Pages

Friday, December 31, 2010

ஹாய்....31.12.2010!
வழக்கம் போல மற்றும் ஒரு நாள் தான் இது.......ஆனால் வருடத்தின் கடைசியாகிப் போனதால் வரும் அடுத்த வருடத்தை வரவேற்க தயாராய் இருக்கிறோம் எல்லோரும்.....

புது வருசம், பழைய வருசம், நாள், கிழமை எல்லாமே மனிதன் உருவாக்கிக் கொண்டது. பூமி சூரியனை ஒரு சுற்று சுற்றிவர 365 நாட்கள் ஆகிறது. ஒவ்வொரு சுற்றும் ஒரு வருடம். பூமி எப்போது சூரியனில் இருந்து தெறித்து விழுந்ததோ அன்றிலிருந்து வருடம் கணக்கிடப்பட்டிருக்காது அல்லவா...? நமது கணக்கீடுகளுக்கு முன்னும் பின்னும் வாழ்க்கை நடந்து கொண்டுதானிருக்கிறது.

' போன வருசம் .. செமடா மச்சி..வர்ற வருசம் அப்டியே இருக்கணும் '

' போன வருசம் செம கடுப்புடா மாமா வர்ற வருசமாச்சும் ஒழுங்கா இருக்கணும் '

மாறி மாறி பேச்சுகள் கேட்டுக் கொண்டிருக்கின்றன. வருடங்களையும் நாட்களையும் தாண்டி மனிதனை கட்டுப்படுத்தும் செயல்கள் இரண்டு....

ஒன்று.....அவனின் மனம் எந்த திசையில் வேலை செய்து செயல்கள் செய்கிறதோ அதன்படியும்,மற்றொன்று அவன் சார்ந்துள்ள சூழல் என்ன மாதிரி அனுபவங்களை அவனுக்கு கொடுக்கிறது என்பதை பொறுத்து பெரும்பாலும் ஒரு மனிதனின் வாழ்க்கை அமைந்து போகிறது. நல்ல வருடமாய் அமைவது இப்படித்தானே இருக்க முடியும்......?

இது தாண்டி...இயற்கை என்ற பிரமாண்டமும் நம் வாழ்க்கையை தீர்மானிக்கிறது.

இயற்கையின் சீற்றமும், மாற்றமும் மிக பலமான காரணியாகவும் நம்மின் கட்டுக்குள் இல்லாததாகவும் இருந்து நம்மை மாற்றி விடுகிறது. ஒட்டு மொத்த உலக வாழ்க்கையில் இருக்கும், பொருள் மற்றும் பொருளற்ற எல்லாவுமே......ஒரு வித சீரான அதிர்வுக்கு கட்டுப்பட்டு இருக்கின்றன...அந்த அதிர்வுகளின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்றார் போலத்தான் பிரபஞ்சமே இயங்கிக்கொண்டு இருக்கிறது. இந்த அதிர்வுகள் ஒத்த அதிர்வுகளாக இருந்தால் இயற்கையும் கட்டுப்படும்.

இயற்கைச் சீரழிவுகளுக்கு காரணம் எதிர் மறை சிந்தனைகளும் செயல்களும்தான் என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா? முழுக்க முழுக்க இல்லாவிட்டாலும் இவையும் ஒரு காரணிகளாத்தான் இருக்கின்றன. வாழ்த்துக்கள் என்பவை புது வருடம், பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் ரம்ஜான் பண்டிககைள் மட்டுமின்றி எல்லா தினமும் நமக்குள் வாழ்த்துக்களையும் அன்பினையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். குறிப்பிட்ட இந்த நாட்களில் பயின்று அதை எப்போதும் பின் பற்ற வேண்டும்.

என்னுடைய நண்பர் ஒருவர்....எப்போதும் காலை வணக்கம் என்று சொல்லமாட்டார்.......மாறாக காலை வாழ்த்துக்கள், மதிய வாழ்த்துக்கள் இரவு வாழ்த்துக்கள் என்று சொல்லுவார். வாழ்த்தி வாழ்த்தி மனம் ஒரு வித கொடுத்தலில் திளைத்து இலேசாகி அன்பை அடுத்தவர்க்கு பரிமாற அவரிடம் இருந்து நமக்கும் அதுவே கிடைக்கிறது. நாம் நமக்கு அன்பும், சந்தோசமும் , ப்ரியமும் மற்றவரிடம் இருந்து கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்போம்.......

ஒரு சிறிய கணக்கு போட்டுப் பாருங்கள்......எவ்வளவு பெறுகிறோம் என்றும் எவ்வளவு கொடுக்கிறோம் என்றும்....கணக்கு டேலி ஆகுதா? ஆகாது........உலகமே நம்மிடம் நல்ல மாதிரி நடக்கவேண்டும் ஆனால் நாம்.....என்ன கொடுக்கிறோம் மனிதர்களுக்கு?

அன்பையும் நேசத்தையும் கொடுக்கலாமே?

அதிகபட்சம் ஆறுதல் வார்த்தைகளையாவது பகிரலாம்.! சரி விடுங்க நான் இப்டிதான் ஏதேதோ பேசிகிட்டு இருப்பேன்....சரி விசயத்துக்கு வருவோம் (அப்போ இன்னும் விசயத்துக்கே வரலையான்னு கேக்குறீங்களா)

கடந்த வருட இறுதியை விட இந்த வருடம் மிக்க மகிழ்ச்சியாய்த்தான் இருக்கிறது. என்னைச் சுற்றிலும் ஆரோக்கியமான உறவுகள், நட்புகள் என்று கடவுள் என்னை ஆசிர்வதித்து இருக்கிறான். அப்படி இப்படி என்று எழுத ஆரம்பித்து இப்போது ஒரு கட்டமைப்புக்குள் வந்திருப்பதாக கருதுகிறேன். உண்மையில் சொல்லப் போனால் எனது உக்கிரமான எழுத்துக்கள் இன்னும் வெளிப்படையாக எழுதவே இல்லை.....

ஒரு கருத்தினை சொல்லவும் விவாதிக்கவும் சுமூகமான சூழலும் சரி, தவறு என்று நம்மைச் சொல்ல நண்பர்கள் கூட்டமும் மேலும் பேசும் வார்த்தைகளை கேட்க ஒரு சிறிய அட்டென்சனும் கொடுக்க வேண்டும்........

இதுவரை நான் செய்ததெல்லாம்.....கத்தி கத்தி கூச்சலிட்டு உங்களை எல்லாம் என்னை நோக்கித் திரும்புமாறு ஒரு செயலைத்தான் செய்திருக்கிறேன். கருத்துக்களை சொல்ல இப்போது ஒரு திடமும் வலுவும் எனக்கு கிடைத்திருக்கிறது. இந்த வலுவும் திடமும் கொடுத்தது நீங்கள்தான். ஒரு ஆயிரம் பேர் என்னை வாசிப்பார்கள் என்று சொல்வதற்கில்லை ஆனால் ஒரு 200 பேர் வாசித்தாலும் அவர்கள் ஆழ்ந்து வாசிப்பவர்கள்....

வெறும் வாசிப்பு தாண்டி அவ்வப்போது தவறுகளை உரிமையாகச் சுட்டிக் காட்டக்கூடியவர்கள், ஒவ்வொரு முறை எழுத்தின் போக்கு மாறும்போதும் கடிவாளமிட்டு சரி செய்தவர்கள், உண்மையான உறவாய் எப்போதும் உடன் இருப்பவர்கள்.....என்று

நிர்ப்பந்தத்துக்குள் வராத அற்புதமான வாசிப்பாளர்கள் கிடக்கப்பெற்றது ஆசிர்வாதம்தானே....? நான் இந்த வருட இறுதியில் மகிழ்வாய் இருப்பது நியாயம்தானே?

கொஞ்சம் ஒரு ஓய்வு தேவை என்று மனம் சொல்கிறது. மூளை வேண்டாம் என்கிறது. போராட்ட இறுதியில் குறைந்த பட்சம் 15 நாளாவது வாரியர் அமைதியாய் இருக்கலாம் என்ற முடிவும் எட்டப்பட்டது.

இந்த இடத்தில் ஒரு கதை சொல்ல ஆசைப்படுகிறேன்......

மரம் அறுக்கும் ஒரு பட்டறையில் ஒருவன் வேலை செய்து வந்தான். அவனுக்கு மாத சம்பளமாக ரூபாய் 2000 கொடுத்தார் முதலாளி. பலவருடங்கள் வேலை செய்து வருகிறான் அவன். ஒரு நாளைக்கு அவனால் 200 மரங்கள் அறுக்க முடிந்தது. இப்படிப்பட்ட சூழலுல் இன்னொரு வேலைக்காரனை அமர்த்தினார் அந்த முதலாளி அவனுக்கும் ரூபாய். 2000 சம்பளம் கொடுத்தார் முதலாளி.....ஆனால் அந்த புது தொழிலாளியோ ஒரு நாளைக்கு 500 மரம் அறுத்து கொடுத்தான்.

முதலாளி மெத்த மகிழ்ச்சி அடைந்து....அட என்ன இது புரடக்டிவிட்டி அதிகமாய் இருக்கிறதே என்று அவனின் சம்பளத்தை இன்னும் ஒரு ஆயிரம் உயர்த்தி ரூபாய் 3000 கொடுத்தார். இதைப்பார்த்த பழைய தொழிலாளி கோபப்பட்டு அவனும் மிக வேகமாக வேலை செய்தானாம். ஆனால் அவனால் கஷ்டப்பட்டு மரம் அறுத்தாலும் அதிக பட்சம் 250 மரம்தான் அறுக்க முடிந்ததாம். ரொம்ப கடுப்பாகி முதலாளியிடம் சென்று சண்டை போட்டு இருக்கிறான்......500 மரம் அறுக்கவே முடியாது அவன் ஏதோ ஏமாற்றுகிறான்.....நான் எவ்வளவோ முயற்சி செய்து விட்டேன் என்று சொன்னானாம். அதற்கு முதலாளி சொல்லியிருக்கிறார் நீ போய் அவனிடம் பேசிப்பார் எப்படி முடிகிறது என்று கேள்? என சொல்லி நீயும் 500 ம்ரம் கூடுதலாய் அறுத்தால் உனக்கும் சம்பள உயர்வு என்றும் சொல்லிவிட்டார்......

இவன் ரொம்ப் கடுப்பாகி புதிதாய் சேர்ந்த தொழிலாளியிடம் போய் கேட்டிருக்கிறான் எப்படி உனக்கு மட்டும் இது சாத்தியம்? நானும் தலைகீழாய் நின்றாலும் 500 மரம் அறுக்க முடியவில்லையே....உன்னால் மட்டும் எப்படி முடிகிறது என்று கேட்டிருக்கிறான்........

அதற்கு புது தொழிலாளி கேட்டிருக்கிறான் நீ எப்படி மரம் அறுப்பாய் என்று கேட்க....அதற்கு பழைய தொழிலாளி தொடர்ந்து வேகமாய்த்தான் செய்வேன் என்று சொல்லியிருக்கிறான்......அதற்கு புதுத் தொழிலாளி சிரித்து விட்டு சொல்லியிருக்கிறான்.... நீங்கள் வேலை செய்தது எல்லாம் சரிதான் ஆனால்.....நான் எப்படி செய்வேன் தெரியுமா....?

வேலை ஆரம்பித்த பின்னால் ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கு பிறகும் ஒரு 5 நிமிடம் எனது ரம்பத்தை தீட்டிக் கொள்வேன்...அதனால் ரம்பம் கூராகி அறுக்கும் வேகம் அதிகரிக்கும் என்று சொல்லிவிட்டு.......நீங்களும் அப்படி செய்யுங்கள் உங்கள் உற்பத்தியை பாருங்கள் என்று சொன்னானாம்..........

கதையின் கரு என்னவென்று உங்களுக்கு விளங்கியிருக்கும்....ஒவ்வொரு நாளின் இறுதியிலும் நாம் நம்மை அப்டேட் செய்து கொண்டே இருக்கவேண்டும்.அதுதான் வாழ்க்கையில் நம்மை உற்சாகப்படுத்தி மேலும் மேலும் முன்னேற வைக்கும். எனக்கும் ஒரு இரண்டுவாரம்.....என்னை ஆசுவாசுப்படுத்திக் கொள்ளவும்......
கழுகிற்காக செய்யவேண்டிய சில பணிகளைச் செய்யவும்..நிச்சயமாய் உதவும்...ஒரு கூர் தீட்டல்தான்.!

கூச்சலும் குழப்பமுமின்றை தனியாய் அமரல் ஒரு சுகம்............அடுத்த நிகழ்வுகளை அது சீராக்கும். இரண்டு வாரம் ஒரு சிறு பருவம்தான்........

மற்றபடி..என்னை குடும்பத்தில் ஒருவனாய் நினைத்து வாசிக்கும் உறவுகளுக்கும், மேலும் பின்னுட்ட மற்றும் ஓட்டு அரசியலில் சிக்காமல் அவர்கள் வலைப்பூக்களுக்கு நான் வந்து பின்னூட்டம் மற்றூம் வாக்குகள் இட்டாலும் இடாவிட்டாலும் பொருட்படுத்தாமல் என்னை வாசிக்கும் வலையுலக உறவுகளுக்கும்...........என் உயிர் தம்பிகளுக்குக்கும், எனது மாமா மச்சான் பங்காளிகளுக்கும்......மற்றும் எல்லா அன்பான நட்புக
ளுக்கும்.............

என் இதயங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.......!

வாழ்வில் எல்லா வளமும் பெற்று, அன்பும், பாசமும், நிம்மதியைத் தரும் செல்வமும் மிகுந்து வரும் வருடம்.........அமைதியாய் நமது வாழ்க்கையில் நுழைய எனது பிரார்த்தனைகள்!

அப்போ வர்ர்ர்ர்ர்ர்ட்ட்டா!


தேவா. S

Thursday, December 30, 2010

அப்பா...!


ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது.

அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது.........

100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது நமது உபோயோகம் மட்டும்தானன்றி மற்ற மனிதரை கீழ்தள்ளி உன்னை பெரிய பகட்ட்டான மனிதன்என்று காட்ட அல்ல.........அந்த குரல் கூறியிருக்கிறது என்னிடம்.......

உரக்க பேசும் அவசியமற்ற இடங்களில் எல்லாம் ஏன் குரலில் ஏற்றம் கொடுத்து பேசுகிறாய்? சப்தமாய் உரக்க பேசும் இடங்களில் சலமனற்றும் பேசாதே... சக்தி என்பது பணம் இல்லை ஆனால் பணத்தை விட பலமடங்கு மேலானது பணத்தை சம்பாரிக்க முடியும்,.ஆனால் ஆற்றலை நினைத்தாலும் பெற முடியாது என்று அது நாம் பேசும் சக்தி விரையமட்டுமின்றி.....அவசியமில்லாமல் ஓடும் மின்விசிறி அணைப்பதிலிருந்து மின் குழல்கள் அணைப்பது என்று மட்டுமில்லாமல் தண்ணீர் சேமிப்பு எனபது போல மிகைப்பட்ட வழிகளில் சக்தி விரையம் செய்கிறோம்........

என்று வரையறைத்து ஆற்றலை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கும் கொடுக்க வேண்டும் என்று கூறும் அந்தக் குரல்......

நேரம் என்பது நமது மானம்.......சொல்லிய நேரத்தில் சொல்லிய மனிதரை சந்தித்தலும், நேரப்பயன்பாடுகளை திட்டமிட்டு பயன்படுத்தலும் எப்போதும் உயர்வு என்று அந்த குரல் கூறியிருக்கிறது. மணிக்கணக்காய் தொலைபேசியில் வெட்டியாய் உரையாடிக் கொண்டிருக்கும் போது தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டதின் நோக்கமும் பயன்பாடுகளும் சொல்லிக் கொடுத்திருக்கிறது அந்தக் குரல்........

வீட்டுக்கு வாங்கும் எந்த பொருளும் அவசியத்தின் பேரிலா அல்லது மன உந்துதலின் பேரிலா என்று ஆராயச்சொல்லியுமிருக்கிறது. பெரும்பாலும் நமது தேவைகளை டி.வி விளம்பரங்களும், நம்மைச் சுற்றியிருப்பவர்கள் வாங்கியிருக்கிறார்களே என்று ஏதோ தேவையை நமக்குள் நாமே உருவாக்கிக் கொண்டு தேவையற்ற பொருள்களை வாங்கிக் குவிக்கும் அபாயத்தின் பின்னணியில் நம்முடைய பொருள் விரயம்தான் என்றும் படித்து படித்து சொல்லியிருக்கிறது அந்தக் குரல்...........

குரல்....குரல்........குரல்........யார் அது.............?

' அப்பா '

என்னுள் சூட்சுமமாய் நிறைந்திருக்கும் மூலக்கடவுளே, என்னை உருவாக்கி இன்னும் இவன் தந்தை எந்நோற்றான் கொல் என்ற வார்த்தைகளை கேட்க காத்திருக்கும் என் குருவே........!உம்மிடம் பெற்ற பிச்சைகள் எல்லாம் எமக்கு வாழ்வின் வழிகாட்டும் அக்னியாய் ஆகிப்போனது தகப்பனே...! என் ஆசானே...!

ஆறாம் அறிவினை உலுக்கிவிட்டு ஏழாம் அறிவினை எட்டிப்பிடிக்க வழிகள் பகின்ற கடவுளே....உம்மை விடுத்து எதைப் பற்றி நான் பேச.......

அது ஒரு அவசர காலை.....நான் பள்ளிக்கும் நீங்கள் அலுவலகத்திற்கும் கிளம்பிக் கொண்டிருந்த ஒரு பரபரப்பு நேரம்..ஏதோ ஒரு கவனத்தில் எனக்காக அம்மா குடிக்க வைத்திருந்த பாலை நான் கவனமில்லாமல் கொட்டிவிட......உச்சகதியில் நீங்கள் என்னை கண்டித்ததை நான் இன்னுமே மறக்கவில்லை. கவனம் தவறுதலைப் பற்றியும் புத்தியை கூர்மையாக வைத்தலைப் பற்றியும் நீங்கள் கூறியதையும் கேட்காத மனது உங்களின் கோபத்தின் மீது வெறுப்பு கொண்டது உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை..........

மாலை பள்ளிவிட்டு வந்து நான் ஏதோ எழுதிக் கொண்டிருந்தேன்......அப்போதுதான் அலுவலகத்தில் இருந்து வந்த நீங்கள்......தம்பி..என்ன பண்ற வீட்டுப்பாடமா? என்று செல்லமாக கேட்ட போதும் என் கோபம் வலுவானது.......காலையில் அப்படி திட்டிவிட்டு இப்போது என்ன நடிப்பு? என்பதுதான் என் கோபத்தின் மையக்கரு.......நான் உங்கள் கையைத் தட்டிவிட்டு மீண்டும் என் கோபத்தை தொடர்ந்தேன்...

