Pages

Tuesday, October 9, 2012

பட்டம் தர தேடுகின்றேன்... எங்கே அந்த நாயகன்?பல காரணங்களுக்காக அக்டோபர் மாதத்தை எனக்குப் பிடிக்கும். அதிகம் குளிராமல், நச நசவென்று தூறாமல், அழுத்தமாய் சூடில்லாமல்  ஒரு மாதிரி இதமாய் இருப்பதாலோ இல்லை அக்டோபர் ஒண்ணு அக்காவின் பிறந்த நாள், அக்டோபர் ஏழு என்னுடைய பிறந்த நாள் என்று கொண்டாட்டத்தை சிறுவயதிலேயே திணித்து விட்டதாலோ என்னவோ அக்டோபர் என்னை அதிகம் வசிகரீக்கும்.

தட்டில் மிட்டாய் பாக்கெட்டை பிரித்துக் கொட்டி, புதுச்சட்டை, விபூதி, சந்தனம் எல்லாம் அணிந்து, கழுத்தில் இருக்கும் தங்கச் சங்கிலியை எடுத்து சட்டை மேல் போட்டுக் கொண்டு நாங்கள் குடி இருந்த தெருவில் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று....

" மாமி இன்னைக்கு எனக்குப் பிறந்த நாளு......மிட்டாய் எடுத்துக்கோங்க, அண்ணா சாக்லேட் எடுத்துக்கோங்க, டேய்........பாபு எடுத்துக்கடா...., அக்கா இன்னைக்கு எனக்கு பிறந்த நாளேய்...." என்று உற்சாகமாய் நடந்து

நிறைய ஆசிர்வாதங்களோடு, எல்லோரும் அன்பை பொழிந்து அன்பளிப்பு கொடுக்கும் அந்த நாளை யாருக்குத்தான் பிடிக்காது...?  வாழ்க்கையின் மிக முக்கியமான தேவை என்ன தெரியுமா?  பணம்......என்றுதானே நினைக்கிறீர்கள், அதுதான் இல்லை. வாழ்க்கையின் மிக மிகமுக்கிய தேவை நம்மை நிறைய பேர்கள் நேசிப்பது. நம்மைச் சுற்றி நம்மை நேசிப்பவர்கள் நிறைந்திருப்பது வாழ்க்கையின் ஆசிர்வாதம். 

பிறந்த நாளில் நிறைய பேர்,  பிறந்த நாளாயிற்றே என்று அன்பு செலுத்துவதைக் கண்டு திக்குமுக்காடி இருக்கிறேன். 35 வருடங்களில் பல பிறந்த நாள்கள் வந்து சென்றிருக்கிறது. பசியோடு வேலை, வேலை என்று சென்னையின் சாலைகளில் சுற்றிய போதும் பிறந்த நாள்கள் கடந்து போயிருக்கின்றன, பெரும் கொண்டாட்டமாய் ஏதோ ஒரு நட்சத்திர ஹோட்டலின் மதுவருந்தும் இடத்திலும் சில பிறந்த நாள்கள் நகர்ந்து சென்றிருக்கின்றன, ஆடம்பரமாய் ஆட்டம் பாட்டமாய் குதுகலித்துச் சென்ற நாட்கள் எல்லாம் சாதராணமானவை....

லெளகீகமாய் கொண்டாட்டத்திற்கான கூட்டங்கள் நிறைந்த நாட்கள் சுவடில்லாமல் மறைந்தே போய்விட்டாலும் 2001 வது வருடத்தில் என்னை எதிர் கொண்ட ஒரு  முரட்டு பிறந்த நாள் தர தரவென்று சட்டையைப் பிடித்து இழுத்துச் சென்று எதார்த்ததின் முகத்தினை காட்டியது. தக்க்ஷினில் வேலையை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு சென்று நேர்முகத்தேர்வுக்கு கூட  சுற்றுலா விசாவில் வந்தவர்களை அழைக்கமாட்டார்கள் என்பதை அறிந்து, சிங்கப்பூரியன்களின் இந்திய உதாசீனங்களை எல்லாம் அவமானமாகப் பெற்றுக் கொண்டு, ஒரு அகில உலக நகரத்தின் பகுமானங்களை எதிர் கொள்ள முடியாமல்.....

மன ஊனத்தோடு நான் ஊர் திரும்பியிருந்த வருடம் அது. வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை பற்றி அதுவும் சிங்கப்பூரின் சட்டதிட்டங்கள் பற்றி அறிந்திராத என் வீட்டுக்குச் சுமையாகிப் போயிருந்தேன். மீண்டும் ஒரு நட்சத்திர ஹோட்டலில் வேலைக்குச் சேர மனம் ஒத்துழைக்காமல், வெளிநாடு செல்லும் கனவுகளும் எரிந்து சாம்பலாய்ப் போயிருக்க நித்தம் வெறுமையோடு நான் மல்லுக்கட்டிக் கொண்டிருந்த போது வந்து சென்ற அந்த அக்டோபர் 7 வலியாய்த்தான் இருந்தது.

வாழ்த்துச் சொல்லவும் அன்பைப் பரிமாறவும் யாருமில்லை அன்று. மிக முக்கியமானவனாய் உறவுகளின் வாழ்க்கையில் நாம் இருக்கும் போது மட்டுமே நேசிக்கப்படுவோம் என்ற உண்மை பெரும் புரிதலாய் உள்ளுக்குள் சம்மணமிட்டு அமர்ந்தது. பிறந்த நாள் என்ற ஒரு மாயை நொறுங்கி விழ என்னை ஆன்மீகத்துக்குள் காலம் வேகமாய் இழுத்துச் சென்ற வருடம் அதுதான். திருவொற்றீயூர் பட்டினத்தார் சமாதியில் காலை 10 மணியிலிருந்து மாலை 5 வரை யாரிடமும் பேசாமல் அமர்ந்திருந்தேன்....

காதற்ற ஊசி கடைவழிக்கு முன்பே எனக்கு வாராது என்று தோன்றியது. கடலலைகளில் காற்று விளையாடிக் கொண்டிருக்க உள்ளுக்குள் மெளனமாய் அழுது கொண்டிருந்தேன். பசியாய் ஒரு பரதேசியைப் போல அங்கேயே விழுந்து படுத்தேன். உடலில் வலிவுகளை எல்லாம் இழந்து கிடக்கையில் மனம் எதை யோசிப்பது என்றறியாமல் சுருண்டு கிடந்தது. புலன்கள் புறத்தோடு தொடர்பு கொள்ளும் சக்தி இல்லாமல் உள்நோக்கித் திரும்ப எண்ணங்களற்றுப் போயிருந்தேன்.

வாழ்க்கையின் சந்தோசங்களைத் தீர்மானிக்கும் ஒற்றை காரணியாய் பொருள்தான் இருக்கிறது என்பது புலப்பட்டது. ஆத்மார்த்தமாய் நேசிக்கும் மனிதர் கூட்டம் ஒன்று எனக்கென வந்து சேரும், அங்கே அன்புக்கும் சத்தியத்திற்கும் மரியாதை கொடுக்கும் மனிதர்கள் இருப்பார்கள். பொருள் வாழ்வியல் தேவை மட்டுமே, பொருளே வாழ்க்கையல்ல என்று என்னோடு ஒத்துப் போவார்கள் என்றெல்லாம்  உள்ளுக்குள் தோன்றியதை ஒரு பிச்சைக்காரன் வழிப்போக்கர்களை வேடிக்கைப் பார்ப்பது போல பார்த்துக் கொண்டிருந்தேன். 

யாருமில்லாத அந்த தனிமை இன்று வரை என்னை விட்டு மறையவில்லை. கூட்டமும், ஆட்டமும், புறத்திலிருந்தாலும் உள்ளுக்குள் என்னில் நானாய் இருந்த அந்த அமைதியிலிருந்து இன்னமும் மீள முடியவில்லை.

தலையில் ஆங்காங்கே சில நரை முடிகளோடு மத்திம வயதுக்குள் நுழைய எல்லா தகுதிகளையும் காலம் இன்று ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. எட்டு வயது மகள் வாழ்க்கையோடு இருக்கும் பிணைப்பினை உணர்த்திக் கொண்டிருக்கிறாள். எங்கோ சென்று பேசாமல் அமர நினைக்கும் இன் மனச்சக்கரத்தை நியதிகளுக்குட்பட்டு இயங்கவைக்கும் பெருஞ்சக்தியாய் என் மனைவி இருக்கிறாள். வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. 

