Pages

Tuesday, June 29, 2010

என் தாயே....என் தமிழே...!யாம் பிறந்து விழுந்த பொழுதினில் எம்மில் இருந்து தெரித்து விழுந்த ஒலியாய் வெளிப்பட்ட தாயே.....என் தமிழே...! மானிடரின் சப்தங்கள் மட்டுமே மொழியாய் போன ஒரு உலகத்தில் எம்மின் உணர்வுகளை எல்லாம் வெளிக் கொணர சப்தமாய் வெளிப்பட்டு உன்னை மொழியென்றும் எம் தாயென்றும் தமிழென்றும் கொண்டோம்.

உலகம் மொழியறியா காலத்தில் கவிசெய்தோம் நாம். இயல், இசை, நாடகம் என்று உன்னில் எத்தனை எத்தனை வித்தைகள் செய்தோம். உணர்வுகளை சரியாக வெளிப்படுத்த எம்மிடம் சப்தம் இருந்ததால், சப்தமென்ற தமிழிருந்தால் வலியையும், சந்தோசத்தையும், துக்கத்தையும், சரியான பாகத்தில் எம்மால் வெளிக்கொணர இயன்றதால் மானிடரின் உணர்வு விளங்கும் தெளிந்த நிலையை எய்தினோம். ஒப்பற்ற ஒரு இனமாய் உலகுக்கு அறிமுகமானோம்!

காலங்கள் தோறும் மனிதர்கள் வந்தனர். உம்மை கற்றுத் தெளிந்து தம்மை புலவர் என்று தாமெ தம்மையே விளித்துக் கொண்டனர். உன்னைக் கொண்டு கவிசெய்தனர், புதினம் செய்தனர், பாடல் செய்தனர் இசை செய்தனர். உன்னைக்கொண்டு ஒரு வாழ்வு உம்மால் ஒரு வாழ்வு...என்று காலங்கள் தோறும் நீ வளர்த்திருக்கிறாய் மனிதர்களை. எத்துனை சுவை கொண்டவள் நீ....அடுக்குத் தொடராய், இரட்டைக் கிளவியாய், உணர்வுகளை பிரதிபலிக்கும் அணி இலக்கணமாய், வார்த்தைகளை அளவிடும் மாத்திரைகளாய்....எம்மவரின் வாழ்வில் எத்தனை எத்தனை பங்கு கொண்டாய்....

காலங்கள் தோறும் உன்னைக் கொண்டு இம்மனிதரின் வயிற்றுப்பசி அடங்கியது தாயே....! உன்னை சிறப்பாக்க, உம்மை வாழவைக்க உனக்கு விழா எடுக்க, செம்மொழியாய் நீ சிறந்தவள் என்று உலகிற்கு கட்டியம் கூறி அறிவிக்க மறந்து அரசியலாய், சுய நோக்காய்..பகட்டாய் உன்னை பகடி விளையாடி இருக்கிறார்கள் அம்மா...!

தச்சு வேலை செய்யும் கோவிந்தனுக்கும், கட்டிட வேலை செய்யும் மாரியம்மாவிற்கும், அதோ அடுத்த தெருவில் மாம்பழம் வியாபாரம் செய்கிறாளே...பொன்னம்மா பாட்டி இவர்கள் என்ன வேற்று கிரகவாசிகளா? இவர்களுக்கு தமிழின் செம்மையை யார் விளக்குவார்கள்...?

கம்பனின் சொல்லாடலை அவர்களின் தன்மைக்கேற்ப எப்படி விளங்குவார்கள்? அப்படியே விளக்கினாலும்...வெற்று வயிறும், வெறுமையான எதிர்காலமும் தமிழின் செம்மையை இவர்களின் செவிகளுக்குள் செல்ல அனுமதிக்குமா? தெருக்குத்தெரு தமிழ்ச்சுவையூட்டும் நிகழ்ச்சிகள் நடை பெற்றிருக்க வேண்டாமா? பாமரனுக்குப் புகட்டாமால் அறிஞர்களே பேசி சிரித்து, மகிழ்ந்து கொள்ள தமிழ் என்ன தனிப்பட்ட சொத்தா? உங்களின் ஆய்வுகளை எல்லாம் எதோ ஒரு பல்கலைகழகத்தில் நிகழ்த்தி அதன் மூலம் நம் மொழியின் வளத்தை நிறுவ முடிவுகள் எடுத்து அரசு நடைமுறை படுத்தியிருக்கலாமே.....? இதற்கு எதுக்கு கோடிகளில் செலவு....? மாறாக தமிழனின் வாழ்க்கை மிளிர அதை செலவு செய்திருக்கலாமோ.....?

அந்தோ பரிதாபம் எம்மொழிக்கான விழா...அதற்கு ஒரு பாடல்....இதிலேயே தெரிந்து விட்டது தமிழனின் தமிழ்ப்பற்று. எம்மண்ணின் மணத்தை பாடலிலும் பாடல் வரிகளிலும் கொணரவுமில்லை, பட்டி தொட்டி எங்கும் பாடல்கள் ஒலிக்கவுமில்லை. தமிழ் என்பது ஒலி வடிவம் கொண்ட, எழுத்து வடிவம் கொண்ட..இலக்கணத்தில் சிறந்த...தொன்மையான மொழி மட்டுமல்ல..அது நமது கலாச்சாரத்தில் ஊறிய, வாழ்வில் அங்கமான உயிரோடு கலந்த ஒரு விசயம்.


செம்மொழியின் பாடலும், தமிழனுக்கு சம்பந்தம் இல்லாதது அதில் பயன்படுத்திய வரிகள் வேண்டுமானால் தமிழோடு தொடர்புகொண்டிருக்கலாம் ஆனால் இசையும், இசைத்த கருவிகளும் தமிழோடு தொடர்பற்றது. ஒரு தாய் தன் குழந்தையை தாலட்டும் இசையில் நாம் எந்த சிரத்தையும் எடுக்காமல் தமிழ்த்தாய் வெளிப்பட்டு ஒரு வித உற்சாக அமுது படைப்பாள். ஏற்றம் இறைக்கும் உழவனும், நாற்று நடும் பெண்களுகம், ஆண்களும் இசைக்கும் பண்ணில் ஒளிந்து நின்று எட்டி எட்டிப் பார்த்து நம்மை மகிழ்விப்பாள் எம் தமிழ்த்தாய். அவளுக்கென்று ஒரு கலச்சாரம் உண்டு அந்த கலாச்சாரத்தை மேற்கித்திய இசையின் மூலம் அழிக்க நினைத்திருப்பது ஒரு கொடூரமான செயல் (இதன் இசையமைப்பாளர் எனது அபிமானமானவர்தான் அவரின் மீது குற்றம் சொல்கிறேன் என்று விசயத்தை திசை திருப்பி எங்கோ சென்றுவிட வேண்டாம். செம்மொழிப் பாடல் தமிழின் கலாச்சார வெளிப்பாடு அல்ல என்பதே என் எண்ணம்!)

யூனிகோட் என்னும் அச்செழுத்தினை இனி அனைவரும் பயன்படுத்தவேண்டும்....சரி....

வலைப்பூக்களில் தமிழ் மிளிர்கிறது .....சரி

உலகெமெங்கும் இருந்து தமிழறிகள்......கட்டுரைகளை சமர்ப்பித்தனர்......சரி..

மக்கள் கூட்டம் கரை புரண்டது........சரி

தமிழில் கையெழுத்திட அனைவரும் முன் வரவேண்டும்...சரி...

இனி தொடர்ந்து செம்மொழி மாநாடு நடக்கும்.....சரி....


தனியார் தொலைக்காட்சி நிகழ்சிகளில் இயன்ற வரை தமிழ் புகுத்தப் பட வேண்டும் என்றும் லேகியம் விற்கும் விற்பன்னர்களுக்கும், ராசிக்கல் விற்கும் வியாபாரிகளுக்கும், தொடர் நாடகம் என்னும் ஒரு மனோதத்துவ தாக்குதல் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கும் நேரம் ஒதுக்கும் இவர்கள்....அதிகபட்ச மக்கள் பார்க்கு நேரங்களில் செம்மொழியான எம் தாய்மொழியின் பெருமை சொல்ல நேரம் ஒதுக்க ஏதேனும் சட்டம் உள்ளதா?

எல்லா தமிழ் ஊடங்களும் தமிழின் சிறப்பினை கூற தனியே பக்கங்கள் ஒதுக்க வேண்டும் என்று கட்டளைகள் எதேனும் பிறப்பிக்கப்பட்டுள்ளதா? மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் மொழியின் வளமறியும் நிகழ்வுகள் ஏதேனும் உண்டா?

தமிழ் மொழி இல்லாத விண்ணப்ப படிவங்கள் எல்லாம் செல்லாது என்று அறிவிக்க முடியுமா?

சென்னையை வலம் வந்து பாருங்கள்....பேருந்தில் ஏறினாலும் சரி, மீன் வாங்க கடைத்தெருக்களுக்குச் சென்றாலும் சரி, இல்லை திரை அரங்குகளுக்குச் சென்றாலும் சரி...தமிழின் ஊடே எத்தனை எத்தனை ஆங்கில வார்த்தைகள். அலுவல் மொழி ஆங்கிலமாய் இருக்கும் பட்சத்தில் தமிழில் உரையாடுவதும், எழுதுவதும் பழக்கத்தின் அடிப்படையில் சிறிது கடினம் என்றாலும் இயன்றவரை மக்களை முயலச் செய்ய...

தமிழரிடம் தமிழில் பேசுங்கள் என்று கண்டித்து சொல்லா ஏதேனும் வழிவகை உண்டா.....?

ஒரு அலுவல் விசயமாக வேறு அலுவலகத்திற்கு சென்ற நான் ...அங்கு நான் சந்திக்க வேண்டிய மனிதரும் தமிழர்தான் என்று அறிந்து ...தமிழா நீங்கள் என்று கேட்க (இது நடந்தது துபாயில்) யெஸ் என்று இறுக்கமாய் பதில் சொல்லி தொடர்ந்து ஆங்கிலத்தில் உரையாடிய போது உடையில்லாமல் நின்று பேசியது போல உணர்ந்தேன்.....

இன்னும் சில தமிழர்கள் நாம் தமிழில் பேசினால் மதிப்பதே இல்லை....ஆங்கிலத்தில் பேசினால் மரியாதை சரளமாக வரும்.....எதாவது வேலை ஆகவேண்டும் அல்லது புகார் கொடுக்க வேண்டும் என்றால் உரக்க ஆங்கிலத்தில் பேசினால் ...பயப்படுகிறார்களா இல்லையா....? மனோதத்துவ ரீதியாக மனதிலே ஒரு எண்ணம் எடுத்துக் கொண்டு ஆங்கிலத்தில் பேசினால் பயப்படும் நிலை மாற...ஏதாவது விளக்க வகுப்புகள் எடுக்கப் போகிறீர்களா....செம்மொழி விழா நடத்தியவர்கள்.....?

மொழிக்கான விழா எடுத்ததற்கு வாழ்த்துச் சொல்லும் அதே நேரத்தில் தமிழை மேம்படுத்தும் வேளையில்..........தமிழனை மேம்படுத்தவும் ஏதாவது செய்யுங்கள் பெரியவர்களே.....!

தமிழ்....பேச.....தமிழன் இருக்க வேண்டும்...முதலில் இல்லையெனில் ஆராய்ச்சி முடிவுகளையும் சிறப்புகளையும்....அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டிய நிலை வரும்...

போற்றுவார் போற்றட்டும்...
புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும்...!
தொடர்ந்து செல்வேன்....
ஏற்றதொரு கருத்தை...
எனதுள்ளம் ஏற்றதால்..
எடுத்துரைப்பேன்....எவர்வரினும்....
நில்லேன்....! அஞ்சேன்...!


தேவா. S
Sunday, June 27, 2010

மெல்ல திறக்கட்டும் மனது...!


பயணம்


யாரோ புல்லாங்குழல்
வாசிக்கிறார்கள்.....
இந்த முறையும்
தவறாமல் ...காற்றில்..
தன்னை கரைத்துக் கொண்டு...
பயணத்தை தொடர்கிறது...
மெல்லிய....கீதம்...!
* * *

கவிதை


மெல்ல நகரும்...
ஒரு ஆற்றின் ஓரத்தில்..
சப்தமின்றி..நீரில் சாய்ந்து....
கவிதை செய்கிறது
ஓற்றை நாணல்!
***

குளிர்


காத்திருகிறேன்...
மீண்டும் ஒரு குளிர்காலத்திற்கு....
கனத்த ஆடைகளைப்...
போட்டெரித்து.......
வெற்றுடம்போடு..
குளிரினைக் கட்டி அணைத்து...
நேசம் கொள்ள!
***

கூடல்


அமைதியாய் புணர்ந்து...
பிரியும்..இந்த வண்டுகளுக்காகவே...
நான் பூவாக...
பிறக்க வேண்டும்...
ஒருமுறையாவது!
***

மொழி


ஏன் இன்று வரை...
புரியவில்லை..
இரைச்சலுக்கு...
மெளனத்தின்
மொழி..மட்டும்!
***

காதல்


உனக்கென்று...
என்ன வேண்டும்...
கற்பனையாய் கேட்டேன்..
ஒரு மழை பெய்தால் போதும்
எதார்த்தமாய் நீ சொன்னாய்.....
சாரலாய்...என் நெஞ்சுக்குள்...
பெய்தது... நீ கேட்ட மழை...!
***

சுதந்திரம்

ஒரு காட்டு மலராய்...
இருப்பதில்தான்..
எவ்வளவு சுகம்...
மலர்ந்தாலும்..காய்ந்தாலும்...
கருத்து சொல்ல யாருமில்லை...!
***

தோல்வி


உன் ஒவ்வொரு...
மெளனத்திற்கும்...
எதிர் கவிதை எழுத...
அந்த தருணத்திலேயே..
பட்டுப்போகின்றன வார்தைகள்!
***

வலி

உன்னைப் பிரிந்த...
அந்த தருணத்தில்...
அழுகைக்கும் சிரிப்புக்கும்
இடையே.. ஒரு பாவம் காட்டினாயே....
அதற்கு பெயர்தான் காதலா?
***

சில நேரம் மனதில் என்னவென்றே சொல்லமுடியாத இரு இனம் புரியாத பரவசம் ஏற்படும். அப்படிப்பட்ட கணங்களில் நல்ல காட்சிகளை கேமராவால் கிளிக் செய்வது போல...உணர்வுகளை வார்தைகளில் டக் டக் என்று கேட்ச் பண்ணி வச்சுகிட்டா... படிக்கும் போது எல்லாம் மனம் கிளர்ந்து எழும்.

ஒரு வண்டும் பூவிடம் செய்யும் காதலில் இல்லாத வன்முறையும் அதில் இருந்த கவிதையும், மென்மையான மலரை உரசி அதில் அமர்ந்து பறக்கும் வண்டு கண்டு அதன் மீது ஒரு காதல் ஏற்பட்டது.

இதைத்தான் அனுபவித்து....

"பூவில் வண்டு கூடும்...
கண்டு போகும் கண்கள் மூடும்"

என்று வார்தைகளுக்குள் கொண்டு வந்திருப்பானோ கவிஞன்...! நல்ல உணர்வுகளை விவாதம் செய்வது அறிவீனம்....! எல்லா நேரமும் மூளையைச் சுமந்து செல்வது இயந்திரத்தனம் ஆகிவிடும்...சில நீரம் மூளையை கழற்றி வீசிவிட்டு.....வாருங்கள்....வாழ்வின் அற்புத பக்கங்களை காண...


தேவா. S

Thursday, June 24, 2010

ஆன்மாவின்....பயணம்!


என்னை யாரும் தேடாதீர்கள் பத்து நாளில் நானே திரும்பி வருவேன் பயம் வேண்டாம் என்று எழுதி கடிதத்தை டி.வி பெட்டிக்கு அருகே வைக்கும் போது மணி..2.00 அதிகாலை. உறவுகள் எல்லாம் அடுத்த நாளை எதிர்கொள்ளப்போகும் அயர்ச்சியான ஒரு தூக்கத்திலிருந்த போது...என்னுடைய தோள்பையுடன் மெல்ல கதவு திறந்து வெளி வரண்டா திறந்து மெயின் காம்போண்ட் தாண்ட்டி... வெறுமனே... அடிமேல் அடி வைத்து நடந்து கொண்டிருந்தேன்.

நிசப்தம் அறிய வேண்டுமென்றால் அதிகாலையில் எழுங்கள்...! அதிகாலையில் எழுவது எல்லா வகையிலும் நல்லது என்றுதான் எல்லா சமயங்களும் (மதம்னு எழுத பிடிக்காமதான் எழுதுறேன்...வேற அர்த்தம் எடுத்துக்காதீங்க) அதிகாலை எழுதலை ஒவ்வொரு காரணம் சொல்லி வற்புறுத்தி வந்திருக்கிறது. அறிவியல் அதிகாலையில் ஆக்ஸிஜன் ததும்பி எங்கும் பிராணன் (ஆக்சிஜன் தன) நிறைந்திருக்கும் என்றும் சொல்கிறது. இது எல்லாம் கடந்து...அந்த ஒரு அமைதி பின் ட்ராப் சைலன்ட் என்று ஆங்கிலத்தில் சொல்வோமே...அந்த ஒரு நிசப்தம் உங்களோடு மெளன மொழியில் ஏதேதோ பேசி உங்களை மகிழ்விக்கும், கிச்சு கிச்சு மூட்டும் (யாரெல்லாம் அதிகாலைக்கு நண்பர்களோ அவர்களிடம் கேட்டுப்பாருங்கள் சந்தேகம் இருந்தால்).

எனது செருப்பு சத்தமும், பஞ்சாயத்துப்போர்டு தெருவிளக்கான ட்யூப் லைட் சத்தமும் (சோக்ல பிரச்சனைனா...ஒரு முனகல் கொடுக்குமே அது)...ஆள் அரவமற்ற சாலையில், எங்கிருந்தோ வந்த ஒரு நாயின் ஓலமும் எனக்கு துணையாக வந்தன. அந்த மார்கழி மாதக் குளிர் ஏகாந்தமாய் நெஞ்சு நிறைத்த சுகத்தில் மெல்ல நடந்து கொண்டிருந்தேன்....வீட்டு வாசலில் படுத்திருந்த யாருடைய குறட்டைச் சத்தமோ காற்றில் மிதந்து வந்து பயமுறுத்தியதில் ஏதோ ஒரு வீட்டின் கைகுழந்தை வீறிட்டதை உணர முடிந்தது.

தெருமுனை திரும்பியவுடன்...வேலண்ணன் டீக்கடை உள்ளே லைட் எரிந்து கொண்டிருந்தது...இன்னும் கொஞ்ச நேரத்தில் கடை திறப்பதற்கான முஸ்தீபுகளில் இருந்தார் வேலண்ணன். நான் மெல்ல கடை இருந்த திசைக்கு எதிர் திசையில் இருந்த சிறிய பிள்ளையார் கோவிலின் அருகே இருட்டில் வசதியாய் யாரும் பார்க்கதபடி நின்று கொண்டேன்....! ஆயிரத்தெட்டு கேள்விகள் அவசியம் இல்லாமல் இந்த மனிதர்கள் கேட்பார்கள். எந்த சம்பந்தமும் இன்றி அடுத்தவன் விசயத்தை ஆராய்வதில் மனிதர்களுக்கு ஒரு தனி பிரியம்.

