Pages

Tuesday, October 30, 2012

ராஜாவின் கனடா இசைக்கச்சேரியும்...மட்டுப்பட்ட மனித பார்வைகளும்..!
கட்டுக்கடங்கா காட்டாறு அவன். திக்குகளின்றி சுற்றித் திரியும் காற்று அவன். பற்றி, பற்றி பற்றிக் கொள்பவரை எல்லாம் தீயாய் மாற்றும் பெரு அக்னி அவன். கணிதக் கூட்டுக்களைக் கொண்ட கட்டுப்பட்ட நிலையைக் கொண்ட மட்டுப்பட்ட மனிதனில்லை அவன். எல்லோரும் சாதாரணமாய் சுவாசிக்க. அவன் சுவாசம் எங்களுக்கு ஸ்வரமாகிப் போனது. வார்த்தைகளைக் கடந்த பெரும் மெளனத்தை சுமந்து கொண்டிருக்கும் பிரபஞ்சத்திலிருந்து அதை பிழிந்தெடுத்து இசையாக்கிக் கோர்த்துக் கொடுக்கும் பிரம்மா அவன்....

அவன், அவன் என்று விளிப்பதாலேயே அவன்  ஒன்றும் அவன் இல்லை. அவன், அவள், அது, இது, என்று சுட்டியுணரமுடியாத பேரியக்கத்தின் இசை வெளிப்பாடு அவன். 1970களுக்குப் பிறகு பிறந்த பிள்ளைகளை எல்லாம் யார் யாரோ பெண்கள் பெற்றெடுத்து தாயென்று அறிவித்துக் கொண்டாலும் அத்தனை பிள்ளைகளையும் அவன் இசைதான்  தாலாட்டியது. கர்நாடக சங்கீத பாரம்பரியத்துக்குள் பாடல்கள் சாமானியனுக்கு எட்டாக்கனியாய் இருந்த போதும் சரி, அதே இசை தபேலாக்களுக்குள் நின்று கதைகள் பேசிய போதும் சரி, சங்கீதம் என்பது நமக்கு அன்னியமாய்த்தான் இருந்தது.

அவன்..... ஆர்மோனியப் பெட்டியைத் திறந்த போது அதிலிருந்து வெளிப்படட் அற்புத இசை வடிவங்கள் நமக்கெல்லாம் வாழ்க்கையாகிப் போனது. அவன் வாழ்க்கையை இசையாய்க் கொடுத்தான்.. அது சந்தோசத்தையும் கண்ணீரையும் சரிபாதியாய் நமக்கு வழங்கியது.

முதல்படத்தின் டைட்டிலிலேயே துள்ளிக் குதித்து குத்தாட்டம் போட்டபடியே பிறந்த அவனின் திரை இசை அன்னக்கிளி உன்னைத் தேடுதே... என்று அந்தப் பெண்குரல் திரையில் தேடிய கணத்திலிருந்து ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களும் அந்த இசை அரசனை தேட ஆரம்பித்தார்கள். தமிழ் சினிமாவில் பிரளயத்தை உண்டு பண்ணிய பெரும் புயல் அவன்.


ஆயிரம் தாமரை மொட்டுக்களே என்று .... கிராமியத் தெம்மாங்குப் பாடல்களை எல்லாம் திரைக்குள் கொண்டு வந்து கொடுத்த மிகப்பெரிய ஜனரஞ்சக சக்கரவர்த்தி அவன். அவன் இசையால் அழ வைப்பான், சிரிக்க வைப்பான், ஆட வைப்பான், பாட வைப்பான், மெளனித்து பெரும் தியானத்திற்குள் சென்று சேரும் பாக்கியத்தை சாமானியருக்கும் பெற்றுக் கொடுப்பான்....! ஏழு ஸ்வரங்களும் அவன் ஏறி இறங்கி விளையாடும் படித்தளங்கள்.

திட்டமிட்டு செயல்படவேண்டிய அவசியங்கள் அற்றவன் மட்டுமல்ல அவன், எந்த ஒரு இன, சாதி, மொழிகளுக்கு மட்டும் அவன் சொந்தகாரன் அல்ல...பிராணன் எப்படி மனிதர்களுக்கு பொதுவோ, அதே போல அவனின் இசையும் யாவருக்கும் பொது. நில் என்று சொன்னால் நிற்பதற்கும், போ என்று சொன்னால் போவதற்கும் அவன் என்ன ஆதாயங்களைத் தேடும் அரசியல் கட்சியையா நடத்திக் கொண்டிருக்கிறான்...? கூட்டிக் கழித்துப் பார்த்து தேவைகளை அமைத்துக் கொள்ள.......

அவன் மானுட சந்தோசங்களை வார்த்தைகளைக் கடந்த தன் பெரும் இசையால் கட்டியமைத்த பிரம்மா....அவன் யாருக்கும் கட்டுப்படவேண்டிய அவசியம் இல்லை. தேவையும் அவசியமும் இல்லாமல் இசையின் மீது களங்கம் சுமத்தி அவனின் இசைக்கச்சேரியைக் கொச்சைப்படுத்தும் மனிதர்கள் எல்லாம் விசாலபார்வை பார்க்கிறேன் பேர்வழி என்று மனிதநேயத்தை புதைத்து விட்டு இறுகிப் போன மனதோடு துக்கத்தை தோளில்  எப்போதும் சுமக்கச் சொல்லும் குரூர புத்திகளுக்குச் சொந்தக்காரர்கள்.

இசை காயம் பட்ட மனிதர்களுக்கு மருந்து என்பது உண்மையானால் கனடாவில்  இருக்கும் தமிழர்களின் இரணத்தை அவனின் இசை போக்கிவிடுமென்ற பயத்திலேதான் தேதி மாற்றச் சொல்கிறார்களா....? சந்தோசமாய்  வலிகளை மறக்கும் மனிதர்கள் சுயமாய் எழுந்து நின்று வலிவு பெற்று விடுவார்கள், அப்படி வலிவு பெற்று விட்டால் அவர்களின் சோகத்தை மூலதனமாக்கி பிழைப்பவர்களின் சோற்றில் மண் விழுந்து விடுமென்ற பயம் அவர்களின் நெஞ்சைக் கவ்விப் பிடித்திருக்க வேண்டும்.

இசை எப்போதும் மனிதர்களின் இயல்புக்கு எதிரானது அல்ல... அதுவும் தமிழர்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த அவனின் இசை காயம் பட்ட மனிதர்களை வருடிக் கொடுத்து எழுச்சி மிகுந்த மாதத்தில் வீறு கொண்டு எழச்செய்யுமே தவிர அவர்களை முடக்கிப் போட்டுவிடாது என்பதை தமிழர் உணர்வு பற்றி பேசும் அரை குறைகள் விளங்கிக் கொள்ளவேண்டும்.

களங்கமற்ற இசைத்தாயின் ஞானப்பிள்ளையின் மீது களங்கம் சுமத்த நினைக்கும் அத்தனை பேரும் அறுவெறுப்பான உணர்வுகளுக்குச் சொந்தக்காரர்களாய் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். குரூரமாய் சிந்தித்து சிந்தித்து தன் தாயையே சந்தேகப்படும் கரடு முரடான முரட்டுப் பிள்ளைகளையும் தாய் தன் பிள்ளையாய்த்தான் பார்ப்பாள்.

இளையராஜா என்னும் இசைப் பிரம்மா....

தன்னை சாடுபவர்களையும் இசையால் தாலாட்டத்தான் செய்வார். கத்துக்குட்டிகளும் கரப்பான் பூச்சிகளும் தன் முன் தோன்றும் சிறு மக்கள் கூட்டத்தைக் கண்டு தங்களைக் கடவுளாய் எண்ணிக் கொண்டு கர்ஜிக்கிறேன் பேர்வழி என்று ஊளைகளிடும் போது நிஜ ஜாம்பவன்.. கர்வத்தோடு இருப்பதில் தவறு ஏதும் இல்லை தானே...? அவன் படைப்பவன். இல்லாததிலிருந்து இசையைப் படைத்து மனிதக் குழந்தைகளுக்கு தூளி கட்டி தாலாட்டிய தாய்......

இளையராஜாவின் கனடா இசைக் கச்சேரியின் மீது அவதூறு பரப்பும் செயல்களைச் செய்பவர்களிடம் அன்போடு எடுத்துக்கூறி....அவன் காயம்பட்ட உணர்வுள்ள தமிழ்ச் சொந்தங்களை தன் இசையால் வாரி அணைத்துக் கொள்ள வருகிறான் என்று சொல்லுங்கள்...! தமிழர்களின் நெஞ்சில் இன்னமும் ஒட்டிக் கொண்டிருக்கும் ஈரத்திலும், நேசத்திலும், காதலிலும், வீரத்திலும், திமிரிலும், கோபத்திலும் சோகத்திலும் அவனின் இசை  ஆளுமையே அதிகம் என்று உரக்கச் சொல்லுங்கள்...!

தமிழர்களுக்கு எல்லாம் தன் ஒப்பற்ற இசையால்  முகவரி கொடுத்த இளையராஜா என்னும் சுடரை எப்போதும் போற்றுவோம்....இசை என்னும் அற்புத உணர்வால் ஒன்று கூடி அன்பான சமூகத்தின் ஒப்பற்ற அடையாளம் ஆவோம்...!

" நெஞ்சம் விளையாடுது நித்தம் இசைபாடுது
எங்கும் சுகமானது எங்கள் வசமானது
விழியில் தெரியும் அழகு எதுவும் இனிமேல் நமது
விடியும் வரையில் கொண்டாட்டம் தான்
நிலவும் மலரும் செடியும் கொடியும்
கடலும் நதியும் கவிதை சொல்லும்

ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா.."


தேவா. S

Wednesday, October 24, 2012

இது எனது முறை....!அப்போது யாருமற்று நான் நின்றேன். வலித்த போது என் கண்களே கலங்கியது. உலகம் தள்ளி நின்று கொண்ட போது நான் தனித்து நிற்க கற்றுக் கொண்டேன். தொடர்ச்சியான துரோகங்கள் எனக்கு இரணங்களைக் கொடுத்தாலும் அவை தழும்புகளாய் மாறி எனக்கு அனுபவமாகிப் போனது. அழுது, அழுது கண்ணீர் வற்றிப்போன போது என் கண்கள் பள பளக்கத் தொடங்கி இருந்தன. எல்லோரையும் காப்பாற்றும் கடவுளைப் போன்றவன் நான். கொடுக்கும் வரை கொண்டாடி, கொடுக்க முடியாவிட்டால் நீ எல்லாம் என்ன மானங்கெட்ட கடவுள் என்று  சீண்டிப்பார்க்கும்  உன்னத நிலையை எனக்கும் கொடுத்துப் பார்த்தான் சக மானுடன்.

