Skip to main content

நலம் நலமறிய அவா...!


எவ்ளோ பரபரப்பா போய்ட்டு இருக்கு வாழ்க்கை. ரோபட்டிக் லைஃபா போச்சு எல்லாமே. எல்லோருக்கும் அவசரம். எல்லாத்துக்கும் அவசரம். வார
விடுமுறைய கூட ப்ளான் பண்ணி அவசர அவசரமா அனுபவிக்க வேண்டிய ஒருஅழுத்தம். எப்போ மாறினிச்சு இப்டி வாழ்க்கை? அறிவியல் வளர்ச்சி மொத்தமா நம்மள தின்னுடுச்சா? சுயநலம் பெருகிப் போனதுனால ஏற்பட்டிருக்க ஒரு இன்செக்கியூரிட்டினால நம்மள காப்பாத்திக்க நாம என்ன வேணா செய்யலாம்னு சொல்லி மனசாட்சிய அடகு வச்சிட்டோமா? ஆசைதான் துன்பத்துக்கு காரணம்னு  3 ஆம் கிளாஸ்ல படிச்ச புத்தனோட வாக்கு அப்போ 2 மார்க் கேள்வி பதிலா தெரிஞ்சுச்சு......இன்னிக்கு அதுல ஏதோ ஒரு அர்த்தம் இருக்க மாதிரி தோணுது....

ஒண்ண நோக்கி போகும் போது அந்த ஒண்ணு கிடைச்சுடுச்சேன்னு சந்தோசப்பட்டுக்கிட்டு இருக்கும் போது அது தொடர்பான பத்து நம்ம குரல்வளைய நெரிக்க ஆரம்பிச்சுடுது. இதுக்கு அந்த ஒண்ணு கிடைக்காமலேயே இருந்திருக்கலாமோன்னு யோசிக்கவும் தோணுது. அரசியல், சினிமா, ஆன்மீகம், மதம்னு எதை எதையோ நிறுவ ஓடிட்டு இருக்கற அவசரத்துல ரசனையில்லாம இந்த வாழ்க்கை மாறிட்டு இருக்கறத யாரும் கவனிக்கிறதே இல்லை.

டிவி பொட்டி நம்ம சமூகத்துக்குள்ள நுழையிறதுக்கு முன்னாடி மனுசங்களுக்கு மனுசங்க தேவை அதிகமா இருந்துச்சு. பொழுது போக இன்னொரு மனுசனோட தேவை கண்டிப்பா தேவைப்பட்ட காலம் அது. ஆல் இந்திய ரேடியோதான் அப்போ எல்லோருடைய பொழுதையும் மொத்தமா குத்தகைக்கு எடுத்து வைச்சிருந்தது. 1986கள் வாக்குல ஞாயித்துக்கிழமையாச்சுன்னா எனக்கு நாடகம் கேக்குற பழக்கம் இருந்துச்சு. அந்த பழக்கத்துக்கு காரணமா எங்க வீட்டுக்கு எதிர்வீட்டுக்காரங்க இருந்தாங்க. அப்போ நாங்க காலனின்னு சொல்ற லைன் வீட்ல இருந்தோம். எங்க வீட்டு எதித்தாப்ல இருந்தவங்க அய்யர் வீடு. அவுங்களுக்கு அஞ்சாறு பொண்ணுகளும் ஒரு பையனும் இருந்தாங்க. அந்த அக்காங்க கூடதான் நானும் எங்க அக்காவும் எப்பவும் விளையாடுவோம்.  புத்தகம் படிக்கிற பழக்கத்தை சுகுந்தாக்காதான் எங்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தாங்க. குமுதம், ஆனந்தவிகடன், ராணி, கோகுலம், கல்கி, தேவி இப்டி எல்லா வாரப்பத்திரிக்கைகளும் அவுங்க வீட்டுக்கு வரும். இது போக கண்மணி, ராணி முத்து, ராஜேஷ்குமார், சுபா நாவல்கள் எல்லாம் கூட அப்போ, அப்போ வாங்குவாங்க. கிட்டத்தட்ட அவுங்க வீடுதான் எங்களுக்கு என்டர்டெயிண்ட்மெண்ட்னாலே....

சினிமா எல்லாம் எப்பவாச்சும் ஒரு தடவை அப்பா மனசு வச்சா மதுக்கூர்ல இருக்க எம்கேஎம் இல்லை ஐயப்பா தியேட்டர்ல 2 ரூபாய் ஒரு டிக்கெட்டுக்கு கொடுத்து பார்க்கப் போவோம். அதாவது சீட்டுக்கு 2 ரூபாய், சாய்வு பெஞ்ச் 1 ரூபாய், சாதா பெஞ்ச் 75 காசு, தரை டிக்கெட் 50 காசு அப்போ. அப்பா, அம்மா கூட சினிமாவுக்குப் போறதுன்னா அம்மா சாயந்தரமே மாவு அரைச்சு எடுத்து வச்சிட்டு, வீடு கூட்டுத் தள்ளி, கோழிக் குஞ்சுகள பிடிச்சு கூட்ல அடைச்சுட்டு பரபரப்பா கிளம்பிட்டு இருப்பாங்க. அப்பாவோட அலுவல் நிமித்தமா சிறு நகரத்துக்கு நாங்க நகர்ந்து இருந்தாலும் அடிப்படையில விவசாய குடும்பம் எங்களோடது. பக்கா கிராமம் அதனால அம்மாவுக்கு கோழி வளர்க்குறது. முட்டைய அடை வச்சு குஞ்சு பொரிக்க வைக்கிறது எல்லாம் ரொம்பவே பிடிச்ச விசயம்.

ஞாயித்துக்கிழமை மத்தியானம் சாப்டு படுத்து தூங்குற அப்பா குறட்டை சத்தம் நின்னுடுச்சுனா முழிச்சுட்டாங்கன்னு அர்த்தம். அதுக்குள்ள லபோ திபோன்னு நாங்க கிளம்பிட்டு இருப்போம். நானும் எங்க அக்காவும் ஆளுக்கொரு வாட்டர் பேக் எடுத்து பொறுப்பா தண்ணி ஊத்திக்கிட்டு இருப்போம். தண்ணி ஊத்தும் போது கவனம் இல்லாம நான் சிந்துறத ரொம்ப பொறுப்பா அக்கா அம்மாகிட்ட போட்டுக்கொடுத்து முதுகுல மொத்து வாங்குறதும் உண்டு. தியேட்டர்ல ட்ரம்ல வெளில வைச்சிருக்க தண்ணி சுத்தமா நல்லா இருக்காதுன்றதால இந்த வாட்டர் பேக் ஐடியா.

சைக்கிள அப்பா தள்ளிக்கிட்டு வருவாங்க. அக்கா, அம்மா எல்லாம் நடந்து வருவாங்க....நான் சைக்கிள் கேரியர்ல ராஜா மாதிரி உக்காந்துட்டு வந்த அந்த 13 வயசுல.....அது எனக்கு கனகம்பீரமா தெரியும். காலனில இருக்க 13 வீட்லயும் வாசல்ல நின்னு பாக்குறவங்க கிட்ட எல்லாம் ஏதோ வேற கிரகத்துக்குப் போற மாதிரி அக்கா...போய்ட்றேங்கக்கா....போய்ய்ட்றேண்டா போய்ட்ரேண்ணா ன்னு சொல்லி சினிமாவுக்கு  போறத ஒரு விழாவாவே கொண்டாடுவோம். போய் பாக்குற படம் செம மொக்கையா கூட இருக்கும். படம் எல்லாம் முக்கியமே இல்லை....படம் பார்க்க போறதுதான் சுவாரஸ்யம் எங்களுக்கு. காலனி  காம்பவுண்ட் சுவரு தாண்டி திரும்பறப்ப ஜோயல் அண்ணன் கிட்ட சொல்லலப்பானு சொல்லி சைக்கிள்ள இருந்து தொப்புன்னு குதிச்சு குதிகால் பிடறில அடிக்கிறமாதிரி ஓடிவந்து ஜோயலண்ணே ...சினிமாக்கு போய்ட்றண்ணேன்னு குரல் கொடுத்த உடனே... 

