Pages

Saturday, August 31, 2013

எழுத்துக்களில் புன்னகைப்பவன்..!


நீயும் நானும் யாரோவாகிப் போயிருந்த
ஒரு உச்சி நேரத்தில்
என்  சாலையின் முன் எதிர்ப்படுகிறாய் நீ...
வார்த்தைகளை விழுங்கிக் கொண்ட
ஒரு ஆழ் மெளனம் ஒன்று
ஞாபகங்களைக் கிளறி எடுத்து
என்னை பின்னோக்கி இழுத்து
கதைகள் பேசி நம் கடந்த காலங்களை
ஒவ்வொன்றாய் என் முன்
கடைவிரித்துப் பார்க்கிறது...

ஏதாவது சொல்ல வேண்டும்
என்ற..
ஆசைகளை எல்லாம்
தின்று கொண்டிருக்கும் இயலாமை
குற்ற உணர்ச்சியோடு எழுப்பும்
என் காலடி சப்தங்களை
எதிர் கொள்ள முடியாமல்
தவித்து நடக்கிறேன் நான்....

எத்தனையோ முறை
ஊடுருவிப் பார்த்து
எனக்கான காதலில் நான்
மிதந்து கிடந்த
உன் விழிகள் என்னிடம்
இன்று உயிர் இல்லை என்று
பகிர்ந்த செய்தியை
உன் இமைகள் மெளனமாய்
ஆமோதிக்க....
இதோ என்னை கடந்து செல்கிறாய்
நீ....

புன்னகையாவது நீ செய்திருக்கலாம்...
என்ற நினைவுகளோடு
புன்னகைக்க முடியாத
என் கனவுகளை இதோ...
கவிதையாக்கி என் எழுத்துக்களிலாவது
புன்னகைக்கலாமா என்று
முயன்று கொண்டிருக்கிறேன்...
நான்...!


தேவா சுப்பையா...
Thursday, August 29, 2013

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்...

ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்லாம் புதியதொரு சிலை செய்யும் சிற்பியொன்றின் கவனத்தோடும், ஆர்வத்தோடும்தான் நானிருந்திருக்கிறேன்...

உன் பிஞ்சுக் கரங்களால் என் கழுத்தினைக் கட்டிக்கொண்டு நீ உறங்கும் இரவுகளை ஏன் விடியவைக்கிறான் அந்த இறைவனென்று எனக்கு கோபங்கள் வந்ததுண்டு. விடியலில் இமை பிரிக்கும் அத்தனை மென்மையோடு உன் கைகளிலிருந்து விடுவித்துக் கொண்டு நான் பொருள் தேடச் செல்லும் விடியல்களில் எல்லாம் நான் இராட்சசனாய் மாறி வாழ்க்கையை எதிர்கொள்ளச் செல்வதெல்லாம் என் செல்வம் உனக்காக செல்வம் சேர்க்கத்தான்..! நீ பேசிக் கொண்டே இருக்கையில் உன் கிள்ளைத் தமிழை நான் செவிகளில் ப்ரியமாய் வாங்கிக் கொண்டு சொக்கிக்கிடக்கும் சொர்க்க நிமிடங்களை எத்தனை கோடியைக் கொட்டிக் கொடுத்தாலும் யார் கொடுக்க முடியும்...?

முதன் முதலாய் நீ வரைந்த ஓவியமொன்றில் கோடுகளாய் என்னை நீ அடையாளம் காட்டிய அந்த சித்திரத்தில் முதன் முதலாய் என்னை நான் கண்டு கொண்டேன் மகளே...! எத்தனை உறவுகள் என்ன என்னவெல்லாம் சொல்லி என்னை அழைத்தாலும் அப்பா என்று நீ  அழைக்கும் தருணங்களில் எல்லாம் இந்த உடலுக்குள் இருக்கும் உயிரொன்று மெல்ல கைகொட்டி சிரித்து மகிழும் ரகசியத்தை நான் யாரிடம் சொல்லி மகிழ்வேனடி மகளே...!

ஆணும் பெண்ணும் வேறல்ல எந்த குழந்தை என்றாலும் ஒன்றுதான் என்று உலகம் சமப்பட்டு பேசிக் கொள்ளும் நாடக வார்த்தைகளை நான் புறம் தள்ளுகிறேன் மகளே...! மகள்களின் பிறப்பில் அப்பாக்கள் நிஜமாய் கதாநாயகர்களாய் ஆகிப் போகும் அதிசயத்தை நீ பிறந்த அன்று நான் உணர்ந்து கொண்டேன்...

எட்டு மாதத்திலொருநாள் முதன் முதலாய் என்னை உறக்கத்தில் நீ தேடி என் கழுத்தை வளைத்துக் கொண்ட கணத்தை என்னை தெய்வம் தேடி இழுத்து அணைத்துக் கொண்டது என் நாட்க்குறிப்பேட்டில் குறிப்பெழுதி வைத்திருக்கிறேன். உன் விழிகளில் நிரம்பிக் கிடக்கும் காதலில் மிகுந்து கிடக்கும் பாசத்தில் அழுத்தமாய் இருக்கும் ஆதரவு ஒன்றை எந்த வார்த்தை கொண்டு நான் எழுதித் தீர்க்க முடியும். 

அப்பா என்ற
மூன்றெழுத்துக்குள்
என்னை ப்ரியங்களால்
பூட்டி வைத்து 
சிரிக்கும் என் தேவதையை
கவிதைகளில் சொற்களுக்குள்
அடைக்க முயன்று, முயன்று  
தோற்றுப் போய்
மீண்டும் மீண்டும்
அவள் முகம் பார்த்து 
மகிழ்ந்தபடியே
சிறகடித்து பறந்து கொண்டிருக்கிறது
என் வானவில் பொழுதுகள்....!

மகள்களைப் பெற்ற அப்பாக்கள் பாக்கியசாலிகளா இல்லையா என்று எனக்கு தெரியாது ஆனால் மகள்களைப் பெற்ற அப்பாக்கள் எல்லோரும் உயிர்ப்போடு இருப்பவர்கள் என்று நான் உறுதியாய் சொல்வேன்..!

அட்டகாசமான பாடலோடு நீங்கள் மூழ்கிப் போவது உறுதி என்று நானறிந்திருந்தாலும் தங்கமீன்கள் போன்ற நேர்மையான படைப்புகளை ஆதரித்து படைப்பாளிகளை வாழச்செய்யுங்கள் என்றும் கேட்டுக் கொள்கிறேன்...!
தேவா சுப்பையா..
Wednesday, August 28, 2013

யுகங்களின் நாயகன்...கிருஷ்ணா...!


இந்துக்களுக்கு எப்போதுமே கிருஷ்ணா ஒரு வசீகரமான கடவுள்தான். சராசரி மனிதனின் எல்லா குணங்களையும் உள்ளடக்கிய ஒரு தெய்வாம்சம் பொருந்திய கேரக்டரை வேறு மதங்கள் இதுவரையிலும் படைத்திருக்கவில்லைதான். எல்லா மதத்திலும் கடவுள் கற்பிதங்களும், இறைத் தூதர்களும் சராசரி மனித வாழ்க்கையிலிருந்து விலகி நின்று கொண்டு நான் இப்போது என்ன சொல்ல வருகிறேன் என்றால் என்று கட்டளைகளைத்தான் பிறப்பித்து இருக்கிறார்கள்.

கிருஷ்ணரை இறைத்தூதர் என்றும் கூட சிலர் சொல்வதுண்டு. அவர் இறைத்தன்மையை பிரதிபலித்த ஒரு ஆன்மா என்று வேறு சில கருத்தியல் கோட்பாடுகள் வரையறுப்பதும் உண்டு. இந்து மதம் தனது சமூகத்திற்கு கிருஷ்ணரை இறைவனின் அவதாரம் என்றுதான் கூறுகிறது. சிதறிக்கிடந்த சிந்து சமவெளி நாகரீகத்தின் தொகுப்பாகத்தான் இந்து மதம் என்னும் ஒரு மாய பிம்பம் எழுந்து நிற்கிறது என்றாலும் இன்றைக்கு இந்தியா முழுதும் இருக்கும் இந்துக்களுக்கு கிருஷ்ணா ஒரு மிகப்பெரிய வசீகரம்தான். ஒரு பிரம்மாண்ட ஹீரோவுக்குரிய எல்லா வித குணாதிசயங்களோடுதான் கிருஷ்ணாவின் காதாபாத்திரம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

பிறந்த உடனேயே அவரைக் கொல்ல நினைக்கும் ஒரு பேராபத்துக்கு நடுவே அவதரிக்கும் கிருஷ்ணரின் பிறப்பே மிகப்பெரிய த்ரில்லோடு நமக்கு அறிமுகமாகிறது. தெய்வாம்சம் பொருந்திய ஒரு கேரக்டர் என்று அறிமுகம் ஆகும் கிருஷ்ணரின் பால்யப் பிராயத்தைப் பற்றி வாசிக்கும் போது நமக்குள் தொற்றிக் கொள்ளும் அந்த குறு குறுப்பும், கிருஷ்ணா பற்றிய கற்பனைகளும், அவரின் குறும்புகளும் அவர் வளர்ந்து ஒரு  பெரிய மனிதாராக ஆன பிறகும் பிராயத்தை அனுசரித்து அவர் உடன் வளர்ந்து கொண்டே இருப்பதை உணர முடியும். கிருஷ்ணர் எல்லா உணர்வுகளுக்கும்  சொந்தமான லெளகீகத்தின் வசீகர குழந்தை. அவர் வெண்ணை திருடுவார், திட்டு வாங்குவார், தண்டனை அனுபவிப்பார், பதின்மப் பருவத்தில் பெண்களை எல்லாம் வசீகரிக்கும் மாயக்கண்ணனாக உருவெடுப்பார்.

மொத்தத்தில் கிருஷ்ணாவின் வாழ்க்கை ஒரு மிகப்பெரிய கொண்டாட்டமாகத்தான் நமக்கு அடையாளம் காட்டப்படுகிறது. பதின்மத்தில் இயல்பாகவே தோன்றும் அவரின் பல உணர்வுகளையும் மறைத்து அவரைப் புனிதராக காட்ட இந்து மதம் முனையவில்லை. இன்னும் சொல்லப் போனால் வாழ்வின் போக்கில் நடக்கும் எல்லா செயல்களுக்குமே ஒரு இயல்பான சாட்சியாய் கிருஷ்ணரை நம் முன் அது நிறுத்துகிறது. ஒழுக்க நெறிகளையும் கோட்பாடுகளையும் மனசாட்சியோடு போட்டுப் பின்னி அந்த நியாய தர்மங்களின் படிதான் கிருஷ்ணா தன் வாழ்நாள் முழுதும் வாழ்க்கையை வாழ்ந்திருப்பதாகச் சொல்கிறார்கள். அவன் புல்லாங்குழல் ஒரு போதும் சோகத்தை இசைத்திருக்கவில்லை. துன்பங்களை எல்லாம் வாழ்கையின் ஓட்டத்தில் நிகழும் நிகழ்வுகளாய் கருதி நகரும் கிருஷ்ணா.....அதையும் கூட சந்தோசத்தோடு எதிர் கொண்டு வாழ்ந்துதானிருக்கிறார்.

உலக சினிமாவின் கதாநாயக மனோபாவத்தின் எல்லா சாயல்களும் கிருஷ்ணாவிடம் இருந்து உருவப்பட்டு இருக்குமோ என்ற சந்தேகம் கூட எனக்கு எழுகிறது. இன்னும் சொல்லப் போனால் இது போன்ற எல்லாம் வல்ல சூப்பர் பவரை மனிதர்களால் செய்ய முடியாத செயல்களைச் செய்யக்கூடிய ஒரு கதாபாத்திரத்தை இந்த பூமியின் பல்வேறு பிரதேசங்களும் படைத்திருக்கத்தான் செய்கிறன. என்ன ஒன்று அந்த பாத்திரங்கள் அத்தனையும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் வேற்றுக்கிரகவாசிகளாகவே நமக்கு அறிமுகம் செய்யப்படுகிறன. ஒரு போதும் எந்த இறைத்தூதரும் பொய் சொன்னார் என்றோ...தங்களது கடவுள் பெண்களின் பின்னால் சுற்றிக் கொண்டிருந்தார் என்றோ, பொய் சொல்லிவிட்டு தண்டனையை அனுபவித்தார் என்றோ அவர்கள் சொல்ல முடியாது அல்லது அப்படி சொல்ல பயந்தார்கள்.

அந்தத் துணிச்சல் சனாதான தருமம் எனப்படும், சிந்துசமவெளி நாகரீகத்தின் தத்துவங்களின் கூட்டு மனோபாவத்தில் உருவான இந்துமதத்திற்கு  கொஞ்சம் அல்ல நிறையவே உண்டு என்றுதான் நான் சொல்வேன். கிருஷ்ணரின் தர்மங்களும், அதர்மங்களும், மனித சமூகத்தை முன்னிலைப்படுத்தி  கட்டமைக்கப்பட்டது அல்ல அது பிரபஞ்ச நியதியையும், ஒட்டு மொத்த மானுடசமூகத்தின் சுமூக இயங்கு தன்மையையும், மனித வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட சூட்சும பெரும் இயக்கத்தையும் மையப்படுத்தி நிறுவப்பட்டது. எந்த சூழலிலும் பொய் சொல்லக்கூடாது என்று அகில உலக தர்ம சிந்தனை கொண்ட மதங்களும் சொல்லிக் கொண்டிருக்கையில்...

சர்வ சாதரணமாய் கிருஷ்ணர் பொய் சொல்லி பாரதப் போரையே தவறான நாளில் கெளரவர்கள் தொடங்க ஏது செய்வார். புண்ணியங்களால் நிறைந்து கிடக்கும் ஒரு மனிதனின் உயிர் அவன் செய்திருக்கும் நன்மைகள் தானதருமங்கள்  மூலம் காக்கப்படும் என்று நம்பிக்கொண்டிருக்கையில் அவனிடம் மாறுவேடமிட்டுச் சென்று...." செய் தருமம்" அனைத்தும் எனக்குத் தா என்று   யாசகம் கேட்டு அவனை கொல்வார். என் எதிரிலிருப்பவர்கள் அத்தனை பேரும் என் உறவினர்கள் என்னால் சண்டையிட முடியாது என்று வன்முறையிலிருந்து ஒதுங்க நினைக்கும் ஒரு மனிதனை உபதேசங்கள் செய்து " எடு.... வில்லை!!!! தொடு.... அம்பை!!!! ' என்று வன்முறை கொள்ளச் செய்வார்.

ஆமாம்..கிருஷ்ணா ஒரு போதும் மனித மனங்களின் நியாய தர்மங்கள் என்னும் சுயநல சிறைக்குள் அடைபட்டுக் கொண்டிருக்க விரும்பவில்லை. இந்த உலகில் அவரைப் பற்றிய கருத்துக்களையும், புறங்கூறுதல்களையு ஒரு போதும் அவர் சட்டை செய்திருக்கவுமில்லை. கிருஷ்ணாவின் இயக்கம் பிரபஞ்சத்தின் தேவையாய் மட்டுமே இருந்தது. அதில் எந்தவித லெளகீக நடிப்புகளும் இருந்திருக்கவில்லை. காதல் என்னும் பெரும் உணர்வில் கபடநாடகம் ஆடும் இந்த உலகத்தீருக்கு எல்லாம் கிருஷ்ணர் மிகப்பெரிய சவாலாய்தான் இருந்தார்.

தன்னை நேசித்தவர்களை நேசிக்க அவர் தயங்கி இருக்கவில்லை.  கிருஷ்ணரின் காதல் பற்றிய பார்வை சரியா...? தவறா...? என்று ராதாவிடம் கேட்டுப்பார்த்தால் புரியும். அவன் ஒரு போதும் தன்னை காதலித்தவர்களை கவனிக்காமல் இருந்திருக்கவில்லை. எத்தனையோ பெண்களோடு அவன் பேசிச்சிரித்து விளையாடி இருந்தாலும் அவன் இரு மனைவியரோடு மட்டுமே இருந்தான் என்றுதான் அழுத்தம் திருத்தமாக புராணங்கள் கூறுகின்றன. அவனுடைய போர்களில் இறந்து போன போர் வீரர்களின் விதவை மனைவிகள் அத்தனை பேருக்கும் தேவையில்லாத பாலியல் தொந்தரவுகள் வந்துவிடக்கூடாது என்று...

இனி அத்தனை  விதவைப் பெண்களும் யாரேனும் துன்புறுத்தினால் நீங்கள் கிருஷ்ணாவின் மனைவி என்று தைரியமாய்ச் சொல்லுங்கள் என்று அவன் கூறியதாய் நான் படித்திருக்கிறேன். இதையே உதாரணம் காட்டி கிருஷ்ணாவுக்கு எதிர் சார்பு நிலை எடுத்து பேசுபவர்கள் அவன் பல்லாயிரக்கணக்கான மனைவிகளைக் கொண்டிருந்தான்,  அவன் எப்படி ஒழுக்க சீலனாய் இருந்திருக்க முடியும் என்ற கேள்வியை முன் வைப்பதுமுண்டு....

என் கேள்வி எல்லாம் ஒரு மனைவியக் கட்டிக் கொண்டு வாழும் அத்தனை பேரும் ஒழுக்க சீலர்கள்தானா...? என்பதுதான்.  ஒழுக்கம் என்பது இந்த சமூகம் கட்டமைத்து வைத்திருக்கும் மாயக் கண்ணாடி அல்ல. ஒழுக்கம் என்பது மனசாட்சி என்று நிறுவி அதன்படி வாழ்ந்து காட்டியிருக்கும் ஒரு அற்புதக் கேரக்டர்தான் கிருஷ்ணா!!!!! அவன் ஏதோ ஒரு மதத்தை ஸ்தாபிக்க பாரதப் போரை நிகழ்த்தவில்லை, இங்கே இருக்கும் மனிதர்களைப் பயமுறுத்தி என்னைப் பின்பற்றுங்கள் என்று சொல்ல பாரதப் போரில் சாரதியாயிருந்திருக்கவில்லை..., அவன் கெளரவர்களைக் கொன்று தன்னை மிகப்பெரிய கதாநாயகனாகக் காட்டிக் கொள்ள அந்தப் போரை நடத்தவில்லை...

அவன் ஒரு சுத்த புருஷன், சுயநலமற்ற மாவீரன்....அவன் போர் நடத்தியது எல்லாம்.. தர்மத்தையும் நீதியையும் காக்க....என்று பகிங்கரமாய் நமது செவிப்பறைகள் கிழிய கூறுகிறான். அதோடு மட்டுமல்ல...எப்போது எல்லாம் தர்மமும் நீதியும் அழிகிறதோ அப்போது எல்லாம் நான் மீண்டும் வருவேன் என்று கொடியவர்களை மிரட்டவும் செய்கிறான்.....

பாரதப் போர் நடக்கும் அந்தக் காலம் என்று மட்டும் இல்லை....யுகங்கள் தோறும் நான் அவதரிப்பேன் என்றும் சவால் விடுகிறான்....! இந்த திமிர், இந்த தைரியம், இந்த ஞானம், இந்த விவேகம், இந்த வீரம் மட்டும் அல்ல.. கிருஷ்ணா, அவன் காதலும், காமமும், இன்ன பிற லெளகீக இயல்புகளும் பிசைந்து உருவாக்கப்பட்ட யுகங்களின் நாயகன்...!!!!!

அவன்.....

காதலுணர்வால் அனைவரையும் கட்டிப்போட்டு, மயக்கும் ரசனைகளோடு கூடிய இன்னிசையை இந்த பிரபஞ்சம் எங்கும் பரப்பிப் போட தன் புல்லாங்குழலையும் ஊதுவான்.....

மிரட்டும் கொடிய சக்திகளை, மனித வாழ்வின் சுமூக நகர்வுகளுக்கு சவால் விடும் மிருகங்களை, அட்டூழியம் செய்யும் பேய்களை, நரகத்திற்கு தள்ள போர்ச் சங்கும் ஊதுவான்....

ஆமாம்...அவன் யுகங்களின் நாயகன்தான்....!!!!!! அவன் ஒரு போதும் மரிப்பதே இல்லை...!!!!!!!

தர்மத்தை தனிமனிதரோடு தொடர்புபடுத்திப் பார்க்காது ஒட்டு மொத்த பிரபஞ்ச இயக்கத்தோடு தொடர்புபடுத்திப் பார்க்கும் ஒவ்வொரு நியாயவான்களாகவும்....

அவன் யுகங்கள் தோறும் அவதரித்துக் கொண்டுதானிருக்கிறான்....!

" பரித்ராநாய சாதுனாம்  வினாசாய சதுஶ்க்ருதாம்
தர்மஸம்ஸ்த்தாபனார்தாய ஸம்பவாமி யுகே யுகே....!தேவா சுப்பையா...


Monday, August 26, 2013

செங்காத்து வீசும் காடு....!

மானம் மப்பா இருக்கு மாப்ளே....மழை பெய்ஞ்சுதுன்னா தேவலாமப்பு.....வெதச்சு வச்சது எல்லாம் கண்ண முழிச்சு எந்திரிச்சுக்கிடுமப்பு...துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டேன். குப்புத்தேவருக்கு எப்பவுமே கிறுத்துருவந்தேன்..இன்னமும் வெள்ளாமைய நம்பிக்கிட்டு நீ அது கூடயே மாரடிச்சுகிட்டு இரு பெரியப்புன்னு அவன் கேலி பேசுனத கண்டுக்காம நான் இந்தாப்பு காசுன்னு டீக்கு காசக் கொடுத்து புட்டு எந்திருச்சு வந்துட்டேன்.

மண்ணோடயே கெடந்தவைங்கதான் எங்க பாட்டன் பூட்டன் அம்புட்டு பேரும். வெள்ளாமை செய்றவைங்கன்னா அம்புட்டு மவுசு மருவாதை இருந்த காலம் மலையேறிப் போச்சு, இப்ப எல்லாம்...நம்மூரு வயலுக்குள்ள எல்லாம் காரு கண்ணி வந்து போகுது. அம்புட்டு நிலத்தையும் பிளாட்டுப் போட்டு செண்டு 50,000ம்னு வித்துப்புட்டு ஊருசனம் பூரா டவுனுக்குப் போயிருச்சுக.... என்னைய மாறி இன்னமும் வெள்ளாம காடுன்னு கட்டிப் புடிச்சுக்கிட்டு கடக்குற சனம் கொஞ்சப் பேருதேன்....! வெவசாயம் பாத்த செனம் வெவரங்கெட்டுப் போயி என்ன என்னமோ வேலை செஞ்சு சம்பாரிக்குதுக....! யாருமே வெள்ளாம செய்யாம போயிட்டா எல்லாரும் எப்புடிப்பு சாப்புடறது..?

சூசை மயனும் என்னைய மாதிரித்தேன். எம்புட்டு பெரச்சினை இருந்தாலும் வெவசாயத்த உடாம மொத்தமா சாவியாப்ப் போனாலும் சிரிச்சுக்கிட்டு மறுவடிக்கா உழுதுபுட்டு வெதைச்சிக்கிட்டு திரிவான்....ஆத்துப் பாசனம் இல்லாத மக்கமாருக நாங்க....வானத்த, வானத்த அண்ணாந்து பாத்து எப்படா ரெண்டு தூத்தப் போடும்னு கையெடுத்து கும்புட்டுக்கிட்டே இருப்போம். எங்கூரு கம்மாவ வெட்ட ஊருசனமே வேல பாத்து இருக்குன்னா பாத்துக்கங்களேன். கடலு மாதிரி கம்மாதேன்.. மழத் தண்ணி இல்லாம.. சுருங்கிப் போன செவத்தா அம்மாயி மாதிரி...ஊரோரமா இழுத்துக்கவா பரிச்சுக்கவான்னு கெடக்குது...! மழை பெஞ்சா கம்மா நெறையும், மழை ஒழுங்காப் பேய மனுசன் ஒழுங்கா இருக்கணும்...ஒண்ணு விடாம அம்புட்டு மரத்தையும் வெட்டி வித்துப் புடுறாய்ங்க..அப்புறம் மழை எப்புடி நல்லாப் பேயும்....

யோசனையோடவே போறியளே...ஏப்பு...மழை பேயுறது கூடவா தெரியல...செத்தவடம் நின்னுட்டுப் போங்கப்பு....வாணியவீட்டு முருகாயி பேத்தி கத்துன கத்துல நான் கிறுக்கோண்டே போயிட்டேன்....ஏத்தா.. ஏத்தா..இருக்கட்டுமத்தா...மழை வேணும்னுதானேத்தா காத்துக் கிடக்கேன்...பெய்யட்டுமத்தா... என்ன செஞ்சுப்புடும் இந்த மழை நம்மள...

காலம் பூரா மழையோட மல்லுக்கட்டுன பயபுள்ளைகதானே நாம எல்லாம்....பேசிக்கொண்டே நடந்து கொண்டிருந்தேன்.

கம்மாய தூறு வாருனப்ப எனக்கு 7 வயசு இருக்கும். எங்கப்பு..  ஆத்தா எல்லாம் கம்மாயிலதேன்...நின்னாக ஏன் ஊருசனமே அங்கனதான் இருந்துச்சு... அத்தனை அடி உசரத்துல கரைய ஒசத்தி, கம்மா மண்ண வெட்டி வெட்டி சேரும் சகதியுமா கரை ஓரமா கொட்டி கொட்டி...அம்புட்டு சந்தோசமா வேலை செஞ்சுகிட்டு இருந்தோம். என் காலெல்லாம் சகதி, என் உடம்பெல்லாம் சகதி.....மண்ணுக்குன்னு ஒரு பாசம் இருக்கப்பான்னு...சேத்தையும் சகதியவும் பாசத்தோட சேத்துப் பூசிக்கிட்டு வேலை செஞ்சுகிட்டு இருந்தோம்...

கம்மாயா தூறு வாருனாத்தானே மழ தண்ணி பேஞ்சா வந்து நிறையும்...மண்ணு மூடிப் போயி மேடாப் போச்சுதுன்னா...பொறவு மழத்தண்ணி எங்க போயி நிறையும்.. அங்குட்டு இங்குட்டு ஓடி மொத்த தண்ணியும் சேதாரமாயி போயிடுமில்ல..., வெள்ளாம செய்றது ஒரு சொகமப்பு....மனுச மக்களோட சேந்தி வேல செஞ்சாலும் பேச்சு கொறவாத்தான் இருக்கும். பேசிக்கிட்டே இருந்தம்னாக்கும் வேலை ஓடி அடையாது...பாட்ட கீட்ட பாடிக்கிட்டு கேட்டுக்கிட்டு ஓடிக்கிட்டே இருப்போம்.

வெத்து வயல தண்ணி கிண்ணி இல்லாம கூரான கலப்பைய வச்சு புழுதி பறக்க உழுகுறப்ப...பூமியில இருந்து கிளம்புற சந்தோசத்தை கலப்ப நமக்கு காமிச்சு கொடுத்துருமுய்யா....கர்ர்ர்ர்ர்ர்ன்னு சத்தத்தோட மாடுகள அடிச்சு பத்திக்கிட்டு நவுரும் போது மொத்த ஆகாசமும் நம்ம தலைக்கு மேல நின்னு ஹோ.ன்னு நம்மள வேடிக்கப் பாத்துகிட்டு இருக்கும். வரப்போறமா இருக்குற ஆவாரம்பூ, காட்டாமுணக்க, இன்னும் எல்லா சின்ன சின்ன புல்லுகளும், முள்ளுகளும்  கைகொட்டி சிரிக்குமப்பு...இந்தா உழுதுட்டான்...இந்தா தண்ணி பாச்சப் போறான்னு பேசிச் சிரிச்சுக்கிட்டே காத்துல தலையாட்டி ரசிக்குமுங்க நம்மள பாத்து. தண்ணி பாய விட்டு மறுக்கா உழுகுறப்ப சேத்தோட சகதியோட வச்ச கால எடுக்க முடியாம மண்ணு கால கெட்டியா பிடிச்சுக்கிட்டு என்ன பெத்த ஐயா....எங்க போற நீ செத்த நேரம் இங்கதான நில்லுப்புன்னு பெத்த ஆத்தாளா நம்மள இழுத்து புடிச்சுக்கிறும்...

எம்புட்டு நாளு காலை எடுக்காம அப்படியே நின்னுக்கிட்டு நான் அழுதுக்கிறேன் தெரியுமா...ஒரு நா அப்பிடித்தேன்.. ஏரோட மாட்டோட நான் வயக்காட்டு சகதியில நின்னுகிட்டு கண்ணக் கசக்கிட்டு இருக்கயில, நான் கட்டிக் கூட்டியாந்துருக்கேனே...சரசு...சோறு கொண்டு வந்தவ...என்னைய கூப்புட்டு என்னாண்டு கேக்கமா அங்கிட்டு இருந்த போயிக்கிட்டு சேர்வாரு வீட்டு அன்னமயிலு, ஒத்தவீட்டு முருகேசன், பட்டாளத்தான் பொண்டாட்டி செகப்பின்னு அம்புட்டுப் பேரையும் கூப்புட்டு இங்க பாருங்களே....இந்த மனுசன் கிறுக்கொண்டு போச்சுன்னு சொல்லி சிரிக்கிறா பொசகெட்ட சிறுக்கி...

நம்ம புத்தி கிறுக்குப் புத்திப்பு மனுசங்கள விட..ஆடு மாட்டையும் சோறு போடுற நெலத்தையும், மழை கொடுக்குற ஆகாசத்தையும், வயக்காட்ல வேலை செய்யயில கூட பேசிச் சிரிக்கிற செடி கொடியளோடயுந்தேன் நமக்கு சினேகம் அதிகம். என் வூட்டு, ஆடு மாடுகளோட நான் பேசுற அளவுக்கு....ஆளுப்பேருககிட்ட பேசுறது இல்லை. விதைச்சமா, நட்டமா, தண்ணி பாச்சுனமா, அறுத்தமா, வித்தமா மிச்சத்த வீட்ல சாப்பாட்டுக்கு வச்சமான்னு போயிகிட்டே இருக்குமப்பு எங்க பொழுது எல்லாம்...

சோற காசு கொடுத்து வாங்கித் திங்கறது கேவலம்னு எங்க பெரிய அய்யா சொல்லுவாக, ஏன்டா பயலே நீ திங்கறதுக்கு நீ வெள்ளாமப் போட்டுக் கூட திங்க முடியலேன்னா என்னலே ஒனக்கு அம்புட்டு திமிறுன்னு...வெவசயாந்தேன் உன் வேலை அதை ஒழுங்காச் செய்யி....அதுதேன் உனக்கும் எனக்குந்தெரியும். அடுத்தவன் வேலைய நீ செய்யப் போனா அதை ஒன்னால ஒழுங்கா செய்ய முடியாது. நீ வெள்ளாமை செஞ்சு கொடு...இந்த ஒலகம் அதைச் சாப்டட்டும்....வெள்ளாமை பாக்குறது சாமி செய்ற சோலியப்பேன்னு சொல்லுவாக...

இன்னிக்கு லேசு பாசா மழை பெய்யிது...தச்சு வச்ச வெதையெல்லாம் சிரிச்சுக்கிட்டே கண்ணு முழிச்சுறுக்குமப்பு... அப்புடி, இப்புடி மிஞ்சுன 5 ஏக்கர வச்சுக்கிட்டு என் வாழ்க்கைய ஓட்டிகிட்டு இருக்கேன்...

கூறு மாறு கெட்டுப்போச்சாய்யா ஒனக்கு....? இப்புடி நனைஞ்சுக்கிட்டு வர்ற...முடியாமப் போயி படுத்தா என்னத்த செய்யிறது...முந்தானைய கொடுத்துக்கிட்டே வைஞ்ச சரச நிமிந்து பாத்தேன்...

மழ என்னத்த செய்ஞ்டுடப் போகுது...? போடி லூசு சிறுக்கி...தலைய தொவட்டிக் கொண்டே....திண்ணயில ஒக்காந்தேன்...

ஏங்க....மாப்புளயோட தாய் மாமான் வந்தாப்ள...

"என்னத்தா இப்புடி சொணங்குறீக...பய நல்ல வேலை பாக்குறேன்....கயல மலேயாவுக்கு கூட்டிக்கிட்டும் போயிருவாம்....75 பவுனுக்கு ஒரு பவுனு கொறைச்சுப் போட்டினாக்கும் அப்புறம் வேற எடத்ததேன் நாங்க பாக்கணும். கையில ஒரு ரெண்டு லெச்ச ரூவா கொடுத்துருங்க...அப்புறம் எங்க அக்காகாரி வேற எங்குட்டாச்சும்...மாறிப்போயிட்டான்னா என்னைய கேக்கப் புடாது, நல்ல சம்பந்தம் அம்புட்டுதேன் சொல்லுவேன்...

ஒன் புருசன் ஒரு கிறுக்குப்பய...இன்னமும் வயலு வெள்ளாமன்னு கெடந்து ஏன் போராடிக்கிட்டு இருக்கான் இந்த பட்டிகாட்லயே கடந்து சாகணும்னு என்ன விதியா என்ன அவனுக்கு.... இருக்குற காடு கரைய வித்துப்புட்டு பேசி முடிங்கத்தா சீக்கிரம்....அடுத்த ஆவணில கல்யாணத்த வச்சுக்கிடலாம்...நீ சரின்னு சொன்னா அடுத்த முகுர்த்தத்துல தட்ட மாத்திகுடுவோம், அம்புட்டுதேன்"னு சொல்லிட்டு போறாப்புலங்க...." சரசு சொல்லியபடியே மூக்கைச் சிந்திக் கொண்டிருந்தாள்...

" ஏய் இந்த வெள்ளாம வெளையட்டுமடி....இருக்குற காசோட சேத்திப் போட்டு செய்யலாம். நான் எங்கடி போவேன் பொசுக்குன்னு 75 பவுனுக்கு..? இருக்குற பொட்டு பொடிசு எல்லாம் சேத்திப் பாத்தாலும்....40 பவுன தாண்டாதடி. மக மகண்டு கயல மட்டும் பாத்தா போதுமா...ராசுகுமாரு இப்பத்தேன் காலேசு படிக்கிறான்...இவள அடிச்சு புடிச்சு ஒரு பட்டதாரி ஆக்கிபுட்டேன். அவனையும் ஆளாக்கணும்ல....சரியா வந்தா பாக்கலாம் இல்லேன்னா வேற சம்பந்தம் பேசிக்கிறலாம்.." சரசை நிமிர்ந்து பார்த்தேன்...

ஒமக்கு நாட்டு நடப்பு ஒண்ணுமே தெரியாதுய்யா...கயலுக்கு இப்ப 23 வயசு....அவளுக்கும்  மாப்பிள்ளய புடிச்சுப் போச்சு....அவனத்தேன் கட்டுவேன்னு ஒத்தக்காலுல நிக்க்கிறா...அவன் மலேயாவுக்கு போயிட்டான ராசுகுமாரையும் கூட்டிக்கிட்டு போயிடுவாயா....அதனால.................

சரசு இழுத்தாள்.

அதனால....என்னடி....?

பேசாம வயக்காட்ட வித்துப்புட்டு...புள்ளையக் கட்டிக்கொடுய்யா....மிச்ச இருக்க காசுல திருச்சி நாடி போயி ஒரு கட கண்ணி வச்சிப் பொளச்சுக்கிடலாம்....

அடி சண்டாளி என் கொலைய அறுக்கப்பாத்தியடி....எங்கப்பன், பாட்டன் எல்லாம் அலைஞ்சு திரிஞ்ச மண்ணுடி..அதை வித்துப்புட்டு பொழப்பு பொழக்கிறதுக்கு நாண்டுகிட்டு சாகலாம்...கன்னத்தில் விழுந்த அறைக்கு பதிலாய் சரசு போட்ட கூச்சலில் உள்ளே இருந்து கயல் வெளியே எட்டிப்பாத்தது...

சண்டாளி தெரியும்டி ஒஞ்சோலி மசுரு....வேற மாப்பிள பாத்துக் கட்டிக் கொடுக்கலாம் போ...நெலத்த விக்கிறதுக்கு நான் நாலு மொழக் கயிறுல தொங்குறுவேன்....

கையில் கிடைத்த விளக்குமாத்தை சரசு மீது வீசினேன்.

ஏத்தா...ஒண்ணுமில்லத்தா நீ உள்ள போ...ஒங்காத்தாக்கு கிறுக்குப் புடிச்சுப் போச்சு...நீ போத்தா அப்பாக்கு காப்பித்தண்ணி வச்சுக் கொடுத்தா...நான் கயலைப் பார்த்தேன்.

அப்பா...இந்த மாப்ளயவே எனக்கு கட்டி வைங்கப்பா..பத்துப் பேரு என்ன மறுக்கா மறுக்கா பாக்க வரவேணம்ப்பா...நல்ல இடம்னுதேன் என் ப்ரண்ஸ் எல்லாம் சொன்னாக....அம்மா பாவம்பா..எப்டியாச்சும் என்ன கரைத்தம்னுதான் ஒங்க கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கு....கயல் என் காலில் விழுந்து அழுதது.

ஆத்தா எந்திரித்தா....கயலை தூக்கி கட்டியழுதேன். சரித்தா பாத்துக்கிறுவோம்...உள்ள போ...அவள் கண்ணைத் துடைத்து உள்ளே அனுப்பினேன்...!

ஒத்த புள்ளைய இப்புடி கலங்க விடக்கூடாதுதேன்...படிச்ச புள்ள  வயசும்...23 க்கு மேல ஆச்சு.......

" அய்யா...வெவசாயம்தாய்யா நமக்கு உசுரு...நீ ஊருக்கே சோறு போடப் பொறந்த பய....சோத்த காசு கொடுத்து வாங்கித் திங்கிற கேவலம் உனக்கு வரவேக் கூடாதுப்பு, அது ஒரு வெவசாயிக்கி அவமானம். இது மண்ணு இல்லய்யா...நம்ம உசுரு....நான் உழுதுருக்கேன்....ஒங்கய்யா உழுதுருக்காக...உன் பாட்டன் பூட்டன் அம்புட்டுப் பேரும்....ஏர் பூட்டி உழுத மண்ணுய்யா....

என்னைய, உன் பெரியப்பன, சித்தப்பன.. ஒங்கத்தை மாரன்னு சொல்லி அம்ம வம்முசத்தையே... காப்பத்துன பூர்வீக சொத்துயா... விவசாயத்தை விட்டுறாதப்பு..."

செத்துப் போன அப்பனும், ஆத்தாளும், தாத்தனும், பாட்டியும், கையெடுத்து உள்ளுக்குள் அழுது கொண்டிருந்தார்கள். வாழ வாழ வாழ்க்கைய கொடுத்த விவசாயம் இப்போ செவலை புள்ள மாதிரி செழிப்பழிஞ்சு போச்சு....அதே பொழப்பா இருந்த எங்க வாழ்க்க செத்துப் போச்சு...

" நெலத்த வித்தா இருக்குற கடன அடைக்கலாம்..புள்ளைய கட்டிக் கொடுக்கலாம்... டவுனுக்குப் போயி ஏதோ ஒரு கடகண்ணி வைக்கலாம்... எம்புட்டு நாளைக்கியா இந்த கஷ்டம்...ஊருச்சனமே பொழக்கிற வழியப்பாத்து ஓடிப்போயிருச்சு...நீ மட்டும் ஏய்யா..இப்புடி...உன்னோட சேத்து இன்னும் மூணு உயிரு இருக்குன்னு நெனச்சுப் பாருயா..." சரசு புலம்பி கொண்டிருந்தாள்...

மழை விட்டிருந்தது.....நான் டவுனுக்குப் போயி உரக்கடைகாரன் பேரன் பிளாட்டுப் போட்டு விக்கிறான் அவனைப் பாத்துட்டு வாரேன்....

பொசுக்கென்று எழுந்து துண்டை உதறிப்போட்டு நடந்தேன்..

அடுத்த வண்டி வர இன்னும் அரமணி நேரம் இருக்கப்பே...டீ குடிக்கிறியா...டீய எடுத்துக்கிட்டு கிட்ட வந்த குப்புத்தேவர்....

ஏண்ணே அழுகுற.....தோளில் கையப் போட்டான்.....

தேவரே...............கத்திக் கொண்டு குப்புவின் தோளில் சாய்ந்து தேம்பினேன்...

"சாடை மாடையா மழை பேஞ்சுருக்கப்பு....வெதச்சவன் எல்லோருக்கும் கொண்டாட்டந்தேன்... " யாரோ ரோட்டில் பேசிக் கொண்டு சென்று கொண்டிருந்தனர்....
.......
.......
......
........

ஏப்பு காரு வந்துடுச்சு போகலையா....குப்புத் தேவர் என்னை உசுப்பி விட...

எழுந்து வயக்காட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்...தேவா சுப்பையா...
Tuesday, August 20, 2013

வானம் எனக்கொரு போதிமரம்...!


அடையாளங்கள் அழிந்து போன ஒரு வழிப்போக்கனாய் பெரும்பாலும் ஒன்றுமில்லாததற்குள் கிடந்தேன். மழை நின்று போயிருந்த அந்த மாலை மீண்டுமொரு கனத்த மழையைக் கொண்டு வரவும் கூடும். எதுவமற்று அந்த மரத்தடியில் நான் லயித்துக் கிடந்தது போலத்தான் சித்தார்த்தனுமொரு நாள் போதியின் வேர்களுக்கு நடுவே கிளர்ந்தெழுந்த மனோநிலையில் கிறங்கிக் கிடந்திருக்க வேண்டும். மழையை தேக்கி வைத்துக் கொண்டு காற்றின் அசைவுகளுக்கு எல்லாம் நம்மை ஆசிர்வதிக்கும் மரங்களை நான் தேவதைகள் என்றுதான் கூறுவேன்.

ஒவ்வொரு முறை காற்று சில்லிட்டு வீசும் போதும் நீரை என் மீது தெளித்து விளையாடிய மரங்களை எனக்கு அழகான பெண்களோடு ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றியது. அழகு என்ற சொல்லுக்கு வரையறைகள் கொடுக்க நான் விரும்பவில்லை. இது இதுதான் அழகு என்ற கோட்பாடுகளை உலகம் செதுக்கிக் கொண்டே இருக்கிறது இன்னமும். கிளியோபாட்ராவை அழகு என்று வர்ணிக்கும் இலக்கியங்களும் வரலாற்று நாவுகளும் இன்று உலகம் முழுதும் பரவிக் கிடந்தாலும் அவள் அழகாய் இருந்தாளா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டியவன் எனக்கு நான் மட்டுமே. அழகான என்ற சொல் எப்போதும் தனிமனித விருப்பத்தையும் ஆழ்மன தேடலையும் பொறுத்தது.

எனது அழகு உங்களுக்கு அவலட்சணமாகவும் எனது அவலட்சணம் உங்களுக்கு அழகாயும் இருக்கலாம். 

மரம் எனக்கு அழகான பெண்ணாய்த்தான் தோன்றியது. ஒரு ஆணுக்குப் பெண்தான் வேண்டும். எத்தனை சுகங்களை அவன் அனுபவித்தாலும் அதை பெண்ணிடமிருந்து பெற்ற சுகத்தைக் கொண்டுதான் அளவிடுவான். அப்படி அளவிடாமல் ஏதோ ஒன்றில் லயித்துக் கிடக்கிறான் என்றால் அந்த ஏதோ ஒன்று ஒரு பெண்ணை நோக்கி நகர்த்தும் விசமாய்த்தான் இருக்க முடியும். ஆண்களைப் பற்றி பெண்கள் என்ன நினைப்பார்கள் என்று நான் எவ்வளவு யோசித்து புத்தியை மாற்றி ஒரு பெண்ணின் நிலையில் இருந்து எழுதினாலும் அது ஒரு போதும் ஒரு பெண்ணை ஒத்து இருக்கப் போவதில்லை என்பதால் அந்த கணக்கீட்டுச் சமன்பாடுகளை என் மூளையிலிருந்து ஒதுக்கியே வைத்து விடுகிறேன் பெரும்பாலும்.

ஈரமான மரம் மழைக்குப் பின்னான பூமியின் வாசத்தோடு என்னைக் கிறங்கடித்துக் கொண்டிருந்த போது எனக்கு என் அவள் என்னவளாய் இருந்த காலங்கள் புத்திக்குள் இருந்து எட்டிப்பார்த்துச் சிரித்தன. பெண்ணை புணர்வதை விட வாசம் செய்வது எத்தனை  சுகமென்று அதை அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத் தெரியும். புணர்ச்சி...புணர்ச்சி என்று ஓடாமல் நுகர்ச்சி நுகர்ச்சி என்று ஓடிப்பாருங்கள் விழுந்து விடாத உச்சத்துக்குள் செழித்துக் கிடப்பீர்கள். பெண்ணைப் பற்றியே எழுதுகிறாயே என்கிறார்கள் பலர் என்னிடம்..ஒரு ஆணுக்கு பெண்ணைப் பற்றி எழுதுவதை விட வேறு என்ன வேலை இங்கு இருக்கிறது...? என்ற என் எதிர் கேள்வி சமூகத்தின் ஒழுக்க நியதிகளுக்கு எதிரானதாய் கூட இருக்கலாம்.

அடித்தால் வலிப்பது போல...அழகினை ரசிப்பது என்பது இயல்பாய் நிகழ்கையில் அதை எந்தக் கடிவாளம் போட்டு நான் நிறுத்த..? கண்டும் காணாதது போல இந்த உலகம் என்னை நடிக்கச் சொல்கிறது. நான் நடிக்க விரும்பாத ராஜாங்கத்தின் சக்கரவர்த்தி என்று யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வாய்ப்பிருந்தால் எமது ராஜ்யத்திற்குள் ஒரு முறை வந்து பாருங்கள். அங்கே நிலாக்களை வீதி தோறும் கைக்கெட்டும் தூரம் பறக்க விட்டிருப்போம். ப்ரியங்களை சுமந்த விழிகளோடு பெண்டிர் எம்மை ஆளவும் செய்வர் எம்மோடு இணக்கமாய் வாழவும் செய்வர். விருப்பங்களின் பெயரில் நகரும் எமது வாழ்க்கையில் சக மானுடரை காயப்படுத்தும் வகையில் செயலொன்றுமே இருக்காது. எங்களுக்கு மொழி என்பது அவசரத்தேவைக்காக பயன்படும் ஊர்தியைப் போலத்தான். மெளனங்கள் சுமந்த அந்த உலகில் உணர்தலால்தான் நாங்கள் எங்களின் உணர்வுகளை விளங்கிக் கொள்வோம்.

ஆயுதங்கள் என்றால் என்னவென்று யாரும் அங்கே அறிந்திலர். புத்தி பிறழ்ந்து போனவர்களை உற்று நோக்கி நாம் அவர்களைச் சரிசெய்வோம். இலக்கணங்களும் தத்துவங்களும் என்றால் என்னவென்று எங்களுக்குத் தெரியவே தெரியாது. மழை பெய்யும் நாளெல்லாம் எமக்கு பண்டிகைகள், எமது ஓய்வுகளில் எல்லாம் ஒன்று கூடிச் சென்று இயற்கையின் அழகினைக் கண்டுகளிப்போம். எங்களின் வேலை என்பது எமக்காய் உணவு தேடுதலும், உணவு உற்பத்தி செய்தலுமே! விருப்பங்களில் சுதந்திரம் இருப்பதால் எமக்கு இயல்பாய் போன நேர்மையில் எமது இருப்புகளை நேசித்து, நேசித்து இன்பம் துய்ப்போம்.

அது வேறு மாதிரியான வாழ்க்கை. அது பற்றி உங்களுக்குப் புரியாது. சப்தங்கள் இல்லாத எமது ராஜ்யத்தில் எமக்கு கண்ணீரும், மகிழ்ச்சியும் ஒன்றுதான். இருப்பதை விளங்கி இல்லாமைக்குள் நகர்ந்து செல்வது எப்படி என்றுதான் வாழ்நாள் முழுதும் பயின்று கொண்டிருப்போம். எமது உணர்வுகள் எம்மை ஆளுகையில் எமக்கு எந்த ஒரு கட்டுப்பாடுகளும், நெறிமுறைகளும் தலைவர்களும் அங்கே இலர். எம்மில் சிறந்தது எப்போதும் எம்மை வழிநடத்தும். இங்கே தலையாய உணர்வுகொண்டோர் தலைவர்கள். தங்களின் இருப்பினை உணர்ந்து இல்லாமல் வாழ்வோர் சக்கரவர்த்திகள். இது வாசனையான உலகம்...வசந்தத்தை மகிழ்ச்சியோடு மட்டும் தொடர்புபடுத்திக் கொள்ளாமல் துக்கத்தோடும் தொடர்புபடுத்தி வாழும் ஒரு துயரற்ற வாழ்வு.

மீண்டுமொரு முறை காற்றுக்காய் தலையசைத்து என் மீது நீர் தெளித்த மரத்தினை வாஞ்சையோடு மனதால் வாங்கிக் கொண்டேன். மனதை முதலில் அவிழ்த்துப் போட்டு புத்தியால் நிர்வாணமானேன். அந்த நிர்வாணத்தில் உடலும் ஓடிப் போய் ஒளிந்து கொள்ள உணர்வொன்று பிரம்மாண்டமாய் சிலிர்ப்பென்னும் உணர்வோடு புணரத்தொடங்கி  இருந்தது. இங்கே சுகம் என்பது மட்டுப்பட்டதாய் இருக்கவில்லை. இது முன்பொரு காலத்தில் பெண்ணோடு சல்லாபித்த சுகத்தை நினைவுபடுத்தியதே அன்றி இது அதுவல்ல. அங்கே இயக்கம் இருக்கும். ஆண் பெண் அசைவுகள் இருக்கும். இங்கே நான் என்னும் என்னுணர்வு மனம் கழிந்து ஓரு ஆணைப் போல நின்றது....உள்ளுக்குள் பரவசத்தைக் கிளறிய ஒர் பெரும் உணர்வு பெண்ணைப் போல நின்றது. இங்கே இரண்டும் சேர, சேர அசைவு அடங்கிக் கொண்டிருந்தது. 

சிலிர்ப்பாய் உள்ளுக்குள் அடங்கிக் கொண்டிருந்த நான் என்னும் உணர்வை, அந்தச் சூழல் என்னும் குளுமை நிறைந்த பெண் அடக்கி கொண்டிருந்தாள். பிரக்ஞையற்று மரத்தின் வேர்களில் நான் நழுவிக் கிடக்கையில் நான் இருக்கிறேன் என்ற உணர்வை வேகமாய் என்னை ஆக்கிரமித்த பெண்ணுணர்வு அழித்துக் கொண்டிருந்தது. வேகமான இயக்கம் அது......ஆனாலும் இயக்கமில்லாதது போலத்தான் தோன்றியது. இங்கே எது உச்சமாயிருக்கும் என்ற கேள்வி ஒன்று மனதிலிருந்து மெல்ல எட்டிப்பார்க்க....பார்த்த கணத்திலேயே உணர்வின் ஆளுமையால் அது அழிந்தும் போனது. 

உடலின் உச்ச இன்பம்தான் இங்கே ஆரம்பமாயிருந்தது....

ஏதேதோ கதவுகள் திறந்து கொள்ள விழிகள் திறந்தபடியே அங்கே அனுபவித்தல் என்ற ஒன்றை மட்டுமே உணர முடிந்தது. இருக்கிறேன் என்ற உணர்வைத் தவிர வேறொன்றும் தெரியவில்லை. இடுப்பின் கீழ் தண்டுவடத்தின் அடிப்பகுதியில் ஏதோ ஒரு சக்தி அசைந்து கொண்டிருந்தது. மெல்ல மேலெழுவதும்.. பின் கீழ் செல்வதுமாயிருந்த அந்த ஒன்று...ஒரு கணத்தில் சீறிப்பாய்ந்து அடிவயிற்றில் மோதியது.  அப்போது ஆழமாய் சுவாசித்துக் கொண்டிருந்தேன். கண்கள் மேல் நோக்கிச் சென்று புருவமத்தியில் சென்று தஞ்சமடைந்த அந்த நொடியில் மீண்டும் மேலேறிய அந்த சக்தி அடுத்து வயிறு, நெஞ்சு, என்று சென்று உள்ளுக்குள் இருந்த அடைப்புக்களை கிழித்தபடியே நகர்ந்து கொண்டிருந்தது. இது எல்லாவற்றையும் ஒரு சாட்சியாய் நின்று வேடிக்கைப் பார்த்த மனம் ஒடுங்கிப் போய்க்கிடந்தது. நடுநெஞ்சிலிருந்து புருவமத்திக்கு நகர்ந்த அந்த சக்தி....

புணர்ச்சி என்றால் என்னவென்று ஆழமாய் பாடமெடுக்க....கோடிமுறைகள் உச்சத்தை தொடும் நிகழ்வொன்றை நெருங்கிக் கொண்டிருக்கும் கணத்தை எனக்கு கொடுக்கப்போகிறது என்று மெல்ல விளங்கியது. சராசரி வாழ்க்கையில் பெரும்பாலும் ஆண் இயங்க, பெண் வாங்கிக்கொள்ளுமிடத்தில் இருப்பாள். இங்கே நான் பெண்ணாயிருக்க பெண்ணை ஒத்த பிரபஞ்ச சக்தி என்னை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. புருவமத்தியில் நிலைகொண்டிருந்த சக்தி...என்னை உள்ளுக்குள் கதறவைத்தது. போலியாய் உடலுக்குள் நின்று கொண்டு பெண் சுகத்துக்காய இயங்கும் ஒட்டு மொத்த உலகத்தையும் என் முன் தோலுரித்துக்காட்டி அதை மட்டுப்பட்டது என்று சொல்லிக்காட்டி....பிரபஞ்ச விருத்தி என்னும் மையம்தான் வாழ்க்கையின் ஆதாரம் என்றுணர்த்தியது.

காமத்தில் ஜனித்து...காமத்தில் வளர்ந்து....காமத்தில் மரிக்கும் வாழ்க்கைக்கு எத்தனை வர்ணமடித்து வைத்திருக்கின்றனர் இம்மானிடர் பார் என்றொரு உணர்வு உள்ளுக்குள் தோன்ற...கதறியழுது கொண்டிருந்த என் உணர்வுக்குக் காரணமாய் பழைய பொய்க்கற்பிதங்கள் இருந்து போயின. புருவமத்தியில் படுத்துக் கொண்டிருந்த அந்த சக்தியின் ஆளுமைதான் அங்கிங்கெனாதபடி பரவிக்கிடப்பதாய் எனக்குப் பட்டது. நான் என் அகத்தொடர்புகளையும் அறுத்துக் கொண்டிருந்தேன். ஒப்புக்கொடுத்தல் என்னும் சரணாகதி என்றால் என்னவென்று தெளிவாய் விளங்கியது.

இதற்குமேல் ஒன்றுமில்லை இனி எல்லாம் ஈசன் செயல் என்ற ஒரு வாக்கியம் உள்ளுக்குள் ஓடி மறைந்தது. நான் கால்கள் நீட்டி கைகள் விரித்து சரிந்து கிடந்தேன்...முழுமையான பிரவாகத்தோடு ஒற்றை வீச்சில் புருவமத்தியிலிருந்து சீறிப்பாய்ந்த அந்த சக்தி...மூளைக்குள் இறங்கிக் கூடி அந்த கலப்பில் ஏதேதோ திரவங்கள் சுரந்து மூளையை மூழ்கடிக்க...மொத்த உணர்வும் அடங்கி என்னை ஆட்கொண்ட சக்தி எது...? நானெது..? என்றறிய முடியாத உணர்வுக்குள் அமிழ்ந்தே போனேன்...!

கட்டுக்குள் நிற்காத இவ்வாழ்க்கை அழகு.....
புலன்களுக்குள் பூட்டிக்கொள்ளாத பாவம் அழகு....
தேவைகளற்ற விருப்பங்கள் அழகு.....
ப்ரியங்கள் கொண்ட பார்வைகள் அழகு.....
திணிக்கப்படாத அறிவுகள் அழகு....
வர்ணங்கள் நிறை கனவுகள் அழகு...
கற்பனைகள் நிறைந்த கவிதைகள் அழகு
பொருள் கொண்டு கணிக்காத உறவுகள் அழகு
காமம் கடந்த பாலினங்கள் அழகு..
அறிவு நிறை பெண்கள் அழகு...
பெருமைகள் பேசா ஆண்கள் அழகு
காலங்கள் மறக்கும் மனங்கள் அழகு...
கர்வம் கொள்ளாமல் படைப்பவன் அழகு...
சுற்றும் பூமி அழகு....
சுடும் சூரியன் அழகு
தேய்ந்து வளரும் நிலவும் அழகு...
ஆழக்கடல் அழகு...
தேங்கி நிற்கும் நீரும் அழகு...
சுத்தங்கள் அழகு....
அசுத்தங்கள் அழகு...
கண்டவை அழகு.....
காணாதவை எல்லாம் இன்னும் அழகு....

எங்கும் முடிச்சிட்டுக் கொள்ளமல்....காற்றில் தவழும் ஓசையைப் போல, நாசி தொடும் நறுமணம் போல..., உடலைத் தழுவும் மென்குளிர் போல, விரவிப் பரவும் பளீர் ஒளி போல....இருந்தேன்....

மணல் புரளும் அழகிய கடற்கரைகளில் அவன் மீட்டிக் கொண்டிருக்கும் அற்புத இசையொன்றை வாசித்துக் கொண்டிருக்கும் அலைகளையும், நீல வானத்தில் அவன் தீட்டி வைத்திருக்கும் பஞ்சுப்பொதி ஓவியங்களையும்.....உணர்வுகளுக்குள் இருந்து மெல்ல தடவிப்பார்த்தேன். அது அவனா? இல்லை...அவளா...? முன் நெற்றியில் விழுந்த மழைத்துளி ஒன்று என்னை உடலென்னும் பிரக்ஞைக்குள் கொண்டு வர வெகுநேரம் முயன்று கொண்டிருந்தது. பகுதி விழிப்பு நிலையில் மெல்ல கண்கள் திறந்து கொள்ள...

மரம் என்னைப் பார்த்து சிரித்தபடியே மீண்டும் நீர்த்துளிகளை  தெளித்து.... எம்மையும் போதியென்று அறிவிப்பாயோ என்று நமட்டுச் சிரிப்பொன்றை உதிர்க்க....

வானத்தைப் பார்த்தேன்...மறுபடி மழை வரும்போலத் தோன்றியது.....மேகங்கள் அவசர அவசரமாய் நகர்ந்து ஏதேதோ செய்திகளைப் பரிமாறிக் கொண்டிருந்த போதே....


அங்கே அடித்துப் பெய்தது மழை.....! தேவா சுப்பையா...Wednesday, August 14, 2013

தம்பியுடையான்....!தம்பிங்க பொறந்தப்ப எனக்கு ஆறு வயசு இருக்கும். காலையில எழுந்தப்ப உங்களுக்குத் தம்பி பாப்பா பொறந்து இருக்குன்னு எதிர்வீட்டு வைதேகி அக்கா சொன்னாங்க. அம்மா, அப்பா ரெண்டு பேரும் இல்லாம நானும் அக்காவும் படுத்து இருந்து இருக்கோம் துணைக்கு வைதேகி அக்கா இருந்து இருக்காங்க. ஒரு ஏழு மணி போல இருக்கும் அப்பா வந்தாங்க...டேய் உனக்குத் தம்பி பொறந்து இருக்காண்டான்னு சொன்னப்ப...எனக்கும் அக்காவுக்கும் ரொம்ப சந்தோசமாயிடுச்சு...! கடையில இருந்து அப்பா டீ வாங்கிட்டு வந்து கொடுத்தாங்க.. குடிச்சுட்டு...கிளம்பி.. நடக்குற தூரத்துல இருந்த கவர்மெண்ட் ஹாஸ்பிட்டலுக்கு  போனோம்.

வெள்ளை  பெயிண்ட்ல சுவர சுத்தி பச்சை கலர் பார்டர் அடிச்சு அது மேல சிவப்பு கலர்ல பார்டர் கொடுத்து ஆஸ்பத்திரி ஒரு மாதிரியா மிரட்சியாத்தான் இருக்கும் அப்போ எல்லாம். உள்ள நுழையும் போதே அடிக்கிற மருந்து வாசனைகளை எல்லாம் கடந்து உள்ள போகும் போதே வேற ஏதோ ஒரு உலகத்துக்குள்ள வந்து இருக்க மாதிரி தோணும். அதுவும் எனக்கு ஆஸ்பத்திரில இருக்க டாக்டர்ஸ விட நர்சுங்க, கம்பவுன்டர்கள கண்டா ரொம்பவே பயம்.  அதட்டிக்கிட்டு ஒரு  மாதிரி மிரட்டலாவே பேசுவாங்க எப்பவுமே..! நான் அந்த ஆஸ்பத்திரிக்கு இதுக்கு முன்னால ரெண்டு வாட்டி போயி இருக்கேன்னு நினைக்கிறேன். 

ரெண்டு வாட்டியும் அம்மாதான் மல்லுக்கட்டி அப்பா கூட சைக்கிள்ள அனுப்பி வச்சாங்க. வைத்துல பூச்சி இருக்குடா தம்பி ஆஸ்பத்திரிக்கு போனா சிரப்பு கொடுப்பாங்கன்னு, சிரப்பு ரொம்ப இனிப்பா இருக்கும்டான்னு அதை சாப்டா குண்டா ஆகலாம்னு அம்மா சொன்னத நம்பி நான் ஆஸ்பத்திரிக்குப் போனா அங்க இருந்த டாக்டர் கை நிறைய த/அ மாத்திரையையும் கொடுத்து அதையும் சாப்ட சொன்னாங்க. எனக்கு அடுத்தாப்ல வந்தவருக்கும் அதே த/அ மாத்திரைதான் கொடுத்தாரு டாக்டர் ஆனா அவருக்கு காது வலின்னு சொன்ன மாதிரி எனக்கு கேட்டுச்சு.  அப்போ எல்லாம் அம்புட்டு யோசிக்கறது இல்லை...என்னங்க டாக்டருக்கு தெரியாததையா நாம யோசிச்சுப்புட போறோம்...

ஆக்சுவலா பாத்தீங்கன்னா, வெள்ளை கலர், மஞ்சக் கலர், ரோஸ் கலர். இந்த மூணு வகையான மாத்திரைகளையும் ஒரு ட்ரம்மு நிறைய ஒரு மாதிரி கருஞ்சிவப்புக் கலர்ல இருக்க ஒரு சிரப்பையும் வச்சுக்கிட்டுதான் மொத்த ஆஸ்பத்திரியோட புற நோயாளிகளையும் சமாளிப்பாய்ங்க.. அடிகிடி பட்டு வந்தா இருக்கவே இருகு டிங்சர் ஆஃப் அயோடினும் பஞ்சும், பேண்டேஜும். அந்த ஒத்த ஆஸ்பத்திரியில ஊரு சனமே வந்து மருத்துவம் பாத்துக்கிட்டு அது சரியாவும் போயிரும்னா பாத்துகோங்களேன்..! இப்ப மாதிரியா அப்ப எல்லாம்...உடம்பு சரியா இல்லேன்னா சரியாப் போறதுக்கு சரியா மருந்து கொடுத்த காலம் அது. மருத்துவம் மருத்துவமா இருந்த நேரம். இப்போ மருத்துவம் வியாபாரமா போச்சுன்றது பத்தி இன்னொருக்கா பேசையில பேசுவோம்...

இப்போ தம்பிய பாக்க போலாம் வாங்க...

அப்பா கைய புடிச்சுக்கிட்டு ரொம்ப ஆர்வமா அம்மா இருந்த அறைக்குள்ள நுழைஞ்சோம். பெரிய அறைதான் அதுன்னு வச்சுகோங்களேன். நான் அம்மா கிட்ட படுத்து இருந்த தம்பிய போய் ஆசையா அந்த குட்டியோட பிஞ்சுக் கையில என் கைய வைச்சேன்... டபக்குன்னு புடிச்சுக்கிட்டான்...கொஞ்சம் தடிசாவே இருந்தான். என் தம்பி எனக்கு துணை அப்டீன்னு நான் நினைச்சு சந்தோசப்பட நிறையவே காரணம் இருக்கு.

எங்க ஊர்ல பட்டாணி ராவுத்தர்னு ஒருத்தர் இருந்தாரு அவருக்கு அஞ்சோ ஆறோ பசங்க...பகுருதீன் கிட்ட சண்டை போட்டா முஜிப்பு வருவான் ஏன்டா எங்க அண்ணன அடிச்சேன்னு..., முஜிப்பு கிட்ட தகராறுன்னா அவன் தம்பி கலந்தர் வருவான்...கலர்ந்தர் கிட்ட எதித்து பேசினோம்னா நஜீர் வருவான்... இப்டி மொத்தமா அண்ணன அடிச்சா தம்பி, தம்பிய அடிச்சா அண்ணேன்னு மாத்தி மாத்தி வருவாய்ங்க. பெரும்பாலுமே யார்ட்டயாச்சும் சண்டை போட்டா, அவன், அவன் நான் என் அண்ணன கூட்டிட்டு வருவேன் தம்பிய கூட்டிட்டு வருவேன்னுதான் சொல்லுவாய்ங்க எல்லா பயலுகளும், நான் மட்டுந்தான் எங்க அப்பாவ கூட்டிட்டு வருவேன்னு சொல்லுவேன்...

எங்க அப்பாவே ஒத்தப் பொறந்தாரு. அஞ்சு அக்கா தங்கச்சிக்கும் நடுவுல நாலாவதா பொறந்தவரு. நான் ஒத்தப் பொறந்தவனா இருக்கதால எல்லாத்துக்கும் யோசிச்சு யோசிச்சுதாண்டா காலை எடுத்து வைப்பேன். தனியா வளர்ந்தாலே கொஞ்சம் பயத்தோடதான் வாழ்க்கைய எதிர் கொள்ளணும்ன்னு அப்பா அடிக்கடி எங்கிட்ட சொல்லுவாங்க. எங்க அப்பத்தா கூட சுப்பையா ஒத்த பொறந்தவன் அவனை யாரும் எதுவும் சொல்லாதீங்கன்னு அடிக்கடி சொந்தக்காரங்க கிட்ட எல்லாம் சொல்றத கேட்டு இருக்கேன். எங்க அத்தைங்க எல்லாம் கூட ஒத்தப் பொறந்தவன்ப்பா ஒங்க அப்பன்...பதவுசதான் பேசணும் அவன்ங்கிட்டன்னு நான் காலேஜ் படிக்கிற வரைக்கும் என்கிட்ட சொல்லி இருக்காங்க...

அதனாலேயே அப்பாவுக்கு என்னைய ஒத்தப் பொறந்தவனா விட மனசு இல்ல போல இருக்கு. தம்பிய கைய பிடிச்சிக்கிட்டு ஆசையா அவன பாத்துட்டு இருந்தேன் கொளுக் கொளுக்னு எந்தம்பிய பாத்து  எப்படா தம்பி பெரியாளா வருவா...? எந்தம்பி வருவாண்டா என்னைய அடிச்சான்னு நானும் சொல்வேன்லன்னு சொல்லிப் பாத்துக்கிட்டு இருக்கையில எங்க அம்மாவுக்கு அந்தாண்ட சைட்ல இருந்து இன்னொரு அழுகைச் சத்தம் கேட்டுச்சு...அட.. என்னாட இவன் இங்கிட்டு கிடக்குறான் அங்கிட்டு இருந்து சத்தம் வருதுன்னு எட்டிப் பாத்தா.. அங்கிட்டு ஒருத்தன் அழுதுக்கிட்டு இருக்கான்.. அட என்னங்கடா இதுன்னு அப்பாவ நிமிந்து பாத்தேன்...

உனக்கு ரெண்டு தம்பிங்கடா.. அப்பா சந்தோசமா சொன்னாங்க. நானும் அக்காவும் ஒருத்தரை ஒருத்தர் சந்தோசமா பாத்துக்கிட்டோம். புது வரவு அவ்ளோ சந்தோசமா இருந்துச்சு. ரெண்டு பேரையும் எப்படா வீட்டுக்கு கூட்டிட்டுப் போவோம்,  எந்தம்பிங்க எப்படா வளர்வாங்கன்னு ஒரே ஆசை எனக்கு...

எனக்கு ரஜினி ரொம்ப பிடிக்கும். மூன்று முகம் படத்துல அருண் கேரக்டர்ல இருக்க ரஜினிய வில்லன் கோஷ்டி அடிச்சுட்டு இருக்கப்ப ஜான் கேரக்டர்ல இருக்க ரஜினி தம்பி புடி அப்டீன்னு சொல்லி ஒரு கட்டைய தூக்கிப் போட்டு ஹெல்ப் பண்ணுவாங்க. அடிக்கடி நான் மூன்று முகம் ரஜினி மாதிரி என்னைய என் தம்பிங்க ரெண்டு பேரையும் நினைச்சுப் பாத்துப்பேன். முதல்ல நான் கையத் தொட்ட தம்பி நல்லா புஷ்டியா இருப்பான். அம்மா இவனுக்கு பால் கொடுத்துட்டு, அடுத்தவனுக்கு பால் கொடுக்கறதா நினைச்சு சில நேரம் பை மிஸ்டேக்கா  இவனுக்கே மறுபடி கொடுத்துடுவாங்க அதையும் இவன் குடிச்சுடுவான். நாங்க இருந்த ஊர்ல பெரமையான்னு காவல் தெய்வம் இருக்கு. அத வேண்டிகிட்டு புஷ்டியா இருந்த தம்பிக்கு பிரேம் குமார்னு வச்சோம். கொஞ்சம் ஈசியா இருந்த தம்பிக்கு ராம்குமார்னு வச்சோம். ராம் பிறந்து கொஞ்சம் வினாடிகள்ள பிரேம் பொறந்ததா சொல்லுவாங்க...

எங்க வீட்ல இருக்க எல்லோரும் அவனுகள அடையாளம் கண்டு பிடிச்சுடுவோம் வெளில இருக்க ஆளுங்களுக்கு கொஞ்சம் இல்ல நல்லாவே கஷ்டம். நான் அவனுக தூங்கும் போது தொட்டி பிடிச்சு ஆட்டி இருக்கேன். அக்காவும் நானும் தம்பிங்க ரெண்டு பேரையும் அம்மா சமைக்கும் போது தூக்கி வச்சு இருந்து இருக்கோம். அக்கா என்னோட ஒரு வயசு கூட, சோ.. அக்கா.. அக்கான்ற ஒரு தூரம் இல்லாம ப்ரண்ட் மாதிரிதான் இருப்போம்.  ரெண்டு பேரும் எனக்காகவே பொறந்தவனுங்கன்னு அம்மாவும் அப்பாவும் அடிக்கடி சொல்லுவாங்க...

நான் இல்லாதப்ப தம்பிங்ககிட்ட,  டேய்....அவனுக்காகத்தாண்டா உங்கள் பெத்தேன்னு அடிக்கடி அப்பா சொல்லுவாங்களாம். என்கிட்ட தம்பிங்க ரெண்டு பேரையும் அனுசரிச்சு நல்ல படியா பாத்துக்கணும்பா நீன்னு சொல்லுவாங்க...

அப்பா இறக்கறதுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி கூட.. தேவா. தம்பிங்க  ரெண்டு பேரும் உன் பிள்ளைங்க மாதிரி, கூட கொறச்சு இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணி போகனும்னு சொன்னது இப்பவும் காதுல கேட்டுகிட்டே இருக்கு...

அப்பா இறந்து 83 நாள் ஆச்சு.. இதோ அப்பா  இல்லாம என் தம்பிங்க ரெண்டு பேரும் 32வது பிறந்த நாள வலியோட எதிர் கொண்டுட்டு இருக்காங்க.  காலையில ராம்க்கு கால் பண்ணி விஷ் பண்ணீனேன்.. அடப் போண்ணே...அதையெல்லாம் மறந்துட்டேன், கலெக்டர் ஆபிசுல இருக்கேன் புது ரேசன் கார்டு வாங்க வந்தேன்னு விரக்தியா சொன்னான்....அப்புறம் பிரேம்க்கு போன் பண்ணினேன்...அம்மா கூட இருக்கேன் அண்ணே...பொறந்த நாள் கிடக்கு பொறந்த நாள்னு சொல்லிட்டு அம்மகிட்ட போன குடுத்துட்டான்...

அம்மாகிட்ட பேச முடியாம பேசினேன்.. அம்மா தம்பிங்களுக்குப் பொறந்த நாளும்மா...ஆசிர்வாதம் பண்ணுங்கம்மா....நீங்கதான்மா அப்பா.. நீங்கதான்மா அம்மா..தம்பிங்க பாவம்மா... இந்த நேரம் அப்பா இருந்தா எனக்கு போன் பண்ணி சொல்லி இருப்பாரும்மா.....டேய் தம்பிங்களுக்குப் பிறந்த நாள் இன்னிக்கு நீ பேசினியாடான்னு கேட்டு இருப்பாரும்மா...ன்னு சொல்லி முடிக்கும்  முன்னாடி அம்மா அழுதுட்டங்க...

14.08.2013 இன்னிக்கு இரண்டு பேரையும் கட்டிப் பிடிச்சு மானசீகமா வாழ்த்திட்டேன்......நூறு வயசுக்கு தீர்க்காயுசா செல்வ செழிப்போட அவனுங்க இருக்கணும்னு....

நாந்தானுங்களே இப்ப அப்பா கூட.....தேவா சுப்பையா...
Sunday, August 11, 2013

மொழியற்றவனின் பாடல்....!


கலவிக்கென்று யாதொரு வரைமுறையும் இல்லை. இது இப்படித்தான் என்றொரு படிப்பு வாசனையோடு எந்த ஒரு பெண்ணையும் அணுகுமிடம் ரொம்பவே செயற்கையானது. மழை பெய்து கொண்டிருந்த அந்த இரவு வேளையில் என் கண்ணாடி ஜன்னலின் வழியே வழிந்து கொண்டிருந்த மழை கவிதையாய்த் தெரிவதும் வாழ்க்கையின் கண்ணீராய் தெரிவதும் எந்த மனோநிலையில் நாம் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தது. விடியலில் எழும் பறவைக்கென்று என்ன இலக்கு இருக்க முடியும்..? திரும்பிய திசைகள் எல்லாம் அதற்கான வழிகள் திறந்து கிடக்கின்றன. அமர்ந்த இடமெல்லாம் அவற்றுக்கு வசிப்பிடமாய் ஆகிப்போக்கும்...

இடுப்பில் கை கொடுத்து அணைத்து அவளை கால்களால் இறுக்கியபடியே நான் அந்த மழை பெய்யும் இரவினைக் கொண்டாடிக் கொண்டிருந்தேன். பின்னிரவு வரை சல்லாபித்துக் கிடந்து, இடவலம், மேல் கீழ் என்று உடல் முறுக்கி, மூச்சிறைக்க ஏதோ ஒன்றைத் தேடி அடையும் பிரயாசையுடன் உடல்கள் உரசிக்கொள்ளும் கலவி ஒன்றை நீட்டித்து நீட்டித்து....உடலும் மனமும் போதும், போதும் என்று கெஞ்ச முழுதுமாய் உச்சம் தொடச்செய்து பின் மலைமுகட்டில் சரியும் ஒரு முரட்டுக் குதிரையாய், கழுத்து மடங்கி, வாய் கோணி, கால்கள் இழுக்க, அடுத்த கணம் இறக்கப்போகும் ஒரு மனிதனாய் துடி துடித்து காமத்தை முடித்து வைக்கும் கணத்தில்தான்...கடவுளென்று  போதிக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம் இதுதானென்று நமக்குப் பிடிபடும்.

அதிகாலை அரைத்தூக்கத்தில் புரண்டு படுத்து மீண்டும் கயலை மனதுக்குள் கொண்டு வந்து கலைந்து போயிருந்த கனவை தொடங்க முயன்று கொண்டிருந்தேன்.....

ஏதோ சப்தம் கேட்டு மெல்ல கண் விழித்து படுக்கையிலிருந்து புரண்டேன். கயல் வந்திருந்தாள். அவளிடம் எப்போதும் என் வீட்டின் இன்னொரு சாவி இருக்கும்.

நான் போர்வைக்குள் இருந்து நெளிந்து கொண்டிருந்தேன். நான் வந்து அரை மணி நேரம் ஆச்சு...இன்னும் தூக்கம்.. மணி 9 ஆச்சு...எழுந்திரிடா ஸ்டுப்பிட்........!!!!  என் முன் இரண்டு கப் காபியோடு வந்து அமர்ந்தாள். இரண்டு நாள் இங்க இருக்க மாட்டேன்டா...மறுபடி புதன்கிழமைதான் வருவேன்...! சண்டேதானேன்னு ஒரு நாள் முழுசும் படுத்து புரண்டுக்கிட்டே இருக்காத....என்ன சரியா...முதல்ல இந்த காபிய குடி.......

இப்போது எனக்கு முதுகு காட்டி அவள் கண்ணாடி பார்த்துக் கொண்டிருந்தாள். ஹம்ம்ம்ம் சரிடி....போய்ட்டு வா... என்ன இப்போ இரண்டு நாள் அவசரம்...ஊருக்கு...?

என் பக்கம் திரும்பினாள்..

ஹ்ம்ம்ம்க்கும் இப்போவாவது கேட்டியே...சைட் ஒண்ணு வாங்கினேன்னு சொன்னேன்ல.....அதை விக்கணும் வித்துட்டு...ஏற்கெனவே கிராமத்துல இருக்க வீட்ட இடிச்சுட்டு புது வீடு கட்டலாம்னு ...அம்மா சொன்னாங்க...அதான்...

விக்கப் போறியாக்கும்...? நான் கேட்டதை அவள் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.

டேய்....எப்போ நம்ம கல்யாணம்டா...அம்மா கிட்ட எல்லாத்தையும் ஏற்கெனவே சொல்லிட்டேன். இப்போ போனா மறுபடி கேப்பாங்களே...என்ன சொல்ல...

நான் குப்புறப்படுத்துக் கொண்டேன்.

ஏதாச்சும் சொல்லுடி.....எனக்கு கல்யாணம் பண்ணிக்குறதுல ஒரு பிரச்சினையும் இல்லை.....உனக்குதான் என்னால பிரச்சினை....நான் சொல்லிக் கொண்டிருந்த போதே...அலைபேசி சிணுங்கியது...

கயல் போனை எடுத்து ஹலோ என்றது...ஹ்ம்.....யாரு கீர்த்தனாவா..? உதடு சுளித்தது கயல்...அவர் படுத்து இருக்காரே......ம்ம்ம்...நான் யாரா...? இந்தாங்க அவர்கிட்டயே கேளுங்க...

போன் படுக்கையில் எனக்கருகே பரிதாபமாய் வந்து விழுந்தது....ஹாய் கீர்த்த்த்...யா...யா.. கயல்தான்...ம்ம்ம்ம் ஒரு ரெண்டுநாள் டைம் கொடுடி எழுதிக் கொடுத்துடுறேன்.....ஓ...யெஸ் வாயேன்...ஐயம் ஃப்ரி.... சுர்..போலாம்...போலாம்...லவ்  யூ டூ...பாய்...

போனைத் துண்டித்தேன். நான் கிளம்பறேண்டா...கயல் கோபமாய் என்னிடம் வந்தாள்.... ஏன்டா இந்த கீர்த்தனா கிட்ட இப்படி வழியுற....தொப் என்று படுக்கையில் அமர்ந்தாள். 

வழிஞ்ச்சேனா...நான் ஏன் அவகிட்ட வழியணும்...?

நான் ஒரு பையன் கிட்ட இப்டி பேசினா நீ ஒத்துக்குவியா..? என்னை பழி தீர்ப்பதாய் நினைத்துக் கொண்டு காலம் காலமாய் இந்த சமூகம் பயன்படுத்தும் ஒரு துருப்பிடித்த தலைமுறைகள் கடந்த ஆயுதத்தை கையிலெடுத்தாள்....நான் என்ன பதில் சொல்லப் போகிறேன் என்பது அவளின் மில்லியன் டாலர் கேள்வி...!

எனக்கு உன்னைப் பிடிக்கும் கயல். அத்தோடு விடு...இரவு முழுதும் கயலோடு கனவில் போட்ட ஆட்டம் ஏனோ தேவையில்லாமல் நினைவுக்கு வந்தது...

உனக்கு எது பிடிக்குதோ அதை நீ செய் கயல். நான் ஒண்ணும் சொல்லமாட்டேன்...கீர்த்தனா என்னோட கொலிக்,  ஒண்ணா குப்பைக் கொட்றோம். அவளுக்கு என்னை பிடிக்கிறதுக்கு ஏதோ காரணம் இருக்கலாம். எனக்கும் கூட அவளைப் பிடிக்கலாம். அதையும் நம்ம ரிலேஷன்சிப்பையும் கம்பேர் பண்ணாத கயல்...ப்ளீஸ்!

புதன்கிழமை நீ வரலேன்னா நான் உன்னை தேடுவேன். என்ன ஆச்சோன்னு பதறுவேன்....? உன்னை தொடர்பு கொள்ள முயற்சி செய்வேன்...கீர்த்தனாவோ, ப்ரியாவோ, வாணியோ வரலேன்னா தேடமாட்டேன்...

ஒ...உன் லிஸ்ட் இவ்ளோ பெரிசா....?அப்புறம் என்ன டேஷ்க்குடா என்னை லவ் பண்ற..? யூ கேன் என்ஜாய் யுவர் லைஃப் வித் ஆல் தீஸ் கேர்ல்ஸ் ரைட்....? கயல் என் தலையை பிடித்து திருப்பியது...

உன்ன நான் லவ் பண்றேன்...வீ ஆர் கோயிங் டூ மேரி சூன்...உன்ன துரோகிச்சுட்டு இந்த லிஸ்ட்ல இருக்க யார் கூடவும்...ஓடிப் போய்டமாட்டேன்...ட்ரைட்டு அன்டர்ஸ்டேண்ட் தட்....

நான் கொஞ்சம் சப்தமாகவே பேசினேன் ....

தென்.. தென்... வொய் சுட் யூ சே....லவ் யூ டூ...டு சம் ஒன்...? இந்திய தேசத்தின் தொன்மைகள் படித்துக் கொடுத்திருக்கும் ஒரு ஆதாரக் கேள்வி என் கழுத்துக்கு வந்தது.

இஃப் சம் ஒன் சேய்ஸ் லவ் யூ டு மீ....வாட் ஐயம் சப்போஸ்ட் டூ சே பேக்...? சுட் ஐ சே ... ஐ ..ஹேட் யூ....? கோபமாய் வந்து விழுந்த இங்கிலீஷை உள்ளுக்குள் இருந்த செந்ததமிழ்...கோபமாய் முறைத்து கேவலமாய் என்னைப் பார்த்தது

நானும் இப்டி யார்கிட்டயாச்சும் சொல்வேண்டா அப்போ நீ என்ன செய்றேனு பாக்குறேன்....கயல் கோபத்தின் உச்சத்தில் இருந்தாள்...

கயல்...ஐ..லவ் யூ...உன்ன எனக்குப் பிடிக்கும்...இட் டஸின் மீன் தட் என்னை யாருக்குமே பிடிக்க கூடாதுன்னு நீ எதிர்ப்பாக்குறது.... 

இட்ஸ் ஓ.கே...டா....யூ லிவ் த வே வாட் எவர் யூ லைக்....

ஐயம் லீவிங் ப்ரம் யூ...! எனக்குப் பிடிச்ச மாதிரி நான் வாழ்ந்துட்டுப் போறேன்..உனக்குப் பிடிச்ச மாதிரி நீ வாழ்ந்துட்டுப் போ.......உன்கிட்ட பேசி ஒண்ணும் ஆகப் போறது இல்லை...யூ நெவர் கோயிங் டி லிசன் மீ...ஏன்னா யூ ஆர் ரியலி கிரேசி....பைத்தியக்காரன்...!

கயல் ஏன் இப்போ கத்துற...? நான் என்ன தப்பு பண்ணிட்டேன்னு என் மேல இவ்ளோ கோபம் உனக்கு.....

யூ சேட் யூ ஆர் லவ்விங் சம் படி....சோ.. யூ கேன் லிவ் யுவர் லைப்.. அவுங்க கூடயே வாழ்ந்துக்க..., என் முன்னாடியே இன்னொருத்தருக்கு லவ் யூ டூன்னு சொல்ற நீ... என்ன வேண செய்வ....ஐ டோண்ட் ட்ரஸ்ட் யூ...

லூசு மாதிரி பேசாத கயல்....லவ் யூன்றது சாதரண வார்த்தை...

சாதரண வார்த்தையை நானும் என்னை சுத்தி இருக்க ஆம்பிளைங்க கிட்ட சொன்னா..ஹவ் டூ யூ ஃபீல்..?

சரியாய் கத்தியை நெஞ்சில் இறக்கினாள்...

நான் ஸ்தம்பித்தேன்....எனக்குள் சம்மணமிட்டு அமர்ந்திருந்த ஆணாதிக்கப் பொதுபுத்தி நான் லவ் யூ டு என்று சொன்னதை தவறு எனக்குச் சுட்டிக்காட்டி.....அப்படி சொல்லி இருக்கக் கூடாது என்று சொன்னது...

கீர்த்தனா போன் அடிச்சா...என் கிட்ட பேசினா...லவ் யூன்னு சொன்னா..நான் லவ் யூ டூன்னு சொன்னேன்........ஆக்சுவலா கீர்த்தனா போன் அடிச்சா....என்கிட்ட பேசினா...லவ் யூன்னு சொன்னா...நானும் லவ் யூ டூன்னு சொன்னேன்...நடுவுல நிஜமாவே கொஞ்சம் பக்கம் காணாமல் போயிருந்தது...

கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து கொண்டேன்....ஆமா.. நான் அப்டி சொல்லி இருக்கக்கூடாதுன்னு சொன்னா நான் ஒரு அடைபட்ட பறவை ஆயிடுறேன்....இல்லே நான் சொன்னது சரின்னு சொன்னா நான் அயோக்கியன் ஆகிப் போயிடுறேன்...

இப்போ என்ன பண்ணலாம்...கயலைப் பார்த்தேன்....!!!!ஐ லவ் யூடா செல்லம்..இது வேற லவ் யூ...அது வேற லவ் யூ....கெஞ்சலாய் தோளில் கை போட்டேன்....

கையைத் தூக்கி தூரப் போட்டாள்...!

இட்ஸ் நாட் ஃபர்ஸ்ட் டைம்....பாலா....யூ ரிப்பீட் த சேம் மிஸ்டேக்..

மிஸ்டேக்.....?  எனக்கு இப்போது கோபம் வந்திருந்தது.

கனவுகளை எல்லாம்
மொத்தமாய் எழுதி வைத்தனிடம்
உனக்கு  கையெழுத்துப் போடத்
தெரியுமா என்று கேட்கிறாய்..?

கற்பனைகளில் கூட
உன்னையே தழுவிக் கொள்பவனிடம்
கற்பென்ற ஒன்று 
உனக்கு இருக்கிறதா என்கிறாய்..?

லுக்....கயல்...என் கூட இருக்கறது உனக்கு கஷ்டம்னு நான் எப்பவும் சொல்லி இருக்கேன். இப்பவும் சொல்றேன்......என் கூட இருக்கறது என்னப் புரிஞ்சுக்கறது கஷ்டம்தான்...! மெல்லிய நூலிழை போன்ற என் உணர்வுகளை என்னால மொழிப்படுத்த முடியல....மொழிப்படுத்தவும் முடியாது....

மேலோட்டமா பார்த்தா நீ சொல்றது சரி. சரின்னுதான்..இந்த சமூகம் சொல்லும். ஏன்னா...எனக்கு உன்னை மட்டும் பிடிக்கும்னு படுக்கையறைல காதோரமா கிசு கிசுத்துட்டு..தெருவுல போகையில  செமயா இருக்காலடா மச்சி இவன்னு  இந்த சமூகம் பேசுறதையோ, சந்தர்ப்பம்  கிடைச்சா எல்லை தாண்டலாம்ங்கற...நியாயத்தையோ யாரும் இங்க பேசப் போறது இல்லை...

யாரும் பாக்கலை...எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை...அப்டின்ற ஒரு வசதிக்குள்ளதான்...இங்க கண்ணியம் கருப்பு கண்ணாடிப் போட்டுக்கிட்டு கால் மேல கால் போட்டு உக்காந்து இருக்கு.

உன் மேல எனக்கு இருக்க காதல்.....உன் மேல இருக்க வசீகரம் அது எதோடவும் ஒப்பிட்டு என்னால பேச முடியலை. என்கிட்ட லவ் யூ பாலான்னு சொல்லும் போது லவ் யூ டூன்னு நான் சொல்ற பதில் என்னோட மறுநேசம். அதுக்கும் என் வீட்டுப் படுக்கைக்கும் ஒரு தொடர்பும் இல்லை. யாரையும் என்னால வெறுக்க முடியாது...யாரையும் என்னால் நிரகாரிக்க முடியாது....

ஆனா...என் காதலி யாருன்னு இந்த உலகம் கேட்டுச்சுன்னா யோசிக்காம உன் இடையில கைபோட்டு அவுங்க முன்னாடி நடந்து காட்டுவேன்....

என் வானத்தில்
ஆயிரம் நட்சத்திரங்கள்
ஜொலிக்கலாம்...
அவை ஒரு போதும்
ஒற்றை நிலவாக முடியாது....!

ஆமாம்...பூமி இல்லாத வேறு கிரகங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட நிலாக்களாம்...அப்போ என்ன செய்வ....டேய்.....இனஃப்டா...! நான் ஏன் உன் மூட ஸ்பாயில் பண்ணனும்... யூ கேன் கோ ஆன் அட் யுவர் பாத்....நான் என் வழில போறேன்...

கயல்விழி.... என்னும் கயல்...விழி தாண்டிய கண்ணீர் எனக்கு சங்கடத்தைக் கொடுத்தது.

அப்போ நம்ம காதல்....? நிதானமாய் அவளைப் பார்த்தேன்.

மண்ணாங்கட்டி............அதான்...இருக்காங்களே...கீர்த்தனா....மாலதி...வாணின்னு...கெட் லாஸ்ட் மேன்....!!!! நான் எங்க  இருந்தாலும் உன்னை நினைச்சுட்டுதான் இருப்பேன்....பட் உன் கூட இருக்க மாட்டேன்....நீ உன் ஏகாந்த உலகத்துல சிறகடிச்சுப் பறந்துக்க....நான் தொந்தரவு பண்ணல...

கயல்...ஒன் செகண்ட்...

கதவைப் படார் என்று அடித்து மூடிவிட்டு....கயல் சென்று விட்டாள்.

பக்கத்தில்  பாவமாய் கிடந்த என் அலைபேசியை எடுத்து கயலை டயலினேன்...நான்கு முறையும் போனை கட் பண்ணினாள்.....

வெளியே மழை விட்டிருந்தது...

கூடு விட்டு பறவைகள் வெளியேறத் தொடங்கி இருந்தன. கயல்  எனக்கு போட்டு வைத்திருந்த காபி ஆறிப் போயிருந்தது....தூக்கி ஊற்றி விட்டு கப்பை கழுவி வைத்தேன்.

பிரிட்ஜை திறந்து பியரை எடுத்து கோப்பையில் ஊற்றினேன். நுரைத்துப் பொங்கும் பியரைப் பார்த்த பொழுது ஏனோ ஒரு சந்தோசம்  பிறந்தது. வெறும் வயிற்றில் பியர் பரவி குளுமையாக்கியது. மணியைப் பார்த்தேன் 11:45 ஆகி இருந்தது. கயல் போய்விட்டாள். என் வார்த்தைகளின் அர்த்தம் புரியாமல்...என் வாழ்க்கையின் இலக்கு அறியாமல்...சராசரி சண்டையிட்டு விட்டு...காதல் என்னும் அற்புத உணர்வை சிதைத்து விட்டு....

அவளைச் சொல்லிக் குற்றமில்லை. தனது காதலன் இன்னொரு பெண்ணிடம் லவ் யூ டூ என்று சொன்னால் கோபம் வராமால் யார்தான் இருப்பார்கள். கோபம் வரட்டும் நான் கூறும் விளக்கத்தை செவியுற பகுத்தறிவுமா இல்லாமல் போகும்..? எது எப்படியோ...ஆரம்பிக்கும் எதுவும் முடியத்தான் செய்யும் இது வாழ்வியல் நியதி.

கயல் எங்கே வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். எனக்குள் இருக்கும் கயலை யார் எடுத்துச் செல்ல முடியும்...? ஒரு கணத்தில் அவள் தூக்கி எறிந்த காதல்தான்...இத்தனை நாள் அவள் கொண்டிருந்தது. எனக்கு இனி துணை தேவை இல்லை என்று  தோன்றியது. நானே எனக்குத் துணை. யாருக்கும் யாரும் துணையாகவும் இருக்க முடியாது. எல்லாமே புத்தியில் இருக்கிறது. எதற்காக இன்னொருவர் நமது கூடவே இருக்க வேண்டும்....?

இருக்கும் வரை வாழ்க்கை, இறந்த பின் மரணம்.

ஜன்னலுக்கு வெளியே  பறவைகள் மழை விட்ட வானத்தில் திசைக்கொன்றாய் பறந்து கொண்டிருந்தன. 

அழைத்த அலைபேசியில் கீர்த்தனா வந்தாள்...ஹாய்டா....ஐ வில் பி தேர் இன் 30மினிட்ஸ்...வீ கோ அவுட் ஃபார் த லஞ்ச் " பேசி முடித்திருந்தாள்.

கீர்த்தனா கேட்ட  ஆர்ட்டிக்கிளை அவளது பத்திரிக்கைக்காக எழுதத் தொடங்கி இருந்தேன்....

" அவனுக்கு துணை ஒன்றும் அவசியமில்லை. அவன் எப்போதும் ப்ரியங்களைப் போர்த்திக் கொண்டிருப்பது தன்னை யாரென்று அறிவித்துக் கொள்ள அல்ல...அவனின்  உடலில் வாழ்க்கை கொடுத்த  வடுக்களை மறைத்துக் கொள்ள; அவன் தனித்தவன். அவனுக்கான பெரும் பாடலை எப்போதும் இசைத்துக் கொண்டிருக்கிறது காலம். வாழ்க்கை சக்கரத்துக்குள் நின்று கொண்டு கடமைகளைப் பேசி இச்சைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டிய அவசியமற்று...நகரும் அவன் பொழுதுகளை யாருமே வரையறுக்க முடியாது.

காணாமல் போய்விட்ட ஒருவனை யாரும் இனி தேடியடைய முடியாது. மனிதக் கூட்டுக்களை எல்லாம் கழற்றி  எறிந்த பறவையாய்.....

சிறகடித்துக் கொண்டே இருக்கிறான் அவன்...விரிந்து கொண்டே இருக்கிறது அவனது வானம்......"

....எழுதிக் கொண்டிருந்தேன்....
உயிர் இருக்கும் வரை
இருக்கப் போகும்
என் எழுத்துகளை ஒரு நாள்
நான் எழுத முடியாமல்
போகலாம்...
அப்போதும் நினைவுகளில்
எழுதிக் கொண்டிருப்பேன்
எனக்கான ஒரு
.........சந்தோஷப் பாடலை........


தேவா சுப்பையா...Friday, August 9, 2013

போதும்..." தலைவா "....போதும்..!

ஏதாவது ஒரு காட்சியாவது புதுசா இருந்துச்சுன்னு சொன்னா ஏதோ படத்தை பத்தி கொஞ்சாமாச்சும் நாம பேசலாம். டைரக்டர் விஜயும், நடிகர் விஜயும் சேர்ந்து மிஸ்ரி புரடக்சன் தலையில மண்ண அள்ளிக் கொட்டுன கதைய என்னத்த நாம பேசிக்கிட்டு...!  நிறைய கருப்புப் பணம் வச்சு இருக்கவங்க காச காலி பண்ண இப்டி படம் கிடம் எடுப்பாய்ங்களோன்னு கூட ஒரு டவுட்டு..எனக்கு. 

இதுல என்ன கொடுமைன்னா எப்பவும் ஏதாவது ஒரு படத்தை பத்தி நான் எழுதறதுக்கு முன்னாடியே நிறைய பேர் விமர்சனம் எழுதி படத்தோட கதை என்னானு எல்லோருக்கும் முன்னாடியே தெரிஞ்சு இருக்கும். சோ... நான் எனக்கு படம் பாத்தப்ப ஏற்பட்ட உணர்வுகளை மட்டும் பதிவு செஞ்சுட்டு போய்கிட்டே இருப்பேன். தலைவா படத்தைப் பொறுத்த வரைக்கும் சிக்கல் எனக்கு வேற மாதிரி இருக்கு. அதாவது ஊர்ல இன்னும் படம் ரிலீஸ் ஆகலை அதனால படம் ரிலீஸ் ஆன அன்னிக்கே படத்தைப் பார்த்துட்டு விமர்சனம் பண்ற ரொட்டீன் கடமையுணர்ச்சிக் கொண்டவர்கள் படத்தைப் பத்தி எதுவும் இன்னும் எழுதவும் இல்ல..

நாம வழக்கப்படி படத்தை பார்த்த நம்ம உணர்வுகளைப் பதிவு செஞ்சுட்டுப் போகணும்னுனா இப்போ நாலு  கொலை பண்ண வேண்டி இருக்கும் ஆனா அது முடியாது. சரி வேணாம், தலைவா படத்தோட கதைய உங்க கிட்ட சொல்லலாம்ணு யோசிச்சா அப்டி ஒரு மண்ணாங்கட்டியும் படத்துல இல்லை. எனக்கு எல்லாம் டைரக்டர் விஜய பாத்து ஏன்யா..உங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட கூச்சம் நாச்சம் இல்லையா....? எத்தனையோ வருசத்துக்கு முன்னால வந்த நாயகன், தளபதி, பாட்சா இப்படி எல்லா படத்தையும் உல்டா பண்ணி ஒரு படம் எடுத்ததோட இல்லாம டயலாக் டெலிவரி மொதக்கொண்டு அப்படியே வச்சு இருக்கீங்களே...இது எல்லாம் கேவலம் இல்லையான்னு கேக்கணும்னு ஆசையா இருக்கு...!

இதுல என்ன காமடின்னா இவனுக சீரியசா ஏதோ புதுசா பேசுற மாதிரி திரையில டயலாக் பேசிட்டு இருக்கானுக ஆனா அது எல்லாமே நாம ஏற்கெனவே பாத்து பாத்து அலுத்துப் போன அதே பில்டப் டயலாக் ஸ்தான் அப்டீன்றதுனால்...ஓ...சரி...அடுத்து இன்னும் பெஸ்ட்டா உங்க கிட்ட இருந்து எதிர்ப்பார்க்கிறோம்ற ரேஞ்சுக்கு ஒவ்வொரு சீனா நவுத்தி நவுத்தி பாத்து அவனுக தளபதி, தளபதின்னு கூட்டம், கூட்டமா திரையில கத்தும் போது எல்லாம்...தப்பாம நமக்கு தலைவலி வர்றத தவிர்க்கவே முடியலைங்க..!

அட...கதை என்னானு கேக்குறீங்களா..? ச்ச்சும்மா கேட்டுப்புட்டு அப்புறம் என்னைய ஏன்டா கதை சொல்லச் சொன்னா பழைய தமிழ் சினிமாவுல இருந்து உல்டா பண்ணி சொல்றியான்னு கேட்டுச் சண்டைக்கு வரப்புடாது....மீ பாவம்...மீ ஒன்லி ஆடியன்ஸ் ஓ.கே....சரி மனச திடப்படுத்திக்கோங்க..

மும்பைல வேதான்னு ஒரு பெரிய தமிழர்களுக்கு ஆதரவா இருக்க தாதாவ....எதிரி குருப்பு போட்டுத் தள்ளிடுது.அதுக்கப்புறம் தராவிப் பகுதி தமிழர்களுக்கு ஆதரவா அவரோடு கையாளு சத்யராஜ் உருவாகுறாரு..இந்த எதிரி குரூப் என்ன பண்ணுது சத்தியராஜ கொல்ல வரும் போது அவரக் காப்பாத்த அவரோட பொண்டாட்டி ரேகா ஆண்ட்டி..(கடலோரக் கவிதைங்க ஜெனிஃபரா வந்த அழகு தேவதையா இப்டி கெழவியாயிடுச்சு..ஓ....ஜீசஸ்..!!!!) வழக்கப்படி குறுக்க விழுந்து சத்திராஜ்ன்ற அன்னா சார காப்பாத்திடுறாங்க..!

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்ப்பாடா...!

பொண்டாட்டிய கொன்ன தாதாவ சத்தியராஜ் என்கிற அண்ணா போட்டு தள்ளிட்டுறாரு. அப்டி போட்டுத் தள்ளும் போது அந்த தாதாவோட பையன் ஒருத்தன் இருக்கான் அவனை கொல்லாம இரக்கப்பட்டு விட்டுடுறாரு....அந்த பையன் தான் சத்தியராஜ் அன்கோவை பழி வாங்குவான் பின்னாலன்னு நம்ம யாருக்குமே தெரியாதுன்னு டைரக்டர் நினைச்சு இருக்கலாம் ஆனா அது சத்தியராஜ் அவனை கொல்லாம விடும் போதே கிளியரா நமக்குத் தெரியும்.

சத்தியராஜ்க்கு இருக்குற ஒரே ஒரு ஆசைப்புள்ளைய, இந்த அடிதடி வாழ்க்கை பிடிக்காம தன் மகனோட தப்பிச்சுப் போற தன் நண்பர் நாசர்கிட்ட கொடுத்து வளர்க்கச் சொல்லிட்டு சத்தியராஜ் மும்பை தராவி மக்களின் குறைய தீர்த்து வைக்கிற வேலு நாயக்கரா மாறிடுறாரு. சத்தியராஜ் நாசர்கிட்ட வளர்க்கச் சொன்ன பிள்ளைதான் விஜய். நாசரோட புள்ளதான் சந்தானம்ன்றது எல்லாம் ஃபர்ஸ்ட் சீன்லயே நமக்குத் தெரிஞ்சு போய்டுது.

அப்புறம் என்ன சத்தியராஜ அந்த வில்லனோட பையன் போட்டுத் தள்ளிடுவாரு. அப்பா என்ன தொழில் பண்றாருன்றதே தெரியாம ஆஸ்திரேலேயாவுல வளர்ந்த புள்ளை விஜய் மும்பைக்குள்ள எப்டி வருவாரு, ஏன் வரணும்... ? ஆஸ்திரேலியாவுல சாப்பாட்டுக்கு என்ன பண்ணிடு இருந்தாரு..? வெறுமனே மினரல் வாட்டர் கம்பெனி நடத்துறேன் பேர்வழின்னு தமிழ்ப்பசங்கன்னு ஒரு டீம் வச்சுட்டு டான்ஸ் காம்பிட்டேசன்ல எல்லாம் கலந்து ஜெயிச்சாரா...? சத்தியராஜ் சார் அவ்ளோ பெரிய தாதாவா இருந்தது கதைப்படி இருபத்தஞ்சோ இல்ல முப்பது வயசோ ஆன அவரோட மகன் விஜய்க்கு எப்டி தெரியாம இருந்துச்சு....?

தாத்தா ஆகுற வரைக்கும் தாதாவ  இருக்குற தன் அப்பாவை விஜய் எப்டி இழக்குறாரு...? அப்டீன்றதை எல்லாம் நீங்க வெண் திரையில பாத்துக்கோங்க...! ஆனா...தேவர்மகன் கமல் மாதிரி அப்பா விட்ட இடத்தை விஜய் தொடர்ந்து கையில எடுத்குக்கிட்டு, வேலுநாயக்கர் மாதிரி (மாதிரிதான்..!!!!) பாட்சா மாதிரி, தளபதி தேவா மாதிரி சட்டத்தால திருத்த முடியாத பல வேலைகளை தான் செஞ்சு...மக்கள் முன்னாடி தலிவரா நிப்பாருன்ற ரகசியத்தை நான் சொல்ல மாட்டேன்.

சத்தியராஜ் கூடவே இருக்கும் விஜயோட சித்தப்பா பொன்வண்ணன் சத்தியராஜ்க்கு ரொம்ப விசுவாசாமா இருப்பாரு...அப்புறம் விஜய்க்கு விசுவாசமா இருப்பாரு. ரொம்ப விசுவாசமா இருந்து ஓவராப் பேசுறப்பவே நமக்கு எல்லாருக்கும் தெரிஞ்சு போயிடுது இவருதான் எதிரிங்க கூட தொடர்பு வச்சிட்டு இருக்காரு..கடைசில விஜய்க்கு ஆப்பு வைப்பார்னு..., எத்தனை படம் வந்துடுச்சு தமிழ்ல்ல கொஞ்சமாச்சும் யோசிச்சு ஒரு திரைக்கதை  எழுத வக்கு இல்லாம...படத்துக்கு என்னாத்துக்கு இவ்ளோ பில்டப் கொடுக்குறீங்கன்னு கேக்குறேன்...!

சந்தானம், பழைய நடிகர் சுரேஷ், ஓய்.ஜி. மகேந்திரன், டைரக்டர் மனோபாலா இப்டி கூட கொஞ்ச ஆளுங்களும் நடிச்சு இருக்காங்க...! சந்தானம் அப்போ அப்போ லைட்டா சிரிக்க வைக்கிறாரு...மத்தபடி சந்தானமும் டோட்டல் வேஸ்ட்...! தயவு செஞ்சு அமலாபாலை எல்லாம் விஜய்க்கு ஜோடியா போட்டுத் தொலைக்காதீங்கய்யா...அப்போ அப்போ யாரு விஜய், யாரு அமலாபால்னு நமக்கே ஒரு டட்வுடு வருது...அப்டி ஒரு புரோ..சிஸ்டர் பேஸ்கட்டு ரெண்டு பேருக்கும்....ஹக்...ஆம்...!

அல்லாத்தையும் வுட ஒரு பெரிய கொடுமை..டைட்டில் கார்டு போடும் போது உலகத்துல புரட்சி செஞ்சு மாற்றத்தை உண்டு பண்ணின தலைவர்ங்க பேர எல்லாம் போட்டோவோட போட்டு, அது எந்த வருசம்னு வேற காட்றாங்க...உதாரணமா சேகுவாரா, மர்ட்டின் லூதர் கிங், மாவோ, வின்சன் சர்ச்சில், பிடல் காஸ்ட்ரோ..இப்டி....

அப்டி போட்டு என்னா சொல்ல வர்றாங்கோன்னா....அத்து மாதிரி நம்ம தமிழ்நாட்ல விஜய் சார் மாற்றத்தை கொண்டு வருவார்னு சூசகமா சொல்றாங்களாம்...! விஜய்க்குன்னு ரசிகர்கள் கூட்டம் இருக்கறது எல்லாம் நியாயம்தான். ஒரு மாஸ் ஹீரோன்னு சொன்னா தன்னோட இமேஜை கூட்டிக்கிறதுக்காகவும், காட்டிகிறதுக்காகவும் பஞ்ச் டயலாக்ஸ், சூப்பர் பில்டப் ஸ்டோரி, வெயிட்டான வசனங்கள், அதிரடி சண்டைக்காட்சிகள், விறுவிறுப்பான ஸ்கிரீன் ப்ளேன்னு எல்லாமே  பொறி கலங்குற மாறி இருக்கணும். நம்ப முடியாத லாஜிக் இல்லாத சீன்ஸா இருந்தா கூட நம்ம ஹீரோ செய்வார்டா அப்டீன்ற நம்பிக்கையை படம் பாக்குற ஆடியன்ஸ்க்கு கொடுக்கணும்.

ரஜினி  நடிச்சார்னா... அவர் படத்துல ஓவர் பில்டப் இருந்தாலும் இன்னோவேட்டிவா, கிரியேட்டிவிட்டியோட ஒவ்வொரு பிரேமும் வெயிட்டா இருக்கும். நாயகன் படத்துல கமல ஒரு தாதாவா மட்டுமா மணி சார் கட்டி இருப்பாரு..? அவர் வாழ்க்கை எங்க ஆரம்பிச்சு எப்டி முடியுதுன்னு நூல் புடிச்ச மாதிரி காட்டி இருப்பாரு. அதுல ஒரு வலி இருக்கும், நாமளும் படத்தோட ஒன்றிப் போயிடுவோம். தலைவா மாதிரி படம் எல்லாம் புதுசா எடுக்குறோம்னு நினைச்சுக்கிட்டு விஜய் மாஸா ஏத்துறதுக்கு பத்துப் படத்துல பிச்சை எடுத்து எடுக்கப்பட்டது. இதை விடக் கேவலம் ஒண்ணுமே இல்லை.

ஒரே ஒரு பாட்டு அதுல மட்டும் அப்பட்டமான விஜய் டச் இருந்துச்சு. அதே மாதிரி விஜயோட ஒரிஜினல் டேலண்ட்ஸ வெளிப்படுத்துற மாதிரி காட்சி அமைப்புகளும் திரைக்கதையும் இருந்து இருந்துச்சுன்னா கொஞ்சமாச்சும் தப்பிச்சு இருக்கலாம். ஆனால் ஒட்டுப்போட்டு திரட்டிய கதை, மட்டமான திரைக்கதை, கேவலமான எடிட்டிங், படு கேவலமான பாடல்கள், அதைவிட கேவலமான பின்னணி இசை, தொடர்பற்ற, தேவையில்லாத காட்சிகள்னு...

மொத்ததில் தலைவா  ஒரு படம் இல்ல....எப்படி எல்லாம் படம் எடுக்கக் கூடாதுன்றதுக்கு சொல்லப்பட்ட ஒரு பாடம். இந்தப் படத்தை வெளியிடுறதுக்கு பிரச்சினை ஏன் பண்றாங்கன்றதுதான் மில்லியன் டாலர் கேள்வி. அப்டி எல்லாம் நினைக்கிற அளவுக்கு இதுல ஒண்ணும் இல்லை.....ஹா.. ஹா!!!!! இது எல்லாத்தையும் தாண்டி தளபதியோட ரசிகர்கள் படத்தை ஓட வைப்பாங்கன்றது வேற விசயம் அந்த பஞ்சாயத்துக்கு நான் வரலை...!

விஜய் சார்.. ஏன் படம் கிடம்னு எடுத்து இப்டி டைம் டு லீட்னு பில்ட அப் எல்லாம் கொடுத்து டைம் வேஸ்ட் பண்றீங்க....பேசாம அரசியல்ல ஸ்ட்ரெய்ட்டா இறங்கிட வேண்டியதுதானே....அட்லீஸ்ட் இந்த மாதிரி படங்களாவது வராம இருக்குமே.....

நாங்க கேப்டனையே சகிச்சுக்கிட்டோம்....ஒங்கள சகிச்சுக்க மாட்டமா என்ன....?


தேவா சுப்பையா...

Thursday, August 8, 2013

அன்புள்ள அப்பாவிற்கு...

Taken @ குருக்கத்திஅன்புள்ள அப்பாவிற்கு,

தேவா எழுதிக்கொள்வது...

செல்வ சிரஞ்சீவி ராஜ ராஜஸ்ஸ்ரீ அருமை மகன் சுப்பையாவிற்கு என்றுதான் தாத்தா உங்களுக்கு எழுதும் கடிதங்களைத் தொடங்கி  இருப்பார்கள்.  நீங்கள் தாத்தாவிற்கு எழுதும் கடிதங்களில் எல்லாம் மரியாதைக்குரிய மகாகனம் பொருந்திய ராஜராஜஸ்ஸ்ரீ தகப்பனார் அவர்களுக்கு சுப்பையா எழுதிக் கொள்வது யாதெனில் என்று தொடங்குவீர்கள்.  என் வார்த்தைகள் அன்புள்ள அப்பா என்ற எட்டு எழுத்துகளுக்குள்ளும் நாம் தலைமுறைக் காதலை, அன்பை நேசத்தை தாங்கி வருவதாக நான் உங்களிடம் பல முறை கூறி இருக்கிறேன்...இப்போதும் அப்படித்தான்...

நிற்க....!!!!

நலமா அப்பா? நாங்கள் நலமாயிருக்க முடியாது என்பதை தாங்கள் அறிவீர்கள். நீங்கள் இல்லாமல் எப்படி அப்பா நாங்கள் நலமாயிருக்க முடியும்? எல்லாமாய் இருந்த உங்களை ஒரே ஒரு கணத்தில் வாழ்க்கை எங்களை விட்டுப் பிரித்து விடும் என்று கற்பனைக் கூட செய்து பாத்திருக்கவில்லை அப்பா. உங்களுக்கு நீண்ட நெடிய ஆயுளையும், நிலையான செல்வத்தையும் கொடுக்க வேண்டிதான் எங்களின் பிரார்த்தனைகள் எல்லாம் இருந்திருக்கிறது. பின்னதை எங்களுக்கு நீங்கள் உருவாக்கி வைத்து விட்டீர்கள், முன்னதை கடவுள் பறித்துக் கொண்டுவிட்டான். 

65 வயதில் அப்படி ஒரு விபத்து உங்களுக்கு நேரும் என்பதை நாங்கள் எதிர்ப்பார்த்திருக்கவில்லை. இதோ இந்த வரிகள் கூட நீங்கள் எங்களோடு இல்லை என்பதை நம்பமுடியாமல்தான் நகர்கிறது. எத்தனை இரவுகள் அப்பா உங்களின் கழுத்தைக் கட்டிக் கொண்டு நான் உறங்கி இருக்கிறேன்...எத்தனை பகல்கள் அப்பா உங்களின் மார்பில் தலை சாய்த்து விளையாடி இருக்கிறேன். எத்தனை முறை அப்பா என்னை கோபப்பட்ட அடுத்த நொடியில் நீங்கள் அன்பாய் அரவணைத்து இருக்கிறீர்கள்...? 

நான் கல்லூரி முடித்த இரண்டு மாதத்தில் நீயே உன் வாழ்க்கையை நிர்மாணித்துக் கொள். நீ ஜெயிக்கிறாயோ தோற்கிறாயோ எது நடந்தாலும் அது உன்னால் நிகழ்ந்தது என்று பொறுப்பேற்றுக் கொள். எத்தனை காலம் ஒரு தகப்பனும், தாயும் பிள்ளைகள் உடன் வரமுடியும் என்று அன்று நீங்கள் கன்றை முட்டி விரட்டிய பசுவாய் என்னை இந்த சமூகக் காட்டுக்குள் தள்ளி விட்டீர்கள்...! வாழ்க்கை எளிதானது ஆனால் எல்லா மனிதர்களும் எளிதானவர்கள் இல்லை, நீ எல்லாவற்றுக்கும் உணர்ச்சி வசப்படுகிறாய் இங்கே நீ உறவு என்று நினைக்கும் எந்த உறவும் நீ அவர்களுக்குப் ஒரு கணம் எதிர்நிலைப்பாடு எடுத்தாலோ அல்லது அப்படியான சூழலில் உன்னைக் கண்டாலோ உன்னை தூக்கி எறிந்து விட்டு தங்களின் வழி நடந்து சென்று விடுவார்கள். இருந்தும் இல்லாமல் வாழக் கற்றுக்கொள் என்றெல்லாம் நீங்கள் சொன்னது எல்லாம் என் கண் முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கும் போது உங்களின் கால்களைக் கட்டிக் கொண்டு நான் கதறவேண்டும் என்று தோன்றுகிறது...

நீங்கள் எங்கே அப்பா போனீர்கள் என்னை விட்டு விட்டு...?

அப்பா....அம்மா சரியாக உணவருந்துவதில்லை. யாரிடமும் பேசுவது இல்லை. இதோ நீங்கள் எங்களை விட்டுப்பிரிந்து சரியாக இரண்டரை மாதங்களை காலம் விழுங்கிக் கொண்டு விட்டது. 40 வருட உங்களின் துணை  உங்களின் பிரிவை எதிர்கொள்ள முடியாமல் திசைக்கு திசை வெறித்துப் பார்த்துத் திணறிக் கொண்டிருக்கிறது. அம்மாவின் இரவும், பகலும் நீங்கள்தான் அப்பா. உங்களைத் தவிர அம்மாவுக்கு வேறு எதுவுமே தெரியாது. அம்மாவின் தேவைகள் எதுவென்றே அம்மாவுக்கு தெரியவில்லை அப்பா....அது எல்லாவற்றுக்கும் உங்களை சார்ந்தே வாழ்ந்திருந்திருக்கிறது. சடாரென்று வாழ்க்கை அவளின் அமைதியைப் பிடுங்கிக் கொண்டு விட்டதை எதிர்கொள்ள முடியமால் தவித்துக் கொண்டிருக்கிறாள். எங்களின் குஞ்சுச் சிறகுகளை வைத்துக் கொண்டு தாய்க் கோழியை அரவணைக்க முடியாமல் தடுமாறி நின்று கொண்டிருக்கிறோம் அப்பா...!

அம்மா பாவம்...அவளுக்கு ஒன்றும் தெரியாது அவள் என்ன பேசினாலும் கேட்டுக் கொள் என்று அடிக்கடி சொல்வீர்களே அப்பா...! அம்மா இப்போதும் புரியாதவளாய்த்தான் இருக்கிறது அப்பா....

நீங்கள் இல்லை இல்லை .....இல்லை வேறு ஒரு நிலைக்குச் சென்று விட்டீர்கள் என்று எத்தனை சொல்லியும்.....இன்னமும் நீங்கள் மீண்டும் வருவீர்கள் இல்லையேல் நான் அவரிடம் செல்வேன் என்று புரியாமலேயே பேசிக் கொண்டிருக்கிறது அப்பா....! அம்மாவின் மீது நீங்கள் கொண்டிருந்த காதலை யாரும் யாருக்கும் எடுத்துச் சொல்லத் தேவையில்லை. கடைசி நிமிடம் வரை நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை அதைச் சொல்லுமே அப்பா...! எல்லாவற்றுக்கும் அம்மாவையும் எங்களையும் அனுசரித்து வாழச் சொன்னீர்கள் 

ஆனால்...

நீங்கள் இல்லாமல் போனாலும் நாங்கள் அனுசரித்து வாழவேண்டும் என்ற சூழலைக் கொடுத்துச் சென்றது என்ன அப்பா நியாயம்..? எப்படி அப்பா இறந்தீர்கள்..? அபோது என்ன அப்பா நினைத்தீர்கள்....காலம் இந்த இரண்டு கேள்விக் கத்திகளால் எங்களின் இதயத்தை அறுத்துக் கொண்டேதான் அப்பா இருக்கும்....! உங்களின் அலைபேசி எண் இன்னும் இருக்கிறது அப்பா....எடுப்பதற்கு நீங்கள் இல்லை...? நீங்கள் மடிப்பு கலையாமல் அடுக்கி வைத்த உங்களின்  உடைகள் இருக்கின்றன..? உங்கள் எல்லா உடைமைகளும் அப்படியே இருக்கின்றன....., பார்த்து பார்த்து நீங்கள் கட்டிய வீடும், நட்ட செடிகளும், மரங்களும் செழித்து வளர்ந்து சிரிக்கின்றன அப்பா, நீங்கள் வைத்த பலா மரம் தன் முதல் காயை கொடுத்து அதுவும் பழுத்து விட்டது  அப்பா,

கடைசியாக நீங்கள் வண்டியை எடுக்கும் போது வாசலில் இருந்த செடியொன்றை இறுக்கப் பிடித்து நெருக்கமாக கட்டி வைத்து விட்டு சென்றிருக்கிறீர்கள்..அந்த கட்டு இருக்கிறது அப்பா, நீங்கள் போட்ட முடிச்சு இருக்கிறது அப்பா...நீங்கள் குளித்து விட்டு  வைத்துச் சென்ற சோப்பும், ஏன் உங்கள் விபத்து சூழலில் உங்களுடன் இருந்த  உங்கள் இருசக்கர வாகனமும் வீடு திரும்பி விட்டது அப்பா....

நீங்கள் எங்கே அப்பா போனீர்கள்...?

ஆறு வருடம் முன்பு நான் ஊருக்கு வரும் போது ஒரு வாட்ச் வாங்கி வந்தேன். அதை ஒரு வருடம் நீங்கள் கட்டிக் கொள்ள வில்லை. " சைஸ் பெரிசா இருக்குடா தேவா... அதான் கட்டல"  என்று நீங்கள் சொன்னீர்கள்..., அம்மா சொன்னது எங்கே கட்டினால் அது பழசாய்ப் போய்விடும்,  தம்பி வாங்கிக் கொடுத்தது என்று அப்படியே வைத்திருக்கிறார் என்று....பிறகொருநாள் அதை அளவு சரியாக்கிக் கட்டிக் கொண்டீர்கள். எல்லாம் முடிந்து இரண்டாம் நாள் உங்களுக்கு விபத்து ஏற்பட்ட இடத்துக்கு எதிரே இருந்த பெட்டிக்கடைக்காரர் உங்களின் செருப்பையும், உடைந்து போன அந்த வாட்சையும் கொண்டு கொடுத்த போது...

எப்படி அப்பா இந்த வாழ்க்கையை புரிந்து கொண்டு நகரச் சொல்கிறீர்கள்...? இது என்ன வாழ்க்கை அப்பா....? எல்லாமே போய்விடும் என்று தெரிந்தும் பற்று கொண்டு வாழும் பைத்தியக்கார வாழ்க்கை...உடைந்து போன அந்த கடிகாரம் கூட ஓடிக் கொண்டிருக்கையில் என் உயிரான அப்பா இல்லையே என்று நினைக்கும் போது நெஞ்சு வெடித்துதான் போகிறது. தம்பிகள் இருவரும் சின்னப்பிள்ளைகள் என்று எனக்கு எனது 6 வயதில் அவர்கள் பிறந்த போது சொன்னீர்கள். நீங்கள் இறப்பதற்கு இரண்டு நாள் முன்பும் எனது 37 வது வயதிலும் 31 வயது ஆன தம்பிகளை சின்னப் பிள்ளைகள் நீதான் அனுசரித்து நடக்கவேண்டும் என்றீர்கள்...ஒரு தகப்பனாய் பிள்ளைகளுக்குள் எப்படி பாசத்தை விதைப்பது என்பதை நீங்களும், அம்மாவும் பல சூழல்களில் சரியாய் செய்ததால்தான்..

நானும், தம்பிகளும், அக்காவும் எங்களைச் சுற்றி என்ன நிகழ்ந்தாலும் நீங்கள் உருவாக்கி வைத்திருக்க்கும் அந்த நேர்கோட்டுப் பாசப்பிணைப்புக்குள் நின்று கொண்டு தவிக்கிறோம். மரணம் என்பதை தத்துவார்த்தமாக நான் விளங்கி இருக்கிறேன் அப்பா. அறிவு கழிந்த ஞானம் ஏதேதோ எனக்குச் சொல்லிக் கொடுத்து இருக்கிறது. இப்போது அப்படி இல்லை அப்பா....

மரணம் என்பது நீங்களும், நமது மூதாதையர்களும் இருக்கும் ஒரு இடம். நீங்கள் அங்கே இருக்கிறீர்கள் என்பதால் அந்த இடத்திலும் எங்களைப் பார்த்துக் கொள்வீர்கள் என்று ஒரு லெளகீகத் துணிச்சலும் உள்ளுக்குள் பிறக்கிறது அப்பா....! வாழ்க்கையில் எங்களை போராளிகளாய் நிற்க வைத்த உங்களுக்கு எங்களின் மரணத்திற்குப் பிறகு எப்படி அதை சமாளிப்பது என்று சொல்லி கொடுக்காமலா போய் விடுவீர்கள்....?

எப்போது இந்தியா வந்தாலும் விமான நிலைய வாசலில் யார் இருக்கிறார்களொ இல்லையோ நீங்கள் இருப்பீர்கள்...! கட்டியணைத்து உச்சி முகர்ந்து நீங்கள் வரவேற்கும் இடம்.....கிளையை வேர் கட்டியணைத்து மகிழ்வதை ஒத்தது அப்பா...! கடந்த மே 22 ஆம் தேதி அந்த பிரதோஷ நாள் என்னால் மறக்கவே முடியாது...

தம்பி ஆம்புலன்ஸ்க்குள் இருந்து என்னிடம் கதறி இனி உங்களை காப்பாற்ற முடியாது என்று சொன்ன இடத்தை விட கொடும் துயரம் ஒன்று இந்த வாழ்க்கையில் எனக்கு நிகழ்ந்து விடுமா என்ன ...? சென்னை விமான நிலையத்ததை தொட்ட அந்த 23 ஆம் தேதியின் அதிகாலை கர்ண கொடூரமானது. தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் நோக்கிய எனது அன்றைய பயணம்தான் நரகம்.

எல்லாம் முடிந்த பின் பைத்தியக்காரனாய்....என்னை பெற்ற தகப்பனை, எனக்கு கை பிடித்து வாழ்க்கையைச் சொல்லிக் கொடுத்த  குருவை, தன் உயிர் கொண்டு என் உயிர் உருவாக்கிய கடவுளை, ஆரம்பப்பள்ளியிலிருந்து கல்லூரி வரை அட்மிஷனுக்காக  உடன் வந்த அப்பாவை வாழ்க்கையை எதிர்த்து வாழ்வதை விட அனுசரித்து வாழ்வதே சிறந்தது என்று சொல்லிக் கொடுத்த அப்பாவை...., குருக்கத்தி என்ற குக்கிராமத்தில் 1947ல் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்து ஊராட்சி ஒன்றிய ஆணையராய் பணி புரிந்து தன்னின் ஆளுமையை விஸ்வரூபமாக்கிக் காட்டிய, எதிரிகள் என்று யாரும் இல்லாமல் எல்லோரையும் அன்பால் கட்டுப்படுத்தி வைத்திருந்த ....

உங்களை ஐசியூவில் உயிரற்று பார்த்த போது...ஸ்தம்பித்துப் போனேன்...!!!!! .இந்த வாழ்க்கையின் அர்த்தமற்ற தன்மை எனக்குப் புரிந்தது. நிதர்சனமற்ற வாழ்க்கைக்கு நடுவே நிகழும் அபத்தங்கள் விளங்கியது. பின் தலையில் அரை இஞ்ச் அளவு ஏற்பட்ட ஒரு காயம் மூளை வரை தொட்டுப்பார்த்து மூளைச் சாவடையச் செய்து...ஒரு உயிரை, ஒரு வாழ்க்கையை, ஒருவரின் கனவுகளை ஒரு கணத்தில் பறித்துச் செல்ல முடியுமெனில்....இங்கே என்ன அர்த்தம் இருக்க முடியும்...? இந்த வாழ்கையில் என்ன நிதர்சனம் இருக்கிறது....?

எனக்குள் எழுந்த கேள்விகளை எல்லாம் நீங்கள்தான் கேட்டுக் கொண்டிருந்தீர்கள் அப்பா....! நெஞ்சில் கை வைத்து எழுப்பினேன்..., கை பிடித்து கதறினேன், தலை தடவி உசுப்பினேன்...அப்பா...!!!! நீங்கள் ஆழமான உறக்கத்துக்கு சென்று விட்டிருந்தீர்கள் அப்பா....! இனி  எழமாட்டீர்கள் என்று புரிந்து கொண்டேன் அப்பா... 

இதோ எல்லாம் முடிந்து விட்டது. 

எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் நான் பார்த்த அத்தனை உறவுகளும் உங்களை இறுதியாய் அனுப்ப வந்திருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு கதை ஒரு அனுபவம்...ஒரு இக்கட்டான சூழல், அதில் உங்களின் உதவி என்று....நீங்கள் அதிர்ந்து கூட இதுவரை பேசி இருக்காத உங்களின் குணத்தைப் பற்றி எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

மயானத்தில் விறகுகள் அடுக்கி வைக்கப்பட்டு உங்களின் அருகில் நான் மட்டும் தனியே நின்று கொண்டிருந்தேன் அப்பா.. எல்லோரும் பக்கத்தில் இருந்த குளக்கரையில் தம்பிகளுக்கு மொட்டை அடித்த இடத்த இடத்தில் நின்று கொண்டிருந்தார்கள். எனக்கு ஏற்கெனவே மொட்டை அடித்து முடித்திருந்தார்கள். அந்த இரவு எட்டரை மணி...அந்த எரியூட்டு மேடை....உங்களுக்குப் பின்னால் இருந்த பெட்ரமாக்ஸ் வெளிச்சத்தில் உங்களின் முகம் பார்த்துக் கொண்டிருந்தேன்...நானும் நீங்களும் மட்டுமே இருந்தோம்.

" என்னைப் பெத்த அப்பா, என் உயிரே, என் செல்வமே....என் தெய்வமே....ஏம்பா...? ஏம்பா இப்டி...? எப்டிப்பா நீங்க சாகலாம்? ஏம்பா இப்டி நடந்துச்சு. ரோடு ஓரமா வண்டிய நிறுத்திட்டு இருக்கும் போது வந்து ஒரு வண்டி ஏம்பா மோதணும்...? என்ன நடந்துச்சுன்னே தெரியாதே அப்பா உங்களுக்கு..., ஒரு நிமிடம் எங்க வாழ்க்கைய தலை கீழா மாத்திடுச்சே அப்பா...அப்பா....அப்பா...."  உள்ளுக்குள் கதறிக் கொண்டிருந்தேன். நீதிகளும், கதைகளும், தத்துவங்களும், புரிதலும், தெளிவும்...நாய்க்குட்டியாய் எனக்குள் வால் சுருட்டிப் படுத்துக் கொள்ள எதோடும் தொடர்பு படுத்த முடியாத ஒரு உண்மை...என்னை எரித்துக் கொண்டிருந்தது.

யாரும் இங்கே யாருக்கும் ஆறுதல் சொல்ல முடியாது. வலியை வாங்கித்தான் ஆக வேண்டும். ஆறுதல்கள்..எல்லாம் மிகப்பெரிய இழப்பை சரி செய்ய முடியாது. நடு நெஞ்சில் கத்தி இறக்கிய காலத்தை நான் மிரண்டு போய் பார்த்துக் கொண்டிருந்தேன். பிரமாண்டமாய்  மீசை முறுக்கி என் முன் காலம் நின்றிருக்க...உங்களைப் பார்த்தேன்....

சலனமில்லாத உறக்கமாய் அது தெரிந்தது அப்பா...! நான் உங்கள் தலையில் கை வைத்து சிவபுராணம் சொன்னேன்....! ஆன்மா வேறு நிலைக்கு பயணித்திருக்கு தகவலை உங்களின் சூட்சும மனதிற்கு எடுத்து சொன்னேன். என்னால் அதற்கு மேல் அழ முடியவில்லை. அழவும் திரணி இல்லை. வாழ்க்கையில் எல்லாம் கற்றுக் கொடுத்திருந்த நீங்கள்...

மெளனமாய் மரணத்தைப் போதித்துக் கொண்டிருந்த கடைசி மணித்துளிகள் அவை.....! நான் கடைசியாய் உங்களின் அடர்த்தியான மீசையை முறுக்கிப் பார்த்தேன்....நான் கடைசியாய் உங்களின் நெஞ்சின் மீது என் கை வைத்துப் பார்த்தேன்....நான் கடைசியாய் உங்களின் தலையில் கை வைத்து வருடினேன்....முகம் மட்டுமே தெரிந்திருக்க முகத்தோடு என் முகம் வைத்தேன்....., கடைசியாய் உங்கள் கன்னத்தில் என் உதடு பதிய அழுத்தமாய் முத்தமிட்டேன்...உங்களின் முகத்தோடு முகம் வைத்து வெகு நேரமிருந்தேன்..

எத்தனை இரவுகள் அப்பா...
உங்களை கட்டியணைத்து
உறங்கி இருப்பேன்...?
இதோ நான் கட்டியணைக்கும்
இந்த இரவொன்று...
கடைசி இரவென்று தன்னை
அறிவித்துக் கொள்கிறது அப்பா...

எத்தனை விசயங்களை
உச்சரித்த உதடுகள் அப்பா...
இதோ பேசுவதற்கு இனிமேல்
வாழ்க்கை மட்டுமே இருக்கிறது என்று..
அவை மூடிக் கொண்டன அப்பா...

கம்பீரத்தையும் கருணையும்
ஒன்றாக்கிய விழிகளப்பா உங்களது
இதோ இனி  பார்ப்பதற்கென்று
தனித்த விழியொன்றும் தேவையில்லை
என்று இமைகள் அடைத்து
இருள் உலகிற்குள் சென்று
வெளிச்சம் தேடிக் கொண்டிருக்கின்றன அப்பா...

எத்தனை கம்பீரமானவர் அப்பா...நீங்கள்..! அத்தனை கம்பீரத்தோடு இந்த வாழ்க்கையை விட்டு கம்பீரமாய் முறுக்கிய மீசையோடு சென்று விட்டீர்கள். கடைசிவரை யாரையும் எதிர்பார்க்காமல், நான் இருந்தேன்...நான் வாழ்ந்தேன்..நான் சென்றேன் என்று...உங்கள் இறுதி வரை வாழ்ந்து சென்று விட்டீர்கள் அப்பா....

இதோ மீண்டும் இந்த வாழ்க்கை எங்கள் முன் நின்று கொண்டு, எங்களிடம் ஏதேதோ நாடகம் ஆடுகிறது. நான் நிலையானவன் என்று மறுபடியும் மார் தட்டுகிறது. மீண்டும் ஏதேதோ தடுமாறல்கள், சறுக்கல்கள், ஆசைகள், எதிர்பார்ப்புகள் என்று இந்த வாழ்க்கை மீசை முறுக்குகிறது அப்பா....

அப்படியாய் வாழ்க்கை மீசை முறுக்குகையில் நீங்கள் வந்து என் மனக்கண் முன் உங்களின் கம்பீர மீசை முறுக்கி.....அற்ப வாழ்க்கை...பட்டும் படாமல் இருந்து வா என்று இப்போதும் அதட்டுகிறீர்கள்....

வாழ்க்கை முழுதும் இப்படி நீங்கள் வரப்போவது உறுதி அப்பா.....! 

இதோ கொஞ்ச காலம்...நாங்களும் வந்து விடுவோம்....உங்களை விட சிறந்தது என்று ஒன்றும் இல்லை இங்கே....! உங்களை விட அன்பு செய்ய யாரும் எமக்கு இங்கு இல்லை! உம்மை விட நேசம் கொண்டவர்கள் யாருமில்லை எம்மைச் சுற்றி...

இதோ கொஞ்ச காலம் வந்து விட்டோம்........அப்பா.. வந்து விட்டோம்....காத்திருங்கள்...! 

இப்படிக்கு
ப்ரியமுள்ள மகன்
தேவா சுப்பையா....