நான் தனித்து இருந்தேன். அப்போது என் கவலைகள் எனக்குத் துணையாயிருந்தது. என் உணர்வுகளும், கொஞ்சம் வார்த்தைகளும் எனக்கு உற்சாகத்தை அவ்வப்போது கொடுக்க ஏதேதோ எழுதத் தொடங்கி இருந்தேன். நடை பயிலும் பிள்ளையாய் தத்தித் தத்தி எழுத்துக்களில் நான் நடக்க, நடக்க அந்த நடை எனக்குப் பிடித்துப்  போனது. எழுதவேண்டும் என்று நினைத்த போதெல்லாம் ஏதோ ஒரு வலி என்னிடம் இருந்தது. எனக்கு வலித்த போது எல்லாம் எழுதினேன். மேய்ப்பனாய் மாறிவிடுவேன் என்ற கனவிலேயே நான் ஆட்டுக்குட்டியாய் ஆகிப் போக, வருபவன் போபவன் எல்லாம் எனக்கு மேய்ப்பன் ஆகிப் போனான்.

பாசம் தனது தோலுரித்து விட்டு சட்டை மாற்றிக் கொள்கிறேன் என்று பாம்பாய் நகர்ந்து போனது. நான் பிய்ந்து போன தோலாய் காற்றில் பறந்து முள்ளில் சிக்கிக் கிழிந்து  கொண்டிருந்தேன். ஜெயித்தவன் அயோக்கியனாய் இருந்தாலும் தோற்றவனுக்கு அறிவுரை சொல்லத்தான் செய்வான், நீ நல்லவனாகவே இருந்தாலும் அவன் கால்களை நக்கியாவது கேட்டுக் கொள்ளத்தான் வேண்டும் என்று காலம் பாடம் எடுக்கத் தொடங்கிய போது எனது கால்களில் காலத்தைப் போட்டு மிதிக்கும் ஆசையில் நானே மிதி வாங்கிக்கொண்டிருந்தேன்.

கடந்து போகவேண்டிய காலமாய் அது இருந்தது. உடலெல்லாம் இரணத்தோடு, எதார்த்தமாய் வாழ்க்கையைப் பார்க்கப் போய், யார் அடிக்கிறார்கள்? ஏன் அடி வாங்குகிறேன் என்று தெரியாமல் முகத்திலும், மார்பிலும், அடிபட்டு உதடுகள் கிழிந்து கண்ணீரோடு நகர்ந்து கொண்டுதான் இருந்தேன். எனது நகர்வு எனக்கு முக்கியமாயிருந்தது. நான் பாடங்கள் கற்றுக் கொண்டது நல்ல மாணவனாய் இருக்க அல்ல.... 

சொல்லிக் கொடுக்கப்படும் முறை தவறென்று சொல்லி கொடுத்தவர்கள் செவுட்டில் அறைந்து சொல்லிக் கொடுத்து பின் கற்றுக் கொள்பவர்களை அன்பாய் அரவணைத்து கற்றுக் கொடுக்கவே நான் அமைதியாய்க் கற்றுக் கொண்டிருந்தேன்.

நான் விரும்பியே தோற்றேன். உலகம் நான் எதிர்பார்த்தது போலவே என்னைச் சீண்டவில்லை. என் வறுமையை வேண்டுமென்றே காட்சிப்படுத்தி வைத்தேன்.... வாயுள்ளவர்கள் எல்லாம் பேசி மட்டும் தீர்க்காமல் காறி உமிழவும் செய்தார்கள். நான் முடிந்து விட்டேன் என்று கருதி எனக்கு திவசம் செய்து  முடித்தவர்கள் எல்லாம் என்னிடம் வாங்கித் தின்றவர்கள் என்பதை உணர்ந்தே இருந்தார்கள்...! 

நெருப்பில் குளித்திருக்கும் என்னை குளிர் எப்படி இனி மிரட்ட முடியும்....? காலச்சக்கரம் எல்லாவிதமான சோதனைகளிலும் என்னை சுற்றி முடித்திருந்த அந்த சுப தினத்தில் எனக்கு விதிக்கப்பட்ட கொடுமையான கடந்த கால என் சறுக்கல்களின் முதல் நிமிடம் எனக்கு நினைவுக்கு வந்தது. துரோகங்கள் இழைக்கப்படும் நேரத்தில் அன்பு மிகுந்த ஒவ்வொருவனும் ஏமாளியாகத்தான் பார்க்கப்பட்டிருப்பானோ என்னைப் போல என்று எண்ணிப் பார்த்தேன்.

வாழ்க்கையின் எனது முறையை  காலம் தொடங்கி விட்டிருக்கிறது. நான் அன்பு மிகுந்தவன் அல்ல இப்போது. என் கருணைகள் சிலுவைகளில் அறையப்பட்டு விட்டன. எனது மனித நேயம் தூக்கிலிடப்பட்டுவிட்டது. எனது ப்ரியங்களை  புதைத்த இடத்தில் கள்ளிச் செடிகள் முளைத்திருக்கின்றன இப்போது. உண்மைகளை நான் பொய் என்று குற்றம் சாட்டி விசாரித்த பின்பு அவற்றின் புறங்கைகளைக் கட்டி, கண்களை மூடி, வாயை இறுகப்பொத்தி அதன் பிறகே உண்மையென்று ஏற்றுக் கொள்வேன். என்னை பறக்க வைத்த காகிதங்களை என்னைச் சுற்றி பறக்க வைத்து அவற்றை பணம் என்று கூறி அதற்காய் பிணம் போல திரிந்தவர்களை அழைத்து அதை வாய்க்கரிசியாய்ப் போடுவேன்.

இது எனது காலம். என் தோல்விக் கொடியை இறக்கி எரித்து வெகு நேரம் ஆகி விட்டது.. இதோ ஏறிக் கொண்டிருக்கிறது எனது வெற்றிக் கொடி...! காலத்தின் தோள்களில் மீது இப்போது ஏறி நான் அதன் செவி கடித்துக் கொண்டிருக்கிறேன். மரித்து விட்டேன் என்று எண்ணிக் கொண்டிருந்த மனிதர்களே....நான் இல்லை என்று கட்டியம் கூறி அறிவித்து விட்டு என்னை புதைத்து விட்டதாய் கூறிய ப்ரிய நேசர்களே..

எனது புரவியின் குளம்படிச் சப்தத்திலிருந்து  வெளிப்படும் நெருப்பிலிருந்து வெடித்துக் கிளம்பும் நரகத்தின் வாசல்களை உங்களுக்காய் திறந்து வைத்திருக்கிறேன்...

வாய்ப்பிருந்தால் தப்பித்துக் கொள்ளுங்கள்...ஆமாம்...இது எனது முறை....!


தேவா. SSaturday, October 20, 2012

இசையோடு இசையாக...தொகுப்பு 8!


ஓடி வந்து உன்னைச் சந்திக்க தேக்கி வைத்திருக்கும் ஆசைகள்தான் எத்தனை எத்தனை...!!! என் வாழ்க்கையின் சொர்க்க நிமிடங்கள் எல்லாம் உன் நினைவுகளால்தான் நிரம்பிப் போயிருக்கிறது. காதலைச் சொல்ல வார்த்தைகள் தேவையில்லை என்று நான் என் விழிகளால் உனக்கு சொன்ன செய்தியை வாங்கிக் கொண்டு புன்னகைத்த உன் விழிகளை விட ஒப்பற்ற கவிதையொன்றை இது வரையில் நான்  வாசித்திருக்கவில்லை. ப்ரியங்களைச் சுமந்த ஒரு கவிதை ஒன்றை உனக்காக எழுதிவிடத் துடிக்கும் என்  உணர்வுகள் எல்லாம் தோல்வியில் உன் முன் மண்டியிட்டு உன் பாதங்களை முத்தமிட்டு மெளனத்தையே கவிதையாக உன் பாதங்களில் சமர்ப்பிக்கின்றன.

உடலைத் தொலைத்து விட்டு உணர்வுகளோடு வாழும் வாழ்க்கை ஒன்றை உன்னோடு வாழ்ந்து தொலைப்பதில் இருக்கும் செல்லமான அவஸ்தையை எப்படி நான் வர்த்தைகளுக்குள் கொண்டு வருவது.....? எதுவுமே பேசாமல் உன் விழிகளைப் பார்த்துக் கொண்டே நான் அடைந்த பரவச நிலையை எப்படி மொழி பெயர்ப்பது? காதலென்ற அற்புத  உணர்வை ஒரு சிற்பியாய் நான் செதுக்குகையில் கிடைக்கும் அற்புத சிலையை ஒத்த வார்த்தைக் கோர்வைகள் எல்லாம் மிக சாதாரணமானவைகள்தான்....

இளஞ்சூரியனின் கதிர்களை உடலெல்லாம் வாங்கிக் கொண்டு ஒரு கடற்கரை மாலையில் உன்னோடு கவிதையாய்ப் பேசிக் கிடக்கும் சுகத்தினை உணர்ந்த எனக்கு சொர்க்கம் கூட நரகம்தான்...! ஸ்பரிசங்களில் தொலையும் காதலை நீ தூரங்களிலேயே வாழ வைப்பதுதான் எனக்கு மிகவும் பிடித்தமானதாய் இருக்கிறது என்பதாலேயே உன் தூரங்களை நீ அதிகப்படுத்திக் கொள்வது இன்னும் அழகானது....

உதடுகள் சேர்க்கும் ஸ்தூல முத்தங்கள் கூட்டிச் செல்லும் காமம் காதலை கொன்று போட்டு பிரபஞ்ச நகர்விற்குப் பயன் படும் கருவிகளாய் நம்மை மாற்றிவிடுமென்றறிந்துதான் நாம் கருவிகளாய் மாறப் பிறந்தவர்கள் இல்லை கர்த்தாவின் மூலத்தை அறியப்பிறந்தவர்கள் என்று நீ சொன்ன போதுதான் நான் மோட்சமடைந்தேன் என்பது உனக்குத் தெரியுமா? மோட்சமென்பது உடல் மறந்து ஒரு பஞ்சு பறப்பது போல இலக்குகளின்றி காற்றில்  தாவித் தாவி பறப்பது போன்றதென்று உன்னால் தானே உணர்ந்தேன்..

