Pages

Friday, June 29, 2012

குளிர்....!
நடுக்கும் இந்த சமவெளியின்
பெருங்குளிரை இன்னும்
ரசிக்க வைக்கிறது 
நான் போர்த்தியிருக்கும் கம்பளி....!

***

முழு நிலவு ததும்பும் குளம்,
உடலோடு ஒட்டிக் கிடக்கும் 
குளிரை வேடிக்கைப் பார்க்கும்
வசீகர நட்சத்திரங்கள்....,
மரங்களோடு கிசு கிசுப்பாய் 
ரகசியம் பேசும் காற்று...!
ஓ....கடவுளே...
இந்த இரவை விடிய வைத்து விடதே...!

***

தொலைந்து போன 
ஆட்டுக்குட்டியை முன்னிரவில் 
தூரத்தில் தேடிக்கொண்டிருக்கிறான் 
மேய்ப்பனொருவன்....
நடுங்கும் குளிரில்... 
நான் கம்பளியை இழுத்துப் போர்த்தி
புரண்டு படுத்து..தொடர முயலுகிறேன்...
பாதியில் நின்று போன 
ஒரு இனிய கனவை...!

*** 

பனிக்காலம் ஆரம்பித்து விட்டது...
இரவுகளில் யாரும் வெளியே வரமாட்டார்கள்...
இனிதான்..
நான் நடுங்கிக் கொண்டாவது
வெளியே நடக்கவேண்டும்..!

***

அதிகாலை...பூசணிப்பூவின் மீது 
படர்ந்திருக்கும் பனி
புற்களை வெற்றுக் காலோடு 
நான் மிதிக்கையில் சிலீரென்று...
என் பாதங்களையும் தொடுகிறது...
நான் கடந்து போவதா..?
இல்லை...
அப்படியே நிற்பதா..?


தேவா. S


Wednesday, June 27, 2012

17M பாரிமுனை டு வடபழனி....!அந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சரிந்து விட்டது. ஓட்டுனரின் கவனக்குறைவுதான் காரணம் என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். விபத்துக்கள் எல்லாம் திட்டம் போட்டு காய்களை நகர்த்தியா நிகழ்கிறது. ஒரு கணத்தில் ஏற்படும் சறுக்கல் அது. இங்கே யாரையும் குற்றம் சொல்ல முடியாது.

17M பேருந்து பாரிமுனையிலிருந்து வடபழனிக்கு நகரும் முன்பு அந்த பேருந்தின் ஓட்டுனர் அந்த பயணத்தின் முடிவில் பணி முடிந்து வீடு திரும்ப திட்டமிட்டு இருக்கலாம். இல்லை அப்போதுதான் வீட்டிலிருந்து வந்த அலை பேசியை எடுத்து பேசி விட்டு பிறகு அழைக்கிறேன் என்று கூறி விட்டு பேருந்தினை நகர்த்தி இருக்கலாம். அவசரமாக பலமுறை வந்த அழைப்பினைக் கண்டு வேறு வழியில்லாமல் அந்த வளைவில் வண்டியை திருப்புகையில் ஒரு அவசரத்தில் அலை பேசியோடு கவனம் சிதறி வண்டியை தடுப்புச் சுவற்றில் மோதி இருக்கலாம்...

ஆமாம் அது நிகழ்ந்து விட்டது..சட்டென்று..! சட்டென்று நிகழ்ந்தால் தானே அது விபத்து...!

தலைகுப்புற கவிழ்ந்து கிடந்த அந்த பேருந்தினைப் பார்த்த பொழுது மனம் ஸ்தம்பித்து எதுவுமே கருத்து சொல்ல முடியாமல் முற்றிலுமாய் உள்ளுக்குள் முடங்கிக் கொண்டு தேம்பிக் கொண்டிருந்த போது....

எது கிடைத்தாலும் தத்ததம் தன் முனைப்பினை செய்தியாக்கும் ஆவலுடன் அலையும் மானுடக்கூட்டத்தின் நிலைத்தகவல்கள் சமூக வலைத்தளங்களில்  அலை பாய்ந்து கொண்டிருந்தன. ஆமாம்..செய்திகள் எல்லாம் செய்திகளாகப் போய் விடுகின்றன அந்த செய்தியில் நமக்கும் நமக்கு வேண்டியவர்களுக்கும்  நேரடியான தொடர்பில்லாத போது....!

என் சித்தப்பாவும், பெரியப்பாவும், அத்தையும், தம்பியும் மாமனும்...ஆத்தவும் அப்பாவும்... நண்பர்களும் அந்தப் பேருந்தில் சென்றிருந்தால் அது எனக்கோ அல்லது அப்படியாய் சென்றவரின் உறவுகளுக்கோ அந்த நிகழ்வு வாழ்க்கையின் சோகமாகிப் போகிறது. அந்த பேருந்தில் பயணப் பட்டவர்களின் பிள்ளைகளும், மனைவிகளும், கணவன்களும், சகோதரர்களூம் உறவுகளும்...இவர்களை வழியனுப்பி வைத்திருக்கலாம்...அல்லது வருகைக்காக காத்திருந்து இருக்கலாம்....

யாருக்கு அது பற்றி எல்லாம் கவலை...? பேருந்து கவிழ்ந்தது...ஒரு செய்தி...! 

அதை வாசித்து முதலில் நிறையப் பேருக்கு நாம் பகிர்வதும்,  அதில் இருக்கும் ஓட்டை உடைசல்களை ஆராய்ந்து சரி தவறுகளைப் பற்றி விவாதித்து சட்டாம்பிள்ளைத் தனம் செய்வதுமாய் நமது தினத்தின் சராசரியோடு கொஞ்சம் பரபரப்பாய் பேசித் திரியலாம். போக்குவரத்து காவலர்களின் கண்காணிப்பு போதாது என்றும், வண்டி ஓட்டும் போது செல் போன் பேசுவது தவறு என்றும்....,  பேருந்து பராமரிப்பு சுத்த மோசம் அதனால் அரசுதான் இதற்கு பொறுப்பு என்றும்..., அந்தப் பாலம் சரியில்லை உறுதியாயிருந்தால் விபத்து ஏற்பட்டிருக்காது என்றும்...

கோணங்கள் மாற்றி நாம் பேசிப் பேசி நமது அறிவு ஜீவித்தனத்தை ஏதோ ஒரு வகையில் வெளிகாட்டலாம்...ஒரு பிரச்சினையும் இல்லை. விவாதிக்கவும், அறிவுரை கூறவும் நமக்கு ஏதோ ஒரு நிகழ்வு அவசிப்பட்டுப் போகிறது அதற்கு ஏற்றார் போல ஏதோ ஒன்று தொடர்ச்சியாய் நடந்து கொண்டும் இருக்கிறது...அவ்வளவுதான்..!

40 பேருக்கு மேல் காயம்பட்டிருப்பதாய் கூறும் அந்த விபத்திற்கு முன்பு வண்டி பாலத்தின் தடுப்புச் சுவற்றை மோதி தலைகீழாக கவிழ ஆரம்பித்த அந்த நொடியில், அத்தனை மனிதர்களின் மனோநிலைகள் எப்படி இருந்திருக்க்கும்...? செய்வறியாது உயிர் போகும் சூழல் உள்ள ஒரு நிலையில் எத்தனை பேருக்கு தத்தம் பிள்ளைகள் பற்றியும் குடும்பம் பற்றியும் கலக்கம் ஏற்பட்டிருக்கும்....

அந்த பேருந்தினுள் நானிருந்தால் என்ன ஆகி இருப்பேன்...? என் தலை உடைந்திருக்குமோ...? கை கால் உடைந்து ஊனனாகி மூலையில் கிடக்கும் வாய்ப்பொன்றை சப்தமில்லாமல் அந்த சம்பவம் கொடுத்து அதனால் என் குடும்பம் வழியற்று சோகத்திற்குள் தூக்கி வீசப்பட்டிருக்குமோ...? கூச்சல்களுக்கும், இரத்தத்துக்கும் நடுவே....தப்பிப் பிழைக்க என்ன வழியென்று எல்லோரும் அங்கும் இங்கும் அலை பாயும் அந்த மரண நொடி.... எப்படி இருந்திருக்கும்...? 

வாழ்க்கை அழகானாது....ஆனால் அவ்வப்போது படு பயங்கரமானதும் கூட...!

இதையெல்லாம் யாரும் யோசித்து பார்த்திருக்க வாய்ப்பில்லை. அப்படி யோசித்துப் பார்க்கவேண்டிய அவசியமுமில்லை. ஏனென்றால் இது நாம் தொடர்புப்படாத ஒரு செய்தி...அவ்வளவுதான்....! 

வாழ்க்கையின் ஓட்டத்தில் நம்மைச் சுற்றி நிகழ்பவைகளை எல்லாம் செய்தியாய்ப் பார்க்கும் ஒரு அரக்க மனோநிலைக்கு நாம் மாறிப்போய் விட்டோம். அந்தப் பேருந்தில் போனவர்களின் உறவுகளாய், சொந்த பந்தங்களாய்,  நண்பர்களாய் நாம் இருந்திருந்தோமானால் என்ன செய்திருப்போம்......?

பேசவும், விமர்சிக்கவும்...ஆராய்ச்சிய செய்யவும் குற்றம் சொல்லவும் வார்த்தைகளின்றி..... ஓ.....கடவுளே.ஏன் இப்படி எல்லாம் நிகழ்கிறது..? என்று இல்லாத ஒரு கடவுளை நோக்கி மண்டியிட்டு...  கண்ணீர் விடுவோம்தானே....!

ஆமாம்...

திட்டமிட்டு, கவனமுடன் இருக்கும் போது நிகழ்வது எப்படி விபத்தாகும்...? கவனக் குறைவில் எதிர்பாராமல் நிகழ்வதுதானே விபத்து...! 

அந்தப் பேருந்தில் சென்ற அத்தனை பேரும் நலம் பெற்று வரவும்..., அவர்கள் குடும்பத்தினர் அனைவரும் வலுவாய் திடமாய் இருந்து இந்த சூழலை எதிர் கொண்டு....மீண்டு வரவும் இல்லாத ஒரு கடவுளை பார்த்து வேண்டி நானும் கேட்கிறேன்....

ஓ.....கடவுளே.....ஏன் இப்படி எல்லாம் நிகழ்கிறது...?!!!!!


தேவா.  S

Sunday, June 24, 2012

ரியாலிட்டி டி.வி ஷோக்களும், மக்களின் அறியாமையும்...!
தொடர்ச்சியாக பல நாட்கள் ஸீ தமிழ்த் தொலைக்காட்சியில் அக்கா நிர்மலா பெரியசாமி நடத்தும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியைப் பாத்து, பாத்து மெய் சிலிர்த்துப் போய் ஒரு கட்டுரை எழுதும் நிலைக்கு வந்தே விட்டேன் என்றால் பாத்துக்கோங்களேன்..!

மனித சுவாரஸ்யத்தின் உச்சம் என்ன தெரியுமா? 

அடுத்த வூட்டு பிரச்சினைய வேடிக்கைப் பாக்குறது. தான் எக்கேடு கெட்டுப் போனாலும் சரி அடுத்தவன பாத்து நாலு தப்பு கண்டு பிடிச்சு குத்தம் சொல்லாட்டி நம்ம ஆளுகளுக்கு மோட்சமே கிடைக்காது. தெருவுல நடக்குற சண்டைய கைய கட்டிக் கிட்டு வேடிக்கை பாக்குறதுல ஆரம்பிக்கிற இந்த சுவாரஸ்யம், பக்கத்து வீட்டுல பொண்டாட்டி புருசன் சண்டைய ஒட்டுக் கேக்குறதுல ஆரம்பிச்சு, தெருவுல இருக்க எல்லா விசயத்தையும் வெத்தலையோட மடிச்சு வாயில போட்டுக்கிட்டு ஒவ்வொருத்தன் காதா பாத்து துப்புறது வரைக்கும்.....இது ஒரு கலாச்சாரமாவே போயிடுச்சுன்னு சொல்லலாம்.

