Pages

Tuesday, May 27, 2014

கடவுள் இல்லாதவர்தான்....!


திடீரென்று படத்தின் பெயர் மனதில் தோன்றியதாகவும், உடனே இயக்குனர் சுந்தர். சியைக் கூப்பிட்டு நாம ஒரு படம் பண்றோம் படத்தோட பேர் அருணாச்சலம் என்று சொல்லி முடித்த கையோடு இசையைமைப்பாளர் தேவாவையும் அழைத்து இந்த விசயத்தைக் கூறினாராம் சூப்பர் ஸ்டார். கதை எதுவுமே முடிவாகவில்லையாம் அப்போது, அதனால்தான் படத்தில் வந்த பஞ்ச் டயலாக்கை கூட "ஆண்டவன் சொல்றான் இந்த அருணாச்சலம் செய்றான் " என்று கூட வைத்தார்களாம். அதாவது எதுவுமே மனிதர்கள் முடிவு பண்ணாமல் கடவுள் முடிவு பண்ணியதாம்.

நிஜத்தில் இந்த உள்ளுக்குள் தோன்றும் விசயங்களை ஆண்டவன் தான் தீர்மானிக்கிறாரா? என்ற ஒரு கேள்வி எனக்குள் வெகுநாளாய் இருந்து கொண்டிருப்பதற்கு காரணம் இதே போன்று எழுத்துச் சித்தர் பாலகுமாரனும் கூறுவதுதான். அவரும் கூட நான் எழுதுவது எல்லாம் எனக்குள் ஸ்பூரித்தது என்று அடிக்கடி சொல்வார்.  கடவுள் என்னை வழிநடத்துகிறார், எல்லாம் கடவுள் கிருபை, நான் ஆன்மீகத் தேடலில் இருக்கிறேன் என்று சொல்லிக் கொள்வதில் ஏதோ ஒரு கிறக்கம் நிறைந்த சுகம் இருப்பதாகவே எனக்குப் படுகிறது. இந்தக் கட்டுரை நாத்திகம் பேசி ஆத்திகத்தை அமுக்கவோ அல்லது ஆத்திகம் பேசி நாத்திகத்தை நசுக்கவோ விரும்பவில்லை  மாறாக இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு மியூட் மனோ நிலையில் எழுதப்பட்டது என்பதை வெகு குறிப்பாக இங்கே கூற கடமைப்பட்டிருக்கிறேன்.

எல்லோருக்குள்ளும் ரஜினிக்குத் தோன்றியதைப் போல, பாலகுமாரன் கூறுவதைப் போல எப்போதும் ஏதோ ஒன்று ஸ்பூரித்துக் கொண்டுதான் இருக்கிறது... ஆனால் இந்த ஸ்பூரிப்புத் தன்மைக்கு ஏன் நாம் ஒரு அமானுஷ்யத் தன்மை கொடுக்க வேண்டும் என்பதுதான் எனக்குப் பிடிபடவில்லை. ஒரு கட்டுரையாளனோ, அல்லது கதாசிரியனோ உருவாவது கடவுள் விருப்பம் என்று நான் நினைக்கவில்லை. அதைக் கடவுள் அனுக்கிரகம் என்று சொல்லும் பதம் கூட எனக்கு அபத்தமாய் தெரிகிறது. இதே போலத்தான் ஆன்மீகக் குருக்களையும் நான் வெகு சமீப காலமாய் நினைக்கத் தொடங்கி இருக்கிறேன். ரஜினிக்கு அருணாச்சலம் பிடித்த கடவுள், அதே சிந்தனையில் இருந்திருப்பார், கிரிவலம் போகும் போதெல்லாம் சிவனை பற்றி யோசித்து யோசித்து அந்த ஆழமான எண்ணம், அந்த பாசம், அந்த கடவுளின் மீது கொண்ட ஈர்ப்பு டக்கென்று அவரை அந்தப் பெயரை சூட்டவைத்து படம் எடுக்கச் சொல்லி விட்டது. அவருக்கு இருந்த வசதிகள் அதுநாள் வரை கட்டமைத்து வைத்திருந்த அவரது தொடர்புகள் சூழலை சாதகமாக்கி வைத்து விட்டது அவ்வளவுதான்.

இதே போல அபூர்வ ராகங்கள் நடித்து முடித்த பின்பு ரஜினிக்கு மனதில் ஏதோ ஒரு படத்தின் பெயர் ஏன் தோன்றவில்லை?  அது தோன்றாது. அப்போது அப்படி எண்ண மனதுக்கு தைரியமும்  கிடையாது. மனம் கூட நமது வசதி பார்த்துதான் செலக்டிவாக இந்த ஸ்பூரித்தல்களை உண்டாக்குகிறது. இதே போலத்தான் எழுத்தாளர்களுக்கும்... எழுத்தாளன்  என்பவன் ஏதோ பேனா பிடித்து காகிதத்தில் எழுதத்தெரிந்தவன் மட்டும் அல்ல. எழுத்தாளன் என்பது ஒரு குணம். அது சுற்றி நடக்கும் எல்லாவற்றையும் கூர்ந்து கவனிக்கும் பிறப்பியல் தன்மை. அந்த பிறப்பியல் தன்மைக்கு கர்மா காரணமாகிறது. கர்மாவை ஏற்றுக் கொள்ளும் நான் ஏன் கடவுளை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றுதானே கேட்கிறீர்கள்...! 

நான் கடவுளை ஏற்றுக் கொள்கிறேன். அதன் பரிபூரண இயக்கத்தை மானசீகமாய் நம்புகிறேன்... ஆனால் அதை மனிதர்கள் தங்களோடு தொடர்புபடுத்திக் கொண்டு ஒரு அசாதாரண நிலைக்கு தங்களை உயர்த்திக் கொண்டு சுற்றி இருக்கும் மனிதர்களிடம் இருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டிக்கொள்ளும் அந்த போலி புனிதத்தன்மையை நான் எதிர்க்கிறேன் அவ்வளவுதான். கடவுளை தொடர்புபடுத்திக் கொள்ளாத புனிதனாக ஏன் நம்மால் இருக்க  முடியாது? வெகுஜனத்தை வசீகரிக்க ஒரு சூப்பர் பவர் நமக்குத் தேவைப்படுவதால்தானே.... நான் கடவுளின் பிரதிநிதி அல்லது நான் கடவுள் என்றெல்லாம் கூறவேண்டி இருக்கிறது?

தொடர்ச்சியாய் எதைச் சிந்திக்கிறோமோ எது பற்றி அதிகம் ஆர்வம் காட்டி ஈடுபாடு கொள்கிறோமோ இன்னும் சொல்லப்போனால் எது நமக்குப் பிடிக்கிறதோ அதன் மீது ஒரு ப்ளூயன்சி நமக்கு வந்து விடுகிறது. அது கடவுளாய் இருந்தாலும் சரி கடா வெட்டுவதாய் இருந்தாலும் சரி. எல்லோர் முன்பும் நான் நல்லவன் என்று காட்டிக் கொள்ளும் முயற்சியில்தான் இந்த பூமிப்பந்தில் வசிக்கும் எல்லா தரப்பு மனிதர்களும் இருக்கிறார்கள். என்ன ஒன்று ஒருவன் டாஸ்மார்க்கில் தனது கட்டிங்கிற்கு சைட் டிஷ் நன்றாக இருக்கிறது என்ற சந்தோசத்தோடு ஒரே மடக்கில் குடித்தபடியே தன்னை நல்லவனாக எண்ணிக் கொள்கிறான்.... இன்னொருவன் பத்மாசனத்தில் அமர்ந்து கண்களை மூடி தன்னை யாரென்று அறிந்து கொள்கிறேன் பேர்வழி என்று சாந்த சொரூபியாக தன்னை நல்லவன் என்று நிலை நிறுத்திக் கொள்ள முயல்கிறான். 

இதில் ஒன்று சிறப்பு இன்னொன்று தவறு என்று நாம் சொல்வதற்குப் பின்னால் திணிக்கப்பட்ட வழமையான பொதுபுத்தி மட்டுமே இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? கெட்டுப்போபவன் குடித்து குடித்தும் கெட்டுப் போவான், கடவுள் எனக்கு வெகு பரீட்சயம் என்று கூறிக் கொண்டு சராசரி வாழ்க்கையின் எதார்த்தங்களை எதிர்கொள்ள முடியாமலும் கெட்டுப்போவான்.


கடவுள் தேடல் என்பதும் ஆன்மீகத்தில் ஈடுபாடு என்பதும் ஒரு பாட்டு கற்றுக் கொள்ளவும், ஆட்டம் கற்றுக் கொள்ளவும், கவிதை எழுதவும், கணக்குப் போடவும், கொலை செய்யவும், திருடவும் ஒரு மனிதன் கொள்ளும் ஆர்வத்தைப் போன்றதேதான். இங்கே சிறப்பு விகுதி எங்கே இருந்து வந்தது என்பதுதான் எனக்கு இதுவரை பிடிபடவில்லை. ஒரு ஓவியன் தன்னை தலை சிறந்த மனிதப்படைப்பாக கருதிக் கொண்டானேயானால் அது எவ்வளவு பெரிய அபத்தமோ, ஒரு பாடகன் தான் தான் உலகை வழிநடத்த வந்த அதி சிறந்த மனிதன் என்று கூறிக் கொள்வது எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தமானது கடவுள் பெயரால் வழிகாட்டுகிறேன் என்று சொல்வதும் கடவுள் வழிகாட்டுகிறார் என்று சொல்வதும்....

காலங்கள் தோறும் மனிதர்களை வழிநடத்த ஏதோ ஒரு சக்தியோ அல்லது சூழலோ அல்லது மனிதர்களோ அவசியப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இது ஒரு சராசரியான நிகழ்வு. சிந்திக்க தெரிந்தவன் சிந்தனையின் தெளிவினை சக மனிதனுக்குச் சொல்லிக் கொடுப்பதில் என்ன அமானுஷ்யம் இருக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்? எவ்வளவுதான் கற்றுக் கொடுத்தாலும் மெளனத்தை யார்தான் நமக்குச் சொல்லிக் கொடுத்துவிட முடியும்? யாராவது நமக்காக நடக்க முடியுமா? உயிர் வாழ முடியுமா? அல்லது உறங்க முடியுமா? முடியாதுதானே...? ஜென்மங்களாய் அலைந்து திரிந்து, மிதிபட்டு, அடிபட்டு அனுபவத்தோடு பயணிக்கும் ஒரு ஆத்மா அந்த அனுபவத்திலிருந்துதான் தனது அடுத்த அடுத்த வாழ்க்கையைப் பார்க்கிறது. இங்கே தேடிக் கொண்டிருக்கிறேன் என்று நாம் கூறுவதும் எனக்கு கடவுள் தேடல் பிடித்திருக்கிறது என்று எண்ணிக் கொள்வதும் கர்மாவின் தொடர்ச்சி. இந்த பிறவியில் நமக்கு வாய்த்தது அடுத்த பிறப்பில் வேறு ஒருவனுக்கு வாய்க்கும் அல்லது போன பிறவிகளில் யார் யாருக்கோ வாய்த்தது இந்த பிறவியில் நமக்கு வாய்த்திருக்கிறது அவ்வளவுதான்.

’சும்மா இரு சொல்லற” என்று ஒரு மகா வாக்கியம் இருக்கிறது. இந்த சும்மா இருத்தல் என்பது கடவுள் தேடலையும் தூக்கி ஓரமாகத்தான் வைக்கச் சொல்கிறது. எந்த வழிமுறையையும் பின்பற்றாமல் இருந்ததனை இருந்தபடி இருந்து போகத்தான் சொல்கிறது. கடவுள் தேடுகிறேன் பேர்வழி என்று நானும் பல்வேறு அபத்தங்களுக்குள் சிக்கிக் கொண்டிருந்திருக்கிறேன். மனதால் கற்பனைகள் கூட செய்து பார்த்திட முடியாத பிரபஞ்சத்தின் முழுமையை இங்கே சொற்களில் இறக்கி வைத்து விட முடியுமா என்ன? கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்பதுதான் உண்மை. அறிந்த மாத்திரத்தில் அங்கே அறிவிக்க ஒன்றுமே இல்லாமல் போய்விடுவதுதான் இந்த பிரபஞ்சத்தைப் பற்றிய உச்சபட்ச அறிவாய் இதுவரை அறியப்பட்டிருக்கிறது. இந்த சத்தியத்தை முழுமையாக ஒரு வார்த்தைப் பகிர்தலும் இன்றி உணரவைத்தவர், உருவாக்கிக் கொடுத்தவர்கள் என் அறிவுக்கு எட்டியவரை புத்தரும்.. லாவோட்சுவும் தான்...!