ஒரு நாள் அனிச்சையாய் உன் கை கோர்த்து நடந்த அந்த நேரத்தில் காலம் நின்று போக, ஐன்ஸ்டீன் பிராயசைப்பட்டு கண்டு கொண்டு பெரும் அறிவியல் சாதனையாய்ச் சொன்ன காலம் பற்றிய சார்புக் கொள்கையை நாம் அசாதரணமாய் கடந்து சென்றோம்...என்பதை நீ இல்லாதபோது நீண்டு கொண்டே சென்று தன் கோரப்பற்களைக் காட்டிய காலம் உறுதி செய்தது. கவிதைகள் செய்வது ஒரு ஆண் பெண்ணைக் கவர்வதற்காக மட்டும் அல்ல.. ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தான் இருப்பதை உணர்வதற்காக என்று நீ சொன்ன நிமிடத்தில் நான் எழுதிய வார்த்தைகள் எல்லாம் உயிர் பெற்று எழுந்து உனக்காய் ஒரு நடனமாடியேதான் முடிந்திருந்தன...

இரவுகளைக் கொளுத்திக் கொளுத்தி நான் பற்ற வைக்கும் பகல்களில் உன் நினைவுகள் எல்லாம் குளிர்ச்சியாய் என்னைத்  தழுவ உதயமாகும் அந்தி நேரத்தில்தான் எனக்குள் பூக்கும் உன் நினைவுகள் இரவைத் தருவித்து விடுகின்றன. உன்னோடான நிமிடங்கள் அற்புதமென்றால் நீயில்லாத பொழுதுகள் அதி அற்புதமாகிப் போய்விடுவதால்தான்...

நான் காற்றைக் கொஞ்சம் நிற்கச் சொன்னேன், பூப்பறித்துக் கோர்க்கச் சொன்னேன்... ஓடிவந்து உன்னைச் சந்திக்க, மெத்தை ஒன்று தைக்கச் சொன்னேன், மேகம் அள்ளி வைக்கச் சொன்னேன், கண்ணை மூடி உன்னைச் சிந்திக்க....

நீதானே என் பொன் வசந்தெமென்று காலங்கள் கடந்தும்  காதல் பேசும் இசை ராட்சசனின் ஆளுமையில் சிக்குண்டுப் போய் என்னிடமிருந்து வார்த்தைகள் பிறந்து வந்த கதையை நான் சொல்லித்தான் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமா.. என்ன? காதலின் இசை வடிவத்தை ப்ரியங்களோடு அள்ளிப் பருகும் உங்களுக்கு வாழ்த்துக்களைச் சொல்லிக் கொண்டு நான் தற்காலிகமாக வாய் மூடிக் கொள்வதுதானே நாகரீகம்...!!!!

இனி...காதலை இசையாய் பருகுங்கள்....!


'  நேரில் பார்த்து பேசும் காதல் ஊரில் உண்டு ஏராளம்...
நெஞ்சில் பார்த்து பேசும் காதல் நின்று வாழும் எந்நாளும்.
தள்ளி தள்ளி போனாலும்
 உன்னை எண்ணி வாழும்
ஒரு ஏழை இதயம் நெஞ்சத்தை பாரடி..
தங்க மெத்தை போட்டாலும்
உன் நினைவில் என்றும் தூக்கம் இல்லை
ஏன் என்று சொல்லடி…
சாத்தி வைத்த வீட்டில் தீபம் ஏற்றி வைக்க நீ வா...
மீதி வைத்த கனவை எல்லாம் பேசி தீர்க்கலாம்.. .. '


தேவா. S


Friday, October 19, 2012

நானும் ஓர் கனவோ....?!
பேனாவைத் திறந்து காகிதத்தை நெருங்கும் வரையில் எந்த தளத்திற்குள் எண்ணங்கள் சீறிப்பாயும் என்ற ஒரு  உறுதியில்லை. எப்படிப் பார்த்தாலும் எழுத்துக்கள் எல்லாம் ஏதோ ஒரு அவஸ்தையின் வெளிப்பாடுகள்தான். அவஸ்தைகளை வலிகளுக்கும், சோகத்துக்கும் கொடுத்துப்பார்க்கும் பொது புத்திகள் சந்தோசமும் ஒரு அவஸ்தைதான் என்பதை நம்ப மறுக்கும். எழுதுவதற்கு எப்போதும் கட்டுப்பாடுகளை நான் வைத்துக் கொள்வது இல்லை.

வெறுமையான வானத்தின் கட்டற்ற சுதந்திரத்தை திட உடம்பிற்குள் நின்று பொறாமையாய் எதிர்கொள்கையில் புத்திக்குள் குறுக்கும் நெடுக்குமாய் ஓராயிரம் இனிய பொன் நிலாக்கள் உதயமாகவும் செய்யும். ஒரு கடற்கரை ஓரத்து மாலை வேளையை உடை கலைத்து, உடல் தழுவி, உள்ளம் நிறைத்துவிளையாடும் காற்றாகவும், கால்கள் பதிய நடந்து பார்க்கும் விரிந்து பரந்த மணலாயும், கடலென்னும் கவிதை மேலெழும்பி பின் கீழ் சென்று கரை மோதி மோதி விளையாடும் காம விளையாட்டை கண்களால் பருகியும்தான் அனுபவிக்க வேண்டும்.

கட்டுப்பாடுகள் கவலையுற்ற புத்திகள் செரித்துப் போட்ட அபத்த அனர்த்தங்கள். ர்த்தங்களே அபத்தமானதுதானே...?!!!! சீறிப்பாயும் உணர்வுகளை இப்படியாய் நீங்கள் நின்று இதற்குள்ளே பேசுங்கள், இதை மட்டும் ரசியுங்கள் இங்கேயே ஒரு சொறி நாயாய் படுத்துக் கிடந்து எதிர்ப்படும்  எல்லா விசயங்களிலும் உங்களின் எரிச்சல்களை குரைத்தல்களாய்  வெளிப்படுத்துங்கள் என்பதில் என்ன சுதந்திரம் இருந்து விடப்போகிறது. சுதந்திரம் என்ற  வார்த்தையை ஏந்திக் கொண்டு அடிமைகளாய் வாழும் மனோபாவத்தை நான் அறுத்தெரிந்த நிமிடம் எதுவென்று எனக்கு சரியாய்த் தெரியாது. ஒரு ஸென் ஹைகூ கூறுவதைப் போல

' நேற்றிரவும் அல்ல,
இன்று காலையும் அல்ல -
பூசணிப் பூக்கள் மலர்ந்தது...' 

மலர்ந்து விட்ட பூசணிப்பூக்களை வாசித்துப் பார்க்க மனமில்லாத சிக்கலானவர்களின் புத்தி  அடுத்தவன் வீட்டு படுக்கையறையை  எட்டிப் பார்ப்பது போல , யார் பூசணிப்பூவைப் பூக்க வைத்தது? எப்போது பூத்தது என்ற கேள்விகளை எழுப்பி விட்டு பூசணிப்பூவை பார்க்காமல் சென்று விடுகிறது.  இதுதான் அவர்கள் சுதந்திரத்தின் உச்சம்....

விமர்சனங்களைக் கடந்து வாழ்க்கை நெடுகிலும் பூக்களாய் சொரிந்து கிடக்கின்றன. பூக்களை தரிசிக்க செல்கையில்  கால்களில் தைத்து விடும் கூரான முட்கள் கொடுக்கும் வலிகளையும் ஏந்திச் சென்று வாழ்க்கையை நுகர வேண்டியிருக்கிறது. மறுக்க மறுக்க மறுத்தல் விசுவரூபமெடுக்கிறது. இழுத்துச் செல்லும் நதியாய் நகர்ந்து செல்லும்  ஒரு ஓட்டத்தில் நதி நீரில்  மிதந்து செல்லும் பூச்சியாய் மெளனமாய் காத்திருக்க வேண்டியதுதான். பொருளோடு தொடர்பு படுத்தி தங்களின் மிகைப்பட்ட பொருள் சேர்க்கை சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்து விட்டது என்றெண்ணி தலையை மண்ணுக்குள் கவிழ்த்துக் கொள்ளும் மமதை வாழ்க்கை இல்லை என்ற குறைந்த பட்ச என் சந்தோசம்தான் அவ்வப்போது கவிதைகள் என்ற பெயரில் வாழ்க்கையை சுவாசிக்கச் செய்கிறது.

' எனக்கு வீடென்ற ஒன்று இல்லை...
அதனால் தனியே சாளரங்களென்று
நானொன்றும்  அமைக்க வேண்டியதில்லை....
வெளிச்சத்திற்காய் திறந்து வைத்து விட்டு
பெருமிதம் கொள்ள என்னிடம் கதவுகளில்லை
அடைத்து எழுப்பிக் கொண்டு வர்ணமடித்துக் கொண்டு
சுவர்களுக்குள் வாழும் சுதந்திரம் 
என்னிடம் இல்லவே இல்லை...'

மழைக்கு ஓடிப்போய் ஒடுங்கிக் கொள்ளவும், வெயிலைக் கண்டு எரிச்சலுறவும், குளிருக்காய் இறுக்கமான உடைகள் அணியவும் எண்ணுவதற்கு என்ன இருக்கிறது? மாறும் கால நிலைகளில் இருக்கும் நிதர்சனமான பொய்களின் பல்  இளித்தல்களுக்கு எல்லாம் உடலுக்குள் ஒடுங்கிக் கிடக்கும் ஒரு இயலாமை காரணமாய்ப் போய் விடுகிறது. செயற்கையையும் இயற்கையாய்ப்  பார்க்கும் இரண்டு கொம்புகள் எப்போதும் எல்லோர் தலையிலும் இருக்கத்தான் செய்கிறது.

இசை கூட ஒரு காலத்தில் காட்டாறாய் தன் இயல்பில் இருந்த போது அது சாதாரணர்களிடமிருந்துதான் பிறந்திருந்தது. வாழ்வின் போக்கில் மன உணர்வுகளைப் பிழிந்து கசடுகளை நீக்கும் ஒரு முறையற்ற இசைதான் வாழ்வியலின் தேவை. அதை  முறைப்படுத்தி, முறைப்படுத்தி புத்திசாலிகளின் கைகள் அவற்றை வளைக்கத் தொடங்கிய போது மீசை முளைத்த ஆறு மாதக் குழந்தையாய் அது விகாரமாகிப் போனது . தட்டித் தட்டி இங்கும் அங்கும் அலைந்து ஏதேதோ மனதின் வக்கிரங்களை வெளியேற்ற முடியாமல் எப்போதும் நளினங்களையே இசை பேசிய போது இசையின் சுதந்திரம் உடைந்து நொறுங்கிப் போனது.

