Pages

Sunday, October 26, 2014

கத்தி...!


அட்டகாசமாய் தொடங்கும் படத்தின் ஆரம்பத்திலேயே நமக்குப் பரபரப்புத் தொற்றிக் கொள்கிறது. ஒவ்வொரு காட்சியையும் எப்படி பரபரவென்று திரி பற்றிக் கொண்டு செல்வது போலவே கொண்டு செல்வது என்பதில் முருகதாஸ் கில்லாடி. முழுக்க முழுக்க லாஜிக்கை சினிமாவில் கொண்டு வர முடியாது என்றாலும் அதே திரைப்படத்தில் செவுட்டில் அடித்தாற் போல பகிரப்படும் கருத்துகள் திரைப்படத்தை வாழ்க்கையின் ஒரு பகுதியாய்க் கருதி நகரும் தமிழ் ரசிகப் பெருமக்களின் வாழ்க்கையில் மிகப் பிரம்மாண்டமாகவே பிரதிபலிக்கவும் செய்கிறது. 

கத்தியைப் பொறுத்தவரையில் முருகதாஸ் அண்ட் விஜய் கேங்க் கையிலெடுத்திருக்கும் பிரச்சினை தமிழ்நாட்டிலிருக்கும் எல்லா சாமானிய தமிழர்களுக்கும் தெரிந்த ஒரு பிரச்சினைதான். கார்ப்பரேட் நிறுவனங்களின் கோடிக்கணக்கான பணமும் அதற்கு அதிகாரவர்க்கம் வலது கையாய் இருந்து செய்யும் உதவிகளும் அதில் சாமானியன் நசுங்கி செத்துக் கொண்டிருப்பதும் நமது தெருவில், நமது ஊரில் நமது மாவட்டத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள்தாம். இதைப்பற்றி எல்லாம் மக்களிடம் எடுத்துச் சொல்லி போராட எத்தனையோ சமூக நல குழுக்கள் நம்மிடையே இருக்கவும்தான் செய்கின்றன. அரசியல் ஆதாயம் விரும்பி போராடும் தொழில்முறை சார்ந்த அரசியல் கட்சிகளைக் கடந்த ஒரு சில போராட்டங்களான மீத்தேன் வாயு எடுப்பதற்கு எதிரான ஐயா நம்மாழ்வாரின் போராட்டம்,  அணு உலைக்கு எதிரான ஐயா உதயகுமாரின் போராட்டம் என்று தேர்தல் அரசியலோடு தொடர்பற்ற இந்தப் போராட்டங்களின் தாக்கம் தமிழகம் முழுதும் எத்தனை சதவீதம் இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்....?

அந்த அந்த மண்ணின் மைந்தர்களுக்கும், அந்த மண்ணோடு தொடர்பு கொண்ட மனிதர்களையும் கடந்து ஒரு புரட்சிகரமான வீரியமிக்க எண்ணங்களைக் கொண்டவர்களாக ஓரளவு தெளிவான விசயம் தெரிந்த்தவர்கள் மட்டுமே இருக்கிறார்கள். மிகையான தமிழக மக்களுக்கு தஞ்சையில் நடைபெற்று வரும் விவசாய நிலத்தில் மீத்தேன் வாயு எடுப்பதால் எழப்போகும் பிரச்சினைகள் பற்றிய பிரஞ்ஞையும், கூடங்குளத்தில் அணு உலைக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தைப் பற்றிய தெளிவும், தாக்கமும் மிக மிக குறைவு. தமிழர் பூமியில் வாழும் ஏழரை கோடி தமிழர்களுக்கு சரியான செய்தியை கொண்டு செல்ல வேண்டிய ஊடகங்கள் பரபரப்பு செய்திகளின் முன்பும், பகட்டு அரசியல் முன்பும் மண்டியிட்டு நாயைப் போல நக்கிப் பிழைத்துக் கொண்டிருந்தால் மக்கள் எப்படி செய்திகளின் வீரியத்தையும் உண்மை நிலையையும் அறிவர்...?

சினிமா என்பது ஒரு கலை. சமூகத்தின் மீது கடுமையான தாக்கங்களை தமிழ் சினிமா ஏற்படுத்தி இருக்கிறது என்பது யாராலும் மறுக்கவே முடியாத வரலாறு. ஒரு கலைஞன் பிழைப்புக்காய் தன் நடிப்புத் தொழிலை செய்யும் அதே நேரத்தில் இந்த சமூகத்தில் உயரிய தாக்கத்தை உண்டாக்கும் ஒரு ஊடகத்தில் நாம்  பணிபுரிகிறோம் என்ற  விழிப்புணர்வையும் கொண்டிருக்க வேண்டும். கத்தி மாதிரி திரைப்படங்கள் தமிழகத்தில் நிகழ்ந்தேறிய, நிகழ்ந்து கொண்டிருக்கிற அல்லது நிகழப்போகிற வாழ்வியல் பிரச்சினைகளை ஆணித்தரமாக புனைவுத்தனமையோடு எடுத்து வைக்கிறது. நிலத்தடி நீரை உறிஞ்சி தமிழர் வாழ்வின் ஆதாரமான விவசாயத்தை எப்படி எல்லாம் ஆதிக்க சக்திகள் அழித்தொழிக்கின்றன என்று ஓராயிரம் கூட்டங்களும் போராட்டங்களும், செய்து கொடுக்க வேண்டிய தாக்கத்தை ஒரு இரண்டரை மணி நேர சினிமாவால் இந்த சமூகத்தில் ஏற்படுத்த முடியுமெனில் இது எத்தனை வலுவான ஒரு களம் என்பதை திரைப்படத்துறையில் இருப்பவர்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

கொக்ககோலா விளம்பரத்தில் விஜய் நடித்திருக்கிறார் என்று மிகைப்படுத்தப்படும் குற்றச்சாட்டுகளை பற்றி விவாதித்து, விவாதித்து கத்தி திரைப்படம் நம் முன் வைக்கும் ஒரு பிரம்மாண்ட பிரச்சினையை நாம் மறந்து போகவேண்டும் என்று நினைப்பது எந்த விதத்தில் நியாயம்? விஜயையும் முருகதாசையும், லைக்காவையும், ராஜபக்சேவையும் பிடிப்பது அல்லது எதிர்ப்பது என்பது வேறு.... கத்தி பேசும் கருத்தியலை கவனிப்பது என்பது வேறு...! கொக்ககோலா விளம்பரத்தில் விஜய் நடித்ததால் கத்தி படத்தில் சொல்ல வரும் கருத்தை முடமாக்க நினைப்பது புத்திசாலித்தனத்தின் வெளிப்பாடா? சினிமாவில் நடிப்பவர்களை தேடிப்பிடித்து நீங்கள் வீதியில் இறங்கிப் போராடத் தயாரா என்று கேள்விகள் கேட்கும் என் புரட்சித் தமிழினமே.....

