Pages

Saturday, January 29, 2011

எது தீர்வு.....????


கொதிக்கும் இரத்தத்தோடு தமது உறவுகள் கொல்லப்படுவதைப் பார்த்துக் கொண்டிருப்பது அதுவும் அநீதி என்று தெரிந்தே நெரிக்கப்பட்ட குரல்வளைகளோடு பிதுங்கிய விழிகளோடு சப்தங்கள் எழுப்பக்கூட திரணிகளற்று கிடப்பது.... என்பது நமக்குவழமையாகிப்போய்விட்டது. சகிப்புத்தன்மையையும் விருந்தோம்பலையும் ஜீன்களோடு சேர்த்து கொடுத்துவிட்டுப் போன நமது மூதாதையர்கள் வீரத்தையும்தான் கொடுத்து சென்றிருக்கிறார்கள் என்பதை எப்படி மறந்தீர் தோழர்காள்?

ஒவ்வொரு ஐந்து வருடமும் தேர்தல் வரும் கும்பல் கும்பலாய் கொள்ளைக்காரர்கள் கொடி பிடித்துக் கொண்டு வீடுகள்தோறும் வந்து வாக்குகள் சேகரிப்பார்கள்.

மான ரோசமுள்ள தமிழனும் கொடிபிடித்து, கூச்சலிட்டு தன்னை தொண்டனென்றும் அபிமானியென்றும் உடல் மண்ணுக்கென்றும், உயிர் தன் தன்மானத் தலைவனுக்கென்றும் கொடி பிடித்து கத்தி தானே எல்லாமுமாய் நினைத்து ஒரு குவார்ட்டர் பிராந்தியிலும், கோழி பிரியாணியிலும் தனது உச்ச பட்ச சந்தோசத்தை எட்டி விடுவான் அல்லது கொடுக்கும் பணத்தை நன்றியுணர்ச்சியோடு வாங்கி பாக்கெட்டில் வைத்துக் கொண்டு விசுவாசத்தை வாக்குகளாக்கும் போது தனக்கே ஒரு சவக்குழியை வெட்டி தானே ஒரு ஐந்து வருடங்களுக்கு இறங்கி அமர்ந்து கொண்ட விபரத்தை உணர்ந்திருக்க மாட்டான்...?

கோழி பிரியாணி விடிந்தவுடன் செரித்திருக்கும் கொடுத்த காசும் 3 நாளில் தீர்ந்திருக்கும், மீதமிருக்கும் நாளேல்லாம் ஒரு அடிமை நாயைப் போல கையைக் கட்டிக் கொண்டு ஐயா வாழ்க, அம்மா வாழ்க என்றூ கோசங்களிட்டும் இல்லையேல் அதிருப்தியை மனதில் வைத்துக் கொண்டு ஒரு பிணம் போல வாழ்ந்து கொண்டிருப்பான்.

ஒரு கணம் நில்லுங்கள் சகோதரர்களே...! யார் இந்த மத்திய மாநில அரசுகள்....? கடந்து போன குடியரசு தினத்துக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லையென்றா நினைக்கிறீர்கள் குடிகளே? குடிகளின் அரசு இது... இங்கே ராசாக்களின் ஸ்பெக்ட்ரம்கள் நமது இரத்தம் உறிஞ்சப்பட்ட நிகழ்வுகள் என்றும் நமக்கு ஏன் உறைப்பதில்லை? ஊழலும் அதிகார துஷ்பிரோயோகமும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள ஒரு கேவலமான ஆட்சிக்கு கீழே நீங்களும் நானும் வாழ்ந்து கொண்டிருப்பதற்கு காரணம் ஐந்து வருடங்களுக்கு முன் நாம் செய்த தவறு.

திமிர் பிடித்த ஏகாதிபத்தியத்தின் குணத்தினை தன்னுள் மறைத்து வைத்துக் கொண்டு அதை சூசகமாய் இந்திய மூளைகளுக்குள் செலுத்தி தன் கணவரின் மறைவுக்கு காரணமானவர்களை பொடிப்பொடியாக்கிவிட்டு இன்னும் எந்த மண்ணில் தன் கணவர் மறைவுக்கு காரணமானவர்கள் இருக்கிறார்களோ அவர்களையும் கிள்ளுக்கீரையாக எண்ணும் போக்கு இன்னுமா பிடிபடவில்லை....என் உறவுகளே?

கடலுக்குள் செல்லும் மீனவன் உயிர் வாழ பிழைப்புத் தேடிப் போனானா? இல்லை சிங்கள மிருகங்களின் இயந்திரத் துப்பாக்கிகளுக்கு உணவாகப் போனானா? ஒற்றை உயிர் போவதற்குப் பின்னால் எத்தனை குடும்பங்களின் வாழ்க்கை இருக்கிறது என்று இத்தாலிய மூளைக்கும், இத்தாலிய மூளைகளால் ஆட்சிப்பொறுப்பில் சுகவாசம் காணும் இந்திய கோழைகளுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று ஒத்துக்கொள்ளும் அதே நேரத்தில் தமிழன் பெயர் சொல்லி பிழைப்பு நடத்தும் திராவிட கட்சிகள் என்று தம்மை வரிந்து கொண்டு... தன் வீட்டு சோத்துக்கு உப்பை தமிழனின் கண்ணீரில் எடுக்கும் தழிழக அரசியல், மற்றூம் ஆளும் கட்சிகளூக்குமா உறைக்கவில்லை...?

என்னங்கடா உங்கள் நியாயம்? உங்கள் வீட்டில் விழுந்தால் அதற்கு பெயர் எழவு ஆனால் நித்தம் குருவிகளைப் போலச் சுடப்படும் என் மீனவ நண்பனின் உயிர் போனால் அது செய்தியா? லாப நஷ்டக்கணக்குகள் சர்வ நிச்சயமாய் உம்மை நோக்கியும் திரும்பும் அதிகார வர்க்கமே......அப்போது உமது மரணங்களும் உம்மைச்சுற்றி நிகழும் நிகழ்வுகளும் போதிக்கும்.......வலி என்றால் என்னவென்று....

கடிதங்கள் எழுதியும், தந்திகள் கொடுத்தும் நவீன யுகத்தில் ஒரு விளையாட்டு காட்டி முடித்தது தமிழக அரசு.....விளைவு சில ஆயிரக்கணக்கில் தமிழனின் உயிர் சுட்டுச் சுண்ணாம்பாக்கப்பட்டது.....

வல்லரசு வேசமிடும் இந்திய அரசின் ஒற்றை கண்டிப்பு போதும் இலங்கை அரசினை கண்டித்து மீனவர்களை காப்பாற்ற....ஆனால் வெளியுறவுத் துறை செயலரை இலங்கைக்கு அனுப்பி வைத்து மற்றொமொரு கேணத்தனமான அரசியலை நடத்துகிறது மத்திய அரசு....

இந்தமுறை நமது குறிகள் தப்பக்கூடாது உறவுகளே.....! தமிழகக் கட்சிகள் இவற்றையும் அரசியலாக்க திட்டமிட்டு..வாக்கு சேகரிக்கும் உத்தியாக மாற்றும் அபாயமுமிருக்கிறது...சரியான தீர்வை எட்டி நிரந்தரமாய் நம் சகோதரர்கள் மீன் பிடிக்க ஒன்றும் நிகழவில்லையெனில்...

வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை புறக்கணித்துதான் ஆகவேண்டும்.....! கடுமையான முடிவுதான்.......எல்லோரும் ஒருமித்து செயல்படுவது கடினம்தான்.......ஆனால்....இப்படிப்பட்ட நிகழ்வுகளை நிகழ்த்தினால்தான்........நாம் குடிகள்......இந்த தேசமும் குடியரசு தேசம்.....!

மறைந்து போன மீனவ தோழர்களுக்கு ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலிகளும்....இனி இதுபோன்ற நிகழ்வுகள் நிகழா வண்ணம் தடுக்கும் படி அரசை வலியுறுத்தியும் இந்தக் கட்டுரை வெளியிடப்படுகிறது.


தேவா. S
12 comments:

சௌந்தர் said...

வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை புறக்கணித்துதான் ஆகவேண்டும்.....! கடுமையான முடிவுதான்.......எல்லோரும் ஒருமித்து செயல்படுவது கடினம்தான்.......ஆனால்....இப்படிப்பட்ட நிகழ்வுகளை நிகழ்த்தினால்தான்........////


மீனவர்களை கொலை செய்வது கொடுமை தான் ஆனால் தேர்தலை புறக்கணிப்பது சரியான முடிவு இல்லை நமக்கு இருக்கும் ஒரே ஆயுதம் வாக்கு ஒன்று தான் நாம் தேர்தலை புறக்கணித்தால் என்ன நடக்கும் என்று நீங்கள் நினைகின்றிங்கள்......இங்கு இந்தியாவில் 20 பேர் வாக்கு அளித்து அதில் ஒருவர் 11 வாக்கு பெற்றாலும் அவர் தான் வெற்றி பெற்றவர் அதனால் தேர்தலை புறக்கணிப்பது சரியான முடிவு அல்ல

dheva said...

செளந்தர்..@ தீர்வுகள் எட்டப்பாடத பொழுது ஒரு மாநிலமே வாக்குகளிக்க மறுக்குமெனில்... அது மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்....

நடக்குமென்று தோன்றவில்லை..ஆனால்...இன்று விதைத்தால் என்றாவது நடக்கும்...! வேறு என்ன ஆயுதம் இருக்கிறது நம்மிடம்......வாக்கு என்ற ஆயுதம் தவிர....

sakthistudycentre-கருன் said...

இன்று விதைத்தால் என்றாவது நடக்கும்...! வேறு என்ன ஆயுதம் இருக்கிறது நம்மிடம்......வாக்கு என்ற ஆயுதம் தவிர....///உங்கள் நம்பிக்கை வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

Madhavan Srinivasagopalan said...

சூழ்நிலை புரிகிறது.. ஒப்புக்கொள்ள முடியாத இழப்பு, மனிதா வர்கத்திருக்கு.. முக்கியமாக தமிழ் நாட்டவருக்கு..

சிக்கலான விஷயம்..
யோசிச்சு மூவ் பண்ணனும்..
எடுத்தன் கவிழ்த்தேன்.. உதவாது....

சுபத்ரா said...

I completely go with your idea Dheva sir...

இதே நம் வீட்டில் இப்படி ஒன்று நிகழ்ந்திருந்தால் நாம் என்ன செய்திருப்போம்? அதுவும் இது ஒரு முறை இருமுறை அல்ல.. தொடர்ந்து நிகழ்ந்துவரும் இந்த Barbarian Activities-க்கு என்ன தான் தீர்வு?

If the govt is not ready to take any fruitful measure for these kind of genocides, why the hell have we voted for it?? Ultimately, we are the fools..

//...சரியான தீர்வை எட்டி நிரந்தரமாய் நம் சகோதரர்கள் மீன் பிடிக்க ஒன்றும் நிகழவில்லையெனில்... வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை புறக்கணித்துதான் ஆகவேண்டும்.....!//

No other go...

எஸ்.கே said...

நம்மைப் போல் மற்றவர்களையும் சமமாக நினைத்தால் அவர்களின் வாழ்க்கை மற்றும் உயிரின் மதிப்பு புரியும்!

வைகை said...

சௌந்தரின் கருத்துதான் என்னுடையதும்! தேர்தலை புறக்கணித்தால் அதுவே அவர்களுக்கு வசதியாக போய்விடும்!

இம்சைஅரசன் பாபு.. said...

உங்களின் ஆதங்கம் சரி தான் அண்ணா ...........இவர்களுக்கு ஓட்டு போட்டு போட்டு ஓட்டாண்டியாக ஆனது தான் மிச்சம் .....இந்த மடம் போய் சந்த மடம் என்ற கதையாக மாறிவிட்டது ........மாற்றி ஓட்டு போட்டாலும் நடப்பது நடக்க தான் செய்யும் .......புரட்ச்சி ஒன்றே வழி......இன்னொரு மிசா காலம் நம் இந்தியாவிற்கு இப்பொது தேவை என்றே எண்ணுகிறேன் .....வரும் கூடிய விரைவில் .....வந்தே தீரும் ......

வினோ said...

இன அழிப்பின் இன்னொரு பரிமாணம்... :( இந்த கொடுமை எப்போ மாறும்...

Kousalya said...

//இன்னும் எந்த மண்ணில் தன் கணவர் மறைவுக்கு காரணமானவர்கள் இருக்கிறார்களோ அவர்களையும் கிள்ளுக்கீரையாக எண்ணும் போக்கு இன்னுமா பிடிபடவில்லை...//

ஒருவரின் சாவுக்கு இத்தனை பலிகள் போதாதா...?! சீக்கியர்கள் ஒரு படுகொலை புரிந்தார்கள் என்பதற்காக அவர்கள் யாரும் இந்த அளவிற்கு பழிவாங்க படவில்லை... :(

இணையத்தின் மூலமாக பரவி கொண்டிருக்கும் இந்த நெருப்பு நிச்சயம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தாமல் அணையாது....

நீங்கள் சொல்வது போல் தேர்தலை புறக்கணிக்கவும் இனி தமிழன் தயங்க மாட்டான் என்று தோன்றுகிறது...

உங்கள் பதிவிற்கு என் நன்றிகள்.

சே.குமார் said...

ஒன்று படுவோம்...
வென்று காட்டுவோம்..!

Radha said...
This comment has been removed by the author.