காலப்போக்கில் அதுவே காசென்ற மகுடிக்கு மயங்கும் பாம்பாய் போனதுதான் இயற்கையின் பெரும் சோகம். இயல்பிலேயே சுதந்திரமானதும் கட்டுப்பாடுகளற்றதுமாய் இருக்கும் பிரபஞ்ச நகர்வில் கட்டுப்பாடுகள்தான் சரி என்று மனிதன் ஒருவன் நினைத்து விதிமுறைகளை ஏற்படுத்திய இடத்தில் ஆரம்பித்துப் போனது முரண்பாடு. முரண்பாடுகளே இன்று இந்த உலகை ஆண்டு கொண்டிருப்பதால்தான் சூரியன் தானே தன்னிலிருந்து பிய்த்தெறிந்த பூமிக்கு கோடுகள் போட்டு மனிதன் விளையாடிக் கொண்டிருக்கிறான். சூழல் ஏற்படுத்திக் கொடுத்த உடலின் வர்ணத்தை வைத்து பெருமைகள் பேசிக் கொள்கிறான், எண்ணங்களை வெளிப்படுத்த உருவாக்கிக் கொண்ட சப்தங்களை எல்லாம் மொழியென்று கூறி அதன் பெயரில் தன்னை வகைப்படுத்திக் கொள்கிறான்...

நீர்நிலைகள் நிறைந்த பிரதேசத்தில் வாழ்ந்த மனிதர்கள் மூன்று வேளை உணவிற்கு பெரிய பெரிய போராட்டங்களை நடத்த வேண்டிய அவசியமற்று இருந்ததால் ஓய்வு நிறைய கிடைக்க ஏதேதோ யோசித்து பண்பட்டுப் போகிறேன் பேர்வழி என்று வாழ்வியல் நெறிகளை வகுத்து விட்டார்கள். மனமென்னும் கட்டுக்குள் சிக்கிக் கொண்டு அபத்தங்களின் பிள்ளையாய்ப் போயிருக்கும் மனிதர்கள் தானே மனிதர்களின் வாழ்க்கைக்கு சவாலாய் இருக்கிறார்கள்...?

இயற்கைச் சீற்றங்களை விட, மிருகங்களை விட, எதிர்பாராத  எல்லா ஆபத்துக்களையும் விட மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தாக இருப்பது சக மனிதனேயன்றி வேறு யாரும் இல்லை...!

புலனறிவுகளுக்குள் சிக்கிக் கொண்ட புரையோடிப் போன மனிதர்களே சக மானுடர் வாழ்க்கைக்கு சோதனையாய் இருக்கிறார்கள். ஆமாம்.....இங்கே மனிதர்களை அழிக்க தனித்தொரு சக்தி தேவையில்லை. மனிதனே மனிதனை அழித்துக் கொள்வான். அவனின் கட்டுப்பாடுகளும், தான் மட்டும் வாழவேண்டும் என்ற எண்ணமுமே போதும்....

விரும்பியதை வேண்டியபடி செய்ய ஏதோ ஒரு ஒழுங்கு நம்மை கட்டில்லாத சுதந்திர நகர்வுக்குக் இழுத்துச் செல்லும்..ரியோக்கனின் இந்த ஹைகூவைப்போல.. இயற்கையின் பாதையைத் தொடர்வோம் நான் யாரென்றும் நீங்கள் யாரென்றும் என்ற எந்த அடையாளமுமின்றி....

' மனம் அற,
வண்ணத்துப் பூச்சியை
அழைக்கிறது மலர்
வண்ணத்து பூச்சியும் 
வருகை தருகிறது மலருக்கு,
மனம் அற, 
மலர் திறக்கும் போது 
வண்ணத்து பூச்சி வருகிறது,
வண்ணத்து பூச்சி வரும் போது
மலர் திறக்கிறது,
எனக்கு மற்றவர்களைத் தெரியாது, 
மற்றவர்களுக்கு என்னைத் தெரியாது, 
தெரியாமையின் அடிப்படையில்
நாங்கள் தொடர்கிறோம் 
இயற்கையின் பாதையை.... '


தேவா. S

Wednesday, October 17, 2012

தாளமிங்கு தப்பவில்லை...யார் மீதும் தப்பு இல்லை!சில விசயங்களை உள்ளுக்குள் அனுபவிக்கத் தொடங்கி இருக்கிறேன். பேரமைதிக்குள் விழுந்து கிடந்த அந்த காலமற்ற பொழுதையே எண்ணி மனம் ஏங்கிப் போய் அன்றாடங்களில் பேசவும், மற்றவர்கள் பேசுவதைக் கேட்கவும் குறைத்துக் கொள்ளச் சொல்கிறது. விவரிக்க முடியாத புலன்களைக் கடந்த ஒரு விசயத்திற்குள் நான் ஏனோ, தானோ என்று சென்று விழுந்து விட்டேன்.

சப்தமில்லை, குணம் இல்லை, நிறம் இல்லை, பொருட்கள் என்று எதுவுமே இல்லை. உணர்வு மட்டுமே எஞ்சி இருக்க, கிடந்து பார்த்த அந்த பெரும் அனுபவத்தை விட்டு வெளியே வர சுத்தமாய் பிடிக்கவில்லை. தேவையின் அடிப்படையில் இங்கே யாரும் செய்திகளைப் பரிமாறிக் கொள்வதே இல்லை. சொல்ல வந்த செய்தியையும், கேட்க வேண்டிய செய்தியையும் விட்டு விட்டு ஏதேதோ பேசிக் கொண்டிருக்கும் இந்த உலகத்தோடு எப்படி ஒட்டி வாழ்வது  என்பதுதான் இப்போது நான் எடுத்துக் கொண்டிருக்கும் பயிற்சி.

எதுவுமே இங்கே சிறப்பு இல்லை என்று தெரிந்த பின்னால் மூச்சுக்கு முன்னூறு தடவை தொடை தட்டி கொக்கரித்து நான் செய்தேன், நான் செய்தேன் என்று புஜபலம் காட்டும் ஒரு வாழ்க்கை ஏளனத்துக்குரியதா இல்லையா? மனித மனத்தை சீரமைத்து ஒரு வழித் தடத்துக்குள் கொண்டு வர புரிதல் கொண்ட மனிதர்கள் உருவாக்கிய எல்லா மதமும் தோற்றுதான் போய் விட்டது. வாழ்க்கையை விட்டு வெளியே வந்து யோசிக்க யாதொரு அவகாசத்தையும் மதங்கள் மனிதர்களுக்கு வழங்கவில்லை மாறாக என் மதம் பெரிதா..? உன் மதம் பெரிதா...? என்ற சண்டையை இங்கே உருவாக்கி விட்டிருக்கிறது.

பேசுகிறார்கள்....மனிதர்கள் பேசுகிறார்கள்..... எழுதுகிறார்கள் .. மனிதர்கள் எழுதுகிறார்கள்.....சீர்திருத்தம் செய்து விட்டேன் என்றும், செய்வோம் என்றும் பேசுகிறார்கள். யுகங்களாய் பேசிக் கொண்டிருக்கிறார்கள். உலகத்தின் ஒப்பற்ற சமுதாயமென்று சொல்லிக் கொள்ளும் அருகதையை பெற யாருமே இல்லாமல் போக, ... இவர்கள் தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கிறார்கள். சபிக்கப்பட்டது இங்கே விதியாகிப் போயிருக்கிறது. யார் யாரை இங்கே சபித்தார்கள்...? என்று ஒரு கேள்வி வரும்...

நமது செயல்களால் இப்போது நம்மை நாமே சபித்துக் கொள்கிறோம். நான், நான் என்று சபிக்க, சபிக்க சாபம் அதன் விளைவுகளை அடுத்த, அடுத்த வெளிப்பாடுகளுக்கு அடுத்த, அடுத்த பிறவிகளுக்கு எடுத்துச் செல்கிறது. மறுபிறவி இல்லை என்று நம்பி இங்கே நான் கூறுவதை மறுக்கவும் சிலர் செய்யலாம். 

நீங்கள் கூறும் மறுபிறவி இல்லை என்றுதான் நாமும் கூறுகிறோம்..!!!!

மறு பிறவி என்றால்  மீண்டும் வேறு ஊரில் நான் பிறந்து நான் போன பிறவியில் தேவா என்று சொல்வது கிடையாது என்பதை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். அப்படி சொல்வது பித்தலாட்டம். பெரும் மோசடி. தேவா என்பது இந்த உடலை அடையாளப்படுத்த வைக்கப்பட்ட ஒரு பெயர். இந்த உடலுக்கு அனுபவங்களைப் பெற்றுக் கொடுக்கும் புலன்கள் எல்லாம், சமகாலச் சூழலைத்தான் புத்தியில் அனுபவங்களாக சேகரிக்கிறன. நினைவுப் பகுதியில் செயல்கள் சம்பவங்களாக பதியப்படுகிறது. எனது அம்மா, எனது அப்பா, எனது உறவுகள், எனது செயல்கள், எனது உத்தியோகம் இது எல்லாம் இந்த உடல் ஏற்படுத்திக் கொடுக்கும் அனுபவங்கள்.

இவை காட்சிகளாக மூளையின் நினைவுப் பகுதியில் சேகரமாகி வாழ் நாள் முழுதும் தேவைப்படும் போதெல்லாம் நினைவு கூற பயன்படுகின்றன. உடல் பெறும் அனுபவங்களை, அதனால் ஏற்படும் நினைவுகளைத் தாண்டி ஒட்டு மொத்த எல்லாவற்றின் புரிதலை உடலுக்குள் இருக்கும் உயிர் சக்தி கிரகித்துக் கொள்கிறது. இங்கே காட்சிகளாய் கிரகிப்பு நடப்பது இல்லை. உணர்வாய் நடக்கிறது.

சைக்கிள் ஓட்டுவது ஒரு செயல். சைக்கிள் எப்படி ஓட்டுவது என்பது புரிதல். சைக்கிள் ஓட்டாமல் இருக்கும் போதும், சைக்கிளே இல்லாத போதும் சைக்கிள் ஓட்டுவதற்கான எல்லா புரிதலையும் நாம் கொண்டிருப்பது எப்படியோ அப்படியே ஆன்மா என்னும் உயிர் சக்தி எல்லா அனுபவங்களையும் புரிதலாய் ஏந்திக் கொள்கிறது. இது ஒரு உதாரணமே....!!!!!

உடலை விட்டு வெளியே செல்லும் உயிர் அல்லது ஆன்மா அல்லது சக்தியின் வடிவம் இந்த புரிதலோடுதான் செல்கிறது. சைக்கிளும் இல்லை, சைக்கிளை ஓட்டவும் இல்லை, ஓட்ட வேண்டிய தேவையும் இல்லை ஆனால் சைக்கிள் ஓட்டத் தெரியும் அப்படியாய் பல உணர்வுகளை புரிதல்களாக கொண்டு செல்லும் ஆன்மா தனது இயல்புக்கு ஏற்றார் போல ஒரு இடம் நோக்கிப் பாய பிரபஞ்சத்தில் அலைந்து கொண்டிருக்கிறது சக்தி வடிவமாய்.

எப்படி தெரியுமா.....?

