Pages

Wednesday, April 16, 2014

கலையாத கனவுகள் - 3இதுவரைஇனி...


என்ன செய்வதென்று தெரியவில்லை செல்வத்திற்கு அவசரம் அவசரமாய் தன் அலுவலகம் நோக்கி ஓடினான். கேஷியர் ராமலிங்கத்திடம் செய்தியைச் சொல்லி கதறி அழுதான். அதே நேரத்தில் பேருந்தில் அடிபட்டவர்களை எல்லாம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து கொண்டிருப்பதாக அவர்களுக்கு செய்தி கிடைத்தது. பதறியபடியே அரசு மருத்துவமனைக்கு ஓடினான் செல்வம்.

ஏங்க ராஜ்கலா பஸ் ஆக்ஸிடெண்ட் கேஸ் எல்லாம் எங்க வச்சு இருக்காங்க...? தொண்டை கம்மியது செல்வத்திற்கு....

அதோ அந்த பக்கம் போங்க சார்... லெப்ட்ல திரும்பி.... நேரா போங்க அங்க பெரிய வார்டு இருக்கு அங்கதான் கொண்டு வந்து போட்டு இருக்காங்க... இன்னொரு வேன்ல மிச்ச இருக்க ஆளுங்கள கொண்டு வர்றாங்க சார்..... ஸ்பாட் அவுட் எப்டியும் பத்து பதினைஞ்சு பேராவது இருப்பாங்கன்னு சொல்லிக்கிறாங்க.... 

ப்ரண்ட் டயர் பர்ஸ்ட் ஆகி இருக்கும் போல வண்டிய இழுத்துக் கொண்டு போய் வயக்காட்ல தள்ளி கவுத்துருச்சு சார்....! முன்னாடி உக்காந்து இருந்த நிறைய பொம்பளைங்க மேல டீசல் கொட்டி உடம்பெல்லாம் வெந்து போய் கிடக்காங்க.... பொம்பளைங்க, வயசானவங்க, சின்னப் பிள்ளைங்கன்னு சகிக்கல சார் பாக்கவே....

செல்வம் கதறியபடியே மருத்துவமனை ஊழியர் கை காட்டிய திசையில் ஓட கேஷியர் ராமலிங்கமும் இன்னும் இரண்டு மூன்று அலுவலக நண்பர்களும் அவன் பின்னால் ஓடினார்கள்....

ஒரே கதறல் ஒலி. வலியால் துடித்துக் கொண்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த மனிதர்களின் மரணப் போராட்டத்தை பார்க்கவே சகிக்க முடியாது என்பது ஒருபுறமென்றால்.... அந்த துக்க நெரிசலுக்கு நடுவே உயிருக்கு உயிரான உறவுகளைத் தேடுவது என்பது மிகப்பெரிய சாபம். ஒரு தீபாவளி சமயத்தில் சாட்டை கொளுத்திக் கொண்டிருந்த பாபுவின் கையில் சிறு தீக்காயம் பட்டதற்கு அவன் பதறியழுது செல்வத்தின் கழுத்தைக் கட்டிக் கொண்டு அப்பா...அப்பா... என்று அழுதது செல்வத்தின் நினைவில் எட்டிப்பார்த்தது.

மனிதர்களுக்கு மரணம் எப்படி வேண்டுமானாலும் சம்பவிக்கலாம். வியாதியால் மரணிக்கும் போதும், தற்கொலைகள் செய்து கொண்டு மரணிக்கும் போதும், முதுமையால் மரணிக்கும் போதும் காலம் அங்கே ஏதோ ஒரு நியாயத்தை மறைமுகமாய் ஏற்படுத்தி வைத்து விடுகிறது.. ஆனால் விபத்து எந்தவித நியாமுமற்ற காலத்தின் வன்முறை. அதுவும் எந்தவித தவறுமில்லாமல் யாரோ செய்யும் தவறினால் வேறு யாரோ ஒருவனுக்கு சம்பவிக்கும் மரணம் மிகப்பெரிய கொடுமை. கையிலிருந்த பொருளைத் தட்டிப் பறித்தது போல மனிதர்களின் வாழ்க்கையைக் கொய்து கொண்டு போகும் சூழல்கள் மிகவும் ஈனத்தனமானவை.

