
வரம்
விழியசைப்பில்
ஒற்றை தலையசைப்பில்
உதட்டோர புன்னகையில்
ஆழமான ஒரு பார்வையில்
சொல்லிதான் விடேன்
உன் காதலை!
***
தவம்
மோனலிசாவிற்கு
புன்னகையைப் பரிசளித்த
லியனர்டோவின் தூரிகை
உன்னையொரு முறை
ஓவியமாய் தீட்டி விட
தவம் கிடக்கிறதாம்...!
***

விடியல்
நீ சோம்பல் முறித்து
எழும்போதுதான்
விழித்துக் கொள்கிறது
என் நீண்ட இரவுகளும்..!
***
பலம்
மெளனித்த நிமிடம்
முதல் உணர்கிறேன்
நீ சப்தமானவள் என்று....!
***
தோல்வி
வெற்று மையை
காகிதத்தில் பரவவிட்டு
வார்த்தைகள் ஓடி
ஒளிந்து கொள்கின்றன
உன் நினைவுகளுக்குப் பின்னால்!
***

வெறுமை
எனக்கு பிடித்ததெல்லாம்
நீ சொன்னாய்...
உனக்கு பிடித்ததெல்லாம்
நான் சொன்னேன்...
பரிமாற முடியாமல் நீ சுற்றிப்
பரவவிட்ட காதலை
பற்றிக் கொள்ள முடியாமல்
பரவிக் கிடக்கிறேன்
நிலவின் வெளிச்சம் போல....!
தேவா. S
Comments