Skip to main content

ரியாலிட்டி டி.வி ஷோக்களும், மக்களின் அறியாமையும்...!
















தொடர்ச்சியாக பல நாட்கள் ஸீ தமிழ்த் தொலைக்காட்சியில் அக்கா நிர்மலா பெரியசாமி நடத்தும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியைப் பாத்து, பாத்து மெய் சிலிர்த்துப் போய் ஒரு கட்டுரை எழுதும் நிலைக்கு வந்தே விட்டேன் என்றால் பாத்துக்கோங்களேன்..!

மனித சுவாரஸ்யத்தின் உச்சம் என்ன தெரியுமா? 

அடுத்த வூட்டு பிரச்சினைய வேடிக்கைப் பாக்குறது. தான் எக்கேடு கெட்டுப் போனாலும் சரி அடுத்தவன பாத்து நாலு தப்பு கண்டு பிடிச்சு குத்தம் சொல்லாட்டி நம்ம ஆளுகளுக்கு மோட்சமே கிடைக்காது. தெருவுல நடக்குற சண்டைய கைய கட்டிக் கிட்டு வேடிக்கை பாக்குறதுல ஆரம்பிக்கிற இந்த சுவாரஸ்யம், பக்கத்து வீட்டுல பொண்டாட்டி புருசன் சண்டைய ஒட்டுக் கேக்குறதுல ஆரம்பிச்சு, தெருவுல இருக்க எல்லா விசயத்தையும் வெத்தலையோட மடிச்சு வாயில போட்டுக்கிட்டு ஒவ்வொருத்தன் காதா பாத்து துப்புறது வரைக்கும்.....இது ஒரு கலாச்சாரமாவே போயிடுச்சுன்னு சொல்லலாம்.

ஏற்கெனவே நடிகை லெட்சுமி அம்மாவ வச்சு கிட்டதட்ட சினிமாவையே மிஞ்சுற அளவுக்கு விஜய் டி.வில வந்த நிகழ்ச்சிய இப்போ நிர்மலா அக்காவ வச்சு பட்டி டிங்கரிங் பாத்து பட்டைய கிளப்பிட்டு இருக்கு இந்த ஸீ தமிழ் குரூப்.

என்ன என்ன கருமம் புடிச்ச பெரச்சினை இருக்கோ இந்த ஒலகத்துல, அம்புட்டையும் நீங்க தெரிஞ்சுக்கணும்னா கண்டிப்பா சொல்வதெல்லாம் உண்மைன்ற ரியாலிட்டி ஷோவ நைட்டு சோத்த போட்டுகிட்டு காரக்குழம்ப ஊத்தி பிசைஞ்சுக்கிட்டே பாக்கணும்ங்க.. தொட்டுக்கிட ஊறுகாய் எல்லாம் வேணாம்... அந்த புரொக்கிராமுலயே சுள்ளாப்பா அம்புட்டும் கிடைக்கும்...!

பஞ்சாயத்துப் பண்ணி வைக்கிறேன், கவுன்சிலிங்க் கொடுக்கிறேன் பேர்வழின்னு நல்ல தீர்ப்பு சொல்ல என் தமிழ்ச்சாதி போன் பண்ணி அவுங்களாவே அவுங்கள லாக் பண்ணிக்கிற ஒரு கொட்டடி தாங்க ஜீ டிவியோட இந்த நிகழ்ச்சி. பரபரப்பா நிகழ்ச்சிய கொண்டு போகாலேன்னா என்ன ஆகும்...? புரோக்கிராம் படுத்துக்கிடும். அப்புறம் டி.ஆர்.பி. ....ஜி.ஆர். பி ரேட்டிங் எல்லாம் எகிறாது..... கம்பெனிக்கு துட்டும் கிடைக்காது. அப்போ கம்பெனி என்ன பண்ணும்னு கேக்குறீங்களா...?

