Pages

Saturday, December 29, 2012

தொடரும் கற்பழிப்பு கொலைகள்...தலை குனிந்து கொள் இந்தியாவே!

கடைசியில் அவள் இறந்து போய்விட்டாள். எப்படியாவது பிழைத்து எழுந்து வந்துவிடமாட்டாளா என்ற என்னைப் போன்றவர்களின் ஏக்கம் இன்று அதிகாலையில் தோற்றுப் போய்விட்டது. அவளை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களை தூக்கிலேற்றி கொன்று விடலாம், தெருவில் நிற்கவைத்து கல்லால் அடித்தே கொல்லலம், உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாய் பொதுவில் நிற்க வைத்து அறுத்து எரியலாம், கூட்டத்துக்குள் நிற்கவைத்து அடித்து கொல்லலாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் செய்வார்கள் செய்யவேண்டும்...!!!!!!

ஆனால்...

தாமினி போன்ற எங்கள் பெண் பிள்ளைகளை எங்கள் தோளிலும் மார்பிலும் தூக்கி வளர்த்து அம்மா, தாயே பெண்ணே என்று கொஞ்சிய எங்களின் ஈரக்குலைகளில் தலை தூக்கி இருக்கும் பயத்தை எப்படி போக்கும் இந்த தேசம்...? பெண்களை எப்போதும் செக்ஸ் அப்பீலாய் பார்க்கும் காட்டுமிராண்டி மனிதர்களை மொத்தமாய் அழித்தொழுக்க ஏதேனும் யுத்தி உள்ளதா...அதிகாரவர்க்கமே...? பகுத்தறிவுள்ள என் சமூகமே...????

23 வயதில் பொசுக்கப்பட்ட என் குழந்தையே...! எத்தனை வேதனையோடு நீ மரித்துப் போயிருப்பாய் அம்மா...? உன்னை போன்ற பிள்ளைகள் இந்த தேசம் முழுதும் வயது வித்தியாசம் பாரமால் காமவெறி பிடித்த மூளை பிறழ்ச்சிக்குட்பட்ட மிருகங்களால் சிதைக்கப்படும் அவலம் என்று தீரும் என்று நீ கலங்கி உயிர் விட்டாயா பெண்ணே...? நான் பெண்ணாய் பிறந்த ஒரே காரணத்திற்காய் சிதைக்கப்பட்டு  விட்டேனே ....என்று கூனிக் குறுகி வலியோடு போய்ச் சேர்ந்தாயா என் மகளே...? வாழ வேண்டும் என்ற என் ஆசையை ஏன் நிராகரித்தாய் காலமே... என்று தேம்பலோடு நீ உடல் விட்டாயா தாயே? ஏ தேசமே உன்னை நம்பித்தானே நான் வீதியில் இறங்கினேன் என்னை ஏன் தின்று போட்டாய் என்ற கோபத்தைக் கேள்வியாக்கியபடியே மரணித்துப் போனாயா என் குழந்தையே....?????...?

உன் உடலில் சொருகப்பட்ட இரும்புத்தடி இந்த தேசத்தில் கொஞ்ச நஞ்சம் இருக்கும் மனித நேயத்தின் மீதும் பெண்கள் உரிமையின் மீதும் விழுந்த அடி.....! மன நலமில்லாத மனிதர்களை உள்ளடக்கி உப்பிப் பெருத்துக் கொண்டிருக்கும் இந்த தேசத்தின் எல்லா பகுதிகளிலும் அலையும் இந்த மிருகங்களை யார் அழித்தொழிப்பது...? 

காமத்தைப் பற்றி பேசினாலே தவறு என்று போதிக்கும் எல்லா தத்துவங்களையும் தூக்கிலேற்றி விட்டு....சாதாரண மனிதனுக்கு காமத்தின் வேர்கள் பற்றி போதிக்க சரியான வழிமுறை இங்கே கிடையாது. பெண்ணை போகத்திற்கான வஸ்துவாய் வர்ணிக்கும் வழிமுறைகளை கொளுத்திப் போட திரணியுள்ள மனிதர்கள் இங்கே கிடையவே கிடையாது.

வேலை வாய்ப்பின்மை, வறுமை, எரிச்சல், விரக்தி என்று எல்லாம் ஒரு இடத்தில் நின்று உந்திக் கொடுக்க காமம் பற்றிய புரிதலின்றி மூன்று வயது குழந்தையையும் சின்னாபின்னப் படுத்துகின்றன பகுத்தறிவு செத்துப் போன மிருகங்கள். இந்த சமூகம் கட்டி எழுப்பப்படுவது பெற்றோர்களால்,  பெற்றோர்களின் பிள்ளைகள் பற்றிய கவனம் சிதறிப்போவது முறையற்ற வாழ்க்கை முறையினால், முறையற்ற வாழ்க்கை முறைக்கும், போட்டிக்கும், பொறாமைக்கும், சூழல் காரணாமாகிறது. சரியில்லாத சூழலுக்கு நம்மை வழி நடத்துபவர்கள் காரணமாகிறார்கள். வழி நடத்துவார்கள் என்று நாம் நம்புபவர்கள் பேராசைப் பிசாசாய் இருக்கிறார்கள்.

இப்போது சொல்லுங்கள்.. இந்த முரணின் முடிச்சு விழுந்த முதல் இடம் எதுவென்று...?

ஒழுக்கம் என்று இங்கே போதிக்கப்பட்டிருப்பது எல்லாமே புரையோடிப்போன தவறுகள்..! நள்ளிரவில் பெண் வெளியே வருவது தவறு என்று  இன்னமும் நம்பும் பேசும் புரையோடிப் போன மூளைகள் பல கோடிகளை எளிதாய் தாண்டிவிடும். அவள் உடுத்துவது தவறு என்று போதிக்கும் மடையர்கள் தன் சகோதரியையும் தாயையும், உடுத்துவதில் தவறு இருந்தது, அதனால் இச்சை கொண்டு புணர்ந்தேன் என்று சொல்ல முடியுமா?

புனிதா என்ற சிறு பூவை கொன்றழித்த சுப்பையா என்னும் கொடியவனின் வாக்கு மூலத்தில் அவனின் செயலுக்கு காரணமாய் மதுவைச் சொல்கிறான்...? மதுவை பொதுவாக்கி தெருவெங்கும் ஓடவிட்ட அரசியல்வாதிகளை எதுவும் செய்வதற்கு இங்கே சட்டம் ஏதும் இல்லைதானே...?

கொலைகளுக்குத் தண்டனைகள் கொடுப்பது நமது கோபத்தின் வெளிப்பாடு. கோபத்தை மிச்சம் வைத்துக் கொள்ளக் கூடாது. அதை தீர்த்துக் கொள்ள கொடியவர்களை தண்டித்தே ஆகவேண்டும் என்பதில் யாதொரு மாற்றுக் கருத்துகளும் இருக்க முடியாது....என்று நாம் சொல்லும் அதே நேரத்தில் மன நலம் குன்றிய மிருங்கங்கள் நிறைந்த இந்த சமூகத்தின் வேரினை எப்படி சரி செய்வது என்றும் யோசிக்க வேண்டும்...!

பெண்ணின் புகைப்படத்தைப் எடுத்துப் போட்டு அதை விமர்சித்து விளையாடும் இணையப்புத்திகளுக்கு கீழே ஒளிந்து கிடப்பது இந்த வக்கிர மிருகத்தின் குட்டிகள்தான். இவை பதுங்கிக் கிடந்தே வக்கிர புத்தியோடு செத்தும் போகலாம்....இப்படி டெல்லி பேருந்தில் பாய்ந்து தாமினியை அழித்தது போல  அழிக்கவும் செய்யலாம். சூழல் செயலை தீர்மானிக்க வக்கிர மிருகம் இச்சைகளோடு பதுங்கியே கிடக்கிறது.

பெண் என்பவள் ஆணைப் போல இன்னொரு ஜீவன். அவ்வளவுதானே...!  ஆண்களுக்கும், பெண்களுக்கும் இயல்பான பரிமாற்றங்கள் ஏற்பட்டு புரிதல் ஏற்படத்தான் இருபாலாரும் பயிலும் பள்ளிகளும், கல்லூரிகளும் கொண்டு வரப்பட்டன. இதை ஆரம்பப்பள்ளிகளில் இருந்து மேற்படிப்புகள் படித்து முடிக்கும் வரை உறுதியான சட்டமாக்க வேண்டும்.

ஏதேதோ கருத்துக்களை எனது ஆற்றமையில் நான் பேசிக் கொண்டே செல்லலாம். இங்கே மாறவேண்டிய மனிதர்களை மாற்ற வேண்டிய சமூகக் கடமை அரசு இயந்திரங்களுக்கு மட்டுமல்ல நமக்கும் இருக்கிறது. குற்றம் புரிபவன் காட்டிலிருந்து நாட்டுக்குள் திடீரென்று நுழைந்தவன் அல்ல.. அவன் நம்மைச் சுற்றி வாழும் சக மனிதன். யாரோ பெற்ற பிள்ளைகள், யாருக்கோ சகோதரர்கள், யாருக்கோ நண்பர்கள், யாருக்கோ உறவினர்கள்...யாருக்கோ மாணவர்கள்...

மீண்டும் ஒரு முறை சொல்கிறேன் இது போன்ற மனிதர்கள் உருவாவதின் முதல் முடிச்சு எங்கே விழுகிறது என்று யோசியுங்கள்...! விளையாட்டுக்காய் பேசுகிறோம் என்று பெண்ணைக் கிண்டல் செய்து உடல் ரீதியாகவும், பாலினம் சார்ந்தும் பேசும் பேச்சுக்களை வக்கிரமான பார்வைகளாக கருதி தவிர்த்துவிடுங்கள். அறிவு சார்ந்து ஆண் பெண்ணையும், பெண் ஆணையும் பார்க்கும் ஒரு பக்குவ நிலைக்கு நாம் நகர்வதோடு, நமது பிள்ளைகளுக்கும் அதை சரியாக போதிக்கவும் செய்வோம்.

குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் அது டெல்லியோடு நின்றுவிடாமல் தேசத்தின் எல்லா பகுதியிலும் சமமாய் உற்று நோக்கப்பட்டு இப்படியான மிருகங்களை களை எடுக்கவேண்டும்.

நாட்டின் தலைநகருக்கு ஒரு தர்மத்தையும் தென் கோடி புனிதாக்களுக்கு ஒரு தர்மத்தையும் இந்திய தேசத்தின் ஊடகங்கள் கடை பிடிக்காமல் அநீதிகளை வெளிச்சம் போட்டுக் காட்டி தேசம் முழுமைக்கும் விழிப்புணர்வினை நேர்மையாய்க் கொடுக்கவேண்டும்...

சில நேரங்களில் ஏன் பிறந்தோம் என்று நமக்குத் தோன்றும்தானே....அது போலத்தான் இன்று ஏன்  இப்படியான இழிவான மிருகங்களை சுட்டிக் குறிக்கும் ஒரு இனமாய் பிறந்தோம் என்று கூனிக் குறுகிக் கொள்கிறது என் பகுத்தறிவு புத்தி....!


கண்ணீர் அஞ்சலிகள்...!!!!!!


தேவா. SFriday, December 28, 2012

தேடல்....28.12.2012!எனது தேடல் முடிந்து போகவில்லை... என்றாலும் தேடும் ஆவல் குறைந்து போனது உண்மைதான். எதையுமே ஆச்சர்யமாய் பார்க்கத் தோன்றாத மனோநிலையும், எவர் எதைப் பேசினாலும் தம்மை விளம்பரப்படுத்திக் கொள்ளுமொரு மனோபாவம் பளீச் என்று ஒரு குரங்கு குட்டியாய் என் முன் துள்ளிக் குதித்து அவர்களை அடையாளப்படுத்தி விடுவதாலும்.. எனக்குள் இருக்கும் குரங்குக் குட்டியை கட்டி மேய்க்கவே நேரம் எனக்கு சரியாய் இருப்பதாலும் தேடல் பற்றி எழுதும் தூரம் அதிகமாகிப் போய்விட்டது..

எனது இருப்பை நான் என்னை சுற்றி இருப்பவர்களுக்கு விளம்பரப்படுத்தியே ஆகவேண்டும் என்ற அடிப்படை எண்ணத்திலிருந்து கிளைத்து எழும் ஓராயிரம் வேசங்கள்தான் மனிதர்களின் செயல்களாகிப் போகிறது.  நான் எதையாவது எழுதுவதை தயவு செய்து என் புலம்பலாய், நான் எனக்குள் பேசும் ஒரு பாவனையாய் ஆக்கிக் கொள் என் மனமே என்ற என் வேண்டுதல் பல நேரங்களில் பலிக்காமலும் சில நேரங்களில் பலித்தும் போயிருக்கிறது. எழுதுவது இங்கே மிகப்பெரிய வித்தையாய் பார்க்கப்படுகிறது. எழுதுபவன் மட்டும் இங்கே தன்னை வேற்றுக்கிரக வாசியாய் நினைத்துக் கொள்வது கிடையாது, வாசிப்பவர்களும் அப்படியே நினைக்கிறார்கள்.

சுற்றி நிகழும் நிகழ்வுகளை, ஏதேதோ புத்தகங்களை வாசிக்கும் போது ஏற்படும் உணர்வுகளை, உள்ளுக்குள் சம்மணமிட்டு அமர்ந்திருக்கும் வலிகளை, வாழ்க்கை போதிக்கும் பாடங்களை முழுமையாய் வாங்கிக்கொண்டு அந்த உணர்வினை தனக்குள் வகைப்படுத்தி, அந்த அனுபவத்தை வார்த்தைகளில் கோர்வையாய் கொண்டு வரத்தெரிந்தவன் இங்கே எழுத்தாளன் ஆகிப் போகிறான். அதாவது சொல்ல வரும் விசயத்தை வார்த்தைகளில் சரியாய் அடுக்கி வைக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

எனக்குள் இருக்கும் உணர்வுகளை என்னை புரிந்த ஒரு மனிதரிடமோ, அல்லது நான் கற்பிதம் கொண்டிருக்கும் ஒரு கடவுளிடமோ அல்லது எனக்குள் நான் பேசியோ பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். பல நேரங்களில் ஓ...என்று சாய்ந்து அழ எனக்கு ஒரு தோள் தேவைப்படுகிறது. அந்த தோள் என் சோகத்தை ஆராயாமல் தன்னுடைய யோசனைகளை எனக்குச் சொல்லி என்னை ஆக்கிரமித்து விடாமல், வாங்கிக் கொள்ளும் தன்மைகளோடு மட்டுமே இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

இங்கே வலி என்று பகிர முயலும் போதே மனிதர்கள் அறிவுரை சொல்ல ஆரம்பித்து விடுகிறார்கள். தத்துவாசிரியர்கள் நிறைந்த உலகமாய் இது போய்விட்டது. எல்லோரும் கருத்து சொல்கிறார்கள். பணம் சம்பாரித்தலைப் பெருமையாய் நினைக்கிறார்கள். கீழே விழுந்தவனைப் பார்த்து சிரிக்கிறார்கள், சிரித்துக் கொண்டே அவர்களும் கீழே விழுகிறார்கள். சுற்றிச் சுற்றிப் போனாலும் இருப்பது சுப்பருடைய கொல்லைதான் இருக்கிறது என்பதை மறந்தவர்களாக இவர்கள் இருக்கிறார்கள்.

சில நேரங்களில் நான் நினைப்பதுண்டு, இத்துனூண்டு வாழ்க்கை இதுக்கு ஏன் இவ்வளவு இறுக்கம்? தலைக்கனம்? திமிர்...? என்று...! ஆமாம்.. நாம் வாழும் வாழ்க்கையின் நீளம் பிரபஞ்சக் கணக்கின் முன்னால் தூசினை ஆயிரம் தடவை பகுத்துப் பார்த்து, அதையும் கோடி முறை பகுத்துப் பார்த்தாலும் அதைக்காட்டிலும் சிறியது. மனிதர்கள் தங்களின் செயல்களை நியாயப்படுத்திக் கொள்ள இங்கே போட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்...! நான் முந்தியா நீ முந்தியா என்ற போட்டி இடை விடாது இங்கே நடந்து கொண்டிருக்கிறது.   

போட்டியிலிருந்து நான் விலகி நிற்க எனக்கு காலம் உதவியது. நான் இங்கே இருக்கிறேன் என்பதைத் தவிர வேறு ஒன்றையும் யாரிடமும் பகிர விரும்பவில்லை. இப்படியான என் மனோநிலையில் எனது இருப்பு சார்ந்த உணர்வுகளை யாரிடம் சொல்வது....? இறை என்ற விசயம் நான் என்னும் அகங்காரம் இல்லாத  உள்ளமை என்று உணர்ந்த பின்பு, தனியாய் கடவுளிடம் கதையளக்கும் வழமையை நான் கடந்து வந்துவிட்டேன். சாய்ந்து அழ தோள் கிடைக்காத ஒரு நிராயுதபாணியின் கதறலாய்த்தான் என் எழுத்துக்களை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இங்கே சிறப்பு என்று எதுவும் கிடையாது. பிரபஞ்சப் பேரியக்கம் இடும் பிச்சையை வாங்கிக் கொள்ளும் பிச்சைக்காரர்கள் நாம். இதில் பெரிய பிச்சைக்காரன் சிறிய பிச்சைக்காரன்,  அறிவாளி பிச்சைக்காரன், முட்டாள் பிச்சைக்காரன், அதிகாரம் கொண்ட பிச்சைக்காரன், என்றெல்லாம் வகைப்படுத்தி வேண்டுமானால் கொள்ளலாம்.

ஆனால்...அத்தனை பேரும் பிச்சைக்காரர்களே...! பிரபஞ்சப் பேரதிர்வின் அலைகள் கடந்து செல்லும் கருவிகள் நாம்.... அவ்வளவே...!

கடவுளை நோக்கிய என் தேடல் ஒரு இடத்தில் புரிதலோடு வாழ்க்கையை நோக்கி திரும்பிய கணத்தில்தான், அதுவரையில் எவ்வளவு தவறான புரிதல்களோடு வாழ்ந்திருந்திருக்கிறேன் என்ற உண்மை விளங்கியது. சத்தியத்தில் தொடர்பு கொள்ளுதலின் அழுத்தமான ஜோடனையாக உறவுகள்  என் முன் காட்சிப்பட்டுப் போயின. புலன்கள் இழுத்து வந்து போட்ட அனுபவக் கோர்வைகள் எல்லாம் அபத்தமாகி ஒடிந்து விழத் தொடங்கிய கணத்தில் ஆத்மார்த்தமான புரிதல்  கொண்ட ஒரு சிலர்  வார்த்தை பரிமாறல்களும், கவர்ச்சிகரமான பேச்சுகளும், பாவனைகளும், ஜோடனைகளுமின்றி என்னைச் சூழ ஆரம்பித்தனர்.

ஆத்மார்த்த உறவுகள் எப்போதும் புறச்சூழலை வைத்து நம்மிடம் தொடர்பு கொள்வது இல்லை. தேவா என்று பெயரிடப்பட்ட இந்த உடலுக்குள் இருக்கும் உள்ளமையை விளங்கிக் கொண்டவர்கள் எப்போதும் என்னைப் பற்றி யாதொரு அபிப்ராயமும் கொள்ளாமல், என் வார்த்தைகள் எங்கிருந்து பிறக்கின்றன என்று மட்டுமே கவனித்துக் கொள்கிறார்கள். என் சமகால வாழ்க்கையைப் பற்றி அவர்கள் யாதொரு கேள்வியும் கேட்பதில்லை. வாழ்க்கை எப்போதும் தேவைகள் நிறைந்தது இங்கே கொடுத்தலையும், பெறுதலையும் கடந்து நாம் நிற்கும் போதுதான் இதன் முழுமையை நாம் விளங்கிக் கொள்ள முடியும். குணம் என்பது சூழ்நிலை என்பதோடு மட்டுமில்லாமல் ஜீன்களின் தாக்கம் என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.  

மனித வாழ்க்கை சார்ந்து வாழும் வாழ்க்கை என்பதை தவறாகவே போதித்து தவறாகவே பழக்கி விட்டு விடுகிறார்கள். நானும் சார்ந்து வாழ்தல் என்பதை சக மனிதர்கள் மீது கொள்ளும் உரிமையாக எடுத்துக் கொண்டு அதனால் கஷ்டங்களை அனுபவித்தவன். யாரையும் சாராமல் நமது வாழ்வியல் தேவைகளை நாம் செய்து கொண்டே செல்லும் போது நமது செயல்களின் விளைவுகள் யாருக்கோ எப்படியோ சென்று சேர்ந்து விடும். நமது செயல்களுக்கான தர்மத்தையும், நீதியையும் நாம் வரையறுத்துக் கொள்ள எங்கிருந்தோ உதாரணங்களை எடுத்துக் கொள்கிறோம். இதற்கு முன்பு வாழ்ந்தவர்களின் வாழ்க்கையில் இருந்து நகல் எடுத்து அதன் படியே வாழ முயல்கிறோம் அல்லது இந்த சமூகம் அப்படி நம்மை வாழச் சொல்கிறது.

என்னை சுயமாய் இருக்க ஒரு போதும் இந்த சமூகம் விடவில்லை எப்போது பார்த்தாலும் பக்கத்து வீட்டு அண்ணன், எதிர் வீட்டு அக்கா, மூணாவது தெரு மாமா, இல்லை யாரோ ஒரு பணக்கரான், யாரோ ஒரு பிச்சைக்காரன், யாரோ ஒரு தொழிலதிபர், ஒரு அறிவாளி, அரசியல்வாதி, நடிகன் என்றெல்லாம் எனக்கு உதாரணம் சொல்லி அது போல நீயும்....என்று ஒரு வசதி செய்து கொடுக்கிறது.

அது போல....நீயும் செய் அல்லது நான் செய்கிறேன் என்று யார் என்னிடம் சொன்னாலும் தயவு தாட்சண்யம் பார்க்காமல் அவர்கள் உறவை நான் துண்டித்துக் கொள்கிறேன்.  என் கண் முன் இருப்பது எனக்கான ஒரு வாழ்க்கை அதை எவ்வளவு நிறைவாய் நான் வாழ வேண்டும் என்பதற்கு எதற்கு ஏற்கெனவே வாழ்ந்து முடித்த ஒருவரின் செயல்களை மார்ச்சுவரியிலிருந்து உருவி எனக்கு நான் பாடமாக்கிக் கொள்ள வேண்டும்...?

எனது பார்வை புதியது...! எனது காதல் புதியது...! எனது கடவுள் தேடலும், வாழ்க்கையும் புத்தம் புதியது...! அது இதற்கு முன் யாராலும் வாழப்படாததாக முற்றிலும் புதியதாய் புத்துணர்வோடு என்னால் வாழப்படவேண்டும். வரலாறுகளையும் கதைகளையும் நான் என் அனுபவத்திற்காய் கேட்டுக் கொள்கிறேன். பெரிய மனிதர்கள் என்று இந்த சமூகம் கடை பரப்பி இருப்பவர்களின் வாழ்க்கையில் நடந்த நல்ல விசயங்களை மட்டும் வாசித்து விட்டு, சமூகப் பொது புத்தியின் படி...அவர் யாரு தெரியுமா என்று நரம்பு புடைக்க பேசுவது என் வேலையல்ல....

அந்த பெரிய மனிதரின் வாழ்க்கையில் நடந்த யாரும் பார்க்க விரும்பாத பக்கங்களையும் தேடி எடுத்து நான் வாசிக்கிறேன். இது அந்த மனிதரைப் பற்றிய முழுமையான புரிதலை எனக்குக் கொடுக்கிறது. பகவான் இரமண மகரிஷியை என் மனம் போற்றும் அதே நேரத்தில் இவர் ஏன் இப்படி மலையடிவாரத்தில் வந்து அமரவேண்டும் இயல்பாய் இருந்திருக்கலாமே.... என்ற கேள்வியும் எனக்குள் எழத்தான் செய்கிறது. அவர் மகான் என்பதிலோ அல்லது அவரது அனுபவத்தைப் பற்றி பேசும் அருகதையோ எனக்கு இல்லை என்பது எல்லாம் ஒருபுறம் இருந்தாலும்

எனக்குள் கேள்வி எழுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை. துறவிகள் என்று தனிப்பட்டு காட்சியளிக்க வேண்டிய சூழலை விதைத்தது இந்த சமூகமா? அல்லது தனிப்பட்ட மனிதரின் விருப்பமா? என்றெல்லாம் நான் கேள்விகளை எனக்குள் கேட்டுக் கொள்ளத்தான் செய்கிறேன். இது யாரையும் அவமரியாதை செய்யும் ஒரு நிகழ்வாய் எனக்குத் தெரியவில்லை, மாறாக என் சுயத்தை நான் மரியாதை செய்யும் நிகழ்வாய்த்தான் பார்க்கிறேன்.

கர்மா என்று ஒன்று இருக்கிறது என்பதை நான் நம்ப அறிவியல்தான் காரணமாகிப் போனது. எல்லா செயல்களுக்கும் ஒரு விளைவு இருக்கும் என்று அறிவியல் சொல்லும் போது, ஒட்டு மொத்த மனித வாழ்க்கையும் முடிந்து போகும் போது அதற்கு விளைவுகள் இல்லை  என்று சொன்னால் என் பகுத்தறிவு மூளை செத்துப் போனதாகிப் போகிறது. பகவான் இரமணருக்கும், விவேகானந்தருக்கும், வள்ளலாருக்கும் அவர்களின் வாழ்க்கை அமையப்பெற்றது கர்மாவின் காரணமாய் இருக்கலாம் என்று விடை எனக்கு  கிடைத்த  இடத்தில் என்னை அடர்த்தியான  மெளனம் சூழ்ந்து கொண்டது.

தொடர்புகள் வாழ்வதற்கு அவசியம் என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன் என்று உங்களிடம் கூறும் அதே நேரத்தில் தொடர்புகள் நிம்மதியாக வாழ்வதற்கு உதவும் என்று என்னால் அறுதியிட்டு கூற முடியாது. மனித தொடர்புகள் பெரும்பாலும் நம்மை ஆளுமை செய்யவே செய்கிறது. என்னைக் கடந்து அடுத்த நபரிடம் நான் தொடர்பு கொள்ளும் போது அப்படியாய் நான் தொடர்பு கொள்ளும் நபரின் பக்குவமான நிலையும், பக்குவமில்லாத நிலையும் என்னை பாதிக்கச் செய்கின்றன.

குழப்பவாதிகள் குழப்பத்தையும், பேராசைக்காரர்கள் பேராசையையும், ஆணவக்காரர்கள் ஆணவத்தையும், பெருமை பேசுபவர்கள் சுய தம்பட்டத்தையும், கோபக்காரர்கள் கோபத்தையும் எப்படி எனக்கு  கொடுத்துச் செல்கிறார்களோ....

அதே போல.... நிதானமான யோசனை உள்ளவர்களும், தெளிவான புரிதல் உள்ளவர்களும் வாழ்க்கையின் நிலையாமையை விளங்கியவர்களும் அன்பையும், அமைதியையும் தங்களின் இயல்பாய் கொண்டவர்களும்....

அவர்களின் உணர்வுகளை எனக்குக் கொடுத்துச் செல்லவும் செய்கிறார்கள்.

நான் இரண்டாவது சொன்ன வகையினரை விட முதலில் சொன்ன வகையினரே இங்கே மிகுதி சதவீதத்தில் 99.99%. மிகைப்பட்ட பேர்களை விட்டு விலகி நின்று நான் மெளனித்துச் செல்வது ஏன் என்ற எனது கேள்விக்கு எனக்கே இந்த வரிகளை எழுதும் போது விடை சொல்லிக் கொடுக்கப்படுகிறது. எழுதும் போது தோன்றும் எண்ணங்கள் எனக்குள் இருந்து எழுவது ஆனால் எனக்குச் சொந்தமானது அல்ல...

எனது தேடல் அபத்தங்களை விட்டு என்னை தூர இருக்கச் சொல்லி இருக்கிறது. விலகி இருக்கத்தான் சொல்லி இருக்கிறதே அன்றி கவனிக்க வேண்டாம் என்று சொல்ல வில்லை. நான் என்னைச் சுற்றி இருக்கும் மனிதர்களின் செயல்களோடு தொடர்பு கொள்ளாமல் இருக்கப் பழக்கப்படுத்திக் கொண்டது எனது நீண்ட நெடிய பயணத்தின் ஒரு மைல் கல்..

இலக்கு எங்கிருக்கிறது என்று தெரியாது..... ஒருவேளை இப்படி நான், எனக்கு என்று எழுதும் ஒரு மடமை ஒழியும் அன்று இலக்கை நான் தொட்டிருப்பேனோ என்னவோ...!

