Pages

Saturday, April 19, 2014

காலம் வரைந்த கலைஞன் - ரெம்ப்ராண்ட்!


மேலே இருக்கும் ரெம்ப்ராண்ட்டின் ஓவியத்தை மெர்சியிடம் மார்க் கிராஸ் காட்டுகிறார். மார்க் கிராஸ் ஒரு ஓவியரும் கூடத்தான், ஓவியரும் கூடத்தான் என்று சொல்லும் போதே அவர் வேறு எதுவாகவோ இருக்கவேண்டும் தானே...?! ஆமாம் அவர் களிமண்ணால் சிற்பங்கள் செய்யும் சிற்பியும் கூட. அந்த பாத்திரத்தில் நடித்தவருக்கு குறைந்தபட்சம் 70 வயதாவது இருக்கவேண்டும் என்று எனக்குத் தோன்றியது. கொஞ்சம் ஐன்ஸ்டீனின் சாயல்வேறு அவருக்கு. அவர் பெண்களை மட்டுமே படமாக வரைந்து கொண்டு பின் களிமண்ணால் செதுக்கி செதுக்கி சிற்பம் செய்வார். பெண் என்றால் ஏதோ ஒரு பெண்ணின் சிலையாய் அது இருந்து விடமுடியாது. நிர்வாண மாடலாய் ஒரு பெண்ணை நிற்க வைத்து முதலில் பெண்ணின் உடலை வரைந்து கொண்டு பின் அந்தப் பெண்ணை கொண்டு அவர் சிலையும் செய்தாக வேண்டும்.

நிர்வாணம் என்ற சொல் வெறுமனே விஷமற்ற பாம்பைப் போன்றது ஆனால் பெண்ணின் நிர்வாணம் என்பது கலை என்னும் விஷம் நிரம்பிய நாகத்தைப் போன்றது. அது அழகு. அதுவே விஷம். பெண்ணின் உடல், அதன் வளைவு நெளிவுகள், அந்த  உடலில் இருக்கும் சூட்சும குறிப்புகள், மேடு பள்ளங்கள் என்று காமம் என்ற சொல்லை ஒரு உளி எடுத்து செதுக்கி எறிந்து விட்டு பார்த்தோமானால் கலை என்று எதைச் சொல்கிறேன் என்பது விளங்கும். பொதுவாகவே காமம் உள்ளதை உள்ளபடி பார்க்க விடுவதில்லை. அது எதிர்பார்ப்போடு எப்போதும் அலையும் ஒரு மிருகம். எப்போது பாயும் என்று சொல்லவே முடியாது. மிருகத்தை உயிரோடு வைத்துக் கொண்டு ஒரு கலைஞனால் படைக்க முடியாது. ரசிக்க முடியாது. உறங்க முடியாது. 

ஹென்றி மாட்டீஸ்

மெர்சி, மார்க் கிராஸிடம் மாடலாக வேலை செய்ய வந்திருக்கும் பெண் என்பதையும், த ஆர்ட்டிஸ்ட் அண்ட் மாடல் என்ற திரைப்படத்தின் கதை என்ன என்பதையும், அந்த திரைப்படம் என்ன மாதிரியான அதிர்வுகளை எனக்குள் உருவாக்கியது என்பதை எல்லாம் இப்போது நாம் பார்க்கப் போவதில்லை. படத்தைப் பற்றி பேசுவதற்கு முன்பு படத்தில் இருக்கும் விசயங்களை பற்றியும் அது பகிர்ந்திருக்கும் செய்திகளைப் பற்றியும் அறிந்து கொள்ள விரும்பி இணையத்தை இரண்டு மூன்று நாட்களாகவே மேய்ந்து கொண்டிருந்தேன். 1860களில் பிறந்த ஹென்றி மாட்டீஸ் என்ற பிரெஞ்ச் சிற்பியின் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட படம் இது என்று அறிந்து கொண்டேன். இதை அறிந்து கொண்டு ஹென்றி மாட்டீஸ் எப்படி எல்லாம் வாழ்ந்திருப்பார் என்று போய் அவரின் வாழ்க்கை வரலாற்றை தேடி அறிந்து கொள்ள நான் விரும்பவில்லை.  ஒருவேளை மாட்டீசின் நிஜவாழ்க்கை எனக்கு போரடித்து இந்த படத்தைப் பற்றி சொல்ல ஒன்றும் தோன்றாமல் போய்விடுமோ என்ற பயம்தான் அதற்கு காரணம்.

இராஜராஜ சோழனைப் பற்றிய என் ஆவலையும், தேடலையும், ப்ரியத்தையும், வரலாற்றுப் பதிவுகளில் வாசித்து அறிந்து கற்பனை செய்து வைத்திருந்த அந்த பிரம்மாண்டமான சித்திரத்தையும், சிதைத்துப் போட்டது இராஜராஜ சோழன் என்னும் தமிழ்த் திரைப்படம். சில காரியங்களை செய்யாமலேயே இந்த உலகம் இருந்திருக்கலாமோ என்று எனக்கு தோன்றும். அதில் ஒன்று இந்தத் திரைப்படம்.  உடையார் நாவலை வாசித்துக் கொண்டிருந்த போது சட்டென்று சிறகு விரித்துப் பறந்து போக எத்தனித்த என் கற்பனைக் கழுகினை சட், சட்டென்று சிறகு வெட்டி தரையில் இழுத்துப் போட்டுவிடும் சிவாஜியின் உஷ்ணமான மேடை நாடக நடிப்பு. 

ரெம்பிராண்ட் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற உந்துதலை இந்த ஆர்டிஸ்ட் அண்ட த மாடல் படத்தில் ஒரு காட்சி வலுவாய் செய்து விடுகிறது. மேலே இருக்கும் புகைப்படத்தை தனது மாடலான மெர்சியிடம் மார்க் கிராஸ் தாத்தா காட்டுவார். இதைப் பார்த்தாயா...? ஓவியம் நன்றாக இருக்கிறதா என்று அவர் கேட்டு முடிப்பதற்கு முன்பாகவே அந்தப் பெண் ஓ....வெரி நைஸ் என்று பதில் சொல்லிவிடுவாள். இது ஒரு தலை சிறந்த ஓவியம். ஒரு நொடியில் இது நன்றாக இருக்கிறது என்று கூறிவிட்டாளே என்ற தன் கோபத்தை ஆதங்கத்தை ஒரு படைப்பின் உன்னதத்தை உணர்ந்தவராய்....

"எந்த ஒரு விசயத்தையும் முதலில் எப்படி பார்ப்பது என்று கற்றுக் கொள்ள வேண்டும். அதில் என்ன இருக்கிறது என்று உற்று நோக்கவேண்டும்... அது அல்லாது வெறுமனே எல்லாவற்றையும் கடந்து சென்று விடக்கூடாது என்று அதட்டிவிட்டு... மேலே இருக்கும் சித்திரத்தை பற்றி விவரிப்பார். இது போன்ற கோட்டு ஓவியங்களை பார்க்கும் போது அதன் வளைவுகளை, நெளிவுகளை நாம் கவனிக்க வேண்டும் என்பார். நடந்து செல்லும் குழந்தை முதன் முதலாய் நடக்கப் பழகுகிறது என்றும் அந்தக் குழந்தை அப்படி நடந்து பழகுவது அதற்கு ஆவலாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என்று சொல்லிவிட்டு..... அதன் மகிழ்ச்சியை எப்படி நாம் புரிந்து கொள்வது தெரியுமா...? அந்த சிறு குழந்தையின் பக்கவாட்டு கன்னத்தை பார், அந்தப் புஷ்டியான கன்னம், முன்னால் சிரிக்கும் குழந்தையின் உப்பலான பக்கவாட்டுத் தோற்றம்.....

அந்தக் கோட்டினை உற்று நோக்கினால்தான் அந்த குழந்தையின் மகிழ்ச்சி பிடிபடும்....! அதோடு மட்டுமில்லாமல் அந்த குழந்தையை இடது புறம் கை பிடித்து அழைத்துச் செல்வது குழந்தையின் சகோதரியாய் இருக்கலாம், அவளுக்கு குழந்தைகளை பிடித்து அழைத்துச் சென்று பழக்கம் இல்லாததால் வெகு சிரத்தையாய் குனிந்து பிள்ளையை கவனமாய் அழைத்துச் செல்கிறாள்..... வலது புறம் இருப்பது குழந்தையின் அம்மாவாய் இருக்கவேண்டும். இரண்டு பிள்ளைகள் பெற்றவள் அவள், அதனால் தன் அனுபவத்தின்  மூலம் பிள்ளையை எப்படி பிடித்து நடக்க வைக்க வேண்டும் என்று அறிந்தவளாதலால், கொஞ்சம் பயமின்றியே.... அவள் குழந்தையின் கையைப் பிடித்திருக்கிறாள்...."

கிராஸ் விவரித்துக் கொண்டே சென்று கொண்டிருந்தார். நான் படத்தை பாஸ்(Pause) செய்து நிறுத்தி விட்டு யோசிக்க ஆரம்பித்தேன். இது ஒரு படம். ஓவியம். அவ்வளவுதான். ஒரு ஓவியன் வெறும் கோடுகளால் எத்தனை விதமான உணர்வுகளைத் தனக்குள் வெளிப்படுத்தி விடுகிறான். எத்தனை அழுத்தமான நுண்ணுணர்வுகள் கொண்டவனாய் அவன் இருந்திருப்பான்..? ஒவ்வொரு சூழலையும் எவ்வளவு நுணுக்கமாய் அவன் கவனித்தவனாய் இருந்திருப்பான். தன்னைச் சுற்றி நிகழும் சிறு சிறு நிகழ்வுகளையும் அசைவுகளையும்,  உற்று கவனிக்கத் தெரிந்தவனே அதை எழுத்தில், பேச்சில், ஓவியத்தில், இசையில், ஆடலில், பாடலில் கொண்டு வரத் தெரிந்தவனாகிறான்....

இன்னும் சொல்லப் போனால் மொழிகள் என்று நாம் அறிந்து வைத்திருப்பது யாவும் ஒரு தூரமே பயணித்து கேட்டுக் கொண்டிருப்பவனுக்கு புரிதலை உண்டு பண்ணுகிறது. பேசியவர்கள் பேசியது எல்லாம் புரிந்திருந்தால் இப்படி உருவாகி இருக்குமா முரண்பாடான இந்தப் பேருலகம். இரண்டு பேர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மாறி மாறி விளக்கிக் கொள்கிறார்கள். இவனின் நியாயத்தை இவனும், அவனின் நியாத்தை அவனும் நுணுக்கமாய் எடுத்தும் சொல்லிக் கொள்கிறார்கள் ஆனால் கடைசி வரையில் ஒருவரின் வலியையோ, சோகத்தையோ, எதிர்பார்ப்பையோ ஒருவருக்கு ஒருவர் முழுதாய் புரியவைக்க முடிவதேயில்லை. மொழி இந்த உலகம் முழுவதும் தோட்டா இல்லாத துப்பாக்கியாகவே பெரும்பாலும் வெடித்துக் கொண்டிருக்கிறது.

பேசுபவர்கள் எல்லாம் நினைத்துக் கொள்கிறார்கள் தாங்கள் எல்லாவற்றையும் இந்த உலகத்துக்கு புரியவைத்துவிட்டோம் என்று. கேட்கிறவர்கள் எல்லோரும் நினைத்துக் கொள்கிறார்கள்...... என்றாவது ஒரு நாளாவது இவன் நாம் நினைப்பதை பேசிவிடமாட்டானா என்று..... ஆனால் இரண்டும் நடப்பதே இல்லை.


ஒரு கலைஞன் சராசரி மனிதர்களிடம் இருந்து எப்போதும் வித்தியாசப்பட்டே இருக்கிறான். அவனும் பேசுவான்.. ஆனால் அவன் வார்த்தைகள் அவனுக்குள் இருக்கும் நியாயத்தை மட்டும் கூர் தீட்டிக் கொள்ளும் சுயநலக் கத்திகளாக எப்போதும் இருப்பதில்லை. அவன் எதிராளியின் வலிபற்றி பேசுகிறான், எங்கோ அடிமைப்பட்டுக் கிடக்கும் ஒரு இனத்தின் விடுதலை பற்றி பேசுகிறான், அதுவரையில் அவன் சந்தித்திராத மனிதர்களின் தேவைகள் பற்றி பேசுகிறான், வானத்தையும், பூமியையும், பூமியில் படிந்து கிடக்கும் நிலையாமைப் பற்றியும், வாழ்க்கையில் சந்தோஷமாயிருக்க வேண்டிய அவசியத்தைப் பற்றியும், மனிதர்கள் மனிதர்களைப் போற்ற வேண்டிய அவசியத்தை பற்றியும் அவன் பேசிக் கொண்டே இருக்கிறான்.

பூக்களைப் பார்க்கிறான். அதன் சந்தோசத்தை ஒரு கவிதையாகவோ, ஓவியமாகவோ, புகைப்படமாகவோ, ஒரு பாடலாகவோ, இசையாகவோ வடித்து வைத்துவிட அவன் முனைகிறான். ஒரு கலைஞன் எப்போதும் தன்னைச் சுற்றி நிகழும், தான் அனுபவிக்கும் விசயங்களை கூர்மையாக சக மனிதனிடம் பகிர்ந்து செல்லவே எப்போதும் விரும்புகிறான்.

ரெம்ப்ராண்டின் ஓவியங்களை தேடித் தேடி நான் பார்க்க ஆரம்பித்தேன். வாழ்க்கையின் விவரிக்க முடியாத வேறு பக்கத்திற்கு அவை என்னை அழைத்துச் சென்றன. மனித உணர்வுகளை கோடுகளுக்குள் கொண்டு வந்து அதைக் காண்பவர்களிடம் பரிமாற்றம் செய்யக் கூடிய மந்திர சக்தி கொண்டவை அவனின் ஓவியங்கள். 1600களில் வாழ்ந்து மறைந்த அந்த டச்சுக்காரனைப் பற்றி இன்னமும் பேசிக் கொண்டிருக்கின்றன அவனது ஓவியங்கள் ஆம்ஸ்ட்ர்டாமில் இருக்கும் மியூசியங்களில்.

ஏதேதோ அமானுஷ்யமான உணர்வுகளோடு சல்லாபித்துக் கொண்டிருக்கும் போது தோன்றும் புது புது விசயங்களை பதிவு செய்து கொண்டிருக்கும் எந்த கலைஞன் பொருளாதாய உலகத்தில் வென்றிருக்கிறான் என்று சொல்லுங்கள் பார்ப்போம்? ரெம்ப்ராண்டின் வாழ்க்கையை அறிய முற்பட்ட எனக்கு.... அதை வாசித்து முடித்த போது மனம் கனத்துப் போயிருந்தது. அவன் மனைவியை குறுகிய காலத்திலேயே இழந்து, நான்கு குழந்தைகளைப் பெற்று குழந்தையிலேயே மூன்று பிள்ளைகளை இழந்து, பின் தன்னையும் பிள்ளையையும் பார்த்துக் கொள்ள வந்த பெண்ணை மனைவியாக்கிக் கொண்டான். அந்த பெண்ணை மாடலாகக் கொண்டு அவன் நிறைய கோட்டோவியங்களை வரைந்துமிருக்கிறான்.

கடன் தொல்லையால் தன்னிடம் இருந்த அத்தனை ஒப்பற்ற படைப்புகளையும் கொடுத்து ஈடு செய்த ரெம்ப்ராண்ட்... வாழ்க்கையில் மிகவும் கஷ்டமான சூழலில் இருந்த போது உருவாக்கிய படைப்புகள்தான் வெகு பிரம்மாண்ட புகழை அவனுக்குத் தேடிக் கொடுத்திருக்கிறது.  நிறைய இருக்கிறது ரெம்ப்ராண்ட் பற்றி பேசுவதற்கு,  அவன் ஓவியங்களின் தனித்தன்மை பற்றி விவாதிப்பதற்கு.....


எந்த ஒரு தலை சிறந்த படைப்பும் தன்னைப் பற்றி மட்டும் பேசிவிட்டு வாய் மூடிக் கொள்வதில்லை. அது ஒரு ரசிகனை கிளர்வான மனோநிலைக்கு கொண்டு சென்று பல புதிரான விசயங்களைப்  பற்றி பேசுவதோடு நிறைய விசயங்களைக் கற்றுக் கொடுத்து புதுப் புது திறப்புக்களையும் கொடுக்கிறது. ஒரு படைப்பில் லயித்து முடித்து வெளியே வரும் போது அந்த படைப்பு பற்றிய பிரக்ஞை இன்றி வேறு ஏதோ ஒரு புதிய தேடலில் நீங்கள் இறங்கி இருக்கிறீர்கள் என்றால்... மிகச்சரியாய் அந்த படைப்பு வெளிப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.

                                 த ஆர்ட்டிஸ்ட் அண்ட் த மாடல்
                                             (The Artist and the Model)


என்னும் திரைப்படம் வெகு நேர்த்தியாய் அந்த செயலை செய்திருக்கிறது. வேறு ஒரு கட்டுரையில் அந்த திரைப்படம் பற்றி நிறைய பேசுவேன்...!தேவா சுப்பையா...Wednesday, April 16, 2014

கலையாத கனவுகள் - 3இதுவரைஇனி...