நல்லா கேளுங்க நாக்கப் புடுங்கிக்கிற மாதிரி....! நிகழ்ச்சிய எடுக்குற தயாரிப்பாளரும் டைரக்டரும் ஸ்கிரிப்ட சுவாரஸ்யமா கொண்டு போக எம்புட்டு முடியுமோ அம்புட்டு உணர்ச்சிய தூண்டுற மாதிரி கேள்விகள பஞ்சாயத்து பண்ணச் சொல்லி பிராது கொடுக்கிறாய்ங்களே அறிவாளிங்க,  அவுங்க கிட்ட கேப்பாங்க...! பச்சைய பச்சையா அவனுக பேசுனானுகன்னு வைங்க...அது இன்னும் ஜூப்பரு... ரெண்டு வார்த்தைய தெரிஞ்சும் தெரியாம வுட்டுப் புட்டு மிச்ச வார்த்தைய கொய்ங்ங்ங்.னு ஒரு சவுண்ட போட்டு மறைச்சு....ஸ்லோமோசன்ல சவுண்ட் லெஸ் எபக்டல சீன காமிச்சு...

பாக்குற நம்மள மாறி...ஆடியன்ஸ சீட்டு நுனிக்கே கொண்டு வந்துருவாய்ங்க..! இவன் பொண்டாட்டிய அவன் கூட்டிட்டுப் போயி குடும்ப நடத்த, இவன் என் பொண்டட்டிய கொடுடானு கேக்க, பொண்டாட்டி ரெண்டு பேரும் வேணாம்னு சொல்ல, பக்கத்துல மொத புருசனுக்கு பொறந்த மூணு புள்ளைங்களும் கெக்க பிக்கனு பாவமா முழிக்க.. ரெண்டாவது புருசன் அது எப்டிடி என்னையவும் வேணாம்னு சொல்லலாம்..?  நான் தான உன்ன ஆறு மாசமா வச்சுக் காப்பாத்துறேன்.. நீ வேணாம்னு சொன்னீன்னா வயித்துல வளர்ற மூணுமாசமான எம்புள்ளைக்கு என்னடி வழின்னு கேக்க...

மொதப்புருசனும் ரெண்டாவது புருசனும் ஸ்டூடியோவுக்குள்ள மல்லுக்கட்டி அடிச்சுக்கும் போது யூனிட்ல இருக்க தடிசு தடிசான ஆளுங்க ஓடி வந்து வெளக்கி விட்டு....அப்பாலிக்கா டாப் கியரு போட்டு புரோக்கிராம மேல கொண்டு போவாய்ங்க...

மேல நான் சொல்லி இருக்கறது ஒரு சாம்பிள் பீசு...! இது மாதிரி அகில உலகத்துல இருக்குற அம்புட்டு பிரச்சினைகளுக்கும், கள்ள, நல்ல, நொள்ள காதலர்களையும், இன்னும் எல்லா அயோக்கியத்தனங்களையும் அசிங்கங்களையும் காசு கொடுத்தோ இல்ல நேர்மையாவோ வெலைக்கு வாங்கி நடத்துற ஒரு புரோக்கிராமுதான்....சொல்வதெல்லாம் உண்மை....ன்ற டைட்டில்ல மட்டும் உண்மைய சொல்ற ஒரு நிகழ்ச்சி..!

ஒரு புருசனுக்கும் பொண்டாட்டிக்கும் கொஞ்சம் மனஸ்தாபம்ங்க சேரணும்னு ஆசைப்படுற பொண்டாட்டியோ புருசனோ என்னங்க பண்ணனும்....? நேரடியா போய் தன் புருசனையோ பொண்டாட்டியையோ நேராப்பாத்து கையில கால்ல விழுந்து இல்ல அழுது தன்னோட அன்பைக் காட்டி ஒண்ணு சேரணும்..அப்டி இல்லேன்னா தெரிஞ்சவங்க அறிஞ்சவங்க மூலமா சொல்லி கேட்டு உறுதி கொடுத்து ஒண்ணா சேர ஏற்பாடு பண்ணிக்கணும்.... ! சரி அதுவும் ஒத்து வரலையா கழுத போகட்டும்... நம்ம பொழப்ப நாம பாப்போம் அவ பொழப்ப அவ பாக்கட்டும்னு விட்டுட்டுப் போயிடணும்....

இது என்னங்க ஒரு மானங்கெட்ட தனமா மீடியா முன்னாடி வந்து ஒக்காந்து கிட்டு சொந்தப் பிரச்சினைய எல்லாம் சொல்லி......அதை அந்த புரோக்கிராம் நடத்துற ஆளுக சுவாரஸ்யத்துக்காக தூண்டி விட்டு...ரெண்டு பேருக்கும் ரோசம் ஏறிப் போயி அதை இந்த தமிழ் கூறும் நல்லுலகமே வேடிக்கைப் பார்க்க...... வெளங்குமாங்க இது....?

நாலு சுவத்துக்குள்ள இருக்க வேண்டிய விசயத்தை தீர்த்து வைக்க நாலு பேர வச்சு பேசி முடிக்கிறது நல்ல விசயம்தான்னு வைச்சுக்கோங்களேன்...இப்படி ஏழு கோடி பேரு பாக்குற டி.வி முன்னாடி உக்காந்து அதுவும் வியாபரத்துக்காக ஒரு நிகழ்ச்சிய நடத்துறவங்க முன்னாடி எப்டிங்க நியாயம் கிடைக்கும்னு நினைச்சுப் போறாங்க...?

அபலைப் பெண்களை கெடுத்து கைவிட்ட காமுகனை அடையாளம் காட்டவோ அல்லது சமூகத்தால் அநீதி இழைக்கப்பட்ட பொதுவான ஆண்கள் அல்லது பெண்கள் கொடுக்கும் புகாரைக் எடுத்துக் காட்டி சமுதாயத்துக்கு விழிப்புணர்வு கொடுத்து எச்சரித்து ஜாக்கிரதையா இருங்கன்னு சொல்லவோ...,  தனியார் நிறுவனங்களால் ஏமாற்றப்பட்டு அது பற்றிய செய்திகளைப் பகிரவோ, லஞ்சம் கேட்டு துன்புறுத்தும் அரசு அலுவலர்களையும் அரசியல்வாதிகளையும் அடையாளம் காட்டவோ, பாலியல் பலாத்காரம் செய்த பாவியை உலகத்துக்கு முன்பு இழுத்து வந்து போடவோ..., ஓட்டுக்கு காசு கொடுக்கும் அயோக்கியர்களின் தோலுரித்துக் காட்டவோ.... 

தேர்தலில் செய்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்து விட்டு தொகுதி பக்கமே வராமால் போய்விடும் எம்.எல்.ஏ மற்றும் எம்.பிக்களின் முகத்திரைகளை கிழித்து எறியவோ... இந்த புரோக்கிராமா பயன்படுத்தலாமேங்க..? இதையெல்லாம் விட்டுப் புட்டு...

அண்ணன் தம்பி சண்டை, நார்த்தனார் ஓப்படியா பிரச்சினை, மாமியார் மருமக சண்டை, காதலிச்சு ஓடிப்போனவங்கள கண்டிக்கிற பெற்றோர்கள்னு தனி மனிதர்கள் உளவியல் ரீதியா தீர்த்துக்க வேண்டிய பிரச்சினைகளை ஊரறிய காட்டி அவுங்கள மறுபடி சேரவே முடியாத அளவுக்கு கொண்டு போர ஒரு ஒய்யாரமான நிகழ்ச்சிய.... ஏன் இன்னமும் தடை பண்ணாம இருக்காங்க நம்மூர்லங்கறது மில்லியன் டாலர் கேள்விங்க..!

வீட்டுக்குத் தூரம்னு சொல்லியும் பொண்டாட்டிக்கு புருசன் செக்ஸ் டார்ச்சர் கொடுக்குறானாம்...இது ஒரு அம்மா கொடுத்த பிராது..இதை நிர்மலாம்மா புருசன கூப்டு விசாரிச்சு.....தீர்ப்பு கொடுக்குறாங்க....! இல்லை நான் தெரியாமத்தான் கேக்குறேன்.. இந்த மகளிர் காவல் நிலையங்கள், உளவியல் மருத்துவர்கள், சமூக சேவை அமைப்புக்கள் இதுக்கெல்லாம் இப்போ வேலையே இல்லையா? இல்லை இவுங்க கிட்ட எல்லாம் போனா தீர்வு கிடைக்காமலேயே போயிடுமா? 

பிரச்சினைய டி.வி பொட்டியில கேமரா முன்னாடி உக்காந்து ஊரே பாக்க சுவாரஸ்யமான ஒரு நாடகம் மாதிரி கொண்டு போயி அவனுக காசு சம்பாரிச்சுடுறானுக......பிரச்சினை தீரணும்னு நியாயம் கேக்க வந்த நாம வெளியில தலை காட்ட முடியாம நாறிப்போறோமே இதை கொஞ்சாமாச்சும் யோசிச்சுப் பார்க்குமா என் தமிழ்ச் சொந்தங்கள்....?

டி.ஆர்.பி ரேட்டிங்கை ஏத்திக்கிறதுக்காக நடத்துற இந்த நிகழ்ச்சியில அறியாமையிலிருக்க ஒவ்வொரு ஏழைக் குடும்பமும்தான் பெரும்பலும் இந்த நிகழ்ச்சியில போயி பிராது கொடுக்கப் போறாங்க..! வாழ்க்கை பத்தின தெளிவு இருக்க யாரும் தங்களின் சொந்தப் பிரச்சினையை ஊரார் முன்னாடி சொல்ல வர்றதில்லைங்க.....அறியாமையில இருக்குற சனங்கதான் இந்த மாதிரியான பொறிகள்ள ஏன் போறோம் எதுக்குப் போறோம்னு தெரியாம போய் சிக்கிக்கிடுதுங்க....!

எந்தப் பிரச்சினையா இருந்தாலும் நாம நமக்குள்ள மனசு விட்டு பேசிக்கிட்டாலே போதும்ன்ற ஒரு விட்டுக் கொடுத்துப் போகுற மனப்பான்மையும், எனக்கு இது வசதி என்னால உன் விருப்பப்படி இருக்க முடியாதுன்னு எடுத்து சொல்லிப் புரிய வைக்கிற பக்குவமும், எம்பொண்ணு அவளா விரும்பி காதலிச்சு, கல்யாணம் பண்ணிக்கிட்டா,  சரி.... அவளுக்கு வயசு ஆயிடுச்சு பையனுக்கு வேலை வெட்டி இல்லன்னாலும் பரவாயில்லை எந்த சாதியா இருந்தாலும் பரவாயில்லை .....போகட்டும் அவளுக்கு பிடிச்ச வாழ்க்கைய வாழட்டும்ன்ற பெருந்தன்மையும் இல்லாத மடச்சாம்பிராணிகள்....

தன் மக ஆறு மாச கர்ப்பமா இருந்தாலும் பரவாயில்லை அவள அவன் கிட்ட இருந்து அத்து விட்டுடுங்க நாங்க கருவை கலைச்சு எங்க மகள நல்லா பாத்துக்கிறோம்னு சென்டிமெண்ட்டுங்குற பேர்ல விசத்த கக்குற கேவலத்தை எல்லாம் நாம பாத்து தொலைக்க வேண்டி இருக்குங்க....!

எவ்ளோ டேலண்டா நம்ம வூட்டுப் பிரச்சினைய வச்சு அவன் காசு பாக்குறான் அப்டீங்கற உண்மைய நாம உணராத வரைக்கும்....

இந்த மாதிரி டி.வி நிகழ்ச்சிகள் தமிழ்நாட்ல ஜெக ஜோரா காசு பாக்கத்தாங்க செய்யும்...! 

நாம முழிச்சுக்கிட்டோம்னு வச்சுக்கோங்க இந்த ஊர்ல பல பயலுகளுகளுக்கு சோலியே இருக்காதுங்க...! நம்மளால முடிஞ்ச வரைக்கும் அக்கம் பக்கத்துல இருக்கவங்களுக்கு இந்த மாதிரியான அபத்தமான நிகழ்ச்சிகளைப் பத்தி எடுத்து சொல்றதோட முடிஞ்சவரைக்கும் இது மாதிரி நிகழ்ச்சிகள நாம புறக்கணிக்கிறதும்.........ரொம்ப ரொம்ப அவசியம்னு சொல்லி நான் உத்தரவு வாங்கிக்கிறேனுங்க...!


தேவா. S



Comments

நானும் இந்த நிகழ்ச்சி பார்ப்பதுண்டு...
எத்தனை அபத்தங்கள்...
பெரும்பாலான கதைகள் கணவன் மனைவி பிரச்சினைகள்தான்.
கேவலமான கேள்விகளும் கேனத்தனமான பதில்களுமாய்...
அழுகையும் ஆற்றாமையுமாய்...
நீங்கள் சொல்வது உண்மை.
குடும்பப் பிரச்சினையை இவர்களிட்ம் சொல்லி கும்மியடிப்பதில் யாருக்கு லாபம். சிந்திக்காதவரை உலக தொலைக்காட்சிகள் உயரப் பறக்கும் இது போன்ற நிகழ்ச்சிகளால்...
டிவியில் முகம் தெரியும்னா அதுக்காக எப்பேர்ப்பட்ட கிறுக்குத்தனத்தையும் செய்ய தயாராக இருக்கிறார்கள்.... படித்தவர்கள், படிக்காதவர்கள் எல்லோரும்......!
Harini Resh said…
hm சரியாய் சொன்னிங்க அண்ணா
இதையே தான் நானும் நினைப்பேன்
vasan said…
சில‌ நிமிட‌ கேமிர‌ பார்வைவும், ப‌ளிர் வெளிச்ச‌மும் தொலைக்காட்சி பெட்டியை ஒரு பாவ‌ம‌ன்னிப்பு பெட்டியாய் மாற்றிவிடுகிற‌து.


ப‌ங்கு பெறுப‌வ‌ரின் ஆள்ம‌ன‌தின் எல்லா ப‌ழுப்பு விவ‌கார‌ங்க‌ளையும்

வெளிக்கொண்டுவ‌ந்து விடுகிற‌து. அப்பா, ம‌றைத்த‌ கொலைக‌ளைக் கூட கொட்டிவிட தூண்டிவிடுகிற‌து. மாமியார், ம‌ரும‌க‌ள் வீட்டு அந்த‌ர‌ங்க‌ம் ச‌பைக‌ளில் அர‌ங்கேற்ற‌மாக‌ காம்ப‌ய‌ரின் துணை கேள்விக‌ளும், கை த‌ட்ட‌ல்க‌ளும் கிரியா ஊக்கியாய் செய‌லாற்றுகிற‌து. சில‌ நிமிட‌ ந‌ட்ச‌த்திர‌ அந்த‌ஸ்து தரும் திரை, வாழ்க்கையில் புதைக்க‌ப்ப‌ட்ட‌ அவ‌ல‌ங்க‌ளை மீண்டும் தோண்டி காட்சிப்ப‌டுத்தி, தொலைகாட்சியின் டிஆர்பி த‌எர‌ம் உய‌ர‌, த‌ங்க‌ளைத் தாங்க‌ளே தாழ்த்திக் கொள்ளும் நிலைக்கு அத‌ன் வ‌ச‌ப்ப‌ட்டுவிடுகிறார்க‌ள்.



இந்த ரியாலிட்டி ஷோக்க‌ள், ச‌ம்ப‌ள‌ம் பெறாத‌ ந‌டிக‌ர்க‌ளால், த‌ன் சொந்த வாழ்க்கையை க‌தையாக்கி, வ‌ச‌ன‌ம் பேசி ந‌டிக்க‌, இதுவ‌ரை வேறு எங்கும் வெளியிட‌ப்படாத‌ இந்த‌ காட்சி "முத‌ன்முறையாக" எந்த‌ செல‌வுமின்றி தயாரிக்க‌ப்ப‌ட்டு, பொதும‌க்க‌ளின் பார்வைக்கு விற்க‌ப்படுகிற‌து. இருப‌து ந‌ப‌ர்க‌ள் அட‌ங்கிய‌ அந்த‌ கூட்ட‌த்தில் அல‌ச‌ப்ப‌ட்ட‌ அவ‌ர்க‌ளது படுக்கை விரிப்பின் அசுத்த‌ம், ப‌ல்லாயிர‌ம் ம‌க்க‌ளின் வீடுக‌ளின் கூட‌த்தில் காட்சிப் பொருளாவ‌தை அவர‌க‌ளால் அன்று ஊகிக்க‌ முடியால் போய் விடுகிற‌து. அன்று சிந்திய‌ வார்த்தைக‌ள் அவ‌ர்க‌ளுக்கே எஜ‌மானாய் மாற, குடும்ப‌த்தின் சூழ‌லை, த‌ன்மையை நிர‌ந்த‌ர‌மாய் மாற்றி விடுகிறார்க‌ள். உண்மை ச‌ம்ப‌வ‌ங்க‌ள் ப‌ற்றி பேசி இந்த‌ ரியாலிட்டி ஷோக்க‌ள் ஒரு ச‌ட்ட‌ப்ப‌டியான‌ "வாயேஷ்" வ‌கையை சார்ந்த‌ ஒரு குற்ற‌ செய‌ல் தான்
சரியாச் சொன்னீங்க தேவா...

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த