Pages

Saturday, July 6, 2013

ம்ருதுளா...!

நான் எழுதிக் கொண்டிருக்கும் கதையிலும் உன்னைப் போலவே ஒரு கதாநாயகியை படைத்திருக்கிறேன். அவளும் உன்னைப் போலவே நீ என்னை விட்டு எங்கோ இருப்பது போல அவள் காதலனை விட்டு எங்கோ வசிக்கிறாள். அவர்களின் காதல், திருமணம் என்னும் வழமைக்குள் நுழைந்து விடாமல் காதலாகவே தொடர்ந்து கொண்டிருந்ததை நான் எழுதிய பொழுதில் நம் வாழ்க்கையின் சாயலை நான் எழுதிக் கொண்டிருக்கிறேனா என்ற ஐயம் கூட எனக்கு வந்தது.

பதின்மத்தின் குறு குறுப்பினை எல்லாம் ஒரு முழு நெல்லிகாயைப் போல வாயின் ஓரத்தில் அதக்கிச் சுவைத்துக் கொண்டு,    ஒரு மலையினில் படுத்துக் கிடக்கும் மேகத்தின் வசீகரத்தை ஒத்த அழகிய நினைவுகளை எழுத முடியமால் திணறிக் கொண்டிருக்கும் என் பேனாவை பார்த்தால்  எனக்கே பாவமாய்த்தானிருக்கிறது. உன் மீது நான் கொண்டிருந்தது மிருதுவான காமம் அது. காமம் என்றால் அது உடல் உரசும் காமம் இல்லை. மிருதுவான என்ற வார்த்தை வார்தைகளில் அழகானது. இருந்தும் இல்லாமல் இருக்கும் நயத்தை எடுத்துச் சொல்ல மிருதுவானது மிருதுவாய் பொருந்தும் என்பதால் மட்டும் எனக்கு இந்த வார்த்தை பிடித்து விடவில்லை. என் கதையின் நாயகிக்கு ம்ருதுளா என்ற உன் பெயரை ஏன் நான் வைத்தேன் என்பதற்கும், எனக்கு ஏன் மிருதுவான என்ற வார்த்தை பிடிக்கும் என்பதற்கும் தனியே நான் விளக்கம் சொல்ல வேண்டியதில்லை தானே...?

ம்ருதுளா என் கதையின் நாயகி. வாழ்க்கையிலும் கூட. ம்ருதுளா காதலனைப் பிரிவதற்காகவே என் கதையில் உருவாக்கப்பட்டவள். உன்னை கடவுள் அவர் எழுதிய கதையில் எனக்காக உருவாக்கியதைப் போல. எப்போதாவது ஒரு முறை சேர்ந்து வாழ்ந்து விடுவோம் என்ற கனவு என் கதையின் நாயகனுக்கும் என்னைப் போலவே உண்டு. அவனுக்கு காமத்தையும் காதலையும் பிரித்துப் பார்க்கத் தெரியாது. காதலை காமத்தின் உச்சம் என்பான். காமத்தை காதலின் மிச்சமென்பான். வாழ்க்கையை அடுத்தடுத்து இருந்து அன்றாட பிரச்சினைகளைப் பேசி பிள்ளைக் குட்டிகள் பெற்று ஏதோ ஒரு கனவு இலக்கினை அடைய அவனுக்கும் விருப்பமில்லை என்னைப் போலவே....

உன்னோடு நான் பேசுவது போலத்தான் என் கதையின் நாயகியான ம்ருதுளாவிடம் அவனும் பேசுவான். வாழ்க்கையினூடே நிகழ்வதுதான் தாம்பத்யம் என்பதைக் கடந்து வார்த்தைகளில் நகர்ந்து கொண்டிருந்த அவர்களின் தாம்பத்யத்தில் ஒருவரை ஒருவர் சேர வேண்டும் என்ற யாக்கையை வேண்டுமென்றே அவர்கள் புறக்கணித்துக் கொண்டனர். கனவுகள் அவர்களுக்கு வசதியாய் இருந்தன. கனவுகள் நமது விருப்பம். எந்த தொந்தரவும் இல்லாதது. தானாக தோன்றிய உலகில் சட்ட திட்டங்களையும் கோட்பாடுகளையும் கிறுக்கி வைத்த  பைத்தியக்காரர்களைப் போல கனவுகளிலும் கற்பனைகளிலும் யாரும் இருப்பதில்லை.