என்ன செய்வதென்று தெரியவில்லை செல்வத்திற்கு அவசரம் அவசரமாய் தன் அலுவலகம் நோக்கி ஓடினான். கேஷியர் ராமலிங்கத்திடம் செய்தியைச் சொல்லி கதறி அழுதான். அதே நேரத்தில் பேருந்தில் அடிபட்டவர்களை எல்லாம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து கொண்டிருப்பதாக அவர்களுக்கு செய்தி கிடைத்தது. பதறியபடியே அரசு மருத்துவமனைக்கு ஓடினான் செல்வம்.

ஏங்க ராஜ்கலா பஸ் ஆக்ஸிடெண்ட் கேஸ் எல்லாம் எங்க வச்சு இருக்காங்க...? தொண்டை கம்மியது செல்வத்திற்கு....

அதோ அந்த பக்கம் போங்க சார்... லெப்ட்ல திரும்பி.... நேரா போங்க அங்க பெரிய வார்டு இருக்கு அங்கதான் கொண்டு வந்து போட்டு இருக்காங்க... இன்னொரு வேன்ல மிச்ச இருக்க ஆளுங்கள கொண்டு வர்றாங்க சார்..... ஸ்பாட் அவுட் எப்டியும் பத்து பதினைஞ்சு பேராவது இருப்பாங்கன்னு சொல்லிக்கிறாங்க.... 

ப்ரண்ட் டயர் பர்ஸ்ட் ஆகி இருக்கும் போல வண்டிய இழுத்துக் கொண்டு போய் வயக்காட்ல தள்ளி கவுத்துருச்சு சார்....! முன்னாடி உக்காந்து இருந்த நிறைய பொம்பளைங்க மேல டீசல் கொட்டி உடம்பெல்லாம் வெந்து போய் கிடக்காங்க.... பொம்பளைங்க, வயசானவங்க, சின்னப் பிள்ளைங்கன்னு சகிக்கல சார் பாக்கவே....

செல்வம் கதறியபடியே மருத்துவமனை ஊழியர் கை காட்டிய திசையில் ஓட கேஷியர் ராமலிங்கமும் இன்னும் இரண்டு மூன்று அலுவலக நண்பர்களும் அவன் பின்னால் ஓடினார்கள்....

ஒரே கதறல் ஒலி. வலியால் துடித்துக் கொண்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த மனிதர்களின் மரணப் போராட்டத்தை பார்க்கவே சகிக்க முடியாது என்பது ஒருபுறமென்றால்.... அந்த துக்க நெரிசலுக்கு நடுவே உயிருக்கு உயிரான உறவுகளைத் தேடுவது என்பது மிகப்பெரிய சாபம். ஒரு தீபாவளி சமயத்தில் சாட்டை கொளுத்திக் கொண்டிருந்த பாபுவின் கையில் சிறு தீக்காயம் பட்டதற்கு அவன் பதறியழுது செல்வத்தின் கழுத்தைக் கட்டிக் கொண்டு அப்பா...அப்பா... என்று அழுதது செல்வத்தின் நினைவில் எட்டிப்பார்த்தது.

மனிதர்களுக்கு மரணம் எப்படி வேண்டுமானாலும் சம்பவிக்கலாம். வியாதியால் மரணிக்கும் போதும், தற்கொலைகள் செய்து கொண்டு மரணிக்கும் போதும், முதுமையால் மரணிக்கும் போதும் காலம் அங்கே ஏதோ ஒரு நியாயத்தை மறைமுகமாய் ஏற்படுத்தி வைத்து விடுகிறது.. ஆனால் விபத்து எந்தவித நியாமுமற்ற காலத்தின் வன்முறை. அதுவும் எந்தவித தவறுமில்லாமல் யாரோ செய்யும் தவறினால் வேறு யாரோ ஒருவனுக்கு சம்பவிக்கும் மரணம் மிகப்பெரிய கொடுமை. கையிலிருந்த பொருளைத் தட்டிப் பறித்தது போல மனிதர்களின் வாழ்க்கையைக் கொய்து கொண்டு போகும் சூழல்கள் மிகவும் ஈனத்தனமானவை.

மதியம் உணவுண்டு மகிழ்வாய் பேருந்திலேறி பயணித்து எங்கெங்கோ செல்ல விரும்பிய மனிதர்களை ஒரு கவனக்குறைவினால் ஏற்படும் விபத்து தின்று தீர்ப்பதற்கு என்ன விதமான நியாயத்தை இயற்கை வைத்திருக்கிறது என்றுதான் தெரியவில்லை. பயணித்தவர்களுக்காக எத்தனை ஜீவன்கள் காத்துக் கொண்டிருக்கின்றனவோ.... எத்தனை உயிர்கள் பதைபதைத்து இப்படி செல்வம் போல காயம் பட்டவர்களுக்கு நடுவே..... தன் சொந்தங்களை தேடிக் கொண்டிருக்கின்றனவோ....

யோசித்தபடியே செல்வம் அடுத்த வேன் வருகைக்காக காத்திருந்தான். அதுவரையில் கொண்டு வந்து குவிக்கப்பட்ட உடல்களுக்கு மத்தியில் அவன் மனைவியையும் மகனையும் கண்டுபிடிக்க முடியவில்லை....

" என்ன பெத்த அய்யா........போய்ட்டியே........"

வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டு யாரோ ஒரு பெண்மணி அழுதபடியே மார்ச்சுவரிக்கு சென்று கொண்டிருந்த ஒரு போர்த்தப்பட்ட உடலின் பின்னால் ஓடிக் கொண்டிருந்தாள்.....

செல்வம் சுவற்றில் ஒற்றைக் காலைக் கொடுத்து சாய்ந்தபடியே வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். இருளத் தொடங்கி இருந்தது. அது அமாவாசையை நோக்கிய வானத்தின் நகர்வாயிருக்க வேண்டும். நட்சத்திரங்கள் மட்டும் தூரத்திலெரியும் பிணத்திலிருந்து வெளிப்படும் தீச்சுவாலையாய் எரிந்து கொண்டிருந்தன. 

ஓ... காலமே உனக்கு என்னதான் வேண்டும்.....?

ஏன் இப்படி கூட்டம் கூட்டமாய் மனிதர்களைப் படைக்கிறாய்? ஏன் பல்கிப் பெருகிக் கொண்டே இருக்கிறது இந்தப் பிரபஞ்சம்? எதை நோக்கியது இந்தப் பயணம்.....? என்னவிதமான ஆட்டம் இது...? எல்லாம் உண்டென்று சொல்லி அதை இல்லை என்று அறிந்து கொள்ள வேண்டி  சூழல்களை விதைத்து.... புரிந்து தெளிய வேண்டிய நிர்ப்பந்தம்தான் என்ன...? மொத்தத்தில் ஏன் நீ கொடுக்கிறாய்...? ஏன் நீ எடுக்கிறாய்...? சொந்தங்களையும் பந்தங்களையும் ஏன் நீ உருவாக்குகிறாய்...? ஏன் சூழல்களைக் கொடுத்து அவற்றை நீயே அறுக்கிறாய்..? இந்த வாழ்க்கையின் நோக்கம்தான் என்ன....?

ஜனித்து வளர்ந்து நகரும் இந்த வாழ்க்கையில் உடல்தான் மையமாயிருக்கிறது. உயிர் வளர்க்க உணவு, உணவின் அடிப்படை பசி, பசி தீர பிழைப்பு, பிழைத்து நிற்கையில் தன்னிச்சையாய் தோன்றும் காமம், காமத்தின் அடிப்படையில் புதிய பொறுப்புகள், புதிய பொறுப்புகளுக்காய் பொருள்  தேடல், பொருள் தேடலை ஒப்பிட்டு சந்தோசப்படுத்தி கொள்ள ஒரு சமூகம், கீழே விழுந்தால் சிரிக்க நான்கு பேர்கள், தூக்கிவிட நான்கு பேர்கள், விவாதிக்க நான்கு பேர்கள்,வெற்றி பெற்றால் போற்ற நான்கு பேர், தூற்ற நான்கு பேர், நல்லவனென்று சொல்ல நான்கு பேர், கெட்டவன் என்று சொல்ல நான்கு பேர்...., பணக்காரர்களெல்லாம் வென்றவர்களாகவும், ஏழைகள் எல்லாம் தோற்றவர்களாகவும் கருதி நகரும் வாழ்க்கைச் சூழலே.....எங்கிருந்து தருவிக்கிறாய் இது போன்ற நச்சு நிறைந்த பொது புத்திகளை...?

சுமதியை முதன் முதலில் பெண்பார்க்க சென்ற போது மாடு பார்க்க வந்திருக்கிறார்கள் என்று சொல்லித்தான் சுமதியின் அண்ணன் வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். பெண் பார்க்க வருகிறோம் என்று சொல்லி அமர்க்களமாய் மாப்பிள்ளை வீட்டார் போய் அமர்ந்து கொண்டு பஜ்ஜி சொஜ்ஜி எல்லாம் தின்று விட்டு காபி குடித்துக் கொண்டே பெண்ணைப் பார்த்து தீர்மானிக்கும் வழக்கம் எல்லாம் தமிழர்கள் மரபில் கிடையவே கிடையாது. ஆண்களைப் போல அல்ல பெண்கள். பெண்கள் ஒரு ஆணைப் பார்த்து அவனைப் பிடித்துவிட்டால் பின் வேறு ஒருவனை மாற்றிக் கொள்வதென்பது வெகு கடினம். இந்தக் காலத்தில் பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் சென்று பெண்ணைப் பார்த்துவிட்டு வீட்டில் போய் முடிவு சொல்கிறோம் என்று சொல்லி மாப்பிள்ளைக்கு பிடிக்கவில்லை எனில் அந்தக் கல்யாணம் நின்றே போய்விடும் அவலம் இருக்கிறது. எங்கிருந்து முளைத்தது இந்த ஆணாதிக்க கொம்பு என்பதுதான் தெரியவில்லை. 

பெரும்பாலும் முன்பெல்லாம் பெண் பார்க்கச் செல்பவர்கள் ஏதோ ஒரு வேலை நிமித்தமாய் போவது போல எதார்த்தமாய் பெண் வீட்டிற்குள் போய் ஒப்பனைகள் இல்லாதப் பெண்ணைப் பார்த்துவிட்டு, பெண் பிடித்து இருந்தால் ஆணின் புகைப்படத்தை பெண்ணிடம் கொடுத்து சம்மதம் இருப்பின் பின் சம்பிரதாயமாக நேரில் பெண்ணையும் மாப்பிள்ளையையும் காணச் செய்து முடிவு செய்வார்கள். அப்போது கூட பெண்ணுக்கு மாப்பிள்ளை வேண்டாம் என்று மறுக்க முழு உரிமை இருக்கிறது.  அடுப்படியில் வேலை செய்து கொண்டிருந்த சுமதி மாடு பார்க்க வந்தவர்களுக்கு தண்ணீர் கொடுக்க அள்ளிச் சொறுகிய பாவடையோடு தாவணியை சரி செய்து கொண்டு தூக்கி கட்டிய கொண்டையோடு வியர்வை வழியும் முகத்தோடு வந்திருந்தாள். அப்போதுதான் சுமதியை நேருக்கு நேராய் பார்த்தது. சுமதி அவ்வளவு அழகு. அழகுக்கு ஆடம்பரம் தேவையில்லை என்பதை அந்த தருணத்தில்தான் உணர்ந்து கொள்ள முடிந்தது.

சுமதி வீட்டில் ஒப்புதல் சொல்லும்வரை செல்வத்தின் தூக்கம் தொலைந்தே போயிருந்தது. சம்பிரதாயங்கள், நேருக்கு  நேராய் அவள் விழிகளோடு விழிகள் மோதிக் கொண்ட தருணத்தில் உண்டான அலாதியான சந்தோசங்கள், திருமணத்திற்குப் பிறகு ஏற்பட்ட புரிதலின்மைகள், அந்த புரிதலின்மையிலிருந்து பிறந்த புரிதல்கள்..... ஐந்தாண்டுகள் கீழும் மேலும் ஆடி அலைபாய்ந்து பின் நிதானமான திருமண பந்தம் செல்வத்தின் கண்களில் கண்ணீராய் வழிந்து கொண்டிருந்தது....

எது நிகழும் அடுத்து என்று தெரியாத வாழ்க்கையினூடே எத்தனை எத்தனை அகம்பாவம் கொண்ட மனிதர்கள், மூன்று தலைமுறைக்கும் சேர்த்து திட்டமிடும் திமிர்கள்....!!!!!

உடல் முழுதும் தீக்காயங்களோடு இரண்டு பருத்த பெண்மணிகள் துடி துடித்துக் கொண்டிருந்ததை பார்த்துவிட்டு வெளியே வந்த செல்வத்திடம் அந்த இரண்டு பேரில் ஒருவர் இறந்து போனதை ஒருவர் அழுதபடியே கூறிச் சென்றார். பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை அழுகை ஓலங்களாலும், புலம்பல்களாலும், ஒப்பாரிகளாலும் நிரம்பிக் கிடந்தது, செல்வத்தைப் போன்ற பலர் தங்களது உறவுகளை மஞ்சள் குண்டு பல்புகளின் வெளிச்சத்தில் தேடிக் கொண்டிருந்தனர்......

சுமதிக்கும், பாபுவிற்கும் என்ன ஆகி இருக்கும் என்ற பதை பதைப்போடு செல்வம் நின்று கொண்டிருந்த போதே காயப்பட்டவர்களை ஏற்றி கொண்டு அடுத்த வாகனம்  மருத்துவமனை வளாகத்திற்குள் சீறிப் பாய்ந்து வந்து கொண்டிருந்தது....

செல்வம்.... வாகனத்தை நோக்கி உயிரைக் கையில் பிடித்தபடி ஓடிக் கொண்டிருந்தான்...


                                                      ***


எட்டாம் நம்பர் பஸ் பிதுங்கி வழியும் கூட்டத்தை ஏற்றிக் கொண்டு பட்டுக்கோட்டையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. 

ஓய்.... ஏன்யா கால மிதிச்சுக்கிட்டு அம்புட்டு மும்முரமா அங்கிட்டு எட்டிப்பார்க்குற....

பெரியவர் ஒரு இளம் வயது பையனை அதட்டினார்....! அட அந்தப் பக்கம் ஏதோ பஸ்ஸு கவுந்து கிடக்குது பெரியவரே....என்று பையன் சொன்னதைக் கேட்டு பெரியவர் எட்டிப்பார்க்க...பஸ்ஸுக்குள் இருந்த கூட்டம் மொத்தமும் கவிழ்ந்து கிடந்த ராஜ்கலா பஸ்ஸை முண்டியடித்துக் கொண்டு எட்டிப்பார்த்தனர். காவல்துறை வாகனங்களும், தீயணைப்பு வண்டிகளும் என்று நிரம்பிக்கிடந்த சாலையை அலுங்கி குலுங்கி எட்டாம் நம்பர் பஸ் கடந்து கொண்டிருந்தது....

பேருந்தில் உள்ளே கோபமாக அமர்ந்திருந்த சுமதிக்கு வெளியே என்ன நடக்கின்றது என்று யோசிக்க முடியாத அளவு கோபம் தலைக்கேறி இருந்தது. பாபுவை நறுக் என்று கிள்ளினாள்.... சனியன் பிடிச்சவனே.... நீ வெள்ளாண்டுட்டு லேட்டா வந்ததால பஸ்ஸ விட்டுட்டு இப்போ இம்புட்டு நேரங்கழிச்சு போகவேண்டியதா இருக்கு...

அந்த மனுசன் மைனர் பில்டிங் கிட்ட நிக்குறாரோ இல்ல ஆஃபிசுக்குப் போய்ட்டாரோ தெரியலை... தறுதலையா வந்து பொறந்து இருக்கியே எங்களுக்குன்னு.... சொல்லிக் கொண்டே.... மறுபடி பாபுவின் தலையில் அடித்தாள்... பாபு அழுதபடியே கண்ணைக் கசக்கிக் கொண்டிருந்தான்.

பேருந்து முழுதும் ராஜ்கலா பஸ் கவிழ்ந்ததைப் பற்றியே எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.  சுமதி எதைப் பற்றிய கவனமும் இன்றி... காத்திருக்கும் கணவரிடம் தாமதமாய் வருவதற்கு திட்டு வாங்கவேண்டுமே என்ற பதட்டத்தில்.... ஜன்னலுக்கு வெளியே தெரிந்த கருவானத்தின் நட்சத்திரங்களை  வெறித்துக் கொண்டிருந்தாள்.

பஸ் பட்டுக்கோட்டையை நெருங்கிக் கொண்டிருந்தது.                                                       - முற்றும் -
தேவா சுப்பையா


Saturday, April 5, 2014

காமம் கொள்(ல்)...!


