Skip to main content

நான், அவள், மற்றும் மழை....!














பார்வைகளால் நீயும், நானும் மின்சாரங்களை பகிர்ந்து கொள்ளவில்லை. உன்னிடம் நானும் என்னிடம் நீயும் வழக்கமான மொழிகளில் வார்த்தைகளால் விளையாடிக் கொள்ளவும் இல்லை. தேவைகளின் பொருட்டும் எதுவும் நம்மை இணைக்கவில்லை. நீ இருக்கிறாய். நானும் இருக்கிறேன். இருத்தலை ரசிக்கும் ஒரு கம்பீரத்துக்கு காதல் என்று பெயர் கொடுக்க எனக்கு விருப்பமில்லாதது உனக்கு விருப்பமாயிருந்தது என்றாய்.....

ஒரு மழை வர எத்தனித்துக் கொண்டிருந்த மதியத்துக்கும் மாலைக்குமான இடைவெளியில் கருமையான மேகங்களின் அலைதலை இருவருமே உள் வாங்கி நடந்து கொண்டிருந்தோம். இருவருக்குமான இடைவெளிகளில் நமது நெருக்கம் நிரம்பிக் கிடந்தது.

மழையை நாமிருவருமே எதிர்பார்த்தவாறு நடந்து கொண்டிருந்த போது உனக்கு மழை பிடிக்குமா? என்று கேட்டாய். கேள்விக்கான பதிலை நான் பகிரும் முன் நீயே சொல்லி விட்டாய் யாருக்குத்தான் மழை பிடிக்காது? என்று...ஆனால் அப்போது அடித்த காற்றில் பறந்த உன் சுடிதாரின் துப்பட்டா மீது நான் மையல் கொண்டிருந்து உனக்கு தெரியாது...

காற்றோடு கூடிக் கூடி
உயிர் பெற்று விட்டாயா
ஒற்றை துப்பட்டாவே?

இல்லை..இல்லை....

அவள் உடலோடு
ஒட்டிக் கிடந்த உன்னை
காற்று கவர்ந்து சென்று விடும்
என்று துடி துடிக்கிறாயா?

நான் என் யோசனைகளில் எங்கோ இருந்தேன்....உன் துப்பட்டாவை பார்த்த படி அதன் வெண்மை நிறத்தின் ஓரங்களில் இருந்த இளம் சிவப்பிலும் மஞ்சளிலும் நான் விழிகளால் நீந்திக் கொண்டிருந்தேன்......! அதே நேரம் உன் கற்றைக் கேசம் காற்றில் கலைந்து நானும் தான் இருக்கிறேன் என்று காற்றில் சில கவிதைகளை எழுத முயன்று கொண்டிருந்த வேகத்தில் நான் மெல்ல சூழலுக்குள் வந்தேன்....

என்ன மழையை நினைத்து கனவோ..? என்று நீ என் செவிகளுக்கு அனுப்பிய சங்கீதத்தில் கலைந்த நான்...ஆமாம் மழை பற்றிய கனவுதான்...என்றேன். மழையோடு ஒட்டிய உன் நினைவுகளைப் பற்றிக் கொண்ட என் நினைவுகளை பற்றியதுதான் என் கனவு....! எல்லா நிகழ்வுகளையும் பொறுமையோடு கவனித்துக் கொண்டிருந்த வானம், அதற்கு மேல் தனது பொறுமையை தக்க வைக்க முடியாமல் எழுதிய கவிதையை மழையாய் பூமிக்கு அனுப்பி வைத்தது....

சாதரண நாட்களில் ஆள் அரவமற்றே இருக்கும் அந்த பெசண்ட் நகரின் ஆழமான தெருக்களூடான பரந்த சாலையில் மழையை தொட பாக்கியமற்ற மனிதர்கள் எல்லாம் ஓடிப் போய் மறைந்து கொண்டார்கள்...

நான், அவள் , மழை மற்றும் எங்களை எடுத்துச் செல்ல ஒரு மரங்களடர்ந்த சாலை...! துப்பட்டா மழையில் நனைந்து ஒடுங்கிப் போய் அவளோடு ஒட்டிக் கிடந்தது. அவள் என்னிடம் மழையில் நனைவோமோ என்று அவள் கேட்ட வார்த்தைகள் என்னை நனைத்தது...! கூலிகள் எல்லாம் கரும்பு தின்ன யாரச்சும் வாங்குவார்களா? என்று யோசித்தபடியே அந்த தித்திப்புக்குள் என்னை திணித்துக் கொண்டேன் சரி என்று சொன்ன படி...