எல்லாமே நமது இஷ்டம். ஒரு பட்டாம் பூச்சியை கவிதை எழுதச் சொல்லிவிட்டு நாம் பட்டாம் பூச்சியைப் போல சிறகடித்து பூக்களை சுகிக்கலாம். வெண் மேகங்களை வீதியுலா வரச்சொல்லி விட்டு....புற்களை வானத்தில் நட்டு வைத்து நடு நடுவே ரோஜா செடிகளை நட்டு வைத்து ரசிக்கலாம். கனவுகள் கம்பீரமானவை. எதார்த்தம் பிச்சைகாரத்தனமானது. இங்கே எப்போதும் நெரிசல்தான், கூச்சல்தான்.....என் நாடு, என் வீடு, என் சொத்து..என்று எனது, எனது, எனது என்று எல்லாவற்றையும் கிரயம் செய்து கொள்ளும் பைத்தியக்காரர்களின் வீடு இது.

இயற்கை எப்போது கட்டுப்பாடுகளை கையில் வைத்திருந்திருக்கிறது....? விடியாத இரவொன்று எந்தப் பகலின் இறுதியில் பிறக்கும் என்று யாருக்கேனும் தெரியுமா? தெரியாது என்று சொல்லிக் கொண்டே ஓடும் இந்த உலகத்திற்கு என்ன விதமான ரசனைகள் இருக்க முடியும்? ம்ருதுளாவையும், சாரதியையும் கதையின் மையமாக்கி நகர்ந்து கொண்டிருக்கையில் உன் நினைவுகள் என்னைச் சீண்டிக் கொண்டிருப்பதையும் நான் சொல்லித்தான் தீரவேண்டும். கட்டுப்பாடுகளே இல்லாதவன் சாரதி என்று நான் சொல்லும் போது உனக்கு எப்படி என் நியாபகம் வருகிறதோ அது போலத்தான் கதையிலும் ம்ருதுளா அடிக்கடி கட்டுப்பாடுகள் அற்றவைகளை காணும் போது எல்லாம் சாரதியை நினைத்துக் கொள்வாள்.

பிரிந்து செல்வதற்காகவே சாரதிக்கும் மிருதுளாவிற்கும் விடிந்த ஒரு பொழுதில் அவர்களின் கனவுகளை எல்லாம் மொத்தமாய் கட்டுப்பாடுகள் விழுங்கித் தின்று கொண்டிருந்தன. பைத்தியக்கார உலகை விட்டு விலகி வாழும் சாரதியை யாருக்கு தெரிகிறதோ இல்லையோ உனக்கு நன்றாகத் தெரியும்  ஏனென்றால் சாரதி இந்த உலக வாழ்வின் நியதிகளைப் புறக்கணித்ததாலேயே சக மனிதர்களால் பைத்தியக்காரன் ஆக்கப்பட்டான் என்னைப் போலவே....! இவ்வுலகின் நியதிகள் வெகு அபத்தமானவை. அத்தனையும் ஏமாந்தவர்களை கபட புத்திக் கொண்டவர்கள் அடிமைப்படுத்த ஆக்கிரமிக்கவே உருவாக்கப்பட்டன...

இலக்குகளே இல்லாத வாழ்க்கையின் ஏதோ ஒரு கணத்தில் எல்லாம் நின்று போய் விடுகிறது. எல்லாம் நின்று போன பின்பும் ஏதோ ஒன்று இருக்கும் என்று ஏதேதோ கதை சொல்கிறார்கள். கடவுள்களும் மதமும் இல்லாத நாடுகள் எப்படி இல்லையோ அப்படியே தங்களை மேதாவிகளாக நினைத்துக் கொள்ளும் ஒரு கூட்டம் பகுத்தறிவு பட்டயத்தை கழுத்திலே அணிந்து கொண்டு புத்திசாலிகள் நாங்கள் மட்டுமே என்று கட்டியம் கூறிக் கொண்டும் இருக்கிறது. வாழ்க்கையோ எப்போது இருவேறு நீதிகள் கொண்டிருப்பதில்லை. அது பணக்காரனுக்கும், ஏழைக்கும், அதிகாரம் செய்பவனுக்கும், கொள்ளைக்காரனுக்கும், சாதுவுக்கும், ஒரே நீதியைத்தான் சொல்லிச் செல்கிறது.

