Pages

Saturday, December 15, 2012

நீர்ப்பறவை....!தெரிவிச்சு....இல்லை தெரிவிச்சு என்ன செய்யப் போறீங்க..? என்ற ஆதங்க கேள்விக்குப் பின்னால்,  செத்தவன் செத்துப் போய்ட்டான். சுட்டவன் ஏன் சுட்டான்னு கேக்க தெம்பில்லாத கவர்மெண்ட்கிட்ட செத்துப் போய்ட்டான்னு தெரிவிச்சு என்ன ஆயிடப் போவுது..? செத்துப் போன எண்ணிக்கையில ஒண்ணு கூட்டிக்கிட போறீங்க அம்புட்டுதானே என்ற சோகமே  மறைந்து கிடந்தது...., கண்ணீரோடு எஸ்தர் கதாபாத்திரம் கோர்ட்டில் திரணியற்று திரையில் பேசி கொண்டிருக்கையில் எனக்கும் வெடித்து அழத்தான் தோன்றியது.

பொழுது போக்கு என்ற நிலைக்கு அப்பாற்பட்ட வாழ்க்கையைப் பதிவு செய்யும் நீர்ப்பறவை போன்ற சினிமாக்கள் போற்றப்படவேண்டியவை என்பதில் யாதொரு மாற்றுக் கருத்துக்களும் இருக்க முடியாது. உப்புக்காற்றின் ஈரத்தையும், மீன் பிடி தொழில் செய்யும் தென் தமிழகத்து வெள்ளந்தியான வாழ்க்கை முறையையும் அப்படியே காமிராவுக்குள் கொண்டு வந்திருக்கும் காமெரா மேனை கட்டிப்பிடித்து அவரின் கைகளுக்கு முத்தமிடத் தோன்றியது எனக்கு.

அருளப்ப சாமியாகவே மாறிப்போயிருந்த விஷ்ணுவும், எஸ்தராகவே உருமாறியிருந்த சுனைனாவும் மட்டுமின்றி, படத்தில் எந்த ஒரு கேரக்டரையும் பாத்திரத்தைக் கடந்து வெளியே பார்க்க முடியாத அளவுக்கு  அப்பிக் கொண்டிருந்த எதார்த்தம் இயக்குனர் சீனு இராமசாமி என்ற படைப்பாளியின் வெற்றி. ஒரு நாவலைப் படிக்கும் போது வாசிப்பாளனின் கற்பனை சக்தி தனது விருப்பத்திற்கேற்ப பாத்திரங்களை தானியங்கி முறையில் கற்பிதம் செய்து கொண்டு வசதியான ஒரு சூழலியே இயல்பாய் நகர்ந்து போகிறது. எப்போதும் நாவல்களில் கதையின் ஆழமும், கதாபாத்திரங்களின் ஆளுமையும் வாசிப்பவனின்  ஈடுப்பாட்டைப் பொறுத்து விரிந்து சுருங்கிக் கொள்ளவும் செய்கிறது.

ஆனால், ஒரு கதையைப் படமாக்கும் போது முழுக்க முழுக்க இயக்குனரின் பார்வையே படம் முழுதும் காட்சியாக விரிகிறது. இங்கே வாசிப்பாளனுக்கு கிடைக்கும் முழு சுதந்திரமும், காட்சி விரிவாக்கமும் கிடைக்காமல் போவதற்கு பல சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. நீர்ப்பறவை படம் முழுதுமே நமது கற்பனையை மட்டுப்படுத்தி திரைக்குள் நம்மை அடைத்து போடாமல்  மனிதர்களின் அன்றாட வாழ்க்கையை வேடிக்கை பார்க்கும் ஒரு உணர்வை நமக்கு கொடுத்து விடுகிறது. ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற ஆகச் சிறந்த  படைப்புகளை திரையில் நான் பார்த்த போது அங்கே ஜெயகாந்தனின் ஆளுமையை பார்க்க முடியவில்லை. காட்சிப்படுத்தலில் ஏற்பட்டுப் போகும் சிக்கல் இது. 

