Pages

Friday, August 13, 2010

அம்மா...!
சுற்றிலும் இருந்த கூட்டத்தின் கரகோசம் விண்ணை பிளந்து கொண்டிருந்தது. அந்த பந்தை வீசுபவனுக்கு எந்த வித பதட்டமும் இல்லை ஏனென்றால் எல்லோருக்கும் அவன் தான் பந்தை வீசிக்கொண்டு இருக்கிறான் எனக்கான முறை இது....இன்னும் ஒரு ரன் எடுத்தால் 100........!


பந்தை தேய்த்து அவன் ஓடி வரப்போகிறான் இந்த பந்தில் கிடைக்கும் ஒரு ரன் எனது 99தை 100ஆக மாற்றும் என்று எனக்கும் தெரியும்.சுற்றிலும் இருக்கும் கூட்டத்தின் எண்ணம் தெரியவில்லை, சிலர் 100 எடுக்க வேண்டும் என்றும் சிலர் எடுக்க கூடாது என்று எண்ணுவதாகவே எனக்குப் பட்டது ஆனால் பதட்டத்தில் எனது இதயம் இடமாறி துடித்தது என்னவோ உண்மை...அந்த ஒரு நொடி...பந்து வீசப்படுவதற்கு ஒரு வினாடி ஏதோ ஒரு நினைவு என் மூளையில் சிக்க....

என்னுடைய மட்டையை தூக்கி காற்றில் எரிந்து விட்டு......கயிறறுத்த கன்றாய், கட்டுக்குள் சிக்காத காற்றாய் கூட்டம் விட்டு, போட்டி விட்டு, ஆட்டம் விட்டு களம் விட்டு......ஓடிக் கொண்டிருக்கிறேன்.....

அம்மா...மா....மா....மா......எனது சப்தத்தில் சுற்றியுள்ள கூட்டத்தின் சப்தம் அறுபட்டு கேள்விக்குறியாய் எல்லாம் நின்று போகிறது...எண்ண அலைகள் மைதானத்தை விட்டு வெளியேறியதில் மைதானத்தின் மீதும் ஆட்டத்தின் மீதும் போட்டியின் மீதும் ஏனோ ஒரு தெரியாத கோபம்... வெறுப்பு. இந்த மைதானமும் ஆட்டமும் என் தாயை மறக்குமளவிற்கு என் நினைவுகளை திசை திருப்புமெனின்ல், என்னை அறிவு ஜீவி என்ற மமதைக்குள் தள்ளுமெனில், ஆர்ப்பாட்டமாய் ஆள் சேர்த்து அந்த கூட்டத்தினால் தான் என் புத்தியின் சத்துக்கள் விற்க பட வேண்டுமெனில்….

யாருக்கு வேண்டும் இந்த கூட்டம்? யாருக்கு வேண்டும் இந்த ஆட்டம்? கேள்விகளோடு என் தாயின் மடி சேர்கிறது என்னின் நினைவுகள்......கேவிக் கேவி அழுகிறேன்......

4 மணி பள்ளி முடிந்த பின் வீட்டுக்குள் நுழையாமல் புத்தப் பையை வாசலில் இருந்தே வீட்டுக்குள் எறிந்து விட்டு....தெருப்புழுதியில் திளைக்க திளைக்க விளையாடி...ஜெயித்து, தோற்று அந்த அற்புத கணங்களில் எல்லாம் என்னிடம் இல்லையம்மா திடமான ஒரு நான் என்னும் அகங்காரம்! ஒரு கிட்டிப் புல் விளையாட்டில் கூட ஜெயித்தவனை விட தோற்றவனுக்கு சந்தோசம் அதிகம்.....ஆமாம்... தோற்றவன் " சூ " பிடிக்க வேண்டும்.....சூஊஊஊஊஊஊ என்று கத்திக்கொண்டே ஓடி வந்து இலக்கை அடையவேண்டும்... நேர்மையாய் விளையாடி, நேர்மையாய் ஜெயித்து, தோற்று...எங்கே போயிற்று அந்த நேர்மைகளும் நேர்மையான மனிதர்களின் மனங்களும்?

ஜெயிக்கவேண்டும் என்றே குள்ள நரியாய் குறுக்குவழிகள் பயின்று வெற்றிக்கான இலக்கை தீர்மானிப்பது பரிந்துரைகளும், வெற்று மமதைகளும் என ஆகிப்போனதில் பறிக்கப்பட்டது திறமை உள்ளவனின் வலு அல்லவா? எனக்கு வேண்டம் அம்மா இந்த பொய் ஆட்டம்.... நானே ஆடி நானே ஜெயிப்பதில் சந்தோசங்கள் அற்றுப் போய் நீ கற்றுக் கொடுத்ததெல்லாம் மறந்து போய் மரிக்குமுன்னே....என்னை சத்தியாமாய் காப்பாற்று தாயே!!!!

எழுத்துக்களை தீபமாய் எனக்குள் ஏற்றி வைத்த இறைவன் நீ! அன்றொரு நாள் ஒன்றுமறியாத கிள்ளையாய் நானிருந்த போது என் கை பிடித்து அந்த கரும் பலகையில்

" அ " என்று என்று எழுதிப் பழகி " அ " சொல்லு தம்பி...எங்க "அ "........என்று சொல்லி நான் தத்தி தத்தி " அ " என்று சொன்னதை கண்கள் மலர ரசித்து சிரித்த கடவுள் நீ! தந்தையின் இயல்புகளையும் சேர்த்தடக்கிய பெருஞ்சக்தி நீ......

நமது குடும்பத்தோடு பங்காளிகள் ஏதோ ஒரு சொத்துக்காக சண்டையிட்ட அந்த மின்சாரம் இல்லாத கிராமத்து இரவில், காற்றுக்காக வெளித்திண்ணையில் உறவுகள் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த வேளையில் எங்கே நீயும் உறங்கி விட்டால் பக்கத்தில் கைக்குழந்தையாய் இருக்கும் என்னை பங்காளிகள் தூக்கிக் கொண்டு போய் பணயமாக வைத்து மிரட்டுவார்களோ? என்று பயந்து.....உன் முந்தானையை என் அரைஞாண் கயிற்றோடு சேர்த்து கட்டிக் கொண்டு....உறக்கமில்லாமல் வெறுமையாய் என் முகம் பார்த்தே நீ கழித்ததாக கூறிய அந்த இரவின் திடமும் என்னில் மறையவில்லை, என் அரைஞான் கயிற்றில் போட்ட முடிச்சும் இன்னும் அவிழவில்லை......


இன்று என்னைச் சுற்றி எல்லாவற்றையும் மாற்றிப் போட் ட காலம், உன் பாசத்தையும் நேசத்தையும் மட்டும் மாற்ற வல்லமையின்றி வெட்கத்தில் தோல்வியையும் ஒத்துக் கொண்டது.

தம்பி........என்று நீ கூப்பிடும் போது மட்டும் எப்படியம்மா என் அகந்தை எல்லாம் ஒரே விச்சில் மரணித்து போகிறது. கடவுளையும், காதலையும் சரியாகப் பயன்படுத்த பாடம் பகின்றவள் நீ. 100 தேங்காய் தெருவில் உடைப்பதை விட 10 பேரின் பசி தீர்த்தல் நலம் என்று நீ சொன்ன பாலபாடம்தானே இன்று மனிதம் உற்று நோக்க கற்றுக் கொடுத்திருக்கிறது. பசித்தவனுக்கு உணவளித்தலும், தேவைப்படுபவனுக்கு ஈதலும் ஓராயிரம் பேர் சொல்லியிருந்தாலும்.....உன் மூலம் தானே எனக்கு கிடைத்தது.....!

ஓம் சக்தி...பராசக்தி சொல்லு தம்பி….. இது சக்தி மூலமந்திரம் என்று நீ சொல்லிக் கொடுத்தாய்.... நான் சொன்னேன் சொல்லி முடித்தவுடன் ஆராய்ந்தேன்... ஓம்.....என்றால் என்ன? சக்தி என்றால் என்ன? உன்னிடம் கேள்வி கேட்டேன்..... நீ சொன்னாய் யாரிடமும் கேள்வி கேட்காதே...உன்னிடமே கேள்வியைக் கேள் என்று? அடுத்தவர் சொல்லும் பதில்களில் உண்மையிராது தம்பி......உன் மனது உன்னோடு ஒத்துப் போனால்தான் அது உண்மை, கடவுளை பிடி, கடவுளை படி....உனக்குள் கேள்வி கேள் என்று நீ சொன்னதால்தான் இன்று விசுவரூபம் எடுத்து என்னின் பரிமாணங்கள் மாறிப் போனது என்பது உனக்கு தெரியாது......அம்மா?

நீதானே என் முதல் ஆன்மீக குரு....!

உன்னிலிருந்து வெளிப்பட்டு எப்போதும் என்னை நிறைத்து என்னை தண்ணீருக்குள் முக்கி எடுப்பது போல எடுக்கிறதே அதுதான் தாய்மையா? இந்த பரிசுத்ததை எல்லோருக்குள்ளும் வைத்த ஆண்டவன் பெண்மையிடம் மட்டும் அதை எளிதாக எப்படி மலரவைத்தான்? தாய்மையோடு இருக்கும் மனிதரெல்லாம் எப்படி தவறு செய்வார்?

ஆமாம் உலகம் படிக்கவேண்டியது ஓராயிரம் நூல்கள் அல்ல, ஒரு கோடி வித்தைகள் அல்ல, யோக சூத்திரங்கள் அல்ல, வெள்ளிகிழமை, ஞாயிற்றுக் கிழமை ஆலயங்கள் அல்ல....மனிதம் உற்று நோக்கி படிக்க வேண்டியது தாய்மை. அதை கற்றுக் கொள்ள வேண்டிய இடம் பெரும்பாலும் தாய்! அது என்ன பெரும்பாலும் தாய்....தாய்மையின் இயல்புகள் ஆச்சர்யமாய் அதிர்ஷ்டம் இருந்தால் ஒரு நண்பனிடமும், தோழியிடமும், மனைவியிடமும், குழந்தையிடமும் அல்லது தெருவில் போகும் முகம் தெரியாத மனிதரிடமும் இருந்து வெளிப்பட்டு விடும்....தாய்மை ஒரு இயல்பு அல்லது குணம்

தாய்மை = அன்பு செய்தல் + விட்டுக்கொடுத்தல் + தியாகம் செய்தல்+ வலி தாங்குதல் + போராடுதல்


எத்தனை முறை என்னை சாப்பிட நீயும் அழைப்பாய்... நானும் ஒரு தெருவோர பேச்சிலோ, தொலைக்காட்சி மேட்சிலோ, இல்லை தொலைபேசி அரட்டையிலோ உன்னை சட்டை செய்யாமல் என் நினைவுகளை எங்கோ பலிகடா ஆக்கிவிட்டு உன்னின் நேசத்தை தொலைத்திருப்பேன்...... என் பசி அடக்கிய பின் நீ உன் பசியைப் பற்றி சிந்திக்கவே ஆரம்பிப்பாய்.....இதுதானே தாய்மை?


ஒரு நிர்ப்பந்தமான நாளின் மதிய 3 மணியில் முதன் முதலாய் உன்னை பிரிய வேண்டும் என் கல்லூரி படிப்புக்காக...ஒரு வேளை ஜென்மங்களாக கூட இந்த நினைவு தொடரும் என்ற அளவிற்கு என்னுள் ஆழ விழுந்து நான் பயணித்த நாள் அது.

உன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி எழுந்த போது நெஞ்சுக்குள் ஏதோ ஒன்று அடைக்க அத்தனை நாளும் கோழியின் சிறகுக்குள் இருக்கும் குஞ்சு போல உன்னின் கதகதப்பிலேயே வாழப் பழகியிருந்த நான், நீயின்றி தனித்திருக்கப் போகும் எதிர்கால பயத்தில் தொண்டை கம்ம " போய்ட்டு வர்றேன் அம்ம்ம்ம்ம்மா" என்று சொல்ல முற்பட்ட முன்பு....." என் செல்ல மகனே...தைரியமா போய்ட்டு வாய்யா....படிப்புதாய்யா நமக்கு முக்கியம்னு சொல்லி உன் கண் கலங்கியதை பார்த்த அந்த வினாடியில் வாழ்க்கை ரொம்ப கொடுரமாய் பட்டது எனக்கு.

என் தலை கலைத்து நெஞ்சு தடவி என்னை கட்டியணைத்து நீ கொடுத்த முத்தம்தான் இன்று வரை நான் பெற்ற லட்சக்கணக்கான முத்தங்களையும் வெற்றி வாகை சூடிய ஒன்று. சுயநலமில்லாமல் என் உயிர் ஊடுருவி எனக்குள் தன்னம்பிக்கை பரவசெய்த தாய்மையை எனக்குள் ஊற்றி வைத்த அந்த முத்தத்தின் அழுத்தம் இன்னும் எத்தனை ஜென்மங்களுக்கு என்னோடு பயணிக்குமோ அறிகிலேன் அம்மா!

நீ உந்து சக்தி... நீ சொல்லிக் கொடுத்த மூல மந்திரத்தின் பொருள் வடிவம் நீ.....ஓம் என்ற பிரபஞ்ச வெடிப்பின் ஆதிகணங்களின் ஒலியும் அதன் சக்தியும் வீச்சும் உன் வழியே எனக்குள் இறங்கி இன்று வரை போராடும் பேய்க் குணத்தை கொடுத்திருக்கிறது.

கழுத்திலும் கையிலும் நீ கட்டிவிடும் கயிறுகளும், எனக்காக நீ செய்யும் நேர்சைகளும், உன் விரதங்களும் மூட நம்பிக்கை என்று ஒதுக்கி தள்ளிவிட்டு உன்னை புறக்கணிக்க விரும்பவில்லை அம்மா. உன் அன்பின் வெளிப்பாடாகவே கட்டியிருக்கிறேன் நீ கட்டிவிட்ட கருப்பு கயிற்றை கையில் இன்னும்! விவாதங்கள் அற்றவள் நீ......மூளையை வைத்துக்கொண்டு சில நேரங்கள்தான் வாழ வேண்டும், பல நேரங்கள் மூளையை குப்பைத்தொட்டியில் தூக்கி எறிந்து விட்டு மனதால் உலகம் பார் என்று கற்றுக் கொடுத்த என் முதல் குரு.... நீ!

எனக்கு இன்றும் நினைவில் இருக்கிறது அம்மா நாம் குலதெய்வ கோவிலுக்கு சென்று காரில் திரும்பி வந்து கொண்டிருந்தோம்....வழியில் ஓட்டுனரிடம் காரை நிறுத்தச் சொன்னாய்.....! ஏன் என்று எல்லோரும் விழித்தோம்.....டேய் தம்பி...போய் காரை நீ ஓட்டுடா...உரக்க நீ சொன்னதை கேட்ட வண்டியில் இருந்த அனைவருமே பயந்தோம்...ஏனென்றால் நான் ஓட்டுனர் உரிமம் பெற்று 24மணி நேரமே ஆகி இருந்தது...சாலையோ சிவகங்கை டூ மதுரை நெடுஞ்சாலை....! இல்ல இல்ல வேண்டாம் அப்பா மறுத்தார், அக்கா தடுத்தாள், தம்பிகள் முறைத்தனர்...யார் சொல்லும் கேட்கவில்லை நீ...டே அப்பு...போய் ஓட்டுடானு என் முதுகில் தட்டிய அந்த நொடி...எனக்கு கிடைத்த சக்தி...உன்னுள் இருந்த அன்பு, பாசம் எல்லாம் கூடி...கொடுத்த உத்வேகத்தை நீ இருக்கை மாறி முன்னிருக்கையில் வந்து அமர்ந்து திமிராய் ரசித்து கடைக்கண்ணால் நான் கார் ஓட்டியதை கண்டு நீ ரசித்ததை, அதை ஒரு பெரிய வேலை இல்லை என்பதைப் போல நீ நிராகரித்து வேறு ஏதோ பற்றி பேசி கொண்டு வந்ததை நான் கவனிக்க தவறவில்லை.

வாழ்க்கையில் எதையும் செய்து சாதித்து விட்டோம் என்று எண்ணும் இருமாப்பே அடுத்தடுத்த வெற்றிகளை பாதிக்கும் சூட்சுமமாய் பாடம் சொன்னது எனக்கு புரியாலும் இல்லை.

இன்றுவரை நீ என்னை ஊக்குவிக்கும் சக்தி நீ....தகுதியோடு இருந்தால் திமிர் இருக்கத்தான் செய்யும் உனது திமிரை செயலாக்கு என்று சொல்லிக்கொடுத்து..... என் நாடி நரம்பெல்லாம் பரவியிருக்கும் அற்புத தாய் நீ...


ஒரு வெள்ளிக்கிழமை தொலைபேசியில் நான் பேசவில்லை அதற்கடுத்த ஞாயிற்றுக்கிழமையில் நீ போன் செய்து என்னப்பா ஆச்சு...? சும்மயிருக்கீள்ள....ஏய்யா ஒரு போனடிச்சு பேசுனா என்ன ..வாரத்துல ஒரு நாளு உன் குரல கேக்கலேன்னா என்னமோ போல இருக்குல்லப்பா...என்று சொன்னதும் அந்த வெள்ளிக்கிழை இரவு நீங்கள் சாப்பிடவில்லை என்பதும் என்னை புறட்டியே போட்டுவிட்டது.

ஆயிரம் வேலைகள், பிரச்சினைகளென்று இன்று; பொருள் நோக்கிய ஓட்டத்தில் வாழ்க்கை சக்கரம் எங்கோ என்னை கொண்டு வந்து நிறுத்திவிட்டது.....கல்வி, வேலை, திருமணம், குழந்தை, சாதனை என்று பன்முகமாய் திரும்பிவிட்ட வாழ்க்கை கடல் கடந்து இன்று என்னை அம்மாவை விட்டு பிரித்து போட்டு விட்டது என்பதை எப்படி நான் ஜீரணிப்பது?

காலத்தின் வலு அளப்பரியாதாய் இருக்கிறது என் தாயின் அன்பு இப்பொது மெல்ல பீறிட்டு வெளிக் கிளம்பி என் சுயம் தொட்டு...எல்லாம் போதும் ஓடு ஓடு உன் தாய் காத்திருக்கிறாள்....என்று மணி அடிக்கத் தொடங்கி விட்டது. 32 ல் இருந்து 33 க்கு பயணிக்கிறது எனது வயது ஆனால் குழந்தையாய் எல்லாம் மறக்கவே விரும்புகிறேன்.

காலத்தின் நியதி என்றும், வாழ்க்கை சுழற்சி என்றும் ஓராயிரம் அறிவுப் பூர்வமான தர்க்கங்களை எல்லாம் என் காலில் போட்டு மிதிக்கவே விரும்புகிறேன். சாதனைகள் நிகழ்த்துவதில் தவறில்லை.....ஆனால் கண்களை விற்று சித்திரம் வாங்கும் ஒரு மடைமையில் ஓடிக் கொண்டிருக்கிறது உலகம்.....! சீக்கிரம் எல்லாத்தையும் முடிச்சுக்கிட்டு வந்துடு அப்பு...........அம்மாவின் கட்டளை எனக்குள் ரீங்காரமாய் ஓடிக் கொண்டிருக்கிறது.....

பொன்னும் பொருளும் மண்ணும் மனிதரும் ஆட்டமும் ஓட்டமும் தாண்டி படுக்கையில் விழும் இரவுகளில் நிம்மதி இருக்க வேண்டும் மனிதர்க்கு....எல்லா ஓட்டத்தின் முடிவும் நிம்மதி வேண்டும் என்ற மறைமுக எண்ணத்தில்தான் நடக்கிறது ஆனால் இப்பொது வாழும் முறையிலும் ஓடும் ஓட்டத்திலும் தேடும் பணத்திலும் அது கிடைக்காமால் நம்மை நேசித்த உறவுகளின் அன்பையும் இழந்து அந்திம காலத்தில் எல்லாமும் முடியப்போகும் அந்த தருணத்தில்.....ஓ...இப்படி வாழ்ந்திருக்கலாமே...அப்படி வாழ்ந்திருக்கலாமே...என்று மனம் உழன்று மரிக்கும் சராசரி மனிதானாய் நான் வார்க்கப்படவில்லை.

என் தாய் கொடுத்த திமிரும், தைரியமும் தெளிவாய் என்னை வழி நடத்த....இதோ கடக்கிறேன் இந்த கணத்தையும் மெளனமாய்........

இதோ வந்து விட்டேன் அம்மா .....இதோ வந்து விட்டேன்...


உன் பெற்ற வயிறு குளிராமல் நான் குளிர் அறையில் இருந்தென்ன? பதவியிருந்தென்ன?புகழிருந்தென்ன? பணமிருந்தென்ன?எல்லாம் குப்பைத் தொட்டியில் வீசி விட்டு


" இதோ வந்து விட்டேன் அம்மா....இதோ......வந்து விட்டேன்...."தேவா. S

35 comments:

எல் கே said...

நூறுக்கு வாழ்த்துக்கள் . தாய்மையை பற்றிய பதிவ கண்கலங்க வைக்கிறது.

எல் கே said...

உங்கள் தாய் உங்களை நன்றாக உருவாக்கி உள்ளார். அவருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

//தாய்மை = அன்பு செய்தல் + விட்டுக்கொடுத்தல் + தியாகம் செய்தல்+ வலி தாங்குதல் + போராடுதல்/

நூறு சதவீத உண்மை ...

//நீ உந்து சக்தி... நீ சொல்லிக் கொடுத்த மூல மந்திரத்தின் பொருள் வடிவம் நீ.....ஓம் என்ற பிரபஞ்ச வெடிப்பின் ஆதிகணங்களின் ஒலியும் அதன் சக்தியும் வீச்சும் உன் வழியே எனக்குள் இறங்கி இன்று வரை போராடும் பேய்க் குணத்தை கொடுத்திருக்கிறது.///
தாய்தான் உலகின் ஆதாரம்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

நூறுக்கு வாழ்த்துக்கள்...

தனி காட்டு ராஜா said...

உணர்வு பூர்வமாக உள்ளது ....வாழ்த்துக்கள் தேவா அண்ணா ...

சௌந்தர் said...

உங்கள் நடந்தவை அப்படியே காட்சியாக தெரிகிறது... அம்மாவின் அன்பு பற்றி சொல்ல எத்தனை பதிவு போட்டாலும் ஈடாகாது...வாழ்த்துக்கள் அண்ணா உங்களை முறைத்த தம்பி.....

Jey said...

செஞ்சுரி அம்மாவுக்கு சமர்ப்பணமா.... அருமை.

ஜெயந்த் கிருஷ்ணா said...

//தாய்மை = அன்பு செய்தல் + விட்டுக்கொடுத்தல் + தியாகம் செய்தல்+ வலி தாங்குதல் + போராடுதல்/தாயை பற்றி பேச ஆரம்பித்தாலே கண்கள் தானாகவே குளமாக ஆரமிக்கின்றன...

Unknown said...

//ஒரு வெள்ளிக்கிழமை தொலைபேசியில் நான் பேசவில்லை அதற்கடுத்த ஞாயிற்றுக்கிழமையில் நீ போன் செய்து என்னப்பா ஆச்சு...? சும்மயிருக்கீள்ள....ஏய்யா ஒரு போனடிச்சு பேசுனா என்ன ..வாரத்துல ஒரு நாளு உன் குரல கேக்கலேன்னா என்னமோ போல இருக்குல்லப்பா...என்று சொன்னதும் அந்த வெள்ளிக்கிழை இரவு நீங்கள் சாப்பிடவில்லை என்பதும் என்னை புறட்டியே போட்டுவிட்டது.//

கிட்டத்தட்ட எனக்கும் இதேபோலொரு நிகழ்வு... கண்ணீர் வழிய படித்த பதிவு இதுதான் சகோதரா...

நூறாண்டுகள் வாழவும் வாழ்த்துக்கள் ...

Unknown said...

ராஜாவின் பாடல் நெஞ்சை உருக்கிவிட்டது ...

Anonymous said...

அன்பின் தேவா அண்ணா..
இது தான் நான் உங்களுக்கு எழுதும் முதல் பின்னூட்டம்.
உங்களின் பதிவை தவறாமல் வாசித்து விடும் ரசிகன் நான்.
ஆனாலும் பின்னூட்டம் இட்டதில்லை, ஒரு பிரம்மாண்டத்தை கண்கள் விரிய பார்க்கும் எளியவன் போல எப்போதும்
உங்கள் எழுத்தை படித்து எனக்குள் வியந்து மகிழ்ந்துபோகும் ஒரு சாதாரணன் நான்.
இன்று உங்களின் தாய்மை பற்றி படித்தவுடன் எதோ ஒரு உந்துதல், உங்கள் அம்மா உங்களை வண்டியோட்ட முன்னுக்கிழுத்தது போல்
என்னை உந்தித் தள்ளியது என்று தான் சொல்ல வேண்டும்.
தாய்மை பற்றி மிகச் சிறப்பான புரிதலோடு வடித்திருக்கும் இந்தப் பதிவு தங்களின் ஆகச் சிறந்த பதிவுகளில் ஒன்றாகும் அண்ணா.
எந்தச் சந்தேகமும் இல்லையதில்.

//தாய்மை = அன்பு செய்தல் + விட்டுக்கொடுத்தல் + தியாகம் செய்தல்+ வலி தாங்குதல் + போராடுதல்//

இதை விட சிறப்பாக தாய்மையை எப்படி உருவகப்படுத்துவது?

//தாய்மையோடு இருக்கும் மனிதரெல்லாம் எப்படி தவறு செய்வார்?//

ஒவ்வொரு செயல்களிலும் தாய்மையின் பிம்பங்கள் இருந்தாலே தவறுகள் எப்படி நடக்கும்?
ஒவ்வொரு மனிதனின் முதல் நம்பிக்கை அம்மாவை தவிர வேறு யார்?
நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் அண்ணா!

அன்புடன்,
பாலா

Anonymous said...

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் தேவா .

"தாய்மை = அன்பு செய்தல் + விட்டுக்கொடுத்தல் + தியாகம் செய்தல்+ வலி தாங்குதல் + போராடுதல்".

மிகவும் சரியா சொன்னிங்க ...எனக்கும் என் அம்மா ஞாபகம் வந்துச்சு ..பகிர்வுக்கு நன்றி

ஜில்தண்ணி said...

100க்கு வாழ்த்துக்கள்

ஏதோ ஒன்றை படிப்பதை போலவே உணரவில்லை,தங்களின் நினைவுகளில் நீந்தியவாரே உணர முடிந்தது தாய் ஊட்டிய அறிவையும் ஆற்றலையும்

செல்வா said...

///
4 மணி பள்ளி முடிந்த பின் வீட்டுக்குள் நுழையாமல் புத்தப் பையை வாசலில் இருந்தே வீட்டுக்குள் எறிந்து விட்டு....தெருப்புழுதியில் திளைக்க திளைக்க விளையாடி.///
கவிதை மாதிரி ezhutharakku எங்கதான் கற்றுக்கொண்டீர்களோ ..!!
மறுபடியும் மறுபடியும் படிக்கத்தூண்டுகிறது ..!!
//.உன் முந்தானையை என் அரைஞாண் கயிற்றோடு சேர்த்து கட்டிக் கொண்டு....உறக்கமில்லாமல் வெறுமையாய் என் முகம் பார்த்தே நீ கழித்ததாக கூறிய அந்த இரவின் திடமும் என்னில் மறையவில்லை, என் அரைஞான் கயிற்றில் போட்ட முடிச்சும் இன்னும் அவிழவில்லை...///
சத்தியமா அப்படியே உடம்பு சிலிர்க்கிற மாதிரி இருக்கு ..!!

நூறாவது பதிவ இப்படி கூட சொல்ல முடியுமா .?? அருமை அண்ணா .. வாழ்த்துக்கள் ..!!

Mahi_Granny said...

பிறந்தநாளா . வாழ்த்துக்கள் தம்பி நூறாவது இடுகை அமமாவுக்காகவா . அவங்களே வாசித்தால் பெருமைப் படுவார்கள்.

செல்வா said...

இந்த கட்டுரையைப் படித்து முடிக்கும் முன்பே என் கண்களில் என்னையும் அறியாமல் கண்ணீர் ..!! அந்தக் கண்ணீருக்கான பொருள் தெரியவில்லை எனக்கு .. ஒருவேளை என் குடும்பத்தினருடன் இருப்பதால் தெரியவில்லையோ ..!! அனால் நான் மீண்டும் மீண்டும் படிக்கும் கட்டுரைகளில் இதுவும் ஒன்றாக இருக்கும் .!!

அகல்விளக்கு said...

கலங்குகிறது மனது.....

நல்ல பகிர்வு நண்பரே...

சாந்தி மாரியப்பன் said...

100க்கு வாழ்த்துக்கள்.

அருமையான பதிவு.

விஜய் said...

மிகசிறந்த பதிவு என்றே நீங்கள் கண்டிப்பாக எண்ணிக்கொள்ளலாம்,
அவ்வளவு யதார்த்தம்,
அவ்வளவு பாசம்,
அவ்வளவு நம்பிக்கை
என அனைத்தும் இந்த பதிவில் கொண்டு வந்து இருக்கிறீர்கள் அண்ணா ..
உங்கள் மேல் உள்ள ஈர்ப்பு இன்னும் அதிகமாகிறது, தாயை நேசிப்பவன் நிச்சயம் சரியான பாதையில், நெறிமுறையோடு ,வாழ்வில் சிறந்து விளங்கியே தீருவான் என்பது நீங்களும் ஒரு உதாரணமாய் நிருபித்து இருக்கிறீர்கள் அண்ணா. படிக்கும் ஒவ்வொரு தாய்பாசம் உள்ள வாசகனும் தன் அன்னையுடன் உருவகப்படுத்தி நெகிழ்ந்து இருப்பான் நிச்சயம்..

விஜய் said...

எழுத தெரிந்தறவள் நீங்கள் அழகாய் அன்னையை எழுதிவிட்டீர்கள் பாசமாய்..இன்னும் எத்தனை உள்ளங்கள் தங்கள் தாய்க்காக, தாயை பற்றி எழுத தெரியாமல், பாசங்களை நெஞ்சில் தூக்கிக்கொண்டு சுமக்கிறார்களோ?..

தன் குழந்தையை மார்போடு இருக்கி தன் புடவையில் கட்டிக்கொண்டு, கூலி வேலை செய்து, மார்பு பாலோடு, பாசத்தையும் ஊட்டி வளர்த்த அத்தனை அன்னையின் புதல்வர்களும்,ஏதேனும் சந்தர்பங்களில் தன் தாயை பற்றி எழுத மறந்து போயிருக்கலாம், பாசம் மறந்து போவதில்லை, பாசம் மரிக்க போவதுமில்லை..

விஜய் said...

எழுதத்தெரியாமல், மனதில் சுமந்து இருக்கும் அத்தனை மகன்களுக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்...
அம்மா என்ற வார்த்தை அம்மாவின் மார்பில் "ம்ம் ம்ம் ம்ம்" பால் உரிந்த உச்சரிப்பிலிருந்து பிறந்து இருக்கிறது, அதனால் அனைத்தும் அம்மாவிலிருந்தே ஆரம்பம். பிறந்த குழந்தைக்கு ,ஆறுமாதம் வரை சரியாக கண்பார்வை தெரியாதாம், அம்மாவை பால் வாசம் வைத்தே அறிகிறதாம்.அதனால் உணர்வுத் திறனும் அம்மாவிலிருந்தே ஆரம்பிக்கிறது..ஆகையால் நம்மின் ஆதி கடவுள் அல்ல , அம்மா எனும் ஆருயிரே நமக்கான அனைத்தும் ....

உன் மடி மீது உறங்கிய நாட்களை, இன்று மாடி மீது உறங்கி கழிக்கிறேன், நீ காட்டிய அதே நிலவை பார்த்தபடி கலங்கிய கண்களோடு......
அம்மா நீயே அனைததுமாய் என்னுள் என்றும் ...

vinthaimanithan said...

"உன் தாயின் காலடிகளுக்குக் கீழேதான் சுவர்க்கம் இருக்கின்றது" என்ற நபியின் வார்த்த்தைகள் நினைவிலாடுகின்றன. நல்ல வெளிப்பாடு!

VELU.G said...

மிகவும் அருமை

அப்படியே உருகவைத்துவிட்டீர்கள் தேவா

secondpen gallery said...

தாய்மை பற்றி கூறியதற்கு நன்றி நண்பரே.
கூகுளின் புதிய அறிமுகம் ஜெயகு . உங்கள் வலைத்துவை பிரபலபடுத்த சிறந்த வழி.
Link:www.secondpen.com/tamil/what is jaiku?

கருடன் said...

நல்ல கட்டுரை நாண்பா! 100க் மனமார்ந்த வாழ்துகள்!! :)

kousalya raj said...

//மைதானத்தின் மீதும் ஆட்டத்தின் மீதும் போட்டியின் மீதும் ஏனோ ஒரு தெரியாத கோபம்... வெறுப்பு. இந்த மைதானமும் ஆட்டமும் என் தாயை மறக்குமளவிற்கு என் நினைவுகளை திசை திருப்புமெனின்ல், என்னை அறிவு ஜீவி என்ற மமதைக்குள் தள்ளுமெனில், ஆர்ப்பாட்டமாய் ஆள் சேர்த்து அந்த கூட்டத்தினால் தான் என் புத்தியின் சத்துக்கள் விற்க பட வேண்டுமெனில்….//

ஆதங்கம் , அர்த்தம் புரிகிறது...

தாயை பற்றி சொல்லிய வரிகளில் எந்த வரியையும் குறிப்பிட்டு சொல்ல என்னால் இயலவில்லை.... உங்களுக்குள் இருக்கும் பெண்மைதான் எனக்கு தெரிகிறது....இது தாய்மையால் பூத்த பெண்மை....நல்ல வளர்ப்புக்கு ஒரு நல்ல உதாரணமாக..... இதை என்னால் ஒரு பதிவாக பார்க்க முடியவில்லை...ஒரு தாய் காவியம்...

இரு முறை படித்து விட்டேன்...இன்னும் படிக்கிறேன்....படிப்பேன்....!!

நூறாவது பதிவுக்கு இந்த சிநேகிதியின் வாழ்த்துக்கள் தேவா....

பாடலை கேட்க வைத்ததுக்கு நன்றி...!!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அருமையா எழுதியிருக்கீங்க நண்பா.

அன்னையின் அன்பைப் பற்றி, அவர் கொடுத்த உத்வேகத்தைப் பற்றி, அவரது பாசம்.. என்று அழகாக எழுதியிருக்கீங்க.

vasu balaji said...

அருமையான எழுத்து தேவா! நூறுக்கு வாழ்த்துகள்.

Unknown said...

//ஒரு வெள்ளிக்கிழமை தொலைபேசியில் நான் பேசவில்லை அதற்கடுத்த ஞாயிற்றுக்கிழமையில் நீ போன் செய்து என்னப்பா ஆச்சு...? சும்மயிருக்கீள்ள....ஏய்யா ஒரு போனடிச்சு பேசுனா என்ன ..வாரத்துல ஒரு நாளு உன் குரல கேக்கலேன்னா என்னமோ போல இருக்குல்லப்பா...என்று சொன்னதும் அந்த வெள்ளிக்கிழை இரவு நீங்கள் சாப்பிடவில்லை என்பதும் என்னை புறட்டியே போட்டுவிட்டது.//

ஒரு வாரத்துக்கு ஒருக்கா இல்ல, நெத்தம் பேசலேன்னா எனக்கே மனசு பேதலிச்ச மாதிரி ஆகிப்போகுது அண்ணே.. ஆயி அப்பன் தான் நம்மளுக்கு .. அத விட்டா வேற எந்த சாமியும் நம்மள காப்பாதாதுண்ணே.. காலங்காத்தால கண்ணு கலங்க விட்டுடீங்கண்ணா இன்னிக்கு ..
--
நூறாம்ல நூறு ஆயிரம் வரனும் அண்ணாச்சிகிட்ட இருந்து ...

தமிழ் அமுதன் said...

மிக சிறப்பான ஒரு பதிவு..!

வாழ்த்துகள் நூறாவது பதிவிற்கு..!

dheva said...

நெகிழ்ச்சியாய் இருக்கிறது அன்பான நெஞ்சங்களின் சேர்கையையும் என் மீது வைத்துள்ள அன்பையும் உணரும் போது...!

கே.ஆர்.பி. செந்தில்...@ உணர்வான பாசத்தால் திக்கு முக்காடி போயிருகிறேன்...!

வானம்பாடிகள் பால அண்ணன்@ வசிஷ்டரின் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெற்றது போல ஒரு உணர்வு...!


விஜய்...@ தம்பி...எல்லா தாய்களுக்குமான ஒரு படைப்பு என்று நீ கூறியிருப்பதை சிலாகிப்புடன் வழி மொழிகிறேன்.


செளந்தர் @ எப்போதும் வாழ்க்கைப்பயணத்திலும் முறைத்த படி கருத்துக்களை வெளிப்படையாக கூறும் உன் அன்பு என்னை திக்குமுக்காட செய்துவிட்டது.

கெளசல்யா...@ சினேகிதி....வார்த்தைகளில் உங்களின் தாய்மை பரவி என்னை மகிழ்வித்ததாக உணர்கிறேன்...


பாலாஜி சரவணா...@ பாசத்திற்கு எனது அன்பை காணிக்கையாக்குகிறேன்...!

வெறும்பய, ஜில்தண்ணி, செல்வகுமார், தனிக்காட்டு ராஜா, விந்தை மனிதன்...@ தம்பிகளின் உணர்வுக்கு என் நமஸ்காரஙகள்!


செந்தில் வேலன், டேரர் பாண்டி, அகல்விளக்கு ராஜா@ கட்டுரையின் புரிதலுக்கும் உணர்வுக்கும் நன்றிகள்!

சந்தியா..@ நன்றிகள் தோழி!


தமிழ் அமுதன்...@ உங்களின் வழி நடத்தல்கள் என்னை மேலும் மெருகூட்டும் தமிழ்!


இராமசாமி கண்ணன் ...@ தம்பி... இரண்டு நாளுக்கு ஒருமுறை என்று இல்லை, நானும் தினசரி அம்மாவிடம் பேசுபவன் தான், கடந்த வாரத்தில் வெள்ளிகிழமை வெளியே சென்று விட்டதால் மறு நாள் போன் செய்யலாம் என்று நினைத்து இருந்து விட்டேன்....அந்த இடைவெளி கூட அம்மாவால் தாஙக முடியவில்லை. பாசமான உன் உணர்வுக்கும் நமஸ்காரங்கள் தம்பி!

AltF9 Admin said...

உங்களை சுத்தி இருப்பவர்களில் யாருக்கு 100 மதிப்பெண் குடுக்க முடியும் அம்மாவை தவிர , உங்களது ௧௦௦ வது பதிவில் அம்மாவை பற்றியது வாழ்த்துக்கள் அண்ணா , நீ தொடர்து கலக்கு , தம்பி இருக்கேன் , சொன முத்தா ...

jothi said...

உங்களின் மிகசிறந்த பதிவுகளில் இது தலையாயது .. உங்களையும் உங்களின் தாய்மையையும் வெளிபடித்திய விதம் மிக அருமை ..இங்கு நான் நல்லமனிதநேயம் மிக்க தேவா என்ற மனிதரை பார்கிறேன். வாழ்த்துக்கள் .
அம்மவைபற்றிய உங்களின் 100 வது பதிவு மிக அருமை ...வாழ்க தாய்மை உணர்வு ..௦

Chitra said...

100 ........ Congratulations!

Keep Rocking!!!!

mkr said...

படித்தவுடன் மனம் சிறிது அமைதியாக இருந்தது.தாய்மை பற்றி எத்தனை பதிவுகள் படித்தாலும் மனதுக்கு இதமாக இருக்கும்.தாய்மை வார்த்தைகளால் விவரிக்க தெரியாதவர்களின் சார்பாக இந்த பதிவை எடுத்து கொள்கிறொம்

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

தாய்மையின் பெருமைகளை
அருமையாய் நூறில் ஆராத்தித்த
தேவா வாழ்த்துக்கள் ..பாராட்டுக்கள்..