மாதத்திற்கு முப்பது நாள் என்று சொன்னவன் யார் என்று ஒரு நாள் நான் கேள்வி எழுப்பினேன் அல்லவா? திங்கள் கிழமைக்கும் செவ்வாய்க் கிழமைக்கும் என்ன வித்தியாசம் என்று ஒரு நாள் விவாதம் செய்தேன் அல்லவா? சூழல்கள் ஆற்று நீரைப்போல நகர்ந்து கொண்டே இருக்கின்றன மனிதர்கள் அவற்றை கூறு போட்டு விதிகள் பிறப்பித்துக் கொள்கிறார்கள் என்று சாரதியும் நான் பேசுவதைத்தான் அந்தக் கதையில் பேசுகிறான்.

ம்ருதுளா......உனக்கு எதனால் என்னைப் பிடிக்குமோ அப்படித்தான் கதையில் வரும் ம்ருதுளாவிற்கும் சாரதியைப் பிடிப்பதாய் படைத்திருக்கிறேன். உடல் ரீதியான எதிர்பார்ப்புகளை மையப்படுத்தி பிறக்கும் காதலைத்தான் கடவுள் உலகிற்கு படைத்தளித்திருக்கிறான் என்றால் உடல் கவர்ச்சியே இல்லாத காதலை எனது கதையில் நான் படைத்தளித்திருக்கிறேன் உன் மீது நான் கொண்ட காதலைப் போலவே...

காதலுக்கு எதுவுமே தேவையில்லை. அது எப்போதும் வலியைச் சுமப்பது போல சுகத்தை நமக்குள் இறக்கி வைக்கும். உடலினால் தொட்டு எரித்துக் கொள்ளும் லெளகீக காதல்களின் இலக்கு காமத்தை அன்றி வேறு என்னவாக இருக்க முடியும். காமம் இல்லாமல் காதலிக்கலாம் வா என்று யாரையேனும் கூப்பிட்டால் அப்படி கூப்பிடுபவரை பித்தன் என்றுதானே இந்த உலகம் சொல்லும்....? திருமணங்கள் எல்லாம் காமத்தை அரங்கேற்ற காதலை துருப்புச் சீட்டாக்கிக் கொள்கிறன. தீண்டாத காதலால் தீராத கலவி செய்வோம் என்று யாரேனும் இங்கே திருமணம் செய்து கொள்ளத் தயாரா? என்று சாரதி ம்ருதுளாவிடம் கேட்டுக் கொண்டிருந்த கடற்கரை மாலை....

நான் உன்னோடு அன்றொரு நாள் பேசிக் கொண்டிருந்த அதே அற்புதமான மாலைதான் ம்ருதுளா. விடம் அடக்கிய பாம்பு அதை நவரத்னமாக்கி உமிழ்கிறது...., சிப்பிக்குள் தேங்கிக் கிடக்கும் நீர் காலங்கள் கடந்து முத்தாய் ஜொலிக்கிறது. தேக்கி வைக்கும்யாவும் சுகமென்று இயற்கை பரிந்துரைக்கையில் எப்போதும் எல்லாவற்றையும் தீர்த்துக் கொள்ள நினைக்கும் லெளகீகத்தின் மிச்சம் பிரபஞ்சத்தின் தொடர்ச்சியை தீர்மானித்து வாரிசுகளை நிர்மானம் செய்து விட்டு...நெருப்புக்கோ அல்லது மண்ணுக்கோ தன்னை இரையாக்கிக் கொள்கிறது.