ப்ரியமாய் நான் எழுதுவதை வாசிக்கும் ஆன்மாவின் பாஷை தெரிந்த அத்தனை பேருக்கும் எனது வந்தனங்கள்...!


தேவா. S
Monday, December 24, 2012

கும்கி....!

விமர்சனம் என்று ஒரு திரைப்படத்தை பார்த்துவிட்டு கருத்து சொல்லும் பொதுப்புத்தியிலிருந்து நான் ஒதுங்கி நடக்கவே விரும்புகிறேன். விமர்சனம் என்பது தனிப்பட்ட பார்வையை பொதுப்பார்வையாக்க முயலும் ஒரு யுத்தி என்பதோடு மட்டுமில்லாமல் சினிமாவை தங்களின்  உச்ச கட்ட தொழில்நுட்ப அறிவினை எல்லாம் பயன்படுத்தி பார்க்கும் களமாகவும் ஒரு சிலர் இங்கே நினைக்கிறார்கள்.

மேதாவிகள் உலகம் எப்போதும் உலக தரத்தில் இருக்கும் எல்லா விசயங்களையும் ஒப்பிட்டுப் பார்க்க நினைக்கிறது. துரத்தும் வாழ்க்கையின் ஏதோ ஒரு ஓய்வு தருணத்தில் சினிமாவை பார்க்கச் செல்லும் என்னைப் போன்ற சாமானியர்கள் சினிமாவை சினிமாவாக வாய் பிளந்து பார்த்து விட்டு அதை எடுக்க பிரயாசைப் பட்டிருக்கும் அந்த படக்குழுவினரின் உழைப்பை கண்டு வியக்கவும் செய்கிறோம். மிக மோசமாய் அரைத்த மாவையே அரைத்து பார்வையாளனை ஏமாற்றும் ஒரு சில படங்களைக் கண்டு நாம் அதிருப்தியுற்றாலும், தமிழ் சினிமாவில் வாழ்வியலையும் எதார்த்தத்தையும் பேசும் படங்களை சினிமாவோடு ஒன்றிப்போய் ரசிக்கும் நாங்கள்..., எங்களின் சூப்பர் ஹீரோக்கள் நிகழ்த்தும் அதிரடி சாகசஙகளையும் கை தட்டி விசிலடித்து ரசிப்பதிலும் யாதொரு குறையும் வைப்பதில்லை.

கொம்பன் என்னும் காட்டு யானை ஆதிக்காடு என்னும் ஊரில் இருக்கும் விளை நிலங்களில் அறுவடை செய்வதற்கு முன்பாக வந்து அட்டூழியம் செய்கிறது. மனிதர்களைக் கொன்று விடுகிறது. இந்தக் கொம்பனை விரட்ட காட்டு இலாகா துறை எந்த ஒரு உதவியும் செய்யாமல், தலைமுறை தலைமுறையாய் தங்களின் பழக்க வழக்கங்களை மாற்றாமல் வாழும் பழங்குடியினரை அந்த இடத்தை விட்டு வெளியேறி வேறு இடத்தில் சென்று தங்கிக் கொள்ளுங்கள் என்று நிர்ப்பந்தம் செய்ய, அதை நிராகரித்து விட்டு.. காட்டு யானை கொம்பனை விரட்ட ஒரு கும்கி யானை கொண்டு வர தீர்மானிக்கிறது அந்த ஆதிக்காடு என்னும் கிராமம்.

கும்கி யானைக்கு பதிலாக பொம்மனின் கோயில் யானை ஊருக்குள் சூழ்நிலையால் வந்து விட, பொம்மனுக்கும் ஊர் தலைவரின் மகளான அல்லிக்கும் மலரும் அழகான காதலைத்தான்... இயக்குனர் பிரபு சாலமன் கதையின் கருவாக்கி இருக்கிறார். கதைக்கான களம் அட்டகாசமானது, சமீபத்திய தமிழ் சினிமாவுக்கு மிக, மிக புதியது.

மீன் குஞ்சுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க வேண்டியதில்லை என்றாலும் முட்டையிலிருந்து வெளியே வரும் மீன் குஞ்சு முதன் முதலாய் நீரில் அடித்து நீந்தி அங்கும் அங்கும் அனுபவமின்றி அலை பாய்கையில் என்ன ஒரு பதட்டம் இருக்குமோ, அதே பதட்டத்தை விக்ரம் பிரபு கொண்டிருப்பதை நம்மால் உணர முடிகிறது, மற்றபடி... சரியான பாதையில் அவர் பயணிக்கும் பட்சத்தில் எதிர்காலத்தில் அவருக்கான வாய்ப்புகள் பிரகாசமாய் இருக்கும் என்பதில் யாதொரு மாற்றமும் இல்லை.

காதலை மையப்படுத்தி வெளிவரும் திரைப்படங்களில் வரும் கதாநாயகிகளை அந்த திரைப்படத்தை பார்க்கும் அத்தனை பேரும் மானசீகமாக காதலிக்க வேண்டும் என்ற ஒரு நியதியை ஏற்படுத்துவது வெற்றிக்கரமான ஒரு இயக்குனரின் வேலை. இந்த வேலையை கனகச்சிதமாக நிறைவேற்றி இருக்கும் பிரபு சாலமன் சாருக்கு ஒரு " ஓ.. "போட்டே ஆகவேண்டும். கதாநாயகி லட்சுமி மேனனை வைத்துக் கொண்டு படத்தில் அவர் நடத்தி இருப்பது சர்வ நிச்சமயாய் ஒர் அல்லி தர்பார்தான்...!

ஆதிவாசிப் பெண்ணாய் வந்து அதுவும் முதல் படத்திலேயே (சுந்தர பாண்டியன் முன்னாடியே ரிலீஸ் ஆனது வேற விசயம்....) க்ளோசப் ஷாட்களில் எல்லாம் எல்லா விதமான முகபாவங்களையும் நேர்த்தியாய் கொண்டு வரும் லட்சுமி மேனன் அட்டகாசமான தேர்வு..! காதலுக்காய் கோயில் யானையை கும்பி யானையாக்க பொம்மன் பிராயசைப்படும் இடங்களில்....நமக்கே சீட்டில் இருந்து எழுந்து...." பார்கே.....பார்கே...மாணிக்கம் முன்னால போ..." என்று கத்தவேண்டும் என்று தோன்றுகிறது..! காட்டு யானை கொம்பனை கோயில் யானை மாணிக்கம் எப்படி விரட்டப் போகிறது....என்ற ஒரு டென்சனை நமக்குள் ஏற்படுத்தி விட்டு.. கூலாக காடு, மலை, அருவி, சுனை, விளை நிலங்கள் என்று பச்சை பசேலென்று திரைப்படம் நகர்ந்து கொண்டே இருக்கிறது... !

தம்பி ராமையா இந்தப்படத்தில் நகைச்சுவையில் பிரித்து மேய்ந்திருக்கிறார் (நல்ல கவனிங்க...பிரிச்சு மேஞ்சுருக்காரு...). ஆங்காங்கே விமர்சனம் எழுதிய சிலர் தம்பி ராமையாவை ஓவர் டோஸ் என்றெல்லாம் எழுதி இருந்தார்கள்...! அது எந்தமாதிரியான பார்வை என்று தெரியவில்லை...ஆனால்... கதையோடு பொருந்தி வரும் அவரின் பாத்திரமும் அவரின் நகைச்சுவைகளும் மிகப்பிரமாதம்...! இரட்டை அர்த்த வசனங்களை அதிகம் அவர் பேசாமல் சூழலை மையப்படுத்தியே பேசி நம்மை சிரிக்க வைப்பது அழகு..... வசனகர்த்தாவுக்கு வந்தனங்கள்...!

மாணிக்கத்திற்கு மதம் பிடித்து விடும் இடத்தில், யாருமே எதிர்பாராமல் கொம்பன் என்ட்ரி...ஆவது கிளாஸ்....!!! கொம்பன், தனது பாகனான பொம்மனை (விக்ரம் பிரபு) அடிப்பதை பொறுக்க முடியாத மாணிக்கம் சீறிப்பாய்ந்து கொம்பனை தாக்க....

இரண்டு யானைகளுக்கும் இடையே  நடக்கும் சண்டையே படத்தின் க்ளைமாக்ஸாகிப் போகிறது. கிராபிக்ஸ் காட்சிகளில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம் என்று நிறைய தொழில் நுட்ப புலிகள் கடுமையாய் இயக்குனரை விமர்சித்திருக்கிறார்கள்...

இயன்ற வரையில் கிராபிக்ஸ்  காட்சியில் யானைகளின் சண்டையை இயக்குனர் காட்ட முயன்றிருக்கிறார் என்றுதான் நான் சொல்வேன். ஒரு திரைப்படம் பார்க்கும் போது முழுக்க முழுக்க படக்குழுவினரடமே எல்லாவற்றையும் எதிர்பார்க்காமல் கொஞ்சம் நமது கற்பனைக்கும் இடம் கொடுத்து காட்சிகளை விவரித்துப் பார்க்க வேண்டும்....! நான் சொல்வது கொஞ்சம் முரணாகக் கூட உங்களுக்குத் தோன்றலாம்...! கும்கி போன்ற திரைப்படங்கள் எல்லோரும் எப்போதும் சொல்லும் காதலைத்தான் சொல்லி இருக்கின்றன என்றாலும் அந்த காதலை சொல்ல எடுத்துக் கொண்டிருக்கும் சூழலும் கதாபாத்திரங்களும் எப்படி சராசரியிலிருந்து மாறிப் பயணிக்கின்றன என்பதை ரசிக்க கூடத் தெரியாமல், அங்கொன்றும் இங்கொன்றுமாய் கண்டுபிடித்து தவறுகளை சுட்டிக்காட்டி எழுதுபவர்களை பார்த்து நான் ஆச்சர்யப்பட்டுதான் போகிறேன்...!

லாஜிக் மீறி திரையில் கட்டி எழுப்பப்படும் காட்சிகள் கூட ரசனைக்குரியதாய் இருந்தால் கை தட்டி ரசிப்பதில் தவறில்லை தானே...? மூவி இஸ் எ மூவீ. தட்ஸ் ஆல்...!

திரையில் ஒரு கதை, களம், காட்சிகள், கதாநாயகி, கதாநாயகன் என்று காட்சிப்படுத்துவது இயக்குனரின் வேலையாகிறது என்றாலும் கும்கி மாதிரி திரைப்படங்களைப் பற்றி தனியே அமர்ந்து யோசித்து, கற்பனையில் ஊறி, ரசிக்க நிறைய விசயங்கள் இருக்கிறது. தகப்பனின் நம்பிக்கையை உடைக்க விரும்பாத அல்லியும், மதம் பிடித்தது உனக்கு இல்லை மாணிக்கம், எனக்குதான் என்று தனது மாமாவையும், நண்பனையும், மாணிக்கம் என்ற யானையையும் கடைசியில் இழந்து புலம்பும் இடத்தில் விக்ரம் பிரபு....நடிப்பில் பவுண்டரி அடித்திருக்கிறார். முதல் படம் என்றாலும் அவருக்கு பின்புலத்தில் அவரது குடும்பமே இருந்திருக்கிறது என்பது கதை தேர்வில் மட்டுமில்லாமல், இசையிலும், பாடல்களிலும் தெளிவாகவே தெரிகிறது.

பாடல்களில் இமான்...பட்டையை கிளப்பி இருக்கிறார் என்று நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.. அல்போன்ஸ் குரலில் நீ எப்போ புள்ள சொல்லப் போற...என்று காதலியின் பின்னாலேயே காதலைச் சொல்ல ஏங்கித் திரியும் யுகபாரதியின் (யுகபாரதிதானே...?!) வரிகளுக்கு இமான் போட்டிருக்கும் ட்யூன் படம் பார்த்து முடிந்த பின்பும் மனதுக்குள் அழுது கொண்டேதான் இருக்கிறது.

இயக்குனருக்குள் பெரும் சோகம் ஏதோ ஒன்று இருக்க வேண்டும் அல்லது வாழ்க்கைப் பற்றிய நிலையாமையை அவர் தெளிவாய் விளங்கி இருக்க வேண்டும். முந்தைய படமான மைனாவிலும் ஒரு மாதிரியான சூழலில் தான் படத்தை முடித்திருப்பார். கும்கியிலும் கூட.. இந்தப் பக்கம் மாணிக்கம் யானை, கும்கி யானையை கொன்று விட்டு தனது எஜமானரைக் காப்பற்றிய திருப்தியில் இறந்து கிடக்க, தம்பி ராமையாவும், விக்ரம் பிரபுவின் நண்பராய் நடித்து இருப்பவரும் இறந்து கிடக்க...

தனது மகளின் காதலை புரிந்து கொண்டாலும் தனது பாரம்பரியம் கெட்டுப் போய்விடுமே என்பதால் இறுக்கமாய் உள்ளுக்குள் அழும் ஊர்த்தலைவரும், அப்பாவின் பேச்சையும் நம்பிக்கையையும் மீற முடியாமல் காதலை உள்ளுக்குள் தேக்கிக் கொண்டு கதறும் லட்சுமி மேனன் ஒரு புறமும்...

தன் மீது ஊர் வைத்திருக்கும் நம்பிக்கையை உடைத்து விடக்கூடது என்ற உணர்வில் தான் இழந்து போன உறவுகளுக்காக அழுது கொண்டு...விக்ரம் பிரபு அந்த கிராமத்தை விட்டும் நடக்க...

எ...பிலிம் பை பிரபு சாலமன் என்று படம் முடிந்து விடுகிறது. கதாநாயகியும் கதாநாயகனும் சேர்ந்திருக்க கூடாதா என்ற ஒரு ஏக்கத்தை நமக்கு கொடுக்க வேண்டும் என்ற டைரக்டரின் எண்ணம் இங்கே மெளனமாய் வெற்றி பெறுகிறது. முடிவை மாற்றப்போவதாக எங்கேயோ நான் படித்தேன்...! கதாநாயகனும், நாயகியும் சேர்வதைப் போல முடித்தால் அங்கே பொதுப் புத்தி வேண்டுமானால் வெற்றி பெறாலாம்... ஆனால் எதார்த்தம் தோற்றுத் தான் போகும்....!