இவர்கள் இருவரைத் தவிர நான் பார்த்த அத்தனை பேரும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். சட்ட திட்டங்கள் வகுத்துக் கொடுக்கிறார்கள். தங்களை பீடத்தின் மீது இருத்திக் கொண்டு என்னை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சிஷ்யகோடிகளுக்கு ஆணையிடுகிறார்கள். புத்தரும், லாவோட்சுவும் தன் வாழ்நாள் முழுதும் எதையுமே போதிக்க விரும்பியிருக்கவில்லை. இங்கும் அங்கும் இருக்கும் அவர்களின் தத்துவங்கள் எனப்படுவது யாவுமே சுற்றி இருந்தவர்களின் நச்சரிப்பு தாங்காமல் அவர்கள் உரைத்துச் சென்ற சில பொய்கள்தான்....!

எதுவும் இங்கே யாருக்கும் தன் முயற்சியின்றி ஸ்பூரிக்காது. ஸ்பூரிக்க வைக்கவும் யாரோ ஒருவரை ஆகச் சிறந்தவராக்கி தன்னோடு அழைத்துச் செல்லவும் கடவுள் ஒரு போதும் விரும்பியதில்லை, விரும்பப்போவதும் இல்லை....! முழுதும் தன்னை உணர்ந்த யோகியாய் தன்னுள் ஆழ்ந்து கிடந்து தன்னை மறந்து கிடப்பதும் அவர்தான்......

பாசி பிடித்த குளத்தின் அழுக்கு நீரில் ஒரு சொறித்தவளையாய் மிதந்து கொண்டே இன்னொரு சொறித்தவளையை புணர்ந்து கொண்டிருப்பதும் அவர்தான்....

கடவுள் இல்லாதவர்தான்....

ஆமாம்...

இங்கிருப்பவர்கள் எல்லாம் கடவுளென்றால் என்னமோ ஏதோ என்று எண்ணிக் கொண்டு தேடி ஓடும் இலக்குகளில் எல்லாம் அவர் எப்போதும் இல்லாதவர்தான்...!



தேவா சுப்பையா...





Monday, May 26, 2014

தமிழ் பேச்சு எங்கள் மூச்சு....!


ஜோடிப்பொருத்தமும், வார்த்தை விளையாட்டும் சன்டிவி ஆரம்பித்த காலத்தில் வெகு பிரபலமான நிகழ்ச்சிகளாய் இருந்தன. எம்.ஜே. ரெகோ ஜோடிப்பொருத்தம் நிகழ்ச்சியையும், ஆனந்த கீதன் வார்த்தை விளையாட்டு நிகழ்ச்சியையும் தொகுத்தளித்துக் கொண்டிருந்தனர். இவர்களோடு சேர்ந்து ஈ. மாலா,  ரமேஷ் பிரபா மற்றும் நேருக்கு நேர் நிகழ்ச்சியை தொகுத்துக் கொடுத்துக் கொண்டிருந்த ரபி பெர்னார்ட் எல்லாம் செயற்கைக்கோள் தொலைக்காட்சியின் அந்த நாளைய ஹீரோக்கள். சன் டிவியின் தமிழ் மாலை வீடுகள் தோறும் தோரணங்கள் கட்டிக் கொண்டிருந்த அந்தக் காலங்களில் தூர்தர்சனின் பட்டிமன்ற நிகழ்ச்சிகளைப் பார்த்துப் பார்த்து சலித்துப் போய்க் கிடந்த தமிழகம் உற்சாக போதையில் மெல்ல தள்ளாடிக் கொண்டிருந்தது.

விவாத  நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள், பேச்சுப் போட்டிகள்  போன்ற சுவாரஸ்யங்களின் மீது ஏறி நின்று வருடக்கணக்கில் கோலேச்சியது விசுவின் அரட்டை அரங்கம் மட்டுமே.  எட்டு எட்டு பேராய் நான்கு அணிகள், அணிக்கு ஒரு தலைப்பு, அந்த தலைப்பை ஒட்டி  பங்கேற்பாளர்கள் பேச விசு அவர்களை குறுக்கீடு செய்து கேள்விகள் கேட்பார், கோபப்படுவார், வருத்தப்படுவார், திடீரென்று எமோசனலாகி அழக்கூடச் செய்வார், கேமரா விசுவை டைட் க்ளோசப்பில் திரை முழுவதும் காட்டும் அப்போது பார்த்துக் கொண்டிருக்கும் கூட்டம் விண்ணதிர கரகோஷம் செய்யும். இதை தொலைக்காட்சித் திரையில் பார்த்துக் கொண்டிருக்கும்  என்னைப் போன்ற அறுந்த வால்கள் எல்லாம் விசுவைக் கிண்டலடிப்பதைக் கண்டு மனம் கொதித்து சரமாரியாய் திட்டும் தாய்க்குலங்களைப் பார்க்கும் போது விசு ஏன் தேர்தலில் நிற்கக்கூடாது என்று கூட நான் நினைத்திருக்கிறேன்.

1997ல் விசுவின் அரட்டை அரங்கம் பட்டுக்கோட்டைக்கு வந்திருந்த போது போட்டியிட்ட 300 பேரில் நானும் ஒரு குழுவின் சார்பில் பேச எட்டு பேரில் ஒருவனாய் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தேன். தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முதல்நாள் இரவு நடந்த கடைசித் தேர்வில் பேசியதை வீடியோவில் பதிவு செய்து விசுவிடம் காட்டி அவர் தேர்ந்தெடுத்த 24 பேருக்கு மட்டும் மறுநாள் காலையில் தொலைபேசியில் அழைத்து நீங்கள் தேர்த்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று சொன்னார்கள். மாலை 5 மணிக்கு சூட்டிங் என்றால் காலையிலேயே வரச்சொல்லி இன்ச் பை இன்ச் ஆக விசுவின் அசிஸ்டெண்ட் டைரக்டர்கள் எங்களை செதுக்க ஆரம்பித்தார்கள். மேடையில் பேசும் போது அது ஒரு போதும் வழமையான மேடைப்பேச்சாய் இருந்து விடக்கூடாது மேலும் அது  எந்த வகையிலும் ஒரு பட்டிமன்றத்தை நினைவுபடுத்துவதாய் இருந்து விடக்கூடாது என்பதுதான் அவர்கள் உறுதியாக சொல்லிக் கொடுக்கும் ஒரு விசயம். அது போக சில காட்சிகள், சில பாடல்கள், என்று கூட்டத்தை வசீகரிக்கும் சில ஜிகினா வேலைகளையும் அவர்கள் செய்யச் சொல்வார்கள். மொத்தத்தில் அரட்டை அரங்கம் ஒரு சூப்பர் மசாலா பேச்சு மன்றமாக பார்ப்பவர்களை கவரும் வகையில் டைரக்ட் செய்யப்பட்டு மக்களின் முன்னால் காட்சி பதிவாக்கம் செய்யப்படும்.

ஞாயிற்றுக் கிழமை என்றால் அரட்டை அரங்கம் பெரும்பான்மையான வீடுகளில் அதிர்ந்ததற்குக் காரணம் அரட்டை அரங்கத்தை வெறுமனே ஒரு பேச்சு  மேடையாக மட்டும் விசு கொண்டு செல்லாமல் உலகத் தமிழர்கள் வாழும் எல்லா பகுதிகளுக்கும் பயணித்து அந்த அந்தப் பகுதிகளின் பிரச்சினைகள், சிறப்புக்கள் எல்லாவற்றையும் ரசனையாய் வெளியே கொண்டு வந்து காட்டவும் செய்தார். அதுவும் போக அரட்டை அரங்கத்தில் பங்கு பெறும் நலிவடைந்தோருக்கு மேடையிலேயே உதவிகளையும் அவர் பெற்றுத் தருவார். தமிழகத்தில் எந்த எந்தப் பகுதியில் எல்லாம் அரட்டை அரங்கம் குழு செல்கிறதோ அந்தப் பகுதியில் இருக்கும் மக்கள் பிரச்சினையையும் அரட்டை அரங்கம் பேசியது.

விசு கூடவே ஒட்டிக் கொண்டிருந்த அவரின் உதவி இயக்குனர் வி.எல். பாஸ்கர் ராஜ்க்கு அரட்டை அரங்கம் அத்துப்படியாகிப் போக அவர் விசுவை விட்டு கழன்று கொண்டு ராஜ்டிவியில் அதே அரட்டை அரங்கம் இட்லியை பிச்சுப் போட்டு அகடவிகடம் உப்புமாவாக்கினார். அரட்டை அரங்கம் அளவுக்கு இல்லாவிட்டாலும் அரட்டை அரங்கத்தின் சாயல் இருந்ததால் அந்த நிகழ்ச்சிக்கும் ஓரளவிற்கு வரவேற்பு இருக்கத்தான் செய்தது. பக்தி இலக்கியங்கள், புராணங்களில் இருந்து மேற்கோள்கள் என்று திருமுருக கிருபானந்த வாரியார்,  புலவர் கீரன் போன்றவர்களின் மேடைப்பேச்சுக்களை கோயில் திருவிழாக்களிலும்,  இன்ன பிற விழா மேடைகளிலும் கேட்டு ரசித்துக் கொண்டிருந்த தமிழ் சமூகத்தை பட்டிமன்ற பேச்சு வசீகரித்து இழுத்துப் பிடித்து எதுகை மோனையோடு அவர்கள் பேசி மேற்கோள் காட்டும் விசயத்தை நாக்கை சப்புக் கொட்டிக் கொண்டு ரசிக்க வைத்தது. பட்டிமன்றங்கள் இலக்கிய வாசனையோடு தூள் கிளப்பிக் கொண்டிருந்த அந்தக் களம் ரசிக்கத் தகுந்ததாய் இருந்தாலும் கொஞ்சம் இறுக்கமானதாய் இருந்தது. அந்த இறுக்கத்தை உடைத்தெறிந்தவர்கள் தமிழகத்தைப் பொருத்தவரை இரண்டு பேர்கள். ஒன்று ஐயா சாலமன் பாப்பையா இன்னொருவர் திண்டுக்கல் ஐ. லியோனி.

சாலமன் பாப்பையாவை விட இன்னும் ரகளையாய் பாட்டுப்பாடி ஆட்டம் ஆடி கேட்பவர்களை சிரிக்க வைத்து முழு நீள காமெடி ஷோவாய் பட்டிமன்றங்கள் இருக்கும்படி பார்த்துக் கொண்டார் திண்டுக்கல் ஐ. லியோனி. சாலமன் பாப்பையாவும் சரி, திண்டுக்கல் ஐ. லியோனியும் சரி இவர்கள் இருவருக்குமே ஒரு குழு இருக்கும்.. அந்த குழுதான் எந்த ஒரு பொது நிகழ்ச்சியாய் இருந்தாலும் மேடை ஏறி கொடுக்கப்பட்ட தலைப்பில் பேசி, சிரித்து நையாண்டி செய்து விவாதம் செய்து கொள்ளும். இதை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்த தமிழ் மக்களுக்கு அவர்களின் செட்அப்பில் ஒரு நாடகத்தன்மை இருப்பது பிடிபடத் தொடங்கியது. அந்த பிடிபடல் மெல்ல மெல்ல சலிப்பாய் மாறவும் தொடங்கியது. அந்த சலிப்புதான் விசு போன்றவர்களுக்கு மிகப்பெரிய ப்ளஸ்ஸாக அமைந்து அரட்டை அரங்கம் பாணி பேச்சு நிகழ்ச்சிகள் கொடி கட்டிப் பறக்கத் தொடங்கியது.


மேடைப்பேச்சு என்பது அத்தனை வசீகரம் கொண்டது. மேடைப்பேச்சுக்களால் உலகத்தில் மாற்றி எழுதப்பட்ட வரலாறுகள் ஓராயிரம். யாராவது பேசுவதில் உணர்ச்சியும், உண்மையும் இருந்து விட்டால் கேட்பவர்களுக்குள் பிரளயமே ஏற்பட்டு மனதில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு விடுமாம். தமிழக அரசியல் வரலாற்றை தீர்மானித்தது எல்லாம் பேச்சுக்கள்தான். அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர் போன்றவர்கள் எல்லாம் வசீகரிக்கும் பேச்சுத் திறமை கொண்டவர்கள். தங்கள் தொண்டர்களைப் பார்த்து ”தம்பி “ என்று அண்ணா அழைத்ததும், ”உடன்பிறப்பே” என்று கலைஞர் அழைத்ததும், ”இரத்தத்தின் இரத்தமே” என்று எம்.ஜி.ஆர் அழைத்ததும் சாதாரண விளித்தலுக்கான வெற்று வார்த்தைகள் கிடையாது. அந்த வார்த்தைகள் இன்று வரை தமிழனின் நாடி நரம்பெல்லாம் ஊறிப் போய்க் கிடக்கிறது என்றால் மேடைப்பேச்சின் வல்லமை அழுத்தம் என்ன என்பதை நாம் உணர முடியும்.