ஏற்கெனவே நடிகை லெட்சுமி அம்மாவ வச்சு கிட்டதட்ட சினிமாவையே மிஞ்சுற அளவுக்கு விஜய் டி.வில வந்த நிகழ்ச்சிய இப்போ நிர்மலா அக்காவ வச்சு பட்டி டிங்கரிங் பாத்து பட்டைய கிளப்பிட்டு இருக்கு இந்த ஸீ தமிழ் குரூப்.

என்ன என்ன கருமம் புடிச்ச பெரச்சினை இருக்கோ இந்த ஒலகத்துல, அம்புட்டையும் நீங்க தெரிஞ்சுக்கணும்னா கண்டிப்பா சொல்வதெல்லாம் உண்மைன்ற ரியாலிட்டி ஷோவ நைட்டு சோத்த போட்டுகிட்டு காரக்குழம்ப ஊத்தி பிசைஞ்சுக்கிட்டே பாக்கணும்ங்க.. தொட்டுக்கிட ஊறுகாய் எல்லாம் வேணாம்... அந்த புரொக்கிராமுலயே சுள்ளாப்பா அம்புட்டும் கிடைக்கும்...!

பஞ்சாயத்துப் பண்ணி வைக்கிறேன், கவுன்சிலிங்க் கொடுக்கிறேன் பேர்வழின்னு நல்ல தீர்ப்பு சொல்ல என் தமிழ்ச்சாதி போன் பண்ணி அவுங்களாவே அவுங்கள லாக் பண்ணிக்கிற ஒரு கொட்டடி தாங்க ஜீ டிவியோட இந்த நிகழ்ச்சி. பரபரப்பா நிகழ்ச்சிய கொண்டு போகாலேன்னா என்ன ஆகும்...? புரோக்கிராம் படுத்துக்கிடும். அப்புறம் டி.ஆர்.பி. ....ஜி.ஆர். பி ரேட்டிங் எல்லாம் எகிறாது..... கம்பெனிக்கு துட்டும் கிடைக்காது. அப்போ கம்பெனி என்ன பண்ணும்னு கேக்குறீங்களா...?

நல்லா கேளுங்க நாக்கப் புடுங்கிக்கிற மாதிரி....! நிகழ்ச்சிய எடுக்குற தயாரிப்பாளரும் டைரக்டரும் ஸ்கிரிப்ட சுவாரஸ்யமா கொண்டு போக எம்புட்டு முடியுமோ அம்புட்டு உணர்ச்சிய தூண்டுற மாதிரி கேள்விகள பஞ்சாயத்து பண்ணச் சொல்லி பிராது கொடுக்கிறாய்ங்களே அறிவாளிங்க,  அவுங்க கிட்ட கேப்பாங்க...! பச்சைய பச்சையா அவனுக பேசுனானுகன்னு வைங்க...அது இன்னும் ஜூப்பரு... ரெண்டு வார்த்தைய தெரிஞ்சும் தெரியாம வுட்டுப் புட்டு மிச்ச வார்த்தைய கொய்ங்ங்ங்.னு ஒரு சவுண்ட போட்டு மறைச்சு....ஸ்லோமோசன்ல சவுண்ட் லெஸ் எபக்டல சீன காமிச்சு...

பாக்குற நம்மள மாறி...ஆடியன்ஸ சீட்டு நுனிக்கே கொண்டு வந்துருவாய்ங்க..! இவன் பொண்டாட்டிய அவன் கூட்டிட்டுப் போயி குடும்ப நடத்த, இவன் என் பொண்டட்டிய கொடுடானு கேக்க, பொண்டாட்டி ரெண்டு பேரும் வேணாம்னு சொல்ல, பக்கத்துல மொத புருசனுக்கு பொறந்த மூணு புள்ளைங்களும் கெக்க பிக்கனு பாவமா முழிக்க.. ரெண்டாவது புருசன் அது எப்டிடி என்னையவும் வேணாம்னு சொல்லலாம்..?  நான் தான உன்ன ஆறு மாசமா வச்சுக் காப்பாத்துறேன்.. நீ வேணாம்னு சொன்னீன்னா வயித்துல வளர்ற மூணுமாசமான எம்புள்ளைக்கு என்னடி வழின்னு கேக்க...

மொதப்புருசனும் ரெண்டாவது புருசனும் ஸ்டூடியோவுக்குள்ள மல்லுக்கட்டி அடிச்சுக்கும் போது யூனிட்ல இருக்க தடிசு தடிசான ஆளுங்க ஓடி வந்து வெளக்கி விட்டு....அப்பாலிக்கா டாப் கியரு போட்டு புரோக்கிராம மேல கொண்டு போவாய்ங்க...

மேல நான் சொல்லி இருக்கறது ஒரு சாம்பிள் பீசு...! இது மாதிரி அகில உலகத்துல இருக்குற அம்புட்டு பிரச்சினைகளுக்கும், கள்ள, நல்ல, நொள்ள காதலர்களையும், இன்னும் எல்லா அயோக்கியத்தனங்களையும் அசிங்கங்களையும் காசு கொடுத்தோ இல்ல நேர்மையாவோ வெலைக்கு வாங்கி நடத்துற ஒரு புரோக்கிராமுதான்....சொல்வதெல்லாம் உண்மை....ன்ற டைட்டில்ல மட்டும் உண்மைய சொல்ற ஒரு நிகழ்ச்சி..!

ஒரு புருசனுக்கும் பொண்டாட்டிக்கும் கொஞ்சம் மனஸ்தாபம்ங்க சேரணும்னு ஆசைப்படுற பொண்டாட்டியோ புருசனோ என்னங்க பண்ணனும்....? நேரடியா போய் தன் புருசனையோ பொண்டாட்டியையோ நேராப்பாத்து கையில கால்ல விழுந்து இல்ல அழுது தன்னோட அன்பைக் காட்டி ஒண்ணு சேரணும்..அப்டி இல்லேன்னா தெரிஞ்சவங்க அறிஞ்சவங்க மூலமா சொல்லி கேட்டு உறுதி கொடுத்து ஒண்ணா சேர ஏற்பாடு பண்ணிக்கணும்.... ! சரி அதுவும் ஒத்து வரலையா கழுத போகட்டும்... நம்ம பொழப்ப நாம பாப்போம் அவ பொழப்ப அவ பாக்கட்டும்னு விட்டுட்டுப் போயிடணும்....

இது என்னங்க ஒரு மானங்கெட்ட தனமா மீடியா முன்னாடி வந்து ஒக்காந்து கிட்டு சொந்தப் பிரச்சினைய எல்லாம் சொல்லி......அதை அந்த புரோக்கிராம் நடத்துற ஆளுக சுவாரஸ்யத்துக்காக தூண்டி விட்டு...ரெண்டு பேருக்கும் ரோசம் ஏறிப் போயி அதை இந்த தமிழ் கூறும் நல்லுலகமே வேடிக்கைப் பார்க்க...... வெளங்குமாங்க இது....?

நாலு சுவத்துக்குள்ள இருக்க வேண்டிய விசயத்தை தீர்த்து வைக்க நாலு பேர வச்சு பேசி முடிக்கிறது நல்ல விசயம்தான்னு வைச்சுக்கோங்களேன்...இப்படி ஏழு கோடி பேரு பாக்குற டி.வி முன்னாடி உக்காந்து அதுவும் வியாபரத்துக்காக ஒரு நிகழ்ச்சிய நடத்துறவங்க முன்னாடி எப்டிங்க நியாயம் கிடைக்கும்னு நினைச்சுப் போறாங்க...?

அபலைப் பெண்களை கெடுத்து கைவிட்ட காமுகனை அடையாளம் காட்டவோ அல்லது சமூகத்தால் அநீதி இழைக்கப்பட்ட பொதுவான ஆண்கள் அல்லது பெண்கள் கொடுக்கும் புகாரைக் எடுத்துக் காட்டி சமுதாயத்துக்கு விழிப்புணர்வு கொடுத்து எச்சரித்து ஜாக்கிரதையா இருங்கன்னு சொல்லவோ...,  தனியார் நிறுவனங்களால் ஏமாற்றப்பட்டு அது பற்றிய செய்திகளைப் பகிரவோ, லஞ்சம் கேட்டு துன்புறுத்தும் அரசு அலுவலர்களையும் அரசியல்வாதிகளையும் அடையாளம் காட்டவோ, பாலியல் பலாத்காரம் செய்த பாவியை உலகத்துக்கு முன்பு இழுத்து வந்து போடவோ..., ஓட்டுக்கு காசு கொடுக்கும் அயோக்கியர்களின் தோலுரித்துக் காட்டவோ.... 

தேர்தலில் செய்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்து விட்டு தொகுதி பக்கமே வராமால் போய்விடும் எம்.எல்.ஏ மற்றும் எம்.பிக்களின் முகத்திரைகளை கிழித்து எறியவோ... இந்த புரோக்கிராமா பயன்படுத்தலாமேங்க..? இதையெல்லாம் விட்டுப் புட்டு...

அண்ணன் தம்பி சண்டை, நார்த்தனார் ஓப்படியா பிரச்சினை, மாமியார் மருமக சண்டை, காதலிச்சு ஓடிப்போனவங்கள கண்டிக்கிற பெற்றோர்கள்னு தனி மனிதர்கள் உளவியல் ரீதியா தீர்த்துக்க வேண்டிய பிரச்சினைகளை ஊரறிய காட்டி அவுங்கள மறுபடி சேரவே முடியாத அளவுக்கு கொண்டு போர ஒரு ஒய்யாரமான நிகழ்ச்சிய.... ஏன் இன்னமும் தடை பண்ணாம இருக்காங்க நம்மூர்லங்கறது மில்லியன் டாலர் கேள்விங்க..!

வீட்டுக்குத் தூரம்னு சொல்லியும் பொண்டாட்டிக்கு புருசன் செக்ஸ் டார்ச்சர் கொடுக்குறானாம்...இது ஒரு அம்மா கொடுத்த பிராது..இதை நிர்மலாம்மா புருசன கூப்டு விசாரிச்சு.....தீர்ப்பு கொடுக்குறாங்க....! இல்லை நான் தெரியாமத்தான் கேக்குறேன்.. இந்த மகளிர் காவல் நிலையங்கள், உளவியல் மருத்துவர்கள், சமூக சேவை அமைப்புக்கள் இதுக்கெல்லாம் இப்போ வேலையே இல்லையா? இல்லை இவுங்க கிட்ட எல்லாம் போனா தீர்வு கிடைக்காமலேயே போயிடுமா? 

பிரச்சினைய டி.வி பொட்டியில கேமரா முன்னாடி உக்காந்து ஊரே பாக்க சுவாரஸ்யமான ஒரு நாடகம் மாதிரி கொண்டு போயி அவனுக காசு சம்பாரிச்சுடுறானுக......பிரச்சினை தீரணும்னு நியாயம் கேக்க வந்த நாம வெளியில தலை காட்ட முடியாம நாறிப்போறோமே இதை கொஞ்சாமாச்சும் யோசிச்சுப் பார்க்குமா என் தமிழ்ச் சொந்தங்கள்....?

