Pages

Tuesday, August 31, 2010

பொய்மை....!பார்வைகளின் பரிணாம மாற்றத்தில்
பரிமாறிக் கொண்ட மின்சார
ஒத்தடங்களின் ஓரங்களில்
தேங்கி நின்ற காமம்...
உடைப்பட்ட கணத்தில்
தகிப்புகளுக்கிடையேயான...
முடிவுறா யுத்தங்களின்...
மூர்க்கத்தில்..கொடுத்து எடுத்து
எடுத்து கொடுத்து...
எல்லாம் தொலையும் உச்சத்தில்
கரைந்து போன நிமிடங்களில்
அழுந்தி தள்ளப்பட்ட...
காலமில்லா பெருவெளியில்
மிதந்து..மிதந்து போக்கிடம்
மறைந்து...பொய்மை அழிந்த
திருப்தியின் வேர்களில்
மெளனாமாய் மூழ்கி இருக்கையில்
ஆண் என்ன? பெண் என்ன?

ஜனித்ததெல்லாம் அறிந்த..
சூட்சுமத்தின் சுவடுகள்..
வேண்டுமென்றே ஒளிக்கப்பட்டு
புலன்கள் அறியா கோடுகளில்
பிரிந்து கொண்டு...இடும் சட்டங்களின்
பின்புலத்தில் கேளியாய் ஒளிந்திருக்கின்றன..
பொய்மையின் சித்திரங்கள்...
மெளனமாய் கோடுகளை அழிக்கும்
காமமோ பொழுதுகளை அழித்து விட்டு
பெரும்பாலும் மலர்கிறது...
அர்த்தமற்ற ஜாமங்களில்...!


விளக்கம் வேண்டுமென்று தோணவில்லை....ஒன்று மட்டும் சொல்லத் தோன்றுகிறது. ஆன்மாவில் ஆண் என்றும் பெண் என்றும் தனித் தனி இல்லை.தேவா. S

Monday, August 30, 2010

ஒலி....!

விரிந்து பரந்து இருக்கும் வானம்.... நுரைத்து நுரைத்து அலைகள் வீசும் கடல்.....கண்ணுக்கெட்டிய தூரம் விரியும் நிலம்....ஒரு புள்ளியாய் நான்......! எல்லா பிரமாண்டத்தையும் எனைச் சுற்றி வைத்துக் கொண்டு துரும்பாய் நான் நீந்திக் கொண்டிருக்கிறேன். வாழ்வாற்றில் எட்டும் வரை எட்டி எதை எதையோ பேசி புலம்பி அடித்து செல்லும் கால வெள்ளத்தில் காட்சி மாற்றத்தில் நேற்று பேசியது இன்று மறைந்து இன்று பேசுவது நாளை மறைந்து ஒரு வித தாள கதியில் நடக்கிறது எல்லாம்.

எல்லாம் நிறுத்திப் பார்த்தாலும் ஏதோ ஒரு சப்தம்... நிசப்தத்திலும் கூட ஒரு வித சப்தம்....சப்தம் ஒலி. காற்று ஆக்ரோசமாக கடந்து செல்லும்போது ஒரு ஒலி ஊ....ஊ...ஊ என்று ...., மழை அடித்து பெய்யும்போது ஒரு ஒலி...., இதயம் துடிக்கும் ஓசை ஒரு ஒலி..., எங்கிருந்து பிறக்கிறது இந்த சப்தம்...?

மனித காதுகளுக்கு கேட்கும் ஒலியின் அளவு 20HZ க்கும் 20000 HZக்கும் இடையேதான். எல்லாம் புரிந்து விட்டது என்று கூறும் மனிதர்களால் மேலே சொன்ன அளவிற்கு அப்பால் உள்ள ஒலிகள் கேட்காது. நாம் உணர்ந்தவைக்கும் அப்பால் இந்த பிரபஞ்சமே இருக்கிறது...இந்த பிரபஞ்சத்தில்....20000 HZ க்கும் மேலும் 20க்கு கீழும் சப்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது....ஆனால்..... நம்மால் கேட்க முடியாது....

உணர முடியாதா ரகசியங்களுக்குள் ஒளிந்திருப்பது என்ன? விடை தெரியா வாழ்க்கையில் நித்தம் தேடல்தானா? உணராததாலேயே இல்லாமல் போய் விடுமா இந்த சப்தங்கள்.... நமக்கு தெரியாது ஆனால் இருக்கிறது. இப்படித்தான் வண்ணங்களும் ஏழு நிறங்களுக்கு அப்பாலும் கோடாணு கோடி நிறங்கள் பிரபஞ்சத்தில் இருக்கத்தான் செய்கின்றன.

தியாக பிரம்மம் தியாகராஜர் இயற்கையில் இயைந்த அனாகத நாதத்திலிருந்து மனிதர்கள் அறிந்திறாத அபூர்வ ராகங்கள் படைத்தது நாம் அறிந்ததே....! படைப்பாளிகளின் மூளை எப்போதும் இன்னோவேசன் எனப்படும் புதிய விசயங்களை எடுக்கும் இடம் எது.....? அங்கிங்கெனாதபடி விரிந்திருக்கும் பிரம்மத்திலிருந்துதானே.....?

வித விதமாய் சுருதி கூடி, குறைந்து, தாளம் அடர்ந்து, தேய்ந்து, எது தான் சப்தத்தின் பிறப்பிடம்......? சலனமில்லா சூன்யம் தானே....? நிசப்ததிலிருந்து எத்தனை ஒலிகள்....
இன்னும் சொல்லப் போனால் ஒலியின் சீரமைக்கப்பட்ட வடிவம் இசை....இசையின் மூலம் ஒலி, ஒலியின் மூலம் சப்தம்....சப்தத்தின் மூலம் நாதம்...

மனித சமுதாயத்தோடு ஒன்றிணைந்தது ஒலி. போருக்கு செல்வதற்கு முன்னே உணர்ச்சியை தூண்டும் வகையில் வாசிக்கப்படும் வாத்தியங்கள், கோவில்களில் வாசிக்கவென்று தனி வாத்தியங்கள், மங்கல காரியங்களுக்கென்று தனி வாத்தியங்கள், அமங்கல காரியங்களுக்கென்று தனி வாத்தியங்கள், எத்தனையோ ராகங்கள் அதற்குள் ஒளிந்திருக்கும் ஸ்வரங்கள்.... ஏன் இவை எல்லாம்..... நம்மை சுற்றியிருக்கின்றன? யார் படைத்தது இவற்றை எல்லாம்....?படைத்தவர்களுக்கு எங்கிருந்து கிடைத்தது இவை எல்லாம்....?

பள்ளிப்பருவத்தில் கேட்ட ஒரு இசையையும், பருவத்தில் காதலோடு கேட்ட ஒரு இசையையும், எப்போதோ விரக்தியில் கேட்ட ஒரு இசையையும் இப்போது கேட்டாலும் முன்பு கேட்ட அதே சூழ் நிலைக்கு கூட்டிச் செல்கிறதே அது எப்படி? இசையோடு சேர்ந்து சூழலையும் கிரகிக்கிறதா மூளை? அப்படி கிரகித்தால் மூளையின் எந்த பகுதியில் சேருகிறது இந்த சப்தத்தின் உயிர் நாடி?

ஒலி வடிங்களுக்கு என்ன அர்த்தம் என்று நம்மால் விவரிக்க முடியாது. ஒரு தாலாட்டில் உறக்கம் வருவதும், ஒரு ஒப்பாரியில் அழுகை வருவதும் சப்தங்கள் நமக்குள் ஏற்படுத்தும் மாற்றங்கள். நிசப்ததை கவனிக்கும் போது அஉம் என்ற ஒரு வித ஒலி இரைச்சலற்ற இரைச்சலாய் நமக்குள் பரவுவதை உணர முடியும்.

வலி என்றால் அதற்கு ஒரு ஒலி...சந்தோசத்திற்கு ஒரு ஒலி....ஆணவத்துக்கு ஒரு ஒலி, அமைதிக்கு ஒன்று, வன்முறைக்கு ஒன்று, நிறைவுக்கு ஒன்று என்று நம்மை சுற்றி வித விதமாய் பரவியிருக்கும் ஒலி பிறப்பது எங்கிருந்து... காற்றிலிருந்து...... காற்றின் அழுத்தங்கள் ஏறி இறங்க...சப்தம் பிறக்கிறது.

குரல்வளையில் கொடுக்கும் அழுத்தம் ஏற்றம் இறக்கம் சுவாசத்தின் நீளம் குரல்வளையின் தடிமன் எல்லாம் கூடி ஒரு குரலை நிர்ணயிக்கின்றன...இந்த குரலில் இருந்து தான் எத்தனை விதமான சப்தங்கள்...மிருகங்கள் கூட ஒவ்வொரு உணர்விற்கும் ஒவ்வொரு சப்தம் எழுப்புகின்றன என்பது நம் அனைவருக்குமே தெரியும்.

பல தரப்பட்ட ஒலிகள், இசையென்றும், பேச்சென்றும், இரைச்சாலாய் நம்மைச் சுற்றி பின்ணிப் பிணைந்து இருந்தாலும் சில ஒலிக்கள் நல்ல அதிர்வுகளை நமக்குள் ஏற்படுத்துவது என்னவோ மறுக்க முடியாத உண்மைதான்.

நல்ல அதிர்வு என்றால் என்ன.....? " நிலவு தூங்கும் நேரம் இரவு தூங்கிடாதோ.....''இந்த பாடலில் வரிகள் தாண்டிய இசையில் மனம் வன்முறையா கொள்ளும்? அதே போல....தேவதை படத்தில் ஒரு பாடல் வரும்...வாரானே வாரானே வாட்டமுள்ள அரக்கன்....பலர் குடலை உருவி மாலை போடும் " அப்படின்னு ஒரு பாட்டு வரும் அந்த பாடலில் வரிகள் பயமுறுத்துவதை விட இசைக்கருவிகள் மனதுக்குள் பரவி அந்த ஒலி உள்ளே ஒரு கலவரத்தை உருவாக்கும்....

இதே மெத்தட்தான் கோவில்களில் அடிக்கும் உருமி மேளம்....." கையிலே வீச்சருவா பள பளக்க....காலிலே வீரத்தண்டை பள பளக்க" இந்த பாட்டை கேட்கும்போது அதில் உபோயகப்படுத்தப்பட்டு இருக்கும்...இசைக்கருவிகளும் கலவரம் வர வைக்காது மாறாக வீரத்தை ஒரு வித தைரியத்தை தன்னம்பிக்கையை உருவாக்கும்....எல்லாம் சப்தம்...என்னும் இசையின் மூலம் நடக்கும் மாற்றங்கள்.

ஒலி...உள்ளே மாற்றத்தை உண்டு பண்ணுகிறது....ஒலி....அமைதியை கொடுக்கிறது ஒலி....கலவரத்தை உண்டு பண்ணுகிறது......ஒலி என்னும் மின்சாரம் நம்மை எப்படி எப்படியோ ஆட்டுவிக்கிறது. மின்சாரம் என்பது கூட ஒலியின் வடிவம் தான்.

எனக்குள் ஒரு கேள்வி எழுகிறது இப்பொது .....? மந்திரங்கள் என்று சொல்லப்படும் ஒலிகளுக்கு அர்த்தம் கேட்டு அர்த்தம் சொல்லிக் கொண்டு இருக்கின்றானே மனிதன்..... இவையெல்லாம் அர்த்தங்களின்றியே....ஒலியாய்...சப்தமாய்...மனிதனின் உணர்வோடு விளையாடி.....கோபமான மனோ நிலையை சாந்தப்படுத்தவும், தேவையான நேரத்தில் உக்கிரம் ஏற்படுத்தவும்....ஒரு வித ஒத்ததிர்வான ஒலியால் சுமுகமான சூழல் ஏற்படவும், தைரியத்தை கொடுக்கவும் ஒலிகளை கம்போஸ் செய்து மந்திரம் என்று சொல்லி விட்டு போய் விட்டார்களா....?

மனிதன் தன் மட்டுப்பட்ட அறிவால் அதை கற்பனைக் கடவுளர்களொடு சம்பந்தப்படுத்தி அதன் அர்த்தங்களை தேடிக் கொண்டு உணர மறந்து விட்டானா? எனக்கு தெரியவில்லை.....

இந்த ஸ்லோகத்தை சொல்லுப்பா சொல்லுப்பா....எல்லாம் சரியாகும் யாரோ யாருக்கோ சொல்லிக் கொண்டிருந்தார்கள்...கேட்பவனை, சொல்பவனை சரி செய்யப்போவது அவனுக்குள் ஏற்படப்போகும் ஒலியின் ஒத்ததிர்வா...இல்லை...ஒன்றும் இல்லையா?


கேள்வியை உங்களிடமே ஒப்படைக்கிறேன்...தேவா. S

Sunday, August 29, 2010

புறம்.....!


ஒரு நிசப்தமான இரவில்
வெற்று வானமும் ஒற்றை நிலவும்
என் உயிர்தடவிய கணங்களை
எழுத நினைத்த நிமிடங்களில்
வந்தது உன் நினைவு...!

கலைந்து செல்லும் மேகங்களில்
மறைந்து நின்று கண் சிமிட்டுவது...
நீயென்று கணித்து முடித்த கணத்தில்...
கை கொட்டி சிரித்தது .... நட்சத்திரம்...!

உடல் ஊடுருவி அணைத்தது
நீதான் என்று உணர்ச்சிவயப்பட்ட நேரத்தில்
பரிகசித்து..பயணம் முடித்திருந்தது
நடு நிசியின் ஊதக் காற்று....

கிறக்கத்தில் கண்மூடினால்...
நீ வருவதும்....கண் திறந்தால்
நீ மறைவதும் என்ற கண்ணாமூச்சியில்
வழிந்தோடிக் கொண்டிருந்த இரவில்
பரவிக்கிடந்த கருமையை
விரிந்து கிடக்கும் உன் கூந்தலென்று
நினைத்து முடித்த மாத்திரத்தில்
பரிகாசமாய் விடிந்தே போனது பொழுது....!


காதலில் தகிக்கும் எல்லோரும் 240 வால்ட் மின்சாரத்தை உடம்பில் ஏற்றுக் கொண்டிருப்பவர்கள்தான். ஒரு இரவின் வெறுமையில் ஒற்றை நிலவும் ...ஒரு நிலவுதான் யார் இல்லேன்னு சொன்னது...? காதல் தகிப்பில் ஒரு நிலவு என்பதே பெரிய சிலாகிப்பாக தெரிகிறது. காதல் வயப்படும் கணங்களில் எல்லாமே அர்த்தம் பொதிந்ததாயும் ஒரு வித குழந்தையை ஒத்த மனோ நிலையும் ஏற்படுவதுதான் அழகு.

ஒரு படத்துக்கு ட்ரெய்லர் மாதிரிதான்...ஆன்மிக உச்சத்துக்கான ட்ரெய்லர் காதல் அனுபவம். பெரும்பாலும் அதனை அன்னம் பிரிக்கும் பால் போல பிரித்து...உருவம் விலக்கி அருவத்தை உள்ளே வைத்து...அதாவது உணர்வுகளை உள்ளே படரவிட்டு....அதில் லயித்துக் கிடப்பது ஒரு அலாதியான அனுபவம். இந்த சந்தோசம் எங்கே இருந்து கிடைக்கிறது... நமக்குள்ளேதான்...ஆனால் அதற்கு ஒரு தூண்டு சக்தி....புறத்தில் தேவைப்படுகிறது....

பழக..பழக... புறத்தின் தொடர்பறுந்து..... நமக்குள் நாமே காதலோடு நிறைந்து கிடக்கும் ஆச்சர்யமும் நடக்கும்....அதற்கு..தேவை புரிதலுடன் கூடய பொறுமையான பயணம்.....!


தேவா. S
Photo Courtesy: Ms. Ramya Pilai
Article & image copy right @ http://maruthupaandi.blogspot.com

Saturday, August 28, 2010

நேசிப்பு...!காதல் என்ற வார்த்தை சரியானதுதான் என்றாலும் அதை கடைசிவரை நான் உபோயோகிக்கப் போவதில்லை. ஏனென்றால் அந்த வார்த்தையோடு தொடர்பு பட்டு ஏகப்பட்ட அத்து மீறல்களும் அசிங்கங்களும் நடந்தேறியாகி விட்டது நமது சமுதாயத்தில். காதல் என்ற வார்த்தைக்கு பின்னால் கிளைத்து வரும் காமம் என்ற வார்த்தையும் அதிலிருந்து தோன்றும் ஓராயிரம் எண்ணங்களையும் மட்டறுக்கவே நான் உபோயோகம் கொள்ளப் போகும் வார்த்தை

" நேசித்தல் "

கருங்கல் போன்ற திடமான நேசிப்பு, மலரின் மென்மை போன்ற நேசிப்பு, காற்றில் பரவும் சுகந்தம் போன்ற நேசிப்பு, சப்தமின்றி வார்த்தையின்றி மெளனத்தில் கரைந்த நேசிப்பு என்று பல தரமாய் இருந்தாலும் பெரும்பாலும் என்ன நிகழ்கிறது? எதிர்பார்த்தலில் நேசிப்பவரின் உணர்வுகளை கொன்று விட்டுதான் தொடங்குகிறது நேசிப்புகள் என்று நாம் உபோயோகம் கொள்ளும் பதம்.

தாய், தந்தை, மகன், மகள், மனைவி, நண்பன், கடவுள், எல்லாம் நேசிப்பிலும் எதிர்பார்ப்புகள் டன் டன்னாக இருப்பது மறுப்பதற்கில்லை. எதிர்ப்பார்ப்பு மனித இயற்கை ஆனால் நமது நேசிப்புகள் நேசிப்பவரை காயப்படுத்துமெனில் அது எப்படி நேசிப்பாகும்...?

இரயில் பயணம் போலதான் மொத்த வாழ்க்கை. நளை இப்பயணத்தை விட்டு விட்டு செல்ல வேண்டும் என்ற மனோ நிலையில்தான் வாழ்க்கை செல்ல வேண்டும். தனியாய்தான் வந்தோம், தனியாய்தான் செல்வோம் ஆட்டமும் கூட்டமும் பாட்டமும் இடையில் வந்தது....இங்கே சந்தோஷித்து இருக்கும் கணங்களையும் துக்ககரமான கணங்களையும் பார்த்துக் கொண்டு எல்லாவற்றையும் கடந்து சென்று எதிலும் எந்த அர்த்தமும் இல்லை என்று உணர்வது ஒரு வரப்பிரசாதம்.

ஒரு நாள் மழை பெய்கிறது ஒரு நாள் வெயிலடிக்கிறது ஏனென்று கேட்பதில்லை நாம்? இயல்புகள் நிகழ்ந்தேறியே ஆகும்....இன்று பெய்த மழைக்கும் நாளை பொய்க்கப்போகும் மழையும் எதையும் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது இல்லை. நாமும் பெரிதாய் அலட்டிக் கொள்வதில்லை.

மனிதர்கள் அத்தனை பேரும் ஒவ்வொரு மாதிரி..ஒவ்வொருவரின் இயல்பும் அவர் அவர் பெற்ற அனுபவத்தை வைத்து மாறித்தான் இருக்கும். இதில் யார் யாரை விமர்சனம் செய்வது? ஒருத்தனுக்கு காபி பிடிக்கும்...இன்னொருவனுக்கு டீ பிடிக்கும் மூன்றவனுக்கும் எதுவுமே பிடிக்காது...ஏன் இப்படி என்று கேட்பதின் பிண்ணணியில் கேட்பவனின் அறியாமைதான் குடியிருக்கும்.

தனிமனித தேவைகள் பிரபஞ்ச நியதிக்கும் ஒரு கூட்டமைப்பு வாழ்வுக்கும் ஊறு விளைவிக்குமெனில் அது தவறென்றும் அப்படி இல்லை என்றால் சரியென்றும் சொல்லிக் கொள்கிறோமே அன்றி உண்மையில் தவறென்றும் சரியென்றும் ஒன்றும் இல்லை. அப்படி என்றால் கொலை செய்வபவனை சரியானவன் என்று சொல்கிறீர்களா? என்று குரலை உயர்த்தி கேட்கிறீர்களா...இங்கே ஒன்றை கவனிக்க வேண்டும்....

