Pages

Sunday, October 19, 2014

பூங்காற்று புதிரானது...!


மூன்றாம் பிறை படத்தை எத்தனையாவது தடவை பார்த்தேன் என்பது எனக்கு நினைவில் இல்லை. ஆனால் இந்த முறை பார்த்து முடித்த பின்புதான் எனக்கு அந்த விசயம் விளங்கியது. ஆர்க்கிமிடிஸ் குளித்துக் கொண்டிருந்த போது எழுந்து ஓடிய  அதே பரவசத்திற்குள் விழுந்திருந்தேன். அந்தப் படம் பார்த்து இதற்கு முன்பெல்லாம்  முடிக்கும் போது அந்தப் படம் அதோடு முடிந்து போய்விடும். இப்போது மூன்றாம் பிறை பார்த்து முடித்த போதுதான் நிஜத்தில் அந்தப்படம் ஆரம்பிப்பது போலத் தோன்றியது எனக்கு. என்ன யோசித்திருப்பார் இந்த பாலுமகேந்திரா அல்லது என்ன சொல்ல முயன்றிருப்பார் என்று லேசாக எனக்குப் பிடிபட ஒரு வழுக்கு நிலத்தில் நிற்க முடியாமல் சறுக்கிச் செல்வதைப் போல எங்கோ இழுத்துச் சென்றது அந்த உணர்வுகள் என்னை.

இப்படியெல்லாம் ஒரு பெண்ணிடம் ஆத்மார்த்தமாய் இருந்து விட்டு  திடீரென்று அவளுக்கு குணமாகிவிட்டது என்று இவனை மறந்து போய் யார் என்றே தெரியாமல் போய்விட்டால் என்ன ஆவான் அந்த மனிதன்? அதுவும் காதலை காதலாகவே நெஞ்சுக்குள் தேக்கி வைத்திருந்த ஒரு காதலன் அவன். அவன் மகளின் மீது வாஞ்சையோடு இருக்கும் ஒரு தகப்பனின் உணர்வுகளை அல்லவா கொண்டிருந்தான்? எப்படி அவனால் அந்த சூழலை எதிர் கொண்டு மேலே நகர முடியும் என்று யோசித்துப் பார்க்கையில் எனக்கு தூக்கம் போயிற்று...

மூன்றாம் பிறை கொடுத்த தாக்கத்தோடு அந்த நள்ளிரவில் என்று எழுதினாலும் அது நள்ளிரவு ஒன்றும் இல்லை விடியற்காலை 2 மணிக்கு நடப்பதற்கு இறங்கினேன். நகரத்து சோடியம் விளக்குகளை தன் மீது போர்த்திக் கொண்டு அவஸ்தையோடு உறங்க வேண்டிய சூழல்தான் நகரத்து வானங்களுக்கெல்லாம். மங்கலாய் தூரத்தில் கண்சிமிட்டும் நட்சத்திரங்கள் எல்லாம் சோகை பிடித்தது போல தேமே என்றுதானிருக்கும். கிராமத்து என் வீட்டு கொல்லைப்புறத்திலிருக்கும் கிணற்றடியில் துணி துவைக்கும் கல் மீது உட்கார்ந்து பார்க்க வேண்டும் இதே வானத்தை அச்சச்சோ அதை விவரிக்கவே முடியாது. ரகசியமாய் சந்திக்கும் காதலி கொடுக்கும் கிறக்கத்தையும் சுவாரஸ்யத்தையும் ஒத்தது அது. நிஜமாய் அந்த மையிருட்டு ,கருகும்மென்று காதுகளுக்குள் வந்து ஊதக்காற்றாய் ஏதேதோ பேசி கிறுகிறுக்க வைக்கும். இருட்டிலிருந்து சிமிட்டிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களைப் பார்த்தபடியே எத்தனை அமாவாசை இரவுகளோடு நான் சல்லாபித்திருக்கிறேன் தெரியுமா...?

எப்போதுமே சுவையான நினைவுகளோடுதான் படு சுமாரான எல்லாவற்றையும் நாம் கடந்து வரவேண்டி இருக்கிறது. இருளான ராத்திரியின் கற்பனையோடு நான் நகரத்து வெளிச்சமான இராத்திரிக்குள் நடந்து கொண்டிருந்தேன். இருப்பதற்குள் இல்லாததை தேடி எடுத்து இருக்கிறது என்றே நினைத்துக் கொள்வது போலத்தான். புத்திக்குள் மூன்றாம் பிறை ஓடிக் கொண்டிருந்தது. என்ன செய்திருப்பேன் ஒருவேளை நான் சீனு என்னும் பாத்திரமாக இருந்திருந்தால்....

எவ்வளவு ஏமாற்றமிகு பொழுதாய் அந்த தொடர்வண்டி புறப்பட்டுச் சென்ற தினத்தின் மாலை எனக்கு இருந்திருக்கும். ஆயிரம் நியாபகங்களோடு செரிப்ரோஸ்பைனலில் மிதக்கும் மூளை அடுத்து எதைச் சிந்திக்கும்? திரும்ப வீட்டிற்குள் செல்லும் போது பேயாய் அறையும் விஜியின் நினைவுகளை எப்படி எதிர்கொள்வது..? இதுவரையில் நினைத்திருந்த நிஜம் பொய்யாய் போனவுடன் அதுவரையில் பொய் என்று நினைத்திருந்த நிஜம் வீட்டிற்குள் விசுவரூபமெடுத்து நிற்குமே அதை என்ன செய்வது? மொத்தத்தில் அந்த காதலுக்கு என்னதான் பதில்..? சூழ்நிலையால் பிரிந்து போகும் காதலை ஏதேதோ சொல்லி சமாளித்து விடலாம் ஆனால் ஒரு மேஜிக்கல் ரியாலிசமாய் நிகழ்ந்து கரைந்து போன அந்தக் காதல் கருங்கல்லாய் நெஞ்சில் கனக்குமே அதை என்ன செய்வது...?

சீனுவுக்காய் வருத்தப்பட்டேன் ஆனால் அப்படி இருக்கவும் ஆசைப்பட்டேன். கிடைப்பது என்பது கிடைத்தது என்பதோடு முடிந்து போய்விடுகிறது. அங்கே மீண்டும் மீண்டும் ஒரே  பயணம்தான். அடைந்து விட்ட பின்பு மீண்டும் அடைவதற்காய் பட்ட சிரமங்களைப் பேசிக் கொள்வதிலும் அடைந்த சந்தோசத்தைப் பகிர்ந்து கொள்வதிலும் மீண்டும் மீண்டும் ஒரேமாதிரியான விசயங்களையே எல்லா வெற்றிகளும் கொடுக்கின்றன. இழத்தல் அல்லது வலியோடு பிரிதல் என்பது அப்படியான ஒரு மட்டுப்பட்ட சுமூகமான விசயம் அல்ல. கணத்துக்கு கணம் மாறும் உணர்வுகளோடு கடந்த காலத்தின் நினைவுகளை மீண்டும் மீண்டும் மீட்டெடுத்துக் கொண்டு வந்து அதை நிஜமாக்கிக் கொள்ள முயலும் பேராவல் ஒருபக்கம்...


மீண்டுமொரு முறை அவளைக் கண்டுவிடமாட்டேனா என்ற கவலையும், குறுகுறுப்பும், தேடலும் கொண்டு எதிர்ப்படும் ஒவ்வொரு முகத்திலும் அவளைத் தேடியலையும் சுகம் ஒரு பக்கம், மீண்டும் காணும் பொழுதில் யாரென்று அறிந்திராத அந்தக் காதலியை அறியாதவனாய் தூர நின்று ரசித்துக் கொள்ளுதல் ஒரு பக்கம், மீண்டுமொரு முறை உன் திரும்பிய நினைவுகளோடு என்னை காதலிப்பாயா தேவதையே என்று நாவில் எழும் கேள்வியை மடக்கி திருப்பியனுப்பி நெஞ்சோடு கட்டியணைத்துக் கொண்டு அலையும் சுகம் ஒரு பக்கம்.... என்று நித்தம் வானம் பார்த்து அது அவள்தான் என்று எண்ணிப் பேசிக் கொண்டிருக்கலாம், ஒரு மழையோடு பேசிச் சிரித்து அதன் சாரலை உள்வாங்கிக் கொண்டு அவள்தான் அது என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கலாம்..., அடர்ந்த காடுகளுக்குள்ளும், பேசாமால் படுத்துக் கிடக்கும் பெரு மலைகளை தூரத்தில் நின்று கைவிரித்து அணைத்தபடியும், வயல்வெளிகளுக்குள் நடந்து கொண்டும், நெரிசலான கூட்டத்திற்குள் வளைந்து நெளிந்து வியர்வை வழிய செல்லும் போதும்...அவளோடு பேசிக் கொண்டேயும் இருக்கலாம்...

யாரேனும் ஒருத்தியை அவளைப் போலவே காணவும்  செய்யலாம். அப்படிக் கண்டவள் நிஜத்தில் நீதான் எனக்கு எல்லாமே என்று தொலைந்து போன காதலை தூரிகையாக்கி கருப்பு வெள்ளையாய்  இருக்கும் வாழ்க்கைக்கு வண்ணமயமாய் ஏதேதோ ஓவியங்களைத் தீட்டவும் செய்யலாம், யார் கண்டது...? வாழ்க்கையின் அத்தனை பக்கங்களையும் சுவாரஸ்யம் என்னும் தேவதைதானே எழுதிக் கொண்டே இருக்கிறாள்....

உனக்கே உயிரானேன்...
எந்நாளும் எனை நீ மறவாதே...

யோசித்துக் கொண்டே சீனுவாய் தளர்வோடு நடந்து கொண்டோ நடித்துக் கொண்டோ இருந்த எனக்குள் கண்ணதாசனின் வரிகள் ஊமையாய் ஊர்ந்து கொண்டிருந்தன.  விஜிக்கு என்னை யாரென்றே தெரியவில்லை. அத்தனை நாளும் அவளோடு இருந்த அற்புத நிமிடங்களை அவள் மறந்து போனதுதானே அவளுக்கு நினைவு தப்பிப் போனது என்றாகிறது. அவளுக்கு ஏன் மீண்டும் நினைவு திரும்பிவிட்டது என்கிறது இந்த உலகம். மீண்டுமொரு முறை சீனுவாய் எப்போதோ சென்று விட்டிருந்த தொடர்வண்டிப் பாதையை திரும்பிப் பார்த்தேன்...

அது எந்தச் செய்தியையும் எனக்குச் சொல்லவில்லை.

கனவுகள் எல்லாம் வந்து போவதற்குத்தானே...?
எந்தக்  கனவு உங்களோடு நிஜத்தில் தங்கி இருந்திருக்கிறது..?
தங்கி விட்டால்தான் அதைக் கனவென்று 
நாம் சொல்லிவிடுவோமா என்ன...?
இல்லாத ஒன்றாய் இருந்து பார்த்து
மீண்டும் இல்லாததாய்  மாறிக் கொள்வதுதானே
கனவுகளின் தாத்பரியம்...?!

ஒரு படைப்பு இதைத்தான் செய்ய வேண்டும். பாலுமகேந்திரா மாதிரி பிரம்மாக்கள் இதைச் சரியாய் செய்து விடுகிறார்கள். எனக்கு மூன்றாம் பிறை படத்தின் திரைக்கதை சுத்தமாய் மறந்து போய்விட....

நான் சீனுவாய் மாறி நடந்து கொண்டிருந்தேன் என் வீடு நோக்கி.....!

தேவா சுப்பையா...

2 comments:

காரிகன் said...

மூன்றாம் பிறை போன்ற மகா அபத்தமான படத்திற்கு உங்களின் இத்தனை உணர்சிகள் சற்று மிகையாகத் தோன்றுகிறது. ஒருவேளை முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், மகாநதி போன்ற படங்களுக்கு இதுபோன்ற ரியாக்ஷன் சரியாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

மனசு said...

வணக்கம் அண்ணா...

தங்களது பதிவைப் பற்றி வலைச்சரத்தில் சொல்லியிருக்கிறேன்.
நேரம் இருக்கும் போது வந்து பாருங்கள்.

வலைச்சர இணைப்பு
http://blogintamil.blogspot.ae/2014/10/blog-post_26.html

நன்றி