Pages

Sunday, February 20, 2011

ஜீவனே...!மனதைக் கிழிக்கிறது நீ இல்லாத வெறுமை....! காதலையும் வாழ்க்கையையும் சரிபாதியாக்கிக் கொடுத்தவள் நீ......! திருமணம் முடிந்த முதல் நாள் இரவினை யார்தான் மறக்க முடியும்? நான் மட்டும் விதிவிலக்கா என்ன? கனவுகளோடு வாழ்க்கையை ஆரம்பித்த சராசரி கர்வங்கள் கொண்ட ஆண்மகன். கொஞ்சம் கவிதைப் பார்வையும், கற்பனையும் கூடுதல் கொண்டவனாதலால் என் எதிர்பார்ப்புகள் அதிகமானவைதான்.....

முதல் நாள் இரவில் எல்லோருடைய கற்பனையும் வெவ்வேறாக இருக்குமோ என்னவோ தெரியாது. உன்னைச் சந்தித்த அந்த இரவு எனக்கு மிகவும் அடர்த்தியானதுதான். சம்பிரதாயங்களை எல்லாம் தூர எடுத்து எறிந்து விட்டு.. உன்னிடம் நான் பேச ஆரம்பித்த அந்த நொடி என்னை பார்வையால் விழுங்கத்தொடங்கியிருந்தாய்... !

கால ஓட்டத்தில் எத்தனையோ பெண்களை எதிர் கொண்டவன் நான், அவர்களின் கண்களோடு கதைகள் பேசியவன் நான்....ஆனால் முதன் முதலாய்க் காதலோடு சேர்த்து பாசத்தையும் குழைத்துப் பார்வையால் என்னை வாரி அணைத்தவள் நீதானே....?

சராசரியாய்ப் போகவேண்டாம் அந்த இரவு என்ற என் எண்ணமும், திருமணத் தினத்தின் அலுப்பும் சில பேச்சுக்களோடு உன்னைத் தூங்க சொன்ன நான் உனக்கு முன்னதாகவே உறங்கிப் போனதற்குக் காரணம் உன் மீதிருந்த அதீத அன்பு என்று நீ அடிக்கடி சொல்வது இப்போது நினைவுக்கு வருகிறது.

அந்த முதல் இரவின் ஆழ்ந்த உறக்கத்தில் நான் புரண்டு படுத்த தருணத்தில் லேசாகக் கண் விழித்துச் சரேலென்று ஒரு பெண்ணோடு உறங்கும் முதல் இரவு என்றுணர்ந்து என் திருமணத்தை நினைவுக்குள் கொண்டு வந்து புரிதலாய்ப் பார்த்தபோதுதான் நீ உறங்கமால் என்னையே பார்த்துக் கொண்டிருந்தது பிடிபட்டது.

ஆதரவாய் உன் கேசம் கலைத்து....ஏன் தூங்கவில்லை என்று நான் கேட்ட கேள்விக்கு...சப்தமின்றி மெளனமாய் ஒரு புன்னகையைப் பரிசளித்தாயே...அதை இன்னும் நான் மறையவிடாமல் என் நெஞ்சின் ஓரத்தில் தேக்கிவைத்திருப்பது உனக்குத் தெரியாது?

காலம் எவ்வளவு மகிழ்ச்சிகளை அள்ளிக் கொடுக்கவேண்டுமோ அவ்வளவு மகிழ்ச்சிகளை அள்ளிக்கொடுக்க உன்னை என்னிடம் அனுப்பியதோ என்று இருமாந்திருந்தேன். என் கவிதைகளையும் கட்டுரைகளையும் உன்னிடம் வாசித்துக் காட்டும் தருணங்களில் எல்லாம்... "என்ன வேணா நீங்க எழுதுங்க மாமா! எப்டி வேணா எழுதுங்க மாமா, எனக்கு அது எல்லாம் முக்கியமில்லை நீங்க என் கூடவே இருங்க மாமா" நீ சொல்லி முடிக்கும் போது அதில் இருக்கும் ஆழமான உண்மை எனக்கு பிடிபட்டுப் போகும்....

உன் கனவுகள்
எங்கே வேண்டுமானலும் பரவட்டும்....
எனக்கும் உன் கனவுகளின்
ஓரத்தில் ஒண்ட ஒரு இடம் கொடு!!