கேட்பவரை கேட்ட மாத்திரத்தில் சொடுக்குப் போட்டு தான் கூற வரும் கருத்தை நடு மண்டையில் உரைப்பது போல பேசுவது ஒரு கலை. எல்லா விசயமும் அறிந்து கொண்டவர்கள் கூட அதை எப்படி எடுத்துச் சொல்வது என்பதில் பலவீனர்களாக இருப்பார்கள். நாடகத்தன்மை கொண்ட நடிப்பாய் மேடைப்பேச்சு மாறிய போதெல்லாம் நம் சமூகம் அதை நிராகரித்து நகர்ந்து வேறு பக்கம் தன் தலையை திருப்பிக் கொண்டது. ’அரட்டை அரங்கம்’ போன்ற நிகழ்ச்சிகள் இன்று தொய்வுற்றுப் போய் ’நீயா நானா’க்கள் மேலேறி வந்து நின்று பிரபலமானதற்குக் காரணம் அந்த நிகழ்ச்சியில் இருக்கும் கருத்துச் செறிவுகள் மட்டும் கிடையாது. கருத்துக்களுக்கு மேலாக அந்த நிகழ்ச்சியில் ஒரு சத்தியம் நமக்குப் பிடிபட்டிருப்பதும், அந்த விவாதத்தில் இருக்குமொரு தார்மீக நியாயம் சாதரணனின் குரலை மிகைப்படுத்தாமல் வெளிப்படுத்துவதும் நமக்குப் பிடித்திருக்கிறது என்பதே அந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணமாயும் இருக்கிறது.

பழங்காலத்தில் போருக்குச் செல்வதற்கு முன்பு அந்த நாட்டின் மன்னனோ அல்லது தளபதியோ தங்களின் போர்ப்படை வீரர்களிடம் உரையாற்றுவார்களாம். அவர்களின் உணர்ச்சி மிகு பேச்சில், உரம் ஏறிப்போய் மதம் கொண்ட யானையாய் கூட்டம் வெறிகொண்டு தாக்கி எதிரிகளை துவம்சம் செய்யுமாம். இராஜராஜனை விட இராஜேந்திரன் மிகப்பெரிய மேடைப்பேச்சுக்காரனாய் இருந்தானாம். அந்த வெறியேற்றும் பேச்சுதான் சோழ சாம்ராஜ்யத்தை கடல் கடந்தும் விரிந்து பரவச் செய்ததாம். இப்போதெல்லாம் எல்லோரும் பேசுகிறார்கள். மொழியை அறிந்ததாலேயே, உரக்கப் பேசுவதாலேயே அவர்கள் சிறப்பாக பேசுவதாய் எண்ணியும் கொள்கிறார்கள். நிஜத்தில் சத்தியத்தை வெளிப்படுத்தும் பேச்சும் எழுத்துமே காலங்கள் கடந்து மேலெழும்பி நின்றிருக்கிறது. 


ஜோடனையானவர்களின் பேச்சுக்களும், எழுத்துக்களும் அவ்வப்போது வசீகரமாய் தெரிந்தாலும் அப்படி பேசவும் எழுதவும் செய்கிறவர்களை மனிதர்கள் வெகு சீக்கிரத்தில் மறந்தே போய்விடுவார்கள் என்பதே நிதர்சனம்.




தேவா சுப்பையா...







Saturday, May 24, 2014

கோச்சடையான் – இது பொம்மை படம் இல்லை.. .செம்ம படம்!


திருடனுக்கு தேள் கொட்டியது போல முழித்துக் கொண்டிருக்கிறார்கள் கோச்சடையானைப் பற்றி விமர்சனம் செய்த கொக்குகள். இந்திய சினிமா வரலாற்றில்… ஏன் உலக சினிமா வரலாற்றில் சலனப் பதிவாக்கத்தில் உருவாக்கம் செய்யப்பட்ட அனிமேஷன் காட்சி வடிவாக தனது ஆதர்ச நாயகனைப் பார்த்த மாத்திரத்தில் திரையரங்கம் அதிர்ந்து நொறுங்கி இருக்குமா என்பது சந்தேகமே….!!!!!!! செளந்தர்யா அஸ்வின் ரஜினி மகளென்றுதான் இதுநாள் வரையில் நான் நினைத்துக் கொண்டிருந்தேன் ஆனால் கோச்சடையான் பார்த்த பின்புதான் தெரிந்தது செளந்தர்யாவும் எங்களைப் போன்ற ஒரு ரஜினி பைத்தியம் என்று!

திரையில் மனிதப் பிம்பங்களை நேரடியாக பார்த்துப் பழகிப் போயிருந்த  கண்களுக்கு படம் ஆரம்பித்த பத்து நிமிடங்களுக்கு புதிய திரைவடிவம் கொஞ்சம் பயிற்சி கொடுப்பது என்னவோ உண்மைதான் என்றாலும்… சூப்பர்ஸ்டார் குதிரையிலிருந்து குதித்து நடந்து வரும் காட்சியில் மெல்ல மெல்ல திரைக்குள் குவியத் தொடங்கும் நமது மனது ரஜினியின் காந்தக் குரலைக் கேட்கத் தொடங்கும் அந்தக் கணத்திலிருந்து கதைக்குள் தொபுக்கடீர் என்று விழுந்து மொத்தமாய் கரைந்து போயே விடுகிறது!

அதன் பிறகு கோச்சடையானின் பிரம்மாண்டத்தில் வாய்பிளந்து திரையில் நடக்கும் மாயாஜாலத்தை பார்த்து படத்தை விமர்சித்து, படம் தோற்க வேண்டும் என்றெண்ணிய பக்கிகள் கூட கை தட்டி விசிலடிக்கும் ஆச்சர்யக் கூடமாக மாறிப்போய்விடுகிறது மொத்த திரையரங்கமும்….

எப்படி ஜெயிப்பது என்பதை ஜெயித்து பிரம்மாண்டமாய் நிற்கும் ஒருவருக்குத் தெரியாதா என்ன? ரஜினியின் ஜிம்மிக்ஸ் வேலைகளுக்கும் வசீகர ஸ்டைல்களுக்கும், ரசிகனின் நாடித் துடிப்பு எப்படிப்பட்டது என்றறிந்து விருந்தளிக்கும் திறமைக்கும் கண்ணை மூடிக்கொண்டு நாம் சல்ட்யூட் அடித்துதான் ஆகவேண்டும். இதுவரைக்கும் எத்தனையோ புராண, இதிகாச வரலாற்று டொட்டடாயிங் படங்கள் உலகெங்கும் வந்திருந்தாலும் கூட இடுப்பிலிருக்கும் வாளை இப்படியும் கூட எடுக்கலாம் என்று பாடம் சொல்லிக் கொடுக்கும் படம்தான் கோச்சடையான்.

ரணதீரன் என்னும் மாவீரன் ஏன் கலிங்கபுரிக்குள் சிறுவயதிலேயே வருகிறான், எப்படி சாதுர்யமாய் அங்கே அடைபட்டுக் கிடக்கும் கோட்டைப்பட்டினத்து அடிமைகளை மீட்கிறான்…? கோட்டைப்பட்டினத்துக்கும் ரணதீரனுக்கும் என்ன தொடர்பு, கோட்டைப்பட்டினத்தின் மன்னனை ஏன் ராணா கொல்ல நினைக்கிறான்…? யார் இந்த கோச்சடையான்…? இதை எல்லாம் திரையில் பார்க்கும் போதுதான் அதன் முழுப் பரவசத்தையும் உணர முடியும் என்பதால் கதைக்குள் முழுதாய் நான் போக விரும்பவில்லை.


ராணா ரஜினியை திரையில் கொண்டு வர செளந்தர்யா & டீம் பட்டிருக்கும் கஷ்டம் வீண் போகாமல் வெகு ஜோராய் ரஜினி ரசிகர்கள் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளுமளவிற்கு இருக்கிறது. இளமைத் துள்ளலோடு தலைவரை திரையில் பார்த்து விட்டு அந்த போதையில் ரஜினி ரசிகர்கள் கிறங்கிக் கிடக்க….இது என்னடா இது… இந்த ரஜினியை ஒண்ணுமே செய்ய முடியாதா இனிமேல், அடுத்தடுத்த தலைமுறைகளின் இதயங்களையும் கொள்ளை கொண்டு போக இது போன்ற சலனப் பதிவாக்கத்தில் வந்து அட்டகாசம் செய்கிறாரே….? நாங்கள் எல்லாம் பிழைக்க வேண்டாமா? எங்கள் பிழைப்பில் மண் அள்ளிப் போடுகிறார்களே இப்படி என்று தமிழ் சினிமா உலகின் நாயகர்கள் எல்லாம் வயிறெரிந்து கொண்டிருப்பதுதான் இப்போதைய உச்ச பட்சக் காமெடி. ஆமாம் ரஜினியின் அட்ராசிட்டியால் திக்பிரமை பிடித்துப் போய் கிடக்கும் கூட்டம் அடுத்து என்ன செய்வதென்றே தெரியாமல் திணறிப் போயிருக்கும் இந்நேரம்.

நான் ஏற்கெனவே கூறியது போல கோச்சடையான் ஒன்றும் பத்தோடு ஒன்று பதினோராவது படம் அல்ல. அது காலங்கள் கடந்தும் வெள்ளித் திரையில் ரஜினி என்னும் லெஜண்ட்டை நிலை நிறுத்த எடுத்து வைக்கப்பட்ட முதல் அடி. இந்த முதல் அடியே மரண அடியாய் விழும் என்பது ரஜினி ரசிகர்களே எதிர்ப்பார்த்திராத ஒரு இனிய ஆச்சர்யம். ரஜினியிடம் எப்போதும் ஒரு பிரச்சினை இருக்கிறது.. அதாவது சாதாரணமாய் ஒரு சூப்பர் படத்தைக் கொடுத்து ரசிகர்களை அவர் சந்தோசப்படுத்தாமல் அட்டகாசமான அதிரடியை கொடுத்து தன் ரசிகர்களை சந்தோஷக் கடலில் தூக்கிப் போட்டு மூழ்க அடித்து விடுவதுதான் அவருக்கு வாடிக்கை. கோச்சடையானும் ஒரு அட்டகாசமான மாஸ் என்டெர்டெயினர் என்பதோடு மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆஃபீசை அடித்து நொறுக்கி எவனும் எட்டாத அளவில் ஒரு சாதனையை நிகழ்த்தி வைக்கவும் போகிறது என்பதுதான் உண்மை.

ஏ.ஆர் ரஹ்மானின் மிரட்டும் பின்னணி இசையும் அட்டகாசமான பாடல்களோடு அதிவேக ரயிலின் வேகத்தில் பயணிக்கும் கே.எஸ். ரவிக்குமாரின் திரைக்கதையும் படத்திற்கு மிகப்பெரிய ப்ள்ஸ் பாயிண்ட்ஸ். கோட்டைப்பட்டினம் மன்னரான நாசரைக் கொல்ல மாறுவேடத்தில் வரும் ராணா ரஜினிக்கும் தீபிகாபடுகோனுக்கும் இடையே நடக்கும் அந்த மாஸ் ஃபைட்டைப் பார்த்தாவது இனிமேல் சண்டைக் காட்சிகள் எப்படி இருக்கவேண்டும் என்று சினிமாக்காரர்கள் கற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அதிரடியான அந்த சண்டைக்காட்சியில் தீபிகா படுகோனை ஈடுபடுத்தி இருப்பதும் படத்தின் மிகப்பெரிய ப்ளஸ்…..!!!!!!

ரஜினி படம் என்றால் வசனம் ச்ச்சும்மாவே தூள் பறக்கும். அதுவும் இது அரசியல் சதிகள் நிறைந்த படம். ஒவ்வொரு வசனத்திலும் அனல் பறக்கிறது, தியேட்டர் கைதட்டலில் குலுங்குகிறது. கோச்சடையான் ரஜினியைக் கொல்ல கூட்டிச் செல்லும் போது சிறுவயதிலிருக்கும் ராணா, ‘அப்பா எங்கப்பா போறீங்க?’ என்று கேட்பார். ‘நான் ஆண்டவன் கிட்ட போறேன்ப்பா’ என்று கோச்சடையான் ரஜினி கூற….

