Pages

Saturday, February 26, 2011

மாயா....!

அது ஒரு நீண்ட கனவு
நான் மீண்டெழுந்து
பகலின் உச்சி தொட்ட பின்னும்
நிஜமாய் தொடரும் ...
அது ஒரு பொய்யா? இல்லை...
பொய்யில் நான் கண்ட நிஜமா?

என் உடல் எரியூட்டப்படுகிறது
நானே பார்க்கிறேன்...
உறவுகளின் கண்ணீர்கள்
அவசர யுகத்தில் அனிச்சையாய்
தோன்றி மனங்களின்..
எதார்த்த சூட்டில் பஸ்பமாகின்றன...!

காற்று வேகமாக வீசுகிறது
என் உடலின் பக்கங்களில்
பற்றிப் பரவுகிறது தீ...
ஒரு திருட்டுத்தனமான ருசித்தலில்
சுகம் காணும் மனிதன்போல
என்னை அரித்தே போடுகிறது அது...!

வெறித்தபடி நான் பார்க்க....
உறவுகள் எல்லாம் போயே விட்டனர்...
சம்பிரதாயச் சடங்குகளில்...
அவர்களின் கவலையை குளப்பி
அடுத்த நகர்விற்கு செல்லும்...
பரபரப்பில் நகர்ந்தே போயின
அந்த மானுட தலைகள்...!

நான் எரிகிறேன்...நானே பார்க்கிறேன்...
அதோ...என் கண்களைத்...
தடவுகிறது காந்தல் தீ...
காதலை மட்டுமா சுமந்தது அவை
ஏதேதோ கனவுகளையும் தானே?

தத்துவங்கள் சேமித்த மூளை
தடுமாற்றமின்றி விருந்தாய்ப் போனது
விறகிலிருந்து ஜனித்த அக்னிக்கு..!
மணமறியும் குணமறிந்த நாசிகளும்
ஓராயிரம் விவாதங்கள் புரிந்த நாவும்
மறுபேச்சின்றி மண்டியிட்டு விட்டன
ஜுவாலைகளின் நாக்குகளிடம்...!

எரியும் என் சிதையோடு
என்னை மறந்தே போனது உலகம்..
கருகும் என் உடலோடு
கலைந்தே போனது என் வாழ்க்கை...!

அலைதலாய் எல்லாம் கவனிக்கிறேன்...
யாரோ சிரிக்கிறார்கள்..
யாரோ இருவர் கூச்சலிடுகிறார்கள்
வேறு யாரோ அடித்துக் கொள்கிறார்கள்
எப்போதும் மரணம் நிகழ்கிறது
காதலைச் சொல்லி காமமும்...
காமத்தைச் சொல்லி காதலும்
ஜனிப்பித்தலின் விதிகளாகின்றன....!

ஒரு தெரு நாய் தன் துணையிடம்
வால் குழைத்து நெருங்குகிறது
செடிகள் பூக்கின்றன; காய்க்கின்றன..
வேகமாய் காற்றடிக்கிறது..
ஒரு பட்ட மரம் வேறோடு சாய்கிறது;
ஒரு பச்சை மரம்...
கண்ணடித்து சிரிக்கிறது...!

எப்போதும் நகரும் ஏதோ ஒன்றிற்கு...
யாருமே தேவையில்லை என்றுதான்
சப்தமாய் அங்கு படர்ந்திருந்த
மெளனம் சொன்னது...!

ஆமாம்...
அது ஒரு நீண்ட கனவு
நான் மீண்டெழுந்து
பகலின் உச்சி தொட்ட பின்னும்
நிஜமாய் தொடரும் ...
அது ஒரு பொய்யா? இல்லை...
பொய்யில் நான் கண்ட நிஜமா?

தேவா. S

7 comments:

வினோ said...

அண்ணா, கவிதை என்ற வகையில் அருமை...

அதன் வழி, கரு என்ற வகையில் நாம் கண்டிப்பாக பேசுவோம்...

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ரொம்ப ஆழமான.. மனதைத் தொடும்/சுடும் ஆத்மார்த்தமான வரிகள்...

கவிதை காட்சியாக
கண்களில் விரிந்தது..

ஜனிக்கும் ஜீவன் மரிக்கும் நேரம்
சகலமும் கண்முன்
தோன்றி மறைவது போல் உணர்வு..!

...கவிதைக்கு நன்றி :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

கவிதைக்கு ஏற்ற பொருத்தமான படத்தேர்வு :)

Kousalya said...

இது ஒரு நீண்ட கனவு என்றாலும் வாசிக்கும் போது கற்பனையில் கண்ட காட்சிகள் மனதை கீறி பார்க்க தவறவில்லை.

இதுதான் யதார்த்தம் என்று அறிவு சொன்னாலும், அலையும் மனதிற்கு தெரிவதில்லை எல்லாம் மாயை என்று !

தலைப்பு, படம் இரண்டும் மிக பொருத்தம்.

படிப்பவர்களையும் கனவு காண (கற்பனை) வைத்துவிட்டது பதிவு.

அமைதிச்சாரல் said...

யுகாந்திரங்களாக தொடரும் நிகழ்வுகள்.. அருமையான கவிதை.

சாமீ அழகப்பன் said...

யார் நீங்கள்.நீங்கள் ஞானியா!!! இல்லை காதலில் தோல்வியுற்ற ஒரு தேவதாசா### இருவரும் இப்படியேதான் பேசுவார்கள்///மன்னிக்கவும்///நிறைய நண்பர்களின் ஆலோசனைப்படி கருத்துக்கள் படிமம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கட்டுரை சம்பந்தமான கருத்துக்களும், புதிய கருத்துக்களும், விமர்சனங்களும் மட்டும் வரவேற்கப்படுகின்றனநன்றாக இருக்கிறது என்று வாழ்த்த விரும்பும் நண்பர்களின் வாழ்த்துக்களை மனதார ஏற்றுக் கொள்கிறேன் அதற்காக ஒரு கருத்துரை இட வேண்டாமென்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.///இப்படிப்பட்ட இரு வெறு விதங்களை இணைக்கும் விதத்தில் உள்ளது உங்கள் பதிவு.தெளிவுபடுத்துங்கள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
http://machamuni.blogspot.com/

ஹேமா said...

தேவா...மனதின் ஏவல்கள் வார்த்தைகளாகிப் பின் கனவுபோல !