த இரவு.....!


தேவா. S

Saturday, January 29, 2011

எது தீர்வு.....????


கொதிக்கும் இரத்தத்தோடு தமது உறவுகள் கொல்லப்படுவதைப் பார்த்துக் கொண்டிருப்பது அதுவும் அநீதி என்று தெரிந்தே நெரிக்கப்பட்ட குரல்வளைகளோடு பிதுங்கிய விழிகளோடு சப்தங்கள் எழுப்பக்கூட திரணிகளற்று கிடப்பது.... என்பது நமக்குவழமையாகிப்போய்விட்டது. சகிப்புத்தன்மையையும் விருந்தோம்பலையும் ஜீன்களோடு சேர்த்து கொடுத்துவிட்டுப் போன நமது மூதாதையர்கள் வீரத்தையும்தான் கொடுத்து சென்றிருக்கிறார்கள் என்பதை எப்படி மறந்தீர் தோழர்காள்?

ஒவ்வொரு ஐந்து வருடமும் தேர்தல் வரும் கும்பல் கும்பலாய் கொள்ளைக்காரர்கள் கொடி பிடித்துக் கொண்டு வீடுகள்தோறும் வந்து வாக்குகள் சேகரிப்பார்கள்.

மான ரோசமுள்ள தமிழனும் கொடிபிடித்து, கூச்சலிட்டு தன்னை தொண்டனென்றும் அபிமானியென்றும் உடல் மண்ணுக்கென்றும், உயிர் தன் தன்மானத் தலைவனுக்கென்றும் கொடி பிடித்து கத்தி தானே எல்லாமுமாய் நினைத்து ஒரு குவார்ட்டர் பிராந்தியிலும், கோழி பிரியாணியிலும் தனது உச்ச பட்ச சந்தோசத்தை எட்டி விடுவான் அல்லது கொடுக்கும் பணத்தை நன்றியுணர்ச்சியோடு வாங்கி பாக்கெட்டில் வைத்துக் கொண்டு விசுவாசத்தை வாக்குகளாக்கும் போது தனக்கே ஒரு சவக்குழியை வெட்டி தானே ஒரு ஐந்து வருடங்களுக்கு இறங்கி அமர்ந்து கொண்ட விபரத்தை உணர்ந்திருக்க மாட்டான்...?

கோழி பிரியாணி விடிந்தவுடன் செரித்திருக்கும் கொடுத்த காசும் 3 நாளில் தீர்ந்திருக்கும், மீதமிருக்கும் நாளேல்லாம் ஒரு அடிமை நாயைப் போல கையைக் கட்டிக் கொண்டு ஐயா வாழ்க, அம்மா வாழ்க என்றூ கோசங்களிட்டும் இல்லையேல் அதிருப்தியை மனதில் வைத்துக் கொண்டு ஒரு பிணம் போல வாழ்ந்து கொண்டிருப்பான்.

ஒரு கணம் நில்லுங்கள் சகோதரர்களே...! யார் இந்த மத்திய மாநில அரசுகள்....? கடந்து போன குடியரசு தினத்துக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லையென்றா நினைக்கிறீர்கள் குடிகளே? குடிகளின் அரசு இது... இங்கே ராசாக்களின் ஸ்பெக்ட்ரம்கள் நமது இரத்தம் உறிஞ்சப்பட்ட நிகழ்வுகள் என்றும் நமக்கு ஏன் உறைப்பதில்லை? ஊழலும் அதிகார துஷ்பிரோயோகமும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள ஒரு கேவலமான ஆட்சிக்கு கீழே நீங்களும் நானும் வாழ்ந்து கொண்டிருப்பதற்கு காரணம் ஐந்து வருடங்களுக்கு முன் நாம் செய்த தவறு.

திமிர் பிடித்த ஏகாதிபத்தியத்தின் குணத்தினை தன்னுள் மறைத்து வைத்துக் கொண்டு அதை சூசகமாய் இந்திய மூளைகளுக்குள் செலுத்தி தன் கணவரின் மறைவுக்கு காரணமானவர்களை பொடிப்பொடியாக்கிவிட்டு இன்னும் எந்த மண்ணில் தன் கணவர் மறைவுக்கு காரணமானவர்கள் இருக்கிறார்களோ அவர்களையும் கிள்ளுக்கீரையாக எண்ணும் போக்கு இன்னுமா பிடிபடவில்லை....என் உறவுகளே?

கடலுக்குள் செல்லும் மீனவன் உயிர் வாழ பிழைப்புத் தேடிப் போனானா? இல்லை சிங்கள மிருகங்களின் இயந்திரத் துப்பாக்கிகளுக்கு உணவாகப் போனானா? ஒற்றை உயிர் போவதற்குப் பின்னால் எத்தனை குடும்பங்களின் வாழ்க்கை இருக்கிறது என்று இத்தாலிய மூளைக்கும், இத்தாலிய மூளைகளால் ஆட்சிப்பொறுப்பில் சுகவாசம் காணும் இந்திய கோழைகளுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று ஒத்துக்கொள்ளும் அதே நேரத்தில் தமிழன் பெயர் சொல்லி பிழைப்பு நடத்தும் திராவிட கட்சிகள் என்று தம்மை வரிந்து கொண்டு... தன் வீட்டு சோத்துக்கு உப்பை தமிழனின் கண்ணீரில் எடுக்கும் தழிழக அரசியல், மற்றூம் ஆளும் கட்சிகளூக்குமா உறைக்கவில்லை...?

என்னங்கடா உங்கள் நியாயம்? உங்கள் வீட்டில் விழுந்தால் அதற்கு பெயர் எழவு ஆனால் நித்தம் குருவிகளைப் போலச் சுடப்படும் என் மீனவ நண்பனின் உயிர் போனால் அது செய்தியா? லாப நஷ்டக்கணக்குகள் சர்வ நிச்சயமாய் உம்மை நோக்கியும் திரும்பும் அதிகார வர்க்கமே......அப்போது உமது மரணங்களும் உம்மைச்சுற்றி நிகழும் நிகழ்வுகளும் போதிக்கும்.......வலி என்றால் என்னவென்று....

கடிதங்கள் எழுதியும், தந்திகள் கொடுத்தும் நவீன யுகத்தில் ஒரு விளையாட்டு காட்டி முடித்தது தமிழக அரசு.....விளைவு சில ஆயிரக்கணக்கில் தமிழனின் உயிர் சுட்டுச் சுண்ணாம்பாக்கப்பட்டது.....

வல்லரசு வேசமிடும் இந்திய அரசின் ஒற்றை கண்டிப்பு போதும் இலங்கை அரசினை கண்டித்து மீனவர்களை காப்பாற்ற....ஆனால் வெளியுறவுத் துறை செயலரை இலங்கைக்கு அனுப்பி வைத்து மற்றொமொரு கேணத்தனமான அரசியலை நடத்துகிறது மத்திய அரசு....

இந்தமுறை நமது குறிகள் தப்பக்கூடாது உறவுகளே.....! தமிழகக் கட்சிகள் இவற்றையும் அரசியலாக்க திட்டமிட்டு..வாக்கு சேகரிக்கும் உத்தியாக மாற்றும் அபாயமுமிருக்கிறது...சரியான தீர்வை எட்டி நிரந்தரமாய் நம் சகோதரர்கள் மீன் பிடிக்க ஒன்றும் நிகழவில்லையெனில்...

வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை புறக்கணித்துதான் ஆகவேண்டும்.....! கடுமையான முடிவுதான்.......எல்லோரும் ஒருமித்து செயல்படுவது கடினம்தான்.......ஆனால்....இப்படிப்பட்ட நிகழ்வுகளை நிகழ்த்தினால்தான்........நாம் குடிகள்......இந்த தேசமும் குடியரசு தேசம்.....!

மறைந்து போன மீனவ தோழர்களுக்கு ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலிகளும்....இனி இதுபோன்ற நிகழ்வுகள் நிகழா வண்ணம் தடுக்கும் படி அரசை வலியுறுத்தியும் இந்தக் கட்டுரை வெளியிடப்படுகிறது.


தேவா. S
Wednesday, January 26, 2011

சுடர்....!

மிருகத்தின் வக்கிரத்தினைப் புத்தியில் தேக்கிவைத்து அதைப் பார்வைகளுக்குள் கொண்டு வந்து வக்கிரப்பார்வைகளைப் பொதுவினில் விதைத்துக் கற்பிதங்கள் கொள்ளும் கேவலப் புருசர்களை அழிக்க இன்றே எனக்கோர் வரம் கொடு இறைவா?

