Pages

Tuesday, December 31, 2013

தொலைந்து போ.....2013!


இது ஒன்றுமில்லை.
இது சந்தோசம். 
இது துக்கம்.
இது வலி.
இது சுகம்.
பேச நிறைய இருக்கிறது;
ஒன்றுமே இல்லை.
கருணையானது;
கொடூரமானது.
நினைவில் நிற்கிறது.
மறந்தும்  போகிறது.
இது பொய்.
இது நிஜம்.
இது நம்பிக்கை.
இது துரோகம்.

பேச என்ன இருக்கிறது இது பற்றி? மெளனமாயிருப்பதிலும் அர்த்தமில்லை. புத்தி பேதலித்த நிலையிது. புத்தன் சுவைத்துப் பார்த்த கனி இது. நிரம்பி வெறுமையான பாத்திரம் இது.  இது நிறைய கொடுக்கும். இது நிறைய எடுக்கும். இது எல்லாமே. ஆனால் ஒன்றுமே இல்லை.

ஓ....கொடூரமான காலமே....
ஓ.... கருணை மிகு காலமே....
ஓ...அழகே....
ஓ.....கோரமே....
மிருகமே...
தெய்வமே....
ஓ..... காலமே.....................போ......போ...................போ....!

காலமே..... வா..... வா......!

நீ வேண்டாம்...நீ வேண்டும். சிரிக்கிறேன். அழுகிறேன்....பின் பகிர ஏதுமின்றி வெறிக்கிறேன்....!

திரும்பிப் பார்க்க விரும்பவிலை.....கெட் லாஸ்ட்.... அ|ண்ட் கெட் அவுட்.... 2013....!!!!!!!!!!! 


தட்ஸ் இட்....!!!!!


#... அப்பா...ஐ லவ் யூ... ஐ லவ் யூ...... ஐ லவ் யூ...#
தேவா சுப்பையா....
Monday, December 30, 2013

பந்தயக் குதிரை...!


அது நடந்து கொண்டிருக்கிறது இப்போது. தொகுத்தெழுதிய உணர்வுகளை ஒரு புத்தக வடிவில் காணும் ஒரு பெருங்காதலில் வாரியர் என்னும் வலைப்பூவில் எழுதிய கட்டுரைகளை வகை பிரித்துக் கொண்டிருக்கிறோம். எப்போதுமே தனிமையில் என்னை வாழ்க்கை விட்டதில்லை. இப்போதும் அப்படித்தான் நண்பர்களின் உதவியோடு கட்டுரைகள் தொகுப்பு அங்குலம் அங்குலமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. 2014ஆம் வருடத்தின் மத்தியில் இந்த உழைப்பு புத்தகமாய் மாறலாம்.

வலைப்பூவில் எழுத ஆரம்பித்த 2010 ஆரம்ப நாட்களில் பின்னாளில் புத்தகமெல்லாம் போடுவோம் என்ற எண்ணமோ எதிர்பார்ப்போ எனக்கு இருந்ததில்லை. நகர்தலும் நகர்தலின் பொருட்டு நிகழும் சூழலுமே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது.  தொடர்ச்சியாக என்னை வலைப்பூவிலும், பேஸ்புக்கிலும் வாசித்து வரும் நண்பர்கள் எப்போதும் கொடுக்கும் உத்வேகமும், அன்பும் எதிர்பார்ப்புமே என்னை மீண்டும்மீண்டும் எழுதத் தூண்டுகிறது.

இலக்கிய வட்டத்திலிருக்கும் யாருடனும் எனக்கு அதிக தொடர்புகள் இல்லை. என்னை முன்னிலைப்படுத்தி ஒரு வியாபராப் பொருளாக்கிக் காட்டிக் கொள்ளும் ஒரு வெறித்தனமான மார்க்கெட்டிங் உத்திகள் என்னிடம் அறவே இல்லை. என்னை மேலேற்றிக் கொள்ள பிரபலமான யாரோ ஒருவரின் அடிவருடிக் கொடுத்து புகழ்பாடும் முகஸ்துதி மனிதனும் நான் இல்லை.

எது கிடைக்க வேண்டுமோ அது மட்டுமே எனக்கு சரியாய் கிடைத்திருக்கிறது. நான் பெற்றதிலும் இழந்ததிலும் ஒரு நியாயம் எப்போதுமே இருந்திருக்கிறது. அதிர்ஷ்டம் என்ற வார்த்தை எனக்கு வெகுதூரமானது. சரியாய் எது கிடைக்க வேண்டுமோ அதையன்றி ஒரு குண்டுமணியையும் எனக்கு இலவசமாய் வாழ்க்கை கொடுத்தது இல்லை.  சிறு வெற்றியை ஈட்ட வேண்டுமென்றாலும் கடுமையாய் நான் உழைக்க வேண்டும். எனது சறுக்கல்களும் அதிபாதாளத்தில் விழுந்து வாங்கிய அடிகளும் காயங்களுமே எனக்கு உரம். நிராகரிப்புகளும் அநீதிகளும் என்னை சமநிலையாக்கி இருக்கின்றன. 

10 மணி நேரம் உழைத்தால் 10 மணி நேரத்துக்கான ஊதியமும் 15 மணி நேரத்துக்கான செலவும், 20 மணி நேரத்துக்கான தேவையும் என்னைச் சுற்றி சுற்றி எப்போதும் வந்து கொண்டிருக்கும். நண்பர்கள் எப்போதும் எனக்கு பக்க பலமாய் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள்.  சோர்வான நேரத்தில் தோள் சாய்த்துக் கொள்ளும் ஆத்மார்த்த நண்பர்களை எனக்கு இறைவன் கொடுத்திருக்கிறான்.  பொருளாகவும் அருளாகவும் அவர்கள் எனக்கு எப்போதும் இருக்கிறார்கள். எனது வலிகளைப் பார்த்துக் கொண்டு வெகுண்டெழும் நண்பர்களும், எனக்கு அவ்வப்போது நிகழும் சில அநீதிகளைக் கண்டு தனக்கே நிகழ்ந்ததாகக் கருதி சீற்றம் கொள்ளும் அழுத்தமான நண்பர் கூட்டமும் எனக்கு உண்டு.

ஆமாம்...என் வாழ்க்கை நட்பால் விளைந்தது. 

சுயசொறிதலை நிறுத்தி வெகு நாளாகி விட்டது. இப்போது மீண்டும் நான் சுயத்தை கூர்தீட்டிக் கொள்கிறோனோ என்ற ஐயம் எனக்கு ஏற்படுகிறது. இது ஒரு மாதிரியான சுகம். சொறிய சொறிய சுகமாயிருக்கும். தன்னை உயர்த்திக் கொள்ளத்தான் எல்லா ஜீவன்களும் இந்த பூமியில் முனைந்து கொண்டிருக்கின்றன. நான் மேலே உள்ள மாதிரி எல்லாம் சொல்லி என்னை உங்கள் முன் மிகச் சிறந்தவனாக காட்டிக் கொள்ள முனைகிறேன். பொதுவெளி பார்க்க முடிந்த விசயங்களை கொஞ்சம் வசதியாக அலங்கரித்து.... சொல்லும் போது மனம் எப்போதும் சந்தோசப்பட்டுக் கொண்டு குதுகலிக்கிறது. யாரும் செய்யாததை தான் செய்ததைப் போல தனக்குத் தானே சொல்லிக் கொண்டு மார் தட்டிக் கொள்கிறது.

பெறுவது அல்லது இழப்பது இந்த இரண்டுதான் வாழ்க்கை. இந்த இரண்டின் பொருட்டு....சந்தோசமோ துக்கமோ நிகழ்ந்து விடுகிறது. இதற்கு போய் ஏன் அலட்டுவானேன். கோடணு கோடி பேர் வந்தனர். இந்தக் குளத்தில் கல்லெறிந்தனர். நானும் என்னால் முடிந்த சிறு கல்லை எடுத்து எறிந்து விட்டு அடங்கப் போகிறேன். பாலகுமாரன் ஐயா சொல்வது போல வாழ்க்கையில் அடுத்த அடுத்த கட்டத்திற்கு நாம் நகர்ந்து லெளகீக உயரத்தை எட்ட வேண்டுமெனில் நம்மைச் சுற்றி நாம் நன்றாக இருக்கவேண்டும் என்று எண்ணும் நான்கு பேர் இருந்தால் போதும். என்னைச் சுற்றி நான்கு பேர்கள் இருக்கிறார்கள் என்பது நிறைவு. அந்த நிறைவு ஒரு சுயநலமாய் ஆகிவிடாமல் வேறு யாரோ ஒருவருக்குத் தேவையான நான்கு பேரில் ஒருவனாயும் இருக்கவும் முயல்கிறேன்.

எல்லாவற்றுக்கும் கருத்து சொல்லவேண்டும்…எல்லா விசயத்திலும் மூக்கை நுழைத்து என் மேதாவித்தனத்தைக் காட்டிக் கொள்ளவும் எனக்கு ஆசைகள் கிடையாது. சிறப்பானவை என்பது இந்த பூமி முழுதும் விரிந்து பரந்து கிடக்கிறது. எனக்குத் தெரிந்ததை உங்களுக்குத் தெரியாதென்று எண்ணி நான் பேசிக் கொண்டிருக்கிறேன் அவ்வளவே…..

வாழ்க்கை சிலமுறை முத்தங்கள் கொடுத்து அன்பைப் பொழிந்து இறுக்கமாய் என்னை அணைத்துக் கொள்கிறது. நான் உணர்ச்சிப் பிராவகமெடுத்து அந்த உணர்வினை எழுத்தாக்குகிறேன்….

பலமுறை அதே வாழ்க்கை முகத்திலறைந்து இரணப்படுத்தி கடுமையான வலியையும் வேதனையையும் கொடுத்திருக்கிறது….அந்த வலியை, வலி கொடுத்த உணர்வினையும் எழுத்தாக்குகிறேன்…
.
ஏதோ ஒன்று நிகழ….நிகழ…சாட்டையடி வாங்கி ஒடும்குதிரையாய்….எழுதிக் கொண்டிருக்கிறேன். 

எதுவுமே நிகழாத போது எழுத என்னிடமும் ஒன்றுமில்லை என்று ஒரமாய் ஒடுங்கி நின்று கொள்கிறேன்.

பல மனிதர்கள், திரைப்படங்கள், புத்தகங்கள், கவிதைகள், பாடல்கள், இடங்கள், என்னுடைய அனுபவங்கள்….இவை யாவும்…சாட்டைகள்….

நான் சாட்டையடி வாங்கும் குதிரை….! 

பந்தயத்தில் வெல்வதைப் பற்றி எல்லாம் எந்த எண்ணமும் இல்லை...ஓடும் வரை வெறி கொண்டு ஓடவேண்டும்...அதற்கு...ஏக இறை என்னை ஆசிர்வதிக்க வேண்டும்.... அவ்வளவுதான்.


....புத்தகம்.....


ஆமாம்…இது பலரால் நிகழப் போகிறது…! தேவா சுப்பையா...
Friday, December 27, 2013

காதல் மொழி...!


உயிர் திறக்கும் இசை ஒன்றை கேட்டுத் தொலைத்து விட்டு தேன் குடித்த வண்டாய் கிறங்கிக் கிடக்கிறேன். ப்ரியமான காதலியாய் உள்ளுக்குள் உட்கார்ந்து கொண்டு இம்சிக்கும் இந்த பாடலின் வசீகரம் என்னவென்று தெரியாமல் அது சொல்ல முயலும் அவஸ்தைக்குள் சிற்றெறும்பாய் ஊர்ந்து செல்கையில், அடாவடியான ஒரு காதலின் கன பரிமாணங்கள் புலப்படுகின்றன. காதலை முதலில் பார்வையால் அவள் சொல்லிவிட அதற்கு மேல் அதை முன்னெடுத்துச் சென்று அவளிடம் வார்த்தையாக்க வேண்டிய பெரும் அவஸ்தை காலம் காலமாக ஆண்களுக்கே உரித்தானது.

மிக மெலிதாய் காதலைச் சொல்லும் ரகம் இல்லை இந்தப் பாடல். நளினமாய் காதலைச் சொல்லத் தெரியாத ஒரு முரட்டு கிராமத்து இளைஞனின் எண்ண வெளிப்பாடு இந்தப் பாடல் போன்றுதானிருக்கும். அது அவஸ்தைதான் அது இம்சைதான், அது வலிதான் ஆனாலும் அதில் ஆனந்தித்துக் கிடக்க முடிகிறது. உள்ளுக்குள் ஏதேதோ உணர்வுகளைக் கிளறிவிட்டு தொட்டுப் பிடித்து விடும் வண்ணத்துப் பூச்சியாய் நகர்ந்து கொண்டே இருக்கும் காதலைத் துரத்திக் கொண்டிருக்கும் ஒரு விளையாட்டாய் இது இருக்கிறது.

காதல் என்பது புரிந்து கொள்ளுதல், காதல் என்பது அறிவை பகிர்ந்து கொள்ளுதல், காதல் என்பது உலக அறிவு, காதல் என்பது இலக்கியம் என்பதெல்லாம் நவீனம் சொல்லிக் கொடுத்திருக்கும் காதலுக்கான அலங்காரங்கள். காதல் என்பது காமத்தினை திருமணமென்னும் பந்தம் மூலம் கடந்து செல்லும் ஒரு உணர்வு என்றுதான் தலைமுறையாய் புரிந்து வைத்துக் கொள்ளப்பட்டிருந்திருக்கிறது. காதல் என்பது காமம் அல்ல...காதல் என்பது இணைந்து வாழ்தல் அல்ல ஆனால் இவற்றை எல்லாம் கடத்தல். உலக அறிவுகள் இல்லாத வெகுளித்தனமான கிராமத்துக் காதல் வெகு எளிதாய் இந்த உணர்வுகளை முன்னெடுத்துச் செல்கிறது. காதலிப்போம் காதலித்து உன் கழுத்தில் தாலியைக் கட்டி நான் மனைவியாக்கிக் கொள்கிறேன். இங்கே விதிக்கப்பட்டதை இயற்கையின் நகர்வோடு கடப்போம்....