கடும் குளிரில் கூசிப்போய் உடலை ஒடுக்கிக் கொள்வதை போல இருக்கிறது இந்த கூடலின் உச்சம். தியானத்தில் அமரும் போதும் இப்படித்தான். திடமான ஒரு கருங்கல்லாய் முதலில் அமர்ந்திருப்பேன். மெல்ல மெல்ல ஒவ்வொரு அடுக்காய் உடைய ஆரம்பிக்கும். ஒவ்வொரு அடுக்கும் உடைந்து விழ கொஞ்ச நேரமாவது ஆகும். அது எப்போது என்று தெரியாது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இருக்கும் தடிமன் எல்லாம் படிப்படியாக உடையாமல் ஒரு கட்டிடத்தை வெடிவைத்து தகர்த்தால் எப்படி சடாரென சாயும் அப்படி சாயும். அதாவது சீட்டுகட்டு சாய்வதைப் போல ஆனால் அதன் மென்மையோடு அல்ல....

உடைந்து எல்லாம் விழுந்த பின்பு கூட இப்படித்தான் கூடலின் உச்சத்தில் ஏங்கிப் போய் உடல் துடிக்க குளிரில் கூசி ஒடுங்கும் உடம்பாய் நடு நடுங்கி தொண்டை அடைபட்டு கேவிக் கேவி அழத்தோன்றும். காமம் அழகானது என்று நான் சொல்லும் போதே வக்கிர பாம்புகள் பலரின் புத்தியில் நெளியத்தொடங்கி இருக்கும். இப்படித்தான் அது. அதன் இயல்பு இதுதான் என்று எழுத்துக்கள் மூச்சு வாங்கிக் கொண்டே ஒரு அனுபவத்தை இறக்கி வைக்கும் போது நான் இறக்கி வைத்த சுமையில் என்ன இருக்கிறது என்று பார்க்காமல் ஒவ்வொரு மூளையும் தத்தமது சுமையை இறக்கி வைத்து என்னவென்று பிரித்துப் பார்த்து.....

இங்கே  எழுதிக் கொண்டிருக்கும் என் வரிகளுக்கு வெவ்வேறு வர்ணங்களில் கற்பித ஓவியங்களை அது வரையத் தொடங்கும். அது அல்ல நான் சொல்வது என்று சொல்லக் கூட விருப்பமில்லாமல் ஸ்பரிசித்தது கொடுத்த போதையிலிருந்து வெளிவர விரும்பாமல் கருப்பை நோக்கி விரைந்து பின்பு கருமுட்டையோடு சேர்ந்த விந்தணுவின் மோன நிலைக்குள் கிடந்தபடி எங்கிருந்தோ கேட்கும் அழுகுரலை செவிமடுத்துக்  கொண்டிருப்பேன் நான். அது யாரோ ஒருவரின் மரண அவஸ்தையை சொல்லும் அப்போது பிறந்த குழந்தையின் குரலாய் இருக்கக் கூடும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் போது பிணமெரிந்து நிண நாற்றம் பொசுக்கென்று வீசத்தொடங்கும்.

உஷ்ணமான உணர்வொன்று இருப்பதும் இல்லாததும், சரியும் தவறும், தூய்மையும் அசுத்தமுமாய் கிடந்து, கிடந்து பின் நகர்ந்து பிறப்பின் ரகசியம் சொல்லும் கலவிக் கலையை சிம்மத்தின் பிடறி பிடித்து உலுக்கி  எழுப்புவது போல எழுப்ப.... பிரபஞ்சத்தின் வாசல் இதுதானென்று அறிந்து வெறித்தனமாய் ஓடி விரிந்து, பரந்து செல்லும் ஒளிக்காட்டிற்குள் தொலைந்தே போயிருப்பேன் நான். மிச்சம் என்ன இருக்கும்? என்ற கேள்வியை உடைத்து உடைத்து மெலிதாய் பூக்கும் ஒரு பூவின் இதழுக்குள் படுத்துறங்கும் சுகத்தோடு இளஞ்சூடான அவளின் மார்பில் முகம் புதைத்து ஜென்மங்கள் மறந்து, இச்சைகள் கலைந்து, திறக்க விரும்பாத விழிகளால் விரிந்து கிடக்கும் போதியின் கிளைகளுக்குள் ஒரு கருநாகமாய் ஊர்ந்து சென்று....

அதன் உச்சம் தொட்டு சகஸ்ரகம் உடைந்து பேரருவியாய் வழிந்தோட இதுவன்றோ நான் என்ற ஞானத்தை கிசுகிசுப்பாய் அவளின் காதுகளில் சொல்லிவிட்டு அப்படியே மூர்ச்சையாகத்தான் ஆசை....!

ஆனால்....

ஆசை என்ற வார்த்தை ஒரு சகுனியைப் போல வெகுண்டெழுந்து மீண்டும் ஒரு தாயமாடிப் பார்க்கும். அது பாண்டவர்களின் கண்ணடைத்து திரெளபதியின் துயிலுரிந்த துச்சாதனத்தை உயிர்த்தெழச் செய்யும். பரமாத்மாக்கள் ஆடை கொடுத்து மீட்டு விட்டால் பாரதம் முடிந்தன்றோ போகும். இது முடியக் கூடாத ஆட்டமன்றோ?! சத்தியத்தை தோற்கவைத்து அசத்தியத்தை வெல்ல வைத்து, மீண்டும் சத்தியத்தை வெல்லவைத்து முடிந்தே போய்விடக்கூடாது என்று மீண்டும் மீண்டும் நிகழும் ஆட்டம்.


அவள் உதடுகள் நெற்றியை அழுத்தமாய் முத்தமிட்ட பொழுதினில் மூர்ச்சை தெளிந்து விழித்து மீண்டும் கேவிக் கொண்டிருக்கையில் எழுந்த கேள்வி ஒன்றைத்தான் யுகங்கள் தோறும் கேட்டுக் கொண்டிருக்கிறது இக்காலம்....

நான் யார்..? இவள் யார்...? காமம் கொள்வதென்பது பல்கிப் பெருகவென்றால் சுருங்கி முடிந்து போக விரும்புவது யார்? முக்தி என்ற சொல்லுக்குள் முடங்கிப் போய் இச்சை செதுக்கி, காமம் ஒதுக்கி எல்லாம் கடந்து போய் எங்கோ சேரும் ஆவலும் இதற்கு ஏன்? தொடங்கவும் அது விரும்புகிறது..... முடியவும் அது விரும்புகிறது....! நிகழவும் அது விரும்புகிறது அழியவும் அது விரும்புகிறது! கோட்பாடுகளைச் சொல்லி இதுவென்று நிறுவிக் கொள்ள எந்த ஒரு சாத்தியமுமில்லா அறுதியே..... எதன் இறுதி நீ...?

கேவிக் கேவி அழத் தொடங்கினேன்...! அவள் மீண்டும் என்னை மார்போடு இறுக்கிக் கொண்டாள்....

நின்று போயின நிமிடங்கள்!

இப்படியே சென்று விடேன் காலமே... என்று கெஞ்சவேண்டும் போலிருந்தது எனக்கு.........! அவளின் மார்புக்குள் முகம் புதைத்துக் கொண்டே மீண்டுமொரு புணர்தல் பற்றிய கற்பனையோடு கடவுளோடு விளையாடிக் கொண்டிருந்தேன்  நான்....!
தேவா சுப்பையா...


Wednesday, April 2, 2014

கலையாத கனவுகள் - 2இனி.....

எம்.ஜி.ஆர்க்கு அப்புறம் இப்படி கட்சி ரெண்டா உடையும்னு நினைச்சுக்கூட பாக்கல கேஷியர் சார்...? எப்பேர்பட்ட சகாப்தன் உயிரோட இருக்க வரைக்கும் ஒண்ணும் செய்ய முடியலையே...... அவர் செத்துப் போன ஒரே வருசத்துல கட்சி பிரிஞ்சு போயி இப்டி அடிச்சுக்கிட்டு நாறுறாங்க....... எம்.ஜி.ஆர் இல்லைன்னு ஆகிப் போச்சு.. இனி கலைஞர்தான் இப்போதைக்கு ஆள் சி.எம் போஸ்ட்டுக்கு...

செல்வம் கேசியர் ராமலிங்கத்திடம் பேசிய படியே கோப்புகளை மேய்ந்து கொண்டிருந்தான். 

என்ன ஓய்....கவர்மெண்ட் எம்ப்ளாயி அரசியல் பேசுறீர்....? தமிழ்நாட்டு மக்களை எல்லாம் நம்ப முடியாது ஓய்....இப்பத்தானே கலைஞர் சீட்ல ஏறி உக்காந்து இருக்கார் அடுத்த எலக்சன்குள்ள ஜானகி அம்மாவும், ஜெயலலிதாவும் ஒண்ணா சேந்துட மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்...... அரசியலை விடுங்காணும்... ஒங்க வொய்ஃபும் பையனும் ஜவுளி எடுக்க வர்றான்னு சொன்னீரே.... எத்தன மணிக்கு பஸ் வருது...? உம்ம வீட்டுக்கு ஆப்போஸிட்லதானே மதுக்கூர் யூனியன் ஆஃபீஸ் இருக்கு.. ஒரு போன் பண்ணி வாட்ச்மேன் கண்ணுச்சாமிய ஒரு எட்டு வீட்ல பாத்துட்டு வரச் சொல்லுங்காணும்...

இல்லை சார் அவுங்க கிளம்பி இருப்பாங்க. ராஜ்கலா ஆறு பத்துக்குதான் மைனர் பில்டிங் கிட்ட வரும். இன்னும் தான் டைம் இருக்கே... கொஞ்ச நாழி கழிச்சு கிளம்பிப் போனா சரியா இருக்கும். 

கிராமத்தை விட்டு இடம் பெயர்ந்து வேலை நிமித்தம் சிறு நகர வாழ்க்கைக்கு நகர்ந்திருக்கும் செல்வத்துக்கு எல்லாமே பாபுதான். ஐந்து அக்காக்களுக்கு பிறகு ஆறாவதாக பிறந்த செல்வத்தின் ஒரே பிள்ளை பாபு. அதனாலேயே அவ்வளவு செல்லம் கொடுத்து அவனை வளர்க்கவும் செய்தார். வாழ்க்கை எப்போதுமே எது மிகுதியாயிருக்கிறதோ அது மேல் ஒரு சலிப்பை புகுத்தி விடுகிறது. அதுவும் போக பெண்ணை செலவாகவும், ஆணை வரவாகவும் பார்த்து பார்த்து பழக்கப்பட்டு போன பொதுப் புத்தியிலிருந்து வெளிவர முடியாமல் தள்ளாடிக் கொண்டிருந்த சமூகச் சூழலில் ஆண்பிள்ளை வேண்டுமென்ற ஆசையில் அடுத்தடுத்து பெண் பிள்ளைகளை பெற்ற ஒரு விவசாயக் குடும்பத்திலிருந்து வந்த செல்வம்  ஆண் பிள்ளை பெற்றதும் அவன் குடும்பமே பாபுவைக் கொண்டாடியது. பெண் வேண்டாம் என்றில்லை இருந்தாலும் ஆண்பிள்ளை ஏன் இல்லாமல் போக வேண்டும் என்ற ஆசையும் ஐந்து பெண்களோடு பிறந்து வளர்ந்த அயற்சியும் பாபுவை சீராட்டி வளர்க்க வைத்தது.

பெண் குழந்தைகளின் விருப்பங்களும் ஆண் குழந்தையின் விருப்பங்களும் வெவ்வேறு வடிவானவை. இந்த விருப்பங்கள் கூட சமூகத் திணிப்புகளாலும் ஜீன்களில் படிந்து கிடக்கும் குணாதிசயங்களாலும் கட்டி எழுப்பப்படுவதுதான். மென்மையான பொம்மைகளை வைத்து விளையாடுவதும் இருக்கும் இடத்தில் அலுங்காமல் குலுங்காமல் விளையாடுவதும் பெண்களின் குணமென்றால்....

பையன்களின் குணம் வேறாயிருக்கும். மல்லுக்கட்டுவது.. சண்டை போடுவது, சிறுவயதிலேயே பொம்மைத் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு டுமிக்கில் ....டுமிக்கில் என்று சுட்டுக் கொண்டிருப்பது என்று பையன்களின் உலகம் வெகு அதிரடியானது. இயல்பிலேயே ஒரு சுட்டித்தனம் பையன்களிடமும், அழகுணர்ச்சி பெண்களிடமும் மெலிதாய் துளிர்க்க ஆரம்பித்து விடுகிறது. முட்டியை பெயர்த்துக் கொண்டு ரத்தம் வடியாத  பையன்கள் யாரேனும் இருக்கிறார்களா என்ன? ஆனால் காலமாற்றம் இந்த இயல்பினைச் சமன் செய்து விடும். சமன் செய்து விடும் என்று சொன்னால் பெண் பிள்ளைகள் பையன்களைப் போல அதிரடியாய் வளரமாட்டார்கள் மாறாக ஆண் பிள்ளைகள் பெண்களின் நளினத்தோடு வளரத் தொடங்குவார்கள். எதிர்காலப் பெற்றோர்கள் மிகுந்த பாதுகாப்போடு தனக்கும் தன்னைச் சுற்றி உள்ளவர்களுக்கும் மட்டும் உபயோகமாய் எப்படி வாழ்வது என்று இடைவிடாது பயிற்றுவிக்கப் போகிறார்கள்.

பாதுகாப்பு பற்றி அதிகம் பேசுகிறோம் என்றால் பயம் அதன் பின்னணியில் வலுவாய் சம்மணமிட்டு அமர்ந்திருக்கிறது என்று அர்த்தம். உணவு உண்ணாமல் உபவாசம் இருப்பவனுக்கு உணவுதான் அடிப்படையாய் நினைவில் நிற்கும். காதல் வேண்டாம் என்று சொல்பவனும் காமம் வேண்டாம் என்று சொல்பவனும் இடைவிடாமல் அதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்கிறான் என்று அர்த்தம். 

பாபுவின் பயங்கரச் சேட்டைகளை ரசித்த செல்வத்திற்கு ஒரே மகன் பாதுகாப்பாய் இருக்க வேண்டுமே என்ற பயமும் இருந்தது. எங்காவது போய் விழுந்து எழுந்து வந்து விடுகிறான். எதிலாவது மோதிக் கொள்கிறான், யாரையாவது அடித்து விட்டு வந்து விடுகிறான் யாரிடமாவது அடிவாங்கிக் கொண்டு வந்து விடுகிறான்....எத்தனை முறை கண்டித்தாலும் மறுபடி அதே சேட்டை, வாலுத்தனம்தான்.....


ஆறே கால் ஆச்சு இன்னமும் ராஜ்கலா வரலையே....?  மணியைப் பார்த்துக் கொண்டிருந்த செல்வத்திற்கு ஒரு வேளை சீக்கிரமே பஸ் போய்விட்டதா என்ற சந்தேகம் வந்தது. பக்கத்திலிருந்த பெட்டிக்கடையில் போய் விசாரித்தான்...

இல்லண்ணே இன்னும் வரல....வர்ற நேரந்தான்... பெட்டிக்கடைக்காரரின் பதிலைக் கேட்டு கொஞ்சம் சமாதானமான செல்வத்திற்கு அந்த வழியே வந்த எல்லா பேருந்துமே ராஜ்கலாவைப் போலவே இருந்தது. மணி ஆறே முக்கால் ஆகியும் பேருந்து வரவில்லை...

செல்வத்துக்கு ஏதோ தப்பாகப்பட்டது. பக்கத்தில் இருந்த எஸ்டிடி பூத்துக்குப் போய் மதுக்கூர் யூனியன் ஆஃபீசின் நம்பரை தட்ட...

மானேஜர் சாரா...?

சார் நான் பட்டுக்கோட்டை பஞ்சாயத்து யூனியன் ஆபிஸ் அக்கவுண்டண்ட் பேசுறேன்.......
....
நல்லா இருக்கேன் சார்...
.....
வீட்ல துணி எடுக்க வர்றேன்னு சொல்லி இருந்தாங்க....நாலே முக்கால் ராஜ்கலாவுல வரச்சொல்லி இருந்தேன்....வண்டி வரலை.. இன்னும்...
...
...
...
என்னா சார் சொல்றீங்க...ராஜ்கலா தளிக்கோட்டை பாலத்துக்கு முன்னாடி கவுந்துருச்சா....?

யார் சார்  சொன்னது....செல்வம் பதறினான்....தொண்டை அடைத்தது.....

கிராமசேவக் வீரமணி இப்போதான் டி.டி.ஓ ஆபிஸ் போய்ட்டு பட்டுக்கோட்டையில இருந்து வந்தாரு... அவரு பைக்ல வரும் போது பாத்து இருக்கார்...! தளிக்கோட்டை பாலத்துக்கு முன்னாடி ரைட் சைட்ல.... வயலுக்குள்ள வண்டி கவுந்துடுச்சாம்... பெரிய ஆக்ஸிடண்ட்டாம்.... அதுலயா நம்ம வீட்ல போய் இருக்காங்க....? செல்வத்திடம் அவசரமாய் கேட்டார் மதுக்கூர் பஞ்சாயத்து யூனியனின் மேனேஜர்....

செல்வம் கதறி அழுதபடியே சொன்னான்.....சார்....ப்ளீஸ்.... சார்.... ப்யூன கொஞ்சம் நம்ம வீட்டுக்கு அனுப்பி வீட்ல கிளம்பிட்டாங்களான்னு பாத்துட்டு வரச் சொல்லுங்க சார்....நான் ஒரு பத்து நிமிசத்துல திரும்ப கூப்பிடுறேன்....

செல்வம் போனை வைத்தான்....! 

நெஞ்சுக்குள் இருந்து வெடித்து இதயம் வெளியே வருவது போல துடித்துக் கொண்டிருந்தது. கடவுளே...முருகா, காளியாத்தா, வினாயகா அவுங்க இன்னிக்கு கிளம்பி வந்து இருக்கக் கூடாது....எஸ்டிடி பூத் கேபினுக்குள் வேகமாய் ஓடிக் கொண்டிருந்த  மின் விசிறி அவன் சட்டை வியர்வையில் நனைவதை ஒன்றும் செய்யமுடியாமல் வெறுமனே ஓடிக் கொண்டிருந்தது.

பாபுவை நினைத்துப் பார்த்தான். மனைவியின் முகம் நினைவுக்கு வந்தது. பன்னிரண்டு வருட திருமண வாழ்க்கையின் அன்னியோன்யம்,  சிறு சிறு சண்டைகள் எல்லாம் வரிசையாய் மனதில்  மின்னல் வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தன. ப்யூன் வீட்டுக்கு போய்க் கொண்டிருப்பான்....போய் பார்த்து....

வீட்லதான் சார் இருக்காங்க.......உங்க வீட்ல உடம்பு சரி இல்லையாம் அதனால இன்னிக்கு வரலையாம்,  உங்களுக்கு போன் பண்ணச் சொல்லி பாபுவ நம்ம ஆபிசுக்கு போடான்னு கிளப்பிட்டு இருந்தாங்க.. நானே போய் பாத்துட்டேன்.....சார்....

ப்யூன் இப்படி போனில் சொல்லிவிட மாட்டானா....

கவலையாய் வாட்ச்சைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒவ்வொரு வினாடியும் செல்வத்திற்கு மரண அவஸ்தையோடு நகர்ந்து கொண்டிருந்தது. காலையில் பாபுவை அடித்தது ஞாபகம் வந்தது. லீவு நாளுனா தூங்கித் தொலைக்க வேண்டியதுதானே....முதுகில் ஓங்கி ஒரு போடு போட்டான்....பாபுவை...

பாபு தட்டி விட்ட காபி டம்ளர் டேபிளில் இருந்து உருண்டு நடுக் கூடத்தில் கிடந்தது.

அலுவலகம் கிளம்பும் அவசரத்தில் அடிவாங்கிய பாபு.......செல்வத்தை இப்போது மனதுக்குள் இம்சை செய்தான்.

அவன் அலுவலகத்துக்கு போன் செய்தான். சார்....ராஜ்கலா கவுந்துடுச்சுன்னு சொல்றாங்க....கேஷியர் சார்....., ஆமாம் நான் மதுக்கூர்க்கு போன் பண்ணி இருக்கேன்...ப்யூன் வீட்டுக்கு போய் இருக்கார்....
....
....
....
ஆமா சார் நான் என்னனு கேட்டுட்டு சொல்றேன்.... நம்ம ஜீப் ஆபிஸ்லதானே சார்  இருக்கு..? கேட்டுக் கொண்டே சனிக்கிழமை எங்கும் வெளியில் சென்றிருக்க வாய்ப்பில்லை என்றும் நினைத்தான் செல்வம்.

மறுபடி மதுக்கூர் யூனியன் ஆஃபிசின் நம்பரைத் தட்ட......போனை எடுத்த மேனேஜர் போனை வாட்ச் மேனிடம் கொடுத்தார்....


வாட்ச்மேன் பேசிக் கொண்டே இருக்க...... போனை படார் என்று.... வைத்தபடியே.... சுவரோரமாக இருந்த சேரில் " பொதேர்.." என்று விழுந்தான் செல்வம்.

செல்வத்தின் மனைவியும் மகனும் பட்டுக்கோட்டைக்கு சென்று விட்டனர் என்றும் ராஜ்கலாவில் போகத்தான் கிளம்பிப் போனார்கள் என்றும் பக்கத்து வீட்டுக்காரர்கள் சொன்ன செய்தியை செல்வத்திடம் சொல்லிவிட்டு....

கவலையோடு போனை வைத்த வாட்ச்மேன் கண்ணுசாமி சோகமாய் மேனேஜரைப் பார்த்தான்....
                                                           ....தொடரும்....
தேவா சுப்பையா...
Tuesday, April 1, 2014

கலையாத கனவுகள் - 1

மணியைப் பார்த்தான் செல்வம்.. மூன்றரை ஆக இன்னும் பத்து நிமிடம் இருந்தது. நாலே முக்காலுக்கு மதுக்கூர்  வந்துச்சுன்னா பஸ்ஸ்டாண்ட் போய் அப்புறம் ஊரை விட்டு கிளம்ப எப்டியும் ஒரு அஞ்சு அஞ்சே காலாச்சும் ஆயிடும். அஞ்சே காலுக்கு மதுக்கூரை விட்டுக் கிளம்பினுச்சுன்னா படப்பைக்காடு, கண்டியங்காடு, வேப்பங்குளம் பண்ணை, தளிக்கோட்டை பாலத்துக்கு ஒரு அஞ்சே முக்காலுக்கு வந்து சேரும். முத்துப்பேட்டையில இருந்து வர்ற வண்டி பெருமகளூர் போறவரைக்கும் கூட்டம் அதிகமாத்தான் இருக்கும். எப்டிப் பார்த்தாலும் ஒரு ஆறு இல்ல ஆறே காலுக்கு பட்டுக்கோட்டை மைனர் பில்டிங்கிட்ட வந்துடும் சீக்கிரம் வேலைய முடிக்கணும்.....

யோசித்தபடியே பைல்களுக்குள் மூழ்கிக்கிடந்த செல்வம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் கணக்கர். மனைவியையும் மகனையும் தீபாவளிக்கு ஜவுளி எடுக்க நாலேமுக்கால் பேருந்து ராஜ்கலாவில் வரச்சொல்லியிருந்தவர் சீக்கிரம் வேலையை முடிக்க பரபரத்துக் கொண்டிருந்தார். மதுக்கூர் தஞ்சாவூர் மாவட்டத்திலிருக்கும் ஒரு பேரூராட்சி. மதுக்கூர் ஜனத்தின் எல்லா தேவைகளையும் பெரும்பாலும் தீர்த்து வைப்பது பட்டுக்கோட்டைதான். இப்போதெல்லாம் பட்டுக்கோட்டை தாண்டி தஞ்சாவூர் தாண்டி திருச்சி வரை துணி எடுக்கச் செல்லும் மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். பூம்புகார், சில்க் ஹவுஸ், ராஜா சில்க் பேலஸ், மகாராணி இவைதான் பட்டுக்கோட்டையின் பிரபலமான கடைகள்.. மீதி அத்தனை கடைகளும் அதற்கு பிறகு வந்ததுதான்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ராசி. அந்த ராசியை அனுசரித்தே ஜவுளிக் கடைகளின் கூட்டமும் நிரம்பி வழியும். எப்போது துணி எடுக்கப் போனாலும் செல்வம் போவது பூம்புகாருக்குத்தான். கடை முதாலாளி ரொம்ப ராசிக்காரர் என்று செல்வம் தன்னுடைய சக ஊழியர்களிடம் சொல்வதும் உண்டு. என்ன சார் பெரிய துணிப் பை எதுவும் கிடையாதா என்று புதுத்துணியைப் போட்டுக் கொடுக்கும் பிளாஸ்டிக் பையை கண்களால் அளவெடுத்துக் கொண்டே முதலாளியைப் பார்ப்பார்....

பேக்கிங் செய்து கொடுப்பது ஒரு இடம். முதலாளி அமர்ந்திருப்பது இன்னொரு இடம்... செல்வத்தின் குரலைக் கேட்டதும் பதறியபடியே முதலாளி ஏய்....தம்பி சாருக்கு பெரிய பையா எடுத்துக் கொடு என்று அதட்டல் போட்டபடியே கல்லாப்பெட்டியில் இருந்து இரண்டு மூன்று மணி பர்ஸ்களை எடுத்து செல்வத்திடம் கொடுப்பார். துணியை நியாயமான விலைக்கு வாங்குகிறானோ  இல்லையோ செல்வத்துக்கு இப்படி துணிப்பையும்,லெதர் பேக்கும், மணிப்பர்ஸும் வாங்கினால்தான் துணி எடுத்த திருப்தியே கிடைக்கும்....! கல்யாணம், காதுகுத்து, எல்லாத்துக்கும் பூம்புகார் லெதர் பேக் செல்வத்தின் கக்கத்தில் இருக்கும். சாமான் செட்டுக்கள் எல்லாம் பூம்புகார் மஞ்சள் பையில் இருக்கும். 

ஒழுங்கா மரியாதையா இந்த வாலுப் பைய பாபு சுமதி கூட வருவானா..? மூக்கில் தொங்கிக் கொண்டிருந்த கண்ணாடி வழியே பைலைப் பார்த்துக் கொண்டே வாயிலிருக்கும் வெற்றிலை எச்சில் பைலில் விழுந்து விடாமல் லாவகமாய் முகவாயைத் தூக்கிக் கொண்டு தன் 10 வயது மகனைப் பற்றி மெலிதான கவலையோடு யோசித்துக் கொண்டிருந்தான் செல்வம்.

                                                                         ***


ஒழுங்கா அளடா..... நான் கேட்டது நூறு. அடிச்ச இடத்துல இருந்து குழி கிட்ட சரியா 100 வருது தண்ணி எல்லாம் ஒண்ணும் குடிக்கல... ஏம்பி... என்ன ஏய்க்கிறியளா.... எங்களுக்கும் கிட்டிப்புல்லு விளையாட தெரியும். பாபு சுரேஷோடு சண்டை போட்டுக் கொண்டிருந்தான். ஓய்....புளுகு மூட்டை இங்க பாரு மறுபடி அளக்குறேன்.... சொல்லியபடியே கிட்டிப்புல் விழுந்து கிடந்த இடத்திலிருந்து கிட்டிக் கம்பால் சுரேஷ் அளக்க ஆரம்பித்திருந்தான்....95...96....97...98.....99 ஓய்....பாத்தீல்ல 100க்கு கிட்டிக் கம்பு குழிக்குள்ள போவுது....

சுற்றி இருந்த குட்டி நீதிபதிகள் தீர்ப்பினை சுரேஷ்க்கு சாதகமாக்க....

10 சூ... பத்து வாளக்கா புடிடா.... தம்பி எங்க போய் கட்டக் கடைசில கிட்டிப்புல்லு உழுவுதுதோ அங்க இருந்து மூச்சு விடாம கத்திக்கிட்டே வரணும் சூ...ஊஊஊஊஊஊஊஊஉன்னு.... இடையில வுட்ட அங்க இருந்து மறுபடி அடிப்பேன்.....

தலையெல்லாம் கலைந்து போய் முகம் எல்லாம் வியர்க்க, முட்டிக்கால் வரை இருந்த புழுதியோடு.. சரி தம்பி.... தோத்தா தோத்துட்டுப் போறேன்...நீங்க சரியா அளந்தா நூறு வரும் ஆனா இருக்கட்டும்....சூ நான் புடிக்கிறேண்டா...நான் எல்லாம் ரஜினியாந்து மாதிரி....கெட்டவைங்கள எதித்து நின்னு ஜெயிப்போம்...

கிட்டிப்புல் காற்றில் பறந்து எங்கோ போய் விழுந்தது. அந்த இடத்திலிருந்து ஆரம்பித்தான் பாபு...ச்சூஊஊஊஊஊஊஊஊஊஊஊ இடையிலேயே மூச்சை விட்டு விட....மறுபடி....சுரேஷ் கிட்டிப்புல்லை காற்றில் பறக்க விட்டான்...பாபு சூ பிடிப்பதும் பாதியில் விடுவதும்....சுரேஷ் அடிப்பதும் மீண்டும் பாபு பிடிப்பதும் தொடர்ந்து கொண்டே இருக்க....

டேய்....நான் பட்டோட்டைக்கு போறேண்டா... எங்க அப்பா வரச்சொல்லி இருக்காங்க அம்மாவோட நாலே முக்கால் ராஜ்கலால போறேன்.... நாளைக்கு மிச்சத்த புடிக்கிறேண்டா....சுரேஷிடம் டீல் பேசினான் பாபு. ஏம்பி என்ன...?  புடிக்க முடியலேன்னா... முடியலேன்னு சொல்லும்ம்பி.... விட்டுதர்றேன்... தோத்துப்புட்டு பொய் சொல்லி தப்பிக்கப் பாக்குறியா....

சுரேஷ் கேட்டதும் ரோஷமாக சரி நான் ஒண்ணும் பொய் சொல்லல.. நீ அடி நான் புடிக்கிறேன்.. .மறுபடி ரஜினி ஆனான் பாபு.


                                                                ****

குளித்து விட்டு வந்து புடவையைக் கட்டிக் கொண்டிருந்தவள்..... இந்த குரங்கு எங்க போச்சுன்னு தெரியலையே.... பஸ் நாலே முக்காலுக்கு வந்துடும். சீப்பை வாயில் கடித்தபடி தலையைப் பின்னிக் கொண்டிருந்த சுமதிக்கு பட்டுக்கோட்டைக்கு போவது என்றால் கொஞ்சம் சந்தோசம்தான். 24 மணி நேரமும்  அப்பனுக்கும் மகனுக்கும் அவிச்சு கொட்டறதுக்குன்னே எங்காத்தா என்னை பெத்தெடுத்து இருப்பா போலிருக்கு என்று அடிக்கடி சுமதி சொல்வதற்கு பின்னால் இயந்திரம் போன்ற அவளது தினசரி வேலைகள் இருக்கும். செல்வத்துக்கு 10 மணிக்குதான் ஆஃபீஸ் ஆனாலும் 7 மணிக்கு எழுந்து காப்பி போட்டுக் கொடுத்து காலைக்கு இட்லி அவிச்சு, சட்னி வச்சு, சாப்டக் கொடுத்து, மதியத்துக்கு  லஞ்ச் கட்டிக் கொடுத்து, ஆளைப் பேக்கப் பண்ணிப்புட்டு அஞ்சாவது படிக்கிற அறுந்த வாலுக்கு சாப்பாடு போட்டு ஊட்டி விட்டு, தலை சீவி பவுடர் போட்டு டவுசர் போட்டு சீவி சிங்காரிச்சு பள்ளிக் கூடத்துக்கு அனுப்பிபிட்டு பத்து மணிக்கு ஆறிப்போன காபிய மறுபடி சுட வச்சுக் குடிச்சு புட்டு, வீடு கூட்டி, பாத்திரம் துலக்கி, துணி துவைச்சு, மதியத்துக்கு சமைச்சு, எல்லாம் முடிச்சு செத்த நேரம் படுக்கலாம்னு தலை சாய்க்கிறப்ப நாலரை மணிக்கு பள்ளிகூடம் விட்டு பாபு வந்துடுவான்....மறுபடி காபி போட்டுக் கொடுத்து, அவனுக்கு கை கால் கழுவி விட்டு சாப்பாடு போட்டு, ட்யூசன்க்கு கொண்டு போய் விட்டு...

சுமதிக்கு அவ்வப்போது இது போன்ற சனிக்கிழமைகள் கிடைக்கும். நல்லது கெட்டதுக்கு பட்டுக்கோட்டைக்குப் போய் துணி எடுக்கும் சாக்கில், இரவு எதுவும் சமைக்காமல் பாபு மேல் பழியைப் போட்டு செல்வத்தை சம்மதிக்க வைத்து ஏதாவது ஒரு ஹோட்டலில் டின்னரை முடித்து விட்டு வீடு திரும்பும் சுகம்தான் அவளுக்கு சொர்க்கம்.

தலை பின்னி முடித்தவள் மணி நாலே கால் ஆனதைப் பார்த்து திடுக்கிட்டாள். அடப்பாவி பாபு.. பஸ் வர இன்னும் அரை மணி நேரந்தானடா இருக்கு அடுத்தபஸ் ஆறு பத்துக்குத்தானேடா அதுல கொள்ளைக் கூட்டம் இருக்குமே.... வாசலில் நின்று தெருவை பார்த்துக் கொண்டே இருந்தவள்.. லேட்டா போனா இந்த மனுசன் முனகியே தீத்துப்புடுவாரே நம்மள.....

யோசித்தபடியே கேட்டில் நின்று பார்த்துக் கொண்டிருந்தவள்...... தெரு முனையில் அழுக்கு மூட்டையாக பாபு ஓடி வருவதைப் பார்த்து சந்தோசமானாள்.
                                               
                                   

                                                            ...தொடரும்...

தேவா சுப்பையா...