வானொலி ஒலி அலைகள் எப்படி அலைகிறதோ, செயற்கைக் கோள் தொலைகாட்சியின் ஒளி, ஒலிகள் எப்படி அலைகிறதோ அப்படி. சரியான ரிசீவர் கிடைக்கும் போது, அதிர்வெண் சேர்க்கை கிடைக்கும் போது எப்படி அந்த அலைகள் காட்சிகளாய் மாறி நம் முன் விரிகிறதோ அப்படியாய் சரியான கருப்பைக்காய் காத்திருக்கும் ஆன்மா, தனது தன்மைக்கேற்ற ஒரு கருவிற்குள் தஞ்சமடைகிறது.

ஏன் தஞ்சமடைகிறது? யார் தஞ்சமடையச் சொன்னது என்ற கேள்வி உங்களுக்கு வருமானால்....அதற்கும் பதில் உண்டு. அதாவது யார் நம்மைச் சுவாசிக்கச் சொன்னார்களோ, அதுவும் பரந்து விரிந்த இந்த அண்டத்தில் ஆக்சிஜனை சுவாசித்து நீ வெளி விடுவது கார்பன்டை ஆக்ஸைடாக இருக்க வேண்டும் என்று யார் விதித்து வைத்தார்களோ, இரண்டு பங்கு ஹைட்ரஜனும், ஒரு பங்கு ஆக்ஸிஜனும் கூடினால் உனக்கு நீரென்ற ஒரு வஸ்து கிடைக்கும் என்று எந்த சூட்சுமம் உருவாக்கி வைத்ததோ...அதே சூட்சுமம்தான் கருவுக்குள் உயிர் என்னும் ஆன்ம சக்தியையும் திணிக்கிறது.

உடலுறவில் மனிதர்களை ஈடுபட வைக்க காமத்தை மையமாக்கி வைத்திருப்பதும் அதே சூட்சும சக்திதான். இது தேவை. இங்கே காரணமும் காரியமும் முக்கியமில்லை. அனுபவமே தேவையாகிறது. அந்த அனுபவமும் புரிந்து, பின் பிரிந்து மெளனிக்க உருவான தேவைகளே இல்லாத தேவை இது.

இப்படியாய் உருவாகும் ஒரு குழந்தைக்குள் ஆன்மா மீண்டும் மறுபிறப்பு எடுத்தது என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வீர்கள்....? புரிதலை அனுபவமாகக் கொண்டு வேறு உடலில் தொடரும் பயணத்தில் பழைய பிறப்பின் அனுபவங்கள் புரிதலாய் இருக்குமே அன்றி செயல்களாய் நினைவில் இருக்கவே இருக்காது. அந்தப் புரிதல்தான் கர்மா. நமக்கு நாமே சபித்துக்  கொண்டது. இப்போது இங்கே நமக்கு விதியாகிப் போயிருக்கும் சாபங்கள் நமக்கு நாமே சபித்துக் கொண்டது. சம காலத்தில் சபித்துக் கொள்ளும் செயல்களின் விளைவுகள் இயன்ற வரையில் அந்த அந்த பிறவியிலேயே நடந்து விட  மிச்சங்கள் அடுத்த பிறவிக்கு கடத்தப்படுகின்றன.

இப்போது கூறுங்கள் மீண்டும் மீண்டும் நாம் நம்மை சபித்துக் கொள்ளப் போகிறோமா இல்லை சபித்தலை நிறுத்தி பெரும் இயக்கத்தின் பேரமைதியில் லயிக்கப்போகிறோமா? நீங்களும் நானும், தனித் தனி என்று எண்ண வேண்டாம். ஒரு கூட்டு நிகழ்வின் தனித்தனிகள் என்று கொள்க; உங்களுக்கும் எனக்கும் ஏற்படும் அனுபவமும், தேவைகளும் தனித்தனி அல்ல அது ஒட்டு மொத்த பிரபஞ்ச இயக்கத்தின் தேவைகள் என அறிக;

ப்ரியமுள்ள எனது ஆன்மீக வழிகாட்டி மூத்த அண்ணன் காலிது ஷா அவர்கள் கூறுவார்கள். தேவா....அங்கே தூங்கிக் கொண்டிருக்கிறானே ஒருவன் செயல்கள் எதுவுமே செய்யாமல் அவனின் தூக்கமும் இந்த பிரபஞ்ச நகர்விற்கு அத்தியாவசியம்தான் என்று....!

அரசியல் ரீதியாக மனதிற்குள் அடைபட்டு நான் என்னும் அகங்காரத்தைக் கொண்டவர்களால் இந்த பூமி சூறையாடப்பட்டு விட்டது. அப்படியாய் சூறையாடப்பட்ட பின்னும் அது மெளனமாய் சுற்றிக் கொண்டிருப்பதுதான் மிகபெரிய ஞானம்.  எல்லோரையும் சுமந்து சுற்றும் இந்த பூமியும், இந்த பூமியின் நகர்வினைத் தீர்மானிக்கும் சூரியனும் மெளனித்துக் கொண்டு மனிதர்களை பேசச் சொல்கிறன. ஆனால், மனிதர்கள் அந்த சக்தியைத் தவறாகப் பிரயோகம் செய்கிறார்கள். எப்போதும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள்....இல்லையேல் எனக்கும் இந்த வாழ்க்கைக்கும் எந்த ஒரு பிணைப்பும் இல்லை என்று தன் முனைப்பிலேயே பேசாமல் இருக்கிறார்கள்....

தேவைகளின் அடிப்படையில் பேசி, தேவையில்லாத போது மெளனித்துக் கிடக்கும் போது, எது தேவையில்லாதது என்பதை தெளிவாய் உணரமுடிகிறது. என் தேவையில்லாத நேரத்தை இயற்கை இப்போது அதிகரித்து இருக்கிறது. அதனால் ஜோடனைப் பேச்சுகளையும், சுய தம்பட்டங்களையும் கடந்து இந்த ஜன சந்தடிக்குள் நகர்ந்து செல்வது பெரும்பாடாய் இருக்கிறது....

என்ன செய்வது.. கடந்துதான் செல்ல வேண்டும்.....! இறைவனால் மறுக்கப்பட்டதை யாராலும் பெற இயலாது...., இறைவன் கொடுத்ததை யாராலும் மறுக்க இயலாதுதானே....?!!! இறைவன் என்று கொண்டலும் சரி இயற்கை என்று எடுத்துக் கொண்டாலும் சரி....அது உங்களின் பாடு...!

" உலக வாழ்க்கை நடனம் நீ ஒப்புக்கொண்ட பயணம் 
அது முடியும்போது தொடங்கும் நீ தொடங்கும்போது முடியும் 
மனிதன் தினமும் அலையில் அலையும் துளி நீர் 
தெரியும் தெரிந்தும் மனமே கலங்காதிரு நீ 
தாளமிங்கு தப்பவில்லை யார் மீதும் தப்பு இல்லை 
கால்கள் போன பாதை எந்தன் எல்லை "

மீண்டும் மெளனிக்கிறேன்...!

தேவா. S


Thursday, October 11, 2012

என் கவிதை... மூச்சு... இசை!ப்ரியங்களை சுமந்த உன் கடிதத்தினை ஒரு குழந்தையை ஏந்தி வரும் தாதியாய் என்னிடம் சேர்ப்பித்து சென்ற தபால்காரனின் மீது பெருங்கருணை ஒன்று பிறந்தது. உன் கையெழுத்தில் என் முகவரியை உறையின் மேல் பக்கத்தில் எழுதியிருந்த உனக்கு, நீதான் என் முகவரி என்பதும் தெரியும். விலாசங்கள் எல்லாம் வாழ்க்கையின் தற்காலிகப் பக்கங்களை குறிப்பிடுபவை. நீ எழுதி அனுப்பிய கடிதம், நீ எனக்கு தூரமாய் இருப்பதைப் போல போலியாய்க் காட்டினாலும் என்னுள்ளே எனக்கு மிக அருகே நீ இருக்கிறாய்.

வாஞ்சையோடு காதலை உன் பேனாவுக்குள் நிரப்பித்தான் என் பெயரை முகவரிக்காக நீ எழுதி இருக்கவேண்டும். எழுதியவரின் ஆசையை வாசிப்பவன் உள்வாங்கிக் கொள்ளத்தான் செய்வான். வெறுமனே ஆசை என்றில்லாமல் நீ ஆசை, ஆசையாய் என் பெயரை அழுத்தம் திருத்தமாய் எழுதி மீதி இருக்கும் எழுத்துக்களில் காதலை ஊர்வலப்படுத்தி இருந்தாய். முகவரியின் கடைசி வரியை நீ எழுதி முடித்திருக்கையில் ஒரு பதட்டம் ஒன்று பளீச்சென்று உனக்குள் வந்து போனதை கொஞ்சம் கோணலாய் கலைந்து போயிருந்த அந்த எழுத்துக்கள் எனக்குச் சொன்னது.

அனுப்புனர் பகுதியில் அக்கறையில்லாமல் சிதறிக்கிடந்த உன் பெயர் உனக்கு முக்கியமில்லை என்று நீ நினைத்திருந்தாலும், கிறுக்கலானா உன் பெயர் பார்த்து எனக்குக் கிறுக்குப் பிடித்துதான் போனது. அலட்சியமாய் நீ எழுதியிருந்த உன் பெயர் அழகினை ஏந்திப் பிடித்துக் கொண்டிருந்தது. கடித உறையை தொட்டுத் தடவி வாஞ்சையோடு உன் கை ரேகைகள் படிந்திருந்த எல்லா இடங்களிலும் என் கைரேகைகளைப் படிய வைத்தேன்...! 

அந்தக் கடிதத்தினை ஒரு பித்துப் பிடித்தவனைப் போல நெஞ்சில் வைத்து அணைத்த படி உன் நினைவுகளில் மூழ்கிப் போனேனா... இல்லை மோகத்தில் வீழ்ந்து போனேனா அல்லாது ஞானத்தில் ஆழ்ந்து போனேனா என்று தெரியவில்லை. என்னிடமிருந்து புறம் சட்..சட்டென்று தனது தொடர்புகளைத் துண்டித்துக் கொள்ள இமைகள் கவிழ்ந்து, உறக்கத்தைப் போன்ற ஒரு விழிப்புநிலை என்னைச் சூழ்ந்து கொண்டது. 

வார்த்தைகள் எல்லாம் தொலைந்து போக வெறிச்சோடிக் கிடந்த என் மனதினுள் உன் நினைவுகள் மட்டுமே எஞ்சி இருந்தது. இந்த கடிதத்தை பிரித்துப் படிப்போமா வேண்டாமா? வாசித்துத் தீர்த்துவிட்டால் கடிதம் முடிந்து போகுமே...என்ற பயத்தில் கடிதத்தினை திறக்காமலேயே ஒரு குழந்தையைப் போல நெஞ்சில் சுமந்து கொண்டிருந்தேன். நினைவுகள்தான் காதலில் எப்போதும் சுகமானது. காதலியின் இருப்பு எப்போதும் ஒரு முழுமைக்குள் நம்மைக் கொண்டு சேர்த்து விடுகிறது. 

அது ஒரு சமாதி நிலை. பூரணத்தில் கலந்த பின்பு அங்கே இது, அதுவென்று எடுத்துச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. எல்லாமே இயல்பாய் மாறிப்போன பின்பு தனித்து ஒரு சந்தோசத்தையும் துக்கத்தையும் பிரித்து எடுத்து சொல்ல இயலாது. யாருக்கும் அங்கே எதுவும் நிகழாத ஒரு சலனமில்லாத முழுமை அது. 

முழுமை அழகானது, ஆனால் சுவாரஸ்யமானது அல்ல. நிறைகுடத்தை நீங்களும் நானும் போற்றலாம், அது சலனமற்று இருப்பதாக பெருமைப்பட்டுக் கொள்ளலாம், ஆனால் தளும்பும் குடம் அழகானது. வாழ்க்கையின் நியதியில் தத்துவம் சொல்வதில் வேண்டுமானால் குறை குடம் குறைந்து போயிருக்கலாம், ஆனால் குறை குடம் வசீகரமானது. அது முழுமையை நோக்கிய ஏக்கங்களைத் தளும்பல்களாய் கொண்டிருப்பது. சலக்....சலக் என்று இடுப்பில் இருக்கும் ஒரு குடத்தின் நீர்  வெளியே எட்டிப்பார்க்க முயலுவது கவிதைத்துவமானது.

வாழ்க்கையும் அப்படித்தான். எல்லாம் கிடைத்து விட்டால். எந்தப் பிரச்சினையுமே இல்லாவிட்டால்... அங்கே வாழ்க்கை இல்லை. வாழ்க்கை என்றாலே இயங்குவது. முழுமையை நோக்கி இயங்குவது. இங்கே கிடைத்தலை விட இழத்தல்தான் சுகம். பெறுதல் சந்தோசத்தோடு முடிந்து விடுகிறது. இழத்தல் சந்தோசத்தை நோக்கி நகர மீண்டும் செயல் செய்ய வைக்கிறது. திருமணத்திற்காக காதலிப்பவர்கள் அதனால்தான் திருமணமான பின்பு காதலைத் தொலைத்து விடுகிறார்கள். திருமணத்தோடு அவர்களின் வாழ்க்கைப் பூரணமாகி விடுகிறது. இரண்டு பிள்ளைகள் பெற்ற உடன் பிள்ளைகளுக்கு ஏதேனும் சேர்த்து விட்டு... இன்னமே எனக்கு என்ன இருக்கிறது.. என்று விரக்தியாய் கேட்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

தங்களின் வாழ்க்கையை வலுக்கட்டாயமாக முடித்துக் கொள்ளும் கோடாணு கோடி பேர்கள் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் முழுமையை அடைந்து விட்டதாய் எண்ணிக் கொண்டு நரகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பூரணம் என்பது பெரும் நிம்மதி. அந்த பெரும் நிம்மதியை அடைய பல கட்டங்களில் நாம் நகர்ந்து செல்லும் இயக்கமே நமது இருப்பினை உறுதி செய்கிறது.

இதோ  இந்த காகித உறைக்குள் என் காதல் உயிரான எழுத்துக்களாய் படுத்துக் கொண்டிருக்கிறது. நான் வாசிக்க, வாசிக்க என்னுள் நிறைந்து ஏதேதோ உணர்வுகளைக் கிளறி விடப்போகிறது. இது அவளின் இருப்பை விட வசீகரமானது, வலுவானது. எந்த ஒரு காதலியும் தன் காதலன் உடன் இருக்கையில் ஏக்கத்தை கொடுத்து விடமுடியாது. ஏக்கங்களைத் தீர்த்துக் கொள்ளவே இங்கே பெரும்பாலும் விரும்புகிறார்கள். ஏக்கத்தை ரசிக்க யாரும் இங்கே கற்றுக் கொள்ளவில்லை. காதலனோ, காதலியோ பிரிந்து இருக்கும் போது கொடுக்கும் தாக்கத்தினை அருகில் இருக்கும் போது கொடுப்பதில்லை.

சோகம் சுகமானது. பெறுதலுக்காய் இருக்கும் தவம் புரிதலோடு இருக்குமெனில் அது கடவுள் தன்மையை ஒத்தது. சட், சட் என்று எல்லாம் கிடைத்து விடும் மனிதர்கள் சபிக்கப்பட்டவர்கள். வலிக்க, வலிக்க வெயிலில் நடந்து சில்லென்று நீர் பருகும் மனிதனின் சந்தோச உணர்வுகளை ஒருபோதும் குளு குளு அறையில் அமர்ந்து குளிர்ந்த நீரை பிரிட்ஜில் இருந்து குடிக்கும் மனிதன் அடையவே முடியாது....

என் காதல் வலிக்கிறது. என் காதலி என்னோடு இப்போது இல்லை. நாங்கள் கடிதங்களில் எங்கள் உயிர்களை பரிமாறிக் கொள்கிறோம். அவள் கடிதத்திற்காக காத்திருக்கும் பொழுதுகள் வசீகரமானவை. ஜீவனுள்ள குழந்தைகளாய் எங்களின் வார்த்தைகள் அங்கும், இங்கும் கடிதங்கள் மூலம் எங்களுக்காய் நகர்ந்து ஆறுதல் தருகின்றன. நான் அவளோடு இல்லை என்பதையும், அவள் என்னோடு இல்லை என்பதையும் உணர வைக்கும் இந்த வெறுமை அழகானது. அது காதலை, பாசத்தை இன்னும் திடப்படுத்துகிறது. 

ஏதோ ஒரு மயக்க வசீகரத்தில் நேருக்கு நேர் பார்த்துக் கட்டிக் கொண்டு, முத்தம் கொடுத்து, கூடல் என்னும் உடல் கவர்ச்சியில் வழுக்கி விழுந்து ப்ரியங்களை பரிமாறிக்கொள்ளும் யாதொரு அவசரமும் எங்களுக்கு இல்லை. எங்களின் தூரமும், பிரிவும் மிகப்பெரிய பக்குவத்தைக் கொடுத்து காதலின் கன பரிமாணங்களை கவிதையாய் எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கின்றன. இது கடவுள் ஆசிர்வாதம். உடலை மறந்து உயிரை உயிர்  நேசிக்க பேரிறை வைத்த ஒரு யுத்தி.

வாஞ்சையோடு அவளின் கடிதத்தை மீண்டும் கையிலெடுத்தேன். அன்பு காகிதமாய் உருமாறி கைகளில் தவழ்ந்து கொண்டிருந்தது. 

என்ன எழுதி இருப்பாள்....?.....

பிரிவை நியாயப்படுத்தும் என் அன்பின் மீது கோபமாய் என்னை அதீதமாய் காதலிப்பதாய் சொல்லி இருக்கலாம்? மீண்டும் காணப் போகும் அந்தக் கணத்தினை ஒரு வண்ணத்துப் பூச்சியை  மென்மையாய் பிடித்து அதன் இறகினை ரசிக்கும் அழகோடு வார்த்தைப் படுத்தி இருக்கலாம். இரவுகளின் நீளத்தில் தொலைந்து போன அவளின் தூக்கத்தைப் பற்றியும், பெளர்ணமி இரவில் தனித்தமர்ந்து என் நினைவுகளோடு நிலா பார்த்த நிகழ்வினையும், மழை பெய்த தினத்தில் வேண்டுமென்றே குடை மறந்து சென்று நனைந்ததைப் பற்றியும், என் கவிதை வரிகளுக்கு வர்ணமடித்து சுவரெங்கும் ஒட்டி வைத்திருப்பது பற்றியும், ஈரத்தலை துவட்டுகையில் அவளின் காதோரம் நான் கிசு கிசுத்த கிறக்கமான நிமிடங்கள் பற்றியும்....அவள் எழுதி விட்டு... கடைசியில் வழக்கம் பொல ' எப்படா உன்னை நான் பாக்குறது...? ' என்று வழக்குத் தமிழில் ஒரு வழக்கு கூட தொடுத்திருக்கலாம்.

என் இதயம் பட படக்க...ஒரு கூட்டுப்புழுவில் இருந்து வெளியே வரும் ஒரு வண்ணத்துப் பூச்சியின் வலி, அவஸ்தையாய் என் நெஞ்சைப் பிடித்து இழுக்க.. என் அவளின், என் அம்முவின் கடிதம் திறக்க தீர்மானித்து விட்டேன். பிஞ்சுக் குழந்தையின் விரல் பிடித்து நகம் கொய்யும் அவஸ்தையோடு மெல்ல கிழித்த அந்த கடித உறையின் வசீகரமான கிழிந்த பகுதியினை மிக பத்திரமாய் எடுத்து என் டைரிக்குள் பதுக்கி வைத்தேன்......

மீதமிருக்கும் கடித உறையை கவனமாய் என் மடியில் வைத்துக் கொண்டு ஒரு கண்ணாடி பாத்திரத்தை கையில் எடுக்கும் கவனத்தோடு காகிதத்தில் வந்திருந்த என் காதலை மெல்லப் பிரித்து கையிலெடுத்து எழுத்துக்களை என் விழிகளால் முத்தமிடுவதற்கு முன்பு.....கடிதத்திலிருந்து என் நாசி தொட்ட அவளின் வாசம் என்னை பித்துப் பிடிக்கச் செய்ய....

அவள் வார்த்தைகளுக்குள் விழுந்து நான் காணாமல் போயிருந்தேன்....!


தேவா. S


Tuesday, October 9, 2012

பட்டம் தர தேடுகின்றேன்... எங்கே அந்த நாயகன்?பல காரணங்களுக்காக அக்டோபர் மாதத்தை எனக்குப் பிடிக்கும். அதிகம் குளிராமல், நச நசவென்று தூறாமல், அழுத்தமாய் சூடில்லாமல்  ஒரு மாதிரி இதமாய் இருப்பதாலோ இல்லை அக்டோபர் ஒண்ணு அக்காவின் பிறந்த நாள், அக்டோபர் ஏழு என்னுடைய பிறந்த நாள் என்று கொண்டாட்டத்தை சிறுவயதிலேயே திணித்து விட்டதாலோ என்னவோ அக்டோபர் என்னை அதிகம் வசிகரீக்கும்.

தட்டில் மிட்டாய் பாக்கெட்டை பிரித்துக் கொட்டி, புதுச்சட்டை, விபூதி, சந்தனம் எல்லாம் அணிந்து, கழுத்தில் இருக்கும் தங்கச் சங்கிலியை எடுத்து சட்டை மேல் போட்டுக் கொண்டு நாங்கள் குடி இருந்த தெருவில் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று....

" மாமி இன்னைக்கு எனக்குப் பிறந்த நாளு......மிட்டாய் எடுத்துக்கோங்க, அண்ணா சாக்லேட் எடுத்துக்கோங்க, டேய்........பாபு எடுத்துக்கடா...., அக்கா இன்னைக்கு எனக்கு பிறந்த நாளேய்...." என்று உற்சாகமாய் நடந்து

நிறைய ஆசிர்வாதங்களோடு, எல்லோரும் அன்பை பொழிந்து அன்பளிப்பு கொடுக்கும் அந்த நாளை யாருக்குத்தான் பிடிக்காது...?  வாழ்க்கையின் மிக முக்கியமான தேவை என்ன தெரியுமா?  பணம்......என்றுதானே நினைக்கிறீர்கள், அதுதான் இல்லை. வாழ்க்கையின் மிக மிகமுக்கிய தேவை நம்மை நிறைய பேர்கள் நேசிப்பது. நம்மைச் சுற்றி நம்மை நேசிப்பவர்கள் நிறைந்திருப்பது வாழ்க்கையின் ஆசிர்வாதம். 

பிறந்த நாளில் நிறைய பேர்,  பிறந்த நாளாயிற்றே என்று அன்பு செலுத்துவதைக் கண்டு திக்குமுக்காடி இருக்கிறேன். 35 வருடங்களில் பல பிறந்த நாள்கள் வந்து சென்றிருக்கிறது. பசியோடு வேலை, வேலை என்று சென்னையின் சாலைகளில் சுற்றிய போதும் பிறந்த நாள்கள் கடந்து போயிருக்கின்றன, பெரும் கொண்டாட்டமாய் ஏதோ ஒரு நட்சத்திர ஹோட்டலின் மதுவருந்தும் இடத்திலும் சில பிறந்த நாள்கள் நகர்ந்து சென்றிருக்கின்றன, ஆடம்பரமாய் ஆட்டம் பாட்டமாய் குதுகலித்துச் சென்ற நாட்கள் எல்லாம் சாதராணமானவை....

லெளகீகமாய் கொண்டாட்டத்திற்கான கூட்டங்கள் நிறைந்த நாட்கள் சுவடில்லாமல் மறைந்தே போய்விட்டாலும் 2001 வது வருடத்தில் என்னை எதிர் கொண்ட ஒரு  முரட்டு பிறந்த நாள் தர தரவென்று சட்டையைப் பிடித்து இழுத்துச் சென்று எதார்த்ததின் முகத்தினை காட்டியது. தக்க்ஷினில் வேலையை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு சென்று நேர்முகத்தேர்வுக்கு கூட  சுற்றுலா விசாவில் வந்தவர்களை அழைக்கமாட்டார்கள் என்பதை அறிந்து, சிங்கப்பூரியன்களின் இந்திய உதாசீனங்களை எல்லாம் அவமானமாகப் பெற்றுக் கொண்டு, ஒரு அகில உலக நகரத்தின் பகுமானங்களை எதிர் கொள்ள முடியாமல்.....

மன ஊனத்தோடு நான் ஊர் திரும்பியிருந்த வருடம் அது. வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை பற்றி அதுவும் சிங்கப்பூரின் சட்டதிட்டங்கள் பற்றி அறிந்திராத என் வீட்டுக்குச் சுமையாகிப் போயிருந்தேன். மீண்டும் ஒரு நட்சத்திர ஹோட்டலில் வேலைக்குச் சேர மனம் ஒத்துழைக்காமல், வெளிநாடு செல்லும் கனவுகளும் எரிந்து சாம்பலாய்ப் போயிருக்க நித்தம் வெறுமையோடு நான் மல்லுக்கட்டிக் கொண்டிருந்த போது வந்து சென்ற அந்த அக்டோபர் 7 வலியாய்த்தான் இருந்தது.

வாழ்த்துச் சொல்லவும் அன்பைப் பரிமாறவும் யாருமில்லை அன்று. மிக முக்கியமானவனாய் உறவுகளின் வாழ்க்கையில் நாம் இருக்கும் போது மட்டுமே நேசிக்கப்படுவோம் என்ற உண்மை பெரும் புரிதலாய் உள்ளுக்குள் சம்மணமிட்டு அமர்ந்தது. பிறந்த நாள் என்ற ஒரு மாயை நொறுங்கி விழ என்னை ஆன்மீகத்துக்குள் காலம் வேகமாய் இழுத்துச் சென்ற வருடம் அதுதான். திருவொற்றீயூர் பட்டினத்தார் சமாதியில் காலை 10 மணியிலிருந்து மாலை 5 வரை யாரிடமும் பேசாமல் அமர்ந்திருந்தேன்....

காதற்ற ஊசி கடைவழிக்கு முன்பே எனக்கு வாராது என்று தோன்றியது. கடலலைகளில் காற்று விளையாடிக் கொண்டிருக்க உள்ளுக்குள் மெளனமாய் அழுது கொண்டிருந்தேன். பசியாய் ஒரு பரதேசியைப் போல அங்கேயே விழுந்து படுத்தேன். உடலில் வலிவுகளை எல்லாம் இழந்து கிடக்கையில் மனம் எதை யோசிப்பது என்றறியாமல் சுருண்டு கிடந்தது. புலன்கள் புறத்தோடு தொடர்பு கொள்ளும் சக்தி இல்லாமல் உள்நோக்கித் திரும்ப எண்ணங்களற்றுப் போயிருந்தேன்.

வாழ்க்கையின் சந்தோசங்களைத் தீர்மானிக்கும் ஒற்றை காரணியாய் பொருள்தான் இருக்கிறது என்பது புலப்பட்டது. ஆத்மார்த்தமாய் நேசிக்கும் மனிதர் கூட்டம் ஒன்று எனக்கென வந்து சேரும், அங்கே அன்புக்கும் சத்தியத்திற்கும் மரியாதை கொடுக்கும் மனிதர்கள் இருப்பார்கள். பொருள் வாழ்வியல் தேவை மட்டுமே, பொருளே வாழ்க்கையல்ல என்று என்னோடு ஒத்துப் போவார்கள் என்றெல்லாம்  உள்ளுக்குள் தோன்றியதை ஒரு பிச்சைக்காரன் வழிப்போக்கர்களை வேடிக்கைப் பார்ப்பது போல பார்த்துக் கொண்டிருந்தேன். 

யாருமில்லாத அந்த தனிமை இன்று வரை என்னை விட்டு மறையவில்லை. கூட்டமும், ஆட்டமும், புறத்திலிருந்தாலும் உள்ளுக்குள் என்னில் நானாய் இருந்த அந்த அமைதியிலிருந்து இன்னமும் மீள முடியவில்லை.

தலையில் ஆங்காங்கே சில நரை முடிகளோடு மத்திம வயதுக்குள் நுழைய எல்லா தகுதிகளையும் காலம் இன்று ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. எட்டு வயது மகள் வாழ்க்கையோடு இருக்கும் பிணைப்பினை உணர்த்திக் கொண்டிருக்கிறாள். எங்கோ சென்று பேசாமல் அமர நினைக்கும் இன் மனச்சக்கரத்தை நியதிகளுக்குட்பட்டு இயங்கவைக்கும் பெருஞ்சக்தியாய் என் மனைவி இருக்கிறாள். வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. 

வாழ்க்கையின் ஏதோ நாளில் சபிக்கப்பட்டு தனிமையில் இருக்க வைக்கப்பட்ட என்னை ஒரு பெரு மழைக்கு முன்னால் சூழ்லும் மேகங்களாய் ப்ரியமுள்ளவர்கள் சூழ ஆரம்பித்து இருக்கின்றனர். இயற்கை மிகவும் வலிமையானது. எது வேண்டுமோ அதை வேண்டுபவனுக்கு காலப்போக்கில் அது கொடுத்து விடுகிறது. என்னை, என் ஆன்மாவை எனக்குள் இருக்கும் உள்ளமையை புரிந்து கொண்டவர்களை எனது உறவுகளாய் இந்த இயற்கை மாற்றத் தொடங்கி இருக்கிறது. ஆன்ம வெளிச்சத்தின் சக்தியில் கடந்த காலத் தவறுகள் எல்லாம் எரிந்தே போய்விட்டன. வாழ்க்கை இப்போது நிதானமாகி இருக்கிறது.

இந்த வருடம் அக்டோபர் 7ஐ கனத்த மனதோடுதான் சென்றடைந்தேன். 6 ஆம் தேதி பதிவுலக நண்பர், அண்ணன் ஆயிரத்தில் ஒருவனின் மறைவுச் செய்தி கடுமையாய் என்னை உலுக்கிப் போட்டது. இந்த வருட ஆரம்பத்தில் புத்தாண்டு வாழ்த்துச் சொல்ல  நள்ளிரவில் அலை பேசியில் அழைத்தார். புத்தாண்டு நெருக்கடியில் இணைப்பு சரியாய் கிடைக்காத போதும் தொடர்ந்து அழைத்து பேசிக் கொண்டிருந்தார். நேராய் பார்க்கமுடியாவிட்டால் கூட உணர்வால் குடும்பத்தில் ஒருவராய் ஆகிப் போயிருந்தார். இந்த முறை ஊருக்கு வந்த போது, வரும் சனிக்கிழமை மதியச் சாப்பாடு நம்ம வீட்டில்தான் என்று அன்பாய் வேண்டிக் கொண்டார். காலம் அவரைச் சந்திக்க விடவில்லை. மணி அண்ணன் மறைந்து விட்டார்.

அக்டோபர் ஏழாம் தேதி நிறைய நண்பர்கள் பேஸ்புக்கில் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லிக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு முறை வாழ்த்துக்கள் வரும் போதும் பேஸ்புக்கிலிருந்து நமக்கு அறிவிப்பு கிடைக்கும். வாழ்த்துக்களைச் சொல்லி எல்லோரும் முடித்திருந்த அந்த தினத்தின் இறுதியில் கடைசியாக ஆயிரத்தில் ஒருவன் மணி அண்ணனிடம் இருந்து,  முன்பே அவர் பதிவு செய்து வைத்திருந்த தானியங்கிச் சேவையின் மூலம் பிறந்த நாள் வாழ்த்து வந்திருந்தது. விர்ச்சுவலாய் அண்ணன் தனது ஆன்மாவின் மூலம் வந்திருப்பதாய் எனக்குத் தோன்றியது. பிறந்த நாள் வாழ்த்தினை இறந்துதான் சொல்ல வேண்டுமா மணி அண்ணா....... என்று எண்ணியபோது கண்கள் கலங்கிப் போனது...!

ஹ்ம்ம்ம்ம் என்ன வாழ்க்கை பாருங்கள்..? 