நீர்ப்பறவை படம் முழுதுமே ஒரு நாவலாய் விரிந்து செல்லும் ஆச்சர்யம் எனக்கு ஏற்பட்டுப் போயிருப்பதற்கு காரணம் அசாத்தியமான திரைக்கதையும், அந்த திரைக்கதைக்கு வசனம் எழுதியிருக்கும் சீனு இராமசாமியும், ஜெயமோகனுமாகிப் போகிறார்கள். சினிமாத்தனம் இல்லாத சினிமாக்கள் எல்லாம்  வெறுமனே கண்டு வரும் காட்சிகளாய் மட்டும் இருந்து விடாமல் கூடவே இருந்து வாழ்ந்து வரும் ஒரு சுகானுபவத்தைக் கொடுத்து விடுகின்றன, நீர்ப்பறவையும் அப்படித்தான்.

நீர்ப்பறவையின் எஸ்தர் போன்ற பல எஸ்தர்களை நான் பார்த்திருக்கிறேன். அருளப்ப சாமிகள்  குடியை விட்டு விட்டு திருந்தி வாழ முற்படுகையில் சமூகம் அவர்களுக்கு கொடுக்கும் பல நிர்ப்பந்தங்களையும் நிஜமாகவே நான் கண்டிருக்கிறேன். அன்றாட வாழ்க்கையில் நம் முன் எதிர்ப்படும் மனிதர்கள் இவர்கள். தம்பி இராமையாவைப் போல எனக்கு கல்லூரியில் விரிவுரையாளர் ஒருவர் இருந்தார். திறமையாய் பாடம் சொல்லிக் கொடுக்க கூடியவராயிருந்தாலும் குடித்து விட்டுதான் கல்லூரிக்கு வருவார். 

குடிப்பழக்கம் பொழுது போக்காய் ஆரம்பித்து, அவ்வப்போது என்று நமக்கு நாமே ஆறுதல் சொல்லிக் கொண்டு, அடிக்கடி குடியாய் மாறி பின் குடிக்காமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு  கொண்டு வந்து விட்டு விடுகிறது. புரிதலோடு மிகச்சிலரே மதுவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். விழிப்புணர்வற்று மதுவைத் தொடுபவர்களை மது தனக்கு அடிமையாக்கி வைத்துக் கொள்கிறது. 

தெருவெங்கும் சிரிப்பாய் சிரிக்கும் டாஸ்மாக்குகள் எத்தனை பிள்ளைகளுக்கு தன் தகப்பனை தூரமாக்கி வைத்திருக்கிறது தெரியுமா? எத்தனை மனைவிகளை தன் கணவன் குடிக்காமல் இருக்கமாட்டானா என்று ஏங்க வைத்திருக்கும் தெரியுமா? மதுவோடு தொடர்ச்சியாய் தொடர்பிலிருக்கும் மனிதர்கள், சக மனிதர்களை விட்டும், குடும்பத்தை விட்டும் தூரமாகிப் போகிப் போய் விடுகிறார்கள். இப்படியாய் வாழ்க்கையை விட்டு விலகிச் செல்லும் அருளப்பசாமி மீண்டெழுந்து வரும் போது வாழ்க்கையை வாழ்க்கையாய்  பார்த்து, எஸ்தர் மீது காதல் கொள்ளும் இடம்...கவிதைத்துவமானது.

குடிப்பழக்கத்திலிருந்து மீண்ட அருளப்ப சாமியைப் பார்த்து அவன் திருந்தியிருப்பது அறியாமல் " சாத்தானே தூரப் போ...." என்று  எஸ்தர் விரட்ட....பாவமாய் அந்த இடம் விட்டு நகரும் அருளப்ப சாமி குடிப்பழக்கம்  உள்ள ஒருவனை பிடித்து வைத்துக் கொண்டு அவனுக்காக ஜெபம் செய்து ' சாத்தானே தூரப் போ..' என்று விரட்டுவதும், அதை எஸ்தர் கண்டு அவன் மீது சட்டென்று ஒரு பூ பூக்கும் மலர்ச்சியை முகத்தில் கொண்டு வந்து காதல் கொள்வதும்...கவிதை.