அவுங்களும் ஓடிவந்து.. எந்த தியேட்டர் அப்புன்னு கேள்வி கேட்டு அந்த சந்தோசத்தை அதிகப்படுத்துவாங்க...ஐயப்பா தியேட்டர்ணேன்னு நான் சொல்லவும்...அது கொஞ்ச தூரம்ல ஓடு... ஓடு ஒங்கப்பா திட்டப்போறார்னு சொல்லிக்கிட்டே போய்ட்டு வந்து கதை சொல்லு என்ன... அப்டீன்னு கேட்ட ஜோயல் அண்ணன் அப்போ பிளஸ் டூ படிச்சுட்டு இருந்தாங்க. இது எல்லாம் ஒரு மேட்டரான்னு யாரும் யாரையும் உதாசீனப்படுத்தாத காலங்கள் அவை. ஒவ்வொரு மணித்துளிக்கும் மரியாதை கொடுத்து ஒவ்வொரு சம்பவங்களையும் முக்கியமானதா பாத்து மனிதாபிமானத்தோட அப்போ எல்லாம் எல்லோரும் இருந்தாங்க....

ஏன்னா அப்போ மனுசனுக்கு மனுசனோட தேவை அதிகமா இருந்துச்சு.

ஞாயித்துக்கிழமை ரெண்டு நாடகம் போடுவான் விவிதபாரதியோட வர்த்தக ஒலிபரப்புல...அதாவது மதியம் 12க்கு ஒண்ணு போடுவான் அது குறுநாடகம். மத்தியம் 3 மணிக்கு ஒண்ணு போடுவான் அது கொஞ்சம் பெரிசா ஒருமணி நேரம் ஓடும். எங்கூட்ல இருந்த ரேடியா பொட்டியில நாடகம் கேக்க எனக்கும் எங்க அக்காவுக்கும் பிடிக்காது. எதித்தாப்ல இருக்க அய்யர் வீட்ல போய் அந்த கறுப்பு கவர் போட்ட ரேடியோ பெட்டிய சுத்தி, ஒரு பத்து பேர் உக்காந்து கேக்குற சுகத்தை இன்னிக்கு எத்தனையோ சேட்டிலைட் டிவிகளோட ஒளிஒலிபரப்பும், அதை சோபாவுல உக்காந்துகிட்டு ரிமோட்ட தட்டி எல்சிடி மூலமா பாக்குறதும் கொடுக்கலன்றதுதான் நிஜம்.

அறிவியல் வளர்ச்சி மனுசங்கள விட்டு மனுசங்கள தூரமாக்கிடுச்சு. ஒலிச்சித்திரம் கேக்குறதுன்னா என்னான்னு இப்போ இருக்க புள்ளைக் குட்டிங்க நம்மள பாத்துக் கேக்க ஆரம்பிச்சுடுச்சுங்க. படத்தை பாக்காமலேயே ஒலிச்சித்திரத்த கேட்டு கற்பனை பண்ணி ரசிக்கிற ஒரு சுகம் எப்டி இருக்கும்னு யாருக்கும் இப்போ பிடிபடறதே இல்லை. எல்லாத்தையும் நேரா பாக்கணும் உடனே அதோட டீட்டெய்ல் என்னானு தெரியணும். டெக்னிகாலிட்டி என்னானு தெரியணும் இப்டி ஆராய்ஞ்சு ஆராய்ஞ்சு எல்லோருடைய ரசனைகளும் தடிச்சுப் போயிருச்சு இப்போ. இதுவே மோசமான இறுகிப் போன ரசனையற்ற சமூகச் சூழலுக்கு காரணமாவும் போச்சு. போன வாரம் ரஜினி சார் நடிச்ச ஜானி படம் பார்த்துட்டு இருந்தேன் என்ன டிவின்னு மறந்து போச்சு. அதுல வித்யாசாகர்ன்ற கேரக்டர்ல நடிக்கிற ரஜினி சார் தன் வீட்ல வேலை செய்ற தீபாவுக்கு துணி எடுத்துக் கொடுக்க ஜவுளிக் கடைக்கு கூட்டிட்டுப் போவார்....

அந்தம்மா இந்தப் புடவை நல்லாருக்குன்னு சொல்லி ஒண்ண எடுத்து கையில வச்சுக்கிட்டே இன்னொன்னை பாத்து அது நல்லாருக்குண்ணு சொல்லி அதை எடுப்பாங்க அப்புறம் இன்னொரு புடவைய பாத்துட்டு அதுவும் வேணும் நல்லாருக்குன்னு சொல்லுவாங்க....அப்போ ரஜினி ...பாமா...வாழ்க்கையில ஒண்ண விட ஒண்ணு எப்பவும் பெட்டரா இருந்துக்கிட்டேதான் இருக்கும். நாம ஒரு நிலையில நிக்காம போய்ட்டோம்னா எதுவுமே கடைசியில பிடிக்காம போய்டும் அப்டீன்னு சொல்வாரு...

ஆக்சுவலா ஜானி படத்தைப் பத்தி நான் தனியா எழுத நிறைய இருக்கு. எழுதுவேன். அது மாதிரி இதை விட இது பெட்டர்னு  கம்போர்ட் லெவல நோக்கி வளர்ந்துட்டு இருக்க மனிதர்களா நாம மாறிட்டோம். நான் எல்லாம் எட்டாம் கிளாஸ் படிச்சப்ப சைக்கிள் கத்துக்குறேன்னு சொல்லி முட்டில படாத அடி கிடையாது. கால்ல வராத காயம் கிடையாது. ஓடிப்பிடிச்சு விளையாடுறேன்னு கம்பி கேட்ல இடிச்சுக்கிட்டு கீழ் தாடையில மூணு தையல் போட்டப்ப எனக்கு வயசு 7. இன்னிக்கு வயசு பிள்ளைங்கள கூட நாம பொத்தி பொத்தி வளர்க்குறோம். சின்ன விசயத்துக்கு பதறுறோம். இப்டி செய்யும் போது என்னாகுது அதுங்களுக்கு இந்த சமூகத்தோட சின்ன சின்ன சங்கடங்களைக் கூட எதிர்த்து நிக்கற அளவுக்கு வலு இல்லாம போய்டுது. 

அதுக்காக பிள்ளைங்களை தெருவுல விட்டு எங்கயாவது முட்டி மோதிக்கிட்டு வரச்சொல்லுங்கன்னு சொல்லலை... ஆனா வாழ்க்கையில நடக்குற சரிகளுக்காக சந்தோசப்படுற நாம தவறுகளுக்காகவும், எதிர்மறையா நடக்குற நிகழ்வுகளுக்காகவும் வருத்தப்பட்டு ரொம்ப சேஃப்டியா இருக்கேன் பேர்வழின்னு பிள்ளைங்கள வளர்க்கறதுக்குப் பதிலா சாஃப்ட் டாய்ஸ்கள வளர்த்துடாதீங்கன்னுதான் சொல்றேன். விடுமுறை விட்டா பக்கத்து வீட்டு எதிர்வீட்டு நண்பர்கள பிள்ளைங்க தேடிப் போன காலம் எல்லாம் பறிபோய் இப்போ ஆன்ட்ராய்டு போன்களையும், டேப்லட்களையும், நோட்புக்குகளையும், லேப்டாப்புகளையும் பிள்ளைங்க தேட ஆரம்பிச்சுடுச்சுங்க....

ஒரு சிக்னல்ல கார்ல நின்னு நம்மள சுத்திப் பாத்தா சுத்தி நிக்குற பஸ் கார்க்குள்ள எல்லாம் மனுசங்க அவுங்க அவுங்க மொபைல் போன்கள தடவி ஏதேதோ தேடிட்டு இருக்காங்க. வாட்ஸ் அப், பேஸ்புக், வீ சாட்,  வைபர்,  இப்டி எத்தனையோ சோசியல் நெட்வொர்க்கிங்க ஆப்ஸ் எல்லாம்... நாம் தொடர்பு கொண்டுகிட்டு இருக்க மனுசங்கள நேராப்பாக்குற போதும் கூட அவுங்க கூட சரியா பேசாம இந்த நெட்வொர்க் மீடியாவையே நோண்டுற ஒரு புரையோடிப் போன மனோநிலைக்கு நம்மள தள்ளிடுச்சு....