மீண்டுமொரு தப்படி என்னை ஆன்மீக பயணத்தில் நகர்த்தி வைத்தது மணி அண்ணனின் மறைவு. அவரின் ஆன்மா விரைவில் நல்ல நிலை எய்தும் என்று எனக்குத் தெரியும்..

ஹ்ம்ம்ம்ம்....பிறந்த நாளும், இறந்த நாளும்.....வாழ்க்கையின் நியதிகள் என்பதைத் தவிர வேறு என்ன இருக்கிறது இங்கே சொல்ல....?


தேவா. SMonday, October 1, 2012

பிராப்ள பதிவர்....பப்பு...!!!!!


சுத்தி நடந்துட்டு இருக்க விசயத்தை பத்தி ஏதோ அபிப்ராயத்தை சொல்லாம போய்ட்டோம்னா நம்ம தலை வெடிச்சே போயிடும்ன்ற மாதிரி தோண ஆரம்பிச்சுடுச்சு.... டாக்டர்...

திணறிக் கொண்டே பப்பு பேச ஆரம்பித்து இருந்தான்....

பொங்கி பொங்கி என்னைய மட்டும் தனியா வச்சுட்டு மிச்சம் இருக்குற உலகத்தையே காறித்துப்ப தோணுற எனக்கு ஒரு ட்ராபிக் சிக்னல்ல கரெக்ட்டா லைன்ல நிக்க துப்பு இல்லீங்க...! ரெயில்வே ஸ்டேஸன்ல ட்ரெயின்ல இருந்து இறங்கி பிளாட்பார்ம தாண்டி வெளியில வர்றதுக்குள்ள பஞ்சப் பரதேசிங்க பிச்சைக் கேட்டு தொல்லைப் பண்றத பாத்துட்டே வந்தாலும் யாராச்சும் ஒரு முடியாத வயசானவங்களுக்கு பத்து ஒத்த ரூபாய  கொடுக்க வக்கு இல்லாத நான்....

பொதுவா ஊர்ல எங்க்யாச்சும் ஒரு பிரச்சினை நடந்து அதுகு ஒரு நடிகனோ இல்லை அரசியல்வாதியோ ஏதாச்சும் உதவி பண்ணலேன்னா அவுங்கள பாத்து ஏண்டா எச்சக்கலைங்களா? ஏன் வூட்டு காச...நல்லா கவுனிங்க டாக்டர்.. ஏன் வூட்டு காச... எச்சத் தின்னு பெரிய நடிகனாவும், அரசியல்வாதியாவும் ஆன டுபாக்கூருங்களா.....இந்த இந்தப் பிரச்சினைக்கு இன்னாடா செஞ்சு நீங்க கழட்டுனீங்கன்னு... கம்ப்யூட்டர் பொட்டிய தொறந்து கோபம் தீர தட்டி எங்கயாச்சும் ஒரு சமூக பொது வெளியில வாந்தி எடுத்தாத்தான் திருப்தியா இருக்குங்க சார்...

எனக்கு எப்பவுமே ராஜா சார பிடிக்கும்னு எல்லோர் கிட்டயும் திரும்ப திரும்ப சொல்லிட்டு இருக்கேன் சார்....ஆனா ஒரு பாட்டைக் கூட மன நிம்மதியோட ஒக்காந்து நான் கேட்டதே கிடையாது....நான் எது செஞ்சாலும் அதை நிம்மதியா என்னால செய்ய முடியல.. தட்டுல சோத்தப்போட்டு துன்ன சொல்ல அதை மொதல்ல போட்டோ புடிச்சு பேஸ்புக்லயோ இல்லை வேற ஏதாச்சும் ஒண்ணுலயும் போட்டு இதை நான் துன்னப் போறேன்னு சொன்னாதான் சார் தொண்டையில சோறு எறங்குது...

என்னைய பாத்து நாலு பேரு நல்ல எழுதுற.....நீ..... , உங்க கருத்து அருமை , உங்களப் போல யாரும் உண்டா? அசத்தீட்டிங்கன்னு... பாராட்டி பாராட்டி ஏதாச்சும் சொன்னாதான சார்....அட மனசுக்குள்ள என்ன வேணா நினைச்சுக்கிடட்டும், ஆனா பொது வெளியில சும்மா நாலு வார்த்தை இப்டி சொன்னாதான் இந்த சொரணை கெட்ட மனசு சிக்குனு ஜில்ப் ஆகி ரெம்ப சந்தோசப்படுது...., அதுவும் பெரும்பாலும் பொண்ணுங்க யாராச்சும் பாராட்டிட்டா....... டக்குன்னு சிச்சுவேசன், லொக்கேசன் எல்லாம் மாத்தி கனவுல ஏதோ ஒரு வெளிநாட்டுக்குப் போயி ஜிங்கு ஜிங்குன்னு டான்ஸ் ஆடுற மாதிரி எல்லாம் தோணுது சார்...! 

கண்ணை மூடிக்கிட்டு....நான் இப்ப அமெரிக்காவுல இருக்கேன்....ஆமாம் ஆமா வெள்ளை மாளிகைதான்... யெஸ்.. யெஸ்.. ஒபாமா கூடத்தான்... நாங்க ஒண்ணா சாப்டோம்.... இப்போ ஒலக அரசியலப் பேசிட்டு இருக்கோம்..... 

இப்ப லண்டன்ல இருக்கேன். யெஸ்.. யெஸ்....பேலஸ்லயேதான்... மகாராணி கூட இருக்காங்க....

நான் பெரிய ஹீரோ.. நான் ஒரு பெரிய எழுத்தாளன்....நான் பெரிய புரட்சியாளன்...........நான் ஒரு கவிஞன்....நான் ஒரு விமர்சகன், நான் ஒரு பெரிய சமூக சேவகன்...... நான் ஒரு எல்லாமே....

நான் ஒரு பெரிய ரவுடி.....அடிச்சுடுவேன்.......பேத்துடுவென்.............நான் வந்து.. பெரிய......பெரிய......ஆளாக்கும்....

கண்ண தொறந்துகிட்டே இப்படி எல்லாம் பலவிதமா கனவுகள என்னால இணையத்துல பார்க்க முடியுது.....சார்....

என்ன ஒண்ணு கடைசியில என்னோட எல்லா வேலையும் கெட்டுப் போயி,,,,அமிஞ்சிக்கரையில இருக்க என் ஆபிஸ்ல இருந்து ஆபிஸ் விட்டு வீடு வர்ரதுக்கு பஸ்சுக்கு நிக்கும் போது ஆட்டோக்காரன் ரோட்டு ஓரமா கிடக்குற சேத்த மூஞ்சில அடிச்சுட்டுப் போகும் போது... ரொம்ப கஷ்டமாவும் ஒண்ணியும் செய்ய முடியாமையும் நிக்க வேண்டி இருக்கு சார்....

பஸ்ஸுக்குள்ள கூட்டத்துல முன்னால இடிக்கிறானுகோ.....பின்னால இடிக்கிறானுகோ.... ஷேவ் பண்ணாம வந்து தாடியால ஷோல்டர்ல கீறுரானுங்கோ... காலை மிதிச்சு நாசம் பண்றானுகோ....முடியலை.... ரோட்ல ட்ராபிக் மேல ஜன்னல் வழியா எச்சித் துப்புறானுகோ.. கண்டக்டர் வேற அசிங்க அசிங்கமா திட்டி ....இத்தப் பாரு.. கனவு கண்டுகினு கீது... அப்பால போன்னு தள்றான்...

இன்னா சார் செய்ய முடியும் நானு...? வூட்டுக்கு போனா கரண்ட்  இல்லை.... பைக்க எடுத்தா பெட்ரோல் விக்கிற வெலையில பைக்கு ஒரு கேடான்னு... நைனா சவுண்ட் வுடுறாரு..... எல்லா வெல வாசியும்  பீக்ல போவுது... நீ தக்காளிய துன்னாம ஏன்டா துப்புறன்னு அம்மா கத்துது...

பேப்பர எடுத்துப்படிச்சா..... காவிரி தண்ணி உடாம பத்தாயிரம் ஏக்கருக்கு மேல வெவசாயம் இல்லாம கெட்டுப் போச்சு, ஜெயலலிதா அம்மா சரியா பேசி தண்ணி வாங்கலன்னு சொல்றானுகோ....

சிவகாசில பட்டாசு மருந்து வெடிச்சு புள்ளைங்க எல்லாம் செத்துப் போச்சுங்க.... அனுமதியே கொடுக்கலேன்றானுகோ..., இடமே சின்ன இடம்ன்றானுகோ..., தீபாவளி ஒரு கேடானு கேக்குறானுகோ, நிலக்கரி ஊழல்ன்றானுகோ, பாராளுமன்றம் முடங்கிப் போச்சுன்றானுக......

இதுக்கு எல்லாம் இன்னா தீர்வுன்னு ராத்திரி முச்சூடும் ரோசிச்சு... ஒரு முடிவ எடுத்து மறுநாள்.....ஆபிசுக்குப் போயி நான் அங்க அங்க பொங்கி, அங்கிட்டும் இங்கிட்டும் போயி எழுதி, எவனாச்சும், லைக்கோ ஒரு கமெண்ட்டோ போட்டுட்டா... கண்ண மூடிக்கிட்டு ...நான் அவன்டா.. இவன்டா, பிரபல புலிடான்னு மறுபடியும் கனவு... கண்ண தொறந்துகிட்டே கண்டுபுட்டு.... கடைசியில.. என் தாலி ஆபிஸ்ல அந்து போயி....வேலை கெட்டு போயி.....ஆபிஸ்ல திட்டு வாங்கி...அங்க எச்சூஸ் கேட்டு.... மூஞ்சத் தொடச்சுக்கிட்டு......மறுபடி சாங்காலம் பஸ் புடிச்சு..........

அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ......எனக்கு பைத்தியமே புடிக்கப் போவுது டாக்டர்.. ஏழு வருசமா பொது வெளியில இயங்கிட்டு இருக்க ஒரு பிரபலம் நானு....எனக்கு என்னா வியாதின்னு பாத்து கொஞ்சம் சரி செஞ்சு வுடுங்கோ......

பப்பு அலறிக் கொண்டிருந்தான்....டாக்டர் அவசரமாய் ஏதோ ஒரு ஸ்டேட்டஸ் மெசேஜ் பேஸ் புக்கில் போட்ட படி.. ஒன் செகண்ட் ப்ளீஸ்... என்று விட்டு... யெஸ்..... என்னாச்சு....எங்க மறுபடி சொல்லுங்க... என்றார்....

பப்பு.........டேய்ய்ய்ய்ய்ய்ய் என்று டாக்டரை நோக்கிப் பாய்ந்தான்.....!


தேவா. S