Pages

Tuesday, May 31, 2011

சப்தமில்லா ஓசைகள்..!
வரம்

விழியசைப்பில்
ஒற்றை தலையசைப்பில்
உதட்டோர புன்னகையில்
ஆழமான ஒரு பார்வையில்
சொல்லிதான் விடேன்
உன் காதலை!

***

தவம்

மோனலிசாவிற்கு
புன்னகையைப் பரிசளித்த
லியனர்டோவின் தூரிகை
உன்னையொரு முறை
ஓவியமாய் தீட்டி விட
தவம் கிடக்கிறதாம்...!

***

விடியல்

நீ சோம்பல் முறித்து
எழும்போதுதான்
விழித்துக் கொள்கிறது
என் நீண்ட இரவுகளும்..!

***

பலம்

மெளனித்த நிமிடம்
முதல் உணர்கிறேன்
நீ சப்தமானவள் என்று....!

***

தோல்வி

வெற்று மையை
காகிதத்தில் பரவவிட்டு
வார்த்தைகள் ஓடி
ஒளிந்து கொள்கின்றன
உன் நினைவுகளுக்குப் பின்னால்!

***


வெறுமை

எனக்கு பிடித்ததெல்லாம்
நீ சொன்னாய்...
உனக்கு பிடித்ததெல்லாம்
நான் சொன்னேன்...
பரிமாற முடியாமல் நீ சுற்றிப்
பரவவிட்ட காதலை
பற்றிக் கொள்ள முடியாமல்
பரவிக் கிடக்கிறேன்
நிலவின் வெளிச்சம் போல....!


தேவா. S

Sunday, May 29, 2011

நான், அவள், மற்றும் மழை....!


பார்வைகளால் நீயும், நானும் மின்சாரங்களை பகிர்ந்து கொள்ளவில்லை. உன்னிடம் நானும் என்னிடம் நீயும் வழக்கமான மொழிகளில் வார்த்தைகளால் விளையாடிக் கொள்ளவும் இல்லை. தேவைகளின் பொருட்டும் எதுவும் நம்மை இணைக்கவில்லை. நீ இருக்கிறாய். நானும் இருக்கிறேன். இருத்தலை ரசிக்கும் ஒரு கம்பீரத்துக்கு காதல் என்று பெயர் கொடுக்க எனக்கு விருப்பமில்லாதது உனக்கு விருப்பமாயிருந்தது என்றாய்.....

ஒரு மழை வர எத்தனித்துக் கொண்டிருந்த மதியத்துக்கும் மாலைக்குமான இடைவெளியில் கருமையான மேகங்களின் அலைதலை இருவருமே உள் வாங்கி நடந்து கொண்டிருந்தோம். இருவருக்குமான இடைவெளிகளில் நமது நெருக்கம் நிரம்பிக் கிடந்தது.

மழையை நாமிருவருமே எதிர்பார்த்தவாறு நடந்து கொண்டிருந்த போது உனக்கு மழை பிடிக்குமா? என்று கேட்டாய். கேள்விக்கான பதிலை நான் பகிரும் முன் நீயே சொல்லி விட்டாய் யாருக்குத்தான் மழை பிடிக்காது? என்று...ஆனால் அப்போது அடித்த காற்றில் பறந்த உன் சுடிதாரின் துப்பட்டா மீது நான் மையல் கொண்டிருந்து உனக்கு தெரியாது...

காற்றோடு கூடிக் கூடி
உயிர் பெற்று விட்டாயா
ஒற்றை துப்பட்டாவே?

இல்லை..இல்லை....

அவள் உடலோடு
ஒட்டிக் கிடந்த உன்னை
காற்று கவர்ந்து சென்று விடும்
என்று துடி துடிக்கிறாயா?

நான் என் யோசனைகளில் எங்கோ இருந்தேன்....உன் துப்பட்டாவை பார்த்த படி அதன் வெண்மை நிறத்தின் ஓரங்களில் இருந்த இளம் சிவப்பிலும் மஞ்சளிலும் நான் விழிகளால் நீந்திக் கொண்டிருந்தேன்......! அதே நேரம் உன் கற்றைக் கேசம் காற்றில் கலைந்து நானும் தான் இருக்கிறேன் என்று காற்றில் சில கவிதைகளை எழுத முயன்று கொண்டிருந்த வேகத்தில் நான் மெல்ல சூழலுக்குள் வந்தேன்....

என்ன மழையை நினைத்து கனவோ..? என்று நீ என் செவிகளுக்கு அனுப்பிய சங்கீதத்தில் கலைந்த நான்...ஆமாம் மழை பற்றிய கனவுதான்...என்றேன். மழையோடு ஒட்டிய உன் நினைவுகளைப் பற்றிக் கொண்ட என் நினைவுகளை பற்றியதுதான் என் கனவு....! எல்லா நிகழ்வுகளையும் பொறுமையோடு கவனித்துக் கொண்டிருந்த வானம், அதற்கு மேல் தனது பொறுமையை தக்க வைக்க முடியாமல் எழுதிய கவிதையை மழையாய் பூமிக்கு அனுப்பி வைத்தது....

சாதரண நாட்களில் ஆள் அரவமற்றே இருக்கும் அந்த பெசண்ட் நகரின் ஆழமான தெருக்களூடான பரந்த சாலையில் மழையை தொட பாக்கியமற்ற மனிதர்கள் எல்லாம் ஓடிப் போய் மறைந்து கொண்டார்கள்...

நான், அவள் , மழை மற்றும் எங்களை எடுத்துச் செல்ல ஒரு மரங்களடர்ந்த சாலை...! துப்பட்டா மழையில் நனைந்து ஒடுங்கிப் போய் அவளோடு ஒட்டிக் கிடந்தது. அவள் என்னிடம் மழையில் நனைவோமோ என்று அவள் கேட்ட வார்த்தைகள் என்னை நனைத்தது...! கூலிகள் எல்லாம் கரும்பு தின்ன யாரச்சும் வாங்குவார்களா? என்று யோசித்தபடியே அந்த தித்திப்புக்குள் என்னை திணித்துக் கொண்டேன் சரி என்று சொன்ன படி...

காலம், காலமாய் மழை மனிதர்களின் வாழ்வில் எப்போதும் ஒரு கிறக்கத்தை உண்டு பண்ணும் வஸ்து. சூட்சும கவிதை. சூழலின் குழந்தை. மனதுக்குப் பிடித்த மழலை. நீ சொன்னாய் நான் கேட்டுக் கொண்டே சொன்னேன் காதலுக்கும் மழை பெரும் கருவாய்த்தான் காலங்கள் தோறும் இருந்து வந்திருக்கிறது...? என்றேன், ஆனால் நீயோ காதலுக்கு காதல்தான் கரு என்று சொல்லி முடித்து விட்டு என்னை பார்த்தாய்...! அந்த பார்வையில் ஏதோ ஒரு மொழி எனக்குப் பிடிபட அதை உள்வாங்கிக் கொண்டு உன் உதடுகளின் மீது ஊர்ந்து கொண்டிருந்த மழை நீரை நான் உற்று நோக்கினேன்....

மேகமுடைந்து
ஜனித்து விழுந்து
மண்ணைத் தொடும் முன்
நீ மோட்சம் அடைந்து விட்டாயா...
நீர்க் குட்டியே?

மெதுவாய் நான் சொன்னக் கவிதையை கேட்டு விட்டு சப்தமாய் சிரித்தாள்....! நான் மழையின் குளிரைத் தாண்டிய ஒரு வெம்மைக்குள் பயணப்பட்டுக் கொண்டிருந்தேன். காதலை போதிக்கவும், காதலில் சாதிக்கவும் ஒன்றுமில்லை. காதல் என்பது சறுக்கலும் இல்லை வழுக்கலும் இல்லை அது மனம் மனதோடு தழுவும் தழுவல்.

ப்ரியங்கள் என்னும் உணர்வுகள் இருவருக்குள் தங்கு தடையின்றி சென்று வர முடியுமெனில் அவர்கள் காதலிக்கறார்கள் என்றுதான் அர்த்தம். பெரும்பாலும் மனிதர்களுக்கு இப்படியான ஒற்றைக் காதலும் காதலியும் கிடைத்துதான் விடுகிறார்கள். மிகையாக நிகழும் இது போன்ற நிகழ்வுகள் ஆனால்....

காதலை கட்டுப்படுத்த முயலும் போது, காதலியின் காதல் தனக்கு மட்டுமே வேண்டும் என்று ஒரு காதலன் எண்ணும் போதும், அல்லது காதலி கருதும் போது அங்கே காதல் என்ற ஒன்று உடைந்து போய் விடுகிறது. இதோ.. இதோ.. இதோ இந்த மழையை யாரேனும் கட்டுக்குள் வைக்க முடியுமா? இயலாதல்லவா? மழை எவ்வளவு எல்லோருக்கும் பொதுவானதோ அவ்வளவு பொதுவானது காதலும்.

பிடிக்கும் நிலத்தில் விழும் நிலையில் வித்துக்களில் ஊறி செடிகளாய் கிளைத்து நிற்கும், பற்ற முடியாத நிலத்தில் பரவிப்பாய்ந்து மண்ணுக்குள் சென்று மறைந்தே விடும் இல்லையே கொளுத்தும் வெயிலில் தன்னை மறைத்து மீண்டும் ஒரு மேக சுழற்சிக்குள் சென்று விடும். காதலும் மழை மாதிரிதான் தன்னை வாங்கும் மண்ணுக்குள் வசதியாய் மழை நீர் எப்படி தன்னை கரைத்து மறைந்து போகிறதோ அதே போல தன்னை வாங்கும் மனிதனிடம் ஒடுங்கிக் கொள்கிறது.

