Pages

Tuesday, December 11, 2012

காக்கை குருவி எங்கள் சாதி...!
காலையில வேலைக்கு வந்துட்டு இருக்கும் போது 94.7 மலையாளச் சேனல்ல பாட்டு கேட்டுட்டு வந்துட்டு இருந்தேன். அப்போ, அப்போ ஒரு பாட்டும் எப்பவுமே ரேடியோ ஜாக்கிகளோடு பேச்சுமா நேரம் போய்ட்டே இருந்தப்ப அந்த லேடி இன்னிக்கு என்ன நாள் தெரியுமான்னு பக்கத்துல இருந்த ஆம்பளைக்கிட்ட கேட்டப்ப....அவர் என்ன நாளுன்னு திருப்பி அவள கேட்டாரு.... அட இன்னிக்கு பாரதி பொறந்த நாளாச்சே தமிழ் கூறும் நல்லுலகம் நினைக்காட்டியும் கூட நம்ம சேரத்து  தமிழ்ப் பிள்ளைகள் நினைவு வச்சு இருக்காங்களேன்னு மேல கேக்க ஆரம்பிச்சேன்......

இன்னிக்கு நடிகர் திலீப்போட பொறந்த நாளுன்னு அறிவிச்ச அந்த பொண்ணு அதோட போயிருந்தா நானும் இப்டி ஏதாச்சும் எழுதாம போயிருந்து இருப்பேன்....கூடவே அவ.. நாளைக்கு என்ன நாளு தெரியுமானு அந்த ஆள கேக்க....திலீப் பொறந்த நாளு தெரியாம முழிச்ச அந்த அண்ணன்....நாளைக்குன்னு சொன்ன உடனே....டான்...டான்..டான்....ன்னு மியூசிக் எல்லாம் வாயிலயே போட்டு....12.12.12.....நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரின்னு சொல்லி, நாளைக்கு சூப்பர்ஸ்டார் பொறந்த நாளு அதை எப்படி நாம மறக்க முடியும்ன்ற ரேஞ்சுக்கு பேசிட்டு குதுகலிச்சுட்டு போய்ட்டாரு....

ரஜினி சார் நடிக்க வந்தாப்ல. நடிச்சாப்ல..நமக்கு எல்லாம் புடிச்சு இருந்துச்சு. இப்போ சார் 63 வது பொறந்தா நாளு கொண்டாடுறாப்ல...ரசிகர்கள் எல்லாம் கொண்டாடிட்டுப் போகட்டும். மவராசன் படத்தை பாத்து சிரிச்சு கைதட்டி சந்தோசமா இருந்தோம்னு நினைச்சு ஏதோ செஞ்சுட்டுப் போகட்டும்னு விட்டுறலாம்.. இந்த மிடியாக்காரங்களுக்கு என்ன டேஷ் சார் வந்துச்சு....? அதுவும் சேட்டிலைட் டிவிகாரனுக படுத்துற பாடு இருக்கே....இந்த ஜகத்தினை கொளுத்துவோம்னு சொன்னவன் வயித்து பசியோட ஒரு மனுசன் கூட இருக்க கூடாதுன்னு நினைச்சு சொன்னான்...

தமிழ் மொழியோட வளத்தை பயன்படுத்தி ஞானப்பட்டுகளையும், விடுதலை பாடல்களையும், கண்ணண் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம்னு.....ஒரு பெரு வெடிப்பா வெடிச்சு சிதறி தமிழ் தமிழ்னு வாழ்ந்துட்டு கடைசிவரை கஷ்டப்பட்டே செத்த என் பாரதிய கொண்டாட துப்பில்லாத இந்த நாட்டை முதல்ல கொளுத்தணும்னு நான் சொல்லுவேன்.

டிசம்பர் 22 உலகம் அழியணும். முதல்ல தமிழ்நாட்ட போட்டுத் தள்ளிட்டு அப்புறமா மத்த பாகம் எல்லாம் அழியணும்... இதுதான் என்னோட ஆசை.  சினிமாவ பத்தி எழுதுனாலோ, அவனவன் மதத்தைப் பத்தி எழுதுனாலோ, இவனுகளுக்கு புடிச்ச அரசியல் தலைவர ஆதரிச்சு எழுதுனாலோ இல்லை புடிக்காத அரசியல்வாதிய திட்டி எழுதுனாலோ...ஜாதிய பத்தி எழுதுனாலோ கூடுற கூட்டம் பாரதி மாதிரி மகான்கள பத்தி பேசவும் அவன் பாட்டை கொண்டாடவும் கூடுறதே இல்லை...

கலைஞரையும் ஜெயலலிதாவையும், ரஜினிகாந்தையும் தலையில வச்சுக் கொண்டடுங்க மக்களே.... கொண்டாடித் தொலைங்க....! ரஜினி பொறந்த நாளுக்கு புதுவேட்டி சட்டைப் போட்டுக்கிட்டு தலைவா வாழ்கனு கோயில்ல அபிஷேகம் பண்ணுங்க அன்னதானம் பண்ணுங்க....இன்னும் என்ன என்ன பண்ணனுமோ பண்ணிக்கோங்க....ஆனா....

" காக்கை குருவி எங்கள் சாதி, 
 நீள் கடலும் மலையுமெங்கள் கூட்டம்..."

அப்டீன்னு பாடிட்டுப் போனவனோட மனோநிலை என்னனு தயவு செஞ்சு புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க. அரசியல் அரசியல்னு இன்னிக்கு மண்ண அள்ளிப் போட்டு தெருக்கு தெரு நீங்க பேசிட்டு இருக்க அரசியலை தெரியாதவனா பாரதி இருந்திருக்கலாம்

" உழுதுவிதைத் தறுப்பாருக் குணவில்லை; 
      பிணிகள் பல வுண்டு; பொய்யைத் 
தொழுதடிமை செய்வார்க்குச் செல்வங்க 
      ளுண்டு;உண்மை சொல்வோர்க் கெல்லாம் 
எழுதரிய பெருங்கொடுமைச் சிறையுண்டு; 
      தூக்குண்டே இறப்ப துண்டு; 
முழுதுமொரு பேய்வனமாஞ் சிவேரியிலே 
      ஆவிகெட முடிவ துண்டு..."

என்று பொங்கி எழுந்த அவனின் கம்னியூசப் புத்தியில் படிந்து கிடந்த அரசியலின் வேகம் என்னனு உங்க யாருக்கும் தெரியாது. தமிழ் வலை உலகத்துல இப்ப இருக்கவங்க எல்லோருமே எதாச்சும் ஒரு அரசியல் கட்சிய புரொமோட் பண்ணத்தான் இணையத்தையே தொறக்குறாங்க....பாரதிய அடுத்த தலைமுறைக்கு புரோமோட் பண்ணனும் அப்டீன்ற ஒரு தொலை நோக்குப் பார்வை இன்னிக்கு தேதியில சதவீத அடிப்படையில் பாத்தீங்கன்னா பூஜ்யமாத்தான் இருக்கு. 

ரஜினிக்கு கொடி புடிச்சு பொறந்த நாள் கொண்டாடுற என் தமிழ் சொந்தங்கள் பாரதிய ஒரு ஓரத்துல கூட வச்சுப் பாக்குறது இல்லை. பாரதின்னு ஒரு பைத்தியக்காரன் தனக்குன்னு காசு சேத்துக்காம நாடு, மொழி, காதல், கவிதைன்னு வாழ்ந்துட்டு செத்துப் போய்ட்டான்...அவனைப் பத்தி பேசுறதுக்கு நமக்கு ஒரு விசயமும் இல்லை...ஆனா கோடி கோடியா சொத்து சேத்த கோமான்களுக்கு எல்லாம் பிறந்த நாள் கொண்டாடுறேன் பேர்வழின்னு நாம பெருமை வேற பட்டுக்கிறோம்.

வயித்துப் பசியோட சுதந்திர தாகத்தை எழுத்துல எரிய விட்டு, குடும்பம் பிள்ளைங்கன்னு கூட பாக்காம பாண்டிச்சேரிக்கும் தமிழ்நாட்டுக்கும் ஓடி ஓடி வழ்ந்துட்டு இருந்த பாரதி தமிழை படிங்க தமிழ படிங்கன்னு தன்னை பாக்க வர்றவங்க கிட்ட எல்லாம் சொல்லுவாரம்....! அப்டி தமிழ் தமிழ்னு உயிர் வாழ்ந்த ஒரு மனுசன பத்தி  பேசிக்கிறதும் விவாதிக்கறதுமே பெரிய விசயமா நமக்கு எல்லாம் போய்ட்டது எவ்ளோ பெரிய வேதனையான விசயம்.

நாளைக்கு வேணா பாருங்க பேஸ்புக்லயும், ட்விட்டர்லயும், இன்னும் வலைப்பூக்கள்ளயும் இந்த சமூகத்த கட்டிகாத்து மொழியை காப்பாத்துன ரஜினிகாந்த பத்தி மூலைக்கு மூலை பேசுவானுங்க. எல்லா டிவி சானல்லயும் நம்ம மானத்தை காப்பாத்தின கடவுள்ன்ற ரேஞ்ச்சுக்கு பேட்டி , சினிமான்னு போட்டு அசத்துவாங்க ஆனா மொழியால காதலையும், விடுதலையையும், இயற்கையையும், கடவுளையும் கட்டி ஆண்ட பெருங்கவிய பத்தி என்னிய மாதிரி யாராச்சும் ஒரு புத்தி சுவாதினம் இல்லாதவன் எழுதிட்டு இருக்க..... உங்கள மாதிரி யாரச்சும் ஒருத்தர் ரெண்டு பேரு வந்து படிச்சுட்டுப் போக போறீங்க...

கவிஞன் அப்டீன்றவன் கவித்துவமாவே வாழணும்யா...ன்னு  பாரதி சொல்ல மட்டும் செய்யலீங்க...அப்டீயே வாழ்ந்துட்டும் போனாப்ல...! இயற்கைய பாத்து சவுடாலா...

' நானும் ஒரு கனவோ.....
இந்த ஞாலமும் பொய்தானோ'ன்னு....

கேள்வி கேட்டுக்கிட்டே காதல்ல நிறைஞ்சு வாழ்ந்த மகா புருசன்ங்க இந்தப் பாரதி. சிந்து நதியின் இசையை நிலவொளியில கேட்டு ரசிச்சுக்கிட்டே சேரநன் நாட்டிளம் பெண்களோட,  சுந்தரத் தெலுங்குல பாட்டு எழுதி நதியில ஓடம் ஓட்டி விளையாடுவோம் வாங்க மானுடப்பதர்களேன்னு அவன் கூப்டதுல கேளிக்கை மட்டுமா இருந்துச்சு....இந்தியாவையே அன்புன்ற ஒரு தாம்புக் கயிறுல சேத்து வைக்கிற தேசப் பற்றுதானேய்யா இருந்துச்சு.....

மராட்டியர்கள சிங்கம்னு சொன்ன பாரதி அவன் பெருங்கவிஞனா இருந்தப்ப கூட.... அதை பொருட்படுத்தாம....மராட்டிய கவிஞனோட கவிதையப் பாராட்டி சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்னான்....இதுல்லயா இறையாண்மை....இது இல்லையா கம்பீரம்....இப்படி இந்தியாவை தமிழ் எழுத்துக்குள்ள கட்டிப்போட்ட கவிஞன படிங்கடான்னு சொன்னா...

இவனுக பல்லேலாக்கா பல்லேலாக்கான்னு பாட்டுப் பாடவும்...கூகிள்லயும் யாகூலயும் காதலைத் தேடுற ஒதவாக்கரை பாட்டுகள கேட்டுக்கிட்டே யாருக்கும் ஒதவாமயே போய்டுறானுங்க...! கெளதம் மேனன் வந்து இவனுகளுக்கு காதலை சொல்லி புரிய வச்ச மாதிரி ஜெஸ்ஸியவும் விண்ணைத்தாண்டி வருவாயாவையும் புடிச்சு தொங்கிட்டு அலையுற என் தமிழ் சமூகமே....

மேனி கொதிக்கு தடி!-தலை சுற்றியே
வேதனை செய்கு தடீ!
வானி லிடத்தை யெல்லாம்-இந்த வெண்ணிலா
வந்து தழுவுது பார்!
மோனத் திருக்குதடீ! இந்த வையகம்
மூழ்கித் துயிலினிலே,
நானொருவன் மட்டிலும்-பிரி வென்பதோர்
நரகத் துழலுவதோ?

காதலியின் பிரிவினை இதை விட சிறப்பா யார் உனக்கு சொல்ல முடியும்? பாரதி பேசுன காதலையும், காமத்தையும், வீரத்தையும் கலப்படம் செஞ்சு வியாபாரம் செய்ற அத்தனை பேரையும்....ஓ..க்ரேட், மார்வலஸ்..எக்ஸ்ட்ராடினரின்னு பாரட்டி நாம எல்லாம் ரொம்ப முன்னேறீன சமூகம்னு வேசம் போடத்தான் செய்றோம். பாரதிய பாடாத, பாரதிய படிக்காத அறிவு சபிக்கப்பட்ட அறிவுன்னு மனசுல வச்சுக்கோங்க, இலக்கியங்கள் எல்லாம் புரியாத பாசை பேசி மேதாவித்தனத்த காட்டிக்கிட்டு இருந்த அந்த காலத்துலயும் சரி இந்த காலத்துலயும் சரி....தோள்ள கை போட்டு .....

' கேளடா மானிடவா...
நம்மில் கீழோர் மேலோர் இல்லை....' ன்னு சமத்துவம் பேசுன  வார்த்தைகளுக்கு சொந்தகாரன் பாரதி. டிசம்பர் 11 மகாகவியோட பிறந்த நாள்னு சொல்லி  தெருக்கு தெரு எல்லோரும் கொண்டாடி, டிவி, இன்டர்னெட்னு எல்லா திசையிலும் ச்ச்சும்மா அலறணும்....பாரதியோட பாடல்களை எல்லா செயற்கைகோள் தொலைக்காட்சிகளும் வானொலிகளும் ஒலிபரப்பிட்டே இருக்கணும்.... விவாத மேடைகளும், பட்டி மன்றங்களும்னு எங்கும் பாரதி.....எதிலும் பாரதின்னு விண்ணதிர பாரதிகளோட பிறந்த நாள நாம கொண்டாடுற அந்த நாள்தான்....

நாமெல்லாம் அறிவுச் சமுதாயம்னு சொல்லி நம்மள நாமே நினைச்சு...பெருமைப் பட்டுக்கலாம்.....

இன்னிக்கு....நாம என்ன மாதிரியான சமூகம்னு நான் சொல்லி நீங்க புரிஞ்சுக்க வேண்டிய அவசியமே இல்லை....! நம்மள சுத்தி என்ன நடக்குதுன்னு உங்களுக்கே தெரியும்..

' தமிழச் சாதி...
எனப்பல பேசி இறைஞ்சிடப் படுவதாய், 
நாட்பட நாட்பட நாற்றமும் சேறும் 
பாசியும் புதைந்து பயன்நீர் இலதாய் 
நோய் களமாகி அழிகெனும் நோக்கமோ? 
விதியே, விதியே, தமிழச் சாதியை
என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ? '


தேவா. S8 comments:

பட்டிகாட்டான் Jey said...

வீடு சுரேஸ்குமார் said...
பாரதியின் சவ ஊர்வலத்தில் அவர் பிணத்தை மொய்த்த ஈக்கள் கூட்டத்தை விட குறைவானவர்களே வந்திருந்தார்கள் என வைரமுத்து ஒரு கவிதையில் கூறியிருப்பார்....! உன் பதிவிலும் அப்படித்தான் போல பங்காளி...!
December 11, 2012 1:48 PM
----------------------------

இது என் பதிவுல வீடு சுரேஷ் போட்ட ஒரே கமெண்ட் :-))))

Shankar M said...

ஆதங்கத்தின் வெளிப்பாடு... பிறந்த நாள் அன்றாவது சமூகத் தொண்டாற்றியவர்களை நினைவில் கொள்ளலாம்.பாரதியை மறந்திடக்கூடாது இந்த தமிழ் மனிதம். இனியாவது திறக்கட்டும் மனக் கதவு....

சேலம் தேவா said...

ரொம்ப ஆதங்கமாதாண்ணே இருக்கு... :( நல்லதோர் வீணை செய்து பாடல் நினைவுக்கு வருகிறது.

semmalai akash said...

ஆஹா! மலையாளம் ரேடியோவில் இப்பலாம் அடிக்கடி தமிழ் படங்களைப் பற்றியும், தமிழ் நடிக - நடிகைகள் பற்றியும் அதிகம் பேசுகிறார்கள். காரணம் நிறைய கேரளத்து இளைஞர்கள் தமிழ் நடிகர்களின் ரசிகர்கள். அருமையான பதிவு வாழ்த்துகள்.

சுபத்ரா said...

Great!

s suresh said...

நல்லதொரு ஆதங்கம்! உங்கள் கோபம் நியாயமானதே! சினிமா தெரியும் அளவிற்கு தேசிய கவியை தெரியாமல் இருப்பது நமது தேசத்தின் சாபம்!

புலவர் சா இராமாநுசம் said...

காக்கை குருவி எங்கள் சாதி என்ற பாரதியைப் பற்றி அரசியல் காக்கைகளுக்கும, சினிமா குருவிகளுக்கும் கவலையில்லை! இதுதான் இன்றைய தமிழ் நாட்டு நிலை! நாம நோவதைத் தவிர வேற் வழியில்லை

Robert said...

என்னதொரு கோபம், என்னதொரு ஆதங்கம். நான் பெருமையாய் நினைக்கும் நம் தமிழ் சமூகத்தை நினைத்து அளவிட முடியாதொரு வருத்தமும் கோபமும் வருகிறது. ஒரு ஆளுமை மிக்க ஒரு கவிஞனுக்கு நாம் செய்யும் மரியாதை இதுதானா?? உண்மையில் வருத்தமாய் தான் இருக்கிறது நண்பா.