Pages

Thursday, January 10, 2013

சர்ச்சைகளின் நாயகன் கமல்....!

சர்ச்சைகளுக்குள் சிக்கிக் கொள்வது ஒன்றும் கமலுக்குப் புதிது அல்ல. அவர் வாழ்க்கையை மெளனமாய் புரட்டிப் பார்த்தால் அவர் உலகநாயகனோ இல்லையோ ஆனால் சர்ச்சைகளின் நாயகன் என்பது தெளிவாய் புரியும். அறிவு ஜீவியாய் நாம் இருக்கலாம் ஆனால் இந்த சமூகத்தினூடே எப்படி நகர்ந்து செல்வது என்ற சூட்சுமமும் தெரிந்திருக்க வேண்டும். ஆகச்சிறந்த படைப்பாளியாய் இருக்கும் கமலின் பிரச்சினை இந்த சமூகத்தின் மனோநிலை என்ன என்று தெரிந்து கொள்ளாமல் நகர்ந்து கொண்டே இருப்பதுதான்.

மேடை நாடக பாரம்பரியத்திலிருந்து சினிமாவை எட்டிப் பிடித்திருந்த சிவாஜி போன்ற ஜாம்பவான்களின் நடிப்பு என்பது நாடக கலாச்சாரத்தை ஒட்டியே மெலெழும்பி நின்றது. பாடல்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு திரைப்படங்கள் கலாச்சாரம் மெல்ல மெல்ல உடைந்து வசன அடிப்படையிலான திரைச் சிற்பங்களாக மாறியதும் காலத்தின் கட்டாயமாகிப் போனது. அப்போதெல்லாம் சிவாஜி திரையில் அழும் போது அடா.. அடா. என்ன நடிப்புடா இது...!!!! என்று திரையில் இருந்து தன்னை வித்தியாசப்படுத்திக் கொண்டு காட்சிகளுக்கு வெளியே நின்றுதான் தமிழ் திரைப்பட ரசிகர்கள் கூட்டம் விசிலடித்தது.

கட்டபொம்மன் ஒரு போதும் சிவாஜியைப் போல பேசியிருந்திருக்க மாட்டார் என்று தெளிவாய் தெரிந்தாலும் திரையில் காணும் தங்களின் அபிமான நட்சத்திரங்களின் அரிதாரத்தின் அழுத்தம் இயல்பை விட எப்போதும் கூடுதலாய் இருக்கவேண்டும் என்று நினைத்த ஒரு கூட்டு மனோநிலை கொண்ட மனிதர்களைக் கொண்ட காலம் அது.

பாலச்சந்தர் சாரும், பாரதிராஜா சாரும் ஒன்று சேர்ந்து அரிதார அழுத்தங்கள் கூடிய திரைப்படங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க, நான்கு சுவர்களுக்குள் சுழன்று கொண்டிருந்த கேமராக்கள் வீதிகளை எட்டிபார்க்க ஆரம்பித்தன. ஒவ்வொரு குடும்ப வாழ்க்கையிலும், உறவுகளிலும் இருக்கும் சிக்கல்களை, முரண் என்று சமூகம் நம்பிக் கொண்டிருக்கும் விசயங்களை, மாற்றுக் கோணங்களால் காட்சிப்படுத்தி அட இப்படி எல்லாம் நடக்குமா என்ன? இப்படியும் இருக்குமா என்ன? என்று உளவியல் ரீதியான திரப்படங்களை எடுத்து நமது புருவங்களை உயரவைத்த  பிரம்மா பாலசந்தர் சார் என்றால்...

கலாச்சராம், மண், பாரம்பரியம், கிராமியம் என்று தமிழகத்தின் தென்கோடி கிராமங்களுக்குள் எல்லாம் சென்று குஞ்சரம் ஆயாவையும், மாரியம்மாவையும், பெரியகண்ணுத் தேவரையும், முத்து பாண்டியையும், செம்மண் கரடு முரடு நிலங்களையும், தண்டட்டி அணிந்த அப்பத்தாக்களையும், அன்பு, பாசம், வீரம், குரூரம், நியாயம், சிறு தெய்வங்களுக்கான கொண்டாட்டங்கள், என்று கிராமியத்தை திரைக்குள் இழுத்து வந்து போட்ட பெருமை பாரதிராஜா சாரைத்தான் சேரும்....

இரண்டு ஜாம்பவான்களுக்கும் இளையராஜா என்ற மேதை தோள் கொடுக்க, தமிழ் சினிமா எதார்த்த உலகத்துக்குள் காலடி எடுத்து வைத்த போது ஜனித்த குழந்தைகள்தான் ரஜினி, கமல் என்னும் இரு பிரமாண்டங்கள். திரையை மிரட்டும் வில்லன் வேடம், பிறகு குணச்சித்திரம், கதாநாயகன் என்று பயணித்துக்கொண்டிருந்த ரஜினியின் ஸ்டைல் ரசிகர்களுப் பிடித்து போக தனக்கான பயணத்தை முழுவேகத்தில் தனக்கென்ற ஒரு பாணியில் ரஜினி தொடர....

இயல்பிலேயே புத்திசாலியான கமலுக்கு நடிப்பு என்பது எதார்த்தமாய் வந்து ஒட்டிக் கொள்ள அவரது பாரம்பரியமும், அதற்கு அவர் பிறந்த மண்ணும் உதவ கமலஹாசன் எதார்த்த நடிப்பில் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்தார். சிவாஜியோடு கமலை ஒப்பிடுவது தவறு என்று நான் அடிக்கடி கூறி இருக்கிறேன். சிவாஜியின் களம் வேறு, ரசிகர்கள் வேறு, காலகட்டம் வேறு....அவர் ஒரு பரிமாணத்தின் உச்ச நாயகன் என்றால் கமலஹாசன் வேறொரு பரிமாணத்தின் உச்ச நாயகன். சிவாஜியின் நடிப்பை நல்ல நடிப்பு என்று கைதட்டி பார்க்க முடியுமென்றால்...

கமலின் நடிப்போடு சேர்ந்து நாமும் அழுது, சிரித்து, வலிகளை சுமந்த படியேதான் அந்த திரைப்படம் முழுதும் சுற்றித் திரியவேண்டும். படைப்பின் மூலத்திலிருந்து புதிது புதிதாய் சிந்தித்து அதை திரையில் காட்சிப்படுத்த துடிக்கும் ஒரு மிகப்பெரிய ராட்சசன் இந்த கமலஹாசன். சினிமாவை சுவாசமாகக் கொண்டு நகர்ந்து கொண்டிருக்கும் கமலஹாசன் வணிக ரீதியாய் கொடுத்த வெற்றிப்படங்கள் கூட அவரின் திருப்தியின்மையோடு வேறொரு சினிமாவின் புதிய முயற்சிக்காய் எடுக்கப்பட்டதாகத்தான் இருக்கும்.

கமலை புரிந்து கொள்ளுதல் கடினம். அவனின் சொந்த தயாரிப்புகளையும், கதைகளையும் விளங்கி அதன் ஆழத்தில் ஒளிந்து கிடக்கும் மெளனத்தை வடிகட்டி பிரித்தறிதல் சாமனியரால் இயலாத காரியம். இந்த இடத்தில்தான் இந்த பிரமாண்டக் கலைஞன் பலமுறை தோற்றுப் போயிருக்கிறான். குணா படம் வந்த சமயத்தில்தான் ரஜினியின் தளபதியும் வெளி வந்தது. பட்டுக்கோட்டை அண்ண பூர்ணா தியேட்டரில் நாற்பது நாட்களுக்கும் மேலாக தளபதி வெற்றி முழக்கமிட்டுக் கொண்டிருக்க....

அதே ஊரில் சாதாரண டீலக்ஸ் தியேட்டரான முருகையாவில் குணா 25வது நாளில் தூக்கி எறியப்பட்டது. குணா நல்ல படமா..? இல்லையா...? என்ற கேள்விக்கான பதிலை உங்களிடமே விட்டு விடுகிறேன். கமர்சியல் ஹிட் படங்களோடு ஒரு வேளை தொடர்ச்சியாக தன்னை இணைத்துக் கொண்டு கமல் பயணித்திருப்பாரேயானால் பொருளாதார ரீதியாக தன்னை பாதுகாப்பாய் வைத்துக் கொண்டிருக்க முடியும்....

கமலின் பிளஸ் மற்றும் மைனஸ் இரண்டுமே அவன் ஒரு ஜீனியஸ் என்ற ஒரு அடைப்புக்குள் நின்று கொள்கிறது. திருமண பந்தமாகட்டும், எதார்த்த வாழ்க்கையாகட்டும், சினிமாவாகட்டும், அவன் யாருக்குமே இது வரையில் பயந்தது கிடையாது. நான் இப்படி எடுக்கிறேன் என்னை பிடித்திருந்தால் பாருங்கள் இல்லையென்றால் போய்க்கொண்டே இருங்கள் என் லாபத்தையும் நஷ்டத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று நகர்ந்து கொண்டிருந்த.....

கமலஹாசனின் முகத்தில் வாழ்க்கை பய ரேகையை தற்போது படரவிட்டிருப்பது ஒன்றும் புதிய விசயம் அல்ல. காலம் என்னும் அரக்கன் காலம் காலமாய் கலைஞர்களுக்கும், படைப்பாளிகளுக்கும், புதியதை உருவாக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் வழக்கமாய் கொடுக்கும் பரிசுதான் அது.

காலம் கொடுத்திருக்கும் பரிசினை சுமந்து கொண்டு இதோ இந்த 50+ல் கமல்ஹாசன் வர்த்தகம் பேச பொதுவெளிக்கு வந்திருக்கிறார். தன்னை ஒரு கலைஞனாகவே வரித்துக் கொண்டு லாப நஷ்டக் கணக்குப் போட்டுப்பார்க்காமல் நகர்ந்த அவரின் வாழ்க்கை இன்று வணிகம் பேசுகிறது. நான் வியாபாரி என்கிறது. கமலஹாசனின் முதுமைத் தனிமை அவரின் மீது நிழலாய் விழ ஆரம்பித்திருப்பதோடு அவரின் பிள்ளைகள் பற்றிய எதிர்காலம் பற்றியும் பலமாய் யோசிக்க வைத்திருக்கிறது.

அவரின் ஜீன்களில் பதிந்திருக்கும் ஞானம், சமகாலச் சினிமாவை நவீன தொழில் நுட்பத்தோடு கைகோர்த்துச் செல்ல வேண்டும் என்று சொல்ல...புதியதை சொன்னால் என்ன பதிலை வரலாறு எப்போது சொல்லுமோ அதே பதிலை இப்போது கமலுக்கும் சொல்லி இருக்கிறது....

கமல் தற்போது தடுமாறி இருக்கிறார். இந்த சமூகம் அந்த கலைஞனோடு கைகோர்க்காமல் தடுமாற வைத்திருக்கிறது. தனி மனிதனாய் சினிமாவில் சம்பாதித்த அத்தனை பணத்தையும் கொட்டி 90 கோடி செலவில் விசுவரூபத்தை அவர் உருவாக்கி  வெளியிடும் போது வணிகரீதியாய் டி.டி.எச்சிலும் வெளியிட்டால் லாபம் கிடைப்பதோடு எதிர்கால சினிமா என்பது இனிமேல் இப்படித்தான் இருக்கும் என்று கோடிட்டுக் காட்ட நினைத்த அந்தக் கலைஞனை தியேட்டர் அதிபர்கள் என்னும் அதிகார மையம் மொத்தமாய் ஓரம்கட்டி எதிர்ப்பை தெரிவிக்க....

90 கோடியில் எடுத்த ஒரு திரைப்படம் வெறும் 45 தியேட்டர்களில் தமிழகமெங்கும் வெளியாகும் சூழல் உருவானது. கமல் தடுமாறிப் போனார், டி.டி.எச் தொழில் நுட்பத்தை பயன் படுத்தி திரைப்படம் வெளியாகும்  முன்பே வீட்டில் காணலாம் என்ற அவரின் புதுவழி பொதுவழியாக மாறாமல் முள் கம்பிகள் வைத்து இப்போது அடைக்கப்பட்டிருக்கிறது.

தனது பொருளாதார சூழலை மையப்படுத்தி யோசித்திருக்கும் கமலஹாசன் தியேட்டர் அதிபர்களின் வேண்டுகோளுக்கு பணிந்திருக்கிறார். இது பணிவு இல்லை, இதுவரையில் கமல் பின்பற்றாத புத்திசாலித்தனம். டி.டி.எச்சில் பணம் கட்டியவர்களுக்கான பதிலை கமலும் அவருக்கு பணம் கொடுத்தவர்களும் பார்த்துக் கொள்வார்கள்....இதைப் பற்றி விவாதித்தால் கட்டுரையின் இலக்கு மாறிப் போகும்....!

ஆனால்..

நீங்களும் நானும் டி.டி.எச்சில் முதல்நாளே விசுவரூபத்தைப் பார்க்காமல் போனதற்கு காரணம் கமல் அல்ல....!!!!!!தியேட்டர் அதிபர்கள் என்னும் ஒரு கூட்டமும்..., புதியதை  ஏற்க முடியாத பழமை முடிச்சுகள் நிறைந்த புத்திகளுமே இதற்கு காரணம்....!

தற்போது ஜனவரி 25 ஆம் தேதி தமிழகமெங்கும் 500 தியேட்டர்களில் விசுவரூபம் திரையிடப்படும் என்று கமல் அறிவித்திருக்கிறார்....! ஆமாம், அது அவருடைய படைப்பு. அவர் உருவாக்கியது. என்ன செய்ய வேண்டும் என்று  அவர்தான் தீர்மானிக்க வேண்டும்.. இப்போது தீர்மானித்திருக்கிறார்..!

ஹேட்ஸ் அப் கமல் .....!!!!!!!!

உங்களின் புது வழி ஒரு நாள் சர்வ நிச்சமாய் பொதுவழியாகும்......அப்போது காலம் உங்களின் பெயரை உரக்கச் சொல்லும்.


தேவா. S4 comments:

semmalai akash said...

இப்படிதான் எதையாவது சொல்லிட்டு எப்பொழுதும் திண்டாடுகிறார். காசு கொடுத்தவர்கள் பாடுதான் ரொம்ப கஷ்டம்.

கமல் பற்றி அருமையான அலசல் பாராட்டுகள்.

திவாண்ணா said...


கலைஞன் வியாபாரியாக மாறும்போது பல பிரச்சினைகளெழும். எழுகிறது. யாரையும் குறை சொல்வதற்கில்லை.

நிகழ்காலத்தில்... said...

ஆயிரம் ரூபாய் கட்டியவர்களில் பெரும்பான்மையினர் கமலின் ரசிகராக இருக்க வாய்ப்புகள் அதிகம்..

புரிதலோடு ஏற்றுக்கொண்டு பொறுத்துக்கொள்ளலாம். இதற்கான மாற்றினை கமல் செய்வார்.

90 கோடி முதல் போட்டவர் அதை திருப்பி எடுக்கத் திணறுவதைப் பார்க்கிறேன்,.

திருட்டு விசிடிக்கு தியேட்டர்களே ஏற்பாடு செய்வார்கள். கமலை பழிவாங்க இன்னும் நடவடிக்கை தொடங்கும்.

இப்போது கமலுக்கு தேவை அவர் பக்கத்தில் ஆட்களே இல்லாத நிலை மாற வேண்டும்.அவரோடு இருப்போம்.ஆதரவு தெரிவிப்போம்

SASIKUMAR said...

காலம் என்னும் அரக்கன் காலம் காலமாய் கலைஞர்களுக்கும், படைப்பாளிகளுக்கும், புதியதை உருவாக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் வழக்கமாய் கொடுக்கும் பரிசுதான் அது. - GOOD DHEVA