போராட்டம் என்பதற்கு இதுதான் வழிமுறை, இன்னதுதான் வடிவம் என்று நீ நினைத்துக் கொண்டிருந்தால் அந்த எண்ணத்தில் இரண்டு லிட்டர் பெட்ரோலை ஊற்றி எரிக்கத்தான் வேண்டும். தெருவில் இறங்கிப் போராடும் யாரோ ஒரு சமூக நலம் விரும்பி சினிமாவில் நடித்து கருத்து சொன்னால் அதன் தாக்கம் தமிழகத்தில் தீயாய் பற்றிப்  பரவி எல்லோரையும் யோசிக்க வைக்குமா? எல்லோரையும் மக்கள் நடிகனாய் ஏற்றுக் கொள்வார்களா?  ஒரு நடிகன் தன்னுடைய நடிப்புத்திறனால் மக்களின் மனங்களை கவர்கிறான். அப்படியான நடிகன் திரையில் தோன்றிச் சொல்லும் செய்திகள் கெட்ட செய்திகளாய் இருக்கக் கூடாது நல்ல செய்திகளாய் சமூகத்தை கிடுக்கிப் பிடிபோட்டு யோசிக்க வைக்கும் திறன் கொண்டதாய் இருக்க வேண்டும் என்று சொல்வதுதானே தெளிந்த பார்வையாய் இருக்க முடியும்? தமிழ் சினிமாவில் விஜய் போன்ற நடிகர்கள் ஒரு குறிப்பிடத் தகுந்த உயரத்தை எட்டிப் பிடித்திருப்பது யாரோ போட்ட பிச்சையைப் போன்று சித்தரிக்கும் மனோவாதத்தை விடுத்து அப்படி ஒரு ஆளுமை கொண்ட நடிகர் எதைப் பேசுகிறார் என்பதைப் பொறுத்து நமது விமர்சனங்களை முன் வைக்கலாம்தானே...?

கத்தி திரைப்படத்தை விஜய், முருகதாஸ் இன்ன பிற அடையாளங்களின்றி எந்த காழ்ப்புணர்ச்சியுமின்றி பார்த்து விட்டு வெளியே வரும் போது கார்ப்பரேட் முதாலாளிகளின் அடாவடித்தனமும், உணர்ச்சி மிகுந்த பரபரப்பான செய்திகளை வெளியிடுவதில் முனைப்பு காட்டும் போலி ஊடகங்களின் மீதும் வரும் கோபத்தை அந்த திரைப்படத்தின் வெற்றியாகத்தான் நான் பார்க்கிறேன். இதற்கிடையில்  படம் வருவதற்கு முன்பே லைக்கா முதலாளி ராஜபக்க்ஷேவோடு தொடர்புடையவர் என்று போராட்டத்தில் குதித்த சோ கால்ட் தமிழர் நல அமைப்புக்கள் வேறு, எந்த சித்தாந்தத்தை எதிர்க்கிறோம் என்று தெரியாமல் லைக்கா இலங்கையோடு வியாபாரத் தொடர்பு கொண்டிருக்கிறது என்பதற்காகவே கத்தியை எதிர்த்து விட்டு இப்போது லைக்காவின் பெயரை நீக்கி விட்டு படம் வெளியிட்டதில் ஜென்ம சாபல்யம் அடைந்தவர்களாய் தங்களை முடக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

விவசாயிகளுக்கு தமிழகத்தில் ஓராயிரம் காரணங்களால் பிரச்சினைகள் ஏற்பட்டு விவசாயம் தடைப்பட்டுக் கொண்டிருக்கிறது அதை எல்லாம் ஒரே ஒரு திரைப்படத்தில் எடுத்துச் சொல்லி விட முடியாது என்பது எப்படி அறிவு ஜீவிகளின் ஞானக்கண்களுக்குத் தெரியாமல் போய் விவசாயிகள் என்ன பன்னாட்டு நிறுவனங்களால் மட்டுமா பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்ற மந்தக் கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். கத்தி என்னும் திரைப்படத்தில் பேசப்பட்டிருக்கும் அரசியலைப் பற்றி எல்லாம் பெரிதாக அக்கறை கிடையாது இந்தப்படத்தை எதிர்த்து விமர்சனம் செய்பவர்களுக்கு..., அவர்களின் பிரச்சினை எல்லாம் இதைப் பேசுபவன் சினிமாக்காரன், அவனுக்கு என்ன இதைப் பற்றிப்  பேச யோக்கியதை இருக்கிறது என்று நினைக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை சமகாலத்தில் வந்த திரைப்படங்களிலேயே மிகத் தைரியமாக முதலாளித்துவத்தின் முகத்திரைகளை கிழித்தெறிந்ததோடு மட்டுமில்லாமல் ஊடக வியாபாரிகளை எல்லாம் ஊறுகாய் போட்டு ஊறவும் வைத்திருக்கிறது கத்தி அண்ட் டீம்.

லாஜிக் பார்த்துப் பார்த்து படம் பார்க்க நினைப்பவர்கள் எல்லாம் எந்த திரைப்படத்தையுமே பார்க்க கூடாது. ஒரு கதையைப் பின்னிக் கொண்டு செல்லும் போது சுவாரஸ்யக் காரணங்களுக்காக ஒரு படைப்பாளி பல அத்து மீறல்களை கதையின் மையக்கரு சிதையாமல் செய்வதில் என்ன தப்பு இருக்கிறது? விஜய் சிறைச்சாலையிலிருந்து தப்பிப்பதிலிருந்து தொடங்கும் கதை, அதிவேக தொடர் வண்டியைப் போல அதிரடியாய் நகர்ந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு காட்சியையும் கடந்து செல்லும் போது ஒரு உற்சாக பரபரப்பு நமக்குள் தொற்றிக் கொள்ள, அட்டகாசமான திரைக்கதையும், அலட்டலான விஜயின் நடிப்பும் கூட்டணி போட்டு திரைப்படத்தை அதகளமாக்குகின்றன. ரஜினி எத்தனை பேரை அடித்தாலும் என்ன என்ன ஜிம்மிக்ஸ் வேலைகளை சண்டைக்காட்சிகளில் காட்டினாலும் எப்படி ஒரு ஆக்சன் ஹீரோவாக அவரை ஏற்றுக் கொண்டோமோ அதே வரிசையில் விஜய் இன்று எல்லா தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திழுக்கக் கூடிய ஒரு ஆக்சன் ஹீரோவாய் பரிமாணம் எடுத்திருக்கிறார். 50 பேர்களை விளக்கை அணைத்து விட்டு சில்லறைக் காசுகளைத் தூக்கிப் போட்டு போட்டு அவர் அடித்து துவம்சம் செய்கையில் தியேட்டரில் விசில் பறக்கிறது.

விவசாயிகளின் தண்ணீர் பிரச்சினையை மிகவும் அழுத்தமாகவே பதிவு செய்திருக்கும் இயக்குனர் முருகதாஸுக்கு பாராட்டுக்கள். இரண்டு வேடங்களுக்கும் உருவத்தில் நிறைய மாறுதல்களைச் செய்து முருகதாஸ் அதிகம் மெனக்கெடவே இல்லை. ஜீவா விஜயும், கத்தி என்னும் கதிரேசனாய் நடித்திருக்கும் விஜயும் நடிப்பில் வித்தியாசம் காட்டுகிறார்கள். விஜய் இரண்டு வேடத்தையும் அல்வா சாப்பிடுவது போல சாப்பிட்டு இருக்கிறார். ஆக்சன் -ஹீரோக்களின் படத்தில் கதாநாயகிக்கு என்ன வேலை இருக்குமோ அந்த வேலையைச் சரியாய் செய்திருக்கிறார் சமந்தா. படத்தில் விவசாயிகளாய் நடித்திருக்கும் அத்தனை முதியவர்களின் செலக்சனிலும் முருகதாஸின் உழைப்பு தெரிகிறது.

அடுத்த தலைமுறையினருக்கான கம்போசராய் களம் இறங்கி இருக்கும் அனிருத் சோடை போகவில்லை. பாடல்களில் கலக்கி எடுத்திருக்கிறார் மனுசன். செல்ஃபி  புள்ள பாட்டும், காட்சியமைப்பும் விஜயின் நடனமும்... அம்மாடியோவ் என்று சொல்ல வைக்கின்றன. கதையோடு ஒன்றி இதே போல அழுத்தமான எதார்த்த வேடங்களை ஏற்று விஜய் நடித்தால் விஜயை கலாய்க்கும் ஒரு கும்பல் கூண்டோடு காலி செய்து கொண்டு வேறு யாராவது நடிகர்கள் பக்கம் தங்கள் கூடாரத்தை அமைத்துக் கொள்ளத்தான் வேண்டும். படத்தைப் பார்த்து விட்டு வெளியே வரும் ஒவ்வொரு நகரத்து இளைஞனுக்குள்ளும் விவசாயம் செய்தால் என்ன என்ற எண்ணம் ஆழமாய் தோன்றுவதோடு.... இயற்கையாலும், அரசியலாலும் பொய்த்துப் போகும் விவசாயிகளின் தண்ணீர் தேவைகள்.... பன்னாட்டு முதலாளிகளாலும் எப்படி சூறையாடப்படுகிறது என்பதை ஓரளவிற்கு விளங்கிக் கொண்ட வேதனையும் கண்டிப்பாய் ஏற்படும்.

மொத்தத்தில் கத்தி வெறுமனே வீம்புக்காய் எல்லோரும் சொல்வது போல வெறும் அட்டைக் கத்தி அல்ல.......இது.... அட்டகாசமான கத்தி...!!!!!
தேவா சுப்பையா...
Sunday, October 19, 2014

பூங்காற்று புதிரானது...!


மூன்றாம் பிறை படத்தை எத்தனையாவது தடவை பார்த்தேன் என்பது எனக்கு நினைவில் இல்லை. ஆனால் இந்த முறை பார்த்து முடித்த பின்புதான் எனக்கு அந்த விசயம் விளங்கியது. ஆர்க்கிமிடிஸ் குளித்துக் கொண்டிருந்த போது எழுந்து ஓடிய  அதே பரவசத்திற்குள் விழுந்திருந்தேன். அந்தப் படம் பார்த்து இதற்கு முன்பெல்லாம்  முடிக்கும் போது அந்தப் படம் அதோடு முடிந்து போய்விடும். இப்போது மூன்றாம் பிறை பார்த்து முடித்த போதுதான் நிஜத்தில் அந்தப்படம் ஆரம்பிப்பது போலத் தோன்றியது எனக்கு. என்ன யோசித்திருப்பார் இந்த பாலுமகேந்திரா அல்லது என்ன சொல்ல முயன்றிருப்பார் என்று லேசாக எனக்குப் பிடிபட ஒரு வழுக்கு நிலத்தில் நிற்க முடியாமல் சறுக்கிச் செல்வதைப் போல எங்கோ இழுத்துச் சென்றது அந்த உணர்வுகள் என்னை.

இப்படியெல்லாம் ஒரு பெண்ணிடம் ஆத்மார்த்தமாய் இருந்து விட்டு  திடீரென்று அவளுக்கு குணமாகிவிட்டது என்று இவனை மறந்து போய் யார் என்றே தெரியாமல் போய்விட்டால் என்ன ஆவான் அந்த மனிதன்? அதுவும் காதலை காதலாகவே நெஞ்சுக்குள் தேக்கி வைத்திருந்த ஒரு காதலன் அவன். அவன் மகளின் மீது வாஞ்சையோடு இருக்கும் ஒரு தகப்பனின் உணர்வுகளை அல்லவா கொண்டிருந்தான்? எப்படி அவனால் அந்த சூழலை எதிர் கொண்டு மேலே நகர முடியும் என்று யோசித்துப் பார்க்கையில் எனக்கு தூக்கம் போயிற்று...

மூன்றாம் பிறை கொடுத்த தாக்கத்தோடு அந்த நள்ளிரவில் என்று எழுதினாலும் அது நள்ளிரவு ஒன்றும் இல்லை விடியற்காலை 2 மணிக்கு நடப்பதற்கு இறங்கினேன். நகரத்து சோடியம் விளக்குகளை தன் மீது போர்த்திக் கொண்டு அவஸ்தையோடு உறங்க வேண்டிய சூழல்தான் நகரத்து வானங்களுக்கெல்லாம். மங்கலாய் தூரத்தில் கண்சிமிட்டும் நட்சத்திரங்கள் எல்லாம் சோகை பிடித்தது போல தேமே என்றுதானிருக்கும். கிராமத்து என் வீட்டு கொல்லைப்புறத்திலிருக்கும் கிணற்றடியில் துணி துவைக்கும் கல் மீது உட்கார்ந்து பார்க்க வேண்டும் இதே வானத்தை அச்சச்சோ அதை விவரிக்கவே முடியாது. ரகசியமாய் சந்திக்கும் காதலி கொடுக்கும் கிறக்கத்தையும் சுவாரஸ்யத்தையும் ஒத்தது அது. நிஜமாய் அந்த மையிருட்டு ,கருகும்மென்று காதுகளுக்குள் வந்து ஊதக்காற்றாய் ஏதேதோ பேசி கிறுகிறுக்க வைக்கும். இருட்டிலிருந்து சிமிட்டிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களைப் பார்த்தபடியே எத்தனை அமாவாசை இரவுகளோடு நான் சல்லாபித்திருக்கிறேன் தெரியுமா...?

எப்போதுமே சுவையான நினைவுகளோடுதான் படு சுமாரான எல்லாவற்றையும் நாம் கடந்து வரவேண்டி இருக்கிறது. இருளான ராத்திரியின் கற்பனையோடு நான் நகரத்து வெளிச்சமான இராத்திரிக்குள் நடந்து கொண்டிருந்தேன். இருப்பதற்குள் இல்லாததை தேடி எடுத்து இருக்கிறது என்றே நினைத்துக் கொள்வது போலத்தான். புத்திக்குள் மூன்றாம் பிறை ஓடிக் கொண்டிருந்தது. என்ன செய்திருப்பேன் ஒருவேளை நான் சீனு என்னும் பாத்திரமாக இருந்திருந்தால்....

எவ்வளவு ஏமாற்றமிகு பொழுதாய் அந்த தொடர்வண்டி புறப்பட்டுச் சென்ற தினத்தின் மாலை எனக்கு இருந்திருக்கும். ஆயிரம் நியாபகங்களோடு செரிப்ரோஸ்பைனலில் மிதக்கும் மூளை அடுத்து எதைச் சிந்திக்கும்? திரும்ப வீட்டிற்குள் செல்லும் போது பேயாய் அறையும் விஜியின் நினைவுகளை எப்படி எதிர்கொள்வது..? இதுவரையில் நினைத்திருந்த நிஜம் பொய்யாய் போனவுடன் அதுவரையில் பொய் என்று நினைத்திருந்த நிஜம் வீட்டிற்குள் விசுவரூபமெடுத்து நிற்குமே அதை என்ன செய்வது? மொத்தத்தில் அந்த காதலுக்கு என்னதான் பதில்..? சூழ்நிலையால் பிரிந்து போகும் காதலை ஏதேதோ சொல்லி சமாளித்து விடலாம் ஆனால் ஒரு மேஜிக்கல் ரியாலிசமாய் நிகழ்ந்து கரைந்து போன அந்தக் காதல் கருங்கல்லாய் நெஞ்சில் கனக்குமே அதை என்ன செய்வது...?

சீனுவுக்காய் வருத்தப்பட்டேன் ஆனால் அப்படி இருக்கவும் ஆசைப்பட்டேன். கிடைப்பது என்பது கிடைத்தது என்பதோடு முடிந்து போய்விடுகிறது. அங்கே மீண்டும் மீண்டும் ஒரே  பயணம்தான். அடைந்து விட்ட பின்பு மீண்டும் அடைவதற்காய் பட்ட சிரமங்களைப் பேசிக் கொள்வதிலும் அடைந்த சந்தோசத்தைப் பகிர்ந்து கொள்வதிலும் மீண்டும் மீண்டும் ஒரேமாதிரியான விசயங்களையே எல்லா வெற்றிகளும் கொடுக்கின்றன. இழத்தல் அல்லது வலியோடு பிரிதல் என்பது அப்படியான ஒரு மட்டுப்பட்ட சுமூகமான விசயம் அல்ல. கணத்துக்கு கணம் மாறும் உணர்வுகளோடு கடந்த காலத்தின் நினைவுகளை மீண்டும் மீண்டும் மீட்டெடுத்துக் கொண்டு வந்து அதை நிஜமாக்கிக் கொள்ள முயலும் பேராவல் ஒருபக்கம்...


மீண்டுமொரு முறை அவளைக் கண்டுவிடமாட்டேனா என்ற கவலையும், குறுகுறுப்பும், தேடலும் கொண்டு எதிர்ப்படும் ஒவ்வொரு முகத்திலும் அவளைத் தேடியலையும் சுகம் ஒரு பக்கம், மீண்டும் காணும் பொழுதில் யாரென்று அறிந்திராத அந்தக் காதலியை அறியாதவனாய் தூர நின்று ரசித்துக் கொள்ளுதல் ஒரு பக்கம், மீண்டுமொரு முறை உன் திரும்பிய நினைவுகளோடு என்னை காதலிப்பாயா தேவதையே என்று நாவில் எழும் கேள்வியை மடக்கி திருப்பியனுப்பி நெஞ்சோடு கட்டியணைத்துக் கொண்டு அலையும் சுகம் ஒரு பக்கம்.... என்று நித்தம் வானம் பார்த்து அது அவள்தான் என்று எண்ணிப் பேசிக் கொண்டிருக்கலாம், ஒரு மழையோடு பேசிச் சிரித்து அதன் சாரலை உள்வாங்கிக் கொண்டு அவள்தான் அது என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கலாம்..., அடர்ந்த காடுகளுக்குள்ளும், பேசாமால் படுத்துக் கிடக்கும் பெரு மலைகளை தூரத்தில் நின்று கைவிரித்து அணைத்தபடியும், வயல்வெளிகளுக்குள் நடந்து கொண்டும், நெரிசலான கூட்டத்திற்குள் வளைந்து நெளிந்து வியர்வை வழிய செல்லும் போதும்...அவளோடு பேசிக் கொண்டேயும் இருக்கலாம்...

யாரேனும் ஒருத்தியை அவளைப் போலவே காணவும்  செய்யலாம். அப்படிக் கண்டவள் நிஜத்தில் நீதான் எனக்கு எல்லாமே என்று தொலைந்து போன காதலை தூரிகையாக்கி கருப்பு வெள்ளையாய்  இருக்கும் வாழ்க்கைக்கு வண்ணமயமாய் ஏதேதோ ஓவியங்களைத் தீட்டவும் செய்யலாம், யார் கண்டது...? வாழ்க்கையின் அத்தனை பக்கங்களையும் சுவாரஸ்யம் என்னும் தேவதைதானே எழுதிக் கொண்டே இருக்கிறாள்....

உனக்கே உயிரானேன்...
எந்நாளும் எனை நீ மறவாதே...

யோசித்துக் கொண்டே சீனுவாய் தளர்வோடு நடந்து கொண்டோ நடித்துக் கொண்டோ இருந்த எனக்குள் கண்ணதாசனின் வரிகள் ஊமையாய் ஊர்ந்து கொண்டிருந்தன.  விஜிக்கு என்னை யாரென்றே தெரியவில்லை. அத்தனை நாளும் அவளோடு இருந்த அற்புத நிமிடங்களை அவள் மறந்து போனதுதானே அவளுக்கு நினைவு தப்பிப் போனது என்றாகிறது. அவளுக்கு ஏன் மீண்டும் நினைவு திரும்பிவிட்டது என்கிறது இந்த உலகம். மீண்டுமொரு முறை சீனுவாய் எப்போதோ சென்று விட்டிருந்த தொடர்வண்டிப் பாதையை திரும்பிப் பார்த்தேன்...

அது எந்தச் செய்தியையும் எனக்குச் சொல்லவில்லை.

கனவுகள் எல்லாம் வந்து போவதற்குத்தானே...?
எந்தக்  கனவு உங்களோடு நிஜத்தில் தங்கி இருந்திருக்கிறது..?
தங்கி விட்டால்தான் அதைக் கனவென்று 
நாம் சொல்லிவிடுவோமா என்ன...?
இல்லாத ஒன்றாய் இருந்து பார்த்து
மீண்டும் இல்லாததாய்  மாறிக் கொள்வதுதானே
கனவுகளின் தாத்பரியம்...?!

ஒரு படைப்பு இதைத்தான் செய்ய வேண்டும். பாலுமகேந்திரா மாதிரி பிரம்மாக்கள் இதைச் சரியாய் செய்து விடுகிறார்கள். எனக்கு மூன்றாம் பிறை படத்தின் திரைக்கதை சுத்தமாய் மறந்து போய்விட....

நான் சீனுவாய் மாறி நடந்து கொண்டிருந்தேன் என் வீடு நோக்கி.....!

தேவா சுப்பையா...

Wednesday, October 15, 2014

வண்ணக் கனவுகள்...!


எப்போதெல்லாம் உடம்பு கொஞ்சம் எடை கூடுகிறதோ அப்போதெல்லாம் உடனே உணவுப்பழக்கத்தை மாற்றிக் கொள்வேன். தினசரி ஓடுவது வழக்கம்தான் என்றாலும் டேஸ்ட் டங்க் எனப்படும் சுவைக்கு உண்ணும் பழக்கம் மட்டும் என்னை விட்டு போவேனா என்கிறது. ஒரு டின் முறுக்கை என் முன்னால் வைத்தாலும் பேசிக் கொண்டே எல்லாவற்றையும் முடித்து விடுவேன். முறுக்கு என்று சொன்ன உடனேயே தீபாவளி நினைவுக்கு வருகிறது எனக்கு. தீபாவளிக்கு இரண்டு வாரத்துக்கு முன்பாகவே முறுக்கு சுடுவதற்கான எல்லா வேலைகளும் வீட்டில் ஆரம்பித்திருக்கும். மாவு அரைத்து வருவது, எண்ணெய் வாங்கி வைப்பது என்று அம்மா பம்பரமாய் இயங்க ஆரம்பித்திருப்பாள். அம்மாவுக்குத் தெரியும் எனக்கும் என் தம்பிகளுக்கும் சும்மா ஐம்பது முறுக்கோ அல்லது நூறு முறுக்கோ சுட்டால் பத்தாது என்று....!

மளிகைக்கடையில் இருந்து பிரிட்டானியா பிஸ்கெட் காலி டின் ஆறு ஏழு வாங்கி வந்து உள்ளே பேப்பர் போட்டு சுட்ட முறுக்கை எல்லாம் அதில் ஸ்டோர் செய்து வைத்து விடுவோம். முறுக்கு, சீடை, லட்டு, சமோசோ, ரவா உருண்டை, அதிரசம் எல்லாம் தீபாவளி முடிந்தும் பல மாதங்கள் வீட்டில் இருக்கும். டிவி பார்க்கும் போதும், புத்தகம் படிக்கும் போதும் கையில் முறுக்கோ, அதிரசமோ, அல்லது வாயில் போட்டு அதக்கிக் கொண்ட சீடையோ இல்லாமல் செய்வது கிடையாது. தீபாவளி முடிந்தவுடன் தொடங்கும் அடை மழைக்காலத்தில் வீட்டு ஜன்னலோரம் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு போர்வையைப் போர்த்தியபடி ஏதோ ஒரு நாவலுக்குள் மூழ்கிக் கிடக்கும் சுவாரஸ்யத்தில் எத்தனை முறுக்கு சாப்பிட்டேன், எத்தனை சீடை உருண்டை உள்ளே உருண்டு போனது என்பதற்கெல்லாம் கணக்கு வழக்கு கிடையாது. 

மழையைப் பொறுத்தவரைக்கும் எனக்கு பிடித்த ஒரு விசயம் என்னவென்றால் மழை பரபரப்பாய் ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்களை வலுக்கட்டாயமாக ஓரங்கட்டி உட்கார வைத்துவிடும். எப்போதும் இயந்திரத்தனமாய் இயங்கும் மனிதர்களை இழுத்துப் பிடித்து உட்கார வைப்பதற்காகவே மழைக்கு ஒரு சபாஷ் போடலாம். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் மிரட்டும் புயல் எச்சரிக்கையை டிவி இல்லாத காலங்களில் ஆல் இந்திய ரேடியோவில் இருள் சூழ்ந்த உச்சிப் பகலில் பயம் கடந்த ஒரு த்ரில்லோடு கேட்டுக் கொண்டிருப்பது எவ்வளவு சுவாரஸ்யமானது தெரியுமா? விவிதபாரதியில் சில நேரம் சட் சட்டென்று வானொலி நிகழ்ச்சியை எல்லாம் நிறுத்தி விட்டு கந்தர் சஷ்டி கவசம் போடக் கூட ஆரம்பித்து விடுவான். எல்லா மதப்பாடல்களையும் போட்டு வானொலி நிலையமே பயத்தில் அலறிக் கொண்டிருக்கும் இடை இடையே  மூன்றாம் எண் எச்சரிக்கை கொடி கடலில் ஏற்றப்பட்டிருக்கிறது ஆதலால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று சொல்வதோடு கடலோர மாவட்டங்களில் வெள்ள எச்சரிக்கை அபாயம் ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லும் போது மதுக்கூரிலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் அதிராமபட்டினம் கடல் என் வீட்டு வாசலில் வந்து ஆர்ப்பரிப்பது போல இருக்கும் எனக்கு...

உணவைப் பற்றி சொல்ல வந்த போது நொறுக்குத் தீனிக்குள் நுழைந்து நொறுக்குத் தீனி முறுக்கை நினைவுபடுத்தி, முறுக்கு தீபாவளிக்குள் சென்று தீபாவளி காலமான மழைக்காலத்துக்குள் நுழைந்து இப்போது கட்டுரையில் புயல் வீசிக் கொண்டிருந்தாலும் கூடப் பரவாயில்லை....நாம் மீண்டும் ரிவர்ஸ் கியர் போட்டு நொறுக்குத் தீனிக்குப் போய் உடல் எடைக்குள் நுழைவோம்..

நான் கல்லூரியில் படித்த 1996 களில் எப்படியாவது குண்டாகி விட வேண்டும் என்பதே என்னுடைய மிகப்பெரிய லட்சியமாய் இருந்தது. கொஞ்சம் பூசினால் போல இருந்தால்தானே நன்றாக இருக்கும் என்று போவோரும் வருவோரும் சொல்ல அதற்கும் மேல் ஏதாவது ஒரு கல்யாணம் காட்சி என்று அப்பா அம்மாவோடு போய் உட்கார்ந்திருந்தால் வந்து போகும் அத்தனை உறவினர்களும் வேறு வேலையே இல்லாமல் ஏண்டா சாப்டுறியா இல்லையா...? ஏன் இப்டி மூத்திரம் குடிச்ச கண்ணுகுட்டி மாதிரி இருக்க என்று தோளில் தட்டி கேட்கும் போது எனக்கு அவமானம் பிடுங்கித் தின்னும். பத்தாக் குறைக்கு அப்பா வேறு ஏண்டா நல்லாதான் சாப்டுத் தொலைச்சா என்னடா எங்க போனாலும் எல்லாரும் ஏன் இப்டி ஒல்லியா இருக்கேன்னு கேக்கும் போது எனக்கு அவமானமா இருக்கு... என்று அம்மாவை ஓரக்கண்ணால் பார்க்க.... அம்மாவோ ஆனி போய் ஆடி வந்தா அவன் டாப்புல வந்துடுவான்னு பாலத்தளி சோசியர் சொன்னாரு என்பது போல எதையோ சொல்லி வைக்க...


என்னோடு படித்த நண்பர்கள் எல்லாம் காற்றடித்துப் பலூன் போல உப்பிக் கொண்டிருக்க நான் மட்டும் ஏன் இப்டி ஒல்லியா இருக்கேன்...என்ற பெருங்கவலை என்னை உலுக்கி எடுத்த போதுதான் மணிமேகலைப் பிரசுரத்தின் அந்த விளம்பரத்தைப்பார்த்தேன்...." ஒல்லியாக இருப்பவர்கள் குண்டாவது எப்படி..." என்று ஒரு பிரசுரமும் அதற்குக் கீழேயே 'முகப்பருவைப் போக்க முப்பது வழிகள்  என்று இன்னொன்றும், இரண்டையும் பார்த்த உடனேயே எம்.என்.நம்பியார் கையில கதாநாயகி சிக்கின உடனே கையக் கசக்கிக்கிட்டு சிரிப்பாரே அதே மாதிரி நானும் சிரித்தேன். அடிச்சுப் பிடிச்சு இரண்டு புத்தகமும் வேணும்னு மணிமேகலைப் பிரசுரத்துக்கு மணி ஆர்டர் பண்ணவும் டாண்ணு எண்ணி ஏழாவது நாள் என் கையில....

ஒல்லியாக இருக்கும் நீங்கள் குண்டாவது எப்படி...?
முகப்பருவைப் போக்க முப்பது வழிகள்....

இரண்டு புத்தகமும் வந்து கிடைச்சுடுச்சு. புத்தகத்தைப் படிக்கிறதுக்கு முன்னாடியே முகப்பருவை போக்க நான் ஆயிரம் வழிகளைக் கடைபிடிச்சு சோர்வடைஞ்சு போய் இருந்த நானே அந்தப் புத்தகத்தை விட பெட்டரா ஒரு புத்தகம் எழுதி இருந்து இருக்கலாம். க்ளியர்சில், அல்ட்ரா க்ளியர்சில், விக்கோடர்மரிக், பேரண்ட் லவ்லி, ஜாதிக்காய், சந்தனம், மஞ்சள் மண்ணாங்கட்டின்னு எல்லாத்தையும் போட்டுப் பார்த்து இருந்த எனக்கு அந்த புத்தகம் என்னமோ புத்தமதத்தை இயற்றியவர் யார்...? புத்தர் என்ற ரேஞ்ச்ல கொடுத்த ஐடியாக்களால ஒரு பிரயோசனமும் ஏற்படாம போனது என்பதெல்லாம் தனிக்கதை....

குண்டாகியே காட்டுறேன்னு எனக்கு நானே சபதம் போட்டுக்கிட்டு அடுத்த புத்தகத்தை திறந்து படிக்க ஆரம்பித்த எனக்கு தலை சுற்றாததுதான் குறை. ஏற்கெனவே கணக்குப் பாடத்துல நான் ரொம்ப சூப்பர், இந்த லட்சணத்துல இத்தனை அவுன்ஸ் இதைச் சாப்பிடுங்க, அத்தனை அவுன்ஸ் இதைச் சாப்பிடுங்க, சாக்லேட், ஐஸ்க்ரீம், பாதாம் பிஸ்தான்னு அவுங்க கொடுத்திருந்த மெனுவை எல்லாம் மெனக்கெட்டு ராத்திரியும் பகலும் படிச்சு படிச்சு இன்னும் டென்சனாகி சாப்பாட நினைச்சாலே எனக்கு குமட்டிக்கிட்டு வர ஆரம்பிச்சதோட விளைவு.... குண்டாக ஆசைப்பட்ட நான் அந்தக் கவலையிலேயே  இன்னும் ஒல்லியாகா ஆரம்பிச்சுட்டேன்...! ஏட்டுச் சுரைக்காய் என்னைக்குடா கறிக்கு ஆகி இருக்கு அதனால தட்டுல இருக்க சுரைக்காயை ஒழுங்கா சாப்பிடுன்னு அப்பா போட்ட கூச்சலில் அந்த மணிமேகலைப் பிரசுரம் புத்தகத்தை எல்லாம் எங்கே தூக்கிப் போட்டேன்னு எனக்கு நினைவிலேயே இல்லை.

காலச்சக்கரம் வேகமா சுத்த சுத்த கல்லூரி முடிச்சு வேலைக்கு சேர்ந்த பின்னாடி எப்பவும் கொக்க கோலாவும், அப்பப்போ பெப்ஸியும் பேசி வச்சிக்கிட்டு செஞ்ச சதியோட சென்னையில தெருத்தெருவா சுத்தி நல்ல நல்ல ஹோட்டலா கண்டுபிடிச்சு சாப்ட சாப்பாடும் ஒண்ணா சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமா உடம்பு தேற ஆரம்பித்தது. ஒரு குறிப்பிட்ட காலம் வரை உடம்பு குண்டாகணும்னு ஆசைப்படுறதும் அப்புறம் உடம்பு இளைக்கணும்னு ஆசைப்படுறதும் பெரும்பாலான மனிதர்களுக்கு ஏற்படும் ஒரு எதேச்சையான உணர்வுதான்னு இன்னைக்கு எனக்குப் புரிஞ்சாலும் அந்த அந்த காலக்கட்டத்துல அது எல்லாம் ஏதோ உண்மையாத்தான் நமக்குத் தெரியவும் செய்யுது.

உடம்பு குண்டாகணும்னு அன்னிக்கு ரொம்பவே வருத்தப்பட்டு அதற்கான பகீரத முயற்சிகளை  எல்லாம் செஞ்ச நான் தான் இந்த 38 வயசுல உடம்பு ஃபிட்டா இருக்கணும்னு தினமும் ஜாகிங் போறேன். இன்னும் கொஞ்சம் இளைச்சா தேவலாமே என்று அளவுக்கு அதிகமா சாப்பிடுறத குறைச்சுக்குறேன், ஒருவேளை வயிறு புடைக்க சாப்ட்டா அடுத்த வேளை சாப்பாட்டை குறைச்சுக்குறேன்.... என்னதான் வேண்டும் மனிதா உனக்குன்னு என்னை பார்த்தே  எப்போதும் கேட்கும் ஒரு ஆதாரக்கேள்வியை அடிக்கடி கேட்டுக்கவும் செய்கிறேன். வாழ்க்கை ஒரு செடி வளர்வது போலத்தான், ஒரு மழை பெய்வது போலத்தான், பருவகாலங்களின் சுழற்சியைப் போலத்தான்... ஏதோ ஒன்று நடக்கிறது, அது மாறுகிறது பின்பு வேறு ஏதோ ஒன்று நடக்கிறது....

எதுவுமே இங்கே முக்கியமில்லை, எதுவுமே இங்கே நிதர்சனமில்லை என்ற புரிதலோடு .. எதுதான் நிதர்சனம்..? எதுதான் முக்கியம் என்ற கேள்வியும் கூடவே என்னோடு பயணித்துக் கொண்டுதானிருக்கிறது இப்போது. எதையாவது கற்பனைகள் செய்து கொள்வது நன்றாகத்தானிருக்கிறது என்றாலும் அதற்குள்ளேயே மூழ்கி இதுதான், இப்படித்தான் என்று எந்த ஒரு பொய்யான முடிவிற்குள்ளும் போய் விழுந்து விடவும்ஆசையில்லை.

காற்றில் மிதக்கும் இறகு போல... இருக்கிறது இந்த வாழ்க்கை....
எந்த திசையென்றறியாது...
இடமாய், வலமாய், மேலாய், கீழாய்....பறந்து பறந்து...
எங்கேதான் சென்று கொண்டிருக்கிறேன் நான்...? 
உறக்கம் கலைந்து எழுவது போல..
ஏதேனும் ஒரு புது உலகத்துக்குள்...எழுப்பி விடுமோ 
இந்த வாழ்க்கையின் முடிவு.. என்னை...?

தேவா சுப்பையா...Monday, October 6, 2014

எதுவாய் இருந்தாய் நீ...?!


அந்த நதிக்கரையில் யாருமில்லை என்றுதான் வெகு நேரம் நான் நின்றிருந்தேன். ஆமாம் அது அந்தி நேரம்தான். வழக்கப்படி அந்தி நேரம் ஏதோ ஒரு செய்தியை மெளனமாய் பகிர்ந்து கொண்டே நகர்ந்து கொண்டிருந்தது. பலவீனப்பட்ட பகல், வலுப்பெற்றுக் கொண்டிருக்கும் இரவு இவையிரண்டுக்கும் இடையே....

நகர்ந்து கொண்டிருந்த நதியை உற்று நோக்கிக் கொண்டிருந்தேன் நான். கரையோர நாணலொன்று நதிக்குள் வளைந்து  மெதுவாய் தடவி ஏதோ எழுத முயன்று கொண்டிருந்தது. பறவைகள் எல்லாம் கூடு திரும்பிக் கொண்டிருந்தன. வானத்தில் மிதந்து கொண்டிருந்த மேகங்களை பார்த்த போது யாரோ ஒரு தேர்ந்த ஓவியன் மனமற்ற நிலையில் வரைந்திருப்பானோ என்று தோன்றியது எனக்கு....

சிறு சிறு நீர்ப்பூச்சிகள் நதியில் பாடிக் கொண்டே மிதந்து கொண்டிருந்தன. எதற்காகவாவது காத்திருக்கிறாயா என்று அந்தி வேளையில் தலை சீவி பொட்டு வைத்து தலை பின்னலை சரி செய்த படி கேட்குமொரு இளம் பெண்ணாய் எட்டிப் பார்த்து கேள்வி கேட்ட நிலாவிடம் உன்னைத்தான் காதலிக்கிறேன்... உனக்காகவே காத்திருக்கிறேன் என்று நான் சொல்ல நினைத்தது அதற்கு தெரிந்திருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. அருகருகே இருந்தோம் நானும் நதியும்.... ஆனாலும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை....

மெளனமாய் நகர்ந்து கொண்டிருந்த அந்த நதியிடம் ஒரு அவசரமும் இல்லை. மெல்ல நதியோரம் அமர்ந்து ஒற்றை கை விரலை  வைத்து வருடிக் கொடுத்தேன். நதியின் நடுவில் விழுந்து கிடந்த நிலவை கொஞ்சித் தூக்கி முத்தமிடவேண்டும் என்று தோன்றிய என் ஆவலை எப்படி நிறைவேற்றுவேன்....? என்ற ஆயாசம் வேறு எனக்கு.... தூரத்தில் ஒரு ஆட்டு மந்தை நகர்ந்து கொண்டிருப்பது எனக்குத் தெரிந்தது. ஆடுகளின் சப்தமும் மேய்ப்பவனின் சப்தமும் மெலிதாய் என் செவிகளைத் தடவி மெஸ்மரிசம் செய்யத் தொடங்கி இருந்தன....

இருளத் தொடங்கியவுடன் கூடடைய வேண்டும் இல்லை வீடடைய வேண்டும் என்றுதான் எல்லா உயிர்களும் விரும்புகின்றன, ஆனாலும் பாம்புகள் இரவில்தான் தன் இருப்பிடத்திலிருந்து வெளியே எட்டிப்பார்க்குமாம். எல்லா விலங்குகளும் இரவில் ஓய்வெடுத்துக் கொள்வதில்லையாம். பல இரவில்தான் வேட்டையாடவே கிளம்புமாம். எங்கிருந்தோ யாரோ யாரையோ கூவி அழைத்ததை சுற்றிலும் இருந்த மலைகள் மீண்டும் சொல்லிக் காட்டின.

இந்த வனத்திற்குள், இந்த மலைகளுக்கு நடுவே இருக்கும் சமவெளியில், நகரும் இந்த நதியில், தொடர்பில்லாத ஏதேதோ இரைச்சல்களில், எதுவுமே யோசிக்கத் தெரியாமல் சுற்றி இயங்கும் சூழலில் மூழ்கிக் கிடக்கும் நிதானத்தில்....

ஏதோ ஒரு ரகசியமொன்று இருப்பதாய்த்தான்  எனக்குத் தோன்றுகிறது.

நட்சத்திரங்கள் கண் சிமிட்ட ஆரம்பித்த அந்த இருளான வானத்தை தலையுயர்த்தி பார்த்தபடியே கண்கள் விரித்து வானம் குடிக்க ஆரம்பித்தேன். எவ்வளவு பெரியது இது. எவ்வளவு ஆச்சர்யம் இது. எத்தனை பிரம்மாண்டம் இது. கோடாணு கோடி நட்சத்திரங்களும் அடர்ந்து கிடக்கும் இந்த பிரபஞ்சம் என்னதான் சொல்ல முயலுகிறது..? அது கூற முயலும் ஏதோ ஒன்றாகவோ அல்லது கூற முயலாத ஒரு உன்மத்தமான அடர் நகர்வாகவோ நானும் தானிருக்கிறேன். நினைத்துப் பார்க்கவே உடல் கூசியது....

நதிக்கரையோரமிருந்த புல்வெளியில் மல்லாந்த படியே தாயின் முலை பற்றி பாலருந்தும் குழந்தையாய்....வான் பற்றி உறிஞ்சத் தொடங்கியிருந்தேன் நான்....

எதுவாய் இருந்தாய் நீ...
எங்கே தோன்றியது உனது கனவுகள்...?
யார் தீட்டியது இந்த வர்ணங்கள் நிறைந்த ஒவியத்தை?
பட்டாம் பூச்சியையும்... கற்பாறைகளையும்...
அதிர்ந்து திரியும் வக்கிர மிருகங்களையும்
நீதானா படைத்தாய்...?
ப்ரியங்களாய் பூக்கிறாய்...
எரிமலையாய் நெருப்பை  உமிழ்கிறாய்...
எப்படிப் பார்த்தாலும் 
என் ப்ரியம் நீதான்...
என் காதல் நீதான்....

கை விரித்து வானை கட்டித் தழுவிக் கொண்டேன். நகர்ந்து கொண்டிருந்த நதியோடு நகர்ந்து கொண்டிருந்த பொழுதினைப் பற்றி எனக்கென்ன கவலை...?
தேவா சுப்பையா...Photo Courtesy: வெண்முரசு
கதவு திறக்குமா ...?!


அதிக நேரம் பேஸ்புக்கில் நேரம் செலவிடக் கூட வேண்டாம், வெறுமனே அதில் வரும் நிலைத்தகவல்களை பார்த்துக் கொண்டே இருந்தாலே நமக்குள் இருக்கும் மொழியும், கற்பனைத் திறனும், விவரித்துப் பார்த்து சிலாகிக்கும் இயல்பும் சிதைந்து போய்விடுகிறது. எழுதிக் கொண்டிருப்பதற்கு வசதியான தளம்தான் பேஸ்புக் என்றாலும் அது எழுத்தாளர்களுக்கான தளம் கிடையாது. அன்றாட செளக்கியங்களையும், தினசரி நிகழ்வுகளைப் பற்றிய பார்வைகளையும் எல்லோரும் கொட்டி வைக்கும் ஒரு பெருந்தொட்டி அது. தும்மினால், இருமினால் எழுதி அஞ்சல் செய்ய வசதியான ஒரு இடம் என்பதாலேயே.... வரைமுறை இல்லாத வார்த்தைகளை வாசிக்க வேண்டிய ஒரு சங்கடம் ஏற்பட்டுப் போகிறது.

வலைப்பூக்களை பேஸ்புக் வீழ்த்தியது. பேஸ்புக் வருவதற்கு முன்னால் வலைப்பக்கங்கள் எனப்படும் ப்ளாக்ஸ்தான் சமூக தொடர்பு ஊடகமாய் இருந்து வந்தது. 2010, 2011ல் எல்லாம் வலைப்பக்கங்கள் எல்லா தரப்பினர்களாலும் பிரம்மாண்டமாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கோலேச்சிக் கொண்டிருந்தது. யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்று நவீனம் செய்து கொடுத்திருந்த ஒரு வசதியினை நிறைய பேர்கள் பயன்படுத்திக் கொண்டனர். ஒரு கட்டத்தில் வெறுமனே தகவல் பரிமாற்றுக் களமாக வலைப்பூக்கள் மாறிப்போயின. தமிழர் சமூக வாழ்வில் மிகப்பெரிய பங்காற்றியிருக்க வேண்டிய வலைப்பூக்களின் பயன்பாடுகள் மெலிந்து போய் வலைப்பக்கங்களில் எழுதுபவர்கள் குறைந்து போயினர். வலிமையான எந்த ஒரு நிர்ப்பந்தமோ அல்லது தடையோ இல்லாத ஒரு மாற்று ஊடகம் என்பதை பெரும்பாலானவர்கள் மறந்து  போய் அல்லது அதை அறியாமலேயே, பேஸ்புக் என்னும் சமூக நட்பு வலைத்தளத்தில் போய் தஞ்சம் அடைந்தனர்.

காலை வணக்கம் சொல்வதில் ஆரம்பித்து, இரவு வணக்கம் சொல்லி முடிப்பதற்குள் நிகழும் யாவையும்  பதிவு செய்து, விதவிதமாய் புகைப்படங்களைப் பதிவேற்றும் செல்ஃபி கலாச்சாரம் பிரம்மாண்டமாய் இன்று பேஸ்புக்கில் வளர்ந்து நிற்கிறது. சமூகத்தின் இயங்கு நிலையில் தோன்றி மறையும் பல்வேறு விதமான சூழல்களை கவனமாக உற்று நோக்கி அதிலிருக்கும் உண்மை நிலையை உணர யாருக்கும் இப்போது அவகாசமே இல்லை. மனம் என்னும் குரங்கு கிளைக்குக் கிளை தாவ ஒவ்வொரு கிளையும் அசைய அசைய ஒவ்வொன்றும் ஒரு நிலைத்தகவலாய், வெற்று மன எழுச்சியின் பதிவுகளாக இன்று செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது பேஸ்புக் வால் எனப்படும் சுவர்களில். அரசியல் கட்சிகளில் ஆரம்பித்து, சினிமா நடிகன் முதல் இன்றைக்கு ஒரு செயற்கைக்கோள் தொலைக்காட்சியில் சாதாரண நிகழ்ச்சி விவரணையாளராய் இருப்பவர் வரைக்கும் பேஸ்புக்கில் பக்கங்கள் உண்டு. நவீன வளர்ச்சியில் எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் காட்டலாம். போட்டோ ஷாப் இன்ன பிற ஆயத்த இணையதளங்கள் எதை வேண்டுமானாலும் மாயாபஜார் போல மாற்றிக் காட்ட....

