Pages

Tuesday, August 10, 2010

நான் யார்....?

உடலல்லன்; உயிரல்லன்; பெயரல்லன்; பதவியல்லன்; உறவல்லன்; எல்லாம் நேதி செய்த பின் எஞ்சியிருக்கும் எல்லாமான ஏகத்தின் வடிவம் நான்....!

யாரோ கொளுத்திய பட்டாசு வெடிக்கட்டும் எனது வலையிலும்...அழைப்பு கொடுத்த நண்பர் எல்.கே, அதை வழிமொழிந்த தம்பி செளந்தர் மற்றும் தோழி கெளசல்யாவிற்கு...இந்த பதிவு சமர்ப்பணம்.

1. வலைப் பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

தேவா. S

2. அந்தப் பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை என்றால் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

தேவேந்திரன் என்பதான் முழுப்பெயர் என்றாலும், தேவேந்தர், தேவன் என்று அலுவலகத்தில் அழைத்தாலும், தேவா என்று என் நண்பர்கள் அழைத்தது நிலைத்து விட்டது. இப்போது தேவா என்று எல்லோருமே கூப்பிட்டாலும்....

" அப்பு " என்று என் அக்காவும் அம்மாவும் கூப்பிடும் பேர்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் " அப்பா " என்று என் மகள் அழைக்கும் தருணங்களில்தான் என் இருப்பை உணர்கிறேன்.

3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்து வைத்தது பற்றி?

சுற்றி நடக்கும் முரண்பாடுகளையும், அநீதிகளையும் பார்த்து நெஞ்சு குமுறி உடனே கண் கலங்கிவிடும் டைப் நான். அப்படிப்பட்ட உணர்ச்சி பூர்வமான நேரங்களில் எனது டைரியும் நானும் உறவு கொண்டு எனது ஆத்திரத்தை கட்டுரையாகவோ கவிதையாகவோ கொட்டித் தீர்த்ததுண்டு. நிறைய வலைப் பூக்களைப் பார்த்து ஒரு ஏக்கத்தில் எழுத ஆரம்பித்த கணத்தில்தான் கண்டு பிடித்தேன்....இந்த வலைப்பூவை நமது டைரியாக்கினால் என்ன என்று? அதனால்தான் எது எதுவெல்லாம் தோணுகிறதோ...எப்போதெல்லாம் தோணுகிறதோ அதை அப்போதே ஒரு பதிவாக்கிவிடுகிறேன்.

வலைப்பதிவு...என் டைரி எழுதுதலின் பரிணாம வளர்ச்சி என்றுதான் சொல்வேன்.

4. உங்கள் வலைப் பதிவை பிரபலமடையச் செய்ய என்னவெல்லாம் செய்தீர்கள்?

கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி தமிழிஷில் சப்மிட் பண்ணி விட்டு வானம் பார்த்த விவசாயி போல காத்திருப்பேன் பதிவு பிரபலமாகும் என்று. முதற்பக்கத்தில் வந்தால் நிறைய பேர் படிப்பார்களே...என்றும், அப்படி படிப்பவர்கள் விமர்சிப்பதால் நான் எண்ணிக் கொண்டிருப்பதை திருத்திக் கொள்ளவும் புதிய கருத்துக்களை கொண்டு என்னை மாற்றிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் அது பிரபலம் அடையுமா என்று ஒராயிரம் முறை தமிழிஷை ஓப்பன் செய்து பார்த்திருக்கிறேன்....!

சில பதிவுகள் ஆரம்பத்தில் பிரபலமாகி முன் பக்கதிற்கு வந்திருக்கின்றன. ஆனால் நல்ல பதிவுகள் என்று நான் நினைத்தத்து வரவில்லை..........! என்னை அறிமுகப்படுத்திக் கொள்ள என்னுடைய பதிவுகளை வாசித்து வாக்களித்தவர்களுக்கு நன்றி கூறி அவர்கள் பதிவுகளை தொடர ஆரம்பித்தேன். இப்படியே நான் அவர்களுக்கு வாக்களித்து அவர்கள் எனக்கு வாக்களித்து என்று ஒரு நன்றி நவிழல் மூலமாக ஓரளவிற்கு என்னுடைய வலைப்பூ கொஞ்சம் பேருக்கு தெரியவந்தது.

என்னதான் நன்றாக எழுதினாலும் நிஜமாவே அடையாளம் காணப்படுவது மிகக்கடினம். எழுத்துக்களை அடையாளம் பெறவேண்டி ஊக்குவிப்பவர்களும் குறைவு.....! அதனால் நமது பதிவுகள் பிரபலாமாக விரும்புவது போலத்தானே அடுத்த பதிவரும் விரும்புவர் என்று எண்னி புதிய பதிவர்களின் பதிவுகளைப்படித்து அவர்களையும் ஊக்குவிப்பதோடு என் நண்பர்களையும் செய்யச்சொல்கிறேன். இது கேள்வியோடு தொடர்பில்லாதது....ஆனாலும் இருக்கட்டும்....!

நான் வாழ மட்டுமா பூமி...? எல்லோருக்கும் தானே!

5. வலைப் பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

அனேகமாக நான் பகிர்வது எல்லாமே சொந்த விசயங்களின் அனுபவங்களின் விவரிப்புதான் என்னை முதலில் சரியா என்று பார்த்துக்கொள்ளும் எண்ணம் தான். விளைவு....பற்றி எனக்கு கவலை இல்லை...! எழுதுவது நமது வேலை...அது பாதித்ததா இல்லையா என்றூ ஆராயத்தொடங்கினால்...வாசிப்பாளனுக்கு ஏற்ற கச்சேரி நான் நடத்த வேண்டி வரும். நான் எழுதுவது என்னுடைய திட்டமிடல் என்னுடைய தெளிவு....இப்படித்தான் எழுத வேண்டும் என்று யாரும் என்னை தீர்மானிக்க கூடது என்பது எனது விருப்பம்.

6. நீங்கள் பொழுது போக்கிற்காக பதிவுகளை எழுதுகிறீர்களா? அல்லது பதிவுகள் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

இரண்டிற்கும் அல்ல..... நான் எழுதுவது எனது ஆத்ம திருப்திக்கு....! குறைந்த பட்சம் நான் மரணித்த பின் என் மகள், எனது சந்ததி எடுத்து வாசிக்குமே...! ஓ இப்படி ஒருத்தன் நமது மூதாதையன் இருந்தானா? ஏதேதோ தத்து பித்து என்று எழுதியிருக்கிறானா? இப்படி எல்லாம் பாட்டியை நேசித்திருக்கிறானா? என்று ஏதோ ஒரு வருங்கால சந்ததியோ இல்லை வேற்று மனிதர்களோ வாசித்து தெரிந்துகொள்வார்களே....அது போதும் எனக்கு!


7. நீங்கள் எத்தனை வலைப் பதிவிற்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப் பதிவு?


குருக்கத்தி என்று ஒரு வலைப்பூ தொடங்கி வைத்திருக்கிறேன். என் சொந்த ஊர் என் பாட்டன் முப்பாட்டன் வாழ்ந்த ஒரு குக்கிராமம் அது. சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் தாலுக்காவில் உள்ளது. இன்னும் கூட பேருந்து வசதியில்லாத, கடைகள் இல்லாத ஒரு ஊர். 50 வீடுகள் இருக்குமா என்பது ஆச்சரியமே...சொந்த ஊர் பற்றி எழுதவேண்டும் என்று திறந்து வைத்துள்ளேன். அனேகமாக இந்த விடுமுறைக்கு ஊருக்கு வந்து திரும்பியவுடன் அதில் குருக்கத்தி பற்றி எழுதுவேன்.

கழுகு என்று அரசில் பார்வைக்காக ஒன்று ஆரம்பித்தேன் அதை இப்போது நான், தம்பி செளந்தர் மற்றும் விஜய் நடத்தி வருகிறோம். கழுகு ஒரு விழிப்புணர்வு போராளியாக எல்லா பதிவர்களின் கட்டுரைகளையும் பேட்டிகளையும் தாண்டி கொஞ்சம் கொஞ்சமாக பறக்க ஆரம்பித்து இருக்கிறது.

மருதுபாண்டி.....போராளிதான் என் சுயமுகம்!

8. மற்ற பதிவர்கள் மேல் கோபம், அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆமாம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?


எதார்த்ததோடு முரண்பட்டு தனது மனதையும் புத்தியையும் கொண்டு ஆராயமல் வறட்டு விவாதம் செய்யும் அல்லது பழக்கத்திம் அடிப்படையில் விஸ்தாரித்து பார்க்கும் இயல்பற்று ஆட்டோ சஜஸன் என்று சொல்லக்கூடிய சுய கருத்துக்களின் அடிப்படையில் உண்மையை விட்டு விலகியிருக்கும் அல்லது கற்றுக் கொள்ள மறுத்து ஒரு இறுகியதன்மையில் இருக்கும் அனைவரையும் பார்த்தால் கோபம் ஏற்பட்டு அதன் உச்சம் அது அவர்களின் அறியாமை என்று விளங்கி வெறுமனே ஆச்சர்யபட்டு அவர்களிடம் இருந்து விலகிவிடுகிறேன். பதிவர்கள் என்றில்லை பொதுவாகவே மனிதர்களை நான் அணுகும் போது ஏற்படும் உணர்வு இது.

பதிவுலகம் என்று சுருக்கிக் கொண்டால் கட்டுரைகளுக்கு கருத்து சொல்லாமல் வெறுமனே வந்து செல்வது சந்தோசமாய் இருந்தாலும் அது ஒரு ஆரோக்கியமான நிகழ்வு இல்லை என்பது என் கருத்து. கட்டுரையோ அல்லது கவிதையோ புரியவில்லை என்றால் கேள்விகளால் தெளிவுகளைப் பெறாமல் இருப்பதும் மாற வேண்டிய ஒன்றூ.

என் எழுத்துக்களை மெருகூட்டவே எண்ணுகிறேன். மற்ற சிறந்த பதிவர்களைப் பார்த்து ஆச்சர்யமாய் கற்றுக் கொள்கிறேன்.

பொறாமையா...அப்படீன்னா?


9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி...

சித்ரா...!

வெட்டிப்பேச்சு என்று சொல்லிக் கொண்டு...சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்துக் கொண்டிருக்கும் அவர்தான் என்னை எனக்கு அடையாளம் காட்டினார்.

எழுதிக் கொண்டே இருந்தேன்... பதிவுலகம் பற்றிய கவலை இன்றி! என்னை ஊக்குவித்து நிறைய எழுதச் சொல்லி தவறாமல் வந்து பதிவுகளை வாசித்து பின் பின்னூட்டமிட்டு...எனது ஆரம்பகாலத்தில் அவர் கொடுத்த உற்சாகம் என்னை இந்த 99வது பதிவு வரை எழுதச் செய்தது என்பதுதான் உண்மை...! இன்னும் சொல்லப் போனால் இது போன்ற ஊக்குவிப்புகள் புதிய பதிவர்களுக்கு அவசியம் என்று சித்ராவிடம் இருந்து கற்றுக் கொண்டேன்.

நண்பர் சி @பாலாசி, மாப்பிளை சிறுகுடி ராமு இவர்களும் என்னை ஊக்குவித்தவர்களே...! எங்க ஊர் தமிழ் அமுதன் (ஜீவன்) என்னை நெறி படுத்தினார்.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

தேடிக் கொண்டு இருக்கிறேன் நான் யாரென்றும் எங்கு சென்று கொண்டிருக்கிறேன் என்றும் எங்கு இருந்தேன் என்றும்....தொடர்ச்சியான தேடலில் ஓட்டத்தில் எங்கெங்கோ சென்று கொண்டிருக்கிறேன். விவரம் தெரியா ஒன்றை பற்றி விவரிக்க முடியாது...என்னைப் பற்றியும் தான்....

தம்பிகள் விஜய் மற்றுக் செளந்தருக்கு நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன். எண்ணியவெல்லாம் முடிக்கும் வல்லமை கொண்ட நெருப்பு பொறிகள் அவர்கள்...!

மற்றபடி...சொல்வதற்கு நிறைய இருந்தாலும்...இப்போதைக்கு இது போதும்....!


தேவா. S

33 comments:

ஜீவன்பென்னி said...
This comment has been removed by the author.
Mohamed Faaique said...

"கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி தமிழிஷில் சப்மிட் பண்ணி விட்டு வானம் பார்த்த விவசாயி போல காத்திருப்பேன் பதிவு பிரபலமாகும் என்று. முதற்பக்கத்தில் வந்தால் நிறைய பேர் படிப்பார்களே...என்றும், அப்படி படிப்பவர்கள் விமர்சிப்பதால் நான் எண்ணிக் கொண்டிருப்பதை திருத்திக் கொள்ளவும் புதிய கருத்துக்களை கொண்டு என்னை மாற்றிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் அது பிரபலம் அடையுமா என்று ஒராயிரம் முறை தமிழிஷை ஓப்பன் செய்து பார்த்திருக்கிறேன்....!"
உண்மைதான்.. நல்லாயிருக்கு.. தொடர்ந்து எழுதுங்கள் , புதியவர்களுக்கு ஊக்கமளியுங்கள்

சௌந்தர் said...

இந்த பதிவில் கூட உங்கள் தனி தன்மை இருக்கிறது....

இனி நாங்களும் அப்பு...அப்பு... அப்பு அண்ணா அழைக்கிறோம்....

விந்தைமனிதன் said...

யாத்தாடி! கலங்கடிச்சீயளே! எப்டி இப்டி போட்டு குத்துறிய! நல்லா மெதுவா நடந்து போற ஆறு மாரி அப்புடி ஒரு அழகாவுல்ல இருக்கு! அப்றம் கழுகு நல்லா பறந்து மேல போக வாழ்த்துறேன்....

LK said...

//யாரோ கொளுத்திய பட்டாசு வெடிக்கட்டும் எனது வலையிலும்...அழைப்பு கொடுத்த நண்பர் எல்.கே, அதை வழிமொழிந்த தம்பி செளந்தர் மற்றும் தோழி கெளசல்யாவிற்கு...இந்த பதிவு சமர்ப்பணம்.//

nandri. valakampol dhevavin thani mutthirai

கே.ஆர்.பி.செந்தில் said...

நான் படித்த மொத்த தொடர் பதிவுகளில் இதுதான் சிறந்த பதிவு ..

பாராட்டுக்கள் அப்பு.. நான் உங்க நண்பன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகிறேன்...

விந்தைமனிதன் said...

யாத்தாடி! கலங்கடிச்சீயளே! எப்டி இப்டி போட்டு குத்துறிய! நல்லா மெதுவா நடந்து போற ஆறு மாரி அப்புடி ஒரு அழகாவுல்ல இருக்கு! அப்றம் கழுகு நல்லா பறந்து மேல போக வாழ்த்துறேன்....

சிறுகுடி ராமு said...

//பதிவுலகம் என்று சுருக்கிக் கொண்டால் கட்டுரைகளுக்கு கருத்து சொல்லாமல் வெறுமனே வந்து செல்வது சந்தொசமாய் இருந்தாலும் அது ஒரு ஆரோக்கியமான நிகழ்வு இல்லை என்பது என் கருத்து. கட்டுரையோ அல்லது கவிதையோ புரியவில்லை என்றால் கேள்விகளால் தெளிவுகளைப் பெறாமல் இருப்பதும் மாற வேண்டிய ஒன்றூ.//

மாப்ள, மேற்கொண்ட வரிகளை படித்துக்கொண்டிருக்கும்போதே என்னுள் ஒரு குற்ற உணர்வு அழுத்திக்கொண்டிருந்தது... நாமும் இதில் ஒருவராக ஆகிவிட்டோமே என்று...

பிறகு உன்னை ஊக்குவித்தவர்களில் ஒருவராக என்னை எழுதியிருந்ததைப்பார்த்ததும், எனக்கு மிகவும் ஆனந்தமாக இருந்தது. அதேநேரத்தில், வருத்தமாகவும் இருந்தது... (நேரப்பற்றாக்குறையால், பின்னூட்டமிடாமல் இருந்ததற்கு!!)

இனி தவறாமல் பின்னூட்டம் எழுதுகிறேனடா என்னருமை மாப்பு...

வாழ்த்துக்களுடன்,
மாப்ஸ்

க.பாலாசி said...

//நான் வாழ மட்டுமா பூமி...? எல்லோருக்கும் தானே!//

சரியான கூற்று... இந்த இடத்திலும் பொருந்துகிறது...

8வது கேள்விக்கான பதில் நிறையவே பிடித்துள்ளதுங்க தேவா.... குருக்கத்தியையும் ஆரம்பியுங்கள்... வாழ்த்துக்கள்...

அருண் பிரசாத் said...

கலக்கல் தல

விஜய் said...

ரொம்ப நன்றிங்க அண்ணா , நாங்க கண்டிப்பா ஏதாவது இன்னும் நிறையா செய்வோம் நம் தேசத்திற்கு...

இராமசாமி கண்ணண் said...

அனைத்து பதில்களும் அருமை அண்ணா..

வில்சன் said...

நல்லாயிருக்கு மாப்பு. அப்பு குட்டி மாப்பு.

Chitra said...

நான் வாழ மட்டுமா பூமி...? எல்லோருக்கும் தானே!


......எல்லோரும் இதை புரிந்து கொண்டால், பூமி அமைதியின் இருப்பிடம் ஆகி விடுமே!

Chitra said...

" அப்பு " என்று என் அக்காவும் அம்மாவும் கூப்பிடும் பேர்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் " அப்பா " என்று என் மகள் அழைக்கும் தருணங்களில்தான் என் இருப்பை உணர்கிறேன்.


.....பதில்கள், ஒவ்வொன்றிலும் உங்களை அடையாளம் காட்டி விட்டீர்கள், அப்பு. பாராட்டுக்கள்!

Chitra said...

அனேகமாக இந்த விடுமுறைக்கு ஊருக்கு வந்து திரும்பியவுடன் அதில் குருக்கத்தி பற்றி எழுதுவேன்.

....ஆவலுடன் காத்து இருக்கிறோம்.... நிறைய புகைப்படங்கள் மற்றும் தகவல்களுடன் எதிர் பார்க்கிறோம்.

Chitra said...

என்னை ஊக்குவித்து நிறைய எழுதச் சொல்லி தவறாமல் வந்து பதிவுகளை வாசித்து பின் பின்னூட்டமிட்டு...எனது ஆரம்பகாலத்தில் அவர் கொடுத்த உற்சாகம் என்னை இந்த 99வது பதிவு வரை எழுதச் செய்தது என்பதுதான் உண்மை...! இன்னும் சொல்லப் போனால் இது போன்ற ஊக்குவிப்புகள் புதிய பதிவர்களுக்கு அவசியம் என்று சித்ராவிடம் இருந்து கற்றுக் கொண்டேன்.


......நான் என் கடமையை செய்கிறேன். வேறு ஒன்றும் இல்லை, நண்பா!
பயணங்கள் முடிந்து வந்ததும், அந்த கடமை மேலும் தொடரும்.

Chitra said...

மென்மேலும் பல சிகரங்கள் தொட்டு உயர்ந்து, வெற்றி சிறக்க வாழ்த்துக்கள், தேவா!

தமிழ் அமுதன் said...

அடுத்து நூறாவது பதிவா..?

வாழ்த்துகள் ...அப்பு...!

ஜில்தண்ணி - யோகேஷ் said...

வழக்கம் போல் நச் பதில்கள் :)

தேவா அண்ணே தேவா அண்ணன்தான்

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

கேள்விகளுக்கு பதில்கள் போதும் என்றோடு மட்டும் இல்லாமல் இயல்பான நடையில் மனதில் தோன்றியதை மறைக்காமல் சொல்லி இருக்கும் விதம் அருமை நண்பரே . எப்பொழுது இந்தியா போறீங்க !?????

வெறும்பய said...

அனைத்து பதில்களும் அருமை அண்ணா..

Kousalya said...

அப்படி யாரும் சொல்லி இருந்தால் கண்டுகாதிங்க...உங்கள் கருத்தை, எழுத்து நடையை யாருக்காகவும் மாத்திகாதிங்க.....?!!

நேர்மையான பதில்கள்....

100 வது பதிவுக்காக காத்து இருக்கிறேன்.. ௦

VELU.G said...

நல்ல பகிர்வு நண்பரே

ஜெய்லானி said...

நல்ல பகிர்வு

ப.செல்வக்குமார் said...

///எழுதுவது நமது வேலை...அது பாதித்ததா இல்லையா என்றூ ஆராயத்தொடங்கினால்...வாசிப்பாளனுக்கு ஏற்ற கச்சேரி நான் நடத்த வேண்டி வரும். ///

ஆமாம் அண்ணா ..!!
//இரண்டிற்கும் அல்ல..... நான் எழுதுவது எனது ஆத்ம திருப்திக்கு....!//
புதுசா ஒன்ன சொல்லிருகீங்க ..!!
//நான் வாழ மட்டுமா பூமி...? எல்லோருக்கும் தானே!//
அருமை ..!

வால்பையன் said...

நல்லாயிருக்கு தல

jothi said...

//தேடிக் கொண்டு இருக்கிறேன் நான் யாரென்றும் எங்கு சென்று கொண்டிருக்கிறேன் என்றும் எங்கு இருந்தேன் என்றும்....தொடர்ச்சியான தேடலில் ஓட்டத்தில் எங்கெங்கோ சென்று கொண்டிருக்கிறேன். விவரம் தெரியா ஒன்றை பற்றி விவரிக்க முடியாது...என்னைப் பற்றியும் தான்....//

எல்லோரும் எதோ ஒன்றை தேடி கொண்டு தான் இருக்கிறோம் , நல்ல பகிர்வு..

