Pages

Tuesday, February 25, 2014

நலம் நலமறிய அவா...!


எவ்ளோ பரபரப்பா போய்ட்டு இருக்கு வாழ்க்கை. ரோபட்டிக் லைஃபா போச்சு எல்லாமே. எல்லோருக்கும் அவசரம். எல்லாத்துக்கும் அவசரம். வார
விடுமுறைய கூட ப்ளான் பண்ணி அவசர அவசரமா அனுபவிக்க வேண்டிய ஒருஅழுத்தம். எப்போ மாறினிச்சு இப்டி வாழ்க்கை? அறிவியல் வளர்ச்சி மொத்தமா நம்மள தின்னுடுச்சா? சுயநலம் பெருகிப் போனதுனால ஏற்பட்டிருக்க ஒரு இன்செக்கியூரிட்டினால நம்மள காப்பாத்திக்க நாம என்ன வேணா செய்யலாம்னு சொல்லி மனசாட்சிய அடகு வச்சிட்டோமா? ஆசைதான் துன்பத்துக்கு காரணம்னு  3 ஆம் கிளாஸ்ல படிச்ச புத்தனோட வாக்கு அப்போ 2 மார்க் கேள்வி பதிலா தெரிஞ்சுச்சு......இன்னிக்கு அதுல ஏதோ ஒரு அர்த்தம் இருக்க மாதிரி தோணுது....

ஒண்ண நோக்கி போகும் போது அந்த ஒண்ணு கிடைச்சுடுச்சேன்னு சந்தோசப்பட்டுக்கிட்டு இருக்கும் போது அது தொடர்பான பத்து நம்ம குரல்வளைய நெரிக்க ஆரம்பிச்சுடுது. இதுக்கு அந்த ஒண்ணு கிடைக்காமலேயே இருந்திருக்கலாமோன்னு யோசிக்கவும் தோணுது. அரசியல், சினிமா, ஆன்மீகம், மதம்னு எதை எதையோ நிறுவ ஓடிட்டு இருக்கற அவசரத்துல ரசனையில்லாம இந்த வாழ்க்கை மாறிட்டு இருக்கறத யாரும் கவனிக்கிறதே இல்லை.

டிவி பொட்டி நம்ம சமூகத்துக்குள்ள நுழையிறதுக்கு முன்னாடி மனுசங்களுக்கு மனுசங்க தேவை அதிகமா இருந்துச்சு. பொழுது போக இன்னொரு மனுசனோட தேவை கண்டிப்பா தேவைப்பட்ட காலம் அது. ஆல் இந்திய ரேடியோதான் அப்போ எல்லோருடைய பொழுதையும் மொத்தமா குத்தகைக்கு எடுத்து வைச்சிருந்தது. 1986கள் வாக்குல ஞாயித்துக்கிழமையாச்சுன்னா எனக்கு நாடகம் கேக்குற பழக்கம் இருந்துச்சு. அந்த பழக்கத்துக்கு காரணமா எங்க வீட்டுக்கு எதிர்வீட்டுக்காரங்க இருந்தாங்க. அப்போ நாங்க காலனின்னு சொல்ற லைன் வீட்ல இருந்தோம். எங்க வீட்டு எதித்தாப்ல இருந்தவங்க அய்யர் வீடு. அவுங்களுக்கு அஞ்சாறு பொண்ணுகளும் ஒரு பையனும் இருந்தாங்க. அந்த அக்காங்க கூடதான் நானும் எங்க அக்காவும் எப்பவும் விளையாடுவோம்.  புத்தகம் படிக்கிற பழக்கத்தை சுகுந்தாக்காதான் எங்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தாங்க. குமுதம், ஆனந்தவிகடன், ராணி, கோகுலம், கல்கி, தேவி இப்டி எல்லா வாரப்பத்திரிக்கைகளும் அவுங்க வீட்டுக்கு வரும். இது போக கண்மணி, ராணி முத்து, ராஜேஷ்குமார், சுபா நாவல்கள் எல்லாம் கூட அப்போ, அப்போ வாங்குவாங்க. கிட்டத்தட்ட அவுங்க வீடுதான் எங்களுக்கு என்டர்டெயிண்ட்மெண்ட்னாலே....

சினிமா எல்லாம் எப்பவாச்சும் ஒரு தடவை அப்பா மனசு வச்சா மதுக்கூர்ல இருக்க எம்கேஎம் இல்லை ஐயப்பா தியேட்டர்ல 2 ரூபாய் ஒரு டிக்கெட்டுக்கு கொடுத்து பார்க்கப் போவோம். அதாவது சீட்டுக்கு 2 ரூபாய், சாய்வு பெஞ்ச் 1 ரூபாய், சாதா பெஞ்ச் 75 காசு, தரை டிக்கெட் 50 காசு அப்போ. அப்பா, அம்மா கூட சினிமாவுக்குப் போறதுன்னா அம்மா சாயந்தரமே மாவு அரைச்சு எடுத்து வச்சிட்டு, வீடு கூட்டுத் தள்ளி, கோழிக் குஞ்சுகள பிடிச்சு கூட்ல அடைச்சுட்டு பரபரப்பா கிளம்பிட்டு இருப்பாங்க. அப்பாவோட அலுவல் நிமித்தமா சிறு நகரத்துக்கு நாங்க நகர்ந்து இருந்தாலும் அடிப்படையில விவசாய குடும்பம் எங்களோடது. பக்கா கிராமம் அதனால அம்மாவுக்கு கோழி வளர்க்குறது. முட்டைய அடை வச்சு குஞ்சு பொரிக்க வைக்கிறது எல்லாம் ரொம்பவே பிடிச்ச விசயம்.

ஞாயித்துக்கிழமை மத்தியானம் சாப்டு படுத்து தூங்குற அப்பா குறட்டை சத்தம் நின்னுடுச்சுனா முழிச்சுட்டாங்கன்னு அர்த்தம். அதுக்குள்ள லபோ திபோன்னு நாங்க கிளம்பிட்டு இருப்போம். நானும் எங்க அக்காவும் ஆளுக்கொரு வாட்டர் பேக் எடுத்து பொறுப்பா தண்ணி ஊத்திக்கிட்டு இருப்போம். தண்ணி ஊத்தும் போது கவனம் இல்லாம நான் சிந்துறத ரொம்ப பொறுப்பா அக்கா அம்மாகிட்ட போட்டுக்கொடுத்து முதுகுல மொத்து வாங்குறதும் உண்டு. தியேட்டர்ல ட்ரம்ல வெளில வைச்சிருக்க தண்ணி சுத்தமா நல்லா இருக்காதுன்றதால இந்த வாட்டர் பேக் ஐடியா.

சைக்கிள அப்பா தள்ளிக்கிட்டு வருவாங்க. அக்கா, அம்மா எல்லாம் நடந்து வருவாங்க....நான் சைக்கிள் கேரியர்ல ராஜா மாதிரி உக்காந்துட்டு வந்த அந்த 13 வயசுல.....அது எனக்கு கனகம்பீரமா தெரியும். காலனில இருக்க 13 வீட்லயும் வாசல்ல நின்னு பாக்குறவங்க கிட்ட எல்லாம் ஏதோ வேற கிரகத்துக்குப் போற மாதிரி அக்கா...போய்ட்றேங்கக்கா....போய்ய்ட்றேண்டா போய்ட்ரேண்ணா ன்னு சொல்லி சினிமாவுக்கு  போறத ஒரு விழாவாவே கொண்டாடுவோம். போய் பாக்குற படம் செம மொக்கையா கூட இருக்கும். படம் எல்லாம் முக்கியமே இல்லை....படம் பார்க்க போறதுதான் சுவாரஸ்யம் எங்களுக்கு. காலனி  காம்பவுண்ட் சுவரு தாண்டி திரும்பறப்ப ஜோயல் அண்ணன் கிட்ட சொல்லலப்பானு சொல்லி சைக்கிள்ள இருந்து தொப்புன்னு குதிச்சு குதிகால் பிடறில அடிக்கிறமாதிரி ஓடிவந்து ஜோயலண்ணே ...சினிமாக்கு போய்ட்றண்ணேன்னு குரல் கொடுத்த உடனே... 

அவுங்களும் ஓடிவந்து.. எந்த தியேட்டர் அப்புன்னு கேள்வி கேட்டு அந்த சந்தோசத்தை அதிகப்படுத்துவாங்க...ஐயப்பா தியேட்டர்ணேன்னு நான் சொல்லவும்...அது கொஞ்ச தூரம்ல ஓடு... ஓடு ஒங்கப்பா திட்டப்போறார்னு சொல்லிக்கிட்டே போய்ட்டு வந்து கதை சொல்லு என்ன... அப்டீன்னு கேட்ட ஜோயல் அண்ணன் அப்போ பிளஸ் டூ படிச்சுட்டு இருந்தாங்க. இது எல்லாம் ஒரு மேட்டரான்னு யாரும் யாரையும் உதாசீனப்படுத்தாத காலங்கள் அவை. ஒவ்வொரு மணித்துளிக்கும் மரியாதை கொடுத்து ஒவ்வொரு சம்பவங்களையும் முக்கியமானதா பாத்து மனிதாபிமானத்தோட அப்போ எல்லாம் எல்லோரும் இருந்தாங்க....

ஏன்னா அப்போ மனுசனுக்கு மனுசனோட தேவை அதிகமா இருந்துச்சு.

ஞாயித்துக்கிழமை ரெண்டு நாடகம் போடுவான் விவிதபாரதியோட வர்த்தக ஒலிபரப்புல...அதாவது மதியம் 12க்கு ஒண்ணு போடுவான் அது குறுநாடகம். மத்தியம் 3 மணிக்கு ஒண்ணு போடுவான் அது கொஞ்சம் பெரிசா ஒருமணி நேரம் ஓடும். எங்கூட்ல இருந்த ரேடியா பொட்டியில நாடகம் கேக்க எனக்கும் எங்க அக்காவுக்கும் பிடிக்காது. எதித்தாப்ல இருக்க அய்யர் வீட்ல போய் அந்த கறுப்பு கவர் போட்ட ரேடியோ பெட்டிய சுத்தி, ஒரு பத்து பேர் உக்காந்து கேக்குற சுகத்தை இன்னிக்கு எத்தனையோ சேட்டிலைட் டிவிகளோட ஒளிஒலிபரப்பும், அதை சோபாவுல உக்காந்துகிட்டு ரிமோட்ட தட்டி எல்சிடி மூலமா பாக்குறதும் கொடுக்கலன்றதுதான் நிஜம்.

அறிவியல் வளர்ச்சி மனுசங்கள விட்டு மனுசங்கள தூரமாக்கிடுச்சு. ஒலிச்சித்திரம் கேக்குறதுன்னா என்னான்னு இப்போ இருக்க புள்ளைக் குட்டிங்க நம்மள பாத்துக் கேக்க ஆரம்பிச்சுடுச்சுங்க. படத்தை பாக்காமலேயே ஒலிச்சித்திரத்த கேட்டு கற்பனை பண்ணி ரசிக்கிற ஒரு சுகம் எப்டி இருக்கும்னு யாருக்கும் இப்போ பிடிபடறதே இல்லை. எல்லாத்தையும் நேரா பாக்கணும் உடனே அதோட டீட்டெய்ல் என்னானு தெரியணும். டெக்னிகாலிட்டி என்னானு தெரியணும் இப்டி ஆராய்ஞ்சு ஆராய்ஞ்சு எல்லோருடைய ரசனைகளும் தடிச்சுப் போயிருச்சு இப்போ. இதுவே மோசமான இறுகிப் போன ரசனையற்ற சமூகச் சூழலுக்கு காரணமாவும் போச்சு. போன வாரம் ரஜினி சார் நடிச்ச ஜானி படம் பார்த்துட்டு இருந்தேன் என்ன டிவின்னு மறந்து போச்சு. அதுல வித்யாசாகர்ன்ற கேரக்டர்ல நடிக்கிற ரஜினி சார் தன் வீட்ல வேலை செய்ற தீபாவுக்கு துணி எடுத்துக் கொடுக்க ஜவுளிக் கடைக்கு கூட்டிட்டுப் போவார்....

அந்தம்மா இந்தப் புடவை நல்லாருக்குன்னு சொல்லி ஒண்ண எடுத்து கையில வச்சுக்கிட்டே இன்னொன்னை பாத்து அது நல்லாருக்குண்ணு சொல்லி அதை எடுப்பாங்க அப்புறம் இன்னொரு புடவைய பாத்துட்டு அதுவும் வேணும் நல்லாருக்குன்னு சொல்லுவாங்க....அப்போ ரஜினி ...பாமா...வாழ்க்கையில ஒண்ண விட ஒண்ணு எப்பவும் பெட்டரா இருந்துக்கிட்டேதான் இருக்கும். நாம ஒரு நிலையில நிக்காம போய்ட்டோம்னா எதுவுமே கடைசியில பிடிக்காம போய்டும் அப்டீன்னு சொல்வாரு...

ஆக்சுவலா ஜானி படத்தைப் பத்தி நான் தனியா எழுத நிறைய இருக்கு. எழுதுவேன். அது மாதிரி இதை விட இது பெட்டர்னு  கம்போர்ட் லெவல நோக்கி வளர்ந்துட்டு இருக்க மனிதர்களா நாம மாறிட்டோம். நான் எல்லாம் எட்டாம் கிளாஸ் படிச்சப்ப சைக்கிள் கத்துக்குறேன்னு சொல்லி முட்டில படாத அடி கிடையாது. கால்ல வராத காயம் கிடையாது. ஓடிப்பிடிச்சு விளையாடுறேன்னு கம்பி கேட்ல இடிச்சுக்கிட்டு கீழ் தாடையில மூணு தையல் போட்டப்ப எனக்கு வயசு 7. இன்னிக்கு வயசு பிள்ளைங்கள கூட நாம பொத்தி பொத்தி வளர்க்குறோம். சின்ன விசயத்துக்கு பதறுறோம். இப்டி செய்யும் போது என்னாகுது அதுங்களுக்கு இந்த சமூகத்தோட சின்ன சின்ன சங்கடங்களைக் கூட எதிர்த்து நிக்கற அளவுக்கு வலு இல்லாம போய்டுது. 

அதுக்காக பிள்ளைங்களை தெருவுல விட்டு எங்கயாவது முட்டி மோதிக்கிட்டு வரச்சொல்லுங்கன்னு சொல்லலை... ஆனா வாழ்க்கையில நடக்குற சரிகளுக்காக சந்தோசப்படுற நாம தவறுகளுக்காகவும், எதிர்மறையா நடக்குற நிகழ்வுகளுக்காகவும் வருத்தப்பட்டு ரொம்ப சேஃப்டியா இருக்கேன் பேர்வழின்னு பிள்ளைங்கள வளர்க்கறதுக்குப் பதிலா சாஃப்ட் டாய்ஸ்கள வளர்த்துடாதீங்கன்னுதான் சொல்றேன். விடுமுறை விட்டா பக்கத்து வீட்டு எதிர்வீட்டு நண்பர்கள பிள்ளைங்க தேடிப் போன காலம் எல்லாம் பறிபோய் இப்போ ஆன்ட்ராய்டு போன்களையும், டேப்லட்களையும், நோட்புக்குகளையும், லேப்டாப்புகளையும் பிள்ளைங்க தேட ஆரம்பிச்சுடுச்சுங்க....

ஒரு சிக்னல்ல கார்ல நின்னு நம்மள சுத்திப் பாத்தா சுத்தி நிக்குற பஸ் கார்க்குள்ள எல்லாம் மனுசங்க அவுங்க அவுங்க மொபைல் போன்கள தடவி ஏதேதோ தேடிட்டு இருக்காங்க. வாட்ஸ் அப், பேஸ்புக், வீ சாட்,  வைபர்,  இப்டி எத்தனையோ சோசியல் நெட்வொர்க்கிங்க ஆப்ஸ் எல்லாம்... நாம் தொடர்பு கொண்டுகிட்டு இருக்க மனுசங்கள நேராப்பாக்குற போதும் கூட அவுங்க கூட சரியா பேசாம இந்த நெட்வொர்க் மீடியாவையே நோண்டுற ஒரு புரையோடிப் போன மனோநிலைக்கு நம்மள தள்ளிடுச்சு....

அவசரம் அவசரமா...ஓடிட்டு இருக்க... லேடிஸ் அன்ட் ஜென்ட்டில் மென்... வாரத்துல ஒரு நாளாவது... உங்க இயந்திரத்தனத்துக்கு ஓய்வு கொடுத்துட்டு......, சமூக அக்கறைகளுக்கு விடுமுறை கொடுத்துட்டு.... இந்த பூமி, மனிதர்கள், மரம், ஆறு, குளம், தோட்டம், வானம், நட்சத்திரம்னு, சாப்பாடு, குடும்பநிகழ்வுகளைக் கேட்டறிதல், நண்பர்களுக்கு தொந்தரவில்லாத சந்திப்புகளை ஏற்படுத்திக் கொள்ளுதல், அளாவளாவுதல்... காலாற நடத்தல்னு இருக்கலாம்தானுங்களே....?

நான் இந்தக் கேள்விய உங்களப் பாத்துக் கேக்குற மாதிரி கேட்டிருக்கேன் ஆனா... இந்த கேள்வி எனக்கு நானே கேட்டுக்கிட்ட சம்மட்டியால என்ன அடிக்கிற மாதிரி கேள்வி தானுங்க....!!!!!!


நலம் நலமறிய அவா!தேவா சுப்பையா...

Saturday, February 22, 2014

வசீகரா....!


நான் என்னைக் கவிஞன் என்று சொல்லிக் கொள்வதில்லை ஏனென்றால் எனக்கு கவிதை என்றால் என்னவென்றே தெரியாது.  உணர்வுகளை எழுதிப் பார்க்கையில் அவற்றை உரைகல் வைத்து  உராய்த்து பார்க்கும் புத்தியில்லாதவனாதலால் எனக்கு கவிதைகள் தூரமாகியிருக்கலாம்....! கவிதைகள் என்று ஏதோ ஒன்றைப் பற்றி இங்கே பேசிக் கொண்டிருப்பவர்களுக்கும் எனக்கும் காத தூரம். காதலை கவிதையில் சொல்ல இங்கே பலர் முயன்று கொண்டிருக்கிறார்கள். விரக்தியை, காமத்தை நேசத்தை, வெற்றியை, தோல்வியை, உள்ளுக்குள் எரிந்து கொண்டிருக்கும் இன்னதென்று அறியாத உணர்வுகளை எழுதி எழுதி கவிதை என்று சொல்கிறார்கள்.

விபரமறியாச் சிறுவனைப் போல நானும் வேடிக்கை பார்த்துக் கொண்டே நகர்கிறேன். என் வலிகளை நான் எழுதுவதுண்டு. அவை கவிதைகளா என்ன என்று எனக்குத் தெரியாது. என்னைப் பொறுத்தவரையில் கவிதைகளுக்கும் சமகால எதார்த்தங்களுக்கும் யாதொரு தொடர்பும் இருக்கக் கூடாது என்று நினைப்பவன் நான். கவிதைகள் எப்போதும் நமக்குச் சிறகு கொடுத்து அவை பேசும் களத்துக்கு நம்மை அழைத்துச் செல்ல வேண்டும். கற்பனையற்ற கவிதைகள் நிஜங்களை முகங்களாகக் கொண்டிருக்கையில் அங்கே லயித்துக் கிடக்க என்ன இருக்கிறது? காதலைக் கவிதையாக்க முனைதலும் அபத்தமே...காதலே கவிதை என்றாகி விட்டால் அதைப் பற்றி கவிதை என்ன எழுத வேண்டிக் கிடக்கிறது...?

காதல் தோல்விகளைப் பற்றி நான் எழுதுவதுண்டு. அப்படி எழுதும் போது காதல் ஒரு போதும் தோற்பதில்லை என்று சிலர் என்னிடம் வாதிடுவார்கள். காதல் ஒரு போதும் தோற்பதில்லைதான் என்றாலும் காதலர்கள் எல்லாம் அதைத் தோற்கடிக்கத்தானே பிறந்திருக்கிறார்கள் என்று நான் கடுப்பாய் திருப்பி அவர்களை வார்த்தைகளால் அடிப்பதுமுண்டு. இங்கே பெரும்பாலும் யாருக்கும் காதலைத் தெரியாது. காமத்தை உடம்பு முழுதும் சுமந்து கொண்டு காதல், காதல் என்று கரையும் காக்கைகள் தங்களைக் குயில்கள் என்றெண்ணிக் கொண்டு கரைந்து கொண்டே இருக்கின்றன. அந்த இடைவிடாத கரைதலை கவிதை என்று சொல்லி கடைவிரித்தும் கொள்கின்றன.

ஒரு பெண்ணோடு ஒருவன் காதல் கொண்டு அவன் அந்தக் காதலில் தோற்றுப் போகும் போது அதாவது அறிவு ஜீவிகளே அந்த பெண்ணோ அல்லது ஆணோ அந்தக் காதலை லெளகீகத்துக்குள் போட்டு அடைக்க முயன்று தோற்கும் போது காதல் அங்கே சீறிப்பாய்கிறது. தோல்வி என்று கருதிக் கொண்டு எழுதுகோல்கள் கக்கும் நெருப்பினில்தான் காதலிருக்கிறது. வெற்றி பெற்ற பின்பு ஒரு செயல் முடிந்து போகிறது.. அங்கே பேச ஒன்றுமே இல்லை. காதலித்து கைப்பிடித்துக் கொண்டவர்கள் குழந்தைப் பெற்றுக் கொள்வதுதான் அவர்கள் காதலின் வெற்றி என்று கருதிக் கொள்கிறார்கள். கவிதை எழுதும் பெரும்பாலானோர் பெரும் காதலை மையமாய் வைத்து எழுதுவது சரிதான்.. ஆனால், காதலை எழுத ஒரு பெண்ணோ ஆணோ தேவையில்லை என்று உணரும் போது நிஜத்தில் ஒரு எதார்த்தமான எழுத்து தன்னை வேறு பரிமாணத்திற்குள் பிரசவித்துக் கொள்கிறது.

எனக்கு லெளகீகக் காதல் போரடித்துப் போய்விட்டது. அதனால் லெளகீகமாய் எழுதும் காதல் தோல் போர்த்திய காமக் கவிதைகளை வாசித்து வாசித்து எனக்கு எரிச்சல் வருகிறது. பெண்ணை மட்டும் நேசிக்கும் ஒரு வட்டம் எப்போது எனக்குள் அழிந்து போனது அல்லது அந்த முனைப்பு எப்போது பட்டுப்போனது என்று எனக்குத் தெரியாது. கிறுக்கிக் கொண்டே மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருந்த போது எந்தக் கணத்தில் வெளியே பெய்த மழை எனக்குள் பெய்யத் தொடங்கியது என்பதும் எனக்குத் தெரியாது. கிளியோபட்ராக்களின் 
அழகிலிருந்து பிறந்த
கவிதைகளை எல்லாம்
நான் ஒரு பாலித்தின் கவரில்
பிடித்து அடைத்து விட்டேன்...
ஆமாம்...
அவை ஒரு நாகத்தின் 
வசீகரத்தையும்...அபாயத்தையும்
ஒருங்கே கொண்டவை...!
பெண்ணை வர்ணித்து எழுதுகையில்
என் காகிதங்களில்
எப்போதும் நெளியும் விசமுள்ள 
பாம்புகளை எப்போதும் இப்படி நான்
பிடித்துக் கொண்டு போய்
என் நினைவெட்டா தூரத்தில் விட்டுவிடுவதுண்டு...;
இப்போதெல்லாம்...
பெண்களைப் பற்றி கவிதை எழுதுவதை
நான் விட்டு விட்டேன்....
கொடிய விசமுள்ள நாகங்களைப் பற்றியொரு நாள்
எழுதிக் கொண்டிருந்த போது 
என் காகிதங்களில் நிர்வாணமாய் பல
பெண்கள் நெளிந்து கொண்டிருந்தார்கள்...
ஒரு பெண்ணொருத்தி என் 
காதுகளில் வந்து காமரசம் ஊற்றினாள்...
இன்னொருத்தி என் உதட்டில்
அமர்ந்து கொண்டு முத்தமிட்டுக் கொண்டிருந்தாள்...
எழுத எழுத காகிதத்திலிருந்து 
ஜனித்துக் கொண்டே இருந்த பெண்கள்...
என் உடல் முழுதும் ஊரத் தொடங்கினர்....
நான் கண் மூடிக் கொண்டேன்....
என் கவிதை நின்று போனது....!
மீண்டுமொரு முறை வென்று விட்டதற்காய்
சாத்தானுக்கு முடிசூட்டினான் கடவுள்...
ஆதாம் மட்டும் அம்மணம் உணர்ந்தான்....
ஏவாள் சாத்தானோடு சென்று விட்டாள்...!

கவிதைகள் எல்லாம் மாயைகள்....! லெளகீகக் காதல்கள் எல்லாம் பெத்தடினாய் ஸிரிஞ்சினை ஆக்கிரமித்துக் கொண்டு உடலுக்குள் காமமாய் பற்றி பரவுகின்றன. உலகெங்கும் கேட்கிறது சிசுக்களின் அழுகுரல்கள். யோனி கடந்து அவை பூமி தொடும் போது எல்லாம் எனக்கு அது காதலின் அழுகுரலாய்த்தான் கேட்கிறது. அழுகுரலை கூர்மையாய் உற்று நோக்கி அதனைப் பிடித்து பின் தொடர்ந்து காற்றில் மிதந்து சென்றால் மீண்டுமொரு கூட்டத்தின் அழுகுரல்  இன்னும் சப்தமாய் கேட்கிறது. ஆமாம்...இந்த முறை அது சிசுவின் ஒற்றை அழுகையில்லை. தடித்த பலரின் அழுகை அது. முற்றிப் போன சிசு மரக்கட்டையில் வைக்கப்பட்டு அதன் மீது சாணம் அடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. நெருப்பு சட்டென்று உடலைப் பற்றிக் கொள்ளும் அந்தப் பொழுதில் கூட்டம் கதறி அழுகிறது. 

எனக்கு சிரிப்பு வருகிறது.

ஜனித்தலுக்காய் நிகழும் காமம் காதலெனில்...அந்தக் காமத்தினால் நிகழும் ஜனனம் காதலெனில்.....மரணம் மட்டும் எப்படியடா மடையர்களா துக்கமாகும்? இன்னும் சொல்லப் போனால் மரணம் தான் பெருங்காதல். அது பெருங்கூடல். உடல்களைப் புணர்ந்து புணர்ந்து ஓய்ந்து போன பிண்டம் பிரபஞ்சத்தைப் புணரும் ஒரு பெருங்காமம். மரணம் நிகழும் நொடி காமத்தினால் வரையறுக்க முடியாத உச்சம். கூடலின் உச்சத்தில் துடி துடித்து அயர்ந்து மீண்டும் உடலுக்குள் அடைபட்டுக் கொள்ளும் நிகழ்வல்ல இது. புரிதலோடு நிகழும் மரணம் தீராக்காதல், தீராக்காமம் இன்னும் சொல்லப்போனால் அதுதான் நிஜக்கவிதை.

என் கவிதை என் மரணத்தின் போதுதான் அரங்கேற்றமாகும். நானே இயற்றி, நானே வாசித்து நானே கைதட்டி ஆர்ப்பரித்து, நானே என்னை வாழ்த்தி நகரும் பேரின்பம் அது. ஜதி சொல்லி நானே ஆடிக் களிக்கும் இனிய பரதமது. இங்கே காகிதத்தில் எல்லோரும் கிறுக்கிக் கொண்டிருப்பது மனிதக் கழிவுகளைத்தான். அவை ஒரு போதும் கவிதைகளாகாது. கவிதைகள் பொருள் கொள்ள முடியாதவை. பெரும் இருட்டு அவை. அடர் கானகம். சுடும் நெருப்பு. அங்கே ரசிக்கவும் விவரிக்கவும் ஒன்றுமில்லாத சுத்த சூன்யமது. அதன் சாயலில் இங்கே ஏதேனும் ஒன்றை ஓரிருவர்  எதேச்சையாகப் படைத்து விடுகிறார்கள். கவிதை என்பது தெளிவு அல்ல. தெளிவு என்பது உயர்வும் அல்ல. கவிதை குழப்பம். குழப்பம் ஆனந்தம். தெளிவாய் இருப்பவனுக்கு அடுத்த கணம் பிடிபடும். சுற்றி இருக்கும் சூழல் விளங்கும். புரிதல் என்னும் சிக்கலுக்குள் தன்னைப் புகுத்திக் கொண்டு அவன் சுயத்தை தொலைத்து விடுகிறான். 

சுயம் தெளிவற்றது. இன்னதுதான் செய்யப்போகிறோம் என்ற விபரம் அறியாதது. எதிர்பாராமல் நிகழும் யாவற்றையும் சுகித்து சுகித்து ஆர்ப்பரித்து நகரும் ஒரு காட்டாறு அது. அதற்கு காதலும் தேவையில்லை, காதலியும் தேவையில்லை, கடவுளும் தேவையில்லை. அது நிற்கும். நடக்கும். நடனமாடும். ஒன்றுமில்லை என்று சொல்லி மூலையில் முடங்கிக் கிடக்கும். அது படைக்கும். அது அழிக்கும். அது பார்க்கும். அது தோற்கும். அது வெல்லும். அது கசக்கும். அது இனிக்கும். அது புளிக்கும். அது துவர்க்கும். அது கரிக்கும். அது பாலையாகும். அதுவே வெள்ளக்காடாகும். மழை வேண்டும் என்று அழும். மழை வேண்டாம் என்றும் அழும். காதல் பொய்யென்று சொல்லும் .காதல் மெய்யென்றும் சொல்லும். மனிதர் பால் இச்சை தீர்த்துக் கொள்ள ஒப்பனைகள் செய்து கொண்டு பொது விதிகளை மீசையாக்கி முறுக்கிக் கொண்டே நல்லவன் கபடநாடகம் ஆடும். புணர்ச்சி முடிந்து தொய்ந்து கிடக்கும் மனிதராய் பிரஞ்ஞையற்று அது உறங்கும். பிரஞ்ஞையோடு பிரபஞ்சத்தை சுற்றி வரும். அது கொலை செய்யும். அதுவே பாதுகாக்கும்.

ஆமாம் சுயம் அப்படித்தான். நேரே சென்று மேலெழும்பி கீழே விழுந்து இடம் திரும்பி பின் வலம் மாறி ஏதோ ஒரு கணத்தில் வற்றிப்போய் செத்தும் போகும். அது வரையறுக்கப்படாதது. ஒரு படைப்பாளி சுயத்தோடு எப்போதுமிருக்கிறான். தன்னை எந்த ஒரு நிகழ்வோடும் அவன் முடிச்சிட்டுக் கொள்வதில்லை. யாருடனும் சேர்ந்து அவனால் இயங்கவே முடிவதில்லை. கண நேரம் இனிப்பு நல்லது என்பான் அடுத்த கணத்தில் கசப்பே சிறந்தது என்பான். எதுவுமே உறுதியில்லாத தன்மைதான் எதார்த்தம் அதுவே ஒரு படைப்பாளியின் அடையாளம்.

இப்போது சொல்லுங்கள் எதற்குள்ளோ என்னைப் போட்டு அடைத்துக் கொண்டு ஊறுகாயாய் நான் கிடக்க....? வருவோரும் போவோரும் கை விட்டு நக்கிப் பார்த்து என்னை கணித்து விட்டால்....எனக்கென்ன தனித்தன்மை இருக்கமுடியும்?

இரண்டு நாட்கள் முன்பு நானொரு குளக்கரையில் அமர்ந்திருந்தேன்....வற்றிப் போயிருந்த அந்த குளத்தில் பிளந்து கிடந்த நிலத்தின் இடைவெளிகளுக்குள் ஆங்காங்கே செத்துக் கிடந்த நிலவொளியை அந்த பிளவுகளுக்குள் இறங்கிப் போய் பார்க்க நினைத்திருந்தேன். நிலத்தில் விழுந்த நிலவொளியை எப்படிக் கொன்றாய் பிளந்து கிடக்கும் நிலமே என்று கேட்க நினைத்திருந்தேன். என் எழுத்துக்களும் இப்படித்தான் சில நேரம் என் முகடுகளில் ஏறி அவை  கர்ஜிக்கும் பல நேரம் என் விரிசல்களுக்குள் விழுந்து கனவுகளுக்குள் முழுத்தெம்பாய் நீச்சலடிக்க முடியாமல் எனக்குள்ளேயே செத்தும் போகும்...!

என் காகிதங்களில் என்றாவது ஒரு நாள் பூ பூத்துவிடாதா என்றெண்ணிதான் எப்போதும் எழுதத் தொடங்குகிறேன்...! பல நாட்கள் கெட்டியான இருளின் அழுத்தமான தனிமையிலிருந்து அவை ஒரு கூட்டுப் புழு தன் கூடுடைத்து வெளிவரும் அவஸ்தையோடு சிறகசைத்து சிறகசைத்து வருவதுமுண்டு... இப்போது எழுதி முடித்த இந்த கோட்பாடுகளற்ற இந்த கட்டுரையைப் போல....

அர்த்தம் தேடி கட்டுரைகளையும் கவிதைகளையும் கதைகளையும் வாசிப்பவர்கள் தோற்றுப்  போகிறார்கள்... ஆமாம்... அர்த்தமில்லாத வாழ்க்கைக்குள் அர்த்தத்தை தேடுவது அபத்தம் தானே...?!!!!! வசீகரங்கள் எல்லாம் அர்த்தம் இல்லாதது.  இன்னதென்று விளங்கிக் கொள்ள முடியாதது. விளங்கி கொள்ள முடியாத விசயங்கள்தான் எப்போதும் ஆச்சர்யமானவை.தேவா சுப்பையா...
Thursday, February 13, 2014

ப்ரியமுள்ள பாலுமகேந்திரா....!ப்ரியமுள்ள பாலுமகேந்திரா......

ஒருமையில் நான் உன்னை எழுதினாலும் ஒருமைக்குள் உன்னை அடைத்துவிடவோ அல்லது அழைத்து விடவோ முடியாதென்பதை நீ அறிவாய். வாழ்க்கை ஒருமையிலிருந்து வெடித்து சிதறிய வேடிக்கைகளின் நிகழ்வுதான் ஆனாலும் அது ஒருமை என்று அறியப்படுவதில்லை. அது எல்லாமே ஆனால் ஒன்று. நீயும் அப்படித்தான் என் ஆசானே....!!!!!!! நீ எல்லாமே ஆனாலும் ஒன்று.  நீ எந்தப் புள்ளியைத் தீட்டினாலும் அது ஓவியமாகிப் போன அதிசயம் நிகழ்ந்தேறியது. நீ செதுக்கிய செல்லுலாய்டு சித்திரங்களில் மழை பெய்தால் அதை திரையில் பார்த்துக் கொண்டிருப்பவனுக்கு குளிரெடுக்கும். பூக்களை நீ காட்சியாக்கினால் வண்ணத்துப் பூச்சிகள் தேனெடுக்க திரையை மொய்க்கும்....

நீ எழுதிய கவிதைகளைத்தான் நாங்கள் திரைப்படம் என்று கொண்டோம். உன் காட்சி அமைப்பும், பாத்திரப்படைப்புகளும் கதைக் களங்களும் ஏகாந்தத்தை அனுபவிக்க ஆவல் கொண்ட மனிதர்களுக்கு சிறகுகள் கொடுத்தன. கோணங்கள் நிறைந்த இவ்வாழ்க்கையின் எல்லா கோணங்களின் கோணல்களையும் அளவெடுத்தன உனது விழிகள். நீ பார்த்தாய். உன் விழிகளால் நாங்களும் பார்த்தோம். சிக்கெடுக்க முடியாத சிக்கல்களுக்குள் நுழைந்து அங்கே இருக்கும் எதார்த்தத்தை நீ எழுதிப்பார்த்த போதெல்லாம் அது உனக்குக் திரைக்கதையாகிப் போனது.  

உன்னை சந்திக்க விரும்பினேன் பாலுமகேந்திரா. வாழ்வில் நீ போட்டு வைத்திருக்கும் அத்தனை முடிச்சுக்களுக்குப் பின்னாலும் இருக்கும் ரகசியம் யாதென்று கேட்க விரும்பினேன் பாலுமகேந்திரா. உன் காதலுக்கும் காமத்துக்கும் இடையில் இருக்கும் சூட்சும முடிச்சின் வேர் என்னவென்று அறிய விரும்பினேன் பாலுமகேந்திரா. பதின்மத்தின் ஆசைகளை திரையில் இறக்கி வைத்து நீ சொன்னது கதையல்ல இந்த பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் அத்தனை மனிதர்களும் பதின்மத்தை தொட்ட போது செய்ததுதான் என்று பகிர நினைத்திருந்தேன். இதோ  உன் மரணச்செய்தி என்னை சம்மட்டியால் தாக்கி இருக்கிறது.  வீடு திரைப்படம் பார்த்து விட்டு ஒரு பகல் முழுதும் அழுது கொண்டிருந்தேன். சந்தியா ராகம் பார்த்து விட்டு மூன்றுநாள் தூங்கவில்லை நான். மூன்றாம் பிறை பார்த்து விட்டு பித்துப் பிடித்துப் போய் உட்கார்ந்திருந்தேன். இப்போது உன் மரணத்திற்கு என்ன செய்வதென்று தெரியாமல் இதோ இந்தக் காகிதத்தில் கிறுக்கிக் கொண்டிருக்கிறேன்.

வலைப்பக்கங்களில் நீ எழுத வந்த போது உற்சாகமாய் உன்னை பின் தொடர்ந்தேன். உன் எழுத்தில், உன் படைப்பில் உன் படங்களில் நீ எதைப் பகிர முயன்றது எல்லாமே மெளனம்தானே பாலுமகேந்திரா? உன் மரணத்தின் மூலமும் இப்போது நீ அதைத்தானே நீ பகிர்ந்து சென்றிருக்கிறாய்? எத்தனை சிற்பிகளை உருவாக்கிய பட்டறை உன்னுடையது? எத்தனை படைப்பாளிகள் உன் கை பிடித்து அச்சரம் எழுதிப் பழகி இருக்கிறார்கள்? உன்னைப் போல வரவேண்டுமென்ற கனவில் உன்னின் சிறுபகுதியைக் கூட எட்டிப்பிடிக்க முடியாமல் மீண்டும் மீண்டும் உன் படங்களை பைத்தியக்காரர்களாய் பார்க்கும் படைப்பாளிகள் எத்தனை பேர்? ஆமாம்....பாலுமகேந்திரா நீ தமிழ் சினிமாவின் ஆலமரம். உன்னை புத்தி செதுக்கிய யுத்திகளை பயன்படுத்தாத, உத்வேகம் கொள்ளாத கலைஞன் யாரும் கிடையாது இங்கே. நீ படமெடுக்க ஆரம்பித்த பின்புதான் இங்கே பலபேர் கேமராவை எப்படி பயன்படுத்துவது என்றே அறிந்து கொண்டனர்.

செயற்கை கோள் தொலைக்காட்சியில் நீ இயக்கிய கதை நேரம் பார்த்து அதில் தொலைந்து போனவர்கள் கோடி பேர்கள். உனது பலம் கதை அல்ல. சூழல்!!!!!!! கதை சொல்கிறேன் பேர்வழி என்று கரடி விடுபவர்களுக்கு மத்தியில் சூழல்களை உணர்வு ரீதியாய் திரையில் பதிவு செய்தவன் நீ. ஒரு காட்சி, ஒரு களம், கதை மாந்தர் எல்லாம் கடந்து அந்த சூழல்தான் உனக்கு முக்கியம். மனிதர்களின் சந்தோசத்தை, துக்கத்தை, இழப்பை, தேடலை, காதலை, கோபத்தை, விரக்தியை, காமத்தை உன்னைத் தவிர வேறு யாரால் அச்சர சுத்தமாக மொழி பெயர்க்க முடியும்?

இந்த அத்தியாயம் இன்றோடு முடிந்தது. இது போல ஒன்றை யாராலும் இனி எழுத முடியாது. இது இதுவாய் எப்போதும் இருக்கும். இது போல வேறு ஒன்றும் இங்கே இனி இருக்கவே இருக்காது. தலைமுறைகள் படம் எடுக்கும் போதே நீ தடுமாறி போயிருந்ததை கவனித்தேன் பாலுமகேந்திரா. இது உன் கடைசிப் படமாயிருந்து விடக்கூடாது என்றும் கொஞ்சம் கவலை கொண்டேன். உணர்வு ரீதியான உன் படத்தை தமிழகம் கடந்து வியாபாரம் செய்ய யாரும் முன்வராததால் இதுவரையில் உன் கடைசி படத்தை பார்க்கமுடியவே இல்லை எனக்கு. ட்ரைலர் பார்த்து விட்டு படத்தை எனக்குள் நான் ஓட்டிப்பார்க்க முயன்று முயன்று ஒரு குருடன் புறாக்காட்சி ஒன்றை தனக்குள் உருவாக்க முயலும் ஒரு இயலாமையோடு இன்று நின்று கொண்டிருக்கிறேன்.

உன்னைப் பற்றிய விமர்சனங்கள் எல்லாமே....மனிதர்களின் அனுமானங்கள். ஷோபாவோடு நீ கொண்டிருந்த காதலை நான் உன் திரைப்படங்களிலிருந்து புரிந்து கொண்டேன். உன் காட்சியாக்கங்களில் இருந்து அது எவ்வளவு கவித்துவமானது என்று புரிந்து கொண்டேன். வாழ்க்கையின் பக்கங்கள் செழிப்பாய் இருக்கும் போது அதை பாராட்டிப் பேச பெரும்பாலும் யாரும் வருவதில்லை. ஏதேனும் ஒரு சரிதலில் வாழ்கை சற்றே தடுமாறுகையில் அங்கே குற்றம் சொல்ல கோடி பேர்கள் வருவதுண்டு. உன்னைச் சுற்றியும் கோடி விரல்கள் குற்றம் சொல்ல நீண்டன. கலாச்சாரத்தை காப்பாற்றுகிறேன் என்ற பெயரில் உன் காதலுக்குள்ளும் களங்கம் சுமத்த எழும்பிய நாவுகள் இங்கே ஏராளம். அதெற்கெல்லாம் நீ மறுப்பு கூட தெரிவித்தது கிடையாது. உனக்கு தெரியும் உன் காதல் ஆழமானது. உன் காதலி உனக்கு கவிதையானவள் என்று.....

நீ ஒரு அழகிய காதலன். நீ காதலித்தவைதான் உன் திரைப்படங்களில் காட்சிகளாய் வெளிப்பட்டிருந்தன. உன் காதல்தான் ஷோபாவை உன்னோடு சேர்த்துக் கொண்டது. உன் காதலே ஷோபாவிற்குப் பிறகும் உன்னை மெளனமாய் அவளைப் பற்றிய நினைவுகளோடு வாழ வைத்தது. படைப்பாளிகளை எந்த சம்பிரதாயமும் ஒன்றும் செய்ய முடியாது. எந்த சாங்கியமும் அவர்களை ஒன்றும் செய்வதுமில்லை. ஒழுக்க நெறிகளை வைத்துக் கொண்டு உன்னை வரையறை செய்ய முடியாது. வரையறுக்க நினைப்பவர்களின் புத்திகளின் வரையறைதான் அறுந்து போகும். நீ நூலில்லாமல் பட்டம் விட்டவன். காட்சிகளை விழிகளால் மனிதர்கள் கண்டு, கண்டு கடந்து செல்லும் போது நீ அவற்றை கவிதைகளாய் பார்த்து, பார்த்து லயித்துக் கிடந்தவன்.

காலம் உனக்கு எறிந்த கடைசிப் பந்தில் நீ தலைமுறைகளை செதுக்கி வைத்து விட்டு ஓய்வெடுத்துக் கொண்டாயா பாலுமகேந்திரா...?! கனவுகளையும் கற்பனைகளையும் காட்சிகளாக்கிய கேமராக் கவிஞனே சென்று வா...! உன் ஆழ்ந்த நித்திரையில் உனக்குள்  கோடி கனவுகள் தோன்றும். உனக்குள் நீயே சாட்சியாய் நின்று பெரு நித்திரையினூடே நீ இடைவிடாது படைத்துக் கொண்டே இரு....

அது தாகம் நிறைந்த இளம் படைப்பாளிகளுக்குள் விதையாய் இறங்கும். விருட்சமாய் விரியும். விழுதாய் நிலம் தொடும். தலைமுறைகள் கடந்தும் அதனால் மானுடர் பயனடைவர்.

 நீ மரணிக்கவில்லை... உன் வாழ்க்கைப் பயணித்தின் திசை மாற்றிக் கொண்டாய் அவ்வளவே......!  ஆழ்ந்த அஞ்சலிகள் பாலுமகேந்திரா சார்...!

நதியெங்கு செல்லும் கடல்தனைத் தேடி 
பொன்வண்டோடும் மலர் தேடி
என் வாழ்வில் நீ வந்தது விதியானால்
நீ எந்தன் உயிரன்றோ..!தேவா சுப்பையா...


Sunday, February 9, 2014

காற்றில் எந்தன் கீதம்...!


காலையிலேயே மழை வந்து ஜன்னலைத் தட்டி என்னை எழுப்பியது. கண்ணாடி ஜன்னலின் வழியே ஊர்ந்து கொண்டிருந்த மழைத்துளிகளை ஜன்னலை திறக்காமலேயே போர்வைக்குள் இருந்து பாதித் தூக்கத்தில் ரசிக்கும் சுகத்தை விவரிக்க மொழிகளே கிடையாதுதான். மழை விருந்தாளியைப் போல வந்தாலும் கவிதையைப் போல வசீகரித்தாலும் எனக்கு மழை காதலியாய்த்தான் தெரியும் என்று நான் சொல்லி முடிக்கும் முன்னரே உனக்கு வேறு எப்படி தோன்றும்..? நீங்கள் மனதுக்குள் கேள்வி கேட்பது எனக்கும் நன்றாகவே கேட்கிறது. காதலி என்ற ஒரு உறவுக்கும் திருமணத்திற்கும் ஒரு பந்தமும் இல்லை என்று நான் சொல்லி முடிக்கும் முன்பே ஒரு கூட்டம்  நீ எந்த மாதிரியான கலாச்சாரத்தை புகுத்த விரும்புகிறாய் என்று கேள்வி கேட்டு போர்கொடிகள் உயர்த்தும் அபாயம் இருப்பதால் இந்த இடத்தில் ஒரு யு டர்ன் அடித்துக் கொள்ளுவோம்.

சூடான தேநீரோடு பால்கனியை வீட்டுக்குள் கொண்டு வரும் கண்ணாடி ஜன்னலின் முன்பு நாற்காலியை இழுத்துப் போட்டு வசதியாய் அமர்ந்து கொண்டேன். ஒரு நாள் ஓய்வினை ஓய்வாகவே இருந்து அனுபவித்து விடவேண்டுமென்ற என் பிடிவாதத்தை ரசிக்கவே இந்த வார இறுதியில் வந்தாயா மழையே..? கண்ணடித்துக் கேட்டேன்... மழை சிலீர்.....சிலீர் என்று கண்ணாடியில் வந்து விழுந்து என்னைப் பார்த்து சிரித்தது. சூடான கோப்பைதான் 14 டிகிரி செல்சியஸ் தட்ப வெட்பத்தில் அந்த சூடு எனக்கு தேவையாய் இருந்தது. பெரும்பாலும் சுடச் சுட தேநீர் அருந்தும் நெருப்புக் கோழி அல்ல நான். மிதமான சூட்டில் அரைமணி நேரம் மிடறு மிடறாய் தேநீரை விழுங்கும் ஒரு சோம்பேறி ராட்சசன். அரக்க பரக்க வேலை செய்யும் ஒரு வாழ்க்கை முறையில் சளனமின்றி வாழ விரும்பும் என் கனவுகள் எல்லாம் வார இறுதியில் என்னை சூழ்ந்து கொண்டு கெஞ்ச நான் அவற்றை கொஞ்ச நிதானமாய் அந்த தினம் நகரும்.

விடுமுறை தினத்தில் யாரையும் சந்திப்பதை பெரும்பாலும் தவிர்த்து விட்டேன். தலையணை அளவுள்ள பெரிய, பெரிய எழுத்தாளர்களின் புத்தகங்களை எடுத்து வலுக்கட்டாயமாக படித்துக் என்னை அறிவு ஜீவியாக்கும் அவசரத்தை எல்லாம் எரித்துப் போட்டுவிட்டேன். உடையார் படித்து முடித்து விட்டு தேவரடியார்களைப் பற்றியும், யாளிகளை பற்றியும் நான் யோசிக்க ஆரம்பித்து விட்டேன். இப்படித்தான் எதையோ படிக்க எங்கோ போய் விழுந்து விடுகிறேன். எதையோ கேட்க வேறு எதுவோ எனக்குள் புகுந்து விடுகிறது. எதையோ பார்க்க அது இந்த பூமியை விட்டு மெல்ல என்னை வெளியே தள்ளிக் கொண்டு போய் நிறுத்தி ஏதேதோ கதைகள் சொல்கிறது. ஒரு போர் என்னவெல்லாம் செய்யும் என்று யோசித்து பார்த்திருக்கிறேன். பெரும்பாலான சோழப் போர்களின் வெற்றிகள் எத்தனை குடும்பங்களை அழித்து பொருட்களை கொள்ளையடித்து கொண்டு வரப்பட்டதாயிருக்கும் என்று யோசிக்கும் போதே திகிலாய் இருக்கிறது எனக்கு.

மழை இன்னும் உக்கிரமாய் பெய்ய ஆரம்பத்திருந்தது. எழுந்து பால்கனிக்கு வந்தேன் மனதால் ஒரு சிகரட்டை எடுத்து உதட்டில் பொருத்திக் கொண்டேன். விரல்களை சிகரெட் லைட்டராய் பாவித்து பற்ற வைத்துக் கொண்டேன். வெற்று விரல்களில் சிகரட் சூட்சுமமாய் தொற்றிக் கொண்டிருந்தது. ஆழமாய் புகையை இழுத்து விட்டு கண்களை மூடிக் கொண்டேன். உள்ளுக்குள் உஷ்ணத்தை கற்பனையாய் அனுமதித்தேன். ஆழமாய் அடி வயிறு வரை புகை சென்று உடல் முழுதும் பரவியது. சிகரெட் விரலில் தேய்ந்து கொண்டிருந்தது போல ஒரு பிரமை. மெதுவாய் புகையை வெளி விடுவது போல உதடு குவித்து ஊதினேன். எல்லாமே பிரமைதான். கற்பனையில் எதுவேண்டுமோ அதை நாம் எடுத்துக் கொள்ளலாம். அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது என்று யாரோ சொன்னது அசரீரியாய் எனக்குக் கேட்டது. 

நிக்கோடினை உடலுக்குள் ஊற்றிக் கொள்ளாத சிகரெட்டை யார் வேண்டுமானாலும் பற்ற வைத்துக் கொள்ள முடியும்.  சிகரெட் என்ன சிகரெட்....மது கூட இப்படி அருந்தலாம். பாடலாம், ஆடலாம், ஓடலாம், விருப்பமான பெண்ணை நாமே படைக்கலாம். சிருஷ்டியே ஒரு மாயைதனே. மாயைக்குள் உட்கார்ந்து நிஜத்தை தேடும் அபத்தத்திற்குள் சிக்காத ஒரு சுமூக வாழ்வு வாழ்ந்து போகலாம். மரணம் என்ற ஒன்றே அப்போது இல்லாமல் போகும். நிக்கோடின் என்ன செய்யுமோ அதை என் கற்பனை உள்ளுக்குள் செய்து கொண்டிருந்தது.  அச்சச்சோ....இதை படித்து விட்டு எல்லோரும் இப்படியே புகைக்க ஆரம்பித்தால் சிகரெட் உற்பத்தியாளர்களும் வியாபரிகளும் என் மீது வழக்கல்லவா போட்டு விடுவார்கள்...?

இதில் என்ன ஒரு வசதி இப்படியான சிகரெட் தீரவே தீராது. வேண்டுமென்றால் எப்போது வேண்டுமானலும் எடுத்து புகைத்துக் கொள்ளலாம். புகைக்கும் போது ஏற்படும் அனுபவம்தான் அலாதியானதே அன்றி ஒரு போதும் சிகரெட்டோ அல்லது அந்தப் புகையோ ரசிக்கத் தகுந்தது அல்ல. நிஜத்தில் சிகரெட் பிடிப்பவர்களைப் பார்த்தால் எனக்கு பாவமாய் தோன்றும். ஆமாம்.....எப்போதும் கையில் ஒரு பெட்டியை சுமந்து செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை. கூடவே ஒரு லைட்டர் கூட. இது எல்லாம் போக தொடர்ந்து புகை பிடிப்பவர் அருகில் கூட நாம் நிற்க முடியாது. சிகரெட் நாற்றம் நம்மை இரண்டடி தூரவே நிற்க வைத்து விடுவதோடு அவர்களின் நுரையீரலை கொஞ்சம் கொஞ்சமாக அரித்து ஒரு கட்டத்தில் சுவாசிக்கவே முடியாமல் செய்து ஏதேதோ நோய்களையும் கொடுத்து விடுகிறது.

என் கற்பனை சிகரெட் நிஜ சிகரெட்டுக்கு எதிரி. ஆசை வேறு திருப்தி வேறு. எனக்கு திருப்தியாய் இருந்த சிகரெட்டை அணைக்காமலேயே மழையில் தூக்கி எறிந்தேன். வானம் முழுதும் மேகங்கள் தண்ணீராய் அலைந்து கொண்டிருந்தன. மழை முகத்தில் வந்து அடித்து விளையாடியது முன்பொரு தினத்தில் ஒரு பெண்ணோடு பேசிக் கொண்டிருக்கையில் அவள் துப்பட்டா வந்து என் முகத்தில் மோதியதை நியாபகப் டுத்தியது. எங்கே இருக்கிறாளோ...? என்ன செய்கிறாளோ...? இன்னுமொரு சிகரெட் குடிக்கலாமோ என்று தோன்றியது. வேண்டாம் கற்பனை சிகரெட் என்றாலும் ஒன்று போதும் என்று புத்தி சொல்லியது.

ஷோபனாவிற்கு நன்றாக பாடவரும். கல்லூரியில் படித்தபோது ஒரு இன்டர்காலேஜ் போட்டிக்காக கல்லூரியிலிருந்து பல போட்டிகளில் கலந்து கொள்ள நாங்கள் சென்றிருந்தோம். அப்போது ஒரு இரவு பரமக்குடியில் நாங்கள் தங்கவேண்டியதாய் இருந்தது. நான் பாட்டுப் போட்டிக்கும் ஷோபனா பேச்சுப் போட்டிக்கும், பட்டிமன்றத்துக்கும் சென்றிருந்தோம் என்று சொன்னால் நீங்கள் நம்பவா போகிறீர்கள். ஆமாம் ஷோபனாதான் பாட்டுப் போட்டிக்கு வந்திருந்தாள். அபாரமான குரல் வளம் அதாவது இந்த சூப்பர் சிங்கர் சீசன் எல்லாம் என்னவென்றால் தெரியாத காலம் அது. போட்டியில் நாங்கள் நிறையவே வென்றோம். போட்டிகள் எல்லாம் முடிந்த பின்பு என்னை யாரும் பேசச் சொல்லி கேட்கவில்லை ஆனால் ஷோபனாவை பாடச் சொல்லி கேட்டோம்.

காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றைத் தேடுதே
அலை போல நினைவாக
சில்லென்று வீசும் மாலை நேர
காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றைத் தேடுதே....

சப்த நாடிகளும் ஒடுங்கிப் போய் பின் ட்ராப் சைலன்ஸில் எல்லோரும் ஷோபனாவையே பார்த்துக் கொண்டிருந்தோம். சங்கீதம் என்றால் என்னவென்று தெரியாத ஒரு ஞான சூன்யத்துக்கு அன்றுதான் சங்கீத பாடம் நடந்தேறியது. எத்தனை திறப்புகள்? எத்தனை அறிவுகள்? எவ்வளவு ஞானம்? இந்தப் புவியெங்கும் பரவிக்கிடக்கிறது. அழகு என்ற புறத்தோற்றம் கடந்த எவ்வளவு பெரிய வசீகரம் இந்தப் பெண்ணிடம் இருக்கிறது. இந்தக் குரல், இந்த சப்தம் எவ்வளவு ரம்யமாய் காற்றில் மிதந்து வந்து ஒவ்வொரு செவிக்குள்ளும் நிறைகிறது. இது இசையா? இது கடவுளா? இது காதலா? இது காமமா? யார் எழுதிய பாடல் இது...? வார்த்தைகளை இழைத்து, இழைத்து தன்னுள் புகுத்திக் கொண்ட அந்த மயக்கும் ராகத்தின் பெயர்தான் என்ன? இதற்கு மெட்டமைத்தவர் யார்? மெட்டமைத்தவனின் கற்பனை என்ன? எந்த சூழலில் இந்த இசை அவன் புத்திக்குள் உதயமானது? வளைந்து நெளிந்து செல்லும் ஒரு நதியைப் போல, மென்மையாய் தடவிச் செல்லும் ஒரு தென்றலைப் போல காற்றை செதுக்கிய சிற்பி யார்...? அவனின் அனுபவம் என்ன? அவன் என்ன யோசித்து இந்த பாடலுக்கு இசை அமைத்தான்? 

இந்த பாடலை எழுத பொருத்தமான சூழலைச் சொன்ன படைப்பாளி யார்? அவனுக்குள் கட்டியெழுப்பப்பட்ட கதாபாத்திரத்திற்கு தாக்கம் எங்கிருந்து கிடைத்தது? என்று யோசிக்க யோசிக்க எல்லாமே சூட்சுமத்திலிருந்து பிறந்தது, நினைவுகளில் இருந்து எழுந்தது, கற்பனைகளில் இருந்து மலர்ந்தது என்று புரிந்தது. ஸ்தூலமாம் உடலுக்கு சூட்சுமமே முதல் என்ற சைவச்சிந்தாந்த வழிமுறை பளார் என்று என் கன்னத்தில் அறைந்து பிரபஞ்சப் பெருவெளிக்குள் என்னை தர தரவென்று இழுத்துச் செல்ல....

அங்கே கலைகளின் நாயகனின்  இடைவிடாத பெரு நடனம் நிகந்து கொண்டே இருப்பது பிடிபட்டது. ஒவ்வொரு அசைவிலும் ஒரு நிகழ்வு, ஒவ்வொரு அசைவிலும் ஒரு உயிர், ஒவ்வொரு அசைவிலும் ஒரு மரணம்....

ஜதி தரும் அமுதம் தனி...தனி... தனிச
நவரச நடனம் ஜதி தரும் அமுதம்...
அவன் விழி அசைவில் எழுதுளி அசையும்....

ஆடல் நாயகனின் ஆட்டம் அது. இடைவிடாத ஆட்டம். ஒரு கால் தூக்கி மறு காலில் அகங்காரத்தை போட்டு அழுந்த மிதித்து ஆணவத்தை இடுப்பில் அணிந்து தீமையை கழுத்தில் நிறுத்திக் கொண்டு சடாமுடி விரிய ஆடும் தீப்பிழம்பின் நடனம் அது. சப்த நாடியும் ஒடுங்கிப் போக மீண்டும் ஷோபனாவின் பாடலுக்குள் கொண்டு வந்து இறக்கி விட்டன என் நினைவுகள். என்ன ஒரு பாடல்..? இதைத் திரையில் ஜானகி அம்மா பாடி இருப்பார். அந்த குரல், அந்த ஆசிர்வாதம் ஷோபனாவிற்கு நிறையவே இருந்ததை என்னால் உணர முடிந்தது. சங்கீதம் என்பது சப்தங்களை சரியாய் ஏற்றி, இறக்கி சலனமில்லாத பேருண்மையை சொல்லுமிடம் என்பது புரிந்தது.

நில்லென்று சொன்னால் மனம் நின்றா போகும்
நீங்காத நெஞ்சில் அலை ஒய்ந்தால் போதும்
மௌனத்தின் ராகம் கேளாதோ
மௌனத்தில் தாளம் போடாதோ
வாழும் காலம்
யாவும் இங்கே நெஞ்சம் தேடும்....

எனக்கு கேவி கேவி அழவேண்டும் போன்றிருந்தது. மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த போது எனக்கு எதுவுமே பேசத் தோன்றவில்லை. எனக்கு முன் சீட்டில் ஷோபனா உட்கார்ந்திருந்தது.. திரும்பி திரும்பி என்னிடம் பேசிக் கொண்டே வந்தது. பேச்சுப் போட்டியில் நன்றாகப் பேசியதாக வாழ்த்தியது. நான் பேசுவதை விட பாடுவது கடினம் என்றேன். அதற்கு எல்லாமே பயிற்சிதான் என்று பதில் சொன்னது. என் பயிற்சி போகிற போக்கில் நிகழ்ந்து விடும். கோர்வையாய் செய்திகளைப் பகிரவும், பகிர ஏறி நிற்கும் மேடை பற்றிய பயமும் இல்லாமல் இருந்தால் போதுமென்றேன் நான். நீ நிறைய பேசு என்றாள் அவள்....நிறைய பாடு என்றேன் நான்.....

அன்று அவள் துப்பட்டா காற்றில் வந்து என் முகம் தொட்ட போது தோன்றிய அதே உணர்வை இந்த மழைச்சாரலும்....கொடுத்திருக்கிறது. அது ஒன்றும் காதல் அல்ல... என்று நான் சொன்னலும் காதல் இல்லை என்றும் சொல்லமாட்டேன். அது வேறு. அந்த ஈர்ப்பு சாகும் வரை எனக்குள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும் எனக்கு. இது தொட்டுக்கொள்ள துணை தேடும் ஈர்ப்பு அல்ல. தொடாமல் ஆதியின் சுயரூபத்தை ரசிக்க முனையும் ஆழ்மனத்தின் தேடல், ஆசை எப்படி வேண்டுமானலும் வைத்துக் கொள்ளலாம்.

மழை கொஞ்சம் விட்டிருந்தது. சிறு தூரலாகவாவது தயவு செய்து இன்று முழுதும் நின்று செல் என் உயிரே என்று மழையிடம் வேண்டினேன்...!

வள்ளலாரைப் பற்றி எழுத வேண்டும், சங்ககாலத்திலிருந்து தமிழ் மண்ணில் எப்போதும் பேசப்படும் மறவர்களைப் பற்றி படிக்க வேண்டும், எழுத வேண்டும்...., சிவகங்கைச் சீமை பற்றி நிறைய அறிந்து அந்த மண்ணின் மனிதர்களை, வாழ்க்கையை, சிதிலமடைந்து கிடக்கும் காளையார்கோயிலுக்கு எதிரே நிகழ்ந்தேறிய கொடுமைகளை, அந்த சிவப்பு மண்ணில் படிந்து கிடக்கும் மனிதர்களின் ரத்தக் கறைகள் சொல்லும் சோகங்களை, அவர்களின் வீரத்தை எழுத வேண்டும்....

பரத்தையர்கள் வாழ்வு பற்றி, தேவரடியார்களும் தாசிகளும் வெவ்வேறு வகை என்பது பற்றி, எப்போதும் உள்ளுக்குள் மோதும் காதலைப் பற்றி, மனிதர்கள் எப்போதும் பேசத் தயங்கும் காமத்தைப் பற்றி, மதத்திற்குள் முடங்கிக் கிடக்கும் கடவுளைப் பற்றி....நிறைய எழுத வேண்டும். அதற்கு நிறைய வாசிக்க வேண்டும்.....

என்று இந்த விடுமுறையிலும்  ஆசைப்பட்டேன். சட்டென்று ஓடிப்போகும் இந்த காலச் சக்கரத்தை யாரவது இழுத்து பிடித்து கொஞ்சம் நிறுத்துங்களேன்...இந்த வாழ்க்கை முழுதும் தீரத் தீர வாழ்ந்து முடித்து விட்டு நான் வருகிறேன்.  

மழை மறுபடி பிடித்துக் கொண்டது.


மறுபடி எதுவும் செய்யாமல் மழையை வேடிக்கப் பார்க்க ஆரம்பித்திருந்தேன்.
தேவா சுப்பையா....


Wednesday, February 5, 2014

யாளி ஒரு கற்பனை மிருகமா...?!

Yali @ my Office
தஞ்சாவூர் கோயிலில் கோபுரத்தில் யாளிகளுக்கு என்று தனி வரிசை இருக்கிறது. யாளிகள் இல்லாமல் எந்த ஒரு கோயிலையும் நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. அந்த அளவு யாளிச் சிற்பங்கள் பெரும்பான்மயான கோயில்களில் இருக்கின்றன. கோயிலின் கலையம்சத்தை உணர்வுப்பூர்வமாக எடுத்துக்காட்ட இந்த யாளிகளை செதுக்கி கூட இருக்கலாம். யாளியில் என்ன கலையம்சம் என்று யோசிக்கிறீர்களா? அதுவிமில்லாமல் சாத்வீகமாய் சமாதானமாய் மன அமைதிக்காக வரும் கோயிலில் ஏன் சீற்றத்தோடு பயங்கரமான அப்படி ஒரு பிரம்மாண்ட மிருகம் என்ற கேள்வியும் நமக்குள் எழத்தான் செய்கிறது.

யாளி பிரம்மாண்டமானது என்று எப்படி சொல்கிறாய் என்றுதானே கேட்கிறீர்கள். பெரும்பாலும் யாளிகள் யானையின் துதிக்கையைப் பிடித்து கோபத்தோடு தூக்குவது போன்ற சிற்பங்களை கவனித்து யானையின் வடிவோடு ஒப்பிட்டு யாளியை பெரிதுபடுத்திப் பார்த்த போது இந்தப் பிரம்மாண்டம் எனக்குள் தோன்றியது. சிங்கமுக யாளி, மகர யாளி, யானை யாளி இந்த மூன்று வகையில்தான் யாளிகள்  பெரும்பாலும் செதுக்கப்பட்டிருக்கின்றன. மூன்று வகையாய் இருந்தாலும் இந்த யாளிகளை உருவாக்க அடைப்படையாய் அவர்களுக்குள் இருந்த கற்பனை சிங்கம்தான் என்று நினைக்கிறேன்.

ஒவ்வொரு யாளியும் எப்படி இருக்கும்  என்பதை எல்லாம் நீங்கள் இணையத்தை துருவினால் தெரிந்து கொள்ள முடியும். மிக பயங்கரமான ஒரு பிரம்மாண்ட மிருகமாய் இருக்க வேண்டும் என்பது மட்டும்தான் யாளிகளை செதுக்க வைத்திருந்த சூத்திரமாய் இருந்திருக்க வேண்டும். என் அலுவலகம் கலையோடு தொடர்புடையது. எங்கள் அலுவலக வாசலில் இரண்டு கல்லால் ஆன யாளிகள் இருக்கின்றன. எங்கிருந்து வாங்கியது என்ற விபரங்கள் இல்லாமல் கிடங்கில் கிடந்த அவை இரண்டையும் நான் தான் வெளியில் எடுத்தேன். அப்படி எடுத்துக் கொண்டு வந்து அவற்றை தண்ணீர் விட்டு கழுவி பார்க்கும் வரை அவை இரண்டும் சிங்கங்கள் என்றுதான் முதலில் நான் நினைத்தேன். 

உருண்டையான மிரட்டும் கண்களோடு முறுக்கிய மீசையோடு, தலையில் கிரீடத்தோடு அவை முன்னங்கால்களை மேலே தூக்கியபடி கம்பீரமாய் நின்று கொண்டிருந்தன. எனக்கு நம்ம ஊர் கருப்பசாமியின் சிலைதான் நினைவுக்கு வந்தது. இவை சிங்கங்கள் இல்லை யாளிகள் என்று அறிந்த பின்புதான் இப்படி  ஒரு விலங்கை ஏன் இந்தியா முழுதும் இருக்கும் கோயில்களில் பரவலாக செதுக்கி இருக்க வேண்டும்? ஏன் தமிழ்நாட்டிலிருக்கும் மிகைப்பட்ட கோபுரங்களை இந்த யாளிகள் அலங்கரிக்க வேண்டும்....? யாளிகளுக்கும் ஆன்மீகத்துக்கும் என்ன தொடர்பு? அல்லது யாளிகளுக்கும் கடவுளுக்கும் என்ன தொடர்பு...? இப்படி ஒரு விலங்கு பழங்காலத்தில் நிஜமாகவே இருந்ததா? கீழைநாடு என்றழைக்கப்படும் பரத கண்டத்தினர் மட்டும் எப்படி இவற்றை சிற்பத்தில் கொண்டு வந்தார்கள்...? இது வெறும் கற்பனையா? நிஜமா?இணையத்தை இயன்றை வரை நான் உழுது பார்த்து விட்டேன். எங்குமே சரியான தகவல்கள் இல்லை. மிகப்பெரிய கற்பனையோடு யாளி என்ற மிருகம் இன்னும் தென் தமிழ்நாட்டில் மறைத்து வைக்கப்பட்டிக்கிறது என்ற ஒரு நாவலொன்றை யாரோ எழுதி இருக்கிறார்கள். அது போக யாளி என்ற மிருகம் குமரிக்கண்டத்தில் இருந்தது என்றும் குமரிக்கண்டம் தண்ணீரில் மூழ்கிய  போது அவை அழிந்து போய்விட்டன் என்றெல்லாம் அடித்து விட்டிருந்தனர். யாளி மனித ஆழ்மனத்திலிருந்து வெடித்து எழுந்த ஒரு அமானுஷ்ய மிருகம் என்றுதான் நான் எண்ணுகிறேன். என்னுடைய கணக்கு கூட்டல் மனோதத்துவ ரீதியானது. சில விசயங்கள் நமக்குள் தன்னிச்சையாய் தோன்றும். இதுவரையில் நாம் காணாத நிறங்கள், மனிதர்கள், நிலப்பரப்புகள், நிகழ்வுகள் என்று இதுவரையில் நாம் அறிந்திராத பல விசயங்கள் அவ்வபோது நம் நினைவுப் பகுதிக்குள் எட்டிப்பார்க்கும். கனவுகளில் வந்து ஏதேதோ கதைகள் சொல்லும்.

அறிவியலைப் பொறுத்தவரை மனித மூளை விசயங்களைக் கிரகித்துக் கொண்டு அதன் அடிப்படையில் தனக்கு வசதிப்பட்டவாறு அதை விரிவுபடுத்தி பார்த்துக் கொள்கிறது என்று சொல்கிறது. என் கேள்வி எல்லாம் இந்த படைக்கும் திறமை எங்கிருந்து மனிதனுக்கு வந்தது...? அல்லது இந்த கற்பனை ஏன் அவனுக்கு வரவேண்டும்..? இல்லாத ஒன்றை எண்ணிப் பார்க்கும் போதே அப்படி ஒன்று ஏன் இருக்க கூடாது என்ற கேள்வியும் உடன் வரத்தானே செய்கிறது.

ஒரு முறை என் அனுபவத்தில் இல்லாத ஒரு கிராமத்திற்குள் என் கனவில் ஒருநாள் நான் சென்றேன். அங்கே நிறைய பேர்கள் ஓவியம் தீட்டிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு ஓவியமும் விப்ஜியார்(VIBGYOR) என்று நாம் சொல்லகூடிய அந்த ஏழு நிறத்திலுமே இல்லை. அந்த வர்ணங்கள் வேறு. ஏழு நிறங்களை மட்டுமே ஏந்திப் பிடித்துக் கொண்டிருக்கும் என் மூளையால் எப்படி இந்த நிறங்களை சிந்திக்க முடியும்...? கற்பனை செய்து பார்க்கவும் ஒரு தளம் வேண்டும்தானே...? எந்தத் தளத்திலும் நிற்காமல் எனக்குள் தோன்றிய அந்த வர்ணக்கலவைகளால் ஆன ஓவியங்கள் எல்லாம் எனக்கு அச்சு பிசகாமல் இப்போதும் நினைவிருக்கின்றன ஆனால் அப்படியான ஓவியங்கள் ஒன்றும் இந்த உலகத்தில் இல்லவே இல்லை.

இப்போது அதை நான் உங்களுக்கு காட்ட வேண்டுமெனில் வரைந்து காட்டமுடியும் ஆனால் நம்மிடம் அதே போன்று  வர்ணங்கள் இல்லை. ஏழு நிறங்களையும் எந்த விகிதாச்சாரத்தில் கலக்கினாலும் நான் கண்ட வர்ணங்கள் வரவே வராது. ஏழு நிற வர்ண திரவியங்களையும் நான் ஒரு பைத்தியக்காரனைப் போல கலக்கி கலக்கி சேர்த்து குறைத்து பார்த்தேன் ஆனால் நான் கண்ட அந்த வர்ணம் கிடைக்கவே இல்லை. ஒரு மாதம் முழுதும் எனக்கு அந்த ஓவியங்களின் நினைப்பாகவே இருந்தது. 

உலகின் மிகப்புகழ்பெற்ற அப்ஸ்ட்ராக்ட் ஓவியங்களை எல்லாம் ஏக்கத்தோடு தேடித் தேடிப் பார்த்தேன். அவை எல்லாம் நான் கண்ட ஓவியத்தை போல இல்லவே இல்லை. ஒரு சில ஓவியர்களின் ஓவியங்கள் நான் கண்ட ஓவியங்களை ஒரளவிற்கு ஒத்து இருந்தது. அவர்களுக்கும் என் போன்ற கனவு வந்திருக்கக் கூடுமா என்று யோசித்துப் பார்க்கையில் எனக்கு ஏதோ ஒரு விசயம் இங்கே பொதுவாக இருப்பதாகப் பட்டது. இந்த உலகில் பல திசைகளில் வாழும் எல்லா மனிதர்களுக்கும் ஒரே ஒரு மையம்தான் மூலமாய் இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது.

மனித கற்பனைகள் எல்லாம் ஆழ்மனத்தோடு தொடர்புடையது. மைக்கேல் ஆஞ்சலோ ஏன் அப்படி குண்டு குண்டாய் ஆண்களையும் பெண்களியும் நிர்வாணமாக வரைந்தார்? அவருக்குள் ஏதோ ஒர் செய்தி அல்லது உந்துதல் அல்லது விருப்பம் அல்லது எங்கோ எப்பபோதோ அப்படி இருந்த நினைவுகள்  முட்டி மோதி கையில் வழிந்த போது அது ஓவியமாகி விட்டது. அடிப்படையில் அந்த ஓவியங்களை ரசித்த அத்தனை பேருக்குள்ளும் அந்த ஓவியம் ஏற்கெனவே இருந்தது என்று நான் சொன்னால் நீங்கள் கொஞ்சம் குழம்புவீர்கள்தானே....?

ஆமாம் புறத்தில் காணும் நமக்குப் பிடித்த எல்லா விசயங்களும் நமக்குள் ஏற்கெனவே ஏக்கமாய் நிறைந்து கிடந்தது தான். ஒன்று அப்படி நாம் முன்பு இருந்திருப்போம் அல்லது அதன் உடன் நாம் இருந்திருப்போம். அதை புறத்தில் காணும் போது அது நமக்குப் பிடித்துப் போகிறது. மனித ஆழ்மனம் விசித்திரமானது....அது எந்த அறிவியல் அறிவுக்கும் பிடிபடாதது. தன்னிச்சையானது. சுதந்திரமானது. கலைஞர்கள் அந்த சுதந்திரத்தோடே எப்போதும் பயணிக்கிறார்கள்.

யாளி இந்த பூமியைச் சேர்ந்த மிருகமாய் இருக்க சாத்தியமில்லை. நிஜமாய் இந்த உலகில் அப்படி ஒன்று இருந்திருக்க முடியாது ஆனால் அப்படி ஒன்று இருக்கவே முடியாது என்று நான் கூறமாட்டேன். யாளி இந்த பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையில் உயிர் வாழும் விலங்காயிருக்கலாம். மனித வாழ்க்கை இந்த பூமியில் காண்பது மட்டும் கிடையாது அது இந்த பிரபஞ்சத்தோடு தொடர்புடையது என்று காட்ட கோயிலுக்கு வரும் மனிதர்களிடம் எடுத்துச் சொல்ல.....


கோபுரத்திற்கு கோபுரம், மண்டபத்திற்கு மண்டபம், தூணுக்குத் தூண் இந்த யாளிகள் செதுக்கப்பட்டிருக்கலாம். யாளியை ஏதோ ஒரு தூணில் உற்று நோக்கும் யாவர்க்கும் அவர்கள் அறியாமலேயே அவர்களின் உள்ளுணர்வு தட்டி எழுப்பபடுகிறது. அது ஏதோ ஒரு பேரமைதியை நமக்குள் பரவ விடுகிறது. இத்தனை மிரட்டலாய் செதுக்கப்பட்டு காட்சி தரும் ஒரு விலங்கு அதாவது ஒரு யானையையே அதன் துதிக்கையை பிடித்து தூக்கி விசிறி அடிக்க முயலும் ஒரு விலங்கு, நமக்குள் இருக்கும் மனம் என்னும் மதம் கொண்ட மிருகத்தை உள்ளுக்குள் உருத்தெரியாமல் அழித்து பேரமைதிக்குள் நம்மை தள்ளி விடும் விந்தையும் நிகழ்ந்து விடுகிறது.

இனி கோயில்களுக்குச் செல்லும் போது யாளிகளை உற்றுக் கவனியுங்கள். அவை வெறும் சிற்பங்கள் மட்டும் அல்ல...யாரோ ஒரு படைப்பாளியின் சுதந்திரம் என்று கொள்ளுங்கள். அது அவன் பரந்து விரிந்த இப்பிரபஞ்சத்தை தன் மனமற்ற நிலையில் எட்டிப்பிடித்து அங்கே அவன் விருப்ப திசையில் எல்லாம் பயணித்து தேடிக் கண்ட மிருகமென்று அதை நினையுங்கள். மிரட்டும் விழிகளோடும் நீண்ட துதிக்கையினோடும் கோரப்பற்களோடும் இருக்கும் யாளிகளை காதலோடு பார்த்து....

என் பாரத தேசமே....!!!!! என் சனாதான தருமமே எத்தனை எத்தனை ரகசியங்களை நீ உன்னுள் தேக்கி வைத்திருக்கிறாய் என்று கேட்டு உள்ளுக்குள் கேவி அழுங்கள். வாஞ்சையோடு யாளிகளை தடவிக் கொடுது யாளிகளை சினேகமாக்கிக் கொள்ளுங்கள்....மரணத்திற்குப் பிறகும் தொடரப்போகும் உயிரின் பயணத்தில் இந்த பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு திசையில் யாளிகளை நாம் காணக்கூடும்....

அப்போது யாளிகள் சினேகத்தோடு  நம்மை அடையாளம் கண்டு அன்பு செய்யும் அற்புதமும் நிகழும். இந்த கட்டுரையை வாசித்து முடித்த பின்பு  உங்களுக்குள் இரத்தமும் சதையுமாய் உயிர் பெற்று இனி அலையப்போகும் யாளியை உருவாக்கியது வேறு யாரோ அல்ல...இதை வாசித்த நீங்கள்தான் என்று நான் சொல்வதை நீங்கள் மெளனமாய் யோசித்துப் பாருங்கள் அப்போது ஏன் யாளிகள் செதுக்கப்பட்டன என்ற உண்மை  உங்களுக்கு இன்னும் தெளிவாய் புரியும்.தேவா சுப்பையா...