Pages

Wednesday, February 23, 2011

சும்மா....!
அது ஒரு மாலை நேரம். என்னோடு நான் மட்டுமிருந்தேன். என் உலகத் தொடர்புகள் எல்லாம் அறுத்தெறிந்து விட்டு வாரமெல்லாம் காத்திருந்து நான் சும்மா இருப்பதற்கென்றே நேரம் ஒதுக்கி அந்த அற்புத கணத்தை நான் நானாக இருந்து என் சுவாசத்தை ஆழமாய் ஊன்றி கவனித்து தளர்வான நிலையில் அமர்ந்திருந்தேன். பொதுவாக என்னுடைய அந்த தருணம் பற்றி வீட்டில் உள்ள அனைவருக்குமே தெரியுமாதலால் அவசரமான காரியங்களாக இருந்தால் மட்டுமே என்னை உலகுக்குள் இழுப்பார்கள்.

எனது 6 வேலை நாட்களிலும் என்னுள் ஏற்றி வைத்த புழுதிகளை கழுவிக் கரைய எனக்கு இப்படிப்பட்ட தனிமை அவசியமாகிறது என்பது யாருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. வழக்கப்படி வாரமெல்லாம் நான் காத்திருந்து ஆசையாய் என்னை நான் எதிர்கொள்ளும ஞாயிற்றுக் கிழமையின் மாலை எனக்கு எப்போதும் வரப்பிரசாதம்தான்.

வழக்கப்படி நான் அமர்ந்திருந்த அந்த ஒரு ஞாயிறின் 5 மணி மாலையில் என்னுடைய கை பேசி இடைவிடாது சிணுங்குவதாக கூறி என்னிடம் கொடுக்கப்பட்டது. அழைப்பில் ஒரு நெருங்கிய நண்பர் இருந்தார்....! ஏதோ அவசரம் என்று எண்ணி அழைப்பினை அனுமதிக்க காரணம் அவரின் 7வது அழைப்பாய் அது இருந்ததுதான்.

என்ன ஏதும் அவசரமா? என்னுடைய தலையீடும் உதவியும் அவசியமா? என்று பதறிப்போய் நான் கேட்டதற்கு மறுமுனையில் வந்த பதில் என்னை ஏமாற்றத்துக்குள்ளாக்கியது.

" இல்லை...இல்லை ஒண்னும் இல்லை நான் சும்மாதான்... கூப்பிட்டேன் ...! அப்புறம் வேற என்ன சேதி சொல்லு..." என்று என்னிடம் சாவகாசமாய் கேட்க....

நான் என்னிடம் தற்போதைக்கு உங்களுக்கு பகிர செய்தி ஒன்றுமில்லை. தங்களிடமும் வேறு அவசரமான செய்தி இல்லை என்றால் நான் பிறகு அழைக்கவா?. ... என்று கேட்டேன். நண்பர் சொன்னார்..." ஓ. சரி சரி...இல்லை நான் இப்போது ஒரு சினிமா நட்சத்திரங்களின் ஷோ ஒன்றினைக் காணச் செல்கிறேன். என்னிடம் இன்னுமொரு டிக்கெட் இருக்கிறது ஆனால் கூட வர ஆளில்லை அதுதான் உன்னை நான் அழைத்துச் செல்லலாம் என்று நினைத்தேன்" என்று சொன்னார்.

என்னால் வர இயலாது நீங்கள் சென்று வாருங்கள் பிறிதொரு சமயம் பார்க்கலாம் என்று மறுத்தேன். நண்பர் விடுவாதாயில்லை... "இப்போ நீ என்ன பண்ற? வந்தா என்ன? என்று கேட்டார். நான் சொன்னேன்..நான் எதுவும் செய்யவில்லை... சும்மாதான் இருக்கிறேன் என்று.....!

நண்பருக்கு கோபம் உச்சத்தில் போய்...."ஏண்டா சும்மாதானே இருக்க வெட்டியா.. அப்போ வரவேண்டியதுதானே? வேற வேலை இருந்தா சரி....வாடா பேசாம..." என்று நெருக்கத்தில் இருக்கும் உரிமையைத் தேவையில்லாத இடத்தில் பிரயோகம் செய்தார்.

நான் அமைதியாக சொன்னேன்...." இல்லை நண்பரே... நான் இப்படி சும்மா இருக்கவேண்டும் என்று நேரம் ஒதுக்ககி வாரமெல்லாம் காத்திருந்து சும்மா இருக்கிறேன். நான் சும்மா இருப்பது சும்மா அல்ல...ஆனால் திட்டமிட்டு சும்மா இருப்பதற்காகவே சும்மா இருக்கிறேன். இப்போ நான் சும்மா இருக்க வேண்டும்..அதனால் வர இயலாது..." தீர்மானமாகவே சொன்னேன்...!

உன்னை மாதிரி ஒரு அராத்து பையன பார்த்தது இல்லடா...ன்னு சொல்லி விட்டு நண்பர் தொடர்பிலிருந்து சென்று விட்டார்.

அவர் கோபம் கொண்டிருக்கலாம், கொள்ளாமல் இருக்கலாம். அது பற்றி நான் அக்கறை கொள்ளப்போவது இல்லை. என் செயல் சரியானதா? தவறானதா? என்று எனக்கு மிக நன்றாகவே தெரியும். அதனால் அடுத்தவரின் மனது எங்கெல்லாம் பயணிக்கும் அல்லது என்னவெல்லாம் தீர்மானிக்கும் என்பது பற்றி எனக்கு கவலையில்லை. எனது மூளை என்னைப் பற்றிய தீர்மானங்களை எடுக்க எப்போதும் தயங்குவதில்லை ஆனால் அடுத்தவரைப் பற்றி அனுமானத்துக்கு வருதல் என்பது பல நிலைகள் தாண்டிதான் சராசரி மனிதர்களுக்கு வரும்.

சராசரி மனிதர்கள் என்று நான் சொன்னது எப்போதும் புறத்தில் எண்ண ஓட்டங்கள் மிகுந்திருப்பவர்களையும், தன்னை தான் என்று எண்ணுபவர்களையும்தான். அட...தெளிவானா ஒரு குழப்ப நிலைக்கு கொண்டு வந்துவிட்டேன் என்று நினைக்கிறேன்.

தன்னைத் தான் என்றுதானே எண்ண முடியும்?

இது என்ன அதிசமாய் சொல்றீங்க? அப்டீன்னு கேக்குறீங்களா? அப்படி நினைக்கிறது சராசரியாய் நமக்குள் இருக்கும் ஒரு எண்ணம்தான் ஆனால் அதைக் கடந்து தன்னை தானாய் மட்டும் கொள்ளாமல் அடுத்தவராயும் கற்பனை...(நல்லா கவனிங்க... கற்பனை) செய்து பார்க்கும் பொழுதில் ஆரம்பத்தில் அது ஒரு விளையாட்டாய் தோன்றும். நாள் ஆக ஆக... இந்த பயிற்சி கற்பனை தாண்டி ஒரு எதார்த்தத்துக்குள் வந்து விடும்.

அப்படிப்பட்ட ஒரு நிலையில் நாமாய் நாமிருந்து பார்க்கும் போது தோன்றாத அடுத்தவரின் நியாயங்களும் முரண்களும், அவர்களாய் நாம் பாவித்து பார்க்கும் போது தெளிவாய் புரியும். அப்போது எடுக்கும் அடுத்தவரைப் பற்றிய அனுமானங்கள் என்பவை நிஜத்தில் அனுமானங்கள் அல்ல...அவையே சத்தியம். இது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்று கூறும் அதே நேரத்தில் அவ்வளவு கஷ்டமும் இல்லை என்றுதான் சொல்வேன்.

எதிராளியின் வயது, அனுபவம், சூழல், குடும்ப பின்னணி, வார்த்தைகளின் வீச்சு, வார்த்தைகளை உச்சரிக்கும் போது கொடுக்கும் ஏற்ற இறக்கம், அப்போது ஏற்படும் முக மாற்றம், பேசும் போது ஏற்படும் முக பாவங்கள், உதடுகளின் துடிப்பு, காதுகளின் நிற மாற்றம், கண்களின் அலைதல், புருவங்களின் நெறிப்பு, கண்களின் நிறம், சுவாசிக்கும் வேகம், நிற்கும் அல்லது அமர்ந்திருக்கும் பாவம், கைகளின் பாவம், கால்களின் அமைப்பு......

இபடி கூறிக் கொண்டே போகலாம். இப்படி எல்லாவற்றையும் சொடுக்குப் போடும் நேரத்தில் கூட்டிக் கழிக்க முடியும் உங்களால் என்றால் எதிராளியாய் நீங்கள் மாறுவது கண நேரத்தில் நடந்தேறிவிடும். அவர்களின் வலியையும், சந்தோசத்தையும், தேவைகளையும், முரண்களையும் நாம் உணரமுடியும். அப்போதுதான் அவர்களின் கர்வமும், சாந்தமும், சோகமும் நமக்குப் பிடிபடும்.

சாம வேதத்தின் மகா வாக்கியமான " தத்துவமசி - நீ அதுவாக உளாய்' " இதுதான் நான் மேலே சொன்ன எல்லாவற்றுக்கும் கருப்பொருள்.

பெரும்பாலும் நான், என்ன செய்தேன், நான் என்ன சொல்வேன், எனது கருத்து என்ன, என்று எப்போதும் உலக பிரச்சினைகளுக்கு எல்லாம் தன்னை முன்னிலைப்படுத்திதான் மனித மனம் சிந்திக்கும். இது சராசரி ஆனால் பிரச்சினையை உங்களின் கண்ணோட்டத்தில் பார்த்த பின் சம்பந்தப்பட்டவர்களின் கண்ணோட்டத்திலும் பாருங்கள். நம்மை ஆராயும் அதே தருணத்தில் சூழலையும் சூழல் சார்ந்த மனிதர்களையும் பாருங்கள்.

கட்டுரைகளையும், கவிதைகளையும் செய்யும் ஒரு படைப்பாளியின் மூளையில் எங்கே இருந்து உதித்தது இவையெல்லாம்?அவனின் கோணம் என்னாவாயிருக்கும் என்றும் யோசித்துப் பாருங்கள். நமது கருத்துக்கள்தான் நமக்குத் தெரியுமே? கொஞ்சம் இதையும் விளையாட்டாய் செய்து பாருங்கள்.

உங்களின் சூழல் இதமாகும்.

இதை விடுத்து நமது மூளைகள் படைப்பாளியின் படைப்பைப் பற்றி சிந்திக்காமல் படைப்பாளியின் சொந்த விருப்பு வெறுப்புகளைப் பற்றியும் ஆராய்ந்து விமர்சிக்கும் ஆனால் ஒரு விசயம்.... அப்படி விமர்சிக்கும் முன்பு நாம் விமர்சிக்க தகுதியான நிலை கொண்ட பார்வை உடையவர்கள்தானா? மேலும் நாம் சொல்வது நமக்குப் பட்ட உண்மையா அல்லது அதுதான் பொதுவான உண்மையா? என்ற கேள்வியோடு சேர்த்து இதை நான் சொல்வதற்கு அவசியம் உண்டா? என்ற கிளைக் கேள்விகளும் அவசியம்....

ம்ம்ம்ம் இது என்னுடைய நேரம்...நான் சும்மா இருக்கப்போகிறேன். இந்த சும்மா இருத்தல் என்னை நான் என்றெண்ணும் நிலையை சும்மா இருக்கச் செய்து வெவ்வேறு பொருளாய், பொருளற்றதாய் என்னை இயக்கும் நேரம்!

அதோ எந்த நிலாவாய் நான் இருக்கப் போகிறேன்...

நான்...
நிலா....
நான்....!


தேவா. S11 comments:

கவிதை காதலன் said...

தனிமைக்கு நீங்கள் சொல்லி இருக்கும் வர்ணனை "அட" என்று சொல்ல வைக்கிறது..

Ramani said...

"சும்மா இருத்தலே சுகம்" என்ற
பாடலின் விளக்கவுரை போல்
மிகத் தெளிவான படைப்பு.
அறியவும்,புரியவும் எழுதுதலை விட
உணர எழுதுதலே சிறப்பானது.
அதை மிக இயல்பாக செய்து போகிறீர்கள்.
தொடர வாழ்த்தி...அன்புடன்

dheva said...

நன்றிங்க ரமணி சார்...! உங்களுன் ஈடுபாடும் ஆழ்ந்த வாசிப்பும் என்னுள் உந்து சக்தியாய் திகழ்கிறது என்பது சத்தியம்!

எஸ்.கே said...

சும்மா இருக்கும் பல தருணங்கள்தான் நமக்குள்ளே ஏதோ ஒரு விதையை தூவுகின்றன. பின் அந்த தருணம் சும்மா இருக்க முடியாமலே முடிகின்றன!

Sankar said...

படைப்பாளியின் கண்களின் வழியாக படைப்பை பார்த்தலின் அவசியம் சிறப்பாக கூறப்பட்டுள்ளது. நன்றி :)

Chitra said...

நான் அமைதியாக சொன்னேன்...." இல்லை நண்பரே... நான் இப்படி சும்மா இருக்கவேண்டும் என்று நேரம் ஒதுக்ககி வாரமெல்லாம் காத்திருந்து சும்மா இருக்கிறேன். நான் சும்மா இருப்பது சும்மா அல்ல...ஆனால் திட்டமிட்டு சும்மா இருப்பதற்காகவே சும்மா இருக்கிறேன். இப்போ நான் சும்மா இருக்க வேண்டும்..அதனால் வர இயலாது..." தீர்மானமாகவே சொன்னேன்...!


.......
சும்மா சொல்ல கூடாது.... நீங்கள் சும்மா சொன்னாலும், சும்மா - உங்கள் கருத்துக்களை, இந்த "சும்மா" பதிவில், பின்னி எடுத்துட்டீங்க.
நானும், முன்பு ஒரு முறை, வேறு ஒரு பார்வையில், சும்மா ஒரு பதிவு, "சும்மாவை" வைத்து போட்டது, சும்மா நினைவுக்கு வந்தது. :-)

http://konjamvettipechu.blogspot.com/2010/04/blog-post_28.html

வினோ said...

அண்ணா, நீங்கள் சொல்லும் தருணங்கள் வாழ்வின் அர்த்தம் உள்ள சில நேரங்கள்... பலருக்கு வாய்ப்பதில்லை....

மங்குனி அமைச்சர் said...

good one

Radha said...

//தத்துவமசி - நீ அதுவாக உளாய் //
"தத் த்வம் அஸி" - சபரி மலை பதினெட்டு படிகள் மேலே ஏறி சன்னிதானத்தின் முகப்பில் இந்த மகா வாக்கியத்தை பார்த்த ஞாபகம் உள்ளது.

நிலை நிலா மனம்
நிலாவினில் நிலவும்
பேரமைதி நிலைபெற
ஆரமுத கிரணங்கள்
வெள்ளி பொழியும் வெளியே
உள்ளம் பொழியும் உள்ளே
சத்தியம் சுகம்
சந்தேகம் இல்லை ! :-)

Radha said...

இதே தலைப்பில்...மகாகவி பாரதியார் எழுதிய கதை - சும்மா .
dheva,
if u have already read this story kindly ignore... i am just trying to share my joy with other first time readers... :-)

VELU.G said...

சும்மா இருப்பது மிகக் கடினமான வேலை தேவா.

நீங்கள் சும்மா இருப்பது என்று சொன்னது எண்ணங்களற்றும் தானே?