Pages

Monday, February 28, 2011

சுமை....!
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு வித சூழ்நிலைகள் உருவாகி அதன் போக்கில் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நகர்ந்து செல்லவேண்டியிருக்கிறது. பெரும்பாலும் வாழ்வென்றால் என்ன? நாம் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறோம்? ஏன் செய்து கொண்டிருக்கிறோம் என்ற கேள்வியோடு தேடலில் இருப்பவர்கள் நிச்சயமாய் தொடர்ந்து நான் எழுதுவதை வாசிக்கிறார்கள்.

அதே நேரத்தில் தேடலில் இல்லாதவர்களும் புரிகிறதோ இல்லை புரியவில்லையோ...என் மீது கோபம் கொண்டாவது என்னதான் எழுதி இருக்கிறான் என்று விமர்சிக்க வேண்டியாயினும் வாசித்து விடத்தான் செய்கிறார்கள்.

பெரும்பாலும் மனம் மறுத்தாலும் ஆன்மா வாசிக்கத்தான் தூண்டும். இது கண்ணாடியில் நம்மை நாமே பார்த்துக்கொள்ளும் ஒரு பாங்கு ஆதலால்.... ஒரு வித கவனம் ஈர்க்கப்படுவதும் அதை மறுத்து மனம் வெளியே கூட்டிச் சென்று கேளிக்கைகளை வேடிக்கைப் பார் இங்கே ஒன்றுமில்லை என்று கட்டளைகள் போடுவதையும் நாம் அறியாமலில்லை.

ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பங்களின் மூலம் அடைய நினைப்பது ஒரு நிம்மதி நிலையை, இந்த நிம்மதியை வேண்டித்தான் மறைமுக ஓட்டமாக பொருளீட்டலும், புகழ் தேடலும், இன்ன பிற சுகங்களைத் தேடலும் தொடருகிறது. பெரும்பாலும் உடல் சார் இன்பங்களைத் தேடி தேடி துய்த்து, துய்த்து, அடுத்து என்ன? அடுத்து என்ன... என்று ஓடும் ஒரு கணத்தில் சட்டென்று எல்லாம் நின்று....இதுவெல்லாம் தாண்டி ஏதோ ஒன்று இருக்கிறது அதுதான் நமது நிம்மதி என்று உணர முடியும் ஆனால் எல்லோருமா உணர்ந்து விடுகிறார்கள்? சிலர் உணரலாம்...சிலர் கடைசி வரை எது நிம்மதி என்று உணராமலும் போகலாம்.

இப்படி உணர்தலும் உணராமல் போதலும் எதைப் பொறுத்தது...? இதற்கான பதில் வேறெங்கோ நம்மை பயணிக்க வைத்து விடுமாதலால் அது பற்றி பிறிதோர் சமயம் விரிவாக பார்க்கலாம்....

எல்லாமே ஒரு விளையாட்டு. வேண்டும் என்பவனும் வேண்டாம் என்பவனும், நண்பனும், எதிரியும், சுற்றமும் ஒன்றுதானே...ஒன்றிலிருந்தது வேறாகி நின்று அது நம்மையே முறைக்கிறது, நம்மையே கேலி செய்கிறது, நம்மையே கேள்வி கேட்கிறது, நாமாய் இருந்து பதில் சொல்கிறது. மொத்தத்தில் இருப்பது ஒன்றுதான்..அதனால்தான் எல்லாமே ஒரு நகைச்சுவை காட்சியை ஒத்ததாய் ஒரு வித புரிதலில் பார்த்துக் கொண்டு நகர்கிறோம்.

திருக்குர் ஆனில் ஒரு வாசகம் வரும், அதாவது இறைவன் கூறுவதாக...."நான் சூழ்ச்சிகளுக்கு எல்லாம் சூழ்ச்சிக்காரன்" என்று, இங்கே என்ன கவனிக்க வேண்டும் என்றால் மனித மனங்களுக்குள் அகப்பட்டு மாயையில் போடப்படும் திட்டங்கள் எல்லாம்....தூசியை விட அற்பமானது. நாம் என்ன திட்டம் வேண்டுமானாலும் போடலாம், சூழ்ச்சிகள் செய்யலாம்...

ஆனால் பிரபஞ்ச சக்தியின் மாசற்ற வெளிப்பாட்டின் முன் அது எம்மாத்திரம். வீடு நாம் கட்டுவோம் திட்டம் தீட்டி அழகாக, இத்தனைக்கு இத்தனை அடி நீளம், அகலம், இங்கே இத்தனை பெட்ரூம், கிச்சன், அட்டாச்ட் பாத்ரூம், குளிர்சாதன வசதி, தெற்கு பார்த்த வாசல், ஒரு ஸ்கொயர் பீட்டுக்கு இவ்வளவு காசு என்று பார்த்து பார்த்து காசு சேர்த்து, திட்டம் தீட்டி கட்டுவோம்.....

ஒரு பூகம்பம் எல்லாவற்றையும் பெயர்த்து எறிந்து விடும்.

முதலில் சொன்ன திட்டம் மனித மனத்தின் திட்டம். தான் கோடாணு கோடி ஆண்டுகள் வாழப்போவதாய் மனித மனம் உண்டாக்கிய மாயா திட்டம். இரண்டாவது சொன்னது பிரபஞ்ச நியதி...எல்லாம் வல்ல இயற்கையின் திட்டம். முதல் திட்டம் இரண்டாவதின் முன்னால் ஏதாவது சண்டைகள் போட முடியுமா? மறுப்பு தெரிவிக்க முடியுமா...? நமது திட்டங்கள் எல்லாம் பொடி பொடிதானே...! நானே வல்லவன் என்று எண்ணும் அதி நுட்ப நவீன மூளைகள் எல்லாம் இயற்கைக்கு முன்னால் வெறுமனே திரவத்தில் மிதக்கும் வெள்ளை சதைக் கோளம்தான்.

சில கேள்விகளை கடந்த வாரத்தில் சில நண்பர்கள் மூலமாக நான் எதிர் கொள்ளவேண்டியிருந்தது. சில கேள்விகளுக்கு ஆம் இல்லை என்று பதிலளிக்க முடியும், சில கேள்விகளுக்கு ஒரு பாராவில் இது... இது இப்படி என்று எங்கேயோ படித்த விளக்கத்தை மூளையின் நினைவுப் பகுதியில் இருந்து உருவி நாமே சொல்வது போலச் சொல்லி ஒரு பொய்யான பாராட்டுதலைப் பெற்றுக் கொண்டு இறுமாப்படைய முடியும், சில கேள்விகளுக்கு பதில் தெரியாவிட்டாலும் தெரிந்ததைப் போல அலட்டிக் கொள்ள முடியும், சில நேரங்களில் கேள்வி கேட்பவருக்கே என்ன கேட்கிறோம் என்று தெரியாமல் கேள்வி கேட்டு பதில் சொல்பவரும் என்ன பதில் சொல்கிறோம் என்று தெரியாமல் சொல்லிவிட்டு இருவருமே ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொள்ள முடியும்.....

ஆனால்...சில கேள்விகள் பதில் சொல்பவருக்கு அன்றி கேள்வி கேட்கப்படுபவரின் அனுபவத்திற்கான ஒரு விதையாய் மாறிவிடும் ஆச்சர்யமும் உண்டாகி விடும். அப்படிப்பட்டவை கேள்விகள் அல்ல நம்மை எங்கோ தூக்கிச் செல்லும் கணைகள்.

என்னை நோக்கி ஒரு மூன்று கேள்விகள் சரமாரியாய் பாய்ந்தது மூன்று வெவ்வேறு நபர்களிடம் இருந்து அந்த கேள்விகள் என் செவிகளுக்குள் பாய்ந்த மாத்திரத்தில் ஒரு ஆழ்நிலை பயணத்தில் நான் அகப்பட்டு எங்கோ சென்றது என்னவோ உண்மை ஆனால் இப்போது பதில் சொல்வது கேள்வி கேட்டவர்களுக்கான பதிலாக நான் எடுத்துக் கொள்ளவில்லை மாறாக எனது அனுபவத்தினை நானே எழுதிப்பார்த்து மீண்டும் உணரும் ஒரு உத்தியாக மட்டும் எடுத்துக் கொள்கிறேன்.

கேள்விகள்:

1) அடிக்கடி உங்கள் உலகம் வேறு, வேறு என்று சொல்கிறீர்களே? உங்கள் உலகம்தான் என்ன? அங்கு யார் இருக்கிறார்கள்....?

2) ஆன்ம முக்திக்கு உங்களின் சொந்த நாட்டிற்கு வரவேண்டும் என்று சொல்கிறீர்களே? ஏன் இந்தியாவைத் தவிர வேறு நாட்டில் இருப்பவர்களுக்கு ஆன்மா இல்லையா? உங்கள் சொந்த நாட்டை விடுத்து வசிக்கும் நாட்டிலேயே ஆன்ம முக்திகான வழி இல்லை அல்லது பெற முடியவில்லையெனில் உங்கலின் தேடல் வீண்தானே?

3) யார் நீங்கள்? நீங்கள் ஞானியா!!! இல்லை காதலில் தோல்வியுற்ற ஒரு தேவதாசா? இருவரும் இப்படியேதான் பேசுவார்கள்

மூன்றும் மூன்று விதமான அனுபவமாய் போய்விட்டது...! இதை எழுத்தில் இறக்கி வைத்துவிட்டால் வார்த்தைகளைக் கடந்த ஒரு அனுபவம் என்னுள் தேங்கி நிற்கும்...கரைந்து போன கற்பூரமாய்!

அடுத்த பதிவில் இந்த மூன்று கேள்விகளுக்குமான பதிலை எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன்...! சுமைகளை அதிகம் சுமப்பதில் எனக்கு விருப்பமில்லை!

100 கிலோ தங்கமாய் இருந்தாலும் சரி அல்லது அது இரும்பாய் இருந்தாலும் சரி..என்னைப் பொறுத்த வரையில் பயன்பாடுகளை கணக்கு கூட்டும் ஒரு பொருளாதாய நிலை தாண்டிப் பார்த்தால்....சுமை சுமைதான்....!

பயணங்களும் பாதைகளும்
கணிக்க முடியாத தூரங்களில்
இறக்க முடியாத என் சுமையோ
கழிக்க நினைக்கும் பொழுதுகளில்
கூடிக் கூடி என்னை கூனனாக்கி விடுமோ?
கடைத்தேறலுக்கான தேடலும்...
தேடலுக்கான ஆவலையும் சுமத்தலே...
என் அஞ்ஞானத்தின் அறைகூவல்தானோ?

காத்திருங்கள் நாளை வரை....!


தேவா. S

Saturday, February 26, 2011

மாயா....!

அது ஒரு நீண்ட கனவு
நான் மீண்டெழுந்து
பகலின் உச்சி தொட்ட பின்னும்
நிஜமாய் தொடரும் ...
அது ஒரு பொய்யா? இல்லை...
பொய்யில் நான் கண்ட நிஜமா?

என் உடல் எரியூட்டப்படுகிறது
நானே பார்க்கிறேன்...
உறவுகளின் கண்ணீர்கள்
அவசர யுகத்தில் அனிச்சையாய்
தோன்றி மனங்களின்..
எதார்த்த சூட்டில் பஸ்பமாகின்றன...!

காற்று வேகமாக வீசுகிறது
என் உடலின் பக்கங்களில்
பற்றிப் பரவுகிறது தீ...
ஒரு திருட்டுத்தனமான ருசித்தலில்
சுகம் காணும் மனிதன்போல
என்னை அரித்தே போடுகிறது அது...!

வெறித்தபடி நான் பார்க்க....
உறவுகள் எல்லாம் போயே விட்டனர்...
சம்பிரதாயச் சடங்குகளில்...
அவர்களின் கவலையை குளப்பி
அடுத்த நகர்விற்கு செல்லும்...
பரபரப்பில் நகர்ந்தே போயின
அந்த மானுட தலைகள்...!

நான் எரிகிறேன்...நானே பார்க்கிறேன்...
அதோ...என் கண்களைத்...
தடவுகிறது காந்தல் தீ...
காதலை மட்டுமா சுமந்தது அவை
ஏதேதோ கனவுகளையும் தானே?

தத்துவங்கள் சேமித்த மூளை
தடுமாற்றமின்றி விருந்தாய்ப் போனது
விறகிலிருந்து ஜனித்த அக்னிக்கு..!
மணமறியும் குணமறிந்த நாசிகளும்
ஓராயிரம் விவாதங்கள் புரிந்த நாவும்
மறுபேச்சின்றி மண்டியிட்டு விட்டன
ஜுவாலைகளின் நாக்குகளிடம்...!

எரியும் என் சிதையோடு
என்னை மறந்தே போனது உலகம்..
கருகும் என் உடலோடு
கலைந்தே போனது என் வாழ்க்கை...!

அலைதலாய் எல்லாம் கவனிக்கிறேன்...
யாரோ சிரிக்கிறார்கள்..
யாரோ இருவர் கூச்சலிடுகிறார்கள்
வேறு யாரோ அடித்துக் கொள்கிறார்கள்
எப்போதும் மரணம் நிகழ்கிறது
காதலைச் சொல்லி காமமும்...
காமத்தைச் சொல்லி காதலும்
ஜனிப்பித்தலின் விதிகளாகின்றன....!

ஒரு தெரு நாய் தன் துணையிடம்
வால் குழைத்து நெருங்குகிறது
செடிகள் பூக்கின்றன; காய்க்கின்றன..
வேகமாய் காற்றடிக்கிறது..
ஒரு பட்ட மரம் வேறோடு சாய்கிறது;
ஒரு பச்சை மரம்...
கண்ணடித்து சிரிக்கிறது...!

எப்போதும் நகரும் ஏதோ ஒன்றிற்கு...
யாருமே தேவையில்லை என்றுதான்
சப்தமாய் அங்கு படர்ந்திருந்த
மெளனம் சொன்னது...!

ஆமாம்...
அது ஒரு நீண்ட கனவு
நான் மீண்டெழுந்து
பகலின் உச்சி தொட்ட பின்னும்
நிஜமாய் தொடரும் ...
அது ஒரு பொய்யா? இல்லை...
பொய்யில் நான் கண்ட நிஜமா?

தேவா. S

Thursday, February 24, 2011

பிம்பம்....!சொல்வதற்கு ஒன்றுமில்லை
உன்னிடமும் என்னிடமும்
கொட்டி இறைத்தாயிற்று
நம் காதலை...
உலக விருப்பங்களாய்!

எனக்கு பிடித்ததெல்லாம்
நீ சொன்னாய்...
உனக்கு பிடித்ததெல்லாம்
நான் சொன்னேன்...
பரிமாற முடியாமல் நீ சுற்றிப்
பரவவிட்ட காதலை
பற்றிக் கொள்ள முடியாமல்
பரவிக் கிடகிறேன்
நிலவின் வெளிச்சம் போல....

தொடுவது போலத்தான் வருகிறாய்..
நானும் தொட்டு விடுவாய் ....
என்றுதான் நினைக்கிறேன்...
படாமல் தொடும் காற்றைப் போல
ஸ்பரிசமாய் பரவிவிட்டு....
அருவமாய் மறைந்து போகிறாய்...!

அடிக்கடி பேசிக் கொள்கிறோம்...
ஏதோ கேட்கிறாய்...
நானும் ஏதோ சொல்கிறேன்...
ஒவ்வொரு முறையும்...
காத்திருப்பதை காட்டிக் கொடுக்காமல்
மெளனித்து நிற்கிற ஒன்றைத்தானே
உலகம் காதல் என்கிறது....!

இடமாய் நீ தலை அசைக்கும் போது
வலமாய் நான் நகர்கிறேன்....
நீ வலமாய் தலையசைக்கும் போது
நான் இடமாய் நகர்கிறேன்...
ஆமாம் பல கருத்துக்களின்
இசைவுகளில் நீ இடம் என்றால்
நான் வலம்...
நீ வலம் என்றால்...
நான் இடம்...
ஈர்ப்பின் விதிகள் புரியாததா என்ன?
அது எப்போதும் எதிர்தானே.....?

என் கூட்டம் உனக்கு பிடிக்காது...
எனக்கோ உன் தனிமை பிடிக்காது....
கூட்டத்தை விட்டு நானும்
தனிமையை விட்டு நீயும்...
வரும் பொழுதுகளில்
நம்மை சேர்க்கும் பொருள்...
எதுவாயிருக்கும்....?

நீ சொல்லி நான் கேட்கப் போகும்
கவிதையா? இல்லை
சலனமின்றி உன்னோடு நான் சீரான
இடைவெளியில் நிசப்தத்தை
பரவவிட்டு நடக்கும் ஒரு....
நீண்ட நடையா? இல்லை
மெளனம் உடைத்து...
நம்மை ஆட்கொள்ளப் போகும்
காதலா?

அது கடற்கரையா...?
இல்லை அதிகாலை ஆளில்லா
சாலைகளின் ஓரமா?
நெரிசல் நிறைந்த கடைத் தெருவா?
எதோ ஒரு மொட்டை மாடியா?
மழை பெய்து முடித்த மாலையா?
இல்லை ...
உணவருந்தி முடித்த ஒரு முன்னிரவா?

கற்பனைகளை கரைத்து
ஒரு ஓவியமாய் வரைந்து பார்க்கிறேன்...
வர்ணங்களின் கூட்டு கொடுத்த
தொகுப்பு அழகா? அழகற்றதா...
விவாதத்திற்கு அப்பாற்பட்டு...
அசாத்தியமாய் மறைந்து கிடக்கும்
உன் அழகைப் போல.....
கடைசியில் என்னைத்தான்..
கலைத்துப் போடுகிறது...
சாயங்களில் ஊடுருவியிருக்கும்
ஒரு ஊமை ஓவியம்..!

காத்திருப்போம்....
ஒரு புத்தகத்தின் வரிகளூடே
ஊடுருவிப் படர்ந்து....
நாம் தொலையும் ஒரு அற்புத கணத்தின்
அனுபவங்கள் கொடுக்கும்
சிலிர்ப்பைப் போல...
புரியாமலேயே கிடக்கட்டும் காதல்....!

சொல்லாமல் கொள்ளாமல்..
பிம்பமாய் பிரதிபலிக்கும்..
உணர்வுகளை காதல் என்ற
வார்த்தைக்குள் போட்டு
பூட்டாமல்.. பிம்பங்களாய்
உன்னை நானும் என்னை
நீயும் பிரதிபலித்தேதான்...
போனால் தவறா என்ன?


தேவா. S

Wednesday, February 23, 2011

சும்மா....!
அது ஒரு மாலை நேரம். என்னோடு நான் மட்டுமிருந்தேன். என் உலகத் தொடர்புகள் எல்லாம் அறுத்தெறிந்து விட்டு வாரமெல்லாம் காத்திருந்து நான் சும்மா இருப்பதற்கென்றே நேரம் ஒதுக்கி அந்த அற்புத கணத்தை நான் நானாக இருந்து என் சுவாசத்தை ஆழமாய் ஊன்றி கவனித்து தளர்வான நிலையில் அமர்ந்திருந்தேன். பொதுவாக என்னுடைய அந்த தருணம் பற்றி வீட்டில் உள்ள அனைவருக்குமே தெரியுமாதலால் அவசரமான காரியங்களாக இருந்தால் மட்டுமே என்னை உலகுக்குள் இழுப்பார்கள்.

எனது 6 வேலை நாட்களிலும் என்னுள் ஏற்றி வைத்த புழுதிகளை கழுவிக் கரைய எனக்கு இப்படிப்பட்ட தனிமை அவசியமாகிறது என்பது யாருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. வழக்கப்படி வாரமெல்லாம் நான் காத்திருந்து ஆசையாய் என்னை நான் எதிர்கொள்ளும ஞாயிற்றுக் கிழமையின் மாலை எனக்கு எப்போதும் வரப்பிரசாதம்தான்.

வழக்கப்படி நான் அமர்ந்திருந்த அந்த ஒரு ஞாயிறின் 5 மணி மாலையில் என்னுடைய கை பேசி இடைவிடாது சிணுங்குவதாக கூறி என்னிடம் கொடுக்கப்பட்டது. அழைப்பில் ஒரு நெருங்கிய நண்பர் இருந்தார்....! ஏதோ அவசரம் என்று எண்ணி அழைப்பினை அனுமதிக்க காரணம் அவரின் 7வது அழைப்பாய் அது இருந்ததுதான்.

என்ன ஏதும் அவசரமா? என்னுடைய தலையீடும் உதவியும் அவசியமா? என்று பதறிப்போய் நான் கேட்டதற்கு மறுமுனையில் வந்த பதில் என்னை ஏமாற்றத்துக்குள்ளாக்கியது.

" இல்லை...இல்லை ஒண்னும் இல்லை நான் சும்மாதான்... கூப்பிட்டேன் ...! அப்புறம் வேற என்ன சேதி சொல்லு..." என்று என்னிடம் சாவகாசமாய் கேட்க....

நான் என்னிடம் தற்போதைக்கு உங்களுக்கு பகிர செய்தி ஒன்றுமில்லை. தங்களிடமும் வேறு அவசரமான செய்தி இல்லை என்றால் நான் பிறகு அழைக்கவா?. ... என்று கேட்டேன். நண்பர் சொன்னார்..." ஓ. சரி சரி...இல்லை நான் இப்போது ஒரு சினிமா நட்சத்திரங்களின் ஷோ ஒன்றினைக் காணச் செல்கிறேன். என்னிடம் இன்னுமொரு டிக்கெட் இருக்கிறது ஆனால் கூட வர ஆளில்லை அதுதான் உன்னை நான் அழைத்துச் செல்லலாம் என்று நினைத்தேன்" என்று சொன்னார்.

என்னால் வர இயலாது நீங்கள் சென்று வாருங்கள் பிறிதொரு சமயம் பார்க்கலாம் என்று மறுத்தேன். நண்பர் விடுவாதாயில்லை... "இப்போ நீ என்ன பண்ற? வந்தா என்ன? என்று கேட்டார். நான் சொன்னேன்..நான் எதுவும் செய்யவில்லை... சும்மாதான் இருக்கிறேன் என்று.....!

நண்பருக்கு கோபம் உச்சத்தில் போய்...."ஏண்டா சும்மாதானே இருக்க வெட்டியா.. அப்போ வரவேண்டியதுதானே? வேற வேலை இருந்தா சரி....வாடா பேசாம..." என்று நெருக்கத்தில் இருக்கும் உரிமையைத் தேவையில்லாத இடத்தில் பிரயோகம் செய்தார்.

நான் அமைதியாக சொன்னேன்...." இல்லை நண்பரே... நான் இப்படி சும்மா இருக்கவேண்டும் என்று நேரம் ஒதுக்ககி வாரமெல்லாம் காத்திருந்து சும்மா இருக்கிறேன். நான் சும்மா இருப்பது சும்மா அல்ல...ஆனால் திட்டமிட்டு சும்மா இருப்பதற்காகவே சும்மா இருக்கிறேன். இப்போ நான் சும்மா இருக்க வேண்டும்..அதனால் வர இயலாது..." தீர்மானமாகவே சொன்னேன்...!

உன்னை மாதிரி ஒரு அராத்து பையன பார்த்தது இல்லடா...ன்னு சொல்லி விட்டு நண்பர் தொடர்பிலிருந்து சென்று விட்டார்.

அவர் கோபம் கொண்டிருக்கலாம், கொள்ளாமல் இருக்கலாம். அது பற்றி நான் அக்கறை கொள்ளப்போவது இல்லை. என் செயல் சரியானதா? தவறானதா? என்று எனக்கு மிக நன்றாகவே தெரியும். அதனால் அடுத்தவரின் மனது எங்கெல்லாம் பயணிக்கும் அல்லது என்னவெல்லாம் தீர்மானிக்கும் என்பது பற்றி எனக்கு கவலையில்லை. எனது மூளை என்னைப் பற்றிய தீர்மானங்களை எடுக்க எப்போதும் தயங்குவதில்லை ஆனால் அடுத்தவரைப் பற்றி அனுமானத்துக்கு வருதல் என்பது பல நிலைகள் தாண்டிதான் சராசரி மனிதர்களுக்கு வரும்.

சராசரி மனிதர்கள் என்று நான் சொன்னது எப்போதும் புறத்தில் எண்ண ஓட்டங்கள் மிகுந்திருப்பவர்களையும், தன்னை தான் என்று எண்ணுபவர்களையும்தான். அட...தெளிவானா ஒரு குழப்ப நிலைக்கு கொண்டு வந்துவிட்டேன் என்று நினைக்கிறேன்.

தன்னைத் தான் என்றுதானே எண்ண முடியும்?

இது என்ன அதிசமாய் சொல்றீங்க? அப்டீன்னு கேக்குறீங்களா? அப்படி நினைக்கிறது சராசரியாய் நமக்குள் இருக்கும் ஒரு எண்ணம்தான் ஆனால் அதைக் கடந்து தன்னை தானாய் மட்டும் கொள்ளாமல் அடுத்தவராயும் கற்பனை...(நல்லா கவனிங்க... கற்பனை) செய்து பார்க்கும் பொழுதில் ஆரம்பத்தில் அது ஒரு விளையாட்டாய் தோன்றும். நாள் ஆக ஆக... இந்த பயிற்சி கற்பனை தாண்டி ஒரு எதார்த்தத்துக்குள் வந்து விடும்.

அப்படிப்பட்ட ஒரு நிலையில் நாமாய் நாமிருந்து பார்க்கும் போது தோன்றாத அடுத்தவரின் நியாயங்களும் முரண்களும், அவர்களாய் நாம் பாவித்து பார்க்கும் போது தெளிவாய் புரியும். அப்போது எடுக்கும் அடுத்தவரைப் பற்றிய அனுமானங்கள் என்பவை நிஜத்தில் அனுமானங்கள் அல்ல...அவையே சத்தியம். இது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்று கூறும் அதே நேரத்தில் அவ்வளவு கஷ்டமும் இல்லை என்றுதான் சொல்வேன்.

எதிராளியின் வயது, அனுபவம், சூழல், குடும்ப பின்னணி, வார்த்தைகளின் வீச்சு, வார்த்தைகளை உச்சரிக்கும் போது கொடுக்கும் ஏற்ற இறக்கம், அப்போது ஏற்படும் முக மாற்றம், பேசும் போது ஏற்படும் முக பாவங்கள், உதடுகளின் துடிப்பு, காதுகளின் நிற மாற்றம், கண்களின் அலைதல், புருவங்களின் நெறிப்பு, கண்களின் நிறம், சுவாசிக்கும் வேகம், நிற்கும் அல்லது அமர்ந்திருக்கும் பாவம், கைகளின் பாவம், கால்களின் அமைப்பு......

இபடி கூறிக் கொண்டே போகலாம். இப்படி எல்லாவற்றையும் சொடுக்குப் போடும் நேரத்தில் கூட்டிக் கழிக்க முடியும் உங்களால் என்றால் எதிராளியாய் நீங்கள் மாறுவது கண நேரத்தில் நடந்தேறிவிடும். அவர்களின் வலியையும், சந்தோசத்தையும், தேவைகளையும், முரண்களையும் நாம் உணரமுடியும். அப்போதுதான் அவர்களின் கர்வமும், சாந்தமும், சோகமும் நமக்குப் பிடிபடும்.

சாம வேதத்தின் மகா வாக்கியமான " தத்துவமசி - நீ அதுவாக உளாய்' " இதுதான் நான் மேலே சொன்ன எல்லாவற்றுக்கும் கருப்பொருள்.

பெரும்பாலும் நான், என்ன செய்தேன், நான் என்ன சொல்வேன், எனது கருத்து என்ன, என்று எப்போதும் உலக பிரச்சினைகளுக்கு எல்லாம் தன்னை முன்னிலைப்படுத்திதான் மனித மனம் சிந்திக்கும். இது சராசரி ஆனால் பிரச்சினையை உங்களின் கண்ணோட்டத்தில் பார்த்த பின் சம்பந்தப்பட்டவர்களின் கண்ணோட்டத்திலும் பாருங்கள். நம்மை ஆராயும் அதே தருணத்தில் சூழலையும் சூழல் சார்ந்த மனிதர்களையும் பாருங்கள்.

கட்டுரைகளையும், கவிதைகளையும் செய்யும் ஒரு படைப்பாளியின் மூளையில் எங்கே இருந்து உதித்தது இவையெல்லாம்?அவனின் கோணம் என்னாவாயிருக்கும் என்றும் யோசித்துப் பாருங்கள். நமது கருத்துக்கள்தான் நமக்குத் தெரியுமே? கொஞ்சம் இதையும் விளையாட்டாய் செய்து பாருங்கள்.

உங்களின் சூழல் இதமாகும்.

இதை விடுத்து நமது மூளைகள் படைப்பாளியின் படைப்பைப் பற்றி சிந்திக்காமல் படைப்பாளியின் சொந்த விருப்பு வெறுப்புகளைப் பற்றியும் ஆராய்ந்து விமர்சிக்கும் ஆனால் ஒரு விசயம்.... அப்படி விமர்சிக்கும் முன்பு நாம் விமர்சிக்க தகுதியான நிலை கொண்ட பார்வை உடையவர்கள்தானா? மேலும் நாம் சொல்வது நமக்குப் பட்ட உண்மையா அல்லது அதுதான் பொதுவான உண்மையா? என்ற கேள்வியோடு சேர்த்து இதை நான் சொல்வதற்கு அவசியம் உண்டா? என்ற கிளைக் கேள்விகளும் அவசியம்....

ம்ம்ம்ம் இது என்னுடைய நேரம்...நான் சும்மா இருக்கப்போகிறேன். இந்த சும்மா இருத்தல் என்னை நான் என்றெண்ணும் நிலையை சும்மா இருக்கச் செய்து வெவ்வேறு பொருளாய், பொருளற்றதாய் என்னை இயக்கும் நேரம்!

அதோ எந்த நிலாவாய் நான் இருக்கப் போகிறேன்...

நான்...
நிலா....
நான்....!


தேவா. SMonday, February 21, 2011

ஹாய்.....21.02.2011!


எல்லாமாய் இருக்கிறது வாழ்க்கை. இதை எல்லோரும் ஒத்துக் கொள்வீர்கள்தானே....? சில நேரம் மகிழ்ச்சியாய், சில நேரம் துக்கமாய், சில நேரம் கோபமாய்.. நவரசமும் சேர்ந்து அழகான ஒரு கலைவையா கிடைச்சு இருக்க விசயம்தான் வாழ்க்கை.

எங்கேயோ போகப் போறோம் அப்டின்னு ஒரு த்ரில் இருந்துகிட்டே இருக்கும் பாருங்க மனசுக்குள்ள.. இன்னிக்கு இல்லேன்னா கூடா நாளைக்கு, நாளைக்கு இல்லேன்னா நாளான்னிக்கு ஏதாச்சும் பெருசா நடந்து நாம நிம்மதியா இருப்போம்னு ஒரு துடிப்பு இருந்துகிட்டே இருக்கும் பாருங்க... அதுதான் பிரபஞ்ச சூட்சுமம்.

ஆனா எதுவுமே பெருசா நடக்கலேன்னா கூடப் பரவாயில்லைங்க.. ஆனால் நிம்மதி இல்லேன்னா போச்சு....! இது பத்தி நிறைய பேரு பக்கம் பக்கமா பேசி இருப்பாங்க, நிறைய பேரு எழுதி இருப்பாங்க, அதைப் பத்தியே நாம பேசிட்டு இருக்க வேணாம்...! நிம்மதியின் அளவுகோல்தான் என்ன?

நம்முடைய ஒட்டு மொத்த வாழ்க்கையுமே நாம முடிவு பண்ணி நாம செய்ஞ்சுக்கிற மாதிரி நினைச்சுக்கிறோம். அதுலயும் இந்த அட்டிடியூட் சரியான அளவில இல்லாதவங்க தங்களோட தலைதான் பெருசு அப்டீன்னு நினைச்சுக்கிறாங்க. நிம்மதின்றது காசு, பணம், புகழ் இது எல்லாம் தாண்டி...எந்த சமுதாயத்தில் நாம வாழ்றோம். நம்ம கூட இருக்கவங்க எல்லாம் எவ்ளோ நிம்மதியா இருக்காங்க? இதைப் பொறூத்துதான் அமையும் அப்டீன்றது என்னோட பார்வைங்க....

நம்மள சுத்தி இருக்குற எல்லோரும் பசியோடவும், வறுமையோடவும் இருக்கும் போது நாம எப்டி நிம்மதியா இருக்க முடியும்? சமுதாயம் பெருசு, மனிதர்களின் தொடர்புகளும் விரிந்து பரந்ததது எங்கோ ஒரு மூலையில் நடக்கும் மனிதனுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அப்படீன்னு ஒரு நினைப்பு எல்லோருக்குமே இருக்கும். இது ஒரு பொதுவான புத்தி.

கன்னியாகுமரில இருக்கவன் பிச்சை எடுத்தா எனக்கேன்ன? இராமேஸ்வரத்துல மீனவன சுட்டா நமக்கேன்ன? நாமதான் நல்லா இருக்கோமேன்னு தயவு செஞ்சு யாரும் நினைச்சுடாதீங்க...! நாம இதோட நேரடி விளைவுகளை அனுபவிக்கலேன்னாலும் கூட மறைமுகமா அனுபவிச்சுதான் ஆகணும்.. சரி நாம இல்லையா நம்ம சந்ததி.. அனுபவிச்சுதான் ஆகணும்....! கொஞ்சம் கூட மிஸ் ஆகாது.

சரி.....நீ என்னடா சொல்ல வர்ற சாட்டா ரெண்டு லைன்ல சொல்லிட்டு போய்கினே இருன்னு சொல்றீங்களா?

முடிஞ்சவரைக்கும் யாருக்கும் நல்லது செய்யமுடியலேன்னா கூட பரவாயில்லைங்க...தேவையில்லாம எதிர்மறை எண்ணத்த வளர்த்துக்காதீங்க....! அது நம்ம உடம்புக்கும் கெடுதி.. அப்டி வளர்த்துக்கிட்ட எண்ணங்கள் நம்மள சுதந்திரமா செயல்பட விடாம எப்பவுமே அடுத்தவனை பத்தின ஆராய்ச்சில கொண்டு போய் விட்டுடும். மென்டல் சிக் ஆனவங்களுக்கு அடுத்தவன் முன்னேறினாலே...தனக்கு எதோ அநீதி நடந்துட்ட மாதிரி தோணிட்டே இருக்கும்.

அட நெஜமாத்தாங்க...

ஏதோ வர்றோம் பதிவு எழுதுறோம். யாராச்சும் கமெண்ட் போடுறாங்க பாக்குறோம் போய்டுறோம். எப்பவுமே இந்த பதிவுகளையும் பதிவுலகத்தையும் மையமா வச்சு வாழ்க்கை இருக்க முடியாதுதானுங்களே? இது பகுதி. ஆக்சுவலா பாத்தீங்கன்னா எல்லோருக்கும் ஒவ்வொரு வேலை இருக்கும் ஒவ்வொரு டென்சன் இருக்கும். பதிவுன்னு எழுத வரும்போது மனசுல நமக்கு பட்ட நல்ல விசயங்கள, வாழ்க்கைல நாம எடுத்து இருக்குற நிலைப்பாட்ட, ஆன்மீகம் பத்தின புரிதலை, சமூகம் பத்தின பார்வையை சொல்ல, இப்டி ஒரு ஓப்பன் ஏரியா கிடைக்கும் போது இட்ஸ் லைக் எ ஹெவன்...!

எதை சொர்க்கம்னு சொல்றேன்னு யோசிக்கிறீங்களா? கருத்துக்களை சுதந்திரமா சொல்றதும் அதை மனசுல எந்த விகற்பமும் இல்லாம் நாலு பேரு விமர்ச்சிகிறதும். அப்படிப்பட்ட நேர்மையான விமர்சனங்களால நம்மள வளர்த்துகறதும் வரப்பிரசாதம்தானே?

மனிதன் கொண்டுதானே
மனிதம் வளர்க்க முடியும்
சப்தமில்லா மெளனங்கள் எல்லாம்
மனிதர்களின் அளாவளவலுக்குப்
பின் தானே ஆனந்தமாயிருக்கும்...!

சமூகப்பிராணிதான் மனிதன். சமூகம் சார்ந்த வாழ்வுதான் இவனது இயல்பு. கூடிக் களித்தலும், சந்தோசத்திருத்தலும் அதன் பின் எல்லா கேளிக்கைகளும், சந்தோசங்களும் கடந்த பின் கிடைக்கும் ஒரு ஆர்ப்பாட்டம் கழிந்த அமைதியில் எல்லாவற்றையும் ஆனந்தமாய் உற்றுப்பார்த்து தன்னைப் பற்றியும் தன் வாழ்க்கைப் பற்றியும் சிந்திக்க சிந்திக்க அவனின் தனிமையின் உன்னதம் அதாவது மெளனத்தில் கிடைக்கும் திருப்தி எங்கே இருந்து கிடைத்தது என்று பார்த்தால்...அது மனித சந்திப்புகளில், மனித சிரிப்புகளில், மனித உரையாடல்களில் இருந்துதான் என்பது புலப்படும்.

விழாக்களும், பண்டிகைகளும் இப்படி மனிதர்கள் கூடுவது எல்லாமே அப்போதைய கேளிக்கைகளுக்கு மட்டும் அல்ல....அது கேளிக்கைகள் முடிந்த பின்னும் தொடரும் மனித நிம்மதிகளுக்காக....!

துரோகிகளையும், எதிரிகளையும் மறந்து விடுங்கள். நேரே வரும் போது அல்லது செயல் படவேண்டிய தருணத்தில் ஒரு களையை களைவது போல களைந்து கொள்ளலாம் ஆனால் எப்போதும் அவர்களை நினைத்து நினைத்து அற்புதமான நல்ல நண்பர்களையும் கண் முன் இருக்கும் அற்புதமான வாழ்க்கையையும் நாம் சிதைத்துக் கொள்ளத் தேவையில்லைதானே...? குப்பைகள் எல்லாம் சுமப்பதற்கா? தூக்கி கச்சடாவில் எரியத்தானே?

நிம்மதி என்பதும் சந்தோசம் என்பது இப்போது இருப்பது மேலும் சுற்றியுள்ள சூழலும் நம்ம மனமும் நமக்கு கொடுப்பது. நமக்கு நாலு பேரு சந்தோசமா பிடிக்குற மாதிரி நடந்துகிட்டா பிடிக்கும்ல? கரெக்ட் பாஸ்.. கரெக்ட்.. நாமளும் அப்படியே எல்லோருகிட்டயும் நடந்துக்க முயற்சிப்பொம்...!

இருங்க... இருங்க இந்த முயற்சிக்கிறோம் அப்டீன்ற வார்த்தையில் எனக்கு உடன்பாடு இல்லை....ஒண்ணு செய்றோம் இல்லை செய்யலை.. இப்படித்தான் ஒரு நிலைப்பாடு வருமே அன்றி முயற்சிக்கிறேன் அப்டீன்ற வார்த்தைக்கு எந்த செயலையும் உதாரணம் சொல்ல முடியாது.

