Pages

Monday, December 10, 2012

காலப் பெருவெள்ளம்...!உறக்கமின்றி தவிக்க விட்ட கடந்த வாரத்தின் ஐந்து நாட்களும் அரக்கத்தனமானவையாய் எனக்கு தோன்றின. கடுமையான உடல்வலி, தொடர்ச்சியான தலைவலியோடு டிசம்பர் ஒண்ணாம் தேதியின் இரவு என்னை துரத்திக் கொண்டிருந்தது. கனவுகளும் கற்பனைகளும் எங்கோ ஓடி ஒளிந்து கொள்ள உடல் முழுதும் வலியைச் சுமந்தபடி படுக்கையில் புரண்டு கொண்டிருந்தேன். மழை எல்லா ஊரிலும் மழையாய் இருப்பதில்லையோ என்ற ஒரு சோகமான கேள்வியை திரும்ப திரும்ப நான் எனக்குள் கேட்டுக் கொண்டிருந்தேன்.

கடந்த முறை விடுமுறைக்காக ஊருக்கு சென்றிருந்த போது காளையார்கோவிலுக்கும் கொல்லங்குடிக்கும் இடையே ஒரு மாலை வேளை பெரு மழையில் சிக்கிக் கொண்டேன். வண்டியை சாலையோரமாய் நிறுத்திவிட்டு எனக்கும் மழைக்கும் கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாய் அறுந்து போயிருந்த தொடர்பை சமரசம் செய்து சரி செய்து கொள்ளும் வண்ணம்....

நான் மழைக்குள் விழுந்தேன். உடல் தொட்டு, என் உயிர் தொட்டு, ஆன்மாவை நிறைத்த இயற்கையை உடலால் பருகினேன். சாலையோரத்து புளியமரங்களும், சாலையை விட்டு சற்று தொலைவில் கூட்டம், கூட்டமாய் நின்று கொண்டிருந்த பனைமரங்களும் மட்டுமே எனக்கு துணையாய் இருந்தன. அவ்வப்போது சாலையைக் கடந்து சென்ற வாகனங்களிள் தங்கள் கதவுகளையும் புலன்களையும் பூட்டிக் கொண்ட மனிதர்களை என்னால் காண முடிந்தது. 

பெருத்த இடியோடு மாலை நேரத்தில் பெய்து கொண்டிருந்த அந்த மழை என் சொந்தக் கிராமத்துக்கு முன்னதாகவே என்னை நிறுத்தி வைத்து எனக்கு ஏதேதோ பாடம் நடத்திக் கொண்டிருந்தது. என் உடைகள் நனைந்து தொப்பல் தொப்பலானேன், நான் கவலைப்படவில்லை....என் வாலட் நனைந்தது நான் கவலைப்படவில்லை.... என் கை பேசி நனைந்து ஊறியே போனது  நான் கவலைப்படவில்லை. அது வெறுமனே மழையில் நனைதலைப் போல் இல்லை.  வெகுகாலம் வீடு விட்டுச் சென்ற மகனை தன் கண்டாங்கிச் சேலைக்குள் இழுத்து அணைத்துக் கொண்டு அழும் ஒரு தாயின் பரிவாய் எனக்குத் தோன்றியது.

ஆகவே.. எனது மண்ணே, எனது உயிரே... என் தாயே... உன்னை நான் காண வந்து விட்டேன். உன்னை பிரிந்த சோகத்தை நான் எந்த மொழியில் மொழி பெயர்த்தாலும் அது கண்ணீர் என்ற வார்த்தையைத்தான் பெயர்த்தெடுத்துக் கொடுக்கும். சிவந்து கிடக்கும் இந்த மண்ணிலிருந்துதான் என் உயிருக்கான வித்து உருவானது. இதோ என் நாசி நிறைக்கும் இந்தக் காற்றில்தான் என் மூதாதையர்களின் மூச்சுக் காற்று கலந்து கிடக்கிறது. நான் இந்த மண்ணுக்குச் சொந்தகாரன். நான் இந்த மண்ணைப் போன்றவன் என் உயிரை வேண்டுமானால் இப்போதே எடுத்துக்கொள் இயற்கையே.. இதோ... இந்த சாலையோரத்திலேயே நான் சருகாகிப் போகிறேன்...