டி.ஆர்.பி ரேட்டிங்கை ஏத்திக்கிறதுக்காக நடத்துற இந்த நிகழ்ச்சியில அறியாமையிலிருக்க ஒவ்வொரு ஏழைக் குடும்பமும்தான் பெரும்பலும் இந்த நிகழ்ச்சியில போயி பிராது கொடுக்கப் போறாங்க..! வாழ்க்கை பத்தின தெளிவு இருக்க யாரும் தங்களின் சொந்தப் பிரச்சினையை ஊரார் முன்னாடி சொல்ல வர்றதில்லைங்க.....அறியாமையில இருக்குற சனங்கதான் இந்த மாதிரியான பொறிகள்ள ஏன் போறோம் எதுக்குப் போறோம்னு தெரியாம போய் சிக்கிக்கிடுதுங்க....!

எந்தப் பிரச்சினையா இருந்தாலும் நாம நமக்குள்ள மனசு விட்டு பேசிக்கிட்டாலே போதும்ன்ற ஒரு விட்டுக் கொடுத்துப் போகுற மனப்பான்மையும், எனக்கு இது வசதி என்னால உன் விருப்பப்படி இருக்க முடியாதுன்னு எடுத்து சொல்லிப் புரிய வைக்கிற பக்குவமும், எம்பொண்ணு அவளா விரும்பி காதலிச்சு, கல்யாணம் பண்ணிக்கிட்டா,  சரி.... அவளுக்கு வயசு ஆயிடுச்சு பையனுக்கு வேலை வெட்டி இல்லன்னாலும் பரவாயில்லை எந்த சாதியா இருந்தாலும் பரவாயில்லை .....போகட்டும் அவளுக்கு பிடிச்ச வாழ்க்கைய வாழட்டும்ன்ற பெருந்தன்மையும் இல்லாத மடச்சாம்பிராணிகள்....

தன் மக ஆறு மாச கர்ப்பமா இருந்தாலும் பரவாயில்லை அவள அவன் கிட்ட இருந்து அத்து விட்டுடுங்க நாங்க கருவை கலைச்சு எங்க மகள நல்லா பாத்துக்கிறோம்னு சென்டிமெண்ட்டுங்குற பேர்ல விசத்த கக்குற கேவலத்தை எல்லாம் நாம பாத்து தொலைக்க வேண்டி இருக்குங்க....!

எவ்ளோ டேலண்டா நம்ம வூட்டுப் பிரச்சினைய வச்சு அவன் காசு பாக்குறான் அப்டீங்கற உண்மைய நாம உணராத வரைக்கும்....

இந்த மாதிரி டி.வி நிகழ்ச்சிகள் தமிழ்நாட்ல ஜெக ஜோரா காசு பாக்கத்தாங்க செய்யும்...! 

நாம முழிச்சுக்கிட்டோம்னு வச்சுக்கோங்க இந்த ஊர்ல பல பயலுகளுகளுக்கு சோலியே இருக்காதுங்க...! நம்மளால முடிஞ்ச வரைக்கும் அக்கம் பக்கத்துல இருக்கவங்களுக்கு இந்த மாதிரியான அபத்தமான நிகழ்ச்சிகளைப் பத்தி எடுத்து சொல்றதோட முடிஞ்சவரைக்கும் இது மாதிரி நிகழ்ச்சிகள நாம புறக்கணிக்கிறதும்.........ரொம்ப ரொம்ப அவசியம்னு சொல்லி நான் உத்தரவு வாங்கிக்கிறேனுங்க...!


தேவா. SThursday, June 21, 2012

என் ஃப்ரண்ட போல யாரு மச்சான்..!
கனவுகளுக்கு தீப்பிடித்துக் கொண்ட மாயாஜால நாட்கள் அவை. வாழ்க்கையின் மொத்த சந்தோசத்தையும் ஒரு இடத்தில் குவித்து வைத்து திளைத்துக் களித்து கிடந்த பூமியின் சொர்க்கம் அது....! வார்த்தைகளுக்குள் ஒட்டு மொத்த உணர்வினையும் கொட்டித் தீர்த்து விட முடியாமல் ஒரு பிச்சைகாரனாய் வானம் பார்த்து வார்த்தைகள் கடந்து ஏதேனும் ஒரு அதிசயத்தை என் மூளைக்குள் பரப்பிப் போடு இறைவா...! 

என் கல்லூரி நாட்களென்னும் காவியத்தை படைத்துப் போட ஏதேனும் புதியதொரு யுத்தி கொடு என்று இறைஞ்சி இறைஞ்சி, கனவில் ஓட முடியாத சராசரி மானுடனாய் மீண்டும் வார்த்தைகளுக்குள் ஒளிந்து கொண்டு வரிகளில் என் உயிரினைத் தடவி இங்கே உங்களின் விழிகளுக்காக படைக்கிறேன்...!

உயர் நிலைப்பள்ளியிலிருந்து கிட்டதட்ட ஒவ்வொரு ஆணும், பெண்ணும் கூட்டுப்புழுவாயிருந்து சிறகடிக்கும் ஒரு பட்டாம் பூச்சியாய்த்தான் கல்லூரி என்னும் தோட்டத்திற்குள் திசைகளைத் தொலைத்த ஒரு புது உயிராய் மீண்டும் ஜனிக்கிறார்கள். 12 ஆம் வகுப்பு வரை வாழ்க்கை ஏதேதோ பிடிப்புக்களை திணித்து வைத்திருக்க அரும்பு மீசைகளும், புதிதாய் உடுத்திய பாவடை தாவணிகளும் சுடிதார்களுமென கல்லூரிக்குள் வலம் வரும் ஆண்கள், பெண்கள் அத்தனை பேரும் மாஸ் ஹீரோவாக, ஹீரோயினாகத் தான் உலாவருகிறார்கள்....

ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரி....!

காக்கைக்கு எப்படி தன் குஞ்சு பொன் குஞ்சோ அப்படித்தான் எங்களுக்கும் அப்ஸா (APSA) கல்லூரியும். பள்ளி முடித்து கல்லூரி புகும் ஒரு திமிரே உச்சத் திமிராய் உடம்புக்குள் தினவெடுக்க மிச்சமிருக்கும் வாழ்க்கையின் பிரமாண்டப்  பிரச்சினைகளை எல்லாம் அலட்சியமாய் பார்க்கச் சொல்லும் வயது...., 

கற்றுக் கொடுக்கும் ஆசிரியராய் இருந்தாலும் கோபமாய் பேசினால் மீண்டும் அவரை முறைத்துப் பார்த்து சட்டை கையை மடித்து விட்டு கொண்டு...." டேய் மாப்ள எஸ்.கே என்ன திட்டிட்ட்டாண்டா ......வக்காலி விடுவேனா ஒரு மொற மொறச்சேன்.....பயந்துட்டான் மாப்ள..." என்று சொல்லிக் கொண்டே.. "என்னடா பாக்குறீங்க....மாப்ளைக்கு ஒரு டீய சொல்லுங்கடா...." என்று திமிரை நட்பாய் மாற்றுமிடத்தில் என்ன பயம் எங்களுக்கு இருந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்..?

வகுப்பறையில் நன்றாகப் படிப்பவனை பால்வாடி என்று நாங்கள் ஒதுக்கித் தள்ளி அவனை கிண்டல் செய்யும் மனோபாவத்தை தவறு என்று மிகைப்பட்டவர்கள் விமர்சித்து எங்களின் பாதைகளைக் கடந்து போகலாம், ஆனால்..எங்களின் இயலாமையைத் தன்னம்பிக்கையாக்கிய இடம் அது என்பதையும் அவர்கள் மறந்து போகக்கூடாது.


'என்ன மாப்ள... டீய டீய குடிச்சுட்டு எந்துருச்சு போற.....ஒரு தம்மப் போடு' என்று சொல்லிக் கொண்டே....' என்ன பக்ஸ்சு...பாத்துக்கிட்டே நிக்குறீக....மாப்ளக்கி ஒரு கிங்ஸ கொடுங்க பாசு.......' என்று சொல்லி ஒரு சிகரட்டை எடுத்து முன்னால் நீட்டி...' இல்ல மாப்ள குடிச்சு பழக்கமில்லடா' என்று மறுத்த போது.....

' டேய்..கொண்டே புடுவேன்...மொதல்ல சிகரட்ட கையில புடி.....இந்தா பத்த வச்சாச்சு......இப்ப என்ன பண்ர....ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ன்னு மொள்ள வெறும் வாயால இழு....' என்று சிகரட்டைக் கொடுக்காமலேயே...வெறும் வாயால் 'ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....' போட வைத்து....' என்ன இழுத்துட்டியா ...? இந்தா இப்ப சிகரெட்ட இழு....இழுத்துட்டு...மெல்ல ஸ்ஸ்ஸ்ஸ்ன்னு உள்ள இழு.....' என்று செய்து காட்டி.

' இழுத்த உடனே கொஞ்ச நேரத்துல ஆட்டோமேட்டிக்கா நீயா வெளில ஊதுவ பாரு.... இம்புட்டுதான் மாப்பு தம்மு.....என்னம்மோ பகுமானம் காட்டுற....ஆத்தாடி....ஆக்கெட்ட (ஆக்ட்) கொடுக்குற பயபுள்ளையா இருக்கியேடா நீய்யு.....' 

அன்று சொல்லிக்காட்டிய என் மாப்பிள்ளை சுப்ரமணி....என்னை கெடுத்து விட்டான் என்று யாரேனும் விளங்கிக் கொண்டால் அது அவர்களின் புரிதலில் இருக்கும் தவறு. அந்த சூழலின் தேவையாய் நினைத்து புகைத்த என்னால் இன்று புகை இல்லாமலேயே இருக்க முடிகிறது எனில்....எல்லா செயல்களுமே தனிமனித விருப்பத்தில் நிகழ்பவைதான் யாரும் யாரையும் மாற்ற முடியாது என்பதை ஒத்துக் கொள்வீர்கள்தானே.....

அழகப்பன், ஆறுமுகராஜா, துரைச்சாமி, ஜாபர், சசி, செந்தில், சுப்ரமணி, சேகர், ராஜேஸ், ஜெரால்ட் வில்சன், ராம்கி, கேசவன், காளிதாஸ், சிறுகுடி ராமு, சரவணன், தாஸ், பழம் பதி, சிவா என்று விரிந்து கொண்டே செல்லும் என் பட்டியலின் இன்னொரு பக்கத்தில் தோழிகளின் பட்டியலும் போட்டியிட்டு நீளும். 

வகுப்பறையில் வாத்தியார் கேள்வி கேட்டு பதில் சொல்லி விட்டால் அதை விட ஒரு அவமானம் எங்களுக்கு இருந்ததில்லை. இதில் நாங்கள் படிக்கவில்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும்...' அந்த வெண்ணை கேட்ட உடனே இந்த வெளக்கெண்ணை உடனே பதிலச் சொல்லிருச்சாக்கும்....அடியப்போடுங்கடா இவனுக்கு' என்று அதற்குப் பிறகு கிடைக்கும் அவமான அபிசேகத்தில் நானோ அல்லது என் நண்பனோ சோரம் போன ஆணாய்ப் போய் விடக்கூடாது அல்லவா....?

அதற்காகவே கேள்வி கேட்ட புரபசரை திருப்பி பார்த்து முறைக்கும் ஒரு சம்பிரதாயம் எங்களிடம் இருந்தது. கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால் புரஃபசர் கெட் அவுட் என்று சொல்லி...அவுட்ட்ட்ட் என்று கடைசி 'ட்' டை சொல்லி முடிப்பதற்குள் வெளியே சென்று விடவேண்டும் என்ற ஒரு கொள்கையோடு வாழ்ந்தும் இருக்கிறோம்.