காலங்கள் கடந்து செல்கையில் காமச்சுமையை இறக்கி வைப்போம், நான் நீ என்று ஒருவரை ஒருவர் ஆளுமை செய்து கொள்ளும் அதிகாரநிலைகளை இறக்கி வைப்போம்...ஆனால் காதலென்னும் உள்ளுக்குள் சுரந்த அந்த ப்ரியத்தின் அதிர்வுகளை காலம் முழுதும் சுமந்து செல்வோம். காதல் உன் வலிக்கு என்னை அழ வைக்கும், என் வலிக்கு உன்னை அழ வைக்கும்...

அது எப்போதும் உடலில் வாழ்வது அல்ல உணர்வில் வாழ்வது என்று நிறைவாய் முடியும் இல்லறத்தில் முரண்களின்றி வாழ்ந்து முடித்தது நம் சமூகம்.

அறிவு, புரட்சி, ஞானம் என்பதெல்லாம் எதற்கு உதவுமென்று நாம் நம்பி அதைப் பொக்கிஷமாய் நினைத்துப் பேசிக் கொண்டிருக்கிறோமோ அதை எல்லாம் காலில் போட்டு மிதித்து அறியாமையான முழுக்காதல் சொல்லிக் கொடுத்து விடுகிறது. பகுத்தறிதல் உயர்வு என்று கூறும் இந்த சமூகத்தின் பேரறிவுப்பக்கங்களை கிழித்துப் போட்டுவிட்டால்....இயல்பாய் கோபப்பட்டு,இயல்பாய் காதல்வயப்பட்டு, காமவயப்பட்டு, எங்கே பிணைத்துக் கொள்கிறோமோ அந்த பிணைப்போடு நாம் தரைவிழுந்த ஒரு மழைத் துளியாய் மண்ணில் கரைந்து போக முடிகிறது.

பகுத்தறிவு இல்லாத நிலை மிருகநிலையாயிற்றே..? அது எப்படி சிறப்பானது என்று கேள்வி கேட்பவர்கள், எது சிறந்தது..? எது உன்னதமானது என்பதற்கு என்ன வரையறையை இங்கே நாம் விதித்து வைத்திருக்கிறோமோ அது எல்லாமே மனித மனதின் வசதிகள்தான் என்பதை உணரவேண்டும்.

சிக்கலில்லாத நிலையே உயர்வு என்று நீங்கள் சொல்வீர்களேயானால் மிருகநிலையே உயர்ந்தது என்று நான் சொல்வேன்...! அது கடவுள் நிலைக்கு மிக சமீபம் மனித நிலைக்கு வெகுதூரம். இந்தப்பாடலைக் கூட அது வெளியான படத்தின் கதையை  மையமாக வைத்தோ அல்லது பாடல் காட்சியின் பின்புலம் சொல்லும் செய்தியை வைத்தோ நான் இதை எழுதவில்லை. இதன் பாடல் வடிவத்தை ஒலியாக கேட்ட பொழுதில் எந்த திசையில் என் மனப்புரவி ஓடியிருக்கிறதோ அந்த திசை நோக்கியே நகர்ந்து அந்த உணர்வுகளையே பதிந்திருக்கிறேன். 

இளையராஜா சாருக்கும், ரஃகுமான் சாருக்கும் இடையில் முன்பெல்லாம் தேவா சார் இருந்தார். நிறைய அழகான பாடல்களுக்கு அவர் இசை அமைத்திருந்தாலும் அவரது இசை நிறைய இளையராஜா ரஃகுமான் இசையின் கலப்பாய்த்தானிருக்கும். தேவா சாரின் தனித்துவம் அவரது கானா பாடல்கள்தான்.. இன்றைக்கும் அவர் இசையமைத்த பல கானா பாடல்கள் கேட்ட மாத்திரத்திலேயே எழுந்து ஆட்டம் போட வைக்கும். ராஜா சாருக்கும் ரஃகுமானுக்கும் மாற்றாய் இருந்த தேவா சார் நிறைய புதியவர்களின் வருகையால் காற்றில் கரைந்த கற்பூரமாய் மறைந்தே போய்விட்டார்....

வெகு நாட்களுக்குப் பிறக்கு டி. இமான் இப்போது ஒரு மாற்று இசையை அதுவும் தமிழ் மண்ணோடு ஒட்டுதலான ஒரு இசையமைப்பாளராய் பரிணமித்திருக்கிறார். கும்கி படத்தில் அவர் மெட்டமைத்த பாடல்கள் பட்டி தொட்டி எல்லாம் பரவி, கிராமாத்து குடிசைகளுக்குள் இருந்து மிகப்பெரிய ஸ்பீக்கர் செட்களில் அலறின. உலக இசை ரசிகர்ளை திருப்தி படுத்த வேண்டி ரஃகுமான் வேறு தளத்திற்கு பயணித்து சென்று விட்டார், பல நாட்டு இசைகளையும் இணைத்து ஒரு ப்யூசனாக  உயர் மட்ட ரசனைக்காரர்களை திருப்திப்படுத்த வேண்டி இசைமைக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டுப் போய் விட்டது. இதனாலேயே தமிழ் மண்ணோடு பந்தப்படாத இசையாய் அது இப்போது மாறிப் போய் விட்டது. 

ஒரு இசை நன்றாக இருக்கிறது என்பது வேறு அது எனக்கு, என் மண்ணின் மைந்தர்களுக்குப் பிடிப்பது என்பது வேறு. மேல்நாட்டு இசையை நாங்கள் எப்போதாவது கேட்டு ரசிப்போம். அதாவது மாதத்தில் ஒரு நாளோ இரண்டு நாளோ பிஸ்ஸாவோ, கேஎஃப்சியோ சாப்பிட்டு உலகமயமாக்களின் மந்தை ஆடாய் ஆவது போல அது.... ஆனால் தினம் அது எங்களுக்கு ஒத்து வராது. தட்டு நிறைய சோறு போட்டு எண்ணெய் மிதக்கும் கோழிக் குழம்பை ஊற்றி அழுந்தப் பிசைந்து ஒரு கோழிக் காலை எடுத்து கடித்து, ஊறுகாயை தொட்டுக் கொண்டு வாய் நிறைய சாப்பிட்டு விட்டு, மோரை ஊற்றி சோறு சாப்பிட்டு விட்டு தட்டைத் தூக்கி மோர்த் தண்ணீரைக் குடித்து விட்டு, சொம்புத் தண்ணியை குடித்து, வெளியே வந்து லுங்கியை தூக்கிக் கட்டிக் கொண்டு ஏப்பம் விடும் சுகத்தை.... ஒரு நாளும் மேல் நாட்டு உணவுகளும், பழக்க வழக்கங்களும் எங்களுக்கு கொடுத்து விட முடியாது.

இசையும் அப்படித்தான். நாங்கள் எல்லாம் வாய்க்கால் வரப்பு வெட்டும் போது சந்தோசமாய் பாடியவர்கள், வரப்பில் தூங்கும் குழந்தைக்கு தாலாட்டுப் பாடிக் கொண்டே வயலில் நாற்று நட்டவர்கள், கதிர் அறுத்தாலும் பாட்டு, வயசுக்கு வந்தாலும் பாட்டு, கல்யாணத்துக்குப் பாட்டு, சாவுக்கு பாட்டு என்று எங்களுக்கென்று ஒரு இசை இருக்கிறது. அந்த இசையை இளையராஜாவின் வாத்தியம் எல்லா படங்களிலும் பெரும்பான்மையாக இசைத்திருக்கிறது. அந்த ராகதேவனிடம் பால் குடித்து வளர்ந்த குழந்தைகள் நாங்கள்....

உலகத்தரமான டெக்னிகாலிட்டிகள் நிறைந்த இசையைப் பற்றிய அறிவெல்லாம் எங்களுக்குத் தேவையில்லை. எது எங்களை குஷிப்படுத்துகிறதோ எது நேர்மையாய் உறுத்தல் இல்லாத சந்தோசத்தைக் கொடுக்கிறதோ அது போதும்....என்று நினைப்பவர்கள் நாங்கள்.

இப்போது டி. இமான் இடையிடையே தமிழர்களுக்கான பாடல்களாய் மெட்டமைத்து எங்களின் தாகத்தை அவ்வப்போது தீர்த்து வைக்கிறார். மேற்கத்திய இசையாய் இருந்தாலும் அதை மண்ணின் மணத்தோடு குழைத்துக் கொடுக்கிறார். இவர் ராஜா சார்,  மற்றும் ரஃகுமானின் மாற்று என்று சொல்வதற்கில்லை என்றாலும்....

தாளத்தோடு, இயல்பாய் இவர் அமைக்கும் மெட்டுக்கள்....ஏதோ ஒருவகையில் உள்ளத்தை வருடத்தான் செய்கின்றன....!


யுகபாரதியின் வரிகளும் இமானின் இசையும்....மீண்டும் மீண்டும் இந்தப்பாடலைக் கேட்கத் தூண்டப்போவது என்னவோ நிஜம்..!தேவா சுப்பையா...


Photo Courtesy: Ashokarsh Photos - Source: Web

Tuesday, December 24, 2013

எம்.ஜி.ஆர்....!


விடியக்காலை ரேடியோ நியூஸ் கேட்டுட்டு அப்பா குலுங்கிக் குலுங்கி அழுதுட்டு இருந்தத பாத்த நான் திகைச்சுப் போய்  படுக்கையில இருந்து எந்திரிச்சேன். எனக்கு அப்போ 10 வயசு.... அப்பா கிட்ட போய் என்னாச்சுப்பான்னு நானும் அழுதுகிட்டே கேட்டேன்....சகாப்தன் செத்துப் போய்ட்டாருடா.....சாகாப்தன் செத்துப் போயிட்டாருடான்னு கலங்கிக்கிட்டே சொன்னாரு..... அடுப்படியில இருந்த அம்மாவும் ஓடியாந்து விசயத்தைக் கேள்வி பட்டு நெஞ்சுல அடிச்சுக்கிட்டு அழுதது இன்னமும் என் மனசுல பசுமையா இருக்கு....

பக்கத்து வீட்டு பாபு அப்பா, பாபு அம்மா, எதிர்வீட்டு ஜோயல் அப்பா, ஜோயல் அம்மா, டைப்பிஸ்ட் சார் அவுங்க வொய்ஃப், சண்முகம் சார்ன்னு எல்லோரும் தேம்பித் தேம்பி அழுத அந்த டிசம்பர் 24தான் 

எம்.ஜி.ஆர் என்னும் தங்கத்தலைவன் அதிகாலை 3 மணி அளவில் மாரடைப்பால் உறக்கத்திலேயே தன் உடலை விட்டு நகர்ந்த நாள்.

அது ஒரு மிகப்பெரிய துக்க தினம். அப்படி ஒரு தலைவனை பிரிய தமிழகத்தின் எந்த ஒரு மனிதரும் விரும்பி இருக்கவில்லை. அவருடைய கட்சி என்று இல்லை மாற்றுக் கட்சித் தொண்டர்களையும் வசீகரித்து  வைத்திருந்த பிரம்மாண்ட பிம்பம்தான் எம்.ஜி.ஆர். தமிழ்நாட்டின் இரண்டு பெரிய கட்சிளிலும் திமுக கொள்கை பிடிப்பு கொண்ட, கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று கொஞ்சம் ஸ்ட்ரீக்ட் ஆபிசர் போலத்தான் எம்.ஜி.ஆர் இருந்தவரைக்கும் அடிமட்டத்து மக்களின் மனதில் புரியப்பட்டிருந்தது. காரணம் எம்.ஜி.ஆர் மக்களோடு மக்களாக தன்னை இணைத்துக் கொண்டு தன்னை மக்கள் அவ்வளவு எளிதில் மறந்து போகா வண்ணம் ஒரு இளகு தன்மையோடு தன்னுடைய கட்சியை அடையாளப்படுத்திக் கொண்டார்.

குடிசைகளுக்குள் அவர் நுழைவது எல்லாம் ஏதோ ட்ரெண்ட் செட் செய்து தன்னை மக்களின் பிரதிநிதியாக காட்டிக் கொள்வதற்கான அரசியலுக்காய் அல்ல...அவர் நிஜமாகவே ஏழைகளை, உழைப்பாளிகளை, விவசாயிகளை, கூலி வேலை செய்பவர்களை, வயதான தாய்மார்களை நேசித்திருந்தார். அந்த அன்பின் மிகுதியில்தான் அவர் ஓடி ஓடிப் போய் வயதான தாய்மார்களை கட்டியணைத்தார். அவரை ஏதோ ஒரு வசீகர அரசியல் நடத்திச் சென்ற சினிமா நடிகர் என்ற அளவில் நாம் கடந்து சென்று விட முடியாது. எம்.ஜி.ஆரின் ஆளுமை என்ன என்று இன்றைக்கு அவர் மறைந்து 27 ஆண்டுகள் ஆன பின்னரும் குக்கிராமங்களுக்குள் சென்று மக்களிடம் நாம் பேசிப் பார்த்தால் தெரியும்....

அவர் சினிமாவில் நடித்தது அரசியலில் மேலேறி வர உதவியதே அன்றி அவர் அரசியலில் ஸ்திரத்தன்மையோடு நின்று தொடர்ச்சியாய் வெற்றி பெற அவரின் ஆழமான அன்பும், ஏழைகளை குறிவைத்து செயற்படுத்திய இலவச நலத்திட்டங்களுமே காரணம். எங்கள் பகுதியான பட்டுக்கோட்டையில் எனக்கு விபரம் தெரிந்த போது சட்டமன்ற உறுப்பினர் திரு. பி.என் ராமச்சத்திரன், அதே போல புதுக்கோட்டை நாடளுமன்ற உறுப்பினர் திரு. என். சுந்தர்ராஜன்.  இரட்டை இலைச்சின்னத்திலும், கைச்சின்னத்திலும் தேர்தலில் ஓட்டுப் போடுவது அந்த தொகுதி மக்களின் அனிச்சை செயலாகவே ஆகிப்போயிருந்தது போலவே எம்.ஜி.ஆர் இருந்த வரை பெரும்பாலும் தமிழகம் இருந்தது.