எனக்கு உன்னை பிடிக்கிறது என்று வைத்துக் கொள்ளேன். அதை நான் சொல்ல வேண்டும் என்று நீ எதிர்பார்ப்பது உனது சுயநலம் அப்படி நான் சொல்வதும் சுயநலம். எனக்குப் பிடித்தது சொல்லாவிட்டாலும் பிடித்ததுதான். எனது இயல்புகளில் எனது விருப்பங்கள் எப்போதும் நிறைந்திருக்கும். விருப்பங்களை வைத்து மனிதர்களை மனிதர்கள் எப்போதும் எடை போடுவதில்லை மாறாக வார்த்தைகளுக்கும் அதன் மூலமான ஒரு நாடக வாழ்க்கைக்கும் மனிதர்கள் முக்கியத்துவம் கொடுத்து விடுவாதல் இயற்கையான காதல் பெரும்பாலும் மனிதர்களால் கொல்லப்பட்டுதான் விடுகிறது.

உனக்கு பிடித்தவளை நேசிக்க நீ மட்டுமே போதுமானவன். உன் சுயநலத்தின் முதல் படி அவள் உனக்கு மட்டும் வேண்டுமென்பது, அடுத்த படி அவளை காமவயபடுத்துவது, மூன்றாம் படி பிள்ளைகள் பெறுவது இப்படி சுயநல கம்பிகளுக்குள் அகப்பட்டுக் கொண்டு காதலைக் காணோம் என்று தேடினால் பெண்ணின் கழுத்தில் ஆண் கட்டும் மஞ்சல் கயிற்றிலா மறைந்திருக்கிறது காதல்?

மனித மயக்கத்தில் காதலென்ற சொல் மட்டும்தான் எஞ்சி நிற்கிறது அதன் உண்மைப் பொருள் உறிஞ்சப்பட்டு வெற்று எலும்புக் கூடாய் இருக்கும் ஏதோ ஒன்றைத்தான் காதல் என்று இன்றூ மியூசியத்தில் வைத்துக் கொண்டு நாம் காட்சிப்படுத்திக் கொண்டிருக்கிறோம். காதலின் வேர்கள் சூட்சுமமானவை அது எப்போதும் நேசிப்பை பகிங்கரப்படுத்துவது இல்லை.......

ஆமாம்.. நீ யாரையாவது காதலிக்கிறாயா.....???????

என்று என்னிடம் கேட்டு விட்டு சப்தமாய் சிரித்தவளுக்கு வலப்புறத்தில் அவளின் வீட்டுக் காம்பவுண்ட் சுவரும் கேட்டும் இருந்ததில் வெகுதூரம் நடந்து விட்டோம் என்று தெரிந்து விட்டது.

அவள் என் மறுமொழிக்கு காத்திரமால் அவள் வீட்டு இரும்புக் கேட்டினுள் சென்று உள்ளிருந்து எனக்குள் செலுத்திய அர்த்தம் பொதிந்த அன்றைய பார்வையோடு மீண்டும் ஒரு முறை கேட்டாள்..ஒரு புன்னைகைய உதட்டில் தேக்கிக் கொண்டு...

'நீ யாரையும் காதலிக்கிறியான்னு கேட்டேன்.....' அவள் இசைத்தாள்....

மழை நின்றிருந்தது.....! நான் வெளுத்திருந்த வானத்தை பார்த்தபடி என் தலைமுடிக்குள் விரல் கொண்டு கோதி மழை நீரை வடித்த படி... மெதுவாய் சொன்னேன்...

" எனக்கு தெரியலை வாணி....."


அப்போ கிளம்பவா? பாய் என்றேன்..! மறு மொழியாய் எனக்கு ஒரு பாய் வந்து விழுந்தது.....

தெருவின் முனை வரை தண்ணீர் சொட்டும் உடையோடு நடந்து தெரு முனையை அடைந்தவுடன் தலை திருப்பி அவளின் வீட்டினைப் பார்த்தேன்...

அவள் என்னைப் பார்த்துக் கொண்டு இன்னமும் நின்று கொண்டிருந்தாள்....! நான் மெளனமாய் அந்த வீதியைக் கடந்து நடந்து கொண்டிருந்தேன்.....

வானம் முழுதாய் வெளுத்திருந்தது.


தேவா. S


Saturday, May 28, 2011

எனக்கு ரஜினி பிடிக்கும்....!

எனக்கு ரஜினி பிடிக்கும். எனக்கு ரஜினி பிடிக்கும். எனக்கு ரஜினி பிடிக்கும். எனக்கு மட்டுமல்ல என்னைப் போல கோடாணு கோடி பேருக்குப் பிடிக்கும். ஏன் பிடிக்கும் என்று கேட்கும் நாக்குகளுக்கு வார்த்தைகளை கொடுத்த மூளைகள் எல்லாம் மனிதர்கள் ஜனித்த பிண்டங்களுக்கு உரியதா? இல்லை இரும்பில் வார்த்தெடுத்து இயக்கங்கள் கொடுக்கப்பட்டதா?

ஒரு மனிதனைப் பிடிக்க ஓராயிரம் காரணம் தேவையில்லை. இது மனம் சம்பந்தப்பட்ட விசயம். அறிவுகளின் செழுமையில் சில வக்கிர குரல்கள் தன்னின் சப்தங்களை உயர்த்தி ரஜினியை ஏன் இப்படி சீராட்டுகிறார்கள்? தமிழகம் ஏன் தடம் புரண்டு கொண்டு இருக்கிறது? அவர் ஒரு சுயநலவாதி, எந்த போராட்டத்தில் ஈடு பட்டார்? அவரின் தாடி ஏன் நரைத்திருக்கிறது, தலையில் முடியற்று விக் வைத்து நடிக்கிறார் என்றெல்லாம் சொல்லி தம்மின் கேவலமான மனோநிலைகளை வெளிப்படுத்தி தாமெல்லாம் பைத்தியக்காரர்கள் என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

அடக் கேவலங்களே! எமக்கு ரஜினையைப் பிடிப்பதில் உமக்கு என்ன சிரமம்? முவ்வேளையும் நீவீர் உண்ணும் சோற்றுப் பருக்கைகளை வயிற்றுக்குச் செல்ல விடாமலா நாங்கள் தடுத்தோம். ஒரு மனிதன் இன்னொரு மனிதனை நேசிக்க வேண்டுமெனில் நீசர்களின் வரலாற்றில் அந்த மனிதர் எங்காவது தெருவில் அமர்ந்து போராடியிருக்க வேண்டும். இல்லையே அரசியல் செய்து மீடியாக்களின் முன் தன்னைப் பற்றி மற்றவர்களை பேச வைத்திருக்க வேண்டும். இல்லையேல் பெரும் தலைவராய் இருக்க வேண்டும்.

இப்படி எல்லாம் இல்லாமல் சக மனிதனை ஒரு நடிகனை நேசித்து விடவே கூடாது. திரையில் யாம் பார்த்த ஒரு நடிகனுக்கு உடல்நிலை சரியில்லை என்பதை கண்டு நாங்கள் கலங்கினால் உமக்கு ஏளனம்??? கிண்டல், கேலி.......

வெட்கங்கெட்ட தேசத்தில் வெறிநாய்களை எல்லாம் தலைவர்களாக்கி ஆட்சி போகத்தில் அமர அனுமதி கொடுத்து விடுவீர்கள். அண்டை தேசத்தில் தமிழனின் உயிரை எல்லாம் சூறையாட துணை போன தேசிய கட்சிகளுக்கு எல்லாம் வெட்கங்கள் அற்று போய் ஓட்டுப் போட்டு வாழ்க ஒழிக என்று கத்துவீர்கள்? ஆனால் தான் ரசித்த தான் நேசித்த ஒரு நடிகன் உடல் நலம் குன்றிப் போய் நா தழு தழுத்து பேசும் வேளையிலும் கூட நான் காசு வாங்கிக் கொண்டுதான் நடிக்கிறேன் என்னை ஏன் இவ்வளவு சீராட்டுகிறீர்கள் என்று தன் மனசாட்சிப் படி பேசினால் அவரை ஏசுவீர்கள்?

தமிழத்தை காக்க வந்த தேவ தூதுவர்களுக்கு உங்களின் மூளைகளை கசக்கிக் கொண்டு உலக தத்துவ நூல்களை எல்லாம் வாசித்து விவாதி விட்டு நீங்கள் கொடி பிடியுங்கள், கோஷமிடுங்கள், உண்ணாவிரதம் இருங்கள் யாரும் தடை சொல்லவில்லை ஆனால் எம்மைப் போன்ற மனிதாபிமானமுள்ள மனிதர்களை தான் நேசித்த மனிதரின் நலனுக்காக இரண்டு சொட்டு கண்ணீர் விட விடுங்கள்.