அவசரம் அவசரமா...ஓடிட்டு இருக்க... லேடிஸ் அன்ட் ஜென்ட்டில் மென்... வாரத்துல ஒரு நாளாவது... உங்க இயந்திரத்தனத்துக்கு ஓய்வு கொடுத்துட்டு......, சமூக அக்கறைகளுக்கு விடுமுறை கொடுத்துட்டு.... இந்த பூமி, மனிதர்கள், மரம், ஆறு, குளம், தோட்டம், வானம், நட்சத்திரம்னு, சாப்பாடு, குடும்பநிகழ்வுகளைக் கேட்டறிதல், நண்பர்களுக்கு தொந்தரவில்லாத சந்திப்புகளை ஏற்படுத்திக் கொள்ளுதல், அளாவளாவுதல்... காலாற நடத்தல்னு இருக்கலாம்தானுங்களே....?

நான் இந்தக் கேள்விய உங்களப் பாத்துக் கேக்குற மாதிரி கேட்டிருக்கேன் ஆனா... இந்த கேள்வி எனக்கு நானே கேட்டுக்கிட்ட சம்மட்டியால என்ன அடிக்கிற மாதிரி கேள்வி தானுங்க....!!!!!!


நலம் நலமறிய அவா!



தேவா சுப்பையா...





Comments

//வாட்டர் பேக் //- ரெம்ப வருசமாச்சுண்ணா இந்த வார்த்தைய கேட்டு , படிச்சு ...!

இப்பல்லாம் வெறும் காலோட மண் தரையிலே நடப்பதே செய்யக்கூடாத பாவச்செயலாகிவிட்டது .

மண்ணுக்கும் மனிதருக்குமான உறவு முறிந்து வெகு நாட்களாகி இப்பொழுது மனிதருக்கும் மனிதருக்குமான உறவுகளும் ...
bachu said…
Super Boss. Well said. Good article.
///ஒரு சிக்னல்ல கார்ல நின்னு நம்மள சுத்திப் பாத்தா சுத்தி நிக்குற பஸ் கார்க்குள்ள எல்லாம் மனுசங்க அவுங்க அவுங்க மொபைல் போன்கள தடவி ஏதேதோ தேடிட்டு இருக்காங்க. வாட்ஸ் அப், பேஸ்புக், வீ சாட், வைபர், இப்டி எத்தனையோ சோசியல் நெட்வொர்க்கிங்க ஆப்ஸ் எல்லாம்...நாம் தொடர்பு கொண்டுகிட்டு இருக்க மனுசங்கள நேராப்பாக்குற போதும் கூட அவுங்க கூட சரியா பேசாம இந்த நெட்வொர்க் மீடியாவையே நோண்டுற ஒரு புரையோடிப் போன மனோநிலைக்கு நம்மள தள்ளிடுச்சு...///

உண்மை அண்ணா...
இப்போ மனிதர்களுடன் அளவளாவிய காலம் போய் இயந்திர வாழ்க்கை ஆகிவிட்டது...

உங்கள் எழுத்தில் நானும் சினிமாவுக்குப் போன நாட்களையும் நகர்த்திப் பார்க்க முடிந்தது.
உண்மைதான் தேவா ஓடுறோம் ஓடுறோம் ஒரு இலக்கை நோக்கி ஓடுறோம் அந்த இலக்கை அடைறதுக்குள்ள எத்துணை இழப்புக்களை சந்திக்கின்றோம் அந்த இலக்கை அடைந்த பின்னால் நாம திரும்பி பார்க்கும் போது நாம் நிறைய இழந்திருப்போம் உண்மைதான் தேவா மனிதனுக்கும் மனிதனுக்குமான உறவுகள் மரித்துப்போய் பலகாலங்கள் ஆகிருச்சு ஆன அவனுக்கும் மண்ணுக்கும்மான ஒரே ஒரு உறவைத் தவிர. மனிதனுக்கும் மனிதனுக்கும்மான உறவைத் தவிர மற்றெல்லாவற்றுடனான உறவு இவனுக்குள் வந்ததென்னமோ உண்மைதான் மண்ணோட இவனுக்குண்டான அந்த ஒரு உறவோடு சேரும் வரை...

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல