Pages

Monday, May 18, 2015

கொட்டுச் சத்தம்...!


எப்போதும் பேசிக் கொண்டே இருக்கும் சுப்ரமணி மாமா சிவனே என்று படுத்துக் கிடந்தார். அத்தையைப் பார்த்தால்தான் பாவமாயிருந்தது. தலையில் அடித்துக் கொண்டு அழுது கொண்டிருந்தது. பவானியும், பார்கவியும் எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள், உறவுகள் எல்லாம் சுற்றி அமர்ந்து இருந்தது அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. மணிதான் வாசலில் நின்று கொண்டு துக்கம் விசாரிக்க வருபவர்களுக்கு கை கொடுத்துக் கொண்டிருந்தான்....

அஞ்சு பைசாவுக்கு பிரயோசனம் இல்லாதவண்டா என்று மணியைப் பற்றி மாமா என்னிடம் புலம்பிக் கொண்டே இருப்பார். பன்னென்டாவதைக் கூட ஒழுங்க முடிக்க முடியாத தண்டச் செம்மம்டா அவன்...ஆளும் கிராப்பும், சைக்கிள் கம்பெனியும்னு அவனை அப்டியாடா நான் நினைச்சுப் பாத்தேன்...ஒரு டாக்டராவோ, எஞ்சினியராவோ....மாமா பொறுமுவார்... சரி விடுங்க மாமா என்று ஆறிப்போன டீயை குடிக்கச் சொல்வேன் நான்...

பார்கவியைப் பத்தி கவலை இல்லடா எனக்கு எம்.ஏ பிஎட் எப்டியும் ஏதாச்சும் ஒரு கவர்மெண்ட் ஸ்கூல்ல வேலை கிடைச்சுடும், அதுக்குதான் ஆரம்பத்துல ஸ்கூல்ல சேக்கும் போதே எம்பிசின்னு சொல்லி சேத்து வைச்சேன் உண்மையில நாமல்லாம் பார்வர்ட் கேஸ்ட் தாண்டா என்று சாதியைப் பற்றி பேச ஆரம்பித்து விடுவார் மாமா. சாதி எல்லாம் தப்புதானே மாமா, சாதியை வச்சுக்கிட்டு, கூட இருக்குற மனுசாளை எதுக்கு நாம அன்னியமா நடத்தணும் மாமா...? எல்லாரும்  மனுசங்கதானேன்னு கேட்டுவிட்டு அவரது முகத்தை பார்ப்பேன்.....

வெற்றிலையில் சுண்ணாம்பு தேய்த்து சீவலோடு மடித்து லாவகமாய் வாயில் திணித்தபடியே உற்சாகமாய் பேசத் தொடங்குவார் மாமா....

சாதியை வச்சுக்கிட்டு மனுசாளை அடிமைப் படுத்தணும்னு எப்போ நினைச்சானுவளோ அப்பவே சாதிங்கற அமைப்பு கெட்டுப் போக ஆரம்பிச்சுடுச்சுடா செல்வம், எல்லோருக்கும் எல்லா வேலையும் செய்யத் தெரியாது, செய்யவும் வராது, ஒவ்வொருத்தருக்கு ஒண்ணு ஒண்ணு வரும், யாருக்கு எதுவருமோ அதை அவங்க அவங்க செய்றதும் அப்டி செய்றவங்க ஒரு கூட்டா வாழ்றதும் தப்புண்ணு எப்டி சொல்லுவ நீ...? நிஜத்துல எல்லாமே ஒரு கட்டுப்பாட்டுக்குள்ள இருக்கணுமா இல்லையா...? எனக்கு வெவசாயம்தான் தெரியும், ஏன் தெரியுமா? என் பாட்டன் பூட்டன் எல்லாம் பயிரு பச்சை, தண்ணி, சகதின்னு வாழ்ந்துட்டுப் போய்ட்டான் அவன் வெதச்சை வெதை நான்.... அப்டியே தானே சிந்திக்க முடியும்... என்னையைப் போய் கோயில்ல மணி அடிச்சு மந்திரம் சொல்லுன்னு சொன்னா எப்டி சொல்ல முடியுன்னு நீயே சொல்லு....

ஒரு வேளை நான் இன்னிக்கு நான் மந்திரம் கத்துக்கிட்டு மணி அடிச்சு பூசை செய்ய ஆரம்பிச்சா என்னோட ஏழாவது தலைமுறை அதை சுருதி சுத்தமா செய்ஞ்சு முடிப்பான், ஆனா அதுக்கு நாம எவ்ளோ மெனக்கெடணும் தெரியுமா? அதான் முன்னாடியே சொன்னேனே... யாருக்கு எது வருமோ அதை செஞ்சுக்கலாம், அதுக்காக ஒருத்தரை ஒருத்தர் அடிமைப்படுத்திக்கறதுதான் இதுல உள்ள அபத்தமே....

சாதியை ஒழிச்சுப்புட்டா, படிச்சவன், படிக்காதவன்ன்னு ஒரு சாதி உருவாகும், ஏழை பணக்காரன்னு எப்பவுமே ஒரு சாதி இருந்துகிட்டே இருக்கும், ஒரே மாதிரி சிந்திகிறவங்க எல்லாம் ஒரு கூட்டமா உக்காந்துகிட்டு அவுங்ககுள்ளயே கொடுத்து வாங்கி எல்லாத்தையும் சுகமா செஞ்சுக்கிடுவாங்க, மொத்ததுல மனுசன் சுகமா இருக்கணும், எல்லாம் ஈசியா முடியணும்...இப்ப நம்ம குடும்பத்துக்குள்ளயே எடுத்துக்கயேன்...நீயும் நானும் வேற சாதிதானே...? என் சொந்தப் புள்ளைக்கும் எனக்கும் ஒத்து வரமாட்டேங்குது, என் தங்கச்சி புள்ள நீ என் கூட ஒத்துப் போற எல்லாத்துலயும்...

ஒரே மாதிரி நினைப்பு செயலும் இருக்கவங்க எல்லாம் ஒரே சாதிடா மருமகப்புள்ள...

சத்தமாய் சிரிப்பார் மாமா....

ஒப்பாரி சத்தம் அதிகமானது.... சென்னையிலிருந்து சின்ன மாமா குடும்பத்தோடு வந்திருந்தார். கட்டிக் கொண்டு எல்லோரும் அழுதார்கள். சுப்ரமணி மாமாவை அப்படி பார்ப்பதற்கு எனக்கு ரொம்ப சங்கடமாயிருந்தது.... 

டேய்.. செல்வம்....இதையெல்லாம் பேப்பர்ல எழுதிக்க, வேகமா போய் வாங்கிட்டு வா, பன்னென்டு மணிக்கு மேல பாடிய எடுக்கணும்டா, அப்பா சொல்லச் சொல்ல அவசரமாய் கிழிக்கப்பட்டஒரு நோட்டின் பேப்பரில் கிறுக்க ஆரம்பித்தேன்...

எளநீர் - 2
ஊதுபத்தி ஒரு பாக்கெட்
சூடம் பெருசு ஒரு பாக்கெட்,
காட்டன் வேட்டி - 4
மண் கலயம் சிறியது - 3
மல்லுத்துணி 5 மீட்டர்....

மல்லுத்துணின்னா என்னப்பா...? பாடிய அதுல கட்டி தாண்டா கொண்டு போகணும் சுடுகாட்டுக்கு என்று அப்பா சொல்லிக் கொண்டிருந்த போதே...நேத்து காலையில செத்ததுப்பா, வயசான ஒடம்பு வேற, வாங்க பாடிய தூக்கி செத்த ஆத்திட்டு மறுபடி அதே இடத்துல வைப்போம், நாகராசு பெரியப்பா கூப்பிட்டார், கொட்டகையில் உக்காந்திருந்த நாலு பேர் எழுந்து உள்ளே போக அப்பா என்னையும் வாடா தம்பி என்று மாமாவைத் தூக்க உள்ளே கூப்பிட்டார்...

பேப்பரை மடித்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டேன்....

உள்ளே ஆண்கள் கூட்டமாய் போனதும் ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்த எதிர் வீட்டு பாப்பா அத்தை இன்னும் வேகமாய் அழ ஆரம்பித்திருந்தது....நான் பார்கவியைத்தான் பார்த்தேன். பாவம் அழுது அழுது கண் எல்லாம் சிவந்து தலை விரிகோலமாய் பார்க்கவே ஒரு மாதிரி இருந்தது. பார்கவி என்னை நிமிர்ந்து கூட பார்க்காதது ஒரு மாதிரி இருந்தது எனக்கு....

தாடையை இழுத்து கட்டி இருந்தார்கள். கால் கட்டைவிரல் இரண்டையும் முடிச்சுப் போட்டு, நெற்றியில் அடர்த்தியாய் பூசப்பட்ட விபூதியும், அதன் மத்தியில் பெரிசாய் வைக்கப்பட்டிருந்த 1 ரூபாய் காசும் என்று மாமாவைப் பார்த்த உடனேயே எனக்கு அழுகை வந்தது. இரண்டு நாள் முன்புதான் சவரம் செய்து கொண்டிருக்கும் போது பார்த்தேன். மூன்றாம் நாள் தாடி இன்று வெள்ளை வெளேன்று முகத்தில் முளைக்க ஆரம்பித்திருந்தது...

நெத்தி நிறைய விபூதி பூசணும்டா செல்வம்...நாம எல்லாம் பாசுபத சைவர்கள்னு எங்க தாத்தா சொல்லுவார், பசுபதியான சிவனைக் கும்பிடுறவங்க. செத்ததுக்கு அப்புறம் ஒண்ணுமே கிடையாது தெரியுமா? செத்ததுக்கப்புறம் இப்புடி நடக்கும் அப்புடி நடக்கும்னு எல்லாம் நல்லா கதையளப்பாங்க அதை எல்லாம் நம்பாத, உயிரோட இருக்குற வரைக்கும்தான் எல்லாமே, மனசுங்கற விசயமே சாகுற வரைக்கும்தான் இருக்கும் செத்துப் போனா ஏதுடா மனசு....?

உடம்பு இருக்க வரைக்கும்தான் மனசு இருக்கும். உடம்பு போய்டுச்சுன்னா மனசும் போய்டும். உயிரோட இருக்க வரைக்கும் மனசு உபத்திரவம் இல்லாம வாழணும், மனசு உபத்திரவத்தோட சோக்கா நல்ல மனுசாள் மாதிரி வாழ்றதா வேசம் போடுறவன் எல்லாம் நாய் மாதிரி உள்ளுக்குள்ள கஷ்டப்பட்டுக்கிட்டுதாண்டா இருப்பான்....

இந்த உலகத்துல எல்லாருமே நியாயவான்தான். எவனப் பாரு அடுத்தவனுக்கு அவன் நியாயம் சொல்லிட்டுதான் இருப்பான். செத்துப் போனா வெறும் சாம்பல்தான் எல்லோருமே...., மனுசன் ஒண்ணு சாம்பலா போகணும் இல்ல மண்ணோடு மண்ணா  போகணும் ஆக மொத்தம் தூசா போய்த்தான் ஆகணும்னு சொல்லிக்கிட்டே பழனி தண்டாயுதபாணி கோயில்ல இருந்து ஸ்பெசலா வாங்கிட்டு வந்த விபூதிய மாமா டெய்லியும் பூசிக்குவார். மனுசனை நெத்தியில விபூதி இல்லாம பாக்கவே முடியாது.

மாமா உடம்பை மொத்தமா மேல தூக்கி இரண்டு ஆட்டு ஆட்டிட்டு மறுபடி கீழ வச்சுட்டு மொத்த கும்பலோட வெளியில வந்து மறுபடி அப்பா சொன்ன பட்டியலைத் தொடர ஆரம்பிச்சேன்.

பன்னீர் சின்ன பாட்டில் 10.....
ரோசாப்பூ மாலை 4......பட்டியல் நீண்டு கொண்டே இருந்தது.

சைக்கிளில் ஏறி கடைத்தெருவெல்லாம் சுற்றி எல்லா சாமானையும் வாங்கியதாய் நினைத்துக் கொண்டு சிலதை விட்டு மறுபடி போய் வாங்கியாந்து, சுடுகாட்டுக்கு ஓடி, பிணமெரிப்பதற்கு எல்லாம் தயாராய் இருக்கிறதா என்று பார்த்து விட்டு ஓடிவந்து.... குளிக்காமல் கொள்ளாமல் லுங்கியும், சைக்கிளும், வியர்வையுமாய் எனக்கு அது புதிய அனுபவமாயிருந்தது.

கல்யாண வீடாய் இருந்தாலும் சரி சாவு வீடாய் இருந்தாலும் சரி சுப்ரமணி மாமாவோடு ஒரு ஓரமாய் உட்கார்ந்து பேச ஆரம்பித்து விடுவேன். சாகும் போது பூ மாதிரி பிரியணும்டா உயிர், அய்யயோ சாகப் போறேனேன்னு பதறிக்கிட்டு சாகக் கூடாது என்று மாமா அடிக்கடி சொல்வார்....

ரொம்ப சிரம்ப்பட்டாருக்காரு உயிர் போறப்ப....சீனு சித்தப்பா கேதம் கேட்க  வந்த ஒருவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். நெஞ்சு வலி வந்து துடிச்சு இருக்கார், மீனாம்மா என்னை எப்டியாச்சும் காப்பாத்திடு ரெண்டு பொண்ணுகள வச்சு இருக்கேன்னு ரொம்பவே அண்ணிகிட்ட கதறி இருக்கார் பாவம்....ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகும் போதே முடிஞ்சு போச்சு....மாஸிவ் அட்டாக்....

சித்தப்பா சொல்லிக் கொண்டிருந்ததை என்னால் நம்ப முடியவே இல்லை. அவ்ளோ புரிதலான மனுசனுக்கு இப்டி நடந்திருக்க வாய்ப்பு இல்லையே என்று சொல்ல நினைத்து வாயை அடைத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு எழுந்து வேறு ஒரு மூலையில் போய் நின்று கொண்டேன்....

சாவுறோம்ன்றது தெரிஞ்சு புரிதலோட டாட்டா பாய் பாய்னு போய்ச் சேரணும் அதான் வாழ்க்கை....தெரியுமா? செத்துப் போய்ட்டா அவ்ளோதான் எல்லாமே முடிஞ்சு போச்சு..., அதுக்கப்புறம் எதுவுமே கிடையாது. ஒண்னுமில்லாததுக்குதான் நாம இப்டி கிடந்து அடிச்சுக்கிறோம்.......எரிஞ்சு போன பிணத்துக்கு என்ன அர்த்தத்தை கொடுக்க முடியும் நாம....? யரோ இருவர் பேசிக் கொண்டிருந்தனர்...., 

அது எந்த  மாமனோ... எந்த மருமகனோ.....?! 

எல்லாம் வெறுப்பாய் வந்தது எனக்கு.... வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். உச்சியில் ஒரு கழுகு வட்டமிட்டுக் கொண்டிருந்தது....

வாசலில் கொட்டுச் சத்தம் அதிகமாக அதிகமாக....ஓவென்று அழ ஆரம்பித்திருந்தேன்....!
தேவா சுப்பையா...