நான் என்ன உன் மகன் மாதிரியா மொடாக்குடிகாரன்....." அளவா குடிக்கிற கருப்பா இருக்க வெள்ளக்காரன்..." என்று கருப்பு பாண்டி  சரண்யாவிடம் பேசுமிடத்தில் வசனகர்த்தா கொடி கட்டிப் பறக்கிறார். சினிமாக்களில் வில்லனைக் கொண்டுவந்து சித்தரித்து கதை சொல்லும் போக்குகள் முற்றிலும் எதார்த்ததிற்கு முரண்பட்டவைகளே. நிஜத்தில் எந்த மனிதரும் வில்லன்களாக விரும்புவது கிடையாது. சூழல்களே இங்கே வில்லனாகிப் போகின்றன.

இனம் புரியாத உணர்வுகளின் தொகுப்பாய் விரிந்து செல்லும் இந்த திரைப்படம், தினத்தந்தி, தினமலர், தினமணி இன்ன பிற பத்திரிக்கைகளும்  செயற்கைக்கோள் தொலைக்காட்சிகளும் அன்றாடம் நமக்குச் சொல்லிச் செல்லும் ஒரு செய்தியை நமது வீட்டில் விழும் இழவாய் சொல்லிப் புரியவைக்கிறது. ' நாயகன் '  படத்தில் கதாநாயகியாய் அறிமுகமான சரண்யா இப்படி ஒரு விசுவரூபத்தை பிற்காலத்தில் எடுப்பார் என்று யாரும் கற்பனை கூட செய்து பார்த்திருக்க மாட்டார்கள், அவ்வளவு ஒரு நேர்த்தியான நடிப்பு.

வாழ்க்கையைத் தேடி கடலுக்குள் செல்பவனை கண நேரத்தில் கொன்று போடும் சிங்களவனின் இயந்திரத் துப்பாக்கிகள் நிஜத்தில் எத்தனை எத்தனை எஸ்தர்களை விதவையாக்கி இருக்கின்றன என்று எண்ணிப்பார்க்கும் போது உயிர் வரைக்கும் வலிப்பதை தவிர்க்க முடியவில்லை. அருளப்ப சாமி போல மீன்பிடிக்கச் சென்று மரித்துப் போன அப்பாவிகள் நமது ஊரில் ஆயிரத்துக்கும் மேல்.  அவ்வப்போது தொடர்ச்சியாய் சுட்டுக் கொண்டுதான் இருக்கிறானே தவிர அவனை கண்டிக்க யாதொரு நாதியும் இல்லாமல் இந்திய தேசத்தின் புதல்வர்கள்,  தமிழக மீனவன் என்ற அடைப்புக்குள் அனாதையாய் செத்துப் போகிறார்கள்.

செத்துப் போனவனின் குடும்பம் எப்படி பிழைக்கும்...? பிள்ளைகள் எப்படி படிக்கும்...? கணவனின்றி தனித்து விடப்படும் மனைவி என்ன ஆவாள்...? என்பன போன்ற கேள்விகளை எல்லாம் ஊடகங்கள் நம்மிடம் கேட்பதில்லை. அவை செய்தி பகிர்வதோடு கலைந்து சென்று விடுகின்றன. நாமும் நமக்குள் இப்படியான கேள்விகளை கேட்டுக் கொள்வதுமில்லை. காரணம் செய்கிகளைக் கடந்து அங்கே என்ன நிகழ்ந்திருக்கிறது என்று பார்க்குமளவிற்கு நமக்கும் பொறுமையில்லை. அந்தப் பொறுமையை நமது சமகாலப் பிரச்சினைகள் நமக்கு கொடுத்து விடுவதும் இல்லை.