இந்த வீர வரலாறு மாஸ் கட் என்னும் அளவிற்கு பரிணமித்து லேப் அட்டண்டர் கல்லூரிக்கு வெளியில் இருக்கும் பக்ஸ் கடை வரை வந்த்து ' அட உள்ள் வாங்கப்பா...எச்.ஓ.டி ஒங்கள கூட்டிட்டு வரச் சொன்னாரு....' என்று கெஞ்சி ' வரமாட்டோம் போய்யா ' என்று நாங்கள் விரட்டுமளவிற்கு போயிருக்கிறது.

நாங்கள் வீரமானவர்கள் என்று இன்னொரு நண்பனை ஒத்துக் கொண்டு அவனை எங்கள் கூட சேர்த்துக் கொள்ள வேண்டுமெனில் அவன் குறைந்த பட்சம் ஒரு தம்மாவது அடித்திருக்கவேண்டும்......மற்ற படி எந்த பெண்களிடமும் போய் வழிய போய் பேசி விடக்கூடாது என்ற திடமான சட்டத்தையும் அப்போது படிக்கும் போதே திருமயம் ஜெயலலிதா பேரவை தலைவராக இருந்த என் மானமுள்ள மாப்பிள்ளை சிங்கப்பூர் ஜாபர் கடுமையாக கடைபிடிப்பான்....! எனக்கு மட்டும் இதில் ஸ்பெசல் சலுகை கொடுத்து அவ்வப்போது ஒரு சில முறைத்தல்களோடு மன்னித்து இறுக அணைத்தும் கொள்வான்....!

மீண்டும், நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நொடியில் சர்வ நிச்சயமாய் எனக்கு சிறகு முளைத்து நான் பின்னோக்கிப் பறந்து சென்று எங்கள் கல்லூரியினைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறேன் என்பதை நம்புங்கள் தோழர்களே....!

வாழ்க்கையில் கடைசி, கடைசியாய் சந்தோசமாய் இருந்த அந்த சொர்க்க நாட்களை மீண்டும் மீட்டெடுத்து அசை போட யாருக்குத்தான் ஆசை இருக்காது...! எங்கள் நண்பர்கள் குழுவில் நாங்கள் மிக அற்புதமாய் படித்து நிறைய மதிப்பெண்கள் பெறமுடியாமல் போயிருந்தோம் என்பதும் உண்மைதான் என்றாலும்...அதற்குப் பின்னால் அபத்தமான கல்வி முறை தனது கோரப்பற்களை எங்களது கழுத்தில் அழுந்தப் பதிந்து ரத்தத்தை உறிஞ்சியது என்பதையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரி இருக்கும் சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரை சுற்றி இருக்கும் அத்தனையும் கிராமங்கள். பட்டிக்காட்டு மண்ணிலிருந்து படித்து விட்டு கல்லூரிக்குள் அடியெடுத்து வைத்திருக்கும் நானும் என் நண்பர்களும்....வந்திருக்கும் குடும்பச் சூழலுக்கும் ஆங்கிலத்துக்கும் வெகு தூரம். ஆங்கிலம் என்பது எங்களுக்கு எல்லாம் ஒரு பாடம். அதுதான் எங்களுக்கு கல்வி பயிலும் முறை என்பதை நாங்கள் அறிந்து கொண்டதே கல்லூரியில்தான்..

பள்ளியில் ஒரு பாடமாய் ஒரு பீரியட் மட்டுமே ஆங்கிலம் படித்த எங்களுக்கு அதுவும் இளங்கலைப் பட்டத்தை முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் சொல்லிக் கொடுத்த போது நானும், விராமதி சேகர் மாப்ளையும், ஏரியூர் துரைச்சாமி மாப்பிள்ளையும், கீழச்சேவபட்டி அழகப்பனும், நெய்வாசல் சந்திரனும், மலைக்குடிபட்டி சுப்ரமணியும், ராயபுரம் ராஜேசும், சிங்கம்புணரி செந்திலும், பிரான்மலை ராஜாவும், சிறுகுடி ராமுவும்......

திணறித்தான் போய்விட்டோம்....!

எங்களுக்கு வாழ்க்கையைக் கடந்து போக ஒரே வழி கல்விதான் என்ற அச்சத்தை மூட்டி கல்லூரியில் பணம் கட்டி சேர்க்கும் அளவிற்குதான் எங்கள் பெற்றோரின் புரிதல் இருந்தது. அவர்களின் உச்சபட்ச புரிதல் எல்லாம் பக்கத்து வீட்டிலும் எதிர்த்த வீட்டிலும் அடுத்த் தெருவிலும் அல்லது சொந்த பந்தங்களில் யாரோ ஒருவர், இருவர் படித்து நல்லவேளையில் இருப்பவர்களாய்ப் பார்த்து எங்களை ஒப்பீடு செய்வதோடு நின்று போனது....

வழிகாட்டுதல் என்பதை எங்களுக்கு யாரும் ஒரு தோழனாய் தோளில் கைபோட்டு சொல்லிக் கொடுக்கவில்லை...மாறாக பிரம்பினை கையிலெடுத்துக் கொண்டு மிரட்டி, மிரட்டி ஒரு போலிஸ்காரனைப் போலத்தான் எங்களை பயிலச் சொன்னார்கள்....

மிரட்சியில் சுதந்திரம் வேண்டி நாங்கள் உடைத்துப் போட்ட அடக்குமுறைகளுக்குப் பின்னால் எங்களின் இயலாமைதான் மிகுந்திருந்தது. எங்களின் விருப்பங்களை எல்லாம் எங்கோ புதைத்து விட்டு நாங்கள் கெமிஸ்ட்ரி படிக்க வந்ததால் என்ன நடந்தது...? காலையில் இரண்டாம் பீரியடை கட் அடித்து விட்டு நாச்சியார் தியேட்டரில் காலைக் காட்சியில் நண்பர்களோடான ஆட்டமு பாட்டமும்தான் நடந்தது........!

எது எப்படியோ...படிக்கிறேன் பேர்வழி என்று நடித்துக் கொண்டு வாழ்க்கையை நாங்கள் கோட்டை விடவில்லை.....! பிஸிக்ஸ் பிராட்டிக்கள் அன்றைக்கு முதல்நாள் மஞ்சுளா தியேட்டரில் டிக்கெட் கிடைக்காமல் தரை டிக்கெட் எடுத்துக் கொண்டு போய் தரையில் அமர்ந்து கொண்டு சிகரெட் இல்லாத குறையை பீடியால் போக்கி விட்டு அடுத்த நாள் பரீட்சையை வென்றெடுத்தோம்...!

பரீட்சை ஆரம்பித்த உடனே யார் பேப்பரை கட்டிக் கொடுத்து விட்டு முதலில் செல்வது என்று போட்டியிட்ட மாப்பிள்ளை சேகரும், ஜாபரும் இன்றைக்கு சிங்கப்பூரில் வாழ்க்கையை ஜெயித்திருக்கிறார்கள். விழுந்து விழுந்து படித்து 60 அல்லது எழுபது பர்செண்டேஜ்க்கு மேல் எடுத்த எப்போதும் புத்தகத்திற்குள் கிடந்த சில நண்பர்கள் இன்றைக்கு அழுத்துக் கொண்டு ஊரில் ஏதோ ஒரு நிறுவனத்தில்...கடிகார முட்களோடு சுழன்று கொண்டிருக்கிறார்கள்....


இன்னும் எத்தனை அரியர்ஸ் இருக்கிறது என்று கணக்கு செய்து பார்க்காத மாப்ள பிரான்மலை ராஜா...கோயம்புத்தூரில் மிகப்பெரிய மருந்து பொருட்களை விற்கும் நிறுவனத்தில் மேலாளராக இருக்கிறான்....! நள்ளிரவு படித்துக் கொண்டிருக்கையில் படிக்க முடியாமல் என்னருகே வந்து ' மாப்ள படிக்கத்தான் முடியாது....வர்றியா ஓட்டப்பந்தயம் வச்சுப் பாத்துக்குவோம்....ஜெயிச்சுப் புடுவியாக்கும் ' என்று என்னிடம் தன் சொந்த திறமையை விட்டு விட்டு வேறு ஏதோ செய்து கொண்டிருப்பதை அறியாமல் நகைச்சுவையாய் சொன்ன துரைச்சாமி மாப்பிள்ளை துபாயில் நிர்வாக மேலாண்மையில் இருக்கிறான்.... 

படிக்கும் போது எந்த சிரத்தையும் இல்லாமல் அலட்டிக் கொள்ளாமல் ஜாலியாகவே இருந்த ஜெரால்ட் வில்சன் மாப்ஸ் இப்போது பி.எச்டி முடித்து விட்டு....செளதியில் ஒரு கல்லூரியில் பேராசிரியாராக இருக்கிறான்....

வாழ்க்கை எதை இழக்க விட்டாலும் அவரவர் சொந்த திறமைகளால் எப்போதும் எங்கோ கொண்டு வந்து நம்மை விட்டு விடத்தான் செய்கிறது....! 1993 டு 1996 வாக்கில் கல்லூரியை விட்டு நாங்கள் வெளியேறிய போது இப்போது இருக்கும் நவீன தகவல் தொடர்பு சாதனங்களின் சுவடுகள் கூட இல்லை. ஆளுக்கொரு டயரியில் ஆட்டோகிராஃபை வாங்கிக் கொண்டு நாங்கள் பிரிந்த அந்த கண்ணீரான கடைசி நாளை பற்றி நான் வேறொரு கட்டுரையில்தான் சொல்ல வேண்டும். இல்லையெனில் ஒரு நாவலைப் போல இந்தக் கட்டுரை நீளும் அபாயம் இருக்கிறது.

16 வருடம் கழித்து வில்சனைப் துபாயில் பார்த்த போது மீண்டு என் உடலின் செல்கள் எல்லாம் உயிர் பெற்று மீண்டும் என் கல்லூரிகாலங்களுக்குச் சென்று விட்ட ஒரு ஆச்சர்யம் நிகழ்ந்தது. இப்போது இருக்கும் எந்த ஒரு தகுதிகளும் இல்லாமல் உயிராய் நேசித்து பழகிய நண்பர்கள் கூட்டத்தை காலம்தான் பிரித்தது...இன்று அதே காலம் மீண்டும் எங்களை ஒவ்வொருவராய் சேர்த்துக் கொண்டிருக்கிறது. துரைசாமியை துபாயில் சந்தித்த அந்த நொடியில் மீண்டும் வாழ்க்கையில் கலர் கலாரய் பட்டாம் பூச்சிகள் பறக்க ஆரம்பிக்க...

திருமணம், பிள்ளைகள், பிரச்சினைகள், காலம் காட்டிக் கொடுத்த சுயநல நட்புகள் எல்லாம் கடந்து நீண்டு கொண்டிருக்கும் எங்கள் கல்லூரி நட்பு......கண்ணடித்து சிரித்து ஒரு தாயாய் அணைக்கத்தான் செய்கிறது......!

வண்ணப்படம்....கருப்பு வெள்ளையாய் மாறி......மீண்டும்............வண்ணமயமாகி இருக்கிறது....!

தொடர்ந்து கல்லூரி நண்பர்களைப் பெற்று தந்து கொண்டிருக்கும் பேஸ்புக் போன்ற சமூக இணைவு இணைய தளங்களில் ஆயிரத்தெட்டு அபத்தங்கள் இருந்த்தாலும்...எங்களைப் போன்றவர்களுக்கு வாழ்க்கையை மீட்டெடுத்துக் கொடுத்த ஒரு அரிய பொக்கிஷமாகத்தான் அது இருக்கிறது....! 