‘ஏன்ப்பா என்னை ஆண்டவன் கூப்டல….’ என்று சிறுவன் கேட்க, அதற்கு ரஜினி…. ‘எல்லோரையும் ஒரு நாள் அவர் கண்டிப்பாய் கூப்பிடுவார்ப்பா’ என்று கூறிக்கொண்டே மரண மேடையை நோக்கி நடக்கும் காட்சியிலும் சரி, கோச்சடையான் ரஜினியின் தலையை கொய்வதற்கு முன்பு ராணா சிறுவனாய் ஓடிப்போய் தன் தகப்பனின் முன் நெற்றியில் முத்தமிடும் காட்சியிலும் சரி…. நெஞ்சம் நமக்குப் பதறிப்போகத்தான் செய்கிறது. சலனப் பதிவாக்கம் செய்யப்பட்ட படத்தில் நம்மை மீறி உணர்வுகள் பீறிட்டு, கண்ணீர் தளும்புகிறது எழுகிறது என்றால் அதற்கு முழு முதற்காரணம் தலைவர் அன்றி வேறு யாராக இருக்க முடியும்?

இரண்டு மணி நேரத்தில் படம் முடிந்து விடுகிறது. படம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ‘என்வழி வினோ’ அண்ணனுக்கு அந்த நள்ளிரவில் செய்தி அனுப்பினேன், ‘..அண்ணா கோச்சடையான் தமிழ் சினிமாவின் மைல்கல் அண்ணா! இந்திய சினிமாவின் அத்தனை கதாநாயகர்களுக்கும் இந்தப்படத்தின் மூலம் தலைவர் செக் வைத்திருக்கிறார்’ என்று. அந்த நள்ளிரவில் அவர் ஏன் விழித்துக் கொண்டிருந்தார், நான் ஏன் அவருக்குச் செய்தி அனுப்பினேன் என்பதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்கிறது.

அந்தக் காரணம், ரஜினி என்னும் மிக அற்புதமான மனிதர்!!!!!! 

ரஜினி வெறுமனே படத்தில் நடித்துச் செல்கிறேன் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டாலும் எங்களைப் போன்ற கோடாணு கோடி ரசிகர்களை தனது அன்பால் இணைத்து வைத்திருக்கும் மாயாஜாலத்தையும் செய்திருக்கிறார். எங்களுக்கெல்லாம் ரஜினி எதுவும் செய்வார் என்று நினைக்கவில்லை, செய்ய வேண்டிய அவசியமும் இல்லை… ஆனால் எங்களுக்குள் ஒரு பாஸிட்டிவ் அலை உருவாவதற்கும், ஆன்மீகம் பற்றிய புரிதல் உண்டாவதற்கும், எங்கள் குடும்பத்தின் மீது ஒரு பிடிப்பு உண்டாவதற்கும், தான் உண்டு தன் வேலை உண்டு என்று வாழும் போதே சமூகத்தில் ஏற்படும் பிறழ்ச்சிகளைக் கண்டு வெகுண்டெழவும் அவர்தான் எங்களுக்கு ரோல் மாடலாய் இருந்திருக்கிறார், இருக்கிறார், இருப்பார்.

கோச்சடையான் ஒரு மாஸ் சூப்பர் ப்ளாஸ்டர் வெற்றிப்படமாய் அமைந்திருக்கிறது. இங்கும் அங்கும் குறைகளைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் நண்பர்கள் குறைகளைப் பற்றி பேச வேண்டும் என்பதற்காகவே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை யாரும் தடுக்கவே முடியாது, தளபதி வந்தபோது பேசினார்கள், அண்ணாமலையில் ஒன்றுமே இல்லை என்றார்கள், பாட்ஷா எல்லாம் ஒரு படமா என்றார்கள்…., எந்திரன் ஒரு டுபாக்கூர் படம் என்றார்கள். அவர்கள் பேசட்டும், பேசிக் கொண்டே இருக்கட்டும். பேசுவது அவர்களின் இயல்பு!

ஓடிக் கொண்டே இருப்பது நமது இயல்பு. இதைத்தான் தலைவரின் வாழ்க்கை நமக்கு எடுத்தும் சொல்கிறது. கோச்சடையானின் ஏதோ ஒரு குறியீட்டை உணர்த்தும், பேரிலக்கியவாதிகளுக்கான படம் அல்ல அது. உலகப் படங்களைப் பார்த்து அது பற்றி பேசிப் பேசி நம் சொந்த மண்ணில் நிகழும் சாதனையை கிண்டலடிக்கும் மேதாவிகளுக்கான படமும் அல்ல. ரஜினியின் எல்லாப் படங்களையும் போல படம் ஆரம்பித்ததிலிருத்து இறுதி வரை…. உற்சாக அலைகளால் கவலைகளை மறந்து லயித்து ரசிக்கும் ரசனை உள்ளவர்களுக்கான படம் இது.

மொத்தத்தில்…. சிலர் சொல்லிக்  கிண்டலடித்தது போல,



இது ஒன்றும் பொம்மைப் படம் இல்ல…….செம்மப் படம் என்பதுதான் உண்மை!



தேவா சுப்பையா...






Saturday, May 10, 2014

பிடிபடாததின் ரகசியம்...!


திருவள்ளுவர் பேருந்தில் சென்னைக்கு சென்று கொண்டிருந்தோம். அப்போது எனக்கு எட்டு வயது இருக்கும். இருக்கையில் அமர்ந்தபடியே உறங்குவது எனக்கு கடினமாயிருந்தது. எல்லோரும் உறங்கிக் கொண்டிருந்தபடியால் நடைபாதையில் ஒரு விரிப்பை விரித்து என்னை அம்மா படுக்கச் சொன்னாள். நான் ஒருக்களித்து படுத்திருந்தேன். கீழே வேகமாய் சாலை ஓடிக் கொண்டிருப்பது போல தோன்றியதாலும், வண்டியின் சப்தம் காதுக்கு வெகு சமீபமாய் உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று கேட்டதாலும் என்னால் உறங்க முடியவில்லை. உறங்கினேனா இல்லையா என்று யோசிக்கும் படியான ஒரு உறக்கம் அது. உறங்கிய மாதிரியும் தெரிந்தது உறங்காத மாதிரியும் தெரிந்தது.

உண்மை என்று எதைச் சொல்கிறோம் நாம்? எதை நாம் நம்புகிறோமோ அதைத்தானே..? நான் சென்னை வந்து இறங்கியது உண்மையாய் இருக்குமா என்ற பயம் மெலிதாய் என்னை தொற்றிக் கொண்டதற்கு காரணம் உண்டு. காரணம் அன்று இரவு நான் பேருந்திற்குள் நடைபாதையில் படுத்திருந்த போது  அதிலிருந்த ஒரு ஓட்டையின் வழியாக ஒரு காட்டிற்குள் விழுந்து விட்டேன். விழுந்த வேகத்தில் உருண்டு சாலை ஓரமாக இருந்த புதருக்குள் விழுந்து, தூக்கம் தெளியாமலேயே இன்னமும் நான் உறங்கிக் கொண்டே இருக்கிறேன். அந்த உறக்கத்தில் வந்த கனவுதான் என்னுடைய தற்போதைய வாழ்க்கை. கனவிலேயே சென்னை வந்து கனவிலேயே விடுமுறை கழிந்து மீண்டும் ஊர் திரும்பி, பள்ளி, கல்லூரி, காதல், கவிதை வேலை, திருமணம், பிள்ளை என்று என்னைச் சுற்றி எல்லாமே நிகழ்ந்து கொண்டிருக்கிறது ஆனால் இது எல்லாமே கனவுதான். நான் இன்னமும் பேருந்திலிருந்து விழுந்த புதருக்குள் உறங்கிக் கொண்டே இருக்கிறேன். 

ஏன் இப்படி இருக்கக் கூடாது....? என்று இப்போது நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். அதாவது இதைத் தட்டச்சு செய்து கொண்டிருப்பது என் கனவில், இதை நீங்கள் வாசிப்பதும் என் கனவில் என்று வைத்துக் கொள்ளுங்களேன். கனவு முடிந்த பின்பு ஒரு வேளை நான் எட்டு வயது பாலகனாய் அந்த புதருக்குள் இருந்து எழுந்து ஓ....என்று அழுதபடியே என் பெற்றோரைத் தேடவும் கூடும். இப்படி எல்லாம் இருக்க சாத்தியமில்லை என்று கூற முடியாததுதானே...? கனவில் இது கனவா என்று கேள்வி கேட்டு இது கனவில்லை என்று கூறிக் கொண்டால் அது கனவு இல்லாமல் போய்விடுமா என்ன?

எனக்கு  அந்த சென்னைப் பயணத்திற்குப் பிறகு தொடர்ச்சியாய் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் இப்படி தோன்றிக் கொண்டே இருக்கும். அந்தக் கனவில்தான் உண்கிறேன், பேசுகிறேன், சிரிக்கிறேன், அழுகிறேன், உறங்குகிறேன், கனவு காண்கிறேன். கனவிற்குள் கனவு அந்தக் கனவிலும் சில கனவுகள் வேறு வித கனவுகளைக் காண்கின்றன. இது ஒரு முடிவிலி போலவே இருக்கிறது எனக்கு. இது புரிந்தும் புரியாமலும் நீங்கள் வாசிப்பது போலவே நான் நித்தமும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

இது சர்ரியலிசம் என்னும் மிகை எதார்த்தவாதமாகக் கூட இருக்கலாம். இல்லாததை இருப்பது போன்று சொல்லி அது இல்லை என்று உணர முயலும் போது அது இருப்பது போல உங்களுக்கும் எனக்கும் தோன்றலாம். யாருமே பார்த்திராத விசயங்களைப் படைப்பதுதான் சர்ரியாலிசம். சால்வடோர் டாலி, மேக்ஸ் எர்னஸ்ட், ரெனே மக்ரிதே போன்றவர்கள் படைத்த ஓவியங்கள் எல்லாம் சர்ரியலிசத்தை அடிப்படையாகக் கொண்டதுதான். கனவில் விரியும் கற்பனையோடு ஒரு புதிர்தன்மையை சேர்த்து நிஜத்தில் அதைப்படைத்துக் காட்டுவதுதான் சர்ரியலிசம் அல்லது மிகை எதார்த்தவாதம் என்பது. உங்கள் முன்பு அந்த படைப்பு இருக்கும் ஆனால் அது போல நீங்கள் வேறெங்கும் பார்த்திருக்க முடியாது. அதற்காக அப்படி ஒன்று இருக்கவே இருக்காது என்று நீங்களும் நானும் மறுக்க முடியாது. அது இருக்கலாம். நாம் பார்த்திருக்கவில்லை அவ்வளவுதான்.

எனக்குத் தோன்றுவது எந்த வகையில் சர்ரியாலிசத்தோடு ஒத்துப் போகும் என்று எனக்குத் தெரியவில்லை என்றாலும் இந்த வாழ்க்கை முழுதுமே நான் கண்டு கொண்டிருக்கும் கனவாய்த்தான் எனக்கு அழுத்தம் திருத்தமாய் தோன்றுகிறது. இங்கே இறக்கும் போது ஒருவேளை கனவு முடிந்து நான் புரண்டு எழுவேனோ என்னவோ...? யார் கண்டது..? எல்லாவிதமான அமானுஷ்யத்தன்மையும் கொண்ட காலத்தின் நகர்வுகளில் எது இல்லை என்று மறுக்க முடியும். எதுவும் நடக்கலாம். இந்த உலகமே யாரோ எங்கோ காணும் ஒரு பெருங்கனவாகவும் கூட இருக்கலாம்...!


நேற்று மதியம் உறங்கும் போது எனக்கு ஒரு கனவு வந்தது. அதில் நான் சிறுவயதில் குடி இருந்த அந்த வாடகை வீட்டிற்குள் கொல்லைப் புறம் வழியாக நுழைகிறேன். அது ஒரு இருளத் தொடங்கும் மாலைப் பொழுதாக இருக்கிறது. வீட்டிற்குள் சிறிது கூட விளக்கு வெளிச்சம் கிடையாது. கவலைகள் இல்லாது துள்ளித் திரிந்த அந்த வீட்டிற்குள் ஒரு சிறுவனாய்த்தான் நான் நுழைகிறேன் என்றாலும் சமகாலத்தில் ஏற்பட்டிருக்கும் எல்லா அனுபவங்களும் எனக்குள் இருக்கிறது. பெற்றது இழந்தது இரண்டும் சமவிகிதத்தில் மூளைக்குள் இடித்துக் கொண்டு அமர்ந்திருக்கிறது. பெற்றதைப் பற்றிய கவலைகள் எதுவும் எனக்கு இல்லை என்றாலும் இழந்தது எல்லாம் கிடைத்துவிடக் கூடுமே  என்ற ஒரு புதிரான ஆவல் எனக்குள் இருக்கிறது. வீடு சப்தம் ஏதுமின்றி பாழடைந்து கிடப்பது போல இருக்கிறது.

