Skip to main content

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...





பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக  அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி.

இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு  எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலையிலேயே பயணிக்க வேண்டியிருக்கிறது. எஸ். ராமகிருஷ்ணனின் உறுபசி நாவலை இப்படித்தான் வாசித்தேன், தஞ்சை பிரகாஷின் மீனின் சிறகுகளை வாசிக்கும் போதும் இந்த சவால் இருந்தது. கதை சொல்லுவது ஒரு யுத்தி.  அந்த யுத்தியைப் பிடிக்க பிராயத்தனப்படும் புத்திதான் என் பிரச்சினை.

நாவலுக்கு கதையோட்டம் தேவையில்லை கதைப்பின்னல்தான் தேவை. பலவிதமான வாழ்க்கைகள் பல்கிப் பெருகி வாசகன் முன்பு வைக்கப்படவேண்டும் என்பார் ஜெயமோகன். ஓரிதழ்ப்பூ ஒரு ஜோரன பின்னல். என்ன ஒன்று கதைப்பின்னல் மிஸ்டிக்கலாகவே நடக்கிறது. ஓரிதழ்ப்பூவில் யசோதாவும், ரமாவும் மட்டுமே எதார்த்தமான கதாபாத்திரங்கள் அதுவும் இவ்வளவு நவலில் நடப்பதால் ரமா கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார். இல்லெயெனில் அதுவும் பதினாறடி பாய்கிற ஒரு பாத்திரம்தான்.

இவர்கள் இருவரையும் தவிர்த்து மிச்சமிருக்கும் அத்தனை பேரும் காட்டமான கஞ்சா.

அசாதராணமான பாத்திரப்படைப்பாக இருக்கிறார்களே? இவர்கள் எல்லோருமே புனைவின் உச்சமா என்று கேட்டால் சத்தியமாய் கிடையாது. அங்கயற்கன்னியும், மலர்ச்செல்வியும், ரவியும், சாமியும், சங்கமேஸ்வரனும், துர்காவும், அகத்திய முனியும் (அய்யனாரும்) சூப்பர் நிஜங்கள். எல்லோரையும் நான் கடந்து வந்திருக்கிறேன் அல்லது அவர்களில் சிலர் நான் தான். பல அமுதா அக்காக்களோடு வளர்ந்துமிருக்கிறேன்.

சமவெளிமான் என்று அய்யனாரின் ப்ளாக்கில் தனியாய் எழுதிய ஒரு சிறுபகுதியை இந்த நாவலில் அவர் சொருகியிருக்கும் விதம் அலாதியானது. கூடலை இவ்வளவு ரசனையாய் எழுதமுடியுமென்பதே பெரிய விசயம். அதுவும் சங்கமேஸ்வரனும் அங்கயற்கன்னியும் கூடுமிடத்தை வாசிக்கும் போது இதிகாசக்காட்சி போல அந்தச் சூழல் என் மனக்கண் முன் விரிந்தது. கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள் உடைகளில்லாத இரண்டு உடல்கள், ஆள் அரவமற்ற வனம், அடித்துப் பெய்யும் மழை, செம்மண் கரைந்தோடி உடல்களை ஊடுருவி நீராய் கடக்க, சிறு சிறு முட்களும் கற்களும் உருண்டு அவர்களுக்கிடையே ஓட யுகாந்திர இச்சை தீரும்படியான ஒரு கூடல்….ப்ப்ப்ப்பா

காமமென்றால் வெறுமனே அது காமமா என்ன? உடல் பிழிந்து உயிர்பிழிந்து இனிமேல் ஒன்றுமில்லை அவ்வளவுதான் அப்போதே சாகலாம் என்று எண்ணம் ஏற்படுத்தும் ஒரு கூடல். துர்க்காவும் மாமுனியும் கூட இப்படி கூடுகிறார்கள் ஆனால் இந்த குறுநாவலில் வரும் எல்லா காமம் சம்பந்தப்பட்ட இடங்களையும் ஒப்பிட்டால் அங்கயற்கண்ணி சங்கமேஸ்வரன் சேருமிடம்தான் க்ளாஸிக்.

இதுவெல்லாம் சாத்தியமா என்ற ஒரு கேள்வி விளிம்பு நிலை வாசகனுக்கு வரத்தான் செய்யும். ஏன் சாத்தியமானதை மட்டும்தான் எழுதவேண்டுமா? என்ற கேள்வியோடு ஏன் சாத்தியமாயிருக்கக் கூடாது என்று இரண்டு கேள்விகளை எடுத்து முன் போட்டால் முதல் கேள்வியைக் கேட்ட மனம் மண்டியிட்டு அமைதியடையும்.

ஒரு படைப்பை வாசகனாய் மட்டும் வாசித்தறியும் மனோபாவம் கடக்க நிறைய தூரங்களை கடக்கவேண்டியிருக்கிறது. கடந்து வரும் போதுதான் சமூகம்,சூழல், சட்டதிட்டங்கள், ஒழுக்கம் இப்படியான எல்லா கேள்விகளையும் உடைத்து எது சரி என்று நாம் ஒப்பிடும் மனோநிலை மாறி கதைக்கு அது சரி என்று உணரும் நிலையை அடையமுடியும். நீதி நெறிக்கதைகளை மட்டும் எழுதிச் செல்வதல்ல எழுத்தாளனின் வேலை. இந்த உலகம் எப்படியிருக்கிறதோ அதை அப்படியே அவன் படைக்கிறான்.. பிடிக்கிறது பிடிக்கவில்லை இரண்டும் இருப்பதுதான் வாழ்க்கை. இதை ஒன்றாய் பார்க்கும் போது புதிதாய் ஏற்படும் ஒரு பரவசத்தை இந்த குறுநாவல் கொடுக்கிறதா என்றால்….ஆம்.

யாரோடு நான் கூடவேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்வேன் என்கிறாள் துர்கா. ஆணாதிக்க சமூகத்திற்கு பார்ப்பதற்கு அது கொஞ்சம் அல்ல நிறையவே அசூயையாக இருக்கும். இங்கே ஆணாதிக்கச் சமூகமென்பது பெண்களையும் உள்ளடக்கியதுதான். ஒரு கட்டத்தில் ஆணே ஒத்துக் கொண்டாலும் பெண்கள் மல்லுக்கு நிற்பார்கள். கட்டடற்ற சுதந்திரத்தில் கட்டியெழுப்பப்பட்ட ஒரு பாத்திரம்தான் துர்கா. எனக்கு நிறைய துர்க்காக்கள் பரிச்சயம் அமுதா அக்காவைப் போல…

ஒரு மாமுனியை பூக்கட்டுவதெல்லாம் சரிதான் ஆனால் அவரை மனோநிலை சரியில்லாதவராய் சித்தரித்து ஆட்டோவில் ஏன் ஏற்றி வைக்க வேண்டும். இந்த இடத்தில் கொஞ்சம் சினிமாத்தனம் எனக்குத் தெரிந்தது. ஏன் அவர் அகத்திய மாமுனியாகவே இருந்து விட்டுப் போகட்டுமே அதனாலென்ன? அவரை அப்படியே அகத்தீஸ்வரத்துக்கு அனுப்பி வைத்திருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன்.

அதே போல ரமாவும் ரவியும் பேசிக்கொண்டிருக்கும் சில இடங்களில் லேசான தொய்வு ஏற்பட்டதைப் போல உணர்ந்தேன். மற்றபடி லட்சுமி கேரக்டர் எல்லாம் மனதில் ஒட்டவில்லை என்றாலும் கதைப்பின்னலுக்கு அவை எல்லாம் அவசியம்தாம்.

காதாபாத்திரங்கள் எல்லாம் காற்றில் அலைவது போல அலைகிறார்கள். யாரையும் யாரும் கண்ட்ரோல் பண்ணவே முடியாது இந்த அய்யனார் எப்படி எல்லோரையும் போட்டு ஒரு பட்டியில் அடைக்கப் போகிறார் என்று யோசித்துக் கொண்டே வாசித்தேன் ஏனென்றால் எதுவுமே அடங்கிப் போகும் சராசரிகள் அல்ல. அதன் அதன் வாழ்வை வாழ கட்டுப்பாடில்லாமல் இயங்கும் கதாபாத்திரங்கள் என்றாலும் தான் ஒரு சிறந்த நாவலாசிரியன் என்பதை அய்யனார் எல்லோரையும் கட்டுப்படுத்தி ஒரு புள்ளியில் இணைத்து இந்த குறுநாவலை சம்பிராயதமாய் முடிக்கிறார் ஆனாலும் கதை முடியவில்லை.

வாசிக்க வேண்டிய நாவல் என்பதோடு அய்யனார் என்னும் எழுத்தாளர் இன்னும் நிறைய, நிறைய எழுத வேண்டியவர் என்பது என்னுடைய கருத்து. இந்த கார்ப்பரேட் உலகத்தில் மூர்க்கமாய் டார்கெட் நோக்கி நகர்ந்து நகர்ந்து எப்படி எதிராளியை அடிப்பது என்பதில் மூழ்கி ஒரு இயந்திரமாய் இருந்த என்னை இந்த நாவல் விடுவித்திருக்கிறது. உண்மையில் சொன்னால் கஞ்சாவை புகைத்து தள்ளிவிட்டு நானும் சாமியோடு திருவண்ணாமலையில் ஏதோ ஒரு மூலையில் விழுந்து கிடப்பது போன்ற ஒரு பிரம்மை ஏற்பட்டது நாவலை முடிக்கையில்.

சமவெளி, அங்கயற்கன்னியின் கனவில் வரும் புள்ளிமான் அதற்கு மனித முகம், இன்னமும் நாவல் முழுதும் வரும் நிறைய பூக்கள், திருவண்ணாமலை நிலப்பரப்பை கதைக்குள் கொண்டு வந்திருக்கும் பாங்கு என்று நிறைய இருக்கிறது இந்த கதைக்குள் சுவாரஸ்யங்கள். சமுத்திர ஏரிக்கரைக்கு (அப்படி ஒன்று நிஜமாய் இருக்கிறதுதானே?) கூட்டிச் சென்று அங்கயற்கன்னியும் சங்கமேஸ்வரனும் கூடிய இடத்தை நீங்களே என்னிடம் ஒரு தடவை காட்டுங்கள் அய்யனார்…


பேரன்புகளுடன்
தேவா சுப்பையா
ஏப்ரல்’ 14, 2018



Comments

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த