Pages

Wednesday, April 2, 2014

கலையாத கனவுகள் - 2இனி.....

எம்.ஜி.ஆர்க்கு அப்புறம் இப்படி கட்சி ரெண்டா உடையும்னு நினைச்சுக்கூட பாக்கல கேஷியர் சார்...? எப்பேர்பட்ட சகாப்தன் உயிரோட இருக்க வரைக்கும் ஒண்ணும் செய்ய முடியலையே...... அவர் செத்துப் போன ஒரே வருசத்துல கட்சி பிரிஞ்சு போயி இப்டி அடிச்சுக்கிட்டு நாறுறாங்க....... எம்.ஜி.ஆர் இல்லைன்னு ஆகிப் போச்சு.. இனி கலைஞர்தான் இப்போதைக்கு ஆள் சி.எம் போஸ்ட்டுக்கு...

செல்வம் கேசியர் ராமலிங்கத்திடம் பேசிய படியே கோப்புகளை மேய்ந்து கொண்டிருந்தான். 

என்ன ஓய்....கவர்மெண்ட் எம்ப்ளாயி அரசியல் பேசுறீர்....? தமிழ்நாட்டு மக்களை எல்லாம் நம்ப முடியாது ஓய்....இப்பத்தானே கலைஞர் சீட்ல ஏறி உக்காந்து இருக்கார் அடுத்த எலக்சன்குள்ள ஜானகி அம்மாவும், ஜெயலலிதாவும் ஒண்ணா சேந்துட மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்...... அரசியலை விடுங்காணும்... ஒங்க வொய்ஃபும் பையனும் ஜவுளி எடுக்க வர்றான்னு சொன்னீரே.... எத்தன மணிக்கு பஸ் வருது...? உம்ம வீட்டுக்கு ஆப்போஸிட்லதானே மதுக்கூர் யூனியன் ஆஃபீஸ் இருக்கு.. ஒரு போன் பண்ணி வாட்ச்மேன் கண்ணுச்சாமிய ஒரு எட்டு வீட்ல பாத்துட்டு வரச் சொல்லுங்காணும்...

இல்லை சார் அவுங்க கிளம்பி இருப்பாங்க. ராஜ்கலா ஆறு பத்துக்குதான் மைனர் பில்டிங் கிட்ட வரும். இன்னும் தான் டைம் இருக்கே... கொஞ்ச நாழி கழிச்சு கிளம்பிப் போனா சரியா இருக்கும். 

கிராமத்தை விட்டு இடம் பெயர்ந்து வேலை நிமித்தம் சிறு நகர வாழ்க்கைக்கு நகர்ந்திருக்கும் செல்வத்துக்கு எல்லாமே பாபுதான். ஐந்து அக்காக்களுக்கு பிறகு ஆறாவதாக பிறந்த செல்வத்தின் ஒரே பிள்ளை பாபு. அதனாலேயே அவ்வளவு செல்லம் கொடுத்து அவனை வளர்க்கவும் செய்தார். வாழ்க்கை எப்போதுமே எது மிகுதியாயிருக்கிறதோ அது மேல் ஒரு சலிப்பை புகுத்தி விடுகிறது. அதுவும் போக பெண்ணை செலவாகவும், ஆணை வரவாகவும் பார்த்து பார்த்து பழக்கப்பட்டு போன பொதுப் புத்தியிலிருந்து வெளிவர முடியாமல் தள்ளாடிக் கொண்டிருந்த சமூகச் சூழலில் ஆண்பிள்ளை வேண்டுமென்ற ஆசையில் அடுத்தடுத்து பெண் பிள்ளைகளை பெற்ற ஒரு விவசாயக் குடும்பத்திலிருந்து வந்த செல்வம்  ஆண் பிள்ளை பெற்றதும் அவன் குடும்பமே பாபுவைக் கொண்டாடியது. பெண் வேண்டாம் என்றில்லை இருந்தாலும் ஆண்பிள்ளை ஏன் இல்லாமல் போக வேண்டும் என்ற ஆசையும் ஐந்து பெண்களோடு பிறந்து வளர்ந்த அயற்சியும் பாபுவை சீராட்டி வளர்க்க வைத்தது.

பெண் குழந்தைகளின் விருப்பங்களும் ஆண் குழந்தையின் விருப்பங்களும் வெவ்வேறு வடிவானவை. இந்த விருப்பங்கள் கூட சமூகத் திணிப்புகளாலும் ஜீன்களில் படிந்து கிடக்கும் குணாதிசயங்களாலும் கட்டி எழுப்பப்படுவதுதான். மென்மையான பொம்மைகளை வைத்து விளையாடுவதும் இருக்கும் இடத்தில் அலுங்காமல் குலுங்காமல் விளையாடுவதும் பெண்களின் குணமென்றால்....

பையன்களின் குணம் வேறாயிருக்கும். மல்லுக்கட்டுவது.. சண்டை போடுவது, சிறுவயதிலேயே பொம்மைத் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு டுமிக்கில் ....டுமிக்கில் என்று சுட்டுக் கொண்டிருப்பது என்று பையன்களின் உலகம் வெகு அதிரடியானது. இயல்பிலேயே ஒரு சுட்டித்தனம் பையன்களிடமும், அழகுணர்ச்சி பெண்களிடமும் மெலிதாய் துளிர்க்க ஆரம்பித்து விடுகிறது. முட்டியை பெயர்த்துக் கொண்டு ரத்தம் வடியாத  பையன்கள் யாரேனும் இருக்கிறார்களா என்ன? ஆனால் காலமாற்றம் இந்த இயல்பினைச் சமன் செய்து விடும். சமன் செய்து விடும் என்று சொன்னால் பெண் பிள்ளைகள் பையன்களைப் போல அதிரடியாய் வளரமாட்டார்கள் மாறாக ஆண் பிள்ளைகள் பெண்களின் நளினத்தோடு வளரத் தொடங்குவார்கள். எதிர்காலப் பெற்றோர்கள் மிகுந்த பாதுகாப்போடு தனக்கும் தன்னைச் சுற்றி உள்ளவர்களுக்கும் மட்டும் உபயோகமாய் எப்படி வாழ்வது என்று இடைவிடாது பயிற்றுவிக்கப் போகிறார்கள்.

பாதுகாப்பு பற்றி அதிகம் பேசுகிறோம் என்றால் பயம் அதன் பின்னணியில் வலுவாய் சம்மணமிட்டு அமர்ந்திருக்கிறது என்று அர்த்தம். உணவு உண்ணாமல் உபவாசம் இருப்பவனுக்கு உணவுதான் அடிப்படையாய் நினைவில் நிற்கும். காதல் வேண்டாம் என்று சொல்பவனும் காமம் வேண்டாம் என்று சொல்பவனும் இடைவிடாமல் அதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்கிறான் என்று அர்த்தம். 

பாபுவின் பயங்கரச் சேட்டைகளை ரசித்த செல்வத்திற்கு ஒரே மகன் பாதுகாப்பாய் இருக்க வேண்டுமே என்ற பயமும் இருந்தது. எங்காவது போய் விழுந்து எழுந்து வந்து விடுகிறான். எதிலாவது மோதிக் கொள்கிறான், யாரையாவது அடித்து விட்டு வந்து விடுகிறான் யாரிடமாவது அடிவாங்கிக் கொண்டு வந்து விடுகிறான்....எத்தனை முறை கண்டித்தாலும் மறுபடி அதே சேட்டை, வாலுத்தனம்தான்.....


ஆறே கால் ஆச்சு இன்னமும் ராஜ்கலா வரலையே....?  மணியைப் பார்த்துக் கொண்டிருந்த செல்வத்திற்கு ஒரு வேளை சீக்கிரமே பஸ் போய்விட்டதா என்ற சந்தேகம் வந்தது. பக்கத்திலிருந்த பெட்டிக்கடையில் போய் விசாரித்தான்...

இல்லண்ணே இன்னும் வரல....வர்ற நேரந்தான்... பெட்டிக்கடைக்காரரின் பதிலைக் கேட்டு கொஞ்சம் சமாதானமான செல்வத்திற்கு அந்த வழியே வந்த எல்லா பேருந்துமே ராஜ்கலாவைப் போலவே இருந்தது. மணி ஆறே முக்கால் ஆகியும் பேருந்து வரவில்லை...

செல்வத்துக்கு ஏதோ தப்பாகப்பட்டது. பக்கத்தில் இருந்த எஸ்டிடி பூத்துக்குப் போய் மதுக்கூர் யூனியன் ஆஃபீசின் நம்பரை தட்ட...

மானேஜர் சாரா...?

சார் நான் பட்டுக்கோட்டை பஞ்சாயத்து யூனியன் ஆபிஸ் அக்கவுண்டண்ட் பேசுறேன்.......
....
நல்லா இருக்கேன் சார்...
.....
வீட்ல துணி எடுக்க வர்றேன்னு சொல்லி இருந்தாங்க....நாலே முக்கால் ராஜ்கலாவுல வரச்சொல்லி இருந்தேன்....வண்டி வரலை.. இன்னும்...
...
...
...
என்னா சார் சொல்றீங்க...ராஜ்கலா தளிக்கோட்டை பாலத்துக்கு முன்னாடி கவுந்துருச்சா....?

யார் சார்  சொன்னது....செல்வம் பதறினான்....தொண்டை அடைத்தது.....

கிராமசேவக் வீரமணி இப்போதான் டி.டி.ஓ ஆபிஸ் போய்ட்டு பட்டுக்கோட்டையில இருந்து வந்தாரு... அவரு பைக்ல வரும் போது பாத்து இருக்கார்...! தளிக்கோட்டை பாலத்துக்கு முன்னாடி ரைட் சைட்ல.... வயலுக்குள்ள வண்டி கவுந்துடுச்சாம்... பெரிய ஆக்ஸிடண்ட்டாம்.... அதுலயா நம்ம வீட்ல போய் இருக்காங்க....? செல்வத்திடம் அவசரமாய் கேட்டார் மதுக்கூர் பஞ்சாயத்து யூனியனின் மேனேஜர்....

செல்வம் கதறி அழுதபடியே சொன்னான்.....சார்....ப்ளீஸ்.... சார்.... ப்யூன கொஞ்சம் நம்ம வீட்டுக்கு அனுப்பி வீட்ல கிளம்பிட்டாங்களான்னு பாத்துட்டு வரச் சொல்லுங்க சார்....நான் ஒரு பத்து நிமிசத்துல திரும்ப கூப்பிடுறேன்....

செல்வம் போனை வைத்தான்....! 

நெஞ்சுக்குள் இருந்து வெடித்து இதயம் வெளியே வருவது போல துடித்துக் கொண்டிருந்தது. கடவுளே...முருகா, காளியாத்தா, வினாயகா அவுங்க இன்னிக்கு கிளம்பி வந்து இருக்கக் கூடாது....எஸ்டிடி பூத் கேபினுக்குள் வேகமாய் ஓடிக் கொண்டிருந்த  மின் விசிறி அவன் சட்டை வியர்வையில் நனைவதை ஒன்றும் செய்யமுடியாமல் வெறுமனே ஓடிக் கொண்டிருந்தது.

பாபுவை நினைத்துப் பார்த்தான். மனைவியின் முகம் நினைவுக்கு வந்தது. பன்னிரண்டு வருட திருமண வாழ்க்கையின் அன்னியோன்யம்,  சிறு சிறு சண்டைகள் எல்லாம் வரிசையாய் மனதில்  மின்னல் வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தன. ப்யூன் வீட்டுக்கு போய்க் கொண்டிருப்பான்....போய் பார்த்து....

வீட்லதான் சார் இருக்காங்க.......உங்க வீட்ல உடம்பு சரி இல்லையாம் அதனால இன்னிக்கு வரலையாம்,  உங்களுக்கு போன் பண்ணச் சொல்லி பாபுவ நம்ம ஆபிசுக்கு போடான்னு கிளப்பிட்டு இருந்தாங்க.. நானே போய் பாத்துட்டேன்.....சார்....

ப்யூன் இப்படி போனில் சொல்லிவிட மாட்டானா....

கவலையாய் வாட்ச்சைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒவ்வொரு வினாடியும் செல்வத்திற்கு மரண அவஸ்தையோடு நகர்ந்து கொண்டிருந்தது. காலையில் பாபுவை அடித்தது ஞாபகம் வந்தது. லீவு நாளுனா தூங்கித் தொலைக்க வேண்டியதுதானே....முதுகில் ஓங்கி ஒரு போடு போட்டான்....பாபுவை...

பாபு தட்டி விட்ட காபி டம்ளர் டேபிளில் இருந்து உருண்டு நடுக் கூடத்தில் கிடந்தது.

அலுவலகம் கிளம்பும் அவசரத்தில் அடிவாங்கிய பாபு.......செல்வத்தை இப்போது மனதுக்குள் இம்சை செய்தான்.

அவன் அலுவலகத்துக்கு போன் செய்தான். சார்....ராஜ்கலா கவுந்துடுச்சுன்னு சொல்றாங்க....கேஷியர் சார்....., ஆமாம் நான் மதுக்கூர்க்கு போன் பண்ணி இருக்கேன்...ப்யூன் வீட்டுக்கு போய் இருக்கார்....
....
....
....
ஆமா சார் நான் என்னனு கேட்டுட்டு சொல்றேன்.... நம்ம ஜீப் ஆபிஸ்லதானே சார்  இருக்கு..? கேட்டுக் கொண்டே சனிக்கிழமை எங்கும் வெளியில் சென்றிருக்க வாய்ப்பில்லை என்றும் நினைத்தான் செல்வம்.

மறுபடி மதுக்கூர் யூனியன் ஆஃபிசின் நம்பரைத் தட்ட......போனை எடுத்த மேனேஜர் போனை வாட்ச் மேனிடம் கொடுத்தார்....


வாட்ச்மேன் பேசிக் கொண்டே இருக்க...... போனை படார் என்று.... வைத்தபடியே.... சுவரோரமாக இருந்த சேரில் " பொதேர்.." என்று விழுந்தான் செல்வம்.

செல்வத்தின் மனைவியும் மகனும் பட்டுக்கோட்டைக்கு சென்று விட்டனர் என்றும் ராஜ்கலாவில் போகத்தான் கிளம்பிப் போனார்கள் என்றும் பக்கத்து வீட்டுக்காரர்கள் சொன்ன செய்தியை செல்வத்திடம் சொல்லிவிட்டு....

கவலையோடு போனை வைத்த வாட்ச்மேன் கண்ணுசாமி சோகமாய் மேனேஜரைப் பார்த்தான்....
                                                           ....தொடரும்....
தேவா சுப்பையா...
No comments: