Pages

Monday, October 6, 2014

எதுவாய் இருந்தாய் நீ...?!


அந்த நதிக்கரையில் யாருமில்லை என்றுதான் வெகு நேரம் நான் நின்றிருந்தேன். ஆமாம் அது அந்தி நேரம்தான். வழக்கப்படி அந்தி நேரம் ஏதோ ஒரு செய்தியை மெளனமாய் பகிர்ந்து கொண்டே நகர்ந்து கொண்டிருந்தது. பலவீனப்பட்ட பகல், வலுப்பெற்றுக் கொண்டிருக்கும் இரவு இவையிரண்டுக்கும் இடையே....

நகர்ந்து கொண்டிருந்த நதியை உற்று நோக்கிக் கொண்டிருந்தேன் நான். கரையோர நாணலொன்று நதிக்குள் வளைந்து  மெதுவாய் தடவி ஏதோ எழுத முயன்று கொண்டிருந்தது. பறவைகள் எல்லாம் கூடு திரும்பிக் கொண்டிருந்தன. வானத்தில் மிதந்து கொண்டிருந்த மேகங்களை பார்த்த போது யாரோ ஒரு தேர்ந்த ஓவியன் மனமற்ற நிலையில் வரைந்திருப்பானோ என்று தோன்றியது எனக்கு....

சிறு சிறு நீர்ப்பூச்சிகள் நதியில் பாடிக் கொண்டே மிதந்து கொண்டிருந்தன. எதற்காகவாவது காத்திருக்கிறாயா என்று அந்தி வேளையில் தலை சீவி பொட்டு வைத்து தலை பின்னலை சரி செய்த படி கேட்குமொரு இளம் பெண்ணாய் எட்டிப் பார்த்து கேள்வி கேட்ட நிலாவிடம் உன்னைத்தான் காதலிக்கிறேன்... உனக்காகவே காத்திருக்கிறேன் என்று நான் சொல்ல நினைத்தது அதற்கு தெரிந்திருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. அருகருகே இருந்தோம் நானும் நதியும்.... ஆனாலும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை....

மெளனமாய் நகர்ந்து கொண்டிருந்த அந்த நதியிடம் ஒரு அவசரமும் இல்லை. மெல்ல நதியோரம் அமர்ந்து ஒற்றை கை விரலை  வைத்து வருடிக் கொடுத்தேன். நதியின் நடுவில் விழுந்து கிடந்த நிலவை கொஞ்சித் தூக்கி முத்தமிடவேண்டும் என்று தோன்றிய என் ஆவலை எப்படி நிறைவேற்றுவேன்....? என்ற ஆயாசம் வேறு எனக்கு.... தூரத்தில் ஒரு ஆட்டு மந்தை நகர்ந்து கொண்டிருப்பது எனக்குத் தெரிந்தது. ஆடுகளின் சப்தமும் மேய்ப்பவனின் சப்தமும் மெலிதாய் என் செவிகளைத் தடவி மெஸ்மரிசம் செய்யத் தொடங்கி இருந்தன....

இருளத் தொடங்கியவுடன் கூடடைய வேண்டும் இல்லை வீடடைய வேண்டும் என்றுதான் எல்லா உயிர்களும் விரும்புகின்றன, ஆனாலும் பாம்புகள் இரவில்தான் தன் இருப்பிடத்திலிருந்து வெளியே எட்டிப்பார்க்குமாம். எல்லா விலங்குகளும் இரவில் ஓய்வெடுத்துக் கொள்வதில்லையாம். பல இரவில்தான் வேட்டையாடவே கிளம்புமாம். எங்கிருந்தோ யாரோ யாரையோ கூவி அழைத்ததை சுற்றிலும் இருந்த மலைகள் மீண்டும் சொல்லிக் காட்டின.

இந்த வனத்திற்குள், இந்த மலைகளுக்கு நடுவே இருக்கும் சமவெளியில், நகரும் இந்த நதியில், தொடர்பில்லாத ஏதேதோ இரைச்சல்களில், எதுவுமே யோசிக்கத் தெரியாமல் சுற்றி இயங்கும் சூழலில் மூழ்கிக் கிடக்கும் நிதானத்தில்....

ஏதோ ஒரு ரகசியமொன்று இருப்பதாய்த்தான்  எனக்குத் தோன்றுகிறது.

நட்சத்திரங்கள் கண் சிமிட்ட ஆரம்பித்த அந்த இருளான வானத்தை தலையுயர்த்தி பார்த்தபடியே கண்கள் விரித்து வானம் குடிக்க ஆரம்பித்தேன். எவ்வளவு பெரியது இது. எவ்வளவு ஆச்சர்யம் இது. எத்தனை பிரம்மாண்டம் இது. கோடாணு கோடி நட்சத்திரங்களும் அடர்ந்து கிடக்கும் இந்த பிரபஞ்சம் என்னதான் சொல்ல முயலுகிறது..? அது கூற முயலும் ஏதோ ஒன்றாகவோ அல்லது கூற முயலாத ஒரு உன்மத்தமான அடர் நகர்வாகவோ நானும் தானிருக்கிறேன். நினைத்துப் பார்க்கவே உடல் கூசியது....

நதிக்கரையோரமிருந்த புல்வெளியில் மல்லாந்த படியே தாயின் முலை பற்றி பாலருந்தும் குழந்தையாய்....வான் பற்றி உறிஞ்சத் தொடங்கியிருந்தேன் நான்....

எதுவாய் இருந்தாய் நீ...
எங்கே தோன்றியது உனது கனவுகள்...?
யார் தீட்டியது இந்த வர்ணங்கள் நிறைந்த ஒவியத்தை?
பட்டாம் பூச்சியையும்... கற்பாறைகளையும்...
அதிர்ந்து திரியும் வக்கிர மிருகங்களையும்
நீதானா படைத்தாய்...?
ப்ரியங்களாய் பூக்கிறாய்...
எரிமலையாய் நெருப்பை  உமிழ்கிறாய்...
எப்படிப் பார்த்தாலும் 
என் ப்ரியம் நீதான்...
என் காதல் நீதான்....

கை விரித்து வானை கட்டித் தழுவிக் கொண்டேன். நகர்ந்து கொண்டிருந்த நதியோடு நகர்ந்து கொண்டிருந்த பொழுதினைப் பற்றி எனக்கென்ன கவலை...?
தேவா சுப்பையா...Photo Courtesy: வெண்முரசு
2 comments:

Sasi Kala said...

யாதுமில்லா நதிக்கரை என்னுள் எதுவாகவோ இருக்கவோ செய்தது படித்து முடிக்கும் வேளையில்...

சே. குமார் said...

தன்னந்தனியாக நதிக்கரையில் நின்று நிலவை ரசிக்க வைத்தது தங்கள் பகிர்வு...

எப்பவும் போல் நதிக்கரைக்கே இழுத்துச் செல்லும் அழகிய எழுத்து...

வாழ்த்துக்கள் தேவா அண்ணா...