தமிழ் சினிமா இயக்குனர்களை வழக்கமான கதைகளை விட்டு நகர்ந்து வெவ்வேறு களம் நோக்கி சிறகடிக்க வைக்க கும்கி போன்ற திரைப்படங்கள் உதவக்கூடும்....!

ஹேட்ஸ் அப்...பிரபு சாலமன் சார்...!!!!!


தேவா. S
Thursday, December 20, 2012

உலகம் அழிந்துதான் போகட்டுமே....!


இந்த உலகம் அழிந்து போகக் கூடாது என்று நீங்கள் எண்ணுவதற்கு நியாயமாய் ஒரே ஒரு காரணம் என்னிடம் சொல்லுங்கள் போதும். டிசம்பர் 21ல் உலகம் அழியாமலேயே போகட்டும். மாயன் காலண்டர் பொய் என்று கூறி நாம் புளகாங்கிதம் பட்டுக் கொண்டு தெருக்கு தெரு, நின்று பேசவும், இணையத்தில் சவுடாலாய் வாயடிக்கவும் கூட செய்யலாம்.

ஆனால்...

எனது கேள்வி எல்லாம் ஏன் இந்த உலகம் அழிந்து போகக் கூடாது என்பதுதான்...? என்னைப் பொறுத்தவரை மாயன் காலண்டர் உயிர் பெற்று ஏதோ ஒரு சக்திக்கு உயிர் வந்து இந்த பூமியை சிதறடித்து மானுட பிண்டங்களைத் பிரபஞ்ச வெளியில் திக்குகள் எட்டும் பிய்த்து எறியட்டும். ஆழ்கடல் சிறு துளியாய் இந்தப் பெருவெளியில் மிதக்க உயிர்களை உறிஞ்சிக் கொண்ட இந்த பிரபஞ்சம் வெடித்து சிரிக்கட்டும்.

வாழ்க்கையை இயல்பாய் கட்டியமைத்துக் கொண்ட இயற்கையை சின்னாபின்னப் படுத்திக் கொண்டே....

எல்லைகள் வகுத்துக் கொண்டு நிறம், மொழி, மதம், நாடு, சாதி, பிராந்தியம் என்று பிரிந்து நின்று கொண்டு இந்த பிண்டங்கள் பிண்டங்களை அழித்துக் கொள்வதைக் காட்டிலும் எல்லா வகையிலும் சிறந்தது இயற்கையே எல்லாவற்றையும் நொறுக்கிப் போடுவது. நெருப்பாய் சீறி விழுந்த பூமி நெருப்பு அணைய, அணைய சிலிக்கானோடு சில்மிஷங்கள் செய்து மண்ணாயும், ஹைட்ரஜனும், ஆக்ஸிஜனும் கலவி செய்து நீராயும், இன்ன பிற வாயுக்களும் ஏற்ற, இறக்க சதவீதங்களில் இந்த மண்ணோடும், நீரோடும் கூடிக் கலக்க எதேச்சையாய் வந்து விழுந்த மனிதன்...

சப்தமில்லா பேரமைதியோடு இருந்த இந்த பூமியை  சிதிலப்படுத்தி, எல்லைகளுக்குள் நின்று கொண்டு என் கடவுள் வேறு, உன் கடவுள் வேறு என்று பிரித்துக் கொண்டு தன் கற்பனையை எல்லாம் கடவுளாக்கிக் கொண்டு...மனிதனே மனிதனை அழித்துக் கொள்வதைக் காட்டிலும் ஏதோ ஒன்று பூமியை மொத்தமாய் அழித்து போவதில் என்ன  குறைந்து விடப்போகிறது என்று சொல்லுங்கள்...?

தானே ஜனித்த பூமியில் செடிகளுடனும், கொடிகளுடனும் சிரித்து விளையாடி மேகங்களை கலைத்துப் போட்டு மழை பெய்ய வைத்த நெடும் மரங்கள் எல்லாம் எப்படி காணாமல் போனது என்ற புதிருக்கு யாரிடமேனும் விடை உண்டா? பூமியின் பரிசுத்தத்தை வாழ்ந்து மரித்துப் போக வந்த மானுடர்கள் இந்தப் பூமிப்பந்தில் உரிமை கொள்கிறேன் பேர்வழி என்று எதை நிறுவி இருக்கிறார்கள் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்...!

பல்வேறு கால நிலைகளைக் கொண்ட பூமியில் சூழலுக்கு ஏற்ப மனிதத் தன்மைகள் தன்னிச்சையாய் வடிவமைந்து போயின. தத்தம் சந்ததிகளுக்கு ஜீன்களின் மூலம் குணாதிசயங்களைக் கடத்திச் சென்ற இயற்கையின் அற்புதம் ஒவ்வொரு மனிதனையும் அவனவன் பரம்பரையைப் பொறுத்தும் அவனவனின் தனிப்பட்ட அனுபவங்களைப் பொறுத்தும் சுட்டுப் போட.. மனிதன்... ஒவ்வொரு மாதிரியாய் ஆகிப் போனான். இது இயற்கையின்பால் ஏற்பட்ட மாற்றம் என்று உணர்ந்து நகராமல் வெள்ளையாய் இருப்பவன் கருப்பாய் இருப்பவனை அடிமைப்படுத்த நினைத்த இடத்தில் ...பிடித்தது இந்த பூமிக்கு சனி.

ஆக்கிரமிக்க நினைத்த இடத்தில் தான் ஒரு தன்னிச்சையாய் தோன்றி தன்னிச்சையாய் மறையும் ஜந்து என்பதை உணராதவனாய் மனிதன் போய்விட்டதன் விளைவுகளே பல்வேறு நாடுகளும், அவற்றுக்கான கொள்கைகளும், இராணுவங்களும், இன்ன பிற சட்டங்களும். சட்டங்களை யாருக்காக மனிதன் பிறப்பித்தான்... ? வேற்று கிரகவசிகளுக்கா?  இல்லையே .. உடன் ஜனித்து வாழும் சக மானுடர்களுக்காகத்தானே...?

என்ன மானங்கெட்ட ஒழுங்கு இருக்கிறது இந்த பூமியில்...என்று என்னிடம் சொல்லிவிட்டு பிறகு சொல்லுங்கள் ஏன் இந்த பூமி அழியக்கூடாது என்று...! தர்மத்தை பேச கோடி பேரில் ஒருவன் இருப்பதுதான் உங்களின் ஒழுங்கு என்றால் அந்த ஒருவனும் இந்த கோடி பேருக்கு நடுவில் நல்லவனாய் வாழ்வதை விட....மொத்தமாய்  அழிந்து போவதே மேல்...!

கொத்துக் கொத்தாய்  ஈழத்தில் லட்சக்கணக்கில் உயிர்களை அழிக்க ஒருவன் இருப்பான் அவனைக் தட்டிக் கேட்க நாதியில்லாத இந்த பூமி ஏன் இருக்க வேண்டும்....? வலு இருப்பவனுக்கு ஒரு சட்டம் வலு இல்லாதவனுக்கு சட்டமென்பதை நிதர்சனப்படுத்த காஸாவிலே எறிகணைகள் வீசி உயிர்கள் பறிக்கும் கொடியவர்கள் கால் இந்த பூமியில் பதிந்து கிடப்பதை விட.. பூமி அழிந்து ஒழிவதே மேல்....

நொறுங்கிப் போ பூமியே....
உன் கருணையை 
வாங்கிக் கொள்ளும் தகுதியற்றுப் 
போனது மனித இனம்...
தொடர்ந்து சுற்றிக் கொண்டு
நீ சூரியனையும் சுற்றி வந்து
எம்மையும் சுமந்து வரும்
கருவில் சிசு சுமக்கும் 
தாய் நீ....!
உன் வலியறியாத எம் மானுடத்தை
மொத்தமாய் ஏதோ ஒன்று..
மென்று போடட்டும்...
இல்லையேல்...
இந்த மானுடமே உன்னை
ஒரு நாள் கொன்று போட்டு விடும்....!

பச்சை குழந்தையாய் பூமி மீது படர்ந்து கிடந்த பிராணனை நச்சுப்படுத்தி விட்டோம், இயற்கையில் கிடைத்த நீரினை பங்கிட்டு வாழத் தெரியாமல் பதுக்கிக் கொள்ளும் யுத்திகள் செய்தோம், பூமித்தாயின் வளங்களை எல்லாம் சூறையாட சூட்சுமங்கள் ஓராயிரம் செய்தோம், இயற்கையின் மூலப்பொருள்களை முரண்பட்ட நிலையில் செயற்கையாக்கி நெகிழிகள் என்னும் பிளாஸ்டிக் அரக்கனை கண்டு பிடித்தோம்.... அது மட்கிப் போகாமல் பூமியினுள் ஆழப் படுத்துக் கொண்டு ஒரு மழையின் நீரினை தாகத்தோடு பூமி வாங்கி பருகக் கூட விடமால் தடுத்து நிற்கிறது....

அசுத்தங்களை கடலில் கலந்து நிலத்தைக் கடந்து நீரில் வாழும் உயிர்களின் வாழ்க்கையையும் பறித்துக் கொண்டோம்...! என்ன செய்ய வில்லை இந்த மானுடம்...? எல்லா அநீதிகளையும் தாங்கிக் கொண்டு மெளனமாய் சுற்றிக் கொண்டிருக்கிறது இந்த பூமி.  சூரிய குடும்பத்தில் பூமி ஒரு புள்ளி, பிரபஞ்ச வெள்ளத்தில் சூரியன் ஒரு தூசு என்பதையெல்லாம் மறந்து விட்டு....என்ன செய்து கொண்டிருக்கிறது இந்த மானுடம்...?

இயற்கையின் வளங்களைத் திருடிக் கொண்டதோடு, இயற்கைக்கு முரணாயும் மனிதம் செய்யும் அட்டூழியங்களுக்காக வேண்டி ஒன்று இந்த பூமி மொத்தமாய் தன்னை அழித்துக் கொள்ள வேண்டும் இல்லையேல்.. பூமியை விட்டு தூர  இந்த பிரபஞ்சக் காட்டுக்குள் குப்பையைக் கொட்டுவதைப் போல மொத்த ஜன சமுத்திரத்தையும் கொட்டி விட்டு வெறுமையால் நிறைவாய் மீண்டும் தன் பயணத்தை புதிதாய் தொடங்கவேண்டும்....

மிருகங்கள் நிறைந்து போன பூமியில் வக்கிரமான கற்பழிப்புகளும், தேவைக்கு அதிகமாய் கோடிகளில் ஊழல்களும், முறையற்ற உறவுகளும், தொடர் வறுமையால் திருட்டுக்களும், மனிதநேயம் வற்றிப் போன இடங்களில் ஆக்கிரமிப்புகளும், கொலைகளும், அதிகார போதையில்  மேலேறி வர குறுக்கு வழிகளும், வணிகம் என்ற பெயரில் அடக்கு முறைகளும் மட்டுமல்ல....

நீரை உறிஞ்சி உறிஞ்சி வற்றிப்போன மார்பகமாக்கப்பட்ட இந்த பூமியில் ஒரு மரம் நடக் கூட மனிதர்களிட சென்று கெஞ்ச வேண்டிய சூழலை மனிதனை அன்றி யார் இங்கே உருவாக்கியது...? உணவுப் பொருள்களை விளைவிக்கும் நிலங்களை எல்லாம் கான்கிரீட் காடுகளாகிப் போட்டது யார்..? மாசுபட்டுப் போன நீரை பூமியெங்கும் ஓட விட்டதோடு, ஆற்று மணலையும் அள்ளி இந்த பூமியை அம்மணமாக்கியது யார்...? மானுட சமூகம் தோன்றி இதுவரையில் மனிதர்களுக்கு எதிரே வர திரணியற்ற கடவுளுக்கு ஏதேதோ பெயரிட்டுக் கொண்டு...

விவாதித்து, விவாதித்து என் கடவுளும் மதமும்தான் பெரிது என்று பேய்க்கூச்சல் போட்டு சண்டையிட்டுக் கொளவது யார் இங்கு..? இந்த பூமியின் ஒட்டு மொத்த முரண்பாட்டுக்கும், கொலைகளுக்கும், உயிரிழப்புகளுக்கும், நிம்மதியற்ற தன்மைக்கும் முழு முதற் காரணம் மனிதன் தானே...?

இப்படியாய் சுயநலப் பேய்கள் தங்களின் வாழ்க்கையை மட்டும் நிலை நிறுத்தவேண்டும் என்று வாழும் ஒரு அவல வாழ்க்கை நாளையோடு முடிந்து போகட்டும்...!!!

மாயன்களின் காலண்டர் அவர்கள் கணக்கீட்டின் படியான வருட முடிவைச் சொல்லித்தான் சென்றிருக்கிறது...அதனால் உலகம் அழியாது என்று நாசா அறிவித்தவுடன்... கோடானு கோடி ஆண்டுகள் வாழப்போவது போல நிம்மதிப் பெருமூச்சு  விடும் அத்தனை நாசிகளும் தங்களின் சுவாசிப்பை இன்னும் 200 வருடத்திற்கு உறுதி செய்ய இயலுமா? முடியாது.... தானே...?

டிசம்பர் 21 பூமி அழியாவிட்டால் அழியவில்லையே என்ற மகிழ்வின் உச்சத்தில் சக மனிதரை நேசித்து வாழப்போகிறோமா? சுயநலங்கள் தொலைக்கப்போகிறோமா? அன்பையும், கருணையையும் நமது குணமாக்கிக் கொண்டு, எல்லைகள் மறந்து, மதங்கள் ஒழிந்து, இன, மொழி வேறுபாடுகள் இன்றி....இயற்கையைப் பேணி வாழப்போகிறோமா என்ன...?

அதனால்...
மொத்தமாய் அழிந்து
மீண்டுமொரு முறை
பிறந்து வா பூமியே....!
அங்கே புலன்களை கடந்த
புத்தர்களை பிரசவித்துக் கொடு...
சக மனிதர்களோடு
அன்பை மட்டுமே பரிமாறிக்கொள்ள
ஏதேனும் ஒரு யுத்தி செய்து வை...!
எல்லைக் கோடுகள் கிழித்து
நாடுகளாக பிரிந்து கிடக்கும்
அவலம் தீர்....!
தீரத் தீர சுவாசிக்க
சுத்தமான பிராணனால் 
நிரம்பி இரு...!
மரங்களுக்கு நடுவே
மனிதர்கள் வாழும் 
பாக்கியம் கொடு....!
வற்றிப் போகாத நீரால் 
நீ நிரம்பிக் கிட...!
வளமான வாழ்க்கையை 
புது மனிதர்களுக்கு கொடுத்தோம்
என்ற இறுமாப்பில்...
நீ யுகங்கள் கழிந்தும்
சூரியனைச் சுற்றி வா...!
அதனால்..
இப்போது
நீ மொத்தமாய் அழிந்து 
மீண்டுமொரு முறை 
பிறந்து வா....!