வாழ்க்கையின் ஏதோ நாளில் சபிக்கப்பட்டு தனிமையில் இருக்க வைக்கப்பட்ட என்னை ஒரு பெரு மழைக்கு முன்னால் சூழ்லும் மேகங்களாய் ப்ரியமுள்ளவர்கள் சூழ ஆரம்பித்து இருக்கின்றனர். இயற்கை மிகவும் வலிமையானது. எது வேண்டுமோ அதை வேண்டுபவனுக்கு காலப்போக்கில் அது கொடுத்து விடுகிறது. என்னை, என் ஆன்மாவை எனக்குள் இருக்கும் உள்ளமையை புரிந்து கொண்டவர்களை எனது உறவுகளாய் இந்த இயற்கை மாற்றத் தொடங்கி இருக்கிறது. ஆன்ம வெளிச்சத்தின் சக்தியில் கடந்த காலத் தவறுகள் எல்லாம் எரிந்தே போய்விட்டன. வாழ்க்கை இப்போது நிதானமாகி இருக்கிறது.

இந்த வருடம் அக்டோபர் 7ஐ கனத்த மனதோடுதான் சென்றடைந்தேன். 6 ஆம் தேதி பதிவுலக நண்பர், அண்ணன் ஆயிரத்தில் ஒருவனின் மறைவுச் செய்தி கடுமையாய் என்னை உலுக்கிப் போட்டது. இந்த வருட ஆரம்பத்தில் புத்தாண்டு வாழ்த்துச் சொல்ல  நள்ளிரவில் அலை பேசியில் அழைத்தார். புத்தாண்டு நெருக்கடியில் இணைப்பு சரியாய் கிடைக்காத போதும் தொடர்ந்து அழைத்து பேசிக் கொண்டிருந்தார். நேராய் பார்க்கமுடியாவிட்டால் கூட உணர்வால் குடும்பத்தில் ஒருவராய் ஆகிப் போயிருந்தார். இந்த முறை ஊருக்கு வந்த போது, வரும் சனிக்கிழமை மதியச் சாப்பாடு நம்ம வீட்டில்தான் என்று அன்பாய் வேண்டிக் கொண்டார். காலம் அவரைச் சந்திக்க விடவில்லை. மணி அண்ணன் மறைந்து விட்டார்.

அக்டோபர் ஏழாம் தேதி நிறைய நண்பர்கள் பேஸ்புக்கில் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லிக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு முறை வாழ்த்துக்கள் வரும் போதும் பேஸ்புக்கிலிருந்து நமக்கு அறிவிப்பு கிடைக்கும். வாழ்த்துக்களைச் சொல்லி எல்லோரும் முடித்திருந்த அந்த தினத்தின் இறுதியில் கடைசியாக ஆயிரத்தில் ஒருவன் மணி அண்ணனிடம் இருந்து,  முன்பே அவர் பதிவு செய்து வைத்திருந்த தானியங்கிச் சேவையின் மூலம் பிறந்த நாள் வாழ்த்து வந்திருந்தது. விர்ச்சுவலாய் அண்ணன் தனது ஆன்மாவின் மூலம் வந்திருப்பதாய் எனக்குத் தோன்றியது. பிறந்த நாள் வாழ்த்தினை இறந்துதான் சொல்ல வேண்டுமா மணி அண்ணா....... என்று எண்ணியபோது கண்கள் கலங்கிப் போனது...!

ஹ்ம்ம்ம்ம் என்ன வாழ்க்கை பாருங்கள்..? 

மீண்டுமொரு தப்படி என்னை ஆன்மீக பயணத்தில் நகர்த்தி வைத்தது மணி அண்ணனின் மறைவு. அவரின் ஆன்மா விரைவில் நல்ல நிலை எய்தும் என்று எனக்குத் தெரியும்..

ஹ்ம்ம்ம்ம்....பிறந்த நாளும், இறந்த நாளும்.....வாழ்க்கையின் நியதிகள் என்பதைத் தவிர வேறு என்ன இருக்கிறது இங்கே சொல்ல....?


தேவா. S5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அவரது மறைவு மிகவும் வருத்தப்பட வைக்கிறது...

அவரின் குடும்பத்தார் மனம் அமைதி அடைய வேண்டுகிறேன்...

அன்புடன் அருணா said...

அருமையா எழுதறீங்க!!பூங்கொத்து!

குட்டன் said...

புனரபி ஜனனம்,புனரபி மரணம்.

சிட்டுக்குருவி said...

நெஞ்சு கணக்கிறது
வரிகள் மிக மிக வித்தியாசமாய் அமைந்திருக்கிறது
என்ன செய்வது எல்லோரும் ஒரு நாள் மரணத்தைச் சுவைத்துத்தானே ஆக வேண்டும்..

கிருஷ்ணா said...

சம்போ