மணி இப்போ 2:25 ஆயிடுச்சு..இன்னும் ஒரு 20 நிமிசத்துல பக்கத்தில் உள்ள ஒரு பட்டணத்தை இணைக்கும் ஒரு பேருந்து வரும். காத்திருப்போம் என்று கோவில் சுவற்றின் மீது ஒரு கை ஊண்டி நின்று கொண்டிருந்தேன். அட கோவில் பக்கதுல செருப்பு காலோட நிக்கிறமே...என்று ஒரு எண்ணம்...! சரி சரி சாமி உள்ளதானே இருக்கு... நாம சைடுலதானே நிக்கிறோம்.....னு மறு எண்ணம் சமாதானம் செய்தது. வழிபாட்டுத்தலங்கள் என்று சொல்லக் கூடிய கோவில்கள் இல்லாத ஊரே கிடையாது.

கோவில்னு மொட்டையா சொல்லக் கூடாது பொதுவா வழிபாட்டுத்தலங்கள் என்றாலே....உலகம் முழுதும் இருக்கும் ஒரு விசயமா போச்சு. எந்த சமயமாக வேன்டுமானால் இருக்கட்டும், அமெரிக்காவா இருக்கட்டும், ஐரோப்பாவா இருக்கட்டும், அரபு நாடா இருக்கட்டும் ஏதோ ஒரு விதத்துல ஒரு வழிபாடு செய்றாங்க....! எப்போது தோன்யறிது கடவுள்? அதுவும் பாராபட்சம் இல்லாம எல்லா நாட்லேயும் பின்பற்றுறாங்களே அல்லது எதையோ ஒண்ணு இருக்குண்ணு நம்புறாங்களே? இந்த ஒற்றுமை எப்படி நைஜிரியாவுல இருக்கிறவனுக்கும், நாகர்கோவில்ல இருக்கவனுக்கும் ஒன்ணா வந்துச்சு....?

ஏதோ ஒரு சாமிய சொல்லிகிட்டு இன்னிக்கு உலகம் பூரா வழிபாட்டுத்தலங்கள் இருக்கே....எப்படி? நம்ம ஊர்ல மூட நம்பிக்கையை எதித்தாங்க ஒத்துக்குறேன்.. மனுசன பிரிச்சு வச்சு பெரிய பாலிடிக்ஸ் பன்ணி சாதி வந்துச்சுன்னு சொல்றத ஏத்துக்க முடியுது. நாம தான் நம்ம நாட்ல முட்டாள் தனமா கடவுள் இல்லேன்னு சொல்றோம் அப்டீன்றத ஒரு வாதத்துக்காக ஒத்துக்குவோம்......அப்புறம்....

இஸ்ரேல்ல ஏன் சாமி இருக்குன்றான்? அரபு நாடுகள்ள.. கூட வழிபாடும் வழிபாட்டுத்தலங்கள் இருக்கு...ஜப்பான், சைனா, அமெரிக்க, செளத் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா எப்படி?....எப்படி? எல்லா இடத்துலயும் மனுசன் ஒரு கோவிலோ, மசூதியோ, அல்லது சர்சோ வேணும்னு ஒண்னா நினைச்சான்....? எந்த முதல் மனிதன் இதைக் கற்பித்தான்.......? தொடர்பு கொள்ளவே முடியாத தேசங்களில் எல்லாம் ஒத்துமையா இருக்கிர ஒரே விசயம் கடவுள்....! மனித ஆழ் மனதிலேயே இதுக்கு ஏதாச்சும் ஒரு மேட்டர் இருக்கா....?

அடா...அடா... பேருந்து வந்துடுச்சுங்க....யாரும் பாக்குறதுக்கு முன்னாலே ஏறணும்.... வர்ட்டா.........அட... எங்க போறனா....அதுக்குத்தானே இந்த தொடரே (தொடரா....தலை சுத்தி நீங்க விழுறது தெரியுது........ஒரு ...... சோட குடிச்சிட்டு தெம்பா எந்திரிங்க பாஸ்...அடுத்த பதிவு படிக்க...)


(பயணம் தொடரும்...)


தேவா. S

Tuesday, June 22, 2010

ப்ளாச்சுலன்னா..ப்ளாச்சுல...!


ப்ளாச்சுலன்னா..ப்லாச்சுலன்னா தேனு மாதிரி இனிக்குமுன்னா..யாக்கா வாங்கி டேஸ்ட் பாருங்கக்கா...பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்லும் பேருந்துகள் சில மணிகள் நின்று கிளம்பும் . சில பேருந்துகள் நிலையம் உள்ளே வந்து ஒரு சுற்று சுற்றி சில நிமிடத்திலேயே சென்று விடும்.

அந்த பேருந்து நிலையத்தில் மாற்றுப் பேருந்துக்காக ஒரு உச்சி 12 மணி கோடை வெயிலின் உக்கிரத்தை தாங்கியபடி நான் அமர்ந்திருந்தேன் . காத்திருந்த பொழுதில் என் பார்வை அடிக்கடி தடுக்கி விழுந்தது இந்தச் சிறுவனின் மீது. எனது கண்ணேட்டதில் 10 தாண்டியிருக்காது வயது. கருத்த தேகமும், படிய வாரின தலையும்...பட்டனுக்கு மாற்றாய் ஊக்கு போட்டு மூடியிருந்த சட்டையும், ஊதா நிற வெளுத்த கால் சட்டையும்..அவனின் குடும்பத்தின் பின்புலத்தை மெதுவாய் போதித்தன.


பம்பரமாய் வியாபரம் செய்வதும், கூடவே விற்கும் சக வியாபரிகளை விட தன்னை முன்னிறுத்தி தன்னுடைய பலாச்சுளைகளை விற்க பட்ட பிரயத்தனமும் அவனின் பொருளாதார தேவையை கண்முன் கொண்டு வந்து நிறுத்தின. சிலர் வாங்கினர்.... சிலர் வாங்கி பணம் கொடுத்து சில்லறை வாங்கும் முன் பேருந்துகள் நகரத் தொடங்கின...! பையன் ஓடோடி சென்று சில்லறை கொடுத்துக் கொண்டும்... வீசிய சில்லறைகளை பொறுக்கிக் கொண்டும் தனது வியாபரத்தை நகர்த்திக் கொண்டு இருந்தான்.

கொஞ்ச நேரம் பேருந்துகள் வரவில்லை அந்த நேரத்தில் பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகளிடம் தன்னுடைய வியாபாரத்தை செய்ய முயன்று கொண்டிருந்தான். எனக்கு சற்று தொலைவில் ஒரு மத்திய வயது கொண்ட ஒருவர் நின்று கொண்டிருந்தார்...அண்ணா....ப்ளாச்சுலன்னா.... பாக்கெட் பத்து ரூவான்னா...அவன் கூவலை கேட்காமல் வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருந்த அந்த மனிதர் சட்டென்று திரும்பி...ஏம்பா படிக்கிற வயசுல... இப்படி யாவாரம் பண்றே...வீட்ல சொல்லி படிக்கிற வேலய பாரு.....

" நீ படிக்க வைக்கிறியான்னா... அப்டியே நான் படிச்சா வ்வுட்ல உள்ளவங்க...எப்டி சாப்பிடுறது...."

செவுட்டில் அறைந்த மாதிரி கேட்டுவிட்டு நகர்ந்து என்னிடம் வந்தான்...ப்ளாச்சுலன்னா...தேனாட்டம் இருக்குனா..வீட்டுக்கு வாங்கிட்டு போண்ணா..அண்ணா ப்ளாச்சுலன்னா....

உக்காரு தம்பி.... டீ சாப்டிறியா..! அத்தெல்லாம் வேணண்னா.. ப்ளீஸ்னா வாங்கிக்கன்னா....வியாபரத்தில் குறியாயிருந்தான் தம்பி....! சரிப்பா ஒரு பாக்கெட் கொடுன்னு வாங்கி விட்டு.... கொடுத்த சில்லறையை பர்சில் திணித்துக் கொண்டிருந்த போது....சரேலன்று சிமின்ட் பெஞ்சில் என் பக்கத்தில் அமர்ந்தான்...தம்பி!
எந்த ஊருண்ணா உனக்கு.... என் கேள்விக்கான பதில் கிடைத்ததும்...எனக்கு இங்கதானா பக்கதுல 3 கிலோமீட்டர் உள்ள கிராமாம்.

ஏம்பா படிக்கலியா நீ? கேள்வி கேட்டு முடியும் முன் இல்லண்ணா...வீட்டு சூழ் நிலைனா.. எங்க அப்பாரு ஊருல விவசயம் தான் ரெண்டு அக்கா ஒரு தங்கச்சின்னா எனக்கு. ஒரு அக்கா கண்ணாலம் செஞ்சு குடுத்த்துட்டோம்..அத்துக்கே இருந்த கொஞ்ச நிலத்த அப்பாரு வித்துதான் பண்ணி வச்சாரு. அத்த ஏண்ணா கேக்குற... குடும்பத்துல பிரச்சினை அப்பாரும் அம்மாவும் கஷ்டப்படுறப்பா இஸ்கூலுக்கு போறத்துக்க்கு புடிக்கலணா ..இங்க மொத்த கமிசன் யாவரம் பண்ற முதலாளிகிட வேல காலைல ஏழு மணிக்கு வருவேன்... சாமான் எடுத்து வித்தா எனக்கு கமிசன் துட்டு கிடைக்கும்..சீசனுக்கேத்த மாதிரி ...இப்போ ப்ளாச்சுசுல... !நல்லாருக்காணா? தேனு மாறி இருக்கும்...பேச்சுக்கிடையிலும் மார்கெட்டிங்க் செய்யும் உத்தி பழக்கத்தில் பற்றியிருந்ததை கண்டு வியந்தேன்.....!

ஏம்பா...சட்டப்படி தப்பாச்சே...சின்னப்பசங்க வேல செய்யக்கூடாதுன்னு கவர்மென்ட் சொல்லியிருகே.... நீ ஓடுற பஸ்ஸில ஏர்ற இறங்குற...யாராச்சும் பார்த்த பிரச்சினைதானப்பா.....

" அக்கா கண்ணாலத்துக்கு துட்டு இல்லேன்னு அம்மாவும் அப்பாரும் ராத்திரி புல்லா அழுதாங்க....சோறு போடுற நிலத்த வித்து கட்டிகுடுத்திட்டு..... மிதி இருக்குற அஞ்சு வவுத்த கழுவ இன்னா பண்றது...அப்பாரு அம்மாவும் கட்டட வேலைகி போகுதுங்க.... ஒரு நேரம் வேல இருக்கு ஒரு நேரம் இல்ல....எரியுற ரென்டு மஞ்ச பல்புக்கும் ஒரு ஓட்ட ரேடியோ பொட்டிக்கும் வர்ற கரன்ட் கூட கட்ட காசில்ல...அட மழ பேஞ்சா ஊத்துது வீடு அதுக்கு மாத்து கூற போட....ஒக்காந்தி ஒக்காந்தி பேசுறோம் வருசம் ஒண்ணாச்சி இன்னும் போடல....!

இன்னாணா கவர்மென்டு....அப்பாரு சைக்கிள் கட வெக்க எல்லா கர போட்டு கட்ன ஆளுகளையும் பாத்து பாத்து பேங்கு பேங்கா அலைஞ்சு என்னவோ டாகுமென்டாமெ அது எல்லாம் கொடுத்து பாத்தாரு. என்னமோ குறையுதுண்ணு ஒண்ணும் குடுக்கமாட்டேன்னு சொல்லீட்டங்க...இன்னாணா கவர்மென்ண்டு....எங்களுக்கு எல்லாம் பசிக்கும்னு கவர்மென்டுக்கு தெரியாதாணா.......கரண்டு இல்லாத வூட்டுக்கு எல்லாம் டி.வி பொட்டி கொடுக்குறாங்கணா..... ஹா...ஹா...ஹா... வாய் விட்டு சிரித்தான் அந்த பையன். நிறய வூட்டல என்ன மாறி பசங்க வேலக்கி போலேன்னா வீட்ல எல்லாருமே பட்னிதான்...."

பட படவென்று பொரிந்த பையன் ஒரு பேருந்து வந்தவுடன் ஓடிப் போய் விட்டான் தன்னுடைய வயிற்றுப்பிழைப்புக்காக...! எனக்கும் பேருந்து வந்த அவசரத்தில் ஓடிப்போய் ஏறிவிட்டேன்...இருக்கையில் அமர்ந்த பின்னும் "ப்ளாச்சுலான்னா...ப்ளாச்சுல" என்ற வார்த்தைகள் உரக்க ஒலித்துக் கொண்டு இருந்தது....அட...அவசரத்தில் பேர் கூட கேட்கவில்லையே....என்பதும் நியாபகம் வந்தது...

நம்மில் எத்தனையோ பேர்கள் பேருந்தில் செல்லும் போதும், பேருந்து நிலையத்திலும், இரயில்வே நிலையத்திலும் இது போன்ற ஏராளமான மனிதர்களை கண்டிருப்போம்...பெரும்பாலும் இவர்கள் முதாலளிகளாய் இருப்பதில்லை....ஒரு கமிசன் பேசிஸ் சிறு வியாபாரிகள்..! எப்போதும் பெரிய பெரிய கடைகளில்தான் வாங்குவேன் என்றில்லாமல் உறவினர் வீடுகளுக்கும் நண்பர்களை காணச்செல்லும் போதும்...இவர்களுக்கும் வியாபாரம் கொடுங்கள்....அது ஏதொ ஒரு கஸ்டப்படும் குடும்பத்திற்கோ அல்லது மனிதர்களுக்கோ போய் சேரலாம்.

அவரு..ஒரு முறுக்கு வியாபாரியாய், பழ வியாபாரியாய், வெள்ளரிக்காய் விற்பவராய், பூ விற்கும் பாட்டியாய், அல்லது இந்தப் பையன் போல் பலாச்சுளை வியாபாரியாக இருக்கலாம்....

வாய்ப்பளியுங்களேன்...அவர்களும் வாழட்டும்...!

நான் சென்ற பேருந்து வேகமாய் சென்றது.... செவுட்டில் அறைந்தது.....ஜன்னலோரக் காற்றும்


"நீ படிக்க வைக்கிறியான்னா... அப்டியே நான் படிச்சா வ்வுட்ல உள்ளவங்க...எப்டி சாப்பிடுறது...."

...என்று அந்த சிறுவன் கேட்ட கேள்வியும்......!


பின் குறிப்பு: வலைச்சர ஆபிசுக்கு பெர்மிசன் போட்டுட்டு வந்தேங்க....வர்ட்டா....


தேவா. S

Sunday, June 20, 2010

கவனியுங்கள்....புரிந்துகொள்வீர்கள்...!

ஒவ்வொரு நாளும் பூங்கொத்துகளோடு காத்திருக்கிறது வாழ்க்கை..பாவம் மனிதன் நல்ல மனோ நிலையில் இருந்தால் அதை வாங்கிக் கொண்டு...சிரிக்கிறான். வேறு ஏதோ தாக்கத்தில் இருந்தால் திரும்பி கூட பார்க்காமால் சென்று விடுகிறான்......ஆனால் வாழ்க்கையோ நித்தம் காத்திருக்கிறது பூங்கொத்துக்களுடன்.

நாளை (21.06.2010) முதல் ஒரு வார காலத்திற்கு வலைச்சரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்கும் வாய்ப்பினை மரியாதைக்குரிய ஐயா சீனா அவர்கள் எனக்கு அளித்துள்ளார்கள். வலைச்சரத்தில் தொகுக்கும் நேரங்களில் என்னுடைய வலைப்பூவிலும் இடுகைகள் இட முயற்சிக்கிறேன்.


இரண்டு நாளாய்..புத்தரின் தம்மபதத்தை புரட்டிக்கொண்டு இருக்கிறேன். ஒரே ஓட்டமாக ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கைக்கு நடுவே...இப்படி புத்தகம் படிக்கும் நேரங்களில் மெல்ல நமக்க்குள்ளேயே தொலைந்து போவது தவிர்க்க முடியாத ஒன்று. இந்த ருசியினை அனுபவித்தவர்களுக்கு நான் சொல்வதின் சாரம் விளங்கும். மற்றவர்களுக்கு வார்த்தை அளவிலேயே நின்று போகும்.

''கருத்துக்களைத்தாண்டிய மனம் கவனிக்கிறது புரிந்து கொள்கிறது "

இரண்டு நாட்களாய் திரும்ப திரும்ப என் நினைவுக்கு வரும் வாக்கியமாக மேலே சொன்ன வாக்கியம் இருக்கிறது. ஆமாம் கருத்துக்களும் சிந்தந்தங்களும் நிறைந்த ஒரு மனதுக்கு உண்மையை அறிய வாய்ப்பு கிடைப்பதே இல்லை. இந்த கருத்தோடு ஒத்த ஒரு கதையை உங்களுடன் பகிர ஆசைப்படுகிறேன்.

கடைக்கு சென்று...ஒரு நாள் சிக்கன் லெக் பீஸ் ஆர்டர் செய்தான் ஒருவன். பெரிய பெரிய லெக் பீஸாக கொண்டு வந்து வைத்தான் அந்த சர்வர். ஒரு லெக் பீஸை எடுத்துக் கடித்தார் நமது நண்பர்....அந்த லெக் பீஸ் பழையது மேலும் ஏற்கெனவே கெட்டுப்போனது இதை உணராத நமது நண்பர் அதன் வித்தியாசமான சுவையைக் கண்டு சிக்கன் லெக் பீஸில் பெரியதாக இருக்கும் எல்லாம் இப்படித்தான் சுவையற்றதாக இருக்கும் என்ற கருத்தினை உறுதியாக கொண்டுவிட்டார். அவர் சர்வரிடம் கூட கேட்கவில்லை ஏன் இப்படி சுவையின்றி இருக்கிறது என்று....ஆனால் அவர் மனதில் கற்பிதம் கொண்டு விட்டார் இனி சிக்கன் பெரிய லெக் பீஸ் உண்ணக்கூடாது அது சுவையற்றது என்று...


அதன் பின் எப்போது அவர் உணவருந்த்தச் சென்றாலும் அவர் கேட்பது...சிக்கன் லெக் பீஸ் சிறியது என்று கவனமாய் கேட்பார். பெரிதான சிக்கன் லெக் பீஸ் கொண்டு வந்தால் சண்டை போடுவார்..எனக்கு தெரியாததா? என்னுடைய அனுபவம் எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது என்று வாதிடுவார். காரணம் அவர் எடுத்துக் கொண்ட கருத்து அவரின் முன் அனுபவம் சார்ந்தது. அதை அவர் திடமாக நம்பினார்.

ஒரு நாள் உணவருந்த சென்ற போது அந்த உணவக பேரர் நமது நண்பருக்கு பாடம் புகட்ட விரும்பினார். வழக்கம் போல சிறிய லெக் பீஸ் கேட்ட நமது நண்பருக்கு வழக்கத்திற்கு மாறாக பெரிய லெக் பீஸையே கொடுத்தார்....! கோபத்தில் நமது நண்பரின் முகம் சிவக்க...காச் மூச் என்று கத்தத்தொடங்கினார். பேரர் அமைதியாக சொன்னார்....எங்களிடம் உள்ள லெக் பீஸிலேயே..இது மிகச் சிரியது என்று சிரிக்காமல் சொன்னார். நமது நண்பர்...அப்படியா...!!! இதுதான் சிறியதா என்று சந்தேகத்தோடு கேட்டு...ஒரு பீஸை எடுத்துக் கடித்தார். அது சுவையாயிருந்தவுடன்..அசடு வழிந்தபடி...ஹி....ஹி...ஹி... நல்ல டேஸ்ட்டா இருக்கு. இது சின்ன பீஸ்தான் என்று சொல்லிக் கொண்டே சாப்பிட்டுப் போனார்.

மேற்சொன்ன கதையில் வரும் நண்பர் போல நம்மைச் சுற்றி நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைப் பிடித்து தொங்கி கொண்டு புதிதாய் விசயங்கள் கற்பிக்கும்...பூச்செண்டு கொடுக்குm வாழ்க்கையை மறுத்து விடுகிறார்கள் (அப்பாடா...ஆரம்பிச்ச இடத்துக்கு மறுபடியும் கூட்டிகொண்டு வந்து விட்டேன்...)

