Pages

Tuesday, July 23, 2013

தப்புத்தாளங்கள்...!எதேச்சையாக சானல்களைத் திருப்பிக் கொண்டிருந்த போது ஜெயா டிவியில் தப்புத்தாளங்கள் படம் ஓடிக் கொண்டிருந்தது. ரொம்ப நாளுக்கு முன்னால் அந்தப் படத்தைப் பார்த்தபோது எனக்கு  சுத்தமாய் பிடிக்கவில்லை. அதுவும் ரஜினியை அழுது வடிந்து கொண்டு திரையில் பார்க்க எந்த ரஜினி ரசிகனுக்குத்தான் பிடிக்கும் சொல்லுங்கள்...? இப்போது பாதிக்கு மேல் படம் ஓடி இருந்தாலும் பரவாயில்லை என்று பாதியிலிருந்து படத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தேன்.

வாழ்க்கைக்கு என்று ஒரு ஒழுங்கு கோட்பாட்டினை வரையறுத்து அந்த மாய நெறிமுறைகளுக்கு கட்டுப்படாதவர்களை கெட்டவர்களாய் பார்க்கும் சமூக மாண்பினை உருவாக்கியது யார் என்று தெரியவில்லை. வாழ்க்கையைத் திரைப்படங்கள் பிரதிபலித்துக் காட்டும் அதே நேரத்தில் வாழ்க்கைக்கான நீதிகளையும் அவைபுகட்ட வேண்டும் என்ற நியதியைத்தான் தமிழ் சினிமா எப்போதும் வரையறுத்து வைத்திருக்கிறது. கதாநாயகனை நல்லவனாகக் காட்டவேண்டும் என்ற காரணத்திற்காகவே வில்லன் தரப்பு நியாயங்களை இயக்குனர்கள் ஒளித்து வைத்து விடுவார்கள். தமிழ் சினிமா ரசிகனின் மனப்பாங்கு கட்டுப்பாடுகளுக்குள் நிறுத்தி வைக்கப்பட்டு அறிவு புகட்டிக் கொண்டிருந்த போதுதான் பாலசந்தர் சார் போன்றவர்கள்...

இயக்கவிதி என்பது ஒரே திசையில் பயணிப்பது மட்டும் அல்ல. தேவைப்பட்டால் எதிர் திசையில் பயணிப்பதும் கூட என்று தைரியமாய் சொல்லத் தொடங்கினார்கள். நேர், எதிர் என்பது வெறும் வாசகங்கள்தானே அன்றி நேர் என்று நான் சொன்னவுடன் நேர் என்பது சரி என்றும் எதிர் என்பது தவறு என்றும் கருதி விடாதீர்கள். பலநேரங்களில் நேர் என்பது தவறாகவும், எதிர் என்பது சரியாகவும் இருந்து விடுகிறது. இயற்கை அதற்கான எல்லா சாத்தியக்கூறுகளையும் தன்னிடத்தே வைத்துக் கொண்டுதான் இருக்கிறது.

உறவுகள் என்பதை நேர்கோட்டில் சிந்தித்து ஒழுக்க நெறிகளை சமைத்து வைத்தவர்களின் புத்திகளை கொஞ்சம் அல்ல நிறையவே சீண்டிப்பார்த்தார் பாலசந்தர் சார். அதனால்தான் தன்னை அடையத் துடிப்பவனை வஞ்சம் தீர்க்க அவன் தந்தையின் கரம் பற்றினாள் அவரின் கதாநாயகி. விருப்பத்தின் பேரில் சுதந்திரமாய் இயங்குதல்தான் வாழ்க்கை என்று நம் சமூகத்திடம் சொன்னால் கலாச்சார கத்தி கொண்டு என் குரல்வளையை அறுக்கத்தான் வருவார்கள். காதல் என்ற பெயரில் செய்யும் அடக்குமுறைகளைத் தாங்க முடியாமல் வீட்டை விட்டு வெளியேறி புதிதாய் ஒருத்தியின் துணையைத் தேடிக் கொண்டவனின் சுதந்திர சுவாசத்தைத்தான் புதுப்புது அர்த்தங்களாக்கி கொடுத்தார் பாலசந்தர் சார்.

திருமணத்துக்குப் பின் வேறு ஒரு நேசம் என்பதை ஒழுக்க நெறியல்ல என்று கற்பித்த நாடக சமூகத்தின் முகத்திரையை தைரியமாய் கிழித்தெறிந்த கதையை திரையில் பார்த்துக் கைதட்டிய எத்தனை பேருக்கு நிஜத்தில் அதை ஏற்றுக் கொள்ள இயலும்? நேர்கோட்டில் பயணிக்கும் உறவுகளின்  உணர்வுகள் ஏற்ற இறக்கமாகவோ அல்லது எதிர் திசையிலோ பயணிக்கும் போது அதை நாம் ஏற்றுக் கொள்வதில்லை. வாழ்க்கை அர்த்தங்கள் கூடியதாய் இருக்கவேண்டும் என்பதுதான் நமது எதிர்பார்ப்பாய் இருக்கிறது... ஆனால் அது எந்த வித அர்த்தமும் அற்றதாகவே நிஜத்தில் இருக்கிறது.

திருடிப் பிழைக்கும் ஒரு ரெளடியும், பல  ஆண்களோடு படுத்து எழுந்திருக்கும் விபச்சாரம் செய்யும் ஒரு பெண்ணும் இந்த சமூகத்தின் நேர்கோட்டுப் பார்வைக்கு முரணானவர்களாகத் தெரிந்தாலும்...கரடுமுரடான சிக்கலான ஒரு அப்ஸ்ட்ராக்ட் ஓவியத்தில் படர்ந்து கிடக்கும் அத்தனை அழகும் அவர்களது வாழ்க்கைக்குள் ஒளிந்து கிடக்கத்தான் செய்கிறது. தப்புத்தாளங்கள் என்ற பெயரை படத்துக்கு வைத்திருந்தாலும் தாளத்தில் என்ன தப்பு, சரி வேண்டி கிடக்கிறது..? முறையான சங்கீதம் மட்டும்தான் இசை என்று மட்டுப்பட்ட மனிதர்கள் வேண்டுமானால் சான்றிதழ்கள் கொடுத்துக் கொள்ளலாம்...ஆனால் இயற்கையில் இசை என்பது சப்தம். நீங்கள் விரும்பிய தாளக்கட்டுகளும் இராகங்களும் மட்டுமே இசை அல்ல, உங்களால் விரும்பப்படாத அபஸ்வரங்களுக்குள்ளும் அழகிய ஸ்வரங்கள் ஒளிந்து கிடக்கத்தான் செய்கின்றன. என்ன ஒன்று நமக்கு எது பிடிக்கவேண்டும் என்பதை நாம் எப்போதும் தீர்மானிப்பதில்லை, அதை இந்த சமூகத்தின் கையிலிருந்துதான் நாம் எப்போதும் பெற்றுக் கொண்டிருக்கிறோம்.

திருட்டுத் தொழிலை விட்டு விட்டு, ஒரு விபச்சாரியோடு சேர்ந்து வாழ முனைபவனின் மனதில் என்ன மாதிரியான எண்ணக் கோடுகள் இருந்திருக்க முடியும்..? வாழ்க்கையின் உச்ச ரகசியமாய், உன்னத உறவாய் தாம்பத்யம் கற்பிக்கப்பட்டிருக்கையில் பல ஆடவர்களுடன் தன் உடலை பகிர்ந்து கொண்டவளின் மனதில் எந்தக் கணத்தில் காதல் என்னும் விதை விழுந்திருக்கக் கூடும்...? உடலை இச்சையோடு ஒருவன் தீண்டுகையில் அங்கே காதல் என்ற ஒன்று சேர்ந்தே இருக்குமா...? இல்லை பிரிந்து கிடக்குமா? வயிற்றுப் பிழைப்புக்காய் உடலின் அவயங்களை வாடகைக்கு விட்டுப் பிழைப்பவளுக்குள் பூக்கும் காதல் பரிசுத்தமானதுதான் என்று சொல்லாமல் சொல்ல முனைந்திருக்கும் இந்த தப்புத்தாளங்கள் எனக்குள் மேலே சொன்ன அத்தனை கேள்விகளையும் தப்பாமல் கேட்டது.

உடலைப் பலருடன் பகிர்ந்து  கொண்டதாலேயே அவள் யாரையும் காதலிக்கத் தகுந்தவளில்லை என்ற சமூகத்தின் சாக்கடைச் சிந்தனைகளையும், கற்பாறைப் புத்திகளையும் உடைத்து எறிய முயன்றிருக்கும் இயக்குனர் அப்படி ஒரு வாழ்க்கையை வாழ நேற்படுமெனில் என்ன மாதிரியான முடிவினை எடுப்பார் அல்லது நான் அந்த இடத்தில் இருந்தால் என்ன மாதிரியான அனுபவமாய் அது இருந்திருக்கும்  என்ற ஒரு கேள்வியும் என்னை துளைத்து எடுத்துக் கொண்டிருந்தது. குறைந்த பட்சம் கற்பனையாகவாவது எழுதிப் பார்க்க வேண்டும் என்றும் தோன்றியது. நிர்ப்பந்தத்தின் பெயரால் ஏற்படும் உறவுகளுக்கும் நேசத்துக்கும் யாதொரு பந்தமுமில்லை என்ற மனோதத்துவ தீர்வினை தப்புத்தாளங்கள் சரியாகத் திரையில் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தது.

எத்தனையோ ஆண்களின் தீண்டல்களைக் கடந்து அவள் முதல் முதலாய் கருவுற்ற கணத்தில் முகத்தில் படரும் சந்தோஷ ரேகைகள் அதுவரை அவள் வாழ்ந்து வந்த வாழ்க்கைக் கரைகளை எல்லாம் கண நேரத்தில் அழித்துத்தான் போட்டு விடுகிறது. சரிதா இயல்பிலேயே நல்ல நடிகை, திருத்தமான அழகும் கூட.....! அழுகையையும், சிரிப்பையும் பிசைந்து உணர்வுகளை வெளிப்படுத்தி திரைக்கு வெளியே நமது மனதுக்குள் வெகு லாவகமாய் வந்து விடக்கூடிய அபார ஆற்றல் கொண்டவர். இந்தப் படத்தில் சரசுவாகவே வாழ்ந்திருப்பார்....ரஜினியும் தான்..!


சமூகத்தின் பார்வையில் முரண்பட்டுப் போயிருந்த இரண்டு உயிர்கள் காதல் என்னும் ஒரு கோட்டில் இணைந்து தங்களின் நேரான இயக்கத்தை சமூகத்தின் முரண்பட்ட கோட்பாடுகளுக்கு இணையாகக் கொண்டு வந்து வாழ முற்படும் போது இந்த சமூகம் அவர்களை சக மனிதர்களாக ஏற்றுக் கொள்ளவில்லை. ரெளடி ஒரு விபச்சாரியை மணந்து கொண்டு தங்களைப் போலவே நடிக்க வருவதை எந்த சமூகம் இந்த உலகத்தில் ஏற்றுக் கொள்ளும் சொல்லுங்கள் பார்க்கலாம்...?

இந்த சமூகத்தின் தேவை திருந்திய அல்லது திருத்தமான மனிதர்கள் கிடையாது. அதற்கு எப்போதும் தம்மைச் சுற்றி குறைகள் நிகழ்ந்து கொண்டே இருக்கவேண்டும் தேடிப்பிடித்து அதில் குற்றம் கண்டு பிடித்து அங்கே தங்களின் நாட்டாமை நகங்களை வைத்து கீற வேண்டும். இதுதான் இந்த சமூகத்தின் தேவை. ஒழுக்க நெறிகளைப் போதிக்கிறேன் என்று நீதி வழங்கும் நிகழ்ச்சி ஒன்று 'சொல்வதெல்லாம் உண்மை' என்ற பெயரில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் நடத்தி வருகிறார்கள்.

அதில் ஒரு நிகழ்ச்சியில் 24 வயது பையன் ஒருவனுக்கு 45 வயது கொண்ட பெண்ணோடு உறவு ஏற்பட்டு விடுகிறது. அந்தப் பெண்ணின் கணவர் இறந்து போய் பத்து வருடங்களுக்கு மேல் ஆகி இருக்கிறது.  24வயது பையன் ஏதோ ஒன்றில் ஈர்க்கப்பட்டு எல்லாவிதத்திலும் அந்தப் பெண்ணோடு ஒன்றிப் போய் விடுகிறான். சமூகத்தின் முன்பும் அவனைப் பெற்றவர்கள் முன்பும் ஒரு குற்றவாளி ஆகி விடுகிறான். அந்தப் பெண்ணும் குற்றவாளி ஆகி விடுகிறார். நிகழ்ச்சியை நடத்துபவர் மட்டுமன்றி அதை பார்த்துக் கொண்டிருக்கும் அத்தனை பேரின் நேர்க்கோட்டுச் சிந்தனையிலும் இது தவறாகத்தான் தெரிகிறது.

நீங்கள் பிரிந்து சென்று விடுங்கள் என்று தீர்ப்பு சொல்லும் அந்த நீதிபதிக்கு சமூகம் போட்டு வைத்திருக்கும் வரைமுறைக் கோடுகள் மீதுதான் அக்கறையே அன்றி....அந்த பையனுக்கும் பெண்ணுக்கும் இடையே வளர்ந்து நிற்கும் நேசத்தைப் பற்றி ஒரு கவலையும் கிடையாது. இது எப்படி சரி ஆகும்... ?

சரி தவறுகளை நிர்ணயம் செய்ய எதன் உடனும் எதையும் நாம் ஒப்பீடு செய்ய வேண்டிய அவசியம் இல்லைதானே? ஒருவர் செய்யக் கூடிய செயலால் வேறு எந்த மனிதருக்கும் பாதிப்பில்லை எனும் போது அது எப்படி தவறாகும்? மேலும் சரி தவறுகளை நிர்ணயம் செய்வது  சூழல்கள்தானே அன்றி...விதிமுறைகள் கிடையாது. கண்கள் இல்லாதவனுக்கு கனவுகள் எப்படி வரும் என்று கேட்பவர்களுக்கு, கண்கள் இல்லாதவர்களின் உலகத்தில் என்னவெல்லாம் இருக்கும் என்று தெரிய வேண்டுமானால் நிஜத்தில் இன்னொரு பிறவியில் அவர்கள் குருடராய் பிறந்தால்தான் முடியும்....

அப்படி இல்லாமல் எதைச் சொன்னாலும்  அது, அது போலத்தான் இருக்குமே அன்றி அது, அதுவாக இருக்காது. தப்புத்தாளங்களில் கூட அப்படித்தான் சமூகம் ஒரே சீராய் நடித்துக் கொண்டிருக்கையில் தங்களின் சூழலின் படி  வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்களின் வாழ்க்கையில் எதேச்சையாய் ஒரு பூ பூத்து விடுகிறது. அந்தப் 'பூ' இந்த சமூகம் நடித்து, நடித்து பெறுவதற்காய் தவம் கிடக்கும் ஒரு அரிய 'பூ'. அந்தப் பூ எப்போது நாடகத்தன்மை ஒழிந்து போகிறதோ அப்போதுதான் பூக்கும் என்பதை இந்த சமூகம் ஒரு போதும் அறிந்திருக்கவில்லை. அந்தப் பூவுக்காகத்தான் இவர்களின் ஒழுக்க நெறிகளே சமைக்கப்பட்டது. ஆனால் ஒரு போதும் அவர்களின் வாழ்க்கையில் 'பூ' பூக்கவே இல்லை. அப்படி பூக்காமல் இருப்பதற்கு காரணம் இவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் கட்டுப்பாடுகள் நிறைந்த ஒழுக்க முறைகள்தான் என்று ஒரு போதும் அவர்கள் அறிந்திருக்கவும் இல்லை.

உனக்கு என்னை மட்டும், எனக்கு உன்னை மட்டுமே பிடிக்க வேண்டும் என்ற சர்வாதிகாரத்தில் ஒரு ' பூ ' பூத்ததாய் கற்பிதம் செய்து கொள்கிறார்களே அன்றி ஒரு போதும் அப்படி ஒரு பூ அவர்களின் வாழ்க்கையில் பூப்பதே இல்லை.

தப்புத்தாளமாய் ஒரு ' பூ' பூத்து விட....பொறாமைக்கார சமூகத்தால் மிதித்து நசுக்கி அந்தப் ' பூ ' சிதைக்கப்படுவதோடு....படம் முடிந்து விடுகிறது. படம் முடிந்து வெகு நேரம் ஆகியும் ஸ்தம்பித்துக் கிடந்த மனதில் தோன்றியது ஒன்றுதான்.....

ஏன் பாலசந்தர் சார் இப்போதெல்லாம் இப்படி படம் எடுப்பதே இல்லை...?அல்லது ஏன் அவரை மாதிரி மாதிரி படம் எடுக்க இப்போது ஆளே இல்லை...? ....என்பது மட்டும்தான்....தேவா சுப்பையா...

Sunday, July 14, 2013

ஆழிசூழ் உலகு...!துரோகச் சாம்பல்கள்
குவிந்து கிடக்கும்
மயானத்திலிருந்து
கேட்கும் அவலக் குரல்கள்
அநீதிகளின் வெற்றியாயிருக்கலாம்...!

நச்சினை விதைத்து
ப்ரியங்களை அறுவடை செய்யும்
நாடகங்களில்
ராஜலங்கராம் செய்யப்படும்
ஓநாய்கள் சிங்கங்களைப் போல
கர்ஜித்து இடும் ஊளைகளுக்கு
நடுவே எரியும்
பிணத்தை தாலாட்டஒருவருமில்லை..!

பால்குடிக்கும்
முலைகளை அறுக்கும்
குரோதப் பிசாசுகள்
சொல்லிக் கொண்டிருக்கும்
ஞானக்கதைகளை கேட்டபடியே
சிலுவையிலறையப்படும்
தேவனைக் கடவுள் என்றும்
சொல்லக் கூடும், ஒருவேளை
ஞாபகமாய் அவர் மூன்றாம் நாள்
உயிர்த்தெழுந்தால்...!

முள் கிரீடங்கள்
சூட்டிக் கொண்டு
வலம் வரும் சாத்தான்களுக்கு
நடத்தப்படும் வழிபாடுகளில்
சிரச்சேதம் செய்யப்படும்
கடவுளர்களின் கடைசி ஆசைகள்
கண்ணீராய் வழிந்தோடி நிறைந்த
இடங்களெல்லாம் கரித்து
நிறைந்து கிடக்கிறது..
ஆழிசூழ் இவ்வுலகு..!


தேவா சுப்பையா...Friday, July 12, 2013

யாருமற்ற பொழுதுகள்..!

தெரியாது
என்ற வார்த்தையோடு
நான் முடித்துக் கொண்டேன்
என்று நினைக்கையில்
ஏன் தெரியாது
என்று எப்போதும்
யாரோ தொடங்கி வைக்கிறார்கள்
ஒரு வாழ்க்கையையோ
அல்லது உரையாடலையோ...!

அறியாத பக்கங்களை
எல்லாம் நுனி மடக்கி
யாராவது கொடுத்து
வாசிக்கச் சொல்கையில்
வேண்டாம் என்று...
உதடு பிரிக்கும் முன்பே
திணிக்கப்படுகின்றன
விஷயக் குப்பைகள்..!

எல்லாம் மறுத்து
விசய ஞானங்கள் அறுத்து
நச்சாய் நினைத்து ஒதுக்கி...
மெல்ல சுருண்டு
ஒடுங்கி ஜன்னலரோப் பேருந்தில்
வேடிக்கைப் பார்க்கும்
முகமற்ற பயணியாய்
பயணிக்கவே எப்போதும்
விரும்புகிறது மனது...!

செய்திகளோடு வருபவர்களை
எல்லாம் தூர நிறுத்தி
திருப்பி அனுப்பி...
புன்னைகையோடு வரும்
மனிதர்களை மட்டும் சேர்த்து
வார்த்தைகள் இல்லாமல்
என்னோடு வாசம் செய்யுங்கள்
என்ற கட்டளையை
கண்களால் இட்டு
மெளனத்தை பகிர்ந்து
நகரும் என்
இருட்டு பொழுதுகளில்
வெளிச்சமில்லை என்று
சொல்பவர்களுக்கு
எப்படி  தெரியும்...
இருளில் ஜனித்ததுதான்
வெளிச்சமென்று...!


தேவா சுப்பையா...
Monday, July 8, 2013

சிங்கம் 2 வோட நிறுத்திக்குங்க ப்ளீஸ்...!

வூட்டுக்குள்ள குடும்பத்துல இருக்க அம்புட்டுப் பேரையும் வச்சுப் பூட்டிப்புட்டு, துப்பாக்கியவும் விவேக்கிட்ட கொடுத்துப்புட்டு...தக்குணூன்டு சூர்யா இருபது முப்பது பேரை பிரிச்சு மேயுறாரு பாருங்க ச்சும்மா சொல்லக்கூடாது சூர்யா ரொம்பவே மெனக்கெட்டு இருக்காப்ல....! அதுலயும் பாருங்க உசரமான ஆளுகள அடிக்க எம்பி எம்பி அந்த தம்பி போடுற சண்டை க்ளாஸ்தான் போங்க....! 

ஹலோ....ஹலோ....ஹலோ ஒக்க செகண்டு....படம் புடிக்கலேன்னா பாக்காம போகவேண்டியதுதானேன்னு கேக்குறீங்களா? டோரண்ல படம் ரிலீஸ் ஆன அன்னிக்கே படத்தை ரிலீஸ் பண்ணாம நிறுத்தச் சொல்லுங்க, நான் நிறுத்துறேன் அப்புறமா..! காசு கொடுத்து பாத்த படத்துல லாஜிக் இருக்கோ இல்லையோ இரண்டே முக்கால் மணி நேரம் விறு விறுப்பா இருந்துச்சுன்னு சொல்லிட்டு விமர்சனம் எழுதி, படத்தை ஆகா ஓகோன்னு புகழ்ந்துட்டு இருக்காங்களே அவங்கள நிறுத்தச் சொல்லுங்க முதல்ல அப்புறம் நான் நிறுத்துறேன்...

படம் என்ன கண்றாவியா இருந்தாலும் சரி குப்பைக் கதையா இருந்தாலும் சரி படத்துல வர்ற ஹீரோ காட்டுக் கத்தலா கத்தி தொடை தட்டி, கர்ஜிச்சு, நம்ம நாடி நரம்பு எல்லாம் புடைச்சு உடம்புல ச்ச்சும்மா ரத்தம் ஜிவ்வுன்னு சூடேறினா போதும்னு நினைச்சு தியேட்டர்ல கை தட்டி விசிலடிச்சு படம் பாக்குறானே ரசிகன் அவன நிறுத்தச் சொல்லுங்க நான் நிறுத்துறேன்...

அவ்வளவு ஏன் சார்...? படத்துக்குப் படம் ஏதாச்சும் ஒரு வேசம் கெடச்சா நடிச்சி ஒப்பேத்தலாம்னு ஒரு போலிஸ்காரன் கேக்குறான்றதுக்காக சட்டத்தை எல்லாம் மாத்தி வளைச்சு, ஒரு சி.எம்ம நைட்டோட நைட்டா கன்வினியன்ஸ் பண்ணி ஆப்பரசேன் டி....ஒரு திட்டத்துக்கு அப்ரூவ் கொடுத்து ச்சும்மாவே சீறிக்கிட்டு இருந்த மிஸ்ட்டர் துரைசிங்கம் டிஎஸ்பிக்கு இன்னும் சூடு வைக்கிறாரே....அப்பாவி மந்திரி விஜயகுமார் அவரை நிறுத்தச் சொல்லுங்க நான் நிறுத்துறேன்...! 

திருநெல்வேலி மாவட்டத்துக்காரர் ஆன ரகுமான் தமிழ் பேசும் போது மலையாள வாசனையோடயே இழுத்து, இழுத்துப் பேசலாம் அதை நீங்க ஒத்துக்கிட்டுப் பாப்பீங்க..., பன்னெண்டாவது படிக்கிற பாப்பா...மூணு தலைமுறையா போலிஸ்ல வேலை பாக்குற துரை சிங்கம் சார டாவடிக்கிறத ஒத்துக்குவீங்க..., சந்தானம் அறுக்குற அறுவையே தாங்லேன்னு இருக்கும் போது, விவேக்கையும் கூட சேத்து உப்புக்குச் சப்பாணியா ஓட விட்டத ஒத்துக்குவீங்க....

பைக்ல வர்றவன் பைக்க பிடிங்கி பைக்குக்கு பின்னால வர்றவங்கள எல்லாம் பைக்காலயே அடிக்கிறத பாத்துட்டு கை வலிக்க கை தட்டுவீங்க, நான் இன்னாட படம் இதுன்னு எழுதுனா விறு விறுப்பு இருந்துச்சா இல்லையான்னு என்னை எதிர் கேள்வி கேப்பீங்க அப்டிதானே..? இருந்துச்சு சார் விறு விறுப்பு இருந்துச்சு....

முந்தா நாள் நைட் டாஸ்மாக்க  க்ராஸ் பண்ணி நான் போயிட்டு இருந்தப்ப ரெண்டு பேரு குடிச்சுட்டு கைலிய வலிச்சு கட்டிக்கினு நடு ரோட்ல புரண்டு கிட்டு இருந்தத பாத்தப்ப எனக்கு விறு விறுப்பா இருந்துச்சு....., ஏசி தியேட்டர்ல ஏண்டா ஏசி போடலேன்னு ரெண்டு பேரு ஆப்பரேட்டர அடிக்க போனதை பாத்தப்ப ரொம்ப விறு விறுப்பா இருந்துச்சு, இன்னும் சொல்லப் போனா...ராஜ்ய சபா தேர்தல்ல ஓட்டுப் போடுறதுக்கு மட்டும் சட்டசபைக்குப் போன கலைஞர பாத்தா விறு விறுப்பா இருந்துச்சு....,  தோக்கப்போறமுன்னே தெரிஞ்சு வேட்பாளர நிப்பாட்டிப் புட்டு ஓட்டுப் போடுறதுக்கு முன்னாடி பண்ருட்டியார் கிட்ட டவுட் கேட்டு அப்புறம் ஓட்டுப் போட்ட விஜயகாந்த பாத்தாலும் விறு விறுப்பா இருந்துச்சு..., 

எதிர் கட்சி எம்.எல்.ஏக்கள் ஏழு பேரை டாகல்டி பண்ணி தன் பக்கம் இழுத்து ராஜ்ய சபா தேர்தல்ல மேக்ஸிமம் எம்பிக்கள பேக் அப் பண்ணிட்டு....கொடநாட்டுக்கு ரெஸ்ட் எடுக்கப் போன சி.எம் அம்மாவ பாத்தப்பவும் விறு விறுப்பா இருந்துச்சு...., சாதிப் பேரச் சொல்லி காதல் ஜோடிகள பிரிச்சு அநியாயமா இளவரசன கொன்னங்களே அவனுங்கள நினைச்சப்பா எனக்கு உயிரே போய்ட்டு திரும்ப வந்துச்சு....

நான் தெரியாமத்தான் கேக்குறேன் தங்கத் தமிழர்களே....ஒங்க வாழ்க்கையில ஒரு விறு விறுப்பும் இல்லேன்னு சொல்லிட்டா மூணாவது சீன்லயே யாரு வில்லன்னு நமக்கெல்லாம் தெரிஞ்சு போய்ட்ட இன்டர்நேசனல் ஸ்மக்ளிங் டான் டானிய பிடிக்க படாத பாடு படுற துரை சிங்கம் சாரை பாக்கப் போனீங்க....? இல்லை சென்டிமென்ட் வேணும்னே விருப்பப்பட்டு அந்த பாவி மக ஹன்சிகாவ சாகடிச்ச ஹரி சாரோட டைரக்சன் சூப்பர்னு சொல்லி பாக்கப் போனீங்க...?

சிங்கம் 2 ல வர்ற மாதிரி ஒரு போலிஸ்க்கார் நிஜ வாழ்க்கையில் நம்ப முன்னாடி வந்து நான் சொல்றதுதாண்டா மவனே சட்டம்...எனக்கு அரசியல்வாதி சப்போர்ட் இருக்குன்னு சொன்னா ஏத்துக்கிடுவியளா மக்களே...? ஏதோ ஹரி சார் நல்லவரு, அவர் படத்துல நடிக்க வந்த அண்ணன் சூர்யாவும் நல்லவரு....அவுங்க கடத்தல்காரங்கள பிடிக்க......அதிகாரத்தைக் கையிலெடுத்தாங்க.....அது சினிமா கையத் தட்டி பாத்தோம்...நெசத்துல அப்படி ஒரு ஆபிசரு வந்த நல்லா இருக்குமா மக்களே...? இதுல என்ன கொடுமைன்னா தமிழ் சினிமாவுல ஹீரோவா வர்ற போலிஸ தவிர பாக்கி அம்புட்டு போலிஸுமே கெட்டவங்கெளாவே இருக்கறதுதான். போலிஸ் டிப்பார்ட்மெண்ட்க்கு கெளரவம் சேக்குற படமா இது...? ஒரு போலிஸ நல்லவனா காட்டிட்டு மொத்த போலிஸையும் களவாணித்தனம் பண்ற மாதிரி காட்றதுதுதான் இந்திய காவல்துறைக்கு ஹரி சார் அண்ட் டீம் கொடுக்குர கெளரவமா...? நல்லா இருக்கு ராஜா ஒங்க டீலிங்கு...!

அட கூறுகெட்ட குக்கரு படத்த படமா பாருலேன்னு நீங்க சொன்னா...படத்தை நீங்க என்னமா நினைச்சுப் பாத்தீங்கன்னு  நான் கேப்பனா..?  மாட்டேனா....?சொல்லுங்க ரசிக பெருமக்களே...!!!! சரி படத்தை எல்லாம் வுட்டுத்தள்ளுங்க.. ஏதோ ஓடித்தொலையட்டும்...ஆக்ஸிடெண்ட் ஆகப்போற காரு மாதிரி லபோ திபோனன்னு பயணிக்கிற திரைக்கதை கண்டிப்பா பாத்தவங்களுக்கு எல்லாம் ச்ச்சும்மா ஜிவு ஜிவுன்னு  த்ரில்லாத்தான் இருந்திகிருக்கும்.., அதோட இல்லாம பாட்டு எல்லாம் படு மொக்கைன்ற கதைக்கு எல்லாம் நான் வரலை....என் கேள்வி எல்லாம்...

அம்புட்டு பெரிய ஆளான பாய் உள்ளூர்ல ஆள் கிடைக்காம ஒரு மொண்ணை சிங்களத்துக்காரன கொலை பண்றதுக்காக இலங்கைல இருந்து ஏன் கூட்டிக்கிட்டு வர்றார்னுதான் எனக்குப் புரியலை....கூட்டிட்டு வந்ததோட இல்லாம அவுகளுக்கு சிங்களத்துலயே டயலாக் வேற.....

மிஸ்டர் ஹரி க்ளாரிஃபை ப்ளிஸ்....!

ஆப்பரிக்காவுல போய்...டேனிய கைது பண்ணிக் கொண்டாந்து செல்லுக்குள்ள போட்ட தொரை சிங்கம் ஐயா...அனுஷ்காவ கல்யாணம் பண்ணித் தொலைச்சிருக்கக் கூடாதா....

பாருங்க இப்ப சிங்கம் 3 வருமான்ற பயத்தோடயே படத்தைப் பாத்து முடிச்சுருக்கேன்...! எது எப்படியோ படம் தமிழ்நாட்ல செம ஹிட்ட்டாம்....அதுல என்ன ஆச்சர்யம் இருக்கு...இந்த மாதிரி மசாலா படங்கள் நம்மூர்ல ஹிட் ஆகாம இருந்தாதான் ஆச்சர்யம்...!

ஹரி சார்...வேணும்னா சிங்கம் பார்ட் 3ல நேரடியாவே ஒரு சிங்கத்தை நடிக்க வைக்க ட்ரை பண்ணுங்களேன்....படம் இன்னும் விறு விறுப்பா இருக்கும் (நற...நற....நற...)


அப்போ வர்ர்ர்ர்ர்ர்ர்ட்ட்டா!!!!!!!


தேவா சுப்பையா....
Saturday, July 6, 2013

ம்ருதுளா...!

நான் எழுதிக் கொண்டிருக்கும் கதையிலும் உன்னைப் போலவே ஒரு கதாநாயகியை படைத்திருக்கிறேன். அவளும் உன்னைப் போலவே நீ என்னை விட்டு எங்கோ இருப்பது போல அவள் காதலனை விட்டு எங்கோ வசிக்கிறாள். அவர்களின் காதல், திருமணம் என்னும் வழமைக்குள் நுழைந்து விடாமல் காதலாகவே தொடர்ந்து கொண்டிருந்ததை நான் எழுதிய பொழுதில் நம் வாழ்க்கையின் சாயலை நான் எழுதிக் கொண்டிருக்கிறேனா என்ற ஐயம் கூட எனக்கு வந்தது.

பதின்மத்தின் குறு குறுப்பினை எல்லாம் ஒரு முழு நெல்லிகாயைப் போல வாயின் ஓரத்தில் அதக்கிச் சுவைத்துக் கொண்டு,    ஒரு மலையினில் படுத்துக் கிடக்கும் மேகத்தின் வசீகரத்தை ஒத்த அழகிய நினைவுகளை எழுத முடியமால் திணறிக் கொண்டிருக்கும் என் பேனாவை பார்த்தால்  எனக்கே பாவமாய்த்தானிருக்கிறது. உன் மீது நான் கொண்டிருந்தது மிருதுவான காமம் அது. காமம் என்றால் அது உடல் உரசும் காமம் இல்லை. மிருதுவான என்ற வார்த்தை வார்தைகளில் அழகானது. இருந்தும் இல்லாமல் இருக்கும் நயத்தை எடுத்துச் சொல்ல மிருதுவானது மிருதுவாய் பொருந்தும் என்பதால் மட்டும் எனக்கு இந்த வார்த்தை பிடித்து விடவில்லை. என் கதையின் நாயகிக்கு ம்ருதுளா என்ற உன் பெயரை ஏன் நான் வைத்தேன் என்பதற்கும், எனக்கு ஏன் மிருதுவான என்ற வார்த்தை பிடிக்கும் என்பதற்கும் தனியே நான் விளக்கம் சொல்ல வேண்டியதில்லை தானே...?

ம்ருதுளா என் கதையின் நாயகி. வாழ்க்கையிலும் கூட. ம்ருதுளா காதலனைப் பிரிவதற்காகவே என் கதையில் உருவாக்கப்பட்டவள். உன்னை கடவுள் அவர் எழுதிய கதையில் எனக்காக உருவாக்கியதைப் போல. எப்போதாவது ஒரு முறை சேர்ந்து வாழ்ந்து விடுவோம் என்ற கனவு என் கதையின் நாயகனுக்கும் என்னைப் போலவே உண்டு. அவனுக்கு காமத்தையும் காதலையும் பிரித்துப் பார்க்கத் தெரியாது. காதலை காமத்தின் உச்சம் என்பான். காமத்தை காதலின் மிச்சமென்பான். வாழ்க்கையை அடுத்தடுத்து இருந்து அன்றாட பிரச்சினைகளைப் பேசி பிள்ளைக் குட்டிகள் பெற்று ஏதோ ஒரு கனவு இலக்கினை அடைய அவனுக்கும் விருப்பமில்லை என்னைப் போலவே....

உன்னோடு நான் பேசுவது போலத்தான் என் கதையின் நாயகியான ம்ருதுளாவிடம் அவனும் பேசுவான். வாழ்க்கையினூடே நிகழ்வதுதான் தாம்பத்யம் என்பதைக் கடந்து வார்த்தைகளில் நகர்ந்து கொண்டிருந்த அவர்களின் தாம்பத்யத்தில் ஒருவரை ஒருவர் சேர வேண்டும் என்ற யாக்கையை வேண்டுமென்றே அவர்கள் புறக்கணித்துக் கொண்டனர். கனவுகள் அவர்களுக்கு வசதியாய் இருந்தன. கனவுகள் நமது விருப்பம். எந்த தொந்தரவும் இல்லாதது. தானாக தோன்றிய உலகில் சட்ட திட்டங்களையும் கோட்பாடுகளையும் கிறுக்கி வைத்த  பைத்தியக்காரர்களைப் போல கனவுகளிலும் கற்பனைகளிலும் யாரும் இருப்பதில்லை.

எல்லாமே நமது இஷ்டம். ஒரு பட்டாம் பூச்சியை கவிதை எழுதச் சொல்லிவிட்டு நாம் பட்டாம் பூச்சியைப் போல சிறகடித்து பூக்களை சுகிக்கலாம். வெண் மேகங்களை வீதியுலா வரச்சொல்லி விட்டு....புற்களை வானத்தில் நட்டு வைத்து நடு நடுவே ரோஜா செடிகளை நட்டு வைத்து ரசிக்கலாம். கனவுகள் கம்பீரமானவை. எதார்த்தம் பிச்சைகாரத்தனமானது. இங்கே எப்போதும் நெரிசல்தான், கூச்சல்தான்.....என் நாடு, என் வீடு, என் சொத்து..என்று எனது, எனது, எனது என்று எல்லாவற்றையும் கிரயம் செய்து கொள்ளும் பைத்தியக்காரர்களின் வீடு இது.

இயற்கை எப்போது கட்டுப்பாடுகளை கையில் வைத்திருந்திருக்கிறது....? விடியாத இரவொன்று எந்தப் பகலின் இறுதியில் பிறக்கும் என்று யாருக்கேனும் தெரியுமா? தெரியாது என்று சொல்லிக் கொண்டே ஓடும் இந்த உலகத்திற்கு என்ன விதமான ரசனைகள் இருக்க முடியும்? ம்ருதுளாவையும், சாரதியையும் கதையின் மையமாக்கி நகர்ந்து கொண்டிருக்கையில் உன் நினைவுகள் என்னைச் சீண்டிக் கொண்டிருப்பதையும் நான் சொல்லித்தான் தீரவேண்டும். கட்டுப்பாடுகளே இல்லாதவன் சாரதி என்று நான் சொல்லும் போது உனக்கு எப்படி என் நியாபகம் வருகிறதோ அது போலத்தான் கதையிலும் ம்ருதுளா அடிக்கடி கட்டுப்பாடுகள் அற்றவைகளை காணும் போது எல்லாம் சாரதியை நினைத்துக் கொள்வாள்.

பிரிந்து செல்வதற்காகவே சாரதிக்கும் மிருதுளாவிற்கும் விடிந்த ஒரு பொழுதில் அவர்களின் கனவுகளை எல்லாம் மொத்தமாய் கட்டுப்பாடுகள் விழுங்கித் தின்று கொண்டிருந்தன. பைத்தியக்கார உலகை விட்டு விலகி வாழும் சாரதியை யாருக்கு தெரிகிறதோ இல்லையோ உனக்கு நன்றாகத் தெரியும்  ஏனென்றால் சாரதி இந்த உலக வாழ்வின் நியதிகளைப் புறக்கணித்ததாலேயே சக மனிதர்களால் பைத்தியக்காரன் ஆக்கப்பட்டான் என்னைப் போலவே....! இவ்வுலகின் நியதிகள் வெகு அபத்தமானவை. அத்தனையும் ஏமாந்தவர்களை கபட புத்திக் கொண்டவர்கள் அடிமைப்படுத்த ஆக்கிரமிக்கவே உருவாக்கப்பட்டன...

இலக்குகளே இல்லாத வாழ்க்கையின் ஏதோ ஒரு கணத்தில் எல்லாம் நின்று போய் விடுகிறது. எல்லாம் நின்று போன பின்பும் ஏதோ ஒன்று இருக்கும் என்று ஏதேதோ கதை சொல்கிறார்கள். கடவுள்களும் மதமும் இல்லாத நாடுகள் எப்படி இல்லையோ அப்படியே தங்களை மேதாவிகளாக நினைத்துக் கொள்ளும் ஒரு கூட்டம் பகுத்தறிவு பட்டயத்தை கழுத்திலே அணிந்து கொண்டு புத்திசாலிகள் நாங்கள் மட்டுமே என்று கட்டியம் கூறிக் கொண்டும் இருக்கிறது. வாழ்க்கையோ எப்போது இருவேறு நீதிகள் கொண்டிருப்பதில்லை. அது பணக்காரனுக்கும், ஏழைக்கும், அதிகாரம் செய்பவனுக்கும், கொள்ளைக்காரனுக்கும், சாதுவுக்கும், ஒரே நீதியைத்தான் சொல்லிச் செல்கிறது.

மாதத்திற்கு முப்பது நாள் என்று சொன்னவன் யார் என்று ஒரு நாள் நான் கேள்வி எழுப்பினேன் அல்லவா? திங்கள் கிழமைக்கும் செவ்வாய்க் கிழமைக்கும் என்ன வித்தியாசம் என்று ஒரு நாள் விவாதம் செய்தேன் அல்லவா? சூழல்கள் ஆற்று நீரைப்போல நகர்ந்து கொண்டே இருக்கின்றன மனிதர்கள் அவற்றை கூறு போட்டு விதிகள் பிறப்பித்துக் கொள்கிறார்கள் என்று சாரதியும் நான் பேசுவதைத்தான் அந்தக் கதையில் பேசுகிறான்.

ம்ருதுளா......உனக்கு எதனால் என்னைப் பிடிக்குமோ அப்படித்தான் கதையில் வரும் ம்ருதுளாவிற்கும் சாரதியைப் பிடிப்பதாய் படைத்திருக்கிறேன். உடல் ரீதியான எதிர்பார்ப்புகளை மையப்படுத்தி பிறக்கும் காதலைத்தான் கடவுள் உலகிற்கு படைத்தளித்திருக்கிறான் என்றால் உடல் கவர்ச்சியே இல்லாத காதலை எனது கதையில் நான் படைத்தளித்திருக்கிறேன் உன் மீது நான் கொண்ட காதலைப் போலவே...

காதலுக்கு எதுவுமே தேவையில்லை. அது எப்போதும் வலியைச் சுமப்பது போல சுகத்தை நமக்குள் இறக்கி வைக்கும். உடலினால் தொட்டு எரித்துக் கொள்ளும் லெளகீக காதல்களின் இலக்கு காமத்தை அன்றி வேறு என்னவாக இருக்க முடியும். காமம் இல்லாமல் காதலிக்கலாம் வா என்று யாரையேனும் கூப்பிட்டால் அப்படி கூப்பிடுபவரை பித்தன் என்றுதானே இந்த உலகம் சொல்லும்....? திருமணங்கள் எல்லாம் காமத்தை அரங்கேற்ற காதலை துருப்புச் சீட்டாக்கிக் கொள்கிறன. தீண்டாத காதலால் தீராத கலவி செய்வோம் என்று யாரேனும் இங்கே திருமணம் செய்து கொள்ளத் தயாரா? என்று சாரதி ம்ருதுளாவிடம் கேட்டுக் கொண்டிருந்த கடற்கரை மாலை....

நான் உன்னோடு அன்றொரு நாள் பேசிக் கொண்டிருந்த அதே அற்புதமான மாலைதான் ம்ருதுளா. விடம் அடக்கிய பாம்பு அதை நவரத்னமாக்கி உமிழ்கிறது...., சிப்பிக்குள் தேங்கிக் கிடக்கும் நீர் காலங்கள் கடந்து முத்தாய் ஜொலிக்கிறது. தேக்கி வைக்கும்யாவும் சுகமென்று இயற்கை பரிந்துரைக்கையில் எப்போதும் எல்லாவற்றையும் தீர்த்துக் கொள்ள நினைக்கும் லெளகீகத்தின் மிச்சம் பிரபஞ்சத்தின் தொடர்ச்சியை தீர்மானித்து வாரிசுகளை நிர்மானம் செய்து விட்டு...நெருப்புக்கோ அல்லது மண்ணுக்கோ தன்னை இரையாக்கிக் கொள்கிறது.

நேர்க்கோட்டில் நிகழும் யாவுக்கும் சுவாரஸ்யமென்றால் என்னவென்று தெரிவதில்லை. அப்படித்தான் வாழ்க்கையின் ஓட்டத்தில் லெளகீக நியதிகளின் படி நீ என்னை பிரிவதற்காய் அன்று காத்திருந்தாய். அது ஏனென்று எழுதி சரசாரி கதைகளைப் போல இந்தக் கதையை நான் சொல்ல விரும்பவில்லை. பிரிவது கருப்பொருளாயிருக்க ஏன் பிரிந்தார்கள் என்று அடுத்த வீட்டுப் படுக்கை அறையை எட்டிப்பார்க்கும் பொது புத்தியை என் கதையில் நறுக்கி எறியவும் செய்திருக்கிறேன்.

இதோ...ம்ருதுளாவும் காத்திருக்கிறாள் சாரதியை விட்டு பிரிந்து செல்ல...உன்னைப் போலவே அழுது கொண்டிருக்கும் ம்ருதுளாவிடம் என்னைப் போலவே பிரிதல் சுகமானது. அதுவும் எப்போதும் உடனிருந்தவர் பிரிந்து செல்கையில் மிகப்பெரிய வெற்றிடம் ஒன்று விரக்தி என்ற பெயரில் நம்மைச் சூழவும் செய்கிறது. துணை வேண்டும் என்று ஏங்கும் மனதிற்கும் இயற்கை தனியாய் நாம் பூமிக்கு வந்த கதையை எடுத்துச் சொல்லி, தனியாய் பூமி விட்டுச் செல்லும் நியதியை எடுத்துச் சொல்கிறது. இந்த வாய்ப்பு எப்படி வலியாகும்...? அது பொக்கிஷ நிகழ்வல்லவா?

ம்ருதுளா சாரதியை விட்டு பிரிந்து செல்ல வேண்டும் உன்னைப் போலவே. சாரதி ஏதேனும் கிறுக்கிக் கொண்டிருக்க வேண்டும் என்னைப் போலவே....!!!! என் வாழ்க்கை நியதியை இந்தக் கதையாக்கி இருக்கிறேன் ம்ருதுளா. கிடைப்பது வெற்றி என்று நம் புத்தியில் திணிக்கப்பட்டிருக்கிறது. இழப்பதும் வெற்றிதான் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்..?

ஜீவனாய் எனக்குள் இருக்கும்
அழகிய கவிதையை
யாரால் அழிக்க முடியும்..?
நிதர்சனத்தின் நிமிடங்கள்
எப்போதும் முடிந்து போவது இல்லை,
ப்ரியங்களை எப்போதும்
வாய்ப்பாடு சொல்வது போல
சொல்ல முடிவதுமில்லை!
கனவுகளுக்கு வேலிகளும்...
கவிதைகளுக்கு கட்டுப்பாடும் இருந்தால்
கற்பனைகள் செத்து போய்விடாதா என்ன?
இரவுக்கும் பகலுக்கும் அப்பால்
இருக்கும் வாழ்க்கையொன்றை
யார்தான் அறிவார்....?

நீ சென்றவுடன் நான் எழுதி கவிதையொன்றை சாரதி எழுதுவது போல எழுதி நீ பிரிந்ததை கொண்டாடிய அவனையும் என்னையும் யாரென்று சொல்லும் இவ்வுலகம்...? என் கதையில் வரும் ம்ருதுளாவிற்கும், உனக்கும் என்னையும் சாரதியையும் புரிந்து கொள்ள முடியுமென்றால்...

இந்தக் கதையை பின் எப்படித்தான் நான் முடிப்பதாம்.....? 

இதோ உனக்கான என்  வார்த்தைகளை நான் முடிக்கப் போகிறேன்....ஆனால் கடைசி வார்த்தையை வாசித்த பிறகுதான் நிஜத்தில் இந்தக் கதை தொடங்கப் போகிறது என்பதை நீ அறிவாயா?


தேவா சுப்பையா...Tuesday, July 2, 2013

வெந்து தணிந்தது காடு...!

சேதுக்கரையிலிருந்துதான் இராமர் ஈழத்துக்குப் பாலம் கட்டியதாகச் சொன்னார்கள். பிரம்மாண்டமான வங்காள விரிகுடா என் முன் விரிந்து கிடந்தது. சேதுக்கரையின் கடல் நீல நிறம் கிடையாது. கருமையும் நீலமும் நிறைந்த ஒரு ரகசியங்கள் நிறைந்த நிறம் அது. நெரிசல் அதிகம் இல்லாமல் ஓரளவு அமைதியைக் தாங்கிக் கிடந்த அந்த இடத்தில் திவசம் கொடுப்பதில் இருந்து கருமாதி காரியங்கள் வரை எல்லாம் ஏதோ ஒரு அவசர கதியில் நடந்து கொண்டிருந்தன.

ஈர வேட்டியுடன் வெற்றுடம்புடன் முழுதும் மழிக்கப்பட்ட தலையோடு கடற்கரை மண்ணில் நானும் என் இரு தம்பிகளும் அமர்ந்திர்ந்தோம். காலை பத்து மணி வெயிலை கட்டுப்படுத்தி கொண்டிருந்த மேகக்கூட்டங்களை நிமிர்ந்து பார்த்தேன். கடற்காற்று ஈர உடம்பில் பட்டு சிலிர்க்கச் செய்து கொண்டிருந்தது. பிரபஞ்ச ரகசியங்களைத் தன்னுள் தேக்கிக் கொண்டு ஆழ் கடலும் நீலவானமும் எங்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தன. ஆமாம்.. அது சேதுக்கரை என்னும் கடற்கரை கிராமம். அங்கிருந்த்துதான் இராமர் ஈழத்துக்கு சென்று இராவணனோடு போரிட பாலம் கட்டினாராம். நாங்கள் எங்கள் தந்தையின் 16 ஆம் நாள் காரியத்துக்காக கடந்த ஜூன் 7 ஆம் தேதி அந்த கடற்கரையில் வற்றிப் போன கண்ணீரோடு அமர்ந்திருந்தோம்.

சாலையோரத்தில் இரு சக்கர வாகனத்தை நிறுத்திக் கொண்டிருந்தவரை சாலையை விட்டு இறங்கிய டாட்டா-ஏசி சிறு லாரி அடித்து தலையில் அடிபட்டு எங்கள் உயிர் பறித்த கதை பற்றி நான் இங்கு பேசவரவில்லை. அது எனக்கும் இந்த பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டிருக்கும் பெருஞ்சக்திக்கும் இருக்கும் ஒரு வழக்கு. வழக்கு தொடுத்திருப்பவன் நான். குற்றம் சாட்டப்பட்டிருப்பது அண்ட சராசரத்தையும் ஆட்டிப்படைக்கும் அந்த சக்தி. கையிலிருந்த பொருளைத் தட்டிப் பறித்தது போல அவனுக்கு என்ன அப்படி ஒரு அவசரம் என்பதுதான் எனது கோபம். வழக்கம் போல ஏதேனும் நியாயத்தைக் விதி என்ற பெயரிலோ அல்லது பிரபஞ்ச சுழற்சி என்ற நீதியைச் சொல்லியோ அந்த பெருஞ்சக்தி என்னிடம் வாதிடலாம்...

என் கேள்வி எல்லாம் ஏன் என் தந்தைக்கு மரணம் வந்தது என்பதல்ல...ஏன் கள்ளத்தனமாய் இப்படி பின்னால் இருந்து வந்து உயிர் பறித்தாய் என்பது மட்டுமே...!

ஒருவேளை ஜென்மாந்திரக் கணக்குகளை எடுத்துக் கொண்டு வந்து, இது கடந்து போன பிறவியின் கர்மபலன் என்று காலம் என்னிடம் சொல்லலாம். அதை விட்டு விடுங்கள் அது எனக்கும் இந்த பிரபஞ்சத்தை இயக்கும் பெருஞ்சக்திக்கும் இடையே உள்ள பிரச்சினை. நான் என்ன யாரோவா? நானும் இந்தப் பிரபஞ்சத்தின் பகுதிதானே? எல்லாம் வல்லவன் என்றால் அவனிலிருந்து தனித்து விழுந்த நானும் எல்லாம் வல்லவன் தானே? நான் என்ன மனமென்னும் மாயைக்குள் அகப்பட்டு சிக்கல் கொண்ட மனிதனாகவா வாழ்ந்து கொண்டிருக்கிறேன். வந்த வேலையைச் செய்து முடித்து நானும் மீண்டும் என் மூலத்திற்கு தானே மீள்வேன். நீதி கேட்பது எனது உரிமை, நீதி சொல்லவேண்டியது இயற்கையின் கடமை.

ஜனனம் என்ற ஒன்று இருந்தால் மரணம் என்பது நிச்சயம் தானே ....நீ என்ன பித்தனா என்று கூட நீங்கள் என்னைக் கேட்கலாம்? நான் பித்தன் தான். அவனும் பித்தன் தான். இடைவிடாது சுடுகாட்டில் சுற்றி திரிந்தானே சுடலை என்ற பெயரில், நிலையாமை அறிய மண்டை ஓடுகளை அணிந்து கொண்டு அலைந்தானே கபாலி என்ற பெயரில், அசைவற்ற மூலத்தை சிவம் என்று அறிந்து அதை உணர்ந்து பின் பெருமான் ஆனானே அவனும் பித்தன் தான்.. நானும் பித்தன் தான்.

சேதுக்கரையில் எங்களுக்காக காரியங்களை செய்ய எங்கள் எதிரே இருந்த அந்த வேதம் படித்த பிராமணனுக்கு முறைப்படி பிரபஞ்ச சக்தியை வேண்டிய படி உரிமைகள் கொடுத்தோம். ஒவ்வொரு மந்திரமும் சொல்லி அதன் தமிழ் மொழி விளக்கத்தையும் சொல்லி வாஞ்சையோடு காரியங்கள் செய்து கொண்டிருந்தவரும், என்னைச் சுற்றி இருந்தவர்களும் எனக்கு என் சிவனாய்த்தான் தெரிந்தார்கள். அவனின்றி வேறு என்ன இருக்கிறது இங்கே? அவர் தவறுதலாய் வைணவ கோத்திரம் என்று சொல்ல நான் சிவகோத்திரம் என்று திருத்தினேன். காரியங்கள் மன திருப்தி. ஒருவர் எம் எதிரே கர்ம சிரத்தையாய் எம் தந்தையின் ஆன்மா முக்தியடைய பிரார்த்திக்கிறார் என்னும் நம்பிக்கையும், எங்களின் கூர்மையான மனம் குவித்தலும் எம்  தந்தையின் ஆன்மாவை பக்குவ நிலைக்குக் கொண்டு செல்லும் என்று நானறிவேன்.

இயல்பிலேயே பக்குவமான ஆன்மா கொண்ட சிங்கம் என் தந்தை. சிவகோத்திரம் என்று நான் அழுத்தம் திருத்தமாய் கூறியதற்கு காரணம் இருக்கிறது. சிவம் என்னும் பிரபஞ்சத்தின் பூர்வாங்க ஆதி நிலையை உணர்ந்து தலைமுறை தலை முறையாய் " தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..." என்று சாம்பலை அள்ளி நெற்றி நிறைய பூசிய பின்புதான் எங்களின் பொழுது தொடங்கும். மதத்தன்மையைப் பற்றி இங்கே நான் பேசவில்லை. சைவம் அல்லது சிவம் என்னும் ஒழுக்க நெறிக்குப் பின்னால் இருக்கும் விஞ்ஞான உண்மையைச் சொல்ல விரும்பிகிறேன்.

மேலோட்டமாக இல்லாமல் ஆத்மார்த்தமாக இதை உள்வாங்கிக் கொண்டு வாழ்க்கை நகரும் போது நிலையாமை ஆழமாக நமது உள்ளே இறங்கி விடுகிறது. நிலையாமை உள்ளே இறங்கிய பின் சக மனிதரை வாழும் காலம் வரை நேசிக்கத் தொடங்கி விடுகிறோம். சக மனிதரை நேசிக்கும் போது அறிந்து நாம் அநீதிகள் செய்யவே மாட்டோம். எல்லோரும் நேசிக்க அன்பே சிவம் என்பது புரியும். சிவம் என்பது  யாரோ ஒரு மனித உருக் கொண்ட நபரல்ல, இத்தனை ஜனசமுத்திரத்தையும், இப்பிரபஞ்சம் முழுதும் பரவி விரவிக் கிடக்கிற அசையும் அசையா அத்தனை வஸ்துக்களையும் உள்ளடக்கிய பெருஞ்சக்தி என்று உணர முடியும். பிறகு மரணம் இலகுவாகிப் போகும். உயிர் பிரிதல் சுவாசித்தலைப் போன்ற சுகமான அனுபவமாய் முடிந்து போகும். உயிர் பிரிகையில் உடல் உகுக்கிறோம் என்ற புரிதலோடு பெரும் நிம்மதியை ஏந்தியபடியே உடல் விட்டு நகர்ந்து போவோம்.

இப்போது புரிகிறதா எனக்கும் என் சிவனுக்கும் ஏன் வழக்கு அல்லது என்ன வழக்கு என்று...? அவன் என் தந்தையின் உயிர் பிரிதலை அவரை உணரச் செய்யாமல் கையிலிருக்கும் பொருளைத் தட்டிப் பறித்தது போல கொண்டு போனதன் காரணம் எனக்கு வேண்டும் அவ்வளவுதான். பிரபஞ்சத்தின் அசைவுகளில் எம் தந்தையின் ஆன்ம பலமும், எம்மின் பிரார்த்தனைகளும் எப்போது நாங்கள் சொல்லும் ஐந்தெழுத்து மந்திரமும் எம் தந்தையை கடைத்தேற்றும் என்பதை நானறிவேன்..!  சூட்சும ரூபத்தில் இருக்கும் எமது மூதாதையர்களும், நன் ஆன்மாக்களும், பதினெட்டுச் சித்தர்களும், அறுபத்தி நான்கு நாயன்மார்களும் மேலும் பிரபஞ்ச பேரதிர்வும் எம் தந்தையின் ஆன்மாவை அரவணைத்து தலை வருடிக் கொடுத்து, அதிர்வுகளால் சாந்தப்படுத்தி மேல் நிலைக்கு உயர்த்தி இருப்பதை நான் அறிவேன். 

நான் உடலாய் இருப்பதால் என் உடல் சார்ந்த நினைவுகள் எழுப்பும் கேள்வியைத்தான் இன்று என் ஈசனிடம் வைத்திருக்கிறேன்...! ஏனென்றால் முறையாய் எடுத்துச் செல்வதில் இருக்கும் நியாயம் தட்டிப்பறிப்பதில் இல்லைதானே...?

தந்தையின் கர்மாக்களை எல்லாம் சமப்படுத்தி ஆதி நிலைக்கு செல்ல பிரார்த்தனைகள் செய்து விட்டு சேதுக்கரையிலிருந்து மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தோம். வாகனத்தில் ஜன்னலோரமாக அமர்ந்திருந்தேன். காற்றால் என் கேசம் கலைக்க முடியாமல் தலையைத் தடவியபடியே மெளனமாய் என் முகத்தில் அறைந்தது. மாரநாடு கருப்பையா பிள்ளையின் மகனான, இராமசாமி பிள்ளையின் மகனான, செல்லையா பிள்ளையின் மகன் சுப்பையா பிள்ளை என்னும்  எனது தந்தையின் பூலோக வாழ்கை முற்றும் பெற்றது. யாதொரு குறைகளும், எதிரிகளும் இல்லாமல் நிறைவாய் வாழ்ந்து முடித்து ஒரு சிம்மம் போல கம்பீரமாய் இவ்வாழ்க்கையை விட்டு முறுக்கிய மீசையோடு வெளியேறிய எம் தந்தை எனக்கு மிகவும் கம்பீரமாய் தெரிந்தார். ஒட்டு மொத்த என் சொந்த  பந்தங்களுக்கும், நட்புகளுக்கும் இடையே கம்பீரமாய் வாழ்ந்து முடித்த நட்சத்திரம் அவர். அவரை அறிந்தவர் அவரை அறிவர்!

ஒரு  மிகப்பெரிய நாவலை வாசித்து முடிக்கையில், நல்ல திரைப்படத்தை பார்த்து முடிக்கையில், தொன்மையான கோவிலுக்குச் சென்று திரும்புகையில், ஆழ் தியானம் விட்டு எழுந்து அமர்கையில் பெரும் திருப்தி ஒன்று நம்மைச் சூழ்வதோடு அதன் தாக்கமும் நம்மை புரட்டிப் போடும். என் ஆயுள் முழுவதற்குமான தாக்கத்தைக் கொடுத்த திருப்தியில் காலம் தன் சுழற்சியை தொடர்ந்து கொண்டிருக்க..

இந்த ஜென்மம் முழுதும் நான் என் தந்தையை மனதில் சுமந்த படியேதான் நகரமுடியும் என்று எனக்குப் புரிந்தது. அம்மாவை எனது இரு தம்பிகளை, எனது சகோதரியை, நான் வாஞ்சையோடு அணைத்துக் கொண்டிருக்கிறேன்.....கதறி அழ எனக்கு வாழ்க்கை அவகாசம் கொடுக்கவில்லை....எனக்கு இருப்பதெல்லாம் ஒரே ஒரு ஆசைதான் இப்போது....

" என் அப்பா மாதிரி நான் வாழ்ந்துட்டு சாகணும்....எல்லோரையும் அரவணைச்சு.....அவ்ளோதான்..."

வண்டி எங்கள் ஊர் நோக்கிப் பறந்து கொண்டிருந்ததது. தம்பிகள் பார்க்காதவண்ணம் நான் துண்டுக்குள் முகம் புதைத்து நான் தேம்பிக் கொண்டிருந்தேன்.


தேவா சுப்பையா...