இரட்டை இலை என்னும் பசுமையான வசீகரத்தை தனது சின்னமாகக் கொண்டு எம்..ஜி.ஆர் கடைசிவரை வெற்றியின் நாயகனாக இருந்து  தனது ஆளுமை என்னவென்று நிரூபித்துச் சென்றார். எம்.ஜி. ஆர் யார்..? அவரது வல்லமை என்னவென்று அதிமுகவினருக்கும் ஏன் தமிழக மக்களுக்குமே கூட அவ்வளவாகத் தெரியாது ஆனால் ஐயா கலைஞருக்குத் தெரியும்...

எம்.ஜி.ஆர் யார் என்று...?

ஒரு நடிகர் என்ன செய்து கிழித்துவிட முடியும் என்று யோசித்த கலைஞரின் அலட்சியமே அவரை 13 ஆண்டுகள் எம்.ஜி.ஆர் என்னும் தலைவன் உயிரோடு இருக்கும் அவரை முதலமைச்சர் பதவியை விட்டு தூர விலக்கி வைத்திருந்தது. தனியாக எம்.ஜி.ஆர் திமுகவை விட்டு வெளியேறி வந்து கட்சி ஆரம்பித்த போது அவரின் ஆக்ரோஷமான அரசியலை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது திமுக என்னும் பெருங்கப்பல். எம்.ஜி.ஆர் மிகச்சாதுர்யமாய் காங்கிரஸின் ஓட்டு வங்கியையும் தனது ஓட்டுக்களாக மாற்றி மாறாத வெற்றிக்  கூட்டணியாக தொடர்ச்சியாக காங்கிரசுடன் இணைந்து  வெற்றிக் கனியை சுவைத்துக் கொண்டிருந்த போது அரசியல் சாணக்கியரான கலைஞரால் அந்த கூட்டணியை உடைத்து மாற்று அரசியல் செய்ய முடியவே இல்லை. 

இலங்கையில் தமிழர்களை சிங்கள இராணுவம் கொன்றழித்த போது எம்.ஜி.ஆர் பெரும் தூணாய் நின்று விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு உதவிகள் செய்தார். எம்.ஜி.ஆர் திராவிடன் என்ற உணர்வு கொண்டவர் மட்டுமில்லாத தமிழகத்தின் மீது தமிழ் மக்களின் மீது ஆழமான அன்பு கொண்டவர். நீ சண்டை பிடி தம்பி நான் அண்ணன் இருக்கிறேன் என்று பிரபாகரனிடம் எம்.ஜி.ஆர் சொல்லி பணத்தையும் கொடுத்ததாகச் சொல்வார்கள். ஈழப்பிரச்சினையில் தன்னுடன் கூட்டணி வைத்திருந்த காங்கிரசுக்கும் சூழலை எடுத்துச் சொல்லி எல்.டி.டி.யினருக்கு இந்தியாவிலேயே இந்திய ராணுவம் பயிற்சி கொடுக்கும் ராச தந்திர ஏற்பாடுகள் எல்லாம் புரட்சித் தலைவரின் உதவியின்றி நடந்திருக்க முடியமா...? என்று யோசித்துப் பாருங்கள்.

அரசியலில் கொடிகட்டிப் பறந்த எம்.ஜி.ஆரின் சினிமா வெற்றி என்னவென்று நான் இங்கே எழுதி ஒன்றும் உங்களுக்குத்  தெரியவேண்டியது இல்லை. இன்றைக்கு அவரின் சினிமாப் பாடல்களையும், திரையில் அவர் ஏழைப்பாங்களனாக தோன்றி அவர்களின் உரிமைக்குப் போரடுவதையும் பார்க்கும் மக்கள் அவர் திட்டமிட்டு முதல்வர் பதவிக்காக அப்படி நடித்தார் என்று சொல்லலாம்....ஆனால் இப்படியான ஒரு பார்வையைக் கடந்து....

அந்தக் காலத்தில் மக்களை விழிப்புணர்வு செய்ய, திராவிடக் இயக்கக் கொள்கைகளை ஏழை எளியவர்களிடம் பறை சாற்ற, சாதிக் கொடுமையை ஒழிக்க, எம்.ஜி.ஆர் என்னும் மனிதர் திரையில் செய்த புரட்சி என்றுதான் இதைச் சொல்ல முடியும்....! ஊடகங்கள் அதிகமில்லாத அந்தக் காலத்தில் அது மிகப்பெரிய தேவையாய்தான் இருந்தது. சினிமாதான் தமிழக மக்களின் ஒரே வலிமையான எளிதாக செய்தி சொல்ல முடிந்த ஊடக்ம்.

” கடவுளென்னும்  முதலாளி... கண்டெடுத்த தொழிலாளி”  என்ற கவிஞரின் வரிகளைத் திரையில் வந்து எம்.ஜி.ஆர்... விவசாயி.........!!!!!.விவசாயி....! என்று பாடி நடித்த  போது திரை அரங்கம் அதிர்ந்தது....! சாமனிய மக்கள் நம்மை போல ஒருவன் வந்து விட்டான் என்று கை தட்டி ஆர்ப்பரித்தனர். காதலோ, வீரமோ, கொள்கையோ எம்.ஜி.ஆரின் பாணி என்பது இலைமறைக் காயாய் பேசுவதோ, நடிப்பதோ, பாடுவதோ அல்ல....

” நான் பார்த்ததிலே..அவள் ஒருத்தியைத்தான் நல்ல அழகி என்பேன்....நல்ல அழகி என்பேன் “ என்று ஆரம்பவரிகளிலேயே பட்டவர்த்தனமாய் காதலைச் சொல்லும் அழுத்தமான வரிகளைத்தான் அவர் கவிஞர்களிடம் எழுதிக் கேட்டிருந்தார். ” நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான்....” நான் என்று எந்த நேரத்தில் அந்தக் கவிஞனின் பேனா வார்த்தைகளை எழுதியதோ தெரியவில்லை.....

தன் வாழ்நாள் முழுதும் எம்.ஜி.ஆர் நினைத்ததை முடிப்பவனாய்த்தான் வாழ்ந்து மறைந்திருக்கிறார்.

எம்.ஜி.ஆர் மறைந்த நாள் இன்று........!!!!

இன்னும் எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் தமிழ்நாட்டில் அரசியல் என்ற ஒன்று நடத்த வேண்டுமெனில் அறிஞர் அண்ணாவின் பெயரை புறக்கணித்து விட்டு எப்படி அரசியல் செய்ய முடியாதோ....அதே போல....

எம்.ஜி.ஆர் என்னும் மந்திரச் சொல்லை சொல்லாமல் இங்கே அரசியல் செய்யவும் முடியாது என்பதே உண்மை....!

 

ஆமாம்.... எம்.ஜி.ஆர். காலத்தை வென்றவர் தான்...!தேவா சுப்பையா...

Saturday, December 21, 2013

பிரிதல் இனிது....!


பின்னொரு நாளில்
அவள் பிரிந்து செல்வாள்
என்று கூறியது போலவே
இன்று...பிரிவொன்றில்...
நின்று கொண்டிருக்கிறேன் நான்....!
இனிதலென்று பெறுதலைச்
சொல்லிக் கொடுத்திருந்த உலகிலிருந்து
விலகி நின்று தனிமையை
ஊன்றிக் கொண்டு மெல்ல நகர முற்படுகிறேன்
ஒரு மழைத்துளி போல மீண்டுமொருத்தி
என் மீது வந்து விழுந்து
புரிதலாய் சேர்ந்தோம் என்று
சொல்லவும் கூடும்...
அவளிடமும் சொல்வேன்...
பின்னொரு நாளில் நாம்
பிரியக்கூடுமென்று...!


தேவா சுப்பையா...

Photo Courtesy: Ashokarsh Photos - Source: Web


Friday, December 20, 2013

தளபதி...!


கர்ணன், குந்திதேவி, பஞ்ச பாண்டவர்கள், கெளரவர்கள் என்று கதைக்கான கரு என்னவோ மகாபாரதத்தில் இருந்து எடுத்துக் கொள்ளப்பட்டதுதான். அங்கே சூரியனை வணங்கியதால் சூட்சுமமாய் கருத்துத் தரித்துக் கொண்ட புராண குந்திதேவியை இந்த நவீன காலத்தில் கொண்டு வந்து காட்ட முடியாது அல்லவா? அதனால் சிறுவயதில்  விபத்தைப் போல ஏற்பட்ட ஒரு கர்ப்பம், அந்த குழந்தை கூட்ஸ் வண்டியில் ஏற்றப்பட்டு ஆற்றில் மிதந்து வந்து சலவை செய்யும் ஒரு பாட்டியின் கையில் கிடைத்து விடுகிறது.

மிக பிரம்மாண்டமான கதைக்களம். சூப்பர் ஸ்டார், மெகா ஸ்டார், மாஸ்ட்ரோ, மணிரத்னம், சந்தோஷ்சிவன், தோட்டா தரணி என்று அனல் பறக்கும் கூட்டணி வேறு. கிட்டத் தட்ட தமிழ் சினிமாவின் பொற்காலமாய் அது இருந்தது. 1990களின் வாக்கில் என்னைப் போன்ற ரஜினி ரசிகர்களும் கமல் ரசிகர்களும் தெருவுக்குத் தெரு நின்று கொண்டும், பள்ளிக் கூடங்களின் வகுப்பு இடைவேளைகளினூடேயும், ஆற்றில் குளிக்கும் போதும், கிரிக்கெட் விளையாடி விட்டுத் திரும்பி வரும் போதும் ஆக்ரோசமாய் மோதிக் கொள்வோம். கமல் ரசிகர்கள் பிரதானமாய் பேச போதும் போதுமெனும் அளவிற்கு கமலிடம் நடிப்பும், நிறைய விருதுகளும்ம் ரஜினி ரசிகர்கள் பேச ரஜினியிடம் நிறைய வெள்ளி விழாப் படங்களும், கூட்டமும், வசூலும், ஸ்டைலும்,அதிரடியும் இருந்தன. தொண்டைத் தண்ணி வற்றிப் போகுமளவிற்கு பேசிச் சூடேறிப் போய்க் கிடந்த காலங்கள் அவை.

1991 தீபாவளி என்று நினைக்கிறேன். அந்த தீபாவளியை மையமாய் வைத்து வளர்ந்து கொண்டிருந்தது தளபதி படம். ஜி.வி பிலிம்ஸ் அந்த நேரத்தில் தளபதியை வியாபாரப் பொருளாக்கி நன்றாக காசு பார்த்துக் கொண்டிருந்தது.  நானெல்லாம் பள்ளி நோட்டுப் புத்தகத்தில் தளபதி.... தளபதி என்று விளம்பரங்களில் இருக்கும் அதே ஸ்கிரிப்ட்டை எழுதி எழுதி கிறுக்கிக் கொண்டிருப்பேன். ஸ்கூல் பேக்கில் ஆரம்பித்து, டி சர்ட் தொடங்கி, காலண்டர் வரை தளபதி என்ற பெயரோடு ரஜினி திரும்பிப் பார்த்துக் கொண்டிருப்பது போல ஒரு புகைப்படமும் இருக்கும். தளபதி பேக் வைத்துக் கொள்வதும், ரஜினியின் புகைப்படத்தோடு கூடிய தளபதி டி சர்ட் போட்டுக் கொள்வதும் இளைஞர்கள், பள்ளிச் சிறுவர்களிடம் வெகு பிரபலம். பாடல் வெளியீடு என்றால் இப்போது போல எல்லாம் இல்லை அப்போது.... இணையம் என்றால் என்னவென்றே தெரியாது, கணிணியோ கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாரிடமும் இருக்காது.

பாடலை கேசட்டாகத்தான் வெளியிடுவார்கள். லஹரி என்று நினைக்கிறேன் தளபதி பாடலை வாங்கி வெளியிட்ட கேசட் நிறுவனம். கேசட்டை வாங்கி அதில் இருக்கும் ஸ்டில்லையே வைத்த கண் வாங்காது பார்த்து லயித்து அதை ஒரு பொக்கிஷமாய் பாவித்து வீட்டுக்கு கொண்டு  வந்து நேசனல் பானாசோனிக் டேப்ரிகார்டரில் கொஞ்சம் கமல் ரசிகர்களுக்கு நடுவே நாங்கள் இரண்டு மூன்று ரஜினி ரசிகர்கள் கேட்ட அந்த நாள் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்தான்...

அதே நேரத்தில் வெளிவந்த குணாவிற்கு இளையராஜா வேறு ரேஞ்சில் மெட்டமைத்து இசையமைத்திருப்பார். குணா பாடல்களும் சூப்பர்தான் என்றாலும் தளபதி வாஸ் ரூலிங் த ஹோல் இன்டஸ்ட்ரீ டக்ட் டைம். ஆயிரக்கணக்கான வயலின்கள் இசைக்க அதிரடியாய் எஸ்.பி.பி... அட ராக்கம்மா கையத்தட்டு என்று ஆரம்பித்து ஜாக்கு சக்கு கஜாங்கு சக்கு ஜாக்கு சக்கு சா.....என்று பாட.....கேட்டிக் கொண்டிருந்த இடம் அதிர்ந்தது. கமல் ரசிகர்கள் தவிடு பொடியானார்கள் எங்களால்.....

தளபதி இல்லையேல் தீபாவளி இல்லை....தீபாவளி இல்லையேல் தளபதி இல்லை என்று வேறு படத்தின் தயாரிப்பாளர் ஜி.வி பேட்டிக் கொடுக்க... நிஜமாகவே ரஜினி கமல் என்ற ஜாம்பவான்கள் மோதிக் கொண்ட ஒரு வெறியேற்றும் உற்சாக காலமாயிருந்தது அது. பட்டுக்கோட்டை முருகையாவில் குணா, அண்ணபூர்ணாவில் தளபதி வெளியானது.

கமர்சியலான மசால வெற்றிப் படங்களை தொடர்ந்து கொடுத்து வந்த ரஜினியின் சினிமா வாழ்க்கையில் தளபதி ஒரு மைல்கள் ஆனது. ஆறிலிருந்து அறுபது வரை, அபூர்வ ராகங்கள், எங்கேயோ கேட்ட குரல், உன் கண்ணில் நீர் வழிந்தால் என்று நடிப்பில் சக்கைப் போடு போட்ட ரஜினியின் படங்களை எல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு ஒரு மாஸ் கமர்ஷியல் ஹீரோவாக ரஜினி ஒரு  வட்டத்துக்குள் மாட்டிக் கொண்டிருந்த நேரம் அது. தளபதியில் பஞ்ச் டயலாக் கிடையாது. ரஜினியின் வழக்கமான ஸ்டைல் கிடையாது. முழுக்க முழுக்க ரஜினி என்ற சிங்கத்தை லாவகமாய் மசாலா ட்ரண்டிலிருந்து நைஸாய் வெளியில் கொண்டு வந்திருந்தார் இயக்குனர் மணிரத்னம். ஆமாம்.... அது ரஜினியின், இளையராஜாவின், கமலின் காலம் மட்டுமல்ல ....மணிரத்னத்தின் காலமும் கூட...

தமிழ் சினிமா ஏதோ ஒரு திசையில் பயணித்துக் கொண்டிருந்த காலத்தில் காட்சியமைப்பில், வசனங்களில், கதையில், இசையில் என்று எல்லாவிதத்திலும் புதுமையைக் கொண்டு வந்து தமிழ் சினிமாவுக்கென்று காலங்காலமாய் இருந்த மரபுகளை மணிரத்னம் ஒரு பக்கம் நொறுக்கி அள்ளிக் கொண்டிருந்தார் அப்போது. தளபதி வெளியாகி ஒரு வாரத்திற்கு தினசரி தியேட்டருக்குப் போய் படம் பார்த்து வந்த பக்தர்களை எல்லாம் எனக்குத் தெரியும். நான் ஒரு நான்கு தடவை பார்த்திருப்பேன். முதல் தடவை பார்த்த போது ரஜினி எது பேசினாலும் எழுந்து கத்தி, பக்கத்திலிருந்த கமல் ரசிகர்களை பார்த்து ஏளனம் செய்து.....பேப்பர்களை கிழித்து திரையில் கொட்டி, பாடலுக்கு எழுந்து கூட்டமாய் ஆடி.....

அண்ண பூர்ணா தியேட்டர் அப்போது அல்லோலகல்லோலப் பட்டது. தமிழகம் முழுதும் அப்படித்தான் இருந்திருக்கும். ரஜினி டயலாக் பேச வாயைத் திறந்தாலே கைத்தட்டுதான்...சூப்பர் ஸ்டார் என்றால் யார்...? தியேட்டர் ரெஸ்பான்ஸ் அவரது படங்களுக்கு எப்படி இருக்கும்..? எப்படியான படங்கள் முன்பெல்லாம் வந்தன.. .அவருடைய ரசிகர்கள் யார்? என்ன என்ன அட்டகாசம் செய்வார்கள் என்று இப்போது 25 வயதுக்கும் குறைவாய் இருக்கும் இளைஞர்களுக்குத் தெரியாது. அப்படித் தெரியாததாலேயே இளைய தளபதி, தலை என்றெல்லாம் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள்...

தமிழகம் ரஜினி ரசிகர்களைத் தான் கடைசியாக ஆவேசம் கொண்டவர்களாக, ஆத்மார்தமனவர்களாக கொண்டிருந்தது. அதிகபட்ச முட்டாள்தனங்களைச் செய்து கொண்டவர்களும் ரஜினி ரசிகர்கள்தான். ரஜினி ருத்ராட்சம் அணிந்தார் என்று ருத்ரட்சம் அணிவது, ரஜினி ராகவேந்திரரை வணங்கினால் ரஜினி ரசிகனும் ராகவேந்திரரை வணங்குவது, கையில் செப்புக் காப்பு ரஜினியைப் போலவே அணிந்து கொள்வது, ரஜினி போடும் வெள்ளை நிற செருப்பைப் போலவே அணிந்து கொள்வது ஏன் இன்னும் சொல்லப் போனால் நன்றாக தலையில் முடியிருந்த எத்தனையோ பேர் ரஜினிக்கு தலையின் இரண்டு பக்கமும் இருந்த வழுக்கையைப் போல சிரைத்துக் கொண்டு ரஜினி போலவே காட்சியும் தந்திருக்கிறார்கள்...

உச்சபட்ச ரசிப்பில் தன் வசம் இழந்த கூட்டமும் அதுதான்....ஆக்ரோசமாய் தனக்குப் பிடித்த நடிகனை அரசியலுக்கு வரச்சொல்லி இன்னமும் அன்பாய் வம்பு செய்து கொண்டிருக்கும் கூட்டமும் அதுதான்... 

தளபதியைப் பொறுத்தவரை அதை நட்பு பற்றிய படமாகத்தான் எல்லோரும் அறிந்திருப்பார்கள். நண்பனுக்காக என்னவேண்டுமானலும் செய்யும் கர்ணனின் கதாபாத்திரம்தான் ரஜினியின் சூர்யா பாத்திரம். துரியோதனின் பாத்திரம் மமூட்டியுடையது. இறுதியில் ரஜினி இறந்து விடுவது போல மணிரத்னம் காட்சியமைத்து பிறகு அப்படி இருந்தால் தமிழ்நாட்டில் ஒரு தியேட்டர் மிஞ்சாமல் அடித்து நொறுக்கி விடுவார்கள் என்பதால் கடைசியில் மம்முட்டி சாவது போல காட்சி மாற்றியமைக்கப்பட்டது என்றெல்லாம் அப்போதைய நாளேடுகள் செய்தி வெளிட்டன.

நட்பு பற்றிய படம் என்று எல்லோரு மனதில் அது ப்ளாஷ் ஆக காரணமாய் இரண்டு முரட்டு ஹீரோக்கள் அந்த படம் முழுதும் ஆக்கிரமித்து இருந்தார்கள். பற்றாக்குறைக்கு இளையராஜா வேறு....காட்சிக்கு காட்சி திரைப்பின்னணி இசையில் பின்னி எடுத்து இருப்பார். ஆனால் இதை எல்லாம் கடந்து கதையில்  ஒரு காதல் தோல்வி ஒன்று மென்மையாய் சொல்லப்பட்டிருக்கும். ஒரு விதவை மறுமணம் கவிதையாய்க் கோர்க்கப்பட்டிருக்கும். நான் அந்தக் காட்சிகளைப் பார்த்து ரசித்து உருகிப் போயிருக்கிறேன். மீண்டுமொருமுறை இன்று மதியம் தளபதியை ராஜ் டிவியில் பார்த்த போது அதே சோகத்துக்குள் மீண்டும் போய் விழுந்தேன்.


சூழல் காரணமாக ஒரு முரடனுக்குத் மணமுடித்து வைக்க முடியாது என்று அப்பா சொல்லிவிட தன்னை பெற்ற தகப்பனை மறுக்க முடியாத ஷோபனா ரஜினியை விட்டு விலகிப் போகும் இடமும் அந்தத இடத்தில் இளையராஜாவின் சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடலின் பிஜிஎம் மும்....நெஞ்சை பிசைய ஆரம்பித்து விட்டது எனக்கு. ரஜினிக்கு காதலை இழக்க விருப்பமில்லாவிட்டாலும் தனக்கு அவளை மணமுடிக்க தகுதி இல்லையென்ற ஒரு தாழ்வு மனப்பான்மையை கோபமாக்கிக் கொண்டு ஷோபனாவை போ..போ.. என்று துரத்துவார்....

ஏதாவது செய்து தன்னை மணமுடித்துக் கொள்ளமாட்டாரா என்ற எதிர்பார்ப்பில் வரும் ஷோபனாவை பேசக் கூட விடாமல் திட்டி ரஜினி விரட்ட....காதல் தோல்வியை ஷோபனா தன் நடையில் கொண்டு வந்து நடந்து செல்லும் அந்த இடம்......காதலைக் கண்ணெதிரிலேயே இழந்தால் என்ன மாதிரியான வலியை அது கொடுக்கும் என்பதை செவுட்டில் அறைந்து நமக்குச் சொல்லும்..

கலெக்டரரை மணமுடித்த பின்பும்....கூட ரஜினையை பார்க்கும் பொழுதில் ஷோபனாவுக்குள் இருக்கும் காதலும் ரஜினிக்குள் இருக்கும் காதலும் சமகாலச் சூழலை மறந்து விட்டு சூட்சும உணர்வாய் எட்டிப்பார்த்து கண்ணீரோடு கட்டியணைத்துக் கொள்ளும் இடமும் அட்டகாசம்....!

அதே மாதிரி தான் கொன்ற ஒருவனின் மனைவி பிரசவித்திருக்கிறாள் என்றறியாமல் அங்கே அழைத்து வரப்படும் ரஜினியின் கையில் பிறந்த குழந்தையை மம்முட்டி கொடுக்கும் போது குற்ற உணர்ச்சி என்றால் எப்படி இருக்கும் என்ற ஒரு காட்சிப்பாடத்தை ரஜினியின் நடிப்பில் இருந்து நாம் படித்துக் கொள்ளலாம். அப்படி ஒரு லாவகாமான உணர்ச்சியை முகத்தில், உடல் அசைவில் சூப்பர்ஸ்டார் வெளிபடுத்தி இருப்பார். அதானால்தானே அவர் சூப்பர் ஸ்டார்.

எந்த உறுத்தலும் இல்லாமல் ஒரு குழந்தைக்கு தாயாய் இருப்பவளை மணந்து கொண்டு ரஜினி வாழ்க்கையைத் தொடங்குவதும் கவிதை. அந்த சூழலுக்குப் போடப்பட்ட பாட்டு திரையில் வரவில்லை ஆனால் கேசட்டில் இருந்தது. கணவன் இறந்து ஒரு குழந்தையோடு தன் கணவனைக் கொன்றவனையே கைப்பிடித்து வரும் பெண்ணின் மீது படிந்து கிடக்கும் சோகச் சூழல் எப்படி உறுத்தல் இல்லாத ஒரு தென்றல் வீசும் அனுபவமாய் மாறுகிறது என்பதை இளையராஜாவால் மட்டுமே புத்தம் புது பூ  பூத்ததோ என்று இசைத்துக் காட்ட முடியும்.

தளபதி படம் எல்லாமாய் இருந்தது. அதில் எல்லாமும் இருந்தது. ஆமாம் அது சினிமாவின், சினிமா பார்க்கும் ரசிகனின் பொற்காலமாய்த்தான் இருந்தது.

மீண்டுமொரு சூழல் அப்படி இனி கனியலாம்....ஆனால்....கண்டிப்பாய் அந்தச் சூழலில்

ரஜினியும், கமலும், இளையராஜாவும்,  மம்முட்டியும்,  மணிரத்னமும் இருக்க மாட்டார்கள்.....!தேவா சுப்பையா...


Thursday, December 19, 2013

ஊமை என்றால் ஒரு வகை அமைதி...!


பசித்திருக்கையில் தாயின் முலை தேடி பக்கத்திலிருக்கும் துணியை எடுத்துச் சுவைக்கும் குழந்தையைப் போல சுவைத்து விட்டு நான் பசித்தே இருக்கிறேன் எப்போதும். ஏதோ ஒரு துணி கிடைத்து விடுகிறது இல்லையேல் என் விரல் சுவைத்து நானே பசி தீர்த்துக்கொண்டதாய் எண்ணிக் கொள்கிறேன். தீராத பசியை தீர்ந்தது போன்றெண்ணிக் கொண்டு தற்காலிகாய் வயிறு எக்கிப் போய் ஏக்கப் பெருமூச்சுடன் காத்திருக்கையில் ஏதோ ஒரு தருணத்தில் தாக்கம் நிறை அனுபவமாய் என் வாய் நிறைக்கிறது அவ்வப்போது பிரபஞ்சத்தின் பஞ்சு முலை. 

தாயிடம் பாலருந்தாத யாரும் இந்த பூமியில் இல்லை. அது வெறுமனே பசியாற்றிக் கொள்ளுமொரு இடமாய் மட்டுமா நமது அனுபவப் பதிவில் பதிந்து கிடக்கிறது...? அல்ல....அது பசிக்கு தொடர்பில்லாத பெரும் திருப்தியை கொடுத்திருக்கிறது. சலனமில்லாத பாதுகாப்பைக் கொடுத்திருக்கிறது. கதகதப்பான இளம் சூட்டை நமக்குள் பரப்பி உறுதியாய் இரு பிள்ளாய் என்று உறுதி கொடுத்திருக்கிறது. பாலருந்துகையில் தலை தடவும் தாயின் வாஞ்சையை வார்த்தைப் படுத்தவோ அல்லது அதற்கு சமமான ஒரு அன்பொழுகு நிலையை காட்சிப்படுத்தவோ அல்லது கற்பிதம் செய்து கொள்ளவோ இயலவே இயலாது. பரிபூரணம் என்ற வார்த்தையை பிராயத்தில் வாசித்தும், விவாதித்தும், தேடியும் கொண்டிருக்கும் அத்தனை பேரும் அதை அனுபவித்த இடம் அது.

வாழ்க்கை முழுதும் அந்த வாஞ்சை நிமிடங்களை நினைவுகளுக்குள் பதுக்கிக் கொண்டு மீண்டும் மீட்டெடுக்குமொரு ஆசையிலேயே நாம் கல்வி கற்று, பொருள் ஈட்டி, காதல் கொண்டு, காமம் செய்து, அதிகார சுகபோகங்களைத் தேடி ஓடினாலும், பின்னாளில் நம்மால் அப்படி ஒரு அதிர்வு நிறை உணர்வு நிலையை எட்ட முடிவதில்லை அல்லது எட்டினாலும் அதிலேயே நம்மால் லயித்துக் கிடக்கவும் முடிவதில்லை. வாஞ்சையோடு அணைத்துப் பாலருந்தும் நெகிழ் நிகழ்வுகளை பல நேரத்தில் எனக்கு காலம் கொடுத்திருக்கிறது. பொருளோ, பொருளற்றதோ, சலனமோ, சலனமற்ற சூன்யமோ, என்னை நெஞ்சணைத்து தலைவருடி லெளகீக உலகின் பொருளற்ற தன்மை கடந்த ப்ரியத்தை எனக்குள் ஊற்றி இருக்கிறது. உயிரை உயிர் வருடிக் கொடுக்கும் நிகழ்வது.

பல படைப்புகளை வாசித்து கடந்து சென்று கொண்டிருக்கையிலேயே கதை மறந்து, கதைக்களன் மறந்து, அதன் கரு மறந்து, கதை மாந்தர் விட்டு விலகி கையிலிருக்கும் புத்தகத்தையும் நழுவ விட்டு விட்டு நிலைகுத்திப் போன பார்வையுடன் எங்கோ வெறித்து நான் கிடந்த நாட்கள் அனேகம். இந்த வாழ்க்கையில் என்னோடு சினேகமாய் இருக்கும் யாதுமே என்னோடு தொடர்பில் இல்லாத ஒன்றாகவே இதுவரையில் இருந்திருக்கிறது. ஒரு இசையோ, ஒரு கதையோ ஒரு கட்டுரையோ, அல்லது ஒரு திரைப்படமாகவோ அது என்னை திக்குகளற்ற பெருவெளிக்கு என்னை கூட்டிச் சென்றிருக்கிறது.

பாலுமகேந்திரா சாரும் இப்படியாய் அவரின் படைப்புகள் மூலம் என்னை மூர்ச்சை நிலைக்குத் தள்ளி இருக்கிறார். ஒரு தலைசிறந்த படைப்பாளியோடு பேசிச்சிரித்து சினேகமாயிருப்பது அல்ல அவர் மீது கொண்ட ப்ரியம் என்பது. அவரின் படைப்புகளோடு கூடிக் குலாவி அது கொடுக்கும் ப்ரிய முத்தங்களை கிளர்ச்சியாய் வாங்கிக் கொண்டு சிலாகித்துக் கூடிக் கிடப்பது வரைமுறையற்ற பேரானந்த வார்த்தைப்படுத்த முடியாத சுகத்தைக் கொடுக்கவல்லது. நான் பாலுமகேந்திராவின் கதைநேரத்தை அடிக்கடி யூ ட்யூபில் பார்ப்பதுண்டு. அது எப்படியானது என்றால் வெறுமனே ஒரு பார்வையாளன் பொழுது போக்க அமர்ந்து கொண்டு ஏதோ ஒன்றை பார்த்துச் செல்வது போல அல்ல...

சினேகமாய் அந்த மனிதர் சொல்லும் கதைகளுக்குள் பரவிக் கிடக்கும் காமத்தின் உச்சம் நிகர் நிகழ்வுகளை புத்திக்குள் போதையாய் ஊற்றிக் கொண்டு மது குடித்த வண்டாய் கிறங்கிக் கிடப்பதை ஒத்தது. மனதுக்கு பிடித்த பெண்ணொருத்தியின் பின்னால் அவளுக்கு நம் காதலறியா வண்ணம் சுற்றித் திரியும் சுகமொத்த நிலை அது. பதின்மத்தில் காதல் செய்ய எத்தனித்த அத்தனை பேருக்கும் நான் சொல்லவரும் நிலையின் பொருள் விளங்குமென கருதுகிறேன். அது புதிது, அது இனிது அது இதற்கு முன்பு எப்போதும் அனுபவித்திராத ஒன்று.. சுகப் பெருவெளியில் இஞ்ச் இஞ்ச்சாய் முன்னேறிச் செல்வது.....

முதல் பெண்ணின் ஸ்பரிசம் கொள் நிகழ்வது. நெஞ்சோடு இறுக்கி எதிர்ப்பாலினத்தை அணைத்துக் கொண்டு அவளின் அல்லது அவனின் வாசத்தை நுகர்ந்து அனுபவித்து மகிழ்ந்து கிடப்பது. உடலின் அவயங்கள் உரசிக் கொள்ள அத்தனை செல்களும் உச்ச லயத்தில் விழித்துக் கிடக்க மெல்ல மெல்ல முன்னேறி உதட்டோடு உதடு வைத்து பற்றி இழுக்கையில் உயிர் போய் உயிர் வருமே அந்த வேதனையை ஒத்தது. காமம் தீர்ந்து புரண்டு படுத்து உறுப்புகள் தளர உறங்கிப் போவதல்ல அது....

அது எரியும் நெருப்பு. அதிரும் சப்தம். அடர்த்தியான மெளனம், தெளிவான மரணம், மொட்டிலிருந்து பிரிந்து விரியும் மலர். மெலிதான மழைக்குப் பின் வாசம் பரப்பும் மண். தெளிவற்ற துல்லிய தெளிநிலை. பித்த நிலை ஆனால் அதுதான் சுத்த நிலை. வார்த்தைகளற்றுப் போக வைக்கும் அப்படியான படைப்பாளிதான் பாலுமகேந்திரா....அப்படியான படைப்புகள்தான் அவர் படைத்தளித்து  நம் சமூகத்திற்கு சமைத்துக் கொடுத்திருப்பது. வரிகளைப் படித்து விட்டு தத்துவ மமதை கொள் உலகில் வரிகளுக்கு இடையில் சுவாரஸ்யத்தை ஒளித்து வைக்கும் பிரம்மா அவர்....

சப்தங்களில்லாத சினிமாவை, மெளனத்தைச் போதனை செய்யும் இசையை, வெற்று விழிகள் காண முடியாத காட்சிகளை திரைக்குள் கொண்டு வந்து விட்டு சலனமில்லாமால் நடந்து போக பாலுமகேந்திரா போன்றவரகளால் மட்டுமே முடிகிறது. அவர்கள் ஏதோ ஒன்றை சொல்ல விரும்பி அதை தெளிவாய் சொல்லிவிட்ட நிறைவில் பின் மெளனித்து விடுகிறார்கள். ஒரு படைப்பைக் கொடுத்த நிறைவுதான் ஒரு படைப்பாளியாய் அடுத்த படைப்பு நோக்கி நகரவைக்கிறது. வர்த்தகத்திற்காய்  ஒரு போதும் சமரசம் செய்து கொள்ளாத ஆதி உணர்வைக் கொண்டிருக்கும் ஒரு படைப்பாளிக்க்கு கொடுப்பது பற்றிதான் எப்போது கவலை...கொடுப்பது வரைதான் அவன் பித்தனாய் ஆடிக் களிக்கிறான்.பிசிறில்லாமல் தெளிவாய் படைக்க வேண்டும். அந்த படைப்பு புரிந்துணர்வோடு பார்ப்பவனை வாசிப்பவனை சொக்க வைக்க வேண்டும்...அவ்வளவுதான்...! அவன் ஆட்டம் என்பது...

இலக்குகளற்ற பிரபஞ்ச நடனம். சீற்றமாய் ஆடும் நடராஜ தத்துவத்தை ஒத்தது. அவன் ஆடி முடித்தவுடன் அமைதியாகிறான். அமைதி என்றால் வெறும் அமைதி அல்ல... அது பாழுக்கும் பாழ் பெரும்பால் அப்பாழுக்கும் பாழ் அப்பால் உள்ள பேரமைதி. நிறை நிலை. அவன் படைத்து முடித்தவுடன் படைப்பும் தனக்கும் இருக்கும் தொடர்பறுத்துக் கொள்கிறான். பின் படைப்புகள் நம் பார்வைக்கு வருகின்றன. இனி அது அந்த படைப்பை வாசிப்பவனின், பார்ப்பவனின் கேட்பவனின் பொறுப்பு அந்த படைப்பை எப்படி சீராட்டுவது என்பது....

நான் இன்னமும் தலைமுறைகள் படம் பார்க்கவில்லை. இரண்டு இடங்களில் விமர்சனம் படித்ததோடு சரி. பாலுமகேந்திரா தன்னுடைய முதுமையினை சாட்சியாக்கி ஒரு பார்வையாளனாய் சமகாலத்து சமூகத்தைப் பார்த்து தனது உணர்வுகளை பதிய வைத்திருக்கிறார் என்று மட்டும் புரிந்து கொண்டேன். தலைமுறைகள் டீசரையும் அதனுடையை புரோமசனல் வீடியோவையும் பார்த்து மெய்யறிந்த பித்தனாய் விவரிக்க வார்த்தைகளற்று நான் பிரமித்துப் போய் நிற்க காரணம் இளையராஜா என்னும் இன்னுமொரு ராட்சசன்.....

என்னை இசை அது.....!!!!!!!? படம் பார்க்காமலேயே டீசரின் பின்ணனி இசையை மட்டும் கேட்டு நம்மை விம்மி அழ வைக்கிறாரென்றால் அந்த மனிதரின் புத்தியில் சுரந்த அதிரசமான என்றென்றும் தீராத அமுதிசையை என்னவென்று சொல்ல...!!!? அது நரம்புகளை முறுக்கேற்றுகிறது... நினைவுகளை அழிக்கிறது...நான் என்ற நமது கர்வத்தை துவம்சம் செய்கிறது.... நம்மை அறியாமலேயே எதை நோக்கியோ கை கூப்பச் சொல்கிறது.....

கால் மடக்கி நிலம்பட விழுந்து கதறி அழச் சொல்கிறது. ஏன் அழவேண்டும்....? தெரியாது.....? யாரிடம் கை கூப்புகிறேன் தெரியாது....? இது நல்லதா? தெரியாது. கெட்டதா...? அதுவும் தெரியாது. என்னதான் நான் சொல்ல வருகிறேன் இங்கே...? அதுவும் தெரியவில்லை.

தலைமுறைகளின் கதையும், டீசரும் பின்ணனி இசையும் என்னை இங்கே விரட்டி இருக்கிறது. நான் எழுத்துக்களாய் ஓடி இருக்கிறேன். அவ்வளவுதான்.

வாழ்க்கையில் அழுத்தம் திருத்தமாய் வாழ்ந்து, முதுமையில் மெல்ல மெல்ல இந்த வாழ்க்கையின் மைய அச்சு விட்டு நகர்ந்து விலகி, சுழற்சி நின்று போவதற்கு முன்னால் எனக்கும் இந்த வாழ்க்கைக்கும் என்ன தொடர்பிருந்தது இதுவரையில்...? இனி என்னமாதிரி இருக்கும் அந்தத் தொடர்பு....? இந்த உலகத்தில் நான்..யார்? இந்த உலகம் எனக்கு யார்...? மையப் பொருளாய் என்னை நினைத்திருந்தேன்.....

இதோ அன்று பச்சை பசுமையாய் இருந்த நான் இன்று சருகாகி  உதிரப்போகிறேன்.......அர்த்தமாயிருந்தேன்....அர்த்தமில்லாமல் என்னை காலம் ஆக்கும்.....புரிதலோடு நடந்து கொண்டிருக்கிறேன்.....

ஏதேதோ தோன்றுகிறது எனக்கு.....! இங்கே (துபாயில்)தியேட்டரில் போய் பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைக்குமா என்று தெரியவில்லை.... எப்படியாவது தலைமுறை படத்தைப் பார்த்து விட்டு.....தாயின் மடியிலிருந்து நான் பாலருந்தி வாஞ்சையாய் அவள் என் தலை தடவிய சுகத்தை....

உங்களிடம் பகிர்வேன்...!தேவா சுப்பையா... 


Thursday, December 5, 2013

கடவுளின் மொழி...!


விடியக்காலை மூணு நாப்பதுக்கு சென்னையில பிளைட். நான் மதியம் 3:00 மணிக்கு மதுக்கூர் பஸ்டாண்ட்ல நிக்குறேன். எப்டி பாத்தாலும் மன்னார்குடி ஒரு முக்கால் மணி நேரம். அங்க இருந்து கும்பகோணம் ஒரு இரண்டு மணி நேரம். ஒரு ஆறு மணில இருந்து ஒரு ஆறரைக்குள்ள கும்பகோணம் போனா அங்க இருந்து ஒரு ஏழு மணி நேரம் வச்சுக்கிட்டா கூட வொர்ஸ்ட் டூ வொர்ஸ்ட் விடியக்காலை ஒரு மணிக்கு நம்மல சென்னை ஏர்போர்ட்ல தள்ளிவிட்டுட்டு போய்ட மாட்டானான்னு.....நான் யோசிச்சுட்டு இருந்தப்பவே....மன்னார்குடிக்கு பஸ்ஸும் வந்துடுச்சு.....

இப்படி ஒரு டைட் செட்யூல் வச்சுக்கிட்டு ஏன் ஊருக்குப் கெளம்பணும்னு நீங்க கேக்குறது எல்லாம் சரிதான் பாஸ். ஆனா ஒரு வாரம் லீவுக்கு ஊருக்கு வந்துட்டு இந்த ஊர விட்டு கிளம்புற பாடு இருக்கே....அதை இந்த மாதிரி கிளம்பிப் போறவங்களுக்குத்தான் தெரியும். மண்ண விட்டு, மரத்த விட்டு, சொந்தங்கள விட்டு அம்புட்டு ஈசியா கெளம்ப முடியும்ன்றீங்க? ரொம்ப கஷ்டம். இந்தா பன்னென்டு தானே ஆகுது. அட ஒண்ணுதானே ஆகுதுன்னு நேரத்தக் கடத்தி கடத்தி... இன்னொரு கை சாப்டுப் போப்பான்னு அம்மா ஒரு கரண்டி சோறப் போட்டு ரெண்டு கரண்டி சாம்பார ஊத்தும் போது கரண்ட் இல்லாத தருமமிகு தமிழ்நாட்ல வேர்க்க விறுவிறுக்க சாப்டுற சுகம் இருக்கே......அதை எல்லாம் அனுபவிக்கணும்ங்க....