'' கருத்துக்களைத்தாண்டிய மனம் கவனிக்கிறது புரிந்து கொள்கிறது "

எல்லா விஷயத்தையும் விருப்பு வெறுப்பின்றி பாருங்கள் அதன் அழகையும் அதில் உள்ள உயிர்ப்புத்தன்மையையும் காண்பீர்கள்....!

இந்தக்கட்டுரை கூட....கருத்துக்களோடு இருப்பவர்களுக்கு வேறு ஏதோ தான் சொல்லப்போகிறது.....!

'' கருத்துக்களைத்தாண்டிய மனம் கவனிக்கிறது புரிந்து கொள்கிறது "


உங்கள் அனைவருக்குள்ளும் ஆழ்ந்த அமைதி பரவட்டும்!


தேவா. S

Saturday, June 19, 2010

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V


சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது.

எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல....


வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்.....

இதுவரை

பாகம் I

பாகம் II

பாகம் III

பாகம் IV


இனி....


மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும் எனக்கு ஆத்திரத்தை அதிகமாக்கி...இயலாமையில் அழுகையில் கொண்டு வந்து நிறுத்தியது. நான் தேம்பி தேம்பி அழுதேன். சுற்றி இருந்த அனைவரும் என்னை தேற்ற முயன்றது எனக்குள் ஒருவித சுயபச்சாதாபத்தை ஏற்படுத்த எனது அழுகை அதிகமானது.....

என் ரஜினி.....தலை கோதும் அழகு..... நடக்கும் அழகு.. எனக்குப் பிடித்த கண்கள், எதிரிகளை பந்தாடும் வேகம்....கடகடவென்று பேசும் ஒரு ஸ்டைல்....என் ரஜினி....இனி நடிக்கமாட்டாரா....ஏன்....? நான் எனக்குள் கேள்வி கேட்டுக் கொண்டு ...கன்னத்தில் கைவைத்து வீட்டு வாசப்படியில் அமர்ந்திருந்த போது....என் அழுகை நின்றிருந்தது...என்னை சுற்றிய கூட்டமும் சென்று விட்டது. என்னடா மனுசன் இவர் நடிக்கமா போறேன்னு சொல்றாரு. சாமியார போகப்போறார்னு சொன்னது எனக்கு புரியவே இல்லை. சந்தோசமாத்தானே இருக்காரு...சாமியார போன...எல்லாத்தையும் விட்டுட்டு போகணும் அதில என்ன சந்தோசம் இருக்க போகுது......?

தனியா இருப்பது பைத்தியக்காரத்தனம் தானே... ரஜினிக்கு பயமே இல்லையா... ? இல்லை பாசமே இல்லையா... குடும்பத்தினரை விட்டு தனியா போறன்றாரே... ஐயோ என்னா ஆச்சு ரஜினிக்கு? ரஜினிக்கு புடிச்ச சாமிய எனக்கு புடிச்ச சாமியா ஆக்க்கிகிட்டேன்.

"பூஜ்யாய ராகவேந்த்ராய சத்ய தர்ம ரதாய ச
பஜதாம் கல்ப வ்ருக்ஷாய நமதாம் காமதேனவே!"

சுகுந்தா அக்காகிட்ட பேப்பர்ல எழுதி வாங்கி.... டவுசர் பாக்கெட்ல வச்சுகிட்டு ராத்திரியும் பகலுமா அத நான் மனப்பாடம் பண்ண நான் பட்டபாடு....எனக்குதான் தெரியும்....! கையில ரஜினி மாதிரியே...செப்பு காப்பு பல்வேறு எதிர்ப்புகளுக்கும் நடுவில, ஸ்கூல்ல வாத்தியார் கண்டிப்பையும் மீறி... நான் அணிந்திருந்தேன். ரஜினி....என்னைப் பொறுத்த வரைக்கும் எனக்கு சொந்தம்...அப்படி ஒரு பிரமையில் இருந்தேன்.. திடீர்னு நடிக்கமாட்டார்னா என்ன விளையாட்டா?

கமல் சார், டைரக்டர் பாலசந்தர் சார் எல்லாம் எனக்கு கடவுளா தெரிஞ்சாங்க....ஏன்னா அவுங்கதான் ரஜினிய தனியா சந்திச்சு சாமியார எல்லாம் போகக்கூடாதுன்னு வற்புறுத்தி இருக்காங்க...குமுதத்தில படிச்ச உடனே எனக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது.......

மீண்டும் ரஜினி நடிப்பார்னு செய்தி வந்தபோது என்னவோ....மீண்டும் ஒரு புதுபிறவி எடுத்து ரஜினி வந்த மாதிரி எனக்கு தோணிச்சு ராகவேந்திரர் ரஜினியோட 100வது படம் அதில ரஜினி ராகவேந்திரரா நடிச்சது எனக்குப் பிடிக்கல...ஏன்னா....அப்படி ஒரு ரஜினி எனக்கு பிடிக்காது. அவர் சாதுவா வந்தா சண்டை இருக்காதுல்ல...ஸ்டைல் இருக்காதுல்ல....அதுதான் காரணம் ஆன மீண்டும் நடிக்க வந்தது ரொம்ப சந்தோசமா இருந்தது.

காலச்சக்கரத்தின் சுழற்சியில் ரஜினி எனது வாழ்வில் ஒரு தவிர்க்க முடியாத மனிதராய் ஆகிபோய்விட்டார். தீபாவளி, பொங்கல் புது ரீலீஸ், அவரின் ஆடியோ ஆடியோ கேசட் ரிலீஸ் என்று ஒவ்வொரு நிகழ்விலும் தொடர்ந்து ரஜினி ரசிகனாய் பயணித்தேன். பதின்ம வயதினை எட்டிப்பிடித்த போது சில நண்பர்கள் ரஜினிக்கு டான்ஸ் ஆடத்தெரியாது.... நடிக்கத்தெரியாது என்று சீரியஸாகவே பேசினார்கள். அப்படி பேசியவர்கள் பெரும்பாலும் கமலின் தீவிர ரசிகர்கள்.....+1 படிக்கும் போதுதான் யோசனை செய்தேன்...ரஜினிக்கு நடிக்கத் தெரியாது என்று இவர்கள் எப்படி சொல்கிறார்கள். எது நடிப்பு? ஒரு வேளை எனக்கு நடிப்பு என்றால் என்ன என்று தெரியவில்லையா? ஆனால் ரஜினி எனக்கு பிடிப்பது வேறு ஏதோ ஒரு காரணத்தால் என்று மட்டும் புரிந்தது. இருந்தாலும் கடுமையாக ஆக்ரோசமாக அவர்களுடன் வாதிட்டு சண்டை போடுவேன்.


" என் தலைவன் நடிக்க வேண்டாம்.... நடந்தாலே போதும்...! ரஜினி சீனுக்குள் வர வேண்டாம் வெறும் ரஜினியின் கையை மட்டுக் காட்டி சுண்டச் சொன்னால் போதும்....படம் சில்வர் ஜூப்ளி" கத்தி கத்தி எனக்குள் இருந்த ரஜினி ரசிகன் வேகமாய் பேசிய காலம் அது.

தளபதி 1991ல் எனது கனவு படம்! மணிரத்னம் படம் வேறு ஆடியோ கேசட். ரீலீஸ் அன்னைக்கு....என்னை சுற்றி கமல் ரசிகர்களாகிய எனது நண்பர்கள் சூழ.......கேசட்டை (லஹரி கேசட்ஸ் வெளியீடு.....என்ன நான் சொல்ரது சரியா பாஸ்..!) உள்வாங்கிக்கொண்ட டேப் ரிக்கார்டர்...ப்ளே பட்டனை பட படப்போடு நான் ஆன் செய்ய.....(உள்ளே பயங்கர டென்ஸன் பாட்டு மொக்கையா இருந்தா என்ன ஓட்டியோ கொன்னுடுவாய்ங்க.....)

கேசட் சுழல ஆரம்பித்தது.....

"டாண்ட ட ட டடண்டன்ன்ன்....ராக்கம்மா கையத்தட்டு....."

பாட்டு முடியவில்லை.... நான் குதித்துகொண்டு இருந்தேன்....வீட்டில் யாரும் இல்லை அம்மா கோவிலுக்கும், அக்கா ட்யூசனுக்கும் ( நான் ட்யூசன் படிக்கலையான்னு கேக்குறீங்களா..தலைவர் பட கேசட் வெளியீடு...ட்யூசனுக்கு மட்டை) போன ஒரு மாலை நேரம்....வீட்டுக்குள் அலறிக் கொண்டிருந்தது...பானோசோனிக் டேப் ரிக்கார்டர். நண்பர்கள் அனைவரும் மொக்கை பாட்டை எதிர் பார்த்துக் கொண்டிருந்தனர் (அப்பொ தானெ என்னைய ஓட்ட முடியும்..)....அடுத்த பாட்டும் வந்தது......" காட்டுக்குயிலு...மனசுக்குள்ளே..." நான் சந்தோசத்தில் கத்தினேன்....டேப்ரிக்கார்டர்...சப்தம் தாண்டி என்னுடைய சப்தம் தாண்டி....."

டொக்...டொக்...டொக்...." யோரோ கதவை பலமாக தட்டும் சப்தம் கேட்டது....

அட யார்றா இது......இம்சை என்று ரஜினி ஸ்டைலில் கதவைதிறந்தேன்....


அங்கு.......


(தொடர்ந்து வருவான் ரஜினி ரசிகன்....)


தேவா. S

Wednesday, June 16, 2010

காசி.....பதிவுத் தொடர்...முடிவு!

படைக்கப்பட்டது
முதல் சுழன்று கொண்டிருக்கும் பூமியும், பழக்கப்பட்டதின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் மனித மனமும் நிற்கும் கணத்தில்தான்.....எல்லா ரகசியங்களும் தெரியவரும். ஒரு நாள் பூமி நிற்கும் அல்லது நொறுங்கும் அல்லது..கரைந்து போகும்.....! மனித மனமும் கூட.. நீங்கள் தீர்மானித்தால் இந்தக் கணமே.....

காசி அண்ணணின் மிரட்டல் தொடருகிறது......

இதுவரை

இனி....


கடவுள் ஏன் இருக்க வேண்டும் என்ற கேள்வியும் காசி அண்ணனின் மிரட்டலும் எனக்குள் ஏற்பட்ட பயமும்...அந்த மார்கழி குளிரிலும் எனக்கு வியர்த்ததும் எழுத்துகளுக்குள் வராமல் முரண்டு பிடிக்கின்றன...! ஆனால் யோசித்தேன்... எதற்கு கடவுள் இருக்க வேண்டும்......ம்ம்ம்ம்ம்...பட்டென்று சொன்னேன்...

"நம்மள எல்லாம் காப்பாத்துறதுக்குண்ணே....அப்புறம்...கெட்டவங்கள அழிக்கிறதுக்குண்ணே...."

உன்னை எத்தனை தடவை காப்பாத்தி இருக்கார்? எத்தன தடவை நீ கடவுள்தான் காப்பாத்தினார்னு உணர்ந்து இருக்க? கெட்டவங்கள அழிக்கன்னா இருக்குற கெட்டவங்கள எல்லாம் ஏன் இன்னும் கடவுள் அழிக்கல? அடுத்தடுத்த கேள்விகளில் திணறிய என்னை மேலும் பேசவிட வில்லை காசி அண்ணன்.....

வடக்கு தெருவில இருக்குற மாரியம்மாவுக்கு ரெண்டு நாளா சுரம் நடவுக்கு போகாம வீட்லயே படுத்து கிடக்குறா....அவ புருசன் கிடய (ஆட்டுக் கிடை) ஓட்டிக்கிட்டு தஞ்சாவூரு பக்கம் போயிருக்கான். பச்ச புள்ளக்காரி 8 மாச புள்ளய வச்சுகிட்டு பாலு வாங்க கூட காசில்லாம... சுரத்துல முனகிட்டு கிடக்குறா....அடுப்பு பத்தவச்சு ரெண்டு நாளாச்சி...ரசுக்கு ரொட்டியும் வர காப்பியுமா குடிச்சிட்டு புள்ளக்கியும் வரகாப்பிய கொடுத்துகிட்டிறுக்கிறா பாவி மனிசி....ரெண்டு குடம் தண்ணி எடுத்து வைக்கலாமுனு போனேன்... துடிச்சி போயிட்டென்....! கையில இருந்த 50 ரூவா காச அவகிட்ட குடுத்துட்டு....அழுகுற புள்ளக்கி...பாலு வாங்கலாம்னு கோவிலுக்கு பின் வழியா.. கடவீதிக்கு வந்தேன்... கோவில்ல சாயங்கால பூஜை பாலாபிஷேகம் கடவுளுக்கு நடக்குது ஊத்துன பாலு சிலைல பட்டு கறுப்பு வெளுப்பும் எண்ணெயுமா ஊத்திகிட்டு இருக்கு......


சாமிக்கு பண்ணனும்னு ஆசை இருந்தா கோவிலுக்குள்ளேயே ஒரு தொட்டி வச்சு... பால ஊத்தி வைக்கப்படாதா? இல்லாத போன ஏழை பாழைங்களுக்கு கொடுக்கப்படாதா? ஏண்டா இப்படி விரையம் பண்ணுறீகன்னு ஒரே கோவம்....கோவில் முன்னால வந்து நின்னு கத்து கத்துன்னு கத்தினேன்....ஏன்டா..சாமியாடா கேட்டுச்சு பாலு வேணும்ன்னு....மனுசப்பயவுள்ள குடிக்க பாலு இல்லாமா வரக்காப்பி குடிச்சி வயிறு ஒட்டிபோயி கிடக்குது...எதுக்குடா...... இப்படி அநியாயம் பண்றீங்கன்னு....கேட்டேன்....


கூப்பிடுங்கடா.. ஒங்க சாமிகள.. நான் கேக்குறேன்..என்ன கொன்னாலும் பரவாயில்லேனு கத்தினேன்....!லூசுப்பய கத்துறான்னு முதுகுல ரெண்டு மொத்து மொத்தி என்ன புடிச்சு கீழே தள்ளிவிட்டாய்ங்க...கை சிராப்புண்டு போச்சி.. ரெண்டு நாளாய் கையில் ஆறாமல் இருந்த ரணத்தை காசியண்ணன் காட்டியது.....!கையிலிருந்த ரணத்தைப் பார்த்து என் மனசு வலித்தது.


அப்பு...இவெங்க சொல்ற சாமி எல்லாம் வராது. இது வரைக்கும் எங்கணயும் வந்ததில்ல
வரவும் வராது. அவன் அவன் மனதிருப்திக்கி ஒவ்வொரு சாமியா உண்டாக்கி வச்சிகிட்டய்ங்க....சாமி சாமின்னு இவென் சாமிக்கி காட்டுற கரிசனத்த...கொஞ்சமாச்சும் மனுசப் பய மேல காட்டலாமா இல்லையா? எனக்கு அவர் பேசிக் கொண்டிருப்பதின் ஆழமும் அர்த்தமும் ஏதோ ஒரு வேகத்தில் மெதுவாய் விளங்க ஆரம்பித்தது....அதனால் என்னுடைய கேட்கும் ஆர்வம் அதிகரித்து இருந்தது.....! மெல்ல தன்னை உலுப்பி அசைந்து எழுந்து கொண்டிருந்தது பூமி. வெளிச்சம் மெதுவாய் படர்ந்து கொண்டிருந்தது...வெளியிலும் எனக்குள்ளும்...!


மனுசன் முதல்ல தனக்குள்ள நிம்மதிய தேடணும்... நிம்மதின்னு ஒண்ணு தனியா எங்கேயோ இருந்து வராது. நாம செய்யுற வேலைல இருந்துதான் எல்லா விசயமும் தொடருது...எது செஞ்சாலும் நமக்கே தெரியும் இது நல்லது கெட்டதுன்னு.....! நாம செய்ற நல்லது கெட்டதுக்கும் நமக்கும் சம்பந்தம் இருக்குப்பு... "புரியலையேண்ணே..... நான் தலையை சொறிந்தேன்...."


அப்பு...இப்போ நீங்க பலசரக்கு கடைக்கி போறீக..பலசரக்குக்கடைகாரன் கிட்ட சண்டை போடுறீக....அவன் என்ன செய்வே தெரியுமா? மத்தியான சோத்துக்கு வீட்டுக்கு போயி பொஞ்சாதிகிட்ட கோவத்த காமிப்பான்.... ... அவ பொஞ்சாதி என்ன பண்ணும்....புள்ளய இழுத்து போட்டு அடிச்சி அது கோவத்த காமிக்கும்.....! வெளில வெளையாடுற பய உங்க வீட்டு பயல இழுத்து போட்டு அடிப்பான்.. உங்க வீட்டுப்பய..வீட்டுல வந்து சோறு சாப்பிட மாட்டேன்னு அது சரி யில்ல இது சரியில்லன்னு வீட்டுல சண்டை போடுவேன்....இத பாத்து உங்காத்தாளுக்கு கோவம் வரும்.....உங்க தம்பிய ரெண்டு மாத்து மாத்திட்டு....உங்கப்பாகிட்ட எரிஞ்சு விழும்...உங்கப்பா என்ன செய்வாரு...எங்கயாச்சும் போய்ட்டு நீ லேட்ட வருவ இல்லா ஏதாச்சும் சாதாரணமா செஞ்சு இருப்ப.... அவரு இருக்குற கோவத்துல உம்மேல எரிஞ்சு விழுவாரு......

பலசரக்கு கடைகாரங்கிட்ட நீ கொடுத்தது.... உனக்கு திரும்பி வந்துச்சுன்னு..உனக்குத் தெரியாது. தெரியவும் நியாயம் இல்ல....ஆனா...ஏதோ ஒரு ரூபத்துல நமக்கு கிடக்கிறது எல்லாமெ.... நாம கொடுத்ததுதான். ஒரு உதாரணம்தேன் நான் சொன்னது ஆன நிசத்துல நாமதேன் நமக்கு நல்லது கெட்டது எல்லாம் செஞ்சுக்கிறது எல்லாமே! இப்ப சொல்லு யாரு கடவுளு....? எங்கே இருக்கு ஒரு கடவுளு....? கேள்வியோடு சேர்த்து ஒரு கத்திப் பார்வையையும் எனக்குள் பாய்ச்சினார்.

"ஏண்னே அப்பன்னா சாமியே இல்லையாண்ணே....?"

பயத்தோடு தைரியத்தை வரவழைத்துக் கொன்டு கேட்டேன்...சாமின்னு ஒண்ணு தனியா இல்லப்பா....எல்லா கோயிலுக்கும் சாமிங்கதான் போகுது....இதுகளே சாமிய தேடினா எப்படி சாமி கிடைக்கிம்! கடைசிவரை சாமிய கண்டுபிடிக்க முடியாது ஏன் தெரியுமா சாமிஎல்லாருக்கும் இங்க இருக்கு... அவர் உறக்க நெஞ்ச தட்டிக் காமிக்கவும்.... நான் வெளிறத்தொடங்கினேன்.

எவனுக்கும் தான் யாருன்னு சிந்திக்கத் தெரியாதுப்பா....! எல்லா பயபுள்ளையும் அடுத்தவன பத்திதான் நினைக்கும்...! காசி ஏன் இப்படி இருகான்னு ஊருல இருக்கிற பயபுள்ள பூரா நினைக்கிறாய்ங்க...அவங்கே ஏன் இப்படி இருக்காய்ங்கன்னு நினைக்கிறது இல்ல.....


ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொரு மாறி.... நான்...உன்ன மாறி இருக்கணும்னு ஆசைப்பட்ட நான் கஸ்டப்படுவேன்... நீ என்ன மாறி இருக்கணும்னு நினச்சா நீ கஸ்டப்படுவே.....விழுந்த மண்ணுகேத்த மாறி மொளைக்கிது செடி....! புகுந்த கருவுக்கு ஏத்த மாதிரி அமையுது ஒவ்வொருத்தன் வாழ்க்கை...! இதுல எதுக்கு அடுத்தவன பத்தின ஆராய்ச்சி....உன் கூடு.. உன் உசுரு...இத உத்து உத்து பாரு...சாமி தெரியும் ஹா.....ஹா......ஹா....பிரமாண்டமாய் காசி அண்னன் சிரிச்சதுல....அரசமரத்தடியில தூங்கிக் கிட்டு இருந்த ஒரு நாயும், மரத்து மேல இருந்த சில பறவைகளும்...பயந்து ஓடிப்போச்சு.....


" டேய்..கிறுக்குப்பலே...... என்னடா சட்டய கூட போடாமா மாரநாட்டையா பேரன் கிட்ட உக்காந்து சிரிச்சிகிட்டு இருக்க....காலங்காத்தால...! வெரசா வாடா...கடைக்கி தண்ணி மோக்கனும்!" டீக்கடை மணி அண்ணன் காசி அண்ணனை விரட்டினார்......" ஏம்ப்பு கிறுக்கு பய கூட காலைலயே என்ன பேச்சு...உங்களயும் லூசாக்கிப் புடுவான்....சூதானமா இருங்கப்பு....." என்று என்னை நோக்கியும் சிரிப்போடு வார்த்தைகளை வீசினார் டீக்கடை மணி அண்ணன்....!

காசி அண்ணே டீக்கடகாரு பின்னால போயிருச்சு.....! நான் எழுந்து மெல்ல நடக்கத்தொடங்கினேன் வீடு நோக்கி மெதுவாய்...." ஏண்டா கோயிலுக்கு வரல..." யாரோ ஒரு நண்பன் கேட்டது காதில் விழுந்தை புத்தி வாங்கிக் கொள்ளவில்லை........!


"காசியண்ணே......!.....காசியண்ணே......காசியண்ணே...." அனிச்சையாய் மனம் சொல்லிக் கொண்டிருந்தது.

"லூசுப்பயலே....எங்கடா..போய்ட்ட...." யாரோ யாரிடமோ சப்தமாய் பேசிக் கொண்டிருந்தார்கள்...

பொழுது நன்றாக விடிந்திருந்தது.....வெயிலின் வெளிச்சம் வெளியே நன்றாக பரவியிருந்தது.... வீடு நோக்கி மெல்ல நான் நடந்து கொண்டிருந்தேன்.......!தேவா. S


Tuesday, June 15, 2010

காசி.....!


வீடுகளுக்கு தண்ணீர் எடுத்துக் கொடுப்பது...வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கடையில் சாமான் வாங்கிக் கொடுப்பது என்பது தொடங்கி ஒவ்வொருவரின் அன்றாடத் தேவைகளுக்கு எல்லோரும் கூப்பிடும் பெயர் காசி. எப்பவும் மொட்டை அடித்து விடுவார் அதானல் பாதி வளர்ந்த நிலையிலேயே இருக்கும் அவரது தலை முடி பல சமயத்தில் அதுவே பெயராயும் போனதுண்டு. அரைக்கை வெள்ளை பனியனும் ஒரு மாதிரி பெண்கள் நொண்டி விளையாடும் போது அள்ளி சொருகிக் கொள்வது போல் கட்டப்பட ஒரு லுங்கியும் நெற்றி நிறைய பூசிய திரு நீரும் காசி அண்ணனின் அடையாளங்கள்....!

டேய்.. காசி...! ஏய்....லூசு....! காசிண்ணே....! எலேய்..கிறுக்கு..மொட்டண்ணே.....இது அவ்வப்போது மக்கள் தங்களின் வசதிக்கேற்ப கூப்பிடும் பெயர்கள். வேலை செய்யாமல் காசு வாங்க மாட்டார். அதிகம் பேசுவதுமில்லை... ரோட்டில் போகும் காசி அண்னனை அலுவலகத்தில் பணி செய்பவர்கள் முதல் தெருவில் குப்பைக் கூட்டும் தொழிலாளி வரை எல்லோரும் கிண்டல் செய்யும் போது அப்படி...அவரின் சீற்றமும் கோபமும் கடுமையாய் இருக்கும்...யாரையும் திரும்பிக் கூட பார்க்காத காசி அண்ணனை ஏன் இவர்கள் வம்பிக்கிழுக்க வேண்டும் என்று எனக்கு புரிவதில்லை ஆனால் வெறுமனே அவரின் சீற்றத்தை ரசிக்கவே ஒரு கூட்டமிருந்தது என்னவோ உணமை

எதேச்சையாய் அம்மாவிடம் கேட்டேன்...ஏம்மா காசி அண்ணன எல்லோரும் இப்படி பண்றாங்க...அவருக்கு எத்தனை வயசு ஆகுது ஏன் இப்படி எல்லோரும் அவரை கிண்டல் பண்றாங்க.. என்று கேட்டேன். " தம்பி அவனுக்கு 35 வயது ஆகுது என்று அம்மா சொல்லத் தொடங்கி நான் கேட்க ஆரம்பிக்கும் போது எனக்கு வயது 17.

காசி அண்ணன் நல்லாதான் இருந்துச்சாம் ஒரு ஆறு ஏழு வருசமாத்தான் இப்படி ஆயிடுச்சாம். அம்மா அப்பா தம்பி என்று எல்லோரும் இருந்தாலும் காசி அண்ணன் படுப்பது பிள்ளையார் கோவில் மரத்தடியில், வேலை செய்யும் வீட்டில் சாப்பிடுவார் ஆனால் பெரும்பாலும் அவர் சாப்பிடுவதை யாரும் பார்த்ததில்லை. உறவுகள் எல்லாம் பைத்தியம் என்று சொல்லி இவரிடம் பேசுவது இல்லையாம்..அதனாலேயே இவர் வீடு விட்டு வெளியே வந்து விட்டதாக அம்மா சொன்னதை விட மேற்கொண்டு தொடர்ந்து சொன்னதுதான் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது....

"அவன் அதிகமா படிச்சுட்டாண்டா....அதான் பைத்தியம் ஆகிட்டான்"

ஏறத்தாழ அந்த சொற்றொடர் என்னை குழப்பியது. அதிகம் படித்தால் அவன் அறிவாளி அல்லவா? அவன் எப்படி பைத்தியம் ஆக முடியும்? அப்புறம் ஏன் +2 பரிட்சைக்கு என்னை படி படி என்று கொல்லவேண்டும்..16 ட்யூசன் நான் படிக்க வேண்டும்....? எனக்குள் முரண்பட்டது... கேள்வியாய் மீண்டும் அம்மாவிடம் போய் விழுந்தது. ஆமாடா என்னமோ கிரந்தகமாம் அதுல ஏதேதோ படிச்சு இருக்கான் கடைசில லூசா போய்ட்டான்...அவ்ளோதான் தெரியும் என்று சொல்லிவிட்டு அடுப்பில் இருந்த சாம்பாரைப் பார்க்க அம்மா போய்ட்டாங்க.

கிரந்தம்.....என்பது ஒரு எழுத்துமுறை அது வடமொழியினையும் சமஸ்கிருதத்தையும் எழுத பயன்பட்டது என்பது பிற்பாடு எனக்கு தெரியவந்தது ஆனால் அந்த +2 படித்த 17 வயது அறிவுக்கு அது தெரியாது. கேள்விகளால் நிரம்பி வழிந்த காலம். அதிகம் படித்த ஒரு மனிதன் ஏன் இப்படி ஒரு உடை.. இப்படி ஒரு நடை... ஊராரின் கிண்டல் என்று வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும். மாமா, சித்தப்பா, சொந்தம் , பந்தம், ஊர்க்காரர்க்ள் எல்லோருக்கும் காசி அண்ணன் பைத்தியம். வீட்டு வேலை செய்யும் ஒரு அஃறிணை.

மார்கழி மாதத்தில் அதிகாலையில் பஜனை செய்து முடித்து பிள்ளையார் கோவிலில் பொங்க சோறு கொடுப்பார்கள். பஜனைக்குப் போ என்று அம்மா வற்புறுத்தினாலும் பொங்கச் சோறு கிடைக்கும் அப்புறம் காலையிலேயே சில நண்பர்களை பார்த்து அரட்டை கச்சேரி நடத்தலாம்... ஒரு வேளை பக்கத்து தெரு பார்வதி கூட வரலாம் என்ற நப்பாசையில் ஞாயிற்றுக் கிழமைகளில் நானும் செல்வேன். பஜனைக்கு முன்...பிள்ளையார் கோவிலுக்கு பின் இருக்கும் குளக்கரையில் அமர்ந்து பேசிவிட்டு பின் கோவிலுக்குள் செல்வோம்.


ஒரு நாள் நான் தாமதாமய் வந்து விட்டேன்... கோவிலுக்குள் போவதற்கு முன் அந்த மார்கழி மாத அதிகாலை இருட்டில் கோவிலுக்குப் பின் சென்று நண்பர்கள் யாராவது இருப்பார்களா என்று தேடிக்கொண்டு கொண்டு குளக்கரையின் கீழே இறங்கி மறுபடியும் வேறு வழியே ஏறிய போது..


அரசமரத் திண்டில் யாரோ அமந்து இருந்ததைப் பார்த்து திடுக்கிட்டேன்... மெல்ல கிட்ட நெருங்கினேன்...என் இதயத்தின் லப் டப் அதிகமானது...ஓ.. சட்டையணியாமால்... ஒரு கால் மேல் இன்னொரு கால் போட்டு.... பத்மாசானத்தில்(அது பத்மாசனம் என்று பின்னாளில் அறிந்தேன்) கைகளை விரித்தபடி அமர்ந்திருப்பது யார்....? என்று பார்த்தபடி.. கிட்ட நெருங்கினேன்.....கொஞ்சம் பயமாகத்தான் இருந்துச்சு....


"காசி அண்ணன்......"


கண்களை மூடியபடி....அமர்ந்திருந்தார்.....!

அட செம லூசுதாண்டா... ! இந்தக் குளிர்ல சட்டை போடாம பஜனைக்கும் போகாம கண்ண மூடிட்டு உக்காந்துகிட்டு... எனக்கு சிரிப்பு வந்தது.....! காசி அண்னன் திருநீறுதான் பூசுமே தவிர ஒரு நாள் கூட சாமி கும்பிட்டோ கோவிலுக்குள்ள போயோ பாத்ததுல்ல....ஊர்க்காரய்ங்க சொல்றது சரிதான்னு பட்டுச்சு....சரி நாம கோவிலுக்குள்ள போவோம்...பொங்கசோறும் பார்வதியும் இருப்பாங்கன்னு நினைச்சு கிட்டு கிளம்ப நினைச்சேன்....அந்த நேரத்தில் காசி அண்ணன் கண்ண முழிச்சு என்ன பாக்குறத பாத்துட்டேன்.....


அண்ணே.....என்றேன். .......................................யாரு மாரநாட்டர் ஐயா பேரனா? குடும்ப பேர் சொல்லி கேட்டுச்சு! கூத அடிக்கிதாண்ணே.. பேச வார்த்தையில்லாமல் நான் ஏதோ உளறினேன். ஆமாப்பு..இங்கிட்டு இருங்க....என்று சொல்லி சுட்டிக்காட்டிய இடத்தில்பேசாமல் போய் அமர்ந்தேன். ஏண்ணே சாமி கும்பிட வரலையான்னு மெதுவா கேட்டேன்....!

அங்கதான் சாமி இருக்குன்னு உனக்கு தெரியுமா...? காசி அண்ணன் கோவிலைக் சுட்டிக் காட்டி என்னைக் கேட்டார். யாரோ சொல்றதை எல்லாம் நம்பாத...உண்மையில் சொன்னா இவுக சாமின்னு சொல்லி கும்புடுறது எல்லாம் சாமியே இல்ல...என்று எனக்குள் வெடிகுண்டை வீசினார். நான் அமைதியாய் அவரைப் பார்த்தேன்....அப்ப சாமி இல்லையாண்ணே? மெதுவாய் கேட்டேன். சாமி எதுக்கு இருக்கணும்? எதிர் கேள்வி கேட்டார். அட இது என்னடா விவகாரமா போச்சே....பொங்கலும் போச்சு...பார்வதியும் போச்சு...அரட்டையும் போச்சும் இப்படி வந்து மாட்டிகிட்டமேன்னு யோசிச்சிட்டு இருந்தேன்.....

காசி அண்ணன்....அதட்டினார்....சாமி எதுக்கு இருக்கணும் சொல்லு....? நான் பயத்தில் எச்சில் முழுங்கத்தொடங்கினேன்......(காசி அண்ணன் அடுத்த பதிவில் தொடர்ந்து வருவார்.....)பின் குறிப்பு: என்ன பிரச்சினை எங்கிட்ட? எதுவுமே எடுத்தமா முடிச்சமான்னு முடிக்க முடியலையே.... தொடர வேண்டியதாவே இருக்கே....ஏன் இப்படி?தேவா. S

Sunday, June 13, 2010

மெளனம்....!
என்ன எழுதுவது என்று தெரியவில்லை. எதுவுமே தோன்றாமல் மனம் ஒரு மழைக்குப் பின் துடைத்து வைத்த வானம் போல இருக்கிறது. ஒரு மாதிரியான அவஸ்தை நெஞ்சில் இருக்கிறது....ஆனால் மூச்சு சீராய் இருக்கிறது. உடலின் எடை கூட இருப்பது போல தெரியவில்லை.மெளனமாய் இருக்க ஏறக்குறைய முயற்சிக்கிறேன். இந்த கணத்தை நீட்டித்துகொண்டு இருக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் இருக்கிறது.

கேள்விகள் அற்றுப்போவதும், எண்ணமில்லாமல் இருப்பதும் ஒரு வரப்பிரசாதம். எல்லா கேள்விகளுக்கும் எப்படி பதில்கள் இருக்கின்றனவோ... அதேபோல அந்த பதில்களை உடைத்துப் போடவும் வேறு சில கருத்துக்களும் நிச்சயமாய் இருக்கின்றன. அதனால் கருத்துக்களின் பின் செல்லாமல் கருத்துக்களை விட்டு தள்ளி இருப்பது ஒரு சுகமான அனுபவமாயிருக்கிறது, ஆரம்பத்தில் பழக்கப்பாடாத மனது.... இதன் சூட்சுமத்தை உணர்ந்த பின் ஒரு ஓரமாய் ஒதுங்கி நல்ல பிள்ளை போல வேடிக்கைப் பார்க்கிறது.

காட்சிகளுக்குள் சிக்காமல், தன்னை தொடர்புபடுத்திக் கொள்ளாமல், வேடிக்கை பார்ப்பது என்பது ஒரு அலாதியான விசயம்தான். சிலர் நினைக்கிறார்கள் கேள்விகள் கேட்டு பதில் கிடைக்கும் என்று ஆனால் பதில்கள் எல்லாம் பொய்யாய் மாறும் தருணங்களில் கிடைக்கிறது மனிதர்களுக்கு ஞானம். புத்தர் சொல்லியது அதுதான். இருத்தல்தான் (இருத்தல் என்றால் என்ன? என்று மனம் ஒரு கிளைக் கேள்வி கேட்டிருக்குமே...!) சத்தியம்..இருத்தலை உணர்தல் உன்னதம். புத்தரிடம் கேள்வி கேட்டு வாதம் செய்ய முடிவு செய்து வந்தார் ஒரு பண்டிதர். புத்தருக்கு அவரின் நோக்கம் புரிந்து விட்டது. புத்தர் சொன்னார்.. என்னுடன் ஒரு வருடம் தங்கி இருங்கள் பின் வாதம் செய்யலாம் என்று....


ஒரு வருடமும் ஓடோடி விட்டது.....! புத்தர் அந்த பண்டிதரை அழைத்தார்...வாதம் செய்வோமா நண்பரே? என்று கேட்டார். அந்த ஒரு வருடத்தில் புத்தரின் அருகாமையும் இயல்பான வாழ்வும் எல்லாவற்றையும் அதன் அதன் அழகிலேயே ரசித்த இயல்பும் கண்டு..... பிரமிப்பில் இருந்த பண்டிதருக்கு....கேள்வியே மறந்து போயிருந்தது. தட்சணா மூர்த்தி தத்துவம் போல...." இருந்ததை இருந்தது போல இருந்து காட்டி" மெளனமாய் ஒரு வருட காலத்திற்குள் அந்த பண்டிதருக்கு பாடம் சொல்லப்பட்டு இருந்தது.

புரிதல் உள்ள இடத்தில் கேள்விகள் இல்லை. வாதத்தால் வெல்வது என்பது மட்டுப்பட்ட அறிவு. உண்மையை உணர்வது என்பது.... நிறைவான அறிவு. நிறைவான அறிவுகள் வாதம் செய்ய விரும்புவதில்லை...அவை வெறுமனே இருக்கின்றன. வெறுமனே இருப்பதாலேயே இரைச்சலும் கருத்துக்களும் நிறைந்த மனிதர்கள் ஒன்றுமில்லாதது என்று சொல்கிறார்கள். மிக மிக சப்தமாக பேசுகிறார்கள், தத்துவ அணிவகுப்புகள் நடத்துகிறார்கள்...புஜ பலம் காட்டுகிறார்கள்!

போட்டி போட்டு பேசி பேசிதான் பழகி விட்டோமே....மாதம் ஒரு முறை மெளனமாக இருந்தால்தான் என்ன? அது ஒரு பெரிய காரியம் இல்லை என்று தானே நினைக்கிறீர்கள்....இருந்து பாருங்கள்... அப்போது தெரியும்...மனதின் இரைச்சல் எப்படி இருக்கிறது என்று....? வாரச்சந்தை தோற்று விடும்....! முதலில் நமக்குள் அமைதியாவும்...மெளனமாகவும் இருக்க முடிகிறதா என்று பார்ப்போம்....! பிறகு போதிப்போம்... அடுத்தவருக்கு நமது சித்தாந்தங்களையும் கொள்கைகளையும்.....!


சப்தமின்றி சலமின்றி... நகரமுயலும் போது....குரங்காட்டம் போடும் ஒன்று...! அதை அடக்காமல் ஆடவிட்டு களைக்க வையுங்கள்...பின் அதுவே களைத்துப் போய் ஒடுங்கிக் கொள்ளும்!

மெளனம் வலிமையான வார்த்தைகளற்ற மொழி....! அனுபவித்துப்பாருங்கள்.... மேலே தோன்றியது அல்லவா கிளைக் கேள்வி...இருத்தல் என்றால் என்ன என்று அதன் அர்த்தம் பூரணமாய் விளங்கும்


தேவா. S

Saturday, June 12, 2010

சாதியே....உன்னை வெறுக்கிறேன்....பதிவுத் தொடர் II !நித்தம் நகர்ந்து கொண்டிருக்கிறது....வாழ்க்கை! மறுத்துக்கொண்டும், ஆதரித்துக் கொண்டும்..விமர்சித்துக் கொண்டும்...கொண்டாடிக் கொண்டும் நகர்ந்து கொண்டிருக்கிறது மானுடம். ஒவ்வொரு மூளையும் ஒவ்வொரு சித்தாந்தத்தை பிடித்துக் கொண்டு நகர்ந்து கொண்டிருக்கிறது. தன்னுடைய சித்தாந்தத்துக்கு முரண் பட்டவர்களை பைத்தியம் என்று ஒவ்வொருவறும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்....உண்மையில் எந்த சித்தாந்தமும் இல்லை என்று உணர்ந்தவர்கள் இவர்களை விட்டு தள்ளி இருக்கவே ஆசைப்படுகிறார்கள்.

சாதி... .ஒரு பெருங்கொடிய... நோய்....! வாருங்கள் தோழர்களே....பேசாப் பொருளை பேசத் துணிவோம்!


இதுவரை...

இனி....


பேருந்தினுள் என் தோள் தொட்டு திருப்பியவர் என்னைக் கும்பிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்தேன்.....! நெகிழ்ச்சியோடு "அண்ணே....காமாட்சி அண்ணே.... நல்லாயிருக்கிங்களா என்று அவரை கேட்டவுடன் " அப்பு நீங்க.. மணி ஆத்தா (என் அம்மா) மயந்தானே (மகன்)? செல்லம் ஐயா தங்கச்சி மயன்....என்று கேட்ட 55 வயது காமாட்சி அண்ணன் சலவைத் தொழில் செய்பவர். நின்று கொண்டிருந்த காமாட்சி அண்ணன் நீண்ட போரட்டத்துக்கும் என்னுடைய கடுமையான வலியுறுத்தலுக்கும் பிறகு அவருடைய சீட்டில் தளர்வற்ற நிலையில் அமர்ந்தார்.


ஆத்தா வந்திருக்காகளா...? நீங்க சும்மாயிருக்கீகளா....பள்ளிக்கூடம் லீவா (காலேஜ்) ...அன்பையும் பாசத்தையும் வார்த்தைகளில் இழைத்து என்னை நோக்கி அனுப்பிக் கொண்டிருந்தார் காமாட்சி அண்ணன். " இருக்கமப்பு....என்று ஒரு வித...வெறுமையுடன்..." அவரின் நலம் பகிர்ந்தார். என்னை தடுத்து எனக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்தார் அப்போது அவரின் முகத்தில் ஒரு பிரகாசம். மண்டை, மக்கு, குட்டி தின்னி, பாம்பு தின்னி... இதுதான் எம்மக்களுக்கு உயர்சாதி என்று சொல்லக் கூடிய.....மனிதர்கள் வைத்து இருக்கும் பெயர்கள். இப்படி கூப்பிடுவதின் மூலம் அவர்களை மனோதத்துவ ரீதியாகவும் அடக்கி விட வேண்டும் என்ற வெறி....என்பது அப்போதை என்னுடைய மூளைக்குள் ஏறவில்லை. பல நேரங்களில் நான் ....ஏய்.. மக்கு இங்கு வாய்யா என்று சிறு வயதில் காமாட்சி அண்ணனை கூப்பிட்ட கேவலமான தருணங்கள் நினைவுக்கு வந்தன.

எல்லாமே.. மிகப்பெரிய மனித சதி.... ! ஒரு விசயம் பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கே ஒரு அவலம் புலப்படும். மனிதர்களின் தனிப்பட்ட தேவைகளை பூர்த்திசெய்ய தொழில் செய்த எல்லோரையும் மதிக்காமல் சக மனிதனே... அவனை தாழ்மைப்படுத்திய அவலம் நடந்தேறியுள்ளது நமக்குத் தெரியவரும். இதன் பிண்ணனியில் இருந்த நீதியை.. சாஸ்திரத்தை... மனிதர்களை.. .ஓராயிரம் முறை கொளுத்தி கொளுத்திய சாம்பலை கோடி முறை கொளுத்தினாலும்....எமக்குத் திருப்தி ஏற்பட போவதில்லை. இவரைத் தொட்டால் தீட்டு என்று சொன்னவர்கள் நாக்குகள் எல்லாம் ஒரே வீச்சில் அறுக்கப்பட்டிருக்க வேண்டும். எந்த ஒரு மனிதன் தான் வாழ சக மனிதனை அடிமைப் படுத்த....இத்தனையும் வகுத்தானோ.... அவனின் மூளையை நெருப்பிலிட்டே பொசுக்கி இருக்க வேண்டும்......


கூட்டலும்....கழித்தலும்....
பெருக்கலும்....வகுத்தலும்
எமக்கான தீர்வே அல்ல....!
கொடுத்தலும் பெறுதலும்...
எம்மை எப்போதும்
வசீகரிக்கப் போவதுமில்லை....
நித்தம் நசுக்கப்பட்டு....
ஒவ்வொரு ஊரின் கோடியிலும்
இருத்தலுக்கும் இல்லாமைக்குமிடையே....
நகர்ந்து கொண்டிருக்கிறது எமது வாழ்வுபகுத்தறிவு பகலவன் பெரியார் அவர்கள் ஒரு பக்கம் போராடி இந்த சாதித் தீயை அணைத்து கொண்டிருந்த வேளையில் அந்த கொடுந்தீ அணையாமல் இருக்க பெரும்பாலன உயர்சாதி என்று சொல்லக் கூடிய மனிதர்கள் பாடுபட்டும் கொண்டிருந்தனர் என்பது மறுக்க முடியாத உண்மை. அதனால் தான் முழுமையாக இந்த சாதி மனிதர்களை விட்டுப் இன்னும் போகவில்லை.....! எமது கிராமத்துக்கான பேருந்து நிறுத்தம் வரும் முன் ... எழுந்தே விட்டார்... காமாட்சி அண்ணன்.... எங்கள் ஊர் ஆட்கள் யாராவது பார்த்தால்....

" என்னடா... சவுடால உக்காந்துகிட்டு வர்ற என்று கேட்டுவிடுவார்கள் என்ற பயம் காமாட்சி அண்ணனுக்கு. " அப்பு இந்தாங்க.. உங்க டிக்கட்டு...... யாரும் கேட்டா நான் டிக்கட்டு எடுத்தேன்னு சொல்லிறாதியப்பு...என்று சொல்லிவிட்டு வெற்றிலைக் கறை படிந்த பல் காட்டி.. வெகுளியான மனம் காட்டி சிரித்தார் அந்தப் பெரியவர். ஏன் நீங்க எடுத்தீங்கன்னு சொன்னா என்ன ஆகும்? என்று வெகுளியாய் நான் அவரிடம் கேட்டபோது..... பதில் சொல்லத் தெரியவில்லை... "இல்லப்பு.. நான் டிக்கட்டு எடுத்தேன்னு சொன்னா வைவாக.....(திட்டுவாங்க...) நீங்க ஒண்ணும் சொல்லதீக..."ன்னு சொல்லிக் கோண்டிருந்த போது......

கண்டக்டர்...கத்தினார்... " யாருண்ணே..காய ஓட முக்கு கேட்டது வெரசா (வேகமா) இறங்குங்க... செக்கிங்.. கிக்கிங்க் வந்தா.. நமக்கு ஏழரைய கூட்டீறூவாய்ங்கே..." கண்டக்டரின் குரலுக்கு ஒரு முறைப்போடு இரண்டு மூன்று மீசைகள்... அந்த ஸ்டாப்பிங்கில் இறங்கின... அந்த வாசமான கருவாட்டை எடுத்துக் கொண்டு ரெண்டு அப்பத்தாக்களும் இறங்கினர்.... ! வண்டிய நிறுத்தலேன்ன... தலிய அத்துறுவோம்ல.. சொன்னபடி அவர்கள் நகர.. கண்டக்டரின் விசிலுக்கும்... சற்றே கூட்டம் குறைந்த பேருந்து நகர ஆரம்பித்தது.

அடுத்த 10 வது நிமிடத்தில் எங்கள் ஊர் வந்தது.... நானும் காமாட்சி அண்ணனும் இறங்க... காமாட்சி அன்ணே வரட்டுமான்னே...வீட்டுக்கு வாங்க.. என்று தோளில் கை போட்டேன்.. படக்குன்னு தட்டி விட்டவர்....சுத்தி முத்தியும் பார்த்துவிட்டு வர்றேன்ப்பு....என்று சொல்லி முடிப்பதற்கு முன் டீக்கடை வாசலில் இருந்த மத்திய வயது கொண்ட ஒருவர் சட்டையில்லா உடம்போடு வேகமாய் ஓடிவந்து.. ஏதோ காமாட்சி அண்ணன் காதில் சொல்ல.....அவசரமாய்....சட்டையைக் கழற்றினார்....காமாட்சி அண்ணன்.....


ஏன்ணே.. என்னாச்சு... நான் கலவரமாய் கேட்க ....அவர் காதில் சொன்ன விசயம் எனக்கு திடுக்கிடலை ஏற்படுத்தியது....1997 களுலுமா இப்ப்படி?


(வேறு வழியில்லை... நான் இதைத் தொடர் பதிவாகத்தான் கொண்டு செல்லவேண்டும் .... எத்தனை பதிவுகள் வரும் என்று தெரியவில்லை...... நெருப்பு தீரும் வரை எரியலாம் என்று தீர்மானித்துள்ளேன்.....! ஒரு நூற்றாண்டு அழுக்கு இது.....என்னால் களைய முடியும் என்று நம்பவில்லை.....ஆனால் இதன் கொடுமைகளை சொல்லி மரித்தவன் என்ற திருப்தி கொள்ளும் என் ஆன்மா...)


( நெருப்பு....இன்னும் பரவும்)


தேவா. S

Thursday, June 10, 2010

பிரபஞ்ச புதிர்....!
எதை எழுதினாலும்
உனக்கான கவிதையாய்...
மாற்றும் என் பேனாவுக்கும்...
எப்போதும் உனை நோக்கியே...
பாயும் என் நினைவுகளுக்கும்
புரிவதில்லை நான் தான்
எஜமானனென்று....


ஒரு மழைக்காய் ...
நீ குடை விரித்தாய்.....
சந்தோசத்தில் சிரித்தது...
மறைந்திருந்த சூரியன்

எப்போது ....
நீ கோலமிட வருவாய் என...
காத்திருக்கிறோம்...
நானும் ..உன் வீட்டு வாசலும்!

உனக்கு வியர்க்கும் போது...
எனக்கு கோபம் வரும்...
உன் மீது ஒட்டிக் கொண்டிருக்கும்
வியர்வையின் மீது!

ஒரு முறை ... நீ..
அச்சச்சோ என்று சொன்னாய்...
ஒராயிரம் முறை..
சொல்லிப்பார்த்தேன் நான்!
ஒரு முறை கூட
உன் அழகு அதில் இல்லை!

கடைக்கண்ணால்..
என்னை பார்க்கும்...
ஒவ்வொரு கணங்களும்
யுகங்களாய்தான் நீண்டால்தான் என்ன?

களுக் கென்று...
நீ சிரித்தாய்...
கிழே விழுந்த..சில்லறையாய்..
சிதறிப் போனேன் நான்...!நீ...உறங்கும் போது...
உன்னைக் காணவேண்டும்..
என்ற ஆசையில்...
இரவு முழுதும்...
உறங்கவில்லை நான்!

அது ஒரு பெளர்ணமி இரவு..
முதன் முதலாய்....
இரவில் உனைப் பார்த்தது....
திடுக்கிட்டே... போனேன்...
ஒரு இரவுக்கு எப்படி...
இரு நிலவென்று...!

என்னவோ சொல்ல...
உன்னருகில் வந்தேன்...
"ம்ம்ம்ம்..." என்ன என்றாய்..?
பரீட்சையில் மறந்த பதிலாய்...
உனக்கான கேள்வி
மறந்து போனது....!

என் பெயர் சொல்லி ...
நீ அழைத்த..
அந்த கணத்தின் உணர்ந்தேன்..
பிரசவத்திறுகு பிறகான...
தாயின் சந்தோசத்தை...!உன் பார்வை என்னவோ..
சாதாரணம்தான்....
ஆனால்...காட்டுத் தீயாய்...
பற்றி எரிகிறதே...
என் மனது...
புரியாத இந்த
பிரபஞ்ச புதிரை...
எப்படி நான் தீர்ப்பேன்..
சொல்லடி பெண்ணே....?காதலோடு இருக்கும் ஒவ்வொரு கணங்களும்.... கடவுளால் ஆசிர்வதிக்கப் பட்ட கணங்கள்! ஒரு காதல் மனிதனை முழுமையாக்குகிறது கவிஞனாக்குகிறது அர்த்தம் பொதிந்த இருப்புத்தன்மையை சாதாரணமாய் போதிக்கிறது.


காதோலோடு இருங்கள் அது பிரபஞ்சத்தின் உயிர்ச்சத்து!

காதோலோடு இருங்கள் இந்த கணம் அர்த்தம் பொதிந்ததாய் மாறும்!

காதலோடு இருங்கள் காதல் எல்லாம் போதிக்கும்!


தேவா. S

Wednesday, June 9, 2010

சுட்டதை சுட்டேங்க.... அவ்ளோதான்!


ஊரெல்லாம் சுற்றிப் பறந்த அந்த காகத்திற்கு பசி வயிற்றைக் கிள்ளியது. அந்த நாளின் வெயில் கூட ரொம்ப அதிகம் மாலை 3 மணி வரை சுற்றி சுற்றி களைத்த காகம் துவண்டு எந்த நேரம் வேண்டுமானாலும் மயங்கி விழும் என்ற நிலை. பசி....அவ்வளவு கொடுமையானது!

எப்போதும் உங்களுடன் நான் இருக்கிறேன் என்பதை நினைவு கூறுங்கள் என்றுதான் சுவாசிக்கும் ஒரு நிகழ்வு நமக்குள் நிகழ்கிறது. மூச்சை இழுத்து வெளியே விடும் போது எல்லாம் புற சக்கி ஒன்று நமது இயக்கத்துக்கு தேவை என்பதை எல்லா ஜீவராசிகளும் உணர வேண்டும். இதற்கு இறை கொடுத்துள்ள ஒரு ரிமைண்டர்தான்...சுவாசம்.

மிகைப்பட்ட பேர்கள் இதை நினைப்பதில்லை...! தூக்கம் ஒரு ரிமைன்டர்... தூங்காவிட்டால் பைத்தியம் பிடிக்கும்..உறக்கத்திலும் ஓய்விலும் மூளைக்கு அதிக ஆக்ஸிஜன் கிடைப்பதால்தான் ஒரு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கிறது. அது போல....கடவுள் வைத்த மிகப்பெரிய ரிமைன்டர்...பசி....!


பசி வந்தால் பத்தும் பறந்து போகும்...ஆனால் பறக்கும் இந்த காகத்திற்கோ பசியால் பறக்கவே முடியாமல் தள்ளாடித் தள்ளாடிப் போய் வந்து ஒரு கூரை வீட்டு வாசலின் ஓரமாய் அடுக்கி வைத்திருந்த சுள்ளிகளின் மீது வந்து விழுந்தது என்றுதான் சொல்லவேண்டும்..! மெல்ல அமர்ந்த காகம் அரை மயக்கதில் நிமிர்ந்து பார்த்த போது....பொன்னம்மா பாட்டி வாசலில் உட்கர்ந்து தனது மாலைக் உணவு கடையை தனது வீட்டின் முன் தயார் செய்து கொண்டிருந்தது மங்கலாக தெரிந்ததுத்... சரி.. யார் இந்த பொன்னம்மா பாட்டி...?

மகன் மொக்க ராசு குடித்து குடித்து ஊதாரியாய் ஊர் சுற்ற....தன் வயிற்றை கழுவ வேறு வழியில்லாமல், இட்லி, பணியாரம், தோசை என்று வாசலில் சுட்டு வியாபாரம் செய்பவள் தான் நம்ம பொன்னம்மா பாட்டி. மாலை வியாபரத்துக்காக சுட சுட எல்லாம் தயார் செய்து கொண்டிருந்தவள் இந்த காகத்தை கவனிக்கவும் தவறவில்லை.... அது கொடுத்த ஈனஸ்வர சப்தத்தையும் கவனிக்க தவறவில்லை.

பசியோடு இருந்த காகத்திற்கு பணியாரம் மீது கண்...! பாட்டிக்கு இருந்த வாழ்வியல் பிரச்சினைகளில் காகத்தின் பசியை ஊடுறுவி நோக்கும் திறன் மறைந்து போயிருந்தது...! திடீரென்று வீட்டுக்குள் ஏதோ சப்தம் கேட்க...சிறுக சிறுக சேர்த்து அரிசி பானைக்குள் மறைத்து வைத்துள்ள காசை எடுக்க குடிக்க மொக்க ராசு திருட்டுத்தனமா பின் வழியா வந்திருப்பானோ என்ற பதற்றத்தில் எழுந்து உள்ளே போனாள் பாட்டி.

பசியோடு இருந்த காக்கா எவ்வளவு நேரம்தான் பாட்டி தான் சுடும் பணியாரத்தில் திஞ்சு போனதையாச்சும் கொடுப்பாள் என்று காத்திருக்கும். எல்லா விதிமுறைகளையும் காற்றில் பறக்க விட்ட காகம் ...முதலில் சட்டியில் இருந்த தண்ணீரைக் கொஞ்சம் குடித்து விட்டு... ஒன்று அல்ல இரண்டு பணியாரத்தை வாயில் கவ்விக் கொண்டு ஜிவ் வென்று பறந்து விட்டது. திரும்பி வந்த பாட்டிக்கு 2 பணியாரம் போனது தெரியவில்லை. அவளுக்கு பானையை உருட்டிய பூனையை விரட்டிய திருப்தி (பணம் பாதுக்காப்பய் இருக்குல்ல...)


சரி பாட்டிய சீன்ல இருந்து கட் பண்ணிடுவோம்....! இப்போ...காக்கா வந்து அமர்ந்த ஒரு ஊர் ஓர மரக்கிளை அது எவ்வளவு முக்கியமோ அந்த அளவு முக்கியம் அந்த மரத்துக்கு கீழே படுத்திருந்த நம்ம தெரு நாய்.. மணியும் முக்கியம் (பெரும்பாலும் நாய்க்கு அந்த பேர்தான் வைக்கிறாங்க.. அதான் .. யாரும் தப்பா எடுத்துக்காதீங்க சாமியோவ்...)


மோப்ப சக்தி அதிகம் உள்ள பிராணி நாய்... அப்படித்தான் நம்ம மணியும்....மேலே காக்கா வைத்திருந்த பணியாரம் அரைத்தூக்கதில் இருந்த மணியை எழுப்பி விட்டது. பல வீட்டு மிச்சத்தையும் ஹோட்டலின் கொல்லைப்புறத்திலும் நல்லா மொக்கு மொக்குன்னு சாப்பிட்டு விட்டு வயிறு புடைக்க சாப்பிட்டு விட்டு கிடந்த மணிக்கு ....இன்னு ரெண்டு பணியாரம் கிடைச்சா தேவலாம்னு தோண....எழுந்து நின்று மேலே இருந்த காக்காவைப் பாத்துச்சு....

உசாராயிடுச்சு காக்கா...அடப்பாவிகளா.. ! பரம்பரை பரம்பரையா எங்க குடும்பத்துல தனியா உக்காந்து ஒருத்தன கூட சாப்பிட விடவே மாட்டீங்களா...ன்னு ரெண்டு பணியாரத்தையும் கவனமா வாயில கவ்விட்டு என்னா....அப்டீன்ற மாதிரி நம்ம மணியை பார்த்து லுக் விட்டுச்சு.....


எப்பயோ யாரோ சொன்ன கதை ஞாபகம் வர.. மணி காக்காவ பாத்து சொன்னிச்சாம் நீ ரொம்ப அழகா இருக்கன்னு. இப்படித்தான் யாராவது சம்பந்தம் இல்லாம நம்மள புகழ்ந்த ஸ்ட்ரெய்ட்டா ஆப்புதான் அப்டீன்ற பாடத்தை..தனது பாட்டன் முப்பாட்டன் மூலமா தெரிஞ்சு வச்சிருந்த காக்கா... ம்ம்ம்ம்..ன்னுச்சம். என்னடா பணியாரத்த கேர்புல்லா பிடிச்சுட்டு இருக்கேன்னு நினைச்சு.. நாய் சொன்னிச்சாம் நீ ஒரு பாட்டு பாடுன்னு.