சொல்லாமல் ஒரு கவிதையை நீ வார்த்தைகளின்றி ஒற்றியெடுப்பாய். நான் நிராயுதபாணியாய் என் குப்பைக்கனவுகளை என்ன செய்வது என்று தெரியாமல் சுமந்து கொண்டிருப்பேன். ஒரு நாள் என் வருகை தாமதமானாலும் உன் மாலையில் நீ பால்கனியிலேயே எனக்காகக் காத்திருப்பாய்....ஓராயிரம் முறை என் அலுவல்களுக்கு நடுவே என்னைக் கைப்பேசியில் அழைத்தாலும் ஓரிரு முறையே நான் பதிலளித்த தருணங்களும் உண்டு...

நேரம் கழித்துச் சாவகாசமாய் நான் வரும் என் இரவுகளில் என் உலகமும், என் அலுவலும் பிரமாண்டமானதாய் நான் நினைத்துக் கொள்வேன்.....என் தாமதமறியாமல் நீ பித்துப் பிடித்துப் போயிருப்பது தெரியாமல்..." அதான் வருவேன்ல... " என்று அலட்சியமாய் நான் பதில் சொன்ன நாட்கள் எல்லாம் என்னை இன்று குத்திக் கிழிப்பதும்....ஓராயிரம் முறை நீ அழைத்தும் நான் பேசாமல் முட்டாள் பெட்டியில் ஓடும் ஏதோ ஒரு வண்ண மூளைச்சலவையிலும், பொய்யான நாட்டு நடப்பிலும், அவசியமில்லாக் கணினியில் தூரத்தில் இருக்கும் யாரோ ஒருவரிடமும் என்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பேன்....நீதான் என்னருகே இருக்கிறாயே என்ற அலட்சியம் என்னைத் தின்று செரித்தே போட்டிருக்கும்...அப்போதெல்லாம்....!

"மாமா என்கிட்ட பேசுங்க மாமா....எனக்கு வேற ஒண்ணும் வேணாம் மாமா! எப்பவுமே கம்ப்யூட்டரிலும் டிவியிலுமே இருக்கீங்க.....நால் முழுசும் நான் நீங்க வருவீங்க பேசுவீங்கன்னு காத்துகிட்டுதானே நாலு சுவத்துக்குள்ள இருக்கேன் மாமா! யார் யாருகிட்ட எல்லாம் பேசுறீங்க போன்லயும் சாட்லயும்...உங்களுக்காகவே காத்துகிட்டு இருக்க என் கிட்ட ஏன் மாம பேச மாட்டேங்குறீங்க......என் கிட்ட பேசுங்க மாமா..." என்று ஒரு நாள் கண்கலங்க என்னிடம் கெஞ்சிய அந்தத் தருணம் என்னைக் கொன்று போடுகிறது கண்ணம்மா....!

ஆசையாய் ஏதேதோ சமைத்து வைப்பாய் நானும் ஏதோ ஒரு எண்ணத்தில் தின்று கொண்டே தொலைக்காட்சியில் சானலை முன்னும் பின்னும் நகர்த்துவேன்.

எதேச்சையாக ஒரு நாள் உன்னைக் கவனித்தபோது எவ்வளவு வாஞ்சையாய் என்னை பார்த்துக் கொண்டிருப்பாய்.. நான் உண்ண உன் வயிறு நிறைகிறது என்பாயே....நீ யாரடி? என் மீது ஏனடி உனக்கு இவ்வளவு பிரியம் என்று யோசித்த நொடியிலேயே என் கவனம் வேறெங்கோ போய் விடுமே....

இரண்டு வாரங்களாய் நீ புது கம்மல் போட்டிருந்ததை நான் கவனிக்கவில்லை என்பதற்கு நான் சொன்ன என் வேலைப் பளு காரணமாயிருந்தது சப்பைக்கட்டுதான் என்று என் மனசாட்சிக்குத் தெரியும் ஆனால் இரண்டு வாரம் கழித்து என்ன குட்டிம்மா புதுக்கம்மலா? என்று நான் கேட்டபோது உன் கண்ணில் நீர் கோர்த்ததையும் அதற்குப் பிறகு நீ துள்ளலாய் நடந்து கொண்டதும் என் ஒற்றை வார்தை விசாரிப்பு கொடுத்த உற்சாகம் தானே?

காலம் எல்லாம் கொடுத்தது.... இன்று எப்படி எல்லாவற்றையும் உன் ஒற்றை உயிரை பறித்ததின் மூலம் எடுத்துக் கொண்டு என்னைத் தனிமைப்படுத்திவிட்டது....

இதோ உன்னை தீக்குக் கொடுத்து விட்டு.. வீட்டுக்குள் நுழைந்திருக்கிறேன்... என் கண்ணம்மா......! ஏதோ வியாதியென்று போன பின்பு காலமாய் முற்றிப் போயிருந்த கொடும்வியாதி ஒன்று வெளித்தெரியாமல் வளர்ந்துவிட்டு உன்னை மொத்தமாய் தின்னக் காத்திருப்பதாகக் கூறிக் கைவிரித்த மருத்துவத்திடம் நான் மன்றாடி மன்றாடிக் கடைசியில் காலம் வென்று என்னை உன்னிடம் இருந்து பிரித்தே போட்டுவிட்டதே.....நான் தோற்றே போய் விட்டேனே?

நீ இருக்கமாட்டாய் என்று தெரியாமல் பிறக்காத நம் குழந்தைக்கு நீ பெயரிட்டும், எதிர்காலத் திட்டங்களைச் சொல்லிக் கொண்டே நீ துவண்டு படுத்தபோதும் உன் காலம் முடியப் போகிறது என்று அறிந்தே உன்னோடு நானிருந்த நாட்கள் நரகம்தானே?

உன்னால் எழுந்து நடமாட முடியாத நிலைமையிலும் எனக்காகச் சமைத்துப் போடமுடியவில்லை என்று நீ கண்ணீர் விட்ட தினங்களில் எல்லாம்...உனக்கு முன் என்னை கொண்டு போகக் கூடாதா இறைவன் என்று தோன்றி மறையும் கணங்களில் என் கலக்கம் கண்டு.. “என்னாச்சு மாமா? எனக்கு எதுவும் ஆகாது மாமா” என்று பொய்யாய்ச் சிரிப்பாயே

இதோ உறவுகள் எல்லாம் தத்தம் கூட்டுக்குப் பறந்து போக தனிமையில் நுழைந்திருக்கிறேன்...

உன் நினைவுகளால்
நிரம்பி வழிகிறது
நீ காதலாய்ச் சுற்றி...
வந்த வீடு....

வாசற்படி தாண்டி....
உள்ளே நுழையும் போது
முகத்தில் அடிக்கிறது
உன் வாசம்....

அடுக்களையின் இடுக்குகளில்
நீ படபடத்துச் சமைத்துப் போடும்
பாத்திரங்களும்
நீ இல்லாமல் பட்டுப்போயிருக்கும்
அடுப்பும்... மெளனமாய்
என்னை கொன்றே போடுகின்றன....!

வழக்கமாய் நாம் அமரும் சோபா...
என்னை வெறித்துப் பார்க்கிறது
எப்போதும் பேசாமல் என்னை....
பார்த்தபடி அமர்ந்திருப்பாய்...
நான் கணிணியில் மூழ்கியிருப்பேன்....
உன் ஏக்கங்கள் எல்லாம்
இதோ நிரம்பி வழிகின்றன
வீடு முழுவதும்...
எனக்கு எதுவும் வேண்டாம்
நீ மீண்டு வா; மீண்டும் வா....!

வீடு முழுதும் சுற்றிக் கொண்டிருக்கின்றன உன் நினைவுகள். நீ இருந்த போது முக்கியமானதாய் இருந்த எல்லாம் இன்று முக்கியமற்றதாய்ப் போய்விட்டது....! சுவாசம் தொலைத்தவனுக்கு உடலின் பயன்பாடு என்னவோ அப்படித்தான் இந்தப் பொருள்களும்...!

உயிராய் வீட்டிலே இருக்கும் ஜீவன்களோடு பேசவும், சிரிக்கவும், அன்றைய தினத்தில் நடந்த செய்திகளை அளாவளாவி மகிழவும் நாதியற்றுப் போய் இயந்திரத்தனமாய் உழைத்துவிட்டு இயந்திரங்களொடே உறாவாடும் ஒரு மடைமை வாழ்க்கை வாழ்ந்து விட்டேனே? இன்று நீ இல்லை பார்வதி. இந்த இயந்திரங்கள் எல்லாம் உன்னை எனக்குத் திருப்பி கொடுத்து விடுமா? பெரும்பாலான வீடுகளில் பெண்கள் தொலைக்காட்சிகளிடமும் ஆண்கள் கணிணியிடமும், நவீன கைபேசிகளிடம் தம்மை ஒப்புக் கொடுத்து விட்டு ஜீவனுள்ள மனிதர்களை சட்டை செய்வதே இல்லையே...

நான் இனி சூர்ய நமஸ்காரம் செய்து என்ன புண்ணியம் என் கண்கள போய்விட்டதே.... நீ இல்லையே இன்று பார்வதி....!

இதோ பித்துப் பிடித்தவனாய் நம் படுக்கை அறையில் நுழைகிறேன்...அங்கே...... கடைசியாய் நீ கழற்றிப் போட்ட நைட்டியை எடுத்து என் முகம் புதைத்து அழுகிறேன்......உன்னை இனி எப்போது பார்ப்பேன் பார்வதி..................? காதுகளுக்குள் என் அழுகையையும் தாண்டி ஒலிக்கிறது.....

"என்கிட்ட பேசுங்க மாமா...... எனக்கு நீங்கதான் மாமா உலகம்..... நீங்க சிரிச்சு பேசுனா....எனக்கு அம்புட்டு சந்தோசம் மாமா"

நான் பேசுறேன் பார்வதி....நான் பேசுறேன்..நீ எங்க இருக்க பாரு............

சப்தமாய் அழுது கொண்டிருந்தேன்......

தேவா. S

9 comments:

Kousalya said...

ரசித்து படிச்சிட்டே வந்தேன், ஆனா முடிவில் இப்படி ஒரு சோகம் இருக்கும் என்று நினைக்கவில்லை...கதை கண்கலங்க வைத்துவிட்டது.

//ஜீவனுள்ள மனிதர்களை சட்டை செய்வதே இல்லையே..//

மனித மனம் தன்னை மட்டுமே சுற்றி வரும் அன்பு உள்ளத்தை பெரும்பாலும் கண்டுகொள்வதே இல்லை, இருக்கும் போது தெரியாத அன்பின் அருமை, அதை இழந்த பின் உணருகிறது...ஆனால் காலம் கடந்த ஞானம் !!

கதை படித்து முடிந்த பின்னும் அங்கேயே நிற்கிறது என் மனது. ஒரு அருமையான படைப்பிற்கு என் நன்றிகள்.

சௌந்தர் said...

இது கற்பனை கதை தான்.....!!!!!!


எங்க தேவா அண்ணன் அவர்களே இந்த பதிவை உங்களுக்கு... 100 தடவைக்குமேல் படிக்க வேண்டும் என அண்ணி கூறினார்.....அண்ணே தயவு செய்து நீங்கள் இதை படித்து பாருங்கள்.......

சே.குமார் said...

கதை கண்கலங்க வைத்துவிட்டது.

இம்சைஅரசன் பாபு.. said...

எம்மா ..எப்பா ...அடிக்காத ..ஏன் இப்படி அடிக்கிற ..உன்கிட்ட இந்த பதிவ கான்பிச்சது தப்பா போச்சு ..(பதிவு எழுதுன இப்படி எழுதுனுமாம் என் மனைவி என்னை அடிக்கிறாள் )..

தேவ அண்ணா காலை லேயே உங்க பதிவ படிச்சதுக்கு எனக்கு கிடைச்ச பரிசு ..அடி

Ramani said...

மிக அழுத்தமான பதிவு.வெறும் கதையாகக் கூட
இதன் தாக்கத்தைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை
தரமான பதிவு தொடர வாழ்த்துக்கள்

Sankar said...

Boss... Hats off to you.!!! Turly very touchy narration. :) :) Great.. Hope you read this comment when its wet.. :)

மதுரை சரவணன் said...

மனதைத் தொட்டது... வாழ்த்துக்கள்

வினோ said...

நிறைய விசயங்கள் பேச வேண்டும்... நேரம் வரும் அண்ணா.. வருகிறேன்...

Radha said...

கண்ணம்மா = காதலி = கண்ணம்மா.
எதிர்பார்த்த முடிவு தான்...இருந்தும் நெஞ்சு கனக்கிறது.