காலம், காலமாய் மழை மனிதர்களின் வாழ்வில் எப்போதும் ஒரு கிறக்கத்தை உண்டு பண்ணும் வஸ்து. சூட்சும கவிதை. சூழலின் குழந்தை. மனதுக்குப் பிடித்த மழலை. நீ சொன்னாய் நான் கேட்டுக் கொண்டே சொன்னேன் காதலுக்கும் மழை பெரும் கருவாய்த்தான் காலங்கள் தோறும் இருந்து வந்திருக்கிறது...? என்றேன், ஆனால் நீயோ காதலுக்கு காதல்தான் கரு என்று சொல்லி முடித்து விட்டு என்னை பார்த்தாய்...! அந்த பார்வையில் ஏதோ ஒரு மொழி எனக்குப் பிடிபட அதை உள்வாங்கிக் கொண்டு உன் உதடுகளின் மீது ஊர்ந்து கொண்டிருந்த மழை நீரை நான் உற்று நோக்கினேன்....

மேகமுடைந்து
ஜனித்து விழுந்து
மண்ணைத் தொடும் முன்
நீ மோட்சம் அடைந்து விட்டாயா...
நீர்க் குட்டியே?

மெதுவாய் நான் சொன்னக் கவிதையை கேட்டு விட்டு சப்தமாய் சிரித்தாள்....! நான் மழையின் குளிரைத் தாண்டிய ஒரு வெம்மைக்குள் பயணப்பட்டுக் கொண்டிருந்தேன். காதலை போதிக்கவும், காதலில் சாதிக்கவும் ஒன்றுமில்லை. காதல் என்பது சறுக்கலும் இல்லை வழுக்கலும் இல்லை அது மனம் மனதோடு தழுவும் தழுவல்.

ப்ரியங்கள் என்னும் உணர்வுகள் இருவருக்குள் தங்கு தடையின்றி சென்று வர முடியுமெனில் அவர்கள் காதலிக்கறார்கள் என்றுதான் அர்த்தம். பெரும்பாலும் மனிதர்களுக்கு இப்படியான ஒற்றைக் காதலும் காதலியும் கிடைத்துதான் விடுகிறார்கள். மிகையாக நிகழும் இது போன்ற நிகழ்வுகள் ஆனால்....

காதலை கட்டுப்படுத்த முயலும் போது, காதலியின் காதல் தனக்கு மட்டுமே வேண்டும் என்று ஒரு காதலன் எண்ணும் போதும், அல்லது காதலி கருதும் போது அங்கே காதல் என்ற ஒன்று உடைந்து போய் விடுகிறது. இதோ.. இதோ.. இதோ இந்த மழையை யாரேனும் கட்டுக்குள் வைக்க முடியுமா? இயலாதல்லவா? மழை எவ்வளவு எல்லோருக்கும் பொதுவானதோ அவ்வளவு பொதுவானது காதலும்.

பிடிக்கும் நிலத்தில் விழும் நிலையில் வித்துக்களில் ஊறி செடிகளாய் கிளைத்து நிற்கும், பற்ற முடியாத நிலத்தில் பரவிப்பாய்ந்து மண்ணுக்குள் சென்று மறைந்தே விடும் இல்லையே கொளுத்தும் வெயிலில் தன்னை மறைத்து மீண்டும் ஒரு மேக சுழற்சிக்குள் சென்று விடும். காதலும் மழை மாதிரிதான் தன்னை வாங்கும் மண்ணுக்குள் வசதியாய் மழை நீர் எப்படி தன்னை கரைத்து மறைந்து போகிறதோ அதே போல தன்னை வாங்கும் மனிதனிடம் ஒடுங்கிக் கொள்கிறது.

எனக்கு உன்னை பிடிக்கிறது என்று வைத்துக் கொள்ளேன். அதை நான் சொல்ல வேண்டும் என்று நீ எதிர்பார்ப்பது உனது சுயநலம் அப்படி நான் சொல்வதும் சுயநலம். எனக்குப் பிடித்தது சொல்லாவிட்டாலும் பிடித்ததுதான். எனது இயல்புகளில் எனது விருப்பங்கள் எப்போதும் நிறைந்திருக்கும். விருப்பங்களை வைத்து மனிதர்களை மனிதர்கள் எப்போதும் எடை போடுவதில்லை மாறாக வார்த்தைகளுக்கும் அதன் மூலமான ஒரு நாடக வாழ்க்கைக்கும் மனிதர்கள் முக்கியத்துவம் கொடுத்து விடுவாதல் இயற்கையான காதல் பெரும்பாலும் மனிதர்களால் கொல்லப்பட்டுதான் விடுகிறது.

உனக்கு பிடித்தவளை நேசிக்க நீ மட்டுமே போதுமானவன். உன் சுயநலத்தின் முதல் படி அவள் உனக்கு மட்டும் வேண்டுமென்பது, அடுத்த படி அவளை காமவயபடுத்துவது, மூன்றாம் படி பிள்ளைகள் பெறுவது இப்படி சுயநல கம்பிகளுக்குள் அகப்பட்டுக் கொண்டு காதலைக் காணோம் என்று தேடினால் பெண்ணின் கழுத்தில் ஆண் கட்டும் மஞ்சல் கயிற்றிலா மறைந்திருக்கிறது காதல்?

மனித மயக்கத்தில் காதலென்ற சொல் மட்டும்தான் எஞ்சி நிற்கிறது அதன் உண்மைப் பொருள் உறிஞ்சப்பட்டு வெற்று எலும்புக் கூடாய் இருக்கும் ஏதோ ஒன்றைத்தான் காதல் என்று இன்றூ மியூசியத்தில் வைத்துக் கொண்டு நாம் காட்சிப்படுத்திக் கொண்டிருக்கிறோம். காதலின் வேர்கள் சூட்சுமமானவை அது எப்போதும் நேசிப்பை பகிங்கரப்படுத்துவது இல்லை.......

ஆமாம்.. நீ யாரையாவது காதலிக்கிறாயா.....???????

என்று என்னிடம் கேட்டு விட்டு சப்தமாய் சிரித்தவளுக்கு வலப்புறத்தில் அவளின் வீட்டுக் காம்பவுண்ட் சுவரும் கேட்டும் இருந்ததில் வெகுதூரம் நடந்து விட்டோம் என்று தெரிந்து விட்டது.

அவள் என் மறுமொழிக்கு காத்திரமால் அவள் வீட்டு இரும்புக் கேட்டினுள் சென்று உள்ளிருந்து எனக்குள் செலுத்திய அர்த்தம் பொதிந்த அன்றைய பார்வையோடு மீண்டும் ஒரு முறை கேட்டாள்..ஒரு புன்னைகைய உதட்டில் தேக்கிக் கொண்டு...

'நீ யாரையும் காதலிக்கிறியான்னு கேட்டேன்.....' அவள் இசைத்தாள்....

மழை நின்றிருந்தது.....! நான் வெளுத்திருந்த வானத்தை பார்த்தபடி என் தலைமுடிக்குள் விரல் கொண்டு கோதி மழை நீரை வடித்த படி... மெதுவாய் சொன்னேன்...

" எனக்கு தெரியலை வாணி....."


அப்போ கிளம்பவா? பாய் என்றேன்..! மறு மொழியாய் எனக்கு ஒரு பாய் வந்து விழுந்தது.....

தெருவின் முனை வரை தண்ணீர் சொட்டும் உடையோடு நடந்து தெரு முனையை அடைந்தவுடன் தலை திருப்பி அவளின் வீட்டினைப் பார்த்தேன்...

அவள் என்னைப் பார்த்துக் கொண்டு இன்னமும் நின்று கொண்டிருந்தாள்....! நான் மெளனமாய் அந்த வீதியைக் கடந்து நடந்து கொண்டிருந்தேன்.....

வானம் முழுதாய் வெளுத்திருந்தது.


தேவா. S


Comments

வானம் தெளிவாகிடுச்சு..........
ஹேமா said…
அப்போ....காதலைச் சொல்லாமல் வைத்திருந்தாலும் இடியும் மின்னலும் மழை வராத அவதிதானே !

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த