Pages

Monday, May 5, 2014

கனவுகள் விற்பனைக்கு...!


என் நினைவுகளை என்ன செய்து கொண்டிருக்கிறாய் நீ? தூரத்தில் கண்சிமிட்டிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்கள் ஒன்றும் சொல்வதில்லையா உன்னிடம்? நிலவற்ற கருமை நிற வானத்தில் மூழ்கிக் கிடக்கையில் அந்த பெருமெளனம் எதை நினைவு படுத்தியது உனக்கு...?

ஏதோ ஒரு பாடல் கொண்டு வந்து கொட்டும் ஞாபகங்களுக்கு கூடவா ஒன்றும் தெரியாது...? யாரிடம் பேசுகிறேன் என்று தெரியவில்லை. இருந்தாலும் இப்படி வெறுமனே பேசுவது பிடித்திருந்தது.

இந்த வனத்திற்குள் நான் வந்து வெகுநாளாகிவிட்டது...! நான் வந்தமர்ந்த மலைமுகட்டிலிருக்கும் இந்தப் பெரு மரத்தின் அடியில் என்னைச் சுற்றி புற்கள் வளர்ந்தும் விட்டன. காலம் வேகமாய் நகர்ந்து கொண்டிருப்பதாய் தூரத்து வானத்தின் நீலத்தில் நீந்திக் கொண்டிருந்த ஒற்றை மேகம் என்னிடம் ஒரு மழலையாய் சொல்ல முயன்று கொண்டிருந்தது. ரோம் நகரம் அழிந்து போய் அதே வேகத்தில் மீண்டெழுந்து கொண்டதாம். கிரேக்கத் தத்துவ ஞானிகளை எல்லாம் புதைத்த இடங்களில் இப்போது தொழிற்சாலைகளை கட்டிக் கொண்டிருக்கிறார்களாம்... பிரமீடுகளுக்குள் படுத்துக் கிடக்கும் ராஜாக்கள் மட்டும் தங்கள் உறக்கத்தை யாரும் கெடுத்து விடக்கூடாது என்பதில் வெகு கவனமாயிருக்கிறார்களாம்....

பித்தக்கரஸ் தேற்றத்தை அடித்து அடித்து எழுதி நிறுவிக் கொண்டிருந்த போது அது பெருந்தச்சனுக்கு தஞ்சாவூர் பெரியகோயில் கட்ட உதவக்கூடும் நின்று நினைத்துப் பார்த்திருப்பானா என்ன? எதுவோ நிகழுகிறது... அது எங்கோ கற்பனையாய் உதிக்கிறது. யாரும் சொல்லாமலேயே சூட்சும அதிர்வுகளாய் சத்தியங்கள் மூளைகளில் கால் உதைத்து யோனி விட்டு வெளியே வரும் சிசுவாய் ஜனித்துக் கொண்டே இருக்கின்றன. குவளை மலர்களை இப்போது காண முடிவதில்லை, குருக்கத்தி என்ற பூ இருந்ததே பலருக்குத் தெரியாது, சேக்கிழாருக்கும் தழிழுக்கும் என்ன தொடர்பிருக்கிறது என்று கேட்பவன் தன்னை ஒரு தமிழ் தேசியவாதி என்று அறிமுகம் செய்து கொள்கிறான்....

முரண்களும் ஆச்சர்யங்களும் நிறைந்த இந்த உலகத்தில் வயிறுகள்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றன, அதற்குப் பிறகுதான் எல்லாமே. மரணம் தனக்கு நிகழ்ந்து விடாது என்று ஒவ்வொருவனும் நம்புகிறான் அவன் இறக்கும்வரை.

இந்த வனம் எனக்கு வசதியாய் இருக்கிறது. இங்கே சட் சட்டென்று நினைத்த விசயங்களுக்குள் போய் விழுந்து, ஊன்றி விருட்சமாய் எழுந்து நின்று கொள்ள ஒரு வசதி இருக்கிறது. போலி ஆன்மீகவாதிகளின் தொந்தரவு இல்லை, வனப்பு நிறை உடல் கொண்ட பெண்கள் யாருமில்லையாதலால் பிரபஞ்சத்தின் மைய ஈர்ப்பிற்கு இங்கே வேலையே கிடையாது. சொல்லவும் கேட்கவும் ஒருவருமில்லை.. இன்னும் சொல்லப் போனால் புதிதாய் அறிந்து கொள்ள ஒன்றுமே இல்லை. இருப்பதைக் கண்டு எப்போதும் படுத்துக் கிடக்கிறதே அதோ அந்த மேற்குத் தொடர்ச்சி மலைகள் அவற்றுக்கு என்ன கத்திரிக்காய் அறிவு அவசியம் இருக்கிறது? மெல்லிய அட்டைப் பூச்சிகளைப்போல பாறைகளின் இண்டு இடுக்குகளில் கசிந்து, பின் ஒன்றும் தெரியாதது போல நான் எப்போதும் இப்படித்தான் பிரம்மாண்டமாய் இருப்பேன் என்ற கர்வத்தோடு கரைகளை உரசியபடி நகர்ந்து செல்கிறதே நதி அதற்குத்தான் என்ன நோக்கமிருக்க முடியும்...