வீட்டின் வாசல் கதவு ஒருக்களித்து திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. அந்த சிறு இடைவெளியில் மெலிதாய் வெளிச்சம் வீட்டிற்குள் வந்து விழுகிறது. வாசலில் என் 10 வயதில் இருந்த எதிர் வீட்டுக்காரர்களும் பக்கத்து வீட்டுக்காரர்களும் பேசி சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். என் வீட்டுக்கு பக்கத்திலேயே ஒரு கிணறு இருக்கிறது. அதில் எப்போதும் போல எல்லா வீட்டுக்காரர்களும் தண்ணீர் எடுத்துக் கொண்டிருக்கும் சப்தம் மட்டும் கேட்கிறது. தண்ணீர் இறைக்கும் போது சகடை ஒரு போல சத்தம் கொடுக்கும். அடிக்கடி சைக்கிள் துடைக்கும் போது எண்ணை போடும் டப்பாவிலிருந்து நான் தான் அதற்கு எண்ணை போடுவேன். சகடை சத்தம் கிரீச்...கிரீச் என்று கேட்கிறது. நான் இல்லாவிட்டால் யாருமே எண்ணை போட மாட்டீர்களா இந்த காலனியில் என்று ஒரு கோபம் வேறு என்னுள் இருந்து எட்டிப்பார்க்கிறது. எல்லா வீட்டிலும் ஆட்கள் இருக்கிறார்கள் ஆனால் என் வீட்டில் மட்டும் யாருமில்லை. எனக்கு அழுகையாய் வருகிறது. அந்த சிறிய ஹாலில் உட்கார்ந்து நாங்கள் அனைவரும் உணவருந்தி இருக்கிறோம். அங்கேயேதான் பாய் விரித்து உறங்கவும் செய்வோம்.அந்த ஹாலின் வலது மூலையில் சாலிடர் சிலைடிங் டோர் டிவி தூசு படிந்து கிடக்கிறது. 

நான் எட்டு மாதக் குழந்தையா இருந்தேனாம் அந்த வீட்டிற்கு நாங்கள் குடி வந்த போது. காலி செய்து போனது என்னுடைய 21வது வயதில் என்றாலும் இப்போது காலி செய்து போனதை வேண்டுமென்றே மறந்து கொள்கிறேன். அலமாரி, ஜன்னல், ஜன்னல் கம்பிகள், நிலைப்படி, அடுப்படி, இருக்கும் ஒரே ஒரு அறையில் இருக்கும் சாமிப் படங்கள், அப்பா, அம்மா மட்டுமே திறக்கும் பச்சைக் கலர் காட்ரேஜ் பீரோ, சுவற்றில் ஓடும் பல்லிகள், மழை வந்தால் ஒழுகும் மேலே இருக்கும் ஓடுகள், பனை உத்திரம், அந்த உத்திரத்தில் ஆங்காங்கே ஒட்டிக் கொண்டிருக்கும் ஒட்டடைகள், அலமாரியில் கலைந்து கிடக்கும் என் பள்ளிப் புத்தகங்கள், அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அக்காவின் புத்தகங்கள். என் புத்தகத்துக்கு நடுநடுவே இருக்கும் சினிமாப் பாட்டுப் புத்தகங்கள்..... என்னுடைய பள்ளிக்கூடப் பை, அக்காவின் வயர் கூடை, பானாசோனிக் டேப்ரிக்கார்டர், அது இருக்கும் செல்ஃபில் இருக்கும் சோனி 90 கேசட்டுகள், கேசட் டப்பாக்கள், இன்னொரு அலமாரியில் இருக்கும் அக்காவின் கேசவர்த்தினி தைலம்...., தேங்காய் எண்ணை தூக்கு, மேல் செல்ஃபில் இருக்கும் அமிர்தாஞ்சனம் டப்பா, மூட்டு வலிக்குத் தேய்க்கும் தென்ன மரக்குடி எண்ணை, ஏதேதோ மாத்திரைகள், ரேஷன் கார்டு, கரண்ட் பில் அட்டை, இன்ன பிற ரசீதுகள்....

எல்லாமே இருக்கிறது ஆனால் வீட்டில் யாருமில்லை. பயந்து கொண்டே ஒவ்வொரு அடியாய் எடுத்து வைத்து ஹாலில் மஞ்சள் குண்டு பல்பைத் மாற்றிவிட்டு நாங்கள் போட்டிருந்த ட்யூப்லைட்டைத் தட்டுகிறேன்......ட்யூப் லைட் எரியவில்லை. அப்பா எங்கே, அம்மா எங்கே....கேள்விகள் துளைக்க அம்ம்ம்மமா என்று அழுதபடியே என் உடையாத குரலில் சப்தமெழுப்புகையில் பட்டென்று விழிப்பு வந்து விட்டது. 


ஹாலில் சோபாவில் நான் கழுத்து வரை போர்த்தியபடி படுத்திருக்கிறேன். கனவு கலைந்தது போல எனக்குத் தோன்றவில்லை....வாழ்க்கை முறிந்தது போலத் தோன்றியது. நெஞ்சு பட பட என்று அடித்துக் கொண்டிருந்தது. எழுந்து ஏசியை அமர்த்தினேன். குளிர் நிற்கவில்லை உடம்பு தூக்கி தூக்கிப் போட்டபோது அலைபேசி அடித்தது. எடுத்துப் பார்த்தேன்....அம்மா....! அழைப்பைத் துண்டித்து விட்டு மறுபடி அம்மாவை அழைத்தேன்....அம்மாவின் குரலைக் கேட்டதும் வந்த அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டேன். அம்மாவிடம் ஒன்றும் சொல்லவில்லை ஆனால் அம்மா...சிறுவயதில் வாடகை வீட்டில் இருந்த போது இருந்த மகிழ்ச்சி சொந்த வீட்டில் இல்லை என்பது போல பேசிக் கொண்டிருந்தாள்....நான் கனவில் கண்டதை எல்லாம் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தவள் எப்போது நான் ஊருக்கு வருகிறேன் டிக்கட் எடுத்துவிட்டாயா என்று கேட்டுவிட்டு போனை வைத்துவிட்டார்.

என்ன தொடர்பு இது? எனக்கு விசித்திரமாய் தோன்றியது. வெகு நேரம் எதுவும் பேசாமல் கனவையும் அம்மாவின் அழைப்பையும் யோசித்தபடி அமர்ந்திருந்தேன். வாழ்க்கை என்னை பணி நிமித்தமாய் எவ்வளவு தூரம் அழைத்து வந்து விட்டது என்று யோசித்தேன். எனக்கு கனவு சுகமாயிருந்தது. கனவுகள் இன்னும் நிறைய நிறைய வேண்டும் என்று தோன்றியது. வண்ணத்துப் பூச்சிகளுக்கு துதிக்கை வைத்து தந்தத்தோடு பார்க்கும் கனவு..... சிறுபிராயத்தில் புல்வெளிக்குள் வண்ண வண்ண வண்டுகள் தேடியதைப் போல புற்களுக்கு இடையே யானைகளைத் தேடும் கனவு..., நட்சத்திரங்கள் எல்லாம் நீரில் நீந்திக் கொண்டிருக்க ஆகாயத்தில் வண்ணத்துப் பூச்சிகள் நட்சத்திரங்களைப் போல பலவண்ணங்களிலும் படபடத்து ஒட்டிக் கொண்டிருக்கும் கனவு.....

நிறைய நிறைய நிகழவேண்டும் கனவுகள். அதை ததும்ப ததும்ப நிரப்பி வைக்கவேண்டும் காகிதங்களில். யாரும் காணாத காட்சிகளைக் கனவிலிருந்து கைப்பிடித்து அழைத்து வந்து இதோ பாருங்கள் என்று என் சமூகத்தாரிடம் காட்டும் பேராசை ஒன்று உண்டு எனக்கு..... ஜீசஸ் கிரைஸ்ட்டைப் போல...

சிலுவையில் அறைந்து கொள்ளுங்கள்
கவலையில்லை என்றுதானே தேவன் 
லில்லி மலர்களின் அழகிற்குள் மயங்கிக் கிடந்தான்...
அவன் படைக்க விரும்பியதைப் போன்ற ஒன்றை
அதுவரையில் அறிந்திராததால்தானே....
விசாலமான பார்வையற்றவர்கள் தங்கள் குருட்டு உலகத்திற்குள்
வெளிச்சத்தை அனுமதிக்க மறுத்தார்கள்...!
சாக்ரடீஸுக்கு கொடுத்தது போல, 
ஓஷோவிற்கு செலீனியம் கொடுத்து கொன்றது போல..
ஏதாவது ஒன்றை உலகம் செய்து கொண்டுதானிருக்கும்...
அதற்காக படைப்பவன்  நிறுத்தமுடியுமா
அவன் கற்பனைக் குதிரையை...?
கனவிலிருந்து ஒரு இழை
கற்பனையிலிருந்து ஒரு இழை
புதிர்த்தன்மையிலிருந்து ஒரு இழை
அமானுஷ்யத்திலிருந்து ஒரு இழை...
தத்துவத்திலிருந்து ஒரு இழை....
கொஞ்சம் காமம், 
நிறைய காதல் என்று 
அவன் பின்னிக் கொண்டேதான் இருக்கவேண்டும் வலையை... 

முடிந்து விடுவதும், தொடங்கி நிகழ்வதும் எப்படி, எப்போது என்று தெரிந்து விட்டால் அந்த படைப்பு என்ன படைப்பு? அதைப் படைப்பவன் என்ன படைப்பாளி...?!




தேவா சுப்பையா...







Thursday, May 8, 2014

கோச்சடையான்....ஒரு பிரம்மாண்டத்தின் வருகை...!


ஆடிப்போய் கிடக்கிறது தமிழ் சினிமாவின் அடுத்த தலைமுறை. இந்திய சினிமாவோ இன்னும் வரப்போகும் காலத்திலும் அசைக்க முடியாமல் உலாவப்போகிறதே இந்த உருவம் என்று அதிர்ந்து போய் கிடக்கிறது. அடுத்த சூப்பர் ஸ்டார் என்று தங்களைத் தாங்களே அழைத்துச் சப்புக் கொட்டிக் கொண்டிருந்த நாயகர்கள் எல்லாம் பேயறைந்தது போல நடமாடிக் கொண்டிருக்கின்றார்கள் இப்போது. காரணம் ரஜினி என்ற பிம்பம் முதுமை என்னும் காலச் சக்கரத்திற்குள் கரைந்து போய்விடும் என்று மனப்பால் குடித்தவர்களுக்கெல்லாம் நவீனத்தின் உதவியோடு சம்மட்டி அடி கொடுத்திருக்கிறார் சூப்பர் ஸ்டாரின் புதல்வி செளந்தர்யா அஸ்வின்.....

                                   ....கோச்சடையான்......

இது ஒன்றும் பத்தோடு பதினோராவதாக வரும் ஒரு தமிழ் சினிமாப்படம் கிடையாது. மோஷன் கேப்சரிங் என்பது உயரிய தொழில்நுட்பத்தை வைத்து குறிப்பிட்ட நடிக நடிகையர்களின் உடல் சலனத்தை துல்லியமாய் பதிவு செய்து அதை கணிணிப் படுத்தி விரும்பியபடி ஒப்பனையிட்டு, விரும்பிய இடத்தை எல்லாம் கற்பனையாய் வடித்தெடுத்து அதில் ரத்தமும் சதையுமாய் அவர்களை உலாவவிடுவது, கோச்சடையான் அப்படித்தான் ஒவ்வொரு ப்ரேமாக செதுக்கப்பட்டிருக்கிறது.  எந்திரன் படம் செய்த துவம்சத்தையே இந்திய சினிமா தாங்கிக் கொள்ள முடியாமல் ஆடிப்போயிருந்த போதுதான் சூப்பர்ஸ்டார் ராணா படத்தை அறிவித்து பூஜையும் போட்டார். ரஜினி இருக்கும் வரை அவருக்கு அடுத்து இரண்டாவது, மூன்றாவது ஏன் இன்னும் சொல்லப்போனால் நான்காவது ஐந்தாவது இடத்தில் கூட யாரும் நிற்கமுடியாது என்பதை தமிழ் சினிமா ரசிகர்களை விட தெளிவாய் அறிந்து வைத்திருப்பவர்கள் தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர்களும், நடிகர்களும் இயக்குனர்களும்தான்....! ஏனென்றால் அவர்களுக்குத்தான் தெரியும் ரஜினி என்னும் மாஸ் என்ன செய்யும்? ரஜினிக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் எத்தகையது? வசூல் என்றால் என்ன? ரெக்கார்ட் ப்ரேக் என்றால் என்ன? பாக்ஸ் ஆபிஃஸ் கணக்கீடுகளை ரஜினி என்னும் நடிகன் எப்படி தூள் தூளாக்குவான் என்பதெல்லாம்...

அதனால்தான் ரஜினி படம் வெளிவரும் போது அதற்கு இணையாக வேறுபடத்தை வெளியிட எல்லோரும் அரண்டு போகிறார்கள் தமிழ் சினிமா வியாபாரிகள் அத்தனை பேரும். ஏனென்றால் ரஜினியின் படுதோல்விப் படம் என்று தமிழ் சினிமா கூறும் பாபா படத்தின் வசூலே இன்றைக்கு முன்னணி நடிகர் என்று கூறிக்கொள்ளும் ஒரு நடிகரின் சூப்பர் ஹிட் வெற்றிப் படத்தின் வசூலுக்கு இணையானதுதான் என்பதை யாராலும் நம்பமுடிகிறதா? ராணா பூஜை போட்ட உடனேயே உடல் சுகமில்லாமல் போய்விட்டார் சூப்பர்ஸ்டார். இனி அவர் மீண்டு வருவாரா என்ற கேள்விகளை எல்லாம் கடந்து அவர் உயிரோடே இல்லை என்றெல்லாம் புரளிகள் கொடியவர்களால் பரப்பப்பட்டதை கேட்ட ரஜினி ரசிகர்கள் எல்லாம் துடிதுடித்துதான் போனார்கள்.

ஏதாவது செய்வான் என்று எதிர்ப்பார்த்து ஒரு அரசியல் தலைவனுக்கு கொடிபிடித்து கோஷமிடும் ஒரு கலாச்சார வாழ்க்கைக்கு நடுவே ரஜினியிடம் எதையுமே எதிர்ப்பார்க்காத அவரது கோடாணு கோடி ரசிகர்கள் ரஜினி நலம் பெற வேண்டும் என்று அன்பின் மிகுதியில் அப்போது தீமிதித்தார்கள், காவடி எடுத்தார்கள், மண் சோறு சாப்பிட்டார்கள், தமிழகமெங்கும் மதமாச்சர்யங்களைக் கடந்து ரஜினி மீண்டும் வரவேண்டும் என்றெல்லாம் வழிபாடுகள் நடத்தப்பட்டது. 


எம்.ஜி.ஆர் என்ற கலைப் பிம்பம் அரசியல் வாழ்க்கைக்கு வந்து முதல்வராய் அதிகாரபலத்தோடு வலம் வந்த காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை எல்லாம் தூக்கி சாப்பிட்டது ரஜினி மீது தமிழக மக்கள் வைத்திருந்த பாசம். ரஜினி அரசியலுக்கு வந்து நின்றால் தெரியும் அவரது பலம் என்று சவால் விட்டு அறைகூவல் விடுக்கும் பலதரப்பட்ட அரசியல்வாதிகளுக்கு நடுவே ரஜினியின் ரசிகர்கள் இப்போதெல்லாம் ரஜினி அரசியலுக்கு வரவே கூடாது என்று நினைக்கவும் தொடங்கி இருக்கிறார்கள்.

அரசியல் பிரவேசம் பற்றிய தனது நிலைப்பாட்டை மிகத் துல்லியமாய் ரஜினி கூறியதைப் போல இந்த நாட்டின் தலைமைப் பொறுப்புக்கு யார் வந்தாலும் நம் நாட்டின் அரசியலமைப்பு சட்டமும் இன்ன பிற  நடைமுறை சட்டங்களும் மக்கள் எதிர்ப்பார்க்கும் அளவிற்கு அவர்களை இயங்கவிடாது. தண்டிக்க ஒரு சட்டமும் தப்பிக்க பதினாறு வழிகளும் இருக்கும் சட்டங்களை வைத்துக் கொண்டு யாராலும் ஒரு மாற்றத்தையும் கொண்டுவரவும் முடியாது. இதை நாம் இந்தியா சுதந்திரமடைந்த தினத்திலிருந்து இன்று வரை நம் கண்கூடாகவே கண்டுகொண்டுதானிருக்கிறோம்.

ரஜினி சொன்னது போல அரசியல் புரட்சி ஒன்று ஏற்பட்டு நவீனகால சர்வதேச சமூகத்திற்கு இணையாய் நாம் திகழ வேண்டுமெனில் அடிப்படையில் ஒரு மாற்றம் ஏற்படவேண்டும். அது ஏற்படாமல் தலைமைப் பொறுப்புக்கு வரும் யாராலும் மிகப்பெரிய சமூக மாற்றத்தை கொண்டுவர இயலாது என்பதாலும் இத்தகைய நெருக்கடியான ஒழுங்குகள் கொண்ட ஒரு வரையறைகள் கொண்ட அரசியல்வாதியாய் இருந்து மனநிம்மதியை இழந்து அலைவதை விட தனக்கு கிடைத்திருக்கும் பணத்தையும் புகழையும் கொண்டு மனதிருப்தியோடு உதவிகள் செய்து வாழ்ந்து முடிக்கலாம் என்று ரஜினி நினைத்ததின் விளைவே அவரை அரசியலில் ஈடுபடாமல் இருக்க வைத்தது. பணம், புகழ், அதிகாரம், குடும்ப வாழ்க்கையில் வெற்றி என்று எல்லாவற்றிலும் சாதனைகள் புரிந்த ஒரு மனிதன் இது எல்லாம் எதுவும் கிடையாது என்று ஆன்மீகத்தின் மூலம் அறிந்து தான் யார்? இந்த வாழ்க்கை எவ்வளவு நிலையானது என்றெல்லாம் புரிந்த பின்பு.... ஆதாய அரசியல் சூழ் உலகிற்குள் நுழைய விரும்புவாரா என்ன...?

அரசியல்வாதிகள் அவர்கள் செய்யும் அரசியலால் எதை எதை அடைய விரும்புகிறார்களோ அல்லது விரும்பினார்களோ அதை எல்லாம் தன் காலுக்கடியில் போட்டு மிதித்து விட்டு இயல்பாய் வாழ்ந்து கொண்டிருக்கும் ரஜினியை சகாப்தன் என்று கூறாமல் வேறு யாரை சகாப்தன் என்று கூற முடியும்?

கோச்சடையானில் ரஜினி நடிக்கவே இல்லை வேறு யாரோ நடித்து ரஜினி போல முகமாற்றம் செய்யப்பட்டது, ரஜினி கோச்சடையான் படம் ஓடவேண்டும் என்பதற்காகத்தான் ட்விட்டருக்கு வந்திருக்கிறார், ரஜினிக்கு கோச்சடையான் படத்தை வெளியிட பயம் என்றெல்லாம் அவதூறு பேசும் பதர்களே... ரஜினி என்ற ப்ராண்ட்டை வைத்துக் கொண்டு அவர் இல்லாமலேயே இன்றைக்கு சம்பாதித்துக் கொண்டிருப்பவர்கள் எத்தனை லட்சம் பேர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? ரஜினியைப் பற்றி பேசுவதால் உங்களை சலிப்புடன் பார்த்துக் காறித் துப்புவதற்கு கூடும் கூட்டம்  மட்டும் பார்த்தாலே அவரது படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும் என்பது உங்களுக்குத் தெரியுமா..?

இதோ இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுதும் கோச்சடையான் ஜுரம் பிடித்து ஆட்ட ஆரம்பித்து விட்டது. மே 9 ரிலீஸ் என்று கேள்வி பட்டு பதினைந்து நாட்கள் முன்னதாகவே தியேட்டர்களைச் உலகமெங்கும் சூழ ஆரம்பித்து விட்டனர் அவரது ரசிகர்கள். கோச்சடையானைப் பற்றி பேசாத இந்தியர்கள் யாருமே கிடையாது. இந்திய மீடியாக்கள் அதிர்கின்றன..... தியேட்டர்கள் விழாக்கோலம் பூணத் தொடங்கி விட்டன...ரசிகர்கள் ஆர்ப்பரிக்க ஆரம்பித்து விட்டனர்..... 

சுமார் நான்காண்டுகளுக்குப் பிறகு ரஜினி என்னும் மாஸிவ் ப்ளாஸ்ட்டை தியேட்டரில் அனுபவித்து ரசிக்கும் சுகத்திற்காக கிறங்கிப் போய் கிடக்கும் இத்தனை கோடி ரசிகர்களையும் எப்படி வசியப்படுத்தினார் ரஜினி என்பது படைத்த கடவுளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். கோச்சடையான் என்னும் சலன வரைகலையில் உருவாக்கப்பட்ட இந்தத் திரைப்படம் ரஜினிக்கு மட்டுமல்ல இந்திய சினிமாவிற்கே ஒரு மைல் கல்லாவதோடு மட்டுமில்லாமல் ரஜினி ரசிகர்களுக்கு தீராத வரப்பிரசாதமாய் அமையப்போகிறது. நாம் கண்டு அனுபவித்த ரஜினி என்னும் காந்தத்தின் ஸ்டைல் மேஜிக்களை நவீன தொழில்நுட்பம் காலங்கள் கடந்தும் நம் தலைமுறையினருக்கு கொண்டு செல்ல இருக்கிறது....


ரஜினி என்ற பிம்பம் காலத்தால் அழியாததாய் நிலை நிறுத்தப்பட்டு இதே மோஷன் டெக்னாலஜி என்னும் தொழில்நுட்பத்தால் ஓராயிரம் கோச்சடையான்கள் உருவாக்கப்பட்டு இந்திய சினிமா வரலாற்றின் இதிகாச நாயகனாய் ரஜினி என்றென்றும் வாழத்தான் போகிறார். அதோடு மட்டுமில்லாமல் சிவாஜி ராவ் கெய்க்வாட் என்னும் மனிதன் ஒரு கண்டக்டராய் தன் வாழ்க்கையை ஆரம்பித்து எவரின் உதவியுமின்றி இந்திய சினிமாவில் அழிக்க முடியாத ஒரு சக்தியாய் நின்றதற்குப் பின்னால் அவர் கடந்து வந்த வேதனைகளும் வலிகளும், அவமானங்களும், கடுமையான உழைப்பும் கோடாணு கோடி பிள்ளைகளுக்கு மிகப்பெரிய உந்துசக்தியாய் நின்று வாழ்வின் பல உயரங்களை அவர்கள் தொடவும் உதவத்தான் போகிறது....


மே 23 வரை காத்திருங்கள் கோச்சடையானின் அதிரடிக்காக....



தேவா சுப்பையா...




Wednesday, May 7, 2014

அது அப்படித்தான்...!


அது அப்படித்தான். அதிகம் அலட்டிக் கொள்ளாது. வியாக்கியானங்கள் பேசி தன்னை புகழ்ந்து கொள்ளாது. சோகமாய் தலை சாயும் போது அதுவே தோள் கொடுக்கும். கீழே விழும் போது மடி கொடுக்கும். ஆதரவாய் எப்போதும் கரம் பற்றிக் கொள்ளும், பற்றும். கவிதையாய் பேசிக் கொண்டு உரைநடையாய் வாழும் மனிதர்களுக்கு நடுவே பேச வார்த்தைகளின்றி அது மெளனமாய் நடந்து கொண்டிருக்கும்.

அடிக்கடி உணர்ச்சிவசப்படும். கோபத்தில் ஊரையே தீக்கிரையாக்கும். நேசித்து நேசித்து பிரளயம் உண்டாக்கும். பிடிக்கும் என்று சொல்லும். பிடிக்காது என்றும் முகம் திருப்பிக் கொள்ளும். பட்டாம் பூச்சியாய் எப்போதும் பட படக்கும், அந்த படப்டப்பினை கண்டும் மகிழும். அதற்கு தேவைகளென்று ஒன்றுமே கிடையாது. ஒரு கோப்பை தேநீரோடு ஆகாயத்தை வேடிக்கப் பார்த்தபடியே கண் சிமிட்டும், மழை பெய்யும் பொழுதினில் வேண்டுமென்றே குடை மறந்து நடை பயில வா என்று அழைக்கும்.

பேசிக் கொள்ள உலகமே அதனிடம் இருக்கும். பேசாமல் இருக்கவும் அதே உலகம் அதனிடம் இருக்கும். நெகிழ்ச்சியாய் உச்சிமுகந்து, ஆழமாய் நெற்றி வழி தன் அன்பினை செலுத்தும், வாங்கியும் கொள்ளும். கவிதை எழுதுகிறேன் என்று ஏதேதோ எழுதிக் கிறுக்கும். எழுதிக் கிறுக்கியதை பெருங்கவிதை என்று அதுவே வாசித்து விழிகள் விரித்து வாய் பிளக்கும். இருக்கும் போது உதாசீனப்படுத்தும். இல்லாத போது ஏங்கி அழும்.....