ஒரு பென்சில் கீழ விழுந்துடுச்சு...அதை நீங்க எடுத்துட்டீங்க.. அல்லது எடுக்கலை...அவ்ளோதானே.. நீங்க எடுக்க முயற்சிக்கிறேன்னு சொல்லி கைய நீட்டி ஏதோ ஒரு செயல் செய்றதை சொல்ல வேண்டாம்தானே....! அதனால எப்பவும் எந்த செயலையும் செய்றோம்.....இல்லேன்னா செய்யலை....முயற்சி பண்றேன்னு யாரச்சும் சொன்னா...செய்றதுக்கு பாதிதான் விருப்பம் மீதி யோசிக்கணும்னு அர்த்தம்.

இது எல்லாமே நான் எடுத்துக்கிட்ட அல்லது உணர்ந்த விசயம்தான் எந்த அளவுக்கு உங்களுக்கு சரியா வரும்னு எனக்குத் தெரியாது. ஏன்னா எப்பவுமே நாம உணர்ற அல்லது அனுபவப்படுற விசயத்தை அத்தாரிட்டி எடுத்து சொல்ல முடியாது. நாம் உணர்றதும் நம்ம அனுபவமும்ம் இறுதி உண்மையா இருக்கவேண்டிய அவசியம் இல்லை. நம்ம பார்வைன்றது வேற சத்தியம்ன்றது வேற... இதுல என்ன மேட்டர்னா.. எவ்வளவு துரம் நம்ம பார்வை சத்தியதோட ஒத்து இருக்கு அப்டீன்றது நம்ம மூளை இருக்குற சார்ப்நெஸ் பொறுத்த விசயம்.

போனவாரம் நான் ஒருத்தர்கிட்ட பேசிட்டு இருந்தப்ப...ஒருத்தர் சொன்னார்...வள்ளுவரே சொல்லிட்டாரு நாம பின்பற்றித்தான் ஆகணும்னு சொன்னாங்க...! நான் சொன்னேன் ஓ.கே வள்ளுவர் சொல்லிட்டாரு சரி அது அவரோட காலகட்டத்தையும் புறச்சுழலையும் பொறுத்து சொல்லிட்டாங்க.. நான் அதை உணர்ந்து பாக்குறேன் அது எனக்கு தேவையான்னு அப்டீன்னு சொன்னவுடனே அவருக்கு கோபம் வந்து உனக்கு திமிர் ஜாஸ்தின்னு ஒரு பட்டத்தை நான் கேக்காம்லேயே கொடுத்தார்.

நானும் என்கிட்ட ஏற்கனவே நிறைய திமிர் இருக்கு இது நீங்களே வச்சுக்கோங்கனு அவர் கொடுத்த பட்டத்தை அவர்கிட்டவே திருப்பி கொடுத்துட்டேன்....! இப்போ என்ன மேட்டர் அவர்கிட்ட பேசிட்டு இருந்தோம்னு கேக்குறீங்களா....

கொலை மறுத்தல்ன்ற அதிகாரம் பத்திதான்...! புலால் உண்ணுதல் தவறுன்னு அவர் சொன்னார். நான் சொன்னேன்.. சரி ஓ.கே..! தேவையின் அடிப்படையில் எடுக்க்கப்படவேண்டிய முடிவு அது. எல்லா காய்கறிகளும், பழங்களும், தானியங்களும் கிடைக்கும் நம்ம ஊருக்கு அது சரி...

எதுவுமே விளைவிக்க முடியாத பேரிச்சை மரங்கள் மட்டுமே நிறைந்த பாலைவன தேசத்துக்கு அது எப்டி ஓ.கே ஆகும்னு நான் கேட்ட கேள்விக்குத்தான் அவர் கொடுத்த பட்டத்தை அவருக்கே திருப்பி கொடுக்கவேண்டியதா போச்சு......! என்ன பண்றது சில மணிநேரங்களிலும் , சில சூழலையும் வச்சு மனிதர்களை தீர்மானிக்கும் கப்பாஸிட்டி எல்லோருக்கும் இருக்கா என்ன? இருக்கலாம் அப்டீ இருக்கவங்க அதிகம் தற்பெறுமை அடிச்சு பேசமாட்டாங்க! இப்போ ஒரு மேட்டர் சொல்றேன்...

தற்பெருமையும் முட்டாள்தனமும் அண்ணன் தம்பி. ரெண்டும் ஒண்ணாதான் இருக்கும். ஒண்ணு இருக்கு ஒண்ணு இல்லேன்னு சொல்ல முடியாது. இட்ஸ் எ பேக்கேஜ்...ஹா ஹா ஹா!

அவரே சொல்லிட்டாரு, இவரே சொல்லிடாருன்னு அத்தாரிட்டி எடுத்து பேசுறது சுகமா இருக்கலாம்..ஆனா எதார்த்தத்தோட சேத்து எல்லாத்தையும் பாக்க வேணாமா? எல்லாமே சூழலையும் தேவையும் பொறுத்துதான்....

நான் வழக்கப்படி பேசிட்டே இருப்பேன்.... சோ...........ரொம்ப ஸ்ட்ராங்கா ஸ்டாப் பண்ணிக்கிறேன்...அடுத்த " ஹாய்" பகுதியில் பார்க்கலாம்...!

மற்றபடி... உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் மற்றும் எல்லா உறவுகளுக்கும் என் வணக்கம் + வாழ்த்துகள்!

அப்போ வர்ர்ர்ர்ட்டா....!


தேவா. S

Sunday, February 20, 2011

ஜீவனே...!மனதைக் கிழிக்கிறது நீ இல்லாத வெறுமை....! காதலையும் வாழ்க்கையையும் சரிபாதியாக்கிக் கொடுத்தவள் நீ......! திருமணம் முடிந்த முதல் நாள் இரவினை யார்தான் மறக்க முடியும்? நான் மட்டும் விதிவிலக்கா என்ன? கனவுகளோடு வாழ்க்கையை ஆரம்பித்த சராசரி கர்வங்கள் கொண்ட ஆண்மகன். கொஞ்சம் கவிதைப் பார்வையும், கற்பனையும் கூடுதல் கொண்டவனாதலால் என் எதிர்பார்ப்புகள் அதிகமானவைதான்.....

முதல் நாள் இரவில் எல்லோருடைய கற்பனையும் வெவ்வேறாக இருக்குமோ என்னவோ தெரியாது. உன்னைச் சந்தித்த அந்த இரவு எனக்கு மிகவும் அடர்த்தியானதுதான். சம்பிரதாயங்களை எல்லாம் தூர எடுத்து எறிந்து விட்டு.. உன்னிடம் நான் பேச ஆரம்பித்த அந்த நொடி என்னை பார்வையால் விழுங்கத்தொடங்கியிருந்தாய்... !

கால ஓட்டத்தில் எத்தனையோ பெண்களை எதிர் கொண்டவன் நான், அவர்களின் கண்களோடு கதைகள் பேசியவன் நான்....ஆனால் முதன் முதலாய்க் காதலோடு சேர்த்து பாசத்தையும் குழைத்துப் பார்வையால் என்னை வாரி அணைத்தவள் நீதானே....?

சராசரியாய்ப் போகவேண்டாம் அந்த இரவு என்ற என் எண்ணமும், திருமணத் தினத்தின் அலுப்பும் சில பேச்சுக்களோடு உன்னைத் தூங்க சொன்ன நான் உனக்கு முன்னதாகவே உறங்கிப் போனதற்குக் காரணம் உன் மீதிருந்த அதீத அன்பு என்று நீ அடிக்கடி சொல்வது இப்போது நினைவுக்கு வருகிறது.

அந்த முதல் இரவின் ஆழ்ந்த உறக்கத்தில் நான் புரண்டு படுத்த தருணத்தில் லேசாகக் கண் விழித்துச் சரேலென்று ஒரு பெண்ணோடு உறங்கும் முதல் இரவு என்றுணர்ந்து என் திருமணத்தை நினைவுக்குள் கொண்டு வந்து புரிதலாய்ப் பார்த்தபோதுதான் நீ உறங்கமால் என்னையே பார்த்துக் கொண்டிருந்தது பிடிபட்டது.

ஆதரவாய் உன் கேசம் கலைத்து....ஏன் தூங்கவில்லை என்று நான் கேட்ட கேள்விக்கு...சப்தமின்றி மெளனமாய் ஒரு புன்னகையைப் பரிசளித்தாயே...அதை இன்னும் நான் மறையவிடாமல் என் நெஞ்சின் ஓரத்தில் தேக்கிவைத்திருப்பது உனக்குத் தெரியாது?

காலம் எவ்வளவு மகிழ்ச்சிகளை அள்ளிக் கொடுக்கவேண்டுமோ அவ்வளவு மகிழ்ச்சிகளை அள்ளிக்கொடுக்க உன்னை என்னிடம் அனுப்பியதோ என்று இருமாந்திருந்தேன். என் கவிதைகளையும் கட்டுரைகளையும் உன்னிடம் வாசித்துக் காட்டும் தருணங்களில் எல்லாம்... "என்ன வேணா நீங்க எழுதுங்க மாமா! எப்டி வேணா எழுதுங்க மாமா, எனக்கு அது எல்லாம் முக்கியமில்லை நீங்க என் கூடவே இருங்க மாமா" நீ சொல்லி முடிக்கும் போது அதில் இருக்கும் ஆழமான உண்மை எனக்கு பிடிபட்டுப் போகும்....

உன் கனவுகள்
எங்கே வேண்டுமானலும் பரவட்டும்....
எனக்கும் உன் கனவுகளின்
ஓரத்தில் ஒண்ட ஒரு இடம் கொடு!!

சொல்லாமல் ஒரு கவிதையை நீ வார்த்தைகளின்றி ஒற்றியெடுப்பாய். நான் நிராயுதபாணியாய் என் குப்பைக்கனவுகளை என்ன செய்வது என்று தெரியாமல் சுமந்து கொண்டிருப்பேன். ஒரு நாள் என் வருகை தாமதமானாலும் உன் மாலையில் நீ பால்கனியிலேயே எனக்காகக் காத்திருப்பாய்....ஓராயிரம் முறை என் அலுவல்களுக்கு நடுவே என்னைக் கைப்பேசியில் அழைத்தாலும் ஓரிரு முறையே நான் பதிலளித்த தருணங்களும் உண்டு...

நேரம் கழித்துச் சாவகாசமாய் நான் வரும் என் இரவுகளில் என் உலகமும், என் அலுவலும் பிரமாண்டமானதாய் நான் நினைத்துக் கொள்வேன்.....என் தாமதமறியாமல் நீ பித்துப் பிடித்துப் போயிருப்பது தெரியாமல்..." அதான் வருவேன்ல... " என்று அலட்சியமாய் நான் பதில் சொன்ன நாட்கள் எல்லாம் என்னை இன்று குத்திக் கிழிப்பதும்....ஓராயிரம் முறை நீ அழைத்தும் நான் பேசாமல் முட்டாள் பெட்டியில் ஓடும் ஏதோ ஒரு வண்ண மூளைச்சலவையிலும், பொய்யான நாட்டு நடப்பிலும், அவசியமில்லாக் கணினியில் தூரத்தில் இருக்கும் யாரோ ஒருவரிடமும் என்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பேன்....நீதான் என்னருகே இருக்கிறாயே என்ற அலட்சியம் என்னைத் தின்று செரித்தே போட்டிருக்கும்...அப்போதெல்லாம்....!

"மாமா என்கிட்ட பேசுங்க மாமா....எனக்கு வேற ஒண்ணும் வேணாம் மாமா! எப்பவுமே கம்ப்யூட்டரிலும் டிவியிலுமே இருக்கீங்க.....நால் முழுசும் நான் நீங்க வருவீங்க பேசுவீங்கன்னு காத்துகிட்டுதானே நாலு சுவத்துக்குள்ள இருக்கேன் மாமா! யார் யாருகிட்ட எல்லாம் பேசுறீங்க போன்லயும் சாட்லயும்...உங்களுக்காகவே காத்துகிட்டு இருக்க என் கிட்ட ஏன் மாம பேச மாட்டேங்குறீங்க......என் கிட்ட பேசுங்க மாமா..." என்று ஒரு நாள் கண்கலங்க என்னிடம் கெஞ்சிய அந்தத் தருணம் என்னைக் கொன்று போடுகிறது கண்ணம்மா....!

ஆசையாய் ஏதேதோ சமைத்து வைப்பாய் நானும் ஏதோ ஒரு எண்ணத்தில் தின்று கொண்டே தொலைக்காட்சியில் சானலை முன்னும் பின்னும் நகர்த்துவேன்.

எதேச்சையாக ஒரு நாள் உன்னைக் கவனித்தபோது எவ்வளவு வாஞ்சையாய் என்னை பார்த்துக் கொண்டிருப்பாய்.. நான் உண்ண உன் வயிறு நிறைகிறது என்பாயே....நீ யாரடி? என் மீது ஏனடி உனக்கு இவ்வளவு பிரியம் என்று யோசித்த நொடியிலேயே என் கவனம் வேறெங்கோ போய் விடுமே....

இரண்டு வாரங்களாய் நீ புது கம்மல் போட்டிருந்ததை நான் கவனிக்கவில்லை என்பதற்கு நான் சொன்ன என் வேலைப் பளு காரணமாயிருந்தது சப்பைக்கட்டுதான் என்று என் மனசாட்சிக்குத் தெரியும் ஆனால் இரண்டு வாரம் கழித்து என்ன குட்டிம்மா புதுக்கம்மலா? என்று நான் கேட்டபோது உன் கண்ணில் நீர் கோர்த்ததையும் அதற்குப் பிறகு நீ துள்ளலாய் நடந்து கொண்டதும் என் ஒற்றை வார்தை விசாரிப்பு கொடுத்த உற்சாகம் தானே?

காலம் எல்லாம் கொடுத்தது.... இன்று எப்படி எல்லாவற்றையும் உன் ஒற்றை உயிரை பறித்ததின் மூலம் எடுத்துக் கொண்டு என்னைத் தனிமைப்படுத்திவிட்டது....

இதோ உன்னை தீக்குக் கொடுத்து விட்டு.. வீட்டுக்குள் நுழைந்திருக்கிறேன்... என் கண்ணம்மா......! ஏதோ வியாதியென்று போன பின்பு காலமாய் முற்றிப் போயிருந்த கொடும்வியாதி ஒன்று வெளித்தெரியாமல் வளர்ந்துவிட்டு உன்னை மொத்தமாய் தின்னக் காத்திருப்பதாகக் கூறிக் கைவிரித்த மருத்துவத்திடம் நான் மன்றாடி மன்றாடிக் கடைசியில் காலம் வென்று என்னை உன்னிடம் இருந்து பிரித்தே போட்டுவிட்டதே.....நான் தோற்றே போய் விட்டேனே?

நீ இருக்கமாட்டாய் என்று தெரியாமல் பிறக்காத நம் குழந்தைக்கு நீ பெயரிட்டும், எதிர்காலத் திட்டங்களைச் சொல்லிக் கொண்டே நீ துவண்டு படுத்தபோதும் உன் காலம் முடியப் போகிறது என்று அறிந்தே உன்னோடு நானிருந்த நாட்கள் நரகம்தானே?

உன்னால் எழுந்து நடமாட முடியாத நிலைமையிலும் எனக்காகச் சமைத்துப் போடமுடியவில்லை என்று நீ கண்ணீர் விட்ட தினங்களில் எல்லாம்...உனக்கு முன் என்னை கொண்டு போகக் கூடாதா இறைவன் என்று தோன்றி மறையும் கணங்களில் என் கலக்கம் கண்டு.. “என்னாச்சு மாமா? எனக்கு எதுவும் ஆகாது மாமா” என்று பொய்யாய்ச் சிரிப்பாயே

இதோ உறவுகள் எல்லாம் தத்தம் கூட்டுக்குப் பறந்து போக தனிமையில் நுழைந்திருக்கிறேன்...

உன் நினைவுகளால்
நிரம்பி வழிகிறது
நீ காதலாய்ச் சுற்றி...
வந்த வீடு....

வாசற்படி தாண்டி....
உள்ளே நுழையும் போது
முகத்தில் அடிக்கிறது
உன் வாசம்....

அடுக்களையின் இடுக்குகளில்
நீ படபடத்துச் சமைத்துப் போடும்
பாத்திரங்களும்
நீ இல்லாமல் பட்டுப்போயிருக்கும்
அடுப்பும்... மெளனமாய்
என்னை கொன்றே போடுகின்றன....!

வழக்கமாய் நாம் அமரும் சோபா...
என்னை வெறித்துப் பார்க்கிறது
எப்போதும் பேசாமல் என்னை....
பார்த்தபடி அமர்ந்திருப்பாய்...
நான் கணிணியில் மூழ்கியிருப்பேன்....
உன் ஏக்கங்கள் எல்லாம்
இதோ நிரம்பி வழிகின்றன
வீடு முழுவதும்...
எனக்கு எதுவும் வேண்டாம்
நீ மீண்டு வா; மீண்டும் வா....!

வீடு முழுதும் சுற்றிக் கொண்டிருக்கின்றன உன் நினைவுகள். நீ இருந்த போது முக்கியமானதாய் இருந்த எல்லாம் இன்று முக்கியமற்றதாய்ப் போய்விட்டது....! சுவாசம் தொலைத்தவனுக்கு உடலின் பயன்பாடு என்னவோ அப்படித்தான் இந்தப் பொருள்களும்...!

உயிராய் வீட்டிலே இருக்கும் ஜீவன்களோடு பேசவும், சிரிக்கவும், அன்றைய தினத்தில் நடந்த செய்திகளை அளாவளாவி மகிழவும் நாதியற்றுப் போய் இயந்திரத்தனமாய் உழைத்துவிட்டு இயந்திரங்களொடே உறாவாடும் ஒரு மடைமை வாழ்க்கை வாழ்ந்து விட்டேனே? இன்று நீ இல்லை பார்வதி. இந்த இயந்திரங்கள் எல்லாம் உன்னை எனக்குத் திருப்பி கொடுத்து விடுமா? பெரும்பாலான வீடுகளில் பெண்கள் தொலைக்காட்சிகளிடமும் ஆண்கள் கணிணியிடமும், நவீன கைபேசிகளிடம் தம்மை ஒப்புக் கொடுத்து விட்டு ஜீவனுள்ள மனிதர்களை சட்டை செய்வதே இல்லையே...

நான் இனி சூர்ய நமஸ்காரம் செய்து என்ன புண்ணியம் என் கண்கள போய்விட்டதே.... நீ இல்லையே இன்று பார்வதி....!

இதோ பித்துப் பிடித்தவனாய் நம் படுக்கை அறையில் நுழைகிறேன்...அங்கே...... கடைசியாய் நீ கழற்றிப் போட்ட நைட்டியை எடுத்து என் முகம் புதைத்து அழுகிறேன்......உன்னை இனி எப்போது பார்ப்பேன் பார்வதி..................? காதுகளுக்குள் என் அழுகையையும் தாண்டி ஒலிக்கிறது.....

"என்கிட்ட பேசுங்க மாமா...... எனக்கு நீங்கதான் மாமா உலகம்..... நீங்க சிரிச்சு பேசுனா....எனக்கு அம்புட்டு சந்தோசம் மாமா"

நான் பேசுறேன் பார்வதி....நான் பேசுறேன்..நீ எங்க இருக்க பாரு............

சப்தமாய் அழுது கொண்டிருந்தேன்......

தேவா. S

Friday, February 18, 2011

வெற்று....!
சமகாலத்து நிகழ்வுகள் நம்மை புரட்டிப் போட்டுக் கொண்டுதானிருக்கின்றன. நிகழ்வுகளை எல்லாம் உள்வாங்கிக் கொண்டு ஒவ்வொரு அனுபவத்தின் சாரத்தையும் உள்வாங்கிக் கொண்டு இன்னும் கூர்மையனா ஒரு பார்வையோடு நகர முற்படுகையில் எல்லாமே பார்க்கும் பார்வையாளனாக எல்லா சூழலுக்குள்ளும் விரும்பியோ விரும்பாமலோ சென்று வந்துதான் ஆகவேண்டும் என்பது தெள்ளத் தெளிவாகிறது.

அறிவியலையும், ஆன்மீகத்தையும் ஒன்றாக நோக்கிக் கொண்டு நகரும் ஒரு மனோநிலையில் அறிவியலை விட ஆன்மீகம் என்னை அதிகம் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதற்கு காரணமில்லாமல் இல்லை.

அறிவியல் எப்போதும் படைப்புகளைப் பற்றி ஆராய்கிறது. அதன் போக்கிலேயே தன்னை விரிவாக்கம் செய்து கொண்டு சரி, தவறு என்று ஒவ்வொரு முறையும் தனை சீர்திருத்ததிக் கொண்டு பயணிக்கிறது. விஞ்ஞானம் படைப்புகளையும் அவற்றின் நுட்பங்களையும், கூறுகளையும் அலசிப் பார்த்துக் கொண்டிருக்கிறது ஆனல் இதை எல்லாம் ஆராயும் விஞ்ஞானியும், விஞ்ஞான ரீதியாக எல்லாவற்றையும் நம்புவேன் என்று சொல்லும் மனிதர்களையும், ஏன் இவர்கள் இப்படி சிந்திகிறார்கள் அல்லது எது இவர்களை இப்படி சிந்திக்க வைக்கிறது என்று தெளிவான பார்வையை விஞ்ஞானம் நமக்கு கொடுத்திருக்கிறதா?

கொடுக்கவில்லை என்பது எனது பார்வை...

கொடுத்திருக்கிறது என்பவர்கள் எனக்கு புரியவைக்க முன் வந்தால் சப்தமின்றி அதை கேட்டுக் கொள்ள நான் தயார் ஆனால் ஒரு விசயம் என்னுடைய சந்தேகங்களையும் தீர்க்கவேண்டும். போதும் போதும் என்ற அளவிற்கு கேள்விகள் கேட்பேன். அதை தீர்க்கும் அளவு பொறுமையிருப்பின் விளக்கலாம். எப்போதும் ஆன்மீகத்தில் ஒரு விசயம் உண்டு... என்ன தெரியுமா? இங்கே தர்க்கம் உண்டு..விவாதம் உண்டு ஆனால் ஒரு நல்ல ஆன்மீகவாதி எதிராளியை கேள்விகள் கேட்கத் தூண்டுகிறான். தன்னிடம் விளக்கம் கேட்பவர்களை சிந்திக்கத் தூண்டுகிறான்....

ஒவ்வொரு மனிதனும் இரைச்சலோடு ஓடிக் கொண்டு இருக்கும் போது ஆன்மீகம் அவனது சட்டையைப் பிடித்து இழுத்து நிறுத்தி அவனின் எல்லா பரபரப்புகும் நடுவே ஒரு இடைவெளியை நிரப்புகிறது. ஒரு ஸ்பேஸ் என்று சொல்லக்கூடிய அந்த இடைவெளி இல்லாத மனிதர்களுக்கு தன்னை பற்றியும் தன்னை சுற்றி இருப்பவர்கள் பற்றியும் சிந்திக்க முடிவதில்லை.

பரபரப்பாய் நடந்து கொண்டிருக்கும் என் தினசரிகளில் அலுவகலத்தில் எள் முனையளவும் சிந்திக்க நேரம் கிடைக்காமல், தொலைபேசி அழைப்புகள், நிமிடத்துகு ஒரு தடவை என்னுடைய பாஸின் அழைப்பு என்ற தொடர் நிகழ்வுகள், நிறுவனத்தின் ஊழியர்களுக்கு இடையே ஏற்படும் திடீர் பிரச்சினைகள், மின்னஞ்சல்கள், சந்திப்புகள், தொழிற்சாலையில் ஏற்படும் சில விபத்துக்கள்...இப்படியாக நகர்ந்து கொண்டிருக்கும் அன்றாடத்தில்....சட்டென்று ஏதோ ஒரு மணித்துளியில் எல்லாம் நிறுத்தி விட்டு சட்டென்று எழுந்து வெளியில் சென்று விடுவேன்.....

வெளியே இருக்கும் சிறு தோட்டத்தின் நடுவே.... எந்த சலமுமின்றி எல்லாவற்றையும் விடுத்து, சூழலை விடுத்து, என்னை விடுத்து எந்த செயலுமின்றி ஒரு பத்து நிமிடங்கள் அல்லது எனக்குள் உள்ளே மீண்டும் ஒரு அலாரம் அடிக்கும் வரை நின்று ஆசுவாசப்படுத்திக் கொள்வதுண்டு. ஏன் இப்படி செய்கிறேன்? என்ற கேள்வியும் எனக்குள் எழுவதுண்டு...

எப்போதும் ஓடிக் கொண்டிருக்கும் மனசு எல்லா செயல்களையும் செய்வது தனிப்பட்ட உடலுக்குள் இருக்கும் நான் என்ற படிமத்தினை ரொம்ப எளிதாக கைக்கொண்டு விடும். அதன் பின் அதை வைத்து உலகை பார்க்கும் ஒரு நிலை வந்து விடும். இங்கே என் இயக்கமும்,உங்கள் இயக்கமும் தனித்தது அன்று இது ஒரு பிரபஞ்ச நிகழ்வு (கூட்டு இயக்கம்).

நாம் என்று ஒரு மட்டுப்பட்ட எண்ணம் கொண்டிருப்பது ஒரு மாயை.... எங்கேயோ என்னை இழுத்துச் செல்லும் இந்த நிகழ்வு பிரபஞ்ச நிகழ்வு, நான் என்று எண்ணிக் கொள்வது இந்த நிகழ்வின் ஒரு பகுதி....என்ற உணரல் இப்படி நாம் மிக வேகமாய் இயங்கும் அன்றாடங்களில் சட்டென ஒரு 10 நிமிடம் நம்மை நிறுத்தி பார்க்கும் போது ஓரளவிற்கு எல்லாம் புரியும்...

எப்போதும் அகங்காரங்களின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்கள் ரொம்பவே ஒரு கஷ்டமான வாழ்க்கையை வாழ்வதாகப எனக்குப் படுகிறது. இதிலிருந்து விடுபடுவது, எல்லாவற்றையும் சமமாய் பாவிக்கும் நிலை கொள்வது, வலியையும், சந்தோசத்தையும் ஒரு நிகழ்ச்சியாக பாவிப்பது இப்படி எல்லாம் பக்குவம் கொண்டிருக்கும் ஒரு மனம்தான் விடுதலை அல்லது முக்தி அடைந்த ஒரு மனம் என்று எண்ணுகிறேன்.

முக்தி என்பது ஒரு பெரிய வார்த்தையாகாப் பார்க்கப்பட்டு அதற்கு உடல் நீக்கவேண்டும் காவி உடுத்த வேண்டும், தியானத்தில் தன்னை மறக்க வேன்டும், என்று சொல்லும் கற்பிதங்களை இங்கே சுக்கு நூறாக நான் உடைத்துப் போட விரும்பிகின்றேன்.

தியானத்தின் உச்சத்தில் உடல் விட்டும் அடையும் ஆத்ம முக்திக்குப் பிறகு பிறப்பில்லா ஒரு நிலை எய்த முடியும் என்பது ஒரு கருத்தாக இருக்கட்டும் அதை மறுக்காமல், ஆராயாமல் விட்டு விடுவோம். ஏன் தெரியுமா? அப்படி ஒரு நிலை இருப்பதாக படித்து அல்லது கேள்விப் பட்டுதான் இருப்போம் ஆனால் அதை உணரும் பொழுதில் நாம் விவாதிக்க விரும்பமாட்டோம் அல்லது விவாதிக்கவேண்டிய தேவையில்லை. அது பற்றி இப்போது நமக்கு எதுவும் தெரியாது என்பதால் அதைப் பற்றி விவாதித்தல் அறிவீனம் அதை கொஞ்சம் நகர்த்தி வைத்து விடுவோம்.

உண்டு இல்லை என்று ஆராய அது பற்றிய அனுபவம் தேவை....

ஆனால் இங்கே இருக்கும் என்று சொல்பவர்களும் இல்லை என்று சொல்பவர்களும் அனுமானங்களையே தங்களின் கருத்துக்களாய் பகிர்கிறார்கள். என்னளவில் உணர்ந்ததையும் மூளையின் வீச்சு எட்டிப்பிடித்ததையே என் கருத்தாகவும் பகிரவேண்டும் என்ற ஒரு ரீதியில்தான் என் கட்டுரைகள் நகருமேயன்றி கற்பனைகளையும் என் மன மயக்கத்தையும் எப்போதும் வெளிப்படுத்துவதை நான் விரும்புவதில்லை.

எனது ஆசைகள் என்பது வேறு, கற்பனைகள் என்பது வேறு எதார்த்தம் என்பது வேறு. இதனை பகுக்க முடியாவிட்டால் அல்லது தெரியாவிட்டால் அங்கே ஆணவத்தின் வெளிப்படுகள் வந்து விழுந்து விடும். சொர்க்கம் என்ற ஒன்று இருக்கவேன்டும் அங்கே நல்லவ்ர்கள் எல்லாம் செல்ல வேண்டும் என்று விரும்புவது என் ஆசை, அதை விவரித்துப் பார்ப்பது என் கற்பனை ஆனால் அப்படி ஒன்றூம் இல்லை மேலும் வேறு எதோ ஒன்றை இப்படி சூசகமாய் பெரியவர்கள் சொல்லிச் சென்றிருக்கிறார்கள் எனதை உணர்ந்து அதை விவரமாக தெரியும் வரை தேடலில் இருப்பது எதார்த்தம்.

என்னுடைய கட்டுரைகள் மிகைப்பட்டவர்களுக்கு விளங்கமால் போவதற்கு காரணம், என்னிடம் கதைகள் இல்லை, ஆரம்பம் முடிவு என்ற ஒரு நிர்ணயம் செய்யப்பட்ட ஒரு நிலை இல்லை. என்ன சொல்லப்போகிறேன் என்று எனக்கே தெரியாத போது வாசிப்பவர்களுக்கு அது பிடிபடுவது கொஞ்சம் கடினம்தான். சரியான மனோநிலை தான் புரிதலை உண்டாக்கும் மற்றபடி எதையாவது எழுத எங்கேயோ நேரம் செலவழித்து இங்கு வந்து கொட்டுவதில்லை.

தோணும் எல்லாம் ஏற்கனவே ஏற்பட்ட வாசிப்பு அனுபவத்தின்
சாரத்தை விளங்கி அதை என் புரிதலில் கொண்டு வந்து கொட்டுகிறது என்றும் சொல்லலாம்....ஆனால் இங்கே ஒரு விசயத்தை கவனிக்க வேண்டும் வாசிக்கும் போது நீங்கள் ஒரு கிரகிப்பு நிலைக்குப் போய் அதை உள்வாங்கி அசை போட்டு புகையிலையை வாயில் குதக்கி வைத்து அதன் சாற்றை மட்டும் மிடறு மிடறாய் உள்ளிறக்கி ஒரு வித போதையை அனுபவிப்பார்களே...கடைசியில் புகையிலை உருட்டி துப்பி விடுவார்களே அது போல....

புகையிலையின் சக்கை போய்விடும் ஆனால் சாரம் மட்டும் நம்முள் தங்கும். இப்படி வார்த்தைகளை துப்பி விட்டு சாரத்தை கிரகித்து அந்த சாரத்தையும் வெறுமையில் தொலைத்து நமது அனுபவமாக்கி அதன் பின் அது தங்கு தடையின்றி எந்த நோக்கமுமின்றி வெளியில் அனுபவமாய் வந்து விழுகிறது. எல்லா அனுபவத்திற்கு பின்னாலும் ஆட்கள், மனிதர்கள் இருப்பார்கள்தானே ஆனால் இத்தகைய அனுபவத்திற்கு பின்னால் உருவமும் பொருட்களும் இருப்பதில்லை மாறாக வெறுமையும், சூன்யமும்தான் இருக்கிறது.

இல்லாததாய் இருக்கும் வெற்றிலிருந்து எல்லாம் ஜனிக்கிறது. அந்த வெற்று என்னவென்று அறிவியல் அறிஞர்களும் விளக்கமாய் சயின்டிபிஃக் டெஃபினேசன் கொடுப்பார்கள்.....அதுவும் ஒரு பொருள் போன்ற மாயையோடு.....ஹா...ஹா...ஹா...! வேண்டுமென்றால் கேட்டுப்பாருங்கள்.....

சரி ....இப்போதைக்கு இது போதும் என்று நினைக்கிறேன்.


அப்போ வார்ர்ர்ட்டா........!


தேவா. STuesday, February 15, 2011

தூசு....!

ஏனோ தெரியவில்லை...மனம் எங்கேயும் செல்லாமல் என்னை உற்று நோக்கிக் கொண்டே இருக்கிறது. இப்படிப்பட்ட தருணங்களில் நான் எப்போதும் நடுங்கிக் கொண்டேதான் இருப்பேன்... ! நானும் தப்பித்து அங்கும் இங்கும் என்று புத்தியை மாற்றி நகர வைக்க முயற்சிக்கிறேன் முடியவில்லை.....! எங்கே திருப்பினாலும் மீண்டும் திரும்பி என்னை உள்நோக்கி முறைக்கும் மனம் முழுக்க முழுக்க ஆன்மாவின் கட்டுப்பாட்டில் இருப்பதை உணர முடிந்தது.

உற்று நோக்கும் உக்கிரத்தில் நெற்றிக் கண்ணே திறந்து நான் பஸ்பமாகிவிடுவேனோ என்று கூட பயமாயிருக்கிறது. சுற்றி சுற்றி நகரும் வாழ்வில் பெருமைகளும் மமதைகளும் அவ்வபோது கொள்ளும் மனதை, என் செயல்களுக்கு எல்லாம்...நான் என்ற தனிப்பட்ட உருவம் தான் காரணம் என்று ஆர்ப்பரித்த புத்தியை, உள் முனைப்பு சொல்வதை கேட்காமல் அவ்வப்போது எதிர் பதில்கள் சொல்லி புறத்தில் காய்கள் நகர்த்தி செருப்படி வாங்கி சிதிலமடைந்து ஓய்ந்து கிடக்கும் என்னை எரிக்காமல் என்ன செய்யுமாம் என் உள் முனைப்பு...

முழுதுமான ஒரு சரிபார்த்தல் துரித கதியில் நடந்து கொண்டிருக்கும் போது, தனிப்பட்ட வாழ்க்கையில் கண்டு பிடிக்கப்பட்ட ஓராயிரம் ஓட்டைகளை சரி செய்ய வேண்டிய இடம் தியானம் என்று உணர்ந்து அதற்கான நேரமின்மையை மனம் நியாயப்படுத்திய போது கணிணி முன் கட்டுப்பாடுகளின்றி மன மயக்கத்தில் இல்லாத ஏதோ எல்லாம் இருப்பதாக விவரித்து, பொய் வாழ்க்கையில் நேரம் கழிக்கிறாயே அது என்ன? என்ற கேள்விக்கு முன்னால் மண்டியிட்டு அழத்தொடங்கியிருந்தது மனம்.....

சம காலத்து நிகழ்வுகள்....
நெருப்பாய் நம்மை ...
கொளுத்தி எரிக்கும் போது
மாயையில் மழையில்
நனைகிறேன் என்று எண்ணுவது
மடத்தனம் தானே?

கண்களை மூடி ஏதோ ஒரு விருப்பப் பாடலை கேட்டு ரசித்து மெய் மறந்து கண் திறக்கும் போது எதார்த்த வாழ்க்கை எல்லா ஆயுதங்களையும் வைத்துக் கொண்டு நிற்கிறதே.... ஏன் இந்த அபத்தம் என்று புரியாமல் நகரும் கூட்டத்தில் நீயும் ஒருவனா? கேட்ட கேள்விகளுக்கு பதிலாய் மெளனத்தை சமர்ப்பித்த மனம் என்னை எவ்வளவு ஏமாற்றி விட்டது... என்று மனதை வேறொன்றாக பாவித்து மனமே நினைத்தது.

எதார்த்தை எதிர்கொள், நிதர்சனத்தில் கவனம் செலுத்து, எதிரிகளை துவம்சம் செய்.....உனக்கென்று ஒரு கனவுலகமே தேவையில்லை...எப்போதும் ஏகாந்தத்திலிருப்பாய்.....என்றது என் உள் முனைப்பு....!

" செயல் படு " என்ற ஒற்றை வாக்கியத்தின் விரிவாக்கம் தானே பகவத் கீதை?

அக்கிரமங்கள் கூடிப் போய், மூட நம்பிக்கைகள் அதிகரித்த போது நிகழ்த்தப்பட்டவைதானே ரசூலல்லாவின் (ஸல்) போர்கள்? செயல்.. செய்யும் போது கற்பனைகள் இல்லைதானே....? ஆனால் கற்பனைகளில் செயல் செய்வதாய் கருதுகிறோமே அது அறியாமையின் உச்சம்தானே?

செயல் புரி என்ற கட்டளையை கேட்டாலே அலர்ஜியாகிப் போகும் அளவிற்கு புரையோடிப் போய் கிடக்கிறது மனம். நாம்தான் வெற்று அரற்றலிலும், பந்தாவிலும், உலகைத் திருத்தும் உத்தமர் வேசம் போட்டுக் கொண்டிருக்கிறோமே? நாம் எப்படி செயல்புரிவது.

இந்திய அரசியல் அமைப்புச்ச் சட்டத்தையும், அரசியல்வாதிகளின் போக்கையும், தெருவோரம் ஒதுங்கிக்கிடக்கும் சாக்கடையையும் பற்றி வீட்டுக்குள்ளோ அல்லது வசதியான ஒரு இடத்திலோ உட்கார்ந்து உலகில் இருக்கும் தத்துவங்களையும், விதிமுறைககளையும் உதாரணம் காட்டிப் பேசிப் பேசி இந்த உலகம் உருப்படாது என்ற முடிவுக்கு வந்து கருத்தை உமிழ்பவர்களதாமே மனிதர்கள்......

என்னுடைய செருப்பில் அழுக்கிருக்கிறதே? அதை துடைத்துப் போட நினைத்திருப்பேனா? நான் தலைவாரும் சீப்பு அழுக்காயிருக்கிறதே அதை சுத்தப்படுத்த என்றாவது எண்ணியிருப்பேனா...? என் வீட்டு தலையணை பெட்சீட் சுத்தமாயிருக்கிறதா? என் வீட்டுச் சுவர் தூய்மையாயிருக்கிறதா.....? வீட்டில் இருக்கும் ஒட்டடை அடித்து வீட்டை பளிச்சென்று வைத்திருக்கிறேனா? அட அது எல்லாம் விடுங்கள்...அன்றாடம் நான் பார்க்கும் கண்ணாடி.........அதை அழகாக துடைத்து வைத்திருக்கிறேனா? தினமும் வீட்டை தூசு தட்டி டஸ்டிங் செய்திருக்கிறேனா.....? எதுவுமே இல்லை

ஆனால்....

உலகம் திருந்த வேண்டும்...என்று ஒப்பாரி வைக்கிறேனே? என்னே மடைமை இது..?

என் வசதிப்படி நான் எப்படி வேண்டுமானாலும் இருப்பேன், எனக்குள் ஆயிரம் அசிங்கங்களை கடை பரப்பி வைத்துக் கொண்டு அதை மறைத்து அழகாக உடுத்தி, நறுமணம் பூசி, வெளியே வந்து பல்லிளித்து ....உலகப்பொதுமுறை எழுதிய வள்ளுவனுக்கே வழிமுறைகள் சொல்வேன்...? அறியாமையா இல்லையா இது.....

ஒரு தெருவில் வசிக்கும் மனிதன், தெருவில் குப்பைகள் கூளங்கள் கிடந்தால் என்ன செய்யவேண்டும்? தெரியுமா? சரி அதை விட்டுத்தள்ளுவோம் என்ன செய்கிறோம்....தெரியுமா?......இந்தியப் பிரதமரையும், மாநில முதல்வரையும் இன்ன பிற அரசியல்வாதிகளையும் குறை சொல்லிய படியே இந்த நாட்டை திருத்தவே முடியாது என்று நாட்டுக்கு நடுவில் நமக்கென்ன என்று நின்று கொண்டு சொல்வோம்.....

எல்லா வழிமுறைகளும், நெறிகளும் வகுத்தளிக்கப்பட்டுள்ள தேசத்தில் அதை பின்பற்ற வக்கற்ற மக்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது. தெருவில் குப்பைகள் இருந்தால் நமது தெருவிலேயே நாம் வாக்களித்து தேர்ந்தெடுத்த வார்டு உறுப்பினரிடம் எத்தனை தடவை முறையிட்டு இருப்போம்.....? அவரிடம் சொன்னால் அவர்தானே.. பேருராட்சியில் சொல்லி முட்டி மோதி ஏதாவது செய்ய முனைவார்?

நாமே மனிதர்களை நமது பிரதிநிதிகளாக்குவோம்.....ஆனால் அவர்களிடம் நேர்மையாக முறையிட்டு செய்து கொடுங்கள் என்று கேட்க மாட்டோம். எடுத்த எடுப்பிலேயே...தமிழ் நாட்டின் தலைமையை குறை சொல்வோம்.

படிநிலைகள் இருக்கின்றனவா இல்லையா? அதன் படி ஏன் அணுகக்கூடாது? நமக்குத்தான் பொறுமையில்லையே.....! நாம்தான் உலக அரசியல் படித்திருக்கிறோமே....? நமக்குத்தான் முற்போக்கு சிந்தனை இருக்கிறதே.. ? நாம்தான் பெரிய.....பெரிய.. தலைகள் கொண்டிருக்கிறோமே?...........

என்னை போட்டுத் தாளித்துக் கொண்டிருந்த என் உள் முனைப்பு என் முகத்தில் காறி உமிழாதது மட்டுமே குறையாக இருந்தது. அமைதியாய் எல்லாவற்றையும் நான் வாங்கிக் கட்டிக் கொண்டேன். ஆமாம்.. அதிக பிரசங்கித்தனமாய் ஊரில் நடக்கும் பிரச்சினைகளை அந்த அந்த ஊரில் இருக்கும் காவல்துறை தலைவர்களுக்கு மரியாதை கொடுத்து நாம் பிரச்சினைகளை தீர்திருக்கிறோமா? இல்லை...........ம்ம்ம்ம் என்றால் மாநில மந்திரி? ம்ஹீம்ம்ம்ம்ம் என்றால் மத்திய மந்திரி..என்று நமது பலத்தை காட்டத்தானே முயன்றிருக்கிறோம்?

இப்படி குப்பனும், சுப்பனும், மாறனும் முனியாண்டியும்.......தொட்டதுக்கெல்லாம்...சப்போர்ட்டுக்கு ஆள கூப்பிட்டு கூப்பிட்டு....கடையில அரசின் நிர்வாகம் சீர்கெட்டுப் போக ஒரு காரணமா இருந்து விட்டு.....ஒட்டு மொத்த உலகத்தையும் பழிக்கிறது கேவலமா இல்லையா?...........

நாலு வரி எழுதி என்னத்த உலகத்தை கிழிக்கப்போறேன்...? இதைப் படிச்சுப்பார்க்க பத்து பேரு வர்றதுக்கே நூறு பேரு எழுதுனதுக்குப் போய் நான்...மொய் எழுதணும்....விளம்பரம் செய்யணும்.....! (நல்ல பதிவுகளை வாசிப்பதும், ஊக்குவிப்பதும் எப்போதும் வரவேற்கத்தக்கது....என்பதையும் குறிப்பிட விரும்பிகிறேன்)

........என்னது நான் எங்க போறேனா...? என்னோட ஷூ க்கு பாலிஸ் போடங்கண்ணா.......ஒரே தூசு...!


அப்போ வர்ர்ர்ர்ர்ட்டா.....!


தேவா. S

Monday, February 14, 2011

இதுதானே...?


இரவுகளில் தொலைத்த
உறக்கங்களின் அயற்சிகள்
எல்லாம் எழுதிவைத்த
உன் பெயரைத்தான்
நான் காதலென்கிறேன்...!

பொய்யாகக் கூட..
வார்த்தைகளில் நேசம்
விலக்கா உன் அன்பில்
ஒளிந்திருக்கும் உணர்வுகள்
எனக்குக் கொடுத்த சிலிர்ப்பைத்தான்
நான் காதலென்கிறேன்...!

நிறையவே யோசித்து
நான் எழுதும் நான்கைந்து...
வரிகளில் நனைந்திருக்கும்
என் உயிர் உரைக்கும்...
ஓசைகளில் படிந்திருக்கும்
நேசத்தைதான் நான் காதெல்ன்கிறேன்...!

ஒரு மழை சாதரணமாகத்தான்
பெய்து பூமி நனைக்கும்....ஆனால்
அது எனக்காக பெய்ததென்று
எது சொன்னதோ அதைத்தான்..
நான் காதல் என்கிறேன்..!

இரவில் இமைகள் கவிழ்ந்து
உறங்கும் பொழுதிலும்
விடியலில் இமைகள் பிரித்து
எழும் தருணங்களிலும்....
தப்பாமல் உன் முகம்
அகத்தில் வருகிறதே...
இதைத்தான்..இதைத்தான்...
பெண்ணே நான் காதலென்கிறேன்...!


தேவா. S

Thursday, February 10, 2011

தேடல்....10.02.2011!
விக்னேஷ் அண்ணன் டைரக்டர் கார்வண்ணன் அங்கிள்கிட்ட அசிஸ்டென்ட் டைரக்டர், நான் ஹோட்டலியர். எப்பவும் தியானம், ஆன்மிகம்னு விக்னேஷ் அண்ணன் ஒரு பக்கம். ஊர் சுத்தல், ஆட்டம், பாட்டம்னு நான் ஒரு பக்கம். இரண்டு பேரும் ஒன்னா தங்கியிருந்தது போரூர் மதானந்தபுரம் கீரீன் பார்க் அப்பார்ட்மெண்ட்ல....!

டூட்டி முடிஞ்சு வீட்டுக்கு ஒரு நாள் பத்து மணிக்கு வந்து என்னோட சாவிய வச்சு வீட்டை திறந்து உள்ள போனா ஒரு பெட்ரூம் திறந்தும் இன்னொன்னு ஒருக்களிச்சு சாத்தியும் வச்சு இருந்துச்சு....யாரும் இருக்க மாதிரி தெரியலை....

மெல்ல பாதி திறந்து இருக்குற கதவை திறந்து உள்ள பாத்தா.. விக்னேஷ் அண்ணன்... பத்மானசனத்தில் அமர்ந்து தியானம் பண்ணிட்டு இருந்தாங்க....! எனக்கு டி.வி போடணும் உடனே...ஆன அண்ணனுக்கு தொந்தரவா இருக்குமோன்னு யோசிச்சுகிட்டெ ஹால்ல குறுக்கும் நெடுக்குமா நடந்துகிட்டு இருந்தேன்.....

15 நிமிசம் ஆச்சு.... எனக்கு பொறுமையில்லை. வரட்டும் வெளிலன்னு கடுப்பா காத்துட்டு இருந்தேன். 20 நிமிசத்துல அண்ணன் வெளில வந்தாரு....கையில ஒரு சின்ன புத்தகத்தோட...! அவரை முறைச்சு பாத்துட்டே கேட்டேன்...என்ன பண்றீங்க... ? கொஞ்சம் கடுப்பா கேட்டேன்...! ஒண்ணும் இல்லை தியானம் பண்ணி ரொம்ப நாளாச்சு அதனாலதான்...

நான் கேள்விகளிலேயே நிரம்பி வழிஞ்ச காலம் அது. பத்தாக்குறைக்கு உங்க வீட்டுத் திமிரு இல்லை எங்க வீட்டுத் திமிரு இல்லை, ஊருல இருக்குற திமிர எல்லாம் ஒண்ணா சேத்து நாந்தான் வச்சிருந்தேன். மறுபடி விக்னேஷ் அண்ணனை கேட்டேன்....

தியானம் எதுக்கு பண்றீங்கனு? ம்ம்ம்ம் மன அமைதிக்குன்னு அவர் பதில் சொல்லவும் நான் சிரிச்சுகிட்டே...ஹா ஹா ஹா... அப்படியா? அப்படீன்னா எனக்கு தியானம் தேவையில்லைனு சொன்னேன்....அவர் மெலிதாய் சிரித்தபடி கையிலிருந்த புத்தகத்தை எடுத்கொண்டு பால்கனியில் போய் அவர் அமைதியாய் அமர்ந்தது எனக்கு இன்னும் எரிச்சலூட்டியது....

எப்பவுமே நாம கோபமா பேசும் போது எதிராளியும் கோபமா பேசி நம்மகிட்ட ஆர்கியு பண்ணனும்னு மனசு எதிர்பார்க்கும்....ஆனா கண்டுக்காம போகும் போது நம்ம உள்முனைப்பு தோத்துப் போய் இன்னும் அவமானப்பட்டு நிக்கும். ஆமாம் பெரும்பாலான மனிதர்களின் கோபங்கள் அடுத்தவரை மட்டம் தட்டத்தானே வெளிப்படுகின்றன. இன்னொரு விதமும் இருக்கு.... தெரியாத விசயத்தைத் தெரியாதுன்னு சொல்லித் தெரிஞ்சுக்க முயற்சி செய்யாம...யாருக்குத் தெரியுமோ அவரை மட்டம் தட்ட முயற்சி பண்றது...

எனக்கும் கோபம் வந்து விக்னேஷ் அண்ணன் கிட்ட மீண்டும் போய்... என்ன படிக்கிறீங்கனு? நான் கேட்ட அந்த நிமிடம் என் வாழ்க்கையையே மாற்றிப் போடப்போகிறது என்று எனக்குத் தெரியாது...

"சிவபுராணம்" படிக்கிறேன்னு அவர் சொல்லிட்டு ... சரி சரி தேவா நீ போய் தூங்கு லேட் ஆச்சு இது எல்லாம் நீ படிக்காதேன்னு அவர் சொன்ன இடம் எனக்குள் ஒரு அழுத்தத்தைக் கொடுக்க....ஏற்கனவே என்னோடு உறவில் இருந்த பாலகுமாரனின் நாவல்கள் ஆழ்மனம் என்னும் சப்கான்ஸியஸ் மைண்டிலிருந்து படையெடுத்து வெளிவந்து....ஏன்? ஏன்? ஏன் நான் படிக்க கூடாது என்று அவரிடம் கேட்க....

வேண்டாம் புலிவாலைப் பிடிக்காதே.... உனக்கு இப்போ வேண்டாம். அதுவும் இல்லாம ஆன்மீகம்னா என்னனு விளங்கிக்கிற பக்குவமும் சூழ்நிலையும் உனக்கு இல்லை என்று என்னுடைய 23 வயதையும் என்னுடைய நட்சத்திர ஹோட்டல் வேலையையும் மறைமுகமாகச் சொல்ல....

நான் சரி என்று சொல்லிவிட்டு படுத்துவிட்டேன். அதற்கு அடுத்த விடியப்போகும் நாள் என்னுடைய டே ஆஃப்....அதற்கு மறுநாள் நான் ஒரு இரு வார விடுமுறைக்கு மதுக்கூர்(என் வீட்டுக்குத்தாங்க) போகிறேன்.

10 மணிக்கு விடியும்
எனது விடுமுறைதின காலைகளில்
எந்த பரபரப்பும் இருக்காது..
இல்லாத நேரம் நகர்வதாய்ச்
சொல்லி ஒரு மாயையை ஊட்டும்
மொத்ததில் நானே நானாய்
இருக்கும் பொழுதுகள்
உடைத்துப் போட்டிருக்கும் ...
எல்லா விதி முறைகளையும்...!

நான் எழுந்த போது விக்னேஷ் அண்ணன் வெளியே போய் ரொம்ப நேரம் ஆகிவிட்டிருந்தது. அவர் அதிகாலை பட்சி...நான்...கட்டுகடங்கா காற்று...! டீ போட்டு எடுத்துக் கொண்டு ஹாலில் அமர்ந்த என் கண்ணில் பட்டது காற்றில் படபடக்கும் சிவபுராணம் புத்தகம். டி.வி பெட்டிக்கு பக்கத்தில் இருந்து கொண்டு காற்றில் அது ஆடி என்னை கலைத்துப் போட்டது....! " நீ எல்லாம் படிக்காத...வேண்டாம்....புலி வால ஏன் கைல பிடிக்கிற? " இப்படி நேத்து நைட் அண்ணன் கேட்டது நினைவுக்கு வர.... வழக்கம் போல எனக்குள் இருக்கும் திமிர் உற்சாகமாய் வேலை செய்யத்தொடங்க....

சற்றைக்கெல்லாம் சிவபுராணம் என் கையில்.... சப்தமாய் டீயை மறந்து விட்டு நான் வாசிக்கத் தொடங்கினேன்....வரிகள் வழுக்கிக் கொண்டு போக.. மனம் எனக்குத் தெரியமால் எங்கோ சென்று வார்த்தைகளுக்குள் லயித்து....

"ஈசனடி போற்றி; எந்தை அடி போற்றி
தேசனடி போற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலனடி போற்றி
மாயப் பிறப்பறுக்கும் மன்னனடி போற்றி
சீரார்ப் பெருந்துறை நம் தேவனடி போற்றி"

வரிகளைக் கடந்து....செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து...வாசித்து முடித்தவுடன் மீண்டும் அதை மனப்பாடம் செய்ய வேண்டும் என்று தோன்றியது. மனப்பாடம் செய்து விக்னேஷ் அண்ணனிடம் சொல்ல வேண்டும். இது என்ன பெரிய விசயம் என்ற வேகத்தில் சிவபுராணத்தை மீண்டும் மனப்பாடம் செய்யத்தொடங்கினேன்....

வயிற்றுப் பசி எடுத்த சமயம் டைம் பார்த்த போது மதியம் மணி 3 ஆகி இருந்தது அப்போது தங்கு தடையின்றி சிவபுராணம் மனப்பாடம் ஆகியும் இருந்தது. அதே தினத்தின் இரவில் விக்னேஷ் அண்ணனும் நானும் தி.நகர் போக் ரோட்டில் நின்று கொண்டிருந்தோம். நான் ஊருக்குச் செல்ல விக்னேஷ் அண்ணன் என்னை ஏற்றி விட.....

விக்னேஷ் அண்ணனிடம் சிவபுராணம் சொல்லிமுடித்துவிட்டு.. அதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டவுடன்... ஒரு மெல்லிய சிரிப்புடன் என்னைப் பார்த்தவர். படிச்சிட்டியா சரி சரி இனிமே நான் எதுக்கு அர்த்தம் சொல்லணும் சிவபுராணமே அர்த்தம் கொடுக்கும். சிவன் என்பது ஒரு ஆள் இல்லை இது மட்டும் இப்போதைக்குப் புரிஞ்சுக்க பெஸ்ட் ஆஃப் லக் என்று அவர் கூறி முடிப்பதற்கும் நாரயண மூர்த்தி பஸ் வருவதற்கும் சரியாய் இருந்தது...

அந்த ஜன்னலோரத்து ...
இரவுப் பேருந்தில்
என் உண்மையான பயணம்
எனக்கே தெரியாமல் தொடங்கியது...!

சிவன் ஒரு ஆளில்லை...அப்படி என்றால் யார் சிவன்? அந்த புகைப்படத்தில் இருப்பது யாரு? திருவிளையாடல் படம் ஒரு கணம் என் கண் முன் வந்து சென்றது.....மனதுக்குள் ஈசனடி போற்றி எந்தையடி போற்றி....என்னையறியாமல்..வார்த்தைகள் ஓடிக் கொண்டிருந்தன.

விடுமுறை வீட்டில் குதுகலமாயிருந்த என் மனம் தொடர்ச்சியாய் சிவபுராணத்தில் உழன்று கொண்டிருந்தது. வழக்கம் போல் நூலகத்திற்குச் சென்ற என் கண்ணில் தென்பட்ட விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு என்னைப் புரட்டியே போட்டு விடும் என்று கனவில் கூட நான் நினைக்கவில்லை.

நாத்திகவாதியாயிருந்து, வறுமையிலும் ஒளிரும் அறிவு கொண்டு, கேள்விகள் கேட்டு ஆராய பகவான் இராமகிருஷ்ணரைக் காணச் சென்று அவரது சத்தியத்தின் பால் ஈர்க்கப்பட்டு, அதன் பிறகு அமெரிக்கா சென்று பல அனுவங்களும், சொற்பொழிவுகளும் நிகழ்த்தி, பின் தாயகம் திரும்பி... அவரின் 40வது வயதில் இந்த உலகை விட்டு நீத்த விதமும்....அவரின் சீடர்கள் அவர் மீது வைத்திருந்த அன்பும்...அவரின் தியான வேகமும்...நரேந்திரன் என்ற சுவாமி விவேகானந்தரை எனக்குள் நிறைத்துப் போட்டது....

இரண்டு நாள் தொடர்ந்து வாசித்த போதே... பேச்சு என்னிடம் குறையக் கண்டேன். தனிமையும் அமைதியும் சூழக் கண்டேன்... வெறுமனே எனது அறையினுள் வெறித்த படி இருந்தேன்! உணவருந்தும் நேரம் உணவு அருந்துவதும் மற்ற நேரங்களில் புத்தகம் வாசிப்பதும் என்றிருந்த நான்.. பெரும்பாலும் என் நேரத்தை யாருமற்ற இரவு மொட்டை மாடியில் கழிக்கத் தொடங்கினேன்.

சுவாமி விவேகானந்தரைத் தொடர்ந்து நான் வாசித்த சைவசித்தாந்தம் ஏதோ விடைகளை எனக்கு மறைமுகமாய்ச் சொல்ல யாரும் சொல்லாமலேயே சிவபுராணம் எனக்கு விளங்கத் தொடங்கியது. சிவன் என்று இப்போது வணங்கும் உருவம் முதன் முதலில் தன்னை உணர்ந்த ஒரு மனிதனின் உருவம். முதல் முக்தன் முதல் ஜீவிதன்.

அது என்ன முதல் முக்தன்? மனிதன் ஆதி சமுதாயத்தில் இருந்து விலங்குகளோடு விலங்குகளாய் திரிந்த காலத்தில் தன்னை உணர்ந்த ஒரு மனிதன் பெயர்தான் ருத்ரன். இப்போது நமக்கு முன்னால் எத்தனையோ ஞானியர்களும் தீர்க்கதரிசிகளும், வாழ்க்கைப் பற்றியும் நிலையாமை பற்றியும் கூறியே நமக்கு விளங்குதல் மிகக்கடினமாயிருக்கையில்...

முதன் முதல் ஆதி மனிதன் தன்னை உணர்தல் எவ்வளவு கடினம்? அப்படித் தன்னை உணர நிலையாமையைக் கடுமையாக உணர எப்போதும் சுடுகாட்டில் போய் இருந்து பிணம் எரிதலை பார்த்து பார்த்து, இந்த உடல் இருந்தது இப்போது இல்லை..... என்று திரும்ப திரும்ப மனதில் உருபோட்டு ஏற்றி, அப்படி எரிந்த பிணத்தின் சாம்பலை உடலெல்லாம் பூசி... எப்போதும் நாம் அழிவோம் என்ற சிந்தைனையை மனதில் தேக்கி, சுற்றியோடும் உயிர்களை தமது உறவாக்கி பாம்புகளை தமது கழுத்துகளில் போட்டு......

காளை மாட்டினை தமது வாகனமாக்கிக் கொண்டு இடுப்பில் ஒரு புலியின் தோலை உடுத்தி அலைந்த கபாலிதான் ருத்ரன்....! ஆதியிலே ஞானம் அடைய இத்தனை கடும் தவங்கள் இருக்கவேண்டிய தேவை யிருந்தது ருத்திரனுக்கு.....இப்படி இருந்து....இருந்து...எதுவமற்ற ஆனால் எல்லாமான சிவத்தை உணர்ந்ததனால் அவரை சிவபெருமான் என்று கூறி அந்த உருவத்தை படமாக்கி நாம் வணங்கி வருகிறோம். நாம் இப்பொது வழிபடும் படம்.....முதல் முக்தனின் படம். அவர் சிவத்தை உணர்ந்த முதல் முக்தன்... முதல் ஜீவிதன்...ஆனால் சிவம் எது?

வானாகி, மண்ணாகி வளியாகி, ஒளியாகி, ஊணாகி, உயிராகி, உண்மையுமாய், இன்மையுமாய், கோனாகி, நான் எனது என்பவனை கூத்தாடுபவனாகவும் இருக்கும்....எல்லாமான ஆனால் எதுவமற்ற ஆதிநிலை.....அதுதான் சிவம்.

ஏதோ ஒரு மாயையில் உலகம் இயங்குவதும் அங்கே சுற்றிச் சுற்றி நிகழும் சம்பவங்களுக்கும் காரணம் மனித மனம் கொள்ளும் ஆணவமும் புரிதலற்ற தன்மையும்தானென்றும், மனிதன் தன்னை உணர கற்பிக்கப்பட்ட கடவுளர்கள் வழிபாடும் ஒரு ஒழுக்க நெறியேயன்றி வேறொன்றும் இல்லை என்றும் தோன்றியது.

பெரும்பாலும் பொருள் தேடும் இவ்வாழ்வில் பொருள் எப்போதும் மனிதனை சந்தோசபடுத்துவதில்லை மாறாக பொருள் தேடும் நிகழ்வே நிம்மதியென்னும் நிலையை அடையவேயன்றி வேறெதற்காகவும் இல்லை. ஆனால் பொருள் தேடும் வாழ்க்கையில் புரிதலற்றுப் போய் இருப்பதனால் முடிச்சை அவிழ்ப்பதாக எண்ணி எப்போதும் முடிச்சுகளால் மனிதன் தன்னை இருக்கிக் கொள்கிறான். மூன்று வேளை உண்டு, எப்போதும் சந்தோசம் தேடுதல் மட்டுமல்ல வாழ்க்கை...வேறு ஏதோ ஒன்றைத் தேடவேண்டும் என்ற எண்ணம் பளிச்சென்று என் மனதில் பதிந்த நொடியில் எனது ஆர்ப்பாட்டமான அகங்காரம் செத்துப் போயிருந்தது.

அடுத்து என்ன நிகழப்போகிறது என்று அறிய முடியாத மனிதன் ஏன் இப்படி பறக்காவட்டியாய் பறக்கவேண்டும்....? ஏதோ ஒரு மாற்றம் என்னுள் நிகழ்ந்திருப்பது உலகத்துக்கு தெரியாது..உலகத்தின் பார்வை வழக்கமானது ஆனால் உலகம் பற்றிய எனது பார்வை 180 டிகிரி மாறிப்போயிருந்தது.

அம்மாவை அம்மாவாகவும், அப்பாவை அப்பாவாகவும், நண்பனை நண்பனாகவும்...எது எது எதுவோ அது அது அதுவாகப் பார்க்கும் பார்வை கிடைத்தது. கோணம் மாறியது....சராசரி வாழ்க்கையில் சராசரியாய்...நான் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் எனக்குப் புரிந்தது. என்னைப் புரிதல் பிறர்க்கு கடினம் என்றும் உணர முடிந்தது....

விடுமுறை முடிந்து சென்னைக்குப் பயணமானேன்... விக்னேஷ் அண்ணனைக் காணவேண்டும் என்ற ஒரு அன்பு ஆவலாய் இருந்தது...

மீண்டும் ஒரு இரவு
ஜன்னலோர பேருந்து ...
நானற்ற நானின்றி
பயணமென்ற ஒன்றுமின்றி
வெறுமையில் நிறைவாய்
தொடங்கவும் இல்லை...
முடியவும் இல்லை என் பயணம்..!

குளுமையான காற்று என்னை சில்மிஷம் செய்ய...ஏகாந்த சுகத்தில்..இருந்த என்னைச் சுமந்து கொண்டு பேருந்து மன்னார்குடியைத் தாண்டியிருந்தது..!

நானில்லாமல் நான் இருந்தேன்...


தேவா. S


Tuesday, February 8, 2011

நாச்சியா....!


ஏண்டா பொன்னப் பயலே........ஏண்டா பொம்பளப் புள்ளைய கூடவே வெளயாடுற பொம்பள சட்டி மாதிரி... இவ்ளோ கோபமா அப்பா கத்தி நான் பாத்தது இல்லை.......எனக்கு தூக்கி வாரிப்போட்டுருச்சு..... ! ஏண்டா ஆறாப்பு படிக்கிற கழுத எப்ப பாத்தாலும் என்னடா பொம்பளை புள்ளைக கூட...ம்ம்ம் .பயலுக கூட போய் விளையாடுடான்னு மறுபடியும் கத்துனாரு...!

நான் காத பொத்திகிட்டே.... சொன்னேன் ஏப்பா எனக்கு பயலுக கூட வெளயாட பயமா இருக்குப்பா கூச்சமா இருக்குப்பான்னு சொல்லவும் என்னைய இழுத்துட்டு போயி சாத்து சாத்துனு சாத்திட்டாரு....! அதான்.. இப்ப அழுதுகிட்டு படுத்து இருக்கேன்....!

முன்னாடி எல்லாம் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க இப்பத்தான் என்னைய ரொம்ப அசிங்கபடுத்துறாக எனக்கும் என்ன நடக்குது எனக்குள்ளனு புரியவும் மாட்டேங்குது. மனசும் எப்பவும் திக்...திக்னு அடிச்சிக் கிட்டே இருக்கு. பள்ளிக்கூடத்துல கூட பயலுக பக்கதுல உக்காரயில ஒரு மாறி கூச்சமா இருக்கு. அவங்கள பாக்கும் போதே ஒரு கூச்சம் வருது...! ஒரு நாள் எங்க டீச்சர் கிட்ட சொன்னேன்....எனக்கு இங்க உக்கார பயமாருக்குன்னு....!

அட லூசுப் பயலேன்னு திட்டிட்டு.. நீ என்ன ஒன்போதான்னு கேட்டாக....? ஒம்போது அப்படீன்னா என்ன டீச்சர்னு கேட்டப்ப நீதான்டா லூசுப்பயலே முருகானு சொன்னது கூட பெரிசா தெரியலீங்க. கூடப்படிக்கிற பிரண்சுக எல்லாம் என்னைய சுத்தி சுத்தி வந்து.... ஏய்.. ஒம்போது முருகா... டொய்ங் டொய்ங் டொய்ங்னு கிண்டல் பண்ணினத என்னால மறக்கவே முடியல.... !

இப்போ எல்லாம் என் பொழப்பு நிதமும் அழுகறதாவே போச்சு? அம்மா மட்டும் சொல்லும் டே முருகேசு ஆம்பளைடா நீன்னு நிதானாமா தைரியமா இருடான்னு...எனக்கு அழுகையா வரும் அம்மா..ஒரு நாளு எனக்குப் பயலுக கூட உக்கார செரமமா இருக்குமான்னு சொன்னேன்... அதுக்கு அம்மா வெளக்கமாறு பிஞ்சி போகும்னு அதட்டவும் நான் போயி ஒரு மூலையில உக்காந்துகிட்டேன்.

இப்படி இருக்காத... இருக்காதன்னு எல்லோரும் சொன்னாங்களே தவிர ஏன் இப்டி இவனுக்கு தோணுதுன்னு யாருமே விளங்கிக்கல....எனக்கே விளங்கல..! எட்டாப்பு படிக்கிறப்பதான் வெளங்கிகிட்டேன் அதுவும் ப்ரண்சுக மூலமாத்தான்.. ஆமாங்க....எனக்கு உடம்பும் குரலும் மட்டும் ஆம்பிள மாதிரி இருக்கு ஆனா என் மனசுல நான் ஒரு பொண்ணாதான் இருக்கேன்....!

எனக்கும் இப்ப எல்லம் நல்லாவே வெளங்கிப் போயிருச்சுங்க...என்ன மாறி இருக்குற பொறப்பு எல்லாம் ஆம்பளையும் இல்லையாம் பொம்பளையும் இல்லையாம்...குறையா பொறந்துட்டோமாம்...அலியாம், ஒம்பாதாம், பொட்டையாம்... அரவாணியாம்.... நாகரீகமா இப்ப திருநங்கைனு சொல்றாங்களாம்....

குறையா பொறக்குறதுன்னா என்னனு ஒரு நாள் எனக்குள்ளேயே கேள்வி கேட்டு கேட்டு அழுதுட்டு இருந்தேன்..தனியாத்தான்..! எங்க வீட்ல என் அக்காளுங்க இருக்காளுக ஒத்தையில்ல ரெண்டு பேரு இருக்காளுக எனக்கும் நேர் கீழ தம்பிப் பய இருக்கான் ஒருத்தன்.... எனக்கு நல்ல பாசம்ங்க இவுங்க மேல எல்லாம்...ம்ம்ம்ம்ம் ஆனா நான் பக்கதுல போனாலேயே என்னிய அருவருப்பா பாப்பாங்க....என்கிட்ட பேசவே மாட்டங்க இவுங்க எல்லாம்....

கூடப்பொறந்த பொறப்புகளே புரிஞ்சுக்கல பெத்த தாய் தகப்பனே அறிஞ்சுக்கல..என் கதைய சாமியா கேக்கும்...? அது இருக்கா இல்லையான்னே தெரியலை அது எப்படி கேக்கும்.....! ஒரு நா ராத்திரி வீட்ல எல்லோரும் திருவிழாக்குப் போயிட்டாங்க பக்கத்து தெருவுலதான் கோயிலு! என்னவோ தெரியலை என்னிய கூட்டிட்டு போனா அசிங்கமா இருக்குன்னு விட்டுடு போய்ட்டாங்க. எனக்கு செத்துடலாமான்னு கூட தோணுச்சு ஆனா பயமாவும் இருந்சுச்சு.

எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசங்க...அத இன்னிக்கு நெறவேத்திப் பாக்கலம்னு நினைச்சேன்....! உங்க கிட்ட சொல்லவா.....?

ஆருகிட்டயும் சொல்லக்கூடாது சரியா....? காதைக் கொடுங்களேன்.. அட நீங்களாச்சும் கிட்டவாங்க.. நான் என்ன கடிச்ச திங்கப் போறேன்....அச்ச்சோ....எனக்கு வெக்க வெக்கமா வருது...சொல்லட்டுமா? அது வந்து......அது....அது....

எங்க அக்கா பாவடை தாவணி கட்டிப் பாக்கபோறேன்.....? என் மனசறிய எஞ்சாமி சத்தியமா நான் பொண்ணுதானே...இருங்க.. இப்ப கட்டிகிட்டு வந்து காட்டுறேன்....
இந்த கத்திரிப் பூ கலரு தாவணின்னா எனக்கு அம்புட்டு இஷ்டம்....ம்ம்ம்ம் அந்த மஞ்சக்கலருபாவடை ஜிகினா நெறைய இருக்கும்....பூப்போட்ட டிசைன் எனக்கு உயிரு....அந்தக் கண்ணாடி வளைய.. ம்ம்ம் இன்னும் அவ வச்சு இருக்குற பூராத்தையும் எடுத்து போட்டுகிட்டேன்...பொம்பளை போடுற எல்லா ட்ரெசும்தான்..! பொட்டு வச்சிப்பாத்தேன்...கன்ணுக்கு லேசா மை போட்டுகிட்டேன்... !

எனக்கு கொலுசுன்னா உசுரு தெரியுமா? எனக்கு போடணும்னு கொள்ளை ஆசை....! முடி நல்லா வளர்த்துக்கணும் இனிமேன்னு நெனச்சுகிட்டே மெல்ல நடந்து பாக்கயில........என்னிய பாத்தா எனக்கே அழாகா தெரிஞ்சுச்சு........அச்சச்சோ... யாரோ வார சத்தம் கேக்குதே.....நான் பயத்துல ஓடிப்போயி ஹால்ல எட்டிப் பாத்தா....

திருவிழாவுக்க்கு போனவுங்க மழை வந்துடுச்சுன்னு திரும்பி வந்துட்டாங்க.......அம்மா, அப்பா, தம்பி, அக்காங்க....எல்லார் முன்னாடியும் நான்....

நடு ராத்திரி மணி பன்னென்ட தாண்டி போச்சு..தொடைல அம்மா போட்ட சூடும்....முதுகல அப்பா அடிச்ச அடியும் தம்பியும் அக்காவும் காறித்துப்புன எச்சியோடயும் படுத்த எனக்கு தூக்கம் வரலை. என்ன பொறப்புடா சாமி என்ன பொறக்கவச்சே.....? எல்லா மனுசங்களுக்கும்....மனசுதான் அவுங்கனு வாழ்றப்போ என்னப் போல பொறப்புகள ஏன் மனச வச்சி மதிக்காமாட்டேங்குது சனம்......

மனசுக்குள்ள பொண்ணா இருக்குற எங்களுக்கு உடம்பு ஆம்பளை மாறி இருக்கு.இதுல என்ன பெரிய தப்பு இருக்கு? எதுலயும் சேத்தி இல்லனு நீங்கதானடா சொல்றீங்க....? குறையோட பெத்து தொலைச்சுட்டேன்னு என்ன பெத்த அம்மாவே சொல்றாளே...? இது எந்த ஊரு கதடியம்மா?

இடையில வந்தாதானே கொற? பொறப்புலயே நாங்க இப்படி இருக்கறது எப்படி கொறையாகும்.. நாங்க முழுசுதான்....நாங்க இருக்குற மாறியே இருக்குறதுல நாங்க முழுசுதான். ஆண்டவனே ஆம்பளையும் பொம்பளையுமா நின்னு கையெடுத்து கும்புடுறீக....பெத்த புள்ளைய அப்டி இருந்தா அடிக்கிறீங்க....!

இனி அந்த வீட்ல இருக்கமாட்டேன்..! வீட்ல எல்லோரும் தூங்கிக்கிட்டு இருக்கும் போதே முடிவு பண்ணினேன்...ஆமாம்.. நான் போறேங்க...! என்னால தூக்குப் போட்டு சாகப் போறேன்னு எங்கப்பா சொல்றாரு, எல்லாருக்கும் அவமானமா நான் ஏன் இருக்கணும்? அப்பா சட்டைப் பாக்கெட்ல இருட்ல கைவிட்டேன்.... கையில கிடச்ச 500 ரூவாயும்,,, நான் கட்டியிருந்த பாவடை தாவணியோடயும் போறேன்.....

என்ன கலங்கடிச்சுப் புட்டாங்க...நான் போறேன்...!

" பெத்தவ புள்ளையில்லேன்னு
என்ன வெறுத்து ஒதுக்கி புட்டா
மனசே இல்லாத மாருல
நான் குடிச்ச பாலெல்லாம் விசம்தான?
என்ன பெத்த அம்மாவே
உன்ன விட்டு நான் போறேன்....!

என்ன காத்து நீ வளப்பேன்னு
உன்ன அப்பான்னு நாஞ்சொன்னேன்..
என் கழுத்த நெறிச்சுக்
கொல்ல வந்த கொடுமையிலே
உன்ன விட்டு நான் போறேன்
என்ன பெத்த அப்பாவே...!

கூடபொறந்தியளே
என் கூட இருப்பியன்னு
நான் கண்டு வச்ச கனவெல்லாம்
எம் மேல எச்சி துப்பி
அழிச்சு போட்டியளே..
ஏன் கூட பொறந்த மக்கா
வெகு தூரம் நான் போறேன்..."

வாசல தாண்டி நான் வீதிக்கு வந்துட்டேன். வானத்துல நிலா இருந்துச்சு....? நீ ஆம்பளையா பொம்பளையான்னு பொச கெட்டத்தனமா கேட்டு நானே சிரிச்சுகிட்டேன்....அதுகளையெல்லாம் சனம் எந்த கேள்வியும் கேக்காம விட்டு வச்சிருக்கே? ஆதாயம் கொடுக்குற எல்லாத்தையும் கேள்வி கேக்காதுக சனங்க...! எனக்கு நான் கட்டியிருந்த தாவணி பாவடையும் ரொம்ப சந்தோசமா இருந்துச்சு....உலகம் பெருசு...எப்படியாச்சும் பொழச்சுக்குறேன்....

நானா பேசி இருட்டுல நடக்கும் போது... எதித்தாப்பல யாரோ வர்ற மாதிரி தெரிஞ்சுச்சு...."ஏய் யார்றி நீ...." தூரத்துல இருந்து இருட்ல இருந்த என்னை கேள்வி கேட்டுகிட்டே கிட்டக்க வந்தாங்க...." நான் பஸ்ஸாண்டுக்கு போறேங்க...."ன்னு பதில கொஞ்ச வேகமாவே சொன்னேன்...." ஏய் இங்க பாருட..இங்க......அலி ஹி ஹி ஹி...." சிரிச்சுகிட்டே என் கைய புடிச்சு இழுக்கவும் எனக்கு பயமா போச்சு.....

"ஏய் இஞ்சேருங்க விடுங்கடா என்னைய நான் சின்னப்புள்ளடா." சொல்லிகிட்டு இருக்கும் போதே....ரெண்டு பேர்ல ஒருத்தன் அவன் முகத்த என்கிட்ட கொண்டு வர இன்னொருத்தன் என்னைய இடுப்போட சேத்து புடிச்சுகிட்டான்........அவனுக குடிச்சிருந்த சாராயம் நாத்தம் என்னால முடியலை. இருட்டு அவுங்களுக்கு ரொம்ப சாதகமா போச்சு..........டேய் விடுங்கடா. டேய்..........முதுகெல்லாம் வலிக்குதுடா.... டேய்....கால்ல சூடுடா..எரியுதுடா டேய்........டேய்....மயங்கிட்டேன்..............

கண்ண தொறந்து எந்திருக்கும் போது....உடம்பெல்லாம் ரணமா வலிச்சுது.ரெண்டு வெறி நாயும் என்ன பண்ணிச்சுங்கனு தெரியல.. என் தொடைல அம்மா சூடு வச்ச இடத்துல ரத்தம் வழிஞ்சு காயம் பயங்கர வலியா இருந்துச்சு...ஏதோ என்ன பண்ணிருக்காங்க புரிஞ்சும் புரியாம இருந்துச்சு....எனக்கும் 15 வயசு ஆச்சுல்ல.....

என்ன மாதிரி பொறப்பு எல்லாம் அலின்னும், ஒம்போதுன்னு கேலி பண்ற நல்ல மனுசங்களா? நீங்க சொல்ற மாறி நீங்க எல்லாம் நல்லாத்தானடா பொறந்திருக்கீங்க? ஏன்டா பொறம்போக்கு நாய்ங்களா என்னைய மாறி ஆளுகள சீண்டுறிங்க...
ஒழுங்கா பொழப்பு தலைப்பு கொடுத்தா ஏண்டா.. எங்கள மாறி ஆளுக எல்லாம் பாலியல் தொழில் செய்ய வர்றோம்..? போராடி போராடி குடியரசு ஆகி இம்புட்டு நாளு ஆகி இப்பத்தான எங்களுக்கு ஓட்டுரிமையே கொடுத்துச்சு அதுவும் தமிழ் நாட்ல மட்டும்...! அதுக்கும் ரேசன் காடு வேணும் குடும்பம் வேணும்னு சொல்றாங்களே... ஏய்யா ஓட்டுப் போட உசுரு இருந்தா போதாதா?