என் 6 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தை தள்ளிவிட்டு என்னை துக்கிக் கொன்டு போய் வெளியில் நின்ற சைக்கிளில் அமர வைத்து தலை கோதி....தம்பி, அப்பா காலையில் கோச்சுகிட்டது டீ கொட்டினதுக்கு......மேலும் இனிமே கொட்டக்கூடது கவனமா இருக்கணும்ன்றதுக்கு..அவ்ளோதான் ஆன உன்னை எனக்கு ரொம்ப பிடிக்குமே....! அது அப்பவே முடிஞ்சு போச்சு...இனிமே நீயும் செய்யமாட்ட....ஆனா அதுக்காக அப்பா மேல இன்னுமா கோபமாவா இருக்கறது?

' எந்த மனிதரிடமும் அவரின் குறிப்பிட்ட தவறான செயலுக்கு கோபப்படு...ஆனால் மனிதர்களை நேசி...' இதைத்தானப்பா அன்று சொன்னீர்கள்.....

ஆமாம் அப்பா ......நான் ஒரு முட்டாள்தான். நிச்சயமாய்....! பதின்மத்தில் நான் நுழைந்திருந்த காலகட்டம். எல்லா பதின்ம வயதினரையும் போல என்னையும் ஆட்டிவித்தது ஹார்மோன் மாற்றங்களால் என்னுள் இருந்த அகங்காரப் பேய் இல்லை என்றால் ஏதோ ஒரு கோபத்தில் உங்களிடம் கேட்டிருப்பேனா என்ன சாதித்திவிட்டீர்கள் நீங்கள் என்று உங்களிடம்....

இன்னும் கூட பேருந்து செல்லா நம் குக்கிராமத்தில் 1947 வாக்கில் பிறந்து பியுசி வரை படிக்க நீங்கள் பட்ட சிரமங்களை கணக்கில் கொள்ளாமல் 21 வயதில் பியூசி முடித்த கையோடு வேலைக்கு சேர்ந்த நீங்கள் 25 வயதுக்குள் 4 அக்காள்களையும் ஒரு தங்கச்சியையும் திருமணம் முடித்து வைக்க தாத்தாவிற்கு எவ்வளவு உதவியிருப்பீர்கள்?

வாலிபக்கனவுகள் எல்லாம் மறைத்துக் கொண்டீர்களா இல்லை வாலிபக்கனவுகள் உங்களின் சூழல் கண்டு ஓடி ஒளிந்து கொண்டதா அப்பா? நீங்கள் எப்படி சராசரிக்குள் வருவீர்கள்? ஊராட்சி ஒன்றிய அலுவலக்த்தில் கிளர்க்காக சேர்ந்து அந்த அலுவலகத்தின் உச்சபதவியை நீங்கள் அடைந்த பின்னரும் அகந்தையற்று இருந்தது எனக்கு பாடமாக இப்போது தெரிகிறது.....

கல்லூரியில் தங்கி படிக்கும் செலவுகளுக்காக உங்களிடம் பணம் கேட்பேன். அது ஆயிரம் ரூபாயாகத்தானிருக்கும் அதில் 500 ரூபாயை 10ம் இருபதுமாகவும் 50 ஆகவும் என் முன்னாலேயே நீங்கள் பல முறை எண்ணி கொடுத்து விட்டு மீதிப்பணத்தை மணி ஆர்டர் செய்கிறேன் தம்பி என்று என் முகம் நோக்கி சொல்லிய தருணத்தில் அந்தப் பணத்தை மிஸ் யூஸ் செய்யக்கூடாது என்ற எண்ணத்தையும் திண்ணமாக விதைப்பீர்கள்.

பின்னாளில் அம்மாவிடம் நீங்கள் பேசிக் கொண்டிருந்தது எதேச்சையாக என் காதில் விழ....நான் ஸ்தம்பித்துப் போனேன். ஆமாம்.....மொத்தமாக பணம் கொடுத்தால் அப்பாவிடம் பணம் நிறைய இருக்கிறது என்ற எண்ணத்தில் என் செலவுகள் என்னையறியாமல் விஸ்தாரம் அடையும் என்ற காரணத்தால், கொடுக்க வேண்டிய பணத்தை எண்ணி எண்ணி கொடுத்து .. என்னை கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும் ஒரு ராஜ தந்திர யுத்திதானே அப்பா அது.......

உங்களிடம் பணம் இல்லாமல் இல்லை இருந்திருக்கிறது ஆனால் என்னை மறைமுகமாய் நீங்கள் பயிற்றுவித்தது எண்ணி அப்போது ஆத்திரமும் இப்போது ஆச்சர்யமும் வருகிறது.......

ஒரு தந்தை எப்போதும் அவரது பிள்ளைகளின் ரோல் மாடல். நீங்களும்தான். நீங்கள் இல்லை என்று சொல்லுமிடமும் ஆமாம் என்று சொல்லுமிடமும் கன கம்பீரம்தானே அப்பா..! உங்களின் முறுக்கிய மீசைக்குப் பின்னால் வீரம் இருந்ததா இல்லையா என்று எனக்குத் தெரியாது ஆனால் ஆண்மை இருந்தது. தாத்தா இறந்து போன போது அழாத என் அப்பா, அப்பத்தா இறந்த போது அழாத என் அப்பா, அக்காவை திருமணம் முடித்து மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பும் போது அழாத என் அப்பா...அழுதே பாத்திராத என் அப்பா.........


வெளி நாட்டு வேலைக்காக முதன் முதலில் நான் வருவதற்காக திருச்சி ஏர்ப்போட்டுகு வரும் போது எப்போதும் பாசத்தின் உச்சத்தில் இருக்கும் அம்மா அழுதது வழமையில் ஒன்று. வழி நெடுகிலும் வயல்வெளிகள் எனக்கு விடை கொடுத்துக் கொண்டே வர....வாழ்க்கயின் ஓட்டத்தின் மும்முரத்திலும் நாம் பயணித்த வண்டியின் வேகத்திலும், என் இரத்ததின் அதிவேக ஓட்டத்தால் ஏற்பட்ட முறுக்கிலும் நான் இறுமாந்து ஏதேதோ பேசினேன்........உங்களின் பேச்சுக்கள் கன கம்பீரமாய் எனக்கு தன்னம்பிகை ஊட்டியதோடு குடும்பச்சூழலையும் விலாவாரியாகவே சொன்னது.......

யெஸ்.......கலக்கமின்றி தோளில் கை போட்டு பேசிக் கொண்டே வந்தீர்கள்.....! அம்மா, தம்பிகள் எல்லாம் அழுதாலும் அப்பா உறுதியானவர்......என்ற எண்ணம் எனக்குள் இறுகிப்போயிருந்தது....ஏர்போர்ட்டும் வந்தது..!

அந்த 2002 பிப்ரவர் 5 ஆம் தேதியின் காலை 8 மணி என்னை வாழ்க்கையின் வேறு பக்கத்திற்கு கூட்டிச் செல்லத் தயாராய் இருந்தது....!

காரில் இருந்து இறங்கும் வரை நான் உணரவேயில்லை என் ஊரையும், என் மக்களையும், என் காற்றையும் விட்டு நான் போகப்போகிறேன் என்று.. எனது உடைமகள் தள்ளு வண்டியில் வைக்கப்பட்டது.....இதோ எனது நேரம் வந்து விட்டது.....நான் ஏர்போர்ட்டுக்குள் செல்ல வேண்டும்...வண்டியை தள்ளிக் கொண்டு... நகர்ந்த நான்......ஒரு கணம் திரும்பி உங்கள் முகம் பார்க்கிறேன்......

முறுக்கிய மீசையோடு.....என் அப்பா.......எப்போதும் கலங்காத என் தகப்பனா இது....?

கண்கள் சிவந்து....கேவிக்கேவி .......அழுதபடி.....அப்ப்ப்.....பா........என்னுள் நிறைந்திருக்கும் பேரிறையே....கேவிக்கேவி....அழுதபடி தள்ளு வண்டியை விட்டு விட்டு......ஓடி வந்து கட்டியணைத்து....உங்கள் கண்ணீரையும் என் கண்ணீரையும் ஒன்றாய் கலக்கவைத்த அந்தக் கணம்.....என் வாழ்வின் மிகக் கொடுமையானதுதான்.......

ஒரு நாள் கூட அழாத நீங்கள் என்னை கட்டிப்பிடித்து நான் பெத்த மகனே உடம்ப பாத்துக்கோப்பா.....எதுக்கும் கவலைப்படாத..மாரநாட்டு கருப்பை மனசுல வச்சுக்க அப்பா இருக்கேன்.........என்று அன்று நீங்கள் கொடுத்த உத்வேகம்தானப்பா இன்று என் திமிர், என் பணம், என் வாழ்க்கை என் வசதிகள்...

ஒவ்வொரு முறை போனில் பேசும்போதும்.....டிசிப்ளின் முக்கியம் பா...பணம் செகண்டரி என்று சொல்லிக் கொண்டே இருப்பீர்கள்.......நேற்று பேசும்போது கூட.... ! வாழ்வின் தருணங்கள் இன்று மாறிபோய்கிடக்கின்றன அப்பா....வெகு தூரம் வாழ்க்கை என்னை கூட்டி வந்து விட்டது....

ஆனாலும் பிச்சைக்கரனப்பா நான்....! உங்களிடம் பெற்ற பிச்சை அப்பா என் வாழ்க்கை....!

நீங்கள் சொல்வதை மறுத்த போதெல்லாம் வாழ்க்கை என்னை செவுட்டில் அறைந்து இருக்கிறது. ஏற்றபோதெல்லாம் பூச்செண்டு கொடுத்திருக்கிறது. நீங்கள் கற்றுக்கொடுத்த பாடம்தான் தனியாக நில்...உன்னால் உன்னை முன்னேற்று....என்பது.....

அப்பாவுக்கு வயசாயிடுச்சு தேவா... சீக்கிரமா சேமிக்கிர வரைக்கும் சேமிச்சுட்டு எல்லாத்தையும் முடிச்சுட்டு ஊரப்பாக்க வந்துடுப்பா.......அடிக்கடி நீங்கள் சொல்வது..இப்போதெல்லாம் இதுதான்...!

வந்துவிட்டேன்...அப்பா இதோ வந்து விட்டேன்...9 வருடங்களில் ஏதேதோ நிகழ்த்தியிருக்கிறது காலம் நமது வாழ்க்கையில் ஆனால் நான் இன்னும் உங்கள் கைபிடித்து நடக்கும் சிறுவன் தான் அப்பா....

எனது எழுத்துக்களை நீங்கள் வாசிப்பது இல்லை..நான் பதிவுகளெழுதுவதும் உங்களுக்குத் தெரியாது......200வது பதிவு மட்டுமல்ல அப்பா என் அறிவிலிருந்து வெளிப்படும் எல்லாமே நீங்கள் இட்ட பிச்சை அப்பா...

என் குருவே! என் வழிகாட்டியே! நான் எழுதின மற்றூம் இனி எழுதப் போவன அத்தனையும் உங்கள் காலடியில் சமர்ப்பிக்கிறேன்..........


தேவா. S

Sunday, December 26, 2010

அந்திம....ம்!


சுவாசம் தப்பப்போகும்
நீண்ட இரவொன்றில்
கலைதலாய் புரட்டுகிறேன்
பழுப்பேறிய என் வாழ்வின்
பக்கங்களை...படிந்திருக்கும் தூசுகள் தட்டி...

வலிவாய், சப்தமாய்
உடலின் முறுக்குகள் காட்டி...
குறுக்காய் நெடுக்காய் யோசனைகளில்
அலைந்து அலைந்து அகங்காரத்தில்
காட்சி மாற்றம் ஆன நாட்கள்
ஒரு போதும் சொல்லவில்லையே
அந்திமத்தின் அவஸ்தைகள் பற்றி?

கடவுள் உண்டு, இல்லை
வாதிட்ட வாதங்கள் எல்லாம்
நினைவுப் பகுதியில் செத்துப்போய்
உயிர் இருக்குமோ போகுமோ
என்ற ஒற்றைப் புள்ளியில்
மல்லாந்து கிடக்கிறதே என் மூளை!

செல்லரித்த புத்தகங்களும்
செத்துப் போன தத்துவங்களும்
பல்லிளித்து கிடக்கின்றன
பரண்களின் உச்சியில்....
பகுத்தறிவு மூளைக்கோ
இதுவரை தெரியவில்லை
அடுத்த கணத்தின் என் .....
வாழ்வின் நகர்தல் பற்றி...!

கனத்த இமைகளை ...
கலவரமாய் மூடுகையில்
எருமை வாகனத்தில்.. மீசைமுறுக்கி
வருகிறான்...மதம் மனதில்....
ஏற்றி வைத்த அடாவாடி எமன்....

எரிப்பதிலும் புதைப்பதிலும் ..
விவாதங்களாய் பேசி
காத்திருக்கும் உறவுகளுக்குத்
தெரியுமா விழித்திருக்கும்
என் செவிகள் பற்றி....

செத்துக் கொண்டிருக்கின்ற..
என்னுள் செல்களும் திசுக்களும்....
வற்றிக் கொண்டிருக்கின்றன
நினைவுகளில் தீராது...
என்றெண்ணிய என் வாழ்க்கை.....

தொடர்கிறது நெடிய...
கனத்த இரவின் நிமிடங்கள்
என்னின் சப்தநாடிகள் ....
அடங்கும் ஒரு உற்சவமாய்
உடலுக்குள் கூடிப் பரவுகிறது...
ஒருவித திண்மை...
சுவாசம் தடுமாற.....
நரம்புகள் இழுக்க
நா வரள....
புத்தி அழிய...
மனம் வெருள
நிலை குத்தி நிற்கிறது...
என் கண்கள்....
விடியலைக் காணா இரவோடு...
இதோ......இறந்தே விட்டேன் நான்..................!


தேவா. S


Saturday, December 25, 2010

ஓசை....!சற்று முன் மழை பெய்து நின்று போன ஒரு பின் மாலை வேளை அது. மழைக்காக ஒரு மரத்தடியில் ஒதுங்கி நின்ற நான் பாதி நனைந்தும் நனையாமலும் என் கிராமத்துக்கான பேருந்து செல்லா ஒற்றையடிப்பாதையில் மெல்ல நடக்கிறேன்.

மரங்கள் எல்லாம் மழை வாங்கிய சந்தோசத்தைத் தன் இலைகளில் தேக்கிவைத்து என்னைக் கொஞ்சம் உலுக்கேன்; நான் ஒரு மழை பெய்கிறேன் என்று கொக்கி போட்டு இழுத்தன என்னை... சேறும் சகதியுமான என் ஊருக்கான வழி 50 வருடங்களாய் இப்படித்தான் இருப்பதாக ஊர் பெரியவர்கள் கூறக்கேட்டிருக்கிறேன்.....

மழை நின்று விட்டது. வெளியே போவோமா அல்லது வேண்டாமா என்ற சர்ச்சையில் மரங்களில் இருந்த காக்கைகளும் குருவிகளும் கிளிகளும் கூச்சலிட்டு விவாதித்துக் கொண்டிருந்ததற்குக் காரணம் இருட்டத் தொடங்கியிருந்ததுதான் என்பது எனக்கும் அவற்றுக்கும் நன்றாகவே தெரியும். புற்கள் எல்லாம் புதுமணப்பெண்ணாக மழைத்துளியை வாங்கிச் சிலிர்த்து வெட்கத்தோடு ஏதேதோ கதைகள் சொல்லிக் கொண்டிருந்தன....

மண்ணின் வாசம் எல்லாவற்றையும் தாண்டி என்னுள் அடாவடியாய் உள் நுழைந்ததோடு சுற்றியிருந்த தாவரங்களின் பச்சைப் பசுமையின் வாசமும் ஒரு மாதிரி உள் சென்று கிலேசத்தைக் கொடுத்த அந்த நொடியில் மூர்ச்சையாவதற்குச் சமமாய் ஒரு மனோ நிலையில் நான் கிடந்த போது அந்த சில் வண்டின் சப்தத்தை மூளை கவனிக்கத் தொடங்கியிருந்தது.....சுகமாய் எங்கிருந்தோ ஒரு அதிர்வினை பரப்பும் சில்வண்டுகள் மோன நிலையிலேயே இருக்குமோ என்று கூட நினைத்தது உண்டு.....

ஊதக்காற்று என் உடை தாண்டி உடல் சென்று உள் எலும்புகளை நொறுக்கிப் போட்டுக் கொண்டே இருந்தது நானும் அதைக் காதலோடு உள்வாங்கி அசை போட்டுக் கொண்டே நடந்தேன்.......

ஊருக்கு வருகிறேன் என்று யாரிடமும் சொல்லவில்லை திடீரென்று முடிவு செய்து தடாலென்று வந்து கொண்டிருக்கிறேன். நான் கிளம்பும் போதே அம்மா அப்பாவிடம் வேறு எங்கோ போகிறேன் என்று சொல்லிவிட்டு என் சொந்த கிராமத்திற்கு அதுவும் யாருமில்லாமல் பூட்டிக்கிடக்கும் என் பூர்வீக வீட்டிற்கு....இதோ மழையோடு, காற்றோடு, சேறோடு, சகதியோடு, பறவைகளின் பேச்சோடு... மருது சீமையின் மண்ணில் கருவை மரங்களின் உரசலோடு .... நடந்து கொன்டிருக்கிறேன்...! ஒரு விசயம் நான் செருப்பைக் கழட்டிப் பையில் வைத்து வெகு நேரம் ஆகிவிட்டது என்பதை உங்களிடம் சொல்லித்தான் ஆகவேண்டும்...

ஆனால் இன்னும் நான் எதிர்பார்த்தது போல ஒருமுறை கூட என்னை முத்தமிடாமல் ஒதுங்கிக்கிடந்தன முட்கள்...இப்போதோ அப்போதோ எப்போதோ குத்தும் ஏதாவது ஒரு முள் என் பாதங்களில் அப்போதுதான் நான் அந்த மண்ணுக்குச் சொந்தக்காரன் என்பதை என்னால் அனுபவிக்க முடியும்

அதுவும் முள் குத்தும் அந்த ஒரு நிமிடம் சுரீரென்று ஒரு வலி பாதத்தில் இருந்து பரவி உடல் முழுதும் தாக்கி ஒரு வித வேதனை என்று மனம் அதை நம்ப வைக்கும். அந்த நொடியில் நாம் அனிச்சையாய் நிதானிக்க வேண்டும். ஆமாம் வலி என்பது அப்போது மாறி ஒரு சுகானுபவம் வாய்க்கும் நமது உற்று நோக்கலில்.....அதுவும் குத்திய முள்ளை மெல்ல உடல் விட்டு அகற்றும் அந்த நொடியில் குபுக்கென்று பொட்டு ரத்தம் வெளியே வந்து சொந்த மண்ணை எட்டிப்பார்க்கும் அதே வேகத்தில் தரையில் கால் வைத்து தேய்த்து மண்ணோடு இரத்தம் சேர்த்து அழுந்த வலியை உள்வாங்கிக் கொள்ளும் சுகம்.....என்னவென்று அப்படி செய்தவர்களுக்கும் எனக்கும் தெரியும்.......


200 வீடுகள் கொண்ட ஒரு உலகத்திற்குள் நுழையும் முன்பே அப்பத்தா தாத்தாவின் நினைவுகள் ஓடி வந்து என்னைக் கட்டிக்கொண்டன.... ஆமாம் இப்போதான் வீட்டுக்கு சிமிண்ட் பூசினோம்(1993) அதுக்கு முன்னால் சாணம் மொழுகி மொழுகி அப்படித்தான் இருக்கும் வீடு...சாணம் மொழுகிய பின் ஒரு வாசம் வீடு முழுதும் இருக்கும். மண் தரையும் மண்பானை பாத்திரங்களும் மிகுந்த ஒரு வீட்டில் ஒரு கலாச்சார வாசம் அடித்துக் கொண்டே இருக்கும்....

மின்சாரம் இல்லாத நாட்களில் நிறையவே உயிரோட்டமான வாழ்க்கை இருந்திருப்பதாக நான் நினைக்கிறேன். அரிக்கேன் விளக்கும் காண்டா விளக்கும் வீடு முழுதும் பரவியிருக்க அடுப்பில் சுள்ளிகள் (முள்ளு விறகு) வச்சி அப்பத்தா சமைக்கிற அழகும் அதுவும் அந்த ஊதாங்குழல் வச்சு ஊதி ஊதிக் கங்குகளைப் (நெருப்புத்துண்டு) பற்றவைக்கும் அழகும் அந்த நெருப்பு வெளிச்சத்தில் மின்னும் அவளது தண்டட்டியின் பளபளப்பும்....

ஆத்தாடி.....சொல்லவே முடியாத ஒரு குறுகுறுப்பு இப்பவும் நெஞ்சுக்குள்ள இருக்கத்தான் செய்யுது...! வாழ்க்கையை நிறையவே தொலைத்திருக்கிறொம் என்பது மெலிதாக உணர முடிந்தது. அறிவியல் வளர்ச்சியும் நவீனமும் மனிதத்தைப் பொசுக்கி இருக்கின்றன....

கல்லாங்காய் ஆட்டமெங்கே? கிளிக் கோடு எங்கே? சில்லுக் கோடு எங்கே? கிட்டிப்புல் எங்கே? ஓடிப்பிடித்து விளையாடும் விளையாட்டு எங்கே? கல்லா மண்ணா எங்கே? திருடன் போலிஸ் விளையாட்டு எங்கே? கண்ணாமூச்சி ரே ரே காதடைப்பார் ரே ரே எங்கே எங்கே? ஈர்க்குச்சி விளையாட்டு எங்கே? சைக்கிள் பழகும் சிறுவர்கள் எங்கே? கதை சொல்லும் அக்காக்களும் அம்மாக்களும் எங்கே? மழை எங்கே? மழையின் பொரி அரிசி எங்கே? அவிச்ச கடலை எங்கே..................

எங்கே என் வாழ்க்கை? எங்கே என் கூட்டம்? எங்கே என் மனிதர்கள்? மனிதனின் முகம் காணா எந்திரங்களோடு தொடர்பு கொண்டு திருப்தியடையும் மூளைக்காட்சிகள் என்னும் மைண்ட் இலூசனில் வாழும் கற்பனை வாழ்க்கையாய்ப் போய்விட்டதே....எமது வாழ்வும் விழாக்களும் சந்தோசங்களும்.....

நேரே பார்க்கும் நண்பனைச் சாட்டுக்கு வாடா பேசலாம் என்று சொல்லும் ஒரு பாழாய்ப்போன பித்து மனோ நிலைக்கு வந்துவிட்டதே எம் உலகம்......!

நான் யோசனைகளோடு நடந்து கொண்டிருந்தேன்....ஊர் எல்லையில் ' ஏப்பு நடந்தா வாரீக... மழைத்தண்ணியாவுல இருக்கு ? ஒத்தையில் வாரீகளே அய்யாவும் ஆத்தாவும் வரலயா? வார்த்தைகளில் பாசம் தடவினார் ஒத்த வீட்டுக் கண்ணப்பன் அண்ணன்...

'இல்லண்னே சும்மாத்தேன் வந்தேன்' மறுமொழியோடு அவரது வீடு கடக்கையில் ஆடுகளின் வாசமும் அவற்றின் இரைச்சலும் தாண்டி அவரது மாடு சப்தமிட்டு என்னை வேகமாய் வரவேற்றது....

ஆசையோடு ஒரு கருவை முள் என் சட்டை பிடித்து இழுத்து 'ஏஞ்சே எப்பஞ்சே வந்த'ன்னு ஒரு பாசத்தைக் காற்றாக மாற்றி என்னைத் தடவியது.....

இதோ என் பூர்வீக வீடு....பூட்டுக்களையும் சில நூற்றாண்டு வாழ்க்கையையும் தாங்கியபடி.....

எதிர்வீட்டு அத்தை அப்பாவின் அக்கா... அப்பு என்ன ஒத்தையில் வந்துருக்கீகா..னு கண்டாங்கிச் சீலை தடுக்க கீழே விழுந்து விடுவது போல ஓடிவந்து என்னைக் கட்டிக் கொண்டு இரத்த பாசத்தை முத்தமாகக் கொடுத்து ....குடும்ப விசயங்களைப் பேசிவிட்டு .. காபி எடுக்க அவர் வீட்டுகுள் நுழைய....

நான் அப்பாவிற்குத் தெரியாமல் கொண்டு வந்திருந்த வீட்டின் சாவியைப் பூட்டுகுள் கொடுத்து முடுக்க...பூட்டு சந்தோசமாய் விலகி என்னைப் பார்த்துச் சிரித்தது.....

நிசப்தமாய் வீட்டுக்குள் நுழைந்தேன்.....!

வாழ்க்கையின் ஓட்டத்தில் நாம் மறந்து போன அழகான ஓசைகள் ஆயிரம் இருக்கும்...! என் மெளனங்கள் எல்லாம் இப்படிப்பட்ட ரம்யமான ஓசைகளால் தான் நிரம்பியிருக்கிறது....அப்போ வர்ர்ர்ர்ர்ட்ட்ட்டா!


தேவா . S


Friday, December 24, 2010

சுனாமி...!


உறங்கிக் கொண்டிருந்த
நீ விழித்ததேன்...?
உறக்கத்திலிருந்த
எம்மைக் கவிழ்ந்திருந்த
இமைகளோடு கவிழ்த்து
நீ கொண்டு போனதும் ஏன்?

வாழ்க்கையை உன்னில்
கொடுத்து உன் காலடியில்
கிடந்த பொழுதினில்
எம்மீது காதல் கொண்டாயோ
ஆழிப் பேரலையே...
எம் உயிர் அழித்த ஆழப்பேரலையே....

எல்லாப் பொழுதுகளையும்...
விடிய வைத்தது இயற்கை
விடியலைக் கொன்றழித்து...
யுகங்களாய்ப் பசிக்கவைத்திருந்த
உன் வயிற்றின் பசியடக்கினாய்...
எம்மின் உயிர் நசுக்கினாய்...!

சாந்தமாய் நின்ற உன்
கட்டவிழ்ந்த நொடியில்..
ஏன் அலையே எம்மிடம் சொல்லவில்லை
ஏன் கடலே சைகைகள் செய்யவில்லை...
உன்னில் உப்புச்சுவை குறைந்ததென்று
எம்மவரின் கண்ணீரைக் கடன்
கேட்டது எப்படி நியாயம் ஆகும்?

வாழ்க்கையை வாரி வாரி.....
வழங்கிவிட்டு வஞ்சகமின்றி..
மொத்தமாய் உயிர் குடித்தது
யுத்தமரபில்லையே இயற்கையே
எம் உயிர் அழித்த செயற்கையே...!

கருப்பு தினத்தை எமக்கு...
வழங்கிய கரிப்பு அரசனே...
வாழ்வையும் சாவையும் பங்கிட்டுக்
கொடுத்த வள்ளலே...
இயற்கையின் இளவலே....
நீ யுத்தங்கள் செய்வதில்..
எமக்கு முரண்கள் இல்லை...
ஒரு பகுத்தறிவோடு நீ ...
பகலிலாவது வந்திருக்கலாமே...?

கண்ணீரில் இருந்து கரிக்கும் உப்பின் சுவையோடு ஒரு போரிட்டு வீழ்த்த எண்ணும் ஒரு வித மடமை கோபமும் ஆத்திரமும் கலந்து எம்மில் கொப்பளிப்பது வழமையாகிப்போனது. ஓராயிரம் முறை அதை இயற்கையின் சீற்றமென்று அறிவியலும் ஆன்மீகமும் கட்டியம் கூறினாலும் எமது மூளைகள் அதைச் சடுதி நேரம் கூட செவி கொடுத்துக் கேட்கப் போவதில்லை...

ஆண்களையும் பெண்களையும் ஈவு இரக்கமின்றி பச்சிளங்குழந்தைகளையும் பெண்களையும் மொத்தமாய்த் தின்று தீர்த்தது கடல்....விடியலில் ஊதப்பட்டது ஒரு மரண சங்கு.... விடிந்த பொழுதில் பறவைகள் எல்லாம் மனிதர்களின் கதறலைப் பார்த்து வாயடைத்துப் போயிருந்தன.....

சூரியனின் வெட்கத்தில் அந்தப் பகல் பொழுது முழுதும் குளிரால் நிரம்பியே வழிந்தது....கரையில் கனவுகளோடு கண்ணயர்ந்திருந்த மனிதர்களின் உயிர் குடித்த திருப்தியில் வரலாற்றின் சோகத்தை வெற்றிக்கரமாய் எழுதிவிட்டு மெளனமாய்த் தன்னுள் திரும்பிப் போய்விட்டது வங்காள விரிகுடா....

கூக்குரல்களின் பின்னால் கணவனை இழந்த மனைவியும், மனைவியை இழந்த கணவரும், பிள்ளைகளை இழந்த பெற்றோரும்.. இன்ன பிற உறவுகளும் கதறிய படி உடல்களைத் கரையெங்கும் தேடித் தேடி அலைந்த காட்சிகளில் வங்காள விரிகுடாவே வெட்கித் தற்கொலை செய்திருக்க வேண்டும்...

வாழ்க்கையின் ஓட்டத்தை எது தீர்மானிக்கிறது? விடிந்தால் இது செய்யலாம் அது செய்யலாம் என்று கணக்குகள் போட்ட மனிதர்களின் மூளைகள் எல்லாம் ஒரு இரவின் உறக்கத்தோடு ஜல சமாதியாக்கப்பட்டது என்ன நியாயம்...?

மனிதர்களாய் நின்று பார்த்தால் கடவுள் என்ற ஒன்று இல்லையோ? கடல் அரக்கன் இப்படி அடாவடி செய்து விட்டானே, இவனை என்ன செய்யலாம் என்ற ரீதியில் கோபமும், இழந்து விட்ட உறவுகளுக்காகவும் கொத்துக் கொத்தாய்ப் போன முத்துப் பிள்ளைகளின் உயிருக்காகவும்.......அழுகையும் ஆத்திரமும் வருகிறது....

இயற்கையின்படி பார்த்தால் இது ஒரு நிகழ்வு...எல்லாம் தன்னைத்தானே சமப்படுத்த இயற்கையின் ஒரு அணுகுமுறை இது....! கொள்ளைக் கொள்ளையாக மீன்களையும் நான் தான் கொடுத்தேன்..உமது வீட்டின் விளக்குகளில் ஜென்மங்களாய் நான் தான் எண்ணெயாயிருந்தேன்...

என்னை அப்போது சீராட்டி இப்போது திட்டும் உங்களின் எண்ணங்கள் தான் இயற்கைச் சீற்றங்களின் காரணி என்று சொல்லாமல் சொல்லி மெளனமாய் சொல்லி மீண்டும் வேலையைச் செய்வதில் எந்தப் பாராபட்சமும் காட்டாமல் செயல் செய்து கொண்டிருக்கும் கடலுக்கு இது ஒரு நிகழ்வு..........

சப்தங்களின்றி.....விவாதங்கள் தொலைத்து.......ஆழிப்பேரலையில் உயிர் துறந்த அத்தனை உறவுகளுக்கும் அஞ்சலிகள் செய்வோம்........மேலும் எதிர் வரும் காலங்களில் இயற்கைச் சீற்றம் மட்டுமின்றி எந்த விதமான தீங்குகளும் இன்றி வாழ....நேர்மறையான எண்ணங்கள் கொள்வோம்...!

என் பூமி செழிக்கட்டும்......! எம் மக்கள் வாழட்டும்...!


தேவா. SThursday, December 23, 2010

சுவாசமே காதலாக....(தொகுப்பு:6)!


உன்னிடம் நானும் என்னிடம் நீயும் இதுவரை காதலை சொன்னதில்லை. காதல் என்ற வார்த்தைக்குள் சிக்காமல் உன்னோடு பழகத்தொடங்கி இன்றோடு மூன்றாண்டுகளைக் கடந்துவிட்டோம் என்ற நினைவின் பின்னணியில் வெளிப்பட்ட நீண்ட பெருமூச்சோடு....நடந்து கொண்டிருக்கிறேன்...ஒரு அதிகாலை ஆள் அரவமற்ற ஒற்றையடிப் பாதையில்.....

இந்தக் கணம் வரை எந்த முரண்களும் இல்லாமல் நேசித்தலைப் பிரதானமாகக் கொண்டு நாம் சிரித்ததும் சிரிக்கையில் பேசியதும் பேசுகையில் கவிதை சொன்னதும் அதைக் காட்சிகளாய் வர்ணித்ததும் கைகட்டிக் கைக்கு எட்டாத் தொலைவுகளில் உடல் உரசா ஆனால் உள்ளம் உரசிய நடைகளில் எல்லாம் எதைப் பயின்றோம்? காதலா? இல்லை நட்பா இல்லை இந்த இரண்டும் தொலைந்து போன இடத்தில் முளைத்த புதிதான வேறு எதுவோவா?

ஞானத்தின் உச்சம் பெண்களிடமிருந்து வருகையில் அதை அதீத வேகத்தில் ஓர் ஆண் வாங்கிக் கொள்ள வேண்டும். அதற்காக நான் வெகுகாலம் தவமிருந்தேன்... நீ தவம் கலைத்தாய் வரம் கொடுத்தாய்... தாகத்தில் பருகும் நீர் போல இருகரம் குவித்து மொத்த நீரையும் உள்வாங்கிக் கொள்வது போல சிந்தாமல் சிதறாமல் உன்னை என்னுள் நிறைத்துப் போட்டேன். நிறைந்து போனேன். ஒரு அடர்த்தியான அமிலம் போல என்னை கரைத்துப் போட்டாய்... எனக்குள் கனவுக்கடைகளை வேக வேகமாய்த் திறந்து போட்டாய்...!

கலர்க்கலராய் நீ பேசிய கவிதைகளும் கவிதைகளை உச்சரித்த உனது பாவங்களும் ஒன்று சேர்ந்து என்னை மூர்ச்சையாக்கிப் போட்டு முன்னூறு கதைகள் பேசியது உனக்குத் தெரியுமா? தெரியாதா? என்று எனக்குத் தெரியாது. ஒரு முறை பேச்சு வாக்கில் ஐ லவ் யூ என்று சொன்ன மறு கணத்தில் உன் முகத்தில் உற்சாகமும் ஒரு சாந்தமுமாய் வெளிப்பட்ட உணர்வுக்கு உதவுவது போல வந்து விழுந்த வார்த்தைகள் சொல்லாமல் இருக்கும் எல்லாம் சுகமானது என்று எனக்குள் ஒரு பால பாடத்தை நடத்தி விட்டு... போரில் வென்ற இருமாப்பின்றி வெறுமனே நகர்ந்து செல்லும் அரசனைப் போல அடுத்த வாக்கியத்துக்குள் நுழைந்து வேறு விசயத்துக்குச் சாதரணமாய் திரும்பி விட்டன...

ஆனால்... தேக்கிவைத்த உணர்வுகளோடு நேசித்தலைச் சொல்லாமலேயே நேசிக்கும் வித்தையை எனக்கு கற்றுக் கொடுத்த குரு நீ என்பதும் உனக்குத் தெரியாது. மெளனங்களால் பேசும் மொழியை உன்னிடம் இருந்து நான் கற்றுக் கொண்டதும் தெரியாது. பகிராமல் ஒரு பயணம் செய்வதில் சராசரியான எனக்கு இருந்த சிரமங்களில் தலையாயது எனக்காக நீ ஒரு நாள் அழுத போது உன்னைத் தொட்டு ஆறுதல் சொல்ல முடியாமல் நான் தடுமாறியது, அன்று என் கலக்கம் புரிந்து ஆறுதலுக்காய்த் தொடுதலில் தவறு இல்லை. செயல்களை விட நோக்கங்களில் தான் இருக்கிறது தவறும் சரியும் என்று நீ சொன்ன இடத்தில் தெளிவாய்ப் புரிந்து போனது வாழ்க்கையும் வாழ்வியல் முறைகளும் உறவுகளும்...

திருமணமும் பந்தமும் மட்டுமே உறவுகளை வரையறுத்துப் போட்டு ஒரு கட்டுக்குள் நிறுத்தி வைத்து விடுகின்றன என்ற ஒரு பேச்சினூடே திருமணம் என்பது வாழ்வியல் தேவை ஆனால் அதுவே வாழ்வியல் இல்லை. காமம் வரைமுறைக்குள் இருக்க வேண்டும் என்றுதான் திருமணம் அதில் தவறுகள் இல்லை. ஆனால் காதல் வரைமுறைக்குள் இருக்க வேண்டும் என்று மனிதர்கள் எண்ணுவதில்தான் முரண்பாடுகள் இருக்கின்றன. காமத்தைக் கட்டுக்குள்ளும் காதலை விரித்து பேரன்பு நோக்கம் கூடிய பார்வையில் நோக்கி வாழும் போதுதானே வாழ்வின் ஓட்டத்தில் இருக்கும் ஜீவன்அறியப்படும்.