ஜூலியட்டுக்காக விஷம் குடித்த ரோமியோ அவசரப்பட்டிருக்க கூடாதுதான் என்றாலும் இருவரும் இறந்து போனால்தான் காதல் நித்யமாய் நிலைத்து நிற்கும் என்று ஷேக்ஸ்பியர் என்ற மகா கவிஞன் நினைத்திருப்பான் போலும். வாழ்க்கையின் ஒவ்வொரு நொடிக்குள்ளும் பதுங்கிக் கிடக்கும் ரகசியம் இதுவென்று கணிக்க முடியாதிருப்பதுதான் இங்கே மிகப்பெரிய வசீகரம் என்ற புதிரினை காதலுக்குள் வைத்து துடிக்க வைத்து விட்டான் ஷேக்ஸ்பியர் இதோ... இத்தனை காலம் ஆகியும் அதே  துடிப்போடுதான் இருக்கிறார்கள் ரோமியோவும் ஜுலியட்டும்.

ஒரு காற்றைப் போல பயணம் செய்து கொண்டிருப்பதுதான் எவ்வளவு சுகம்? ஆசைகள் இல்லாத தேவைகளோடு மட்டும் வாழ்வது எவ்வளவு இதம்? எத்தனை மிதமானது இந்த வாழ்க்கை என்று யோசித்தபடியே நான் மூன்றாவது மிடறு தேநீரை என் தொண்டைக்குள் இறக்குகிறேன். அது நெஞ்சு தொட்டு இதமாய் சூட்டினை பரவச் செய்து வயிறு வரை பயணிப்பதை நீண்ட பெருமூச்சோடு பார்த்துக் கொண்டிருக்கிறேன்....

காதல் என்னை ஒன்றும் செய்வதில்லை. வெகு சாதுவாய் அது என்னை வாஞ்சையாய் அணைத்துக் கொள்கிறது. எதையும் தேடச் சொல்வதில்லை. அது காற்றாய் என் முடி கோதுகையில் சட்டென்று விழித்துக் கொள்ளும் ஏதோ ஒரு ப்ரியமான பெண்ணின் நினைவுகளை குளிர் காலத்தில் குழந்தையை போர்த்தி எடுத்துச் செல்லும் ஒரு தாயின் பரிவோடு நெஞ்சோடு அணைத்துக் கொண்டு எங்கே செல்கின்றோம் என்ற பிரக்ஞை இன்றி நினைவுகளுக்குள் தன் வசதி போல பயணித்துக் கொள்கிறது. நான் வந்து தங்கி இருக்கும் இந்த மலைப்பிரதேசத்தில் குளிர் அதிகமாய் இருக்கிறது. எழுந்து நடக்கலாம் என்று தீர்மானித்தேன். இறுக்கமாய் போர்த்திக் கொண்ட கம்பளிக்குள் கதகதப்பாய் நடப்பதை விட ஒரு பெருஞ்சுகம் இருக்கிறதா என்ன இந்த வாழ்க்கையில்...?

எங்கோ தூரத்திலிருந்து மிதந்து வரும் இசை ஒன்று காதைத் தடவிச் செல்கிறது...

ஆசையா காத்துல தூதுவிட்டு
ஆடிய பூவுல வாட பட்டு
சேதிய கேட்டொரு ஜாட தொட்டு
பாடுது பாட்டு ஒன்னு
குயில் கேக்குது பாட்ட நின்னு
.....
....
உள்ளுக்குள் காதல் முரட்டுத்தனமாய் நிரம்பத் தொடங்கியது. ததும்பிக்கொண்டிருக்கும் காதல் யாருக்கானது என்று தெரியவில்லை என்றாலும் இந்த ததும்பல் அலாதியானது என்று யோசித்தபடியே நடந்து கொண்டிருக்கிறேன்... ஷேக்ஸ்பியர் நிறுவ முயன்றதும் பித்தகரஸ் நிறுவ முயன்றதும் ஒன்றாய் இருக்குமோ மீண்டும் ஒரு தர்க்க வாய்ப்பாட்டிற்குள் தடதடவென்று ஒரு சிறு பிள்ளையாய் மனம் ஓடத் தொடங்கியது....

யாருமற்ற இந்த வனம் எனக்குப் பிடித்திருக்கிறது.தேவா சுப்பையா...


No comments: