Pages

Thursday, January 24, 2013

வில்லங்கமாகும் விஸ்வரூபம் ரிலீஸ்...?!!!!!
சென்சார் போர்டு அனுமதி கொடுத்த ஒரு திரைப்படத்தை கமல்ஹாசன் ஒரு தனிப்பட்ட பிரிவினருக்கு போட்டுக்காட்டி இருக்கத் தேவையில்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும்,  தமிழக அரசு முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கோடு இந்த விசயத்தில் மூக்கை நுழைத்து தங்களின் வாக்கு வங்கியை நிலைப்படுத்திக் கொள்ள முயன்றிருக்கும் ஒரு கேவல அரசியலும் விசுவரூபம் படத்தின் தற்காலிக தடையின் மூலம் அரங்கேறி இருக்கிறது.

ஜனநாயக வலிவு கொண்ட இந்த தேசத்தின் கட்டமைப்புகள்  தனிமனிதர்களாலோ, அல்லது ஏதோ தனிப்பட்ட பிரிவுகளாலோ, மத, சாதீய அமைப்புகளாலோ அரசியல் ரீதியாக நிர்ப்பந்திக்கப்பட்டு தகர்த்தெறியப்படுமே ஆனால்.. அது இந்த தேசத்தின் உள் கட்டமைப்பின் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் அத்தனை இந்திய பிரஜைகளுக்கும் விடப்பட்ட சவாலாகவே கருதப்படவேண்டும்.

விசுவரூபம் படத்தின் கதை இன்னது என்று முழுமையாக நாம் அறியாவிட்டாலும் ஓரளவிற்கு ஊகங்களின் அடிப்படையில் இப்படியாய் இந்த மக்களைப் பற்றி எடுத்திருக்கிறார் என்று நம்மால் அனுமானிக்க முடியும். ஆப்கானிஸ்தானத்தில் நடந்த தாலீபன்களின் ஆட்சியில் எல்லாம் சுகமாய் அந்த தேசத்தில் நடந்தேறிக் கொண்டிருந்தது என்று உறுதி சொல்ல இங்கே போராட்ட முழக்கமிடுபவர்களால் முடியுமா? அமெரிக்கா என்னும்  ஏகாதிபத்திய அரக்கனின் நகர்வுகள் எவ்வளவு அழுத்தமாய் கண்டிக்கப்பட வேண்டியதோ அதே அளவில் மத ரீதியாய் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு அதற்காய் மனித வாழ்க்கையை சீரழிக்கும் மிருகங்களையும் நாம் கண்டித்தே ஆகவேண்டும்.

இறைவனின் பெயரைக் கொண்டு கொலை செய்யும்  கொடூரன்.... எந்த மதத்தின் அடையாளத்தை சூடிக் கொண்டிருந்தால் என்ன...? காழ்ப்புணர்ச்சிகள் இன்றி அது கண்டிக்கப்படத்தானே வேண்டும்..? அஜ்மல் கசாப்பும் அவனது குழுவினரும் மும்பையிலே வெறியாட்டம் நடத்திக் கொன்ற கதையை படமாக்க வேண்டுமெனில் அப்படிக் கொல்லும் போது அவர்கள் நடந்து கொண்ட விதத்தையும், யாரால், ஏன்,  எதன் பெயரால் இப்படி நடந்து கொண்டார்கள் என்றும் நாம் விளக்க முற்படுகையில் அங்கே தன்னிச்சையாய் அவர்கள் சார்ந்திருந்த மதம் குறுக்கே வந்து விழத்தானே செய்யும்...? தீவிரவாதிகளை, கொடுமைக்காரர்களை சாடுதல் என்பதை... எப்படி ஒரு ஒட்டு மொத்த பிரிவினரை சாடுதலாய் எடுத்துக் கொள்ளமுடியும்...?

எம்.ஜி.ஆர் காலத்துப் படங்களில் எல்லாம், காத்தவராயனும், கபாலியும் முரட்டு மனிதர்களாய் பெண்களை கற்பழிப்பதும், கள்ளக்கடத்தல் செய்வதும், கொலைகள் செய்வதும் என்று இருந்தார்களே..? இதை மதரீதியாய் எடுத்துக் கொண்டு ஒரு சமூகத்தினரின் பெயரையே  ஏன் வில்லன்களுக்கு வைக்கிறீர்கள் என்று போராடினால் அது எவ்வளவு பெரிய அபத்தம்...? 

என் சமூகத்தில் உலக சமுதாயமே ஆபத்தாய் கருதி பயந்து கொண்டிருக்கும் அணு உலையை திறக்க அரசுகள் முயன்ற போது... அடடா இங்கே மக்கள் போராட்டம் வெடித்து சட்டம் ஒழுங்கு கெட்டுப் போகுமே என்று பயப்படாத அரசு, தொடர்ச்சியாய் மின்சாரம் இல்லாமல் என் மக்கள் இருளில் மூழ்கிக் கிடந்து தொழில்கள் எல்லாம் நலிவடைந்து போகுமே, மக்களின் வாழ்க்கை சீரழிந்து போகுமே அதனால் மக்கள் விழித்தெழுந்து போராடினால் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போகுமே என்று பயப்படாத அரசு..., 

ஒரு திரைப்படம் வெளியிடப்பட்டால் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து போகும் என்ற பயந்து படத்தை 15 நாட்களுக்கு நிறுத்தி வைத்திருப்பதின் பின்னணியில் இருக்கும் பலமான அரசியலை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். 

தேவர் மகன் என்னும் படத்தையும் கமலஹாசன் எடுத்தார், ஒரு குறிப்பிட்ட பிரிவினரை வன்முறைக்குச் சொந்தக்காரர்களாக அந்த திரைப்படம் சித்தரித்து, க்ளைமாக்ஸில் அவர்களை எல்லாம் திருந்தி வாழச் சொல்லும், பிள்ளைகளை எல்லாம் பள்ளிக் கூடத்திற்கு அனுப்பி படிக்கச் சொல்லும்...இப்படியாய் சொன்னதாலேயே அது குறிப்பிட்ட சமூகத்தினரை குறை சொன்ன படமாய் ஆகி விடுமா..? 

இந்த உலகம் பார்க்காத ஒன்றைப்ப்பற்றி திரித்துக் கூறி கமலஹாசன் படம் எடுத்து விட்டாரா என்ன..? அகில உலகில் நடந்த ஒரு நிகழ்வு அதன் மையம் என்ன என்று யோசித்து சினிமா எடுக்கும் போது அந்த மண் சார்ந்த மனிதர்களின், உடை, மொழி, மதம் எல்லாமே சேர்ந்துதான் அந்த சினிமாவை முழுமைப் படுத்த முடியும்..! அது என்ன கருமமோ தெரியவில்லை கமலஹாசன் சண்டியர் என்று பெயர் வைத்தாலும் இந்த சமூகத்துக்கு பொத்துக் கொண்டு வந்து வன்முறையைத் தூண்டுகிறார் என்று வழக்கு போடுகிறது....., சரி தொலைகிறது என்று சரியான பெயர் வைத்து முறையாய் படம் எடுத்து தணிக்கை சான்றிதழ் வாங்கினாலும் அதுவும், பிரச்சினையாய் இருக்கிறது...

பாவம் கமலஹாசன்...! 

சைவ மரபில் வந்த ஒரு மன்னன், வைஷ்ணவனை  கல்லில் கட்டி கடலில் தூக்கிப் போட்ட போது இப்போது போராடும் சமூகம் கை தட்டி சிரித்துப் பார்த்து மகிழ்ந்தது...அப்போது அந்த உண்மையை எதிர் கொள்ள முடியாத சைவத்தை சார்ந்த மக்களுக்கு கமலஹாசன் எதிரியாகிப் போனார்..... பிரச்சினை கமலஹாசனிடமா இல்லை  உண்மையை எதிர் கொள்ள திரணியற்ற ஒரு புரையோடிப்போன சமூகத்திடமா என்பதற்கு காலம் மட்டுமே விடையளிக்க முடியும்...!

விசுவரூபம் போன்ற திரைப்படங்களை தடை செய்து விடுவதன் மூலம் மட்டுமே சமூகத்தின் கண்களிலிருந்து எல்லாவற்றையும்  மறைத்து விட முடியாது. எல்லா மதங்களிலுமே அயோக்கியர்கள் இருக்கிறார்கள்...மதம் என்பது வாழ்க்கையை சரியாய் வாழ சொல்லிக் கொடுக்கப்பட்ட வழிமுறை என்பதை உணரவே இல்லை. தங்களின் மதமே மற்றவர்களின் மதத்தோடு உயர்ந்தது என்ற குறுகிய மனப்பான்மையோடு என் கடவுளே உன் கடவுளை விட உயர்ந்தவர்... என்னும் மனநோய் பிடித்து மிருகமாய் அலைந்து கொண்டு இருக்கிறார்கள்...

படைப்பாளிகள் கட்டுக்களின்றி சிறகு விரித்து பறந்து இந்த சமூகத்தில் நிகழ்ந்தேறி இருக்கும், நிகழ்ந்து கொண்டிருக்கும் சம்பவங்களின் தாக்கத்தில் தங்களின் ஆக்கங்களைத் தொடர்ச்சியாய் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். கமலஹாசனும்  அப்படியே....! அவன் ஒரு கட்டுக்கள் உடைத்த காட்டு மிருகம். மதத்தை தனது காலடியில் போட்டு மிதித்த மதம் பிடித்த யானை அவன். எந்த ஒரு இனமாகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் திக்குகள் தோறும் பரவித் திரியும் பெரும் தீ அவன்....

இங்கே அரசியல் செய்து, மதத்தின் பெயரால் இது சரி, அது தவறு என்று சொல்பவர்களை எல்லாம் கடந்து நிற்கும் விசுவரூபத்திற்கு அவன் சொந்தக்காரன்.  தடைகளை உடைப்பான்....தனக்கென ஒரு முத்திரையைப்  பதிப்பான்...என்பது எல்லாமொரு பக்கம் இருந்தாலும்....

இந்தப்படத்தை ஏன் வெளியிடச் சொன்னோம் என்று சென்சார் போர்டும்.... அதை ஏன் தடை செய்தோம்? என்று தமிழக அரசும்...முதலில் விளக்கம் கொடுக்க வேண்டும். சென்சார் போர்டு தவறெனில் அதை முதலில் தடை செய்யுங்கள்.... இல்லை அரசின் முடிவு தவறெனில் எதிர்வரும் காலங்களில் சென்சார் போர்டு அனுமதித்தப் பின்னால் எந்தக் கொம்பனும் தடை செய்ய முடியாது...சட்ட ரீதியாய்த்தான் அதை அணுகவேண்டும் என்று உறுதியான சட்டம் இயற்றுங்கள்....!!

இல்லையெனில்...

எதிர்காலத்தில் தமிழகத்தில் எந்த ஒரு திரைப்படத்தையுமே எடுத்து வெளியிட முடியாமல்...நாமெல்லாம் டாம் & ஜெர்ரியையும்,  மிக்கி மெளசையும் ஹார்லிக்ஸ் குடித்துக் கொண்டே பார்த்து ரசிக்க மட்டுமே முடியும்....!!


தேவா. S
Wednesday, January 23, 2013

சிவா...THE WARRIOR - II

முதல் பகுதியை வாசிக்க இங்கே அழுத்தவும்

SHOT II

பிணங்களெரியும் இராத்திரிகளில், ஏகாந்த தனிமைகளிள், எண்ணங்களற்று இருக்கும் போது உள்ளுக்குள் ஏதேதோ எண்ணங்கள் அலையலையாய் மோதிச் செல்லும்...

என்னோடு எனக்காய் வாழும் இந்த குளிர் மலை தேசத்து மக்களும், வெவ்வேறு இனமாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு என்னோடு சண்டையிடும் மக்களும், இந்த பூமிப்பந்தில் பரவி வாழும் இன்ன பிற எல்லா மனிதர்களும், எல்லா ஜீவராசிகளும், மரங்களும், கொடிகளும், மலைகளும், கடல்களும்...நான் சலனப்பட, சலனப்பட.. உருவாகின...

எல்லாமே என்னுரு....எனக்கெதற்கு ஒரு தனி உரு...? எனக்கு உருவுமில்லை குருவுமில்லை...! உக்கிர கோபத்தில் சுடுகாடு அதிர நான் ஆடியிருக்கிறேன். ஒரு பாதம் தூக்கி இன்னொரு பாதம் அழுத்தி.....தகிட தகிட தத்தத்தரிகிட தரிகிட தத்தோம்...தகிட தகிட தகிட...எனது டமருகம் அதிர, அதிர அடித்துக் கொண்டே ஆடியிருக்கிறேன். நான் பிரபஞ்சம் எனது அசைவு உயிர்கள்...

எண்ணம் நின்று போக, நான் மெளனத்தை காலங்களை நிறுத்தி சுகிக்கத் தொடங்கி இருந்தேன். இது ஒரு கூடல். உடல் ஈடுபடாத கூடல். மெளனத்தை கூடும் சுகம் நின்று போவதில்லை... அது இடைவிடாத பிரணவ அதிர்வுகளாய் உள்ளுக்குள் அதிர்ந்து கொண்டே இருக்கும் சுகம். உடலுக்குள்....இருந்து இதை அனுபவிக்க தொடங்கிய முதல் வினாடியில் உடல் விட்டு நகரவே விருப்பம் தோன்றும்...

நான் உடல் எடுத்ததின் நோக்கம் என்ன....என்று எனக்குத் தெரியாது. அது தெரியாமல் நான் உடலை விடப்போவதில்லை...நான் ரெளத்ரன். காரணம் அறிய வந்த காரியம் நான்.... எண்ணம் நின்று போன நொடி எப்போது என்று தெரியாமல் நான் சலனமின்றி அமர்ந்திருக்கையில்.... அந்த சாரட் வண்டியின் சப்தம் என் உயிரை இழுத்து உடலுக்குள் விட்டது....

குளிர்ந்த காற்று....என் கேசத்தை கலைத்து விளையாடிக் கொண்டிருக்க.... அற்புதமான அந்த தருணத்திற்கு அழகு சேர்க்கும் விதமாய் அந்த சாரட் பிரம்மாவின் கோயிலின் வாகன நிறுத்துமிடத்தில் வந்து நின்றது...! மிகவும் சாதுர்யமாய் குதிரையின் கடிவாளம் பிடித்து காற்றில் தன் பொன்னிற கேசம் பறக்க வந்தவளின் நீல நிறக் கண்களை நான் பார்த்தேன்....

நான் பிறப்பெடுத்ததன் காரணம் இவள்தானென்று எனக்குள் ஏதோ ஒன்று உணர்த்த..., அவளின் வனப்பில் என் தியானத்தின் திசை தனது பாதையை மாற்றிக் கொண்டது. அவளின் உடலின் வளைவுகளை ஊடுருவிய எனது கண்கள் ஜென்மங்களாய் அவளோடு நான் கொண்டிருந்த பந்தத்தை எனக்கு எடுத்துச் சொல்ல...அவளோடு கூடிக்கிடந்த நாட்கள் அனிச்சையாய் புத்திக்குள் எட்டிப்பார்க்க, காமத்துக்கும் காதலுக்கும் மத்திமத்தில் உருவான உணர்ச்சி ஒன்று என் புத்தியை பேதலிக்க செய்தது... உள்ளுக்குள் ஏதேதோ தடம் புரள...

உடலின் ஒட்டு மொத்த வெப்பமும் சுருண்டு உருண்டு என் நாசியைக் கடக்க, என்னைச் சுற்றிலும் இருந்த குளுமை சிறிது வெம்மையானது. யாரிவள்...? கூரான நாசிக்கு அவளின் இடது புற நாசியில் அணிந்திருந்த ஒற்றை வைர மூக்குத்தி இன்னமும் கூடுதல் வசீகரத்தைக் கொடுக்க...அவளின் மீது பதிந்த எனது விழிகள்.....மீளமுடியாமல் சிக்கித் தவிக்க...எனக்கு காதலின் கன பரிமாணங்கள் என்னவென்று புரிய ஆரம்பித்தது.

தொடர்ச்சியாய் அவளை நான் பார்த்துக் கொண்டிருந்ததை அவள் எப்படி கவனிக்காமல் இருக்க முடியும். உடன் வந்த தோழியோடு ஒரு தென்றலாய் என்னைக் கடந்து அவள் கோயிலின் படிக்கட்டுகளில் ஏறிக் கொண்டிருந்தாள்...

யார் இவள்...?

மனது முழுதும் அவளே வியாபித்துக் கிடக்க கோயிலுக்குள் சென்றவளை, திரும்பி வருகையில் மீண்டுமொரு முறை பார்க்கலாம் என்ற எண்ணத்தோடு படிக்கட்டிலேயே நான் அமர்ந்திருந்தேன்...

அவள் திரும்பி வருவதை கவனித்து, மீண்டும் அவளிடம் சென்று தஞ்சமடைந்தது மனது. காற்றில் ஆடும் அவளது சேலையின் நுனியைப் பிடித்துக் கொண்டு உடன் சென்று விடலாமா என்றொரு யோசனை சிறுபிள்ளைத்தனமாய் எனக்குள் கிளைக்க...

எனக்கான தேவதை இவள்தானென்று உள்ளுக்குள் ஒரு வித படபடப்பு பரபரப்பாய் இயங்க ஆரம்பிக்க.. ஆயிரமாயிரம் போர்களின் போது நிதானமாய் துடித்த என் இதயம் இப்போது படபடவென்று அவளின் இமைகளோடு போட்டி போட்டு துடிக்க.. இந்த கரடு முரடானவனுக்குள் இருந்து எட்டிப்பார்த்து சிரித்தது ஒரு அடாவடிக்காதல்.....

"உங்களுக்கு என்ன பிரச்சினை...? போகும் போதும் என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தீர்கள்? இப்போதும் அப்படியே...நிஜமாகவே உங்களுக்கு ஏதும் பிரச்சினையா....உங்களைப் பார்த்தால் அன்னிய தேசத்தவர் போல இருக்கிறதே?"

அவள் என்னிடம் நேருக்கு நேராய் கண் பார்த்து அவள் கேட்க..., இல்லை.. இல்லை... நான்.. ..நீங்கள்.. அதோ... அவள் .. இல்லை.... இல்லை அந்த கோயில்....என்னிடம் வார்த்தைகள வந்து சிக்கிக் கொள்ளாமல் தகிட தத்தம் ஆட.. நான் திணறிப் போய்.... " உங்களை இதற்கு முன் எங்கோ பார்த்திருக்கிறேன் ..." என்று உத்தேசமாக ஏதோ ஒன்றை சொல்லிக் கொண்டிருக்கும் போதே .. அவளின் உடலிலிருந்து பரவிய நறுமணத்தில் மகுடிக்கு மயங்கிய பாம்பாய் அடங்கி ஒடுங்கி அவளின் கழுத்தில் என் நாசி வைத்து முகர்ந்து....முன்னேறி....

" நான் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்....நீங்கள் மீண்டும் என்னையே முறைத்துக் கொண்டிருக்கிறீர்கள்..." சிற்பம் இப்போது சிடுசிடுவென்று சிணுங்கி அழகை வேறு பரிணாமத்தில் வெளிப்படுத்தியது.....

இல்லை ...நான் உங்களை.. என்று நான் மீண்டும் பேச ஆரம்பிக்கும் முன்பு சடாரென்று ஐந்து முகமூடி அணிந்த முரடர்கள்...அவளை நோக்கி வேகமாக ஓடி வர...சட்டென்று அவளை என் பின்புறமாக நிற்கச் சொல்லி முன் புறத்தில் நான் .....அவளை மறைத்தபடி...நின்று வாளோடு வேகமாய் வந்து கொண்டிருந்த அந்த முரடர்களை எதிர் நோக்கியபடியே என் வாளினை சர்ர்ர்ரேலென்று உருவினேன்... நான் வாள் உருவிய கணத்தில் எனக்கு பின்னாலும் வாளை உருவும் சப்தமொன்று சர்ர்ர்ர்ரேலென்று கேட்க....சட்டென நான் திரும்பிப் பார்த்த போது அந்த பெண்ணும் தனது வாளை கையிலெடுத்து இருந்தாள்....

பரவாயில்லை... எங்கள் இன மக்களில் பெண்கள் போரிடுவதில்லை...! மெலுகன்கள்..பெண்களையும் பயிற்றுவித்திருக்கிறார்கள் போல..., " பதுமைகள் எல்லாம் பல்லாங்குழி ஆடினால் மட்டும் போதாதா...." நான் மெதுவாய் முணு முணுத்தது அவளுக்கு கேட்டிருக்க வேண்டும்....ஹ்ம்ம்...ஹூம் என்று அவள் அதட்டிய இரண்டாவது நொடியில் எங்களைச் சூழ்ந்த அந்த முரடர் கூட்டம் தாக்கத் தொடங்கியிருந்தது...

வாடா... வா.... வழி தவறி வந்த மந்தை ஆடே.... பசித்து பசித்து காத்துக் கிடக்கும் இந்தக் கொடும் புலிக்கு நீ இரையாகிப் போ...! என் கழுத்திற்கு வந்த அவனது வாள் காற்றிலேயே தடுக்கப்பட்டு...அவனது இடது மார்பு குத்திக் கிழிக்கப்பட்டு.. அடி வயிற்றில் அழுத்தமாய் கொடுக்கப்பட்ட உதையில் அவன் படிக்கட்டுகளில் உருண்டு கொண்டிருந்தான்...

மெலுகன்கள் நாகரீகமானவர்கள் என்றல்லவா நினைத்தேன் இங்கேயும் காட்டு மிருகங்கள் கொடும் பசியோடு அலையத்தான் செய்கின்றன இடது முறம் திரும்பி அங்கிருந்து வந்த ஒரு வாளை தடுத்து.... வலது புறத்தில் நிறபவனின் இடது தோள்பட்டைக்குள் நுழைத்து என் வாளினை வெளியே எடுத்து...நேரே வந்தவனின் முகத்தில் எனது இடக்கரத்தால் ஒரு குத்து விட அவனின் தாடை இரண்டாய் பிளக்கும் சப்தம் கேட்ட நொடியில் திரும்பிப்பார்த்தேன்....

எஞ்சியிருந்த ஒருவனை அவள்... சூறையாடிக் கொண்டிருந்தாள்...எனது உடலிலும் ஆங்காங்கே வாளின் கீறல்கள், ஒரு உயரமான தடியனின் வாள் எனது வலது தோள் பட்டையையும் பதம் பார்த்திருக்க...வலிகளை தாங்கிப் பழக்கப்பட்ட எனது உடம்பு அதை சட்டை செய்யவில்லை....

கலைந்து கிடந்த எனது கேசத்தை அள்ளி முடிந்து கொண்டேன்....அவளின் வாளுக்கு பதில் சொல்ல முடியாத கடைசி முரடனும் ஓடி ஒளிய....மூச்சிறைகக் என் முன் நின்றவளைக் கண்டு மூர்க்கமானது என் மனது....

இவளை எங்கோ பார்த்திருக்கிறேன்...எப்போதும் இவளோடே இருந்திருக்கிறேன் என்று திண்ணமாய் எனக்குப் புரிந்தது...!

" மிக்க நன்றி உங்கள் உதவிக்கு....உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால்... என்னை தேவகிரியில் வந்து பாருங்கள்... இது எங்களின் எதிரிகளின் கைங்கர்யம்.. நான் என் தந்தையாரிடம் இவர்களைப் பற்றிக் கூறி சரி செய்து கொள்கிறேன்....எது எப்படியாயிருந்தாலும்.... உங்களின் உதவிக்கு நன்றி..." அவள் சொல்லி முடிக்கும் போதே அது வரை கோயிலுக்குள் ஓடிச் சென்று ஒளிந்து நின்று எல்லாவற்றையும் வேடிக்கைப் பார்த்த அந்த பெண்ணின் தோழி வேகமாய் ஓடி வந்து ' தேவி..... உங்களுக்கு ஒன்றும் ஆகவில்லையே என்று அவளின் கை பிடிக்க....

" ஒன்றுமில்லை கிருத்திகா வா போகலாம் என்று அவள் புறப்பட்டாள்...."

"எனக்கு உதவி எதுவும் தேவையில்லாவிட்டால் கூட உங்களை நான் வந்து மீண்டும் பார்க்கலாமா? நான் காதல் வேகத்தில் அவளிடம் கேட்டேன்..." அவள் பதில் ஒன்றும் சொல்லாமல் படி இறங்கிக் கொண்டிருந்தாள்....

சரி எனக்கு உங்கள் உதவி தேவை என்றால் தேவகிரியில் வந்து உங்களை என்ன வென்று கேட்பது, யாரிடம் விசரிப்பது.............? நான் பின்னாலாயே வேகமாய் நடந்தபடியே கேட்டேன்.....

" ஹ்ம்ம்...நீங்கள் தேவகிரிக்கு வந்து...." சதி" சதியைப் பார்க்க வேண்டும் என்று யாரிடம் வேண்டுமானாலும் கேளுங்கள்...அவர்களே உங்களை கூட்டிக் கொண்டு வருவார்கள்...."

கோணல் மாணலாய் முகத்தைக் காட்டி கிருத்திகா பதில் சொல்லிவிட்டு வேகமாய் சதிக்கு ஈடு கொடுத்து நகர்ந்து கொண்டிருந்தாள்...

"சதி...."

நான் உஷ்ணமாய் சொல்லிப்பார்த்தேன்....அவளோடான ஏதோ ஒரு ஜென்மாந்திர முடிச்சு ஒன்று சட்டென பிடிபட....அவள் என்னவள் என்ற எண்ணம் என்னை இப்போது முழுமையாய் என்னை ஆக்கிரமித்து இருந்தது....

வருகிறேன்...சதி.....உனக்காகவே வருகிறேன்....!!! என் காதலை கண்களுக்குள் தேக்கி வைத்திருப்பவளே...... என் உயிரினை உன் உடலுக்குள் பதுக்கி வைத்திருப்பவளே....என்னின் பாதியே.....என் தேவியே....!

நான் தேவகிரிக்கு வருகிறேன்...சதி...........!

காத்திரு....!


(TASK I - COMPLTETED)


தேவா. S
 
Courtesy
Photo: Maniam Selvan - Vikatan
Main Source - The Immortals of Meluha - Mr. Amish
 
 
 
 

சிவா...THE WARRIOR - I


SHOT - 1

அந்த நடைபாதையில் நான் நடந்து கொண்டிருந்தேன். மெலுகன்களின் தேசம் நாகரீகமாய் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டிருப்பது இந்த மலை தேசத்தவனுக்கு பிரமிப்பாகத்தான் இன்னமும் இருக்கிறது. பனி உருகும் கையிலாய மலையையும் அதனைச் சுற்றியும் என் கால்கள் பதியாத இடமே இல்லை. மானசரவர் ஏரியின் குளுமையில் முரட்டுத் தன்மையாய் நான் ஊறிப்போய் கிடந்திருக்கிறேன். என்னைத் தேடி ஏன் மெலுகன்கள் வரவேண்டும்..? என்ற கேள்வி எனக்குள் இன்னமும் இருக்கிறது....

முரட்டுத்தனமான ஒரு சண்டையிடும் வாழ்க்கைக்கு நடுவே நான் வாழ்ந்தவன் என்பதற்கு சாட்சியாய் உடம்பு முழுதும் படுத்துக் கிடக்கின்றன தழும்புகள். பகீரதிகளும், இன்ன பிற இனக்குழுக்களும் இலட்சியமின்றி என்னை வெற்றி கொள்வதயே தங்களின் லட்சியமாகக் கொண்டு.. என்னையும் என் இனமக்களையும் எப்போதும் அச்சுறுத்துவதும் அவர்களின் சங்கை அறுத்து நானும் என் மக்களும் விரட்டுவதும் வழமையாகிப் போக மெலுகன்களின் சேனாதிபதி நந்தி கேட்டுக்கொண்டதற்கு இணங்க என் இன மக்களோடு மெலுகன்களின் தேசத்திற்குள் வந்து விட்டேன்.

நந்தியையும் மெலுகன்களையும் நான் நம்புவதற்கு அவர்கள் எங்களுடன் இருந்த போது நடந்த இரு யுத்தங்களும் எனக்கு உதவின. எப்போதும் எல்லாவற்றையும் சந்தேகிக்கவும் சகித்துக் கொள்ளவும் தெரிந்தவனே ஒரு கூட்டத்தை வழி நடத்த முடியும். மெலுகன்களின் பிரதிநிதியாய் வந்த நந்தியையும், அவனது கூட்டத்தையும் நான் முதலில் அவர்களே அறியாமல் கைதிகளாய்த்தான் வைத்திருந்தேன் என்பது எனக்கும் எனது தளபதியும் நண்பனுமான பத்ராவுக்கு மட்டுமே தெரியும்...

கைலாயத்தை விட்டு என் மக்களுக்காக நகர்ந்திருக்கிறேன். கடைசி இரு யுத்தங்களும்... அதுவும் இரண்டாவது யுத்தத்தில் பகீரதிகளின் தலைவன் யக்யாவை ருசிபார்க்க பத்ராவின் வாள் குறிபார்த்துக் கொண்டிருக்க.... பிழைத்து போடா ஈனமகனே என்று துரத்தி விட்டு விட்டு வந்திருக்கிறேன். பெண்களையும், பிள்ளைகளையும்.. முதியவர்களையும் யுத்த மரபிற்கு உட்படாமல் கொல்பவன் ஈன மகனாகத்தான் இருக்க முடியும்..!

மெலுகன்கள் எனக்கு விசித்திரமாய் தெரிகிறார்கள்... மேலும் எரிச்சலை வரவைக்கிறார்கள். மெலுகன்களின் தேச நுழைவாயிலில் தங்கவைக்கப்பட்ட என் கூட்டத்தினருக்கு நோய் எதிர்ப்புக்காய் கொடுக்கப்பட்ட மருந்திற்கு பிறகு ஏன் அவர்களுக்கு காய்ச்சல் வந்தது...? எனக்கு மட்டும் ஏன் வரவில்லை...? நான் குளித்து விட்டு.. வந்து உடையணிந்து கொண்டிருக்கையில் ஏன் எனது தொண்டை நீல நிறமாய் மாறியது...? அப்படி மாறியதை பார்த்து ஏன் நந்தியும் அந்த மருத்துவச்சி ஆயுர்வேதியும்.. எங்கள் கடவுளே...இரட்சகரே.. என்று எதற்கு என்னை வணங்க வேண்டும்...? பிஞ்சு முகமாய் இருக்கும் நந்தி 100 வருடமாக என்னை தேடிக் கொண்டிருந்ததாக கூறினாரே ஏன்...?

மனிதர்களை வணங்குதல் தவறு. மனிதர்கள் கடவுளர்கள் அல்ல. கடவுளர்கள் ஒரு போதும் மனிதனாய் வருவதில்லை. ஏனெனில் கடவுள் என்ற ஒன்று இங்கே தனித்து இல்லை. எங்கும் நிரம்பிக்கிடக்கும் சக்தியின் அதிர்வுகள் கூடிப்போன ஒருவன் தனது இயல்பு எல்லாமாய் ஆன ஆதியிலிருந்து பிரிந்து வந்தது என்பதை உணர்ந்த ஒருவன், உயர்ந்த பண்புகளைக் கொண்டவனாயிருக்க முடியும். கடவுளின் பண்புகளை ஒருவன் கொண்டிருக்கலாமேயன்றி கடவுள் என்று தனித்து ஒருவன் வர முடியாது. வெளிப்பட்டிருக்கும் எல்லாமே கடவுள்...நான் கடவுள்... என்று எனக்கு தெரியாது....நீங்கள் கடவுள் என்று உங்களுக்குத் தெரியாது.....! அப்படி தெரிந்த பின் நான் கடவுள் என்று அறிவித்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அறிவித்துக் கொண்டால் அது கடவுள் இல்லை.

கடவுள் என்பது ஒரு ஆளே இல்லை. கடவுள் என்பது மெளனம்.

இப்படி தெரியாமல் இருப்பதாலேயே எது எதிலோ கடவுளை மட்டுப்படுத்திக் கொள்கிறோம். அடையாளத்துக்குள் பிரம்மாண்டத்தை நீங்கள் காண முடிந்தால் சிலை வணக்கம் செய்வதில் தவறில்லை....! பிரம்மாண்டத்துக்குள் அடையாளத்தை நீங்கள் கண்டு பிரம்மாண்டத்திற்கு கற்பனையில் ஒரு உரு கொடுத்துக் கொண்டால் நீங்கள் கூறும் உருவமில்லாதது உருவெடுத்துக் கொள்கிறது. இது சிலை வணக்கம் செய்வதைக் காட்டிலும் கொடியது....

நான் மெலுகன்கள் தேடும் நீலகண்டனா.. இல்லையா..? என்பது எல்லாம் எனக்குத் தெரியாது...ஆனால் நான் ஒரு போராளி...! என் வாள் எதிரிகளை வெட்டி வீசும்...உயிர் பயம் இல்லாமல் உயிரைக் குடிக்க வரும் எவனொருவனுக்கும் உயிர் பயம் என்னவென்று காட்டுவது என் வேலை. நான் தீமைகளை அழிக்கப் பிறந்தவன்...சில சமயம் தேவைகளின் அடிப்படையில் நல்லவைகளையும் கூட....ஹா..ஹா...

யார் நீங்கள்... எங்கே சென்று கொண்டிருக்கிறீர்கள்...? அன்னிய தேசத்தவர் போல இருக்கிறீர்கள்..? சடாமுடியோடு காட்சியளிக்கிறீர்கள்..? இடுப்பிலே புலித்தோல்..? கரடு முரடான தேகம், அலட்சியமான பார்வை, கழுத்திலே ருத்ராட்சம்...? இடுப்பிலே வாள்....?

யார் நீங்கள்...?

மெலுகன் தேசத்தின் பொறுப்பான காவலாளி என்னை தடுத்தவரை எனக்கு ஒன்றும் ஆக வில்லை....என் நெஞ்சிலே கை வைத்து தள்ளிய போது...எனக்குள் ஏதோ ஒன்று தடம் புரள.. உள்ளுக்குள்...

" அண்ட சராசரன், ஏகாந்தன், பரிபூரணன், விசுவநாதன், கபாலி, சுடலை, போராளி, பெருங்கோபக்காரன், விருப்பாக்ஷன், மகேஸ்வரன், ருத்ரன், சர்வேஸ்வரன், மகாயோகி, விஸ்வரூபன், லிங்கேஸ்வரன், இரட்சகன், பரந்தாபன், மகாகர்த்தா,  அஷ்டமூர்த்தி, அகிலாண்டேஸ்வரன்......

........ஈஸ்வரன்........ ஜகதீஸ்வரன்....டா............!!!!!!"

ஏதோ ஒன்று விசுவரூபமெடுத்து எனக்குள் பெருங்குரலெடுக்க....நான் மெல்ல சாந்தமாய் அவனை நோக்கினேன்....

என் பெயர்.. தேவ்....மகாதேவ்...!!!! சிவா என்று கூட என் மக்கள் என்னை அழைப்பார்கள். நான் மெலுகனின் விருந்தாளி. உங்கள் சேனாதிபதியோடு வந்திருக்கிறேன். அவர் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் நாங்கள் தேவகிரிக்கு சென்று கொண்டிருக்கிறோம்.. உங்கள் நகரை சுற்றிப்பார்த்துக் கொண்டிருக்கிறேன்...

தீர்க்கமாய் அவனது கண்களை உற்றுப் பார்த்து பதில் கூறினேன்...மெளனமாய் அவன் சிரம் பணிந்து எனக்கு வழி விட்டபோது அவனுக்குப் பின்னால் அந்த அழகிய கட்டிடம் எனக்கு தெரிந்தது. சிற்பவேலைப்பாடுகளோடு இருந்த அந்த கட்டிடம் ஒரு ஆலயமாயிருக்க வேண்டும் நான் அதை நோக்கி நகர ஆரம்பித்தேன்...!

எங்கள் இனத்திற்கு என்று எந்த ஒரு ஆலயமும் தனித்து இல்லை. இயற்கையே எங்களுக்கான ஆலயமாயிருந்தது. கடவுளர்களும் எங்களுக்குத் தேவையற்றவர்களாய் இருந்தார்கள். அன்பு செலுத்துவதிலும் வாழ்க்கையை வாழ்வதிலும் எங்களைத் தற்காத்துக் கொள்வதிலுமே நாங்கள் நிரம்பிக் கிடந்தோம். எங்களுக்கு கடவுள் என்ற ஒன்று தேவையற்றதாக இருந்தது. நாகரீக சமூகத்திற்குத்தான் கடவுள் அவசியமானவராய் இருக்கிறார். அன்பை.... நேசத்தை.... புரிதலைக் கொண்ட எங்களைப் போன்ற காட்டுமிராண்டிகளுக்கு கடவுள் தேவையற்றவர்.

கடவுள் இருக்கிறார் என்று ஒரு கூட்டம் பேசிக் கொண்டிருப்பதாலேயே கடவுள் இல்லை என்று பேச ஒரு கூட்டம் உருவாகி விடுகிறது. இருத்தலும் இல்லாமையும் கடந்த ஒரு நிலையை இதுவரையில் இந்த மானுடக் கூட்டம் புரிந்து கொள்ளவில்லை. பகீரதிகள் எங்களை இடைவிடாது எதிர்த்தார்கள். அவர்கள் எங்களிடம் வெற்றி கொள்ள நினைத்தது வீரத்தை மட்டும்தான்...ஒரு வகையில் அவர்கள் உன்னதமானவர்களே...

அதிகாரத்தைக் காட்ட, பொருள் பலத்தைக் காட்ட, திமிரைக்காட்ட, ஆளுமையைக் காட்ட, சுயநலத்திற்காய் நாகரீகமடைந்த சமூகம் தொடர்ந்து சண்டையிட்டுக் கொள்கிறது...! சண்டையிட்டுக் கொண்டே தங்களை நாகரீகத்தின் உச்சத்தில் இருப்பவர்களாய் வர்ணித்தும் கொள்கிறது.

மெலுகன்களின் சேனாதிபதி நந்தி தங்களை சூர்ய வம்சத்தினர் என்று அடையாளப்படுத்திக் கொண்டார், சாதியின் அடிப்படையில் முன்னோர்கள் வகுத்துக் கொடுத்த படி சிறப்பாய் ஆள்கிறோம் என்றும் சொன்னார். சாதிப் பிரிவுகள் பற்றிய புரிதலுக்காய் ஒவ்வொருவரும் தனித்தனி முத்திரைகளை அணிவதாயும் கூறினார்...

இந்த நகரம் நன்றாயிருக்கிறது. இந்த தேசம் திட்டமிடப்பட்டு கட்டப்பட்டிருக்கிறது. மனிதர்கள் வாழ மனிதர்கள்தான் உழைக்க வேண்டும். எல்லாமே சரி...ஆனால் இந்த சாதி என்னும் கருமம் ஏன் இடையில் வரவேண்டும். பிரம்மாவின் தலையிலிருந்து ஒருவனும், கழுத்திலிருந்து ஒருவனும் உடலிருந்து ஒருவனும், காலிலிருந்து ஒருவனும் படைக்கப்பட்டிருப்பது உண்மையெனில்....

பிரம்மா என்றொரு கடவுள் இருப்பாரெனில், எனது வாளின் முனை முதலில் அவனது நடு நெஞ்சில்தான் முதலில் இறங்கும்.....என்று நான் யோசித்துக் கொண்டே அந்த அழகிய சிற்பவேலைப்பாடுகள் கொண்ட கட்டிடத்தை நெருங்கி விட்டேன். மெலுகன்கள் உல்லாசிகள் மட்டுமல்ல ரசனைவாதிகள் கூட...எவ்வளவு உயரமாய், வடிவாய், சிற்பங்களோடு கட்டிடங்களை திறமையாய்க் கட்டி இருக்கிறார்கள்....? ஓ...இது அந்த பிரம்மாவிற்கான கோவிலா....? இடுப்பிலிருந்த வாளை அனிச்சையாய் தொட்டுப்பார்த்துக் கொண்டேன்! பிரமாதம்...பிரமாதம், வெண்மையும் இளஞ்சிவப்புமாய் வர்ணம் பூசி....அற்புதமாய்...

ஹம்ம்ம்ம்ம்... திட்டமிட்டு கட்டப்படிருந்த அந்த ஆலயத்தின் முகப்பில் நிறைய வியாபாரிகள் இருந்தனர். நான் எனது காலணியை கழற்றாமல் படியேறிய போது காலணியைக் கழற்றிவிட்டு செல்லுமாறு ஒரு காவலாளியால் கேட்டுக் கொள்ளப்பட்டேன்...

காலணியை கழற்றி செல்ல வேண்டியதின் அவசியம்...மரியாதையா அல்லது சுத்தத்திற்காகவா? காவலாளியை நான் கேட்க..அவன் அது எனக்கு கொடுக்கப்பட்ட வேலை ஐயா.. என்றான் பணிவாக...நான் சிரித்துக் கொண்டே காலணியை அவனிடம் கொடுத்து விட்டு....கோயில் நோக்கி படியேறினேன்....

எத்தனை பேரின் உழைப்பில் தொழில் நுட்பத்தில் எழும்பி இருக்கிறது இந்தக் கோயில்...? சிற்பிகள் எல்லாம் போற்றப்படவேண்டியவர்கள்...ஆமாம் கடவுளை உண்டாக்கும் கடவுளர்கள்...ஹா...ஹா... எல்லாம் சரியாய்தான் இருக்கிறது மெலுகாவில் என்ன ஒன்று சிற்பிகள் சிற்பம்தான் செய்யவேண்டும், வேறு தொழில் செய்ய முடியாது என்னும் சட்டம்தான் எரிச்சலூட்டுகிறது....மடையர்கள்...மெதுவாய் எனக்குள் கூறிக் கொண்டே நான் நகர முற்படுகையில்....தலையில் குடுமியோடு ஒருவர் என்னை வழி மறித்தார்...

" அன்னிய தேசத்தவர் போல காட்சியளிக்கிறீர்கள்...?கழுத்தை சுற்றி ஏன் அங்கவஸ்த்திரத்தால் மறைத்திருக்கிறீர்கள்...?"  என்று அவர் கேட்கவும்....

ஏன் நீங்களும் என்னை ஆண்டவனே..கடவுளே.. நீலகண்டனே... என்று காலைப்பிடிக்கவா...? நான் உள்ளுக்குள் முணு முணுத்தபடியே நமட்டுச் சிரிப்பு சிரித்ததை அந்த பெரியவர் பார்த்து விட்டு கொஞ்சம் கடுமையானார்....

ஹ்ம்ம்ம் நீங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் போலத் தெரிகிறதே...? என்று கேட்கவும்....அடக்கொடுமையே அவருக்கு எப்படி நம்மைப் பற்றி தெரிகிறது என்று யோசித்தபடியே...

ஏன் அப்படி கேட்கிறீர்கள்..? என்றேன்...

இல்லை... இல்லை கோயிலுக்கு வந்தால் சாமி கும்பிட வேண்டும்...மூலவரைப் பார்க்காமல் நீங்கள் சிற்பங்களை வேடிக்கைப் பார்க்கிறீர்களே... அதனால்தான் கேட்டேன் என்றார்.

அந்தப் பெரியவரை நான் இமைக்காமல் பார்த்தேன். கடவுள் இங்கே இருக்கிறார் என்று உங்களுக்கு சொல்லிக் கொடுத்ததை எனக்கு சொல்கிறீர்கள்....ஐயா தவறில்லை. நன்றிகள்...!!!! என்று கை கூப்பியபடி என்னை ஆசிர்வதியுங்கள் என்றேன்.... என் தலை மீது கை வைத்து கண்களை தீர்க்கமாய் பார்த்தபடி.....காலத்தின் நாயகர்கள் எப்போதும் கட்டுக்குள் நிற்கவேண்டிய அவசியமில்லை என்று சிரித்தார்...!

ஐயோ இந்த மெலுகன்களுக்கு என்னவாயிற்று என்று யோசித்தபடியே நான் கோயிலை விட்டு வெளியில் வந்தேன்...

கோயில் படிக்கட்டில் சம்மணமிட்டு அமர்ந்தேன். இரு கைகளையும் கோர்த்து நிமிர்ந்து உட்கார்ந்தேன்...! ஆழமாய் மூச்சினை உள் இழுத்து வெளியே விட்டேன். உடம்பு முழுதும் எத்தனை காயங்கள். எவ்வளவு அழுத்தமான வாழ்க்கை என்னுடையது. எத்தனை கொடூரர்களின் உயிரை பறித்திருக்கிறேன். நடு இரவில் எரியும் பிணங்களுக்கு நடுவே நான் அமர்ந்து வாழ்க்கையின் நுனி என்னவென்றறிய எவ்வளவு முயன்றிருக்கிறேன்.
 
நான் படைப்பவன். நான் அழிப்பவன். அழிப்பது படைக்க....படைப்பது....அழிக்க......
 
 
(இரண்டாம் பாகம் வாசிக்க இங்கேஅழுத்தவும்...)
 

தேவா. S

Courtesy

Main Source: The Immortals of Meluha - Mr. Amish
Saturday, January 19, 2013

பேச்சி.....!
அடிக்கடி பல சிந்தனைகளோடு அலுவலகத்தின் முதன்மை நிலைக்கதவை எல்லோருமே கடந்து செல்வதுண்டு. நானும் அப்படித்தான். வழி நெடுகிலும் இருக்கும் போக்குவரத்து நெரிசல் பற்றிய எரிச்சலோடு எட்டு மணிக்கு அலுவலகத்தை நெருங்கும் போது அசுர கதியில் கதவைத் திறந்து சென்று இருக்கையில் அமர்ந்து அன்றாடத்தில் மூழ்குவதும், வேலை நிமித்தமாய் வெளியில் செல்லும் போது செல்லும் இலக்கு, அங்கே செய்ய வேண்டிய வேலைகள் என்று மனம் எப்போதும் எங்கோ குவிந்து கிடக்க கதவைத் திறந்து கொண்டு போயும் வந்துமிருக்கிறேன்.

நான் மட்டுமில்லை என் அலுவலகத்திலிருக்கும் எல்லோருமே இப்படித்தான். மனிதன் இயந்திரமாகிப் போனதின் விளைவுகளை பளீர் நீல வானம் பல முறை பேசி சிரித்திருக்கலாம். என் வீட்டு தோட்டத்திலிருக்கும் செடிகள் மானுடரின் மிருக சிந்தனைகளை பற்றி பழங்கால மனிதர்களோடு எங்களை ஒப்பிட்டுப் நகைத்திருக்கலாம். விவசாயத்தை தொலைந்து போகச் செய்த நவீனத்தின் விசம் தடவிய கோர நாவின் கடுமையை நகரத்தின் நடுவே அலைந்து தெரியும் பசுக்களும், எருதுகளும் விரக்தியாய் விழிகளால்  பரிமாறிக் கொண்டிருக்கலாம்...!

சிறு பிராயத்தில் எல்லாம் எனக்கு இயற்கையோடு நிறைய தொடர்பிருந்து இருக்கிறது. எனக்கு இருந்த தொடர்பு என் தந்தைக்கு இருந்ததை விடவும், என் பாட்டனுக்கு இருந்ததை விடவும் அடர்த்தி குறைவானதுதான் என்றாலும் என் மகளை விட எனது தொடர்பு அடர்த்தியானது. என் ஆரம்பப் பள்ளி பிராயத்தில் நாங்கள் இருந்த வீட்டுக்குப் பின்னால் மிகப்பெரிய தோட்டம் ஒன்று இருந்தது. அந்த தோட்டம் யாருக்கு சொந்தமானது என்பது எல்லாம் எங்களுக்குத் தெரியாது.

அது புற்களால் நிரம்பி இருக்கும். தும்பைப் பூ செடி நிறைந்து கிடக்கும். என்னை ஒத்த சிறார்களுக்கு எல்லாம் அந்த தோட்டம் தான் எல்லாமே. பத்து பதினைந்து தென்னை மரங்களுக்கு மேலே கவிழ்ந்து கிடக்கும் நீல நிற வானத்தில் ஆங்காங்கே நீந்திக் கொண்டிருக்கும் மேகக் குட்டிகளிலும், கெட்டியான அடர் மேகங்களிலும் இறந்து போன எங்களின் உறவினர்களின் முகங்கள் எட்டிப்பார்ப்பதாக சொல்லி சோகமாய் பார்த்து இருக்கிறோம்.

இந்திரா காந்தி, நேரு, காந்தி, நாய்க் குட்டி, மான், யானை, கப்பல் என்று எல்லாவற்றையும் கூப்பிட்டு கூப்பிட்டு நண்பர்களிடம் நான் காண்பித்தது உண்டு. ஊர்ந்து செல்லும் அட்டைப் பூச்சிகளின் மீது இருக்கும் கருப்பு சிவப்பு வர்ணத்தை வாய் பிளந்து ரசித்துக் கொண்டிருக்கையில், அதன் பக்கத்திலேயே மஞ்சள் கருப்போடு இன்னுமொரு அட்டைப்பூச்சி வருவதைப் பார்த்து...டேய்.. இன்னொன்னுடா....என்று வாய் பிளந்து ஆச்சர்யத்தில் ஆழ்ந்து போனதும் உண்டு. சிறு குச்சியைக் கொண்டு அருகில் சென்றவுடன் சுருண்டு கொண்டு அசையாமல் கிடக்கும அட்டைப்பூச்சி எப்போதும் எழும் என்று மணிக்கணக்கில் அருகில் இருந்து கவனித்தது உண்டு. தட்டான் பூச்சிகளின் வாலில் நூல் கட்டி பறக்க விட்ட படியே அடுத்த பிறவியில் தட்டானாய் பிறப்போமா என்று யோசிக்கையில்

பாபுவின் கால் சட்டை இடுப்பில் இருந்து இறங்கி பின் பகுதியைக் அரைகுறையாய் காட்ட சிரித்துக் கொண்டெ சுற்றி இருக்கும் நண்பர்களிடம் சொல்லி சிரித்துக் கொண்டே விளையாடியது உண்டு. என்ன செய்யவில்லை நான்...? எதை மறுத்திருக்கிறேன் நான்...?

சின்ன சின்ன வண்டுகள் புல்லின் மீது பாகிரதனாய் பிராயத்தனம் கொண்டு நகருவதைப் புல்லின் மீது படுத்துக் கொண்டு பார்க்கும் போதும், அதன் ஒரு குட்டி வண்டு கருப்பு சிவப்பு நிறத்தில் குண்டு மணியைப் போல உருண்டு உருண்டு வருவதைப் பார்த்து என்ன வர்ணக்கலவை என்று வியந்த படி அந்த வண்டை பிடித்து கையில் வைத்து ஓட விட்டும் நான் ரசித்த நாட்கள் எல்லாம் எங்கே போயின இப்போது..?

புல்லில் இருந்து எழும் பச்சை வாசனையை அனிச்சையாய் என் மூளை எனக்குள் பரவ, நான் இயந்திரமாய் இயங்கிக் கொண்டிருக்கிறேன் இப்போது....!

அலுவலகத்தின் கதவு பற்றி சொல்லி விட்டு அங்கே கடந்த இரண்டு வருடங்களாய் படுத்துக் கிடக்கும் பேச்சியைப் பற்றி சொல்லாமல் விட்டு விட்டேன் பாருங்கள். பேச்சிக்காக எழுத ஆரம்பித்த கட்டுரைதான் இது.. என்ன லட்சணமாய் என் சிறுவயதுக்குள் சென்று விட்டது பாருங்கள்.

பேச்சியை நான் முதலின் கவனித்தது ஜோசப்போடு ஏதோ ஒரு சந்திப்பிற்காய் வெளியில் சென்ற போதுதான். வெளியில் செல்ல வேண்டிய அவசரத்தில் அவன் வண்டியை பார்க்கிங்கிலிருந்து உருவி ரிவர்ஸில் வந்து வேகமாய் முன்னோக்கி உருமி முன்னே வற .. வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பேச்சி என்ன செய்வது என்றறியாமல் வண்டியின் முன் நிற்க, வண்டி அவளை அடித்து தூக்கி வீசியது.

அட.. பூனைய அடிச்சுட்டீங்க ஜோசப் என்று சொல்லிக் கொண்டே வண்டியிலிருந்து இறங்கி பேச்சி தூக்கி எறியப்பட்ட பழைய சாமன்கள் கிடந்த இடுக்குகளுக்குள் பார்த்தேன்.. மியாவ்.. மியாவ் என்று சப்தம் மட்டும் வந்தது. உயிரோடு இருப்பாளா...????? என்று சோகமாய் யோசித்துக் கொண்டிருக்கையில் செல்ல வேண்டிய சந்திப்பிற்கான நேரம் பிடரியைப் பிடித்து மிண்டும் வண்டியில் ஏறச் சொன்னது.

அடுத்த சில மணித்துளிகளில் பேச்சியை மறந்து விட்டேன். பிறகு ஒரு வெயில் காலத்தில் அலுவலக கதவிற்கு கீழே கசியும் குளிர் காற்றுக்காய் அவள் வெளியில் படுத்திருப்பதை கண்டேன். கதவைத் திறந்து உள்ளே வருபவர்களும், உள்ளே இருந்து வெளியே செல்பவர்களும் விரட்டி விட, ஓடி விட்டு மறுபடி அங்கே வந்து படுத்துக் கொள்வாள். அடிபட்டதற்கு பிறகு அவளைப் பார்த்த அன்று....ஓ...யூ ஆர் அலைவ்..என்று கேட்டு விட்டு கடந்து சென்று விட்டேன். மதியம் சாப்பிட்டு விட்டு யாரவது வைக்கும் உணவை சாப்பிட்டு விட்டு அங்கேயே இருக்கும் பேச்சியை சில நேரங்களில் காண முடியாது.

எங்கடா பேச்சிய காணோம் என்று ஆபிஸ் பாயிடம் எப்போதாவது கேட்பேன்...." பேக்சைட்ல கிடக்குனு.... பிரசவிச்சுட்டுண்டு" என்று தெள்ளிய மலையாளத்தில் அவன் சொல்வதைக் கேட்டு ஓகோ என்று நான் சொல்வதோடு மறந்து போவேன். சடாரென்று ஒரு நாள் இரண்டு மூன்று குட்டிகள் அலுவலக தோட்டத்தில் சுற்றி வர, பிரசவித்த பேச்சியும் சப்தமில்லாமல் உடன் வந்து நிற்பாள். இப்படி அவள் வந்து கதவருகே படுப்பதும் பின் காணாமல் போவதும், ஆபிஸ் பாயிடம் நான் கேட்கும் போது அவன் " பிரசவிச்சுட்டுண்டு.. " என்று சொல்வதும், பின் குட்டிகளோடு அவள் பவனி வருவதும், சமகாலச் சூழல்கள் அவற்றை எனக்கு மறக்கடிப்பதும் வழமையாகிப் போனது.

இரண்டு தினங்களுக்கு முன்பு அலுவலத்தின் வாசற்படியில் நமது வீட்டு வாசற்படியில் அமருவது போல அமர்ந்திருந்தேன். எப்போதும் உந்திச் செல்லும் கதவுகளை கை வைத்து வருடினேன். சட்டென்று கிராமத்து பூர்வீக வீட்டின் பிரமாண்ட கதவுகளும் முழங்கை நீள சாவியும் மனதில் வந்து சென்றது. அலுவலக வாசலை ஒட்டிய ஒரு சிறு புல்வெளியிலிருந்து தலை தூக்கி மியாவ் என்று எட்டிப் பார்த்தாள் பேச்சி.....

ஏய்....பேச்சி இங்க வாடி....கை நீட்டி அழைத்தேன்....! ஓய்வு என்பது நாம் உருவாக்கிக் கொள்வதடா முட்டாள் என்று உள்மனம் என்னை செல்லமாய் கண்டித்து ஏதோ செய்தி பகிர...முதுகினைத் தூக்கி உயர்த்தியபடி.. பேச்சி என் அருகே வந்து எனக்குப் பக்கத்தில் இருந்த சுவற்றில் முன் நெற்றியையும், கன்னத்தையும் வைத்து உரசிக் கொண்டிருந்தாள். அரிக்கும் போல இருக்கிறது என்று கை நீட்டி பக்கத்தில் இழுத்து கழுத்தையும், நெற்றியையும் முகத்தையும் வருடி கொடுத்தேன்...

முன்னங்கால்களை நீட்டி சுகமாய் படுத்துக் கொண்டது. பந்தயக்குதிரை போன்ற ஓட்டம் நிறைந்த வாழ்க்கை எவ்வளவு தூரம் என்னை வேறு அச்சில் இயங்க வைத்து விட்டது. ஒரு முறை கூட நின்று உற்று பேச்சியை நான் கவனித்தது கிடையாது...., பேச்சியை மட்டுமா, நண்பர்களை, உறவுகளை, பல சூழல்களை என்று எப்போதும் எதையோ யோசித்து எங்கோ நான் மட்டுமா ஓடிக் கொண்டிருக்கிறேன்....என்னைச் சுற்றிய உலகமும்தான்....

சிறு புன்னகையைக் கூட பரிமாறிக் கொள்ள தயாரில்லாத, பக்கத்து வீட்டுக்காரர்கள், காரோட்டிகள், லிப்டில் கண நேரம் பயணம் செய்யும் அப்பார்ட்மெண்ட் சிமிண்ட் மனிதர்கள், தொழில்சார்ந்து சந்திக்கும் மனிதர்கள், சூப்பர் மார்க்கெட் பரபரப்பு மனிதர்கள்....என்று ரெடிமேடாய் ஒரு ஹலோ, ஹாய், பாய், ஹவ் ஆர் யூ, டேக் கேர் என்று இயந்திரத்தனமாய் போய்விட்டதே வாழ்க்கை...

யோசித்தபடியே பேச்சியை தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தேன்...பேச்சி கண் மூடி கிறங்கிக் கிடந்தாள்.

" பிரசவிக்காம் போகுணு சாரே....வயித்தக் கண்டா....வலிதாயிட்டுண்டு ..." ஆபிஸ் பாய் அவசரமாய் சொல்லிக் கொண்டே ஏதோ ஒரு வேலைக்காய் ஓடிக் கொண்டிருந்தான்.

ஏண்டி பேச்சி....யாருடி உன் புருசன்...? மாசமா இருக்க..அப்புறம் காணமப் போயிடுற...? குட்டிகளோட முறைச்சுக்கிட்டே சுறு சுறுன்னு பிறகு மெலிஞ்ச உடம்பா சுத்துற...? இப்ப தனியா வந்து என் மடில கிடக்க.....?

அட்லீஸ்ட் எங்கடி நீ பெத்த புள்ளைங்க எல்லாம்...?

மெளனமாவே நீ எல்லாத்தையும் சுமக்குற, குட்டிகளை பெத்தெடுக்குற..அப்புறம் எல்லாமே உன்ன விட்டுப் போயிடுதேடி... நீ கவலைப்படுறது எல்லாம் இல்லியா?

பேச்சிக்கு நான் கேட்டது புரிந்திருக்குமா என்று தெரியவில்லை...மியாவ்...என்று மெலிதாய் முனகியபடியே...கண்ணைத் திறந்து என்னை பார்த்தாள்....., பிறகு கண்ணை மூடிக் கொண்டாள்...!

அது என்ன உணர்வோ தெரியவில்லை...நான் கண் கலங்கி அழுதபடியே அவளை வருடிக் கொண்டிருந்தேன்...


தேவா. S


Monday, January 14, 2013

நீதானே என் பொன் வசந்தம்...!


சின்ன வயசுப் பசங்க எல்லாம் அடிதடி சண்டைன்னு படம் எடுக்க வந்துட்டதால, கிழவனுங்க எல்லாம் காதலை பத்தி படம் எடுக்க வந்து கொல்றாங்கன்ற ரேஞ்சுக்கு நம் ஆல் டைம் இளைஞர் சாரு மாமா அவரோட தளத்துல கீசி (அதாங்க எழுதின்னு அர்த்தம்...!!!!) இருந்தத பாத்ததுக்கு அப்புறமாதான் நான் நீதானே என் பொன்வசந்தம் படத்தப்  பார்த்தேன்றது எல்லாம் இருக்கட்டும்....

சாரு மாமா மட்டுமில்ல, நிறைய சீனியர் பிரகஸ்பதிகளுக்குமே இந்தப்படம் பிடிக்கலைன்றத நான் அங்க அங்க மேஞ்சுட்டு இருக்கும் போது இணையத்துல வாசிச்சு தெரிஞ்சுகிட்டேன். சாரு மாமா படம் பிடிக்கலேன்னு சொல்லிட்டு கதாநாயகிய அவரோட ஸ்வீட்டி, செல்லம்ன்ற ரேஞ்சுக்கு எழுதி இருந்தத பாத்துட்டு அவருக்கு ஏன் ஒரு பொம்பளப் புள்ள நேரத்தே காலத்தே பொறந்து இருந்திருக்க கூடாது...? மனுசன் கொஞ்சமாச்சும் அடங்கி இருப்பாரேன்னு எனக்குள்ள சட்டுன்னு தோணிச்சு...

அதாவது சாரு மாமா மாதிரி ஆளுங்க அடுத்த ஐயாயிரம் வருசம் கழிச்சு பொறக்கப் போற மாடர்ன் டுபாக்கூர் டண்டணக்க மனுசங்களுக்காக இப்பவே புரியாத கதைகளையும் கட்டுரைகளையும் எழுதி வச்சுக்கிட்டு, என் படைப்ப எல்லாம் படிக்க உங்களுக்கு எல்லாம் அறிவு வேணும்டா, புத்தி வேணும்டான்னு மப்புல மத்தாப்பு கொளுத்துறத கூட ஏத்துகலாம்ங்க...வாசகர் வட்டம், தாலுகா, ஜில்லா, பில்லா, கூட்டத்தையும் விமர்சிக்காம நாம மரியாதையா ஒதுங்கிக்கிடலாம்ங்க...

ஆனா.. இந்த போல்ட்ஸ் எல்லாம் எவர் க்ரீன் ஹீரோ கணக்கா, சின்ன சின்ன புள்ளைங்கள கனவுக்கன்னின்னு சொல்லி கிண்டல் பண்ணி விளையாடுற விஞ்ஞானம்தான் புடிக்க மாட்டேங்குது நமக்கு. என் இஷ்டம் நான் எழுதுவேன்னு ஏதாவது நாக்கு கேட்டுச்சுன்னா அந்த நாக்கையும் எழுதுன கையையும் அவன் அவன் அறைவீட்டுக்குள்ளயே வச்சு பூட்டிக்கத்தான் நான் சொல்வேன். பொதுவெளியில எழுதும் போது நாகரீகமா டீல் பண்ணத் தெரியாத டீட்டெய்ல்ஸ் எல்லாம்...படம் பாத்துட்டு பல்டி அடிக்கிற கோமாளித்தனத்தை என்னனு சொல்ல...

பொதுவாவே ஒரு ரேஞ்சுல படம் எடுக்குற கெளதம் சார். நீதானே என் பொன்வசந்தம் படத்தையும் அதே ஷேப்லதான் செஞ்சு இருக்கார். எப்பவும் ஹையர் மிடில் க்ளாஸ் பத்தி விலாவரியா பேசுறதுல சார் ரொம்பவே கில்லாடி. அதோட மட்டுமில்லாம தன்னோட படைப்புகள்ள வர்ற கதாபாத்திரங்களுக்கு கூடவே அப்பா பேரையும் சேத்து சொல்ற அவரோட வழக்கம் ரசிக்கிறமாதிரிதான் இருக்கு.

காதல் கதைன்னு இதுக்கு முன்னாடி எடுத்தவங்களும் சரி இனிமே எடுக்கப் போறவங்களும் சரி... புதுசா ஒரு ஜிப்பா ஜிம்ளாக்கோவையும் காட்ட முடியாது. ஆல்வேய்ஸ் எ காய் அண்ட எ கேர்ள்...! அவுங்க காதலுக்கு இருக்குற பிரச்சினை, இல்ல பெற்றோர்கள் சைட்ல வர்ற எதிர்ப்பு, பாத்து காதல், பாக்காமலேயே காதல், தோத்துப் போன காதல், சேர விரும்பாத காதல்...

இப்டி கேமரா காதலை சுத்தியேதான் சுழன்று ஆகணும். நீதானே பொன் வசந்தத்திலேயும் அப்டிதான், ராஜா சாரோட செம ட்யூன்ஸோட..பெர்பெக்ட்டா ஸ்டார்ட் ஆகுற மூவில..ஒவ்வொரு சீனும் ப்ரேம் பை ப்ரேம் லவ்லி...! உணர்வுகள பத்தி பேசுற எந்தப் படமா இருந்தாலும் சரி அதை புறக்காட்சிகளை விட்டு நகர்ந்து தெளிவா விளங்கிகுற பக்குவம் நமக்கு வரணும். உணர்வுகளை உணர்வுகளால் சுட்டுத் தள்ளியிருக்கும் கெளதம் வாசுதேவ் மேனன்...... உங்களுக்கு ஒரு ஹேட்ஸ் அப்...!!!!!!

ஒவ்வொரு தடவை அந்தப் பொண்ண, கதாநாயகன் பிரியுற இடத்துலயும் ச்ச்சும்மா பக்கம் பக்கமா டயலாக்க லோட் பண்ணி எரிச்சல் படுத்தாம.. செமையா எக்ஸ்பிரஷனால அதை வெளிப்படுத்த வச்சு இருப்பது செம.. செம..செம...! இன்னும் சொல்லப்போனா பல சீன்ல ஜீவாவ சமந்தா செமயாவே ஒவர் டேக் பண்ணிடுறாங்க..!

குடும்பச் சூழல், அதனாலா அந்தக் காதலிய வெறுக்கவும் முடியாம, பொழுதேன்னிக்கும் கூட சுத்தவும் முடியாம, அவ எங்க வேணா சுத்தலாம் அவுங்க அப்பா கிட்ட காசு இருக்கு, நான் ஒழுங்க படிச்சாதானே என் குடும்பம்னு அழுத்தமா ஜீவா யோசிக்கிற இடம் கெளதம் மேனன் சாரோட அனுபவத்தைக் காட்டுது. அது வலி, அது வேறு மாதிரியான வேதனை.

ஜெயிக்கிற காதலுக்கும் தோற்குற காதலுக்கும் மத்திமத்துல் இது மாதிரி விவரிக்க முடியாத உணர்வுச் சூழல்கள் நிறைஞ்சு இருக்குன்றத எதார்த்தமா காட்சிப்படுத்தி இருக்கும் விதத்தை நாம் பாரட்டியே ஆகவேண்டும். எப்பப் பாத்தாலும் வித்தியாசமான கதை வேணும்னு, உலகப்படத்தை எல்லாம் மேஞ்சு முடிச்சுட்டு அதை ஒப்பிட்டு இது சரி இல்லன்னு சொல்றவங்களுக்கு வேணும்னா இந்தப் படம் சப்பையா தெரியாலாம். ஆனா எப்போ பாத்தாலும் கதையை, வித்தியாசமான புறக்காட்சிகளையே எதுக்கு நாம தேடி ஓடணும்..?னுதான் நான் கேக்குறேன்...!

கதையோ அல்லது ஏதோ ஒரு முடிவோ அல்ல ஒரு படைப்பு என்பது. அது பல தரப்பட்ட உணவுகளைக் கொண்ட சூழல்களின் தொகுப்பு. நீதானே பொன் வசந்தம் எப்போதும் போல ஏதோ ஒரு வித்தியாசமான கதை அல்ல அது உணர்வுப் பூர்வமான சம்பவங்களின் தொகுப்பு.

எம்.ஜி.ஆர் படம் எத்தனை படம் வந்துச்சோ அத்தனையிலும் எம்.ஜி.ஆர் ரொம்ப நல்லவர், கடைசியில் வில்லன்களைக் அடித்து புரட்டி தன் குடும்பத்தைக் காப்பாற்றி எல்லோரும் வரிசையாய் நின்று கும்பிட சுபம் என்று போட்டவுடன் கைதட்டி எழுந்து வந்தவர்கள் தான் நாம். அதையே எல்லா நடிகர்களும் பெரும்பாலும் கையில் எடுத்துக் கொள்ள...ஒரு கதை என்பதின் கட்டமைப்பை நம்ம மூளை தன்னிச்சையாக கட்டியமைத்துக் கொண்டு விட்டது.

இதே மாதிரிதான் உலக சினிமாக்களை பார்ப்பவர்களும் கூட. ஈரானிய, ரஷ்ய, மற்றும் ஆங்கில படங்களை மிகுதியாக பார்ப்பவர்களும் இப்படியான ஒரு கட்டமைப்பை மனதிற்குள் கட்டியமைத்துக் கொண்டு தாங்கள் பார்க்கும் படம் சரி இல்லை என்று உடனே முடிவெடுக்கறதோட மட்டுமில்லாமல் அதற்கு விமர்சனத்தையும் எழுதி விடுகிறார்கள்.

நான் ஏற்கெனவே ஒரு முறை சொன்னது போல விமர்சனம் என்பது நாகரீகமான சர்வாதிகாரம். என் கருத்து சரி என்று சொல்ல, எனது ஆளுமையை கடை விரிக்கும் ஒரு தீவிரவாதம். அதுலயும் கெளதம் மேனனை தனிப்பட்ட முறையில் கிழவன், காதலைப் பற்றி எடுக்க அவருக்கு ருகதை இல்லை என்று விமர்சிப்பது என்பது அப்பட்டமான தனி மனித தாக்குதல்.

ஓ.கே...!!!! யூ டர்ன் பண்ணி மறுபடியும் படத்துக்குள்ள போவோம்...

பாட்டு, பின்னணி இசை, காட்சிகள் என்று தொடர்ச்சியாக சென்று கொண்டிருக்கும் படம் ஒரு இடத்கில் சிறிதாய் தொய்வு விழுந்ததாக எனக்குப் பட்டது. அதாவது ஜீவா எம்பிஏ எல்லாம் முடிச்சுட்டு..மறுபடி சமந்தாவ தேடிப் போகும் போது அவுங்க சுனாமில பாதிக்கப்பட்டவங்களுக்கு நிவரண உதவிகள் செய்ய ஒரு கடற்கரை கிராமத்துல தங்கி இருக்காங்கன்ற மாதிரி காட்டி இருப்பாங்க...

அதை பார்க்கும் போது மட்டும்...மூவி இஸ் எ மூவி....அதுல இப்டி எல்லாம் சொல்லித்தான் ஆகணும் வேற வழி இல்லன்ற ரேஞ்சுக்கு கெளதம் மேனன் சார் கீழ வழுக்கி விழுந்துட்ட மாதிரிதான் எனக்கு தோணிச்சு...! நல்ல டீக்கான டிரஸ்ல பட்ட சகதி மாதிரி இதைத்தான் நான் ஃபீல் பண்ணினேன். பட் ஸ்டில்...வேற வழி இல்ல ஏதோ ஒண்ணு பண்ணித்தான் கதைய நகர்த்தியாக வேண்டும்ன்ற எதார்த்த கயிறை பிடிச்சுக்கிட்டு நான் மேல ஏறி வந்துட்டேன்.

குறிப்பா சொல்லணும்னா லாஸ்ட் சீன் சார்.....ஹ்ம்ம்ம்ம்ம்...நோ வே....சமந்தா தடுமாறி, உருகி, மருகி மெல்லவும் முடியாம, முழுங்கவும் முடியாம, ஜீவாவோட கல்யாண ரிசப்சனுக்கு வந்துட்டு (அஃப்கோர்ஸ் வேற பொண்ணோடதான்..)கல்யாணத்துக்கு முதல் நாள் இரவுல ஜீவா கூட அவுங்க லவ் பண்ணினப்ப சுத்துன இடத்துக்கு எல்லாம் போய் சுத்திட்டு....

கடைசில அந்த கார்ல ஏறி வீட்டுக்கு வர முடியாம வர்றதும்..., இனிமே என்ன செய்ய முடியும்ன்ற மனோநிலையில ஜீவாவும் தடுமாறி வீட்டுகு திரும்பி வர்ற இடமும்.....க்ளாஸ்!!!!!!! ஹவ் த ஈ கோ இஸ் ப்ளேயிங்னு ச்ச்சும்மா நச்சுன்னு சொல்லி இருப்பாங்க..!

எப்டி இருந்தாலும் ரெண்டு பேரும் ஒண்ணாயிடுவாங்கன்றது எல்லோராலயும் கெஸ் பண்ண முடிஞ்சாலும், பட் செமையா லாஸ்ட் சீன்ல ஜீவா கல்யாணத்த நிறுத்திட்டு சமந்த வீட்டுக்குள்ள என்ட்ரி ஆகி, அவுங்க அப்பாகிட்ட காதலைச் சொல்ல்ல்ல்ல்லி....

தென்...கடைசில...

சமந்தா வீட்டு வாசலில்...ஜீவாவும் சமந்தாவும் முத்தமிட்டுக் கொள்ள...மொத்த திரைப்படத்தின் காட்சிகளும், இசையும், குறிப்பாய் பாடல்களும் நம்மை சூட்சுமமாய் முத்தமிடுகின்றன....!

நீதானே என் பொன் வசந்தம் சராசரியான கதை சொல்லும் திரைப்படம் அல்ல....

அது ஒரு கவிதை...!

வெறுமனே திரைப்படம் என்று அதைப் பார்க்காமல்... மெளனமாய் அது பகிரும் உணர்வுகளை வாசியுங்கள்...!


தேவா. S

Thursday, January 10, 2013

சர்ச்சைகளின் நாயகன் கமல்....!

சர்ச்சைகளுக்குள் சிக்கிக் கொள்வது ஒன்றும் கமலுக்குப் புதிது அல்ல. அவர் வாழ்க்கையை மெளனமாய் புரட்டிப் பார்த்தால் அவர் உலகநாயகனோ இல்லையோ ஆனால் சர்ச்சைகளின் நாயகன் என்பது தெளிவாய் புரியும். அறிவு ஜீவியாய் நாம் இருக்கலாம் ஆனால் இந்த சமூகத்தினூடே எப்படி நகர்ந்து செல்வது என்ற சூட்சுமமும் தெரிந்திருக்க வேண்டும். ஆகச்சிறந்த படைப்பாளியாய் இருக்கும் கமலின் பிரச்சினை இந்த சமூகத்தின் மனோநிலை என்ன என்று தெரிந்து கொள்ளாமல் நகர்ந்து கொண்டே இருப்பதுதான்.

மேடை நாடக பாரம்பரியத்திலிருந்து சினிமாவை எட்டிப் பிடித்திருந்த சிவாஜி போன்ற ஜாம்பவான்களின் நடிப்பு என்பது நாடக கலாச்சாரத்தை ஒட்டியே மெலெழும்பி நின்றது. பாடல்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு திரைப்படங்கள் கலாச்சாரம் மெல்ல மெல்ல உடைந்து வசன அடிப்படையிலான திரைச் சிற்பங்களாக மாறியதும் காலத்தின் கட்டாயமாகிப் போனது. அப்போதெல்லாம் சிவாஜி திரையில் அழும் போது அடா.. அடா. என்ன நடிப்புடா இது...!!!! என்று திரையில் இருந்து தன்னை வித்தியாசப்படுத்திக் கொண்டு காட்சிகளுக்கு வெளியே நின்றுதான் தமிழ் திரைப்பட ரசிகர்கள் கூட்டம் விசிலடித்தது.

கட்டபொம்மன் ஒரு போதும் சிவாஜியைப் போல பேசியிருந்திருக்க மாட்டார் என்று தெளிவாய் தெரிந்தாலும் திரையில் காணும் தங்களின் அபிமான நட்சத்திரங்களின் அரிதாரத்தின் அழுத்தம் இயல்பை விட எப்போதும் கூடுதலாய் இருக்கவேண்டும் என்று நினைத்த ஒரு கூட்டு மனோநிலை கொண்ட மனிதர்களைக் கொண்ட காலம் அது.

பாலச்சந்தர் சாரும், பாரதிராஜா சாரும் ஒன்று சேர்ந்து அரிதார அழுத்தங்கள் கூடிய திரைப்படங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க, நான்கு சுவர்களுக்குள் சுழன்று கொண்டிருந்த கேமராக்கள் வீதிகளை எட்டிபார்க்க ஆரம்பித்தன. ஒவ்வொரு குடும்ப வாழ்க்கையிலும், உறவுகளிலும் இருக்கும் சிக்கல்களை, முரண் என்று சமூகம் நம்பிக் கொண்டிருக்கும் விசயங்களை, மாற்றுக் கோணங்களால் காட்சிப்படுத்தி அட இப்படி எல்லாம் நடக்குமா என்ன? இப்படியும் இருக்குமா என்ன? என்று உளவியல் ரீதியான திரப்படங்களை எடுத்து நமது புருவங்களை உயரவைத்த  பிரம்மா பாலசந்தர் சார் என்றால்...

கலாச்சராம், மண், பாரம்பரியம், கிராமியம் என்று தமிழகத்தின் தென்கோடி கிராமங்களுக்குள் எல்லாம் சென்று குஞ்சரம் ஆயாவையும், மாரியம்மாவையும், பெரியகண்ணுத் தேவரையும், முத்து பாண்டியையும், செம்மண் கரடு முரடு நிலங்களையும், தண்டட்டி அணிந்த அப்பத்தாக்களையும், அன்பு, பாசம், வீரம், குரூரம், நியாயம், சிறு தெய்வங்களுக்கான கொண்டாட்டங்கள், என்று கிராமியத்தை திரைக்குள் இழுத்து வந்து போட்ட பெருமை பாரதிராஜா சாரைத்தான் சேரும்....

இரண்டு ஜாம்பவான்களுக்கும் இளையராஜா என்ற மேதை தோள் கொடுக்க, தமிழ் சினிமா எதார்த்த உலகத்துக்குள் காலடி எடுத்து வைத்த போது ஜனித்த குழந்தைகள்தான் ரஜினி, கமல் என்னும் இரு பிரமாண்டங்கள். திரையை மிரட்டும் வில்லன் வேடம், பிறகு குணச்சித்திரம், கதாநாயகன் என்று பயணித்துக்கொண்டிருந்த ரஜினியின் ஸ்டைல் ரசிகர்களுப் பிடித்து போக தனக்கான பயணத்தை முழுவேகத்தில் தனக்கென்ற ஒரு பாணியில் ரஜினி தொடர....

இயல்பிலேயே புத்திசாலியான கமலுக்கு நடிப்பு என்பது எதார்த்தமாய் வந்து ஒட்டிக் கொள்ள அவரது பாரம்பரியமும், அதற்கு அவர் பிறந்த மண்ணும் உதவ கமலஹாசன் எதார்த்த நடிப்பில் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்தார். சிவாஜியோடு கமலை ஒப்பிடுவது தவறு என்று நான் அடிக்கடி கூறி இருக்கிறேன். சிவாஜியின் களம் வேறு, ரசிகர்கள் வேறு, காலகட்டம் வேறு....அவர் ஒரு பரிமாணத்தின் உச்ச நாயகன் என்றால் கமலஹாசன் வேறொரு பரிமாணத்தின் உச்ச நாயகன். சிவாஜியின் நடிப்பை நல்ல நடிப்பு என்று கைதட்டி பார்க்க முடியுமென்றால்...

கமலின் நடிப்போடு சேர்ந்து நாமும் அழுது, சிரித்து, வலிகளை சுமந்த படியேதான் அந்த திரைப்படம் முழுதும் சுற்றித் திரியவேண்டும். படைப்பின் மூலத்திலிருந்து புதிது புதிதாய் சிந்தித்து அதை திரையில் காட்சிப்படுத்த துடிக்கும் ஒரு மிகப்பெரிய ராட்சசன் இந்த கமலஹாசன். சினிமாவை சுவாசமாகக் கொண்டு நகர்ந்து கொண்டிருக்கும் கமலஹாசன் வணிக ரீதியாய் கொடுத்த வெற்றிப்படங்கள் கூட அவரின் திருப்தியின்மையோடு வேறொரு சினிமாவின் புதிய முயற்சிக்காய் எடுக்கப்பட்டதாகத்தான் இருக்கும்.

கமலை புரிந்து கொள்ளுதல் கடினம். அவனின் சொந்த தயாரிப்புகளையும், கதைகளையும் விளங்கி அதன் ஆழத்தில் ஒளிந்து கிடக்கும் மெளனத்தை வடிகட்டி பிரித்தறிதல் சாமனியரால் இயலாத காரியம். இந்த இடத்தில்தான் இந்த பிரமாண்டக் கலைஞன் பலமுறை தோற்றுப் போயிருக்கிறான். குணா படம் வந்த சமயத்தில்தான் ரஜினியின் தளபதியும் வெளி வந்தது. பட்டுக்கோட்டை அண்ண பூர்ணா தியேட்டரில் நாற்பது நாட்களுக்கும் மேலாக தளபதி வெற்றி முழக்கமிட்டுக் கொண்டிருக்க....

அதே ஊரில் சாதாரண டீலக்ஸ் தியேட்டரான முருகையாவில் குணா 25வது நாளில் தூக்கி எறியப்பட்டது. குணா நல்ல படமா..? இல்லையா...? என்ற கேள்விக்கான பதிலை உங்களிடமே விட்டு விடுகிறேன். கமர்சியல் ஹிட் படங்களோடு ஒரு வேளை தொடர்ச்சியாக தன்னை இணைத்துக் கொண்டு கமல் பயணித்திருப்பாரேயானால் பொருளாதார ரீதியாக தன்னை பாதுகாப்பாய் வைத்துக் கொண்டிருக்க முடியும்....

கமலின் பிளஸ் மற்றும் மைனஸ் இரண்டுமே அவன் ஒரு ஜீனியஸ் என்ற ஒரு அடைப்புக்குள் நின்று கொள்கிறது. திருமண பந்தமாகட்டும், எதார்த்த வாழ்க்கையாகட்டும், சினிமாவாகட்டும், அவன் யாருக்குமே இது வரையில் பயந்தது கிடையாது. நான் இப்படி எடுக்கிறேன் என்னை பிடித்திருந்தால் பாருங்கள் இல்லையென்றால் போய்க்கொண்டே இருங்கள் என் லாபத்தையும் நஷ்டத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று நகர்ந்து கொண்டிருந்த.....

கமலஹாசனின் முகத்தில் வாழ்க்கை பய ரேகையை தற்போது படரவிட்டிருப்பது ஒன்றும் புதிய விசயம் அல்ல. காலம் என்னும் அரக்கன் காலம் காலமாய் கலைஞர்களுக்கும், படைப்பாளிகளுக்கும், புதியதை உருவாக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் வழக்கமாய் கொடுக்கும் பரிசுதான் அது.

காலம் கொடுத்திருக்கும் பரிசினை சுமந்து கொண்டு இதோ இந்த 50+ல் கமல்ஹாசன் வர்த்தகம் பேச பொதுவெளிக்கு வந்திருக்கிறார். தன்னை ஒரு கலைஞனாகவே வரித்துக் கொண்டு லாப நஷ்டக் கணக்குப் போட்டுப்பார்க்காமல் நகர்ந்த அவரின் வாழ்க்கை இன்று வணிகம் பேசுகிறது. நான் வியாபாரி என்கிறது. கமலஹாசனின் முதுமைத் தனிமை அவரின் மீது நிழலாய் விழ ஆரம்பித்திருப்பதோடு அவரின் பிள்ளைகள் பற்றிய எதிர்காலம் பற்றியும் பலமாய் யோசிக்க வைத்திருக்கிறது.

அவரின் ஜீன்களில் பதிந்திருக்கும் ஞானம், சமகாலச் சினிமாவை நவீன தொழில் நுட்பத்தோடு கைகோர்த்துச் செல்ல வேண்டும் என்று சொல்ல...புதியதை சொன்னால் என்ன பதிலை வரலாறு எப்போது சொல்லுமோ அதே பதிலை இப்போது கமலுக்கும் சொல்லி இருக்கிறது....

கமல் தற்போது தடுமாறி இருக்கிறார். இந்த சமூகம் அந்த கலைஞனோடு கைகோர்க்காமல் தடுமாற வைத்திருக்கிறது. தனி மனிதனாய் சினிமாவில் சம்பாதித்த அத்தனை பணத்தையும் கொட்டி 90 கோடி செலவில் விசுவரூபத்தை அவர் உருவாக்கி  வெளியிடும் போது வணிகரீதியாய் டி.டி.எச்சிலும் வெளியிட்டால் லாபம் கிடைப்பதோடு எதிர்கால சினிமா என்பது இனிமேல் இப்படித்தான் இருக்கும் என்று கோடிட்டுக் காட்ட நினைத்த அந்தக் கலைஞனை தியேட்டர் அதிபர்கள் என்னும் அதிகார மையம் மொத்தமாய் ஓரம்கட்டி எதிர்ப்பை தெரிவிக்க....

90 கோடியில் எடுத்த ஒரு திரைப்படம் வெறும் 45 தியேட்டர்களில் தமிழகமெங்கும் வெளியாகும் சூழல் உருவானது. கமல் தடுமாறிப் போனார், டி.டி.எச் தொழில் நுட்பத்தை பயன் படுத்தி திரைப்படம் வெளியாகும்  முன்பே வீட்டில் காணலாம் என்ற அவரின் புதுவழி பொதுவழியாக மாறாமல் முள் கம்பிகள் வைத்து இப்போது அடைக்கப்பட்டிருக்கிறது.

தனது பொருளாதார சூழலை மையப்படுத்தி யோசித்திருக்கும் கமலஹாசன் தியேட்டர் அதிபர்களின் வேண்டுகோளுக்கு பணிந்திருக்கிறார். இது பணிவு இல்லை, இதுவரையில் கமல் பின்பற்றாத புத்திசாலித்தனம். டி.டி.எச்சில் பணம் கட்டியவர்களுக்கான பதிலை கமலும் அவருக்கு பணம் கொடுத்தவர்களும் பார்த்துக் கொள்வார்கள்....இதைப் பற்றி விவாதித்தால் கட்டுரையின் இலக்கு மாறிப் போகும்....!

ஆனால்..

நீங்களும் நானும் டி.டி.எச்சில் முதல்நாளே விசுவரூபத்தைப் பார்க்காமல் போனதற்கு காரணம் கமல் அல்ல....!!!!!!தியேட்டர் அதிபர்கள் என்னும் ஒரு கூட்டமும்..., புதியதை  ஏற்க முடியாத பழமை முடிச்சுகள் நிறைந்த புத்திகளுமே இதற்கு காரணம்....!

தற்போது ஜனவரி 25 ஆம் தேதி தமிழகமெங்கும் 500 தியேட்டர்களில் விசுவரூபம் திரையிடப்படும் என்று கமல் அறிவித்திருக்கிறார்....! ஆமாம், அது அவருடைய படைப்பு. அவர் உருவாக்கியது. என்ன செய்ய வேண்டும் என்று  அவர்தான் தீர்மானிக்க வேண்டும்.. இப்போது தீர்மானித்திருக்கிறார்..!

ஹேட்ஸ் அப் கமல் .....!!!!!!!!

உங்களின் புது வழி ஒரு நாள் சர்வ நிச்சமாய் பொதுவழியாகும்......அப்போது காலம் உங்களின் பெயரை உரக்கச் சொல்லும்.


தேவா. STuesday, January 8, 2013

என்னப்பன் அல்லவா.. என் தாயும் அல்லவா!


இறக்க முடியாத சிலுவைகளை காலம் சுமக்கச் சொல்லிக் கொடுத்திருக்கும் தூரங்களே தொலைவாய் இருக்கும் போது மீண்டும் மீண்டும் சிலுவைகள் வழி நடுகிலும் எனக்காய் காத்தும் கிடக்கின்றன தோளில் ஏறுவதற்கு. இந்த வழியை எனக்குக் கொடுத்திருக்கும் காலம் என்னை வெகு தொலைவில் கூட்டிச் சென்று ஒரு நாள் சிலுவையில் அறையலாம். எனது பாவங்களுக்கு மீட்பராய் இருந்து ஆன்மா காத்தருளவும் கூட செய்யலாம்.

கருவி நான். கர்த்தாவை அடையாளம் காணவேண்டி வாழ்க்கையை துறக்க விரும்பும், அடையாளங்களை அழித்துக் கொள்ள விரும்பும் பெரும் யாக்கைகள் கொண்ட மனிதன் நான். சுயநலக் குதிரையின் மீதேறிக் கொண்டு கடிவாளம் சுழற்றி வாழ்க்கையை கடந்து விடத்துடிக்கும் மானுட சமுத்திரத்தின் புள்ளி நான். மூலப்பிரகிருதி மங்கிப் போய் தன்னை மறந்து வடித்துக் கொண்ட ஆகிருதி நான். எழுதி, எழுதி என் எண்ணக் குப்பைகளை இறைத்து செல்கையில் அதற்காய் அங்கீகாரம் தேடும் மூடன் நான்.

சமூகத்தின் சட்ட திட்ட நெரிசல்களுக்குள் சிக்கிக் கொண்டு உறவுகள் அழைக்கும் பெயரை என் மீது ஏற்றிக் கொண்ட அடையாளமற்ற வஸ்து நான். வாழ்க்கை நகர்விற்காய் பொருள் சேர் என்று கற்பித்துச் சென்ற துஷ்டனை அவித்தை வடித்த துர் சக்தியாய் நினைத்து, அவனைத் தேடிக் கொல்ல அலையும் பித்தன் நான். கடந்து போன நொடியில் நான் வாழ்க்கையை விட்டு முழுதுமாய் விலகி விட்டேன். லெளகீக குறுக்கு, நெடுக்குகளை என்னிடம் கொண்டு வருபவர்களின் குரல்வளைகளில் மிருகமென என் பற்கள் பதியும் என்பது சர்வ நிச்சயம்.

எங்கோ சென்று, எதைத்தேடியோ அலைந்து செல்வம் சேர்த்து, காமத்தில் முயங்கி தலைமுறைகள் என்னும் மாயா பெருமைகளை பூமியெங்கும் இறைத்து விட்டு, உடல் சுருங்கி, புத்தி தடுமாறி, வலிகளோடு என்  அந்திமத்தை நான் ஏதோ ஒரு மூலையில் கழித்தேனென்றால் என் ஜென்மம் பாழ்...

பித்தனொருவன் தன்னை சித்தனென்று உணர்ந்து சத்தியத்தையும், பேருண்மைகளையும், வாழ்க்கை முடிச்சின் ஆதியை அனாதியாக பொதிந்து வைத்திருக்கும் பளிங்கு மலையொன்றுக்கு என்னை என் ஆகிருதி, அந்த மூலப்பிரகிருதியின் வேடதாரி இழுக்க.... மனமென்னும் வாகனத்தில் ஆன்மா வசதியாய் அமர்ந்து கொள்ள... உடல் என்னும் அறை விட்டு சட்டென்று வந்து வெளியே விழுந்தேன் நான்.

ஆகாயமெல்லாம் என்னுள் அடங்கிப் போக, திக்குகளெல்லாம் சுற்றிச் செல்லும் காற்றே என் சொரூபமாக, அண்டத்தின் அசைவினை பிண்டத்திலிருந்து கழற்றிக் கொண்டு.. சத்தியத்தின் சொரூபமாய் இன்னும் ஆடாமல், அசையாமல், வாழ்கையினூடே ஸ்தூலமாய் காட்சி தரும் அரூப ரூபத்தின் காலடி தேடி நான் கைலாயம் புறப்பட்டேன்.

உடலின் அனுபவத்தில் புறச்சூழல் காட்சிப்பட்டுப் போக, எதார்த்த வாழ்க்கையில் பூதவுடலை கர்ம சிரத்தையாய் ஏந்திச் செல்லும் ஆன்மாக்களுக்கு பெளதீக இடங்களும் பெயர்களும் சூழல்களும் முக்கியமாய்ப் போக அதையே அவர்கள் ஆவணப்படுத்தவும் செய்கிறார்கள். நான் என்னும் அகந்தை கழன்ற பிசாசாய் என் ஆன்மா உடல் விட்டு நகர்ந்து மனக்கருவியால் பயணிக்கையில் பெளதீக பேதமேது?  மேல், கீழ், ஏது? திசைகள் ஏது? எதுவுமற்று மனமென்ற உணர்வு மட்டும் ஒட்டிக் கொண்டிருக்க நான், நான் என்று இன்னமும் விட்டு வந்த உடலை எண்ணியே நான் நகர்ந்து கொண்டிருந்தேன்...

உடலை அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. கோடாணு கோடி உணர்வுகளை விளங்கிக் கொள்ள  படைக்கப்பட்ட பாத்திரம் அது. அதன் வாசனைகள் அவ்வளவு சீக்கிரம் தீர்ந்து போகாது. பஞ்சேந்திரியங்கள் எனப்படும் ஐம்புலன்களின் ஆட்டத்தை முழுமையாக வாங்கிக் கொண்டு அதை விஸ்தரித்து, விஸ்தரித்து பழக்கப்பட்ட மனது சட்டென்று ஒரு நாள் செயலற்றுப் போகும் உடம்பினைப் பார்த்து திடுக்கிட்டுப் போகிறது. பேராசை என்னும் இறைச்சியை போட்டு, போட்டு வளர்க்கும் மனம் என்னும் நாய் ஒரு நாள் சட்டென்று விளையாட மைதானமில்லாமல் தனக்கென்றும் ஒரு உருவில்லாமல் திணறிப் போகும் இடமாய் ஒவ்வொரு மனிதனின் மரணமும் அமைந்து போகிறது.

நாய்க்கு நானும் இறைச்சி போட்டிருக்கிறேன் ஆனால் அதன் இஷ்டத்துக்கு திமிராய் வளர்வதற்கு அல்ல... வாலைக் குழைத்து நான் சொல்லும் காரியங்களை நிறைவேற்ற....! வாலாட்டிக் கொண்டு உடலை வாஞ்சையாப் பார்த்த என் மனதை என் ஆன்ம சக்தி வருடிக் கொடுக்க அது சுட்டும் திசையில் பாயக் காத்திருந்தது. உடலுக்குள் இருந்த எனக்கு தேவா என்ற பெயர். அந்த உடல்தான் தேவா என்றால் அதற்குள் இருந்து வெளியேறி நிற்கும் இந்த சக்திக்கு என்ன பெயர். சரி இந்த சக்திக்குதான் தேவா என்ற பெயரென்றால் அந்த பிண்டத்துக்கு என்ன பெயர்....?

என் உருவத்திற்காய் என்னை சூழ்ந்த கூட்டம் என் அருவத்தில் என்னை விட்டு விலகிப் போகலாம். என் அருவத்தை உருவமாய் இருக்கையில் பார்த்த கூட்டம் அருவத்தில் என்னை விளங்கிக் கொண்டு புரிதலோடு புன்னகைக்கவும் செய்யலாம். உடல் என்பது இரண்டு பிண்டங்கள் உருவாக்கும் பிண்டம். அந்த பிண்டத்துக்குள் சக்தி என்னும் உயிர் ஆன்ம ரூபமாய் சீறிப்பாய அங்கே அசைவுகளும் இயக்கமும் ஏற்பட்டுப் போகிறது.

உடலுக்குள் இருக்கும் போது என் முகத்தையே பல கோணங்களில் சுளித்து, இளித்து, கண்களை பிதுக்கி, வாயினை கோணலாக்கி, பலவித அஷ்ட கோண லட்சணங்களை உருவாக்கி இந்த உடலை நான் உடலுக்குள் நின்றே வேறாய் பார்த்திருக்கிறேன். ஏதோ ஒரு கட்டமைப்பில் பிசையப்படும் இந்த உடம்பு, உடலுக்குள் செத்துப் போகும் செல்களுக்கு ஏற்றார்போல என்னை மாற்றிக் கொண்டே வந்திருக்கிறது. இங்கே நான் என்று சொல்வது எதை என்று எப்போதும் நான் யோசித்திருக்கிறேன். உடல் சார்ந்த நினைவுகளை நான் என்று நம்பி செயலாற்றிய அறியாமையை இதோ வெட்டவெளியில் நீந்தியபடியே நான் வெறித்துப் பார்க்கிறேன். மனம் என்னும் நாய் விசுவாசமான வேலைக்காரனாய் ஆன்மாவுக்கு அடிபணிந்து எனக்கு இப்படியெல்லாம் சிந்திக்க உதவிக் கொண்டிருந்தது.

நான் யாருமில்லை இப்போது. எனக்குப் பெயரில்லை. உறவில்லை. உடல் இல்லை. சக்திக் கூட்டம் நான். சடேர் என்று விழும் தண்ணீரை வேகமாய் சுற்ற உருவாகும் மின்சக்தியைப் போன்று ஏதோ ஒரு ஓட்டத்தில் குவிந்து கிடக்கிறது என் ஆன்மா என்னும் உயிர். எப்போது சிதறுகிறதோ அப்போது இந்த நான் என்ற எண்ணமும் அப்படி நினைக்கும் மனம் என்னும் நாயும் சேர்ந்தே சிதறிப்போகும்.

நான் கைலாயம் நோக்கி சூட்சுமமாய் நகர்ந்தேன் என்று ஏற்கெனவே சொன்ன வாக்கியத்தை நான் இங்கே சுருட்டிக் கொள்கிறேன். கைலாயம் என்னும் பெரும் சுழல் என்னை அங்கே இழுத்தது என்று திருத்திக் கொள்கிறேன். புறக்காட்சிகளை பற்றிய விவரணைகள் இல்லா காற்றில் பறக்கும் ஒரு அருவ பயணத்தில் ஏதேதோ சூழல்களைக் கடந்து தட்பவெட்பங்கள் மாறிப்போன பூமியின் ஏதோ ஒரு வசீகரமான பகுதிக்குள் நுழைந்த என் ஆன்மா சக்தியை ஏதேதோ அதிர்வுகள் சூழத்தொடங்கின...

ஆதியோகி அங்கே இருந்ததற்கான எல்லா சூழல்களையும் அங்கே அதிர்வுகளாக என்னால் உணர முடிந்தது. ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு ஞானம். கைலாயம் என்பது ஏதோ ஒரு இடம் அல்ல அது வார்த்தைகளால் விளக்க முடியாத ஞான பூமி என்று எனக்குள் பளீச் என்று ஒரு தீச்சுவாலயாய் எண்ணம் ஒன்று எட்டிப் பார்க்க.. .பிசு பிசுப்பாய் இறைச்சலோடு உடல் ஏந்தி ஆயிரக்கணக்கில் அந்த ஆன்மீக சக்திமையம் நோக்கி மனிதர்கள் நகர்வதையும் அதிர்வுகளாய் உணர்ந்தேன்.

நான் கண்டேன், நான் காணப்போகிறேன் என்று மிகைப்பட்ட பேருக்குள் நாய் குலைத்துக் கொண்டிருந்தது, பலருக்குள் வக்கிரமாய் கோரப்பற்கள் காட்டி கடைவாயில் எச்சில் ஒழுக சீறிக் கொண்டிருந்தது, சிலருக்குள் வாலை சுருட்டிக் கொண்டு படுத்துக் கொண்டும் இருந்தது. அப்படியாய் வாலை சுருட்டி மனம் என்னும் நாய் படுத்துக் கொண்டிருந்தவர்கள் யாருடனும் எதுவும் பேசவில்லை. மனம் குவித்து கைலாயத்திலிருக்கும் பெரும் சூட்சுமம் பற்றிய யோசனைகளில் நகர்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களின் அப்படியான யோசனைகள் எல்லாம் நல்ல ஒரு சூழலை அங்கே விதைத்து சுற்றிலும் ஒரு ஒத்ததிர்வினை உண்டு பண்ணிக் கொண்டிருந்தன.

பெரும் தண்ணீர் சூழ்ந்த ஏரி ஒன்றை நெருங்கிய பொழுதில் எண்ணங்கள் ஒடுங்க ஆரம்பித்தது எனக்கு. அந்த ஏரி வாஞ்சையோடு என்னை அணைத்துக் கொள்ள சூட்சுமமாய் அந்த நீருக்குள் நான் நுழைந்து கொண்டேன். கருவறையில் இருந்த போது ஏற்பட்ட உணர்வொன்றை மெலிதாய் எட்டிப்பார்க்கச் செய்த அந்த மானசோரவர் ... வெறும் நீர்ப்பரப்பு அல்ல. அது சக்தி நிரம்பிக் கிடக்கும் ஒரு மிகப்பெரிய அற்புதம். விவரிக்க முடியாத புனிதத்தை கொடுக்கும் பெரும் சக்தி. இந்த சக்தியைக் கடந்து போகும் ஒவ்வொரு மனிதர்களும், இங்கே அதிர்வுகளாய் சுற்றிக் கொண்டிருக்கும் சூட்சும ஞானிகளும், இந்த சக்தி நிலையை அடைந்து இயக்கம் என்னும் சக்தி விரிவாக்கத்தை தண்ணீரோடு விட்டு விட்டு சிவமாய் இன்னும் சொல்லப்போனால் சவமாய் கைலாயம் நோக்கி நகர்கிறார்கள்.

மானசோரவரில் உணரப்பட்ட சூட்சுமமான அதிர்வுகளின் நெருக்கடி, கைலாயத்தை நெருங்க நெருங்க இன்னும் நெருக்கமாக அலை அலையாய் என் ஆன்ம சக்தியைத் தாக்க.. மிகையாய் சூட்சும ரூபத்தில் அங்கே இடைவிடாத  தியானத்தில் எத்தனையோ என்னைப் போல ஆன்மாக்கள் இருப்பதை உணர முடிந்தது. சிறு பொறியாய் அந்த நெரிசலுக்குள் நான் நகர, நகர பெரும் தீச்சுவாலயாய் எத்தனையோ யுகங்களாய் அங்கே சுழன்று கொண்டிருக்கும் பேரான்மாக்கள் என்னை உணர்வால் தொட்டு தடவ உடல் இல்லாமலேயே ஒரு குறுகுறுப்பான உணர்வினை நான் எட்டிப் பிடித்திருந்தேன்...

உடலால் கூடியடையும் உச்சத்தை கோடியால் பெருக்கி இன்னொரு கோடியால் மீண்டும் பெருக்கி, இன்னும் இன்னும் இன்னும் பெருக்கி பெருக்கிக்கொண்டே போனாலும்   இந்த உச்சத்தின் அனுபவத்தை வாக்கியப்படுத்த முடியாது. உடல் ஒரு அழுக்கு அந்த அழுக்கில் இந்த பேரின்பத்தின் துச்சமொன்று கண நேரம் வந்து செல்வதற்காய் காமத்தை மையம் கொண்டு நகர்கிறனர் இந்த முரட்டு பூமியின் மிகைப்பட்ட மானுடர்கள்...

நீண்ட இடைவிடாத அதிர்வுக் குவியல் மின்சாரமாய் என் உணர்வுகளை அழுத்த, நான் மரமானேன், மண்ணானேன், மலையானேன், கல்லானேன், அத்தனை மானுடரிலும் நிறைந்திறுக்கும் பரம் பொருளானேன். தில்லை நாயகனின் ஆட்டம் எதுவென்று மெளனமாய் எனக்கு உணர்த்தப்பட உணர்த்தப்பட....

மனமென்னும் நாய் என்னுள் கதறத் தொடங்கி இருந்தது.....

இதோ இக்கணமே, கணப்பொழுதும் தாமதியாமல் நான் இங்கேயே இருந்து விட வேண்டும், என் நினைவழி, என் மனதைக் கொல், என் உடலை மறக்கடி, நான் ஆன்மா, நான் சக்திவடிவம் என்னை மீண்டும் உடலுக்குள் பூட்டிவிடாதே என் ஈசா.. என்னை உருவாய் ஆக்கி லெளகீகத்திற்குள் தள்ளி விட்ட மோசா....

கைலாயமென்னும் பனிமலையை நான் நெருங்க நெருங்க என் உடலோடு பிணைந்து கிடந்த ஏதேதோ மாயக் கயிறுகளை அறுத்தெறிய முனைந்த அந்த நொடியில்....

கர்மா என்னும் கயிறு கட்டிவைத்த போலிக்கட்டிடங்களும், பொய்யான இலக்குகளும், வேண்டுமென்றே என்னை அகப்பட பேரிறை கொடுத்த உறவுத் தொடர்புகளும், அந்த உறவுத் தொடர்புகளுக்காய் நான் கொண்டிருக்கும் மாயக் கடமைகளும் இதைக் கடந்து பிறகு போ.... என்று பிடித்து இழுக்க.....லெளகீக பந்தத்தின் ஒற்றை தொடர்பாய்  என் உயிர் நிரம்பிய ஒரு சிறு பிஞ்சு மகளென்ற உறவோடு கண்ணெதிரே வந்து போக....

உடலோடு இருந்த பிணைப்பினை அறுக்கமுடியாமல்.. திணறி நின்றேன்....

கைலாயம் வெறும் பனி மலையல்ல....!!!! அது முதல் முக்தன், முதல் ஜீவிதன், உடலுக்குள் நின்று தன்னை பிரம்மாண்ட சொரூபனாய் உணர்ந்து பகிர முடியாத ஞான வித்தைகளை படிமங்களாக்கி படியவைத்திருக்கும் பிரபஞ்சத்தின் ஸ்தூல அடையாளம். கைலாயத்தின் அருகே வரும் யாவருமே கைலாஸ்பதியாகிப் போகும் ஆச்சர்யமும்..தெளிவான மனோநிலையில் வருபவர்கள் இந்த அதிர்வுகளை மீண்டும் தங்களின் உடல் வழியே கொண்டு சென்று லெளகீகத்துக்கு நடுவே இந்த சுகானுபவத்தில் திளைத்தபடி வாழ்ந்து மரிப்பதும் இடைவிடாது யுகங்களாய் நடந்து கொண்டே இருக்கிறது.

நான் உடலற்று கைலாயத்தை சுற்றி சுற்றி வந்தேன். தழுவ முடியாமல் தழுவி தழுவி பின் உடலில்லாமலேயே பரிக்ராமாவை செய்து முடித்தேன்!

ஞானத்தின் சொரூபமே....! யுகங்களாய் அசையாமல் நின்று கொண்டு இந்த புவி எங்கும் பல விதமாய் பரவிக் கிடக்கும் ஒற்றை தத்துவமே...! உன்னருகிலேயே இருந்து, காலமற்று நான் கனிந்து போவது எப்போது என் அப்பனே....!

உருவமாய் உன்னை விளங்கி, இயற்கையாய் உன்னைப் பார்த்து, அருவமாய் உன்னைக் கற்பிதம் கொண்டு இதோ....எல்லாவற்றையும் கடந்த உன் விசுவரூபத்தை நான் கண்களின்றி  காணும் இந்தப் பேறினை நீட்டி விடு என் அய்யா....! பிண்டமென்னும் பெரும் பழியில் என்னைத் தள்ளாமல் உன்னோடு வைத்துக் கொள்...ஈசனே.....

என்னப்பன் அல்லவா.. என் தாயும் அல்லவா...
பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலத்தவா....
சொப்பனமோ எந்தன் அப்பன் திருவருள்
கச்சிதமோ என்ன அற்புதம் என்ன
அற்புதம் இதுவே...
ஆடிய பாதனே....அம்பலவாணணே...
நீ ஆண்ட கருணையை தேறி அறிவேனோ..????

நான் கதறிக் கொண்டிருந்த போதே என்னை உடலுக்குள் ஒரு  சக்தி தள்ளிவிட....கை கால் அசைத்து மெல்ல எழுந்து பார்தேன். நான் எனது அறையில் இருந்தேன். நிதர்சனமில்லாத வாழ்க்கைக்குள் மீண்டுமென்னை தள்ளிய பெருஞ்சக்தி ஒன்று எனக்குள் மெளனமாய்....இரு... இரு.......எப்படியும் வரத்தானே வேண்டும் என்று சொல்ல....

எழுந்து பால்கனிக்கு வந்து ஈசி சேரில் விழுந்து....மீண்டும் என் நீண்ட பயணத்தின் உடலற்ற சூட்சும அனுபவங்களை அசைபோடத் தொடங்கியிருந்தேன்.....

கனவாயிருக்கலாம் என்று புகட்டப்பட்ட பகுத்தறிவு சொல்ல....பகுத்தறிவினையும்  கொடுத்த ஒரு சக்தி உள்ளுக்குள் சம்மணமிட்டு சப்தமாய் சிரித்துக் கொண்டிருந்தது.


தேவா. S