தேவா. SSaturday, December 15, 2012

நீர்ப்பறவை....!தெரிவிச்சு....இல்லை தெரிவிச்சு என்ன செய்யப் போறீங்க..? என்ற ஆதங்க கேள்விக்குப் பின்னால்,  செத்தவன் செத்துப் போய்ட்டான். சுட்டவன் ஏன் சுட்டான்னு கேக்க தெம்பில்லாத கவர்மெண்ட்கிட்ட செத்துப் போய்ட்டான்னு தெரிவிச்சு என்ன ஆயிடப் போவுது..? செத்துப் போன எண்ணிக்கையில ஒண்ணு கூட்டிக்கிட போறீங்க அம்புட்டுதானே என்ற சோகமே  மறைந்து கிடந்தது...., கண்ணீரோடு எஸ்தர் கதாபாத்திரம் கோர்ட்டில் திரணியற்று திரையில் பேசி கொண்டிருக்கையில் எனக்கும் வெடித்து அழத்தான் தோன்றியது.

பொழுது போக்கு என்ற நிலைக்கு அப்பாற்பட்ட வாழ்க்கையைப் பதிவு செய்யும் நீர்ப்பறவை போன்ற சினிமாக்கள் போற்றப்படவேண்டியவை என்பதில் யாதொரு மாற்றுக் கருத்துக்களும் இருக்க முடியாது. உப்புக்காற்றின் ஈரத்தையும், மீன் பிடி தொழில் செய்யும் தென் தமிழகத்து வெள்ளந்தியான வாழ்க்கை முறையையும் அப்படியே காமிராவுக்குள் கொண்டு வந்திருக்கும் காமெரா மேனை கட்டிப்பிடித்து அவரின் கைகளுக்கு முத்தமிடத் தோன்றியது எனக்கு.

அருளப்ப சாமியாகவே மாறிப்போயிருந்த விஷ்ணுவும், எஸ்தராகவே உருமாறியிருந்த சுனைனாவும் மட்டுமின்றி, படத்தில் எந்த ஒரு கேரக்டரையும் பாத்திரத்தைக் கடந்து வெளியே பார்க்க முடியாத அளவுக்கு  அப்பிக் கொண்டிருந்த எதார்த்தம் இயக்குனர் சீனு இராமசாமி என்ற படைப்பாளியின் வெற்றி. ஒரு நாவலைப் படிக்கும் போது வாசிப்பாளனின் கற்பனை சக்தி தனது விருப்பத்திற்கேற்ப பாத்திரங்களை தானியங்கி முறையில் கற்பிதம் செய்து கொண்டு வசதியான ஒரு சூழலியே இயல்பாய் நகர்ந்து போகிறது. எப்போதும் நாவல்களில் கதையின் ஆழமும், கதாபாத்திரங்களின் ஆளுமையும் வாசிப்பவனின்  ஈடுப்பாட்டைப் பொறுத்து விரிந்து சுருங்கிக் கொள்ளவும் செய்கிறது.

ஆனால், ஒரு கதையைப் படமாக்கும் போது முழுக்க முழுக்க இயக்குனரின் பார்வையே படம் முழுதும் காட்சியாக விரிகிறது. இங்கே வாசிப்பாளனுக்கு கிடைக்கும் முழு சுதந்திரமும், காட்சி விரிவாக்கமும் கிடைக்காமல் போவதற்கு பல சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. நீர்ப்பறவை படம் முழுதுமே நமது கற்பனையை மட்டுப்படுத்தி திரைக்குள் நம்மை அடைத்து போடாமல்  மனிதர்களின் அன்றாட வாழ்க்கையை வேடிக்கை பார்க்கும் ஒரு உணர்வை நமக்கு கொடுத்து விடுகிறது. ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற ஆகச் சிறந்த  படைப்புகளை திரையில் நான் பார்த்த போது அங்கே ஜெயகாந்தனின் ஆளுமையை பார்க்க முடியவில்லை. காட்சிப்படுத்தலில் ஏற்பட்டுப் போகும் சிக்கல் இது. 

நீர்ப்பறவை படம் முழுதுமே ஒரு நாவலாய் விரிந்து செல்லும் ஆச்சர்யம் எனக்கு ஏற்பட்டுப் போயிருப்பதற்கு காரணம் அசாத்தியமான திரைக்கதையும், அந்த திரைக்கதைக்கு வசனம் எழுதியிருக்கும் சீனு இராமசாமியும், ஜெயமோகனுமாகிப் போகிறார்கள். சினிமாத்தனம் இல்லாத சினிமாக்கள் எல்லாம்  வெறுமனே கண்டு வரும் காட்சிகளாய் மட்டும் இருந்து விடாமல் கூடவே இருந்து வாழ்ந்து வரும் ஒரு சுகானுபவத்தைக் கொடுத்து விடுகின்றன, நீர்ப்பறவையும் அப்படித்தான்.

நீர்ப்பறவையின் எஸ்தர் போன்ற பல எஸ்தர்களை நான் பார்த்திருக்கிறேன். அருளப்ப சாமிகள்  குடியை விட்டு விட்டு திருந்தி வாழ முற்படுகையில் சமூகம் அவர்களுக்கு கொடுக்கும் பல நிர்ப்பந்தங்களையும் நிஜமாகவே நான் கண்டிருக்கிறேன். அன்றாட வாழ்க்கையில் நம் முன் எதிர்ப்படும் மனிதர்கள் இவர்கள். தம்பி இராமையாவைப் போல எனக்கு கல்லூரியில் விரிவுரையாளர் ஒருவர் இருந்தார். திறமையாய் பாடம் சொல்லிக் கொடுக்க கூடியவராயிருந்தாலும் குடித்து விட்டுதான் கல்லூரிக்கு வருவார். 

குடிப்பழக்கம் பொழுது போக்காய் ஆரம்பித்து, அவ்வப்போது என்று நமக்கு நாமே ஆறுதல் சொல்லிக் கொண்டு, அடிக்கடி குடியாய் மாறி பின் குடிக்காமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு  கொண்டு வந்து விட்டு விடுகிறது. புரிதலோடு மிகச்சிலரே மதுவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். விழிப்புணர்வற்று மதுவைத் தொடுபவர்களை மது தனக்கு அடிமையாக்கி வைத்துக் கொள்கிறது. 

தெருவெங்கும் சிரிப்பாய் சிரிக்கும் டாஸ்மாக்குகள் எத்தனை பிள்ளைகளுக்கு தன் தகப்பனை தூரமாக்கி வைத்திருக்கிறது தெரியுமா? எத்தனை மனைவிகளை தன் கணவன் குடிக்காமல் இருக்கமாட்டானா என்று ஏங்க வைத்திருக்கும் தெரியுமா? மதுவோடு தொடர்ச்சியாய் தொடர்பிலிருக்கும் மனிதர்கள், சக மனிதர்களை விட்டும், குடும்பத்தை விட்டும் தூரமாகிப் போகிப் போய் விடுகிறார்கள். இப்படியாய் வாழ்க்கையை விட்டு விலகிச் செல்லும் அருளப்பசாமி மீண்டெழுந்து வரும் போது வாழ்க்கையை வாழ்க்கையாய்  பார்த்து, எஸ்தர் மீது காதல் கொள்ளும் இடம்...கவிதைத்துவமானது.

குடிப்பழக்கத்திலிருந்து மீண்ட அருளப்ப சாமியைப் பார்த்து அவன் திருந்தியிருப்பது அறியாமல் " சாத்தானே தூரப் போ...." என்று  எஸ்தர் விரட்ட....பாவமாய் அந்த இடம் விட்டு நகரும் அருளப்ப சாமி குடிப்பழக்கம்  உள்ள ஒருவனை பிடித்து வைத்துக் கொண்டு அவனுக்காக ஜெபம் செய்து ' சாத்தானே தூரப் போ..' என்று விரட்டுவதும், அதை எஸ்தர் கண்டு அவன் மீது சட்டென்று ஒரு பூ பூக்கும் மலர்ச்சியை முகத்தில் கொண்டு வந்து காதல் கொள்வதும்...கவிதை.

நான் என்ன உன் மகன் மாதிரியா மொடாக்குடிகாரன்....." அளவா குடிக்கிற கருப்பா இருக்க வெள்ளக்காரன்..." என்று கருப்பு பாண்டி  சரண்யாவிடம் பேசுமிடத்தில் வசனகர்த்தா கொடி கட்டிப் பறக்கிறார். சினிமாக்களில் வில்லனைக் கொண்டுவந்து சித்தரித்து கதை சொல்லும் போக்குகள் முற்றிலும் எதார்த்ததிற்கு முரண்பட்டவைகளே. நிஜத்தில் எந்த மனிதரும் வில்லன்களாக விரும்புவது கிடையாது. சூழல்களே இங்கே வில்லனாகிப் போகின்றன.

இனம் புரியாத உணர்வுகளின் தொகுப்பாய் விரிந்து செல்லும் இந்த திரைப்படம், தினத்தந்தி, தினமலர், தினமணி இன்ன பிற பத்திரிக்கைகளும்  செயற்கைக்கோள் தொலைக்காட்சிகளும் அன்றாடம் நமக்குச் சொல்லிச் செல்லும் ஒரு செய்தியை நமது வீட்டில் விழும் இழவாய் சொல்லிப் புரியவைக்கிறது. ' நாயகன் '  படத்தில் கதாநாயகியாய் அறிமுகமான சரண்யா இப்படி ஒரு விசுவரூபத்தை பிற்காலத்தில் எடுப்பார் என்று யாரும் கற்பனை கூட செய்து பார்த்திருக்க மாட்டார்கள், அவ்வளவு ஒரு நேர்த்தியான நடிப்பு.

வாழ்க்கையைத் தேடி கடலுக்குள் செல்பவனை கண நேரத்தில் கொன்று போடும் சிங்களவனின் இயந்திரத் துப்பாக்கிகள் நிஜத்தில் எத்தனை எத்தனை எஸ்தர்களை விதவையாக்கி இருக்கின்றன என்று எண்ணிப்பார்க்கும் போது உயிர் வரைக்கும் வலிப்பதை தவிர்க்க முடியவில்லை. அருளப்ப சாமி போல மீன்பிடிக்கச் சென்று மரித்துப் போன அப்பாவிகள் நமது ஊரில் ஆயிரத்துக்கும் மேல்.  அவ்வப்போது தொடர்ச்சியாய் சுட்டுக் கொண்டுதான் இருக்கிறானே தவிர அவனை கண்டிக்க யாதொரு நாதியும் இல்லாமல் இந்திய தேசத்தின் புதல்வர்கள்,  தமிழக மீனவன் என்ற அடைப்புக்குள் அனாதையாய் செத்துப் போகிறார்கள்.

செத்துப் போனவனின் குடும்பம் எப்படி பிழைக்கும்...? பிள்ளைகள் எப்படி படிக்கும்...? கணவனின்றி தனித்து விடப்படும் மனைவி என்ன ஆவாள்...? என்பன போன்ற கேள்விகளை எல்லாம் ஊடகங்கள் நம்மிடம் கேட்பதில்லை. அவை செய்தி பகிர்வதோடு கலைந்து சென்று விடுகின்றன. நாமும் நமக்குள் இப்படியான கேள்விகளை கேட்டுக் கொள்வதுமில்லை. காரணம் செய்கிகளைக் கடந்து அங்கே என்ன நிகழ்ந்திருக்கிறது என்று பார்க்குமளவிற்கு நமக்கும் பொறுமையில்லை. அந்தப் பொறுமையை நமது சமகாலப் பிரச்சினைகள் நமக்கு கொடுத்து விடுவதும் இல்லை.

மின்சாரம் இல்லாமல் இருளில் தவித்துப் போய் கிடக்கையில், தொழில்கள் முடங்கிப் போய் கிடக்கையில், நமது வாழ்க்கைச் சூன்யமாகிப் போயிருக்கையில் என்ன செய்து விட முடியும் நம்மால்? மாறி, மாறி வாழ்க்கை நம் சமூகத்து மக்களை கோரப்பிடிக்குள் பிடித்து வைத்திருக்கிறது.  அரசியல்வாதிகள் நாம் மீண்டெழுந்து விடதபடிக்கு கவனமாய் பார்த்துக் கொள்ளவும் செய்கிறார்கள். 

அது போகட்டும்... 

இயக்குனர் சமுத்திரக்கனியிலிருந்து எல்லா பாத்திரப்படைப்புகளுமே  இன்னமும் அந்தக் கடற்கரைக் கிராமத்தில் வசிக்கிறார்கள், ஒரு எட்டு பஸ் ஏறிப் போய் அவர்களைப் பார்த்து விட்டு வந்துவிடுவோம் என்ற எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. கதையைப் பற்றியும் கதை மாந்தர்களைப் பற்றியும் விரிவாக சொல்லிக் கொண்டே சென்றால் நீங்கள் திரையில் காணும் ஒரு சுவாரஸ்யத்தை நான் பறித்துக் கொண்டவனாகிப் போய் விடுவேன், அதனால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.

வலிகள் நிறைந்த வாழ்க்கையை அழுத்தமாய் பதிவு செய்து சென்றிருக்கும் நீர்ப்பறவை போன்ற படங்கள் நிறைய வரவேண்டும். அசகாய சூரர்களான ஹீரோக்களையும், வெள்ளைத் தோல் மினு மினுக்க களுக், மொளுக் என்று திரையில் வந்து சிணுங்கிச் செல்லும் கதாநாயகிகளையும், 3 குத்துப் பாட்டு, 2 மெலொடி, ஒரு சோகப்பாட்டு, ஒரு காமெடி ட்ராக என்று நகரும் தமிழ் சினிமாக்கள் பார்த்து, பார்த்து அலுத்துப் போய்விட்டது.

உலகத்தின் வன்முறைகளையும், கொடுமைகளையும் காட்சிப்படுத்த முயலும் திரைப்படங்களும், மிகப்பெரிய பட்ஜெட்டில் சூப்பர் ஹீரோக்களை வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களும்....தங்கள் கல்லாக்களை வேண்டுமானால் குறையில்லாமல் கட்டிக் கொள்ளலாமே அன்றி....

நீர்ப்பறவைகள் விதைத்துச் செல்லும் காலங்கள் கடந்த அற்புதமான அனுபவத்தை ஒருக்காலும் கொடுத்து விட முடியாது! நீர்ப்பறவை வெறும் திரைப்படம் மட்டுமில்லை....அது நமது உறவுகளின் சோகத்தை நமக்குள் இறக்கி வைக்கும் ஒரு காவியம்...!


தேவா. S
Tuesday, December 11, 2012

காக்கை குருவி எங்கள் சாதி...!
காலையில வேலைக்கு வந்துட்டு இருக்கும் போது 94.7 மலையாளச் சேனல்ல பாட்டு கேட்டுட்டு வந்துட்டு இருந்தேன். அப்போ, அப்போ ஒரு பாட்டும் எப்பவுமே ரேடியோ ஜாக்கிகளோடு பேச்சுமா நேரம் போய்ட்டே இருந்தப்ப அந்த லேடி இன்னிக்கு என்ன நாள் தெரியுமான்னு பக்கத்துல இருந்த ஆம்பளைக்கிட்ட கேட்டப்ப....அவர் என்ன நாளுன்னு திருப்பி அவள கேட்டாரு.... அட இன்னிக்கு பாரதி பொறந்த நாளாச்சே தமிழ் கூறும் நல்லுலகம் நினைக்காட்டியும் கூட நம்ம சேரத்து  தமிழ்ப் பிள்ளைகள் நினைவு வச்சு இருக்காங்களேன்னு மேல கேக்க ஆரம்பிச்சேன்......

இன்னிக்கு நடிகர் திலீப்போட பொறந்த நாளுன்னு அறிவிச்ச அந்த பொண்ணு அதோட போயிருந்தா நானும் இப்டி ஏதாச்சும் எழுதாம போயிருந்து இருப்பேன்....கூடவே அவ.. நாளைக்கு என்ன நாளு தெரியுமானு அந்த ஆள கேக்க....திலீப் பொறந்த நாளு தெரியாம முழிச்ச அந்த அண்ணன்....நாளைக்குன்னு சொன்ன உடனே....டான்...டான்..டான்....ன்னு மியூசிக் எல்லாம் வாயிலயே போட்டு....12.12.12.....நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரின்னு சொல்லி, நாளைக்கு சூப்பர்ஸ்டார் பொறந்த நாளு அதை எப்படி நாம மறக்க முடியும்ன்ற ரேஞ்சுக்கு பேசிட்டு குதுகலிச்சுட்டு போய்ட்டாரு....

ரஜினி சார் நடிக்க வந்தாப்ல. நடிச்சாப்ல..நமக்கு எல்லாம் புடிச்சு இருந்துச்சு. இப்போ சார் 63 வது பொறந்தா நாளு கொண்டாடுறாப்ல...ரசிகர்கள் எல்லாம் கொண்டாடிட்டுப் போகட்டும். மவராசன் படத்தை பாத்து சிரிச்சு கைதட்டி சந்தோசமா இருந்தோம்னு நினைச்சு ஏதோ செஞ்சுட்டுப் போகட்டும்னு விட்டுறலாம்.. இந்த மிடியாக்காரங்களுக்கு என்ன டேஷ் சார் வந்துச்சு....? அதுவும் சேட்டிலைட் டிவிகாரனுக படுத்துற பாடு இருக்கே....இந்த ஜகத்தினை கொளுத்துவோம்னு சொன்னவன் வயித்து பசியோட ஒரு மனுசன் கூட இருக்க கூடாதுன்னு நினைச்சு சொன்னான்...

தமிழ் மொழியோட வளத்தை பயன்படுத்தி ஞானப்பட்டுகளையும், விடுதலை பாடல்களையும், கண்ணண் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம்னு.....ஒரு பெரு வெடிப்பா வெடிச்சு சிதறி தமிழ் தமிழ்னு வாழ்ந்துட்டு கடைசிவரை கஷ்டப்பட்டே செத்த என் பாரதிய கொண்டாட துப்பில்லாத இந்த நாட்டை முதல்ல கொளுத்தணும்னு நான் சொல்லுவேன்.

டிசம்பர் 22 உலகம் அழியணும். முதல்ல தமிழ்நாட்ட போட்டுத் தள்ளிட்டு அப்புறமா மத்த பாகம் எல்லாம் அழியணும்... இதுதான் என்னோட ஆசை.  சினிமாவ பத்தி எழுதுனாலோ, அவனவன் மதத்தைப் பத்தி எழுதுனாலோ, இவனுகளுக்கு புடிச்ச அரசியல் தலைவர ஆதரிச்சு எழுதுனாலோ இல்லை புடிக்காத அரசியல்வாதிய திட்டி எழுதுனாலோ...ஜாதிய பத்தி எழுதுனாலோ கூடுற கூட்டம் பாரதி மாதிரி மகான்கள பத்தி பேசவும் அவன் பாட்டை கொண்டாடவும் கூடுறதே இல்லை...

கலைஞரையும் ஜெயலலிதாவையும், ரஜினிகாந்தையும் தலையில வச்சுக் கொண்டடுங்க மக்களே.... கொண்டாடித் தொலைங்க....! ரஜினி பொறந்த நாளுக்கு புதுவேட்டி சட்டைப் போட்டுக்கிட்டு தலைவா வாழ்கனு கோயில்ல அபிஷேகம் பண்ணுங்க அன்னதானம் பண்ணுங்க....இன்னும் என்ன என்ன பண்ணனுமோ பண்ணிக்கோங்க....ஆனா....

" காக்கை குருவி எங்கள் சாதி, 
 நீள் கடலும் மலையுமெங்கள் கூட்டம்..."

அப்டீன்னு பாடிட்டுப் போனவனோட மனோநிலை என்னனு தயவு செஞ்சு புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க. அரசியல் அரசியல்னு இன்னிக்கு மண்ண அள்ளிப் போட்டு தெருக்கு தெரு நீங்க பேசிட்டு இருக்க அரசியலை தெரியாதவனா பாரதி இருந்திருக்கலாம்

" உழுதுவிதைத் தறுப்பாருக் குணவில்லை; 
      பிணிகள் பல வுண்டு; பொய்யைத் 
தொழுதடிமை செய்வார்க்குச் செல்வங்க 
      ளுண்டு;உண்மை சொல்வோர்க் கெல்லாம் 
எழுதரிய பெருங்கொடுமைச் சிறையுண்டு; 
      தூக்குண்டே இறப்ப துண்டு; 
முழுதுமொரு பேய்வனமாஞ் சிவேரியிலே 
      ஆவிகெட முடிவ துண்டு..."

என்று பொங்கி எழுந்த அவனின் கம்னியூசப் புத்தியில் படிந்து கிடந்த அரசியலின் வேகம் என்னனு உங்க யாருக்கும் தெரியாது. தமிழ் வலை உலகத்துல இப்ப இருக்கவங்க எல்லோருமே எதாச்சும் ஒரு அரசியல் கட்சிய புரொமோட் பண்ணத்தான் இணையத்தையே தொறக்குறாங்க....பாரதிய அடுத்த தலைமுறைக்கு புரோமோட் பண்ணனும் அப்டீன்ற ஒரு தொலை நோக்குப் பார்வை இன்னிக்கு தேதியில சதவீத அடிப்படையில் பாத்தீங்கன்னா பூஜ்யமாத்தான் இருக்கு. 

ரஜினிக்கு கொடி புடிச்சு பொறந்த நாள் கொண்டாடுற என் தமிழ் சொந்தங்கள் பாரதிய ஒரு ஓரத்துல கூட வச்சுப் பாக்குறது இல்லை. பாரதின்னு ஒரு பைத்தியக்காரன் தனக்குன்னு காசு சேத்துக்காம நாடு, மொழி, காதல், கவிதைன்னு வாழ்ந்துட்டு செத்துப் போய்ட்டான்...அவனைப் பத்தி பேசுறதுக்கு நமக்கு ஒரு விசயமும் இல்லை...ஆனா கோடி கோடியா சொத்து சேத்த கோமான்களுக்கு எல்லாம் பிறந்த நாள் கொண்டாடுறேன் பேர்வழின்னு நாம பெருமை வேற பட்டுக்கிறோம்.

வயித்துப் பசியோட சுதந்திர தாகத்தை எழுத்துல எரிய விட்டு, குடும்பம் பிள்ளைங்கன்னு கூட பாக்காம பாண்டிச்சேரிக்கும் தமிழ்நாட்டுக்கும் ஓடி ஓடி வழ்ந்துட்டு இருந்த பாரதி தமிழை படிங்க தமிழ படிங்கன்னு தன்னை பாக்க வர்றவங்க கிட்ட எல்லாம் சொல்லுவாரம்....! அப்டி தமிழ் தமிழ்னு உயிர் வாழ்ந்த ஒரு மனுசன பத்தி  பேசிக்கிறதும் விவாதிக்கறதுமே பெரிய விசயமா நமக்கு எல்லாம் போய்ட்டது எவ்ளோ பெரிய வேதனையான விசயம்.

நாளைக்கு வேணா பாருங்க பேஸ்புக்லயும், ட்விட்டர்லயும், இன்னும் வலைப்பூக்கள்ளயும் இந்த சமூகத்த கட்டிகாத்து மொழியை காப்பாத்துன ரஜினிகாந்த பத்தி மூலைக்கு மூலை பேசுவானுங்க. எல்லா டிவி சானல்லயும் நம்ம மானத்தை காப்பாத்தின கடவுள்ன்ற ரேஞ்ச்சுக்கு பேட்டி , சினிமான்னு போட்டு அசத்துவாங்க ஆனா மொழியால காதலையும், விடுதலையையும், இயற்கையையும், கடவுளையும் கட்டி ஆண்ட பெருங்கவிய பத்தி என்னிய மாதிரி யாராச்சும் ஒரு புத்தி சுவாதினம் இல்லாதவன் எழுதிட்டு இருக்க..... உங்கள மாதிரி யாரச்சும் ஒருத்தர் ரெண்டு பேரு வந்து படிச்சுட்டுப் போக போறீங்க...

கவிஞன் அப்டீன்றவன் கவித்துவமாவே வாழணும்யா...ன்னு  பாரதி சொல்ல மட்டும் செய்யலீங்க...அப்டீயே வாழ்ந்துட்டும் போனாப்ல...! இயற்கைய பாத்து சவுடாலா...

' நானும் ஒரு கனவோ.....
இந்த ஞாலமும் பொய்தானோ'ன்னு....

கேள்வி கேட்டுக்கிட்டே காதல்ல நிறைஞ்சு வாழ்ந்த மகா புருசன்ங்க இந்தப் பாரதி. சிந்து நதியின் இசையை நிலவொளியில கேட்டு ரசிச்சுக்கிட்டே சேரநன் நாட்டிளம் பெண்களோட,  சுந்தரத் தெலுங்குல பாட்டு எழுதி நதியில ஓடம் ஓட்டி விளையாடுவோம் வாங்க மானுடப்பதர்களேன்னு அவன் கூப்டதுல கேளிக்கை மட்டுமா இருந்துச்சு....இந்தியாவையே அன்புன்ற ஒரு தாம்புக் கயிறுல சேத்து வைக்கிற தேசப் பற்றுதானேய்யா இருந்துச்சு.....

மராட்டியர்கள சிங்கம்னு சொன்ன பாரதி அவன் பெருங்கவிஞனா இருந்தப்ப கூட.... அதை பொருட்படுத்தாம....மராட்டிய கவிஞனோட கவிதையப் பாராட்டி சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்னான்....இதுல்லயா இறையாண்மை....இது இல்லையா கம்பீரம்....இப்படி இந்தியாவை தமிழ் எழுத்துக்குள்ள கட்டிப்போட்ட கவிஞன படிங்கடான்னு சொன்னா...

இவனுக பல்லேலாக்கா பல்லேலாக்கான்னு பாட்டுப் பாடவும்...கூகிள்லயும் யாகூலயும் காதலைத் தேடுற ஒதவாக்கரை பாட்டுகள கேட்டுக்கிட்டே யாருக்கும் ஒதவாமயே போய்டுறானுங்க...! கெளதம் மேனன் வந்து இவனுகளுக்கு காதலை சொல்லி புரிய வச்ச மாதிரி ஜெஸ்ஸியவும் விண்ணைத்தாண்டி வருவாயாவையும் புடிச்சு தொங்கிட்டு அலையுற என் தமிழ் சமூகமே....

மேனி கொதிக்கு தடி!-தலை சுற்றியே
வேதனை செய்கு தடீ!
வானி லிடத்தை யெல்லாம்-இந்த வெண்ணிலா
வந்து தழுவுது பார்!
மோனத் திருக்குதடீ! இந்த வையகம்
மூழ்கித் துயிலினிலே,
நானொருவன் மட்டிலும்-பிரி வென்பதோர்
நரகத் துழலுவதோ?

காதலியின் பிரிவினை இதை விட சிறப்பா யார் உனக்கு சொல்ல முடியும்? பாரதி பேசுன காதலையும், காமத்தையும், வீரத்தையும் கலப்படம் செஞ்சு வியாபாரம் செய்ற அத்தனை பேரையும்....ஓ..க்ரேட், மார்வலஸ்..எக்ஸ்ட்ராடினரின்னு பாரட்டி நாம எல்லாம் ரொம்ப முன்னேறீன சமூகம்னு வேசம் போடத்தான் செய்றோம். பாரதிய பாடாத, பாரதிய படிக்காத அறிவு சபிக்கப்பட்ட அறிவுன்னு மனசுல வச்சுக்கோங்க, இலக்கியங்கள் எல்லாம் புரியாத பாசை பேசி மேதாவித்தனத்த காட்டிக்கிட்டு இருந்த அந்த காலத்துலயும் சரி இந்த காலத்துலயும் சரி....தோள்ள கை போட்டு .....

' கேளடா மானிடவா...
நம்மில் கீழோர் மேலோர் இல்லை....' ன்னு சமத்துவம் பேசுன  வார்த்தைகளுக்கு சொந்தகாரன் பாரதி. டிசம்பர் 11 மகாகவியோட பிறந்த நாள்னு சொல்லி  தெருக்கு தெரு எல்லோரும் கொண்டாடி, டிவி, இன்டர்னெட்னு எல்லா திசையிலும் ச்ச்சும்மா அலறணும்....பாரதியோட பாடல்களை எல்லா செயற்கைகோள் தொலைக்காட்சிகளும் வானொலிகளும் ஒலிபரப்பிட்டே இருக்கணும்.... விவாத மேடைகளும், பட்டி மன்றங்களும்னு எங்கும் பாரதி.....எதிலும் பாரதின்னு விண்ணதிர பாரதிகளோட பிறந்த நாள நாம கொண்டாடுற அந்த நாள்தான்....

நாமெல்லாம் அறிவுச் சமுதாயம்னு சொல்லி நம்மள நாமே நினைச்சு...பெருமைப் பட்டுக்கலாம்.....

இன்னிக்கு....நாம என்ன மாதிரியான சமூகம்னு நான் சொல்லி நீங்க புரிஞ்சுக்க வேண்டிய அவசியமே இல்லை....! நம்மள சுத்தி என்ன நடக்குதுன்னு உங்களுக்கே தெரியும்..

' தமிழச் சாதி...
எனப்பல பேசி இறைஞ்சிடப் படுவதாய், 
நாட்பட நாட்பட நாற்றமும் சேறும் 
பாசியும் புதைந்து பயன்நீர் இலதாய் 
நோய் களமாகி அழிகெனும் நோக்கமோ? 
விதியே, விதியே, தமிழச் சாதியை
என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ? '


தேவா. SMonday, December 10, 2012

காலப் பெருவெள்ளம்...!உறக்கமின்றி தவிக்க விட்ட கடந்த வாரத்தின் ஐந்து நாட்களும் அரக்கத்தனமானவையாய் எனக்கு தோன்றின. கடுமையான உடல்வலி, தொடர்ச்சியான தலைவலியோடு டிசம்பர் ஒண்ணாம் தேதியின் இரவு என்னை துரத்திக் கொண்டிருந்தது. கனவுகளும் கற்பனைகளும் எங்கோ ஓடி ஒளிந்து கொள்ள உடல் முழுதும் வலியைச் சுமந்தபடி படுக்கையில் புரண்டு கொண்டிருந்தேன். மழை எல்லா ஊரிலும் மழையாய் இருப்பதில்லையோ என்ற ஒரு சோகமான கேள்வியை திரும்ப திரும்ப நான் எனக்குள் கேட்டுக் கொண்டிருந்தேன்.

கடந்த முறை விடுமுறைக்காக ஊருக்கு சென்றிருந்த போது காளையார்கோவிலுக்கும் கொல்லங்குடிக்கும் இடையே ஒரு மாலை வேளை பெரு மழையில் சிக்கிக் கொண்டேன். வண்டியை சாலையோரமாய் நிறுத்திவிட்டு எனக்கும் மழைக்கும் கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாய் அறுந்து போயிருந்த தொடர்பை சமரசம் செய்து சரி செய்து கொள்ளும் வண்ணம்....

நான் மழைக்குள் விழுந்தேன். உடல் தொட்டு, என் உயிர் தொட்டு, ஆன்மாவை நிறைத்த இயற்கையை உடலால் பருகினேன். சாலையோரத்து புளியமரங்களும், சாலையை விட்டு சற்று தொலைவில் கூட்டம், கூட்டமாய் நின்று கொண்டிருந்த பனைமரங்களும் மட்டுமே எனக்கு துணையாய் இருந்தன. அவ்வப்போது சாலையைக் கடந்து சென்ற வாகனங்களிள் தங்கள் கதவுகளையும் புலன்களையும் பூட்டிக் கொண்ட மனிதர்களை என்னால் காண முடிந்தது. 

பெருத்த இடியோடு மாலை நேரத்தில் பெய்து கொண்டிருந்த அந்த மழை என் சொந்தக் கிராமத்துக்கு முன்னதாகவே என்னை நிறுத்தி வைத்து எனக்கு ஏதேதோ பாடம் நடத்திக் கொண்டிருந்தது. என் உடைகள் நனைந்து தொப்பல் தொப்பலானேன், நான் கவலைப்படவில்லை....என் வாலட் நனைந்தது நான் கவலைப்படவில்லை.... என் கை பேசி நனைந்து ஊறியே போனது  நான் கவலைப்படவில்லை. அது வெறுமனே மழையில் நனைதலைப் போல் இல்லை.  வெகுகாலம் வீடு விட்டுச் சென்ற மகனை தன் கண்டாங்கிச் சேலைக்குள் இழுத்து அணைத்துக் கொண்டு அழும் ஒரு தாயின் பரிவாய் எனக்குத் தோன்றியது.

ஆகவே.. எனது மண்ணே, எனது உயிரே... என் தாயே... உன்னை நான் காண வந்து விட்டேன். உன்னை பிரிந்த சோகத்தை நான் எந்த மொழியில் மொழி பெயர்த்தாலும் அது கண்ணீர் என்ற வார்த்தையைத்தான் பெயர்த்தெடுத்துக் கொடுக்கும். சிவந்து கிடக்கும் இந்த மண்ணிலிருந்துதான் என் உயிருக்கான வித்து உருவானது. இதோ என் நாசி நிறைக்கும் இந்தக் காற்றில்தான் என் மூதாதையர்களின் மூச்சுக் காற்று கலந்து கிடக்கிறது. நான் இந்த மண்ணுக்குச் சொந்தகாரன். நான் இந்த மண்ணைப் போன்றவன் என் உயிரை வேண்டுமானால் இப்போதே எடுத்துக்கொள் இயற்கையே.. இதோ... இந்த சாலையோரத்திலேயே நான் சருகாகிப் போகிறேன்...

இந்த பூமியின் ஏதோ ஒரு திசையில் எனக்கான வாழ்க்கை இருப்பதாக நான் நகர்ந்து போனேன்  என் மண்ணே....உன்னை பிரிந்து போனேன் என் உயிரே... என்று நான் கதற உடன் மழையும் கதற.....என்னை கட்டியணைத்த என் மண்ணின் மழை என்னை ஒன்றுமே செய்யவில்லை...! பிள்ளைக்கு  பால் கொடுக்கும் தாயாய் என் மீது நீர் ஊற்றியது  வானம்.... ! வாழ்க்கைச் சூழலும், மண்ணும், பிறப்பும் எவ்வளவு அருமையாய் கோர்க்கப்பட்டிருக்கிறது என்பதனை சொந்த மண் விட்டு நகர்ந்து வந்து ஒரு மழையை பால்கனியில் நின்று உள்வாங்கிக் கொண்ட போது தெளிவாய் உணர்ந்து கொண்டேன்...

மழையும், காற்றும், குளிரும், வெயிலும் ஒரே பெயரில் அடையாளப்படுத்தப்பட்டாலும் ஒவ்வொரு மண்ணுக்கும் ஒரு தன்மையோடு அவை பூமியில் படிகின்றன. எங்கேயோ முளைத்த செடியான எனக்கு பாலைவனத்தின் மழை ஒத்துக் கொள்ளவில்லை. சைனஸ் என்னும் உடலியல் கோளாறு கத்தியை பதமாய் தீட்டி வைத்துக் கொண்டு காத்திருந்திருப்பான் போல...ஞாயிறு விடியலில் எழுந்து கூட நிற்க முடியவில்லை, இடுப்பு எலும்பு, தொடை, கால்கள் பாதம் கழுத்து என்று எல்லாமே இரணமாய் வலிக்க உறக்கமின்றி ஆக்ஸிஜனுக்காய் தவித்த மூளை தடுமாறி அலைந்து கொண்டிருந்தது...

நிற்க கூட திரணியில்லாத போது  வாழ்க்கையின் கன பரிமாணங்கள் தெளிவாய் பிடிபட்டன. எதையுமே இங்கே சிறப்பித்துக் கூற இயலாது. எல்லாமே அதன், அதன் இயல்பில் நிகழ்கின்றன. இங்கே நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்...நாம் என்ன செய்கிறோம்? நமக்கு என்ன நிகழ்கிறது என்பதைக் கவனிக்க வேண்டியதுதான். கவனித்தல் புரிதலைக் கொடுக்கிறது. புரிதல் தெளிவினைக் கொடுக்கிறது. தெளிவு அமைதியைக் கொடுக்கிறது. அமைதி இறை என்னும் பெருஞ்சக்தியை அடையாளப்படுத்துகிறது.

நான் கவனித்துக் கொண்டிருந்தேன். உடலின் அதிர்வுகள் மாறிப்போய் இரணமாய் வலித்து தடுமாறி கொண்டிருக்கையில் சிதறிக் கிடக்கும் மனம் கவிதை படைக்க முயலவில்லை. கலவி கொள்ள திட்டமிடவில்லை. அரசியல் நிகழ்வுகளை விமர்சிக்கவும், விழிப்புணர்வு கருத்துக்களை பகிரவும், ஒரு நல்ல திரைப்படத்தைக் காணவும், பிடித்த பாடலை கேட்கவும், ஏதோ ஒரு புத்தகத்தில் மூழ்கிப் போகவும் தோன்றவில்லை.... 

கண்களை மூடி மெல்ல உள்ளுக்குள் பார்க்கையில் பிராணன் இல்லாமல் ஆங்காங்கே ஏற்பட்ட சிக்கல்கள் சரியாக இன்னும் ஒரு வாரத்துக்கும் மேலாகலாம் என்று தோன்றியது. நோய் எதிர்ப்பு மாத்திரைகளை ஒரு ஆட்டுக்குட்டியைப் போல விழுங்கிக் கொண்டு மருத்துவர் விருப்பப்பட்ட இடத்தில் எல்லாம் குத்திக் கொள்ளட்டும் என்று கைகளையும் கால்களையும் நீட்டிப் படுத்துக் கொண்டேன். திட்டமிடுகிறேன் என்று சொல்லி தங்களை பெருமைப்படுத்திக் கொள்ளும் எந்த ஒரு மனிதரும் ஒரு எல்லைக்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது. என்ன நிகழவேண்டும் என்று தீர்மானிக்கும் சக்தி இயற்கைக்கு மட்டுமே உண்டு...!

தடுமாறி நின்ற புத்தியை நிதானப்படுத்த முயன்று, முயன்று தோற்று, உடல் என்னும் படகு சரியாய் இருந்தால்தான் மிகப்பெரிய வலி என்னும் வேதனை இன்றி ஒரு கற்பூரம் அணைவது போல வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடியும் என்று எனக்குத் தோன்றியது. தொடர்ச்சியான வலிகளோடு கண்களை மூடிக் கொண்டு வெறுமனே கிடக்க வேண்டியதாய் போயிற்று. எதையுமே எதிர்நோக்காமல் அமைதியாய் கொதிக்கும் உடலைச் சுமந்து கொண்டு சரியாதலுக்காய் காத்திருக்க வேண்டியதாய்ப் போயிற்று....

ஆழமாய் சுவாசிக்க முயன்று கொண்டிருந்தேன். பிராணனை வெளியே அனுப்பும் போதும் இருந்த சுகம் பிராணனை உள்ளே இழுக்கும் போது இல்லை. மூச்சை இழுக்க முடியவில்லை, அது ஆழமாய் உடலுக்குள் படரமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்தது. எனக்கு உறங்க வேண்டும்....என்பது பேராசையாய்ப் போனது அந்தக் கணத்தில்....

எனக்கு பெரிதாய் ஒன்றும் வேண்டாம், எந்த வலியும் இல்லாமல் நான் தூங்க வேண்டும் என்றே விரும்பினேன். முடியவில்லை. தொடர்ச்சியாய் ஏதேதோ எண்ணங்கள் சங்கிலித் தொடராய் என்னை அழுத்த உறக்கமில்லாமல் சுவாசத்துக்கு தவிக்கும் ஜீவனாய் நான் துடி துடித்துப் போனேன். வழக்கமாய் உறக்கம் என்பது படுக்கையில் படுத்த மூன்றாவது வினாடியில்  எந்த விதப்பதட்டமுமின்றி என்னை இறுக்கிக் கொள்ளும், ஆனால் நான் தான்  உறங்குவது இல்லை. எப்போதும் கணிணி முன்பு அமர்ந்து கொண்டு ஊர் வாய் பார்ப்பதும், ஏதோ பார்க்கிறேன் கேட்கிறேன் படிக்கிறேன்  என்றும் என் உறக்கத்தை உதாசீனப்படுத்தி இருக்கிறேன். இதோ நான் உறங்க வேண்டும் என்று நான்கு  நாட்களாய் முயன்று கொண்டிருக்கிறேன்.... முடியவில்லை....

தனிமை அழகானது. ஆழமானது. அதை சரியாக எதிர் கொள்ள உடல் நிலை சரியாயிருக்க வேண்டும். உடல்நலனின் அதிர்வுகள் கொஞ்சம் மாறிப்போனாலும் ரசனைகளும் மாறிப் போகும். அங்கே சிலாகிக்க வைக்கும் சிந்தனைகள் இல்லை. அழகியல் இல்லை. அற்புத அனுபவங்கள் நம் கண் முன் கடந்து செல்கையில் நாம் கண் மூடி கவிழ்ந்து கிடக்க வேண்டியதுதான். உடலாய் இருக்கும் வரையில் எல்லா வலிகளையும் கடந்து செல்லத்தான் வேண்டும். எல்லா அனுபவங்களையும் சலனமில்லாமல் ஒரு விசயம் உள்ளுக்குள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க....

சட் சட் என்று எல்லா தொடர்புகளையும் அறுத்துக் கொண்டு எங்கோ பறந்து செல்ல ஏற்பட்ட ஆசையை பந்தங்கள் என்னும் தொடர்புகள் மறித்துக் கொண்டு மேலே செல்ல விடவில்லை. காலமும், சூழலும், உருவாக்கிக் கொண்டிருக்கும் கடமைகளும் மிச்சமிருக்கின்றன....

காத தூரம் நான் செல்ல வேண்டும்...
என் கனவுகள் அழிய அழிய  கனவுகண்டு கொண்டே
ஒரு நிசப்த பெருவெளிக்குள்
சட்டென விழுந்து நினைவுகளின் 
எச்சங்கள் எல்லாம் சாம்பலாய்ப் போக...
மீண்டும் மீளமுடியாத ஒரு 
பெரு நித்திரை கொள்ள வேண்டும்....
யாருமறியா காலப் பெருவெள்ளத்தின் கணக்கில்....
எங்கே ஒளிந்து கிடக்கிறதோ...
எனக்கான சமன்பாடு...?


தேவா. SWednesday, December 5, 2012

சாதி பூதமும் சதிகார அரசியலும்....!
வாழ்க்கையின் போக்கு எல்லாவற்றையும் சட் சட்டென்று மாற்றியமைத்து விடுகிறது. கணத்துக்கு கணம் மாறும் வாழ்வின் நிதர்சனமில்லாத தன்மையை மறந்து விட்டுத்தான் இங்கே மனிதர்கள் சாதிக் கொம்புகளைத் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். புஜம் தட்டி நான் யார் தெரியுமா..? என்று கொக்கரிக்கிறார்கள். ஆரிய சாதி, ஆதிக்க சாதி, தாழ்த்தப்பட்ட சாதி, என்று இங்கே சாதி பேசும் நாக்குகளை எல்லாம் ஏதோ ஒரு  புழு மண்ணுக்குள்ளிருந்து முண்டியடித்துக் கொண்டு வந்து ஒரு நாள் அரித்து விடப்போகிறது, இல்லை என்றால் கொடும் தீ சட்டென்று பரவி கருக்கி விடப்போகிறது.

இந்தப்  பூமி தோன்றி எத்தனையோ கோடி ஆண்டுகள் ஆகி விட்டன. சூரியனிலிருந்து பிய்த்து எறியப்பட்ட நெருப்புத்துண்டுக்குள் இத்தனை சாதிகளும் இருந்திருக்கிறதே என்ற ஆச்சர்யம் மட்டுமல்ல எனக்கு, அதை வைத்து அரசியல் நடத்தவும், வியாபாரம் செய்யவும் இத்தனை மனிதர்களும் இருந்திருக்கிறார்களே என்ற பிரமிப்பும் எழத்தான் செய்கிறது. மூன்று வேளை சோற்றை  உண்டு வாழ்ந்து மரிக்க மானங்கெட்டுப் போய் எத்தனை பிழைப்பு பிழைக்க வேண்டியிருக்கிறது இந்த மனித இனம் என்ற வேதனையும் எழுகிறது.

சாதிகள் இல்லையடி பாப்பா என்று சொன்னவனையும் சாதிக்குள் அடைத்துப் பார்த்த வேகாத மூளைகள் இருக்கும் நாடு இது. இங்கே எந்த நியாயத்தைப் பேசுவது...? எதை விடுவது என்றுதான் புரியவில்லை.  உங்களின் பாட்டன் பூட்டன் செய்த தொழில் விவசாயம் என்று வைத்துக் கொள்ளுங்கள். வேளாண்மை செய்தவர்கள் ஆதலால் உங்களை அடையாளப்படுத்த வேளாண்மைக்காரர்கள் என்று அழைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுப் போனது. இதை சாதி என்று கூறி தன் தலையில் சுமந்து கொண்டு சென்னையில் அமர்ந்து பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் ஒருவர் என்ன வேளாண்மையா செய்து கொண்டிருக்கிறார்?

சாதி என்பது செய்த தொழிலின் அடிப்படையில் உருவானது என்னும் போது அந்தத் தொழிலை விட்டு விட்ட போதே அந்த மாயை  செத்துப் போய்விட வேண்டுமா இல்லையா?

இன்னும் சில பராக்கிரமசாலிகள் சாதி வேண்டாம் என்று சொல்பவர்கள் சலுகைகள் வேண்டாம் என்று விட்டு விட முடியுமா என்று கேட்கிறார்கள்? காலம் காலமாய் செய்த தொழிலை வைத்து சக மனிதனை மனோதத்துவ ரீதியாக ஒடுக்கி விட்டு அவர்கள் மேலெழும்பி வர பொருளாதார ரீதியாகவும், கல்வி கற்று மேலேறி வருபவர்களுக்கு  அதிகாரத்தைக் கொடுப்பதன் மூலமாக மனதத்துவ ரீதியாக அவர்கள் மீண்டெழவும் யாரோ ஒரு மனித நேயம் கொண்ட புண்ணியவான் உருவாக்கிய திட்டமே இச்சட்டம் என்பதை இவர்கள் உணர்வதில்லை. நூற்றாண்டுகளாக மனிதம் நசுக்கப்பட்டு மனதளவில் ஊனப்படுத்தப்பட்டு எரிய விடப்பட்ட தீண்டாமை நெருப்பு, நாம் கணிணி முன் வந்து அமர்ந்து விட்டதாலேயே அணைந்து போய்விட்டது என்று கருதுவது அறிவீனம்.

வக்கிருப்பவன் வாழ்க்கையை திமிறி வரும் ஒரு ஜல்லிக்கட்டுக் காளையை எதிர்கொள்வதைப் போல எதிர் கொண்டு அதன் திமிழ் பிடித்து அடக்கி கட்டுக்குள் கொண்டு வந்து தான் பிழைக்க வழி தேடிக் கொள்கிறான். பிழைக்க வழியறியா பிச்சைக்காரர்கள் எல்லாம் எம்மை ஆள்கிறேன் பேர்வழி என்று எதைப் பற்றிய புரிதல் அதிகம் வேண்டுமோ அதைப் பற்றிய புரிதலை கடைசி வரை எம் மக்களுக்கு ஏற்படுத்தாமல், மனிதர்களை சாதி சாதியாகப் பிரித்து வைத்து சந்தி சிரிக்க வைக்கும் அரசியல் அநீதீயை தொடர்ந்து என் சமூகத்துக்குள் புகுத்தி எங்கள் நீண்ட நெடிய கரும் இரவுகளை அவர்கள் விடியவே விடவில்லை.

கோட்டான்கள் எல்லாம் இங்கே ஓட்டரசியலுக்காய் சொக்கட்டான் போட்டு விளையாடி சாதிக்கொருவரைப் பிடித்து, ஒவ்வொரு கட்சிகளுக்குத் தலைவர்களாக்கி அவர்களை தங்களுக்கு ஆதரவு கொடுக்கச் செய்து எப்படியாவது ஆட்சியில் ஏறிவிடலாம் என்று திட்டம் தீட்டிக் கொண்டிருக்க....

சர்வதேச விஞ்ஞானம் பிரபஞ்ச வெளியின் பிடிபடாத புதிர்களைப் பற்றியெல்லாம் ஆராயத் தொடங்கி இருக்கிறது. சாதியை விட்டு மனிதன் வெளியே வரவேண்டுமெனில் பொருளாதார ரீதியாக ஒரு மேம்பட்ட நிலை எல்லா மனிதர்களுக்கும் வரவேண்டும். அப்படியான ஒரு சூழல்  வரவிடாமல் நம்மை கையேந்த வைத்துக் கொண்டிருக்கும் நம் வறுமையும் புரிதலின்மையும் தான் நம்மை பிரித்தாண்டு பிழைப்பு நடந்தும் இந்த பிணந்திண்ணிகளின் முழு  மூலதனம் என்பதை அறிக.

இந்த நாட்டில் தீர்க்க வேண்டிய பிரச்சினைகளே இப்போது இல்லை என்பதால் நாம் வேறு வழியில்லாமல் சாதியைப் பற்றி பேசி பொழுது போக்கிக் கொண்டிருக்கிறோமா என்ன?

தமிழ் நாடு நம் தாய் பூமி. பிறப்பால், உணர்வால் நாம் தமிழர்கள். நம்மை நிர்வகிக்க நாம் தேர்ந்தெடுத்த அரசியல் தலைவர்கள் நம்மை இப்போது என்ன நிலைமையில் கொண்டு வந்து வைத்திருக்கிறார்கள்..? என்று கேட்க ஒரு சப்தமான சமூக கோபங்கள் கொண்ட இளைஞர்கள் கூட்டம் ஏன் இல்லை இங்கே?

மின்சாரம் இல்லாமல் எப்படியடா நாம் வசிக்குமிடம் இருண்டு போனது?  என் உறவுகள் எல்லாம் தொழில் செய்ய முடியாமல் முடங்கிப் போய் மன அழுத்தத்தோடு நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்..., எமது பிள்ளைகள் எல்லாம் இரவிலே உறக்கிமின்றி வீதிகளில் கொசுக்களால் கடிபட்டு டெங்கு காய்ச்சல் போன்ற பிணிகளால் அல்லலுற்றுப் போயிருக்கின்றன.  திட்டங்கள் இல்லாமல் ஒவ்வொரு முறையும் அரியணை ஏறி கவர்ச்சித் திட்டங்களைக் கொடுத்து கொடுத்து எங்களை தெருநாய்களாக்கி வைத்ததை விட வேறென்ன சாதனைகளை நீங்கள் எங்களுக்காக செய்து விட்டீர்கள்...? என்று ஏன் நாம் கேட்பதில்லை...?

மூலைக்கு மூலை திறந்து கிடக்கும் அரசு மதுபானக்கடைகள் எம்மக்களின் உழைப்பை சுரண்டிச் செல்வதோடு, உடல் நலத்தை கெடுத்து குடும்பம் என்ற அமைப்போடு இயைந்து வாழ பெரும் சவாலாயும் இருக்கிறதே....?!

வாய்மையே வெல்லும் என்று சொல்லிக் கொண்டு மகாத்மாவின் புகைப்படைத்தைப் போட்டுக் கொண்டு இவர்கள் நடத்தும் அரசியல் உங்களுக்கும் எனக்கும் ஏன் அயோக்கியத்தனமாய் தெரியவில்லை....?

மாறி மாறி வாக்களித்து விட்டு நம் வாழ்க்கையை அழித்துக் கொண்டு விலைவாசிகள் எல்லாம் விண்ணைத் தொட்டிருக்க என்ன சுபிட்சம் கண்டு விட்டோம்.... நாம்? மாநிலத்தின் தலைநகரிலேயே சாலைகள் குண்டும் குழியுமாய் பல்லைக் காட்டிக் கொண்டிருக்கின்றன, ஒரு சிறு மழையைக் கூட எதிர் கொள்ள முடியாத  மோசமான வடிகால் வசதிகள், தெருவெங்கும் சாக்கடைகள் என்றிருக்கும் போது மிச்சமிருக்கும் சிற்றூர்களின் வசதிகளைப் பற்றியெல்லாம் யோசித்துக் கூட பார்க்க முடியவில்லையே?

இவற்றை எல்லாம் பற்றி நாம் பேச மாட்டோம். பேசவும் முடியாது, ஏனென்றால் நமது முதுகெலும்புகள் எல்லாம் சாதி என்னும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு செக்கு மாடுகளாய் உழன்று கொண்டு நான் பெரியவனா? நீ பெரியவனா? என்று அடித்துக் கொள்ளத்தான் பணிக்கப்பட்டிருக்கின்றன.  நீ அடித்துக் கொள்.. நான் கண்ணீர்ப்புகை குண்டு வீசி உன்னை கலைக்கிறேன், தடியடி சரிப்பட்டு வரவில்லை என்றால் .... துப்பாக்கிச் சூடு நடத்தி சட்டம் ஒழுங்கை பாதுகாக்கிறேன்..... என்பதுதானே இங்கே எழுதப்படாத நியதியாய் இருக்கிறது.

ஏன் நாம் அடித்துக் கொள்ள வேண்டும் என்று தன் முனைப்பினை கழற்றி எறிந்து விட்டு  மனித நேயத்தோடு நாம் யோசிக்காததால்தானே இப்படி....?

சக மனிதனை மனிதனாய் பார்க்கும் தெளிவும், மனித  நேயமும் சமகால இளைஞர்களிடமும் இல்லாமல் போயிருப்பது இந்த சமூகத்தை இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு மிகப்பெரிய சாபம். அறிவை விருத்தியாக்கும் விசால பார்வைகள் கொண்ட ஏதேனும் ஒரு அரசியல் கட்சியில் நம்மால் அங்கமாயிருக்க முடியாவிட்டால்  கூடப் பரவாயில்லை... ஒரு மனசாட்சி உள்ள மனிதனாக, நேர்மையான வாக்காளனாக கூடவா இருக்க முடியாது...?

இதை வாசிக்ககும் யாவரும் சாதி என்னும் ஒரு மாய அடையாளத்தை பயன்படுத்தியே ஆகவேண்டிய சூழலை வாழ்க்கை முறை கொடுத்திருக்கலாம்.. ஆனால் அந்த அடையாளத்தை வைத்துக் கொன்டு சக மனிதனை தாழ்த்தவோ, அடிமைப்படுத்தவோ அல்லது பணிந்து போகவோ செய்யாதீர்கள். சாதியின் பெயரால் ஓட்டு கேட்டு வரும் அரசியல் கட்சிகளோ அல்லது சாதிக் கட்சிகளின் கூட்டில் வென்று விடலாம் என்று கூட்டணி வைக்கும் கட்சிகளோ எப்படி பரந்த மனப்பான்மை கொண்ட கட்சிகளாக இருக்க முடியும் என்று தயவு செய்து யோசித்துப் பாருங்கள்..!!!!! அவர்களை கண நேரமேனும் யோசிக்காமல் புறக்கணியுங்கள்....!

மதச்சார்பில்லாத நாடு இது என்று சொல்லிக் கொண்டு மதச்சார்பில்லாத கட்சிகளை ஆதரிக்கும் அத்தனை பேரும் இது சாதி சார்பில்லாத நாடு , சாதி சார்பில்லாத கட்சிகளையே நாங்கள் ஆதரிப்போம் என்று திண்ணமாக கூறுங்கள்.

நாம்  இல்லாவிட்டாலும் நம் பிள்ளைகளும் இன்னமும் வரப்போகிற சந்ததிகளும் இந்த சாதிப்பேய் என்றால் என்னவென்றே அறியாமல் போகட்டும்.....

இந்தப் பூமிப்பந்தில் ஜனித்த மனிதர்கள் நாங்கள் என்ற ஒற்றை எண்ணத்தோடு மனித நேயத்த்துடன் வாழட்டும்....!

" ஏழைகள் யாருமில்லை செல்வம் ஏறியோர் என்றுமில்லை
வாழ்வுகள் தாழ்வுமில்லை-என்றும் மாண்புடன் வாழ்வமடா
கள்ளம் கபடமில்லை-வெறும் கர்வங்கள் சிறுமையில்லை
கட்டுகள்  ஒன்றுமில்லை-பொய்க் கதைகளும் ஒன்றுமில்லை
தீட்டுகள் தீதங்கள்-முதற் சிறுமைகள்  ஒன்றுமில்லை

கேளடா மானிடவா-எம்மில்  கீழோர் மேலோர் இல்லை
மீளா அடிமை  யில்லை- எல்லோரும் வேந்தரெனத் திரிவோம் "


தேவா. S