காக்கா... ரெண்டு பணியாரத்தையும் வாயில இருந்து எடுத்து வலது காலுக்கு கீழே வச்சுகிட்டு பாடிச்சாம். அடங்... என்ன இது இவ்ளோ உசார இருக்கே காக்கான்னு யோசிச்ச நாய்... நீ பாடுன்ன நல்லா இல்ல ஒரு டான்ஸ் ஆடுன்னு சொன்னிச்சாம்...கடுப்பான காக்கா ....அடங்கொன்னியா..... யார ஏமாத்தப் பாக்குற....அப்படீன்னு சொல்லிட்டு... உன்ன மிதிச்சே கொன்னுடுவேன்னு வலது காலை தூக்கி உதைக்கிற மாதிரி பண்ணிச்சாம். அடப்பாவமே...

ரெண்டு பணியாரமும் கீழே விழுந்துடுச்சு... டக்குன்னு நம்ம நாய் மணி பாய்ஞ்சு அதை எடுக்குறதுக்குல்ல.. குறுக்கால வந்த ஒரு பூனை அதை தூக்கிட்டு நாலு காலு பாய்ச்சல்ல எஸ்கேப் ஆகிடுச்சாம். வேகமா வந்த நாய் ஒரு முள்லு முள்ளு மேல போய் விழுந்து உடம்பு பூராமா ரத்தமாம். காக்கா..... அச்சச்சோ.... நம்ம கோபத்தால...... பணியாரம் போச்சேன்னு...அழுது கிட்டே பசியோட வேறு திசையில் பறக்க ஆம்பிச்சிச்சாம்.......

பணியாரத்தை கவ்விட்டு போன பூனை தன்னோட குட்டிகளுக்கு அதை பகிர்ந்து கொடுத்துட்டு....சொன்னிச்சாம்...." திடீர்னு மேலெ இருந்து விழுந்துச்சு பயலுகளா..காலையில் இருந்து ஒண்ணும் இல்லயேன்னு நினைச்சேன்....இன்னைக்கு கடவுள் நமக்கு படியளந்துட்டார்ன்னு ".

கதையின் நீதி

1) பசியோடு இருந்த காக்காவிறுகு ஒரு சின்ன பீஸ் பாட்டி போட்டு இருந்தா.. பாட்டிகு ரெண்டு பணியாரம் மிச்சம்.

2) வயிறுதான் புல்லா இருக்கே... நமக்கு எதுக்கு தேவையில்லம இன்னும் ரெண்டு பணியாரம்னு நாய் நினைச்சிருந்தா..... நாய்க்கு உடல் வேதனை மிச்சம்.

3) பசியோடு அலைஞ்சு திரிஞ்சு கொண்டு வந்தோமே.. அத ஒழுங்கா சாப்பிடுவோம் எதுக்கு தேவையில்லாம அடுத்தவன் உசுப்பேத்தி நாம கோபப்பட்டு "ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு"ன்ற பழமொழிய நிரூபிக்கணும்னு காக்க நினைச்சிருந்தா.... வயிற்றுப்பசி ஆறியிருக்கும் நிம்மதி மிச்சமாயிருக்கும்.

ஏதேதோ நிகழ்வுகள் நிகழ...பூனை போலத்தான் சில பேருக்கு ஏதோ கிடைத்து விடுகிறது. பூனைக்கு கிடைக்க வேண்டிய பணியாரம் கிடைத்தே ஆக வேண்டும் என்பது நியதி... இதை எதார்த்தம் என்றும் சொல்லலாம்...கடவுள் செயல் என்றும் சொல்லலாம்.

பின் குறிப்பு: எல்லோரும் சூடா ஆக்ரோசமா பதிவு போடுறாங்க.... சரி நாமளும் சீரியஸ் பதிவு போட்டு....வாசிப்பாளரின் BP யை அதிகாமக்க வேண்டாம் என்று எண்ணியதின் விளைவு... பாட்டி வடை சுட்ட கதையை ரீமேக் பண்ண வேண்டியதா போச்சு........யாரும் காப்பிரைட் பண்ணி வச்சிருந்தா மன்னிச்சுருங்கோவ்வ்வ்வ்வ்....!


தேவா. S

Monday, June 7, 2010

விபத்து....!

தொலைபேசியின் தொடர்ச்சியான சிணுங்களில் சமையலறையில் மதிய உணவு தயார் செய்து கொண்டிருந்தவள் அப்போதுதான் மணி எத்தனை என்று பார்த்தாள். காலை பதினொரு மணிக்கு யாரு இப்படி விடாம போன் அடிகிறது என்று அலுத்தவளாய்.....ரீசீவரை எடுத்து....." ஹலோ... நான் சுமதி பேசுறேன்....என்று சொல்லிவிட்டு மேற்கொண்டு கேட்டவளுக்கு தலை சுத்தாத குறையாகிவிட்டது. மூச்சு திணறிய படி.... வந்த அழுகையை அடக்கிக் கொண்டு...சரிங்க.... நான் இப்பவே புறப்பட்டு வர்றேன்...எந்த ஆஸ்பிட்டல் சொன்னீங்க....என்று குறித்துக் கொண்டு... போனை தடாலென்று வைத்தவள் ' ஓ ' வென்று அழத்தொடங்கினாள் அந்த 27 வயது சுமதி.

திருமணமான இந்த 6 வருடத்தில் எவ்வளவு அன்யோன்யம் எவ்வளவு புரிதல். பல நேரங்களில் இவனைப் போல் கணவன் கிடைக்க குடுத்து வைத்திருக்க வேண்டும் என்று சுமதி நினைக்கும் அளவிற்கு அத்தனை அன்பு. காலையில் அலுவலகம் செல்லும் போது எவ்வளவு துள்ளலாக சென்றான் முரளி...இப்போது பைக் ஆக்ஸிடெண்ட் ஆகி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பகுதியில் இருக்கிறான் என்றால் எப்படி தாங்குவாள் சுமதி. இரண்டு தெரு தள்ளி இருந்த முரளியின் அம்மா, அப்பா, தம்பி மூன்று பேரும் வீட்டுக்குள் நுழைய....அத்தேதேதேதே...... என்று அழுதபடி தனது மாமியாரின் தோளில் சாய்ந்து கதறினாள் சுமதி.


பரபரப்பான நிமிடங்களுக்கு இடையே 4 பேரும் மருத்துவமனையை அடைந்து ஓட்டமும் நடையுமாய் அவசர சிகிச்சைப்பகுதிக்கு வந்தார்கள்...உள்ளே நுழைய முடியாமல் வெளியிலிருந்து பார்த்து கதறத்தொடங்கினார்கள். முரளிக்கு தலையில் பெரிய கட்டிடப்பட்டிருந்தது.... காலிலும் வலது காலும் கையும் பெரிய பெரிய கட்ட்டுகளுடன்...சுமதி ஜீரணிக்க முடியாமல் நின்று கொண்டிருந்தாள். மாலை வரை எதுவும் சொல்ல முடியாது....உயிர் பிழைக்கிறது கொஞ்சம் கஸ்டம்தான் போல ஒரு நர்ஸ் ரகசியாமாய் முரளியின் தம்பியிடம் சொன்னது சுமதியில் காதில் இடியாய் இறங்கியது.

காலத்தின் நிகழ்வுகளை நாம் தாங்கித்தான் ஆக வேண்டும். சந்தோசங்களை வாழ்க்கை கொன்டு வந்து குவிக்கும் போது ஆடுகிறோம்....பிடிக்காத இது போன்ற நிகழ்வுகளைக் கொண்டுவரும் போது எதிர்கொள்ளத் திரணியின்று மண்டியிட்டு கதறுகிறோம். இன்னும் சொல்லப்போனால் கடவுள் நம்பிக்கை வருவது மிகைப்பட்ட பேருக்கு இது போல ஏதோ நிகழும் போது தான். ஒரு பக்கம் பிள்ளையின் நிலை கண்டு விக்கித்துப் போய் கதறும் தாய் தகப்பன்....பெற்று வளர்த்து 32 வயது மகனாய் உருவாக்கி....கடைசியில் உயிர் பிழைப்பானா ? மாட்டானா என்று எதிர்பார்த்து காத்திருப்பது எவ்வளவு பெரிய அவலம். சுமதி ஒரு ஒரத்தில் சுருண்டு கிடந்தாள்....பேசுவதற்கு திரணி இன்றி எப்போது மாலை வரும் எப்போது தன் அருமை கணவன் அபாயகட்டத்தை தாண்டுவானென்று...முரளியின் நினைவில்..தன் மைத்துனன் கொடுத்த காபியைக் கூட குடிக்க மறுத்துவிட்டாள்.

எல்லோரும் எதிர்பார்த்த அந்த மாலை வந்தது.....சீஃப் டாக்டரின் அழைப்பை எதிர்பார்த்து அன்ன ஆகாரம் இல்லாமல் கிடந்த குடும்பத்தினர்... அவர் அழைத்ததும் ஓடோடிப் போய் நின்றார்கள். செருமலோடு டாக்டர் சொன்ன முதல் வார்த்தை...." நேரடியாவே சொல்லி விடுகிறேன் பிழைக்கிறது ரொம்ப கஷ்டம் என்று சொல்லி முடிக்கும் முன் தனது 5 வயது மகளின் முகம் கேட்காமலேயே....சுமதியின் கண் முன் வந்தது....கணவனின் மீதிருந்த காதல் உருமாறி...மிரட்டலாய் ஒரு இறுக்கத்தை நெஞ்சுக்குள் இறக்கியது...அழுகை அடக்க முடியாமல்...வாய்க்கு முந்தானையை வைத்துக் கொண்டு விம்மும் வயதான மாமியாரையும்...அருகில் தள்ளாமல் நின்று கொண்டிருந்த மாமனாரையும் பார்த்து சுமதியின் அடி வயிற்றில் இருந்த ஒன்று ஏதோ ஒன்று வெடித்து நெஞ்சில் ஏறி..." என்னங்க...." என்ற வாக்கியத்தோடு அவளைத் தலையில் அடித்துக் கொண்டு அழச்செய்தது.


கொஞ்சம் தைரியமாய் இருந்த முரளியின் தம்பி.... டாக்டரிடம் தெளிவாய் கொஞ்சம் தைரியமாய் சொன்னான்...டாக்டர் எங்க அண்ணண எப்படியாச்சும் காப்பத்துங்க..என்று சொல்லி முடிப்பதற்குள் இடை மறித்த டாக்டர்..


"தம்பி....கை, கால்ல அடி பட்டு இருக்கு..அது எல்லாம் கூட பிரச்சினை இல்ல....ஆனா தலையில பயங்கர அடிபட்டு இருக்கு இன்னும் பிளீடிங்க் நிக்கவே இல்ல! இன்னைக்கு நைட் முழுதும் பார்ப்போம் இல்லேன்னா ... நாளைக்கு காலைல 9 மணிக்கு தலையில் ஆப்பரேசன் பண்ணியே ஆகணும் ..... என்று அவர் சொல்லும் போது மணி இரவு 8. டாக்டர் தொடர்ந்து பேசினார்...." ஆப்பரேசன் பண்ணலேன்னா உயிர் பிழைக்க சான்ஸ் கண்டிப்பா இல்ல....! பண்ணினா பிழைச்சலும் பிழைக்கலாம் இல்லேன்னா இல்ல... மேலே கையை உயர்த்தி காட் இஸ் கிரேட்....என்று சொல்லி விட்டு வணக்கம் சொல்லி மறைமுகமாய் அவர்களை இடத்தை விட்டு நகரச்சொன்னார்.

ஆளுக்கொரு மூலையில் அமர்ந்திருக்க....சுமதி வெறித்துப் போய் வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள்...தன் கணவர் ஐசியூவில், மகள் பக்கத்து வீட்டு செல்வி அக்கா வீட்டில், தான் இந்த மூலையில்... நேரம் போனது தெரியவில்லை....இரவு 11 மணி அளவில் மைத்துனன் வந்து மறு நாள் காலை ஆப்பரேசனை உறுதிபடுத்தி சென்றான். மிரட்சியாய் அடர்தியாய் ரொம்ப கனமாக அந்த இரவு விடிந்தது. காலை 6 மணிக்கு மாமனார் சொன்னார் " சுமதி நீ வீட்டுக்குப் போய்ட்டு டிரெஸ் மாத்திட்டு பாப்பாவை பாத்துட்டு வாம்மா" என்று....அவர் சொன்னதை மறுக்ககூட சக்தி இல்லை சுமதிக்கு....


9 மணிக்கு ஆப்பரேசன்...சரி வீட்டுக்கு போய்ட்டு வரலாம் என்று கிளம்பினாள். பக்கதிலேயேதான் ஒரு 30 நிமிசத்தில் சென்றடையும் தொலைவில் தான் அவர்கள் வீடு. சுமதி ஆஸ்பிடல் விட்டு கிளம்பும் முன்...தன் ஆசைக்கணவனை பார்த்து விட்டுச் செல்லலாம் என்று நினைத்து வைத்த கோரிக்கை மருத்துவமனையால் நிராகரிக்கப்பட்டது.....!


பக்கத்து வீட்டில் இருந்த மகளை உறக்கதோடு வாங்கித் தோளில் போட்டு....கதவைத் திறந்து வீட்டிற்குள் நுழைந்தவளுக்கு....முரளியின் நினைவுகள் அதிகமாயின....எவ்வளவு கேலி, கிண்டல், காதல் மோகம்.....எதுவுமே குறையில்லாமல் என்னை தீர தீர காதலித்த என் காதலா.....என்னைவிட்டு போய்விடுவாயா....? விசும்பலாய் கண்ணீரை கொட்டின நினைவுகள் மகளை படுக்கையில் போட்டுவிட்டு...தானும் படுக்கையில் கசங்கலாய் சாய்ந்தாள்..... நேரம் ஓடிக் கொண்டிருந்தது.....

தொலைபேசியை எடுத்தவள் ......மூர்ச்சையாகிப் போனாள்..மறுமுனையில் முரளியின் அப்பா அவளது மாமனார் கதறினார்....அம்மா....முரளி நம்மள ஏமாத்திட்டுப் போய்ட்டான்ம்மாமாமமமமமமா......அலறினாள் சுமதி....கடவுளே என்னை இப்படி என்னையும் என் பெண்ணையும் அனாதை ஆக்கிட்டியே... நான் என்ன பன்ணுவேன்...என் தெய்வம் போயிடுச்சே......! எல்லாம் முடிந்து விட்டது துணிப் பொட்டலமாய் வீடு வந்து சேர்ந்தான் முரளி....இறுதி ஊர்வலத்திற்கு எல்லாம் ரெடியாகிக்கொண்டிருந்தது....அழுது அழுது....கதறியபடி...சுமதியும்....என்ன நடந்தது என்று தெரியாமல் அம்மாவைக் கட்டிக் கொன்டு இருந்த 5 வயது மகளும்....எதிர்காலம் கேள்விக்குறியாய்...முரளி போய் சேர்ந்து விட்டான் இவர்கள் நிலைமை.....? வெளியே சேகண்டி மணி அடித்துக் கொண்டிருந்தார்கள் ....தொடர்ந்து அடித்துக்கொண்டிருந்தது சுமதிக்கு தலையில் இறங்கியது.......கத்தினாள்.....அந்த சேகண்டிய அடிக்காதீங்க.....அடிக்காதீங்க..........அடிக்காதிங்க.... நிறுத்துங்க அலறினாள் ...மணி சத்தம் நிற்கவில்லை......

"
"
"
"
"
"
"
"
செல் போன் மணி விடாமல் அடித்துக் கொண்டு இருந்தது....பதறி எழுந்தாள் சுமதி.....ஓஓஒ....தூக்கம் கலைந்தும் கனவிலிருந்து அவள் மீள முடியாத அளவிற்கு அதன் தாக்கம் இருந்தது... போனை எடுத்து ஹலோ சொல்லிவிட்டு மணி பார்த்தாள் 10:25மணி....அண்ணி நான் தான்.........முரளியின் தம்பி பேசினான்...அண்ணி......அண்ணனுக்கு ஆப்பரேசன் முடிஞ்சிருச்சு...இப்போ நல்லாயிருக்கு...இனிமே ஒரு பிரச்சனையும் இல்லன்னு டாக்டர் சொல்லிட்டாரு.....என்று சந்தோசத்தில் குதித்தப்படி சொல்லிவிட்டு நீங்க வாங்க அண்ணி......வேறு ஏதோ மைத்துனன் சொல்ல....காதில் வாங்கியும் ....வாங்கமலும் உடனே மறந்து போனாள் சுமதி.....

சுமதி.....மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தாள் .....குளிக்காமல், வேறு உடை மாற்றாமல்....மகளை அள்ளிக் கொண்டு வெளியே போய் கதவை மூட நினைத்தவள்......சாமி போட்டோ இருந்த இடத்திற்கு திரும்ப ஓடோடி வந்தாள்.....

" கடவுளே.....எங்கள காப்பாதிட்டே...... என் தாலிய காப்பாதிட்ட....அப்பா...அம்மா.. மகமாயி...ஏதேதொ சொன்னாள் " ஆனால் தன் மைத்துனன் போனில் சொன்ன கடைசி வார்த்தை அவளுக்கு ஞாபகம் வரவில்லை........

"அண்ணி.....அண்ணன் ஹெல்மெட் போடாதனாலேதான் இவ்ளோ பிரச்சினையும்.....எப்படியோ உசுர காப்பாதிட்டங்க....முக தாடையெல்லம் உடைஞ்சு போனதால் முகமே மாறி இருக்கு....எப்படியோ பிழைச்சு வந்தாரே அது போதும்....."

போனில் சுமதி கடைசியாய் கேட்ட வார்தைகள் மறந்து விட்டு...ஆட்டோவில் ஏறி ஆஸ்பிடலுக்குப் பறந்தாள்......பூட்டப்பட்ட அவளது வீட்டுக்குள்....சாமி படம் பக்கத்தில் ஆணியில் மாட்டியிருந்த......காலையில் முரளி அணியாமல் சென்ற.....

" ஹெல்மெட்" மெளனமாய் ஆடிக் கொண்டிருந்தது.

மனிதர்களுக்கு பெரும்பாலும் தெரிவதில்லை....எது விபத்து....? எது ஆபத்து என்று..........

திறமை தைரியம் என்ற பெயரில் ஹெல்மெட் அணியாமல் விபத்தை அன்றாடம் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு சென்று கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள். தவறு நிகழும் வரை....மெளனமாய் பாக்கெட்டில் இருக்கிறது விபரீதம்....

தவறு நிகழும் போது விபரீதம் விஸ்வரூபம் எடுக்கிறது....!

பைக் ஓட்டுற எல்லோரும் கண்டிப்பா ஹெல்மெட் போடுங்க பாஸ்! ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்.........(ரெண்டு பதிவா போட்டா கோபம் வருதுல்ல...உக்காந்து படிங்க ..பொறுமையா....ஹா...ஹா...ஹா)தேவா. S

Sunday, June 6, 2010

மறந்து போன பயணங்கள்...!

சரியாக எப்போது என்று சொல்லமுடியாத காலம் கடந்த நிலை அது...! என்னாலேயே நான் என்னவாயிருக்கிறேன் என்றும் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் நான் இருந்தேன்..அது எப்படி என்றும் விவரிக்க முடியவில்லை ஆனால் ஒப்பீடு சொல்ல முடியும்.... நகரும் காற்று போல ...சக்தியாய் இருந்தேன்... நெருப்பில் சூடு மறைந்திருப்பது போல.... காற்றில் பறந்து அலையாய் வந்து காதில் விழுகிறதே வார்த்தைகள்..அது போல...! வாசிக்கும் போது ஒரு புரிதல் ஏற்படுகிறதே அது போல... அது போலத்தான் ஆனால் அதுவல்ல.