உங்களின் டப்பாங்குத்து ஆட்டத்தை எல்லாம் எமது சோகமான நேரத்தில் போடக்கூடாது என்ற அடிப்படை மனித நேயம் அற்றுப் போன மரப்பாச்சி பொம்மைகளே...! உமது வீட்டிலும் ஒரு சோகம் வரும் அப்பொது யாரேனும் மத்தளம் வாசித்து ஆடுவார்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

ஒரு மனிதன் இன்னொரு மனிதனை நேசிக்க அறிவும் ஆராய்ச்சியும் தேவையில்லை ஜடங்களே...! தான் நேசிக்கும் அந்த மனிதன் அடுத்தவருக்கு தொந்தரவு அற்றவராக தமக்குப் பிடித்தவராக இருந்தால் மட்டும் போதும்....! ரஜினி வயாதாகியும் நடித்துக் கொண்டிருப்பதால் உமது மாத சம்பளத்தில் ஏதேனும் பிடித்துக் கொள்கிறார்களா? இல்லை நீவீர் சோற்றை அள்ளி வாயில் வைக்கும் போது வலக்கை வாய்க்குச் செல்லாமல் காதுக்கு செல்கிறதா? எது உமது பிரச்சினை?

உமது பிரச்சினையெல்லாம் ஆழ்மனதில் உமக்கு இருக்கும் தாழ்வு மனப்பான்மை என்று கருதிக் கொள்ளலாம் என்று பார்த்தால் இது அதையும் மீறி உம்மை பிரபலப்படுத்த நீவீர் செய்யும் தெருக்கூத்து என்பதும் தெளிவாய் புரிகிறது.

ஒரு மனிதனுக்கு முடியாவிட்டால், உடல்நலன் குன்றியிருந்தால் பதறக் கூட வேண்டாம் ஆனால் ஒரு வருத்தம் கூட இல்லாமல் அந்த மனிதனை விமர்சிப்பது எல்லாம் மானிடப் பதர்கள் எனக் கொள்ளலாமா? எங்கே இருந்து முளைக்கிறது உமக்கு கேவல கொம்புகள்? காலம் எல்லாவற்றையும் செதுக்கிப் போட்டு விடும்.. என்ற சிற்றறிவு கூட அற்றுப் போய் ரஜினியைப் பற்றி தாறுமாறாய் விமர்சிக்கும் ஒரு போக்கிற்கும், மனிதர்களுக்கும் இந்த கட்டுரை கடும் கண்டனங்களை ஆழமாகப் பதிந்து....

ரஜினி என்னும் ஒரு மனித நேயம் கொண்ட மனிதன் எல்லா உடல் நலக் குறைவுகளிலும் இருந்து விடுபட்டு வெளிவந்து தன் குடும்பத்தாரோடும், தன்னை நேசிக்கும் ரசிக்கும் மனிதர்களுக்கு நடுவே நீ டூடி வாழ்க என்று ஏக இறையிடம் எமது பிரார்த்தனைகளையும் மானசீகமாக சமர்ப்பிக்கிறது.

தேவா. S


Friday, May 27, 2011

சொல்லாமல்...!உணர்வுகளை காதலாக்கி
என்னின் ஒவ்வொரு
நிமிடத்துக்குள்ளும் பதித்து விட்டு
உன்னை தொலைத்துக் கொள்கிறாய்... நீ!

என் உதடுகளுக்குள்
சிக்கிக் கொண்டு தவிக்கும்
வார்த்தைகளை உன்னிடம்
நேரே சொல்லும் திரணியற்று
கவிதைகளில் கடை விரிக்கிறேன் நான்!

சப்தங்களில் தொலையும் காதல்
மெளனத்தில் வாழும்
என்று என்றோ நீ சொன்னது
இன்று எப்போதும் எனக்குள்
சப்தமாய் ஒலித்துக் கொண்டிருக்கிறது!

ஒரு மொட்டை மாடி
நிலவை தனியே நான் ரசித்த பொழுதில்
ஆழமாய் வந்து உரசி நின்ற
உன் நினைவுகளை விட்டுக் கூட
நான் தள்ளிதான் நின்றேன்!

காணப்படாமலேயே இருக்கும்
ஒரு அழகிய கனவாய்
என் நினைவுகளில் சிக்கிக் கிடக்கும்
ஒரு அழகிய காதலை
வார்த்தைகளுக்குள் கொண்டு வரும்
என் முயற்சிகள் எப்போதும்
தோல்வியைத் தான் தழுவுகின்றன!

ஆழமாய் உன் விழிகள் பார்த்து
மெளனத்தால் கதைகள் பகின்று
மனதால் கரங்கள் பற்றி
தூர நிற்கும் இடைவெளிகளிலேயே
எப்போதும் சிறகடிக்கும்
உன் மீதான உற்சாக காதலை
சொன்னால்தான் என்ன....?
சொல்லா விட்டால் தான் என்ன?

தேவா. S

Thursday, May 26, 2011

அதிகப் பிரசங்கி...!


சிரிச்சுகிட்டே
இருக்கணும் எப்போ தெரியுமா...? எப்போ நிறைய சேலஞ்சும் ரிஸ்க்கும் லைஃப்ல வருதோ அப்போ....!!! எப்பவுமே ஒரு வேலைய திரும்பி திரும்பி செய்றதுல எனக்கு எல்லாம் எப்பவுமே ஒத்து வராது. தினம் தினம் புது புது விசயம் புது புது ரிஸ்க்.... தலைக்கு நேரே பறந்து கத்தி வர்ற வரைக்கும் நான் பாத்துக்கிட்டு பாட்டு கேட்டுகிட்டுதான் இருப்பேன்..ஆனா கத்தி வரதை கவனிக்காம இருக்க மாட்டேன். வரட்டும் பாத்துக்கலாம்...கத்திய வீசுனவனுக்கு என்ன பாத்தா அடப் பைத்தியமே இவ்ளோ தூரம் முன்னாடியே பாத்துட்டியே இன்னும் ஏன் கண்டுக்காம இருக்கன்னு நினைப்பு வரும்...

எனக்குத் தேவை ஒரு 2 செகண்ட் அதுல இருந்து எஸ்கேப் ஆக பட் அந்த ரெண்டு செகண்ட் எப்போன்னு நான் முடிவு பண்ற வேகம் இருக்கு பாத்தீங்கன்னா திட்டமிடாம ச்ச்ச்சுமா டக்கு டக்குனு நடந்துடும். கத்திய எப்பவுமே வீசுறது யாருன்னு கேக்குறீங்களா?????? மனுசன் எல்லாம் ஏன் பாஸ் நம்ம மேல கத்திய வீசப் போறாங்க....நம்ம மேல கத்தி வீசுற ஒரே ஆளு வாழ்க்கைதான்...!

ஒரு சப்தமில்லா வாழ்க்கை வாழும் ஆசையில் பயங்கர பிசியான ஒரு வாழ்க்கை சுழற்சிக்குள்ள மாட்டிகிட்டு தினமும் கனவுகளில் எனது நிசப்த நேரங்களைப் பற்றி சிந்திக்க வேண்டியதாயிருக்கு. ஒரு வேலை சாந்தியும் அமைதியுமான ஒரு லைஃப் இருந்திருச்சுன்னா நாம பிசியா இருக்குற மாதிரி எப்பவும் சேலஞ்ச்சிங்கா இருக்குற ஒரு லைஃப் வேணும்னு ஆசை வந்து இருக்குமோ என்னவோ தெரியாது.

பட் இப்போ எனக்கு அப்டி தோணுது. சில நேரங்கள்ல யார்கிட்டயும் பேச மட்டும் பிடிக்காம இல்ல...யாரு பேசினாலுமே அந்த வார்த்தைகள் செவிகளின் வழியே ஊடுருவி மூளைக்குள்ள போயி அங்க ஏற்கனவே செய்தியா குவிஞ்சு கிடக்குற இடத்துல அடிச்சு பிடிச்சு சண்டை போட்டு தானும் ஒரு இடத்தை பிடிக்க முயலும் போது...............மை......காட்............வில் யூ ப்ளீஸ் ஸ்டாப் இட்ன்னு கத்தணும் போல இருக்குங்க..!!!

பேச்சு பேச்சு பேச்சு.. பேச்சு .......எங்கு பாத்தாலும் பேச்சு. யாரச்சும் பேசிகிட்டே இருக்காங்க...! எதித்தாப்ல இருக்க ஆளுக்கு தேவையோ தேவையில்லையோ என் புலமைய காட்ட நான் பேசிகிட்டே இருப்பேன் அப்டீன்ற ஒரு புற்று நோய் நிறைய பேருக்கு இருக்கறத உணர்வு பூர்வமா தெரிஞ்சுக்கிட முடியுது. பேசி பேசி உலகத்தை மாத்த முயன்றவங்க எல்லாம் தானே அதுக்கு ஒரு உதாரணமா இருந்தாங்க இப்போ எல்லாம் அப்டீ எல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. எல்லோருமே ஹிப்போகிரேட்தான் இன்க்ளுடிங் மீ. இதுல என்ன ஒரு மேட்டர்னா சொல்றது ஒண்ணு செய்றது ஒண்ணு அப்டீன்றதுல எத்தனை சதவீதம் வேறு படுறாங்கன் அப்டீன்றத வச்சுதான் அதுல நல்லவங்க கெட்டவங்கன்னு பிரிச்சுக்கிறோம் தட்ஸ் ஆல்.