நேர்க்கோட்டில் நிகழும் யாவுக்கும் சுவாரஸ்யமென்றால் என்னவென்று தெரிவதில்லை. அப்படித்தான் வாழ்க்கையின் ஓட்டத்தில் லெளகீக நியதிகளின் படி நீ என்னை பிரிவதற்காய் அன்று காத்திருந்தாய். அது ஏனென்று எழுதி சரசாரி கதைகளைப் போல இந்தக் கதையை நான் சொல்ல விரும்பவில்லை. பிரிவது கருப்பொருளாயிருக்க ஏன் பிரிந்தார்கள் என்று அடுத்த வீட்டுப் படுக்கை அறையை எட்டிப்பார்க்கும் பொது புத்தியை என் கதையில் நறுக்கி எறியவும் செய்திருக்கிறேன்.

இதோ...ம்ருதுளாவும் காத்திருக்கிறாள் சாரதியை விட்டு பிரிந்து செல்ல...உன்னைப் போலவே அழுது கொண்டிருக்கும் ம்ருதுளாவிடம் என்னைப் போலவே பிரிதல் சுகமானது. அதுவும் எப்போதும் உடனிருந்தவர் பிரிந்து செல்கையில் மிகப்பெரிய வெற்றிடம் ஒன்று விரக்தி என்ற பெயரில் நம்மைச் சூழவும் செய்கிறது. துணை வேண்டும் என்று ஏங்கும் மனதிற்கும் இயற்கை தனியாய் நாம் பூமிக்கு வந்த கதையை எடுத்துச் சொல்லி, தனியாய் பூமி விட்டுச் செல்லும் நியதியை எடுத்துச் சொல்கிறது. இந்த வாய்ப்பு எப்படி வலியாகும்...? அது பொக்கிஷ நிகழ்வல்லவா?

ம்ருதுளா சாரதியை விட்டு பிரிந்து செல்ல வேண்டும் உன்னைப் போலவே. சாரதி ஏதேனும் கிறுக்கிக் கொண்டிருக்க வேண்டும் என்னைப் போலவே....!!!! என் வாழ்க்கை நியதியை இந்தக் கதையாக்கி இருக்கிறேன் ம்ருதுளா. கிடைப்பது வெற்றி என்று நம் புத்தியில் திணிக்கப்பட்டிருக்கிறது. இழப்பதும் வெற்றிதான் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்..?

ஜீவனாய் எனக்குள் இருக்கும்
அழகிய கவிதையை
யாரால் அழிக்க முடியும்..?
நிதர்சனத்தின் நிமிடங்கள்
எப்போதும் முடிந்து போவது இல்லை,
ப்ரியங்களை எப்போதும்
வாய்ப்பாடு சொல்வது போல
சொல்ல முடிவதுமில்லை!
கனவுகளுக்கு வேலிகளும்...
கவிதைகளுக்கு கட்டுப்பாடும் இருந்தால்
கற்பனைகள் செத்து போய்விடாதா என்ன?
இரவுக்கும் பகலுக்கும் அப்பால்
இருக்கும் வாழ்க்கையொன்றை
யார்தான் அறிவார்....?

நீ சென்றவுடன் நான் எழுதி கவிதையொன்றை சாரதி எழுதுவது போல எழுதி நீ பிரிந்ததை கொண்டாடிய அவனையும் என்னையும் யாரென்று சொல்லும் இவ்வுலகம்...? என் கதையில் வரும் ம்ருதுளாவிற்கும், உனக்கும் என்னையும் சாரதியையும் புரிந்து கொள்ள முடியுமென்றால்...

இந்தக் கதையை பின் எப்படித்தான் நான் முடிப்பதாம்.....? 

இதோ உனக்கான என்  வார்த்தைகளை நான் முடிக்கப் போகிறேன்....ஆனால் கடைசி வார்த்தையை வாசித்த பிறகுதான் நிஜத்தில் இந்தக் கதை தொடங்கப் போகிறது என்பதை நீ அறிவாயா?


தேவா சுப்பையா...9 comments:

சுபத்ரா said...

/கனவுகள் கம்பீரமானவை. எதார்த்தம் பிச்சைகாரத்தனமானது/

:-)

சுபத்ரா said...

மாதத்திற்கு முப்பது நாள் என்று சொன்னவன் யார் என்று ஒரு நாள் நான் கேள்வி எழுப்பினேன் அல்லவா? திங்கள் கிழமைக்கும் செவ்வாய்க் கிழமைக்கும் என்ன வித்தியாசம்

how true!

சுபத்ரா said...

விடம் அடக்கிய பாம்பு அதை நவரத்னமாக்கி உமிழ்கிறது...., சிப்பிக்குள் தேங்கிக் கிடக்கும் நீர் காலங்கள் கடந்து முத்தாய் ஜொலிக்கிறது. தேக்கி வைக்கும்யாவும் சுகமென்று இயற்கை பரிந்துரைக்கையில் எப்போதும் எல்லாவற்றையும் தீர்த்துக் கொள்ள நினைக்கும் லெளகீகத்தின் மிச்சம் பிரபஞ்சத்தின் தொடர்ச்சியை...

Great thought!

சுபத்ரா said...

இயற்கை தனியாய் நாம் பூமிக்கு வந்த கதையை எடுத்துச் சொல்லி, தனியாய் பூமி விட்டுச் செல்லும் நியதியை எடுத்துச் சொல்கிறது. இந்த வாய்ப்பு எப்படி வலியாகும்...? அது பொக்கிஷ நிகழ்வல்லவா?

This is great realisation. Not everyone can understand and agree to it.

'பரிவை' சே.குமார் said...

ம்ருதுளா சாரதியை விட்டு பிரிந்து செல்ல வேண்டும் உன்னைப் போலவே. சாரதி ஏதேனும் கிறுக்கிக் கொண்டிருக்க வேண்டும் என்னைப் போலவே....!!!! என் வாழ்க்கை நியதியை இந்தக் கதையாக்கி இருக்கிறேன் ம்ருதுளா. கிடைப்பது வெற்றி என்று நம் புத்தியில் திணிக்கப்பட்டிருக்கிறது. இழப்பதும் வெற்றிதான் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்..?


ரசித்துப் படித்தேன் அண்ணா...
அருமை.

திண்டுக்கல் தனபாலன் said...

கிடைப்பதும் இழப்பதும் நம் மனம் எடுத்துக் கொள்ளும் விதம் மாறும்...

ரசித்தேன்... பாராட்டுக்கள்...

Unknown said...

கொஞ்சம் புரிந்தது என்று பொய் சொல்ல விரும்ப வில்லை

ஆனாலும் புரிவது போல தோன்றுகிறது.

புத்தம் புதிய வார்த்தைகள்..

தேடலின் எல்லைகள்
முடிவுகள்
அற்றவை
என புரிந்துகொண்டேன்...

அடுத்த பதிவை எதிர்பார்த்து..

Shankar M said...

கம்பீரமான கனவுகள்... இழப்பதும் வெற்றி... எதார்த்தம் ?? எழுதியதற்கு அப்பாற்பட்டது. எழுதுவதும் கடினம் ; புரிந்து கொள்வதும் கடினம். நகரும் சூழல் யாவும் விதியாய் பிறப்பித்துக் கொள்ளும் மனிதர்களுக்கு எதார்த்தம் அது தானே ? நிதர்சனமும் எதார்த்தமும் ஒன்றில்லை! எதார்த்தத்தை சுவாரஸ்யமாக்கிக் கொள்ளும் பக்குவம் வேண்டும் - நேர்கோட்டில் செல்லும் போதே!! அந்த பக்குவத்திற்கு, கனவுலகில் சஞ்சரிக்கும் போது காணும் நிதர்சனங்களை எதார்த்தத்தோடு கலக்கும் மன தைரியம் வேண்டும்.நடக்கும் சம்பவங்கள் அனைத்தையும் வெற்றியாய் பார்... புரிதல், இழப்பு, மனப்பக்குவம் இவை யாவும் வெற்றியின் பிற முகங்கள்... அடுத்தவர் பார்வைக்கு காண கிடைக்கும் முகம் அவரவரின் காட்சிக்கு!! நல்ல பதிவு... மிகவும் ரசித்தேன்!

Harini Resh said...

ஜீவனாய் எனக்குள் இருக்கும்
அழகிய கவிதையை
யாரால் அழிக்க முடியும்..?

அருமை அண்ணா