உடல் விட்டு நான் நகர்ந்து வந்தது புரிந்ததது ஆனால் காலம் எவ்வளவு என்று சொல்லத்தெரியவில்லை அல்லது அது காலமில்லா இடம் அதனால் கணித்துப்பார்க்கவே தோணவில்லை. கொஞ்சம் கொஞ்சமாய் உடல் சம்பந்தமான நினைவுகள் இருந்தது அதுவும் விட்டுப் போகும் நிலையில் அதாவது கண்ணாடியை மறைத்திருக்கும் பனி இளஞ்சூட்டில் பாதி கலைந்து பாதி நீராய் வடிந்து வெறுமையாக கண்ணாடியை காட்ட எத்தனிக்குமே அதுமாதிரி....கலங்கலாய்.. மங்கலாய் ஏதேதோ நினைவுகள்.உடல் சார்ந்த உறவுகள் எல்லாம் சுற்றி நின்று கலங்கிக் கொண்டிருந்ததும் எனக்குள் ஏதோ நிகழ்ந்து நெஞ்சில் வலி ஏற்பட்டதும் மட்டும் நினைவில் இருந்தது. அதுவும் மறைந்து கொண்டிருந்தது. ஆனால் ஒரு புரிதல் இருந்தது. அந்த புரிதல் ஏற்கெனவே இருந்த உடலின் அனுபவத்தில் இருந்து தேக்கப்பட்டது. பசி என்ற ஒரு உணர்வும், வலி என்ற ஒரு உணர்வும், காமம் என்ற உணர்வும் அந்த தேக்கத்தில் இருந்தது. மற்றபடி அந்த உடல் பற்றியும் உடலால் ஏற்பட்ட உறவுகள் பற்றியும் ஒன்றும் தோன்றவில்லை. அதாவது முன்பே சொன்னது போல வலி இருந்தது....அடி இல்லை..! சந்தோசம் இருந்தது...சந்தோசப்படுத்த ஒன்றும் இல்லை....


எந்த நகர்தலும் இல்லை.. நான் இருந்தேன் ஆனால் இல்லை...ஏன் என்று கேள்விகளும் இல்லை.அது இருட்டா அல்லது ஒளியா என்று ஆராய்ச்சி செய்யவும் தோணவில்லை.. ஏதோ ஒரு கணத்தில் என் புரிதல் அதிகமானது நான் நகர்வதைப் போல தோன்றியது...எனக்கேற்ற இடம் நோக்கிப்பாயத்தொடங்கினேன். பள்ளத்தை நோக்கிப் பாயும் நீர் போல....இருட்டில் பயணிக்கும் ஒளி போல....மேலிருந்து கீழே விழும் பொருள்போல ஒரு தேவையிருந்தது அந்த நகர்வுக்கு, அந்த நகர்வுக்கும் எனது முந்தைய உடலில் ஏற்பட்ட அனுபவ புரிதலுக்கு ஒரு தொடர்பு இருப்பது போலத்தான் தோன்றியது.... நகர்ந்தேன்.... நகர்ந்தேன்.....நகர்ந்தேன்.... எந்த இலக்கை அடைந்தேன்.....அறியவில்லை...ஆனால்... இப்போது ஸ்தூலாமாய் இருந்த எதுவினுள்ளோ இருந்தேன்.... அந்த ஸ்தூலத்தை நான் என்று நினைத்தேன்...!


என்னால் அசைய முடிந்தது புரிதல் இருந்தது ஆனால் எண்ணமில்லை. எண்ணங்கள் பதிய வேண்டிய இடம் வெறுமையாய் இருந்தது ஏற்கெனவே இருந்த புரிதலில் காத்திருந்தேன்... ஸ்தூலத்துக்குள் வந்தவுடன் ஏதோ ஒன்றுக்காக காத்திருப்பதாய் தோன்றியது. வெறுமனே அங்கும் இங்கும் சுற்றித்திருந்தேன் சுற்றித் திரிவதற்கு உள்ளே இருந்த திரவம் உதவி செய்தது. இடைவிடாது ஒரு சப்தம் சீரான வேகத்தில் கேட்டுக் கொண்டே இருந்ததும் என்னைச்சுற்றி இருந்த ஒரு வித இளம் சூடும் ஒரு வித சந்தோசத்தைக் கொடுத்தது. சில நேரங்களில் பயந்தும் சில நேரங்களில் சந்தோசமாகவும் இருந்தேன் அது வேறு யாருடைய செயலலோ ஏற்படுவதாகத் தோன்றியது. சில நேரங்களில் எனக்கு சீராயும் பல நேரங்களில் மாறி மாறியும் சுவாசம் கிடைத்துக் கொண்டிருந்தது.....!

ஏதோ ஒரு தருணத்தில் என்னால் என்னை இருத்திக் கொள்ளமுடியவில்லை நான் நழுவிக் கொண்டிருந்தேன்...! கடந்த முறை நகர்ந்ததிற்கும் இப்போது நகர்வதிற்கும் நிறைய மாறுதல்கள் இருந்தது.....ஸ்தூலமாய் இருந்த எனக்கு வலியின் அவஸ்தை இருந்தது.. நழுவி... நழுவி.....ஓ....ஏதோ ஒரு வெளிச்சக்காட்டிற்குள் வந்து விழுந்து விட்டேன்... விழுந்த கணத்தில் மொத்தமாய் ஏதோ ஒன்று நாசிக்குள் சென்றது ...அதை திருப்பி வெளியில் விட ஏற்கெனவே இருந்த புரிதல் உதவி செய்தது. இடைவிடாது அந்த செயலை செய்யத்தொடங்கினேன்...! புரிதலில் இந்தப்பழக்கம் இருந்ததால் உடனே பழகிக் கொண்டேன்...! ஆனால் பளீச் என்ற வெளிச்சமும் சுற்றியிருந்த எரிச்சலும் நான் சுகமாயிருந்து பழகிய நிலைக்கு எதிராய் இருந்ததால் .. நான் என் கோபத்தை காட்டி சப்தமாய் ஏதேதோ செய்தேன்.....!

கொஞ்ச நேரத்தில் ஏதோ ஒன்று அருகில் வந்ததும் பற்றி இழுத்து உறிஞ்சத்தொடங்கினேன்....இதற்கும் ஏற்கெனவே தேக்கி வைத்திருந்த புரிதல் உதவி புரிந்தது. பல காலங்களில் செய்த அந்த அனுபவத்தின் புரிதல் இருந்ததால் அந்த செயலும் எனக்கு பழகிப் போனது. கொஞ்சம் ஏதோ ஒரு திருப்தி ஏற்பட....கண் இமைகள் விரித்து மெல்லப்பார்த்தேன்....முடியவில்லை...வெளிச்சம் என்னை மீண்டும் கண்களை மூடச்செய்தது. இப்படித்தான் இருக்கப்போகிறோம் என்று தெரிந்து விட்டது. இங்கே தான் இருப்போம் என்றும் புரிந்து விட்டது. வேறு எண்ணம் இல்லை...மீண்டும் பழைய நிலையில் இருப்பதாய் நினைத்துக் கொண்டு கண்களை மூடி அப்படியே கிடந்தேன்....எந்த பதிவும் இல்லா நிலையில் அவ்வப்போது கண்கள் மூடி பழைய நிலையை நினைத்து சந்தோசப்படும் போது உதடுகள் இழுத்து கொள்வேன் வாய் அகட்டிக் கொள்வேன்.....அதுவும் புரிதலில் இருந்த நிகழ்வுதான்! கொஞ்ச நேரத்தில் ஏதோ ஒன்று என்னவோ செய்ய....மீண்டும் சப்தமிட்டு கைகால்கள் உதைத்து மீண்டும் முன்பு செய்ததப் போலவே செய்தேன்......மெத்தென்று என் மீது மீண்டும் அது மோத....ஏற்கெனவே இருந்த புரிதலும் அனுபவமும் கொண்டு வாய் வைத்து பற்றி உறிஞ்சத்தொடங்கினேன்.

மீண்டும் நான் கண்மூடி எனது சப்தமில்லா நிலையையும், இருளில் மிதந்த நிலையையும் நினைத்துக் கொண்டே இருந்தேன்.... நேரமும் இல்லை காலமும் இல்லை...இப்போது மீண்டும் எனக்கு ஏற்கெனவே ஏற்பட்ட ஒரு அவஸ்தை ஏற்பட்டது. எனக்குள் ஏதோ ஒன்றூ பற்றி இழுப்பது போல தோன்ற....கை கால்கள் உதறி.... சப்தமிட்டேன்.... எதுவும் நிகழவில்லை....சப்தமிட்டால் ஏதோ ஒன்று கிடைக்கும் அந்த ஒன்று என் அவஸ்தையை தீர்க்கும் என்று ஏற்கெனவே அனுபவித்தில் இருப்பதால்..மிக சப்தமாக கத்தினேன்...கை கால்களை உதைத்தேன்.....

" ங்கா.....ங்கா....ங்கா...ன்ங்கா....ங்கா.....ங்கா..........ன்ங்கா........"

தொடர்ச்சியான நீண்ட என் போரட்டத்திற்கு நடுவே...யாரோ.....


" யேய்...புள்ள அழுகுது தூக்கி பால் குடும்மா......ரொம்ப நேரமா கத்துறான்மா"


என்று சொன்னது எனக்கு விளங்கவில்லை ஆனால் உடனே எனக்கு பற்றி இழுக்கும் மெத்தென்ற அந்த விசயம் கிடைத்தது........

நான் உறிஞ்சத்தொடங்கினேன்....சூடாய் அந்த திரவம் என்னுள் இறங்கத்தொடங்கியது...கததப்பான அந்தசூட்டிலும் எனக்கு ஏற்பட்ட ஒரு மயக்கத்தில்....உறங்கத்தொடங்கினேன்.....!


தேவா. S


பின் குறிப்பு: புரிந்தவர்களுக்கு இது அவர்கள் ஏற்கெனவே உணர்ந்த ஒரு அனுபவம். புரியாதவர்களுக்கு இது ஒரு கதை.

விழித்துக் கொண்டோரெல்லாம்....பிழைத்துக் கொண்டார்....!


ஒரு கதையை சொல்ல விரும்புகிறேன்...(படிப்பினைக்காகத்தான் நடந்த கதையா இல்லையா என்று கேட்டு ட்ராக் மாற்றி விட்டு விடாதீர்கள்....ஹா..ஹா..ஹா)

நாராதர் ஒருமுறை திருமாலிடம் சென்று எம் பெருமானே மாயை என்றால் என்ன என்று கேட்டிருக்கிறார் அப்போது திருமால் அமைதியாக சொன்னார் சொல்ல முடியாது விளக்குகிறேன் என்று சொல்லியிருக்கிறார். அப்போது நாரதரும் பெருமானும் பேசிக் கொண்டே போய்கொண்டு இருந்திருக்கிறார்கள். நாரதருக்கு தாகம் ஏற்பட்டிருக்கிறது..திருமால் கூறியிருக்கிறார் கீழே போய்... ஏதாவது ஒரு இடத்தில் நீர் அருந்தி விட்டு வா நான் கொஞ்ச நேரம் தியானத்தில் இருக்கிறேன் என்று.

நாரதரும் கீழே இறங்கிப் போய் ..தண்ணீர் தேடி அலைந்து ஒரு இடத்தில் ஒரு சிறிய நீரோடையை கண்டிருக்கிறார். நீர் அருந்தி விட்டு திரும்பி பார்க்க ஒரு அழகான பெண் நின்று கொண்டிருப்பதை பார்த்திருக்கிறார். உடனே அவள் மீது காதல் கொள்ள, அந்த பெண்ணும் நாரதர் மீது காதல் கொள்ள...இருவரும் அந்த பெண்ணின் சம்மதத்தோடு மணமும் புரிந்து கொண்டுவிட்டனர். அவர்களின் இல்லற வாழ்க்கைக்கு பரிசாக மூன்று குழந்தைகளும் பெற்றனர். நாரதரும் ஒரு இன்பமான இல்லற வாழ்க்கையில் திளைத்து மூழ்கியே போனார்.

ஒரு நாள் பெரும் காற்று அடித்து புயல் வீசிக் கொண்டிருந்தது... வெள்ளத்தில் எல்லா வீடுகளும் அடித்து செல்லப்பட்டன.... வெள்ளம் நாராதர் வீட்டையும் விட வில்லை..... அவரது வீடும், மனைவி, குழந்தைகள் எல்லாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன... நாரதார் எவ்வளவோ முயற்சி எடுத்தும் அவரது குழந்தைகளையும், மனைவியையும் காப்பாற்றமுடியவில்லை.... வெள்ளம் அடித்துக் கொண்டே போய்விட்டது! வெள்ளம் சில மணி நேரங்களில் கண் விழித்த நாரதர்...ஒரு ஓரமாக ஒதுங்கி கிடந்தார்....! வெள்ளத்தில் அடித்து செல்லப்பட தனது குடும்பத்தை நினைத்து...தேம்பி...தேம்பி...அழுது கொண்டு இருந்தார்...அவரது அழுகை பெரிய ஓலமாக வெளிப்பட்டது....

"
"
"
"
"
"

திருமாள் ...மெல்ல வந்து நாரதரின் முதுகு தொட்டார்..... " நாரதரே.....தண்ணீர் அருந்தி விட்டீரா" என்று சிரித்துக் கொன்டே கேட்டார்...திடுக்கிட்டவராய் விழித்த நாரதர்... தன் நிலை உணர்ந்தவராய்... வெட்கத்தில் ஹி...ஹி...ஹி... என்று சிரித்துக் கொண்டு.. திருமாலின் காலில் விழுந்து நமஸ்கரித்து.... ஒரு அழகான உவமையால் மாயை என்றால் என்ன என்று உணர்த்திவிட்டீர்.... தண்ணீர் குடிக்க வந்த நான்.. குடித்து விட்டு திரும்பாமல்..எங்கெங்கோ சென்று விட்டேன்... என்னை மன்னியும் என்று .கேட்டாரம்.


மேலே நான் கூறியிருப்பது புராண கதை.... ! இது போலத்தான் நான்.... ஏதோ பெரிதாய் கிழிக்காவிட்டாலும் என்னால் ஆன தீக்குச்சியை கிழித்து ஒரு கணம் எரிந்தாலும் ஒளி கொடுத்த வெளிச்சத்தில் மரிக்கலாம் என்ற எண்னத்தில் இருப்பவன் நான். எனது நோக்கம் நல்ல கட்டுரைகளை கொடுப்பது தான்.. நாரதர் தண்ணீர் குடிக்க வந்த மாதிரி நான் பதிவு எழுத வந்த நோக்கம் மறந்துட்டு.... ஏன் என் இடுகை பிரபலமாகல.....எப்படி தமிழிஷில் காணமப் போச்சுன்னு ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கேன்....ஹா... ஹா... ஹா....


எமது பயணத்தின் இலக்கை யாமே தீர்மானிப்போய்.....! எமது எழுத்துக்கள் பூரணத்திலிருந்து வருபவை அதற்கும் எனக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை
.. வெறும் கருவி நான்...கர்த்தாவுக்கு தெரியும் எல்லா சூட்சுமமும்.....!

பயண முறைகள் மாறினாலும்...இலக்கு மாறாது...! என் எழுத்தை வாசிக்கும் அத்தனை நண்பர்களுக்கும் நமஸ்காரங்கள்!


தேவா. S

Saturday, June 5, 2010

விசமிகளின் வில்லத்தனம்...தமிழிஷ் கவனிக்குமா...?அன்பான வாசகர்களே... நான் துபாயில் இருந்து பதிவிடுவது அனைவருக்குமே தெரியும். தாயகத்தை விட்டு பாலை மண்ணிற்கு பொருளீட்டும் பொருட்டு வந்த எமக்கு இந்த தமிழ் இணையங்களும், வலைப்பூக்களும் தான் ஆதரவு.

ஒரு சாதாரண பதிவரான நான் இன்று காலை பதிவிட்ட சாதியே உன்னை வெறுக்கிறேன் என்ற கட்டுரை தமிழிசில் இருந்து தூக்கப்பட்டு விட்டது....காரணம் அறிய வேண்டி... தமிழிசை துலாவியபோது...அவர்கள் கொடுத்துள்ள காரணங்கள் அறிந்த நான் பின் வரும் கேள்வியோடு இருக்கிறேன்.....யாரவது

1) உங்களின் வலைப்பூ பிடிக்காதவர்கள் வேண்டுமென்றே உங்களின் இடுகைக்கு பல்வேறு திருட்டுத்தனமாக நிறைய ஐ.டிகள் மூலம் வாக்களித்தால் உங்களின் இடுகை தமிழிசை விட்டுத் தூக்கப்படும்.


என்னுடைய கேள்வி இது தான் என்னுடைய வாசகர்கள் 32 பேர் வாக்களித்தும் யாரோ விசமத்தனம் செய்ததற்காக இடுகையை தூக்கியது எந்த விதத்தில் நியாயம்?


இது என்னுடைய குரல் மட்டுமல்ல....இதற்கு முன் பாதிக்கப்பட்டவர்கள் சார்பகவு இந்த கோரிக்கையை தமிழிசுக்கு வைக்கிறேன். இதற்கான தனிப்பட்ட மின்னஞ்சலும் அனுப்பியுள்ளேன்.

இதனால் நல்ல பதிவுகள் மக்களைச் சென்றடையாமல் யாரோ சிலர் இந்த வலைத்தளத்தை கண்ட்ரோல் செய்யும் அபாயமும் இருப்பதால் இந்த இடுகையை அவசரமாக இடுகிறேன்....!


தேவா. S

சாதியே.....உன்னை வெறுக்கிறேன்....!


தேடலின்(01.06.2010) நீட்சியாக கடந்த பதிவினை இடும்படி ஆகிவிட்டது ஆனால் அந்த பதிவுக்கு வந்திருக்கும் பின்னூட்டங்களும் அடுத்த கியரை போட்டு எங்கேயோ தூக்கி செல்ல முயன்றது. மீண்டும் மீண்டும் ஒரே களத்தை சுற்றிவர எனக்கு விருப்பமில்லை மேலும் தேடலுக்கான சுவிட்ச் போட்டாயிற்று இனி தமக்கான தீர்வை அவரவரின் அனுபவத்திற்கு ஏற்ப அவரே தீர்மானிக்கட்டும். அறிவே மிகச் செறிந்த ஆசான் வழிகாட்டி....திறந்த மனத்தோடு இருப்பவர்களுக்கு புது புது விசயங்கள் நாளும் கிடைக்கும். சரி.........அடுத்த களத்திற்கு நகர்வோம்....!

கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நேரம் சித்தி வீட்டில் நடந்த ஒரு விசேசத்திற்கு வந்துவிட்டு பக்கதில் 6 கிலோ மீட்டரில் இருக்கும் அம்மாவின் சொந்த ஊருக்கு செல்ல பேருந்தில் ஏறிய எனக்கு நெரிசலில் மூச்சு முட்டியது. கிராமப்புறங்களில் இயங்கும் டவுன் பஸ் என்று சொல்லக்கூடிய பேருந்துகளில் பயணம் செய்வது கொஞ்சம் எரிச்சல்தான் இருந்தாலும் அதன் அனுபவம் அலாதியானது.

காளையார்கோவில் சந்தைக்கு வந்தவர்கள் எல்லாம் கருவாட்டையும்...மீனையும் பைகளில் வைத்துக் கொண்டு ஏறியதில் பேருந்து முழுதும் நல்ல வாசனை..(பிடிக்காதவங்களுக்குதானே அது நாற்றம்...ஹா ஹா ஹா). அக்னி வெயில் படுத்தியபாட்டில் காற்று ஈரப்பததையெல்லாம் சூரியபகவானுக்கு படைத்து விட்டு....வறட்டு சூட்டோடு இருந்ததால் பேருந்தின் உள்ளே வியர்வைக்கும் பஞ்சமில்லை. வெளியே இருந்து கர்சீப், சாமான்கள் வாங்கி வந்த மஞ்சப்பை, கடகம் (ஒரு டைப் ஆன ஓலைப்பெட்டிங்க...)என்று ஆளாளுக்கு சீட்டில் விசிறியெறிந்து இடம் போட்டு இருந்தார்கள். பேருந்தின் ஜன்னல் வழியே ஒருவர் தன் 5 வயது மகனை உள்ளே நுழைத்துக் கொண்டிருந்தார் இடம் பிடிக்க.....!