முரண்பட்ட சமுதாயமே நீ செத்துப் போ!

ஆணும் பெண்ணும் கொள்ளும் உறவில் காமம் என்ற உணர்வைக் கலந்து நோக்கும் கயமையும், கயமைவாதிகளும் என் முன் வர துணிகரம் கொள்ளாதீர், சற்றே ஓடி ஒளியும் அல்லது யாரையேனும் தேடிப் பதுங்கும் இல்லையேல் இக்கணமே நீவீர் இருந்த தடம் அறியாமல் எரித்து விடும் வல்லமை எம்மிடம் உண்டு. நீவீர் ஜீவித்தீர் என்ற சுவடுகளின்றி உமது சாம்பல்கள் காற்றிலே கரைக்கப்படும்.

எங்கே ஆரம்பித்தது இந்த மனித முரண்...? பாலினம் என்பது பிள்ளைகள் பெறுவதற்கு மட்டுமென்ற காமக்கேவலம்......? திருமண பந்தம் என்ற ஒன்று விதிக்கப்பட்ட தேசத்தில் , கணவனை விடுத்து மாற்று ஆணுடன் பேசினாலே அது தவறு? கற்கும் பொழுதில் நண்பனாய் ஒரு ஆண் இருந்தால் அதுவும் தவறு? சகோதரனாய் யாரேனும் பாசத்துடன் இருந்தால் அதுவும் தவறு?

எங்கே போகிறாய் சமுதாயமே? மன்னிகவும் சமுதாயம் என்ற வார்த்தைக்கு வேறுபதம் கொள்கிறேன்? எங்கே போகிறாய் கேவலமே..ஏன் உனது பார்வையில் விசாலங்கள் இல்லை....

பெண்ணைப் பூட்டிப் பூட்டிவைத்த காலம் போய்விட்டது என்று சொல்லித் தயவுசெய்து வெற்று வியாக்கியானம் பேசிக்கொண்டு உங்களையும் என்னையும் ஏமாற்றிக் கொண்டு யாரேனும் என்னிடம் வராதீர்கள். எனது நாவில் இருந்து வரும் அக்னியில் எரிந்து விடப்போகிறீர்கள்....

காமம் மிகுதியாய் மனதில் கொண்ட விலங்குகளுக்குக் காண்பதெல்லாம் காமம். பார்ப்பதெல்லாம் மோகம்...! விதிவிலக்குகளை எல்லாம் கையில் எடுத்து வைத்துக் கொண்டு ஒரு வரலாற்றை எழுத இந்தச் சமுதாயம் துணிந்தால்.. அதை எரித்துப் போட இக்கணமே நான் தயார்.....என்னை அதனால் இச்சமுதாயம் எரியூட்டுமென்றாலும்...... கவலையில்லை. உயிர்.. என் தலையில் இருக்கும் ஏதோ ஒன்றுக்குச் சமம்....

ஆண் பெண் உறவு என்பது காமம் சார்ந்தது மட்டுமல்ல தோழர்காள்...! அப்படி திணிக்கப்பட்டிருப்பது ஒரு மனோதத்துவ விந்தை? பெண்ணின் உணர்வுகளும் ஆணின் உணர்வுகளும் காமம் சார்ந்துதான் கட்டியெழுப்பட்டிருக்கிறது என்று மனிதபுத்திகளுக்குள் ஊடுருவியிருக்கும், உடலெல்லாம் பரவியிருக்கும் கொடும் விஷம் பிழிந்தெடுக்கப்பட்டு....இந்தப் பிரபஞ்சம் தாண்டிய ஏதோ ஒரு இடத்தில் எரியூட்டிப் புதைத்து மீண்டும் வரவொண்ணா வண்ணம்... அழிக்கப்படவேண்டும்.

என் சகோதரியோடு நான் கடைவீதிகளுக்குச் சென்று வரும் போது கூட இந்த சமுதாயத்தின் முதல் பார்வை என்னவாயிருந்திருக்கும்? யார் இந்தப் பெண்? இப்படிச் சிரித்து பேசி ஒரு ஆடவனுடன் சென்று வருகிறாளே என்றுதானே பார்த்திருக்கும்? ஆணும் பெண்ணும் பேசினால் அங்கே ஒரு குறு குறுப்பான பார்வையும்.... தவறான எண்ணங்களும் பதியப்படுவதற்குப் பின்னால்..நீண்டகால ஒரு பொதுப்புத்தி இருப்பதை நீங்கள் மறுக்கிறீர்களா?

ஒரு பெண்ணின் நடவடிக்கைகள் பெரும்பாலும் அவளின் தாயால் போதிக்கப்படுகின்றன. அப்படிப் போதித்த தாய் இந்தச் சமுதாயத்தின் பார்வைகளுக்காகத் தன்னை ஒடுக்கிக் கொண்டவள். குனிந்த தலை நிமிராமல் செல்லவேண்டும் என்று யாரோ ஒரு அயோக்கியன் சொல்லிக் கொடுத்ததைத் தப்பாமல் கடை பிடித்து....அதைப் பின்பற்றி அதுவே ஒழுக்கநெறி என்ற தவறான கற்பிதத்தை தன்னின் சந்ததியினரிடம் போதித்து அதை நிறைவேற்றியும் வைக்கிறாள்....

இப்படி புரையோடிய புரிதல்கள் எல்லாம்.. காலப்போக்கில் விரிவடைந்து பெரும்பாலும் சமகாலத்தில் பெண்ணே பெண்ணின் முதன்மை எதிரியாகிப் போயும் நிற்கிறாள். உடலால் ஏற்படும் இயற்கை மாற்றங்களையும், இயற்கையால் ஏற்பட்டிருக்கும் ஆண் பெண் ஈர்ப்பினையும் யாராலும் தடுக்கமுடியாது என்றாலும்.. ஒரு ஆணும் பெண்ணும் பழகுவதின் பின்னணியில் சர்வ நிச்சயமாய்க் காமம் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை...

விதிமுறைகள் என்பவை எல்லா இடத்திலும் அவசியம் என்றாலும் எப்போதும் தவறாகப் பார்க்கும் கண்ணோட்டங்கள் ஆணாய் இருந்தாலும் பெண்ணாய் இருந்தாலும் அழித்தொழிக்கப்படவேண்டும்.

வாழ்க்கையில் எத்தனையோ பெண்களிடம் பழகும் வாய்ப்புகள் ஒரு ஆணுக்கு வாய்க்கும் அதே போலத்தான் பெண்களுக்கும், பணிக்காய், தொழிலுக்காய், இலக்கியத்துக்காய், ஆன்மீகத்துக்காய், அரசியலுக்காய், கலைக்காய் என்று அப்படிப்பட்ட தருணங்களில் வெறுமனே மற்ற விசயங்களை விடுத்து காமம் மட்டும் முன்னெடுத்து உறவுகள் உற்று நோக்கபடுவது கண்டணத்துகுரியது.

வயிறு ஒட்டிப் போனவனுக்கு உணவின் மேல்தான் பற்று வரும், வறுமையில் இருப்பவனுக்கு செல்வத்தின் மீதுதான் பற்று வரும், ஆணவம் கொண்டவனுக்கு அதிகாரத்தின் மீதுதான் பற்று வரும்....அது போல காமம் என்றால் என்னவென்றறிய அதில் புலமைகள் அற்ற பித்தர்களுக்குக் காமமே பிரதானமாய்த் தெரியும். இங்கே ஆண் பெண் உறவினைக் குற்றம் சொல்லும் மூளைகள் காமத்தால் நிறைவடையாதவை அல்லது காமம் என்றால் என்ன என்ற புரிதலற்றவை....

தெளிவுபடுத்தப்பட வேண்டிய மூலம் இதுதான்....!

இதன் மூலம்தான்.. பெண்ணையும் ஆணையும் தவறாகப்பார்க்கும் தெளிவற்ற பார்வைகள் வந்து விழுந்து ஏதேதோ கருத்துக்கள் கூறுகின்றன, எக்களித்து நகைக்கின்றன, கைகொட்டி சிரிக்கின்றன. மனித மனங்களில் ஒளித்து வைக்கப்படும் எல்லா நிகழ்வுகளும் சீறிக் கொண்டுதான் வெளி வரும். காமம் என்ற விசயம் காலம் காலமாக ஒளித்து வைக்கப்பட்டும் விளக்கங்கள் மறுக்கப்பட்டும்தானிருக்கிறது. அது பற்றிய தெளிவான விபரங்கள்....குறைந்த பட்சம் பதின்ம வயதினருக்குப் பயிற்றுவிக்கப் படவேண்டும்.


இன்னமும் ஆண்களும் பெண்களும் தனித்துப் பயிலும் முறை நீக்கப்பட்டு இரு பாலாரும் குழந்தைப் பருவத்திலே இருந்தே சேர்ந்து படிக்கும் முறை நெறிமுறைகளோடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மறுக்கப்படும் எந்த விசயமும் திருடப்படும்.....என்பது யாவரும் அறிந்ததே....

பழைய பஞ்சாங்கங்களை எல்லாம் எடுத்துத் தூர எறிந்து கொளுத்தி விட்டு புதியதோர் சிக்கலலில்லாத பூமி படைக்கப்படவேண்டும் அங்கே மனிதம் செழிக்க வேண்டும். இல்லையேல்...........ஓராயிரம் பாரதிகள் வருவார்கள்..........இந்த ஜகத்தினைக் கோடி முறைகள் கொளுத்தித்தான் போடுவார்கள்...

பெண்ணை போகப் பொருளாகப் பார்க்கும் விழிகள் பிடுங்கப்பட்டு...பேசும் நாவுகள் அறுக்கப்பட்டு..வெறுமனே வீதிகளில் அவர்களைப் பிண்டங்களாய் அலையவிடவும் செய்வார்கள்.... அப்போதாவது திருந்தட்டும் இவ்வுலகு......!

சுடர்மிகு அறிவுகள் எல்லாம் சேர்ந்து அறியாமை இருளை அழித்தொழிக்கட்டும்...!


தேவா. S

பின் குறிப்பு:

ஆண் பெண் நட்பு என்ற போர்வையில் மிலேச்சர்கள் தவறாக நடக்கவும் வாய்ப்பு இருப்பதால் ஆணும் பெணும் தன்னுடைய நட்பைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் தெளிவாக இருக்க வேண்டும். அது உணர்ச்சிவயப்பட்ட ஒரு தேர்வாக இல்லாமல்...அறிவுசார்ந்த ஒரு தேர்வாக இருந்தால் இருவருக்குமே நன்மை.

கத்திமேல் நடப்பது போன்றதுதான்.... ஆனால் நடந்தால் அதுவன்றோ சாதனை....!Tuesday, January 25, 2011

ஹாய்......25.01.2011!காலங்கள் நகர, நகர அனுபவம் என்பது சேர்ந்து ஒரு வித புத்தி முதிர்ச்சியை கொடுத்துக் கொண்டுதானிருக்கிறது. ஒரு வித கூர்மையான உள்முனைப்போடு வாழ்க்கை நகரும் போது இன்பம், துன்பம் எல்லாமே சேர்த்து வைத்து பார்க்கும் ஒரு பக்குவம் கை கூடி விடுகிறது. எது நடந்தாலும் அது ஒரு வித காரணமாய்த்தான் நிகழ்கிறது மற்றும் ஒரு காரணத்தினால் நிகழ்கிறது என்பது வேறு ஒன்றும் இல்லை என்று மட்டுப்பட்ட் அறிவு சொன்னாலும், என்ன செய்து விடும் வாழ்க்கை நம்மை? என்ற கேள்வி எழுந்து அதற்கு பதிலாய்....

ஒன்றுமில்லை..ஒன்றும் செய்து விடாது என்று தோன்றுகிறது.

ஆனால் நமது தனிப்பட்ட சாதக பாதகங்களை வைத்துக் கொண்டு வாழ்க்கையை நன்றென்றும் தீதென்றும் கணித்து விடுகிறோம். வளர வளர நாம் பெறும் விசயங்களை விட இழக்கும் விசயங்கள்தான் அதிகம் ஆனால் இழத்தல் என்று நாம் சொல்வது புதிதாய் வேறு ஒன்றைப் பெறுதல் என்ற கோணத்தில் பார்க்கும் போது அங்கே புதுமையான மனோ நிலை வந்து விடுகிறது.

மனம் என்ற வஸ்தாகத்தான் பெரும்பாலும் நாமாக இருக்கிறோம். இந்த மனதுக்கு பெரும்பாலும் புதிய விசயங்கள் கண்டு பயம்தான் ஏற்படுகிறது. அது எப்போதும் பழகிப் போன விசயங்களையே சுற்றிச் சுற்றி வர ஆசைப்படுகிறது. கடந்த காலத்தை நினைத்து கவலைப்படுகிறது, எதிர்காலம் பற்றிய கனவுகளில் சஞ்சரித்துக் கொண்டு பல்லிளிக்கிறது

புதிய விசயங்களை எதிர்கொள்ள ஒரு வலியும் அசாத்திய மனோதைரியமும், தெளிவான சிந்தனையும் தேவைப்படுகிறது. தெளிவான சிந்தனையானது மனோதைரியத்தை கொண்டு வந்து விடும் தெளிவாக சிந்திக்க அமைதியான மனது தேவைப்படுகிறது. அமைதியான மனதுக்கு நாம் மட்டும் காரணமல்ல புறச்சூழலும் காரணியாகிறது.

இங்கேதான் ஒரு சின்ன விசயம் அல்லது சவால், புறச்சூழலை நாம் தீர்மானிக்க முடியாது. அமைதியான ஒரு தியானத்தில் பக்கத்து வீட்டில் ஏதோ சண்டை நடக்க தியானம் தடைப்படுகிறது. ரோட்டில் நடந்து செல்லும் போது யாரோ யாரையோ சட்டையை பிடிக்க வன்மம் நமக்குள் இல்லாமலேயே வன்மம் கவனிக்கப்படுகிறது மற்றும் உட்செல்கிறது.

இங்கே கவனியுங்கள் உணர்வுகள் பெரும்பாலும் நமக்குள் உட்செலுத்தப்படுகின்றன....நாம் விரும்பினாலோ விரும்பாவிட்டாலோ அது நிகழ்ந்து விடுகிறது. இவ்வளவும் தாண்டிதான் மன அமைதியும் சிந்தனையில் தெளிவும் நமக்குத் தேவைப்படுகிறது என்பதால் இது சாத்தியபடாமல் பெரும்பாலானவர்களுக்குப் போய் விடுகிறது.

இப்போது எல்லாம் பெரும்பாலான நேரங்களில் நான் இல்லை என்றே நினைத்துக் கொள்கிறேன். நீங்களும் வேண்டுமானால் நினைத்துப் பாருங்கள். அதற்காக அலுவலக நேரம் மற்றும் மனிதத்தொடர்பில் இருக்கவேண்டிய நேரத்தை எடுத்துக் கொள்ளாதீர்கள்.

சாதகமான சூழ்நிலைகளில் நான் இல்லை என்ற ஒரு பயிற்சியை மேற்கொண்டு பாருங்கள் எப்படிப்பட்ட மனோநிலை வாய்க்கிறது என்று சொல்லுங்கள்.. ! அதாவது மென்மையாய் அமர்ந்து கொண்டு நீங்கள் இருப்பதாகவே நினையாமல் வெறுமனே உலகத்தைப் பாருங்கள்.

என்ன ஆகும்? கொஞ்சம் கொஞ்சமாய் நான் என்ற ஆணவம் வேரோடு சாயும்... கவனித்து சொல்லுங்கள். ஆணவம் அழிந்த பின் மாற்றம் எனபது வாழ்வின் நியதி என்ற ஒரு புரிதல் வந்து விடும்....சாதாரணமாகவே....!

சரி நான் அகம் நோக்கியே பேசிட்டு இருக்கேன்.. கொஞ்சம் புறத்தையும் பார்ப்போம். இரண்டையும் சமப்படுத்தி நகர்த்தி செல்ல வேண்டும். இவை இரண்டும் சேர்ந்ததுதான் முழுமை. பொருளும், பொருளற்றதும், நன்மையும் தீமையும் சேர்ந்த ஒரு பேக்கேஜ்தானே வாழ்க்கை...

இதோ பாத்தீங்களா.. மறுபடி அகம் என்னை இழுக்குது.....இருங்க வெளில வந்துடுறேன் கம்ப்ளீட்ட்டா....