ஆமாம் காதல்தான் எத்தனை வலியது. எத்தனை இனியது.

இதோ..
இங்கே உனக்காக ஒரு கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன்
அதில் நாம் சந்தித்த நாளில் தொடங்கி
ஒவ்வொரு கணத்திலும் நிகழ்ந்தவற்றை
ஒரு பொக்கிஷத்தை அடைத்து வைப்பது போன்று
என் வார்த்தைகளுக்குள் அடைத்துக் கொண்டிருக்கிறேன்...
மழைநாளில் நீ எனக்கு கம்பளி போர்த்தியதும்
கடுங்குளிரில் நீ நடுங்கிக் கொண்டிருந்த போது
உனக்கு நான் கால் பிடித்து விட்டதும் 
இந்த கவிதையில் கவிதையைப் போல தோற்றமளிக்க முயன்றாலும்
நிஜத்தில் அந்த நாட்கள்தான் எத்தனை சுகமானவை...
ஒரு நாள்...
என்னால் நடக்க முடியாமல் மூச்சிறைத்து நின்றபோது
நான் அறியாதபடி கண் கலங்கி எனக்காக
மெதுவாக நடந்து சென்றதை நான் கவனித்து...
கலங்கிப் போனது உனக்குத் தெரியுமா?
காலத்தின் மாற்றத்தில்
நாம் வலுவிழந்து கொண்டே இருந்தோம்...
ஆனாலும்...
உனக்கு மட்டுமே வயதாகிறது என்பாய்
எனக்கு வயதே ஆகதென்று கூறி உன் காதலால்
என்னை எப்போதும் இளைஞனாகவே வரைந்து கொள்வாய்...
 உன் நெஞ்சினில் காது வைத்துக் கேட்கச் சொல்லி
அங்கே துடிப்பது இதயமல்ல உன் மீதான காதலென்பாய்...
மிச்சமில்லாமல் வாழ்ந்து விட்டோம் என்று அடிக்கடி நீ சொல்வாய்
இதோ மிச்சமிருக்கும் உன் நினைவுகளோடு
வழக்கம் போல கிறுக்கிக் கொண்டிருக்கிறேன்...
இதை நீ கவிதை என்று சொன்னாலும் சரி
அல்லது
காதல் என்று சொன்னாலும் சரி...



தேவா சுப்பையா..




Monday, May 5, 2014

கனவுகள் விற்பனைக்கு...!


என் நினைவுகளை என்ன செய்து கொண்டிருக்கிறாய் நீ? தூரத்தில் கண்சிமிட்டிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்கள் ஒன்றும் சொல்வதில்லையா உன்னிடம்? நிலவற்ற கருமை நிற வானத்தில் மூழ்கிக் கிடக்கையில் அந்த பெருமெளனம் எதை நினைவு படுத்தியது உனக்கு...?

ஏதோ ஒரு பாடல் கொண்டு வந்து கொட்டும் ஞாபகங்களுக்கு கூடவா ஒன்றும் தெரியாது...? யாரிடம் பேசுகிறேன் என்று தெரியவில்லை. இருந்தாலும் இப்படி வெறுமனே பேசுவது பிடித்திருந்தது.

இந்த வனத்திற்குள் நான் வந்து வெகுநாளாகிவிட்டது...! நான் வந்தமர்ந்த மலைமுகட்டிலிருக்கும் இந்தப் பெரு மரத்தின் அடியில் என்னைச் சுற்றி புற்கள் வளர்ந்தும் விட்டன. காலம் வேகமாய் நகர்ந்து கொண்டிருப்பதாய் தூரத்து வானத்தின் நீலத்தில் நீந்திக் கொண்டிருந்த ஒற்றை மேகம் என்னிடம் ஒரு மழலையாய் சொல்ல முயன்று கொண்டிருந்தது. ரோம் நகரம் அழிந்து போய் அதே வேகத்தில் மீண்டெழுந்து கொண்டதாம். கிரேக்கத் தத்துவ ஞானிகளை எல்லாம் புதைத்த இடங்களில் இப்போது தொழிற்சாலைகளை கட்டிக் கொண்டிருக்கிறார்களாம்... பிரமீடுகளுக்குள் படுத்துக் கிடக்கும் ராஜாக்கள் மட்டும் தங்கள் உறக்கத்தை யாரும் கெடுத்து விடக்கூடாது என்பதில் வெகு கவனமாயிருக்கிறார்களாம்....

பித்தக்கரஸ் தேற்றத்தை அடித்து அடித்து எழுதி நிறுவிக் கொண்டிருந்த போது அது பெருந்தச்சனுக்கு தஞ்சாவூர் பெரியகோயில் கட்ட உதவக்கூடும் நின்று நினைத்துப் பார்த்திருப்பானா என்ன? எதுவோ நிகழுகிறது... அது எங்கோ கற்பனையாய் உதிக்கிறது. யாரும் சொல்லாமலேயே சூட்சும அதிர்வுகளாய் சத்தியங்கள் மூளைகளில் கால் உதைத்து யோனி விட்டு வெளியே வரும் சிசுவாய் ஜனித்துக் கொண்டே இருக்கின்றன. குவளை மலர்களை இப்போது காண முடிவதில்லை, குருக்கத்தி என்ற பூ இருந்ததே பலருக்குத் தெரியாது, சேக்கிழாருக்கும் தழிழுக்கும் என்ன தொடர்பிருக்கிறது என்று கேட்பவன் தன்னை ஒரு தமிழ் தேசியவாதி என்று அறிமுகம் செய்து கொள்கிறான்....

முரண்களும் ஆச்சர்யங்களும் நிறைந்த இந்த உலகத்தில் வயிறுகள்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றன, அதற்குப் பிறகுதான் எல்லாமே. மரணம் தனக்கு நிகழ்ந்து விடாது என்று ஒவ்வொருவனும் நம்புகிறான் அவன் இறக்கும்வரை.

இந்த வனம் எனக்கு வசதியாய் இருக்கிறது. இங்கே சட் சட்டென்று நினைத்த விசயங்களுக்குள் போய் விழுந்து, ஊன்றி விருட்சமாய் எழுந்து நின்று கொள்ள ஒரு வசதி இருக்கிறது. போலி ஆன்மீகவாதிகளின் தொந்தரவு இல்லை, வனப்பு நிறை உடல் கொண்ட பெண்கள் யாருமில்லையாதலால் பிரபஞ்சத்தின் மைய ஈர்ப்பிற்கு இங்கே வேலையே கிடையாது. சொல்லவும் கேட்கவும் ஒருவருமில்லை.. இன்னும் சொல்லப் போனால் புதிதாய் அறிந்து கொள்ள ஒன்றுமே இல்லை. இருப்பதைக் கண்டு எப்போதும் படுத்துக் கிடக்கிறதே அதோ அந்த மேற்குத் தொடர்ச்சி மலைகள் அவற்றுக்கு என்ன கத்திரிக்காய் அறிவு அவசியம் இருக்கிறது? மெல்லிய அட்டைப் பூச்சிகளைப்போல பாறைகளின் இண்டு இடுக்குகளில் கசிந்து, பின் ஒன்றும் தெரியாதது போல நான் எப்போதும் இப்படித்தான் பிரம்மாண்டமாய் இருப்பேன் என்ற கர்வத்தோடு கரைகளை உரசியபடி நகர்ந்து செல்கிறதே நதி அதற்குத்தான் என்ன நோக்கமிருக்க முடியும்...

ஜூலியட்டுக்காக விஷம் குடித்த ரோமியோ அவசரப்பட்டிருக்க கூடாதுதான் என்றாலும் இருவரும் இறந்து போனால்தான் காதல் நித்யமாய் நிலைத்து நிற்கும் என்று ஷேக்ஸ்பியர் என்ற மகா கவிஞன் நினைத்திருப்பான் போலும். வாழ்க்கையின் ஒவ்வொரு நொடிக்குள்ளும் பதுங்கிக் கிடக்கும் ரகசியம் இதுவென்று கணிக்க முடியாதிருப்பதுதான் இங்கே மிகப்பெரிய வசீகரம் என்ற புதிரினை காதலுக்குள் வைத்து துடிக்க வைத்து விட்டான் ஷேக்ஸ்பியர் இதோ... இத்தனை காலம் ஆகியும் அதே  துடிப்போடுதான் இருக்கிறார்கள் ரோமியோவும் ஜுலியட்டும்.

ஒரு காற்றைப் போல பயணம் செய்து கொண்டிருப்பதுதான் எவ்வளவு சுகம்? ஆசைகள் இல்லாத தேவைகளோடு மட்டும் வாழ்வது எவ்வளவு இதம்? எத்தனை மிதமானது இந்த வாழ்க்கை என்று யோசித்தபடியே நான் மூன்றாவது மிடறு தேநீரை என் தொண்டைக்குள் இறக்குகிறேன். அது நெஞ்சு தொட்டு இதமாய் சூட்டினை பரவச் செய்து வயிறு வரை பயணிப்பதை நீண்ட பெருமூச்சோடு பார்த்துக் கொண்டிருக்கிறேன்....

காதல் என்னை ஒன்றும் செய்வதில்லை. வெகு சாதுவாய் அது என்னை வாஞ்சையாய் அணைத்துக் கொள்கிறது. எதையும் தேடச் சொல்வதில்லை. அது காற்றாய் என் முடி கோதுகையில் சட்டென்று விழித்துக் கொள்ளும் ஏதோ ஒரு ப்ரியமான பெண்ணின் நினைவுகளை குளிர் காலத்தில் குழந்தையை போர்த்தி எடுத்துச் செல்லும் ஒரு தாயின் பரிவோடு நெஞ்சோடு அணைத்துக் கொண்டு எங்கே செல்கின்றோம் என்ற பிரக்ஞை இன்றி நினைவுகளுக்குள் தன் வசதி போல பயணித்துக் கொள்கிறது. நான் வந்து தங்கி இருக்கும் இந்த மலைப்பிரதேசத்தில் குளிர் அதிகமாய் இருக்கிறது. எழுந்து நடக்கலாம் என்று தீர்மானித்தேன். இறுக்கமாய் போர்த்திக் கொண்ட கம்பளிக்குள் கதகதப்பாய் நடப்பதை விட ஒரு பெருஞ்சுகம் இருக்கிறதா என்ன இந்த வாழ்க்கையில்...?

எங்கோ தூரத்திலிருந்து மிதந்து வரும் இசை ஒன்று காதைத் தடவிச் செல்கிறது...

ஆசையா காத்துல தூதுவிட்டு
ஆடிய பூவுல வாட பட்டு
சேதிய கேட்டொரு ஜாட தொட்டு
பாடுது பாட்டு ஒன்னு
குயில் கேக்குது பாட்ட நின்னு
.....
....
உள்ளுக்குள் காதல் முரட்டுத்தனமாய் நிரம்பத் தொடங்கியது. ததும்பிக்கொண்டிருக்கும் காதல் யாருக்கானது என்று தெரியவில்லை என்றாலும் இந்த ததும்பல் அலாதியானது என்று யோசித்தபடியே நடந்து கொண்டிருக்கிறேன்... ஷேக்ஸ்பியர் நிறுவ முயன்றதும் பித்தகரஸ் நிறுவ முயன்றதும் ஒன்றாய் இருக்குமோ மீண்டும் ஒரு தர்க்க வாய்ப்பாட்டிற்குள் தடதடவென்று ஒரு சிறு பிள்ளையாய் மனம் ஓடத் தொடங்கியது....

யாருமற்ற இந்த வனம் எனக்குப் பிடித்திருக்கிறது.



தேவா சுப்பையா...


Thursday, May 1, 2014

காதல் சுகமானது....!


இப்போதும் கூட அப்படியேதானிருக்கிறது காதல்....! எதுவோ வேண்டுமென்ற ஆசைகளை எல்லாம் காலம் பக்குவக் கத்திகளை வைத்து வெட்டி எறிந்த பின்பும் இன்னமும் நம்மை இழுத்து பிடித்து வைத்துக் கொண்டிருப்பது எது என்று யோசித்துப் பார்க்கையில் இன்னும் அழுத்தமாய், ஆழமாய் காதல் என்றால் என்னவென்று புரிகிறது. எத்தனை எழுதினாலும் அலுத்துப் போகாத காதல் இருக்கும் போது வாழ்க்கை என்ன செய்து விடும் நம்மை...?