இந்த பூமியின் ஏதோ ஒரு திசையில் எனக்கான வாழ்க்கை இருப்பதாக நான் நகர்ந்து போனேன்  என் மண்ணே....உன்னை பிரிந்து போனேன் என் உயிரே... என்று நான் கதற உடன் மழையும் கதற.....என்னை கட்டியணைத்த என் மண்ணின் மழை என்னை ஒன்றுமே செய்யவில்லை...! பிள்ளைக்கு  பால் கொடுக்கும் தாயாய் என் மீது நீர் ஊற்றியது  வானம்.... ! வாழ்க்கைச் சூழலும், மண்ணும், பிறப்பும் எவ்வளவு அருமையாய் கோர்க்கப்பட்டிருக்கிறது என்பதனை சொந்த மண் விட்டு நகர்ந்து வந்து ஒரு மழையை பால்கனியில் நின்று உள்வாங்கிக் கொண்ட போது தெளிவாய் உணர்ந்து கொண்டேன்...

மழையும், காற்றும், குளிரும், வெயிலும் ஒரே பெயரில் அடையாளப்படுத்தப்பட்டாலும் ஒவ்வொரு மண்ணுக்கும் ஒரு தன்மையோடு அவை பூமியில் படிகின்றன. எங்கேயோ முளைத்த செடியான எனக்கு பாலைவனத்தின் மழை ஒத்துக் கொள்ளவில்லை. சைனஸ் என்னும் உடலியல் கோளாறு கத்தியை பதமாய் தீட்டி வைத்துக் கொண்டு காத்திருந்திருப்பான் போல...ஞாயிறு விடியலில் எழுந்து கூட நிற்க முடியவில்லை, இடுப்பு எலும்பு, தொடை, கால்கள் பாதம் கழுத்து என்று எல்லாமே இரணமாய் வலிக்க உறக்கமின்றி ஆக்ஸிஜனுக்காய் தவித்த மூளை தடுமாறி அலைந்து கொண்டிருந்தது...

நிற்க கூட திரணியில்லாத போது  வாழ்க்கையின் கன பரிமாணங்கள் தெளிவாய் பிடிபட்டன. எதையுமே இங்கே சிறப்பித்துக் கூற இயலாது. எல்லாமே அதன், அதன் இயல்பில் நிகழ்கின்றன. இங்கே நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்...நாம் என்ன செய்கிறோம்? நமக்கு என்ன நிகழ்கிறது என்பதைக் கவனிக்க வேண்டியதுதான். கவனித்தல் புரிதலைக் கொடுக்கிறது. புரிதல் தெளிவினைக் கொடுக்கிறது. தெளிவு அமைதியைக் கொடுக்கிறது. அமைதி இறை என்னும் பெருஞ்சக்தியை அடையாளப்படுத்துகிறது.

நான் கவனித்துக் கொண்டிருந்தேன். உடலின் அதிர்வுகள் மாறிப்போய் இரணமாய் வலித்து தடுமாறி கொண்டிருக்கையில் சிதறிக் கிடக்கும் மனம் கவிதை படைக்க முயலவில்லை. கலவி கொள்ள திட்டமிடவில்லை. அரசியல் நிகழ்வுகளை விமர்சிக்கவும், விழிப்புணர்வு கருத்துக்களை பகிரவும், ஒரு நல்ல திரைப்படத்தைக் காணவும், பிடித்த பாடலை கேட்கவும், ஏதோ ஒரு புத்தகத்தில் மூழ்கிப் போகவும் தோன்றவில்லை.... 

கண்களை மூடி மெல்ல உள்ளுக்குள் பார்க்கையில் பிராணன் இல்லாமல் ஆங்காங்கே ஏற்பட்ட சிக்கல்கள் சரியாக இன்னும் ஒரு வாரத்துக்கும் மேலாகலாம் என்று தோன்றியது. நோய் எதிர்ப்பு மாத்திரைகளை ஒரு ஆட்டுக்குட்டியைப் போல விழுங்கிக் கொண்டு மருத்துவர் விருப்பப்பட்ட இடத்தில் எல்லாம் குத்திக் கொள்ளட்டும் என்று கைகளையும் கால்களையும் நீட்டிப் படுத்துக் கொண்டேன். திட்டமிடுகிறேன் என்று சொல்லி தங்களை பெருமைப்படுத்திக் கொள்ளும் எந்த ஒரு மனிதரும் ஒரு எல்லைக்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது. என்ன நிகழவேண்டும் என்று தீர்மானிக்கும் சக்தி இயற்கைக்கு மட்டுமே உண்டு...!

தடுமாறி நின்ற புத்தியை நிதானப்படுத்த முயன்று, முயன்று தோற்று, உடல் என்னும் படகு சரியாய் இருந்தால்தான் மிகப்பெரிய வலி என்னும் வேதனை இன்றி ஒரு கற்பூரம் அணைவது போல வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடியும் என்று எனக்குத் தோன்றியது. தொடர்ச்சியான வலிகளோடு கண்களை மூடிக் கொண்டு வெறுமனே கிடக்க வேண்டியதாய் போயிற்று. எதையுமே எதிர்நோக்காமல் அமைதியாய் கொதிக்கும் உடலைச் சுமந்து கொண்டு சரியாதலுக்காய் காத்திருக்க வேண்டியதாய்ப் போயிற்று....

ஆழமாய் சுவாசிக்க முயன்று கொண்டிருந்தேன். பிராணனை வெளியே அனுப்பும் போதும் இருந்த சுகம் பிராணனை உள்ளே இழுக்கும் போது இல்லை. மூச்சை இழுக்க முடியவில்லை, அது ஆழமாய் உடலுக்குள் படரமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்தது. எனக்கு உறங்க வேண்டும்....என்பது பேராசையாய்ப் போனது அந்தக் கணத்தில்....

எனக்கு பெரிதாய் ஒன்றும் வேண்டாம், எந்த வலியும் இல்லாமல் நான் தூங்க வேண்டும் என்றே விரும்பினேன். முடியவில்லை. தொடர்ச்சியாய் ஏதேதோ எண்ணங்கள் சங்கிலித் தொடராய் என்னை அழுத்த உறக்கமில்லாமல் சுவாசத்துக்கு தவிக்கும் ஜீவனாய் நான் துடி துடித்துப் போனேன். வழக்கமாய் உறக்கம் என்பது படுக்கையில் படுத்த மூன்றாவது வினாடியில்  எந்த விதப்பதட்டமுமின்றி என்னை இறுக்கிக் கொள்ளும், ஆனால் நான் தான்  உறங்குவது இல்லை. எப்போதும் கணிணி முன்பு அமர்ந்து கொண்டு ஊர் வாய் பார்ப்பதும், ஏதோ பார்க்கிறேன் கேட்கிறேன் படிக்கிறேன்  என்றும் என் உறக்கத்தை உதாசீனப்படுத்தி இருக்கிறேன். இதோ நான் உறங்க வேண்டும் என்று நான்கு  நாட்களாய் முயன்று கொண்டிருக்கிறேன்.... முடியவில்லை....

தனிமை அழகானது. ஆழமானது. அதை சரியாக எதிர் கொள்ள உடல் நிலை சரியாயிருக்க வேண்டும். உடல்நலனின் அதிர்வுகள் கொஞ்சம் மாறிப்போனாலும் ரசனைகளும் மாறிப் போகும். அங்கே சிலாகிக்க வைக்கும் சிந்தனைகள் இல்லை. அழகியல் இல்லை. அற்புத அனுபவங்கள் நம் கண் முன் கடந்து செல்கையில் நாம் கண் மூடி கவிழ்ந்து கிடக்க வேண்டியதுதான். உடலாய் இருக்கும் வரையில் எல்லா வலிகளையும் கடந்து செல்லத்தான் வேண்டும். எல்லா அனுபவங்களையும் சலனமில்லாமல் ஒரு விசயம் உள்ளுக்குள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க....

சட் சட் என்று எல்லா தொடர்புகளையும் அறுத்துக் கொண்டு எங்கோ பறந்து செல்ல ஏற்பட்ட ஆசையை பந்தங்கள் என்னும் தொடர்புகள் மறித்துக் கொண்டு மேலே செல்ல விடவில்லை. காலமும், சூழலும், உருவாக்கிக் கொண்டிருக்கும் கடமைகளும் மிச்சமிருக்கின்றன....

காத தூரம் நான் செல்ல வேண்டும்...
என் கனவுகள் அழிய அழிய  கனவுகண்டு கொண்டே
ஒரு நிசப்த பெருவெளிக்குள்
சட்டென விழுந்து நினைவுகளின் 
எச்சங்கள் எல்லாம் சாம்பலாய்ப் போக...
மீண்டும் மீளமுடியாத ஒரு 
பெரு நித்திரை கொள்ள வேண்டும்....
யாருமறியா காலப் பெருவெள்ளத்தின் கணக்கில்....
எங்கே ஒளிந்து கிடக்கிறதோ...
எனக்கான சமன்பாடு...?


தேவா. S2 comments:

”தளிர் சுரேஷ்” said...

தனிமை அழகானது! அதை எதிர்கொள்ள உடல்நிலை சரியாக இருக்க வேண்டும்! அருமையான கருத்து! நல்லதொரு பகிர்வு! நன்றி!

P.P.S.Pandian said...

நமது எண்ணம் சிந்தனை மீதான தாக்கங்கள் உடல் நலன் சார்ந்த மன நலன் அடிப்படையில் தான் இருக்கும் . என்பதை உங்களது எழுத்துகளில் தெரிவித்துள்ளீர்கள் ....P.Sermuga Pandian