தனிமை வேண்டும், அமைதி வேண்டும் இப்டி எல்லாம் யோசிக்கும் போது அப்டி தனிமைய அனுபவிக்கும் போதும், அமைதிய தேடி போகும் போதும் லெளகீக பந்தங்களோடு ஏற்பட்டிருக்கும் கடமைகளை நிறைவேத்திடனும் அப்டீன்னும் தோணுது. ஏன்னு கேட்டீங்கன்னா இந்த வாழ்க்கை நானா உருவாக்கி கிட்டதா? இல்லை? இந்த பிறப்பு நானே ச்ச்சூஸ் பண்ணினதா? அதுவும் இல்லை எல்லாமே ஒரு செட் அப், கிரியேட்டெட் அல்லது உருவாக்கப்பட்டது.

நான் இப்டி வாழணும் அப்டி வாழணும்னு விரும்புறேன். அப்டி வாழும் போது நான் நினைச்ச மாதிரி சில விசயங்கள் நடக்குது. அப்டி நடக்கும் போது உடனே நான் ப்ளான் பண்ணி அச்சீவ் பண்ணினேன்னு சொல்லிக்கிறேன். அப்டி நடக்காதா போது நான் நினைச்சது நடக்கல அப்டீன்னு ஒரு பில்டப் கொடுத்து வாழ்க்கைய குறை சொல்றேன்.....

ஆக மொத்தம் என்னதான் நாம அப்டி இப்டி அலைஞ்சு திரிஞ்சாலும் சரியா அலைஞ்சு திரியணும் அப்பதான் நடக்குறது ஒழுங்கா நடக்கும். காலையில தூங்கி எழுந்து டீ வேணும்னு நினைச்சுகிட்டே இருந்தா டீ வந்துடுதா என்ன? பால் வாங்கணும், அடுப்ப பத்த வைக்கணும், டிக்காசன வைக்கணும்.. இவ்ளோ இருக்கு.

டீ போடுறது எப்டீன்னு ப்ளான் பண்ணி பத்து பக்கத்து டீட்டெய்ல்ஸ் எழுதலாம். டீ குடிக்கிறது எப்டீன்னு சொல்லிக் கொடுக்கலாம். பட் டீ போடணும்னா.......எந்திரிச்சு போயி நாமதான் வேலை பார்க்கணும் இல்லையா..பேசிட்டே இருந்தா டீ டீயாயிடுமா....அங்க கூட்டத்துல ஒருத்தர் கத்துறார் பாருங்க..எனக்கு மனைவி இருக்காங்கன்னு........ஹா ஹா ஹா பாத்து பாஸ்... ஆணாதிக்கம்னு சொல்லி பிரச்சினை பண்ணிடப் போறாங்க...!

மறுபடியும் ' பேச்சு ' பத்தின மேட்டருக்கு வாங்க.........வழி மாறி போய்ட்டோம்ல....

பேசி எல்லாம் யாருக்கும் யாரும் புரிய வைக்க முடியாது சார். பேசி புரிஞ்சு ஒருத்தர் நீங்க சொல்றத கேக்குறார்னா அது உங்க பேச்சால வந்த மாற்றம் இல்லை. அப்படி மாறும் தன்மை அவர்களுக்குள் ஏற்கனவே இருந்திருக்கிறது. நீங்க இல்லேன்னா கூடா ஏதோ ஒரு காட்சியோ பாடலோ அல்லது புத்தகமோ அந்த வேலைய செஞ்சு இருக்கப் போகுது. இதுக்கு ஏன் நான் பேசி ஒருத்தர மாத்திட்டேன்னு நாம நினைக்கணும்?

லவோட்சூ என்ன பண்ணுவாங்களாம் தினமும் வாக்கிங் போவாங்களாம் பக்கத்து வீட்டுகாரர் கூட. இரண்டு மைல் தூரம் போவாங்களாம் ஆனா எதுவுமே பேசிக்க மாட்டாங்களாம். ஆமால்ல போறது வாங்கிங் அங்க எதுக்கு பேச்சு? நியாயம்தான? ஒரு நாள் பக்கத்து வீட்டுக்காரர் வீட்டுக்கு ஒரு கெஸ்ட் வந்து இருந்தாங்களாம். அந்த கெஸ்ட்டும் வாக்கிங் வர்றேன்னு கூட வந்தாராம். மூணு பேரும் ரெண்டு மைல் நடந்துகிட்டு இருக்கும் போது காலையில சூரியன் உதயம் ஆகுற காட்சிய பாத்த அந்த பக்கத்து வீட்டுக்காரரோட கெஸ்ட் சத்தமா சொன்னாராம்......' என்னே அழகிய சூரிய உதயம்'னு அவ்ளோதான் நடந்து இருக்கு...

வாக்கிங் முடிஞ்சு வீட்டுக்கு திரும்பிய உடன் பக்கத்து வீட்டுக்காரரின் கெஸ்ட் முதல்ல வீட்டுக்குள்ள போயிட்டாராம். அப்போ பாத்து லாவோட்சூ சொன்னாராம் பக்கத்து வீட்டுக்காரர் கிட்ட " உன் வீட்டுக்கு வந்த கெஸ்ட் ஒரு வாயாடியா இருப்பான் போல இருக்கே? இனிமே கூட்டிட்டு வராத'னு சொல்லிட்டு லாவோட்சூ தன்னோட வீட்டுக்குள்ல டக்குனு போயிட்டாராம்.

இதுல என்ன மேட்டர்னா? சூரிய உதயத்தை மூணு பேரும் பாத்தங்க அது அருமையான சூரிய உதயம்னு அந்த கெஸ்ட்டுகு தோணின வரைக்கும் சரிதான்.. அதை எதுக்கு சத்தமா சொல்லணும்? இது முதல் கேள்வி சரியா? இரண்டாவது கேள்வி அப்டி அழகான சூரிய உதயம்னு மத்த ரெண்டு பேரும் ஃபீல் பண்ணியிருந்தா அது அவுங்களுக்கே தெரியும் தானே? திஸ் இஸ் செகண்ட் கொஸ்ஸின்...ஹா ஹா..ஹா இருங்க இருங்க இன்னும் இருக்கு மூணாவது கேள்வி என்ன தெரியுமா? அப்டி அவுங்களுக்கு பிடிக்கலேன்னா கூட நீ சத்தமா சொல்லி அவுங்க மைண்ட்ட இன்ஃபுளுயன்ஸ் பண்ணப் பாக்குறியா? இப்டி எல்லாம் இருக்கு இல்லங்க....

அதனாலதான் லாவோட்சூ அவரை அதிகப் பிரசங்கின்னு சொல்லிட்டுப் போயிட்டார். நாமளும் ஒரு நாளைக்கூ எவ்வளவோ பேசுறோம். பேசுங்க தப்பு இல்லை ஆனா பேசுறதுக்கு முன்னால இதோட அவசியம் என்னனு யோசிச்சுட்டு பேசலாமே....? இப்போ உங்க கிட்ட ஒரு முக்கியமான விசயம் சொல்றேன் டென்சன் ஆகாம கேளுங்க...

என்னை சுத்தியும் நிறைய பேரு பேசுறாங்க... ஆனா எனக்கு நிறைய பேர்கிட்ட இருந்து எனக்கு வர்றது எதுவுமே எனக்குத் தேவையே படாதது. பட் ஷேக் ஆஃப் சேயிங் பேசிகிட்டே இருக்காங்க.. ஹா ஹா ஹா!!!!

மறுக்க முடியாதுல்ல பாஸ் வாழ்க்கையில்லையா இதைக் கடந்துதானே போகணும்......! பிரசங்கியா கூட இருக்கலாம்........ஆனா அதிகப் பிரசங்கியா மட்டும் இருக்கவே கூடாதுங்கோ.......!!!!!!

அப்போ வர்ர்ர்ட்ட்டா!!!!

தேவா. S

Sunday, May 22, 2011

கல்லாதது உலகளவு...!


நிலவின் அழகை ரசிப்பதில் இருக்கும் சுகம் ஆராய்வதில் கிடைக்குமா? மூலக்கூறுகளும், சமன்பாடுகளும், விதிமுறைகளும் கற்றிருந்தாலும் அதை மறத்தல்தான் சுகம்.

சைவ சித்தாந்தத்தை கைக் கொண்டு சிவநெறியில் வாழ்ந்து சூன்யமே சத்தியத்தின் மூலம் என்று தெளிந்த சிவவாக்கிய சித்தர் பின்னாளில் வைணவத்தை தழுவி இறைவனுக்கு உருவ வழிபாடு செய்து திருமழிசை ஆழ்வாராக மாறினார் என்று சொல்வார்கள்.

வாழ்க்கையில் தன்னின் சுயத்தை காண விரும்பும் ஒருவனுக்கு எதிரே ஒரு ஆப்ஜக்ட் தேவைப்படுகிறது. மனோபலம் உள்ளவர்கள் தன்னை உள்நோக்கும் சக்தி வந்தவுடன், தன் உடலை எது இயக்குகிறதோ அதுவே இந்த பிரபஞ்சத்தையும் இயக்குகிறது என்ற உண்மையை உணர்ந்தவர்கள் உருவங்களை கலைந்து விட்டு வெளியே வந்து விடுகிறார்கள் ஆனால் அது ஒன்றும் அவ்வளவு எளிதான செயல் இல்லை.

கடவுள் இல்லை என்று அடித்து மறுப்பவர்களில் எல்லோருமே மன திடமுடன் சொல்கிறார்கள் என்று சொல்ல முடியாது. இல்லை...இல்லை என்று சொல்லும் போது இருக்குமோ என்ற எண்ணமும் கூடவே தொடர்வது மறுக்க முடியாதது. இப்படி சொல்வதாலேயே மனதிடன் இல்லாதவர்கள் இல்லையென்றே சொல்லவும் முடியாது...