நவீன தமிழர்கள் இணையத்தை தட்டித் தட்டி பெரும்பாலும் பொய்ச்செய்திகளையும், வடிவமைக்கப்பட்ட புகைப்படங்களையும் பார்த்து விர்ச்சுவல் பிழைக் கிணற்றுக்குள் தொடர்ச்சியாய் விழுந்து கொண்டிருப்பதோடு அந்த பிழையையே  உண்மை என்று நம்பியும் கொள்கிறார்கள். இன்றைக்கு நான் அறிந்தது உண்மை என்று கருதும் மிகையானவர்கள் பொய் வடிவத்தையே நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஊடகங்கள் ஒரு போதும் பொதுமக்களுக்கு நேர்மையான செய்திகளை கொடுப்பதில்லை என்ற வலியினை ஏந்திக் கொண்டு மிகவும் பொறுப்புணர்ச்சியோடு சாமானியர்களால் செயல்பட்டிருக்க வேண்டிய சமூக இணைவு ஊடகங்கள் எல்லாம் இன்றைக்கு அபத்தத்தின் உச்சமாய் நவீன காட்டுமிராண்டிகளாய் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

வலைப்பூக்களில் இருந்து பேஸ்புக்கிற்கு தாவிய தமிழ்ச்சமூகத்தை கிடுக்கிப் பிடி போட்டு இப்போது வாட்ஸ் அப் பிடிக்கத் தொடங்கி இருக்கிறது. வலைப்பூக்களாகட்டும், பேஸ்புக் ஆகட்டும் வாட்ஸ் அப் ஆகட்டும் இவை அத்தனையுமே நவீனம் பெற்றுக் கொடுத்திருக்கும் திறமையான வசதிபடைத்த ஊடகங்கள் அவற்றை வெறுமனே பரப்புரைகளுக்காகவும், சார்ந்திருக்கும் அமைப்புகளைச் சந்தைப்படுத்திக் கொள்ளவும் பயன்படுத்திக் கொள்வது கோடி ரூபாய் கொடுக்க தயாராய் இருக்கும் ஒருவரிடம் 50 பைசாவை பெற்றுக் கொண்டு மகிழ்வதற்கு சமமானது. என்னோடு இணையத்தில் எழுத வந்த சில நண்பர்கள் தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள். வெறும் தகவல் தொடர்புக்காக எழுத வந்தவர்கள் அல்லர் அவர்கள். எனக்குள் இருக்கும் வெற்றிடத்தை இறக்கி வைக்க நான் முயற்சித்துக் கொண்டிருப்பது போல, தங்களின் வலிகளை, தேடலை, வரைமுறைகள் ஏதுமில்லாத இந்த வாழ்க்கையின் அழகினை, அவலத்தை எழுதி வைத்துவிட்டு சென்று விட வேண்டும் என்ற ஆவலை இவர்களின் எழுத்தில் என்னால் உணர முடிந்தது.

எங்கோ பறந்து செல்ல வேண்டும் என்ற பேராவலோடுதான் ஒவ்வொரு முறையும் எழுதுவதற்கு நான் அமர்கிறேன். திடமான வாழ்க்கைக்குள் நின்று மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் போதே அதை விட்டு விலகி இப்படி ஏதாவது எழுத அமர்வது மிகப்பெரிய விடுபடலாய் இருக்கிறது. யாருமேயில்லாத ஒரு வாழ்க்கையைத்தான் ஒவ்வொரு படைப்பாளியும் வாழ விரும்புகிறான் ஆனால் அந்த வாழ்க்கையை அனேகருடன் வாழ்ந்து தீர்க்க வேண்டிய ஒரு கட்டாயமும் நிழலாய் அவன் மீது படிந்து கிடக்கிறது. இரண்டு தினங்களுக்கு முன்பு ஒரு நேர்முகத்தேர்விற்காய் சென்றிருந்தேன். நிர்வாக மேலாளருக்கான பதவியிடம் அது. என்னை மதிப்பிட்டுக் கொண்டிருந்தவர் ஒரு வட இந்தியப் பெண். உங்களிடம் இருக்கும் குறிப்பிடத்தகுந்த விசயமாய் நீங்கள் கருதுவது என்ன என்று அவர் கேட்டார்....

எனக்கு எழுதப் பிடிக்கும். புதிது புதிதான சூழலுக்குள் சென்று அதை கிரகித்து ஊறிக்கிடப்பது எனக்குப் பிடிக்கும் என்றேன். அதில் என்ன உங்களுக்கு கிடைத்து விடப்போகிறது என்று கேட்டார் அந்தப் பெண். நீங்கள் உங்களுடைய வாழ்க்கையை மட்டும்தானே வாழ்கிறீர்கள்...? என்று நான் அவரிடம் கேட்டேன். அவர் புன்னகைத்தபடியே ஆமாம்...என் வாழ்க்கையை மட்டுமே நான் வாழ்கிறேன், அப்படித்தான் இங்கே எல்லோருமே இருக்கிறார்கள் என்றார். நான் கூறினேன்... நான் என் வாழ்க்கையை மட்டும் வாழ்ந்து தீர்க்க வந்திருப்பதாய் நினைக்கவில்லை, அதோ அங்கே வாசலில் நிற்கிறாரே காவலாளி அவருடைய வாழ்க்கையை, சற்று முன் தேநீர் கொண்டு வந்து கொடுத்தாரே இந்த அலுவலகத்தின் உதவியாளர் அவரின் வாழ்க்கையை, ஏன் உங்களின் வாழ்க்கையை என்று என் முன் எதிர்ப்படும் எல்லாவற்றின் வாழ்க்கையையும், அவற்றின் வலிகளையும், மகிழ்ச்சியினையும் வாழ்ந்து தீர்க்க ஆசைப்படுகிறேன். அப்படியாய் வாழும் கணங்களில் நான் என்பது இந்த உடல் மட்டும் கிடையாது என்ற ஒரு ஆன்மீக உண்மைக்கு வெகு சமீபமாய் போய் நின்று கதவு தட்டும் வாய்ப்பும் எனக்கு கிடைக்கிறது என்றேன்....

கதவு திறக்குமா .....என்று கேட்டார் அவர் புன்முறுவலோடு....

தட்டுங்கள் திறக்கப்படும் என்றுதானே ஜீசஸ் கூறியிருக்கிறார் அதனால் கண்டிப்பாய் திறக்கும் என்றேன் நான்...! இப்படி ஏதோ ஒரு வேகம், அல்லது ஆவல் இருப்பதால்தான் எழுத வேண்டும் என்றே எனக்குத் தோன்றுகிறது. இந்த வருட புத்தகக் கண்காட்சியில் இரண்டு புத்தகங்களையாவது வெளியிட வேண்டும் என்ற ஒரு எண்ணத்தை தவிர வேறொன்றும் பெரிதாக என்னிடம் இல்லை. தொடர்ந்து என்னை  வாசிக்கும் அத்தனை பேருக்கும் நன்றிகள்...

முடிந்து போகாத பெரும் அத்தியாயங்களாய் இனிக்கட்டும் நமது வாழ்வு....!
தேவா சுப்பையா...