"எது மிகையாகிறதோ...அது அதுவாகிறது"

என்ற விதிப்படி ஒருவன் செய்த கொலை மிகைப்பட்ட பேரால் ஒத்துக்கொள்ள கூடியதாய் இருந்தால் அது சரி....மிகைப்பட்ட பேர் எதிர்த்தால் இது தவறு. ஒரு ரவுடியை ,ஒரு துஷ்டனை தனியாளாக ஒருவன் கொன்றால் அது கொலை...ஆனால் காவல்துறை சுட்டால் எது என்கவுண்டர். நடந்த செயல் ஒன்றுதான் ஆனால் அதை பார்க்கும் மனோபாவமும் நம்மைச் சுற்றி ஏற்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகளும் தான் சரி எது? தவறு எது? என்று நிர்ணயம் செய்கிறதே அன்றி சத்தியத்தில் சரி என்றும் தவறு என்றும் ஒன்றும் இல்லை.

இப்படியாக நகரும் வாழ்கையில் தான் நமக்குள்ளேயே சில நியாய தர்மங்களை வைத்துக் கொண்டு தீர்மானங்களிலேயே கொன்று விடுகிறோம் வாழ்கையின் சந்தோசங்களை. செல்லும் வரை செல்வோம்...உங்களுக்கு இது பிடித்திருக்கிறதா...ஓ...கிரேட்...சந்தோசமாயிருங்கள் என்று எந்த காதலன் காதலியாவது, நட்புகளாவது, உறவுகளாவது அல்லது கணவன் மனைவியாவது, இருக்கிறார்களா?.... இருக்கலாம்...100ல் 0.001% மட்டும். நியதிகள் எல்லாம் விதிவிலக்கு ஆகிப் போனதின் அபத்தத்தில் விதிவிலக்குகளே...இப்போதும் ஆளும் நியதியாய் மாறிப் போயிருக்கின்றன.

நீ ஏன் இப்படி இருக்கிறாய் என்று கேட்ட நண்பனிடம் நான் கேட்டேன்..... நான் எதற்கு வேறு ஒருவர் மாதிரி நடிக்கவேண்டும்? அல்லது உனக்கு பிடித்த மாதிரி இருக்கவேண்டும்? நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே இருந்து விட்டுப் போகிறேனே? யாரையும் நான் பின்பற்றுகிறேன் என்று யாரேனும் சொன்னால் அது பெரிய மோசடி....இன்னொருவர் போல இருக்கவேண்டும் என்ற முயற்சிகளில் மிகைப்பட்டு இருக்கப்போவது என்னவோ நடிப்பாகத்தான் இருக்கும். கற்றுக் கொள்ளும் கற்பிதங்ககளில் நமது செயல்கள் செம்மையாவதில் நாம் தான் வெளிப்படவேண்டும் ...இன்னொருவர் வெளிப்பட்டால் அது போலி,

சிக்கல்........என்னவென்றால் நமது விருப்பம் என்ன? பிரபஞ்ச விதி என்று சொல்லக்கூடைய (Universal Law) என்ன என்று தெரியாமல் மிகைப்பட்டவர்கள் குழம்பிப்போய் இருப்பதுதான்.

ஒரு செயலை நான் செய்தேன் என்பது பிரபஞ்ச விதி என்றால் நான் மட்டுமே செய்வேன் என்னால் மட்டுமே முடியும் என்பது பிரபஞ்ச விதிக்கு முரண்பட்டது. உன்னை நேசிக்கிறேன்....ஆனால் என்னை மட்டுமே நீ நேசிக்க வேண்டும் என்பது முரண்பாடு.

என்னை பொறுத்த மட்டில் என் நேசிப்பின் ஆழமும் அதன் அழகும் உண்மையானது எனும் பட்சத்தில் எதிராளியின் மனோ நிலை பற்றி நான் ஏன் ஆராயவேண்டும். எனக்கு நிலவை பிடிக்கும் என்ற என்னுடைய ரசனை எப்போது பிரச்சினையாகிறது என்றால் நிலவு என் வீட்டுக்குள் என்னிடம் மட்டுமே இருக்கவேண்டும் என்று எண்ணும் போது.

மாறிக் கொண்டே இருக்கும் வாழ்க்கைக்கு ஒரு வித அழுத்தம் கொடுத்து எல்லாவற்றையும் பார்க்கும் பொழுதுகளில் ஒருவித இறுக்கமும் மனிதர்களிடம் கோபமும் ஏற்பட்டு விடுகிறது. நேசித்தலுக்குள் எந்தவித திணிப்பையும் செலுத்தாமல்....தவறாய்படும் விசயங்களையும் அக்கறையோடு சொல்லிவிட்டு நான் சொன்னேன் நீ செய்யவில்லை என்றவட்டத்துக்குள்ளும் விழுந்து விடாமல்...சரியான அளவில் வெளிப்படும் ஒரு உணர்வே....எல்லோரையும் வசீகரிக்கும்...வெல்லும்...!

" என் நேசிப்புகளின்
ஆழத்தில்...பெரும்பாலும்
ஒன்றுமிருப்பதில்லை...
வெறுமனே வாங்கிக் கொள்வதிலும்
அப்படியே பிரதிபலிப்பதிலும்
முரண்களின் முடிச்சுகளின்றி....
காற்றில் பறக்கும் இறகு போல
இருக்கிறது என் நேசங்கள்....
என் மரித்தலை பகிங்கரப் படுத்தப் போகும்....
உலகிற்கோ எப்போதும் தெரியாது...
மரிக்காமல் ஜீவிக்கப்போகும்
என் பிரியங்களை பற்றி..! "


தேவா. SPhoto Courtesy: Ms. Ramya Pilai
Article & image copy right @ http://maruthupaandi.blogspot.com


Wednesday, August 25, 2010

தேடல்.....25.08.2010!
திணறடிக்கும் அன்றாடம், பொருள் ஈட்டும் பொருட்டு ஓட்டம்.....என்று நின்று நிதானிக்க முடியாத காலச்சக்கரத்தின் சுழற்சியில் ஒவ்வொரு இரவிலும் இமைகள் கண்ணயரும் முன்பு ஒரு ஏக்கப்பெருமூச்சு வருகிறதே...? என்ன இது வாழ்க்கை? ஏன் எல்லாம்? என்ன நிகழும் நாளை என்று கணிக்கமுடியாமல் கண்ணயர்ந்து போகிறோம்.

கண்ணயரும் எல்லோருக்கும் தெரியாது நாளை கட்டாயம் நாம் விழிப்போம் என்று.....இப்படிப்பட்ட நம்மைப் பற்றியே உத்தரவாதம் கொள்ள முடியாமல் கழியும் நாட்களையும் மூளையையும் வைத்துக் கொண்டுதான் திட்டமிடுகிறோம் அடுத்த தலை முறைக்கும் சேர்த்து.

அறியாமை என்று தெரிந்தே மனிதன் ஆணவம் கொள்வதின் நுனி எங்கே இருக்கிறது? எத்தனை புத்தகங்கள் படித்தாலும், எவ்வளவுதான் அனுபவம் இருந்தாலும் பக்குவப்பட்டு விட்டோம் என்று சொன்னாலும் கோபத்தின் வேரறுக்க முடியாமல் ஆணவம் வெளிப்பட்டு விடுகிறதே....?

சம காலத்தில்தான் பக்குவப்பட்டு இருக்கிறோம்....ஆனால் பக்குவப்படாமல் இருக்கும் போது தேடித் தேடி சேர்த்த எண்ணங்களும் கற்றுக் கொண்ட கற்பிதங்களும் என்னவாகும்? மறையாதன்றோ...? மூளையின் செயல்பாடும் அதன் நினைவுப் பகுதியும் செயல்படும் விதமும் அப்படி...ஒருமுறை ஏறிய செய்திகளும் கற்பிதங்களும் மறைய வேண்டும் என்றால் அதை அழித்துவிட முடியாது ஆனால் அதற்கான புரிதல் வேண்டும்.புரிதல் ஏற்கெனவே பதிந்ததை நீர்த்துப் போகச்செய்யும். அது இல்லாதவரை.. எல்லாம் தொடர்ந்து கொண்டுதானிருக்கும்....

இப்படி தேவையில்லாமல் சேர்த்து வைத்திருக்கும் குப்பைகளில் இருந்து கிளைப்பதுதான் ஆணவம். ஆணவம் என்பதின் மூலம் நான் என்ற அகங்காராம். நான் என்பதை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிப்பது மனம். மனம் ஒரு வித கற்பிதத்தை, ஒரு வித விஸ்தாரிப்பைக் கொடுத்து என்னால் மட்டுமே முடியும் எனக்கு மட்டுமே தெரியும் என்று நம்ப வைத்து அதை மூளையை கிரகிக்க செய்து நம்ப வைத்து மூளையின் நினைவுப் பகுதியில் தவறான ஒரு ஒரு கற்பிதத்தை பதிய வைக்கிறது.

இப்பொது சொல்லுங்கள் இந்த கற்பிதங்கள் உள்ள வரை மூளை ஒவ்வொரு தடவையும் எல்லா செயல்களுக்கும் நினைவுப் பகுதியில் இருக்கும் விசயங்களை தொடர்பு கொண்டு ஏற்கனவே பதிபப்பட்டுள்ள விசயமான எனக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணத்தை மனதுக்கு பரவச் செய்து ....யாரேனும் ஒன்று நமக்கு எதிராக சொல்லிவிட்டால் அதை கோபமாக வெளிப்படுத்துகிறது.

மனம் நான் பெரியவன் என்று நமக்கே சொல்லும் தருணத்தில் அந்த இடத்திலேயே நிறுத்தி விசாரிக்க வேண்டும்....செக் போஸ்டில் நிறுத்தி செக் பண்ணுவது போல ஒவ்வொரு எண்ணத்தையும் ஆராய வேண்டும். எனக்கு இப்படி தோணுகிறதே... இதை ஏற்றுக் கொள்ள எனக்கு என்ன அருகதை இருக்கிறது....?

இந்த உலகத்திலேயே இன்னும் மனிதர் காலடி படாத இடங்கள் எவ்வளவோ இருக்கிறதே...அதன் மர்ம முடிச்சுக்களே இன்னும் அவிழ்க்கப்படவில்லையே.... நான் எப்படி அத்தாரிட்டிகலாக (அதிகார பூர்வமாக அல்லது சர்வ நிச்சயமாக) விசயங்களை மற்றவர்களுக்கு கூறுவது? என்று அந்த எண்ணத்தை ஆராய்ந்து சிதைக்கும் போது பதிவு மூளையில் விழுவது இல்லை.

கவனமின்றி சேர்க்கும் எண்ணங்கள் எல்லாம் கத்தியை விட கூர்மையானது. எண்ணமில்லாமல் வாழ முடியாது ஆனால் எல்லாம் என்னால் ஆனது என்ற மமதையின்றி செயல்கள் செய்யும் போது அந்த செயல்கள் மூளைப்பதிவில் ஏறுவது இல்லை.

இறைவன் போதுமானவனாக இருக்கிறான், இறைவன் நிறைவானவனாக இருக்கிறான்....எல்லா புகழும் இறைவனுக்கே...அவனின்றி ஓரணுவும் அசையாது, தேவனின் மகிமை, இந்த வார்த்தைகள் எல்லாம் விளையாட்டக இறைவனை நினைவு கூற சொல்லப்பட்டது அன்று .....மனிதனின் அகந்தை அழிய, நான் என்ற திமிர் ஒழிய....இறக்கும் போது சிரமமில்லாமல் இறக்க....எண்ணங்களை உட்புகவிட்டு அது நம்மை திடமாக ஆக்கிரமிப்பு செய்யாமல் இருக்க ஞானிகளாலும் தீர்க்கதரிசிகளாலும் கொடுக்கப்பட்ட அஸ்திரங்கள்....

அஸ்திரங்களை எல்லாம் அலங்கார பொருள்களாக்கி விட்டு அகங்காரம் அடக்க முடியாமல்..இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறோம்....! பெரும்பாலும் பிரச்சினைகளின் கிளைகளையும், இலைகளையும் அழிப்பதிலேயே நாம் நேரத்தை செலவிட்டுக்கொண்டு இருக்கிறோம் ஆனால் வேர்களை களைவதில்லை.....எல்லா பிரச்சினைக்கும் வேர் என்று ஒன்று இருக்கிறது....

அது கடவுளை விரும்புவதாய் இருந்தாலும் சரி.....கம்மர்கட் மிட்டாயை
விரும்பவதாய் இருந்தாலும் சரி...மறைத்தல் விருப்பத்தையும் தெளிவையும் கொடுக்காது மாறாக அறிதல், புரிதல் என்ற கத்தியின் மூலம் வேர்களை களைந்தால்....வெறுமையில் விளையும் ஓராயிரம்....தெளிவுகள்...!


தேவா. SPhoto Courtesy: Ms. Ramya Pilai

Tuesday, August 24, 2010

அட....!தாம்பரத்திலிருந்து நந்தனம் நோக்கி நான் திரும்பிக் கொண்டிருந்த சென்னை மாநகரின் ஒரு பரபரப்பு மாலை. சந்தித்து விட்டு வந்த கம்பெனி கொடுத்த நம்பிக்கையில் அடுத்த வாரம் வரப்போகும் கெஸ்ட்ஸால் நான் வேலை செய்யும் 4 நட்சத்திர ஹோட்டல் ரூம்ஸ் எல்லாம் 15 நாள் தொடர்ந்து சோல்ட் அவுட் ஆகும்...எம்.டியின் தொலைபேசி பாரட்டு என்று ஒருவித குதுகலிப்பில்...இருந்தேன் நான்.

வேகமாய் அடித்து என் தலை கலைத்துப் போட்டு கொஞ்சலாய் காதல் மொழி பேசிய காற்றோடு உறவாடிக் கொண்டு...மெல்ல ஆக்ஸிலேட்டரை முறுக்கியதில் என் பைக் பறந்த போது நேரம் மாலை 5.

தாம்பரம்...சானிடோரியம்.....குரோம்பேட்டை......தாண்டி....பல்லாவரம் தொடுவதற்கு முன்னால் எனது இடப் பக்கமாக முளைக்க ஆரம்பித்து இருந்த கையேந்தி பவன் வண்டிகள் இரவு வியாபரத்துக்கான முஸ்தீபுகளிலும், சுண்டல் வண்டிகளின் சுறு சுறுப்பிலும், மாலை நேர வீடு திரும்பலில் மகிழ்ச்சியாயிருந்த மனிதர்களும் பள்ளி விட்டு வீடு திரும்புகளும் பிள்ளைகள், ஆட்ட்டோகளின் அவசரம், பைக், பேருந்துகள் என்று மதிய வெயிலில் களைத்து போயிருந்த சென்னை நகரம் மாலைக் குளுமையில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தது. ஒரு ஒயின் ஷாப்பில் கூட்டம் சேரத்தொடங்கியிருந்தது......

அப்போதுதன் சட்டென கவனித்தேன்....அந்த இரண்டு பேரை....

" ஏய்...இன்னாடா..." என்று கெட்டவர் கோபமாய் இருந்தார் என்பதை நெஞ்சு வரை ஏறியிருந்த அவரின் லுங்கி.....சொல்லாமல் சொன்னது.... வண்டியில் ஸ்லோவா போய்ட்டு பாத்துட்டு இருந்த நான்... ஏதோ ஒரு சுவாரஸ்யத்தில் வண்டியை ஒரு டீசன்டான தூரத்தில் நிறுத்தி ஸ்டாண்ட் போட்டு சீட்டில் வசதியாய் அமர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன்.....

" இன்னாட சவுண்டு...." சட்டை போட்டிருந்தவரை நோக்கி பனியன் போட்டிருந்தவரின் ரிப்ளை இது..

ஹேய்....****தா (சென்னை நகரின் பிரபல வார்த்தை) இன்னடா டாபரு.... .....இது சட்டை

யார்றா டாபரு....அட்சேன்...மூஞ்சி பிஞ்சிடும் **** தா.... கஸ்மாலம்...ஓசிக்குடி குடிச்சிட்டு..இன்னா கூவுற பேமானி.... ஏய்.... குத்துவது போல சட்டை போட்டவரின் அருகே கையை கொண்டு செல்கிறார் பனியன்....

...அட்சிருவிய்ய...இன்னா நம்மகிட்டயேவா....இதோட...ஓய்...பனியனின் நெஞ்சைப் பிடித்து தள்ளியது சட்டை....

யேய்..துட்ட குர்றா...சும்மா இன்னா சீனு போட்டிகினு கீறா மேல கைய வைச்ச....****தா பேஜராயிடுவ....சட்டையை நோக்கி மறுபடி கையை ஓங்கியது பனியன் அடி விழுந்திடுமோ என்று நான் துணுக்குற்றுப் போகும் அளவிற்கு முகத்தின் பக்கம் வெகு அருகில் போனது கை......

சுற்றி நகர்ந்து கொண்டிருக்கும் மனிதர்களில் மிகைப்பட்டவர்களுக்கும் அவர்களைப் பற்றி கவலையில்லை. இவர்களுக்கும் சுற்றியிருந்தவர்கள் பற்றி அக்கறை இல்லை. ஏதோ ஒரு ஒயின் ஷாப்பில் கொடுக்கல் வாங்கலில் எற்பட்ட சண்டையாயிருக்க வேண்டும் என்று அனுமானித்த என் மனமோ எப்படியும் ஒரு சண்டையை வன்முறையை பார்த்து விட்டு போக வேண்டும் என்ற ஆசையில் இருந்தது....ஆமாம் அப்போ அப்படி ஒரு மனோ நிலை.......அட....இருங்க...இருங்க... சண்டை சூடு பிடிக்குது.....

சட்டை உறுமியது....ஏய்....கம்முனு போய்கினே இரு...ஏதாச்சும் பேசுன அட்ச்சே கொன்னுடுவேன்....அப்பீட்டாய்டுவ...ஹுக் கூம்....கிட்ட தட்ட பனியனின் மூக்கு உடைந்து விடுமோ என்று பயந்து நான் உற்று கவனித்த இடம் அது...ச்சே....இந்த தடவயும் அடி விழலயே.....ம்ம்ம்ம்..எப்ப அடிச்சிக்குவய்ங்க....என் எதிர்பார்ப்பு இது..

பாத்தியா.... நம்ம கைலயே ராங்கு காமிக்கிறியே நைனா.....பிசாத்து பையன் நீ....மருவாத அவ்ளோதான்...சடாரென்று இடுப்பிலிருந்து எதையோ உறுவியது பனியன்...

அட....கத்தி.... நான் பயந்தே போய்ட்டேன்.....அட என்னடா இது சண்டைய வேடிக்கை பாக்கலாம்னு ஓரமா ஒதுங்கினா...ஒரு கொலைக்கு சாட்சியா ஆயிடுவோமோ.....மெல்ல பயந்த படி மணி பார்த்தேன்.....6:30...அட ஒரு மணி நேரம் ஆச்சா....மெல்ல அவர்களைப் பார்த்தேன்...பயந்தபடி....

பனியனின் கத்தியை எதிர்பார்க்காத சட்டை கத்தியது இன்னா பெரிய பருப்பா நீயி....பார்றா தம்மதுண்டு பையன் கையில பொருள வச்சிகினு.....மேல டச் பண்ணா இன்னா ஆவும் தெர்மா.... நம்ம கைலயும் புள்ளைங்க கீறானுகோ...போன போட்டா...வந்து உன்ன உண்டு இல்லேன்னு ஆக்கிடுவனுகோ....கலீஜாயிடுவ....****தா...கிட்டே போய் ஓங்கி ஒரு தள்ளு தள்ளினார் பனியனை..

தடுமாறி கீழே விழப் போன பனியன் ஓடி வந்து கத்தியால் குத்துவது போல பாவ்லா பண்ணி....இன்னொரு தபா மேலகைய வெச்சா....மவனே..............உள்ள உசுரு கீதுல்ல உசுரு அது அப்பீட்டயிடும்.......சோமாறி கையித...கம்னு போய்க்கினே இரு.......சத்தமாய் கத்திக் கொண்டிருந்தது...பனியன்....

அப்போதுதான் அது சரலென்று நடந்தது...அந்த பக்கமாய் வந்த ஒரு போலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் இவர்களை கவனித்து விட்டார்.....மெல்ல கிட்ட போய்...ரெண்டு பேரையும் கூப்பிட்டர்....பனியனின் கத்தியும் சட்டையின் நெஞ்சு வரை இருந்த லுங்கியும் போன இடம் தெரியவில்லை.....

ரொம்ப பவ்யமாய் வணக்கம் சொன்ன அவர்களைப் பார்த்தவுடன் என்னால் சிரிப்பை அடக்க முடியாமல் போனதாற்கு காரணம் இவ்வளவு நேரம் அவர்கள் காட்டிய ஆக்ரோசம்...எங்கே பறந்து போனது என்ற எண்ணம்தான்....

ரெண்டு பேரையும் பக்கத்தில் கூப்பிட்ட கான்ஸ்டபில் கையிலிருந்த தடியால் ஆளுக்கு ஒன்று அவர்களின் பின்புறத்தில் ஓங்கி ஒன்று போட்டு விரட்ட...பனியனும் சட்டையும் ஆளுக்கொரு பக்கத்தில் பின்புறத்தை தேய்த்துக்கொண்டு ஓடியதை இப்போதும் மறக்க முடியவில்லை......

சுமார் ஒரு மணி நேரம் ஒருத்தரை ஒருத்தர் ஒரு அடி கூட விழாமல் அவர்கள் போட்டுக் கொண்டிருந்த வாய் தகறாரோடு முடிந்த அல்லது முடித்து வைக்கப்பட்ட....அந்த சண்டையின் பின்புலத்திலிருந்த... டாஸ்மாக் மீதும் அதை வருமானத்துக்காக மூலை முடுக்கெல்லம் திறந்து வைத்திருக்கும் அரசின் மீதும் அப்போது எனக்கு கோபம் வரவில்லை. ஒரு அடி கூட அடிச்சுக்காம என் ஒரு மணி நேர எதிர்பார்ப்பு வீணாப்போச்சே....ஒரு வேளை இந்த போலிஸ்காரர் வரலேண்ணா என் எதிர்பார்ப்பு ஜெயித்திருக்குமோ...கடுப்பை கிக்கரை உதைத்து பைக்கை கிளப்புவதில் காட்டினேன்...

ஒரு பக்கம் போலிஸ்காரர்களை பற்றி நினைத்தாலும் பாவமாய்தான் இருந்தது... நல்ல வெயிலில் ரோட்டின் நடுவே நின்று போக்குவரத்தை கவனிப்பதிலும், மனிதர்களின் அத்துமீறல்களைச் சமாளிப்பதில் இருந்து....எல்லா கொலை, கொள்ளை, குண்டு வெடிப்பு, வன்முறை என்று எல்லாவற்றுக்கும் பொறுப்பேற்றுக் கொண்டு மனிதர்களின் அமைதியான வாழ்க்கைக்கு பொறுப்பேற்று 24 மணி நேரமும் உழைத்து அரசியல்வாதிகளால் பந்தாடப்படும் ஒரு ஜாதி....ம்ம்ம்ம் என்ன செய்வது....?

என் வண்டியின் வேகம் அதிகமானது.....பல்லாவரம், திரிசூல், பழவந்தங்கல், கத்திபாரா..கிண்டி........ நகர்ந்து கொண்டிருந்தேன்.... நான்....

ஆமா..... நீங்க என்ன பாஸ் என் கூட இவ்ளோ நேரம் சண்டைய நீங்களுமா வேடிக்கை பார்த்தீங்க....... நீங்களும்....ஏமாந்திட்டீங்களா? சரி..சரி....கவலைப்படாதீங்க....அடுத்த வாரம் கொருக்குப் பேட்டை பக்கம் போறேன் மறக்காம வந்துடுங்க...அந்த பக்கம் நல்லா அடிச்சிக்குவாங்களாம்......


அப்போ வர்ட்டா.....தேவா. S

Monday, August 23, 2010

இறை....!ஒரு மெளனத்தின்....உச்சத்தில்
எல்லாம் உடைந்து...
எல்லைகள் கரைந்து...
விடையற்ற கேள்விகளின் மரித்தலில்
ஜனிக்கும் பதில்களில்... நான் இருப்பேன்...!

நகர்ந்து நகர்ந்து...
தூரமாய் இடைவெளி...பெருகும்
பொழுதுகளில்.. நான் மறைந்துவிட்டேன்
என்று எண்ணும் நினைவுகளின்
ஓரத்தில் மறையாமல் மறைந்திருக்கும்
உருவமற்ற எனது இயல்புகள்...!

இழத்தலின் அருகாமையிலிருக்கும்
பெறுதலின் வீச்சுக்களில்...
கரைந்து போன நினைவுகளை
ஒன்று கூட்டி ஆராய்ந்ததின்
எச்சத்தின் எல்லா பக்கத்திலும் நான்..!

இருத்தலும் இல்லாமையும்...
சேர்ந்து ஆடும் நாடகத்தின் உச்சத்தில்
நான் நீ அது இதுவென்று
எதுவுமில்லா உருவத்தில்
எல்லா நினைவுகளும் சங்கமிக்கும்
நிமிடத்தில் தோன்றும் அருவத்தில்
அழிந்து போகும் வஸ்துகளில்
அழியாமல் கரைந்திருப்பேன் நான்!

கட்டிய வேசங்களின்...
அரிதார பூச்சுக்களின் தடிமனுக்குள்...
தவித்து தவித்து என்னின் சுயம் காணும்
முயற்சிகளில் தோற்று தோற்று...
ஜெயிக்கும் ஜென்மாந்திர கனவுகளில்
மீண்டும் மீண்டும் ஜனிப்பித்தலில்
சூன்யத்தை தழுவும் ஆசைகளின்
விளிம்புகளில் ஏகந்த கனவுளில்
ஒளிந்திருப்பேன் நான்..!

உணரமுடியா மர்மங்களின்...
ஆதி முடிச்சிலும்...,
கற்பனைக்குள் எட்டா காரியங்களின்
கருவிலும், விளங்க முடியா விந்தைகளிலும்
பிணைந்திருக்கும் பருமனில்
புகுந்திருப்பது நானின்றி வேறு யார்?
ஒன்றுமில்லா காலத்தில் எல்லாமாய்
விரிந்திருந்து மாயைக்குள் விழுந்து
மாயமாய் மறைந்திருப்பது
எனையன்றி வேறு யார்?

காலச்சக்கரத்தின் சுழற்சி ஓட்டத்தில்
ஒயாமால் ஓடி; ஒடாமல்.... நின்று...
மேல், கீழ், வலம் இடம், எல்லாம் நிறைந்து
நிற்காமல் நடக்கும் சக்தி ஓட்டத்தின்
சூத்திரங்கள் விளங்கும் கணங்களில்
தோன்றாமால் தோன்றுவேன் ... நான்...!

சில பூக்கள் செடியிலேயே இருப்பது நல்லது. விரும்பியவர்கள் தேடி வந்து ரசிப்பார்கள். ரசிக்காவிட்டாலும் செடிக்கோ பூவிற்கோ....இழப்பில்லை.


தேவா. S

Sunday, August 22, 2010

வெளி...!

தேடலின் உச்சத்தில்...
மரித்துப் போன எண்ணங்களால்...
திடமழிந்த உடலோடு..
கட்டற்ற திசையில்..
வெட்டவெளி வாசத்தில்....
நிகழும் என் பயணத்தின்
காலமெற்ற வெளியினில்.....
அது இது என்று...சுட்டியுணரப்படா...
பொருளற்ற பொருளாய்....
பரவிக் கிடந்த கிறக்கத்தை...
வாங்கிக் கொள்ள மனமின்றி.....
கிறக்கத்தில் ...கிறக்கமாகி..
எங்கும் விரவியிருந்த...
என்னின் விஸ்தாரிப்புகளில்
நடந்து கொண்டிருந்தது ஒரு ராஜ்யம்...!

எல்லாமான ஒரு இயக்கத்தில்
எதுவுமற்ற நகர்வுகளில்...
ஊடுருவிக் கிடந்த உணர்வற்ற.....
உணர்வுகளின் மிச்சத்தில்
மொய்த்துக் கிடந்த பிரியங்களில்
ஒளிந்து கிடந்தது....
உடலாய் நான் தேடி அலைந்த....
காதலின் படிமங்கள்....!

சட்டென எல்லாம் கலைத்து...
என்னை இழுத்துப் போட்ட...
பூமியில் அலறிக் கொண்டிருந்த...
அலாரம் அடைத்து...
குளியலறைக்குள் நுழைந்த...
காலையின்அவசரத்தில்...
ஆரம்பித்தது மற்றுமொரு...
நாளின் சராசரி பரபரப்பு.....!

விளக்கம் 1:

எண்ணங்கள் ஒழிந்து நான் என்ற அகங்காரம் ஒடுங்கிய பின்பு உடல் என்பது வெறும் வெற்றுச் சக்கைதான். எல்லாம் கழிந்த நிலையில் உடலென்று ஒன்று இருந்தாலும் ஒன்றுதான் இல்லை என்றாலும் ஒன்றுதான்.

உடலும் எண்ணமுமாகிய மனமும், அவை உதயமாகும் புத்தியும் இல்லாமல் போன பின்பு எஞ்சி இருப்பது ஒர் வித உணர்வு நிலையிலான ஆத்மா. அதன் இயக்கம் காற்றில் பரவும் சப்தம் போல மலரிலிருந்து பரவு மணம் போல, பாய்ந்து பரவும் ஒளி போல எதையெல்லாம் தொடுகிறதோ அதன் இயல்பை உணரும் ஒரு வித அடர்த்தியுடன் இன்னது என்று சுட்டிக் காட்டப்படாத எல்லாவற்றியின் இயல்பாயும் மாறிவிடுகிறது. அதாவது படியும் பொருளில் எல்லாம் அந்த பொருளாயே பரவும் ஒரு தன்மை கொண்ட நுண்ணிய உணர்வாய் ஒரு குளிர் போல ஊடுருவிச் செல்லும் அந்த ஆன்மா.....

எல்லாவற்றின் இயல்புகளையும் ஒருங்கே உணர்ந்து திளைத்து திளைத்து அதில் கிடைத்த சந்தோச கிறக்கத்தை உள் வாங்கி தேக்கி வைத்து உணர மனம் என்றொரு வஸ்து இல்லாமல் வெறும் கிறக்கத்தையே மீண்டும் பரவவிட்டு தன்னில் தானே அனுபவிப்பவன் இன்றி...அனுபமே எஞ்சியிருந்த ஒரு நிலையில் எல்லாமாய் தான் நின்று அங்கிங்கெனாதபடி அனாதியாய் பரவி எல்லா பொருளின் இயக்கத்தில் ததும்பி ஒட்டு மொத்தமாய் ஒரு ராஜங்கத்தை அரங்கேற்றி...இல்லாமல் இருந்து கொண்டிருந்தது.

எல்லாமாய் இருந்த அது அழுத்தமற்ற ஒரு நகர்வாய் மேகம் நகர்வது போல நகர்ந்து எல்லாவற்றிலும் படரந்து செல்லும் போது அந்த ஆத்மா உடலுக்குள் இருந்த போது கற்பனை செய்து வைத்திருந்த அல்லது மறைமுகமாய் உணர்ந்து வைத்திருந்த காதல் எல்லா உயிருக்கும் பொதுவாய், மனிதருக்குள்ளும், மிருங்கங்களுக்குள்ளும், தாவரங்களுக்குள்ளும் இன்ன பிற ஏனைய இயற்கையான எல்லாவற்றுக்குள்ளும் வண்டல் மண் ஆற்றுப் படுகையில் படிந்திருப்பது போல காதல் எல்லா இடத்திலும் மொய்த்துக்க்கொண்டிருந்ததை கண்டு உணரலோடு ஏற்று மறுதலித்தல் இல்லாமல் கடந்து கொண்டிருந்தது.

இப்படியாக உணர்வு நிலையில் எல்லாம் நிகழ்ந்து கொண்டிருக்க...இதை உணர்வுப் பூர்வமாய் உணர்ந்த மானுடனின் நினைவுப்பகுதியில் லெளகீக வாழ்க்கையில் அவன் விடிதலுக்காக வைத்திருந்த அலாரம் அடிக்க சட்டென எல்லாம் கலைத்துப் போட்டு விட்டும் கலைந்து போன சீட்டுக்கட்டாய், உருகிப் போன பனியாய் திடப்பட்ட எண்ணங்கள் மீண்டும் உடலுக்குள் புகுந்து உடலின் பருமனையும் சராசரி வாழ்வின் நிகழ்வுகளையும் நினைவுப்படுத்த...உணர்வு நிலை மறைந்து...அடித்துக் கொண்டிருந்த அலாரம் நிறுத்தி....அன்றைய பரபரப்பு தினத்தின் தயாராதலுக்காக....குளியலறை புகுகிறான் இக்கவி நாயகன்.

அவனுக்குத் தெரியும் லெளகீக வாழ்க்கைக்கு இது எதுவும் உதவாது ஆனால்..உடல் அழியும் ஒரு தினத்தில் இவனின் புரிதல்களிலிருந்து துளிர்க்கும் ஒரு மெய்ஞானம்.விளக்கம் 2:

நம்மாளு இன்ன பண்ணியிருக்கான்...ஒரு நா நைட் ஸ்லீப்ல டீரிம் அடிச்சு இருக்கான். ரொம்ப பேஜாரான ட்ரீம் அத்து...உடம்பே இல்லாம சும்மா காத்துலயே பறக்குற மாறி ஒரு ட்ரீம்....இன்னா..கேள்வி கேப்பாடு இல்லாம இஸ்டத்துக்கு எல்லா சைட்லயும் சும்மா சுத்தி சுத்தி வந்து ஒரே குஜாலா இருந்து இருக்கான்.......அப்போ ஒரு ஐடியா பண்ணி எல்லா உடம்புக்குள்ளேயும் பூந்து அல்லாரோட பீலிங்கும் எப்டி இருக்குன்னு பாப்பமேன்னு நினைச்சானம்....ட்ரீம் ரொம ஸ்ட்ராங்கா அடிச்சு அடிச்சு எல்லா பொருளுக்குள்ளேயும் பூந்து பூந்து ராஜா மாறி...எல்லா வெள்ளாட்டும் வெளையான்டானம்....

எல்லா உடம்புக்குள்ளேயும் பூந்து பூந்து பாத்தப்ப அவனுக்கு மெய்யாலுமே ஷாக்கா இருந்துச்சாம் ...இன்னான்னா...எல்லா உசுருக்குள்ளேயும், செடி கொடுக்குள்ளேயும், மிருவத்துக்குள்ளேயும் ஒரே லவ்ஸ்தானம்.. ஹ...க் ஹும்....எல்லாத்துக்குள்ளேயும் அன்பு இருந்துச்சாம் அதத்தான் நம்மாளு லவ்வுன்னு பிரிஞ்சுகிட்டானம். எல்லா வேல வெட்டியும் விட்டுட்டு இன்ன இது ட்ரீம்னு நீங்க கூவுறது நல்லா கேக்குதுப்ப...பட் இப்போ இன்ன பிராப்ளம்னா நம்மாளு கொஞ்சம் ட்ரீம் அடிக்கிறதுல்ல எஸ்பர்ட்டு அத்தான் சட்டைய களட்டி போட்றாப்ல உடம்ப தூக்கிப் போட்டுட்டு ஒரே ட்ரிம்ம்மு....

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு அலாராம் கூவ சொல்ல கபால்னு எழுந்து டைம் பாத்தானம் மணி 7 தாண்டிடுச்சாம்...டகால்னு துண்ட எடுத்து தோள்ள போட்டுடு ட்ரிம தூக்கி கடாசிட்டு பாத்ரூம்குள்ளே பூந்துகிட்டானம் நம்மாளு.....

இன்னா படவா ட்ரீமு...கொய்யாலா வேலக்கி போனாதன் துட்டு..துட்டு இருந்தான் சோறு....! நாளைக்கு சாவுறப்ப பாத்துக்கலாம் நைனா எல்லாத்தையும்.....அதுக்குள்ள ட்ரிமு கீமுன்னு விழுந்திடாதிங்கப்பா.....பேமானி கண்ட கனவுன்னு வேண்ணா டைட்டில் வச்சுக்காலாம்...இன்னா தல நாஞ்சொல்றது....

பின் குறிப்பு:

a) கவிதையில் புரிந்தால் விளக்கம் அவசியம் இல்லை.

b) முதல் விளக்கம் புரிந்தால் இரண்டாவது விளக்கம் தேவையில்லை.

c) இரண்டாவது விளக்கமும் புரியாவிட்டால்....அதற்கு நான் பொறுப்பில்லை


தேவா. S

Saturday, August 21, 2010

யாரோ...!எழுத வேண்டிய தொடர்களின் தொடர்ச்சியை சிந்தித்துக் கொண்டிருக்கும் மூளையை சமகாலத்தில் எழும் எண்ணஙகள் ஆக்கிரமித்து தொடர்ந்து விழுங்கிக் கொண்டே இருக்கிறது. ஏதோ எழுத வேண்டும் என்ற எண்ணத்துடன் விசைப்பலகையை தட்டத் தொடங்கினால் ஏதோ ஒன்று வருகிறது. திட்டமிடாத எழுத்துக்கள் வெகுதுல்லியமாய் தெறித்து விழும் வீச்சை நானும் பின் தொடர வேண்டியதாயிருக்கிறது.

திட்டமிட்டு செய்வோம் பல சூழ்நிலைகளில் ஆனால் என்ன நடக்கவேண்டும் என்று தீர்மானிக்கும் சக்தி ஒரு காரணி சார்ந்தது அல்ல....அது பல விசயங்கள் சார்ந்தது ஆனால் நிகழும் நிகழ்வுக்கெல்லாம் மனித மூளை ஒரே ஒரு காரணத்தை தேடும் போதுதான் ஏமாற்றமும் கோபமும் மனிதனை ஆக்கிரமிக்கின்றன.

சக மனிதர்கள் செய்யும் தவறுகளுக்கு கூட ஏதோ ஒரு வகையான எதிர்மறையான அவர்களின் எண்ணங்கள் காரணமாகின்றன். இந்த எதிர்மறையான எண்ணங்கள் ஏற்படுவதற்கு அவர்களின் புரிதலில் இருக்கும் கோளாறும், முறையற்ற செயல்களால் மற்றவர்களால் அவர்களுக்கு ஏற்பட்ட அநீதிகளும் காரணமாகிப் போகின்றன.

புரிதலில் இருக்கும் கோளாறு வளர்ப்பிலும், வளரும் போது ஏற்படும் அல்லது தாக்கம் கொடுக்கும் புறச்சூழலும் காரணமாகிறது. முறையற்ற செயல்களால் தீங்கு ஏற்படுவதற்கு யாரோ தன்னுடைய சுய நலத்துக்காக செய்யும் அநீதிகளும் காரணமாகின்றன.

நம்மில் பல பேருக்கு தவறு என்றால் ஒரு சில செயல் சார்ந்த விசயங்கள் மட்டுமே நினைவுப்புள்ளியிலிருந்து வெளிப்பட்டு இது சரி இது தவறு என்ற ஒரு தீர்மானிப்புக்கு வந்து விடுகிறார்கள் ஆனால் அறியாமல் செய்யும் ஓராயிரம் விசயங்கள் சக மனிதர்களை எப்படி பாதிக்கிறது என்பதை உணராமலேயே எண்ணங்களாலேயே கொன்று குவித்துக் கொண்டு இருக்கிறோம் ஒராயிரம் மனிதர்களின் உணர்வுகளை.

எப்படிப் பார்த்தாலும் சக மனிதனின் சுயத்தை தொடும் அவரது சொந்த விசயங்களை ஆராயும் ஒரு தன்மை பெரும்பாலும் நமது சமுதாயத்தில் இருப்பது மறுப்பதற்கில்லை. எதிர்த்த வீட்டுக்காரனுக்கும் பக்கத்து வீட்டுக்காரனுக்கும் யாரோ ஒரு தூரத்து சொந்தக்காரனுக்கும் பயந்து பயந்து தன்னுடைய வாழ்க்கையை வாழாமல் உணர்வுகளை புதைத்து வாழ்பவர்கள் ஏராளம்.

காரணம் ஊர் என்ன சொல்லுமோ என்ற பயம். ஊரில் உள்ள 90 முட்டாள்கள் ஒரு விசயத்தை ஆதரித்து அதை அரங்கேற்றினால் அது ஏற்றுக் கொள்ளக்கூடியது என்றும் 10 பேர் நல்ல விசயம் சொன்னால் அது தவறு என்ற ஒரு பொது புத்தி நம்மிடையே இருக்கிறது. பொது புத்தி என்றால் நமது மனதை நாமே ஏமாற்றி மிகைப்பட்டவர்கள் சொல்வது சரியாயிருக்கும் என்று நம்புவது.

" எல்லோரும் சொல்வது சரியா? இல்லை எது சரியோ அது சரியா? "

இந்த கேள்வியை ஒவ்வொரு கணத்திலும் கேட்கும் போது நாம் பார்க்கும் எந்த ஒரு செயலிலும் இருக்கும் ஒரு அறியாமை தெளிவாக தெரியும். எனது உறவுக்காரர் ஒருவர் எங்கள் வீட்டுக்கு விருந்தினராக வந்திருந்தார். நாங்கள் எல்லாம் மதிய உணவருந்தி அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். என்னுடைய மனைவி குழந்தை பற்றியெல்லாம் விசாரித்துக் கொண்டிருந்தார் அந்த உறவுக்காரர். அப்போது அம்மாவின் முகத்தை நான் பார்த்த போது சற்றே வாடி இருந்தது. என்ன விசயம் என்றே புரியவில்லை. வந்த விருந்தினரும் இரவு தங்கி விட்டு மறு நாள் காலையில் காபி, டிபன் சாப்பிட்டு விட்டு கிளம்பி போய் விட்டார்.

நான் ஊருக்கு வந்திருந்த அந்த ஒரு மாத விடுமுறையில் அம்மாவின் முகம் வாடியிருந்ததை அப்போதுதான் கவனித்தேன்." என்னாச்சும்மா?..." அம்மாவிடம் தனியே அழைத்து கேட்டேன்....! அம்மா சொன்னார்கள்..அது ஒண்ணும் இல்லைப்பா... நீ தனியே எங்களை எல்லாம் விட்டுவிட்டு உன் மனைவி குடும்பம் என்று சென்னையிலேயே செட்டில் ஆக போறியாப்பா? வெளிநாட்டில் இருந்து கொண்டே தனியா செட்டில் ஆவதற்கு எல்லாம் செய்றீயாமே? அம்மாவின் கேள்வியில் பதறிய நான்...? என்னாச்சும்மா ஏன் இப்படி கேக்குறீங்க....

இல்லப்பா அந்த மாமா வந்துட்டுப் போனார்ல அவர் சொன்னாரு....ஊர்ல ஒரு உறவினர் திருமணத்திற்கு போன பொது எல்லோரும் பேசிக்கிட்டாங்களாம் அவர் கேட்டுட்டு வந்து சொன்னாரு...என்று சொன்னார்கள். ஹேய்...வாட் இஸ் திஸ்....அது எப்படி என்னுடன் என் வாழ்க்கையின் திட்டமிடலில் நேரடி சம்பந்தம் இல்லாத யாரோ...ஹூ த ஹெல் இஸ் தட்? எனக்கு வந்த கோபம் டெலிபோன் காலாய் மாறி பாதி வழியில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த உறவினரை தொடர்பில் கொண்டு வந்தது.

என்ன மாமா? அம்மாகிட்ட என்ன சொன்னீங்க...?அவர் விலாவாரியாக சொன்னார்...சுப்பிரமணியன் மகளுக்கு கல்யாணம் வச்சிருந்தான்ல அங்க பேசிக்கிட்டாகப்பு.... நாந்தேன் அக்காகிட்ட (எங்க அம்மா) ஒண்ணும் உங்ககிட்ட கேக்க வேணாம்னுல சொன்னேன்...என் கோபம் உச்சத்திற்கே சென்றது...எதுக்கு ஒரு செய்திய சொல்லணும் அப்புறம் கேக்க வேணாம்னு சொல்லணும்.....ஏன் இந்த பொழைப்பு என்று மனதினுள் நினைத்ததை வெளிக்காட்டாமல்...ஏன் மாமா யாரு சொன்னது இப்படின்னு பொறுமையாய் கேட்டேன்....எனது மனதில் இதைச் சொன்னவர் யார் என்றறியும் ஆர்வமும் அம்மாவின் மனதை தெளிவாக்க வேண்டிய வேகமும் இருந்தது....

மாமா சொன்னார்... " அங்கன தான் பேசிக்கிட்டாகப்புன்னு...மீண்டும் சொன்னர். திரும்ப யாரு மாமன்னு கேட்டதற்கு....இன்னாருன்னு தெரியலப்பு...ஒரு கூட்டத்துல பேசிக்கிட்டு இருந்தத கேட்டேன். அம்புட்டுதேன்..என்று ஏதோ சாதாரணமாக சொல்ல அதற்கு மேல் எனக்கு அந்த விசயத்தில் அதீத ஆர்வம் இல்லை. இது வம்பு பேச்சு (gossip) என்று புரிந்து கொண்டேன்.

பின் அம்மாவிற்கு புரிய வைத்தேன்....இப்படி யாரோ சொல்வதை கேட்டு நாம் தீர்மானங்களை எடுத்தால் நமது சொந்த வாழ்க்கை அல்லவா தப்பிப்போகிறது.
அதன் பிறகு எல்லாம் சுமுகமானது எனது வீட்டில் அதை விட்டு விடுவோம் இப்போ...

ஆனால்....

இந்த யாரோக்கள் எல்லோருடைய வாழ்க்கையிலும் இருப்பார்கள். தேவையில்லாமல் அவர்களை அனுமதிப்பதை விட்டு விட்டு மனதளவில் என் வாழ்க்கை நான் வாழ்கிறேன் என்ற எண்ணத்தோடு எப்போது பார்த்தாலும் அடுத்தவரையே உற்று நோக்காமல் நமது வாழ்க்கையை நாமே வாழ வேண்டும். என் சட்டையை முதலில் வெளுத்துக்கொள்கிறேன்.... என்ற எண்ணத்தோடு வாழ்ந்து பிறரின் சட்டைகள் கரையாயிருக்கிறது என்று சொல்வதற்கான நமது தகுதிகள் என்னவென்று ஆராய்ந்து வாழ்தல்தானே சுகம்?

இப்போ தெரியுதா...ஒரு பிரச்சினைக்கு ஒரு காரணம் இல்லை பாஸ்... ஏகப்பட்ட காரணிகள் இருக்கு.....குறைந்த பட்சம் நாம் ஒரு காரணியாய் இருந்து ஏதேனும் பிரச்சினையின் பகுதியாய் இருப்பதை விட.......நமது வாழ்க்கையை நமக்கு பிடித்த மாதிரி வாழலாமே ....?

யாரோ சொல்லும் தேவையில்லாத நம்மைப் பற்றிய விமர்சனங்களை குப்பையில் தூக்கிப் போடுங்கள். உண்மையான கருத்தை சொல்ல மனிதர்கள் நேரே பெயரோடு நேர்த்தியாய் வருவார்கள் அவர்களை கவனித்தால் போதும்,

வாழ்வின் சந்தோசங்கள் எல்லாம் பெரிய பெரிய விசயங்களில் இல்லை....அவை சின்ன சின்ன விசயங்களில் ஒளிந்து கொண்டு காத்திருக்கின்றன நம்மை சந்தோசப்படுத்த, நாம்தான் கவனிப்பதில்லை......!தேவா. S

Thursday, August 19, 2010

ஆறு...!ஒரு கலைக்கப்பட்ட உறக்கத்தின்...
எச்சத்தில்மிதந்து கொண்டிருந்த...
கனவில் கடக்கப்படாத ஆற்றின்..
தூரத்தை அளந்து....அளந்து
மொத்தமாய் விழித்ததில்...
மரித்துப் போனது சொச்ச உறக்கமும்!

வெறுமையில் கிளைத்த எண்ணங்களில்...
நிறைந்து இருந்தது கடந்து போயிருந்த
நாளில் நாம் தொலைத்த காதல்....!
வேண்டமென்று நீ சொன்னதும்...
அது சரிதானென்று என் மனது சொன்னதும்...
ஒன்றாய் சங்கமித்த நொடிகளில்...
உடைந்து போனது கண்ணாடி காதல்...!

விளக்க முடியாத உணர்வாய்...
பிரிதலில் பீறிட்டு கிளம்பிய
காதலின் உணர்வுகள் பிம்பங்களற்று
பிழிந்தெடுத்த உணர்ச்சிகளின்
வெளிப்பாடு காதலை எனக்குள்...ஊற்றியதில்
மிரட்சியாய் எங்கோ வெறித்த...
என் நினைவுகளோடு நகர்ந்து கொண்டிருந்தது
அந்த கெட்டியான இரவு....!

பெற்றாலும்,இழந்தாலும் தொடரும்...
காதலின் அவஸ்தைகளை புறம்தள்ளி...
மீண்டும் தொடர நினைத்த உறக்கத்தில்..
வரப்போகும் ...ஏதோ ஒரு கனவில்...
மீண்டும் வரவழைக்க நினைத்தேன்...
நான் கடக்க முடியாத ஆற்றின்..தூரங்களை...!

ஒரு கனவில் பொய்த்தது...
மறு கனவில் ஜெயிப்பதில் மறைந்திருக்கும்
வாழ்வியல் சூட்சுமத்தை கற்றுக் கொடுக்கும்
ஆசையில்... காத்திருந்த நித்திரையொடு..
கலந்த கணத்தில் உயிர்த்தது....
உருவமில்லா ஒரு காதலும்...கரை தொடப் போகும்
என் காட்டாற்று கனவும்...!


ஒரு காதல் தொலைகிறது....மறு காதல் துளிர்க்கிறது என்ற வாழ்வியல் நியதிதான் கவிதையின் கரு. மிரட்சியாய் இருக்கும் ஏமாற்றங்களை உற்று நோக்கும் தருணங்களில் ஆச்சர்யமாய் திறக்கப்படுகிறது வாழ்க்கையின் அடுத்த கதவு. காதலென்று ஒரு உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டு கவிதையில் பேசியிருந்தாலும்...எல்லா ஏமாற்றங்களின் முடிவிலும் காத்திருக்கும் வாழ்வின் அடுத்த பயணத்துக்கான வாகனம்.

மிரட்சியில் வாகனம் தொலைத்துவிடாமல்...தேடலில் தொடருவோம் பயணத்தை.....! எந்த தோல்விகளும் அல்லது இழப்புகளும் இன்னும் உக்கிரமாய் தெளிவாய் பயணிக்க வைக்கும்.... நம்மை புரிதல் கொண்ட மானுடனாய்.....!தேவா. S

Tuesday, August 17, 2010

ஆட்டம்...!


சுற்றி சுற்றி வரும் ஒரு ராட்டினத்தின் பக்கவாட்டு காட்சிகள் மாறுவது போல இருந்தாலும் ஏற்கனெவே வந்த காட்சிகள்தான் எல்லாம். ஆட்கள் தவணை முறையில் சுற்றுவதாலும் பல வித எண்ணங்களை கொண்டு சுற்றியுள்ள பொருட்களை பார்ப்பதாலும் பார்ப்பவனின் எண்ணத்திற்கு ஏற்றபடி காட்சிகளில் இருந்து விளக்கங்களும் அது பற்றிய விஸ்தாரிப்புகளும் மாறி மாறி பார்ப்பவனின் மனதை ஆக்கிரமித்து, ஆச்சர்யம், கோபம், துக்கம், சிரிப்பு, காமம், காதல் என்று பலவிதமான உணர்வுகளை உருவாக்கிக் கொண்டு இருக்கிறது.

தோன்றும் உணர்வெல்லாம் காணும் பொருளில் இருந்துதான் என்ற மாயையிலும், தான் கண்ட ஆச்சர்யமே மிகப்பெரிய அதிசயம் என்றும் ஒரு வித மமதையில் ஒரு வித ஆளுமை கொண்ட எண்ணங்களைப் பரப்பி இன்னும் திடமாகி ஏதோ எல்லாம் தெரிந்து விட்டதைப் போல எப்போதும் ஒரு தலைக் கனத்தை கொடுக்கிறது மனது. ஆட்டத்தின் ஓட்டம் இடைவிடாமல் புதிது புதிதாய் வேசமிட்டு ஏற்கனவே ஏறியவர்கள் ஏறுவதும், ஏற்கனவே சுற்றியதை மறந்துவிட்டு மீண்டும் மிண்டும் சுற்றுவதுமாக மீண்டும் மீண்டும் எல்லா உணர்ச்சிகளையும் காட்டிக் கொண்டு செய்த செயலையே திருப்பி திருப்பி செய்து கொண்டு நடக்கும் இந்த ஆட்டம் எப்போது நிற்கும்?

சுற்றி சுற்றி ஒரு நாள் அந்த சுற்றலில் அலுப்பு வந்து ஏன் சுற்ற வேண்டும் என்றொரு கேள்வி பிறக்கும் சிலருக்கு முதல் சுற்றலில் சிலருக்கு இரண்டாவது அல்லது மூன்றாவது சிலருக்கு ஆயிரம் சுற்றுக்கள் என்று தொடர்ந்தாலும் கேள்வி பிறப்பதில்லை. கேள்விகள் பிறந்தும் விடை காணவே மேலும் சில சுற்றுக்கள் அவசியமாகிவிடுகிறது. கேள்விகளுக்கு எல்லாம் பதில் இல்லை என்று உணரும் தருணத்தில்தான் அந்த ஆச்சர்யம் நடந்து விடுகிறது....கேள்வியே உடைந்து, சுற்றும் ஆட்டமும் உடைந்து, ராட்டினமும் உடைந்து ஒன்றுமில்லாமல் சுக்கு நூறாகிப் போகிறது எல்லாம்.

" பார்வை தெரிந்ததது பார்ப்பதற்கு யாருமில்லை; பார்ப்பவனென்றும் யாருமில்லை...."

நிசப்தத்தில் எல்லாம் மறைய அனுபவம் என்று ஒன்றும் இல்லாமல் எல்லாம் நிகழ்வதாகவே அதாவது எல்லாம் செயல்களாகவே உணர்ந்து செயல்படுபவனை மறக்கும் கணங்கள் அவை.....! சூட்சுமமாய் எல்லாம் மூளைக்குள் உறைக்கிறது என்று சொல்லி முடிக்கும் போது அந்த சூட்சுமமே அனுபவமாய் மாறும் அற்புத கணங்கள் நோக்கி தான் ஒரு எதிர் நீச்சல் போட்டு வலிவு காட்டி எல்லாம் அகற்றி செல்ல வேண்டியிருக்கிறது.

சூட்சுமம் என்று சொல்லி முடித்தவுடன் எது சூட்சுமம் என்று கேள்வி எழுகிறது. இதை வாசிக்கும் கணினியும் எழுத்தும் பொருள் என்றால் என் மூளையில் உதித்த கருத்து சூட்சுமம், வாசிக்கும் மனதில் ஏற்படும் விவரிப்பு சூட்சுமம், ஒரு பொருளை பார்க்கும் கணத்தில் கண்ணிலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சு பார்க்கும் பொருளில் பட்டு பிரதிபலித்து மீண்டும் ஒரு வித கதிர்வீச்சை கண்களுக்குள் செலுத்தி படமாக்கி மூளைக்குள் செலுத்தி அந்த பொருளை அறிந்த போது பதியப்பட்ட பெயரோடு தொடர்பு படுத்தி ஓ..இது டம்ளர் என்று அறிகிறது.

பார்ப்பது நாம்தான் எப்படி பார்வை செயல்பட்டது?

சூட்சுமமாய்தானே...இப்படித்தான் பேசும் போதும் நமது வார்தைகள் ஒலி அலைகளாக சென்று கேட்பவரின் காதில் சப்தமாக விழுந்து மூளைக்குள் சென்று அங்கு இருக்கும் மொழிக்கான சேமிப்பு பகுதியில் போய்.....வார்தைகளை அந்த ஸ்டோரேஜில் நாம் கேட்ட வார்த்தையோடு ஒப்பிட்டு இன்னது பேசுகிறான் என்று அறியப்படுகிறது.....! ஸ்டோரஜில் இல்லாத வார்தைகளை மனிதர்கள் பேசும் போது நமக்கு அர்த்தம் விளங்குவது இல்லை.....

தொலைக்காட்சி, வானொலி, என்று ஏராளமான விசயங்கள் இயங்குவது சூட்சுமமாய்தான்...! இத்தனையையும் கண்டு பிடித்த மனிதன் ஏன் சூட்சுமமாய் இயங்கமுடியாது என்று அடுத்த கேள்வி மூளையில் கிளைத்து வெளிவருகிறது......இந்த கேள்வியை உங்களிடமே விட்டு விடுகிறேன்....பதில் தெரிந்தால் சொல்லுங்கள்....

ஆட்டத்தின் ஓட்டத்தில் சுற்றி சுற்றி...கண்ட காட்சிகள் மட்டும் மாறி கிடைக்கும் அதே அனுபவதை எத்தனை தடவைதான் ஆச்சர்யமாய் ஏற்றுக் கொள்வது! குதிரை வண்டியில் போனவன் நடந்து போனால் என்ன உணர்வு கிடைக்குமோ அதே உணர்வுதான் சைக்கிள் வைத்திருப்பவன் சைக்கிளை விற்று விட்டு நடந்து போனாலும் ஏற்படும்...பொருள் மாற்றம்....ஆனால் உணர்வில் ஏது மாற்றம்?

எப்போதோ துவங்கிய ஆட்டம்.....சுழன்று கொண்டிருக்கிறது இன்னும்....! நானும் சுழன்று கொண்டிருக்கிறேன்.... பழகிப்போன ஆச்சர்யங்களோடும்....புளித்துப் போன சந்தோசங்களோடும்....

எனக்கான கேள்வி எப்போது எழும்.....? ஆட்டம் எப்போது நிற்கும்...?


தேவா. S

Sunday, August 15, 2010

விலாசம்....!வற்றிப் போன விவசாயம்...
காய்ந்து கிடக்கும் நிலங்களின்..
கண்ணீரில் மரித்துக் கிடக்கும்...
மனிதர்களின் நூற்றாண்டு கலாச்சாரம்!
எப்போதும் போல கூவும்...
அந்த ஒற்றைக்குயிலின் ஒப்பாரியில்
ஒளிந்து கிடக்கும் மனிதர்களின் சோகம்...
கிராமங்களில் தொலைத்த வாழ்க்கையை
மீட்டெடுக்கும் ஆசையில்... நகரம் நோக்கி
நகரும் மனிதர்களின் நகரல்களில்
மேலும் மேலும் நிறைக்கப்படும் வெறுமை!

வழக்குகள் ஏதுமின்றி வறுமையோடு
முட்டு திண்ணைகளில் கடந்த
கால பஞ்சாயத்துகளை...
கனவுகாணும் வெள்ளை மீசைகள்!
பயில வழியில்லாதா வேளாண்மையை
கணிணி கற்றுக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில்
காண்வென்ட்டுக்கு செல்லும் குழந்தைகள்...
வறண்டுதான் கொண்டிருக்கிறது கிராமங்கள்..
வருங்காலத்து மியூசியங்களில்...
இடம் பெறும் பெரு முயற்சியோடு!


ஒரு வரலாற்று பிழையை சமகாலத்தில் காணும் தலைமுறையாக நாமிருப்பது ஒரு வருத்தம் தோய்ந்த செய்திதான்.....! என்னவெல்லாம் செய்து கிராமங்களை காப்பாற்றுவது அல்லது என்னவெல்லாம் செய்து மனித கட்டமைப்பை சுத்திகரிப்பது என்று விளங்க முடியாத அளவிற்கு சிக்குப் பிடித்துப்போய் கிராமங்களின் சுயதன்மை அழிய எத்தனித்திருக்கிறது.

நாகரீக வளர்ச்சி என்ற ஒரு தவிர்க்க முடியாத மாற்றத்துக்குள் உற்சாகமாய் நுழையும் அதே நேரத்தில் நமது இயல்புகள் அல்லது அடையாளங்கள் என்று சொல்லக்கூடிய சில விசயங்களை நாம் இழந்து கொண்டிருப்பதுதான் ஒரு ஜீரணிக்க முடியாத விசயம்.

நவீனத்தை உட்புகுத்தி ஏன் நாம் விவாசாயம் செய்யக்கூடாது என்று கேள்விக்கு பதிலாய் விவசாயம் என்பது ஒரு பழமையான ஒரு தொழிலாக நாகரீகத்திற்கு பொருந்தாத ஒன்றாக பார்க்கும் மனோபாவம் வளர்ந்து விட்டதால் இப்படிப்பட்ட கேள்விகளையே பழைய பஞ்சாங்கமாக்கி ஒதுக்கும் ஒரு நிலை இருக்கிறது.

அமைதியும் ஒருவித எதார்த்த கூட்டமைப்பு வாழ்க்கையும், விழாக்களும், விவாதங்களும், ஆடு, மாடு, கோழி, எருமை, நாய், என்ற சிறு மிருகங்களோடு சேர்ந்து வாழும் ஒரு அன்றாடமும் மாறவேண்டும் என்பதில் எனக்கு நவீனமும் தெரியவில்லை நாகரீகமும் தெரியவில்லை.

டீசல் கலாச்சாரம் தவிர்க்க முடியாத நிர்பந்திக்கப்பட்டதாய் இருக்கும் நகர வாழ்க்கையிலிருந்து மனிதனை அரவணைத்து சுத்திகரிக்கும் ஒரு சொர்க்கமாக அவரவரின் கிராமங்கள் இன்னும் இருந்து கொண்டுதானிருக்கின்றன என்பதில் யாருக்கும் மறுப்பு இருக்க முடியாது. கிராமங்களின் தனித்தன்மைகளை விட்டு வெகு தூரம் வந்து விட்டோம் என்ற ஒரு குற்ற உணர்ச்சி இருக்கும் அதே சமயத்தில் உயிர்களின் இயல்பு தப்பி பிழைக்க வேண்டும்...

" தகுதி உள்ளவை தப்பிப் பிழைக்கும் "

என்ற சர்வைவல் தியரி படி மனிதன் பிழைப்பு தேடி நகரத்துக்கு நகர்வது தவிர்க்க முடியாததாய் போனதின் பின் புலத்தில் கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புகளையும், உயிர் நாடியான விவசாயத்தை பற்றிய ஊக்குவிப்புகளையும் மெலும் படித்த இளைஞர்களுக்கு விவசாயம் பற்றிய விழிப்புணர்ச்சியையும் கொடுக்க தவறிய அரசின் பங்குதான் மிகையாக இருக்கிறது என்று எண்ணுகிறேன்.

இந்தியாவின் உயிர் நாடி கிராமங்கள் என்று தேசப்பிதா சொன்னதை மறந்துவிட்டு ஏதோ ஒரு இலக்கு நோக்கி பயணிக்காமல்... நவீனத்தை பயன்படுத்தும், நாகரீகத்தை வரவேற்கும் அதே நேரத்தில்....

இந்தியாவின் இதயதுடிப்பு நிற்கும் தருவாயில் இருக்கிறது என்பதை சுதந்திரத்தை போற்றும் ஒரு தேசத்தின் அரசும் மக்களும் மறந்து விடாமல் உண்மையான தேசத்தின் விலாசத்தை காப்பாற்றியே ஆக வேண்டும்!

தேவா. S

Friday, August 13, 2010

அம்மா...!
சுற்றிலும் இருந்த கூட்டத்தின் கரகோசம் விண்ணை பிளந்து கொண்டிருந்தது. அந்த பந்தை வீசுபவனுக்கு எந்த வித பதட்டமும் இல்லை ஏனென்றால் எல்லோருக்கும் அவன் தான் பந்தை வீசிக்கொண்டு இருக்கிறான் எனக்கான முறை இது....இன்னும் ஒரு ரன் எடுத்தால் 100........!


பந்தை தேய்த்து அவன் ஓடி வரப்போகிறான் இந்த பந்தில் கிடைக்கும் ஒரு ரன் எனது 99தை 100ஆக மாற்றும் என்று எனக்கும் தெரியும்.சுற்றிலும் இருக்கும் கூட்டத்தின் எண்ணம் தெரியவில்லை, சிலர் 100 எடுக்க வேண்டும் என்றும் சிலர் எடுக்க கூடாது என்று எண்ணுவதாகவே எனக்குப் பட்டது ஆனால் பதட்டத்தில் எனது இதயம் இடமாறி துடித்தது என்னவோ உண்மை...அந்த ஒரு நொடி...பந்து வீசப்படுவதற்கு ஒரு வினாடி ஏதோ ஒரு நினைவு என் மூளையில் சிக்க....

என்னுடைய மட்டையை தூக்கி காற்றில் எரிந்து விட்டு......கயிறறுத்த கன்றாய், கட்டுக்குள் சிக்காத காற்றாய் கூட்டம் விட்டு, போட்டி விட்டு, ஆட்டம் விட்டு களம் விட்டு......ஓடிக் கொண்டிருக்கிறேன்.....

அம்மா...மா....மா....மா......எனது சப்தத்தில் சுற்றியுள்ள கூட்டத்தின் சப்தம் அறுபட்டு கேள்விக்குறியாய் எல்லாம் நின்று போகிறது...எண்ண அலைகள் மைதானத்தை விட்டு வெளியேறியதில் மைதானத்தின் மீதும் ஆட்டத்தின் மீதும் போட்டியின் மீதும் ஏனோ ஒரு தெரியாத கோபம்... வெறுப்பு. இந்த மைதானமும் ஆட்டமும் என் தாயை மறக்குமளவிற்கு என் நினைவுகளை திசை திருப்புமெனின்ல், என்னை அறிவு ஜீவி என்ற மமதைக்குள் தள்ளுமெனில், ஆர்ப்பாட்டமாய் ஆள் சேர்த்து அந்த கூட்டத்தினால் தான் என் புத்தியின் சத்துக்கள் விற்க பட வேண்டுமெனில்….

யாருக்கு வேண்டும் இந்த கூட்டம்? யாருக்கு வேண்டும் இந்த ஆட்டம்? கேள்விகளோடு என் தாயின் மடி சேர்கிறது என்னின் நினைவுகள்......கேவிக் கேவி அழுகிறேன்......

4 மணி பள்ளி முடிந்த பின் வீட்டுக்குள் நுழையாமல் புத்தப் பையை வாசலில் இருந்தே வீட்டுக்குள் எறிந்து விட்டு....தெருப்புழுதியில் திளைக்க திளைக்க விளையாடி...ஜெயித்து, தோற்று அந்த அற்புத கணங்களில் எல்லாம் என்னிடம் இல்லையம்மா திடமான ஒரு நான் என்னும் அகங்காரம்! ஒரு கிட்டிப் புல் விளையாட்டில் கூட ஜெயித்தவனை விட தோற்றவனுக்கு சந்தோசம் அதிகம்.....ஆமாம்... தோற்றவன் " சூ " பிடிக்க வேண்டும்.....சூஊஊஊஊஊஊ என்று கத்திக்கொண்டே ஓடி வந்து இலக்கை அடையவேண்டும்... நேர்மையாய் விளையாடி, நேர்மையாய் ஜெயித்து, தோற்று...எங்கே போயிற்று அந்த நேர்மைகளும் நேர்மையான மனிதர்களின் மனங்களும்?

ஜெயிக்கவேண்டும் என்றே குள்ள நரியாய் குறுக்குவழிகள் பயின்று வெற்றிக்கான இலக்கை தீர்மானிப்பது பரிந்துரைகளும், வெற்று மமதைகளும் என ஆகிப்போனதில் பறிக்கப்பட்டது திறமை உள்ளவனின் வலு அல்லவா? எனக்கு வேண்டம் அம்மா இந்த பொய் ஆட்டம்.... நானே ஆடி நானே ஜெயிப்பதில் சந்தோசங்கள் அற்றுப் போய் நீ கற்றுக் கொடுத்ததெல்லாம் மறந்து போய் மரிக்குமுன்னே....என்னை சத்தியாமாய் காப்பாற்று தாயே!!!!

எழுத்துக்களை தீபமாய் எனக்குள் ஏற்றி வைத்த இறைவன் நீ! அன்றொரு நாள் ஒன்றுமறியாத கிள்ளையாய் நானிருந்த போது என் கை பிடித்து அந்த கரும் பலகையில்

" அ " என்று என்று எழுதிப் பழகி " அ " சொல்லு தம்பி...எங்க "அ "........என்று சொல்லி நான் தத்தி தத்தி " அ " என்று சொன்னதை கண்கள் மலர ரசித்து சிரித்த கடவுள் நீ! தந்தையின் இயல்புகளையும் சேர்த்தடக்கிய பெருஞ்சக்தி நீ......

நமது குடும்பத்தோடு பங்காளிகள் ஏதோ ஒரு சொத்துக்காக சண்டையிட்ட அந்த மின்சாரம் இல்லாத கிராமத்து இரவில், காற்றுக்காக வெளித்திண்ணையில் உறவுகள் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த வேளையில் எங்கே நீயும் உறங்கி விட்டால் பக்கத்தில் கைக்குழந்தையாய் இருக்கும் என்னை பங்காளிகள் தூக்கிக் கொண்டு போய் பணயமாக வைத்து மிரட்டுவார்களோ? என்று பயந்து.....உன் முந்தானையை என் அரைஞாண் கயிற்றோடு சேர்த்து கட்டிக் கொண்டு....உறக்கமில்லாமல் வெறுமையாய் என் முகம் பார்த்தே நீ கழித்ததாக கூறிய அந்த இரவின் திடமும் என்னில் மறையவில்லை, என் அரைஞான் கயிற்றில் போட்ட முடிச்சும் இன்னும் அவிழவில்லை......


இன்று என்னைச் சுற்றி எல்லாவற்றையும் மாற்றிப் போட் ட காலம், உன் பாசத்தையும் நேசத்தையும் மட்டும் மாற்ற வல்லமையின்றி வெட்கத்தில் தோல்வியையும் ஒத்துக் கொண்டது.

தம்பி........என்று நீ கூப்பிடும் போது மட்டும் எப்படியம்மா என் அகந்தை எல்லாம் ஒரே விச்சில் மரணித்து போகிறது. கடவுளையும், காதலையும் சரியாகப் பயன்படுத்த பாடம் பகின்றவள் நீ. 100 தேங்காய் தெருவில் உடைப்பதை விட 10 பேரின் பசி தீர்த்தல் நலம் என்று நீ சொன்ன பாலபாடம்தானே இன்று மனிதம் உற்று நோக்க கற்றுக் கொடுத்திருக்கிறது. பசித்தவனுக்கு உணவளித்தலும், தேவைப்படுபவனுக்கு ஈதலும் ஓராயிரம் பேர் சொல்லியிருந்தாலும்.....உன் மூலம் தானே எனக்கு கிடைத்தது.....!

ஓம் சக்தி...பராசக்தி சொல்லு தம்பி….. இது சக்தி மூலமந்திரம் என்று நீ சொல்லிக் கொடுத்தாய்.... நான் சொன்னேன் சொல்லி முடித்தவுடன் ஆராய்ந்தேன்... ஓம்.....என்றால் என்ன? சக்தி என்றால் என்ன? உன்னிடம் கேள்வி கேட்டேன்..... நீ சொன்னாய் யாரிடமும் கேள்வி கேட்காதே...உன்னிடமே கேள்வியைக் கேள் என்று? அடுத்தவர் சொல்லும் பதில்களில் உண்மையிராது தம்பி......உன் மனது உன்னோடு ஒத்துப் போனால்தான் அது உண்மை, கடவுளை பிடி, கடவுளை படி....உனக்குள் கேள்வி கேள் என்று நீ சொன்னதால்தான் இன்று விசுவரூபம் எடுத்து என்னின் பரிமாணங்கள் மாறிப் போனது என்பது உனக்கு தெரியாது......அம்மா?

நீதானே என் முதல் ஆன்மீக குரு....!

உன்னிலிருந்து வெளிப்பட்டு எப்போதும் என்னை நிறைத்து என்னை தண்ணீருக்குள் முக்கி எடுப்பது போல எடுக்கிறதே அதுதான் தாய்மையா? இந்த பரிசுத்ததை எல்லோருக்குள்ளும் வைத்த ஆண்டவன் பெண்மையிடம் மட்டும் அதை எளிதாக எப்படி மலரவைத்தான்? தாய்மையோடு இருக்கும் மனிதரெல்லாம் எப்படி தவறு செய்வார்?

ஆமாம் உலகம் படிக்கவேண்டியது ஓராயிரம் நூல்கள் அல்ல, ஒரு கோடி வித்தைகள் அல்ல, யோக சூத்திரங்கள் அல்ல, வெள்ளிகிழமை, ஞாயிற்றுக் கிழமை ஆலயங்கள் அல்ல....மனிதம் உற்று நோக்கி படிக்க வேண்டியது தாய்மை. அதை கற்றுக் கொள்ள வேண்டிய இடம் பெரும்பாலும் தாய்! அது என்ன பெரும்பாலும் தாய்....தாய்மையின் இயல்புகள் ஆச்சர்யமாய் அதிர்ஷ்டம் இருந்தால் ஒரு நண்பனிடமும், தோழியிடமும், மனைவியிடமும், குழந்தையிடமும் அல்லது தெருவில் போகும் முகம் தெரியாத மனிதரிடமும் இருந்து வெளிப்பட்டு விடும்....தாய்மை ஒரு இயல்பு அல்லது குணம்

தாய்மை = அன்பு செய்தல் + விட்டுக்கொடுத்தல் + தியாகம் செய்தல்+ வலி தாங்குதல் + போராடுதல்


எத்தனை முறை என்னை சாப்பிட நீயும் அழைப்பாய்... நானும் ஒரு தெருவோர பேச்சிலோ, தொலைக்காட்சி மேட்சிலோ, இல்லை தொலைபேசி அரட்டையிலோ உன்னை சட்டை செய்யாமல் என் நினைவுகளை எங்கோ பலிகடா ஆக்கிவிட்டு உன்னின் நேசத்தை தொலைத்திருப்பேன்...... என் பசி அடக்கிய பின் நீ உன் பசியைப் பற்றி சிந்திக்கவே ஆரம்பிப்பாய்.....இதுதானே தாய்மை?


ஒரு நிர்ப்பந்தமான நாளின் மதிய 3 மணியில் முதன் முதலாய் உன்னை பிரிய வேண்டும் என் கல்லூரி படிப்புக்காக...ஒரு வேளை ஜென்மங்களாக கூட இந்த நினைவு தொடரும் என்ற அளவிற்கு என்னுள் ஆழ விழுந்து நான் பயணித்த நாள் அது.

உன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி எழுந்த போது நெஞ்சுக்குள் ஏதோ ஒன்று அடைக்க அத்தனை நாளும் கோழியின் சிறகுக்குள் இருக்கும் குஞ்சு போல உன்னின் கதகதப்பிலேயே வாழப் பழகியிருந்த நான், நீயின்றி தனித்திருக்கப் போகும் எதிர்கால பயத்தில் தொண்டை கம்ம " போய்ட்டு வர்றேன் அம்ம்ம்ம்ம்மா" என்று சொல்ல முற்பட்ட முன்பு....." என் செல்ல மகனே...தைரியமா போய்ட்டு வாய்யா....படிப்புதாய்யா நமக்கு முக்கியம்னு சொல்லி உன் கண் கலங்கியதை பார்த்த அந்த வினாடியில் வாழ்க்கை ரொம்ப கொடுரமாய் பட்டது எனக்கு.

என் தலை கலைத்து நெஞ்சு தடவி என்னை கட்டியணைத்து நீ கொடுத்த முத்தம்தான் இன்று வரை நான் பெற்ற லட்சக்கணக்கான முத்தங்களையும் வெற்றி வாகை சூடிய ஒன்று. சுயநலமில்லாமல் என் உயிர் ஊடுருவி எனக்குள் தன்னம்பிக்கை பரவசெய்த தாய்மையை எனக்குள் ஊற்றி வைத்த அந்த முத்தத்தின் அழுத்தம் இன்னும் எத்தனை ஜென்மங்களுக்கு என்னோடு பயணிக்குமோ அறிகிலேன் அம்மா!

நீ உந்து சக்தி... நீ சொல்லிக் கொடுத்த மூல மந்திரத்தின் பொருள் வடிவம் நீ.....ஓம் என்ற பிரபஞ்ச வெடிப்பின் ஆதிகணங்களின் ஒலியும் அதன் சக்தியும் வீச்சும் உன் வழியே எனக்குள் இறங்கி இன்று வரை போராடும் பேய்க் குணத்தை கொடுத்திருக்கிறது.

கழுத்திலும் கையிலும் நீ கட்டிவிடும் கயிறுகளும், எனக்காக நீ செய்யும் நேர்சைகளும், உன் விரதங்களும் மூட நம்பிக்கை என்று ஒதுக்கி தள்ளிவிட்டு உன்னை புறக்கணிக்க விரும்பவில்லை அம்மா. உன் அன்பின் வெளிப்பாடாகவே கட்டியிருக்கிறேன் நீ கட்டிவிட்ட கருப்பு கயிற்றை கையில் இன்னும்! விவாதங்கள் அற்றவள் நீ......மூளையை வைத்துக்கொண்டு சில நேரங்கள்தான் வாழ வேண்டும், பல நேரங்கள் மூளையை குப்பைத்தொட்டியில் தூக்கி எறிந்து விட்டு மனதால் உலகம் பார் என்று கற்றுக் கொடுத்த என் முதல் குரு.... நீ!

எனக்கு இன்றும் நினைவில் இருக்கிறது அம்மா நாம் குலதெய்வ கோவிலுக்கு சென்று காரில் திரும்பி வந்து கொண்டிருந்தோம்....வழியில் ஓட்டுனரிடம் காரை நிறுத்தச் சொன்னாய்.....! ஏன் என்று எல்லோரும் விழித்தோம்.....டேய் தம்பி...போய் காரை நீ ஓட்டுடா...உரக்க நீ சொன்னதை கேட்ட வண்டியில் இருந்த அனைவருமே பயந்தோம்...ஏனென்றால் நான் ஓட்டுனர் உரிமம் பெற்று 24மணி நேரமே ஆகி இருந்தது...சாலையோ சிவகங்கை டூ மதுரை நெடுஞ்சாலை....! இல்ல இல்ல வேண்டாம் அப்பா மறுத்தார், அக்கா தடுத்தாள், தம்பிகள் முறைத்தனர்...யார் சொல்லும் கேட்கவில்லை நீ...டே அப்பு...போய் ஓட்டுடானு என் முதுகில் தட்டிய அந்த நொடி...எனக்கு கிடைத்த சக்தி...உன்னுள் இருந்த அன்பு, பாசம் எல்லாம் கூடி...கொடுத்த உத்வேகத்தை நீ இருக்கை மாறி முன்னிருக்கையில் வந்து அமர்ந்து திமிராய் ரசித்து கடைக்கண்ணால் நான் கார் ஓட்டியதை கண்டு நீ ரசித்ததை, அதை ஒரு பெரிய வேலை இல்லை என்பதைப் போல நீ நிராகரித்து வேறு ஏதோ பற்றி பேசி கொண்டு வந்ததை நான் கவனிக்க தவறவில்லை.

வாழ்க்கையில் எதையும் செய்து சாதித்து விட்டோம் என்று எண்ணும் இருமாப்பே அடுத்தடுத்த வெற்றிகளை பாதிக்கும் சூட்சுமமாய் பாடம் சொன்னது எனக்கு புரியாலும் இல்லை.

இன்றுவரை நீ என்னை ஊக்குவிக்கும் சக்தி நீ....தகுதியோடு இருந்தால் திமிர் இருக்கத்தான் செய்யும் உனது திமிரை செயலாக்கு என்று சொல்லிக்கொடுத்து..... என் நாடி நரம்பெல்லாம் பரவியிருக்கும் அற்புத தாய் நீ...


ஒரு வெள்ளிக்கிழமை தொலைபேசியில் நான் பேசவில்லை அதற்கடுத்த ஞாயிற்றுக்கிழமையில் நீ போன் செய்து என்னப்பா ஆச்சு...? சும்மயிருக்கீள்ள....ஏய்யா ஒரு போனடிச்சு பேசுனா என்ன ..வாரத்துல ஒரு நாளு உன் குரல கேக்கலேன்னா என்னமோ போல இருக்குல்லப்பா...என்று சொன்னதும் அந்த வெள்ளிக்கிழை இரவு நீங்கள் சாப்பிடவில்லை என்பதும் என்னை புறட்டியே போட்டுவிட்டது.

ஆயிரம் வேலைகள், பிரச்சினைகளென்று இன்று; பொருள் நோக்கிய ஓட்டத்தில் வாழ்க்கை சக்கரம் எங்கோ என்னை கொண்டு வந்து நிறுத்திவிட்டது.....கல்வி, வேலை, திருமணம், குழந்தை, சாதனை என்று பன்முகமாய் திரும்பிவிட்ட வாழ்க்கை கடல் கடந்து இன்று என்னை அம்மாவை விட்டு பிரித்து போட்டு விட்டது என்பதை எப்படி நான் ஜீரணிப்பது?

காலத்தின் வலு அளப்பரியாதாய் இருக்கிறது என் தாயின் அன்பு இப்பொது மெல்ல பீறிட்டு வெளிக் கிளம்பி என் சுயம் தொட்டு...எல்லாம் போதும் ஓடு ஓடு உன் தாய் காத்திருக்கிறாள்....என்று மணி அடிக்கத் தொடங்கி விட்டது. 32 ல் இருந்து 33 க்கு பயணிக்கிறது எனது வயது ஆனால் குழந்தையாய் எல்லாம் மறக்கவே விரும்புகிறேன்.

காலத்தின் நியதி என்றும், வாழ்க்கை சுழற்சி என்றும் ஓராயிரம் அறிவுப் பூர்வமான தர்க்கங்களை எல்லாம் என் காலில் போட்டு மிதிக்கவே விரும்புகிறேன். சாதனைகள் நிகழ்த்துவதில் தவறில்லை.....ஆனால் கண்களை விற்று சித்திரம் வாங்கும் ஒரு மடைமையில் ஓடிக் கொண்டிருக்கிறது உலகம்.....! சீக்கிரம் எல்லாத்தையும் முடிச்சுக்கிட்டு வந்துடு அப்பு...........அம்மாவின் கட்டளை எனக்குள் ரீங்காரமாய் ஓடிக் கொண்டிருக்கிறது.....

பொன்னும் பொருளும் மண்ணும் மனிதரும் ஆட்டமும் ஓட்டமும் தாண்டி படுக்கையில் விழும் இரவுகளில் நிம்மதி இருக்க வேண்டும் மனிதர்க்கு....எல்லா ஓட்டத்தின் முடிவும் நிம்மதி வேண்டும் என்ற மறைமுக எண்ணத்தில்தான் நடக்கிறது ஆனால் இப்பொது வாழும் முறையிலும் ஓடும் ஓட்டத்திலும் தேடும் பணத்திலும் அது கிடைக்காமால் நம்மை நேசித்த உறவுகளின் அன்பையும் இழந்து அந்திம காலத்தில் எல்லாமும் முடியப்போகும் அந்த தருணத்தில்.....ஓ...இப்படி வாழ்ந்திருக்கலாமே...அப்படி வாழ்ந்திருக்கலாமே...என்று மனம் உழன்று மரிக்கும் சராசரி மனிதானாய் நான் வார்க்கப்படவில்லை.

என் தாய் கொடுத்த திமிரும், தைரியமும் தெளிவாய் என்னை வழி நடத்த....இதோ கடக்கிறேன் இந்த கணத்தையும் மெளனமாய்........

இதோ வந்து விட்டேன் அம்மா .....இதோ வந்து விட்டேன்...


உன் பெற்ற வயிறு குளிராமல் நான் குளிர் அறையில் இருந்தென்ன? பதவியிருந்தென்ன?புகழிருந்தென்ன? பணமிருந்தென்ன?எல்லாம் குப்பைத் தொட்டியில் வீசி விட்டு


" இதோ வந்து விட்டேன் அம்மா....இதோ......வந்து விட்டேன்...."தேவா. S

Tuesday, August 10, 2010

நான் யார்....?

உடலல்லன்; உயிரல்லன்; பெயரல்லன்; பதவியல்லன்; உறவல்லன்; எல்லாம் நேதி செய்த பின் எஞ்சியிருக்கும் எல்லாமான ஏகத்தின் வடிவம் நான்....!

யாரோ கொளுத்திய பட்டாசு வெடிக்கட்டும் எனது வலையிலும்...அழைப்பு கொடுத்த நண்பர் எல்.கே, அதை வழிமொழிந்த தம்பி செளந்தர் மற்றும் தோழி கெளசல்யாவிற்கு...இந்த பதிவு சமர்ப்பணம்.

1. வலைப் பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

தேவா. S

2. அந்தப் பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை என்றால் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

தேவேந்திரன் என்பதான் முழுப்பெயர் என்றாலும், தேவேந்தர், தேவன் என்று அலுவலகத்தில் அழைத்தாலும், தேவா என்று என் நண்பர்கள் அழைத்தது நிலைத்து விட்டது. இப்போது தேவா என்று எல்லோருமே கூப்பிட்டாலும்....

" அப்பு " என்று என் அக்காவும் அம்மாவும் கூப்பிடும் பேர்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் " அப்பா " என்று என் மகள் அழைக்கும் தருணங்களில்தான் என் இருப்பை உணர்கிறேன்.

3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்து வைத்தது பற்றி?

சுற்றி நடக்கும் முரண்பாடுகளையும், அநீதிகளையும் பார்த்து நெஞ்சு குமுறி உடனே கண் கலங்கிவிடும் டைப் நான். அப்படிப்பட்ட உணர்ச்சி பூர்வமான நேரங்களில் எனது டைரியும் நானும் உறவு கொண்டு எனது ஆத்திரத்தை கட்டுரையாகவோ கவிதையாகவோ கொட்டித் தீர்த்ததுண்டு. நிறைய வலைப் பூக்களைப் பார்த்து ஒரு ஏக்கத்தில் எழுத ஆரம்பித்த கணத்தில்தான் கண்டு பிடித்தேன்....இந்த வலைப்பூவை நமது டைரியாக்கினால் என்ன என்று? அதனால்தான் எது எதுவெல்லாம் தோணுகிறதோ...எப்போதெல்லாம் தோணுகிறதோ அதை அப்போதே ஒரு பதிவாக்கிவிடுகிறேன்.

வலைப்பதிவு...என் டைரி எழுதுதலின் பரிணாம வளர்ச்சி என்றுதான் சொல்வேன்.

4. உங்கள் வலைப் பதிவை பிரபலமடையச் செய்ய என்னவெல்லாம் செய்தீர்கள்?

கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி தமிழிஷில் சப்மிட் பண்ணி விட்டு வானம் பார்த்த விவசாயி போல காத்திருப்பேன் பதிவு பிரபலமாகும் என்று. முதற்பக்கத்தில் வந்தால் நிறைய பேர் படிப்பார்களே...என்றும், அப்படி படிப்பவர்கள் விமர்சிப்பதால் நான் எண்ணிக் கொண்டிருப்பதை திருத்திக் கொள்ளவும் புதிய கருத்துக்களை கொண்டு என்னை மாற்றிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் அது பிரபலம் அடையுமா என்று ஒராயிரம் முறை தமிழிஷை ஓப்பன் செய்து பார்த்திருக்கிறேன்....!

சில பதிவுகள் ஆரம்பத்தில் பிரபலமாகி முன் பக்கதிற்கு வந்திருக்கின்றன. ஆனால் நல்ல பதிவுகள் என்று நான் நினைத்தத்து வரவில்லை..........! என்னை அறிமுகப்படுத்திக் கொள்ள என்னுடைய பதிவுகளை வாசித்து வாக்களித்தவர்களுக்கு நன்றி கூறி அவர்கள் பதிவுகளை தொடர ஆரம்பித்தேன். இப்படியே நான் அவர்களுக்கு வாக்களித்து அவர்கள் எனக்கு வாக்களித்து என்று ஒரு நன்றி நவிழல் மூலமாக ஓரளவிற்கு என்னுடைய வலைப்பூ கொஞ்சம் பேருக்கு தெரியவந்தது.

என்னதான் நன்றாக எழுதினாலும் நிஜமாவே அடையாளம் காணப்படுவது மிகக்கடினம். எழுத்துக்களை அடையாளம் பெறவேண்டி ஊக்குவிப்பவர்களும் குறைவு.....! அதனால் நமது பதிவுகள் பிரபலாமாக விரும்புவது போலத்தானே அடுத்த பதிவரும் விரும்புவர் என்று எண்னி புதிய பதிவர்களின் பதிவுகளைப்படித்து அவர்களையும் ஊக்குவிப்பதோடு என் நண்பர்களையும் செய்யச்சொல்கிறேன். இது கேள்வியோடு தொடர்பில்லாதது....ஆனாலும் இருக்கட்டும்....!

நான் வாழ மட்டுமா பூமி...? எல்லோருக்கும் தானே!

5. வலைப் பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

அனேகமாக நான் பகிர்வது எல்லாமே சொந்த விசயங்களின் அனுபவங்களின் விவரிப்புதான் என்னை முதலில் சரியா என்று பார்த்துக்கொள்ளும் எண்ணம் தான். விளைவு....பற்றி எனக்கு கவலை இல்லை...! எழுதுவது நமது வேலை...அது பாதித்ததா இல்லையா என்றூ ஆராயத்தொடங்கினால்...வாசிப்பாளனுக்கு ஏற்ற கச்சேரி நான் நடத்த வேண்டி வரும். நான் எழுதுவது என்னுடைய திட்டமிடல் என்னுடைய தெளிவு....இப்படித்தான் எழுத வேண்டும் என்று யாரும் என்னை தீர்மானிக்க கூடது என்பது எனது விருப்பம்.

6. நீங்கள் பொழுது போக்கிற்காக பதிவுகளை எழுதுகிறீர்களா? அல்லது பதிவுகள் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

இரண்டிற்கும் அல்ல..... நான் எழுதுவது எனது ஆத்ம திருப்திக்கு....! குறைந்த பட்சம் நான் மரணித்த பின் என் மகள், எனது சந்ததி எடுத்து வாசிக்குமே...! ஓ இப்படி ஒருத்தன் நமது மூதாதையன் இருந்தானா? ஏதேதோ தத்து பித்து என்று எழுதியிருக்கிறானா? இப்படி எல்லாம் பாட்டியை நேசித்திருக்கிறானா? என்று ஏதோ ஒரு வருங்கால சந்ததியோ இல்லை வேற்று மனிதர்களோ வாசித்து தெரிந்துகொள்வார்களே....அது போதும் எனக்கு!


7. நீங்கள் எத்தனை வலைப் பதிவிற்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப் பதிவு?


குருக்கத்தி என்று ஒரு வலைப்பூ தொடங்கி வைத்திருக்கிறேன். என் சொந்த ஊர் என் பாட்டன் முப்பாட்டன் வாழ்ந்த ஒரு குக்கிராமம் அது. சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் தாலுக்காவில் உள்ளது. இன்னும் கூட பேருந்து வசதியில்லாத, கடைகள் இல்லாத ஒரு ஊர். 50 வீடுகள் இருக்குமா என்பது ஆச்சரியமே...சொந்த ஊர் பற்றி எழுதவேண்டும் என்று திறந்து வைத்துள்ளேன். அனேகமாக இந்த விடுமுறைக்கு ஊருக்கு வந்து திரும்பியவுடன் அதில் குருக்கத்தி பற்றி எழுதுவேன்.

கழுகு என்று அரசில் பார்வைக்காக ஒன்று ஆரம்பித்தேன் அதை இப்போது நான், தம்பி செளந்தர் மற்றும் விஜய் நடத்தி வருகிறோம். கழுகு ஒரு விழிப்புணர்வு போராளியாக எல்லா பதிவர்களின் கட்டுரைகளையும் பேட்டிகளையும் தாண்டி கொஞ்சம் கொஞ்சமாக பறக்க ஆரம்பித்து இருக்கிறது.

மருதுபாண்டி.....போராளிதான் என் சுயமுகம்!

8. மற்ற பதிவர்கள் மேல் கோபம், அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆமாம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?


எதார்த்ததோடு முரண்பட்டு தனது மனதையும் புத்தியையும் கொண்டு ஆராயமல் வறட்டு விவாதம் செய்யும் அல்லது பழக்கத்திம் அடிப்படையில் விஸ்தாரித்து பார்க்கும் இயல்பற்று ஆட்டோ சஜஸன் என்று சொல்லக்கூடிய சுய கருத்துக்களின் அடிப்படையில் உண்மையை விட்டு விலகியிருக்கும் அல்லது கற்றுக் கொள்ள மறுத்து ஒரு இறுகியதன்மையில் இருக்கும் அனைவரையும் பார்த்தால் கோபம் ஏற்பட்டு அதன் உச்சம் அது அவர்களின் அறியாமை என்று விளங்கி வெறுமனே ஆச்சர்யபட்டு அவர்களிடம் இருந்து விலகிவிடுகிறேன். பதிவர்கள் என்றில்லை பொதுவாகவே மனிதர்களை நான் அணுகும் போது ஏற்படும் உணர்வு இது.

பதிவுலகம் என்று சுருக்கிக் கொண்டால் கட்டுரைகளுக்கு கருத்து சொல்லாமல் வெறுமனே வந்து செல்வது சந்தோசமாய் இருந்தாலும் அது ஒரு ஆரோக்கியமான நிகழ்வு இல்லை என்பது என் கருத்து. கட்டுரையோ அல்லது கவிதையோ புரியவில்லை என்றால் கேள்விகளால் தெளிவுகளைப் பெறாமல் இருப்பதும் மாற வேண்டிய ஒன்றூ.

என் எழுத்துக்களை மெருகூட்டவே எண்ணுகிறேன். மற்ற சிறந்த பதிவர்களைப் பார்த்து ஆச்சர்யமாய் கற்றுக் கொள்கிறேன்.

பொறாமையா...அப்படீன்னா?


9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி...

சித்ரா...!

வெட்டிப்பேச்சு என்று சொல்லிக் கொண்டு...சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்துக் கொண்டிருக்கும் அவர்தான் என்னை எனக்கு அடையாளம் காட்டினார்.

எழுதிக் கொண்டே இருந்தேன்... பதிவுலகம் பற்றிய கவலை இன்றி! என்னை ஊக்குவித்து நிறைய எழுதச் சொல்லி தவறாமல் வந்து பதிவுகளை வாசித்து பின் பின்னூட்டமிட்டு...எனது ஆரம்பகாலத்தில் அவர் கொடுத்த உற்சாகம் என்னை இந்த 99வது பதிவு வரை எழுதச் செய்தது என்பதுதான் உண்மை...! இன்னும் சொல்லப் போனால் இது போன்ற ஊக்குவிப்புகள் புதிய பதிவர்களுக்கு அவசியம் என்று சித்ராவிடம் இருந்து கற்றுக் கொண்டேன்.

நண்பர் சி @பாலாசி, மாப்பிளை சிறுகுடி ராமு இவர்களும் என்னை ஊக்குவித்தவர்களே...! எங்க ஊர் தமிழ் அமுதன் (ஜீவன்) என்னை நெறி படுத்தினார்.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

தேடிக் கொண்டு இருக்கிறேன் நான் யாரென்றும் எங்கு சென்று கொண்டிருக்கிறேன் என்றும் எங்கு இருந்தேன் என்றும்....தொடர்ச்சியான தேடலில் ஓட்டத்தில் எங்கெங்கோ சென்று கொண்டிருக்கிறேன். விவரம் தெரியா ஒன்றை பற்றி விவரிக்க முடியாது...என்னைப் பற்றியும் தான்....

தம்பிகள் விஜய் மற்றுக் செளந்தருக்கு நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன். எண்ணியவெல்லாம் முடிக்கும் வல்லமை கொண்ட நெருப்பு பொறிகள் அவர்கள்...!

மற்றபடி...சொல்வதற்கு நிறைய இருந்தாலும்...இப்போதைக்கு இது போதும்....!


தேவா. S

Saturday, August 7, 2010

ஒளி....!


ஜென்மங்களாய் சுமந்து திரியும் குப்பைகளை கழித்தெறிய வேண்டி மீண்டும் மீண்டும் அந்த குப்பைகளின் வாசனைகள் துரத்த ஜனித்து, மரணித்து, ஜனித்து மரணித்து இடைவிடாமல் ஆடிக் கொண்டிருக்கும் ஆட்டத்தின் இறுதி என்னவென்றறியாமல் மூன்று வேளை உண்டு, குடித்து, அலங்கார உடைகள் உடுத்தி, ஆயிரம் பொய்கள் சொல்லி, உறவுகள் கூட்டி, கூடி, பிணி சேர்க்கும் உடல் போற்றி, இன்னதென்று இதற்கென்று அறியாத செயல்கள் செய்து...செல்லும் வாழ்வின் ஓட்டத்தின் ஒரு தினத்தில் எங்கோ ஒரு மின்னல் வெட்ட மூளை செயலற்று நின்று இதுவெல்லாம் எதற்கு? என்று கேள்வி கேட்ட தினத்தில் .....புரிந்தது எல்லாம் அர்த்தமற்றது என்று....

ஒரு விசயத்தை விட வேண்டுமெனில் அதை விடுவதற்கான செயல்கள் செய்யவேண்டும். இது லெளகீக கணக்கு ஆனால் பிறப்பறுக்கும் இந்த பிரபஞ்ச கணக்கிற்கோ....முயற்சிகள் அற்று செயல் மறந்து கருத்துக்களை துப்பிவிட்டு காத்திருக்கவே வேண்டும்.

விதிமுறைகளுக்குள் சிக்கிக் கொண்டு வீசும் காற்றும், சுற்றும் பூமியும் மட்டுப்பட்ட மனிதனின் எண்ணத்திற்கேற்ப இருக்கவேண்டுக் என்று சிந்திக்கும் மூளைகள் எல்லைகளை உடைக்க அறிந்தும் உடைக்காமல் இருப்பதிலேயே அற்ப சுகம் கண்டு விலங்குகளாய் முடங்கிப் போய் கிடக்கின்றன மூலைகளில். நான், நான் என்று கூறிக் கொள்ளும் மனிதரிகளின் அறிவு அவர்களின் புலன்களின் எல்லை என்று ஏன் அறிவதில்லை.

புலன்களின் எல்லைகள் அறுபட்ட போதுதான், மனம் மகிழ்விக்கும் இசையையும், இருள் சூழ்ந்த உலகிற்கு ஒளியும், இன்ன பிற அறிவியல் அதியசங்களையும் மனித மூளைகள் ஜனிப்பித்தன. பார்வைகளுக்கும், சராசரி நினைவுகளுக்கும் அப்பாற்பட்டு சிந்தித்த மூளைகளின் வெளிப்பாடுதானெ இன்றைய அறிவியல். முதன் முதலாய் எல்லாம் கண்டவனின் மூளைக்குள் எங்கே ஒளிந்து இருந்தது விதிமுறைகள்? எல்லாம் தெரிந்து விட்டதென்று அறிவிக்கும் பொழுதுகளில்தானே அறியாமை சிம்மாசனம் ஏறிக் கொள்கிறது.

எல்லாம் தெரியும் என்று சொல்லுமிடத்தில் மட்டுப்பட்டு மரணித்து விட்ட மெய்யறிவை அறியாது பொய்யறிவைக் கைக்கொண்டு, ஈட்டிய பொருள் கொண்டு மமதை கொண்டு, தமது பார்வைகளின் வலுவறியாது பிதற்றும் விந்தை விளங்காது இயங்கித்தான் கொண்டிருக்கிறது பிரபஞ்சம்.ஒரு பல்லியின் பார்வையின் தூரம் சில சென்டி மீட்டர்கள், ஒரு ஓணானின் பார்வையின் தூரம் இன்னும் கொஞ்சம் அதிகம், ஒரு மாட்டுக்கு இவற்றை விட கொஞ்சம் கூடுதலாய் இருக்கும்.

இவற்றின் புலன்களின் எல்லை தாண்டியதற்கு அப்பாலும் உலகம் என்றென்று ஒன்று உண்டு என்று விவரித்து கூறினால் அவை எப்படி ஏற்றுக் கொள்ளாமல் வாதம் செய்து எங்கே காட்டு என்று கேட்குமோ? அப்படியாக உண்டு, இல்லை என்று விவாதிட்டு இலக்கு விட்டு எங்கோ விலகிச் செல்லும் மானுடத்தை நிறுத்த ஒரு வழி உண்டா...?

பார்வையற்றோர் நிறைந்த ஒரு தீவினுள் வழி தவறி விழுந்து விட்டான் பார்வையுள்ள ஒரு மனிதன். பார்வையின்றி நூற்றாண்டுகளாக வாழ்ந்து விட்ட அந்த மக்கள் இவன் வெளிச்சத்தைப் பற்றியும், காட்சிகளைப் பற்றியும் விவரித்தது கண்டு அதை புரிந்து கொள்ள இயலாமல் அவனின் மீது கோபம் கொண்டு அவனை சிறைச்சேதம் செய்து பொய்யினை பரப்புபவன் என்றறிவித்து மரண தண்டனையும் கொடுத்து விட்டனர்.

அவன் மீது சாற்றப்பட்ட குற்றம் இல்லாத ஒன்றை கற்பிக்க முயன்றது மேலும் அதை இவர்களுக்கு உணர்த்த முடியாதது, ஒளி என்று ஒன்று உண்டு என்று அவன் வாதிட்டு சொன்ன போது அவர்கள் கேட்டது ஒளியின் தடிமன் என்ன? அல்லது அதன் சுவை எங்கே? இனிக்குமா? கசக்குமா? புளிக்குமா? அப்படி இல்லை என்னில் அதன் மணம் என்ன? என்று மாறி, மாறி கேட்டு பின் நீ சொல்லும் ஒளி என்றும் வெளிச்சம் என்றும் ஒன்று உண்டென்றால் எம்மை அது பழி தீர்க்க வரட்டும், அப்போது பார்த்துக்கொள்கிறோம் ஆனால் அப்படி ஒன்றும் வராது ஏனென்றால் நீ பொய்யுரைக்கிறாய் என்று கூறி...சாட்டையால் அடித்து மரண தண்டனையும் கொடுத்து விட்டனர்.

ஒளியைப் பற்றி அறிய வேண்டுமெனில் கண்கள்தானே திறக்கப் படவேண்டும் அதற்கான முயற்சிகள் செய்யாமல் மேலும் மேலும் வாதிட்டது பார்வை தெரிந்த மனிதனின் முட்டாள்தனம். முட்டாள்தனத்திற்கு பரிசு....மரணதண்டனை. அது போலத்தான் கடவுள் என்ற விசயத்தை முதலில் விளங்காமலேயே கடவுள் இருக்கிறார் என்று கற்பிக்க முயலும் போது ஏளனமும் சறுக்கல்களும் வந்து விடுகின்றன.

எங்கே சென்று கொண்டிருக்கிறோம்? ஏன்? இரண்டு கேள்விகளும் பழைய வாசனைகளை அறுக்கும் கத்திகள்...

ஒளி பற்றி நான் இபோது விளக்கவில்லை.....பார்வை சரியானால் நீங்களே உணர்வீர்கள்....! அப்போது எதையோ ஒளி என்று நம்பிக்கொண்டு ஒளிக்கு 10 கைகள் 8 தலைகள் என்று நம்பியவரும் ஒளியே இல்லை என்று வாதிட்டவரும் தமது அறியாமையை அறிவர்......!


தேவா. S

Thursday, August 5, 2010

தேடல்....05.08.2010!
கூட்ட நெரிசல் இல்லாத பழமையான பெரிய கோவிலின் ஒரு மூலையில் கண்களை மூடி அமர்ந்திருந்தேன்....! சுற்றும் முற்றும் அவ்வப்போது கடந்து செல்லும் ஓரிரு காலடித்தடங்களுக்குச் சொந்தமான முகங்கள் என்னை உற்று நோக்குமோ என்று ஒரு நிமிடம் கண்விழித்து பார்க்கத் தூண்டிய மனதினை அடக்கி மீண்டும் என்னுள் கவனத்தை செலுத்தினேன்.....

மிகப்பழைமையான யாரோ ஒரு மன்னன் கட்டிய கோவில் அது என்று புத்தகத்தில் படித்தபின் நேரே வந்து ஒரு மூலையில் அமர்ந்துவிட்டேன்..இப்போது அந்த மன்னன் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்தான்...ஓ....பாண்டியரே...இவ்வளவு பெரிய கோவில் ஏன் கட்டினீர்....கடவுள் பிரமாண்டமனவன் என்று எடுத்தியம்பவோ? இல்லை சிற்பக்கலையில் இருந்த விருப்பமோ இல்லை உமது அந்தப்புரத்து தேவியரிடம் உமது பராக்கிரமத்தை காட்டும் யுத்தியோ இல்லை காலம் கடந்தும் உம்மை சிந்தையில் வைத்து மக்கள் புகழ வேண்டும் என்று நினித்தீரோ, இல்லை உமக்கு இறை மீது பிடிப்பு அதிகமோ? ஆமாம் அதுவென்ன மன்னர்களெல்லாம் பெரும்பாலும் சிவனுக்கே கோவில் கட்டியிருக்கிறீர்?

கற்பனைகள் செய்த மன்னனை கண்முன் கொண்டுவந்த மனம் புறத்தில் யாரோ ஒருவர் தேவாரம் ஓத மன்னனை பட்டென்று விட்டுவிட்டு தேவாரம் பாடும் மனிதனைப் பற்றியும் விவரித்துப் பார்த்து தேவாரம் சொல்லும் அவரின் உருக்கத்தின் வழியே மெல்ல பயணித்து இறைவனை நினைவில் கொண்டு வந்தது. யார் இறைவன்?

சிவனா? சிவலிங்கமா? ஏன் சிவன் கோவிலில் அதிக கூட்டம் இருப்பதில்லை? பிரதோச காலத்தில் மட்டும் கூட்டம் கூடி போற்றிப் பாடுகிறதே....பிரதோசம் கொண்டாடும் மாலை வேளையில் நந்தி தேவரிடம் வேண்டினால் சிவனிடம் இருந்து எல்லா விதமான வரமும் கிடைக்கும் என்று கூட்டம் கூடுகிறதே....ஆக கடவுளாக இருந்தாலும் கொடுத்தால்தான் கூட்டமா.....என்று மனம் வேகமாய் பயணித்து என்னுள் செய்திகள் சொல்ல...சட்டென்று திசை திரும்பி வேறு ஒருவரின் குரலை கவனமாய் உற்று கவனித்தது மனது......

யாரோ இறைவனிடம் வேண்டுதல் செய்து கொண்டிருந்தார்கள். ஆண்டவா! பரம் பொருளே எனக்கு இது வேண்டும், அது வேண்டும், என் தொழில் நல்லபடியாக வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை நிபந்தனைகளாய் பட்டியலிட்டு கடவுளை நிர்ப்பந்தம் செய்து கொண்டிருந்தார் அதாவது கடவுளுக்கே கட்டளைகள் பிறப்பித்துக் கொண்டிருந்தார்.

என் மனம் என்னிடம் கேட்டது பரம் பொருள்தானே...எல்லாம் அறிந்த இறைவனுக்குத் தெரியாதா இவருக்கு என்ன தேவையென்று...இவர் போய் அமைதியாய் பக்தியோடு நின்றால் போதாதா? ஏன் படைத்தவனுக்கே கட்டளைகள் அல்லது விளக்கங்கள்??? மனது கேட்ட கேள்வியை வாங்கிக் கொண்டு அதை அடக்கினேன்.மெல்ல மிகவும் கஷ்டப்பட்டு உள்ளே திரும்பினேன்........கண்கள் மூடி இருந்தது. மூச்சு கொஞ்சம் முன்னுக்குப் பின் முரணாக இருந்தது. எந்த ஒரு ஆசனத்திலும் அமராமல் என்னை இறுக்காமல் தூணில் சாய்ந்து இருந்தேன். மெல்ல மூச்சு சீரானது....ஒரு அமைதியை மெல்ல யாரோ என் தலைக்கு மேல் இருந்து ஊற்றி விடுவது போல...ஒரு பாட்டிலை நிரப்பும் திரவம் போல...என்னுள் நிரம்பியது ஒரு நிசப்தம்....

நானிருந்தேன்...ஆனால் நான் இல்லை. அதாவது நான் என்னும் உணர்வு இருந்தது. நான் இந்த மாதிரி, இந்த பெயர், இந்த பதவி, இன்னாரின் மகன், உறவினன் , இந்த மதம், இந்த சாதி, என்று கன்மேந்திரியங்களின் தொடர்பினால் ஏற்பட்ட அந்த நானில்லை. ஞானேந்திரியங்களோடு கூடிய ஒரு வித சூட்சும நிலையில் சுடராய் உடல் என்ற இருப்பையும் உணர்ந்து எங்கும் பறக்காமால் கொள்ளாமால் ஆடாமல் அசையாமல் நிலையாய் எரியும் ஒரு சுடரை ஒத்த நிலையில் கூடவும் குறையவும் செய்யாத மத்திம நிலையில் பந்தப்பட ஒன்றுமில்லாமல்....வெறுமனே இருந்தேன். மூச்சின் வேகம் சீராக இருந்தது.

அப்போது என்னுள் எந்த கடவுளரின் படமும், சிலையும் இல்லை. நிசப்தம் என்னுள் நிரம்பி வழிந்த பேரமைதியில் திளைத்திருந்தேன். இதன் சாயலை.......வெடித்து சிதறி என்னை தொலைக்கும் கூடலின் உச்சத்தில் உணர்ந்திருக்கிறேன். அது கண நேரம் காட்டிக்கொடுக்கும் இந்த பேரமதியை இன்னும் சொல்லப்போனால் கண நேரத்தில் நான் தொலைந்து போன அந்த உன்னதத்தை உணரத்தான் காமமும் படைக்கப்பட்டதோ? இதை உணரவேண்டும் என்றுதானா மானுடத்திற்கு இதன் மீது இப்படி ஒரு ஈர்ப்பு. மனம் மீண்டும் அந்த நிலையை காமத்த்தின் உச்சத்தோடு தொடர்பு படுத்தி காமம் பற்றிய சிந்தனையின் மூலம் ஒரு மெல்லிய இடைவெளியை ஏற்படுத்தி அந்த மெல்லிய இடைவெளியில் வெளியே வர முயற்சித்ததை உணர்ந்தேன்.

மனதுக்கு செயலற்று இருப்பது பிடிக்காது என்று படித்திருக்கிறேன் இன்று உணர்கிறேன். மீண்டும் மனதை அதட்டி உள் செலுத்தினேன்....இப்போது உள்ளிருக்கும் சிவனைப் பற்றி சிந்தித்தது மனது நான் பின் தொடர்ந்தேன்.

சிவ வழிபாடு வழிபாட்டின் உச்சம்.....சிலையாய் வழிபட்டு, வழிபட்டு கடையிசில் உருவம் இல்லை என்று கற்பிக்க உருவமும் அருவமும் இல்லாத ஒன்றை சிவலிங்கம் என்று கூறி வழிபட்டு,மீண்டு ஒரு முறை இறைவன் என்பவன் தனித்தவனில்லை என்றுணர்த்துவதற்காக இறைவனை மலையென்றும், நெருப்பென்றும், நீரென்றும், ஆகாசமென்றும், காற்றென்றும் சொல்லி உருவக்கொள்கையை உடைக்கச் செய்து கடைசியில் சிதம்பர ரகசியம் என்று வெட்டவெளியை சுட்டிக் காட்டி எல்லாம் சேர்ந்தது இறை என்று சூட்சுமமாய் சொல்லி உணர வைக்க எத்தனை படி நிலைகள்? எத்தனை கடவுளர்கள்? எத்தனை கட்டுக் கதைகள் எத்தனை பயமுறுத்தல்கள்? கடைதேறி கோடியில் ஒருவர் வருவார்....அப்படி வருபவரும் இதை விளம்பரப்படுத்தும் ஆசையும் அற்று... இருந்ததனை இருந்தது போல இருந்துகாட்டி மெளன குருவாய் தட்சிணா மூர்த்தி தத்துவம் போல போதனைகளை எல்லாம் மெளனத்தில் சொல்லிவிட்டு மாய்ந்து போவார். இதை மிகைப்படுத்தி சிலர் காவியுடை உடுத்தி கள்ள வேசமிட்டு அறியாமையில் இருக்கும் மக்களை சீர்கேட்டிலும் விட்டு விடுவார்.

சிவம் என்றால் எதுவமற்றது ஆனால் எதுவமற்றது என்பதால் ஒன்றுமில்லாதது என்று அர்த்தம் இல்லை. பூரணமான ஆதி பிரம்மம் என்ற பிரபஞ்சம் தான் சிவம். சிவம் என்ற சொல்லின் அர்த்தம் இயங்கா நிலையில் இருக்கும் ஆதி நிலை என்று அர்த்தம். இந்த சிவத்தில் சக்தி மறை பொருளாய் இருந்தது. அதனால்தான் இயங்கும் சிவம் சக்தி அதாவது எனர்ஜி ஆனது. இயங்காத சக்தி சிவம். பிரபஞ்சத்தில் முதல் அசைவு எங்கே இருந்து ஆரம்பித்தது....இயக்கமற்ற ஒரு சூன்யத்திலிருந்து அந்த சூன்யம் சூன்யமாய் இருந்துகொண்டே இயக்கத்தை நடத்தியது....இயக்கத்திற்கு காரணம் வெற்றிடம்...! வெற்றிடம் சிவன்....அது இயங்க ஆரம்பித்தால் சக்தி....

எவ்வளவு நேரம் என்று கணிக்க முடியவில்லை. வெறுமனே இருந்ததில் சுகமும் ஒரு விதமாக அதை லயித்து கிடந்தேன். இடையிடையே மனம் செய்த சேட்டைகளை ரசித்த படியே.ஒரு வித ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்ற ஒரு ஓசையினூடே பயணத்துக் கொண்டே அந்த ஓசையாகவே அதிர்வுகளாகவே இருந்தேன்....

கோவில் நடை சாத்தப் போறோம்டா அம்பி....எழுந்திரு...கோவில் ஊழியரின் சப்தம் என் காதுக்குள் ஊடுறுவி...மூளைக்குள் சென்று மூளையிலிருந்து உடனே கட்டளை வர உடலின் பாகங்கள் வெளியே எட்டிப்பார்க்க...மெல்ல கண்கள் விழித்து மெளனமாய் கோவில் விட்டு வெளி நோக்கி நடக்க ஆரம்பித்தேன். ஒரு வித கூர்மையும் அழுத்தமும் இருந்தது எனது இருப்பில் மனம் சுருண்டு ஒரு ஓராமாய் இன்னும் பேந்த பேந்த விழித்துக் கொண்டிருந்தது.

உச்சி வெயிலின் ராஜாங்கத்தில் பரபரப்பாய் இருந்தது உலகம்......!


தேவா. S

Wednesday, August 4, 2010

சீத்தாங்கல்...!கொஞ்ச நேரம் தத்துவங்களையும், விவாதங்களையும், ஆராய்ச்சிகளையும், எல்லா வியாக்கியனங்களையும் விட்டுவிடப் போகிறேன்.....ஆமாம் இந்த கட்டுரையில் கருத்து தேடாதீர்கள், இந்த கட்டுரையில் கடவுளையும் தேடாதீர்கள்!எதுவுமற்று ஒரு நாள் வெறுமனே... நமக்கு பிடித்த செயலைச் செய்வோம் சரியா? அதாவது குளத்தில் பானை ஓட்டை சில்லாக்கி எறிவோமே, அதை "சீத்தாங்கல்" என்று சொல்வோம். எறிந்த அந்த ஒட்டு சில்லு தண்ணீரின் மீது தட்டி தட்டி குதித்து குதித்து போய் ஒரு இடத்தில் தண்ணீருக்குள் மூழும்ம்...அந்த செயலில் அர்த்தம் இல்லை ஆனால் அது தத்தி தத்தி போவதை பார்ப்பதில் ஒரு மலர்ச்சி மகிழ்ச்சி இருக்கும்..

அப்படி ஒரு சீத்தாங்கல்தான் இந்தக் கட்டுரை....

என்னிடம் ஏன் ரஜினியைப் பிடிக்கிறது என்று கேட்டு விடாதீர்கள்...? ரஜினியால் என்ன பலன் ரஜினி? ஒரு சுய நலவாதி என்று ஆயிரம் உதாரணம் காட்டி விடாதீர்கள்....என்னைப் போல ஆட்கள் இருப்பதால்தான் தமிழ் நாடு உருப்படவில்லை என்று சொல்லி விடாதீர்கள்....ஏனென்றால்....

ஏன் ரஜினியைப் பிடிக்கும் என்று என்னால் பட்டியலிட முடியாது...காரணம் எனக்கே தெரியாது. ரஜினி பிடிக்கும்...அவ்ளோதான்....எனக்குள் தோன்றும் உணர்வு அது....? குளிர் எப்படி இருக்கும்? எனக்குத் சொல்லத்தெரியாது அது போல ...ரஜினி பிடிக்கும் இதற்கு பின்னால் எந்த விளக்கமும் இல்லை.

" ரஜினி "

மூன்றெழுத்து மந்திரமா? இல்லை என் மனது செய்யும் தந்திரமா? விபரம் தெரிந்ததில் இருந்து இந்த முகம் பார்த்த உடன் எனக்குள் ஒரு ரசாயான மாற்றம் ஏற்படுகிறதே அது எப்படி? எத்தனை படம் வரட்டும் எத்தனையோ நடிகர்கள் வரட்டும்...ரஜினி படத்தின் பாட்டு ரிலீஸ் ஆகி அதன் வரிகளை கேட்கும் போதே உடலில் இருந்து இரத்தம் ஜிவ்வென்று தலைக்குப் போய் முகம் முழுது ஒரு குறு குறுப்பு பரவி காதுகள் சூடாகி....ஒரு உற்சாகம் பிறக்கிறதே....? ஏன்?

எந்திரன் பாட்டு ரிலீஸ் ஆகும் முதல் நாளே சூரியன் எப்.எம்மில் போட்டதாக சொல்லி செளந்தர் தம்பி எனக்கு மெயிலில் இரண்டு பாடல்களை அனுப்பி வைத்தான். இரவு 9:30 மணிக்கு (இரவு 11மணி இந்திய நேரத்துக்கும் நான் கேட்டு விட்டேனே என்று பொறுமையாக அதை அனுப்பி வைத்த தம்பிக்கு நன்றி) மெயிலில் வந்த எந்திரனை என் காதுகளுக்குள் கொண்டு சேர்க்கும் முன் ஏன் எனக்கு கைகள் ஆடத்தொடங்கி..ஒரு வித பரபரப்பு பற்றத்தொடங்கியது....?

ரஜினி...60தைத் தாண்டியும் உனக்குள் இருக்கும் (ஒருமையில் ஒரு நடைக்காக எழுதுகிறேன்...) ஒரு வேகமும்....இன்னும் உச்சத்தில் உன்னை வைத்திருக்கும் வசீகரத்தின் பிண்னனியும் என்ன? கண்டக்டராய் இருந்து...30+ க்கு பிறகு உன்னால் உச்சம் போகவும்...எத்தனையோ ரசிகர்களின் நெஞ்சம் போகவும் காரணம் உனது உழைப்பா? இல்லை அதிர்ஷ்டமா? இல்லை உனக்குள் இருந்த சாதிக்க வேண்டும் என்ற வெறியா?

" இவன் பேரைச் சொன்னதும்,
பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கைதட்டும்
இவன் உலகம் தாண்டிய ..
உயரம் கொண்டதில்
நிலவும் நிலவும் தலைதட்டும்
அடி அழகே உலகே!
இந்த எந்திரன் என்பவன்..
படைப்பின் உச்சம்

என்ந்த்த்த்த்த்த்த்....................திதிதிதிராரா "

வைரமுத்துவிற்கு வார்தைகளில் விளையாடச் சொல்லித் தரவா வேண்டும்? வார்த்தைகள் ஹெட்போன் வழியாக என் செவிகளுக்குள் ஊடுறுவி மூளைக்குள் சென்று வரிகளோடு ஏற்கெனவே என்னுடைய நினைவுப்பகுதியில் இருந்த ரஜினி என்ற பிம்பத்தொடு தொடர்புபடுத்தி அதற்கு பின்னே இருந்த ரஜினியின் துடிப்பையும் எங்கிருந்தோ...எங்கோ...அவர் சென்ற ஒரு உயரத்தை தொடர்புபடுத்தி ஒரு ரஜினியால் சாதிக்க முடியுமென்றால், உச்சத்தை தொடமுடியுமென்றால்....ஏன் நானும் சாதிக்ககூடாது....? அப்படிப்பட்ட சாதனையைச் செய்ய நான் என்ன செய்ய வேண்டும் என்று கேள்வி கேட்டு...அதற்கு பதிலாய்..கடுமையான உழைப்பும், சுறு சுறுப்பும் வேகமும் எல்லாவற்றிலும் ஒரு இன்னோவேசனும் வேண்டும் என்பதை பதிலாய்ப் பெற்று....

எனக்குள் மோட்டிவேசனல் பேக்டர் நன்றாக வேலை செய்யத்தொடங்கி...எல்லாமே கண நேரத்தில்..... நடந்து விட.....மீண்டும்....


"என்ந்த்த்த்த்த்த்த்....................திதிதிதிராரா "

மீண்டும் மீண்டும் உந்தியது.....உயரத்திற்கு.... அந்த வரிகளும் ரஜினி பற்றிய நினைவுகளும்....!


பிண்ணனியில் இசைத்த பிரமாண்ட இசைக்குப் பின்னால் ஏ.ஆர் ரகுமானினி உயரம் தெரியவும் எனக்குள் இருந்த உந்து சக்தி இரண்டானது.....பிரமாண்டங்களின் அணிவகுப்பு அப்போது நடந்தது...! திருமணம் ஆகி குழந்தை பிறந்து விட்டால்... வாழ்கை முடிந்து போய்விட்டதாக எண்ணும் 30+களே....சாதிக்க முடியும்... நம்மால்...உலகம் திரும்பிப் பார்க்கும் ஒரு மனிதராக மாற முடியும்...இக்கணமே..இப்பொழுதே தொடங்கட்டும் நமது இலக்கு நோக்கிய பயணம்.


ரஜினி ஒரு ....லெஜண்ட்...வெற்றிகளின் நாயகன்.....வெற்றி என்பது மட்டுமின்றி எப்படி வெற்றி பெறுவது என்று கற்று வைத்திருக்கும் சூத்திரதாரி. அதே நேரத்தில்.ஒரு பேட்டியில் சொல்லியிருப்பார்......

"ஏன் அதிக இடைவெளி கொடுத்து படத்தில் நடிக்கிறீர்கள்" இது கேள்வி...இதற்கு ரஜினி சொல்லுவார்

"ஜெயிச்சுட்டு இருக்கும் போதெ... அதாவது பிசியா இருக்கும் போதே எப்படி சும்மா இருக்குறதுன்னு படிச்சுகிறேன் ஏன்னா ஒரு நாளைக்கு வேலை இல்லாம ச்சும்மா இருக்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கும்ல அதான்......"

என்று சொல்வர் உச்சத்தில் இருக்கும் போதே எதார்த்ததை பற்றி சொல்லியிருப்பார். அதே நேரத்தில் வெற்றியும் தோல்வியும் பாதிக்கும் மனோ நிலையை எல்லாம் கடந்து வந்து விட்டாலும்...இன்று தலைமுறைகள் தாண்டியும் ஒரு எந்திரனாய் எல்லோரையும் மிரட்டிக் கொண்டு இருக்கிறார் என்றால்...

ஒரு மனிதனின் சக்தி எவ்வளவு பாருங்கள்....? உலகில் இருந்து ஆயிரம் உதாரணங்களை எடுத்துச் சொல்லலாம் என்றாலும் கண் முன்னே நான் பிரமித்துப் போனது இந்த மனிதனிடம் தான்.....

அரசியல் தலைவனாக பார்க்காமல்...ஆன்மீக குருவாக பார்க்காமல்.... நடிப்பில் சிறந்த ஒரு கலைஞனாக பார்க்காமல்....ஒரு மனிதனாய்.....எங்கே இருந்து எங்கே.......அவர் பயணித்திருகிறார்.....இந்த பிரமிப்புதான் ஒரு வேளை அவர் மீது உள்ள ஈர்ப்பின் காரணமோ...?

"சீத்தாங்கல்" விட்ட சந்தோசம்...எந்திரன் பாட்டு கேட்ட பின்..அடுத்த சீத்தாங்கல் விடுவேன்...படம் ரிலீசான முதல் நாள்....!


தேவா. S

Tuesday, August 3, 2010

கனவு காணுங்கள்....!எந்த கணமும் தாக்குதல் நடத்தப்படலாம்,உடலின் எங்கே வேண்டுமனாலும் அம்புகள் தைக்கலாம், எதிரியின் வாள் வீச்சில் எப்போது வேண்டுமானாலும் கழுத்தறு படலாம், உறக்கத்தையும் பசியையும், உறவுகளையும் கடந்து...இரவையும், பகலையும், வெயிலையும் குளிரையும் பொருட்படுத்தாது எந்நேரமும் வாள் வீசிக் கொண்டு இருப்பவன் தான் போராளி.....

கூச்சலுக்கும்,அலறலுக்கும் சுற்றி கிடக்கும் பிணங்களுக்கும் நடுவே..இருப்பவனுக்குத் தெரிவதெல்லாம் ஒன்றேதான் லட்சியம்....! தம்முடைய சோர்வு தமது சகாக்களுக்கு வந்துவிடக் கூடாது என்று எப்போதும் தன்னை முன்னிறுத்தி.....முன்னேறி.. முன்னேறி தனது உற்சாகத்தையும் உத்வேகத்தையும் சுற்றியுள்ள தோழர்களுக்கு பரவச் செய்கிறானே...அவனின் புத்தியில் வேறு என்ன இருந்து விடப் போகிறது....?

கொள்கையும் லட்சியமும்தானே?

வாள்களின் வீச்சு..
கேட்டு… கேட்டு மரத்துப் போயின
எமது செவிகள்!
சோர்ந்து போன எதிரிகளின்
யுத்திகள் எல்லாம்...
எம்மை அழிக்கு உ பாயம் அறியாது...
கலங்கச் செய்கின்றன..புத்திகளை!
பட்ட இடமெல்லாம்...
பரவும் நெருப்பினை தோட்டாக்களும்
அம்புகளும் வாள்களும்...
என்னதான் செய்ய முடியும்?
ஒன்று நீர் நெருப்பாய் மாற வேண்டும்
அல்லயேல்... நீர் நீராய்...மாறி...
எம்மை குளிர்விக்க வேண்டும்...
குளிர்விக்கும் உபாயம்..அறிந்திலீர்;
வாரும் நெருப்பாய் மாறூம்...
எம் உக்கிரத்தினை ...
கற்று.. திக்கெட்டும் பரவி...
கொடுமைகளை..எரித்துப் போடும்!

ஒரு டாக்டர் தொழில் நடத்தி வாழத்தெரியாதவரா சேகுவாரா....? மூன்று வேளை உண்டு,பொருள் தேடிச் சேர்த்து, பிள்ளை குட்டிகளுடன் சுகவாசியாய் வாழ்ந்து மரிப்பதில் என்ன பிரச்சினை இருக்கிறது?

பிறகு எதில் செளகரியம் அவருக்கு வீட்டை விட்டும்,பிள்ளைகளை விட்டும் பிரிந்து செல்ல அவரை உந்தியது எது? அர்ஜென்டினாவில் பிறந்து கியூபாவிற்காக அவர் போராடவேண்டிய அவசியம் என்ன? ஒரு நாட்டின் தொழில்துறை அமைச்சராய் இருந்து சுக போகங்களை அனுபவிக்கத்தெரியாதவரா சே....?

கியூபாவிற்கு பிறகு, காங்கோ, பொலிவியா என்று அந்த மனிதன் நகர்ந்து கொண்டே இருந்த நோக்கம்தான் என்ன? உள்ளே எரிந்த “ தீ ” தானே? அத்தனை பெரிய தீ எரியாவிட்டாலும் கூட பரவாயில்லை தோழர்களே..வாழ்வின் போக்கு போகிற போக்கில் இயன்றதை செய்வோம் என்ற நெருப்பு ஏன் நம்மிடம் இல்லை?

இன்னும் ஒற்றை ஓட்டுக்கு கையில் பணம் திணிக்கும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். வாங்கும் நிலையில் வைத்திருப்பதால்தான் கொடுக்கமுடியுமென்ற மிகப்பெரிய சதிதானே ஓட்டரசியல்? சகித்து சகித்து எப்படி தோழா வாழ்வது...? பேசிப் பேசி தீர்த்துவிட முடியுமா எல்லா பிரச்சினைகளையும்!

" தெருவோர குப்பைகளைக் கூட மதித்து ஒரு குப்பைத்தொட்டி கட்டிவிடுகிறார்கள். குடியிருக்க வீடில்லாதா எம்மக்களை எப்படி ரோட்டோரம் விட்டு வைத்தார்கள்? "

முடியுமா? சாத்தியமா? நடக்குமா என்று கோடிகுரல்கள் கேட்கின்றனவே...ஐயகோ! கேட்கின்ற குரல்கள் எல்லாம் உரக்க சப்தம் செய்தல் கோட்டை கொத்தளங்கள் எல்லாம் பொடிப்பொடியாய் ஆகதா? மேலும் மேலும் எம்மக்களை ஆட்டு மந்தைகளாக்கி சுய நல சேற்றில் தள்ளிவிட்டு சுகம் காணும் அதிகார வர்க்கங்கள் தூள் தூள் ஆக வேண்டாமா?


சாலையோரத்தில் சிறு நீர் கழித்துக்கொள்ளுங்கள், தெருவெங்கும் காறி உமிழுங்கள், குப்பை கூளங்கள் போடுங்கள்.ஒத்த பிள்ளைக்கு உடையில்லாவிட்டாலும் பத்துப் பிள்ளைகள் பெற்றுக்கொள்ளுங்கள், சண்டையிடுங்கள், சாதியாய் பிரிந்து நில்லுங்கள், மதமாய் மாய்த்துக் கொள்ளுங்கள். அரசு அதிகாரங்களுக்கு அதுதானே வேண்டும்...! நாம் எல்லோரும் வெற்று வயிறோடு பசி.....பசி என்று கத்திக் கொண்டே.....வாக்குகள் அழித்து விட்டு துரைமார்களைப் பார்த்து தலைவா…… என்று கும்பிட்டுக் கொண்டே இருப்போம்....அவர்களும் வெள்ளை வேட்டி சட்டையோடு அம்பாஸிடர் கார்களில் பவனி வரட்டும்!

தேர்தலில் இதைச் செய்கிறேன் அதைச்செய்கிறேன் என்று சொல்வது பார்த்தும், செய்து விட்டேன் எமது இதுதான் சாதனைப் பட்டியல் என்று பல்லிளித்துக் கொண்டு வருபவர்களைப் பார்த்தால் எப்போது நமக்கு ஆத்திரம் வருமோ அந்த ஒரு நாள் தான் இந்தியாவின் ஒரு உண்மையான சுதந்திர நாள்.. ஏகாதிபத்தியம் மனதளவில் ஒழியும் நாள்....

" நீவீர் ஆட்சிக்கு வந்தால் எம்மக்களுக்கு செய்துதான் ஆகவேண்டும்...அது உமது பணி ஒவ்வொரு தொகுதியிலும் இருந்து எமது பிரதி நிதியாகத்தானே நீங்கள் செல்கிறீகள்...? ஒட்டு மொத்த மக்களாகிய நாங்கள் வரமுடியாது...என்று எமது பிரச்சினைகளை பிரதிபலிக்கும் எமது கோரிக்கைகளை கோட்டையில் சொல்லும் பிரதி நிதிகள் நீங்கள், அதற்காகத்தான் வாக்களித்து உம்மை தேர்ந்தெடுத்தோம்...!

மக்களை அதிகாரம் செய்ய அல்ல அரசு, அது மக்களையும் மக்களின் பிரச்சினைகளையும் நிர்வாகம் செய்ய.....! இங்கே எப்படி வந்தது முதாலாளித்துவமும், கூளைக் கும்பிடுகளும்? கேள்விகளை நமக்குள்ளேயே கேட்டு கேட்டு ......வெறுமனே மண்ணில் அடிமைகளாய் அழுகிபோவாதா எமது மூளைகள்....?இப்போது சொல்லுங்கள் போர் எங்கே நடக்க வேண்டும் என்று...?

ஒரு தெருவிளக்கு விடியல் தாண்டியும் எரிகிறதென்றால்....அங்கே நமது வரிப்பணம் விரயமாகிறதென்ற எண்ணம் ஏன் நமக்கு உதிப்பதில்லை? இலவசாமாய் நாம் பெறும் பொருளெல்லாம் கொடுப்பவர்களின் சொத்திலிருந்தா கொடுக்கப்படுகிறது.....வள்ளல் பட்டம் எதற்கு...? விருத்திக்கு வரும் தொழிற்சாலைகளையும் வேலை வாய்ப்புகளையும் கேட்க மறந்து கலர்பெட்டிகளின் மீது ஆசைப்பட்டதில் என்ன தோழா நியாயம் இருக்கிறது....?


மாறாக வேளாண்மை செய்யும் உரத்தின் விளையை குறைத்திருக்கலாம்....எல்லா பிள்ளைகளின் கல்லூரி வரையான கல்வியை இலவசமாக்கியிருக்கலாம்.ம்ம்ம்ம்ம்ம் அறிவு விருத்தி வேண்டாமென்று தானே எம்மக்களை அழிவு விருத்திக்கு ஆளாக்கியிருக்கிறீர்கள்...?

சமூக பிரஞ்ஞை எல்லாம் யாரோ ஒரு அரசியல் கட்சி தலைவனுக்கும், ஒரு நடிகனுக்கும், அல்லது பத்திரிக்கையாளனுக்கும், தொலைக்காட்சி வைத்திருப்பவருக்கும் மட்டும் வரட்டும்....மீதியுள்ள ஜனங்கள் எல்லாம் வாய் பிளந்து காத்திருக்கட்டும்....

கடவுள் என்று ஒருவர் வருவார்... பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பாரென்று…!

கடவுள் இதுவரை வந்ததில்லை இனியும் வரப்போவது இல்லை செயல்படவேண்டியது எல்லாம் மனிதர்களாகிய நாம்தான்…

இதை யார் உணர்வார்? (இந்தக் கேள்வியைக் கூட மாற்றிதான் கேட்க வேண்டும்)

யார் உணர்த்துவார்?(யாரோ ஒருவர் வருவார் என்று காத்திருப்போம் ஜனநாயக அடிமைகளாக......)

மேலே உள்ள புகைப்படம் சினிமா சூட்டிங் அல்ல இந்திய வீதிகளில் எடுக்கப்பட்டதுதான்...!


தேவா. S

Sunday, August 1, 2010

புல் தானாகவே வளருகிறது....!எழுத ஆரம்பிப்பதெல்லாம் உணர்வு நிலையில் இருந்து வருவதாலும் அதற்காக கற்பனைக்குதிரையை நான் தட்டிவிட வேண்டும் என்ற அவசியமின்மையாலும் மேலும் மிகைப்பட்ட நிகழ்வுகளின படிப்பினைகளை பகிரவேண்டும் என்ற ஆசையினாலும் பெரும்பாலும் ஒரு கட்டுரை, ஒரு கருத்து என்று தேங்கிக் கிடக்கும் நீரைப் போல என்னால் இருக்க முடிவதில்லை மாறக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு ஆற்றினைப் போல என் தேடல் போய்க்கொண்டே இருக்கிறது.

" புல் தானாகவே வளர்கிறது...? என்று ஒரு ஓஷோவின் புத்தகத்தை மேய்ந்து கொண்டிருந்த பொழுது மேல் மனது என்னிடம் புத்தகத்தை உடனே மூடச்சொன்னது. ஏன் என்ற கேள்விக்கு உடனடி பதிலாக புல் தானாகவே தான் வளரும்..இதில் என்ன பெரிய கருத்து இருக்கிறது? என்று என்னை திருப்பிக்கேட்டது மனது.

புத்தகத்தை மூடி விட்டு அதன் அட்டைப்படத்தை பார்த்து கொண்டே இருந்தேன்....

"புல் தானாகவே வளருகிறது "

தலைப்போடு சேர்ந்து அட்டை காற்றில் ஆடியது. புல் தானாக வளருவதில் என்ன இருக்கிறது? ஆச்சர்யம்....? புல்லின் செயல்பாட்டை புறக்காரணிகள் நேரடியாக மாற்ற இயலுமா? ?

கடுமையான வெயிலின் தாக்கம் இருந்தால் நீர் வரத்து இன்றி புல் கருகத் தொடங்கும்....வெயில் புறக்காரணி... மாற்றம் புல்லின் உள்ளே...!அதாவது புல் தானாகவே கருகத் தொடங்குகிறது ஹா..ஹா...ஹா அதாவது புல்லினை கருகவைக்கும் மூலக்கூறுகள் ஏற்கனவே அதனுள் இருந்தன....அதிக பட்ச சூரிய ஒளியினால் அவை செயல் படத்தொடங்குகின்றன. சரியா?

பசுமையாய் வளர்ந்த போது அது கருகும் தன்மை மறைந்திருந்ததேயன்றி இல்லாமலில்லை. இதே கூற்றின் படிதான் புல் தானகவே வளர்கிறது என்பதும் எந்த அணுக்கள் தூண்டப்படுகின்றனவோ...அதன் போக்கில் நிகழ்கிறது நிகழ்வு....!தானாக நிகழ்வதில் புறத்தின் பங்கும் இருக்கிறது என்பது மறை பொருள்.

மனிதர்களின் வாழ்க்கை கூட அப்படித்தான்..... தானாக நிகழ்கிறது என்று நினைத்தாலும் புறத்திலிருக்கும் பொருட்கள் அல்லது மனிதர்களைப் பொறுத்துதான் வளர்வதும் கருகுவதும். உண்மையில் எல்லா காரணிகளும் நமக்குள் மறை பொருளாய் இருக்கும் பட்சத்தில் புற விசை எதைத் தூண்டுகிறது என்பதை பொறுத்துதான் இயல்புகள் தீர்மானமாகின்றன.

ஜீன்களின் பதிந்துள்ள நம்து மூததையர்களின் குணங்களுடன் புறம் கடும் சண்டையிட்டு....சண்டையிட்டு கடைசியில் வென்றே விடுகிறது புறத்தில் ஏற்படும் அனுபங்கள். பரிணாம வளர்ச்சியின் பல கட்டங்கள் புறச்சூழலினால் ஏற்பட்டவைதான்....!

அடா...அடா.. புத்தகத்தையே படிக்கவில்லை அதற்குள் எத்தனை அனுமானங்கள்....என்று கேட்கிறீர்களா? நீங்களும் இந்த பயிற்சியை மேற்கொள்ளுங்கள்...எந்த புத்தகத்தையும் வாசிப்பதற்கு முன் அதை ஒரு விழிப்புணர்வு நிலையோடு கையிலெடுங்கள்...கொஞ்ச நேரம் புத்தகத்தின் இருப்பை உணருங்கள்...! ஒரு சில நிமிடங்கள் அதன் தலைப்பை பாருங்கள்....இப்போது கண்களை மூடுங்கள்....காதலாய் புத்தகத்தை உங்களின் நெஞ்சோடு சாய்த்துக் கொள்ளுங்கள்.........இப்போது உங்களின் அனுமானிப்பைத் தொடங்குகள்.....

கதையோ கட்டுரையோ.. அதன் போக்கு எங்கு செல்லும்...என்று தலைப்போடு சம்பந்தபடுத்தி ஊர்ஜிதம் செய்யுங்கள்...! ஆரம்பத்தில் கடினமாயும் இலக்கு தவறவும் செய்யும் அந்த மாதிரி நேரங்களில் ஓரிரு பக்கங்களை வாசித்து விட்டு பின் அதன் போக்கில் அனுமானிக்கத் தொடங்கலாம்.... நாளடைவில் ஆச்சர்யமாய் தலைப்பை வைத்தே கட்டுரையின் போக்கை தீர்மானித்து விடலாம்....

இதை புத்தகத்துக்கு மட்டும் நான் சொல்லவில்லை, இப்படி அனுமானிக்க தொடங்கும்போது நாளடைவில் நமது மூளையின் செல்களில் இந்த திறன் இயல்பாகவே அதிகரித்து....சந்திக்கும் மனிதர்களின் முக பாவங்களையும்...அசைவுகளையும், உச்சரிக்கும் வார்த்தைகளின் ஏற்ற இறக்கங்களையும்...அலையும் கண்களின் வேகத்தினையும் கணித்து கணித்து மனிதர்களின் சுபாவங்களையும் எண்ணங்களையும் அனுமானிக்கும் திறன் எளிதாக நமக்கு கிடைத்து விடுகிறது......

பத்திரகிரியாரின் மெஞ்ஞான புலம்பலில் கூட...

" ஆங்காரம் உள்ளடக்கிய ஐம்புலனைச் சுட்டறுத்து...தூங்காமால் தூங்கிச் சுகம் பெறும் காலம் எப்போது? " என்று சொல்லியிறுப்பார்.....

தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவதை விட்டு விடுவோம்..அதற்கு தனிக்கட்டுரை சமைக்க வேண்டும். ஐம்புலனைக் கூட சுட்டறுக்க வேண்டாம்....ஒவ்வொரு புலனையும் ஒரு நாள் அடக்கிப் பாருங்கள்.... மற்றைய புலன்கள் கூர்மையாய் வேலை செய்யும்....

மெளனாமாய் இருக்கும் நேரங்களில் காதுகள் கூர்மையாகும்..கண்களின் பார்வை வீச்சு...தீர்க்கமாகும். ஆமாம் எந்த விசயத்தையும் நாம் யாரிடமும் கேட்காமல் புரிந்துகொள்ள முயலும் போது மற்ற புலன்கள் மூலமே நாம் தீர்வினை எட்ட முயல்வோம். இப்படித்தான்...காற்றின் வேகத்தையும் கனத்தையும் ஈரப்பதத்தையும் வைத்து நம் முன்னோர்கள் பருவ நிலைகளை கணித்தனர். வெயிலின் உக்கிரத்தை வைத்து அந்த வருட வேளாண்மையைத் தீர்மானித்தனர்.

ஆனால்...இந்த நவீன காலத்தில் எல்லா சக்திகளும் கொண்ட நாம்...அவற்றை ஊக்குவிக்க அல்லது செயல் பட வைக்க சரியான புறக்காரணிகள் இல்லாமலும் நம்முடைய புலன்களை அலையவிட்டும் அவற்றின் கூர்மையினை அறியாமலும்....அழுது புலம்பி திரிந்து கொண்டிருக்கிறோம்...

சக்தி இருக்கிறது நமக்குள்ளே....வேண்டியதெல்லாம்...சரியான புறக்காரணியும் அதை புரிந்து கொள்ளும் மனோபக்குவமும்தான்...

முடியாது என்றால்.....அது முடியாது...! முடியும் என்றால் முடியும்.... இப்போது சொல்லுங்கள்....

புல் தானாகவே தானே வளருகிறது??


தேவா. S