Ananthi said...

அன்புள்ள அப்பு (தேவா)

அத்தனை பதிலும் அருமை... உங்கள் மனதின் வெளிப்பாடு....!

சி.பி.செந்தில்குமார் said...

நான் வாழ மட்டுமா பூமி...? எல்லோருக்கும் தானே!>>

நல்ல லைன்.உங்களுக்கு வாழ்த்துக்கள்

ரோஸ்விக் said...

அன்பின் தேவா,
நீங்கள் பதிவுகள் எழுத ஆரம்பித்த புதிதில்... தமிழிஷில் தினமும் பலமுறை உங்கள் புதுப்புது பதிவுகள் இணைக்கப்படும்போது, யாருடா இவன் போட்டுத்தாக்குறான். தினமும் எழுதி போட்டுகிட்டே இருக்கிறான்... அப்புடி என்னத்தை தான் எழுதுவானோ? வழக்கம்போல சில பதிவர்கள் மாதிரி எதுவும்... செய்தித்தாளில் இருந்து காப்பி, நண்பர்கள் அனுப்புற மெயில், விமர்சனம் அப்படின்னு சும்மா தளத்தை நிரப்புவானோன்னு நினைச்சதுண்டு. ஆனா "நோ"-ன்னு நிரூபிச்சிட்டிங்க.
என்னத்தையாவது எழுதுவோம்னு இல்லாம, உங்க எண்ணத்தையாவது எழுதுறீங்க. அதுவும் சிறப்பா... எழுத்து மட்டுமில்ல... உங்க எண்ணமும் அவ்வளவு சிறப்பு. இதை நான் முக ஸ்துதிக்காகச் சொல்லலை. எங்க ஊர்க்காரங்கிறதுக்காகவும் சொல்லலை. உண்மையா சொல்றேன்.
உங்களுடைய வாதங்களும் சரி... பெரும்பாலும் புண்படும் வகையில இருக்காது. சமூகம் சார்ந்த கோபங்கள், முன்னெடுக்கும் முயற்சிகள், எல்லாரும் நல்லாயிருக்கனும் எனும் எண்ணம் எல்லாத்தையும் நான் நேசிக்கிறேன். என் நண்பன் தேவாவைப்போல. கழுகு சிறந்த உதாரணம். நானும் அதற்கு தோள் கொடுக்கிறேன்.
இன்று வரை 100 பதிவுகள் எழுதியிருந்தாலும், எதுவும் கணக்குகாக எழுதினதாத் தெரியல. கணக்கா எழுதினதாத் தான் இருக்கு. இவ்வளவு பதிவுகளையும் சிறப்பா எழுதுறதுக்கு எப்படிடா இவனுக்கு நேரம் கிடைக்குதுன்னு நான் வியப்பதுண்டு. இன்னும் உமக்கு நிறைய நேரங்கள் கிடைக்கவேண்டும் என்று விரும்புவதும் உண்டு. பல இடங்களில் என் எண்ணங்களும் கருத்துக்களும் உம்மோடு ஒத்துப்போவதில் எனக்கு பேரானந்தம்.
அண்ணன் செந்தில், தம்பி சௌந்தர், விஜய், பாலாசி இன்னும் கழுகின் நட்பு தோள்கள் நமக்கு கிடைத்ததில் பெருமகிழ்ச்சி. சில காரணங்களால், எனது நேரங்களை உங்களோடும், உருப்படியான காரியங்களுக்காக ஒதுக்க முடியாததில் எனக்கு குற்ற உணர்வு கூட உண்டு. தொடர்பிலிருப்போம். ஏதாவது உருப்படியா செய்வோம்.
தொடர்ந்து எழுதுங்க தேவா.

ரோஸ்விக் said...

அடிக்கடி பதிவுலகம் பக்கம் வரமுடியல.
எப்போ ஊருக்கு?

dheva said...

பின்னூட்டமிட்டு கருத்து பகிர்வு செய்த தோழர்கள் அனைவருக்கும் நன்றி.

ரோஸ்விக்....@ அன்பு மழையில் நனைந்தேன்.....சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை....உங்கள் பாசத்திற்கு முன்னால்!