மனதிடன் - அகங்காரங்கள் அற்றது, நிலையாமை உணர்ந்தது, சக மனிதரில் தவறு செய்தவர் இருந்தாலும் மன்னித்து அரவணைத்து செல்வது, மன்னிப்பு கேட்க தெரிவது, வன்முறைகள் தேவைப்படும் இடத்தில் வன்முறைகளை தப்பாமலும், மெளனங்களில் பூரண மெளனமாயும் இருப்பது, கோபங்களை தவறுகளில் காட்டி மனிதர்களை நேசிப்பது

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

மன திடன் = அகங்காரம் இல்லாத தன்னம்பிக்கை + அரவணைக்கும் பக்குவம் = மூல உண்மை.

ஏன் இவ்வளவு சொல்கிறேன் என்றால், பிடித்தமான விசயங்களை மனிதர்கள் செய்யும் போது அவர்களின் பிடித்தமான விசயங்களை உற்றுப் பார்த்து ஆராயாதீர்; அப்படி செய்வது ஒவ்வொருவரின் மன திருப்திக்காக மேலும் மன வலுவுக்காக.....!

அரசியலையும் இலக்கியத்தையும் பேசுவது உங்களது ஈகோவுக்குக் தீனி போடுகிறது, சுவாரஸ்யமாயிருக்கிறது என்றால் ஒரு நடிகனை நேசிப்பதும் அவனுக்காக கதறுவதும் இன்னொருவனுக்கு சுவாராஸ்யமாய் படுகிறது.

கடவுளை மறுப்பது ஒருவரின் சுவாரஸ்யம் என்றால் ஏற்பது இன்னொருவரின் சுவாரஸ்யம். உங்களுக்கு எப்படி அவர் அபத்தமாய் தெரிகிறாரோ அப்படித்தான் அவருக்கும் நீங்கள் தெரிகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

கொஞ்சம் விசயம் தெரிந்துவிட்டால் போதும் உலகில் இருக்கும் எல்லாவற்றையும் சரி தவறு என்று நிறுவி பேசி விடலாம். இப்படி கொஞ்சம் விசயம் தெரிந்த மிகைப்பட்ட பேர்கள் உலாவும் இடமாக இணைய உலகம் இருப்பதால் எல்லோரும் தனக்கு நிறையவே தெரியும் என்று எண்ணிக் கொள்கிறார்கள்...

நான் சொல்வதே இறுதி உண்மை என்று தத்தமது அகங்காரங்களை எடுத்து உரசிக் கொள்கிறார்கள், ஆனால் உலகில் எத்தனை கோடி மனிதன் இருக்கிறானோ அத்தனை கோடி கொள்கைகளை மனம் ஏற்படுத்தி வைத்திருக்கிறது. இங்கே ஒவ்வொருவரின் வசதிக்கு ஏற்ப அதனை எடுத்து கையாளுகிறார்கள்.

கொடி பிடித்து ரோட்டில் இறங்கி ஒரு கட்சிகாக வாழ்க, ஒழிக என்று கோசம் போடுபவனை கோவிலில் கற்பூரம் ஏற்றி சாமி கும்பிடுபவன் முட்டாள், பைத்தியக்காரன் என்று சொல்கிறான், கற்பூரம் ஏற்றி சாம்பி கும்பிடுபவனை எனக்கு உலக அரசியல் எல்லாம் தெரியும் இவன் என்ன முட்டாளாக இருக்கிறானே என்று கொடி பிடிப்பவன் நினைக்கிறான்.

இதுதான் மாறி மாறி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இவையெல்லாம் கடந்து வர வாழ்க்கையின் அனுபவங்களின் மூலம் புலன் மயக்கத்தால் தோன்றும் மமதைகளை விட்டொழிக்க வேண்டியிருக்கிறது. கூவி, கூவி பேசுகிறார்கள், விரல் நுனியில் உலக விசயங்களை ஒரு இயந்திரத்தைப் போல ஒப்பிக்கிறார்கள். நான் யார் தெரியுமா? என்று கொக்கரிகிறார்கள்...இவன் செய்தது சரியில்லை என்றூ ஒரு கூட்டம் குதிக்கிறது அவன் சொல்வது சரியில்லை என்று ஒரு கூட்டம் குதிக்கிறது

மொத்ததில் எல்லாமே அபத்தங்களின் கூட்டாய் ஒரு சர்க்கஸ் கூடாரத்தின் கோமாளிக் கூத்தாய் வெளிப்படுகிறது. அதிகம் புத்தகம் வாசித்தவன் அதிகம் விசயங்கள் தெரிந்தவன் அடங்கியிருக்க வேண்டாமா? இவன் புத்தியை அறியாதவர்களிடம் காட்டி கொக்கரிக்கவா பயன்படுத்துவது? பண்படு என்பதிலிருந்து வந்ததுதானே பண்பாடு என்ற சொல். கல்வி பண்பை கொடுக்க வேண்டாமா? மாறாக அகங்காரத்தை கொடுத்தால் கற்றது கல்வியா?

உவப்ப தலை கூடி உள்ளப் பிரிய வேண்டாமா? உவப்பத் தலை கூடத் தெரியவில்லை எனில் நீ என்ன புலவர்? உம்மிடம் உள்ளது என்ன புலமை? நீ என்ன கல்விமான்?

மனிதராய் பிறந்து விட்டால் ஏதேனும் ஒரு நிலைப்பாடு எடுத்து ஒரு சித்தாந்த கொட்டிலுக்குள் அடைபட்டு வாழ வேண்டுமென்ற பொது புத்தியில், எனக்கு எந்த நிலைப்பாடுமில்லை, உமது கூச்சல்கள் எல்லாம் எமக்குத் தேவையுமில்லை என்று ஒதுங்கி கூட இருக்க விடுவதில்லை ஆணவத்தை மனமாகக் கொண்ட மனிதர்கள்....

நீ கருத்து சொன்னாயா நீ இப்படிப்பட்டவன், சொல்லவில்லையா அப்படிப்பட்டவன், மெளனமாய் இருக்கிறாயா நீ ஒரு கோழை என்று விமர்சனங்களை நம்மை நோக்கிப் பாய்ச்சும் மடைமைகளின் பின்னால் ஒரு விலங்கின் புத்திதானே இருக்க முடியும்?

காலம் காலமாக அறிவினை உணர்ச்சியைத் தூண்டுவதற்கே பயன் படுத்தி பயன்படுத்தி மழுங்கிப் போய் கிடக்கிறது நமது சமுதாயம் மாறாக அறிவினை கொண்டு நமது உள்ளுணர்வை எழுப்பும் ஒரு பயிற்சி பற்றி யாருக்கும் தெரியாது. உள்ளுணர்வு விழித்தால் எதிராளியின் உள்நோக்கம் தெரியும், எதிராளியின் தவறுகள் புரியும், தவறுகள் புரிந்த பின் அவரிடம் எப்படி சண்டையிட மனம் வரும்?

புரிதல்களின்றி வழியைத் தவறவிட்ட ஒரு மனிதனை வழிகள் தெரிந்த மனிதன் தண்டித்தலும், எள்ளி நகையாடுதலும், எப்படி சரியான வழிமுறையாகும்? வழியற்றவனின் வாதங்களை எல்லாம் கொண்டு கோபம் கொண்டால் வழியை அறிந்திருந்தும் நாம் மூடர் தானே? முரண்களற்றது அல்ல வாழ்க்கை அதே நேரம் எல்லோரும் எல்லாமும் அறிந்திருப்பர் என்று எதிர்பார்த்தலும் சரியன்று.....

புரியாத மனிதர்களின் கோபங்களில் அவரை சரிசெய்ய முனையாதீர். காத்திருங்கள் சரியான தருணத்திற்காக, சரியான தருணத்தில் உமது தெளிவினை ஒரு கூர்வாளை நெஞ்சில் இறக்குவது போல இறக்கியே விடுங்கள். தெரிந்தவன் தெரியாதவன் என்று எல்லோரும் ஒரே இயல்பினன் தான்....சூழல்கள் விதைத்த பாடங்களில் மூளைகள் இடமாறி அவர்களை சிந்திக்க வைத்திருக்கலாம்....

நான் சரியானவன் என்று ஏகபோக உரிமை கொண்டு உரக்க உரக்க சப்தமிட்டு கூட்டத்தை கூட்டி தன் புஜ பலம் காட்டுபவன் முட்டாள்....

அன்பால் தன் புரிதலை வெளிப்படுத்தி, சத்தியத்தை மூளைகளுக்கு ஏற்றி தமது செயலால் சுற்றியிருப்பவர்களை கவர்பவன் ஞானி....!

ஞானிகள் முக்காலமும் போற்றப் படுவார்கள்!!!!


தேவா. S


Saturday, May 21, 2011

ரஜினி என்னும் மந்திரம்...!

இதோ...இன்றோ, நாளையோ நீ வந்து விடுவாய் என்று நானும் கவனத்தை வேறெங்கோ செலுத்திக் கொண்டிருக்கிறேன். நாள் தோறும் என் கவனத்தை மீறிய செய்திகள் காதில் வந்து விழுந்து கொண்டிருக்கின்றன. நான் கேட்க விரும்பவில்லை. எனக்கு எதுவும் வேண்டாம் என்று மெளனமாய் நான் கடக்க கடக்க மீண்டும் மீண்டும் காலம் செய்தியாய் என் செவிகளுக்குள் நான் கேட்க விரும்பா செய்தியை ஏன் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்ற எரிச்சல் வேறு...

நான் எனக்குள்ளே அழுந்தி, அழுந்தி நான் நேசித்த, நேசிக்கும் ஒரு மனிதனின் உடல் நலன் செம்மையாக வேண்டும் என்று நாளும் பிராத்தனைகளை செய்து கொண்டிருக்கிறேன். இன்று மதியம் கூட ஏதோ சிந்தனையில் இணையத்தினை துருவிக் கொண்டிருந்தேன். உன்னைப் பற்றி ஏதேனும் செய்திகள் இருக்கின்றனவா என்று....! மருத்துவமனையில் நீ இருக்கும் ஒரு புகைப்படம் பார்த்தால் கூட என் மனது திருப்திப் பட்டுப்போகும் என்று.....

என் விழிகளுக்கு வந்து கிடைத்த உன்னின் ஒரு புகைப்படத்தைப் பார்த்து நான் கண் கலங்கியது உனக்குத் தெரியாது. எனக்கும், எல்லாவற்றையும் இயக்கும் ஒரு பெருஞ்சக்திக்கும் மட்டுமே தெரியும். முடியாத போதும் நீ அழகுதான்!!!! நிற்க முடியாமலா நீ மகளின் மீது சாய்ந்து நின்றாய்....???

உனக்கு உடம்பு சரியில்லையா ரஜினி?

எனக்குள் கேள்வியாய் உள்ளே சென்ற வார்த்தைகள் கண்களில் என்னை மீறி அழுகையாய் எட்டிப் பார்த்தது. மழலையிலிருந்து நான் எப்படி பால்யத்துக்கு மாறினேன் என்று யாரும் சொல்ல முடியாதோ அப்படித்தான் நான் எப்போது உன்னை ரசிக்க ஆரம்பித்தேன் என்றும் சொல்ல முடியாது. உன்னோடு பிண்ணிப் பிணைந்த ஒரு இணைப்பு எப்படி ஏற்பட்டது என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை.

எனக்கு நடிப்பின் சூட்சுமங்களைப் பார்த்து வைகைப்படுத்தி ரசிக்கத் தெரியாது, கதையின் ஆழங்கள் பற்றிக் கணிக்கத் தெரியாது, இசையும், இயக்கமும் என்னவென்றே தெரியாது, வருமானமும், வாழ்க்கையும் தெரியாது ஆனால் திரையில் வரும் உன்னை எனக்கு பிடிக்கும். உன் வேகம் பிடிக்கும், வேகமாய் நீ பேசும் தமிழ் பிடிக்கும், மனிதர்களுக்கு மத்தியில் ஜொலித்த ஒரு நட்சத்திரம் நீ.

நீ எப்போது தலை கோதுவாய் என்று எதிர் பார்த்தே படம் முழுதும் பார்ப்பேன். நீ பேசும் வேகமும், சின்ன கண்களும், அலை பாயும் கேசமும், கவர்ச்சியான கருமை நிறமும் உனது மூக்கில் மத்தியில் இருக்கும் கருமையான ஒரு வெட்டுக் காயமும் முன் நெற்றியில் வலது ஓரத்தில் உனக்கு இருக்கும் ஒரு தழும்பும், இடது பொட்டில் இருக்கும் ஒரு தழும்பும் எனக்கு அத்து படி. நீ சிரித்தால் அது சிம்ம கர்ஜனை

எங்கெல்லாம் உன் புகைப்படம் கிடைக்குமோ அங்கெல்லாம் ஓடி ஓடிப் போய் தேடித் தேடி எடுத்து அது குப்பையாய் இருந்தாலும் கவலையின்றி எடுத்து சேகரித்து வைத்து பார்த்து பார்த்து உன்னை நேசிக்க சினிமா மட்டுமே ஒரு காரணம் என்றாலும் எனது பால்யத்தில் உன்னோடு ஏதோ ஒரு பளீச் என்ற ஒரு பரிச்சயம் இருந்தது போலவே எனக்கு ஒரு உணர்வு.

உன்னிடமிருந்து எனக்கு வந்த முதல் கடிதத்தை காதலோடு இன்னும் சேர்த்து வைத்திருக்கிறேன். ஆமாம் அது 1987 ஆம் வருடம் காலம் ஓடினாலும் அது ஒரு பிரிண்டட் கடிதம் என்றாலும் எனக்கு அது பொக்கிஷம்தான்.

உனக்கு உடம்பு சரியில்லையா ரஜினி?

அரைகுறை வெத்து வேட்டுக்கள் எல்லாம் தத்து பித்துவென்று அடித்து பிடித்து அரசியலில் நுழையவும், நுழைந்து ஆட்சியைப் பிடிக்கும் ஆசைகளோடும் நகரும் இந்த ஒரு காலப் போக்கில் நீ உச்சத்தில் நின்று சொச்சமுள்ள அரசியல் தலைகளும் உன் பின் அணி வகுக்க காத்திருந்த போது 1996 களில் அதை உதாசீனப்படுத்த்தி உன் ஆத்ம திருப்திதான் முக்கியம் என்று ஆன்மீக வாழ்க்கைக்குள் சென்றாய்.

நீ எதை செய்தாலும் அரசியலாக்கும் தமிழக ஊடகங்கள் இப்போதும் உன் உடல் நலக்குறைவையும் குறைவில்லாமல் காசாக்கிக் கொண்டிருக்கின்றன. காவிரி பிரச்சினையாயிருக்கட்டும், காயலாங்கடைப் பிரச்சினையாயிருக்கட்டும் உன்னைப் போற்றியும் தூற்றியும் பேசிப் பேசி தம்மை பிரபல்யப்படுத்திக் கொண்டோர் அதிகம்.

நான் நடிப்பது சினிமா, என்னை திரையில் ரசியுங்கள், உங்கள் பெற்றோரை பார்த்துக் கொள்ளுங்கள், உங்களை மகிழ்விக்கும் நடிகன் நான் என் தலையெழுத்து அரசியல்தான் என்றால் நான் வருவதை யார் தான் தடுக்க முடியும் என்று நீ திரும்ப திரும்ப கூறியும், உன்னை திரையில் பார்த்த ரசிகர்கள் மற்றும் உன்னை வைத்து அரசியல் செய்ய ஆசைப்பட்ட அவர்களின் சுயநலனை நீ சுட்டுப் போட்டதால் உன்னை துரோகி என்றனார். கவலைப்பட்டாயா நீ..? இல்லையே....

திரைப்படத்திலேயே பகிங்கரமாய் சொன்னாயே.. சினிமாவில் நான் பேசியது எல்லாம் வியாபர யுத்திக்காக செய்யப்பட்ட வசனங்கள் அதை வைத்து நீங்கள் என் தனிப்பட்ட வாழ்க்கையை தீர்மானிக்காதீர்கள் என்று சொன்னதற்கு உன் கொடும்பாவியை எரித்தனர் சுயநலச் செம்மல்கள். பயந்தாயா நீ?

உன் படம் தோற்றப் போதும் விநியோகஸ்தர்களுக்கு கஷ்டம் வரக்கூடாது என்று பணத்தை திருப்பிக் கொடுத்த வள்ளல் நீ....! அட்டகாசமாய் படம் ஓடி வசூல் செய்த போது இன்னும் கொஞ்சம் பணம் தா என்றா கேட்டாய்...? இல்லையே. ஊரையே அசத்தும் படங்களை கொடுத்து விட்டு நீ கிழிந்த வேட்டியோடு இமயமலைக்குச் சென்று ஏதோ குகையில் ஒரு பிச்சைக்காரனைப் போல அமர்ந்திருப்பாய்.

நீ நடித்தாய், ரசிகன் ரசித்தான், தாயரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் திரைப்பட முதலாளிகளும் கொள்ளை கொள்ளையா லாபம் பார்த்தனர் ஆனால் கடைசியில் தமிழ் நாடு போட்ட பிச்சையில் நீ வாழ்ந்தாய் என்று வக்கிர புத்திகள் கூறிய போதும் நீ அதையும்தானே புன் முறுவலோடு கடந்து வந்தாய்...

என்னாயிற்று என் ரஜினி உனக்கு இன்று? ஏதேதோ சொல்கிறார்கள், நுரையீரல் தொற்று என்கிறார்கள், நுரையீரல் புற்று என்கிறார்கள், நிமோனியா காய்ச்சல் என்கிறார்கள், கிட்னி பெயிலியர் என்கிறார்கள்.....எல்லவற்றையும் மூளை ஏற்க மனது அடித்து விரட்டிச் சொல்கிறதே உனக்கு ஒன்றும் இல்லை என்று.....

மீண்டு வா ரஜினி.....எங்களோடு இன்னும் பல வருடங்கள் நீ இரு...!!! சட்டென்று எங்கள் புத்திகள் ஜீரணிக்கும் முன் நீ படுக்கையிலிருப்பதை நம்ப மறுத்துக் கொண்டே இருக்கிறது மனது....!!! ஒரு நடிகனென்று ஒரு முட்டாள் ரசிகனாய் இதை எழுதவில்லை ரஜினி....நெடுநாள் உன்னைப் பார்த்து, உன்னை மானசீகமாய் ஒரு மனிதனாய் நேசித்து, உன் மனிதநேயத்தால் ஈர்க்கப்பட்டு அடி மனது கொடுத்த உத்வேகத்தில் வார்தைகள் என்னை மீறி வந்து விழுகின்றன கண்ணீரோடு சேர்ந்து..!!!!

வயிற்றுப் பசியோடு இருந்த போது ஈரத்துணியை வயிற்றில் கட்டிப் படுத்திருதேன் என்று சொல்லியிருக்கிறாய், சென்னை அண்ணா சாலையில் வறுமையை கையில் வைத்துக் கொன்டு கனவுகளோடு அலைந்தேன் என்று கூறியிருக்கிறாய்...

வாழ்க்கையில் கட்டாந்தரையிலிருந்து உச்சாணிக் கொம்பேறிய ஜொலிக்கும் உச்ச நட்சத்திரம் நீ....!!!!யாராலும் நெருங்க முடியாத சூப்பர் ஸ்டார் நீ.......

மீண்டும் வா ரஜினி............மீண்டு வா ரஜினி..........!!!!


தேவா. S

பின் குறிப்பு: அறிவோடு சேர்ந்து வாழ்க்கையை அலசுபவர்களும், கருத்துகளோடு தத்துவ விவாதம் செய்ய வருபவர்களும் இந்த கட்டுரையை மெளனமாய் கடந்து சென்று விடுங்கள்.

முட்டாளாகவே என்னைக் கொஞ்ச நேரம் இருக்க விடுங்கள்!

Friday, May 20, 2011

ஐ லவ் யூ....!

" ஐ லவ் யூ டா............ஐ லவ் யூ சோ மச் டா.........; உன்ன எனக்கு ரொம்பப் பிடிக்குது '

சொல்லி விட்டு அவள் சென்று சில மணித்துளிகளே ஆகின்றன. ஜிவ்வென்று எனைச் சுற்றி அடித்த காற்றின் குளுமை கூடிப் போனது. மேகங்கள் எல்லாம் அங்கும் இங்கும் அவசரமாய் அலைந்து எனக்கான ஒரு மழையைப் பெய்து விடவா என்று சில சில கருமையான மேகங்களின் மூலம் கன்ணசைத்து கேட்டது. கண்கள் சொருக நா வரள ஜெயித்து விட்ட என் காதலை ஜெயித்தது என்று எப்படி சொல்வது அது நிகழ்ந்து விட்டது என்றுதான் சொல்வேன்....

என் உலகத்திற்கு யாரோ வர்ணங்கள் பூசியிருக்க வேண்டும் அத்தனை கண்ணைப் பறிக்கும் வர்ணங்கள். என் தோட்டத்தில் பூத்திருக்கும் பூக்களில் ஒன்று கூட இந்த பூமிக்கு சொந்தமானது அல்ல என்று நான் சொல்லும் போதே என்னை நகைப்போடு நீங்கள் பார்க்கிறீர்கள் அல்லவா? ஆமாம் நம்ப மாட்டீர்கள் உங்களுக்குத் தெரிந்தது எல்லாம் வர்ணக்கூட்டின் ஏழு நிறங்கள் மட்டுமே! ஏழைத் தாண்டின வர்ணம் இல்லை என்பவர்கள் எல்லாம் ஏழைகள்தான்...!!!

என் வீட்டைச் சுற்றிலும் பறக்கும் பட்டாம் பூச்சிகள் எல்லாம் என்னிடம் ஏதேதோ பேசுகின்றன...மெல்ல காதோரம் வந்து அவளுக்காக நான் வடிக்கவேண்டிய கவிதைகளுக்கு வார்த்தைகளை தெளித்து விட்டுச் செல்கின்றன.

உடம்பினுள் ஏறிப் பரவிய உஷ்ணம் புத்திக்குள் புகுந்து பிரபஞ்ச சுழற்சியின் மூலத்தின் வேர்கள் செல்களாய் பரவியிருக்கும் பகுதிக்குள் படுத்து உறங்கிக் கொண்டிருந்த உணர்வுகளுக்கு எல்லாம் உஷ்ணமூட்டி இதோ..இதோ விடிந்து விட்டது உமது பொழுது ஜனித்து விட்டது உமக்கான வேளை என்று தட்டியெழுப்பி உடலின் அதி நுட்ப ஹார்மோன்களை எல்லாம் அதீத கதியில் உஷார் படுத்த எனக்குள் ஒரு யுத்தத்திற்கு தயாராகும் படை வீரர்களுக்கு சமமாய் எல்லா செயல்களும் நிகழ அவள் உச்சரித்து சென்ற வார்த்தைகள் இன்னும் காதுகளிலேயே ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன.

அவளை பார்த்து இன்றோடு மூன்றாண்டுகள் ஆகிப் போன பொழுதிலும் அவளின் மீது எனக்கு ஏற்பட்ட ஈர்ப்பு முதல் நொடியிலிருந்து கடந்து கொண்டிருக்கும் இந்த நொடி வரை ஒரே அலை நீளத்தில்தானிருக்கிறது. அவளை அவ்வளவு அழகென்று யாரும் சொல்ல மாட்டார்களெனினும் அவளின் உதடுகள் பேசா மொழிகளை கண்கள் பார்வை வீச்சுக்களாய் என்னை தாக்கி கலவரப்படுத்தியது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?

நானோ கற்பனைகளில் வாழும் கலா ரசிகன்; அவளோ எதார்த்த பூமி என்னும் ஏகாதிபத்தியத்தின் பட்டத்து அரசி. அவளின் திருப்தியின் தூரங்கள் நீங்களும் நானும் கணிப்புகளுக்குள் கொண்டு வரமுடியாதது. தாஜ்மகாலை ஷாஜகான் காதலின் சின்னமாக கட்டினான் என்று சொன்னால், அவள் இறந்த பின்பு கட்டி என பிரயோஜனம்....? அதனால் மும்தாஜ் என்ன நிறைவை எய்தி விடுவாள்? என்பாள்.

கவிதைகளின் அர்த்தங்களை விட அதன் ஆழங்களை நேசிக்கிறேன் என்பாள். என்னிடம் உனது தேவை காதலல்ல காமம் என்பாள். உலகத்தோர் அனைவரும் காமம் கொள்ளவே காதல் கொள்கிறார்கள் என்பாள் புன்முறுவலோடு...

காமத்தை சமைக்க பிரபஞ்சம் வைத்த மிகப்பெரிய மார்க்கெட்டிங் காதல் என்பது என்பாள்.....! தனித்த காதல் எங்கே இருக்கிறது காட்டு என்று என்னிடம் கேள்விகளில் கேலி செய்வாள்....! ஆணும் பெண்ணுமென்று நிறைந்திருக்கும் இப்புவியின் மூலமே காமம் இந்த பிரபஞ்சத்தின் பல்கிக் பெருகும் வேகமே அதைச் சொல்லவில்லையா? என்பாள்.....

நான் விளக்கங்கள் என்னும் விளக்குகளால் வெளிச்சமாயிருக்கிறேன் என்று நினைத்த போது எல்லாம் அவள் கேள்வி என்னும் காற்றால் என் வெளிச்சத்தை பல முறை அணைத்திருக்கிறாள். மரணத்திற்கு அழும் மனிதர்களின் சுய நல உலகில் நீயும் ஒருவன் என்று ஒரு முறை என்னிடம் கூறியதின் ஆழத்தை யோசித்து பார்க்கையில் பளீரென்று உண்மை விளங்கியது. இல்லாமல் கொள்ளாமல் உருவான பிண்டம் என்பது பேருண்மையின் ஏதோ ஒரு செயல் வடிவ உந்து சக்திதானே....?

பிண்டங்களுக்குள் உயிர் ஊற்றியது யாரென்ற கேள்வியை விதைத்து விதைத்து பதிலை அறுவடை செய்யாமல் வெறுமனே தம்மை புரட்சியாளரென்றும், புதுமைப் புலிகள் என்றும் அறிவில் சிறந்த விற்பன்னர் என்றும் கருதி இறுமாந்திருப்பதின் பின் புலத்தில் அறியாமைதானே மிகுந்திருக்கிறது?

இல்லாத இடத்திலிருந்து வந்த இடைக்கால சதியே.. நீ மீண்டும் இல்லாத இடத்திற்கு நகர்வதற்கு ஏன் அழ வேண்டும்? இப்படி கேள்விகளால் என்னைத் துளைத்தவள் தான் சற்று முன் என்னை நேசிக்கிறேன் என்று சொல்லி விட்டுப் போகிறாள்.

அவள் வலுவானவள், ஆனால் காதல் என்பதற்கு காமமே முதற் பொருள் என்று சொன்னதில் ஓரளவிற்கு உண்மை கூட இருக்கலாம். காமம் ஆதார ஸ்ருதியாய் இருக்கலாம் காமத்தின் பொருட்டு பிரபஞ்சம் இயங்கலாம்..ஆனால் பிரபஞ்சத்தின் மொத்த ஓட்டம் செல்வது காமத்தை அடைய அல்ல..அது காமத்தை கைக் கொண்டு இயங்கி, இயங்கி பல்கிப் பெருகி மீண்டும் செல்வது தன்னின் மூல நிலை நோக்கித்தானே? இங்கே அழிய வேண்டியே தோன்ற வேண்டியிருக்கிறது....! அறுக்க வேண்டியே பெற வேண்டியதாயிருக்கிறது. கிடைப்பது என்பது எல்லாம் கிடைப்பதா? நிஜத்தில்..அல்லவே அது பின்னாளில் யாருக்கேனும் கொடுப்பது.....

பதின்மத்தில் கிளர்வு கொள்ளும் மனம் உடலின் வலிவுகளுக்குள் புகுந்து கொண்டு தனது சீற்றத்தினை தேடி அலையும் பருவத்தில் சொல்லப்படும் ஒரு பதத்தின் பெயர் காதலென்றால் அதன் பின்னணியில் காமத்தின் ஆளுமைதான் மிகை. இந்த காமம் எப்படி அழியும்? என்பது உமது கேள்வியாயின் காமம் கொள் என்பதே பதில். காமம் அழிக்க, உடலின் ஹார்மோன்களின் உற்பத்தி குறைய அவற்றை உபயோகம் கொள்ளல் வேண்டும். மறுத்து நின்றால் உள்ளது அழியுமா? இல்லாதது தோன்றுமா?

காமம் அழிய திருமணம் என்ற நெறிமுறை கொணரப்பட்டது. கொணர்ந்தவர் எல்லாம் பிரபஞ்ச மூலமறிந்தோரெனக் கொள்க. திருமண பந்தத்தில் நின்று விளங்கி காமத்தை காமத்தால் அழித்து இன்னும் என்ன மிச்சம் என்று உடல் தளர்வுற்று நாற்பதுகளைத் தாண்டும் நல்ல மனிதர்கள் காமத்தை மரணிக்கச் செய்து விட்டு மிச்சமாய் இருக்கும் சொச்சத்தோடு தன் துணையை நோக்குமிடத்தில் பிரமாண்ட ராஜ்யம் செய்கிறது காதல்.

காதல் பிரபஞ்சத்தின் ஆதி உண்மை. அசைவில்லா பேரிறை. காமமென்பது சலனமுற்ற சூன்யம். அசைந்து ஆடிய மூலம்.....இந்த மூலத்தை விட்டு நகர்தல் என்பதும் பொய்.... காதலென்ற ஒன்று இல்லை என்பதும் பொய்.

தில்லையில் ஆடும் கூத்தனின் ஆட்டத்தை ஒத்து ஆடி ஆடி...பாதங்கள் சுழல உடலின் அதிர்வுகள் ஒழிய களைத்து சளைத்து ஆடத் திரணியற்று சடலமாய் கீழே விழும் தருணம் எங்கணம் பரிபூரண திருப்தி நம்மை ஆட்கொள்கிறதோ......அங்கணமே இல்வாழ்க்கையில் ஆடிக் களித்து புளியங்காயாய் ஒன்றி இருந்த காமகாதல் வாழ்க்கையில் அது பழுத்தவுடன் ஓடுகள் நீங்கி புளியின் பழம் மட்டும் தனிப்பது போல காமம் கழன்று கொள்ள அப்போது அதி மதுரமான காதல் மிளிர்கிறது......

என்று அவளிடம் நான் பேசி முடித்திருந்தேன்....!

நான் காதல் செய்கிறேன் என்பது காமம் கொள்ள அல்ல ஆனால் காமம் கடக்க......!!! எச்சத்தில் மிகுந்திருக்கப்போவது இந்தப் பிரபஞ்சம் முழுதும் காதல் மட்டுமேதானேயன்றி வேறொன்றும் இல்லை என்று கூறி முடிக்கையில் அவளின் மனம் சிறிது சலனப்பட்டு அசைந்து உண்மைக்கு அருகே வந்ததை உணர முடிந்தது.

இவ்வளவும் நான் பேசிய பின்பும் அவள் தீர்மானித்திருப்பாள் என்னை காதலிக்கலாம் என்று....,அதன் தொடர்ச்சியாக அவள் பகின்ற வார்த்தைகள்தான் மேலே நான் சொன்னதும் அதன் தொடர்ச்சியாக என்னுள் எழுந்த இரசாயன மாற்றங்களும். ஒரு பெண் நம்மிடம் காதலைச் சொல்லும் போது அதுவும் நாம் ஒரளவிற்கு மனதினுள் ஆசைகள் வைத்திருந்த பெண் சொல்லும் போது மனக்கிலேசங்கள் வருவது இயல்பு.

ஆனால்......இயல்பாய்த்தான் அவள் காதலை சொன்னாளா? இல்லையே...பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு பூப்பது எப்படி காதலாகும்? ஒரு பூ தானே பூக்கவேண்டுமேயன்றி அதை நாம் பூக்க வைக்க முயன்றால் அங்கே இயற்கையின் முரண் சமைந்து விடுகிறது. இவள் அறிவானவளாயிருக்கலாம், கொஞ்சம் அழகானவளாய் கூட இருக்கலாம்...

கேள்விகள் கேட்டா மழை பெய்கிறது? அது நிகழ்கிறது அவ்வளவே....! புத்தி என்பது அவ்வப்போது நாம் வாழ்வியலில் உடலாய் வாழும் போது உபயோகம் கொள்வது ஆனால் முழுக்க முழுக்க புத்தியை மட்டும் கொண்டு வாழுதல் ஒரு இயந்திரத்தனமான நிகழ்வாய் போய்விடும். மனிதரென்றால் பயந்து, வெட்கப்பட்டு, பொய் சொல்லி, சிறு சிறு தவறுகள் செய்து, அடித்து, வாங்கி, ஓடி , இளைத்து என்று எல்லாமுமாய் வாழ வேண்டும். அறிவுகளை வைத்துக் கொன்டு நான் எப்படி ஒரு மழையில் நனைய? ஒரு இசையில் மயங்க...ஒரு கவிதையின் பொய்யில் தொலைய....

ஆமாம் என்னால் அவளைக் காதலிக்க முடியாது. அவளின் அறிவு என்னைக் கொன்றே விடும்....! அவளின் தற்சார்பு நிலை எனது ஏகாந்த நிலைக்கு முரணாணது....!!!!

கை பேசியில் அவளின் இலக்கங்களை அனிச்சையாய் எனது விரல் தடவிய சற்றைக்கெல்லாம் தொடர்பில் வந்தவளிடம் சொன்னேன்....

' சாரி ஷோபனா............ஐ காண்ட் லவ் யூ..........!!!!! டெஃபினட்லி...ஐ காண்ட் லவ் யூ.....ஐயம் வெரி சாரி......யூ வில் ஃபைன்ட் அ பெட்டெர் பேர் ஃபார் யூ ஃபார் சுர்......'

மறுமொழிக்கு காத்திராமல் என் கைபேசியை சுவிட்ஸ் ஆஃப் செய்தேன்....! ஆழமாய் சுவாசித்தேன்....!!! இதோ எனக்கான மழை வந்தே விட்டது.......தீர தீர நனையப் போகிறேன்............வாங்க பாஸ் நீங்களும்......சேர்ந்தே நனைவோம்...!

" திக்கற்ற வெளிகளில்...
எங்கெங்கோ பறக்கிறேன்...
ஏதேதோ நிகழ்கிறது... "


தேவா. S

Thursday, May 19, 2011

ஏதேனும் ஒரு ஜென்மத்தில்.....!
கடக்க முடியாத தூரங்களை
உடைத்துப் போடும் முயற்சிகளில்
தெறித்து விழும் கண்ணீர் துளிகள்
உன்னை தேடியே வருகின்றன.

கனவுகளை கொடுத்தவள்
என்னை நினைவற்றவனாய் போவதற்கு
சபித்து விட்டு பொய்யாய்
தொலைகிறேன் என்றாள்...
மெய்யாய் என்னைச் சுற்றிக் கொண்டு!

மெளனத்தால் மெளனத்தை மோதவிட்டு
நிசப்தங்களில் கலவரத்தை பரவ விட்டு
நெஞ்சுக்குள் அமிலமாய் சுரக்கிறது
கடந்த கால நினைவுகளில் கரைந்து கிடக்கும்
ஒரு தோற்றுப் போன காதல்!

நமது நேசிப்புகளை அழித்துப் போட்ட
சூழலை எரித்துப் போட
பதத்துப் போன என் உணர்வுகளை
உரசி உரசி உயிரைக் கரைக்கும்
முயற்சிகளில் கழிந்து கொண்டிருக்கிறது
சம காலப் பொழுதுகள்!

அகண்ட வெளியின் நாக்குகளில்
பரவிக் கிடக்கும் மதுரசமென
வழிந்து பெருகும் காதலை
ஏடன் தோட்டத்து ஆப்பிளென
நான் சுவைக்க நினைக்கையில்
ஒரு சாத்தானாய் காலம்
உடைகளை பிடுங்கிய நம் பிரிவின்
வெற்றியில் நகைத்து நகர்கிறது!

ஒரு தண்ணீரில்லா கிணறின்
விளிம்பு வரை பயணித்த
ஒரு சொறித்தவளையின் தோல்வி போல
உன்னை மறக்க முயலும் விளிம்புகளில்
சறுக்கி சறுக்கி விழுகிறேன்
உன் நினைவுக் கேணிக்குள்!

வாராய் என்றறிந்தும்; உனை காணேன்
என்றுணர்ந்தும்; ஐந்தெழுத்து மந்திரத்தை
ஓதி ஓதி பேரிறையக் காணும் முயற்சி போல
நானும் எழுதிக் கொண்டே இருக்கிறேன்
உனக்கான கவிதைகளை....
ஏதேனும் ஒரு ஜென்மத்தில்
உன்னோடு ஒன்று சேரும் ஆசையோடு!


தேவா. S