கடந்த வாரத்தில் தமிழ் மண விருதுகள் அறிவிக்கப்பட்டன. ஆன்மீகம் பகுதியில் இரண்டாம் பரிசு கிடைத்ததும் வாழ்வின் ஒரு நிகழ்வாகிப் போனது. அதை கடந்து போகும் போது வெறுமனே சென்றுவிட மனமும் உள்முனைப்பும் சேர்ந்தே சம்மதிக்க மறுக்கின்றது. எழுத்தினை வாசித்தவர்களுக்கும், வாக்குகள் செலுத்தி என்னை நேசித்தவர்களுக்கும், நடுவர்களாய் இருந்து உற்று நோக்கிய நண்பர்களுக்கும் எனது நமஸ்காரங்களை மனம் குவித்து தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்கேயோ செல்வதற்காக எழுத தொடங்கவில்லை என்னை உற்று நோக்கவே எழுத வந்தேன். இங்கே புகழ் என்ற ஒன்று மனித மனங்களுக்கே பொதுவான ஒரு ஈர்ப்பான ஒன்று.. எப்போதும் அதை நோக்கியே மனித மனம் ஓடும். என்னைப் பொறுத்தவரை அப்படி ஓடும் நேரங்களில் மனதை நிராகரித்து விடுவேன். இப்போதெல்லாம் படைப்புகளுக்கு வரும் கருத்துக்களை பார்க்கும் போது ஒரு மாதிரி கஷ்டமாக ஒரு அன்ஈசியாக இருக்கிறது.

இனி கட்டுரைகள், கதைகள், கவிதைகள் நன்றாக இருக்கிறது என்று நினைக்கும் நண்பர்கள் மனதார வாழ்த்துங்கள் உங்கள் அன்பு எப்போதும் விலை மதிக்க முடியாதது. மேலும் அதற்காக உங்களின் நேரம் ஒதுக்கி கருத்துரை இடுவதையும் அதைக் கண்டு என் அகங்காரத்துக்கு தீனி போட்டுக் கொள்வதையும் என்னாலேயே சகித்துக் கொள்ள முடியவில்லை.

கருத்துரை என்ற படிமத்தை தற்காலிகமாக நீக்கிவிட்டேன். மீண்டும் எப்போதாவது இட வேண்டும் என்று தோன்றும் வரை காத்திருக்கிறேன் அதுவும் அவசியத்தின் பொருட்டுதான் இல்லையென்றால் அந்த படிமம் ஒரு வலியுறுத்தலாய் மற்றவர்களுக்கும் ஒரு கட்டாயமாய் இருப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

இனி... படைப்புகள் பற்றிய விமர்சனங்கள், கருத்துக்கள் ஏதேனும் இருந்தால் எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்....இதுவும் கட்டாயம் இல்லை... !கட்டுரையில் குற்றம் இருப்பினும் இல்லை ஏதேனும் சர்ச்சைகள் இருப்பினும் தயங்காமல் தெரிவியுங்கள். வலுவான கருத்துக்களையும், ஆதங்கங்களையும் என்னுடைய கட்டுரையின் முதன்மைப் பக்கத்திலேயே பகிர்ந்துகொள்கிறேன்....!

அனைவரும் செழிப்புடன் வாழ என் பிரார்த்தனைகள்...!

அப்போ வர்ர்ர்ர்ட்ட்ட்டா....!


தேவா. S


Sunday, January 23, 2011

அய்யனாரே...!பள்ளியோடத்துக்கு போய்ட்றேம்மோவ்.....தோளில் பைக்கட்ட மாட்டிக்கிட்டி பள்ளியோடத்துக்கு போற நாளு என்னிக்கி மாறுமோ? பெரிய பள்ளியோடத்துல படிக்கிற பயலுவ எல்லாம் ரெண்டு நோட்டு புத்தவம்தான் கொண்டு போறானுவ... இவனுவள பாத்துபுட்டு ஒரு நா நானும் ரெண்டு நோட்டை கொண்டுகிட்டு போனதுக்கு.... அந்த கணக்கு வாத்தி முருயேசன் மொத்து மொத்துனு மொத்திபுட்டான்.

மனசுக்குள் பேசிக் கொண்டே வீட்ட விட்டு நடந்து கொன்டிருந்தவனை பாசுகரு பாசுகருன்னுன்னு பயலுவ எல்லோம் கூப்பிடுவானுவோ ஆனா அவனுக்கு அவன ரசினியாந்துன்னு சொல்லிகிறதுதலலதான் சந்தோசம்.

ஏம்பி.... எங்காளு எப்டி அடிப்பாரு தெரியுமுல்ல எந்த கமினட்டியும் எங்க ஆளுகிட்ட வரமுடியதுல்லன்னு சொல்லிகிட்டு ரசினிக்கு கொடி புடிக்கிற பயவுள்ள அதே நேரத்துல கமலதாசன காலிப்பயன்னும் சொல்லி சண்ட போடும். ஏலேய்...ஏன்டா அப்புடி சொல்றன்னு கேட்டா ஆமாம் காலிப்பயதான அவன் எப்ப பாத்தாலும் காதலிச்சுகிட்டே இருப்பான் எங்காளு மாறி சண்டையெல்லாம் போட வருமான்னு நம்மளையே திருப்பி கிட்டு கேப்பான்....

எட்டாவது படிக்கையில் உனக்கு என்ன நடிவரு சினிமான்னு போட்டு ஒரு நாளு பாசுகரு பய அப்பாரு அடி வெளுத்து கூட இருக்காரு, அவரும் எம்புட்டு நாளுதான் கண்ணுல வெளக்கண்ணைய ஊத்திகிட்டு பாப்பாரு...அவரு வார நேரம் போற நேரம் ..எலேய் பாசுகரு என்னடா பண்ணுறன்னு கேப்பாரு.... இவனும் வெறப்பா... ' படிக்கிறமுன்ன' ன்னு சத்தமா சொல்லிபுட்டு... எப்ப பாரு ஏவுட்டு பையிலயே கைய வுட்டு பாக்குறதுதான் இவுருக்கு வேல நல்ல அப்பாரு வந்தாரு..எனக்குன்னு...

பேயாமா மள்ளிய கடையிலயே இருக்க வேண்டியதுதானே.. வூட்டுக்கு எதுக்கு வர்றவோ....ன்னு நினைப்பான். பாசுகருகிட்ட கிடந்து அடிவங்குறது அவன் தங்கச்சி மீனாதான்.. ஏச்சு...ஏச்சு.. ஏய் ஆயி... ஏய் ஆயி... காசு கொடுலே..அப்பா சாங்காலம் வருவோல்ல அப்ப எனக்கு காசு கொடுப்போ அப்ப உனக்கு முட்டாயி வாங்கியாந்து தாரேன்னு சொல்லியே ஏச்சு ஏச்சு நொட்டிபுட்டு அடிக்க வேற செய்வான்....

அவன் பள்ளியோடத்துக்கு போகும் போதே பயந்து கழிஞ்சுகிட்டுதான் போவான். பாசுகருக்கும் அவன் கணக்கு வாத்திக்கும் ஏழாம் பொருத்தம். கணக்கு இவனுக்கு வரவே வராது கணக்கு வாத்திக்கா கோவம் வந்தா போகவே போகாது.

'ஏன்டா சுரேசு வீட்டுக்கணக்கு செஞ்சியாடா ' மெலிசான குரல்ல கேட்டான் பாசுகரு... இல்லடா வாத்தியாரு சொல்லிக்கொடுக்கவும் மாட்டேன்றான் வீட்லயும் எல்லாரும் சும்மா திட்றாவோ.... சொல்லிக் கொடுக்கவும் மாட்றாவோ? என்னடா பண்றது பாசுகருன்னு கோயில்ல நேந்துகிட்டு முடி இறக்குறப்ப அழுவுற புள்ள மாறி மூஞ்சிய வச்சிகிட்டு கேட்டான் சுரேசு........

சரிடா இன்னிக்கு கணக்கு புரியல சார்ன்னு அவுர்ட்ட தான கேப்போம்டா, அவ்வோ தானே டீச்சரு தெரியலேன்னா சொல்லனுமுன்ன ...வா.. வான்னு மணி அடிச்சுட்டாவோ...ன்னு சொல்லிட்டு அவன் கைய புடிச்சு இழுத்த்துட்டு ஒட்டாமா பள்ளியோடத்துக்கு வந்தான்.

முத பீரியடு தமிழு முடிசஞ்சு ரெண்டாவது அறிவியலு முடிஞ்சு மூணாது பீரியடு கணக்கு
முருயேசன்ஞ்சாரு வந்து உள்ள நொழையுறதுக்கு முன்னால மூங்கி கம்பு வந்து நொழைஞ்சுச்சு..கிளாசுக்குள்ள. ஏண்டா பயலுவளா.. கணக்கு போட்டியளாடா...எங்க நேத்து கொடுத்த வீட்டு கணக்கெலாம்.. ?

தொண்டய கனச்சு கிட்டு அவரு சாதரணமாத்தான் செருமினாரு.. நம்ம பயலுவ பாசுகருக்கும், சுரேசுக்கும் காட்டெருமை செருமறது கனக்கா ஒரு நெனப்பு ரெண்டு பயலுவளும் காதுகுள்ள சொல்லி சிரிக்கிறானுவ ஆன கணக்கு போடலன்றத மறந்துட்டானுவ..

வருசயா ஒரு, ஒருத்தனா போயி முருகேசஞ்சாரு கிட்ட ரைட்டு வாங்கிட்டு போறானுவ கடசில நம்ம பயலுவ ரெண்டு பேரு நிக்கிறானுவ வெத்து நோட்ட வச்சிகிட்டு.....

" ஏய் எருமையளா எங்கடா கணக்குன்னு' கேட்டாரு முருகேசஞ்சாரு...ரெண்டு பயலுவளும் முழிக்கிறானுவ.. பேச்சு வரல.... ரெண்டு கமினெட்டியும் இங்கிட்டு வா...காலைல சோறு தின்னீயல்ல மறந்தா போனீய்? கணக்கு போட ஏன்டா மறந்தீய ங்கொப்பாரு மவனுவளா... நீ அவனை அறைடா கன்னத்துல... அவன் உன்னை அறையட்டும்ன்னு காட்டுக் கொரங்கு கனக்க கத்தினாரு கணக்கு சாரு...

ரெண்டு பயலுவளும் நேர் நேர நின்னுகிட்டு அறைஞ்சு கிட்டானுவோ.... இரண்டு பயலுவளையும் கிளாசுல இருக்குற எல்லா பயலுவலும் பாத்துட்டு சில பயலுவ பயப்படுறானுவோ, சில பயலுவோ சிரிக்கிறானுவோ....பாசுகருக்கும் சுரேசுக்கும் அது எல்லாம் கவலை இல்ல... பொம்பளை புள்ளைய முன்னிக்கி வச்சுகிட்டு அடிக்கிறவொளே நாளைக்கு பாத்து பாத்து சிரிப்பாளுவோளேன்னு கொஞ்சம் கவலைப்பட்டானுவ..

என்னடா அடிச்சுகிறீய? தொட்டா விளையாடுறியன்னு கேட்டுகிட்டே ரெண்டு கையிலயும் ரெண்டு பேத்து தலை மயித்தையும் புடிச்சு வெளு வெளுன்னு வெளுக்குறாரு முருகேசன்ஞ்சாரு ... பயலுவ அழுவுறானுவோ கத்துறானுவோ ம்ம்ம்ம்ஹூம்... முட்டிக்காலு போடச்சொல்லி லாடம் கட்டுறேன்ட பயலுவளா உங்களுக்கு......

ஏம்பி எஞ்சேதி தெரிஞ்சே இப்பாடி வரிய்யன்னா உங்கள என்னடா செய்யலாம்னு சொல்லிகிட்டே..." உங்க ஆயி அப்பான் படிக்க அனுப்புறவ்வோ...நீங்களுவோ நல்லா தின்னு புட்டு ஏய்க்கிறியலாடான்னு குரப்பயலுவளா'ன்னு சொல்லி வெளு வெளுன்னு வெளுக்கிறாரு.......

பள்ளிக்கூடமே அதிந்து போற நிலைமைக்கு பயலுவ கத்துறானுவோ...! அடிய நிறுத்திபுட்டு சரி ....இப்போ என்கிட்டன்னு சந்தேகத்த கேளுங்க பன்னியளா.... சொல்லிட்டு வாத்தியாரு அடிச்ச களைப்புல ஒரு சொம்பு தண்ணிய குடிச்சு புட்டு.....எட்டாபுலயே உசரமான பய பிரபாகரு அவன கூப்பிட்டு .......ஏலேய்... மணி கடைல போயி கணக்கு சாருக்குன்னு சொல்லி நல்ல டீ ஒண்ணு வாங்கிகிட்டு ரெண்டு பருப்பு வடை வாங்கிட்டு வெரசா வா... இந்த பயலுவல சத்தின சாத்துல எனக்கு மயக்கம் வருதுன்னாரு....

கணக்கே புரியாத பயலுவ ரெண்டு பேரும் சந்தேகத்த எப்படி கேப்பனுவ...? மறுவடிக்கி சொல்லித்தாங்க சார்னு பாவமா கேட்டானுவ... வாத்தியாருக்கு வந்துச்சு வெலம்...ஏன்டா...****ஆன்டிகளா? என்ன என்ன மொட்டப்பயனு பாத்தியளா ? போயி எங்குட்டாச்சும் சாணி அள்ளி பொழச்சுக்குங்க.. நாளைக்கு வரும் போது கணக்கு போட்டுட்டு வரல அப்புறம் கொன்னே புடுவேன் படுவாங்களா...

கண்ணாம் முழி ரெண்டையும் விட்டு புட்டு தோளை உரிச்சே புடுவேன்....கிளாசு முடியற வரைக்கும் ரெண்டு பேரும் முட்டி போடுங்கடானு சொல்லி முட்டி போடவச்சாரு.. காலு கடுக்க பயலுவ அடிய வாங்கிபுட்டு முட்டி வலிக்க நின்னுகிட்டு நாளைக்கு எப்படி கணக்க போடுறதுன்னு மிரண்டு போய் நின்னானுவா.....

பொழுது சாஞ்சு போச்சு.. ராத்திரி முழுசா பாஸ்கரு போர்வைய போத்திகிட்டு " அய்யனாரே நாளைக்கு கணக்கு வாத்தி வரக்கூடாது பள்ளியோடத்துக்கு இந்த வருசம் திருவிழவுல மொட்டையடிச்சிக்கிறேன் அப்படியே அவரு வந்தாலும் என்னைய ஒண்ணும் செய்யக்கூடாது சாமி...

பக்கத்தூட்டு பாபு இங்கிலீசு பள்ளியோடத்துல படிக்கிறான்.. கருப்பு பூடிசு எல்லாம் போட்டுகிட்டு....கழுத்துல டையி எல்லாம் போட்டு கிட்டு போறன்..அவனையெல்லாம் பள்ளியோடத்துல அடிப்பாவோலா மாட்டாவளா?

சிரிச்சிகிட்டே போறன் சிரிச்சுகிட்டே வாரான்...! ம்ம்ம்ம் அப்பாரு கிட்ட அதுல சேத்தி விடுங்கண்னு சொன்னா...ஏலேய் பாபு அப்பாரு சிங்கப்பூருல இருக்காரு காசு நெறய வச்சுருக்காவோ...ன்னு என்னிய திட்டி புட்டாரு....! ஏன் இவர யாரு மளிய கட வைக்க சொன்னது... சிங்கபூரோ மங்கபூரோ அங்க போவெண்டியதுதானே...

ம்ம்ம் பள்ளியோடத்துக்கு பேரல்லாம் சொல்றாவொ நம்ம பள்ளியோடத்துக்கும் பேரு வச்சிருக்கவொலே..ஊராச்சி ஒன்றிய நடு நிலை பள்ளின்னு....நல்லதா ஒரு பேர் வெச்சா என்ன?

பாபு பள்ளியோடத்துல யாரு டீ வாங்கியாந்து கொடுப்பா......?

கையி வலிக்கி..முட்டி வலிக்கி...முதுகு வலிக்கி.....அய்யனாரே........நாளைக்கு எனக்கு ஒண்ணும் ஆகக் கூடாது வாத்தியாரு லீவு போட்ருணம்னு இல்ல என்னிய ஒண்ணும் கேக்கப்புடாது...'

போர்வைய போட்டு போட்டு போத்திகிட்டு பொலம்பி கிட்டே இருந்தான் பாசுகரு. பொழுது விடிச்சு ரொம்ப நேரமாயியும் அவன் போத்திகிட்டே கிடந்தான். " ஏன்டா பாசுகரு பாசுகரு பள்ளியோடத்துக்கு போக நேரமாச்சு கெளம்புடான்னு' அவன் அம்மா மரகதம் போர்வைய வெலக்கி பாத்துட்டு பதறிப் போனா...சொரத்துல நடு நடுங்கி கண்ணு தொறக்க முடியாம கிடந்தான் பாசுகரு...

சுரேசு பயலுக்கும் காச்ச வந்தாலும் வந்துருக்கும், இல்லாட்டி பள்ளியோடத்துக்கு போயி மறுபடிக்கி அடி வாங்குனாலும் வாங்குவான்..

பாசுகருக்கு காச்ச ரெண்டு நாளுல டாக்டரு கிட்ட காமிச்ச சரியாப் போகும்...அவன் பள்ளியோடத்தையும் முருயேசஞ்ச்சாரையும் யாரு சரி பண்ணுவா?


அய்யனாரு சாமியா......?


தேவா. S

Saturday, January 22, 2011

ஆன்மாவின்.... பயணம்! பதிவுத் தொடர் பாகம் IV


PREVIEW

சராசரியான நிகழ்வுகளில் மிக திருப்தியான ஒருவன்....எல்லாவற்றையும் விட்டு விலகி இருக்க ஆசைப்பட்டு... ஒரு பத்து நாட்கள் வீட்டை விட்டு வெளியேற திட்டமிட்டு கடிதம் எழுதிவைத்து விட்டு வெளியேறுகிறான். அதற்கப்புறமான அவனின் மனோநிலை.. உலகம் பற்றிய பார்வை....இவனைப்பற்றிய உலகத்தின் பார்வை...இப்படியாக நகரும்....கதை.....இந்த நான்காவது பாகத்திலும் தொடர்கிறது...

திருப்புமுனைகளோடு கூடிய கதை எதிர்ப்பார்த்து படிக்க விரும்புவர்கள்....எனது பதிவுகளை தவிர்த்து விடல் நலம். ஏனென்றால் என் பதிவுகள் முழுக்க முழுக்க என்டர்டெயின்மென்டை நிச்சயமாய் கொடுக்காது.

உங்களின் நேரம் அனுமதிக்கும் பொழுது இதற்கு முன் உள்ள பாகங்களையும் படித்துக் கொள்ளுங்கள்....!

பாகம் I

பாகம் II

பாகம் III


இனி...


நன்றாக விடிந்தே விட்டது.. உச்சிப் பொழுதை நெருங்கிக் கொண்டிருந்தது அந்த பகல்..! என் வீடு என்னை மும்முரமாய் தேடும் என்பதை அறிந்தே இருக்கிறேன். ஆனால் என் மனைவியிடம் அந்த கடிதம் சிக்கிய நொடியில் இருந்து ஒரு புரிதல் நிச்சயமாய் அவளிடம் இருக்கும், அவள் பதட்டப்படமாட்டாள். என்னை சரியான அளவில் அவள் புரிந்து வைத்திருப்பது ஒரு வரப்பிரசாதம்தான்...

வாழ்வின் மிகப்பெரிய திருப்புமுனையாக ஒவ்வொருவருக்கும் திருமணம் அமைந்து விடுகிறது. கணவனைப் பொறுத்து மனைவியும் மனைவியை பற்றி கணவனும் ஒரு உச்ச பட்ச அன்போடு புரிதல் ஏற்பட்டு விட்டால் அது நேர்மறையான மாற்றமாகி விடுகிறது. என் மனைவியும் அப்படித்தான்...எப்போதும் என் செயல்களை விட செயல்களின் ஆழங்களில் ஒளிந்திருக்கும் அதன் பின்னணிகளை எப்போதும் உணர்ந்தவளாய்த் தானிருக்கிறாள்....

பெரும்பாலும் ஒரு ஆணின் சுதந்திர செயல்பாடுகள் பெண்ணாலேயே தீர்மானிக்கப் படுகின்றன. நமது சமுதாயத்தில் பெண் ஆணிடம் கட்டுப்பட்டு இருப்பது போல தோன்றினாலும் அது ஒரு மாயத்தோற்றமே...! இறுதியில் பெண்ணே ஆள்கிறாள். தொழிலும், கல்வியிலும், ஆன்மீகத்திலும் இன்ன பிற விசயங்களிலும் ஜெயிக்க பெண்ணின் அனுசரனை ஒரு ஆணுக்கு சரியான விகிதத்தில் கிடைக்க வேண்டும்.

மிகப்பெரிய வெற்றியாளர்களின் ஆளுமைக்கும், கம்பீரத்துக்கும் காரணமாய் பெண் அமைந்து போயிருப்பது சில வரலாறுகளை எடுத்து புரட்டிப் பார்த்தால் நமது அறிவுக்குத் தெரிய வரும்.

எனது ஆன்மீகத் தேடலும் என் மனைவியின் ஒத்துழைப்போடுதான் என்று நான் சொல்லத் தேவையில்லை. ஆமாம் அவ்வப்போது சந்திக்கும் நண்பர்களும் வாசிக்கும் ஏடுகளும் நம்மை புரட்டிப் போடும்போது.........24 மணி நேரமும் உடனிருக்கும் வாழ்க்கைத் துணையின் செயல்பாடுகள் நம்மை பாதிக்காதா என்ன?

பூர்த்தியான முழுமையான தாம்பத்தியம் அங்கே நிறைவுகளை எட்டி விட்டு அதற்கு அடுத்த கதவான ஆன்மீகத்தின் வாயிலை சொல்லாமல் கொள்ளாமல் தட்டித் திறந்தே விடுகிறது. வாழ்வின் முழுமை, பெற்றுப் போடும் பிள்ளைதான் ஆன்மீகம்.....ஆமாம்.. எல்லாவற்றிலும் பூர்த்தியான மனம்...அடுத்து என்ன என்று உற்று நோக்கும் போது கிடைக்கும் ஒரே விடை...ஆன்மீகம்தான்.....

என்னை மொத்தமாய் கலைத்துப் போட்டது பேருந்து இறுதியாய் நிறுத்தப்பட்டிருந்த அந்த பேருந்து நிலையம். திண்டுக்கல் பேருந்து நிலையம் எப்போதும் பரபரப்புக்கு சொந்தமானதுதான். சுற்றிலும் கிராமங்கள் நிறைந்து சுற்றியிருக்கும் மூன்று மாவட்டத்து மனிதர்களும் வந்து செல்லும் ஒரு இடம். ஆன்மீக தலமான பழனிக்கும், சபரி மலைக்கும் வட மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் தொட்டுச் செல்லும் ஒரு ஊர்....

வெள்ளந்தியான மனிதர்களை ஊர் முழுதும் இயற்கை பரவவிட்டு இருக்கும்....! அந்த பேருந்து நிலையம் எட்டிப் பிடித்த நான்... இலக்குகள் அற்று பயணிக்கத் தொடங்கியவன் என்பது என்னோடு ஆரம்பித்தில் இருந்து பயணித்த உங்களுக்குத் தெரியும்....

பேருந்திலிருந்து இறங்கிய என்னை உள்ளுக்குள் புரட்டிப் போட்டது பசி. வாழ்வின் மூலாதாரம்... உடலாய் இருக்கும் வரையில் ஏற்படும் அடிப்படை உணர்வு.....! எதுவேண்டுமானாலும் ஒருவன் பேசலாம், செய்யலாம், சாதிக்கலாம்..ஆனால் அது எல்லாமே பசியாற்றிய பின்புதான்..... ! வயிறுதான் முதலில் அது நிரம்பிய பின் தான் காசும், பணமும், தேடலும், ஆன்மிகமும், கடவுளும்....

லெளகீகப் பிரதானம் என்னை சொடக்கு போட்டு அழைத்தது... பக்கத்திருந்த சிறிய டீக்கடைக்குள் நுழைந்தேன்....." என்ன வேணும் அண்ணே....? சும்மா இங்கன இருங்க...." என்று இலையை போட்ட படி அந்தக் கடையின் பணியாளி கேட்டவுடன் தான் தெரிந்தது அங்கே உணவும் பரிமாறப்படும் என்று, கேட்டவர் பதிலுக்கு கூட காத்திராமல் கூட்டையும் பொறியலையும் இலையில் வைத்தவுடன்..

பசியின் உச்சத்தில் கையை கழுவ வேண்டும் என்ற படிப்பனையை சுத்தமாக மறந்து போய்.. கூட்டினை எடுத்து ருசிக்கத் தொடங்கினேன்.... சாதமும், பருப்பு சாம்பாரும்....முருங்கைக் காயோடு சேர்த்து பிசைந்து.... கொஞ்சம் கூட்டினை சோற்றுக்குள் பதுக்கி.. கொஞ்சம் ஊறுகாயையும் அதோடு சேர்த்து... வாய்க்குள் வைத்தேனோ.இல்லையோ..அனிச்சையாய் மென்றேன்... தொண்டை வழியே அந்த ஒரு கவளத்தை விழுங்கிய பொழுதில் ஏற்பட்டதே ஒரு திருப்தி அதன் பெயர்தான் கடவுளா?

வயிற்றில் விழுந்த பருக்கைகள் உள்ளே சுரந்த அமிலத்தில் ஆழ்ந்து குடலுக்குள் பரவி....இதோ வந்து விட்டேன் நான் இங்கே என்ன பிரச்சினை என்று கேள்வி கேட்ட நொடியில் ஒரு தம்ளர் நீரும் சேர்ந்து உள்ளே போக....

பருக்கைகள் வேகமாய் செரிக்கபட்டு அதன் சக்தி இரத்ததுக்குள் பாய்ந்து... உடலெங்கும் பரவி சில சுரப்பிகள் உடனடியாய் சோர்விலிருந்து விழித்துக் கொண்டு மூளைக்கு அவசர தகவல் அனுப்ப மூளை.. எல்லாவற்றையும் கண நேரத்தில் வாங்கிக் கொண்டு...உடலை ஒரு உசார் நிலைக்கு கொண்டு வந்தது.

மனம் வேறு ஏதேனும் சுவையாக வாங்கிச் சுவைக்கலாமா? என்று அடிப்படை தேவைக்கு மேலே ஒரு ஆசையை படரவிட்டு அதை செயலாக்க முயன்ற நொடியில் அந்த எண்ணத்தை உற்று நோக்க.. .சிதறி ஓடி ஒளிந்தது....ஆன்மா எல்லாவற்றையும் கிரகித்து அனுபவித்த படி சலனமின்றி பார்த்துக் கொண்டிருந்தது....

உண்டு முடித்த பின்பு எல்லாம் சரிதான் என்றபடி அந்த நிறைவை வெளிக்காட்ட சிறிதாய் ஒரு ஏப்பம்...என்ற ஒன்ரு வெளிப்பட..அந்த நிறைவில்...உணவளித்த அந்த பணியாளிக்கு மன குவித்து நன்றிகள் சொன்னேன். மனம் கேட்டது...எதற்கு நன்றி என்று? அவர் பணம் பெற்றூதானே உணவளிக்கிறார் என்று....

மனமே மீண்டும் ஆழத்தில் ஓடி அதற்கான பதில் கொணர்ந்தது. தொழில்தான்..ஆனால் உணவளிக்கும் தொழில் ஆத்மார்த்தமானது....என்னதான் பணம் பெற்றாலும் அதனால் நாம் பெறும் நிறைவு வெறும் பணத்தால் மட்டும் கிடைக்காது. அதனால்தான் இந்த தொழில் செய்பவகள் ஒரு உயரிய சிந்தனையோடு பரோபகாரத்துடன் இயன்றவரை தரமாக, நேர்மையாக உணவினை வழங்கள் வேண்டும். அதில் கலப்படமோ, தந்திரமோ செய்பவர்கள் விரைவில் அதால பாதாளத்தில் விழுந்து விடுவது தவிர்க்க முடியாதது. பசி பிரபஞ்ச நியதி...அதை தீர்ப்பதில் ஒரு நேர்மை வேண்டும்....

பணம் கொடுத்து விட்டு வெளியில் வந்தேன்....காற்றில் என் நான்கு முழ வேட்டி பட படத்தது....சரி...எங்கே செல்வது அடுத்து? கேள்விக்கு பதிலை கைக்கொள்ளாமல் தொடங்கிய பயணம்தானே....எந்த பேருந்து முதலில் வருகிறதோ.............அதில் ஏறலாம் என்ற தீர்மானித்த நொடியில்..

அதோ ஒரு பேருந்து வருகிறது........ம்ம்ம்ம்ம் அருகே வந்த பேருந்தில் ஏறும் முன் கவனித்தேன்....அந்த பேருந்து கொடைக்கானல் செல்கிறது என்று...


(பயணம் தொடரும்...)


தேவா. S

Friday, January 21, 2011

காற்றினிலே.....!
மொத்தமாய் தேக்கி வைத்திருக்கிறேன்..
உன்னிடம் சொல்லாமல் என்னுள்
அலைந்து கொண்டிருக்கும் காதலை..
இப்போதோ எப்போதோ...சொல்லியேவிடுவேன்
என்ற தீர்மானங்களை எல்லாம்
தின்று செரித்துவிட்டு நகரும்...
நிமிடங்களின் நகர்தலோடு கூட்டு சேர்ந்து
துடிப்பினை அதிகரிக்கிறது என் இதயம்...!

ஒரு வேளை நீ வரலாம்...
என் காதலை கூட நான் சொல்லலாம்...
அதை நீ மறுக்கவும் கூட செய்யலாம்...
கொடுத்தலும் பெறுதலும் தாண்டிய
உணர்வுக்ளின் சங்கமத்தில்...
நிறைந்திருக்கும் நிரந்தர....
காதலை யார்தான் அறிவார்?

***

மறுத்தலுக்கும் சேர்த்தலுக்கும்...
மத்திமத்தில் கிளைத்த உணர்வுகளின்...
வெளிப்பாடாய் ஜனித்திருக்கிறது...
எனக்குள் ஒரு காதல்!
காமம் கடந்த பொழுதுகளில்...
விழித்தெழுந்த காதலின் சுவடுகள்...
தப்பாமல் பதித்திருக்கின்றன..
தன்னின் தடங்களை என் இதயம் முழுதும்!

இன்றோ... என்றோ...
மரிக்கப் போகும் வாழ்வில்மறக்க முடியாத காதலை....
எங்கே கொண்டு செல்லும்...என் ஞாபகங்கள்?

***

ஆச்சர்யமாய் கேட்டாய்
உனக்கு கவிதை எழுத தெரியுமா? என்று
நான் சாதரணமாய் கேட்டேன்..
கவிதையே உனக்கு ஆச்சர்யப்படத் தெரியுமா? என்று...

***

எப்படி வேண்டுமானலும்
என்னை அழை...
ஆனால் காதலை
காதல் என்றுதானே சொல்வாய்?

***

நீயாவது சிரித்து விட்டுப் போ
என் தோட்டத்தில்
பூக்கள்தான் பூக்கவில்லை...!

***


எப்போதாவது
நீ திரும்பிப் பார்ப்பாய் என்றுதான்
எப்போதும்
உன்னையே பார்த்துக் கொண்டிருக்கிறேன்!

***
சப்தமில்லாமல்
என் கவிதையை
கேட்டுவிட்டு ..
நீ புன்னைகைத்தாய்.....
கவிதை காகித்தில்
தோல்வியில் கதறியழுதது!

***

ஒரு கடற்கரை மாலை....
கடல் அலைகள்...
முன்னும் பின்னும்...
புரண்டு கொண்டிருந்தன....
எனக்குள்ளும் உன் நினைவுகள்...!


தேவா. S

Wednesday, January 19, 2011

கேள்வி...?

தன்னை உணர்ந்த ஞானிகள் என்று சொல்பவர்கள் அதாவது ஞானமடைந்தவர்கள் (கௌதம புத்தர் முதல் கொண்டு இன்று இருக்கும் ஜக்கி வாசுதேவ் வரைக்கும்) மக்களை நல்வழிபடுத்த வேண்டும் என்று கிளம்பிவிடுகிறார்களே?. தன்னை உணர்ந்தவனுக்கு இங்கே என்ன வேலை. எதற்காக மக்களை திருத்துகிறேன் என்று கிளம்புகிறார்கள்.

புத்தரிடம் இருந்து கிளம்பிய யாரும் ஒரு ராமசாமியாகவோ, குப்புசாமியாக(அவர்கள் அவர்களாக) ஞானமடைவதில்லை. எல்லோரும் புத்தராக வேண்டும். எல்லோருக்கும் யார் குருவோ அவர்கள் மாதிரியே ஆகவேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறார்கள். நான் அவர்களின் சீடன் என்று சொல்லி பெருமைப்படுகிறார்கள், அவர்கள் சொல்வதை கிரகித்து அதை தத்துவமாக வைத்து அதையே வாழ்க்கையாகவும் கொள்கிறார்கள். இதுதான் தன்னை உணர்தலா?. இப்படி ஒரு கூட்டத்தை வைத்திருக்கத்தான் இவர்கள் தன்னை உணர்ந்தார்களா?.

தன்னை உணர்ந்த ஞானிகள் மக்களை விட்டு விலகி செல்லமாட்டார்களா?

- வேலு


வேலு உங்கள் கேள்வியின் கூர்மை என்னை ஆழமாகவே பயணிக்கவைத்தது.. இதற்கு பதிலை கருத்த்துப் படிவத்திலேயே கூட நான் போட்டிருக்கலாம் ஆனால்.... இதை ஒரு பதிவாக இட்டால் இன்னும் சிலருக்கு போய்ச்சேருமே என்று என் உள்முனைப்பு கூறியதின் விளைவாய் இதை தனிப்பதிவாகவே இட்டுள்ளேன்.

ஞானம் அடைதல் என்னு நிலையை எய்திய பின் ஏன் இவர்கள் மக்களிடம் இருந்து கொண்டு கூட்டத்தை கூட்டிக்கொண்டு இருக்கவேண்டும்...

பிரம்மத்தை உணர்ந்த பின்னரும் பிரம்மத்தின் தேவையாகவே சில பேர்களுக்கு, எல்லோருக்கும் சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அப்படிச் சொல்லகூடிய புத்தர்கள் தாங்கள் போதிப்பதின் சிறப்பினை தனியே எடுத்துக் கொள்வது இல்லை.. அதுவும் ஒரு பிரபஞ்ச நிகழ்வாகவே அமைந்து விடுகிறது. ஆனால் அந்த பிரபஞ்ச தேவை எல்லோரின் மூலமாகவும் செயல்படுத்தப்படுவது இல்லை.... பல நேரங்களில் ஆன்மீக உச்சத்தை அடந்தவர்கள் கூட மனதினைக் கொண்டு வழிநடக்கும் வழுக்கல்களும் சறுக்கல்களும் நிகழ்ந்துவிடுகின்றன....

இஸ்லாத்திலே சொல்லப்பட்டிருக்கும் ஸிராத்துல் முஸ்தகீம் என்ற மெல்லிய மயிரினும் நுண்ணிய (பாலம்)வழி போலத்தான் ஆன்மீகமும் அதன் உச்சநிலையான பரம் பொருளை அடையும் நிலையும் இங்கே போய்ச் சேர்பவர்களை விட வழுக்கி விழுந்து விடுபவர்கள் அதிகம்.

ஜக்கியும், புத்தரும் போதிக்கிறார்கள் அவ்வளவே.. என்னை துதியுங்கள்... என்னிடமே இருங்கள் என்று எதிர்பார்க்கமாட்டார்கள் என்று கொண்டாலும்.. இவர்களை பின்பற்றுவது யார்? சாதாரண மக்கள் இவர்கள்தான் சீராட்டுகிறார்கள் பாராட்டுகிறார்கள் போற்றூகிறார்கள்.. புத்தர்கள் என்று சொல்லக்கூடிய ஞான குருக்கள் பெரும்பாலும் எதனையும் போதிப்பதே இல்லை. மாறாக மனிதன் கொண்டிருக்கும் கற்பிதங்களையும், எதிர்பார்ப்புகளையும் உடைக்கவே முற்படுகிறார்கள்.

இவர்களைப் பொறுத்தவரை ஆன்மீகம் எனப்படுவது பெரும்பாலும் கற்றுக் கொடுப்பது அல்ல மாறக தன்னிடம் வருபவரின் கேள்விகளை அழித்து அவரை இயல்பாக்குவது. ஓஷோ சொல்வது போல ஞானமும், இறைத்தன்மையும் எங்கேயோ இருக்கிறது என்று அதை நாம் தேடி அடைய வேண்டும் என்று எண்ணுவதே தவறு... அது எங்கேயோ இல்லை.. நம்மிடமே இருக்கிறது நாம் செய்ய வேண்டியது எல்லாம் நமது அகக் கண்களை திறக்க வேண்டியது மட்டுமே....!

தத்துவங்களையும், கருத்துக்களையும் தெரிந்து கொண்டு அதை பத்து பேரிடம் சொல்லி தான் பின்பற்றுகிறேன் என்று சொல்பவரை விட.. தன் உள் முனைப்பின் படி வாழத்தெரிந்தவரே.. தன்னையுணர்ந்தவராகிறார். அதே தன்னையுணர்ந்தவர் பிரம்மத்தை உணரவேண்டுமெனில் தன்னை உணர்ந்ததையும் மறக்கவேண்டும்.....தன்னை தன்னுள் வைத்து மட்டும் பார்க்காமால் எல்லாமே தானாய் உணரும் நிலைதான் புத்தரின் நிலை...

பார்வையின் கோணம் மாற்றப்பட்டால் சத்தியம் வெளிப்பட்டே தீரும். இதனால்தான் தன்னில் இருக்கும் ஒன்றை எலோரும் வெளியில் தேடித் தேடி கடைசி வரை அந்த பொருள் கிடைப்பதே இல்லை....தேடும் பொருள்தான் கிடைக்கவேண்டிய பொருளுமாய் இருக்கும் பட்சத்தில்.. அதை வெளியில் தேடி தேடி இல்லை என்ற முடிவுக்கு வந்து விடும் இடத்தில்தான்... தத்துவங்கள் பிறக்கின்றன்....

நன்றாக யோசித்துப் பாருங்கள்....எல்லா தத்துவத்தையும் வைத்துக் கொண்டு நாம் என்ன செய்வது? எல்லாமே குப்பைகள்....சூரியன் உதிப்பதில் என்ன தத்துவம் இருக்கிறது? ஒரு பூ பூப்பதில் ஒரு மழை பெய்வதில், குழந்தை சிரிப்பதில் என்ன தத்துவம் இருக்கிறது? அல்லது அங்கே தத்துவம் தேவைதானா?

புத்தர்கள் எப்போதும்...தன்னைப் போலவே ஒருவரை உருவாக்க முயற்சிகல் கொள்வதில்லை மாறாக...இயல்பாய் மனிதரை இருக்கவைக்க அவர்களைக் கொண்டே அதை செய்ப்பிக்கிறார்கள் ஆனால் பின் பற்றும் மனிதர்கள்தான் அப்படி வேசமிட்டு...அவரைப் போலவே.. இருக்க ஆசைப்படுகிறார்கள். பெரும்பாலான சித்தர்களும், ஞானிகளும் தானே தன்னுள் உணர்ந்து சமாதி நிலை எய்தி பரப்பிரம்மத்தில் பரபிரம்மமாய் கலந்து விடுகின்றனர்... அதுவும் பிரம்மத்தின் நோக்கம்தான்.

இப்படி மக்களுக்கு சொல்லவேண்டிய செயலைச்செய்வதும் பிரம்மமே.....

தன்னை உணர்ந்தபின் மக்களுக்கு சொல்வதும் தனிப்பட்ட உடலின்றி பிரம்மத்தின் நோக்கமாகவே சொல்வது சிலருக்கு அமைகிறது.. - அதுவும் பிரபஞ்ச நோக்கத்தில்

தன்னை உணர்ந்து தானே தன்னில் தானகும் நிலை சிலருக்கு உருவாகிரது - இதுவும் பிரபஞ்ச நோக்கில்...தான்...

மேலே சொன்ன இரண்டிலும் மனித மனம் பெரும்பாலும் விளையாடி விடுவது முதல் நிலையில் அமைந்து விடுகிறது.... அதனால்தான் போலி சாமியார்கள் உருவாக்கம் கொண்டு அதே பிரபஞ்சத்தால் தண்டிக்கவும் படுகிறார்கள்....!

என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்துகொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றை யார் காண வல்லவரோ?
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டேனே!

கேள்வியின் மூலம் ஆழமாய் என்னை அழைத்துச் சென்ற நண்பர் வேலுவிற்கு.. எனது அனேக நம்ஸ்காரங்கள்.


தேவா. S