தேவா. SMonday, June 18, 2012

அப்துல் கலாம் ஜனாதிபதி ஆக வேண்டியதில்லை....!
இது அநீதிகளின் அரசாட்சி நடக்கும் நாடாய் போய் விட்டது. மனித நேயத்தை மறந்த மதவாதிகளின் கூட்டம் சேர்ந்திருக்கும் கூடாரமாய் போய் விட்டது. லஞ்சத்திலும் ஊழலிலும் ஊறிப் போய் கிடக்கும் அரசியல்வாதிகளின் குவியலாய் போய் விட்ட ஒரு சந்தையாகி விட்டது. பொருளாதார வளர்ச்சியை அதாள பாதாளத்துக்குத் தள்ளி விட்டு கையடக்க கணிணியில் உலக அரசியலைப் பேசும் மேதவிகளின் பூமியாய் மாறிப்போய் விட்டது......

இப்படியான தேசத்தில் அப்துல் கலாம் போன்ற அறிஞர்கள், மதத்தை கடந்த புனிதர்கள், மனித நேயம் கொண்ட புருசர்கள் ஏன் நாட்டின் முதன்மைக் குடிமகனாக வரவேண்டும்...? 

அது இந்த தேசத்துக் கட்டமைப்புக்கு முரணாணது அல்லவா? இந்த தேசத்தை ஆளும் காங்கிரஸ் கட்சி என்னும் ஆதிக்க சக்திக்கும் அந்தக் கட்சியை ஆதரிக்கும் அல்லக் கைகளுக்கும் எதிரானது அல்லவா? பேய்கள் அரசாளும் போது சத்தியம் எப்படி தலைமை ஏற்க முடியும்... அதனால்...

பிரணாப் முகர்ஜி என்னும் பெருச்சாளியே இந்த தேசத்தின் அடையாளமாகட்டும்...!

அக்னிச் சிறகுகளை உணர்வோடு வாசித்திருக்கும் ஒவ்வொரு தேசத்து குடிமகனுக்கும் அப்துல்கலாம் அன்னியமானவர் அல்ல. வாழ்க்கையின் அடித்தட்டில் இருந்து மேலேறி தன் சுய முயற்சியால் தேசத்தின் தலைமை விஞ்ஞானி என்னும் இடத்தை எட்டிப் பிடித்த ஒரு புண்ணிய ஆத்மா அது. அவர் ஒரு போதும் தன்னை ஏதோ ஒரு அரசியல் கட்சிக்கு சொந்தமானவராகவும், அல்லது ஒரு இனத்துக்கு மட்டுமே உரிமை கொண்டவராகவும், ஒரு மதத்தின் அடையாளமாகவும் வெளிப்படுத்திக் கொண்டதில்லை. கொள்ளவும் மாட்டார்.

தன்னை மனிதனாக உணர்ந்த ஒருவன் சூழலை உள்வாங்கி எல்லா மானுடர்க்கும் சரியான் ஒரு கருத்தைதான் பகிர்வான். அதுவும் அப்துல் கலாம் போன்ற அடிப்படை ஞானவான்கள் ஒரு போது தன்னை ஒரு மதத்துக்கு சொந்தமானவராக காட்டிக் கொள்வது இல்லை. இவர்கள் எங்கே நன்மை இருக்கிறதோ அதை எப்போதும் ஆதரிப்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். உணர்ச்சி வசப்பட்டு கருத்தினை தெரிவித்து ஏதோ ஒரு சாராரை சாந்தப்படுத்தி தன் பக்கம் இழுத்து வைத்துக் கொண்டு அரசியல் செய்யும் புறம்போக்குத்தனத்துக்கு அப்துல் கலாம்கள் எப்போதும் எதிராய்த்தான் இருந்திருக்கிறார்கள்.

வெற்று அறிக்கைகள் விட்டு கவர்ச்சிகர அரசியல் செய்பவர்களையும், மேடைக்கு மேடை வார்த்தைகளை மாற்றிப் போட்டு அலங்காரமாய் பேசுபவர்களையும் பார்த்து, பார்த்து ரசித்து ரசித்து ஆதரித்து மண்ணாய்ப் போய்க் கொண்டிருக்கும் என் இந்திய தேசமே......! உனக்கு அப்துல் கலாம்கள் வேண்டாம்...,

ஊழல்களில் மூழ்கித் திளைத்து, இன அழிப்பு செய்த ஒரு தேசத்துக்கு கால் பிடித்து விட்டு பல உயிர்களைப் பறிக்க காரணமாய் இருந்த அழுகிய மூளைகள் போதும் இங்கே முதன்மைக் குடிமகன்களாக....

இந்த தேசம் சரியாக எதிர் திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறது எம் மக்களே...! ஆங்காங்கே இருக்கும் ஓரிரு சுடர் விடும் அரசியல் தலைவர்களைத் தவிர சர்வ நிச்சயமாய் இது அநீதிகளின் கூடாரமாய்ப் போய் விட்டது....! இங்கே பிராணப்பை ஆதரிக்கும் அத்தனை மனிதர்களும் மனித நேயத்தோடு தத்தம் நெஞ்சிலே கை வைத்து சொல்லட்டும்....

இந்திய தேசத்தின் ஜனாதிபதி பதவிக்கு அப்துல் கலாம் தகுதியானவரா? இல்லை பிராணப் முகர்ஜி தகுதியானவரா?

அப்துல் கலாம் மீது மதவாதிகள் வைக்கும் ஒரு குற்றச்சாட்டு குஜராத் கலவரத்தின் போது அவர்தானே குடியரசுத் தலைவர் அவர் ஏன் கருத்து தெரிவிக்கவில்லை என்பது....! இந்திய தேசத்தின் முதன்மைக் குடிமகனாக மட்டும் அல்ல, ஒரு இஸ்லாமியர் என்பதால் மட்டுமல்ல.... ஒரு சாதாரண மனிதராகவே கலாம் போன்றவர்கள் எந்த ஒரு மத வன்முறைக்கும் எதிரானவர்கள்தான் என்பதை ஏன் நீங்கள் இன்னமும் உணரவில்லை...?

வெட்ட வெளி மைதானத்திலே ஒரு பந்தல் அமைத்து கூட்டம் கூட்டி உங்கள் மதத்தவரை ஒன்று சேர்த்து ஒரு கூட்டம் போட எத்தனை பிரச்சினைகளை, மன வேறுபாடுகளை நீங்கள் சந்திக்கிறீர்கள்...? நிர்வாகிக்க எவ்வளவு பிராயசைப்பட்டு நிற்கிறீர்கள்...?

ஒரு ஜனாதிபதியாய் இருந்து கொண்டு அதுவும் பல மதம், மொழி, இனம் கொண்டவர்கள் மத்தியில் ஒரு கருத்து சொல்வது என்பது எவ்வளவு கூர்மையான விசயம் என்று எப்போதாவது நீங்கள் யோசித்துப் பார்த்து இருக்கிறீர்களா? ஒரு தீயை அணைக்கிறேன் பேர்வழி என்று ஊரைப் பற்ற வைப்பவன் முட்டாள்.....

ஆனால் அப்துல் கலாம் பேரறிவாளி.... ! அவருக்கு சூழல்களை எப்படி கடந்து போவது என்று தெரியும்....!

அவர் அரசியலுக்கு சரியாய் வரமாட்டார் என்று சொல்லும் அரசியல் மேதாவிகளே.....! இந்த தேசத்தில் அரசியல் செய்யும் அத்தனை பேரும் புண்ணிய ஆத்மாக்கள்தானா? அரசியல் என்றால் அடுத்தவனை கவிழ்த்து தான் மேலே வருவது என்று இங்கே பழகிப்போன நாறிப்போன ஒரு நடைமுறைதான் அரசியல் எனில்....

அப்துல் கலாம்கள் இந்த அரசியலுக்கு எதிரானவர்களே...!

எந்த சூழலிலும் தனது பொறுப்பையும், பதவியையும் சூழலையும், மனித நேயத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு கவனமாய் நடந்து கொள்ளும் ஒரு அக்னி மனிதன் அப்துல் கலாம்....! கூடங்குளம் பிரச்சினையில் அவர் கருத்து தெரிவித்தது ஒரு பிரேதசவாதியாகவோ அல்லது அரசியல்வாதியாகவோ அல்ல.. அது....ஒரு அறிவியல் விஞ்ஞானியின் பார்வை என்பதை எப்படி மறந்து போகீறீர்கள் எம் மக்களே...!

அப்துல் கலம் ஒரு வைரம். சம காலத்தில் எந்த ஒரு குறுகிய அடைப்புக்குள்ளும் தன்னை அடைத்துக் கொள்ளாத ஒரு புயல். இந்த தேசத்தின் விடியல் இன்றைய இளையர்கள் கையில் என்று உணர்ந்த ஒரு மேதை.....

நீங்கள் அவரை முதன்மைக் குடிமகனாக்கிப் பார்க்கும் யோக்கியதைகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதுதான் உண்மை....! தயவு செய்து... அவரைப் பற்றிய விமர்சனங்களை நிறுத்தி விட்டு....அவரைப் பற்றி இன்னும் அறிந்து கொண்டு ஒரு மானுடராய் அவரைப் போற்றுங்கள்....!

இந்த தேசம் சுதந்திரத்துக்குப் பிறகு அரசியல்வாதிகளால் சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. தேசம் முன்னேறியிருக்கிறது, வல்லரசாகப் போகிறது என்று எந்த ஒரு சாமனியனும் இங்கே சொல்வது கிடையாது......அப்படியாய் சொல்வது எல்லாம் அரசியல்வாதிகள் மட்டுமே....!

அநீதியின் ஆட்டத்திற்கு சத்தியம் தலைமை ஏற்பது முரணான விசயம்தான்....

ஆதலால்.....அப்துல்கலாம் போன்ற அறிஞர்கள்....இந்த தேசத்தின் முதன்மைக் குடிமகன்களாக வேண்டாம்....அதற்கு இந்த தேசத்திற்கு தகுதி இல்லை.


தேவா. SFriday, June 15, 2012

சூடா என்ன சார் இருக்கு....?ஏதாவது எழுதுவதற்கு முன்னால் இதை, இதை எழுத வேண்டும் என்று மனம் ஒரு கணக்குப் போடும். உலகத்தில் நிகழும் அத்தனை நிகழ்வுகளையும் எழுத்தில் கொண்டு வந்து விடவேண்டும் என்று பேராசைப்படும். உள்ளுக்குள் ஒரு அதீதமான வலி இல்லாமல் என்னால் இங்கே எழுத முடியாது அல்லது எழுத பிடிக்காது என்பதுதான் நிதர்சனம்.

சமூக கட்டுரைகளை எழுதுவது பெரிய வேலை இல்லை. எல்லா செய்திகளையும் மேய்ந்து கொண்டிருக்கையில் இதை எழுதவேண்டும் என்று ஒரு தளம் கிடைத்து விடும். அறச்சீற்றம் என்பது தன்னிச்சையாக ஒவ்வொரு மனிதருக்குள்ளும் எப்போதும் தோன்றிக் கொண்டேதான் இருக்கும். அது மனித இயல்பு. மனிதன் தனது தேவைகளைப் பொறுத்து ஏதோ ஒரு சூழலை அல்லது இயக்கத்தை மனிதர்களை ஆதரிக்கப் போகும் போது அறச்சீற்றம் என்பது சுயநலமாகிப் போய் விடுகிறது.

தனக்கு பிடித்த தலைவரையும், கட்சியையும், மதத்தையும் சாதியையும் எவ்வளவு இழிவாய் இருந்தாலும் ஏதோ ஒரு காரணத்திற்காய் மனிதர்கள் ஆதரித்துப் போவது மிகப்பெரிய சமூக சாபக்கேடு. எனக்கு தெரிந்து சுதந்திரமாக சிந்திக்கும், செயல்படும், கருத்து தெரிவிக்கும் மனிதர்கள் இங்கு குறைவு... மிக மிக குறைவு.

பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களையும் கூகிள் பிளஸ் போன்ற தளங்களையும் பார்க்கும் போது சமூகத்தில் அதுவும் இணைய உலகில் இருக்கும் மனிதர்கள் எல்லாம் எவ்வளவு சமூக நல் நோக்கு கொண்டிருக்கிறார்கள் என்று சட்டைக் காலரை தூக்கி விட்டு கொள்ளத் தோன்றும். அந்த அளவு உடனக்குடன் தட்ஸ் தமிழ், தினகரன், தினத்தந்தி, தினமனி, ஹிண்டு, இந்தியன் எக்ஸ்பிரஸ், இன்னும் ஏதேதோ செயற்கை கோள் தொலைகாட்சிகளைக் கண்டு விட்டு...நிலைத் தகவல்கள் (ஸ்டேட்டஸ் மெசேஜ்னு போட்டாதான் புரியுமோ...!!!) கொடுக்கும் மனிதர்களைக் கண்டு ஆச்சர்யப்பட்டு இருக்கிறேன். (அவுங்க ஆஃபீஸ்ல அவுங்களுக்கு நேரம் இருக்குது உனக்கு என்னயா பிரச்சினைன்னு கேக்குறீங்களா...!!! அதுவும் சரிதேன்...)

இனவாதம், பிரதேசவாதம், திராவிடம், தமிழ் தேசியம், இந்து, முஸ்லீம், கிறிஸ்துவம், இன்னும் ஏதேதோ சாதி அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் என்று தனித்தனி பக்கங்களை பேஸ்புக்கில் உருவாக்கிக் கொண்டு அடி பட்டையைக் கிளப்புகிறார்கள். இந்த சமூகம் எல்லா நவீனத்தையும் தனது சுயநலத்துக்காய்தான் பயன்படுத்தும் என்றாலும் அதிலும் ஒரு தர்மம் வேண்டாமா? மனசாட்சி வேண்டாமா..? 

கேள்வி கேட்க யாரும் இல்லை மேலும் நான் எழுதுவதை விமர்சிக்கவும் ஆள் இல்லை தண்டனைகள் எல்லாம் ஒன்றும் கிடையாது என்று ....இங்கே நடக்கும் அத்துமீறல்களுக்காய் இன்னுமொரு முறை அந்த தேவன் சிலுவையேற வேண்டி வரும் போல இருக்கிறது.

பெண்களை மதிக்கும் என் தாய்நாட்டில் தாய்நாடு, தாய்மண், இருக்கும் நதிகளுக்கு எல்லாம் பெண்கள் பெயர்கள், என்று மிகப்பெரிய கண்ணியத்தை நாம் கொண்டிருப்பதாக அடிக்கடி கூறிக் கொண்டாலும் அமீரகம் போன்ற நாடுகளில் பெண்களை எப்படி கண்ணியப்படுத்துகிறார்கள், எப்படி முன்னுரிமை கொடுக்கிறார்கள்...? 

பொது இடங்களில் எப்படியான மரியாதை கொடுக்கிறார்கள் என்பது எல்லாம் இங்கு வந்து பார்த்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். அது தெரியாதவர்கள் என் நாட்டை குறை சொல்லிவிட்டாயா தேசத் துரோகி ....!!! நீ பிழைக்க போன இடத்தில் இருந்து கொன்டு என்னவேண்டுமானாலும் பேசலாமா என்று சத்தம் கூட போடலாம்.... எது எப்படி இருந்தாலும் உண்மை உண்மைதானே.....!!!!

பெண்களை மதிக்கிறோமென்று சொல்லிக் கொண்டே சினிமா நடிகைகள் அல்லது வேறு ஏதேனும் பெண்களின் புகைப்படங்களை பதிவேற்றி விட்டு பொது வெளியில் அவர்களின் அங்க லட்சணங்களைப் பற்றி கிண்டலடித்து சிரித்து நக்கலடித்து புளகாங்கிதம் அடைந்து கொள்கிறோம். ஏதாவது சொல்லப் போனால் இதில் என்ன பெரிய தவறு இருக்கிறது...? எவ்வளவோ அசிங்கங்கள் நடக்கின்றன.....வாரப்பத்திரிக்கைகளும், சினிமாப்படங்களும் தொலைக்காட்சிகளும் காட்டாததையா நாங்கள் பேசி விட்டோம் என்று.. கூட்டத்தோடு சேர்ந்து குளிர் காய்வார்கள்.

ஒரு சினிமா நடிகை தனது உடலைக் காட்டி நடிப்பதும் அதை ரசிப்பதும் ரசனை என்று கொண்டால் அதைப்பற்றி வர்ணித்து மோசமான கமெண்ட்கள் பாஸ் செய்து கிண்டலடித்துக் கொள்வது வக்கிரம். ரசனையான பார்வைக்கும் வக்கிரமான பார்வைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. 

இதைப்பற்றி பேசிக்கொண்டே போகலாம்...வண்டியை ஒடிச்சு அப்டியே வேற பக்கம் திருப்பிக்குவோம்.

ரெண்டு நாளைக்கு முன்னால கழுகுல புதுக்கோட்டையிலிருக்கும் ஞானாலயா என்னும் புத்தக சேகரம் பற்றி ஒரு கட்டுரை வெளியிட்டு இருந்தோம். 70 வயதைக் கடந்த ஐயா கிருஷ்ண மூர்த்தி அவர்களும் அவுங்க துணைவியாரும் அவுங்க காலத்துல வாங்கிச் சேர்த்த மலை போல குவிஞ்சு கிடக்குற சுமார் 90,000க்கும் அதிகமான புத்தகங்களை வச்சு அதுக்குன்னு 9 லட்ச ரூபாய்க்கு ஒரு பெரிய கட்டிடத்தை அவுங்களுக்கு ஓய்வூதியமா கிடைச்ச பணத்தை வச்சு கட்டியும் இருக்காங்க. 

இதுல என்ன சிறப்புன்னா, தமிழ்நாட்ல இருக்க கூடிய எல்லா வி.வி.ஐ.பிக்களும், எழுத்தாளர்களும் இங்க வந்து பழமையான புத்தகங்களை வாசித்து நிறைய நூல்களை எழுதி ரொம்ப பெரிய ஆளா ஆகி இருக்காங்க. இன்னும் நிறைய பேரு இங்க வந்து வாசித்து நிறைய ஆராய்ச்சியும் செஞ்சு இருக்காங்க.

இங்க நிறைய பழமையான அரிய தழிழ்ப் புத்தகங்கள் குவிஞ்சு கிடக்குது. பராமரிக்க நிறைய தமிழ் ஆர்வாலர்கள் உதவி தேவைப்படுது. இது பற்றி கழுகுல விபரமா வாசிச்சுக்கோங்க..! இதை ஏன் சொல்ல வந்தேன்னா...அந்த கட்டுரையை எழுதிட்டு...ஐயா காசு பணம் கொடுக்கலேன்னாலும் பரவாயில்லை சாமிகளா, நிறைய பேருகிட்ட இது பற்றி சொல்லுங்க....அப்டி சொல்லும் போது இருக்கப் பெற்றவங்க உதவுவாங்க அதனால இந்தக் கட்டுரைய பகிருங்க நிறைய பேருகிட்ட சொல்லுங்கன்னு வேண்டுகோளும் வச்சோம்.

அம்புட்டுதான்.....

சமூகத்தை திருத்தியே தீருவேன்னு சொல்றவங்களும்,  இந்த கட்சி ஆகாது எங்க கட்சிதான் பெஸ்ட்டுனு மார்க்கெட்டிங் பண்றவங்களும், தமிழ் தமிழ்ன்னு தமிழ வச்சு பொழப்பு நடத்துறவங்களூம்..., ச்ச்சும்மக்காச்சுக்கும் ஒக்காந்து நாங்க வெட்டி நாயம் பேசுனாலும் பேசுவோம்..ஆனா ஒங்க கட்டுரைய பகிர மாட்டோம் அப்பு......! அப்புடி செஞ்சுட்டா யாராச்சும் உதவி செய்றவங்க செஞ்சுட்டா அப்புறம் எங்க பேக் அக்கவுண்ட்ல இருந்து பணம் கொறஞ்சுடும் பாருங்க அப்டீன்ற மாதிரி நம்ம பக்கமே அதிகமா யாரும் திரும்பலைங்க...., ஆனாலும் மனிதாபிமானமும், உணர்வும், உண்மையான சமூக நோக்கும் இருக்கும் சில நண்பர்கள் இந்த கட்டுரையைப் பகிரவும் செஞ்சு இருந்தாங்க....!

சரி ரைட்டு.. இது எல்லாம் ஒவ்வொருத்தரோட தனிப்பட்ட விருப்பு வெறுப்புன்னு வச்சுக்கோங்களேன்..விட்டுத் தள்ளிட்டுப் போய்க்கிட்டே இருப்போம்னு விட்டாச்சு....! சாகறப்ப யாரச்சும் ஒருத்தருக்கு நான் உணர்வோட உண்மைய சொன்னேன் அவர் கேட்டாரு அப்டீன்ற நிறைவு நமக்கு இருக்கும்ல அது போதுங்கறேன்..!  

பேஸ்புக்கலயும், கூகிள் பிளஸ்லயும் ஒவ்வொரு சேதியையும் பகிர காசு கொடுத்துதாண்டா பயலுவளா நீங்க பகிர முடியும்னு ஒரு ரூல்ஸ் போட ஏதாச்சும் ஏற்பாடு பண்ணுப்பா பழனி மலை முருகா.....

நான் நடை பயணமா வந்து அலகுக் குத்தி உனக்கு காவடி எடுக்குறேன்.......அரோகரா......!!!!!

அப்போ வர்ர்ர்ர்ட்ட்டா..........!!!!!


தேவா. S


Sunday, June 10, 2012

சிறகடிக்கிறேன்...!எங்கோ அழுது கொண்டிருக்கும்
ஒரு தூரத்து புல்லாங்குழலிலிருந்து
வழிந்தோடும் இசையின் அதிர்வுகளில்
படிந்திருக்கும் கரிக்கும் உப்பு
என் கண்ணீரிலிருந்து களவாடப்பட்டிருக்கலாம்!

முள்ளுக்குள் சிக்கிக் கொண்ட பட்டாம் பூச்சியாய்
சிறகசைக்க அசைக்க ரணப்பட்டுப் போகும்
வாழ்க்கையின் கணங்கள் அவ்வப்போது
அன்றொருநாள் புத்தியில் ஸ்தாபிக்கப்பட்ட
நரகத்தின் நெருக்கடியோடு
மூச்சு முட்ட வைக்கிறது;

விதிமுறைகளை உடைத்து போட்ட
உலகத்தின் உச்ச காதலோடு
வலிகளை வாளேந்தும் போராளியாய்
நொறுக்கும் உத்வேகத்தில்
ஒரு பயங்கர கனவொன்றில்
நான் முடவனாயிருந்தேன்..!

புள்ளியாய் இருந்த ஒரு
நெருப்புத் துளைக்குள் உள் நுழைந்து
தலை குப்புற நான் விழுந்து கிடக்கும்
வெளிச்சக்காட்டில் முழு வெளிச்சமும்
நானாய் பரவி இருக்கையில்
எங்கிருந்தோ பறந்து வந்த
அவளின் முகமொத்த ஒரு முகமூடி
எனை மீட்டெடுத்த நினைவுகளால்
முளைத்த சிறகுகள் கொண்டு
மீண்டும் சிறகடிக்கிறேன்...தொலைந்து போன
என் காதலை(லியை)த் தேடி...!


தேவா. S


Saturday, June 9, 2012

நானுமில்லை....யாருமில்லை...!

நடப்பதற்காக கீழே இறங்கினேன். வார இறுதியில் என்னோடு நான் இருக்க எடுத்துக்கொள்ளுமொரு தந்திர உபாயம் இது. நடப்பது உடற்பயிற்சிக்காக அல்ல என்பது எனக்குத் தெரியும். வேக வேகமாய் காலையிலும் மாலையிலும் கையை வீசி வீசி வேகமாய் பூங்காக்களில் நடப்பவர்களைப் பார்த்திருக்கிறேன். ஒருவித பரபரப்பும் ஏதோ ஒரு தேவையும் இருப்பதை அவர்களின் முகம் காட்டிக் கொடுக்கும். பெரும்பாலும் நடப்பவர்களிலும் ஓடுபவர்களிலும் இரண்டு சாரார் மிகுந்து இருப்பதை நான் அடிக்கடி கவனித்திருக்கிறேன்.

திருமணம் ஆகப்போகும் பையன்களின் ஓட்ட சாட்டமும், நாற்பதைக் கடந்து சர்க்கரை, இரத்த அழுத்தம் இன்ன பிற வியாதிகளுக்குப் பயந்தும் அல்லது ஏற்கெனவே வந்து மருத்துவரின் அறிவுரைப்படி நடப்பவர்களின் கூட்டமும் எப்போதும் இருக்கும். வெகு சிலரே உடல் நலம், ஆரோக்கியம் இந்த உந்துதலின் பேரில் தொடர்ச்சியாய் நடப்பவர்களாகவோ ஓடுபவர்களாகவோ இருக்கிறார்கள்.

நானும் இப்படி ஓடி இருக்கிறேன்...மூச்சு இரைக்க இரைக்க...ஆனால் கல்யாணத்திற்கு பிறகு சக தர்மினியை விட்டு விட்டு துபாய் வந்தவுடன் அடர்த்தியான ஊர் நினைவுகளை மாற்றிக் கொள்ள ஓடி இருக்கிறேன். இரண்டு மூன்று கிலோ மீட்டர்கள் மூச்சிறைக்க இறைக்க ஓடி.... சட்டை எல்லாம் நனைந்து போக கடற்கரைக் காற்றில் வெகு நேரம் இரவில் அமர்ந்து விட்டு தளர்ந்து போய் அறைக்கு வந்து உணவுக்குப் பின் உறங்கும் உறக்கம் கிட்டதட்ட சொர்க்கத்தின் சாயல் என்றே சொல்லலாம். உடலின் கொழுப்புகள் குறைந்து உடம்பு தக்கை போல ஆகி உடல் மெலிய...மெலிய மெலிந்து இருப்பதின் சுகம் என்னவென்று பிடிபட...

பின்னாளில் உணவு கட்டுப்பாட்டின் மூலமே உடலின் எடையை தக்கவைத்துக் கொள்ளும் உபாயத்தைக் கண்டு பிடித்து விட்டேன். அவ்வப்போது யோகா செய்வதைத் தவிர உடலுக்காய் பெரிதாய் அலட்டிக் கொள்வது கிடையாது. உடலோடு இருப்பதை விட ஆழ் மனத்தோடு இருக்கும் நேரம் அதிகம். ஆழ்மனம் தன்னிச்சையாய் உடலை கவனித்துக் கொள்கிறது. 

இப்போது நடக்க ஆரம்பித்திருந்தேன். ஒவ்வொரு அடியாய் எடுத்து வைத்து முழு உணர்வு நிலையில் நகர்தல் எவ்வளவு சந்தோசமானது. எப்போதும் எதுக்கெடுத்தாலும் வாகனத்தில் சென்று விடும் ஒரு காலச் சூழலில் இருக்கும் போது நடப்பதற்கான வாய்ப்பு என்பது புதிதாய் ஒரு சந்தோசத்தைக் கொடுக்கிறது.வாகன நெருக்கமான சாலையைக் கடந்து யாருமற்ற சாலைக்குள் மெளனம் நிசப்தமாய் என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டு காற்றால் தலை கலைக்க... ஒரு குழந்தையாய் சிலாகித்து சிலாகித்து ஒவ்வொரு நொடியையும் அடிமேல் அடி வைத்து நடந்து கொண்டிருந்தேன். இப்போது சுவாசத்தை கவனிக்க ஆரம்பித்து விட்டென்.

ஆமாம்.. எப்போது எண்ணங்கள் மனதிலிருந்து அறுபட்டுப் போகிறதோ அப்போது மனம் உடனடியாய் ஓடிப்போய் நிற்கும் இடம் மூச்சு. என்னை பொறுத்த வரைக்கும் பழக்கப்பட்ட ஒரு நாயைப் போலத்தான் மனம். வாலாட்டிக் கொண்டு சொன்ன பேச்சை உடனடியாய் கேட்கும். அதை எப்போது குரைக்கச் சொல்ல வேண்டுமோ அப்போது குரைக்கவும் எப்போது கடிக்க வேண்டுமோ அப்போது கடிக்கவும், எப்போது வால் குழைத்து படுக்க வேண்டுமோ அப்போது படுக்கவும் பயிற்சி கொடுத்து இருக்கிறேன்.

மனதை புரிந்து கொள்ள அது நாம் எதைச் சொன்னாலும் செய்கிறது. புரிந்து கொள்ள முயலும் ஆரம்பத் தருணங்களில் நம்மை கடித்தும் விடுகிறது. நாளாக...நாளாக.. மனம் ஒரு வெற்று மாயை என்ற புரிதல் ஏற்பட....மாயையான மனதைப் பாரதியின் வரிகள் கொண்டு..

" எத்தனை கோடி படைகொண்டு வந்தாலும்
மாயையே - நீ
சித்தத் தெளிவெனுந் தீயின்முன்
நிற்பாயோ ? - மாயையே!
                                          
என்னைக் கெடுப்பதற் கெண்ணமுற்றாய்
கெட்ட மாயையே ! - நான்
உன்னைக் கெடுப்ப துறுதியென்
 றேயுணர் - மாயையே ! "

என்று பழித்து விட மனம்... ஒடுங்கிக் கொள்கிறது. இப்போது சுவாசத்தை கவனித்துக் கொண்டிருந்தேன்...! ஆழமாய் மூச்சினை உள் இழுத்து வெளிவிடும் போது ஏற்படும் பரம சுகத்திற்கு பெயர் திருப்தி. பெரும்பாலும் எண்ணங்களுக்கு ஏற்றவாறு சுவாசத்தின் ஏற்ற இறக்கங்கள் மாறுகிறது. 

சரியாய் தூங்காத நாளொன்றின் விடியலில் உடலின் இரத்த அழுத்தம் மாறிப்போய் அது மூளைக்கு வேகமாய் பாய்ந்து ஒரு மாதிரி இயல்பற்ற தன்மையை உடலுக்கு பரவ விட எரிச்சல் ஏற்படுகிறது. எதைப்பார்த்தாலும் எரிச்சல் யாரைப்பார்த்தாலும் எரிச்சல். இந்த எரிச்சல் கோபமாய் அடுத்தவர் மீது பாய, அடுத்தவர் நம் மீது பாய சூழல் கெட்டுப் போகிறது. 

இதை சரியாய் கவனித்து சரி செய்ய மூச்சினை கவனித்தல் அவசியமாகிறது. உடலின் எரிச்சல் அடுத்தவரிடம் கோபமாய் பாயும் முன்னரே அதை தடுக்க முடியும். மூச்சினை கவனித்து அதை சாந்தப்படுத்தி ஆழமாய் பிராணனை சுவாசித்து வெளிவிட புத்தியின் சூடு தணிகிறது. புத்தி குளுமை அடைகிறது. புத்தி குளிர அங்கே பரவும் இரத்தத்தின் வேகம் மட்டுப்பட்டு பிறகு உடலின் மற்ற பாகங்களுக்கு கொடுக்கும் கட்டளையில் நிதானம் பரவ செயல்கள் அமைதியாகின்றன. அந்த அமைதியில் நாம் சாந்தமாகி விடுகிறோம்.

உறக்கம் என்பது... மூளை செலவு செய்த சக்தியை திரும்பப் பெறுதல். ஆக்ஸிஜனால் மூளையை நிரப்ப முழுமையான புத்துணர்ச்சியோடு மூளை விழிப்போடு வேலை செய்ய ஆயத்தமாகிறது. இப்படித்தான் உறக்கமே இல்லாவிட்டாலும் ஆக்ஸிஜனை சரியான அளவில் நிரப்பிக் கொள்வதன் மூலம் எப்போதும் புத்துணர்ச்சியோடு இருக்கலாம். இதை சித்தர்கள் எல்லாம் சரியாய் செய்து உறக்கத்தை வென்று விடுகிறார்கள்.

இப்போது என் சுவாசம் நிபந்தனைகள் இல்லாமலேயே ஆழமாய் நிறைந்து கொண்டிருந்து. பெரு விருப்பங்களோ, துயரங்களோ எல்லாமே கடந்து நின்று கொண்டிருந்தது மனம். வானத்தை பார்த்தேன்...மேகங்களை காற்று நகர்த்திக் கொண்டிருந்தது. அவ்வப்போது யாரேனும் என்னைக் கடந்தோ அல்லது எதிர்ப்பட்டோ போய்க் கொண்டிருந்தார்கள். காரணங்களின்றி வாழ்வதற்கான சூழல்களை எவனொருவன் பெற்றிருக்கிறானோ அவன் பாக்கியவான். இலக்குகள் அற்று பயணிக்கும் ஒரு வாய்ப்பு எல்லோருக்கும் வாய்ப்பது இல்லை.

நாளைக் காலை விடிகையில் இன்னதை செய்யப்போகிறோம் என்று திட்டமிட்டு வாழும் வாழ்க்கை மேலோட்டமாக பார்க்கும் போது பாராட்டத்தக்கதாய் இருந்தாலும் அது மிகவும் ஒரு துரதிருஷ்டமான நிலை என்றுதான் நான் சொல்வேன். நாளைய நகர்வு என்றில்லை அடுத்த நொடியின் நகர்வு கூட யாராலும் அனுமானிக்க முடியாது என்னும் போது திட்டமிட்டேன் என்று கூறுவது முழு அபத்தம். 

காலம் ஒரு கணக்கு வைத்திருக்கிறது........அதன் படி செயல்கள் புறச்சூழலுக்கு ஏற்ப நிகழ்கிறது, அப்படி நிகழும் செயல்களில் ஏதோ ஒன்று அவ்வப்போது நமது திட்டத்தோடு ஒத்துப் போகிறது. அடிக்கடி இப்படி ஒத்துப் போகும் போது நமது திட்டம் வென்று விட்டதாக நம்புகிறோம்.

சரி அதை விடுங்கள்..... எங்கோ ஆரம்பித்து எங்கோ சென்று விட்டேன். 

நான் இப்போது நடந்து கொண்டிருக்கிறேன்.....! அசுர கதியில் இயங்கும் வாழ்க்கையில் தனியாய் அமர்வதற்கும் தன்னை தானே உற்று நோக்குவதற்கும் நேரமில்லாதவர்கள் தனியே நடப்பதற்கு முயற்சி செய்யுங்கள். உடற்பயிற்சியாய் செல்வதை தனியே வைத்துக் கொள்ளுங்கள்.. ஆனால் தனிமையை அனுபவிக்க உங்களை உற்று நோக்க...தனியே நடந்து பாருங்கள்....

நான் நடந்து கொண்டிருந்தேன்....யாருமற்று ... நானுமற்று....!

தேவா. SSunday, June 3, 2012

சிதம்பர ரகசியம் - 1சென்னை இராமகிருஷ்ணா மடத்திலிருந்து வெளியிடப்பட்டிருந்த அந்த குறுந்தகட்டை எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல்தான் காண ஆரம்பித்தேன். இறை தேடலும் இரை தேடலும் எப்போதுமே இரைச்சலாய்த்தான் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் ஏதோ ஒரு கணத்தில்தான் உணர்ந்து கொள்கிறோம். அப்படியான ஒரு உணர்வினை எனக்கு அந்த கைலாஷ் புனித யாத்திரை குறுந்தகடு மெலிதாய் உணர்த்தத் தொடங்கியது.

பாதி ஓடிக் கொண்டிருந்த அந்த காணொளியை நிறுத்தி விட்டு... எண்ணங்களை பின்னோக்கி பறக்க விட்டேன்...!

ஓம் நமசிவாய என்னும் மந்திரமும், கந்தர் சஷ்டி கவசமும், ஓம் சரவணபவ மந்திரமும் சிறு பிராயத்திலிருந்தே என் புறச்சூழலால் எனக்குள் ஊற்றப்பட்டது என்றாலும், ஜீன்கள் முழுதும் பல தலைமுறைகளாக சைவ சமயத்தின் உணர்வுகள் எனக்குள் கடத்தப்பட்டு இன்னது என்று தெரியாமல் சிவன் என்றாலே எனக்குள் ஒரு ஈர்ப்பினை தன்னிச்சையாக ஏற்படுத்தி இருக்கிறது.

நிறைய வாசித்தால் ஏற்படும் தாக்கங்களின் வலிகள் நிறைய படைப்புக்களைப் பெற்றுப் போடும். புறச்சூழலின் தாக்கங்களும் இவ்வாறே..., எனினும் எந்த வித புறத் தாக்கங்கள் இல்லாமலும் வாசிப்பனுபவமும் இல்லாமல் என்னை ஈர்த்த ஒரு விடயம் சிவன். 

சிறு வயதிலிருந்தே எல்லா கடவுளரின் படங்களையும் நான் பார்க்கையில் எல்லா கடவுளரும் ஆபரணங்களும் கிரீடமும் தரித்துக் கொண்டு வசதியாய் காட்சி அளித்ததும், அதில் விதி விலக்காய் சிவனின் படம் மட்டும் இடுப்பில் ஒரு புலித்தோலும், கழுத்தில் ஒரு படமெடுக்கும் ஒரு பாம்பும், தலையில் கங்கையும், என்று வித்தியாசமாய் இருந்ததும் எனக்கு சிவன் என்றால் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டதற்கு ஒரு காரணமாய் இருக்கலாம்.

மேலும் அறிமுகம் செய்யப்பட்ட போதே ஆக்கி, அழிக்கும் கடவுள் என்று அறியப்பட்ட போது சிவன் எனது சூப்பர் ஹீரோ ஆகிப்போனார். தலைமைக் கடவுள் என்று ஒருகாலத்தில் எனது புரிதல் எனக்கு உணர்த்த அந்த காரணமும் என்னை சிவனை நோக்கி பயணிக்கச் செய்தது. படத்தில் காணும் சடாமுடி கொண்ட ஒருவராய் சிவனாய் அறிந்து பின்னொருநாள் திடீரென்று ஒரு லிங்கத்தை காட்டி இதுவும் சிவன் தான் என்று என் அம்மா சொன்ன போது....

என் பால்ய வயது மூளையிலிருந்து எழுந்த கேள்விகளுக்கு எல்லாம் யாராலும் பதில் சொல்ல முடியவில்லை அல்லது எனக்கு சொல்லக் கூடாது என்று அவர்கள் எண்ணி இருக்கலாம். இரவு முழுதும் உறங்காமல் கடவுள் எப்படி ஒரு அண்டாவை கவிழ்த்தது போன்ற அமைப்புடைய லிங்க உருவில் இருப்பார்? அல்லது ஏன் அப்படி இருக்க வேண்டும். லிங்க உருவில் இருக்கும் போது எப்படி பேசுவார்? கை எங்கே ? கால் எங்கே? என்றெல்லாம் யோசித்து யோசித்து மூளை நரம்புகள் பிய்ந்து போகாதது ஒன்றுதான் குறை.

சிவன் கோவிலில் இப்போது கூட்டம் இருக்கிறது. இந்த கூட்டம் நாட்டம் எல்லாம் ஒரு குறிப்பிட்ட பத்து அல்லது பதினைந்து வருடத்திற்குள்ளாக வருவதுதான். அதுவும் பிரதோஷ வழிபாட்டினை சைவ அமைப்புக்களும், நகரத்தார் சங்கங்களும் சிறு சிறு புத்தகங்களினூடே பரப்பியதன் மூலம் பிரதோச வழிபாட்டிற்காக கூடும் கூட்டம் அதிகமானது.

இது ஒரு மார்க்கெட்டிங் யுத்தி என்று கூட சொல்லலாம். ஆமாம் காலமெல்லாம் அழிக்கும் கடவுளாய் அறியப்பட்ட சிவன் பொருளைக் கொடுப்பவர் அல்ல பொருளை எல்லாம் எடுத்துக் கொண்டு ஞானத்தையும், முக்தியையும் கொடுப்பவர் என்றே அறியப்பட்டார். இது ஒரு நாடகத்தன்மையான புரிதல் என்றாலும் இதில் மனோதத்துவ விஞ்ஞானம் இருப்பதும் உண்மை. அது பற்றி பிறகு பார்ப்போம்....

பிரதோச தினத்தன்று காலையிலிருந்து நோன்பு இருந்து சிவனை மனதில் தியானித்து மாலையில் குளித்து சிவாலயம் சென்று பிரதோஷ காலம் என்று அறியப்படும் மாலை நான்கரை மணியிலிருந்து ஆறுக்குள் நந்திதேவருக்கு நடக்கும் பூஜையை கண்டு நந்தி தேவரை வணங்கி அவரின் இரு கொம்புகளினூடே சிவலிங்க தரிசனம் கண்டு பின் நந்தி பெருமானுக்கு வெல்லமும் அரிசியும் படைத்து சிவ மந்திரங்கள் ஓதி பின் தனது நோன்பினை நிறைவேற்றிக் கொண்டால் கேட்டதெல்லாம் சிவன் கொடுப்பார், அப்படி கொடுக்க நந்தி பெருமான் உதவி செய்வார்.

என்றெல்லாம் பிரதோஷ மகிமை பற்றி எடுத்துக்கூறி அது சாமனிய மக்களையும் சென்று சேர.... எப்போதும் கொடுக்கும் தெய்வத்திற்கு சேரும் கூட்டம் சிவாலயங்களையும் சூழ ஆரம்பித்தது.

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முன்பெல்லாம் யாரும் சிவனை அதிகம் வணங்குவதில் ஆர்வம் காட்டியதில்லை. காரணம் சிவனை வணங்கினால் இருக்கும் செல்வம் எல்லாம் போய் விடும் என்று ஒரு பொதுவான ஆனால் போலியான கருத்து நிலவிய காலங்களில் சிவாலயங்களில் கூட்டமே இருக்காது. ஏன் இன்னும் சொல்லப் போனால் இப்போது கூட மிகுதியான கோவில்களில் பிரதோசகாலம் தவிர்த்து சிவனை வழிபட இருக்கும் கூட்டம் குறைவு என்றே சொல்ல வேண்டும்.

எல்லா கடவுள்களும் பணக்காரர்களாய் இருக்கும் போது என் சிவன் மட்டும் ஏன் சுடுகாட்டைச்சுற்றி வரவேண்டும்? சாம்பலை அள்ளிப் பூசிக் கொண்டு பாம்புகளை மாலையாகப் போட்டுக் கொண்டு ஏன் பரதேசி கோலம் பூண வேண்டும்? எரியும் பிணங்களுக்கு மத்தியில் அமர்ந்து ஏன் தவம் புரிய வேண்டும் என்றெல்லாம் கூட யோசித்திருக்கிறேன்.

யாருமே இல்லாத காளையார் கோவில் காளீஸ்வரர் சன்னதியில் தனியாய் அமர்ந்து சிவலிங்கத்தையே உற்றுப்பார்த்து சிவன் என்றால் எடுக்கும் தெய்வம் என்று எப்போது பரப்புரை செய்யப்பட்டது ? அது யாரால் செய்யப்படது...? ஏன் செய்யப்பட்டது...? சைவம் என்பது தமிழனின் ஆதி வழிபாட்டு முறையாயிற்றே.... சங்காலம் தொட்டு தமிழர்களின் சூப்பர் கடவுள் சிவன் மட்டும்தானே...? தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று தமிழ் மண்ணை ஆண்ட மன்னர்களும் உருகி உருகி வழிபட்ட ஒரு தெய்வம் அல்லவா?

தேவாரம், திருவாசகம் என்று அடியார்கள் போற்றிப் புகழ்ந்த மெய்ப்பொருள் அல்லவா? யார் இந்த சிவன்? இவரே ஆதி கடவுள் என்று எப்படி சொல்கிறார்கள்? மண்ணைக் காட்டி இது சிவன் என்கிறார்கள், மலையைக் காட்டி சிவன் என்கிறார்கள், நெருப்பையும் நீரையும், காற்றையும், நீரையும், ஆகாசத்தையும் காட்டி சிவன் என்கிறார்கள்....

உருவமாயிருப்பவர் சிவனா? இல்லை அருவமாய் இருக்கும் லிங்க ரூபம் சிவனா? மண்ணா? மலையா? ஐம்பூதங்களா? யார் சிவன்.. அல்லது எது சிவன்...?

கேள்விகள் எல்லாம் என் மண்டையைப் பிளக்கத் தொடங்கிய காலத்தில் பதில் ஏதும் கிடைக்காமல் பரதேசியைப் போல சுற்றி இருக்கிறேன்...நான்....!

(தொடர்ந்து பேசுவோம்....)


தேவா. SFriday, June 1, 2012

நினைவுத் தழும்புகள்...!

இலக்குகள் மாற்றி
நாம் பயணிக்கப் போகும்
இந்தக் கணத்தில்தான்
என் நினைவுகளை நீயும்
உன் நினைவுகளை நானும்
ஏந்திச் செல்லப் போகிறோம்...!

இனி...

காற்றின் கடிவாளம் சொடுக்கி
என்னிடம் நீயும்...
உன்னிடம் நானும்
சடுதியில் வந்து போகலாம்;

கடந்த காலத்தை...
மெளனத்தோடு உரசி உரசி...
ஏதேனும் கவிதைகள் கூட‌
செய்து பார்க்கலாம்...!

பெரு விருப்பங்களை நெஞ்சுக்குள்
பூட்டிக் கொண்டு
பிரிந்து போன கணத்தை
சுகமாய் ஒரு முறை அழுது பார்க்கலாம்!

இன்னுமொருமுறை எங்கேனும்
இணைய‌லாம் என்றெண்ணிக் கொண்டே
தினசரிகளில் ஒளிந்து கிடக்கும்
அந்த கணத்தை தேடித் தேடி
லயிப்பிலேயே ரசித்துக் கிடக்கலாம்..

ஆமாம்....

இலக்குகள் மாற்றி
நாம் பயணிக்கப் போகும்
இந்தக் கணத்தில்தான்
என் நினைவுகளை நீயும்
உன் நினைவுகளை நானும்
ஏந்திச் செல்லப் போகிறோம்...!

தேவா.  S