ஏகாந்தக் கனவுகளுக்கு என்ன பெயர் இடுவது? எதையும் எதிர்பார்க்காத நேசத்தை எப்படி எழுதுவது? கடைசியாய் நாம் ஒன்றாய் அமர்ந்திருந்த அந்த மாலைக்குத்தான் எவ்வளவு பொறுமை இருந்திருக்க வேண்டும் தேன்மொழி...? எதுவுமே பேசிக்கொள்ளாத கனத்த நிமிடங்களைச் சுமந்து கொண்டு எப்படித்தான் நகர்ந்திருக்கும் அன்றைக்கு காலம்...? காதலியைப் பெறும் போது காதல் பரபரப்பான உற்சாகத்துக்கு நடுவே வலுவிழந்ததாய் போனாலும் காதலியை இழக்கும் தருணத்தில் அது ஒரு தாயாய் கட்டியணைத்து ஆசுவாசப்படுத்தத்தான் செய்கிறது. திருமணத்துக்காக காதலித்துக் கொள்ளும் சமூக நடைமுறையில் காதலிப்பதற்காக காதலிக்கச் சொல்லிக் கொடுத்த காதலோடு தான் நான் இன்னமும் வசித்துக் கொண்டிருக்கிறேன்....

தேன்மொழி தாலியை அடிக்கடி சரி செய்தபடி தன்னோடு பேசிக் கொண்டிருந்தது பிரசாத்துக்கு கொஞ்சம் சங்கடமாயிருந்தது. 

தாம்பத்தியத்திற்குள் காதல் தைரியமாய் எட்டிப்பார்க்கும்.... இன்னும் சொல்லப் போனால் எல்லா உறவுகளுக்கும் நடுவே எழும் நேசங்களில் எல்லாம் சுதந்திரமாய் காதல் சுற்றிவரும். காதலைக் கட்டிப் போடவோ அல்லது விளக்கம் சொல்லி விதிவிலக்காக ஆக்கவோ முடியவே முடியாது. இந்த உலகின் மூலை முடுக்கெல்லாம் அது தடையின்றி திமிராய்ச் சுற்றிவரும். என் செத்துப் போன அப்பாத்தாவின் மீது இன்னமும் அது மையல் கொண்டிருக்கிறது. அவளின் வாஞ்சையான பேச்சையும், அனுசரனையான உடல் மொழியையும், நட்சத்திரமாய் ஜொலிக்கும் மூக்குத்தியையும், முழுதாய் நரைத்த தலையில் இடைஇடையே எட்டிப்பார்த்து சிரிக்கும் கருப்பு முடிகளையும்.... அள்ளிக் கட்டிய கொண்டையையும், கண்டாங்கிச் சேலையையும், குலுங்க குலுங்கச் சிரிக்கும் போது மூடிக் கொள்ளும் சிறு கண்களையும், தன் கணவன் மீதிருந்த ப்ரியத்தை வலது கையில்  பச்சையாய் குத்தியிருந்த அவளது காதலையும் .....

இன்னமும் விட்டு விலகவே இல்லை என் காதல் .

காதல் அப்படித்தான். அது ஒரு காட்டாறு, அது ஒரு புயல், அதுவே தென்றல். அது உருவாக்கும், அழிக்கும், ஆடும், பாடும் எல்லா வேடமும் இட்டுக் கொள்ளும் தன் சுயத்தை மாற்றிக் கொள்ளாமல். அதேபோல்தான் உன் தாம்பத்தியத்திற்குள்ளும் காதல் எட்டிப்பார்த்திருக்கும், உன் வாழ்க்கைத் துணையாய் அது வாழ்ந்து சிரித்துக் கொண்டுமிருக்கும்... ஆனால் காதலுக்குள் எதுவுமே நுழைந்து விட முடியாது. இந்த உலகில் சுற்றிச் சுற்றி நிகழும் எல்லாவற்றுக்கும் காதல் அவசியமாயிருக்கிறது. காதலின்றி எந்த நிகழ்வும் ரசிக்கத் தகுந்ததாய் இருக்க முடியாது ஆனால்....காதலுக்கு எதன் தேவையும், அவசியமும் கிடையவே கிடையாது....

எதன் பொருட்டோ நிகழ்ந்தால் அது காதலுமாகாது........!

பிரசாத் பேசிக் கொண்டிருந்தான். மீண்டும் தேன் மொழியைப் பார்ப்போம் என்று அவன் நினைத்துப் பார்த்திருக்கவில்லை. 

தேன் மொழி பிரசாத்தை நிமிர்ந்து பார்த்தாள்....

மூணு வருசம் ஆச்சுல்ல பிரசாத்... நாம கடைசியா பாத்து......எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல....உன்னோட என்னால பேசாமவும் இருக்க முடியலை, ஆனா பேசுறது தப்புன்னும் தோணுது...

கோயில் பிரகாரத்தில் யாரும் இல்லாமல் இருந்தார்கள். பெரும்பாலும் பிரதோஷ தினத்தில் சிவன் கோயிலுக்கு வரும் கூட்டம் மற்ற நாட்களில் எட்டிப்பார்ப்பதே இல்லை. கபாலி யார்? ஏன் இங்கே கோயில் வந்தது...? எதற்கு கோயிலுக்கு வரவேண்டும்..? கோயிலில் என்ன கிடைக்கிறது? என்றெல்லாம் பார்த்து வருவதில்லை சனம்....

பிரதோஷ தினத்தில் நந்தியிடம் வேண்டுகோள் வைத்தால் வாழ்க்கையில் பணக்காரர்களாகி விடலாம் என்ற ஆசை. முட்டி முட்டி சாமி கும்பிடுகிறார்கள். அவசர அவசரமாய் ஓம்நமசிவாய சொல்கிறார்கள். சம்போ மகாதேவா என்கிறார்கள். உடலை பவ்யமாய் வைத்துக் கொள்கிறார்கள். தாழ்ந்த குரலில் பேசுகிறார்கள். பாவமாய் முகத்தை வைத்துக் கொள்கிறார்கள். சிவபுராணத்தை சப்தமாய் சொல்கிறார்கள். ஏனோ ஒரு வருத்தத்தை விரும்பியே வரவழைத்துக் கொண்டு சோகமாய் பிரகாரம் சுற்றி வருகிறார்கள். எல்லாம் முடிந்து வீட்டுக்கு திரும்பும் போது ஊர் வம்பு பேசுகிறார்கள். சாமி கும்பிடுவதை ஒழுக்கமாய் நினைத்துக் கொள்கிறார்கள்.... அப்படி  கும்பிடாவிட்டால் ஒரு குற்ற உணர்சி வந்துவிடுகிறது இவர்களுக்கு. இந்தக் குற்ற உணர்ச்சி மதமாச்சர்யம் பார்க்காமல் எல்லா மதத்தில் இருப்பவர்களுக்கும் வந்து விடுகிறது. அப்படி வரவைத்ததுதான் மதவாதிகளின் வெற்றியும் கூட....

ஆன்மீகம் என்பது தேடல் என்பது விளங்காதவரை வாழ்க்கை என்பது என்ன என்று யாருக்கும் விளங்கப் போவதில்லை. வாழ்க்கை விளங்காத போது காதல் என்னவென்று எப்படி விளங்கும்? காதல் என்னவென்று விளங்காமல் போனதால் ஏற்பட்ட அபத்தம்தான் இன்றைக்கு பூமியை பிடித்திருக்கும் மிகப்பெரிய பிணி. காதல் காதல் என்று உச்சரித்தால் எல்லோருடைய காதிலும் காமம், காமம் என்றுதான் பெரும்பாலும் விழுகிறது.

தேனுவை நிமிர்ந்து பார்த்தான் பிரசாத்.

நாம் சந்தித்தது தற்செயலானதுதான் தேனு...!  எனக்குள்ள என்ன இருக்குன்னு நான் உன்கிட்ட சொன்னேன்.  உணர்வோடு பேசினதால கொஞ்சம் உரைநடையாவே சொல்லிட்டேன்...

உன்னை காதலிச்சது உண்மை. இப்போ காதலிக்கிறதும் உண்மை. காதலை நான் திருமணத்தோட தொடர்புபடுத்திப் பார்த்தது கிடையாது. பார்க்கப்போறதும் கிடையாது. நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி காதலிக்க காதல் மட்டும் போதும். எனக்கு உன்னைப் பிடிக்கும்... நாம காதலிச்சோம் ஆனா திருமணம் செஞ்சுக்கல, செஞ்சுக்குற சூழல் அமையலை... அதுக்காக உன்னை நினைச்சு ஏங்கி நான் வேறு திருமணம் செய்யாம இருக்கப் போறதும் கிடையாது. திருமணங்கறது சமூகத் தேவை. வாழ்க்கைச் சுழற்சியின் நிர்ப்பந்தம். அந்த நிர்ப்பந்தம் இல்லாம போற வாழ்க்கை அமைப்பு எனக்கு இல்ல... அதனால அதை விட்டு நான் விலகவும் முடியாது. அதே நேரத்துல நீ, உன் மீதிருந்த காதல் அது எல்லாம் இல்லவே இல்லன்னு மறைச்சுக்கிட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரியும் வாழ முடியாது....

உனக்கு ஒரு பாதை... எனக்கு ஒரு பாதை....

என் காதல் என் நினைவுகள். உன் காதல் உன் நினைவுகள். என்கிட்ட பேச குற்ற உணர்ச்சி வர்றதுக்கு காரணம் காதலை இன்னமும் எதிர்ப்பார்ப்புக்குள்ளயே நீ வச்சிட்டு இருக்கறதுதான்....

எதிர்பாராம உன்னை நான் சந்திச்சேன். காதல் வயப்பட்டோம். சூழல் நம்மள வேறு, வேறு திசைக்கு விரட்டிச்சு, இப்போ ஏதிர்பாராம மறுபடி கோயில்ல சந்திச்சேன். நாம சந்தோஷமாவே மறுபடி நம்ம திசையில நடக்கப் போறோம்... அவ்ளோதான்...!

இன்னும் சொல்லப்போனால்...நீ குற்ற உணர்ச்சியோட என்னை சந்திக்கிறதும், பேசுறதும் இனிமே அமையவே கூடாதுன்னும் தோணுது.... 

கோயிலுக்கு ஏதேதோ எண்ணங்களோட மனுசங்க வர்ற மாதிரி வாழ்க்கைக்குள்ளயும் வந்துடுறாங்க  தேனு....! இங்க திருமணம், தாம்பத்யம், கொடுக்கல், வாங்கல், காசு, பணம், சொத்து, பிள்ளைங்க, படிப்பு, கடமைகள் தாண்டி இன்னமும் நிறைய இருக்கு....

பிரசாத் சிரித்தான்.

எப்பவும் போல இப்பவும் நீயே பேசி முடிச்சுட்ட பிரசாத். என்னைச் சுற்றி இருக்குற உலகம் நீ சொன்னதை விளங்கிக்காது.... ஆனா உன்னை எனக்குத் தெரியும். எல்லாத்துக்கும் மேல உன்னை ரொம்பப் பிடிக்கும்....

என்றாவது ஒரு நாள்...
நான் இறந்த செய்தி கேள்விப்பட்டால்...
என் கல்லறையில் வந்து
செடி ஒன்றை நட்டு வைத்து விட்டுப் போ...
என் ப்ரியக் காதலனே...!

சொல்லிவிட்டு கண்ணீரை துடைத்துக் கொண்டாள்  தேன்மொழி... கிளம்பலாம்... ப்ரசாத்....... என்றாள்.

எப்போதும் போல இனிமேலும்
உனக்கான கவிதை வரிகளை
நான் காதல் என்ற பெயரில்
கிறுக்கிக் கொண்டுதான் இருப்பேன்...
என் வார்த்தைகளுக்குள் ஊன்றி நிற்கும்
மெளன மரத்தின் கிளைகளில்
கூவிக் கொண்டிருக்கும் குயில்கள்
எல்லாம் உனக்கான பாடலைத்தான்
பாடிக் கொண்டிருக்கும்....

நீ கிளம்பு தேன்மொழி... நான் கொஞ்ச நேரம் ஆகும் கிளம்ப... சிரித்தபடியே சொன்னான் பிரசாத். 

தேன்மொழி போய் வெகுநேரம் ஆகியும் கோயில் வாசலைப் பார்த்தபடி இருந்த பிரசாத் சம்மணமிட்டு அமர்ந்து கண்களை மூடிக் கொண்டான்.

இனிமேல் தேனை சந்திக்க வைத்து விடாதே காலமே.......

யோசித்தபடியே தன்னுள் காணாமல் போயிருந்தான்...!



தேவா சுப்பையா...