33% இட ஒதுக்கீடு கொடுக்குறதுக்கு மூக்கால அழுவுற அரசாங்கம் எங்கள மாறி ஆளுகளுக்கு 1% ஆச்சும் கொடுக்குமா .. தேர்தல்ல நிக்க? என்னைய மாறி இருக்குற அக்காங்க எல்லாம் வீட்டையும் விட்டுத் தொறத்தி நாட்லயும் மதிக்காம...ஏன் ஒரு ஈன எண்ணம் எல்லாருக்கும்....? ஆடு, மாடு நாய் எல்லாம் வாழ்ற பூமில எங்கள மாதிரி அரவாணிக வாழக்கூடாதா நிம்மதியா?

வீட்ட விட்டு வெளில வந்த பத்தாவது நிமிசமே கிண்டலும் கேலியும் பண்றவன எல்லாம் பெத்தது ஒரு பொம்பளைதானே?
மனசுக்குள்ள தீவரமா நான் யோசிக்க நான் டெய்லி படிக்கிற நியூஸ் பேப்பர் உதவி பண்ணிச்சு....! எந்திருச்சு நின்னேன்... நல்ல வேளை..கையில வச்சிருருந்த பணம் இருட்ல அப்படியே சுருண்டு கிடந்துச்சு...

என்னதான் செய்யுது இந்த வாழ்க்கைனு பாக்குறேன்... மெல்ல என் ட்ரெஸ்ஸ சரி செஞ்சுகிட்டு பஸ்டண்ட் வந்தேன்.... ! சென்னைனு போட்டிருந்த பஸ்ல ஏறி டிக்கட் வாங்கிட்டு உக்காந்தேன்...! வண்டி எடுக்க டைம் ஆகும் போல......அசதில அப்டியே தூங்கிட்டு இருந்த என்னை யாரோ தட்டி எழுப்பி...ஏத்தா எங்க போறன்னு யாரோ கேட்டது காதுல விழுந்துச்சு....
பக்கத்துல என்னிய மாதிரியே ஒரு அரவாணி அம்மா...என் முகத்தையும் ட்ரஸ்ஸயும் பாத்துட்டு....." ஏன்டா கண்ணு... " என்னாச்சுனு கேக்கவும்......அம்மானு அவுங்கள கட்டிப் பிடிச்சு அழுதேன்........!

என் தலைய கோதிவிட்டு.... நாச்சியா நீ நல்லா இருப்ப மெட்ராஸ்தான் வர்ற வா.. நான் உன்னை பாத்துக்குறேன்...! இனிமே நீ நாச்சியா.. யாருக்கும் பயப்படாத...தைரியமா இரு.....நான் ஒரு டெய்லரிங் கட வச்சு இருக்கேன்....அங்கயே வேல பாருன்னு சொன்னாங்க. அவுங்களுக்கு தெரிஞ்சுருக்கும்தானே... என்னிய மாறி கஷ்டப்பட்டுதானே பொழச்சு வந்து இருப்பாங்க....

கும்பகோணத்துல இருந்து பஸ் கிளம்பி மெட்ராஸ் பக்கம் போய்ட்டு இருந்துச்சு....! விடிய ஆரம்பிச்சுருச்சு...உடம்பு எல்லாம் வலி எனக்கு. அந்த அம்மா தோள்ல சாஞ்சுட்டு.....இருந்தேன்..என் மனசு அமைதியா இருந்துச்சு... நம்பிக்கையோட...

இப்ப நான் முருகன் இல்லை நாச்சியா.......!

தேவா. S


Sunday, February 6, 2011

கிறுக்கல்....!சப்தம்

விரிப்பில் அவ்வப்போது
விழுந்து கொண்டிருந்த
நாணயங்களின் சப்தங்களில்
ஒளிந்திருந்தது..தெருவோர
பிச்சைக்காரனின் வாழ்க்கை..!

***

மாயை

அடிக்கடி தலைவாரும்
எதிர் வீட்டு இளைஞன்...
அடிக்கடி தாவணி மாற்றும்
பக்கத்து வீட்டுப் பெண்
ஒளிந்து கொண்டு....
பல்லிளிக்கும் பதின்மம்....!

***

கோபம்

சாவு வீட்டில் வரும்
ஞானம்
சண்டைகளின் போது
எங்கே போய் தொலைகிறது?

***

யுத்தி

ஒரு டீக்கடை பெஞ்சும்
தினத்தந்தி பேப்பரும்....
துக்குணூண்டு அரசியலும்
டீக்கடை கல்லாவில்
சில்லறையாய்!

***

வேசம்

சேரிகளுக்குள்
வெள்ளைச் சட்டைகளின்
கும்பிடுகளும் பல்லிளிப்புகளும்
சொல்லாமல் சொல்லின
நெருங்கி வரும் தேர்தலை!

***

பக்தி

எப்பவோ நேந்துகிட்டது...
அடுப்பில் கொதிக்கும் ஆடு...
சலமின்றி அய்யனாரும்..
பசியோடு உறவுகளும்..!

***

நிதர்சனம்

ஒரு பேருந்து கிளப்பிச்
சென்ற புழுதி மறைந்த
பொழுதில் கடந்து சென்ற...
ஒரு மரண ஊர்வலம்...
கலைந்து கிடக்கும் வாழ்வுக்கு
மெளனமாய் சொல்லாமல்..
சொல்லிச் சென்றது ...
ஏதோ...ஒரு பதிலை...!


தேவா. S

Saturday, February 5, 2011

அரசு ...!


நான் உன்னிடத்தில் இல்லை...
நான் உனக்கானவனும் இல்லை...
காற்றை யார் கட்டுப்படுத்த...
கடலை யார் அள்ளிக் குடிக்க....
திக்கெட்டும் அலையும் தீயை
குடிசைக்குள் அடைக்க முடியுமா?
வேங்கைகள் எப்போதும் சமாதானம் பேசுவதில்லை
போராளிகள் காதலென்ற போர்வையை
எப்பொதும் போர்த்துவதில்லை..!

எழுதி முடித்து விட்டு மொட்டை மாடிக்கு வந்தேன். மாலை நேரம் எப்போதும் ரம்யமானது. மொத்த பகலின் சூட்டையும் வாங்கிக் குடித்து விட்டுக் குளுமையான இரவினைப் பகிரப் போகும் பூமி சந்தோஷித்துப் புன்னகைக்கும் ஒரு அற்புதமான நேரம். நான் ஒரு கவிஞனாகவும், எழுத்தாளனாகவும், என்னை எப்போதும் நினைத்துக் கொள்வதே இல்லை. தோன்றும் போது எழுதும் எழுத்துக்களுக்கும், பகிரும் செய்திகளுக்கும் எனக்கும் எப்போதும் தொடர்புகள் இருப்பதாக நான் நினைப்பதே இல்லை.

என்னுள் எழுவது எப்போதும் மனிதர்கள் இருக்கும் போதும், இரைச்சல்கள் மத்தியிலுமா வருகிறது? அல்ல..அல்ல அது எப்போதும் வெறுமையில் இருந்துதான் வருகிறது. அப்படிப்பட்ட வெறுமையான தருணங்களுக்காக நான் அல்லாடிப் போகும் அளவிற்கு என்னைச் சுற்றி கூட்டம் சேர்ந்து போய்விட்டதால் என் படைப்புகளுக்குத் தேவையான வெற்றிடத்தின் அடர்த்தி குறைந்துதான் போனது. வாழ்வில் எல்லாவற்றையும் விட ஒரு படைப்பாளிக்கு மிக அவசியமானது தனிமையும், அமைதியும்.....

ஏனெனில் அவனிடம் இருந்து கிளைக்கும் எண்ணங்கள் எங்கிருந்தோ உருவப்படுவதும் அல்ல கடன் வாங்கிக் கடன் கொடுக்கப்படுவதும் அல்ல....! நான் படைப்பாளியா? என்று எனக்குத் தெரியாது ஆனால் எனக்கு எப்போதும் புறத்தின் தாக்கங்கள் பற்றிக் கவலையில்லை. உலகியல் நாடகங்களின் சூட்சுமமும் அதன் ஆதி முடிச்சும், ஏன் இப்படி நிகழ்கிறது என்பதற்கும் என்னிடம் பெரும்பாலும் விடைகள் இருப்பதால் என்னை எவையும் ஆச்சர்யப்படுத்துவதும் இல்லை. நான் ஆச்சர்யப்படுவதும் இல்லை.

சரி அதை விடுங்கள் எதற்கு மேலே அப்படி ஒரு கவிதை எழுதியிருக்கிறேன்? என்றுதானே கேட்கிறீர்கள். உங்களின் கேள்வியில் நியாயம் இருக்கிறது. சமீபத்தில் செதுக்கி எறிந்த ஒரு நிகழ்வின் வெளிப்பாடுதான் அது...

அரசு என்கிற தமிழரசு அதுதான் என் பெயர். இதை ஒரு நாளைக்கு இந்தப் பெயரை 300 தடவை சொல்லி அழைத்த ஒருத்தி அப்படி அழைப்பதன் பின்புலத்தில் என் மீதான அதீதக் காதல் இருப்பதாகச் சொன்னாள். காதல் என்ற வார்த்தையின் மூலம் என்னவென்று நானறிவேன் அது அவ்வப்போது மனிதர்களிடமிருந்தும் வெளிப்படுவதும் என்பதையும் அறிவேன்.

சலனமற்ற குளத்தில்
எறியப்பட்ட கல்லாய்...
என்னைக் கலைத்துப்
போட்டது ஒரு காதல்....!

முதல் நாள் என்னைச் சந்தித்தவள் என்னை ஒரு விழா மேடையில் வைத்துப் பார்த்ததாகச் சொன்னாள். எக்மோர் ரயில்வே ஸ்டேசனுக்கு எதிரே இருந்த ரெஸ்டராண்டில் ஒரு காபி குடித்து விட்டு என் ஸ்கூட்டரை எடுக்க நான் வந்து கொண்டிருந்த போது என்னை இடை மறித்தவள் எப்படி என்னை கண்டு பிடித்தாள் எங்கிருந்து என்னைத் தொடர்ந்தாள் என்பதை என் மூளை ஆராயவில்லை.

அரசு.... உங்ககிட்ட நான் கொஞ்சம் பேசணும்னு சொல்லிட்டுப் பதிலுக்குக் காத்திராமல் உங்க வண்டில போலாமா என் வண்டில போலாமா என்று என்னைக் கேட்டவுடன் எனக்குச் சம்பந்தமில்லாத அல்லது தேவையில்லாத ஒரு நிகழ்வாய் அது பட்டதின் பின்னணியில் என்னுடைய முற்போக்கு மூளையும், நிலையாமைக் கொள்கையும் இருந்தை அவள் அறிந்திருக்க முடியாது.

ஏதோ ஒரு நிகழ்வின் உந்துதலில் அவளுடைய வண்டியிலேயே பயணித்து எங்கே போகிறாய் என்று கேட்கும் முன்னாலேயே காரை அவள் நிறுத்திய இடம் நுங்காம்பாக்கம் ஹை ரோட்டில் ஒரு நட்சத்திர ஹோட்டல். அந்த காஃபி சாஃப் உள்ளே நுழையும் போது கவனித்தேன் மேட்ச் பாயிண்ட் என்ற வாசகத்தை... எனக்குள்ளேயே சிரிப்பு வந்தது...! சற்றும் மேட்ச் ஆகாத என்னைக் கொண்டு வந்திருக்கும் இடம் மேட்ச் பாயிண்ட்.

கவிதைகளையும், கட்டுரைகளையும், இலக்கியத்தையும் அவள் விமர்ச்சித்த விதமும், வேகமும் நான் எதிர்பார்க்காதது. முறிந்த சிறகுகள்ல கலீல் ஜீப்ரான் என்ன சொல்றாருனா... அவள் பேச பேச மெல்லிய வெளிச்சத்தில் எனக்கு ஒரு வித மயக்கம் கலந்த போதை வந்தது என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள். என்னுடைய கவிதைப் புத்கத்தைக் கையோடு கொண்டு வந்தவள் அதிலிருந்து கேள்விகள் கேட்டுப் பெற்று என்னை அவளிடம் மொத்தமாய் ஐக்கியமாக்க....அவளின் அபரிமிதமான அழகு கொஞ்சம் கூட உதவவில்லை மாறாக....அவளின் அறிவு.....

தினமும், பேச்சுக்களாய்.. சிரிப்புக்களாய்.... தொடர்ந்த அந்த நட்பை காதலென்று அவள் சொன்னாள்... அதுதான் காதலா? என்று நான் அவளிடமும் என்னிடமும் கேட்டுக் கொண்டேன். ஏற்கனவே என் வாழ்க்கைப் பற்றிய புரிதலும், இலக்கியக் காதலும், ஆன்மீகமும் சராசரி வாழ்க்கையை விட்டு என்னைத் தூரமாக்கி வைத்திருந்தன.

ஒரே பையன் எழுத்து, எழுத்து என்றிருக்கிறானே என்று 30 ஐ நான் தொடும் வரை துரத்திப் பிடித்தது என் வீடு, திருமணம் செய்யச் சொல்லி....என்னால்தான் ஒத்துக் கொள்ள முடியவில்லை. ரிட்டையர்ட் ஆன பெற்றோர்கள் என் சந்தோசத்துக்குக் குறுக்கே இப்போது வராமல் இருப்பதின் பின்ணனியில் அவர்களின் அனுபவமும், புரிதலும் இருப்பதை மறுப்பதற்கில்லை...

சக நண்பர்களுக்கும், இதர இலக்கியப் போட்டியாளர்களுக்கும் நான் ஒரு பைத்தியம் அல்லது சாமியார் இப்படியான கமெண்ட்களை என் காதுபடவே கேட்டிருக்கிறேன். 33 வயது எனது முறுக்கு ரெளத்ரத்தைக் கிளறி விட்டாலும் உள்ளிருந்து எதோ ஒன்று என்னை அடக்கிக் கொண்டே இருக்கும்.....

பெரும்பாலும் என் உலகத்தில் மனிதர்கள் நிறைய இருப்பார்கள் நானிருக்கமாட்டேன். என் கவனித்தல்களும் உள்வாங்குதலும் எழுத்துக்களாய் மாறும்....இதற்காக என்னைப் பாராட்டுவார்கள் சீராட்டுவார்கள் ஆனால் எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லைதானே? அத்னால் அதை நான் பொருட்படுத்துவதில்லை...

என் ஏக்கங்கள் எல்லாம்..
ஏதோ ஒரு உலகத்திலிருக்க
மனிதர்களின் புகழ்ச்சிகளும்
இகழ்ச்சிகளும் என்னதான்
செய்து விடும் என்னை?

ஓரளவிற்கு என்னைப் புரிந்து இருப்பீர்கள் சரிதானே...? இப்படிப் பட்ட என்னிடம் காதலைக் கொண்டு வந்தவள்தான் நந்தினி....பார்த்தீர்களா.. இவ்வளவு நேரம் அவளது பெயரைச் சொல்லவேண்டும் என்று கூட நான் எண்ணவில்லை. நான் அப்படித்தான் பெயர் சொல்லாமல், என் கதை கேட்காமல் நீங்கள் போனால் போங்கள்...நான் எப்போதும் யாரையும் இழுத்துப் பிடித்து வைப்பதில்லை.

என் வார்த்தைகள்
பிடிபடவில்லை எனில்
என் எழுத்தை ஏன்
மாற்றச் சொல்லுகிறீர்கள்
உங்கள் செவிகளை..
இருக்கப் பொத்திக் கொள்ளுங்கள்..!

இப்படி இருப்பதாலேயே திமிர் பிடித்தவன் என்று என்னை பெரும்பாலும் எல்லோரும் ஒதுக்கினாலும் திருட்டுத்தனமாய் என் எழுத்துக்களை வாசிப்பதையும், கவிதைகளை எடுத்து உபயோகம் கொள்வதையும் அறியாதவனில்லை நான். போகட்டும்... மனிதர்களின் கபட எண்ணங்களோடு போட்டியிட நானில்லை...

எலும்பு பொறுக்கும் நாய் போல ஊரில் இருப்பவர்களின் கருத்துக்களை எல்லாம் பார்த்துப் பார்த்துச் சேர்த்து என்னைத் தீர்மானிப்பவனில்லை நான். நந்தினிக்கு என்னைப் பிடித்துப் போனது அவளது துரதிர்ஷ்டம்தான் என்று சொல்வேன். இலக்கில்லாமல் பயணம் செய்த என்னை ஒரு கட்டுக்குள் கொண்டு வர அவள் முதன் முதலாய் செய்த முயற்சி அசிங்கப்பட்டுப் போனது.....சென்னை மெரினாவில்...

காலையில் வாக்கிங்க் போக மனிதர்கள் மெரினா போவார்கள் நான் மனிதர்கள் வாக்கிங் போவதை பார்க்கப் போவேன். என்னைப் பார்க்க நந்தினி வருவாள். அவளின் இலக்கியம் சார், கடவுள் தேடல் சார், விழிப்புணர்வு சார் பேச்சுக்களை ரசித்த என்னால் அவளின் லெளகீக தத்துப் பித்துக்களை ரசிக்க முடியவில்லை.

முதலில் என்னை ஏன் நீங்க வாக்கிங் போனால் என்ன? என்று அவள் கேட்டு விட்டு என் உடல் நலம் பற்றிய அக்கறையை அவள் வார்த்தைகளில் கொண்டு வந்ததிற்கு பின்னால் அவளின் காதல் இருந்தது என்பதை விட......இனி நீ என் பொருள்... நீ இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சொல்லாமல் சொல்லிய அடக்குமுறை தான் நளினமாய் வெளிப்பட்டது...

பல முறை அவளிடம் சொல்லியிருக்கிறேன். உன் காதலும் என் காதலும் ஒருவரை ஒருவர் காதலிப்பதாக மட்டும் இருக்கட்டும் மாறாக அடக்க வேண்டாம், அறிவுறுத்த வேண்டாம் என்று....அவள் என்ன செய்வாள்? உலக நியதிகளின்படி என்னைக் காதலிக்கிறாள்..........நான் அவளைப் பிரபஞ்ச நியதிகளின் படி காதலிக்கிறேன்...! இப்படி அவளிடம் நேரேயும் சொல்லி விட்டேன்.. அப்படிச் சொன்ன பிறகு உலக நியதியும் பிரபஞ்ச நியதியும் என்ன? என்று அவள் கேட்டதை ரசித்தேன்.. அது சம்பந்தமான அவளின் வேகமானப் பேச்சை ரசித்தேன்...ஆழமான அறிவினை ரசித்தேன்....

காற்றில் பறக்கும் அவளின் கேசத்தை ரசிக்கவும், கூரான நாசியையும், அலையும் விழிகளையும், அளவான உதட்டையும் என் மனது ரசிக்கச்சொல்லி என்னைத் திசை மாற்றிய பொழுது எல்லாம் அதைக் கிட்டத்தட்ட செருப்பால் அடித்து இருக்கிறேன். காமம் இங்கே தவறாகக் கையாளப்படுகிறது..... என்னைப் பொறுத்த வரையில்..... ரசிப்பு...ரசிப்பில் லயிப்பு... லயிப்பில் அன்பு, அன்பில் காதல்...அந்தக் காதலை வெளிப்படுத்த எல்லாவகையிலும் முயன்று உச்ச பட்சமாக அதை வெளிக்காட்ட காமம்.....

கடைசியில் வரும் காமம் பூர்த்தி செய்யும் ஒன்றாய் வரவேண்டும்...! பூரணத்தின் அருகே கூட்டிச் செல்லும் அந்த நிகழ்வில் காதலையும் அன்பையும் வெளிப்படுத்தும் போக்கு இருக்கவேண்டும்....! ஆனால் இங்கே என்ன நிகழ்கிறது.....காமத்தின் பால் எல்லாம் நிகழ்கிறது, காமமே பிரதானம் அதை மையப்படுத்தி மற்ற எல்லாம் வருகிறது..........அதனால்தான் முரண்கள்....

நீயும் நானும் இனி காதலன் காதலி போர்வை போர்த்த முடியாது. நட்போ என்ன கருமமோ நமது தொடர்பு அறிவு சார்ந்ததாக இருக்கட்டும்.....அதைக் காதல் என்ற கட்டுக்குள் கொண்டு வராதே நந்தினி...உன் அதிர்வுகள் என் படைக்கும் திறனைக் குலைத்து விடக்கூடாது மாறாக அது உத்வேகம் கொடுத்து அதிகப்படுத்துவதாய் இருக்கவேண்டும். நான் எப்போதும் கவிதைகள் எழுதுவேன்.. சில நேரம் காதல் கவிதைகள் கூட எழுதுவேன்.. அதில் உன்னைப் பற்றிக் கூட எழுதினாலும் எழுதுவேன் அது என் மனோ நிலை பொறுத்த விசயம். ஆனால் உன்னை மட்டுமே எனக்குள் நிரப்பி வைத்துக் கொண்டு என் ஏகாந்த கனவுகளை என்னால் சிதைத்துக் கொள்ள முடியாது. நாம் பிரியவேண்டாம் ஆனால் உன்னை நானும் என்னை நீயும் கட்டுப்படுத்த வேண்டாம்.

நீ என்னைக் காதலிக்காதே என்று சொல்லமாட்டேன்.....ஆனால் என்னால் உன்னை மட்டும் காதலிக்க முடியாது. என் உலகத்தில் காதல் என்ற வார்த்தையின் பொருள் வேறு அது சராசரி மனிதர்களால் ஜீரணிக்க முடியாதது என்பதாலேயே திருமணமே வேண்டாமென்று நகர்ந்து இருக்கிறேன். உன்னைப் பிடித்திருக்கிறது......அதுவும் உன் அறிவால் ஏற்பட்ட ஈர்ப்பு.......ஆனால் உன்னை மட்டுமே பிடித்திருக்கிறது என்று பொய் சொல்ல மாட்டேன்.

நந்தினியால் என்னை எதிர் கொள்ள முடியவில்லை. அழுதாள்...அழுதாள்...விளக்கினாள்..எடுத்துச் சொன்னாள்... ஆனால் எல்லாமே என்னைக் கட்டுப்படுத்த முயன்று தோற்றுப் போயின. அவள் காயப்பட்டிருப்பாள் என்பது தெரியும் ஆனால் இந்தக் காயம் பல வகையில் சிறந்தது. இல்லையெனில் என்னைக் காதலித்துக் கட்டுக்குள் வைக்க திருமணம் அது இது என்று போய்...ரொம்பவே காயப்பட்டிருப்பாள்.

தோள் சாய வந்தவளைத் தோளில் சாய்த்துக் கொண்டேன்...........கரம் பற்றிச் சொன்னேன். இனி அறிவு சார்ப் பயணமாய் இருக்கட்டும் நமது உறவு........நான் போகிறேன் என்று சொன்னேன்... அவள் அழுதாள்...! சொல்லி முடித்து விட்டு..........நான் உன்னை நேசிக்கிறேன் நந்தினி........! ஏதாவது தேவையென்றால் சந்கேகம் என்றால் நான் உன்னை அழைக்கிறேன் நீயும் என்னை தேவை என்றால் அழை........வருகிறேன்............

மீண்டும் சொல்கிறேன் நான் உன்னை நேசிக்கிறேன்....சொல்லி விட்டு அவளின் கார் விட்டு இறங்கி வந்து விட்டேன்......!

வீட்டுக்கு வந்தவுடன் முகம் கழுவி என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு எழுத ஆரம்பித்ததுதான்....

நான் உன்னிடத்தில் இல்லை...
நான் உனக்கானவனும் இல்லை...
காற்றை யார் கட்டுப்படுத்த...
கடலை யார் அள்ளிக் குடிக்க....
திக்கெட்டும் அலையும் தீயைக்
குடிசைக்குள் அடைக்க முடியுமா?
வேங்கைகள் எப்போதும் சமதானம் பேசுவதில்லை
போராளிகள் காதலென்ற போர்வையை
எப்பொதும் போர்த்துவதில்லை..!

மாலை முழுதாய்ச் சென்று விட்டது........! இரவின் ஆக்கிரமிப்பு தொடங்கி விட்டது......நான் ஆழமாக சுவாசித்தேன்.......மறுபடியும்....கீழிறங்கி எனது அறைக்கு வந்தேன்....

என்னோடு யாருமில்லாவிட்டால் என்ன?
இரவும், பகலும், காற்றும், மரமும்
இல்லாமலா போய் விடும்?......

நான் எழுதிக் கொண்டிருந்தேன்......


தேவா. S

Thursday, February 3, 2011

ச்ச்சும்மா....!

எப்டி எப்டியோ ஓடிட்டு இருக்குற வாழ்க்கைல நகைச்சுவைன்ற ஒரு உணர்வு இல்லேன்னா... ரொம்ப போர் ஆயிடும் இல்லையா? சீரியஸா திங்க் பண்றதுக்கும் நல்ல நகைச்சுவை உணர்வு அவசியமாத்தான் இருக்கு. அது எப்டினு கேக்குறீங்களா...

எப்பவுமே ஒரு விசயம் அதிகமாகும் போது அதற்கு நேர் எதிரான நினைவுகள் ரொமப் ஸ்ட்ராங் ஆகும். ரொம்ப சீரியசாவே இருக்கவங்கள பாத்தா காமெடியா இருக்கும் அது வேற கதை...? அப்போ அவுங்க எல்லாம் ரொம்ப நகைச்சுவை உணர்வு மேலானவர்களான்னு ஒரு கேள்வி வருதா... இந்த இடத்துல ஒரு ஸ்டாப் கொடுங்க....

சாரி அப்டி இருக்க முடியாதுங்க ஏன் தெரியுமா?

இளகுவா இருக்குற இடத்துலதான் என்ன வேணா வரும்.. ! இறுகிப்போன நிலத்துல..? ம்ம்ஹூம் ஒண்ணுமே வராது.. ! எப்டி லாஜிக் ஒத்து வருதா? சரி எதோ பேச வந்து எங்கயோ போறது என்னோட பிரச்சினைதான் நீங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க கொஞ்சம்....

நான் 9வது படிச்சப்போ ஒரு தமிழ் ஆசிரியர் இருந்தாங்க.....இருங்க....இருங்க பேரு நினைவுக்கு வரலை...ம்ம்ம்ம்ம் பட்டுக்கோட்டை பாய்ஸ் ஹை ஸ்கூல் தான்.. ம்ம்ம்.. யெஸ்.. நாகரத்தினம் சார்! எப்டி தெரியுமா கிளாஸ் நடத்துவாங்க.. ச்சும்மா சிரிச்சுட்டே இருப்போம்...ஆமாம். தமிழ் இலக்கணம் அவுங்ககிட்ட இருந்துதான் புரிதலோட கத்துகிட்டேன். இந்த நேர்கூற்று, அயற்கூற்று, மாத்திரை கணக்கீடு, அணி இலக்கணம், பா வகைகள்... ச்சும்மா சொல்லக்கூடாது.. அவர்தான் தமிழ் விதையை எனக்குள் விதைத்த பிதாமகர். எங்க இருக்காங்கனு தெரியலை.. ஸ்டில்.. நமஸ்காரங்கள் சார்!

நாகரத்தினம் சார் சொன்ன ஒரு ஜோக் இப்ப உங்ககிட்ட ஷேர் பண்றேன்.

அதாவது எல்லா பள்ளிக்கூடத்துக்கும் இன்ஸ்பெக்சன் வருவாங்கல்ல அது மாதிரி ஒரு ஏரியாவுல இன்ஸ்பெக்டர் செக்கிங் போறது கேள்வி பட்டு ஒரு பள்ளிக்கூடத்து 8 ஆம் வகுப்பு ஆசிரியருக்கு செம டென்சன். டென்சனுக்கு காரணம் நம்ம முனியன்.

முனியன் கிட்ட போய் நீங்க பச்சை மிளகாய் என்ன கலர்னு கேளுங்களேன்.. ஒரு க்ளு கொடுங்க சார்னு உங்களையே திரும்ப கேப்பான். அப்படிப்பட்ட முனியன் கிட்ட இன்ஸ்பெக்டர் வந்து கேள்வி கேட்டு சொல்லத் தெரியாம முழிச்சா அப்புறம் ஸ்கூல மானம் போறத விட கிளாஸ் வாத்தியார் பேரு போய்டுமே.. எவ்ளோ சொல்லிக் கொடுத்தாலும் முனியன் ரொம்ப டஃப் கொடுத்தான் சாருக்கு.. .

சரின்னுட்டு... என்ன கேள்வி காமனா எல்லா ஸ்கூல்லயும் கேக்குறார் இன்ஸ்பெக்டர்னு விசாரிச்சு பாத்திருக்கார் நம்ம சார். அப்டி விசாரிச்சதுல " பூமியின் வடிவம் என்ன? " அப்டீன்ற கேள்விய காமனா கேக்குறதா கண்டிபுடிச்ச வாத்தியர்.

முனியனை கூப்பிட்டு ப்ராக்டிஸ் கொடுக்க ஆரம்பிச்சார்... பூமியின் வடிவம் என்ன? முனியான்னு கேட்டு உருண்டைன்னு அன்னிக்கு புல்லா (நல்லா கவனிங்க அப்டி சொல்லிக்கொடுக்க ஆரம்பிக்கும் போது திங்கட் கிழமை....) சொல்லி கொடுத்து ஒராயிரம் தடவைக்கு பின்னாலும் முனியன் திரு திருன்னு முழிக்கிறத நிறுத்தவே இல்லை......

நம்ம சாரும் யோசிச்சு யோசிச்சு.. ஃபைனலா ஒரு முடிவு எடுத்தாரு.. அதாவது சாருக்கு மூக்கு பொடி போடுற பழக்கம் இருக்கு...சோ அவர் ஒரு உருண்டையான குடுவைல பொடிய போட்டு வச்சி இருப்பாரு.. அதுதான் அவர் பொடி டப்பா... ! முனியன் கிட்ட பூமியின் வடிவம் என்னனு கேட்டுட்டு.. டக்குனு பொடி டப்பாவை ஞாபகத்துக்காக காட்டி சொல்லிக் கொடுத்து இருக்காரு.. பையனும் நெருப்பு மாதிரி பிடிச்சுகிட்டான்.. சாருக்கும் சந்தோசம்....

செவ்வாய்கிழமை - கிளாஸ்குள்ள நுழைஞ்ச உடனே.. சார் கேட்டு இருக்காரு.. "ஏய் முனியா பூமியின் வடிவம் என்ன? (அட பொடி டப்பாவா கைல எடுத்து காட்டிகிட்டுதாங்க...) ........." முனியன் பளீச்னு சொல்லியிருக்கான்.. "உருண்டை சார்" ! நம்மா சாருக்கு செம சந்தோசம்...

புதன் கிழமை - " ஏய் முனியா பூமியின் வடிவம் என்ன" சார் பொடி டப்பாவை காண்பித்து கேக்க.. முனியனும் டக்குனு உருண்டை சார்.னு சொல்லிட்டான்.. !

வியாழக்கிழமை - ஏய் முனியா.....பூமியின் வடிவம்.....ம்ம்ம்ம்?????? உருண்டை சார்.. செம ஸ்பீடா பதில் முனியன் கிட்ட இருந்து (அட மூக்கு பொடி டப்பாவ பாத்துதாங்க.. ரொம்ப நம்பீடாதீங்க அவன் நம்ம முனியன்...). வியாழக்கிழமை ஈவ்னிங் ஸ்கூலுக்கு இன்பர்மேசன் வந்துடுச்சு.. அடுத்த நாள் .. இன்ஸ்பெக்டர் வர்றார்னு......அதாவது வெள்ளிக்கிழமை...

(டென்சனா இருக்கா? முனியன் என்ன பண்ணினானு தெரிஞ்சுக்க.. பேசாம தொடரும் போட்டுடவா? ஹா ஹா ஹா சரி.. சரி .. மேல படிங்க)

வெள்ளிக்கிழமை - நம்ம சார்க்கு செம டென்சன் இன்ஸ்பெக்டர் வருவாரு கேள்வி கேப்பாரு, நேரத்துக்கு ஸ்கூல் போகணும்னு அடிச்சு பிடிச்சு.. ஸ்கூல்க்கு வந்தாரு.. கொஞ்சம் லேட் வேற ஆச்சு...! நல்ல வேளை இவர் கிளாசுக்கு இன்னும் இன்ஸ்பெக்டர் வரலை....

ஆனா சார் போன பத்து நிமிசத்துல வந்துட்டாரு...இன்ஸ்பெக்டர்...! சரி அடுத்து நாம எல்லோரும் எதிர்பார்த்த படி...இன்ஸ்பெக்டர் கரெக்டா முனியனை எழுப்பி (அவனத்தான எழுப்பணும் அதுக்கு தானே முனியன் கேரக்டர ஸ்டார்டிங்கல் இருந்து ஃப்ளாஷ் பண்றோம்.. ஹி ஹி ஹி சேம் டமில் சினிமா ஸ்டைல்) கேள்வி கேட்டாரு...

பூமியின் வடிவம் என்ன தம்பி?னு கேட்டார் இன்ஸ்பெக்டர்.... முனியன் சார பாக்குறான்.. சார் டக்குனு மூக்கு பொடி டப்பா எடுத்து காட்ட.......முனியன் பதில் சொல்ல ஆரம்பிச்சான்...

"திங்கட்கிழமை, செவ்வாய்கிழமை, புதன் கிழமை, வியாழக்கிழமை பூமி உருண்டை சார்.....அப்புறம் வெள்ளிக்கிழமை, வெள்ளிக்கிழமை சப்பட்டையா போய்டும் சார்னு"

நம்ம சார் என்ன பண்ணி இருக்காரு இன்ஸ்பெக்டர் வர்ற அவசரத்துல.. நார்மல் பொடி டப்பாவை வீட்ல மறந்து வச்சிட்டு வர்ற வழில அவசரமா பொடிய வாங்கி வாழைப்பட்டைல கட்டிட்டு வந்துட்டார். அதை முனியன் கிட்ட பழக்க தோசத்துல காட்டிட்டார்....! நம்ம புத்திசாலி முனியனும் ப்ராப்ரரா ஆன்சர் பண்ணிட்டான்.....ஹா.. ஹா ஹா... ஆனா அது கூட இல்லை மேட்டர்..இன்ஸ்பெக்ட்டர் ஆச்சர்யமா முனியன பாத்து சிரிச்சுட்டே கேட்டார்...

" ஏன் தம்பி.... சனி, ஞாயிறு அன்னிக்கு உன் பூமி என்ன ஆவும் தம்பின்னு" கேட்டவுடனே முனியனுக்கு வந்துச்சு பாருங்க கோவம்......

"சார் உங்களுகு ரொம்பத் தெரியுமோ....சனி ஞாயிறு ஏது சார் பூமி? அன்னிக்கு லீவு சார்.......நீங்க எல்லாம் ஒரு இன்ஸ்பெக்டருன்னு" ரொம்பவே டென்சனாயிட்டான் முனியன்.....

அப்புறம்.. முனியனுக்கும், அந்த கிளாஸ் சாருக்கும் என்ன நடந்து இருக்கும்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க.. ஹா ஹா...ஹா!

சில நேரத்துல நாம சீரியசா இருப்போம்......சூழ்நிலை காமெடியா போய்டும்...! அப்புறமா யோசிச்சு யோசிச்சு சிரிப்போம். நான் எங்க அப்பத்தாவ பாக்க எங்க கிராமத்துக்கு போயிருந்தேன்.. அப்போ நான் ஸ்டார் ஹோட்டல்ல ப்ரண்ட் ஆபிஸ் மேனேஜரா சென்னைல வொர்க் பண்ணிட்டு இருந்தேன்...

அப்பத்தாவும் நானும் வீட்டு வாசல்ல உக்காந்து பேசிட்டு இருந்தோம். அப்பா பில்லப்பன் அப்டின்னு ஒரு அண்ணன் எங்கள கிராஸ் பண்ணி போனாங்க.. போனவரு சும்மா போலம்லயா...? கையில இருந்த மாட்டை மரத்துல கட்டிட்டு.. எங்க கிட்ட வந்து "ஆரு இது சுப்பையா மயனா? எப்ப வந்கீகன்னு" கேக்க.. நான் காலைல வந்தேன் அண்ணேன்னு சொல்லி நலம் விசாரிச்சுகிட்டோம்...

அப்ப பில்லப்பன் அண்ணன் எங்க அப்பத்தா கிட்ட கேட்டாரு...தம்பி சோலி (வேலைதான்) ஏதும் பாக்குதா இல்லை சும்மா இருக்கானு கேட்க.. எங்க அப்பத்தா பெருமையா சொன்னிச்சு.. அட அவன் களப்பு கடையில இருக்கான்டா (ஹோட்டலை கிளப் கடைன்னு சொல்லுவாங்க அதை வழக்கில் களப்பு கடைன்னு திரிஞ்சும் சொல்லுவாங்க..நம்ம ஊரு புரோட்டா போடுற டீக்கடைதான்ப்பு...அவ்வ்வ்வ்வ்வ்)சொன்னிச்சி...! சரி அப்பத்தா ஏதோ சொல்லுது சொல்லிட்டு போகட்டும்னு நானும் விட்டுட்டேன்....

பில்லப்பன் அண்ணன் திருப்பிகிட்டு கேட்டாரு..."ஏத்தா களப்பு கடையில என்னா வேலை.பாக்குது? பில்லு போடுற வேலையான்னு...." நான் கொஞ்சம் டென்சனாகி ... "அண்ணே அது ஹோட்டல்னே.. ஆளுப்பேருக தங்குவாக, நான் பில்லு எல்லாம் போட மாட்டேன்ன்னு' கொஞ்சம் சூடவே சொல்லிட்டேன்...

"ரூம்பு எல்லாம் இருக்குமா? சரி சரி வாடகைக்கு விடுவாய்களே அதானேன்னு.. சொன்னவரு பேசாமா போயிருக்கலாம்...ஆன போகலை எங்க அப்பத்தாகிட்ட போயி ரொம்ப சோகமா சொன்னாரு....

" ஏத்தா.... இம்புட்டு காசு போட்டு சுப்பையா படிக்க வச்சானே மயனை....போயிம் போயிம் களப்பு கடையிலயா வேலவாக்கணும்....அதுவும் மெட்ராசுல போயி.....இங்கனாதான் சிவங்ஙேலதானா (சிவகங்கை) எங்குட்டாச்சும் நல்லா கடை நாடி(பக்கம்) சேந்துருக்கலாம்ல....என்னமோத்தா.. இந்தக்காலத்துல புள்ளக்குட்டியள காசக் கொட்டி படிக்க வச்சா படிக்கவா செய்யுதுக்கன்னு ' சொல்லிட்டு என் மேல கோவம சொல்லிக்காம கொள்ளாம மாட்ட பத்திட்டு போய்ட்டாரு...

எங்கப்பத்தாக்கு நான் சொல்லி தேத்தி புரிய வைக்க பட்டபாடு....என் செம்மம் (ஜென்மம்) முத்தியடஞ்சு போச்சுடா சாமி....!

என் பிரச்சினையே இதான் பேசுனா பேசிட்டே இருப்பேன்....ஹா ஹா ஹா.. நேரமாச்சு...கிளம்புறேன்.....!


அப்போ வர்ர்ர்ர்ட்டா....!


தேவா. S