எந்த உந்துதலும் இல்லாத....
ஒரு வெற்று நாளில்....
மனதில் வார்த்தைகளே இல்லாத....
ஒரு இரவு நேரத்தில்...
மெல்லிய மெளனம் ...
என்னைத்தாலாட்டிய தருணத்தில்
இறைவனை நான் கண்டேன்!
மெளனத்தில் வலிமையினை...
நிசப்தத்தில் என்னுள் அவர்
ஊற்ற ஊற்ற.... நிரம்பாமல்...
வெறுமையானேன்!
கனமான வார்தைகளும்..
கவர்ச்சியான பேச்சுக்களும்....
வண்ணமிகு வாழ்க்கைகளும்...
போலியாய் எனைப்பார்த்து
சிரித்தபோது...
சப்தமில்லா அந்த அனுபவம்
என்னுள் என்னை மீண்டும் அமிழ்த்தியது...
மீண்டும் திரும்ப விரும்பாமல்...
அப்படியே நானிருக்க...எண்ணுகையில்..
மெலிதாய் எனை புறம் தள்ளி....
சராசரி வாழ்க்கையில்....
சற்று காலம் இருக்கச்சொன்னார்!
பொய்யான வாழ்க்கைதான்...
பொறுமையாய் வாழ்ந்து பார் என்றார்...
மன அழுக்கான மனிதர்கள்தான்.
நீ மனமின்றி வாழ்ந்து பார் என்றார்...
பணத்தைதான் போற்றுவார்...
நீ பிணம் போல கிடந்து வா என்றார்...!
இரைச்சலுக்கு மத்தியில்
இரைச்சலில்லாமல் வாழ்ந்து என்னை....
கற்பூரம் கரைவது போல
மெல்லவே கரையச்சொன்னார்....!
தாகத்தில் நீராயும்...
மோகத்தில் உச்சமாயும்..
வெயிலில் நிழலாயும்....
இரக்கத்தில் கனிவாயும்..
என்னுடனே இருப்பேன் என்றார்..!
இறைவனின் விருப்பமுடன் தான்...
என் இந்த நிமிடமும் கழிகிறது!
ஊமைகண்ட கனவு போல....
உள்ளுக்குள் விழித்து வெளியே நான் உறங்குகிறேன்!
எல்லோரும் எப்போதும் பேசிப் பேசி... எதையோ எண்ணி எண்ணி மனதில் இடைவிடாமல் வார்த்தைகளை இறைத்து இறைத்து ஒரு வாகன நெரிசலை உண்டு பண்ணிவிட்டு...கடவுளை வெளியில் தேடித் தேடி... கடவுள் இல்லை என்றும் மேலும் சில பொருட்களை சில மனிதர்களை கடவுள் என்று தவறாக எண்ணி... அந்த நபரிடமும் அந்த பொருளிடமும் ஏமாந்து விரக்தியின் உச்சத்தில் நடை பிணமாய் வாழ்ந்து இறை என்றாலே என்ன. .. என்று உணரமுடியாத ஒரு அவல நிலையில் இருக்கிறோம்....!
உங்களின் செயல்களை வெளியே நிகழ்த்துங்கள்.... உங்களின் உள்ளே எல்லாவற்றையும் சாந்தப்படுத்துங்கள்...வார்த்தைகளையும் எண்ணங்களையும்... உற்று நோக்கி நோக்கி... மெல்ல அவற்றை கரையுங்கள்.... நிசப்தம்..... மெளனம்..... மீதமிருப்பது உங்கள் உடல் கூட இல்லை....எதுவுமே இல்லை... ஆழ்ந்த மெளனம்.....
இன்னும் என்ன வார்த்தைகளில் சொல்ல.... உணர்ந்து பாருங்கள்.. குளிரை, வெயிலை... காற்றை..கூடல் சுகத்தை வார்த்தைகளால் வர்ணித்தால் அது பொய்... விளக்கத்தை...வார்த்தைகளில் தேடாமல்.....உங்களுக்குள் தேடுங்கள்...கடவுள் யாரென்று தெரியும்....!
-Dev Subbiah
Comments