மின்சாரம் இல்லாமல் இருளில் தவித்துப் போய் கிடக்கையில், தொழில்கள் முடங்கிப் போய் கிடக்கையில், நமது வாழ்க்கைச் சூன்யமாகிப் போயிருக்கையில் என்ன செய்து விட முடியும் நம்மால்? மாறி, மாறி வாழ்க்கை நம் சமூகத்து மக்களை கோரப்பிடிக்குள் பிடித்து வைத்திருக்கிறது.  அரசியல்வாதிகள் நாம் மீண்டெழுந்து விடதபடிக்கு கவனமாய் பார்த்துக் கொள்ளவும் செய்கிறார்கள். 

அது போகட்டும்... 

இயக்குனர் சமுத்திரக்கனியிலிருந்து எல்லா பாத்திரப்படைப்புகளுமே  இன்னமும் அந்தக் கடற்கரைக் கிராமத்தில் வசிக்கிறார்கள், ஒரு எட்டு பஸ் ஏறிப் போய் அவர்களைப் பார்த்து விட்டு வந்துவிடுவோம் என்ற எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. கதையைப் பற்றியும் கதை மாந்தர்களைப் பற்றியும் விரிவாக சொல்லிக் கொண்டே சென்றால் நீங்கள் திரையில் காணும் ஒரு சுவாரஸ்யத்தை நான் பறித்துக் கொண்டவனாகிப் போய் விடுவேன், அதனால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.

வலிகள் நிறைந்த வாழ்க்கையை அழுத்தமாய் பதிவு செய்து சென்றிருக்கும் நீர்ப்பறவை போன்ற படங்கள் நிறைய வரவேண்டும். அசகாய சூரர்களான ஹீரோக்களையும், வெள்ளைத் தோல் மினு மினுக்க களுக், மொளுக் என்று திரையில் வந்து சிணுங்கிச் செல்லும் கதாநாயகிகளையும், 3 குத்துப் பாட்டு, 2 மெலொடி, ஒரு சோகப்பாட்டு, ஒரு காமெடி ட்ராக என்று நகரும் தமிழ் சினிமாக்கள் பார்த்து, பார்த்து அலுத்துப் போய்விட்டது.

உலகத்தின் வன்முறைகளையும், கொடுமைகளையும் காட்சிப்படுத்த முயலும் திரைப்படங்களும், மிகப்பெரிய பட்ஜெட்டில் சூப்பர் ஹீரோக்களை வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களும்....தங்கள் கல்லாக்களை வேண்டுமானால் குறையில்லாமல் கட்டிக் கொள்ளலாமே அன்றி....

நீர்ப்பறவைகள் விதைத்துச் செல்லும் காலங்கள் கடந்த அற்புதமான அனுபவத்தை ஒருக்காலும் கொடுத்து விட முடியாது! நீர்ப்பறவை வெறும் திரைப்படம் மட்டுமில்லை....அது நமது உறவுகளின் சோகத்தை நமக்குள் இறக்கி வைக்கும் ஒரு காவியம்...!


தேவா. S
2 comments:

ஸ்கூல் பையன் said...

அரசியல் பேசுவதற்காகவே சமுத்திரக்கனியின் பாத்திரம் வலியத் திணிக்கப்பட்டதுபோல் இருக்கிறது...

சே. குமார் said...

//நீர்ப்பறவைகள் விதைத்துச் செல்லும் காலங்கள் கடந்த அற்புதமான அனுபவத்தை ஒருக்காலும் கொடுத்து விட முடியாது! நீர்ப்பறவை வெறும் திரைப்படம் மட்டுமில்லை....அது நமது உறவுகளின் சோகத்தை நமக்குள் இறக்கி வைக்கும் ஒரு காவியம்...!//

அருமையான விமர்சனம்... அதுவும் உங்கள் பாணியில் படிக்க படிக்க இரசனை கூட்டும் எழுத்தில்...