பெரிய பெரிய கிருதாக்களும், முறுக்கிவைடப்பட்ட மீசைகளும், கம்யூனிஸ்ட் (சிவப்பு துண்டுங்க...அப்படீன்னா கம்யூனிஸ்ட் தானே....????) பெரிய பெரிய காதுவளர்த்து தண்டட்டை போட்ட ஆச்சிகளும் அப்பத்தாக்களும் நிறைந்த அந்த பெருந்தில் என் கல்லூரிக்கால கண்கள் தேடியது ஏதாவது ஒரு பிகராச்சும் வண்டில இருக்குமான்னு? தேடித்தேடி..யாரும் கிடைக்காமல் நான் நின்ற எரிச்சல் தெரியாமல் கண்டக்டர் வேறு உள்ள போங்க...(மருது பாண்டியர் அரசு பேருந்துங்க...) உள்ளே போங்கன்னு உயிர எடுக்குறாரு மனுசன்...!எங்கயா போறது இதுக்கு மேல உள்ளே...என்று சொல்ல நினைத்து திரும்பிய போது...வடை எடுக்கப் போய் மாட்டி கொண்ட எலிமாதிரி அந்தக் கூட்டத்தில் மாட்டிக் கொண்டு டிக்கெட் கிழித்து கொடுத்துக் கொண்டிருந்தார்....சட்டை நனைந்து போயிருந்தது....அடப்பாவமே....என்று நினைத்துக் கொண்டிருந்த என்னை உலுப்பி திரும்பச் செய்தது ஒரு முரட்டுக் குரல்...

" யோவ் கண்டக்டர்.....காய ஓடை முக்கு வண்டி நிக்கதின்னியாமே ...? என்ன ஏழரைய கூட்றியா....வண்டி நிக்கலேன்னா...உன்ன எறக்கி நிக்கவச்சுறுவோம்டி......என்ன அப்பு சூதானமானே இருக்குறிய..." கலக்கமுடன் திரும்பிப் பார்த்த கண்டக்டர் கேட்டவரின் மீசையை பார்த்து மிரண்டவராய் இன்னிக்கு நிறுத்தறேண்ணே....டெய்லியும் முடியாதுண்ணே...அங்க ஸ்டாப்பிங்க இல்லண்ணே... என்றார்.....அதற்கும் மீசை முறுக்கியவர் ஏதோ சொல்லி அதட்டிக் கொண்டிருந்தார். " டேய் வண்டிய எடுங்கடா...வெயில்ல போட்டு வச்சிக்கிட்டு என்னதேன் செய்வாய்ங்களோ...***** (சொல்லகூடாதா பிரபல கெட்ட வார்தை) வண்டிய எடுங்கடா ....டேய்..." யாரோ ஒருவர் கத்த...பேருந்தில் இருந்த சனமும் ஒருசேர கோரசாக...கத்த...வெளியில் சிகரெட் பிடிச்சுகிட்டு இருந்த ஓட்டுனர் வண்டியில் ஏற...ஒரு வித மகிழ்ச்சி எல்லோருக்குள்ளும் பரவியது....!

பல நேரங்களில் வண்டியின் நடத்துனர்கள் நம்மைபடுத்தினாலும் இது போன்ற கூட்ட நெரிசலில் ஒற்றை ஆளாய் டிக்கெட் போட்டு இன்வாய்ஸ் எழுதி, வழியி ஏறும் செக்கர்களையும் சமாளித்து, வண்டியில் இருக்கும் பயணிகள் ஒரு டிக்கெட் எடுத்துவிட்டோம் என்பதாலேயே பேசும் ரூல்சுகளைக் கேட்டுக் கொண்டு ....தினம் தினம் இவர்கள் படும் பாடு ரொம்ப கொடுமையானது. இப்படிப்பட்ட நடத்துனர்கள் மிகவும் கவனிக்கப்படவேண்டியவர்கள்...மக்களும் இவர்களை தமக்கு ஊழியம் செய்யும் பணியாளர் என்ற மரியாதையுடன் நடத்த வேண்டும். பேருந்து இயக்குபவர்களும்( அரசு மற்றும் தனியார்) இவர்களுக்கு முறையான ஊதியம் கொடுக்க வேண்டும். சரி.....சரி... நாம் பயணிக்க வேண்டிய இலக்கு இதுவல்ல அதனால்........மீண்டும் பேருந்துக்குள் வருவோம்.....

இந்திய ஜனத்தொகையை விளக்கும் அடையாள சின்னமாய்....பலதரப்பட்ட மக்களையும் சுமந்து கொண்டு மெல்ல மெல்ல ஊர்ந்து கடமையை பேருந்து ஆற்றிக் கொண்டு இருந்தது. ஒவ்வொருமுறை ஓட்டுனர் கியர் மாற்றும் போதும் அந்த இடியே வந்து விழுவது போல சத்தம் கேட்டது....! ஒரு சீட்டின் கம்பியை பிடித்துக் கொண்டு வெளியே இருந்து வலுக்கட்டாயமாய் உள்ளே வந்த காற்றை அனுபவித்துக் கொண்டிருந்தேன்....அதில் கருவாட்டு வாசனை வெளியே போனது மட்டும் கொஞ்சம் கவலையாய் இருந்தது.....அப்போது.....

" கும்பிடுறேன்....ஐயா மகனே......." யாரோ தோள் தொட்டுத் என்னைத் திருப்ப....திடுக்கிட்டு திரும்பினேன்.....!


யோவ்.... தலைப்புக்கும் பதிவுக்கும் ஒண்ணுமே சம்பந்தமில்ல.....என்று யாரோ என்னை திட்டுவது கேக்குது....இதன் தொடர்ச்சியான அடுத்த பதிவில...சம்பந்தப்படுத்திடுவோம்ங்க....)


(என்ன பண்ணச் சொல்றீங்க....வழக்க்கப் போல அடுத்த பதிவில் முடிச்சுடுறேங்கோ.........till the time please stay with me......)


தேவா. S

Thursday, June 3, 2010

அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள்.........! கலக்கல் பின்னூட்டங்களின் அணிவகுப்பு....!


கடந்த தேடலுக்கு வந்த பின்னூட்டங்களை அப்படியே விட்டு விட்டு போவதற்கு பொறுப்புணர்ச்சி கொன்ட என் ஆன்மா சம்மதிக்கவில்லை. இரவு முழுதும் நடந்த விவாதத்தில் ஆன்மாவின் அந்த உள்ளுணர்ச்சியின் வழிகாட்டுதலுக்கு நான் பணிந்ததின் விளைவு இப்பதிவு....

நமது செயல்களின் விளைவு ஒரு மரணத்தோடு நின்று விடுமா? இல்லை மரணித்தபின்னும் தொடருமா....எதிர்விளைவு எப்படியிருக்கும் என்ற இலக்கு நோக்கிய பயணத்தில் பல தரப்பட்ட கருத்துக்களை வைத்த...எமது தோழர்கள் அனைவரும் இந்த வலை உலகத்தை ஒரு மிகச் சிறந்த கருத்துக் களமாக்க வேண்டும் என்ற ஒரு பேரவா கொண்டவர்களாக பார்க்க முடிகிறது. அருமையான கருத்துக்கள், விவாதங்கள்... நெஞ்சை உருக்கும் காதல் கவிதைகள், உலகை உலுக்கும் முற்போக்கு சிந்தனைகள்....விழிப்புணர்வூட்டும் ஆன்மீகத்தொடர்கள், சாட்டையடி கொடுக்கும் அரசியல் விமர்சனங்கள் என்று பயணிக்க வேண்டிய களம்....அரசியல்வாதிகளின் அறிக்கைப் போராக மாறக்கூடிய அபாயம் இருக்கிறது....! நல்ல படைப்பாளிகள் சிந்தனைவாதிகள் எல்லாம் கூடி...இந்த போக்கை மாற்றும் துரித நடவடிக்கையில் இறங்கி...அறிவுசார் களமாக மாற்ற வேண்டும்.

கூட்டணி சேரா நண்பர்கள் மற்றும் தம்பிகளின் நல்ல நல்ல படைப்புகள் மேலே வராமல் ஓரங்கட்டப்படுவதை...படைப்பாளிகளும், நல்ல எழுத்தை காதலிப்பவர்களும் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க கூடாது. ஒரு கட்டுரையோ..கவிதையோ அல்லது கதையோ படித்து முடிக்கும் போது ஒரு சுகமான அனுபவமாக, சிந்தனையை தூண்டும் நெருப்பு பொறியாக நல்ல நினைவுகளை வாசகனுக்கு கொடுக்க வேண்டும். அப்படியில்லாத குப்பைகளை கொளுத்தி எறிவதற்கு நாம் கணமும் தாமதிக்க கூடாது.

சரி....கடந்த பதிப்பின் பின்னூட்டங்களைப் பார்க்கலாம்.....

"நமது செயல்களின் விளைவு ஒரு மரணத்தோடு நின்று விடுமா? இல்லை மரணித்தபின்னும் தொடருமா...."

நண்பர் அகல்விளக்கு ராஜா இது ஒரு தெளிவான தேடல்தான், உங்கள் தேடலிலேயே பதில் கிடைக்கும் என்ற ரீதியில் கூறியிருந்தார். நண்பர் பாலாசி...." மெளனம் மிகப் பெரிய வலுவான மொழி தேவா..." இதன் மூலம்தான் விடை தேட வேண்டும் என்று கவிதைத்தனமாக கூறியது நிச்சயமாய் என்னை ஈர்க்கவே செய்தது.

முரளிகுமார் பத்மநாபன், தம்பி சவுந்தர், தம்பி விஜய், நண்பர் கார்திக்(LK), நண்பர் நிகழ்காலத்தில், நண்பர் மகராஜன் இவர்கள் எல்லோருக்குள்ளும் என்னைப்போலவே தேடல் இருந்தாலும் சரியான பதிலை எதிர் நோக்கி காத்திருப்பவர்களாகத்தான் எனக்குப்பட்டது அல்லது அவர்களின் பதில் என்னை திசை திருப்பி விடக்கூடாது என்ற நல்ல எண்ணமும் இருப்பதாகப்பட்டது.

தம்பி ஜீவன் பென்னி மற்றும் நண்பர் மணி இருவரின் பதிலும் தேடல் என்பது நீங்கள் உங்களுக்குள்ளேயே தேடித் தேடி அனுபவத்திம் மூலம் எட்ட வேண்டிய ஒரு நிலை என்று கூறியதிலும் உண்மை இருந்தது. நண்பர் மணி அடுத்தவரை கேட்பதால் தேடல் திசை திரும்பக்கூடும் என்று சொல்லியது ஒரு அர்த்தம் பொதிந்த பதிலாய் இருப்பதாக தொலைபேசியில் உரையாடிய நண்பர்கள் கூறினார்கள்.

தமிழ் அமுதனின் இணையதளத்தில் அவர் கூறியிருந்த மரணத்திற்கு பின் ரசிக்கும் படியாய் இருந்த அதே நேரத்தில் இன்னும் விரிவாக இருக்கலோமோ என்று தோன்றியது, எழுத்தில் இருக்கும் உண்மையை இன்னும் கொஞ்சம் சொல்லுங்களேன் என்றும் எண்ணத் தூண்டியது. சுவாரஸ்யமான ஒரு பதிவு அது. பால் வீதியில் நீந்தினேன்.. என்று அவர் எழுதியிருப்பது அறிவின் முதிர்ச்சி.! அதே போல சகோதரி மலிக்கா நம்பிக்கை வேண்டும் என்று வலியுறுத்தினார்... நமக்கு மேலே ஒரு சக்தி இருக்கு என்று நம்பி நடந்தால் சந்தோசமாய் வாழ முடியும் என்றும் கூறினார்....!

தோழி ஜெயந்தி மரணித்த பின் பாவம் செய்தவனுக்கும், புண்ணியம் செய்தவனுக்கும் ஒன்றும் இல்லை, வாழும் போதே அது அவர்களை பாதிக்கும் என்று கூறியதிலும் ஓரளவிற்கு உண்மை இருக்கிறது, இருந்தாலும் ஒட்டு மொத்த வாழ்வும் ஏதோ ஒரு அர்த்தம் இல்லாமல் இருக்கவும் வாய்பு இல்லை என்பது எனது எண்ணம்!

தோழர் வீராவும், கும்மியும் இந்த பதிவின் பின்னூட்டத்திற்கு சுவாரஸ்யம் சேர்த்தவர்கள் என்று சொன்னால் மிகையாகாது. வீராவின் தமிழறிவும், பகுத்தறிவு சிந்தனையும், முற்போக்கு கருத்துக்களும், மிகவும் அருமையானவை. சமூகத்துக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் கண்டு அவர் கொந்தளிக்கும் போது எல்லாம் அவரது பகுத்தறிவு சிந்தனை மிளிறும். தீண்டாமையை, பெண்ணடிமைத்தனத்தை, மூட நம்பிக்கைகளை எதிர்க்கும் அதே நேரத்தில் அகம் நோக்கிய பயணம் இன்னும் அவர் மேற்கொள்ளவில்லையோ என்ற ஐயம் ஏற்படுகிறது. சிந்தனைகளை சிறப்பாக வெளிப்படுத்தும் அதே நேரத்தில்...ஏன் சிந்திக்கிறோம்? எங்கு ஓடிக் கொண்டிருக்கிறோம் என்ற சிந்தனையையும் சேர்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

அடுத்தாக நண்பர் கும்மி...! எனது தனிப்பட்ட பாராட்டுதலை இவருக்கு நான் தெரிவித்தே ஆகவேண்டும். என்னதான் வேறு வேறு கொள்கைகள் இருந்தாலும், கொஞ்சம் கூட கோபமில்லாமல் நாகரீகமான வார்த்தை உபோயகம் செய்து எனக்கு பின்னூட்டம் அளித்தபடியே இருந்தார். மிகத்தெளிவாக எதிர் திசையில் அவரும் தேடலில்தான் இருக்குக்கிறார் ஆனால் உணர்ச்சிவசப்படாமல் தெளிவாய் இருக்கிறார். நியூட்டனின் விதியை உடைத்து விட்டால் மேற்கொண்டு நான் நகர முடியாது என்று அதிலேயே மும்முரமாய் இருந்தவர்...உலகம் அழிந்தால் என்ன எஞ்சும் என்ற என்னுடைய கேள்வியை எதிர்பார்த்திருக்க நியாயமில்லை. தெளிவாய் கடையிசில் வெறுமையான ஒரு சூன்யம்தான் இருக்கும் என்று சொன்னார். அந்த வெற்றிடத்தில் அழிந்து போன எல்லாம் மறைந்து இருக்குமா? இல்லை வெற்றிடம் வெறும் வெற்றிடமானால் இயங்கிக் கொண்டிருக்கும் சக்தியும், சிதைந்து போன திடப் பொருட்களும் எங்கு போகும்? என்ற கேள்விக்கு சத்தியமான பதிலாய்..மெளனமாய் நின்று பதில் சொல்லியிருப்பதாக எனக்குபடுகிறது. ஆமாம் அவர் அதற்கு பின் பதிலளிக்கவில்லை.

எல்லாம் ஒடுங்கி வெற்றிடம் ஆனால்....ஒடுங்கிய வெற்றிடம் மீண்டும் எல்லாம் விரிந்து பல்கிப் பெருகும்தானே....? அதற்கான சாத்தியக்கூறுகள் உண்டுதானே? இது கும்மிக்கு சொல்லும் பதிலோ கேள்வியோ அல்ல....எல்லோரும் தனக்குள் கேட்டுக் கொள்ளவேண்டிய கேள்வி.....!
இறுதியாக.........

நண்பர் வேலு கூறியது.....

//அன்பு நன்பரே, நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இந்த வாழ்க்கை வேடிக்கை பார்க்க மட்டுமே
நிகழ்வதை புரிந்து கொள்ள முயற்சிக்கும் போதே மட்டுமே குழப்பம் வருகிறது.
பின்னர் மேலே நீங்கள் சொன்னது போல் நிறைய பேர் தோன்றி நிறைய விஷயங்களை சொல்லி மேலும் குழப்பி எதற்கு இத்தனை பிரச்சனை

" இருப்பதை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள் "

நமக்கு மேலுள்ள சக்தி கடவுளோ, இயற்கையோ ஏதோவொன்று அது மனித சக்தி புரிந்து கொள்ளும் நிலையில் வைக்கப்படவில்லை

அப்படி மனிதனால் புரிந்து கொள்ளமுடியுமெனில் அது கடவுளோ, இயற்கையோ அல்ல அதற்கு ஒரு தியரி வைத்து இது கடவுள் தியரி, இது இயற்கை தியரி என்று நம் எல்லைக்குள் கொண்டு வந்து விடுவோம் //

இருப்பதை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறும் வேலு.....ஞானத்தின் உச்சத்தில் இருந்து கூறிய ஒரு சொற்றொடராகத்தான் என்னால் பார்க்க முடிகிறது. மனித அறிவு மட்டுப்பட்டது அதனால் உணரத்தான் முடியுமே அன்றி .....புரிந்து கொள்ள முடியாது என்று அவர் சொல்லியிருப்பது சத்திய வார்த்தை.

மனிதன் அதைப் புரிந்து கொள்ளும் பட்சத்தில் கடவுளுக்கும், இயற்கைக்கும் ஒரு தியரி வைத்து...இது கடவுள் தியரி, இது இயற்கை தியரி ..என்று ஒரு எல்லைக்குள் கொண்டு வந்து விடுவோம்....!

ஆம் வேலு....உண்மைதான்....உங்களின் வரிகள் மனம் தாண்டி வார்த்தைகள் தாண்டி ஆன்மாவின் மொழியாய் உணருகிறேன்...விளக்க முடியாத...பிரமாண்டம் சார்ந்த எல்லாம்....கடவுள் என்று நீங்களும் நானும் கற்பிதம் கொள்ளும் அதே நேரத்தில்.....சமுதாயம் கடவுள் என்று வேறு எதையோ கற்பித்து வைத்திருப்பதால் தானோ என்னவோ.... நண்பர் வீராவும், கும்மியும் மற்ற சகோதர்களும் கடவுள் மறுப்புக் கொள்கைக்கு வந்து விட்டார்களோ.....! இந்த உலகம் கற்பித்து இருக்கும் கடவுளை நாங்களும் மறுக்கிறோம்......ஆனால் நம்மால் மட்டுப்படுத்தி அறிய முடியா ஒரு விசயத்தை பார்த்து விக்கித்துப் போயிருக்கிறோம்......அந்த சக்தி....கும்மி சொன்ன எல்லவற்றையும் தன்னுளடக்கிய அந்த வெற்றிடம்....அதற்கு வேறு புது பெயர் சூட்டிக் கொள்வோம் ஏனென்றால் கடவுள் என்ற வார்த்தை..எதை எதையோ சுட்டிக்காட்டுவதால் நீங்கள் குழம்பி திசை திரும்பி விடுவீர்கள்.

வேலு சொன்னதைப் போல...

" இருப்பதை அப்படியே ஏற்றுக்கொள்ளுவோம்.........! வளமான வாழ்க்கை ஓட்டத்தின் அங்கமாவோம்....! "

மறுபடியும் சொல்றேங்க.....தேடலே வாழ்க்கையாயிடுச்சு.....வாழ்க்கையே தேடலாயிடுச்சு....!

தேவா. S