உடல் சார்ந்த காமம் கட்டுக்குள்ளும் அங்கே ஒருத்தனுக்கு ஒருத்தி மாண்பும், மனம் சார்ந்த காதல் அன்பே சிவமாய் விரிந்து பரந்தும் இருத்தலில் தானே மனிதனுள் இருக்கும் எல்லாச் சக்கரங்களும் விழிக்கும், அவன் உடலென்னும் தோட்டத்தில் எல்லாப் பூக்களும் பூத்துச் சிரிக்கும். தடுக்க வேண்டியதைத் தடுத்து அனுமதிக்க வேண்டியதை அனுமதித்து வாழும் வாழ்க்கையை நடத்திச் செல்வது ஒரு கலை. ஆனால் மனிதர்கள் தடுக்க வேண்டியதை அனுமதித்தும் அனுமதிக்க வேண்டியதைத் தடுத்தும் ஒரு குழப்பத்தில்தான் பெரும்பாலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

உதாரணமாகக் காமத்தை நேர்மையாக அறியவேண்டும். இவர்கள் திருட்டுத்தனமாய் அதை அடக்கி அடக்கியே....அதை அறிவதைத் தவிர்த்துப் பேசுவதைத் தவிர்த்து... இப்போது அறிதல் இல்லாமல் புரிதல் இல்லாமல் பார்க்கும் பொருளில் எல்லாம் காமம் வெளிப்பட்டுச் சீரழித்துக் கொண்டிருக்கிறது. கடவுளும் அப்படித்தான்...அறிதலும் புரிதலும் இல்லாமல் முரண்பட்டுப் போயிருக்கிறது...

நான் பேசிக் கொண்டிருந்தேன்....

என்னைத் தடுக்காமல் நீ அவற்றை எல்லாம் வாங்கிக் கொண்டு கண்களால் ஒரு உணர்வை எனக்குள் பாய்ச்சிவிட்டு அந்தப் பாய்ச்சல் பரப்பிய சந்தோச அலைகளை என்னுள் பரவவிட்டு நான் லயித்துக் கண்மூடி அதை அனுபவித்த நொடியில் என் உள்ளங்கை பற்றி மேலும் நீ பரவவிட்ட அதிர்வுகளில் சுத்தமான அன்பு இருந்ததைச் சூடாக உணர முடிந்தது.....

தட்சிணாமூர்த்தி தத்துவம் போல இருந்ததை இருந்தது போல இருந்து காட்டி இன்று வரை தொடரும் உன்னோடான உறவு நட்பில்லை, காதலுமில்லை அது ஒரு குரு சிஷ்யன் உறவு.....

ஆமாம் நீ என் ஞான குரு என்று உன்னிடம் சொன்னதை என்னிடம் நீயும் திருப்பி சொன்னாய்.......

தொடர்ந்து கொண்டிருக்கிறது.....நமது பயணம்....

உடல்தாண்டி உணர்வுகளாயும் தொடரட்டும் என்று நீ சொன்னதையே நானும் சொல்லி இந்தக் கட்டுரையையும் உனக்கே சமர்ப்பித்து........

இதோ நடந்து கொண்டே இருக்கிறேன்......என் ஒற்றையடிப் பாதையில்......மெளனத்தில் நிறைந்திருந்த சப்தமான உன் நினைவுகளோடு....


அப்போ வர்ர்ர்ர்ர்ட்ட்ட்டா...!

(இன்னும் சுவாசிப்போம்.....)


தேவா. S

Wednesday, December 22, 2010

எது...?சுழலும் நுரையில்
அடித்துச் செல்லும்
மனதோடு நகர்கிறது
கவலைகள் அற்ற
ஒரு கடும் காட்டாறு..!

வெறித்த விழிகளில்
தேங்கிக் கிடக்கும்....
கவலைகளில் நிறைந்திருக்கும்
வாழ்க்கையை வேடிக்கையாய்
பார்க்கிறது.... தூரத்தில் பறக்கும்
ஒரு ஊர்குருவி!

ஒரு காற்றோடு கூடிய
நிறைவில் தலையசத்த
மரத்தின் சந்தோசங்கள்
சாரலாய் பரவி சப்தமாய்
என்னுள் கேள்வி எழுப்புகின்றன்
எங்கே தொலைகின்றன மானுட
மகிழ்ச்சிகளென்று....?

இசைக் கச்சேரியை
சற்றுமுன் தொடங்கிய
ஒரு பேடைக்குயிலின்
கீதம் எங்கும் நிறைக்கிறது
சந்தோசத்தின் அதிர்வுகளை

கனமாய் கலைந்திருக்கும்
மனதுக்குள் எப்போதும்....
அமர்ந்திருக்கும் எதிர்பார்ப்புகளோ
தப்பாமல் அழித்துப் போடுகின்றன
வாழ்வின் அழகுகளை...!தேவா. S

Tuesday, December 21, 2010

ஆதி....!ஆசைகள் அறுபட்டுப் போய்க் கிடக்கின்றன அதைத் தூண்டி விட்ட அகங்காரம் மரணித்து சில மணித்துளிகள் ஆகின்றன. வெற்று நினைவுகளோடு உக்கிரமாய் அமர்ந்த தியான உச்சத்தில் செத்தொழிந்தே போய்விட்டன உறவுகளும், உறவுகளில் கலந்திருக்கும் பொய்மையும், பொய்மையில் அடங்கியிருந்த மாயைகளின் ஆட்டங்களும்.....

அகங்காரம் கொண்ட மனதினை சற்று முன் நேருக்கு நேராய் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியதில் என்னிடம் கேள்விகள் கேட்க சொல்லி தூண்டிய மனதிடம் கேள்விகள் கேட்க எத்தனித்த அந்த கணத்தில் உள்ளிருந்து ஒலித்த ஒரு குரல் சட்டென்று கேள்வி அறு....கேள்வியை அறி....என்று சொல்லாமல் சொல்லிய தருணத்தில் உற்று நோக்கிய பொழுதில்தான் மெல்ல மெல்ல கயமை மனம் கழண்டு விழ ஆரம்பித்தது......

உள் நோக்குதலை நிறுத்து புறம் நோக்கிப் பாய் என்று மாயக்கட்டளைகள் பிறப்பித்துக் கொண்டிருந்த மனதின் வலிமையினை எதிர்கொள்ளல் சிரமமாய்த்தான் இருந்தது....

மட்டறுக்க மறுத்தல் ஊறு விளைவிக்கும் என்று யாம் பயிற்றுவிக்கப்பட்டு இருந்தோம். ஜென்மங்களாய் எமக்குள் ஊறிக்கிடந்த உணர்வான நினைவுகள்..மட்டறுக்காமல் கேள்விகளை மீண்டும் மனதிடம் திருப்பத் தூண்ட... புறம் நோக்கி ஏன் பாய வேண்டும்? என்ற கேள்வியை பவ்யமாய் மனதின் காலடியில் சமர்ப்பித்து.....மெளனமாய் பதில் எதிர் நோக்கிய பொழுதில் மெல்ல தெரிந்தோம்...கட்டளைகள் பிறப்பிக்கும் முட்டாள் மனம் எப்போதும் அறியாது கேள்விகளுக்கான பதிலை...ஒன்று அது ஏமாற்றும் அல்லது... ஏமாறும்....

எமது ஏமாற்றத்தை தவிர்க்க ஏமாற்றுதலை செயற்படுத்தும் உத்தி எமக்குத் தெரிந்து போனது பித்து மனமோ கேள்விக்கான விடையறிவித்தலை அறியாமல் மேலும் ஒரு கட்டளை பிறப்பித்து பக்கத்தில் கேட்ட ஒரு சப்தத்தை கவனிக்கச் சொன்னது. கண் திறந்து பாரென்று பல்லிளித்து கபட நாடகம் ஆடியது.

ஏன் பார்க்க வேண்டும்? என்ற எதிர் கேள்வியில் திணறிய மனதிடம் அடுத்த ஒரு தாக்குதலை தைரியமாய்த் துவக்கினேன்...! நீ யாரென்றேன்....????? எம்மிடம் கட்டளைகள் பிறப்பிக்க எங்கிருந்து வருகிறது உமக்கு கேள்விகள்...? மூலம் எது? உன் இலக்குதான் என்ன? என்பது போன்ற கேள்விகள் அசுரத்தனமாய் உள் சென்று தாக்க மனம் என்ற விசயத்தின் முழு பலமும் எமது கட்டுப்பாட்டுக்குள் வந்தது...

எதிர் கேள்விகளில் கன்மேந்திரியங்கள் மறந்து ஞானேந்திரியங்களில் நிலைத்து நின்ற ஒன்று மனதை வென்ற பின் கிடைத்த வெற்றிடமாயிருந்தது....! சப்தமும் சலனமுமின்றி லயித்துக் கிடத்தல் ஜனித்துப் போயிருந்த ஒற்றை புள்ளியில் தான் ஆசைகள் அறுபட்டும் அகங்காரம் மரணித்தும் போய் கிடந்தன சுவடுகளற்று.....

ஒற்றைப்புள்ளியில் லயிக்க லயிக்க..ஒன்றுமில்லா வெளியில் உணர்வென்ற ஒரு விசயம் மட்டும் எஞ்சியிருக்க ஆழ் தூக்கத்தில் கனவுகளற்ற வெறுமை போன்று இருத்தல் என்ற ஒன்றுண்டு என்ற உணர்வோடு இருக்கிறேன் என்ற உணர்வு மறைந்து..........உடல் மறந்து....உலகம் மறந்து உலகின் நியதிகள் மறந்து நியதிகளற்ற வெளியில் கிடக்கும் பொழுதில் கிடப்பவனும் கிடத்தலுமின்றி மெளனத்தின் உச்சமாயிருந்த அதன் சப்தங்கள் கடுமையாகத்தானிருந்தன......

சப்தமில்லாதவை எல்லாம் பலமாக இருந்த அதே நேரத்தில் பலமில்லாதவை எல்லாம் இரைச்சலாயிருந்தன. காலமற்ற வெளியில் ஸ்தூலமற்று சூட்சுமமாய் விரவிக்கிடந்த சுகம் இன்னதென்று அப்போது அறியாதவனாய் அல்ல.....அல்ல அறியாத வஸ்தாய் கிடந்திருந்த கணங்களை கணக்கு கூட்ட யார் இருந்தார் அப்போது? ஒன்றுமில்ல ஒன்றில் சங்கமித்த சந்தோசம் கிடைத்தது எதற்கு? உடலாயிருந்து உணர்வுக்குள் போனபின் உடல் பெற்றதா? இல்லை உணர்வுக்குள் உணார்வாயிருந்த ஒன்றில் தானே நிகழ்ந்ததா?

வெளிச்சமும் இருளும் கலந்த ஒரு திசைகளற்ற வெளியில் மிதந்தேனா இல்லை கிடந்தேனா? இல்லைப் பறந்தேனா? நெருக்கமாய் எல்லாம் இருக்க விலகியே அனுபவித்தேனே அது எப்படி? ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்ற சப்தமாய் அதிர்ந்த பொழுதிலேயே அங்கிங்கு என்று எங்கும் நீக்கமற விரவியிருந்து எமக்குள் யாமே செயல் செய்து யாமே விளவுகளை எல்லாமாய் நின்று ரசித்தோமே அது எப்படி? உடலற்றுப் போனதனால் மறைந்து போன எல்லைகள் விரியாமல் விரிந்து அறியாத இடங்களில் எல்லாம் வீரியமாய் நிகழ்தலாய் தொடர்ந்ததே எப்படி....?

ஆதி....ஆதி ஆதி நான்...
அண்டசராசரத்தின் மூலம் நான்
அசையும் அனைத்தின் மூலம் நான்
சிவமாயிருந்த வித்து நான்...
அடியும் முடியும் இல்லா
ஆனந்த சிவன் நான்..
எனது தாண்டவமே..கூத்தாகி
கூத்தில் அசையும் அதிர்வுகளே...
தோற்றங்களாகி...சலனத்தை
நடத்தும் சத்திய பிரம்மம் நான்.....!

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் பயணமற்று இயக்கமற்ற இயக்கத்தில் பரவியிருந்தது எல்லாமே என் இயல்புகள்தான்.....இதோ..........

மெல்ல மெல்ல உணர்வுகளை மட்டுப்படுத்தி சலனங்களுக்குள் நுழைந்து சப்தமாய் மிகப்பெரிய காற்றின் இரைச்சலை உணர்ந்து அது வேகமாய் சீற்றமுடன் நெருக்கமாக உணர, அதுவே என் சுவாசமாக உணர்ந்த அந்த மணித்துளியில் எனக்குள் உடம்பென்ற உணர்வு கச்சிதமாய் வந்து விட்டது. உடலின் பருமனும்....திடமும் இருத்தலும் அமர்தலில் இருந்த கனமும் தெரிய இதோ உடலுக்குள் வந்து விழுந்த மூன்றாம் விநாடியில் என் கன்மேந்திரியங்களுக்குள் போய் பதுங்கிக் கொண்டன அது வரை ஆளுமை செய்து வந்த ஞானேந்திரியங்கள்....

மெல்ல கண்விழித்து பார்வையை புறத்தில் செலுத்தினேன்......காட்சிகள் பற்றிய விவரிப்பு செய்யாமல் பதுங்கிப் படுத்துக் கொண்டிருந்த மனதினை உசுப்பிவிட்டேன்.. ஒரு களிறு போல பிளிறுக் கொண்டு எழுந்து நின்றது....கட்டளைகள் இட்ட மனமென்னும் மதயானை.....கட்டுப்பட்டு நின்றது....

மெல்ல நடந்து தோட்டத்துக்குள் வந்தேன்...........அதிகாலை வானம் சுகமான ஒரு இருளோடு மர்மமாய் எனைப் பார்த்து சிரிக்க...பரவியிருந்த குளுமையில் விரவியிருந்த ஆக்சிஸனை உள் வாங்கி ஆழமாய் சுவாசித்து மெல்ல நடந்து கொண்டிருந்தேன்...

மனமென்ற யானை எனக்குள் சப்தமின்றி ஆடி ஆடி அமைதியாய் நின்று கொண்டிருந்தது.... நான் சினேகமாய் அதை தட்டிக் கொடுத்து நடந்து கொண்டிருந்தேன்..........

மெலிதாய் விடியலை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது பொழுது....!


அப்போ வர்ர்ர்ர்ர்ர்ர்ட்ட்ட்டா!


தேவா. S

Monday, December 20, 2010

காலம்...!


ஒரு வெற்று வானமும்
சப்தங்களற்ற தனிமையும்
ஒரு சில்லென்ற காற்றுக்குள்
எனை நிறைத்துப் போட
எதுவுமற்று எல்லா திசைகளிலும்
அலைகிறேன் நான்!

என்னுள் இருந்த…
சித்தாந்தங்களின் சிதறலில்
உயிர்த்துக் கொண்ட …
உணர்வுகள் கொடுத்த சிறகுகள்..
தூக்கிச் செல்கின்றன..எட்டப்படாத…
உயரங்களில் இருக்கும்
ஏதோ ஒரு உண்மைக்கு…!

சப்தங்கள் தொலைத்த கணத்தில்…
சிலிர்த்தெழுந்த ஒரு…
சிருங்கார நாதம் என்னுள்
பற்றிப் பரவிய பொழுதில்…
கரைந்தே போகிறேன்...
காற்றின் திசைகளுக்குள்…!

மெளனமாய் என்னுள் இருந்து
பரவும் அதிர்வுகளோடு
ஒரு பஞ்சு போல மிதந்து மிதந்து
செல்லும் எதார்த்தத்தில்
நகரும் என் காலத்திற்கோ
நிறமுமில்லை..குணமுமில்லை!


தேவா. S

Sunday, December 19, 2010

மகள்...!


காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!!

என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்.....

எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை.....

வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்.....

இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....?

மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே...

இறந்தால் நாம் எங்கு போவோம்.....

இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்?

கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....?

வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையாட அவளுக்குத் துணை ஒரு ப்ளாக்கி (டெரி ப்யர்), ஒரு சோனு...(ஒரு பையன் பொம்மை) ஒரு...டோனி...(ஒரு குட்டி பொம்மை நாய்) மேலும் ஒரு...சின்ரலா.....

இவளின் உலகம் அதுதான்......! ஒரு நாள் இரவு அவளை உறங்க வைத்த பின்பு....ஹாலுக்கு வந்து பார்த்த நான் .. எதேச்சையாக கவனித்தேன்.....இந்த நான்கு பொம்மைகளும்... சோபாவில் படுக்க வைக்கப்பட்டு அதற்கு அவளின் துண்டினால் போர்த்தி விடப்பட்டு இருந்தது....! அதுவும் வரிசையாக.....! அவர்களை உறங்க வைத்து விட்டுத்தான் அவள் உறங்குவாளாம்...ஏன் அவுங்களுக்கு தூக்கம் வராதா..? இது அடுத்த நாள் அவள் விதைத்த கேள்வி....

ஆச்சர்யமாகத்தான் இருந்தது... அவளின் கடந்த பிறந்தநாள் எனக்கு....! ஆமாம்.....குழந்தை குழந்தை என்று பார்த்து கொண்டிருந்த நான் முதன் முதலாய் அவள் வளர்ந்த சிறுமி என்று உணர்ந்தேன்....! வளர்ந்த முடியில் குதிரை வாலும், ஸ்கை ப்ளூ கலர் குட்டிச் சுடிதாரும்....ஹை ஹீல்ஸ் செருப்பும் என்று அவள் பள்ளிக்கு என்னோடு தயாரான கணத்தில் ஒரு கணம்.. எனக்குள் ஆச்சர்யமும், அதிர்ச்சியும் ஒரு வித..பட படப்பும்.....ஆமாம் பிள்ளை வளர்ந்து விட்டாள்...உள்ளே ஒரு மூலையில் ஒரு மணியும் அடித்தது.....

பெண் பிள்ளைகள் சடாரென்று வளர்ந்து விடுகிறார்கள். அவளின் உடைக்கு மேட்சாய், கிளிப், நெயில் பாலிஸ், செருப்பு, மற்றும் இன்னும் பிற பொருட்களும் வேண்டும் என்று கேட்ட பொழுதில்....என் மனைவியின் முகத்தைப் பார்த்தேன்.....ஒரு வித கேள்விக் குறியோடு....!!!! எப்படி இவள் இதை எல்லாம் கேட்கிறாள்....இது உன்னுடைய ஐடியாவா என்றூ பார்வையால் கேள்வியை தூக்கி போட்டேன்....அவள் இல்லவே இல்லை என்று தலையாட்டினாள்.....

வாழ்க்கை போகிற போக்கில், தொலைக் காட்சியாகவும், பள்ளித் தோழர்களாகவும், சுற்றுச் சூழலாகவும் பயிற்றுவித்து விடுகிறது. இயற்கையிலேயே அவர்களுக்கு இருக்கும் குணாதியங்களும் கூடி அதற்கு ஏற்றார் போல விருப்பப் பொருட்களின் மீது கவனமும் சென்று விடுகிறது.

என்னுடைய புரிதலில் பெண் ஒரு மிகப் பெரிய பிரபஞ்ச சக்தி....! ஒன்றை ஆக்குவதில் அவள் துணையின்றி எதுவுமே நிகழ சாத்தியமில்லை.....! அதுவும் அந்த சக்தி என் வாழ்க்கையில் பெரும் பங்கைத்தான் ஆற்றிக் கொண்டிருக்கிறது, அம்மா, அக்கா, மனைவி, குழந்தை, அலுவலகத்தில் பாஸ் என்று...அந்த சக்தியின் ஓட்டத்தையும் அதன் வீரியத்தையும்...வேகத்தையும் மிக அருகில் இருந்து படிக்கும் ஒரு அனுபவம் வாய்த்திருக்கிறது.......

உலக இயக்கத்தில் சிவமாய்.. இருக்கும் எதுவமற்ற தன்மை....இயங்க ஆரம்பிக்கும் போது சக்கியாய் மாறுகிறது.....இந்த தத்துவத்தை உணர்த்தும் ஒரு சிம்பாளிக் போஸ்டர்தான்.....அர்த்த நாரீஸ்வரார்.....

சிவம் இல்லையே...சக்தி இல்லை......சக்தி இல்லையேல் சிவம் என்ற ஒன்று இருப்பதே அறிய முடியாது....!


சாக்த வழிபாடு என்று திராவிட தொல்மரபில் சில வழக்க முறையில் இருந்திருக்கின்றன. பெண்ணை தெய்வம் போல நினைத்து வழிபட்டு போற்றக்கூடிய முறை. ஆமாம் பெண் என்பவள் உணர்வு பூர்வமானவள் அன்பின் அடையாளம் அவளை அன்பு செய்து அரவணைத்தல் மூலம் அவளின் சக்தி ஆணுக்கு பரிமாற்றம் செய்யப்படுகிறது...

அது எப்படி.. சக்தி பரிமாற்றம் ஆகும்? பெண்ணை வழிபடுதல் போல ஆணையும் வழிபட்டுள்ளால பெண் என்ற கேள்விகள் எல்லாம் வருதா... அது எல்லாம் விளக்கமா சாக்தம் பற்றி எழுதும் ஒரு நாளில் பார்ப்போம்.. ஆமா அது என்னிக்கு....தெரியலையே....ஏன்னா..

ஆண்டவன் சொல்றான்... .............மீதிய நீங்களே பில் அப் பண்ணிக்கோங்க....

அப்போ வர்ர்ர்ர்ர்ர்ர்ட்ட்ட்ட்டா!!!!!!


தேவா. S

Friday, December 17, 2010

ஹாய்....17.12.2010!ஓராயிரம் நிகழ்வுகள் சுற்றி நிகழ்ந்து கொண்டிருக்கும் பொழுதில் அவ்வப்போது சடென் பிரேக் போட்டு வாழ்க்கையை நின்று நிதானித்துப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. ஒரு நிறுத்தம் தேவை இடை இடையே...அப்படிப் பட்ட நிறுத்தங்கள் ஒரு முறை நாம் எங்கிருந்து வந்தோம் என்றும் எங்கு நிற்கிறோம் என்று மெல்லிய உணர்தலை வலுவாகக் கொடுத்து ஒரு வித புரிதலை கொடுக்கத்தான் செய்கிறது. ஆனால் யாரும் நின்று நிதானிப்பதுதான் கிடையாது ஓட்டம்.. ஓட்டம்...ஓட்டமோ ஓட்டம்.

குறிப்பாக இந்த பதிவுலகத்தை எடுத்துக் கொள்ளுங்கள் இந்த வருடத்தின் மார்ச்சு மாதவாக்கில் எழுத வந்தேன். எனக்காகவே எழுத ஆரம்பித்தேன் அல்லது எழுதிப் பார்த்தேன் இன்னும் அப்படித்தான் எனக்காகவே எழுதுகிறேன் மற்றும் எழுதிப்பார்க்கிறேன்.

இது எனக்குள் உள்ள விசயம் அது. அகத்தில் இருக்கும் விசயங்கள் எப்போதும் மாறுவது இல்லை. சிறுவயதில் உணரப்பட்ட அந்த உள்முனைப்பு எந்த மாற்றமுமின்றி அப்படியே இருக்கிறது. அது ஆடுவதில்லை அசைவதில்லை ஒரு வித ஸ்திரத்தன்மையோடு எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டு இருக்கிறது. அதற்குக் கவலைகள் இல்லை மேலும் கற்பனைகளும் இல்லை அசைவற்ற அந்தப் பெருஞ்சக்திதான் நம்மை வழி நடத்துகிறது என்பது கூர்ந்து நோக்கினால் உணர முடியும்.

யார் கூர்ந்து நோக்குவது நமக்குத்தான் நேரமில்லையே... ..துரித கதியில் இயங்கும் இந்த உலகத்தில் அடுத்த மனிதர்களைப் பற்றிப் பேசவே நமக்கு நேரமில்லை. அப்புறம் எங்கே நம்மை நாம் உற்று நோக்குவது.... நடக்காத காரியமாய்க் குதிரைக் கொம்பாய்ப் போய் விடுகிறது மனிதர்களுக்கு...!

உள்ளே இருக்கும் உள் முனைப்புதான் இப்படி இருக்கிறது ஆனால் புறத்தில் எல்லாம் மாறிப் போய் விடுகிறது. ஆமாம் காலம் எல்லாவற்றையும் மாற்றிப் போட்டுக் கொண்டும் ஆனால் ஏதோ ஒரு மாறாத ஒன்றை தன்னிடம் வைத்துக் கொண்டும் இருக்கிறது. இதுதான் பிரபஞ்ச சூத்திரம்.

புறத்தில் உடலில் மாற்றம், சுற்றியுள்ள சூழலில் மாற்றம் என்று எல்லாம் மாறிப் போவதற்கு மனிதர்களின் செயல்பாடுகள் காரணமாகிப் போகின்றன. ஆனால் மனிதன் செயல்பட முடியாத இடம் மாற்றியமைக்க முடியாத இடம் அவனது மனமும் அதைத் தாண்டிய உள் முனைப்பு என்று சொல்லக்கூடிய அவனின் ஆத்ம சொரூபமும்தான்.....

ஏனென்றால் அங்கே செயல்கள் செல்லுபடியாவதில்லை..அது செயலற்ற ஒரு இடம். அங்கே போன மாத்திரத்தில் செயல்கள் எல்லாம் நின்று விடுகின்றன. நினைவுகள் அற்ற அந்த இடம் எல்லாவற்றையும் விழுங்கிக்கொண்டு ஒரு அக்னியைப் போல அதைத் தொட்டவுடன் நாமும் அதாகிப் போகிறோம். பின்னே பிரித்தறிய ஒன்று இல்லாமல் போய் விடுகிறது.

செயலற்ற இடத்திலிருந்து பிறக்கும் செயல்கள் சக்தி மிகுந்தவை. உலகின் ஆக்கங்கள் எல்லாம் அங்கிருந்து வந்தவை. உள்ளிருக்கும் அந்த உள்முனைப்பு சக்தியைப் பரப்பி மூளைக்குள் விரவிப் பரவி சக்தியைத் தூண்டி சிந்திக்கவும் செயல்படவும் செய்கிறது. இரத்தத்தினை உடல் முழுதும் ஓடச்செய்து இதயத்திற்கு சரி விகிதம் கொடுத்து அழுத்தம் கொடுத்து மற்ற இயக்கங்களுக்கு உறுதுணையாய் இருக்கிறது.

உடலின் இயக்கத்திற்கு அறிவியல் கொடுக்கும் எல்லா விளக்கத்திற்கும் பின்னால் நிற்பது இந்த பெருஞ்சக்திதான். மனிதர்களின் பயன்பாடுகளை அவர்களின் மனம் நிர்ணயம் செய்வதால் அந்த குரங்காட்டத்தில் இந்தப் பெரும் சக்தி பெரும் விரையம் ஆக்கப்படுகிறது......

அப்படி பெருமளவில் எனது சக்தி உபோயோகம் செய்யப்படும் இடமாக எனது உத்தியோகமும், எனது எழுத்தும் இருக்கிறது. உத்தியோகம் என்னளவில் உபோயோகம் கொடுக்கக் கூடியது அதன் பயன்பாடுகளு என்னளவில் என் குடும்பம் அளவில் சரிதானே....! ஆனால் எழுத்து என்று வரும் போது அது நிறைய பேரோடு தொடர்பு கொண்டது என்பதை உணராமலேயேதான் என் போக்கில் எழுதி வந்திருக்கிறேன்....டக்கென்று ஒரு கட்டத்தில் ... நான் நின்று நிதானிக்கும் இக்கணத்தில் மிகப்பெரிய உண்மைகள் மெலிதாய் என்னுள் சிலிர்த்து எழுகின்றன......

எழுத்துக்களை சக பதிவர்கள் மட்டும் வாசிப்பதில்லை மேலும் இங்கே அளிக்கபப்டும் பின்னூட்டங்களும், வாக்குகளும் தரவரிசைகளும் ஹிட்ஸ்களும் மிகப்பெரிய மாயை அதன் பின்னால் ஓடிக்கொண்டிருப்பதும் மாயை என்பதையும் தெளிவாக உணர முடிந்தது.

பதிவுலகம் சாராமல் வாசிக்கும் நண்பர்களின் விமர்சனங்களும் எதிர்பார்ப்புகளும், சொந்த விசயங்களையும் தன்னுடைய உறவாய் என்னிடம் மின்னஞ்சல்கள் மூலம் பகிர்ந்து கொள்வதைக் காணும் போது ஒரு மிகப்பெரிய பொறுப்பு எழுதுபவனுக்கு வேண்டும் என்ற உண்மை எனக்குப் பலமாகவே உறைத்தது.

எழுத்து என்பது வாசிக்கும் மனிதர்களின் கண்களில் பரவி இதயம் துளைத்து மூளையில் நல்ல நினைவுகளைப் பரப்பிச் செல்லவேண்டும். மேலும் எழுதும் எழுத்துக்களின் போக்கு ஒரு விரிந்த பார்வை கொண்டதாகச் சமுதாயம் விவரித்து வைத்திருக்கும் எல்லா கட்டுக்களையும் உடைத்ததாகவும் எல்லா மனிதர்களுக்கும் பயனளிக்கும் வகையிலிருக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வும் மேலோங்கியிருக்கிறது.

ஏதோ ஒரு பத்து பதிவுகள் எழுதினோம் இருபது பேருக்குக் கமெண்ட் போட்டோம் 40 பேர் வாக்களித்தார்கள் 50 பின்னூட்டம் வந்துவிட்டது என்ற அளவில் திருப்திபட்டுக் கொள்வது ஒரு மட்டுப்பட்ட நிலை.

மிகையான மனிதர்கள் வாசித்து விட்டு மெளனமாய்ச் சென்று சமய சந்தர்பங்களில் மின்னஞ்சல்களில் தமது சந்தோசத்தைத் தெரிவிக்கும் போது இங்கே எழுத்து என்பது விளையாட்டாகத் தெரியவில்லை. இது ஒரு அற்புதமான களம், காழ்ப்புணர்ச்சிகள் தாண்டி மனிதர்களைச் செம்மைப்படுத்துவதோடு தானும் செம்மைப்பட்டுப் போகும் நிகழ்வுகள் அரங்கேறும் ஒரு அட்டகாசமான தளம்.

எழுதும் மனிதர்களின் பொறுப்புணர்ச்சி ஏதோ ஒரு வகையில் இருக்க வேண்டும். அது மனிதர்களை மகிழ்விக்கவேண்டும். சந்தோசமாய் ஒரு கிளர்வுற்ற சிந்திக்கும் நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். என்னைத் தொடரும் அத்தனை நண்பர்களும் வெறும் காமெடி அல்ல....

அவர்கள் நான் ஏதோ எழுதுகிறேன் என்ற எண்ணத்தில் நேரம் கிடைத்தால் வாசிக்கலாம் என்ற நம்பிக்கையில் தொடருபவர்கள். வேண்டுமானால் சிலர் கமர்சியல் காரணங்களுக்காகத் தொடரலாம். ஆனால் அப்படி குறைந்த பட்சம் என்னைத் தொடருபவர்கள் ஏமாந்துதான் போவார்கள்.

ஏனென்றால்...எனக்குக் கொடுத்து வாங்குதலில் நம்பிக்கை இல்லை. கொடுப்பேன்..நல்ல கட்டுரைகள் சிரிக்கவும் சிந்திக்கவும் செய்யும் வலைத்தளங்கள் உணர்வுளைத் தூண்டும் கவிதைகள் என்று என் ப்ரியத்தில் கொடுப்பேன்.

எதிர்மறை கருத்துக்களைச் சொல்லியும் பரபரப்புச் செய்திகளை உணர்ச்சியைத் தூண்டும் செய்திகளையும் மனிதர்களுக்குக் கொடுப்பது ஒருவகை, இன்னும் காமம் சார் நிகழ்வுகளை சிரிப்பாகவும், சினிமா செய்திகளைச் சூடாகவும் கொடுக்கவும் செய்தால் ஹிட்ஸ்கள் கூட வரும்...கூட்டமும் வரும்....

ஆனால் அதற்கு நிறைய சிறப்பான அனுபவமும், நோக்கும் கொண்ட மனிதர்கள் இருக்கிறார்கள்...அதை நானும் செய்ய விரும்பவில்லை.....!

மனிதர்களின் மனங்கள் விசாலப்பட்டுப் பார்வைகளும் சிந்திக்கும் சக்தியும் அதிகரித்து மாயைகள் ஒழிய வேண்டும் என்ற ஒரு நிலைப்பாட்டில் மட்டுமே நின்று கொண்டிருக்கிறேன். எல்லா வகையிலும் எழுத்தின் ஓட்டத்தோடு வாசித்து அர்த்தங்களை விளங்கி கொண்டு என்னை ஊக்குவித்து வரும் அத்தனை அன்பான உறவுகளுக்கும் இந்தக் கட்டுரையைச் சமர்ப்பிக்கிறேன்.

எனது எழுத்துக்கள் வாசகரின் கையில் தவழ்ந்து கண்ணில் பதிவது. அது முள்ளாய் இருப்பதை நான் எப்போதும் விரும்புவதில்லை மாறாக, சந்தோசம் தரும் ஒரு மலராக இருப்பதையே விரும்புகிறேன்.........

மீண்டும் சந்திப்போம் அடுத்த...ஹாய் பகுதியில்......


அப்போ வர்ர்ர்ர்ர்ர்ட்ட்டா.....!


தேவா. S

Thursday, December 16, 2010

புகை...!ஒரு மழை நாளில்
உதட்டில் பொருத்திய
முதல் சிகரெட்டோடு
உள்ளே பரவிய நிக்கோடின்
துகள்கள் மூளையின் செல்களை
கலைத்துப் போட்டிருந்தன...!

பற்றியிழுக்கையில்
பரவசமாய் உள்ளே சென்ற
புகையினூடே உண்டான
முதல் பரவசத்தில்...
முரண்கள் பட்டுப் போயிருந்தன!

உள்ளே பரவி சூடான
நினைவுகளை தெளித்து விட்டு
வெளியே பெய்த மழையை
வேடிக்கையாய் பார்த்து
சிரித்தது வெள்ளை சிகரெட்...!

அழுந்த புகைத்தேனா
இல்லை ஆழமாய் சுகித்தேனா
என்றறியாமல் தடுமாறிய...
வேளையில் எங்கிருந்து...
எட்டிப் பார்த்தது உன் நினைவுகள்..?

உள்ளிழுத்து வெளிவிட்டு
வெளிவிட்டு உள்ளிழுத்து
மொத்தாமாய் செத்துப் போயிருந்த
நிக்கோடின் குச்சியின்....
மிச்சத்தில் புகைத்தலின்றி
மிகைத்து கிடந்த உன் நினைவுகளுடன்
தனித்து கிடந்த என்னை
வேடிக்கையாய் கேலி செய்து
சிரித்தது.. வெளியே பெய்த மழை...!


தேவா. S

Wednesday, December 15, 2010

கோணம்...!சுற்றி எழுந்த சப்தங்களும் அடுப்பங்கறையில் இருந்து வந்த காபியின் வாசனையும்....திண்ணையில் பேப்பர் கசங்கலில் ஏற்பட்ட காகித சப்தங்களில் அப்பா நியூஸ் பேப்பர் வாசிக்கிறார் என்ற எதார்த்தமும், பக்கத்து வீட்டுக் கறவை 'ம்மாமாமமம...' என்று கத்தியதில் விடிந்தே விட்டது என்றும் தெரிந்து கொண்டான் மகேஷ். இன்றைக்குக் கடை சிக்கிரமே திறக்க வேண்டும் பக்கத்து மண்டபத்தில் கல்யாணம். நிறைய பேர்கள் வருவார்கள் போன் செய்ய....மனதுக்குள் கணக்கு போட்டபடி.... எழுந்த மகேஷ்....

கணக்குகள் போட்டபடியே அடி எடுத்து வைத்தான்.... வீட்டின் அளவுகள் அவனுக்கு அத்துபடி... அவன் படுக்கையில் இருந்து நேரே எழுந்து 5 அடிகள் எடுத்து வைத்து.. இடது புறம் திரும்பி நேரே போனால் சமையலறை..இப்போது காலை உணவின் வாசனை அவன் மூக்கை துளைத்தது...

சமையலறை கடக்கையில் அம்மாவின் வளையல் சப்தம் துல்லியமாக கேட்டது பாத்திரங்கள் கழுவி எடுத்து வைக்கும் வேகத்திலேயே தெரிந்து விடும் அது அம்மாதான் என்று ...பற்றாக்குறைக்கு மஞ்சள் தேய்த்துக் குளித்து ஒரு வித மணம் வீசும்.....அவள் உடுத்தியிருக்கும் சேலையிலிருந்து வரும் வாசமும்... ஆதரவான குரலும்.. எப்போதும் ஒரு இனம் புரியாத சந்தோசத்தைக் கொடுக்கும் அவனுக்கு...'மகேஷ் குளிச்சுட்டு சாப்பிட வாப்பா' இன்னிக்குக் கடை தொறக்க சீக்கிரமா போறேன்னு சொன்னியே...ஆமாம் அம்மா இதோ வர்றேன்னு சொல்லிக் கொண்டே.. இன்னும் ஒரு 5 அடியில் அவனுக்கு எட்டியது குளியலறை.

ஒவ்வொரு முறை தண்ணீரை எடுத்து தலையில் ஊற்றும் போதும் சிலிர்ப்பாய் நீர் உடலோடு ஓடி.... உடல் மட்டும் நனைக்காமல் மனசும் நனைத்து... ........

சாப்பாட்டை முடித்துவிட்டு அவசர அவசரமாய் கிளம்பிய மகேஷ்.. கைகளால் தலையை சரி செய்து கொண்டு.. முகத்துக்குக் கொஞ்சம் பாண்ட்ஸ் பெளடர்....எல்லாம் தானாகவே செய்வான் கண்ணாடி அவனுக்கும் அவனுக்குக் கண்ணாடியும் சிறு வயதில் இருந்து அவசியமில்லாமல் போய்விட்டது... வெளியில் காய் விற்கும் முனுசாமியின் கூவலில் மணி 7:20 ஆகிவிட்டது என்று உணர்ந்தான்.. தன்னுடைய ஜோல்னா பை இருக்கும் பையை எடுத்து தோளில் மாட்டிக் கொண்டு... மறக்காமல் தன்னுடைய கூலிங் கிளாஸ் எடுத்து பாக்கெட்டில் வைத்தவன் என்ன நினைத்தானோ தெரியவில்லை சட்டென்று நேரே மாட்டிக் கொண்டான்.

ஹாலில் இருந்து திண்ணைக்கு வந்தவன் இடது புறம் திரும்பி.. தான் அமரும் அந்த நாற்காலியை சினேகமாய்த் தடவிப் பார்த்தான்.. பின் அதில் அமர்ந்து பக்கத்திலிருந்த செருப்புகளைக் காலுக்குக் கொடுத்து.. அம்மா வர்றேன்மா என்று சொன்ன மாத்திரத்தில் ஏதோ பொறி தட்ட.. அடாடா அதை எடுக்க வில்லையே... என்று எண்ணியவன்.. திண்ணையின் மூலையில் இருந்த அதை எடுத்துக் கொண்டு.. தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தான்...

தம்பி தங்கைகள் எல்லாம் பள்ளிக்குக் கிளம்பிக் கொண்டு இருந்ததை உணர்ந்த அவன் அவர்களை விட்டு எப்போதும் விலகியே இருப்பான். அவர்களும் மகேஷிடம் அதிகம் பேசுவதில்லை. என்ன ஒன்று இவனுக்குத் தேவையானது அவர்களிடம் இல்லை. மகேசுக்கு எது தேவை என்று அவனுக்கே தெரியாது. வாசல் கடக்கும் போது மட்டும் அப்பாவிடம் சொல்லுங்கம்மா என்று சொல்லி விட்டு ஒரு வித நிதானத்தோடு தெருவில் நடந்தான்... ம்ம்ம் ஒவ்வொரு வீடாய் கடந்து கொண்டிருந்தான்.....

பாட்டு எப்போதும் அலறும் இது குமார் வீடு... வாசலில் எப்போதும் சாணம் தெளித்து இருக்கும் இது முருகேஷ் வீடு.. மெல்ல நடந்து கொண்டிருந்தான்.. வழியில் யாரோ இருவர் பேசிக் கொண்டே இவன் கூடவே நடந்து வந்தார்கள்...

" நேத்துதானப்பா நடந்திருக்கு பட்டப் பகல்ல போட்டு வெட்டியிருக்கான். ரோட்ல சுத்தி எல்லோரும் பாத்துட்டுதன இருந்து இருக்காங்க....துடி துடிச்சு செத்து போயிருக்கானப்பா" ஒருவர் இன்னொருவரிடம் சொல்ல அது தானகவே மகேஷின் காதுகளை வந்து சேர்ந்தது. ' ஆமாம் அநியாயம் பெருத்து போச்சு ' என்ன பண்ன சொல்றீங்க மற்றொருவர் இவரிடம் சொல்ல..

மகேஷ் யோசிக்க ஆரம்பித்தான்....ஒருவரை இன்னொருவர் கொல்வது எப்படி? அதை எப்படி பார்த்துக் கொண்டு இருப்பது..அவனின் மூளையில் ஏறவில்லை அல்லது அது பற்றி கற்பனை இல்லை...மெளனமாய் தன்னுள் இருந்த ஆழமான ஒரு விசயத்திற்குள் விழுந்த மகேஷ்.. நடந்து கொண்டே இருந்தான்....திடீரென ஏதேதோ சப்தங்கள்....கூச்சல்.......குழந்தையின் அலறல் சப்தம்...யாரோ ஒரு அம்மாவின் கதறல்..." அய்யோ இப்டி கண்ணு மண்ணு தெரியாம வண்டிய வேகமா ஓட்டிட்டு வந்து ஸ்கூலுக்குப் போன புள்ள மேல ஏத்திட்டானே....."

கதறலையும் யார் யாரோ வண்டியை ஓட்டி வந்தவரை வசை பாடுவதையும் கேட்டுக் கொண்டே கடந்தவனின் காலில் சரளைகளின் சப்தமும் பக்கத்தில் இருந்த ஒரு வெல்டிங் ஒர்க் சாப்பின் வேலை செய்யும் சப்தமும் கேட்க அவை கடக்கும் போதே ஒரு துர்நாற்றம் கொண்ட சாக்கடையின் மணம் மூக்கைத் துளைக்க மூக்கைப் பிடித்துக் கொண்டு...

இடது பக்கம் திரும்ப.. 10 அடி தூரத்தில் காக்கைகள் கரையும் சப்தம் கேட்டது.. ஆமாம் அரசமரமும் அங்கே இருக்கும் கோவிலும் ஒருவித எண்ணெய் வாசனைகளுடன் இவனுக்குள் வரும்..உள்ளே இருக்கும் சாமி பற்றியெல்லாம் மகேஷுக்கு கவலை இல்லை....ஏதோ ஒன்று நம்மை எல்லாம் படைத்து இருக்கிறதா என்ற கவலையும் இல்லை.. அவனுக்கு கடவுளும் மனிதர்களும், தானும் இன்னபிற விசயங்களும் ஒன்றுதான்...

உணர்ந்தால் இருக்கு என்று சொல்வான்..அதுவும் அவன் உணர்ந்த மாதிரிதான் சொல்வான்.. இவன் கற்பனைகளுக்கு அதிக வேலை கொடுக்கவே மாட்டான்...கொடுக்கவும் தெரியாது... கற்பனைகள் விவரித்து விவரித்துப் பார்ப்பது ஒரு போதையை மட்டும் கொடுக்கும். ஆனால் உண்மை அதற்கு முற்றிலும் மாறுபட்டது என்பது நிதர்சனமான உண்மை ஆனால் அவன் பிறவியிலேயே அப்படி நினைக்கப் பெறும் அதிர்ஷ்டசாலியாக இருந்தான்

மகேஷுக்கு ஆச்ச்ரயமான விசயம் என்னவென்றால் மனிதர்களின் அலட்சியமும், தன் பொறுப்பை உணராமல் நடக்கும் விதமும்தான்...! கோவிலைத் தாண்டி போகும் போது கிசு கிசுப்பாய் யாரோ மரத்துக்கு அந்தப் பக்கம் பேசுவது கேட்டது.. யாரோ ஒரு ஆணும் பெண்ணும் அத்துமீறிக் கொண்டிருந்தது சிணுங்கலாய் கேட்டது.. கவனியாமல்.. அந்த காலை வேளையின் முக்கித்துவம் கொடுத்த வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தான் மகேஷ்....

மகேஷின் உலகத்தில் குழப்பங்கள் இல்லை...ஆனால் சுற்றி நடக்கும் விசயங்கள் பற்றி ஒரு வித கூர்மையான அகப்பார்வை கொண்டவன்....! கார்களின் சப்தமும் வாகனங்களின் ஹார்னகளும் மனிதர்களின் நெரிசல்களும் உணர்ந்தன மகேஷ். ஆமாம் அவன் மெயின் ரோட்டுக்கு வந்து விட்டான் எப்போதும் அவன் சரியாக வந்து ஏறும் அந்த சாலையில் இடது புறம் ஒரு 20 அடிகள் நடந்து நேரே ரோடு கிராஸ் செய்து போனால்... அவனின் கடை.....! மகேஷ் காத்திருந்தான்...கையிலிருந்த அதை எடுத்து மெல்ல தட்டிக் கொண்டே .............
.............
.............
.............
.............


'கொஞ்சம் ஹெல்ப் பண்றீங்களா .... ப்ளீஸ் ரோடு கிராஸ் பண்ணனும்... ப்ளீஸ் '

மகேசை யாரும் கண்டு கொள்வதாய் தெரியவில்லை...மீண்டும் மீண்டும்.. தன் கையில் இருந்த தடியில் இருந்த மணியை அழுத்தித் தட்டிக் கூப்பிட....

யாரோ ஒருவர் அவன் அருகில் வந்து 'வா தம்பி நான் க்ராஸ் பண்ண போறேன் உன்னை கொண்டு போய் அங்க விட்டுடுறேன் ' என்று சொல்லவும் ... சொன்னவரின் கரத்தை அன்போடு பற்றி.. நன்றிங்க சார் என்றான் மகேஷ்....

மகேஷ் சாலை கடந்து கொண்டிருந்தான்.. விழிகளில் ஒளியற்று போயிருந்தாலும் அவன் மனதில் ஒளி இருந்தது..! இல்லாத ஒரு அவயம் பற்றி அவனுக்குக் கவலையில்லை.. ஆனால் இருக்கும் அந்த அவயத்தின் பயன்பாடு மனிதர்கள் எப்போதும் அறிந்ததில்லை. மனிதர்களின் பார்வைகள் எல்லாமது இருப்பதாலேயே..அத்து மீறல்கள் செய்யப் படுகிறது... அகங்காரம் கொள்கிறது...கண்டும் காணாமல் செல்கிறது.....!

பயன்பாடுகள்..இருக்கும் போது யாராலும் அறியபடுவதில்லை.... ஆனால் இல்லாதவர்களுக்கு சராசரி மனிதர்களின் செயல்பாடுகள் எல்லாம் ஆச்சர்யம்தான்....!

இன்னும் சொல்லப் போனால் பார்வை என்ற புலன்களின் மயக்கத்தில் கண்ணால் கண்டுவிட்டு ஆராயாமல் கற்பனைகள் கொள்ளும் மனிதர்களுக்கு மத்தியில் விசயங்களை உணர்ந்து கேட்டு தெளிந்து சத்தியத்தைக் கைக்கொள்ளும் இவர்கள் பார்வை என்ற புலன் இருப்பவர்களோடு..எல்லா வகையிலும் மேம்பட்டவர்கள்தான். உண்மையில் கண்ணிருந்தும் குருடராய் இருக்கும் மனிதர்கள் சில நேரம் காட்சிகளை மறந்து விட்டு.. உணர்வு பூர்வமான குருடர்களாக இருப்பது எவ்வளவோ மேன்மையானது.....

அன்றைய தினத்தின் நிகழ்வுகளைத் தன்னுள்ளே தேக்கி வைத்த மகேஷின் சிறிய டெலிபோன் பூத் அவனுக்காகக் காத்திருந்தது......


தேவா. S

Tuesday, December 14, 2010

அதுவா....?
ஒரு முறை என்னைப் பார்
என்னை உன் விழிகளால் விழுங்கு
மெளனத்தால் அரவணை
காதுகளுக்குள் கிசு கிசுப்பாய்
காதல் மொழி பேசு...
சில முத்தங்கள் மூலம் எனக்குள்
காதலை பரவ விடு...
சப்தமில்லாமல் சிரி...
உனகானவன் நான் தான்
என்ற உரிமையில்..என்னை
முழுதுமாய் உடைத்துப் போடு!

பற்றிப் பரவும் கொடியின்
காதலில் லயித்துக் கிடக்கும்
ஒரு மரம் போல ...
உன் மொத்தக் காதலும்
என்னை மூர்ச்சையாக்கிப் போனதில்
உணர்வுகளின் சங்கமித்தில்
இசைக்கும் கீதம்... என் உயிரின்
மூலம் தொட்டு தடவுகிறது....!

என் பெயர் சொல்லி
ஓராயிரம் முறை அழைத்து
உன் காதலை என் மீது தெளிக்கிறாய்..
நானோ பார்வைகள் தொலைத்து
சப்தங்கள் இழந்து...சுவாசத்தினூடே
உன் நினைவுகளை என்னுள் பரவவிட்டு
மழை வாங்கும் நிலமாய்...
மெளனித்துக் கிடக்கிறேன்..!

காமத்தின் வேர்கள் அறுக்கப்பட்டதில்
கிளைந்தெழுந்த விருட்சமாய்
வெகுண்டெழுந்த அவதாரமாய்
சுற்றுச் சூழல் மறந்து விசுவரூபத்தில்
வியாபித்து நிற்கிறதே.. ஒன்று....
அதுதானே உன் விழிகளால்
என் விழிகளுக்குள் நீ விதைத்துப் போட்ட
பிரமாண்டக் காதல்..?


தேவா. S

Monday, December 13, 2010

தேடல்....13.12.2010!
சில நாட்களாக ஆழமாக மனதிலே ஓடிக் கொண்டிருக்கும் விசயம் படைப்பு. எது படைப்பு? யார் படைக்கிறார். எல்லா துறைகளும் பயனாளர்கள் உண்டு நுட்ப அறிவியலார் உண்டு....ஆராய்ச்சி செய்து கண்டு பிடிக்கும் பொது அறிவியலார் உண்டு. ஒரு விசயத்தை உள்வாங்கி தாக்கத்தை வெளிப்படித்தும் உணர்வியலாரும் உண்டு.. ஆனால்....

எங்கே ஒளிந்திருக்கிறான் ஒரு படைப்பாளி?

நம்மைச் சுற்றி நிகழும் ஓராயிரம் விசயங்களை கிரகித்து எழுதிவிடலாம்...அரசியல், கலை, கல்வி, சமகால சமூக அவலங்கள்.... இன்னும் எவ்வளவோ ஆனால் ஒரு படைப்பு என்பது முற்றிலும் இதற்கு முன் இருந்தவைகளோடு ஒத்துப் போகாததாகவும் புதுமையான உணர்வுகளைக் கொடுப்பதாகவும் இருக்கிறது. படைப்புகள் எல்லாமே பழக்கப்பட்ட புலன் அறிவுகளுக்கு எப்போதும் எதிராகவே அல்லது புரிந்து கொள்ளப்படுவதற்கு ஏதுவாகவோ இருப்பது இல்லை.

முதன் முதலாய் மூளைக்குள் ஏறும் எந்த செய்தியும் நமக்குப் பிடிபடுவதில்லை. அது... விளங்கிப் புரிந்து கொள்ளவேண்டியதாகவே இருக்கிறது. பார்க்காத ஒன்றை கேட்காத ஒன்றை விளங்குவதில் அல்லது விளக்குவதில் சிக்கல் ஏற்பட்டு போகிறது. இந்த சிக்கலில் பெரும்பாலும் மாட்டிக் கொண்டு தவிப்பது கடவுள் என்ற பதம். இங்கே சொல்லப்படும் கடவுள்கள் எல்லாம் பகுத்தறிவுகளாலும் பல்வேறு சித்தாந்தங்களாலும் பந்தாடப்பட்டுக் கொண்டுதானிருக்கின்றன். அப்படிப் பந்தாடப்படுவதற்கு காரணமும் இருக்கிறது....

கடவுள் என்று இல்லை, உணர்வு பூர்வமான எந்த விசயமும் எழுத்திலோ, உருவத்திலோ கொண்டு வர முயற்சி செய்வது கத்தி மேல் நடக்கும் ஒரு செயலைப் போன்றது. கடவுளை காட்டு அல்லது தெளிவு படுத்து என்று சொல்லும் எவராலும் காமத்தின் உச்சத்தையோ அல்லது அல்லது பசி எப்படி இருக்கும் என்றோ இன்னபிற வேறு தனிப்பட்ட உணர்வு சம்பந்தப்பட்ட விசயங்களையோ வரையறை செய்யவே முடியாது.

வேண்டுமென்றால் அது இப்படி இருக்கும் அப்படி இருக்கும் என்று உவமைதான் கொடுக்க முடியுமே அன்றி பசி என்பதின் உருவத்தையும் அதை ஒருவன் எப்படி உணர்ந்தான் என்பதையும் படமாய் எழுத்தாய் சொல்ல முடியாது. இப்போது பசி என்று உங்களுக்கு சொல்லப்படும் போது மிகைப்பட்ட பேர்கள் அதை உணர்ந்து இருப்பதால் அதை ஓ..... இது மாதிரி இந்த நேரத்தில் வயிற்றில் அமிலம் சுரப்பதால் ஏற்படும் நிகழ்வா என்று உணர்கிறீர்கள்.

ஆனால் கடவுள் என்ற பதம் மூளைக்கு எட்டப்படாததாகவே எப்போதும் இருக்கிறது....! அதை உணர்ந்தவர் அதை உணர்ந்தவரிடம் அப்படியாகத்தானே இருந்தது கடவுள் அனுபவம் என்று கேட்டால் அவரும் அப்படியாகத்தான் இருந்தது என்று சொன்னால் இது புரியாத அல்லது உணராத மூன்றாமவருக்கு அவர்கள் இருவரும் பைத்தியக்காரர்கள் பொய்யர்கள் என்றாகிப் போவார்கள் சரிதானே...?

மதவாதிகள் செய்த பெரும் தவறு இது. நெறிப்படுத்த வேண்டுமானால் இவர்கள் மனிதர்களுக்கு நெறிமுறைகளை வகுத்தளித்ததோடு நின்றிருக்கலாம் மாறாக அதை மனிதர்கள் பின்பற்ற வேண்டுமென்று இவர்களை எல்லாம் கடவுள் பெயரைச் சொல்லி பயமுறுத்தி வைத்தது மகா அயோக்கியத்தனம். இப்படி பயமுறுத்தும் பொருளாகவே கடவுள் இருந்து விட்டதால்.. அதை மனிதன் ஆராய்ந்து கேள்விகள் கேட்டு அந்த பொய்யை உடைத்துக் கொண்டும் உடைப்பதிலேயும் மும்முரமாயிருக்கிறான்.

இது ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் கற்பனை கடவுளர்களுக்கு ஒராயிரம் வணக்கங்கள் செய்ய பெரும் கூட்டமும் இருக்கிறது. வணக்கங்கள் செய்வது கூட அனுமதித்து விட்டுப் போகலாம் ஆனால் அந்த வணக்கத்தின் பேரால் மதம், தனித்தனி கடவுள், சாதி, மதம், பூஜை, பரிகாரம், சாமியார், மந்திரவாதி என்று அபத்தமாய் போய்க் கொண்டிருக்கிறான் பக்திமார்ககத்தில் உள்ள மனிதன்..........!

இதனால் யாருக்கு சுமையோ இல்லையோ.......ஆனால் பவித்ரமான பரிசுத்த சத்திய இறை என்னும் பொருளற்ற பொருள், அன்பு ரூபம் எல்லாமான பெருஞ்சக்தி மிகச்சிலராலேயெ கண்டு கொள்ளப்பட்டு விளக்கங்கள் கொடுக்க இயலாமல் இரகசியமாய் போய்விட்டது.

இயல்புகள் எல்லாம் வழமையில் இல்லாமல் போனதால் இயல்பாய் இருக்கும் மனிதர்கள் அதியசமாய்த்தான் பார்க்கப்படுகிறார்கள். என்னைக் கேட்டார் ஒரு நண்பர்......கடவுளை எப்படி உணர்வது...இவ்வளவு பேசுகிறாயே.. என்னிடம் எடுத்து உணர வைக்க முடியுமா? என்று பொட்டில் அடித்தது போல கேட்ட நண்பர்.....பல புத்கங்களைப் படித்தவர் அறிவியல் அறிவில் கில்லாடி, நவீன செய்திகளால் தன்னை நிறைத்து வைத்திருக்கும் ஒரு மிகப்பெரிய அறிவாளி, சித்தாந்தகளை எல்லாம் கரைத்துக் குடித்த சிந்தனைவாதி........நான் ஒரு சிறு குழந்தைதான் அவரின் அறிவுக்கு முன்னால்............

இந்த கேள்விக்கு எப்படி பதில்சொல்வது என்று யோசிக்கமல் நான் சொன்னேன் கண்டிப்பாய் முடியும் அண்ணா என்று சொல்லிவிட்டு ஆனால் என்னிடமிருந்து வரும் ஒரே ஒரு நிபந்தனையை நீங்கள் ஏற்கவேண்டுமென்று ஒரு வேண்டுகோளையும் வைத்தேன். கடவுளை உணரவைக்க முடியுமென்று சொன்னதை கேட்ட அவர் சிலிர்த்து எழுந்து அவரின் மூளையை உலுக்கிவிட்டு.. என்னைப் பார்த்து கேட்டார்..என்ன ? என்ன? உன் நிபந்தனை என்று சற்று கோபமாகவே கேட்டார்.

இந்த இடத்தில் ஒரு விசயத்தை இடைச்சொருகலாய் சொல்லிவிடுகிறேன்......

றிவாளிகள் எப்போதும் கோபம் கொள்கிறார்கள் ஏனென்றால் அவர்கள் அறிந்து வைத்திருப்பது அவர்களுக்கு பொக்கிஷம் என்று நினைக்கிறார்கள் அதனாலேயே ஒரு கோபமும் எனக்கு கீழ்தான் நீ என்ற மமதையும் வந்து விடுகிறது. ஆனால் புத்திசாலிகள் அமைதியாயிருக்கிறார்கள் ஏனென்றால் அவர்களுக்குத் தெரியும் கற்றதெல்லாம் குப்பை என்று.... சரி இப்போது சூழ் நிலைக்குள் மீண்டும் வாருங்கள்.........

என்னை கடவுளை உணரவை அவர் அதட்டினார்.........! நான் பொறுமையாக சொன்னேன் அண்ணா.. முதலில் என் வேண்டுகோள்....என்னவென்றால்........நீங்கள் கற்றறிந்த எல்லாம் இந்த கணமே மறந்து விடுங்கள். என்னிடம் எந்த சித்தாந்தமோ வாதமோ உதாரணமோ காட்டக் கூடாது. அதாவது உங்கள் தலையில் இருக்கும் லைப்ரரியை ஒன்று எரித்து விடுங்கள் இல்லை உங்களை விட்டு தூர வைத்துவிட்டு வாருங்கள் என்று சொன்னேன்...........!

வர் திடுக்கிட்டார்.......ஆனால் அதுதான் உண்மை... பல கருத்துக்களோடு இருப்பவருக்கு எப்படி உணரவைப்பது? நீங்கள் நீங்களாய் இருந்தால் அந்த நொடியில் கடவுள் உங்களுக்குள் பிரசன்னமாவதை யாரலும் தடுக்க முடியாது. கடவுள் எங்கோ இல்லை..உங்கள் தத்துவங்களும் கருத்துக்களும் மதமும், கோட்பாடுகளும் அவரை அழுத்திப் பிடித்து கீழே வைத்திருக்கின்றன. அவற்றை எல்லாம் தள்ளிவிட்ட பிறகு மிச்சமிருப்பது எதுவோ அதுவே கடவுள். இதை ஆன்மீகத்தில் நேதி.. நேதி நேதி என்று சொல்வார்கள். இதுவல்ல, அதுவல்ல. அதுவுமில்ல என்று எல்லாம் புறம் தள்ளி மிச்சமிருப்பதுதான் கடவுள்.

ஒரு புதிய எழுத்தை படைப்பவனும், ஓவியம் வரைபவனும், சினிமா எடுப்பவனும், புதிதாய் செய்யும் எல்லா அறிவும் நேரிடையாக அவனது கற்பனையில் இருந்து வருகிறது. கற்பனையின் மூலம் சூட்சுமம், சூட்சுமத்தின் மூலம் ஆதி, ஆதியின் மூலம் அனாதி ஆனாதியின் பெயர்...........கடவுள்.

இப்போ சொல்லுங்க ….படைப்பாளி என்பவன் மதிக்கப்பட வேண்டியவனா இல்லையா...?

அதிகம் பேசி விட்டேன். வாசித்து விட்டு.........இதையும் மறந்து விட்டு மெளனியுங்கள்...உங்களிடமும் கடவுள் பிரசன்னமாவார் என்பது நிதர்சனம்.!

அப்போ வர்ர்ர்ர்ர்ர்ர்ர்ட்ட்ட்டா!


தேவா. S

Friday, December 10, 2010

இரவு...!
இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை.

ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய்.

எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது.

இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்து சொந்தங்களாய்... கண் சிமிட்டி அழைக்கும். பெரும்பாலும் சூரியன் தொலைத்த பூமி...உஷ்ணத்தை விழுங்கி விட்டு..சிலிர்ப்பாய் குளிர் சிரிப்பு சிரிக்கும். ஏதேதோ மெல்லிய சப்தங்களையும் துல்லியமாய் கொண்டு வந்து காது சேர்க்கும்.

ஆமாம் இரவு தன்னிடம் தேக்கி வைத்திருப்பது....பிரபஞ்சத்தின் மூலத்தை. உறக்கம் கலைத்து அல்லது கலைந்து வெறுமையாய் இருக்கும் ஒரு கணம்...அந்த கணம் எப்போது நிகழும் என்று என்னால் வரையறுத்துக் கொடுக்க இயலாது...ஆனால் எதிர்பார்ப்புகள் தொலைத்த ஒரு அற்புத கணத்தில் ஆச்சர்யமாய் தனது இருப்பினை நம்மீது போர்த்தி கண் சிமிட்டி....நலமா என்று நலம் விசாரிக்கும் அற்புத இரவு.

பெரும்பாலும் இரவுகள் இங்கே அலைக்கழிக்கப்படுகின்றன...அல்லது அயற்சியில் உறங்கி விழுங்கப்படுகின்றன. காமத்துக்கும், கனவுக்குமே பயன் பட்டு பயன் பட்டு மழுங்கிப் போய் கிடக்கிறது இரவு எல்லோரின் மனதிலும். வாரத்தில் ஒரு நாள்... வேண்டாம்....மாதத்தில் ஒரு நாள் தனியாய் எதிர் கொள்ளுங்கள் இரவை....காதலோடு...

துணை வேண்டாம்; இசை வேண்டாம்; வாசிக்க புத்தகமும் வேண்டாம்....சுற்றியுள்ள சூழலும் நீங்களும்.அவ்வளவே.....! அன்றைய தினத்தின் அயற்சிகள் எல்லாம் அழுக்குகளாய் நகர்ந்து போக உலகத்தின் மிகைகள் உறங்கி கொண்டிருக்க நீங்கள் விழித்திருங்கள்.....இரவை நீங்கள் நடத்துங்கள்...அப்படி நடத்த இரவோடு இரவாக கலந்து போகுங்கள்....

சப்தங்கள் கழிந்து
ஒரு மோன நிலையில்
எப்போதும் ஆழ்த்தும் இரவு....
மனச்சிறகுகள் விரிய விரிய
தடைகளின்றி நீள்கிறது
என் வானம்..!

ஆமாம்.. இரவு எப்போதும் கவனங்களைச் சிதறவிடுவதே இல்லை...முன்பே சொன்னது போல தாயின் கருவறைக்குள் அசைவுளற்று விழித்திருக்கும் குழந்தையாய்..காத்திருக்கும் பொழுது சட்டென்று மூளைக்குள் இறைத்துப் போடுகிறது இரவு..ஓராயிரம் கவிதைகளை...! யாருமே இல்லாமல் வெறுமனே காதல் உணர்வினை புட்டியில் வைத்து ஊட்டும் பால் போல புகட்டுகிறது அந்த ஆழ்ந்த கருமை....

உன் உதடுகள்
உச்சரிக்கின்றனவா?
இல்லை என்னை...
காதல் செய் என்று
எச்சரிக்கின்றனவா?

பளீச்சென்று வந்து விழுந்த வார்த்தைகளுக்குப் பின்னால் எந்த உருவமும் இல்லை ஆனால் ஒரு மேலோங்கிய உணர்வை எனக்குள் ஊற்றியதின் பின்னணியில் இருந்தது...ஆழமான இரவு..... ! உருவமற்ற இறை என்ற ஆன்மீக உச்சத்தின் சாயலன்றி இது வேறு என்ன?

பல நேரங்களில்...
பார்வைகளிலேயே
சொல்லி விடுகிறாள்..
தீர்வுகளை...!
வாசிக்க முடியாமல்
அவள் விழிகளுக்குள்ளேயே
மீண்டும் மீண்டும்
வழுக்கி விழுகிறேன்...!

நிசப்தத்திலிருந்து நீண்டு வந்த வார்த்தைகளில் பொருளில்லை ஆனால் உணர்விலிருந்து...! அந்தக்கணத்தில் லயித்துக் கிடக்க எண்ணங்கள் அலைமோதும் மனிதர்கள் இல்லை.. என் எண்ணங்கள் எல்லாம்...அழிந்து ஒழிந்தும் போயிருந்தது..!

ஒரு ஓவியம்..தன்னைத்தானே
சரி செய்து கொள்ளுமா...
ஆமாம் நீ கூந்தல்
ஒதுக்கினாயே... சற்று முன்னால்...

எங்கேயோ வெறித்துக் கொண்டிருந்த போது சட்டென்று வந்து விழுந்து என்னை மிரட்டிவிட்டு ஓரமாய் ஒளிந்து நின்று என்னைப்பார்த்து புன்னகை செய்த வரிகளை அனுபவிக்க ஆனந்த இரவு அட்டகாசமாய் உதவியது.

உன் வார்த்தைள் எல்லாம்
என் கவனத்தில்
சேர்வதற்கு பதிலாக
என் நினைவுகளை
அல்லவா அழிக்கிறது!

வார்த்தைகளாய் ஏதோ ஒன்று சொல்கிறாள் காதலி...அல்ல அல்ல வார்த்தையை மாற்றுங்கள் இங்கே.. ஏதோ ஒன்று சொன்னது காதல் அந்த வார்த்தைகள் நினைவுக்குள் போய் சேர்ந்து ஏதோ புரிய வைப்பதற்கு பதிலாக.. ஏற்கனவே நினைவுப்பகுதிகளை...எல்லாம அடித்து துவம்சம் செய்து..ஒன்றுமில்லாமல் செய்கிறது...........

நான் மெல்ல சிரித்து..என்ன என்பதுபோல இரவினைப் பார்க்க..அது ஏதேதோ சொல்லும் என்று நினைத்த எனக்கு மீண்டும் அடர்த்தியான மெளனம் கிடைத்தது....! ஆமாம் மனிதர்கள் உறக்கத்தில் நல்ல கனவுகளுக்காக போராடிக் கொண்டிருப்பார்கள் எனக்கு..விழிப்பு நிலையில் கனவுகளை எல்லாம் அற்புதமாய் கொட்டியிறைத்துக் கொண்டிருந்தது இரவு...

உறக்கமற்ற
கடந்து போன இரவின்
நீட்சியில் நகர்ந்தது
இன்றைய பகல் முழுதும்...

தொடர்ந்த திருப்தியான..
நிமிடங்கள் கொடுத்த
திருப்தியில் மறந்தே
போனது உலகமும்; உறக்கமும்;

மிச்சமிருந்த
வார்த்தைகள் எல்லாம்
பிடிவாதம் பிடித்துக்
கொண்டிருக்கின்றன...
மீண்டும் இரவிடம் போய்
எங்களையும் கொட்டிவிடு...என்று...!

வாழ்வின் பக்கங்களுக்கு ஒளி எவ்வளவு முக்கியமோ அத்தனை சமமாக இருளும் முக்கியம்...இருளை விலக்காதீர்கள்...இரவை நொறுக்காதீர்கள்...அருமையான இரவுகளை அற்புதமாய் பருகுங்கள். பிரபஞ்சத்தின் நியதிகள் எல்லாம் அருமையானவை...அதை சிக்காலாக்கி கொள்வது மனிதன்...!

அற்புதமான உங்களின் ஆனந்த இரவு அனுபவத்திற்கு எனது வாழ்த்துக்கள்....!


அப்போ வர்ர்ர்ர்ர்ட்ட்ட்ட்ட்ட்டா...!


தேவா. S

Wednesday, December 8, 2010

சுயம்...!
திக்குகளற்ற வெளியில்
நினைவுகளற்ற சுகத்தில்
விரவிக்கிடக்கும் ஆசைகளை
கர்ண கொடூரமாய் தகர்க்கின்றன
நிகழ்கால முரண்பாடுகள்...!

உறவுக்குள் சிக்கியதில்
பாசங்கள் என்ற பாசாங்கு
விளங்கியதின் பின்னணியில்
பறந்து குவியும் காகிதங்களின்
பெயர்கள் பணமென்றறிந்தேன்...!

சத்தியங்கள் பொசுக்கப்படும்
ஒரு உலகத்தில்..
தர்மங்களின் நாயகனாய்
என்னை வரித்துக் கொண்டதில்
காயங்களுக்குள் அகப்பட்டு
ஆழ்ந்து கிடக்கிறது என் ஆன்மா!

எப்போதும் மேய்ப்பது போல
இன்றும் மேய்த்து மேய்த்து
களைத்துப் போயிருக்கிறேன்..
அடங்கா மனமென்னும்...
மாயப் பிசாசை..!

அடங்கும் பொழுதுகளில்
ஆர்ப்பரிக்கும் மனிதக் கூட்டம்
ஆழ்ந்துறங்கும் அர்த்த ராத்திரிகளில்
சுடலையில் அமர்ந்த சிவனாய்...
என்னை எரிக்கும் நித்திரைகள்
எரித்து...எங்கோ ஒரு ஏகாந்தத்தில்
இல்லாமல் இருக்கிறேன் நான்...!


தேவா. S

Tuesday, December 7, 2010

படம்...!
படம் பார்க்கும் ஆர்வம் எல்லோருக்குமே இருக்கும்...சரி ட்ரெய்லரோட அவசியம் என்ன? ஒரு ஐடியா... என்ன செய்ய போறோம் எது பத்தி பேசப்போறோம்னு ஒரு பிரிவியூ அவ்ளோதான்...!

கலாச்சாரம் (அப்பாடா....... தமிழ்ல எழுதியாச்சு..) பற்றி மொத்தமாக பேசுகிறோமா.. ? கலாச்சார குழப்பங்களைச் சாடுகிறோமா? இல்லை.. அதன் ஒரு பகுதியான வாழ்வியல் நெறிகளைப் பற்றி பேசுகிறோமா? என்ற ஒரு தெளிவின்றி தோட்டாக்கள் எம்மவர் மீது பாய்ந்துள்ளது முதற்கண் கண்டனத்துக்குள்ளாகிறது.

மேலும் நமது சமுதாய குறைபாடுகளைச் சாடும் நம்மவர்களின் கண்கள் வேற்று சமுதாயத்தின் மீதும் ஆழமாக பதிந்திருக்கிறதா என்ற கேள்வியையும் பொதுவில் வைக்கிறேன். ஆழமாக என்ற பதத்தை யாம் உபயோகம் கொள்வதற்கு பின்னால் ஆழ்ந்த பொருள் உள்ளது எம் தோழர்காள்......

குறைபாடுகள் இல்லாத மனிதனோ, சமுதாயமோ, நாடோ இருக்கவே முடியாது என்பது திண்ணமான ஒன்று என்று கருத்தில் கொள்ளும் அதே சமயத்தில்..எமது சமுதாயமும் அதற்கு விதிவிலக்கன்று என்ற பிரபஞ்ச உண்மையை ஏற்றுக் கொள்வதில் எமக்கு எந்த வருத்தமோ அல்லது குற்ற உணர்ச்சியோ கிடையாது.

நமக்குள் இருக்கும் குறைபாடுகள் அல்லது குறைபாடுகள் என்று நினைக்கப்படுபவை எல்லாம்….

“ ஆராய்ந்து சீரமைக்கப்படவேண்டியவையா? அல்லது எள்ளி நகையாடி அடுத்த தலைமுறைக்கு அச்சமூட்டப்பட வேண்டியவையா?

நமக்கு எது தேவை என்று உட்பொருளோடு கருத்துக்கள் வெளியிடுதல் சிறந்ததா? அல்லது....

நமது ஆக்ரோசத்தில் ஒட்டுமொத்தமாய் ஒரு சந்ததியினரை கிழித்தெறிவது சிறந்ததா? “

ஆண் பெண் சேர்ந்து வாழ்தல் மட்டுமல்ல கலாச்சாரம் என்பது..! நண்பர்களே.... தயவு செய்து அந்த கண்ணாடியைப் போட்டுக் கொண்டு எமது கலாச்சாரத்தை உற்று நோக்காதீர்கள்..அந்த கண்ணாடி உங்களின் தனிப்பட்ட கருத்துக்களையும் எடுத்துக் கொண்டு வந்து வேறு தளத்திற்கு பயணிக்க வைத்து விடும்.

மிக ஆழமாக இதனுள் பயணிக்கும் முன்பு ஒரு சம்பவத்தை சொல்லிக்காட்டுவது சாலச் சிறந்ததாக இருக்குமென நினைக்கிறேன்.

ஒரு விடுமுறை தினத்தில் அமீரகத்தில் இருக்கும் ஒரு பெரிய பூங்கா ஒன்றுக்கு நாங்கள் ஒரு 7 குடும்பங்கள் சென்றிருந்தோம். ஆண்களும் பெண்களும் நிரம்பியிருந்த அந்த பூங்காவில் கண்ட காட்சிகள் கொஞ்சம் சிந்திக்கத் தூண்டுவதாய் இருந்தது...

நாங்களனைவரும் இந்தியர்கள்...ஒரு பக்கம் பெண்கள் அமர்ந்து சிரித்துப் பேசிக் கொண்டிருக்க.. குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்க.. ஆண்கள் நாங்கள் அனைவரும் பார்பிக்யூ சிக்கன் சமைத்துக் கொண்டிருந்தோம்.

அவ்வப்போது பெண்களும் வந்து செல்ல...நாங்களும் அவர்களுடன் கலந்து பேசி சிரிக்க... ஒருவருக்கொருவர் இறுக்கமின்றி.. மிகத் தளர்வாக...ஒரு கட்டுக் கோப்புடன்.. அண்ணா... தம்பி , அக்கா என்று உறவுகள் சொல்லி கூப்பிட்டு வாழ்வில் நடந்த சுவாரஸ்யங்களை அளாவளாவி வந்தோம்......அங்கே சூழல் மையப்பட்டு இருந்தது....

எமக்கு பக்கத்தில் ஒரு பிலிப்பினோ கூட்டம்..அரை குறை ஆடைகளுடன்....ஆணும் பெண்ணும் தொட்டு விளையாடி.. சிரித்து அடித்து.. இன்னும் நம்ம ஊர் ஸ்டுடியோல இருப்பது போல ஸ்டான்டில் கேமரா வைத்து போட்டோ எடுப்பதும்.. அவர்கள் அடித்து இருந்த டெண்ட்-க்கு முன்னாலேயே பொது வெளியில் உடைகள் மாற்றுவதும்... உணவினை பங்கிட்டு.. உண்பதுமாக இருந்தனர்.. அங்கே...கேளிக்கை மையப்பட்டு உச்சகதியில் இருந்தது.

கோணத்தை மாற்றுங்கள்...இந்தப்பக்கம். .ஒரு சூடானி கூட்டம்...மொத்தமாக வந்தார்கள் உணவினை சமைத்தே கொண்டு வந்திருந்தார்கள்... வந்தவுடன்.. 20 பெண்கள் வட்டமாக ஒரு இடத்தில் அமர்ந்து இருந்தார்கள்... நடுவே உணவு.. இருந்தது...! அவர்களைச் சுற்றி அவர்களின் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருந்தனர்....! இவர்கள் அனைவரும் உடல் முழுதும் சுற்றிய கலர் கலரான ஆடை அணிந்து முக்காடிட்டு இருந்த பெண்கள்....சரியா....!

இவர்களின் கணவர்களும் மற்றும் பதின்ம வயதை அடைந்த பையன்களும் கொஞ்சம் தூரம் தள்ளி இவர்களோடு சம்பந்தப்படாமல்... சுற்றி வட்டமாய் அமர்ந்து கொண்டு சிரித்து பேசி உணவருந்திக் கொண்டிருந்தார்கள்....அங்கே ஒன்று கூடல் மையப்பட்டு இருந்தது....

சரி தோழர்களே... பார்வையை இன்னும் கொஞ்சம் நீட்டித்து பூங்காவை ஒட்டிய கடற்கரையைப் பாருங்கள்.... ஆமாம் அரைகுறை ஆடையையும் தாண்டிய நிலையில் உடை அணிந்து வெட்டவெளி கடற்கரையில் கோக் குடித்துக் கொண்டு புத்தகம் படித்துக் கொண்டு வெள்ளையாக காட்சியளிப்பவர்கள்....மேற்கத்திய நாட்டை சேர்ந்தவர்கள்...அங்கே சூழலும், கேளிக்கையும், ஒன்று கூடலும் மையப்பட்டு இல்லை.. மாறாக ஓய்வு மையப்பட்டு இருந்தது....

இவற்றை காட்சிப்படுத்தலுக்கு பின் புலம் என்னவென்றுதானே கேட்கிறீர்கள் தோழர்களே...?

ஒரு விடுமுறை நாள் .. ஒரே பூங்கா....எத்தனை விதமான விருப்பங்கள்....? வேறுபட்ட நோக்கங்கள்..? ஏன் எல்லோரும் ஒரே மாதிரி இல்லை? ஒருவருக்கு ஒருவர் முரண்பட்டு இருக்கின்றனரா? இல்லை எது இவர்களை வார்த்தது?

வியாக்கியானங்கள்...பேசுவதாய் இருந்தாலும் ஒவ்வொரு கூட்டத்தையும் பற்றி ஏழு எட்டு கட்டுரைகள் எழுதலாம்...? ஆனால் அறிவின் தெளிவு என்பது.... எப்போதும் விவாதங்கள் செய்வதிலேயே இருக்க விரும்புவது இல்லை.. மாறாக அது தீர்வுகளை நோக்கிப் பயணிக்கவே விரும்புகிறது....சரிதானே...?

இப்போது பகிரங்க கேள்வி ஒன்று வைக்கிறேன்....கலாச்சாரம் தவறு என்று சொன்னவர்களில் எத்தனை பேர்.. அவற்றுக்கு தீர்வு சொன்னார்கள்?

வாழ்க்கை முறை தவறு என்று சொன்னவர்கள்..எப்படி வாழ்வது என்றும் சொல்லவேண்டும் அல்லவா? அதுதானே பொறுப்பானதன்மை....

குற்றம் சொல்பவர்களா வரலாற்றின் நாயகர்கள் ???? அல்லவே...வழிக்காட்டியவர்களும் தீர்வு சொன்னவர்களும் தானே வரலாற்றின் பக்கங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார்கள்...?

விரிவான பார்வைகளோடு.......காத்திருங்கள்....உறவுகளே!

திரைப்படம் தொடரும்....


அப்போ வர்ர்ர்ர்ர்ட்ட்ட்டா...!


தேவா. S

Monday, December 6, 2010

தழல்...!

சுற்றி எழும் நெருப்பின்
பொசுங்கலின் வீச்சம்
காற்றில் பரவவிடுகிறது
மனித மமதைகளை!

தெறித்து விழுந்து...
ஜுவாலைகளில் பொடிந்து
காற்றில் கால்சியத்தையும்
மெக்னீசியத்தையும் கலக்கிறது
உருவங்களை கட்டிக்காத்த
எலும்புக் கூட்டம்...!

அக்னியின் ஒற்றைச் சீற்றம்
அழைத்துப் போகிறது
வெள்ளை மூளைகளை
பஸ்பங்களின் படிமாணத்துக்குள்!

சுருங்கிய தோல்கள்
கழன்றனவா? இல்லை கருகினவா?
அடையாளம் சொல்லக்கூட
ஆளில்லாமல் காற்றில்
எரிந்து போகின்றன
மனித உடல்கள்...!

எல்லாம் பொழிந்து
நொறுங்கும் பிணமெரியும்
அர்த்த ராத்திரிகள்...எல்லாம்
எங்கே தொலைக்கின்றன
மனித மனங்களை மட்டும்?


தேவா. S

Saturday, December 4, 2010

என் ஜன்னலில்...!
ஒரு ஜன்னல் ஓரத்து இரவு மழை...முன்னிரவா பின்னிரவா என்று கேட்கிறீர்களா.....? அது முன்னிரவுதான்! இரவு மழையும் மின்சாரமும் எப்போதும் நண்பர்கள் இல்லை...எங்கள் ஊரில்..மழை வரும் மின்சாரம் போகும் என்பது வழமையில் எமக்குப் பழகிப்போன ஒன்று.....

வழமைக்கு ஒத்தாசையாக இதோ மின்சாரம் ஓடி ஒளிந்தே விட்டது....பின் கேட்கவா வேண்டும் அழையா விருந்தாளியாக வந்தே விட்டாள் இருள் மங்கை...! இவள் மிகப் புதிரானவள்.. இவளின் புதிர்கள் விளங்க வேண்டுமெனில் அவளோடு கலந்து அமர்ந்து விட வேண்டும்.. இதோ நானும்...

சப்தமின்றி....சலமின்றி... நானும் இருளும்...பொறுமையாய் மெளனங்களைப் பரிமாறிக் கொண்டோம்...! ஜன்னல் கம்பியில் பட்டு சில மழைத்துளிகள் என் கன்னங்களில் முத்தமிட்டது...மெல்ல ஜன்னல் கம்பியை பற்றினேன்.. சிலீரென்று அந்த இரும்புக் கம்பி ஒரு ஏகாந்தத்தை உள்ளே பரவவிட்டதை யாரும் கவனிக்கவில்லை என்று நினைத்தேன் ஒரு மின்னல் வந்து பளீரென்று பார்த்துவிட்டுப் போனதை கண்டு சந்தோசத்தில் மோதி எகத்தாளமாய் சிரித்த மேகங்கள் அதை இடி என்று படித்து வைத்திருந்தது பழக்கப்பட்ட மனது.....

என் வீட்டில் யாருமில்லை...ஒரு திருமணம்..உறவுகள் எல்லாம் ஒரு நாள் முன்னதாகவே போய்விட்டு...மறுநாள் என்னை வரச்சொல்லி சென்றிருந்த அந்த இடைவெளியில் தான் இந்த அதிர்ஷ்டம் கிடைத்திருக்கிறது எனக்கு. நிசப்தமும் என்னோடு சேர்ந்து... மழையின் மொழியை ரசித்துக் கொண்டிருக்க என்னையும் கொஞ்சம் இன்றாவது கவனியுங்கள் என்று சில தவளைகள்..தங்களின் ராகங்களையும் பரவவிட்டுக் கொண்டிருந்தன காற்றில்...

இரவு உணவு முடித்து மனிதர்கள் கண்ணயர முயன்று கொண்டிருந்த போது விழித்துக் கொண்டது இந்த பிரபஞ்சக்காதல்....! மழையின் சப்தம் கேட்டிருக்கிறீர்களா தோழர்களே...அது....உடம்பின் நரம்புகளை சுகமாய் நீவி விட்டு உள்ளுக்குள் ஒரு தாளகதியில் கச்சேரியே நடத்தும்...ஜன்னலோர சாரல் கச்சேரிக்குள் பூ அள்ளித் தூவும்...! இந்த தருணத்தில் வீசும் காற்றை வாடைக்காற்று வாடைக்காற்று என்று பலமுறை மனிதர்கள் மறுத்திருப்பார்கள் இல்லை மறைத்திருப்பார்கள்....

வாடைக்காற்று எப்போதும் தனியே வருவதில்லை... அது மண்ணின் வாசத்தை பிசைந்து..தண்ணீரின் பதத்தை நிறைத்து சில்லென்று பற்றிப் பரவி......ஒரு கூடலை ஒத்த சுகத்தை உடலுக்குள் ஊற்றிவிட்டு ஓடியே ஒளிந்து விடும். வாடைக்காற்றை...தொலைத்து விடாதீர்கள் வரவேற்று முடிந்தால் உங்கள் மூளைகளுக்குள் தேக்கிவையுங்கள் அதன் ஸ்பரிசங்களின் அடர்த்தியை....

மழை நின்றபாடில்லை....யாரோ தெருவில் அலுத்துக் கொண்டே குடை பிடித்து கைவிளக்கெரிய விட்டு..சொல்லிக்கொண்டே.. என் ஜன்னல் கடந்து போனார்கள்...! கோபத்தின் உச்சத்தில் கத்தியே விட்டேன்...மழை நிற்க வேண்டியதில்லை...பெய்யட்டும் என்று... ஆமாம்..தோழர்களே.. மனிதன் மட்டும் பேசலாம்...ஆடலாம் கூடலாம்..மழை செய்யக் கூடாதா...மழையும் மனிதனைப் போலத்தானே....

இருளும் நானும் கவனித்துக் கொண்டிருந்த அந்த அற்புத நிகழ்வினை எழுத்துக்களில் கோர்த்துவைக்க எண்ணியதை கவனித்து விட்டாள் போலும் இருள்...நான் தீப்பெட்டி எடுத்ததும் சிணுங்கலாய்....நீ அழைத்தால் வருவேன்..இல்லை இல்லை இல்லை ஒளியை அணைத்தால் வருவேன்..என்று.சொல்லிக் கொண்டே இருந்தவள்....ஒரு தீக்குச்சி உரசலில்..வெட்கி ஓடி மறைந்தாள்...! தேக்கி வைத்திருந்த அக்னியை ஒரு கிழித்தலில் வெளிக் கொண்டு வந்த தீக்குச்சி தன் உயிரை மெழுகுவர்த்திக்கு கொடுத்து தன் ஆயுள் முடித்துக் கொண்டது.....

உயிரியல் சித்தாந்தமும் இதுவே....மனிதன் மரிக்கும் முன் தன் உயிர் பரவ விட்டுத்தான் போகிறான். பிரபஞ்ச நியதியின் சூட்சுமம் சின்ன சின்ன விசயங்களிலும் மறைந்து கிடக்கிறதுதானே...?

உயிர் பெற்ற மெழுகுவர்த்தி மெல்ல நடனமாடிக் கொண்டிருந்தது... காற்றில்...உற்றுப் பார்த்தேன்.... ஒரு உயிரோட்டமான முழுமையான கொடுத்தலில் ஜ்வாலையாய் அடங்கி நின்று கொண்டிருந்தது அக்னி....! எத்தனை வலு.... எவ்வளவு சீற்றம் கொண்டது அக்னி....... கட்டுக்குள் நின்று...மெல்ல என்னைப் பார்த்து சிரிக்க.. நான் எனக்குள் சிரித்துக் கொண்டேன்.

ஆமாம் வலுவானவை எல்லாம் அடக்கமானவை... தேவைகளின் பொருட்டு இயல்புகளை வெளிக் கொணருபவை... தவறாக பயன்படுத்தும் போது அழிவை ஏற்படுத்துபவை....! மனிதர்களில் கூட வலுவான மனிதர்கள் எப்போதும் சீறுவது இல்லை கட்டுக்குள் இருந்து செயல்களைச் செய்யும் போது அவர்களின் மொத்த கவனமும்...நேர்மறை விளைவுகளை நோக்கியே இருக்கிறது...! அவர்களை தவறாகப் பயன்படுத்தினாலோ சீற்றம் பெறச்செய்தாலோ.. அழிவுகள் தானே நிகழ்கின்றன....

மெல்லிய வெளிச்சம் கொடுத்த திருப்தியில் தன்னை இழந்து கொண்டிருந்தது மெழுகு வர்த்தி.... சூழலை வாங்கிக் கொண்ட நானும் என்னை இழந்து கொண்டே இருக்க....ஏதோ ஒரு இருப்பு நிலை எல்லாவற்றையும் ஆளுமை செய்து கொண்டிருந்தது....

ஒரு வெள்ளைப் தாளில்
எழுதப்படாத வெறுமையின்
பின்னணியில் ஒளிந்து கிடந்தன
என் கவிதைக்கான வார்த்தைகள்...!

பேனாவின் நுனியில் தேங்கிக் கிடந்த
உணர்வுகள் எல்லாம் இதோ
விழுந்து விடவா விழுந்து விடவா
என்று கேட்டுக் கொண்டே
பதிலுக்கு காத்திராமல்...
சொட்டத் தொடங்கியிருந்த
எழுத்துக்கள் எல்லாம் சேர்ந்து சேர்ந்து
வரிகளாய் வழிந்தோடின...

காற்றையும் மழையையும்....
செரித்த மூளை அவற்றை
காகிதத்தில் பரவவிட்டது...
வாடைக் காற்றின்...இதம்..
தொட்டு நனைந்து விழுந்திருந்தன
வார்த்தைகளின் கூட்டங்கள்...!

மொத்தமாய் எழுதிவிட்டு...
அதை மொய்த்த கண்களுக்கு
மனசு சொன்னது....
இதுதான்...கவிதையென்று....
மீண்டும் கேட்டேன் மனதிடம்
என்னவென்று....

மெளனமாய் சொன்னது மனது.....இது காதலின் மறுபிறவி....கடவுளின் ஒரு சாயல் என்று.....!

எழுதி முடித்து மெல்ல ஜன்னல் வழி வெளி நோக்கினேன்...சாரல் குறைந்திருந்தது...மழைத் தூரலாய்...மெலிந்திருந்தது..இன்னும் சற்று நேரத்தில் நின்றுவிடும் என்று மனசு சொன்னது......சொல்லிமுடித்த மறு நிமிடம் பளீச் பளீச் சென்று பற்றியெறிந்தன வீட்டின் குழல் விழக்குகள்....ஓய்வெடுத்துக் கொண்டிருந்த மின் விசிறி ஆக்ரோசமாய் அணைத்துப் போட்டது....மெழுகுவர்த்தியை....

சுற்றுப்புறமும் மின்சாரத்தால் உயிர்பெற்று ஏதேதோ சப்தங்கள் இறைக்க...முற்றுப் பெற்றுப் போனது என் மோன நிலை...

ஜன்னலடைத்தேன்...மெழுகுவர்த்தியை எடுத்து ஓரம் வைத்தேன்.....தொலைக்காட்சியை உசுப்பிவிட்டு...எதோ ஒரு இயக்க நிகழ்வுக்குள் என் மூளையை கொடுத்து விட்டு....காட்சிகளில் லயிக்க ஆரம்பித்தேன்.....

ஜன்னலோரத்தில் இருந்த என் கவிதைத்தாள்....காற்றில் பட படத்தது... பறக்கவிடாமல்...மேலே அமர்ந்திருந்தது...வார்த்தைகளை கொட்டிவிட்டு தற்காலிகமாய் செத்துப் போயிருந்த என் பேனா....

நான் தொலைக்காட்சியில் தொலைந்து போயிருந்தேன் ....

கவிதை காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது.....


தேவா. S