பஸ் வர்ற வரைக்கும் நாம ஊருக்குப் போய்த்தான் ஆகணுமா இது என்ன பொழப்புன்னு யோசிச்சுக்கிட்டே இருக்கவைங்க எம்புட்டு ஸ்பீடா கெளம்பி இருப்பாய்ங்கன்னு கொஞ்சம் யோசிச்சுப் பாத்துக்கோங்க....

யப்பா தம்பி டிக்கெட் எடுப்பான்னு கண்டக்டர் தோள தொடவும் சுதாரிச்சுக்கிட்டு மன்னார்குடி ஒண்ணு கொடுங்கண்ணேன்னு கேட்ட வேகத்துல மன்னார்குடி போக எம்புட்டு நேரம் ஆகும்னு லவக்குன்னு கேட்டுப்புட்டேன். போறப்ப போவும்யா...ன்னு சொல்லிட்டு நவுந்து போன கண்டக்டர்க்கு எப்புடி தெரியும் நம்ம ஏரோப்ளேன் புடிக்க போற அவசரம். அரசு விரைவுப் பேருந்துன்னு போட்டு இருந்தா விரைவாப் போய்த்தான் ஆகணுமான்ற நையாண்டியோட கேசுவலா வண்டி ஓட்டிக்கிட்டு இருந்த டிரைவர பாத்து எமகாதகா....என்  வாழ்க்கையில ஏன்யா வெளையாடுறன்னு கத்தணும் போல எனக்கு இருந்துச்சு.....

ஏற்கெனவே மெதுவா போற பஸ்ஸு நம்ம அவசரத்துக்கு இன்னும் மெதுவா போற மாதிரி தெரியவும் பேசாம பேக்க எடுத்துக்கிட்டு இறங்கி வேகமா ஓடிருவமான்னு கூட யோசிச்சுப் பாத்துட்டேன். மன்னார்குடி பஸ்ஸண்ட்ல அதிர்ஷ்டவசமா கும்பகோணத்தை நோக்கி பாஞ்சு சீறிக்கிட்டு(????!!!!!!*#!) இருந்த இன்னொரு விரைவுப் பேருந்த தொரத்திப் பிடிச்சு ஏறி ஜன்னலோர சீட்டா பாத்து புடிச்சுட்டு ஸ்ஸ்ஸ் அப்பாடன்னு நான் யோசிச்சதுதான் அப்போதைய என்னோட லைஃப் டைம் சாதனையா எனக்குத் தோணிச்சு....

அடுத்த நாள் காலையில டூட்டி ஜாய்ன் பண்ணனும், இந்த பிளைட்ட விட்டா மொத்த டிக்கட்டும் போய்டும்....அப்டீன்னு என்ட் ஆஃப் த டே எல்லா வெவகாரமும் பொருளாதரத்துலதான் வந்து முடியுது. செவ்வாக்கிழமை காலையில டூட்டி ஜாய்ன் பண்ணிடுவேன்னு பாஸ் தலையில அடிச்சு சத்தியம் பண்ணிட்டு வந்துருக்கேன்னு யோசிச்சுட்டு இருந்தப்பவே அப்போன்னா முன்னாடியேல்ல கெளம்பி இருக்கணும்னு நமக்குள்ளேயே ஒரு குரல் நம்மள தெனாவெட்டா கேள்வி கேக்கவும் ஆரம்பிச்சுருச்சு....

சரி பாத்துக்கலாம். இந்த பஸ்ஸாச்சும் ஸ்பீடா போகுமான்ற மில்லியன் டாலர்  கேள்விக்கு பதிலா ஆமா போகும்னு உறுதியா நான் சொல்லிக்கிட்டத பஸ் டிரைவர் கேட்டுட்டாரு போல....மன்னார்குடி எல்லைய தாண்டுன வண்டி....மாட்டப் புடிச்சு புது இடத்துக்கு இழுத்துக்கிட்டுப் போனா ரெண்டு காலையும் பப்பரப்பான்னு விரிச்சுக்கிட்டு மல்லுக்கட்டுமே அப்டி ஒரு மெர்சல் காட்டிகிட்டு வண்டி நவுருவேணாங்குது....என்ன பண்ண முடியும்ணா...? யோவ் வண்டிய கொண்டாய்யா நான் ஓட்டிக்கிறேன்னு கேக்காத பாடா டிரைவர் அண்ணன் பக்கத்துல போய் உக்காந்து கும்பகோணம் எத்தன மணிக்குப் போவும்ணேன்னு மிரட்சியா கேட்டேன்.....

போவும் தம்பி போவும்....போய் உள்ள ஒக்காருங்கன்னு அவர் சொன்ன உலகமகா பதிலை வங்கி கடிச்சுத் துப்பிக்கிட்டே திருவிளையாடல் தருமி கனக்கா எனக்கு வேணும், எனக்கு வேணும்.....நான் கேட்டிருக்க கூடாது, கேட்டிருக்க கூடாது....என் தப்புதான்....எந்தப்புதான்...சொக்கா...சொக்கான்னு நான் உள்ளுக்குள்ள கத்தினது வெளில கேட்டுருச்சுப் போல முன்னாடி சீட்டு அக்கா கனகாம்பரமும் கதம்பமும் சேத்து வச்சிகிட்டு இருந்தவங்க...திரும்பி பாத்து என்னை முறைக்க.....

அட என்னக் கொடுமை சரவணா இது ஈவ்டீஸிங்னு ஏதாச்சும் மாட்டிவிட்டா கூட அப்டி மாட்டிகிட்டோம்னு சொல்லிப் பெருமைப்படுற அளவுக்கு இவுங்க இல்லையேன்னு என்  கல்லூரி கால நக்கல் எந்திரிச்சு குத்தாட்டம் போட அடங்கொன்னியா அடங்குடான்னு சொல்லிட்டு விரக்தியா நான் சோழப் பெருநாட்டின் வயல்வெளிகளுக்குள் பார்வையை செலுத்தினேன்....

அதாவதுங்க எல்லாத்துக்கும் ஒரு வரைமுறை இருக்கு.  டாக்டர்கிட்ட போய் முடியலேன்னு படுத்துட்டீங்க. ஆப்பரேசன் தியேட்டர்ல கொண்டு போய் படுக்க வச்சப்புறம்....கையக் கால நீட்டிக்கிட்டு படுத்துக்கிட வேண்டியதுதான். அவரு என்ன வேணா செஞ்சுட்டுப் போறாரு....இனிமே இந்த ஃபுல் பாடியும் அவர் கண்ட்ரோல்லன்னு நினைச்சுப்போமே...அதே ஸ்டேஜ்க்கு நான் போய்ட்டேன்....

பஸ் ஸ்பீடா போனா என்ன ஸ்லோவா போனா என்ன....ஏர் அரேபியா பிளைட் ஒரு ஆள ஏத்திட்டுப் போறதும் ஏத்தாமப் போறதும் எவன் கையில இருக்கு.....? சம்போ மகாதேவா உன் கையிலதான்னு எல்லாத்தையும் அவன் கிட்ட விட்டுட்டேன். 

ராஜராஜ சோழனும், ராஜேந்திர சோழனும் எத்தனை தடவை இந்தப்பக்கம் வந்து இருப்பாங்க....! எத்தனை போர்களுக்கு படை வீரர்கள்...சோழம்....சோழம்...சோழம்னு கேடயத்துல வாளால அடிச்சுக்கிட்டு ஓடி இருப்பாங்க....., மிகப்பெரிய வயல்வெளிகளோட இன்னும் அடர்தியா மரங்களோட பச்சைப் பசேல்னு எப்டி இருந்திருக்கும் சோழ நாடுன்னு உடையார் கொடுத்த அனுபவத்தை நான் மென்னு தின்னிகிட்டு இருந்தப்பவே பஸ் நின்னுடிச்சு....

டக் டக்குனு பழைய சோழ தேச கனவை விட்டு வெளில வந்து என்னாச்சுன்னு எட்டிப் பாத்தா...பூவலூர் பாலத்துகிட்ட சாலை மறியல் பண்ணிட்டு இருக்காங்கன்னு சொன்னாங்க. டிரைவர் வண்டிய இழுத்தி நிறுத்திட்டு இறங்கிப் போய்ட்டாரு. கண்டக்டர்.....இப்போ எல்லாம் வண்டி எடுக்குற கதையா இல்ல தம்பின்னு என் நம்பிக்கையை மிதிச்சு துவம்சம் பண்ணினாரு....

மெல்ல கீழ இறங்கி வந்துப் பார்த்தேன். எங்க பஸ்ஸுக்கு முன்னால ஒரு பத்து பஸ்...எங்க பஸ் நிறுத்தினதுக்கு பின்னால ஒரு 4 வண்டின்னு வரிசை பெரிசாகி இருந்துச்சு....

பூவலூர் பாலத்தை ஒட்டின மெயின் ரோட்ல பிரச்சினை நடந்த இடத்துக்கு பக்கத்துல வந்து பார்த்தேன். நடு ரோட்ல கிராமத்து ஜனங்கள்னு சொல்லிட்டு நிறைய ஆளுங்க அதுவும் எல்லாம் சின்னப் பசங்க உக்காந்து ஒரு வண்டியவும் விட முடியாது கலெக்டர் வரணும்னு ஆர்ப்பாட்டம் பண்ணிட்டு இருந்தாங்க. எதிர் திசையிலயும் ஒரு பத்து பதினைஞ்சு பஸ் கார்னு நின்னுட்டு இருந்துச்சு.

பூவலூர் டாஸ்மாக்ல ஏற்பட்ட பிரச்சினையில சோ கால்ட் மேல்சாதிக்காரங்கள சோ கால் கீழ் சாதிக்காரர் ஒருத்தர் ஏதோ சொல்லி திட்ட....அந்த சோ கால்ட் கொம்பு முளைச்ச மேல் சாதிக்காரர்க்கு ரோஷம் வந்து அவரோட பையனோட கெளம்பி வந்து சோ கால்ட் கீழ்சாதிக்காரர வயலுக்குக்குள்ள வுட்டு உருட்டுக் கட்டையில அடிச்சதுல....இவர் உயிர்க்கு ஆபத்தான நிலையில மன்னார்குடி அரசு மருத்துவமனையில சேர்க்கப்பட்டிருகார்னு சொல்லி  அடிபட்டவர் சார்பா அந்த மறியல் நடந்துட்டு இருந்துச்சு.....

சாதி சாதின்னு சொல்லி சாதிப் பெயரால அரசியல் செய்ற கருங்காலிகள் இருக்க வரைக்கும் நம்மூர்ல சாதி சனியன் செத்தே போகாதுன்னு எனக்குத் தோணிச்சு. அங்க மறியல் பண்ணிட்டு இருந்த ஒருத்தர் கூட நின்னு பேச முடியுற அளவுல இல்லாம டாஸ்மாக் அத்தனை பேரையும் கபளீகரம் பண்ணி இருந்துச்சு. யாரோ ரெண்டு க்ரூப் ஊருக்குள்ள அடிச்சுக்கிட்டு போலிஸ் ஸ்டேசன் போகாம ஒதுக்குப் புறமா இருக்க ஊரைவிட்டுத் தள்ளி மெயின் ரோட்டுக்கு வந்து உட்காந்து அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் போற பஸ்ஸுகள மறைச்சு நின்னு அவுங்க கோபத்தக் காட்றது சரின்னுதான் இந்த சமூகம் அந்த உலகமறியா அப்பாவி ஜனங்களுக்கு கத்துக் கொடுத்து இருக்கு. 

ஏதாச்சும் பிரச்சினை இல்லை யாரச்சும் தலைவர்கள் இறந்து போய்ட்டாங்கன்னா ஓடிக்கிட்டிருக்க இருக்க பஸ்ஸயும், ரயிலையும், கார்களையும் மறிக்கிறது உச்சபட்ச வன்முறை, அராஜகம், அயோக்கியத்தனம்னு ஏன் இன்னும் யாருக்கும் புரியலை. வண்டில போறவனுக்கு என்ன அவசரம்னு யோசிக்க முடியாத குரூரம், தன் வலியை தனக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பை நேர்மையா தீத்துக்க நினைக்காத மனதின் வக்ரம் இன்னிக்கு போரட்டம்ன்ற பேர்ல நம்ம ஊர்ல சாலை மறியல்களா நடந்துகிட்டு இருக்கு. இப்படி சாலைமறியல் இருக்கறதை விட ஒட்டு மொத்த ஊர் ஜனங்களும் போலிஸ் கமிஷனர் ஆபிஸ்க்கோ இல்லை கலெக்டர் ஆபிசுக்கோ போய் உக்காந்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கிறவரைக்கும் முற்றுகை போரட்டம் நடத்தலாமேன்னு நான் யோசிச்சுக்கிட்டே...

பிரச்சினை நடக்குற மைய இடத்துக்கு என்னோட பேக்கோட வந்து நின்னு தேமேனு பாத்துட்டு இருந்தேன். யாரோ ஒருத்தர் அந்தக் கூட்டத்துல இருந்து எழுந்து வந்து அங்க நின்னுக்கிட்டு இருந்த என்னை மாதிரி வழிப்போக்கர்கள் கிட்ட நியாயம் கேட்டுட்டு இருந்தாரு.... இந்த அடர்த்தியான சமூகத்துல நானும் ஒருத்தன் தான் இதுக்குள்ள இருக்கும் போது இங்க இருக்குற நல்லது கெட்டதுகள்ள தெரிஞ்சோ தெரியாமலோ ஒவ்வொரு மனுசனும் பலிகெடா ஆகத்தான் வேணும்னு மனசுக்குப் பட்டுச்சு....

வாட்சைப் பார்த்தேன்... .மணி மாலை 5.  அடக்கடவுளே இன்னும் பூவலூர் தாண்டலயே...நீடாமங்கலம்,கும்பகோணம் அதுக்கப்புறம் சென்னை பைபாஸ் புடிக்கிற வரைக்கும் புல் லோடான கிரைண்டர் சுத்துற மதிரில்ல ஆடி அசஞ்சு வண்டி ஓட்டுவாய்ங்க ஏதாச்சும் நடக்குமா...? போலிஸ் வருமா? கூட்டம் கலையுமா...

ஒரு மாதிரி படபடப்போட நின்னு பாத்துட்டு இருந்தேன். அஞ்சே கால்க்கு ஒரு போலிஸ் சாரும் ஒரு போலிஸ் அக்காவும் வந்தாங்க....கிட்டத்தட்ட நூறு இருநூறு பேருக்கு மேல நின்னு அழிச்சாட்டியம் பண்ணி மறியல் செஞ்சுட்டு இருந்த மறியலை கலைக்க வந்த போலிஸ் படை எனக்கு இன்னும் டென்சனை கெளப்ப....
கடவுளே சென்னை போகணும்...ப்ளைட்ட வுட்டா....டிக்கெட்டும் போய்டும்...வேலைக்கும் ஒரு நாள் கழிச்சு போய் ஜாய்ன் பண்ணனும்..இது என்ன கொடுமைன்னு சொல்லிட்டு இருந்தப்ப..

என் பக்கத்துல இருந்த ஒருத்தர்...கிட்ட வந்து என்ன தம்பி பிரச்சினைன்னு கேட்டாரு.. ! விவரத்தைச் சொன்னேன். தம்பி இப்போ எல்லாம் இங்க ஒண்ணும் ஆகாது, அந்த சைட்ல போய் ஏதாச்சும் ஆட்டோ இல்லை பைக் ரிவர்ஸ்ல போவாங்க போய்டுங்கன்னு சொன்னவரு என்ன நினைச்சாரோ தெரியலை... வாங்கன்னு சொல்லி என்னை கையப் புடிச்சு அந்தாண்ட பக்கம் கூட்டிட்டுப் போனாரு. கூட்டம் கூடினதோட மட்டும் இல்லாம ரெண்டு பக்கமும் வண்டிங்க வரிசை அதிகமாவும் ஆயிடுச்சு.  என்னை கூட்டிட்டு அந்தப்பக்கம் போன  அந்த நண்பர் அந்தப்பக்கமா நீடாமங்கலம் போற பைக் கிட்ட எல்லாம் இந்த தம்பிய நீடாமங்கலத்துல விட்ருங்கன்னு சொல்லி ஒவ்வொருத்தர் கிட்டயா கேட்டாரு.... இரண்டு மூணு பேரு முடியாதுன்னு சொல்லிட்டாங்க..

நாலாவத ஒரு பைக் வந்துச்சு...அவர்கிட்ட என்னை கூட்டிட்டு வந்தவர் விபரம் சொல்ல...சரி நான் நீடாமங்கலத்துல அவரை விடுறேன்னு சொல்லி உடனே  வண்டியில என்னை ஏறச்சொன்னாரு..... அவசரத்துல பைக் ஓட்றவரு யாரு என்னனு முகத்தைக் கூட பாக்கலை நான்...என்னை ஏத்திவிட்டவருக்கு தேங்க்ஸ் சொல்லிட்டு...

வண்டி  பறந்து கொண்டிருந்தது.

நீடாமங்கலத்துக்கு அப்புறம் ஏதோ ஒரு கிராமத்தில் குலதெய்வம் கோயிலுக்குப் போய்க் கொண்டிருப்பதாய் சொன்னார். குழந்தைக்கு உடம்பு முடியாதப்ப வேண்டி இருந்தேன். இப்ப நல்லாயிட்டா அதான் போய் மாலை வாங்கிப் போடப்போறேன்னு சொன்னார். நீடாமங்கலத்தில இருந்து பஸ்ல போனா காரியம் ஆவாதே தம்பி.....ஆட்டோவுக்கு எப்படியும் ஐநூறு கேப்பான், அப்படியே போனாலும் நேரத்துக்கு போகவும் முடியாது....எப்டி போவீங்க? எப்டி சென்னை பஸ்ஸ புடிப்பீங்க.....கேட்டார். 

தெரியலிங்கண்ணா....ஆனா இன்னிக்குப் எப்டியும் போயகணும்ணா சொன்னேன்.

சரி நான் ஒண்ணு பண்றேன். நானே உங்களை கும்பகோணத்துல நேரா பைக்ல கொண்டு வந்து விடுறேன். பெட்ரோல் மட்டும் போட்டுட்டு போவோம் நீடாமங்கலத்துல....சொன்னார்! அண்ணா நீங்க பிள்ளைக்கு வேண்டிட்டு குலதெய்வம் கோயிலுக்குப் போறீங்க ..எப்டிண்னா..? தயங்கியபடியே கேட்டேன்.

அடப்போங்க தம்பி...சாமி ஒண்ணும் நினைச்சுக்காது. இன்னும் சொல்லப் போனா ஒங்க சூழ்நிலை தெரிஞ்சு உதவ முடிஞ்சும் அதோ கதியா நடுரோட்ல விட்டுட்டு சாமிகிட்ட போனாதான் சாமி என்ன  திட்டும்....சொல்லிவிட்டு சிரித்தார். அண்ணா சாரிங்கண்ணா..பட் ரொம்ப தேங்க்ஸ்கண்ணா....சொன்னேன். வண்டிக்கு பெட்ரோல் போட்டார். காசு கொடுத்தேன். வலுக்கட்டாயமாக மறுத்து விட்டார். என்னை வண்டியை விட்டு இறங்கவே விடவில்லை.

வண்டி பறந்தது.

6 மணிக்கு கும்பகோணம் பஸ்டாண்டுக்குள் நுழைந்தோம். வரும் வழியிலேயே சொல்லிக் கொண்டு வந்தார். கடவுள் ஆன்மீகம் பத்தி எல்லாம் நிறைய படிச்சதில்ல தம்பி. எனக்கு சாமின்னா புடிக்கும். சாமி படைச்ச எல்லா மனுசங்களையும் பிடிக்கும். ரொம்பவுல்லாம் ஒண்ணும் தெரியாதுப்பா எனக்கு...ஆறாவதுதான் படிச்சிருக்கேன். ரொம்ப நாள் கழிச்சு பொறந்த புள்ள அதுவும் எனக்குப் புடிச்ச பொட்டப்புள்ள...டப்புன்னு ஒரு நாளு உடம்பு முடியாம போக, ஆடிப்போய்ட்டேன்...வாந்தியும் வயித்தாலயுமா போவுது....

கருப்பா என் புள்ளைய காப்பாத்துடான்னு வேண்டிக்கிட்டேன். காப்பத்திக் கொடுத்துட்டான். அவனைப் பாக்கப் போகையில உங்கள சந்திக்க வச்சுட்டான்....சொல்லி கொண்டே நீடாமங்கலம் தாண்டி அவர் செல்ல வேண்டிய குலதெய்வம் கோயில் பாதையைக் காட்டினார். இன்னொரு நாள் போயிக்குவேன் தம்பி.....ஒண்ணும் பிரச்சினை இல்லை...! அவர் காட்டிய திசையைப் பார்த்த் கையெடுத்துக் கும்பிட்டேன். அங்க  யார் இருக்கா இல்லைன்னு எனக்கு தெரியல ஆனா ஒரு நல்ல மனுசன அந்தக் கோயில், அந்த சாமி அந்த சூழல் வார்த்தெடுத்து இருக்குன்னு நினைச்சுக்கிட்டேன்.

என் ஊர், எப்போ வந்தேன், மறுபடி எப்போ வருவே என்று கேட்டார். வேற ஒண்ணுமே பேசிக்கலை.

கும்பகோணம் பஸ்டாண்ட் உள்ள நுழையவும் ஒரு விரைவுப் பேருந்து சென்னைக்கு கிளம்பவும் சரியா இருக்க...வண்டிய விரட்டிக் கொண்டு போய் பஸ்ஸு முன்னால நிறுத்தி.... ஒரு நிமிசம் நில்லுப்பா ஆளு வருதுல்ல என்று டிரவரை அதட்டினார்....நான் ரொம்ப தேக்ஸ்னா என்று சொல்லிய படியே என் மொபைலில் அவசரமாய் அவரது நம்பரை வாங்கிக் கொண்டேன். நம்பர மொபைல்லா சேவ் பண்ணிக்கிட்டே பஸ் உள்ள ஏறினப்பதான் நினைச்சேன்...அட அவர் முகத்தைக் கூட நாம பாக்கலயேன்னு...

ஓடிப்போய் ஜன்னல வழியா எட்டிப் பார்த்தேன். என்னை பார்த்து சிரித்தார். கை காட்டினார். பத்திரமா போங்க என்று சொன்னார். எனக்கு கண்ணீர் வந்தது. எந்த உறவும் இல்லை இவர். யார்னே தெரியலை...எவ்ளோ சிரமப்பட்டு அதுவும் அவ்ளோ விரைவா வண்டிய ஓட்டிக்கிட்டு வந்து...

மொபைலில் இருந்து கால் பண்ணி நன்றிண்ணா என்றேன் தழு தழுத்த குரலில். அடப் போங்க தம்பி....போய் இறங்கிட்டு எனக்குப் போன் பண்ணுங்க....சாமி சாமின்னு ஊரைச் சுத்தி அலைஞ்சுகிட்டு இருக்கறதும், நான் ரொம்ப பக்திமான்னு காட்டிகிறதும் இல்ல தம்பி... வாழ்க்கை...எனக்கு நெஞ்சுக்கு நிம்மதியா இருந்துச்சு இன்னிக்கு  உங்கள டயத்துக்க் கொண்டு வந்து விட்டது... என் கருப்பன் சந்தோசப்படுவான்...பத்திரமா போங்கப்பா...வழியில ஏதாச்சும் பிரச்சினைன்னாலும் கால் பண்ணுங்க....

வண்டி சென்னை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. அவரது எண்ணை மொபைலில் சேமிக்க அவரோட பேரு வேணுமே அட என்ன பேருன்னு கேக்க மறந்துட்டோமே....யோசிச்சேன்......

                                     ..........கடவுள்........

அப்டீன்னு சேமிச்சு வச்சுக்கிட்டேன். ஜன்னலோரம் காற்று முகத்துல வந்து மோதி முடியை கலைச்சுட்டு இருந்துச்சு. கண்களை துடைச்சுக்கிட்டேன்....அங்க மறியல் நடத்திட்டு இருந்த கடவுளெல்லாம் செஞ்ச உதவியில இந்தக் கடவுள் எனக்குக் கிடைச்ச சந்தோசத்தில்....தொடர்ந்து கொண்டிருந்தது அந்த சுவாரஸ்யமான பயணம்...!


இப்போ எல்லாம் அடிக்கடி கடவுளும் நானும் பேசிக்கிறோம்.....!தேவா சுப்பையா...Sunday, December 1, 2013

தேடல்....01.12.2013!


ஒன்றும் இல்லை என்று தோன்றிய கணத்தில்தான் எனக்கான சுதந்திரப் பெருங்கதவுகள் திறந்து கொண்டன. யாரும் யாருக்கும் எதுவும் செய்து விட முடியாது என்று உணர்ந்த போது சுற்றி இருக்கும் எந்த ஒரு மனிதரையும் சூழலையும் குறை சொல்ல எண்ணம் வரவில்லை. இது ஒரு பரிபூரணமான விடுதலை. செயல்களுக்குள் நின்று கொண்டு விளைவுகளைக் கணக்குப் போட்டுக் கொண்டிருந்த, உருவாக்கிக் கொண்ட சிக்கல்கள் நகர்ந்த நிலை. எந்த ஒரு கற்பனைக்குள்ளும் சிக்கிக் கொள்ளாத தத்துவங்களுக்குள்ளும் சித்தாந்தங்களுக்குள்ளும் அடைபட்டுக் கொள்ளாத பெரும் திறப்பு.

கருத்துக்களைக் கொண்டு அந்த கதவினைத் தட்டத்தான் வேண்டும் ஆனால் அந்த திறப்புக்கும் கருத்துகளுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. தத்துவங்களின் மீதேறி பயணித்துதான் அங்கே செல்லவேண்டும் ஆனால் அங்கே இருப்பது தத்துவங்களுக்கும் சித்தாந்தங்களுக்கும் சற்றும் தொடர்பில்லாதது. ஒரு நொடியில் எல்லாம் கழற்றி எறிந்தால் மட்டுமே அந்த பெருவெளிக்குள் ஊடுருவ முடியும். யாரும் யாருக்கும் சொல்லி மாற்ற முடியாது என்ற புரிதலை அந்த கதவிற்கு அப்பால் போனபின்பு உணர முடிந்தது.

தேடிக் கொண்டிருப்பவர்கள் தேடி வருவார்கள். கேள்விகள் கேட்ட பின்பு சொல்லும் பதிலுக்குதான் அர்த்தம் இருக்கிறது. பதில்களை சொல்லிக் கொண்டே இருந்தால் கேள்விகளே தெரியாதவர்களுக்கு அது அனாவசியமாய் தெரியும். இங்கே இந்த வாழ்க்கையில் துன்பப்பட ஒன்றுமே இல்லை. ஆனந்தத்தில் மூழ்கி அனுபவிக்க மட்டுமே எல்லாமே படைக்கப்பட்டிருக்கிறது. இன்பத்தை இயற்கை உருவாக்குகிறது. துன்பத்தை மனிதன் உருவாக்கிக் கொள்கிறான். துன்பங்கள் யாவுமே நாம் உருவாக்கிக் கொண்டவை. எல்லோரும் ஒரே மாதிரியாய் இருக்க முடியாது. ஒவ்வொரு  மனிதருக்கும் ஒவ்வொரு வாழ்க்கை அவரவர் சூழலுக்கு ஏற்றார் போல, அவர் உடல் தாங்கி இருக்கும் ஜீன்களில் பொதிந்து கிடக்கும் பாரம்பரியத்துக்கு ஏற்றார் போல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இன்னொருவர் போல நான் இருக்க ஆசைப்பட்டு என் முன் இருக்கும் வாழ்க்கையை மாற்ற முயலும் போது....பிறக்கிறது சிக்கல்.

ஒரு மிகப்பெரிய மலர்ச்சி என்னுள் இருக்கிறது என்று உணர்ந்த தருணத்தில் புறத்தில் நான் உருவாக்கி வைத்திருந்த கட்டுப்பாடுகளும், சமூகம் திணித்து வைத்திருந்த சட்ட திட்டங்களும் உடைந்து விழ ஆரம்பித்தன. இயல்பே சத்தியம் என்று இருக்கையில் இங்கே சத்தியத்தை போதிக்க ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் ஓராயிரம் வழிமுறைகள் எனக்கு அபத்தமாய் தெரிந்தது. கடவுள் என்னும் கோட்பாடு வெகு சிக்கலாக்கப்பட்டு காலம் காலமாய் மனித மனங்களின் ஆழத்தில் இருந்து அழிக்க முடியாத அளவிற்கு அது பதிந்து போயிருப்பதை உணரமுடிந்தது. தேவைகளுக்காக, மனதின் பயத்திலிருந்து விடுபட, குற்ற உணர்ச்சி இன்றி வாழத்தான் கடவுள் இங்கே பயன்படுகிறார் அதனைக் கடந்த ஒரு பேரானந்தத்திற்குள் இந்த கடவுள் என்னும் வரைமுறையற்ற பெருவெளி கூட்டிச் செல்லும் என்பதுதான் இதுவரை மிகையானவர்கள் அறியாத பேருண்மை.

எதையுமே யாருக்கும் சொல்ல வேண்டாம். பகிர்தல் கூட ஒருவிதமான அபத்தம். தற்பெறுமை பேசுதல் போல அது என்று எனக்கு ஒரு வினோதமான மனோநிலை கடந்த சில வாரங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. என்ன இது..? அது இப்படி இது இப்படி என்று சொல்லுக் கொள்வது. எனக்கு சரி என்றால் நான் போகவேண்டியதுதானே...? ஊருக்கு என்ன உபதேசம் என்று ஒரு குரல் என்னை உறுதியாய் தடுத்து நிறுத்திக் கொண்டே இருக்கிறது இப்போது எல்லாம். எழுத்து என்பது ஒருவித தந்திரம். செய்தி பகிர்ந்து கொண்டே எனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு கர்வம்.  தன்னை உயர்த்திக் கொண்டு சக மனிதர்களை இரட்சிக்கவே இங்கே நிறைய பேர்கள் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

தொடர்பற்று இருக்கும் ஒரு மிகப்பெரிய வேட்கை ஒன்று என்னை பொதுவான நியதிகளுக்குள் இருந்து விலக்கியே வைத்திருக்கிறது. சுற்றி நிகழும் அனுபவங்களை கூர்மையாக கவனித்து உள்வாங்கிக் கொண்டு சிறு துரும்பென நகரும் அற்பனுக்கு எதற்கு பேச்சு என்று ஒரு கேள்வி இடைவிடாது கேட்டுக் கொண்டிருக்கிறது உள்ளுக்குள். எது சுகமோ அதைச் செய் என்று உறுதி எடுத்துக் கொண்டிருக்கிறேன். ஓய்வு என்பதை முழுமையான மனதுக்கும் உடலுக்குமான ஓய்வாய் நான் மாற்றிக் கொண்டுவிட்டேன். காற்றில் இறகு மிதப்பது போல ஒரு தாளகதியில் அறிவற்று இருப்பது சுகம். அறிவு ஆராய்கிறது. ஆராய்தல் எப்போதும் அழகுணர்ச்சியை மழித்து விட்டு.....டெக்னிக்காலிட்டி பல்லை காட்டுகிறது.

எனக்கு இங்கே ஒன்றும் புரியவே வேண்டாம். எது எப்படி நிகழ்கிறது என்ற நான் அறிந்து கொள்ளவே வேண்டாம். மெல்லிய காற்று உடல் தடவி செல்லும் சுகத்தை நான் அனுபவித்துக் கொள்கிறேன். நல்ல இசை ஒன்று என் காதுகளைத் தடவிச் செல்லட்டும். பகலைப் போன்ற நிலவொளியில் ஏதேனும் நட்சத்திரங்கள் தெரிகிறதா என்று தேடி தேடி அதோ அங்கொன்று.. இதோ இங்கொன்று என்று கண்டுபிடித்து மகிழ்ந்து கொள்கிறேன். சுற்றி நிகழும் எல்லாம் நிகழட்டும். என் தொடர்பு என்பது சாட்சியாய் இருப்பது மட்டுமே...! உருவமோ அருவமோ எதோ ஒன்றாய் இருந்து விட்டுப் போகட்டும் கடவுள். இந்த பூமியில் நான் ஜனித்து இதுவரையில் வாழ்ந்து வளர்ந்து பின் இங்கேயே மடிந்து போகப் போகிறேன்.

இங்கே ஒரு ஜீவனாய் நான் வாழ நிறைய கருணைகள் எனக்கு உதவியிருக்கின்றன. நிறைய நேரடியாகவும் மறைமுகமாகவும், நான் வாழ்ந்த சமூகத்தினரிடமிருந்தும் என்னை சூழ்ந்திருக்கும் இயற்கையிடமிருந்தும் பெற்றிருக்கிறேன். எனக்குள் நன்றியுணர்ச்சி இருக்கிறது. ஏதோ ஒரு சுகம், வலி, துக்கம் சந்தோசம் என்று எப்போதும் எனக்கு நிறைய, நிறைய இந்த இயற்கை கொடுத்திருக்கிறது. நான் அதற்கு நன்றி சொல்லிக் கொண்டே இருக்கிறேன். சிவா....சிவா.... சிவா என்று இந்த பிரபஞ்சத்தை இழுத்துப் பிடித்து எங்கும் ஊடுருவியிருக்கும் அந்த சக்தியை சிறு நெய்விளக்கேற்றி பூக்களைக் கொண்டு பூஜித்து அஉம் நமசிவாய என்ற ஐந்தெழுந்து மந்திரத்தை ஓதி ஓதி உள்ளுக்குள் இருக்கும் அதிர்வுகளை சமப்படுத்திக் கொள்கிறேன். அமைதியடைந்து கொள்கிறேன்.

ஒரு மயானத்தில் இழுத்துக் கொண்டு போய் விறகு கட்டைகளின் மீது அடுக்கி மேலே சாண விரட்டிகளை வைத்து மூடி, அதற்கும் மேல் சாணத்தை மெழுகி வைக்கோல் பிரிகளை வைத்து மூடி கூட்டமாய் வந்து எரித்து விட்டு பின் குளித்து விட்டு வீடு திரும்பி விடுகிறார்கள். அதோடு முடிந்து போகும் இந்தப் பயணத்தில் யார் கூட வருவார்கள்...? நீதானே.....நீதானே...நீதானே... என்று கண்ணீர் மல்க ஒரு பெரும் பேரமைதியை நோக்கி கதறிக் கதறி சப்தமின்றி ஒடுங்கி ஒரு மூலையில் அமர்ந்து கொள்கிறேன். பத்தி வாசனையும், சாம்பிராணி வாசனையும் புற உலகினை விட்டு எங்கோ உள்ளுக்குள் கூட்டிச் சென்று ஒரு பெருங்கருணைக் கடலுக்குள் தள்ளி விட்டு விடுகின்றன. தியானத்தின் உச்சம் அழுகையாகிறது. கேவிக் கேவி அழும் ஒரு அழுகை.

ஏன் அழுகிறேன்...? தெரியாது....

யார் அழச் சொல்கிறார்கள்....? தெரியாது.

ஏன் இதை இங்கே பேசிக் கொண்டிருக்கிறேன்...? தெரியாது.

தெரியாதுகளில் நகர்ந்து கொண்டிருக்கிறது.... என்னுடைய 37 வது வருட வாழ்க்கை. குறையோடிருக்கும் வரையில் நீ பேசிக்கொண்டிருப்பாய் என்று உள்ளுக்குள் ஆதி குரு சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறான்.

ஓய்விற்குள் விழுந்து கிடக்கையில் பாலகுமாரன் ஐயாவின் உடையார் ஐந்தாவது பாகம் நேற்று முடித்து ஆறாம் பாகமான இறுதி பாகம் கையிலெடுத்திருக்கிறேன். சுமார் இரண்டு வருடங்களாக படித்துக் கொண்டிருக்கிறேன். படித்து இந்த ஆறு பாகமும் முடிந்து விட்டால் இந்த அனுபவத்திலிருந்து வெளியே வந்துவிடுவோமோ என்ற பயம் எனக்கு. அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டு மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கிறேன். ஐந்தாம் பாகம் இறுதியில் உபதளபதி வைணவதாசன் ஒற்றறிய சென்று மேலைச் சாளுக்கியர்களால் கொல்லப்படுகிறார். இந்த முறை ஊருக்கு போய்விட்டு வரும் போதுதான் பாலகுமாரன் ஐயாவின் சொர்க்கம் நடுவிலே புத்தகம் வாங்கி வந்தேன். 

உடையார் ஐந்த்தாம் பாகம் படிக்கும் போதே சொர்க்கம் நடுவிலேயேவையும் ஆரம்பித்து விட்டேன். சொர்க்கம் நடுவிலே கதையில் வைணவதாசன் மரணித்த பின்பு பித்ருலோகம் என்னும் உலகத்தில் இருந்து கொண்டு மரணத்திற்கு பின்னான வாழ்க்கை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். அதைப் படித்துக் கொண்டே வைணவதாசன் என்னும் அந்தண ஒற்றனின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்று உடையாரில் படித்த போது இன்னும் நெகிழ்ச்சியாய் இருந்தது. பாலகுமாரன் ஐயா என்பவர் புறத்தில் எப்படிப்பட்டவர் என்று எனக்குத் தெரியாது. தொடர்பில்லை. அகத்தில் எனக்கு நல்லதொடர்பிருக்கிறது. அகத்தொடர்பே போதும் என்றும் தோன்றுகிறது. அவர் என்னை சூட்சுமமாய் ஆசிர்வதித்திருக்கிறார். புறத்தில் வெளிப்படுத்திக் கொள்ளாத ஒரு பேரன்பு எனக்கு எழுத்துச் சித்தர் மீது இருக்கிறது.

மிகப்பெரிய கண்மாய் மாதிரி பாஸ் இந்த வாழ்க்கை .......தீரத் தீர முங்கி முங்கி குளிக்கணும்.கை கால் எல்லாம் ஊறிப் போய் கண்கள் சிவக்க கோடை காலத்துல குளிக்கும் போது எப்டி இருக்கும் அப்டி இருக்கு இப்போ எனக்கு. சில நேரம் ஆழத்துல போய் தண்ணிய குடிச்சுடுறேன்...அப்புறம் மூச்சு திணறி இருமி, இருமி தண்ணிய வெளில எடுக்குறேன். சில நேரம் ஆழம் தெரியாம உள்ளுக்குள்ள போய் மாட்டிக்கிட்டு திக்கித் திணறி யாராச்சும் காப்பத்துவாங்களா என்று பதறி வெளியே ஓடி வருகிறேன். 

சில நேரம் யார் யாரோ வந்து கை கொடுத்து காப்பத்துறாங்க. நெகிழ்ச்சியா கை பிடித்து கண்ல ஒத்திக்கிட்டு நன்றி சொல்றேன். சில நேரம் மல்லாக்க படுத்துக் கொண்டு பூமிக்கும் ஆகாயத்துக்கும் தொடர்பற்று மிதக்கிறேன். தெரிஞ்ச வரைக்கும் நீச்சலடிக்கிறேன் தெரியாம ஒரு பயம் வரும் போது கரையோரமா ஆழம் குறைஞ்ச பகுதியில வந்து தேமேன்னு உட்கார்ந்துக்கிறேன்.....

குளிச்சது போதும் வாடான்னு ஒரு நாள் அம்மா மாதிரி கம்பெடுத்துக்கிட்டு வந்து ஒரு சக்தி கூப்பிடும் பொது.....அச்சச்சோ அடிப்பாளேன்னு வந்து ரொம்ப நாழி ஆயிடிச்சேன்னு சொல்லி அவ கையப் புடிச்சுக்கிட்டு கிளம்பிறப் போறேன்....

அவ்ளோதான் பாஸ் வாழ்க்கை....! 

விளக்கவோ...பெருமைப்பட்டு சொல்லவோ இங்க ஒண்னுமே இல்லை...அன்பு செலுத்துறதும், நன்றியோட வாழ்றதும் மட்டுமே இங்க மிகப்பெரிய தேடலுக்கு எனக்கு கிடைச்ச விடை.....

சுழலானேன்... ஒரு சுழலானேன்...
பெருங்காற்றினூடே ஒரு சுழலானேன்...
திசையறியேன்...நான் திசையறியேன்....
சுற்றிச் சுழன்று செல்லும் திசையறியேன்...
வகையறியேன்...வாழ்வின் வகையறியேன்....
கணத்தில் மாறும் நிலையறியேன்...
கணத்தில் மாறும் நிலையறியேன்...
உடலானேன்...நான் உயிரானேன்...
யாரென்று என்னை நானறியேன்....
யாரென்று என்னை நானறியேன்....!

சம்போ....!!!!!!!தேவா சுப்பையா...