மதியம் உணவுண்டு மகிழ்வாய் பேருந்திலேறி பயணித்து எங்கெங்கோ செல்ல விரும்பிய மனிதர்களை ஒரு கவனக்குறைவினால் ஏற்படும் விபத்து தின்று தீர்ப்பதற்கு என்ன விதமான நியாயத்தை இயற்கை வைத்திருக்கிறது என்றுதான் தெரியவில்லை. பயணித்தவர்களுக்காக எத்தனை ஜீவன்கள் காத்துக் கொண்டிருக்கின்றனவோ.... எத்தனை உயிர்கள் பதைபதைத்து இப்படி செல்வம் போல காயம் பட்டவர்களுக்கு நடுவே..... தன் சொந்தங்களை தேடிக் கொண்டிருக்கின்றனவோ....

யோசித்தபடியே செல்வம் அடுத்த வேன் வருகைக்காக காத்திருந்தான். அதுவரையில் கொண்டு வந்து குவிக்கப்பட்ட உடல்களுக்கு மத்தியில் அவன் மனைவியையும் மகனையும் கண்டுபிடிக்க முடியவில்லை....

" என்ன பெத்த அய்யா........போய்ட்டியே........"

வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டு யாரோ ஒரு பெண்மணி அழுதபடியே மார்ச்சுவரிக்கு சென்று கொண்டிருந்த ஒரு போர்த்தப்பட்ட உடலின் பின்னால் ஓடிக் கொண்டிருந்தாள்.....

செல்வம் சுவற்றில் ஒற்றைக் காலைக் கொடுத்து சாய்ந்தபடியே வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். இருளத் தொடங்கி இருந்தது. அது அமாவாசையை நோக்கிய வானத்தின் நகர்வாயிருக்க வேண்டும். நட்சத்திரங்கள் மட்டும் தூரத்திலெரியும் பிணத்திலிருந்து வெளிப்படும் தீச்சுவாலையாய் எரிந்து கொண்டிருந்தன. 

ஓ... காலமே உனக்கு என்னதான் வேண்டும்.....?

ஏன் இப்படி கூட்டம் கூட்டமாய் மனிதர்களைப் படைக்கிறாய்? ஏன் பல்கிப் பெருகிக் கொண்டே இருக்கிறது இந்தப் பிரபஞ்சம்? எதை நோக்கியது இந்தப் பயணம்.....? என்னவிதமான ஆட்டம் இது...? எல்லாம் உண்டென்று சொல்லி அதை இல்லை என்று அறிந்து கொள்ள வேண்டி  சூழல்களை விதைத்து.... புரிந்து தெளிய வேண்டிய நிர்ப்பந்தம்தான் என்ன...? மொத்தத்தில் ஏன் நீ கொடுக்கிறாய்...? ஏன் நீ எடுக்கிறாய்...? சொந்தங்களையும் பந்தங்களையும் ஏன் நீ உருவாக்குகிறாய்...? ஏன் சூழல்களைக் கொடுத்து அவற்றை நீயே அறுக்கிறாய்..? இந்த வாழ்க்கையின் நோக்கம்தான் என்ன....?

ஜனித்து வளர்ந்து நகரும் இந்த வாழ்க்கையில் உடல்தான் மையமாயிருக்கிறது. உயிர் வளர்க்க உணவு, உணவின் அடிப்படை பசி, பசி தீர பிழைப்பு, பிழைத்து நிற்கையில் தன்னிச்சையாய் தோன்றும் காமம், காமத்தின் அடிப்படையில் புதிய பொறுப்புகள், புதிய பொறுப்புகளுக்காய் பொருள்  தேடல், பொருள் தேடலை ஒப்பிட்டு சந்தோசப்படுத்தி கொள்ள ஒரு சமூகம், கீழே விழுந்தால் சிரிக்க நான்கு பேர்கள், தூக்கிவிட நான்கு பேர்கள், விவாதிக்க நான்கு பேர்கள்,வெற்றி பெற்றால் போற்ற நான்கு பேர், தூற்ற நான்கு பேர், நல்லவனென்று சொல்ல நான்கு பேர், கெட்டவன் என்று சொல்ல நான்கு பேர்...., பணக்காரர்களெல்லாம் வென்றவர்களாகவும், ஏழைகள் எல்லாம் தோற்றவர்களாகவும் கருதி நகரும் வாழ்க்கைச் சூழலே.....எங்கிருந்து தருவிக்கிறாய் இது போன்ற நச்சு நிறைந்த பொது புத்திகளை...?

சுமதியை முதன் முதலில் பெண்பார்க்க சென்ற போது மாடு பார்க்க வந்திருக்கிறார்கள் என்று சொல்லித்தான் சுமதியின் அண்ணன் வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். பெண் பார்க்க வருகிறோம் என்று சொல்லி அமர்க்களமாய் மாப்பிள்ளை வீட்டார் போய் அமர்ந்து கொண்டு பஜ்ஜி சொஜ்ஜி எல்லாம் தின்று விட்டு காபி குடித்துக் கொண்டே பெண்ணைப் பார்த்து தீர்மானிக்கும் வழக்கம் எல்லாம் தமிழர்கள் மரபில் கிடையவே கிடையாது. ஆண்களைப் போல அல்ல பெண்கள். பெண்கள் ஒரு ஆணைப் பார்த்து அவனைப் பிடித்துவிட்டால் பின் வேறு ஒருவனை மாற்றிக் கொள்வதென்பது வெகு கடினம். இந்தக் காலத்தில் பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் சென்று பெண்ணைப் பார்த்துவிட்டு வீட்டில் போய் முடிவு சொல்கிறோம் என்று சொல்லி மாப்பிள்ளைக்கு பிடிக்கவில்லை எனில் அந்தக் கல்யாணம் நின்றே போய்விடும் அவலம் இருக்கிறது. எங்கிருந்து முளைத்தது இந்த ஆணாதிக்க கொம்பு என்பதுதான் தெரியவில்லை. 

பெரும்பாலும் முன்பெல்லாம் பெண் பார்க்கச் செல்பவர்கள் ஏதோ ஒரு வேலை நிமித்தமாய் போவது போல எதார்த்தமாய் பெண் வீட்டிற்குள் போய் ஒப்பனைகள் இல்லாதப் பெண்ணைப் பார்த்துவிட்டு, பெண் பிடித்து இருந்தால் ஆணின் புகைப்படத்தை பெண்ணிடம் கொடுத்து சம்மதம் இருப்பின் பின் சம்பிரதாயமாக நேரில் பெண்ணையும் மாப்பிள்ளையையும் காணச் செய்து முடிவு செய்வார்கள். அப்போது கூட பெண்ணுக்கு மாப்பிள்ளை வேண்டாம் என்று மறுக்க முழு உரிமை இருக்கிறது.  அடுப்படியில் வேலை செய்து கொண்டிருந்த சுமதி மாடு பார்க்க வந்தவர்களுக்கு தண்ணீர் கொடுக்க அள்ளிச் சொறுகிய பாவடையோடு தாவணியை சரி செய்து கொண்டு தூக்கி கட்டிய கொண்டையோடு வியர்வை வழியும் முகத்தோடு வந்திருந்தாள். அப்போதுதான் சுமதியை நேருக்கு நேராய் பார்த்தது. சுமதி அவ்வளவு அழகு. அழகுக்கு ஆடம்பரம் தேவையில்லை என்பதை அந்த தருணத்தில்தான் உணர்ந்து கொள்ள முடிந்தது.

சுமதி வீட்டில் ஒப்புதல் சொல்லும்வரை செல்வத்தின் தூக்கம் தொலைந்தே போயிருந்தது. சம்பிரதாயங்கள், நேருக்கு  நேராய் அவள் விழிகளோடு விழிகள் மோதிக் கொண்ட தருணத்தில் உண்டான அலாதியான சந்தோசங்கள், திருமணத்திற்குப் பிறகு ஏற்பட்ட புரிதலின்மைகள், அந்த புரிதலின்மையிலிருந்து பிறந்த புரிதல்கள்..... ஐந்தாண்டுகள் கீழும் மேலும் ஆடி அலைபாய்ந்து பின் நிதானமான திருமண பந்தம் செல்வத்தின் கண்களில் கண்ணீராய் வழிந்து கொண்டிருந்தது....

எது நிகழும் அடுத்து என்று தெரியாத வாழ்க்கையினூடே எத்தனை எத்தனை அகம்பாவம் கொண்ட மனிதர்கள், மூன்று தலைமுறைக்கும் சேர்த்து திட்டமிடும் திமிர்கள்....!!!!!

உடல் முழுதும் தீக்காயங்களோடு இரண்டு பருத்த பெண்மணிகள் துடி துடித்துக் கொண்டிருந்ததை பார்த்துவிட்டு வெளியே வந்த செல்வத்திடம் அந்த இரண்டு பேரில் ஒருவர் இறந்து போனதை ஒருவர் அழுதபடியே கூறிச் சென்றார். பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை அழுகை ஓலங்களாலும், புலம்பல்களாலும், ஒப்பாரிகளாலும் நிரம்பிக் கிடந்தது, செல்வத்தைப் போன்ற பலர் தங்களது உறவுகளை மஞ்சள் குண்டு பல்புகளின் வெளிச்சத்தில் தேடிக் கொண்டிருந்தனர்......

சுமதிக்கும், பாபுவிற்கும் என்ன ஆகி இருக்கும் என்ற பதை பதைப்போடு செல்வம் நின்று கொண்டிருந்த போதே காயப்பட்டவர்களை ஏற்றி கொண்டு அடுத்த வாகனம்  மருத்துவமனை வளாகத்திற்குள் சீறிப் பாய்ந்து வந்து கொண்டிருந்தது....

செல்வம்.... வாகனத்தை நோக்கி உயிரைக் கையில் பிடித்தபடி ஓடிக் கொண்டிருந்தான்...


                                                      ***


எட்டாம் நம்பர் பஸ் பிதுங்கி வழியும் கூட்டத்தை ஏற்றிக் கொண்டு பட்டுக்கோட்டையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. 

ஓய்.... ஏன்யா கால மிதிச்சுக்கிட்டு அம்புட்டு மும்முரமா அங்கிட்டு எட்டிப்பார்க்குற....

பெரியவர் ஒரு இளம் வயது பையனை அதட்டினார்....! அட அந்தப் பக்கம் ஏதோ பஸ்ஸு கவுந்து கிடக்குது பெரியவரே....என்று பையன் சொன்னதைக் கேட்டு பெரியவர் எட்டிப்பார்க்க...பஸ்ஸுக்குள் இருந்த கூட்டம் மொத்தமும் கவிழ்ந்து கிடந்த ராஜ்கலா பஸ்ஸை முண்டியடித்துக் கொண்டு எட்டிப்பார்த்தனர். காவல்துறை வாகனங்களும், தீயணைப்பு வண்டிகளும் என்று நிரம்பிக்கிடந்த சாலையை அலுங்கி குலுங்கி எட்டாம் நம்பர் பஸ் கடந்து கொண்டிருந்தது....

பேருந்தில் உள்ளே கோபமாக அமர்ந்திருந்த சுமதிக்கு வெளியே என்ன நடக்கின்றது என்று யோசிக்க முடியாத அளவு கோபம் தலைக்கேறி இருந்தது. பாபுவை நறுக் என்று கிள்ளினாள்.... சனியன் பிடிச்சவனே.... நீ வெள்ளாண்டுட்டு லேட்டா வந்ததால பஸ்ஸ விட்டுட்டு இப்போ இம்புட்டு நேரங்கழிச்சு போகவேண்டியதா இருக்கு...

அந்த மனுசன் மைனர் பில்டிங் கிட்ட நிக்குறாரோ இல்ல ஆஃபிசுக்குப் போய்ட்டாரோ தெரியலை... தறுதலையா வந்து பொறந்து இருக்கியே எங்களுக்குன்னு.... சொல்லிக் கொண்டே.... மறுபடி பாபுவின் தலையில் அடித்தாள்... பாபு அழுதபடியே கண்ணைக் கசக்கிக் கொண்டிருந்தான்.

பேருந்து முழுதும் ராஜ்கலா பஸ் கவிழ்ந்ததைப் பற்றியே எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.  சுமதி எதைப் பற்றிய கவனமும் இன்றி... காத்திருக்கும் கணவரிடம் தாமதமாய் வருவதற்கு திட்டு வாங்கவேண்டுமே என்ற பதட்டத்தில்.... ஜன்னலுக்கு வெளியே தெரிந்த கருவானத்தின் நட்சத்திரங்களை  வெறித்துக் கொண்டிருந்தாள்.

பஸ் பட்டுக்கோட்டையை நெருங்கிக் கொண்டிருந்தது.                                                       - முற்றும் -
தேவா சுப்பையா


No comments: