Pages

Tuesday, March 30, 2010

பதிவர்களுக்கு ஒரு யோசனை....


பதிவர் சங்கம் பற்றி தீர்மானிக்கும் இந்த தருணத்தில்... நல்ல பதிவினை கொடுக்கும் பதிவர்களுக்கு பொருளாதர ரீதியாக திரட்டை நிர்வாகிகள் சன்மானங்களை கொடுப்பது பதிவர்களை ஊக்குவிப்பதோடு மட்டுமில்லாமல் புது புது படைப்பாளிகளையும் உருவாக்கும்.


இது பற்றி எல்லா பதிவர்களும் தங்களது கருத்துக்களை....தெரிவிக்கலாம்.


தேவா. S

Monday, March 29, 2010

குரு காணிக்கை!
எது நீ செய்யவில்லை...?
காதலாய்...கனத்தாய்....
காமத்தை வரையறுத்தாய்....!
பென்ணைடிமை பூட்டுக்களை தகர்த்தாய்!
வாழ்வியல் நெறிகளை...கதைகளாய்...
கரைத்து தந்தாய்....!

இரும்புக்குதிரைகளை...பூட்டி...
எல்லோர் மனதிலும் ஓடவிட்டாய்!
மெர்க்குரி பூக்களாய்...
மனிதருக்கு வழி காட்டினாய்....

உள் பார்க்கும் வித்தையினை...
வார்த்தைகளாக்கி...வாசகனின் நெஞ்சுக்குள்...
இறக்கி வைத்தாய்!

ஞானியர்கள் வாழ்க்கைகளை....
நாவலாக்கி கையில் தந்தாய்....
சாமனியனுக்கும்... சாமதி நிலையை...
சாதாரணமாய்... கற்றுக் கொடுத்தாய்!

உன் மூச்சை சீராக்க...சீராக்கா...
உன் வாசகனின்
வாழ்க்கை... சீரானது....!

உன்னுள் நீ அமிழ ....அமிழ....
உன் எழுத்துக்கள்...
படிப்பவருக்கு....தீட்சை கொடுத்தது!

நரை சடை முடி....
வெண்தாடி நீ கொண்டாய்....
எங்கள் வாழ்கை வெண்மையானது!

இன்று உடையாரை உயிராக்கி...
உலவவிட்டு விட்டு....
மரணத்திற்கு பின் என்ன என்று....
வாழ்வின் கருவை....உருவாக்கிக் கொண்டிருக்கிறாய்!

மொத்தமாய்...இன்று உனை...
மெளனமாய்...கரைத்துக் கொண்டிருக்கிறாய்!
இறுதியாய்... எங்கள் நெஞ்சங்களில்...
நீ நிறைந்து விட்டு...உன்னை ஒளிக்கப்பார்க்கிறாய்!
இதற்குத் தானே....ஆசைப்பட்டாய்...பாலகுமாரா......?

இந்த பதிவினை எத்தனை பேர் இதைப் படிக்கிறார்கள் என்பது கண்டிப்பாய் முக்கியம் இல்லை.....ஏனென்றால் இது பதிவு அல்ல குரு காணிக்கை!

காலமெல்லாம் உழைத்த உழவன்...கதிரவனுக்கும் எருதுக்கும் நன்றி சொல்லி விழா செய்கிறானே...அது ஒரு நன்றி நவிழல், கருணை....அன்பை எப்படி வெளிக்காட்டுவது என்று தெரியாமல் ஏதேதோ செய்து....தன்னை திருப்திக்கொள்ளும் செயல். கதிரவனுக்கோ அல்லது எருதுகளுக்கோ மனிதனது நன்றியும் அன்பும் தெரியாது ஆனாலும் அவற்றின்...செயலோ இவனது நன்றிக்கும் கருணைக்கும் ஏற்ப கூடுவதும் குறைவதும் இல்லை, ஏனென்றால்...இயற்கையின் செயல் மனிதனை பொறுத்து அல்ல....அது பிரபஞ்ச நியதியின்...விருப்பு வெறுப்பில்லா வெளிப்பாடு!

எழுத்துச் சித்தரும் அப்படித்தான்....வாழ்வியல் சாரங்களை, நெறிமுறைகளை...காதலை, காமத்தை, மற்றும் கடவுளை....வார்த்தைகளாக்கி...எழுத்துகளுக்குள் அடைத்து...கொடுப்பவர். மிகைப்பட்ட பேருக்கு அவர் பிடிக்காமல் இருக்கலாம் இல்லை என்னுடைய வார்த்தைகள் மிகைப்பட்டும் தெரியலாம். ஆனால் என்னைப் போன்ற....சில பேர்களுக்கு அவரின் எழுத்துக்கள் வாழ்க்கையின் போக்கையும் அதன் நேர்த்தியையும், அழகையும்.... நிலையாமையையும் நிறையவே கற்றுக்கொடுத்துள்ளது.

மெல்ல மெல்ல கை பிடித்து தனது வாசகர் வட்டத்தை ஆத்ம விசாரணைக்கும்....உள் நோக்கும் தன்மைக்கும் அழைத்து சென்றுள்ளார். தன்னை சுற்றி எத்தனை இரைச்சல் இருந்தாலும் எல்லாவற்றையும் உள் வாங்கி வேடிக்கை பார்க்கு வித்தையை அவரின் வாசகர்களின் நெஞ்சுக்குள் விதைத்துள்ளார். மனைவியை, குழந்தையை, குடும்பத்தை, நண்பனை .....வாழ்க்கையை எப்படி காதலிப்பது என்று......உணரவைத்துள்ளார்.

வெறுமனே கதையை எதிர்பார்த்து பாலகுமாரனை படிப்பவர்களுக்கும், எப்போதும் ஸ்தூலாமாய் தன்னை நினைப்பவர்களுக்கும்...உணர்வு பூர்வமாய்...விளங்காமல் தத்துவ விவாதங்களை நம்புபவர்களுக்கும் பாலகுமாரன்....பிடித்தமானவர் அல்ல...! எந்த வித கட்டுக்குள்ளும் சிக்காமல் ஆராய்ச்சி நோக்கமும் இல்லாமல் இருந்தால்....பாலகுமாரனின் எழுத்துக்கள் உங்களுக்குள் நிச்சயம் தீ மூட்டும் அவர் மீது காதல் கொள்ளவைக்கும்.


காமத்தையும் , மரணத்தையும் பற்றி பேசும் எல்லா மனிதர்களையும்...இந்த சமுதாயமும், இந்த சமுதாயத்தின் தவிர்க்க முடியாத உச்ச அந்தஸ்தில் இருக்கும் மனிதர்களும் காலங்கள் தோறும் மறைத்தும் அதைப்பற்றி பேசுபவரோ எழுதுவரோ அறுவெறுப்பானவர் என்றும் இழித்தும் பழித்தும் பேசியிருக்கின்றன. வியாபார உத்தியை எல்லாம் புறந்தள்ளி விட்டு நான் இப்படித்தான் எழுதுவேன்...இது என் விதம்....என்று இருப்பவர் தான் பாலாகுமாரன்.....

பால குமாரன்....புரிந்து கொள்ளப்பட வேண்டியவர் அல்ல......உணரப்படவேண்டியவர்.......!

(புறத்தால் இந்த பதிவு இத்தோடு முடிந்தாலும்...மனதுக்குள் தொடர்ந்து கொண்டுதானிருக்கும்....என் இறுதி வரை.....)


தேவா. S

Saturday, March 27, 2010

ஹலோ....யார் பேசறது......?
ரொம்ப நாளாகவே.... எனக்கு இந்த தொலை பேசிகளை குறிப்பாக கைபேசிகளை அதிலும் குறிப்பாக கார்பரேட் உலகம் என்று சொல்லக்கூடிய மிகப்பெரிய நகர்ப்புறங்களில் வாழும் மக்கள் அதை பயன் படுத்தும் விதம் பற்றி..ஒரு பதிவு எழுத வேண்டும் என்ற ஆவல்...அதன் விளைவுதான்.. இது.....


கை பேசியில் ஒருவரை நாம் அழைக்கும் போது...இரண்டு அல்லது மூன்று ரிங்க் போனவுடன் உடனே நாம் நமது இணைப்பை துண்டிப்பது நல்லது ஏனென்றால் நாம் கூப்பிடுவது அவரது கைபேசியில் கண்டிப்பாய் அவருக்கு தெரியாமல் போக வாய்ப்பில்லை, எனவே அவர் நம்மை கண்டிப்பாய் திருப்பி அழைப்பார் அல்லவா? (உங்களிடம் இருந்து ஒளிந்து திரிபவர்களுக்கு இது செல்லாது). இதை விட்டு விட்டு எதிர் முனையில் இருப்பவர் என்ன அவசர வேலையில் இருந்தாலும் சரி எனது அழைப்பை எடுத்தே ஆக வேண்டும் என்று நினைப்பதும் அவர் எடுக்காததிற்கு நீங்கள் கோபம் கொள்வதும் சரிதானா?

அதுவும் ஒருவர் அலுவலகத்தில் இருந்தால்...அழைப்பை எடுக்க முடியாத சூழ் நிலைகள் எவ்வளவோ இருக்கின்றன.....அவர் திரும்ப அழைக்கும் வரை காத்திருங்கள். சரி இது தொலைபேசியில் அழைப்பவர்களுக்கு.....தொலை பேசியில் அழைக்கப்பட்டவர் என்ன செய்ய வேண்டும்....தமது கைபேசியில் வந்து எடுக்க தவறிப்போன அழைப்புகளுக்கு திரும்ப அழைத்து விபரம் கேட்டு அறியும் போது ....எடுக்க முடியாததற்கான காரணத்தையும் நண்பருக்கு விளக்கிச் சொல்லலாம்.

உங்களின் அவசரமான பணிக்கிடையில் யாராவது தொடர்ந்து உங்களை அடைய முயற்சி செய்கிறார் என்றால்.... வெளியில் உள்ள உங்கள் நண்பருக்கு ஏதோ அவசரம் என்று புரிந்து கொண்டு அவரை உடனே அவரை தொடர்பு கொள்ளுங்கள் உங்களின் உதவி உங்கள் நண்பருக்கோ இல்லை உறவினர்க்கோ அவசரமாக தேவை என்று உணருங்கள்.


ஆக மொத்ததில் இது பொதுவாக எல்லோரும் விளங்க வேண்டிய விசயம் ஏதாவது ஒரு அவசரமின்றி என் நண்பரை நான் தொடர்ந்து அழைக்காதீர்கள் மேலும் சாதாரணமாக அரட்டை அடிக்க செய்த அழைப்பு என்றால் ஒன்று அல்லது இரண்டு ரிங்கோடு நிறுத்திக்கொள்ளுங்களேன். அலுவலகத்தில் இருக்கும் நேரம் மட்டுமல்ல....காலை நேரம் மற்றும் குடும்பத்தினரோடு இருக்கும் நேரம் என்றால் அத்யாவசியம் மற்றும் அவசர செய்திகள் பறிமாறிக்கொள்ளும் விதமாக அழைக்கலாம்.


காலை 6:30 மணிக்கு பணிக்கு செல்லும் நேரத்தில்.... நண்பரை அவசர கதியில் தொலை பேசியில் அழைத்து " சும்மாதான் கால் பண்ணினேன்.....அப்புறம் வேற என்ன செய்தி" என்று கேட்பது 10 கொலைகள் செய்வதற்கு சமம். மேலும் நீங்க போன் செய்து விட்டு....... மறுமுனையில் உள்ள நண்பரை.... " அப்புறம் ... நீங்கதான் சொல்லணும் என்று சொல்வது" உங்கள் நண்பரின் தலையில் வெந்நீரை கொட்டுவதற்கு சமம்.

உங்கள் நண்பரும் அந்த விதம் தான் என்றால்..... நீங்கள் இருவரும் சேர்ந்து...அறிவியலின் அற்புதமான கண்டுபிடிப்பை கேவலமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்று உணருங்கள். சில நண்பர்களுக்கு தொலைபேசியில் இன்று கூப்பிட்டால்....இரண்டு நாட்கள் கழித்து திரும்ப கூப்பிட்டு என்னடா....கால் பண்ணியிருந்தாயா... என்று கேட்பார்கள்...( நானும் இந்த ரகம்தான்.. .ரொம்ப கேவலமாக என்னையே திட்டிக் கொண்டு இப்போது தான் மாற ஆரம்பித்துள்ளேன்) இது ஒரு மிக அவசர கதியில் மாற்ற வேண்டிய ஒரு பழக்கம்.... நல்ல நேரத்தில் உங்களின் நண்பர் நலமாயிருந்தால் நல்லது...ஏதாவது ஒரு அவசர செய்தி அல்லது உங்களிடம் பேசினால் ஆறுதலாய் இருக்கும் என்று அவர் கூப்பிட்டு நீங்கள் திரும்ப அழைக்காமல் போன நேரத்தில்.. நண்பருக்கு ஏதாவது நிகழ்ந்திருந்தால்.....(கடவுளே...கற்பனை கூட பண்ணி பார்க்க முடியல...)


தொலை பேசி....அறிவியலின் தலை சிறந்த தொழில் நுட்பம்.....அதை சரியாக பயன்படுத்தி....தொழிலை மட்டுமல்ல... உறவையும் மேம்படுத்தலாம்.....உன்னத மனிதர்களாய்....வாழலாம்......!

என் கை பேசி இடை விடாமல் விட்டு விட்டு அடிக்கிறது......டிரிங்க்.....டிரிங்க்......ட்ரிங்க்.....ட்ரிங்க்.....ட்ரி,ங்க்....ஐயோ எந்த நண்பரோ என்ன அவசரமோ....... உங்கள் அனைவரையும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.... bye for now!


தேவா. S

Thursday, March 25, 2010

குருக்கத்தி ஐயா..... சித்தர் பூமி பற்றிய தொடர்.....!சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மிகச்சிறிய கிராமம். இறைவனின் அருகாமையை நேரடியாய் நீங்கள் நிச்சயம் இந்த ஊரில் உணர்வீர்கள்...ஏனென்றால் மனிதர்களை விட இங்கே மரங்கள் அதிகம். ஒவ்வொருமுறையும் நான் விடுமுறைக்கு செல்லும் போதும்..ஏகாந்த வெளியில் நுழையும் ஒரு உணர்வோடு குருக்கத்தி என்னை வரவேற்று இருக்கிறது.

பரபரப்பான துபாய்.....இரவும் பகலும் போட்டி போட்டு நமது வயதை வேகமாய் தள்ளிவிட...விடிவதும் பின்னர் இரவு உறங்குவதும்.... சொடுக்கிடும் வேகத்தில் நடந்து விடும் ஒரு பரபப்பானா பூமி.....மனிதர்கள்...மனிதர்கள்...வாகனங்கள்....செல் போன் அழைப்புகள்...என்று ஒரு நாள் சராசரியாய் 12 மணி நள்ளிரவுக்கு முடிவுக்கு வரும்...மீண்டும்...ஒரு அசுரனாய்..அதிகாலை 5 மணிக்கு எழுந்து கொள்ளும்...

ஆமாம்... இந்த பரப்புக்கு நடுவில் நான் விமான நிலையத்தில் என் விடுமுறைக்கு ஊருக்கு செல்லவதற்காக.....விமானத்தில்...எல்லா படபடப்பும் சற்றே....குறைய.....விமானம் மேலே செல்ல செல்ல காற்றைப்போல.....மனம் லேசாகிறது...மனம் என்னை குருக்கத்திக்கு இழுத்துச்செல்கிறது....

என் பாட்டன் முப்பாட்டன் வாழ்ந்த பூமி....
தாயின் கருவறையாயும்...அதுவே..கல்லறையாயும்....
அந்தக்காற்றிலே...என் முந்தைய தலைமுறையின்...மூச்சுக்காற்று....
எப்போது காலில் முள் தைக்கும் என்ற ஆசையில்...
செருப்பு மறந்து சுற்றிய நாட்கள்....
சாணம் மொழுகிய வீடுகள்...
உயிர் உருக்கும்...குயிலின் கீதம்....
வேலிகாத்தான் மரங்களின் வெகுளியான பார்வை....
குருக்கத்தி... என்னை....வரவேற்க காத்திருக்குறது....
மகனுக்காக காத்திருக்கும் தாய் போல.....


விமானம் மேலே செல்ல செல்ல...மனமும் அதற்கேற்ற வேகத்தில் பறக்க தொடங்கியது. தாத்தா...வாழ்ந்த காலத்தில் எனக்கு 5 வயது இருக்கும் அப்போது கோடை விடுமுறைக்கு குருக்கத்திகு செல்வோம், அப்பாவின் வேலை தஞ்சாவூர் மாவட்டம் என்பதால் குருக்கத்திக்கு நாங்கள் பஸ்ஸில் செல்லும் போதே குதூகலம் தொற்றிக்கொள்ளும். காரைக்குடி வரும் வரை தஞ்சவூரின் வயல் வெளிகள் எங்களை வழியனுப்பி வைக்கும்.

காரைக்குடியில் இருந்து வீரம் விளைந்த சிவகங்கை செம்மண் எங்களை வாரி அணைத்து வரவேற்கும். வேலிகாத்தான் மரங்கள் அதிகமாகவும்... கடலை, எள், மற்றைய தானியங்கள் விளையக்கூடிய.. புன்செய் மண்வெளிகள் தான் அதிகமாக இருக்கும், வானம் பார்த்த பூமி என்பதால்...மிகப்பெரிய கிணறுகள், மோட்டர் செட்டுகள் எல்லம் வயல்கள் தோறூம் காணமுடியும்.

வெகுளியான...மக்கள்...
" அப்பு சுகமாயிருக்கீகளா....
ஆத்தா சும்மாயிருக்காகளா?"
இப்படி...பாசத்தை....
வார்த்தகளைல் நிறைத்து...
நம்மை அரவணைத்து...
நலம் விசாரிப்பார்கள்!

இயற்கையோடு ஒன்றிப்போனதாலேயோ என்னவோ இவர்கள்... இயற்கையான வாழ்வை வாழ்வு வாழ்வதாக எனக்குப்படுகிறது. வானம் பார்ப்பது என்பது...மனதை எப்போதும் நிறைக்கும்...
இவர்கள் அடிக்கடி வானம் பார்ப்பது...
இயற்கை என்று தங்களின் மீது கருணைகாட்டும்....
மழையாய் தங்களை ஆசிர்வதிக்கும் என்றுதான்!
தெரிந்தோ தெரியாமலோ எம் மக்கள் உருவமில்லா இறை என்னும் ஆன்மிகத்திதின் உச்சத்திற்கு தங்கள் ஆன்மாவினை பழக்கபடுத்திக்கொண்டு இருக்குறார்கள். இன்னுமொரு முக்கியமான செய்தி என்னவென்றால்.,, பொது இடங்களில் ஏதாவது பிரச்சினைகள் என்றால்...மீசை முருக்கிய யாரோ ஒரு ஆணோ அல்லது பெரிய தண்டட்டி(காது வளர்த்டு பெரிய புடம் போட்ட தொடு) போட்ட பெண்ணோ பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டர்கள்....அவர்கள் தாமகவே இடைப்பட்டு...பொதுவான நியாத்தை கூறி பிரச்சினையை தீர்க்க முற்படுவார்கள்.

வானம் பார்க்கும் மக்கள் அல்லவா....
வாழ்க்கையின் நிலையாமையை....
தங்கள் நெஞ்சுக்குள்...
தங்களுக்கெ தெரியாமல்....
பதுக்கி வைத்திருப்பார்கள்!
மண்ணில்....அடிக்கடி ஈரம் இல்லாவிட்டாலும்...
நெஞ்சில் எப்போதும்...
ஈரம் உள்ளவர்கள்!

இப்படி எல்லா விசயங்கலும் நெஞ்சு நிறைத்து கைப்பிடித்து அழைத்துச்செல்லும் குருக்கத்திக்கு! குருக்கத்தியோ....எல்லா பிரபஞ்ச ரகசியங்களையும் தன்னுள் தேக்கி வைத்து மெளனமாய் காத்திருக்கும்....

எல்லா வார்த்தைகளும்....
அர்த்தங்களை போதித்து விடாது....
சில நேரங்களில்...
மெளனங்களில் தான்....பதில்கள் காத்திருக்கும்...
சில் வண்டின் சப்தத்தோடு...
மெளனமாய்....காத்திருக்கிறது... குருக்கத்தி.....!


(இன்னும் வரும்...)

தேவா. S

Wednesday, March 24, 2010

நீ இல்லாத நேரங்களில்….
நீ இல்லாத நேரங்களில்….
மெளனமான பொழுதுகளில்தான்...
மனம் ஒரு குழந்தையைப்போல விழிக்கிறது....
பூக்களிலிருந்து பரவும் வாசம் போல...
அத்துமீறி என்னை ஆக்கிரமிக்கிறது...காதல்....
ஒரு குழந்தையைப் போல...முரண்டு பிடித்து...
மீண்டும் மீண்டும்....
உன் நினைவுகளை என்னுள் கொட்டி…
மார்கழி குளிராய் மனது நிறைக்கிறது......
கரை தொடும் அலைகள் போல...
ஒவ்வொரு நினைவும்...
தவணை முறையில்..
நெஞ்சம் நனைக்கின்றன...
ஒவ்வொரு நிமிடத்தையும்
நகர வைத்து
உன்னைவிட்டு நகர மறுக்கிறது... மனது!
நீ இல்லாத நேரங்களில் தான்....
உன் நினைவு அதிகமாயிருக்கிறது...
இன்னும் சொல்லப்போனால்...
அது நீ இருப்பதை விட .... சுகமாயிருக்கிறது....!

நீங்ககள் உற்று நோக்கி கவனித்து இருந்தால்...காதலிக்கும் தருணங்களில்...காதலி அருகில் இருக்கும் நேரங்கள் பெரும்பாலும் அவளது இருப்பை நமக்கு உணர்த்துவது இல்லை. மனைவியோ அல்லது காதலியோ இல்லாத போது அந்த வலி கொடுக்கும் சுகமே அலாதிதான்.

காத்திருக்கும் நேரங்களில் தான் காதலை உணர முடியும்... அப்போது காதல் என்பது நமக்குள் இருப்பது...அதை தூண்டும் சக்தியாகத்தான் ஒரு பெண் இருக்க முடியும் என்று..புரிந்து கொள்ள முடிந்தது. அப்படியான ஒரு காதலின் சக்தி எனை ஆளுமை செய்த தருணத்தி....தவழ்ந்து வந்தது தான் இந்த கவிதைக்குழந்தை.........!


- தேவா. S

கேள்விகளில்...வாழ்கிறேனோ?வெள்ளைப் பேப்பரில்...பாலைவனத்து ஒட்டகம் போல...
எப்போதும் ஊறும் என் பேனா....
உனக்காக கடிதம் எழுத திறக்கும் போது...
நயகராவாய்...வார்த்தைகளை இறைப்பது எப்படி?

கூட்டத்தில் இருந்தாலும் தனித்து கிடக்கும் மனது...
உன் நினைவுகளோடு இருக்கும் போது....
திருவிழாவாய் குதுகலிப்பது எப்படி?

ஏதோரு ஒரு உணர்வு....இருக்கும் ஒன்றை...
இல்லாமல் வெளியே... காட்டிக் கொண்டு....
மெளனமாய் மனதுக்குள்...
பூக்களை இறைத்து...விளையாடுவது எப்படி?

வந்து விழும் வார்த்தைகள் எல்லாம்...
உன் நினைவுகளுக்குள்...மூழ்கி வருவதால்...
கவிதையாய் உருமாறி...
காவியமாய் ஜொலிக்கிறதே...எப்படி?

சாரலாய் நீ சிரிக்கும் போது....
சிதறி விழும் முத்துக்களாய்.....
வெளிவரும் சப்தங்கள்...
வேத மந்திரமாய்..என்னை மூர்ச்சையாக்கி...
சமாதி நிலையில் தள்ளுகிறதே...எப்படி?

சூட்சுமமாய் எனைத் தீண்டி...உடலற்ற....
வெட்டவெளியில்...எனைத்தள்ளிவிட்டு..
நினைவுகளால் எனை நிறைத்து....
என் நினைவுகளை நீ அறுத்து....
ஏகாந்த வெளியில் நிரந்தர...மோகத்தில் தள்ளிவிட்டு.....
தூர நின்று சிரிக்கிறாயே....எப்படி?

கேள்விகளால்..மனம் அறுந்து...
உன் குரல் கேட்டு மீண்டும் நான் பிறந்து...
இன்னுமொரு பிறப்பெடுத்து...உன்னைத்தேடி அலைவேனோ....?
ஏதோ ஒரு காலத்தில்...ஒரு..தடிமனான ஜென்மத்தில்...
உன்னை விட்டு வந்த பாவத்தில்...
இப்போது கேள்விகளில்...வாழ்கிறேனோ?


ஒரு பெண் தன்னை நேசிக்கிறாள் என்ற விசயம் ஒருவனுக்குள் ஏகப்பட்ட மாற்றங்களை உருவாக்கும்...அந்த காதலை தியானம் செய்ய செய்ய... கண்டெடுத்த வார்த்தைகளை கோர்த்த போதுதான் இந்த கவிதை கிடைத்தது.

காதலுக்கும், காமத்துக்கும், கடவுளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று காலம் காலமாக எம்மக்களுக்கு தவறாக போதிக்கப்பட்டுள்ளது...! காதலும்...காமமும் தான் இந்த பிரபஞ்சத்தை இழுத்துப் பிடித்து வைத்திருக்கிறது...பூமியும் இன்ன பிற .... கோள்களின் மீது சூரியன் வைத்திருக்கும் காதாலால்தான்... நாம் இருக்கிறோம். இது ஒரு சிறிய உதாராணம்... சுகமான காதல் கொள்ளுங்கள் நேர்மையான காமம் கொள்ளுங்கள்...உங்களோடு இறைவன் இருப்பதை நீங்கள் உணர்வீர்கள்....!


- தேவா.

Monday, March 22, 2010

சிவப்பு சிந்தனை....

வல்லரசு கனவோடு...இந்தியாவின் வருங்காலம்....!
செல்லரித்த...கட்டைகளாய்...
தெருவின் ஓரங்களில்...!
2020லாவது... ஏக்கங்கள் தீராதா....
தெருவோரம்.. பிச்சை என்னும்...தீட்டு நீங்காதா?
கடல் நீரை குடி நீராய்...
மாற்றும் திட்டத்தோடு...
இவர்களின் கண்ணீரை நிறுத்த..ஒரு திட்டமுண்டா...!

எத்தனை தலைமுறைதான்...
தெருமுனையில் ஜனித்து...
நடை பாதையில்... வளர்ந்து...
ஒவ்வொரு சிவப்பு சிக்னலையும்...
வாழ்வாதாரமாக நம்பி வழுமோ?

தெருவோர அகதிகள்....
இவர்களுக்கு ஒரு இயக்கம் உண்டா?
முள்கம்பி இல்லா.. வெற்றிடத்தின்...
ஜன நாயக...அடிமைகள்...
காக்க ஒரு கட்சி உண்டா!

சமுதாய சாக்கடையின்...அடையாள புழுக்களாய்...
தன் பரம்பரை சொத்தாய்...
வறுமையை வாரிசுகளுக்கு...எழுதி வைக்கும்....
காம உச்சத்தின்... அடையாளமாய்...


இனி ஒரு பாரதி ..வருவானா?
உணவில்லா இந்த தனி மனிதர்களுக்காக ..
ஜகத்தினைத்தான் அழிப்பானா?

- சென்னை செல்லும் போது எல்லாம் மிகுந்த மனவருத்தத்தோடு நன் உற்று நோக்கிய விசயம் ..இந்த நடை பாதை குழந்தைகள்! ஒவ்வொரு சிக்னலிலும் நான் காத்திருக்கும் போது...என் கண்கள் கசிவது வாடிக்கையான ஒன்று!

கைக்குழந்தைகளோடு பிச்சை எடுக்கும் பெண்களை நினைக்கும் போது ... வக்கில்லாமல்... இவர்களை வெளிக்கொண்டு வரும் இவர்களின் காமத்தின் மீது கோபம்வரும்; எந்தவித... சம்பந்தமும் இன்றி.. இவர்களை இந்த சூழ் நிலைக்கு தள்ளிய இறைவன் மீது கோபம் வரும்! கார்களிலும் பேருந்திலும், பைக்குகளிலும் லட்ச லட்சமாய் செல்லும் மக்களுக்கு வாடிக்கையான காட்சிகள்தான் இவை என்றாலும்...இந்த நிலையை மாற்ற எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத ... அரசின் மீது கோபம் வரும்!

சாமானிய என் கோபம் என்ன செய்து விடும்... ஒரு கவிதையாவது எழுதலாமே என்ற எண்ணத்தின் விளைவில்..தெரித்த வார்த்தைப் பொறிகள்தான் இந்த கவிதை. எங்காவது ஒரு இடத்தில் எனது சிறு பொறி பட்டு பெரும் தீப்பிழம்பாய் மாறி...வரும் காலங்களில்.. சிறார்கள் எந்த இடத்திலும் பிச்சை எடுக்காமல் இருந்தால் சரிதான்.தேவா. S

Saturday, March 20, 2010

தெரு முனை
எதிர் பாரமல் உன்னை
சந்தித்த தெரு முனை...
சரித்திர புகழ் வாய்ந்த...இடமானது!

உன் கண்களால் என்
உயிர் உறிஞ்சிய ...
அந்த நிமிடத்தை
இது வரை நான் நகர விடவே இல்லை!
***
தாவணியை இடுப்பில்
சொருகிய அந்த நேரத்தில்...
சமாதி என்றால் என்ன...?
என்று கண நேரம் காட்டினாய்!
***
ஆக்ஸிஜன் கூட நீ...
உன் சுவாசகுழாய்களுக்குள்...
செல்ல விரும்பி மொத்தமாய்..
உன்னிடம் வந்ததால்...
நான் சுவாசத் திணறலால் ஸ்தம்பித்தேன்!
***
உன் கோபம் என்னை...
எரிச்சலூட்ட மறந்து...
மீண்டும் மீண்டும் காதலை அல்லவா..வளர்க்கிறது!
காதலோ....
அன்னம் புசிக்கும் பால் போல..
காமம் களைந்து
உன் நேசத்தை மட்டுமே..ரசிக்கிறது!
***
வழியோராம் உனைப் பார்த்து..
என் விழியோரம் உனைத் தேக்கி...
மீண்டும் மீண்டும் செல்கிறேன்...
உனை சந்தித்த தெரு முனைக்கு...
நீ இல்லாமல் போனாலும்...
காதாலால் எனை நிரப்ப...
***
உன்னை சந்தித்த அந்த நொடி போதும்!
அந்த அனுபவத்தின் சாயங்களை...
என் வார்த்தைகளில் நனைத்தெடுக்க..
வந்ததெல்லாம்..கவிதைதான்!
கவிதை எல்லாம் காதல்தான்!

***

காதல் என்பது எல்லா காலத்திலும் உணர்வாய்த்தான் இருந்திருக்கிறது. பிரபஞ்ச சுழற்சியின் மிகப்பெரிய ஒரு உந்து சக்தியாய் பெண் இருக்கிறாள்....அதுவே... நித்தம் சுகமான அலைகளை எப்போதும் வீசிக் கொண்டிருக்கிறது. எந்த கருத்தையும் தேடாமல்...எந்த கருத்தையும் கொள்லாமல்...காதலை...அனுபவியுங்கள்..இந்த கவிதை மூலமாக.....!


தேவா. S

Thursday, March 11, 2010

என்னவளுக்காக.....

கவிதைக்கு கவிதை சொல்ல...
எங்கு நான் வார்த்தை தேட....?
கனவுகள் மெய்ப்பட்டால் ...
கற்பனைக்கு வேலை இல்லை!
என் இமைகளுக்குள் அகப்பட்டாய்...
இதய துடிப்பாய் நீ துடித்தாய்...!
உடலுக்குள் மறைந்திருக்கும்..உயிர் போல..
என்னுள்ளே நீ நிறைந்தாய்!
உன்னைப் பிரித்தெடுத்து...
உலகிற்கே கவிதை சொல்வேன்..
உனக்கே கவிதை என்றால்...
பள்ளி செல்ல... மறுக்கும் குழந்தையாய்....
வார்த்தைகள் வர மறுத்து அடம்பிடிக்கிறதே...!
மோகனப் புன்னகையால் மெளனமாய்...
என்னை மூர்ச்சையாக்கி...கவிதை சொல்....
என்று சொன்னால்...
விலாசம் தொலைத்த வழிப்போக்கனாய்...
மொழி மறந்த மனிதானாய்....
நானல்லவோ திணறிப் போகிறேன்....!

- என்னவள் என்னிடம் கவிதை கேட்ட அந்த நொடியில்... என்ன செய்வது என்றறியாமால்...விழித்த நொடியில்.. ஜனித்தது!- தேவா. S

Tuesday, March 9, 2010

இது ஜென்மாந்திரப் பயணம்.....


நினைவது தப்பி....செயலது நின்று
சுவாசிக்க மறந்து.....உறவுகள் கலைந்து..
உண்மைக்குள் நான் போவேனோ....?

இல்லை...மனதினில் மயங்கி..
உடலுக்குள் அலைந்து...
மாயையில் விழுந்து...மீண்டும்
உயிராய் ஜனிப்பேனோ?

நிலையது மாறி .. நிலையது மாறி...
பொய்யாய் வேடங்கள் புரிவேனோ....
இல்லை...சத்தியம் நோக்கிய பயணத்தில்...
என்னை நானே கரைப்பேனோ

விலை அது விலை அது இல்லா...
சூன்யத்தில்...சுகமாய்...ஒருமித்து இருப்பேனோ?
இல்லை....உடலாய் தனி என தனி என...
பிரிந்து நரக நெருப்பில் வீழ்வேனோ?

சிலை அது....மரமது... மலையது...
என்று இறையை மட்டுப்படுத்தி அறிவேனோ?
இல்லை....அது இது என்றுணரா...
ஏக நித்தியானய் உணர்ந்து மறுமையில் இன்பம் துய்பேனோ?

சத்தியம் சொல்கிற... நித்ய இறைவா
என்னை பொய்யில் இருந்து காப்பாயோ..
இல்லை இந்த மெய்யினில் இருந்து...
கேள்விகள் கேட்டு...உய்யவேண்டும் என்பாயோ?

ஆரம்பிக்கத் தெரிந்த இந்தக் கவிதையை முடிக்க எனக்கு இதை முடிக்கத் தெரிவதில்லை எனபதை விட முடிக்க ஏக இறை அனுமதிக்கவில்லை என்பது தான் உண்மை........ நிலையில்லாத இந்த வாழ்வின் நிகழ்வுகள் ஏதோ ஒரு தாக்கத்தைக் கொடுக்க அந்த வீரியத்தின் வீச்சில் வந்து விழுந்த வார்த்தைகள் தான் இவை. எனக்கும் இந்தக் கவிதைக்கும் எந்த தொடர்பு இல்லை... அருகதையும் இல்லை...

இது ஜென்மாந்திரப் பயணம்.....

தேவா. S

Sunday, March 7, 2010

மெளனத்தின் மெளனம்!எந்த உந்துதலும் இல்லாத....
ஒரு வெற்று நாளில்....
மனதில் வார்த்தைகளே இல்லாத....
ஒரு இரவு நேரத்தில்...
மெல்லிய மெளனம் ...
என்னைத்தாலாட்டிய தருணத்தில்
இறைவனை நான் கண்டேன்!

மெளனத்தில் வலிமையினை...
நிசப்தத்தில் என்னுள் அவர்
ஊற்ற ஊற்ற.... நிரம்பாமல்...
வெறுமையானேன்!

கனமான வார்தைகளும்..
கவர்ச்சியான பேச்சுக்களும்....
வண்ணமிகு வாழ்க்கைகளும்...
போலியாய் எனைப்பார்த்து
சிரித்தபோது...

சப்தமில்லா அந்த அனுபவம்
என்னுள் என்னை மீண்டும் அமிழ்த்தியது...
மீண்டும் திரும்ப விரும்பாமல்...
அப்படியே நானிருக்க...எண்ணுகையில்..
மெலிதாய் எனை புறம் தள்ளி....
சராசரி வாழ்க்கையில்....
சற்று காலம் இருக்கச்சொன்னார்!

பொய்யான வாழ்க்கைதான்...
பொறுமையாய் வாழ்ந்து பார் என்றார்...
மன அழுக்கான மனிதர்கள்தான்.
நீ மனமின்றி வாழ்ந்து பார் என்றார்...
பணத்தைதான் போற்றுவார்...
நீ பிணம் போல கிடந்து வா என்றார்...!

இரைச்சலுக்கு மத்தியில்
இரைச்சலில்லாமல் வாழ்ந்து என்னை....
கற்பூரம் கரைவது போல
மெல்லவே கரையச்சொன்னார்....!

தாகத்தில் நீராயும்...
மோகத்தில் உச்சமாயும்..
வெயிலில் நிழலாயும்....
இரக்கத்தில் கனிவாயும்..
என்னுடனே இருப்பேன் என்றார்..!

இறைவனின் விருப்பமுடன் தான்...
என் இந்த நிமிடமும் கழிகிறது!
ஊமைகண்ட கனவு போல....
உள்ளுக்குள் விழித்து வெளியே நான் உறங்குகிறேன்!


எல்லோரும் எப்போதும் பேசிப் பேசி... எதையோ எண்ணி எண்ணி மனதில் இடைவிடாமல் வார்த்தைகளை இறைத்து இறைத்து ஒரு வாகன நெரிசலை உண்டு பண்ணிவிட்டு...கடவுளை வெளியில் தேடித் தேடி... கடவுள் இல்லை என்றும் மேலும் சில பொருட்களை சில மனிதர்களை கடவுள் என்று தவறாக எண்ணி... அந்த நபரிடமும் அந்த பொருளிடமும் ஏமாந்து விரக்தியின் உச்சத்தில் நடை பிணமாய் வாழ்ந்து இறை என்றாலே என்ன. .. என்று உணரமுடியாத ஒரு அவல நிலையில் இருக்கிறோம்....!உங்களின் செயல்களை வெளியே நிகழ்த்துங்கள்.... உங்களின் உள்ளே எல்லாவற்றையும் சாந்தப்படுத்துங்கள்...வார்த்தைகளையும் எண்ணங்களையும்... உற்று நோக்கி நோக்கி... மெல்ல அவற்றை கரையுங்கள்.... நிசப்தம்..... மெளனம்..... மீதமிருப்பது உங்கள் உடல் கூட இல்லை....எதுவுமே இல்லை... ஆழ்ந்த மெளனம்.....

இன்னும் என்ன வார்த்தைகளில் சொல்ல.... உணர்ந்து பாருங்கள்.. குளிரை, வெயிலை... காற்றை..கூடல் சுகத்தை வார்த்தைகளால் வர்ணித்தால் அது பொய்... விளக்கத்தை...வார்த்தைகளில் தேடாமல்.....உங்களுக்குள் தேடுங்கள்...கடவுள் யாரென்று தெரியும்....!


-Dev Subbiah