Pages

Sunday, May 22, 2011

கல்லாதது உலகளவு...!


நிலவின் அழகை ரசிப்பதில் இருக்கும் சுகம் ஆராய்வதில் கிடைக்குமா? மூலக்கூறுகளும், சமன்பாடுகளும், விதிமுறைகளும் கற்றிருந்தாலும் அதை மறத்தல்தான் சுகம்.

சைவ சித்தாந்தத்தை கைக் கொண்டு சிவநெறியில் வாழ்ந்து சூன்யமே சத்தியத்தின் மூலம் என்று தெளிந்த சிவவாக்கிய சித்தர் பின்னாளில் வைணவத்தை தழுவி இறைவனுக்கு உருவ வழிபாடு செய்து திருமழிசை ஆழ்வாராக மாறினார் என்று சொல்வார்கள்.

வாழ்க்கையில் தன்னின் சுயத்தை காண விரும்பும் ஒருவனுக்கு எதிரே ஒரு ஆப்ஜக்ட் தேவைப்படுகிறது. மனோபலம் உள்ளவர்கள் தன்னை உள்நோக்கும் சக்தி வந்தவுடன், தன் உடலை எது இயக்குகிறதோ அதுவே இந்த பிரபஞ்சத்தையும் இயக்குகிறது என்ற உண்மையை உணர்ந்தவர்கள் உருவங்களை கலைந்து விட்டு வெளியே வந்து விடுகிறார்கள் ஆனால் அது ஒன்றும் அவ்வளவு எளிதான செயல் இல்லை.

கடவுள் இல்லை என்று அடித்து மறுப்பவர்களில் எல்லோருமே மன திடமுடன் சொல்கிறார்கள் என்று சொல்ல முடியாது. இல்லை...இல்லை என்று சொல்லும் போது இருக்குமோ என்ற எண்ணமும் கூடவே தொடர்வது மறுக்க முடியாதது. இப்படி சொல்வதாலேயே மனதிடன் இல்லாதவர்கள் இல்லையென்றே சொல்லவும் முடியாது...

மனதிடன் - அகங்காரங்கள் அற்றது, நிலையாமை உணர்ந்தது, சக மனிதரில் தவறு செய்தவர் இருந்தாலும் மன்னித்து அரவணைத்து செல்வது, மன்னிப்பு கேட்க தெரிவது, வன்முறைகள் தேவைப்படும் இடத்தில் வன்முறைகளை தப்பாமலும், மெளனங்களில் பூரண மெளனமாயும் இருப்பது, கோபங்களை தவறுகளில் காட்டி மனிதர்களை நேசிப்பது

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

மன திடன் = அகங்காரம் இல்லாத தன்னம்பிக்கை + அரவணைக்கும் பக்குவம் = மூல உண்மை.

ஏன் இவ்வளவு சொல்கிறேன் என்றால், பிடித்தமான விசயங்களை மனிதர்கள் செய்யும் போது அவர்களின் பிடித்தமான விசயங்களை உற்றுப் பார்த்து ஆராயாதீர்; அப்படி செய்வது ஒவ்வொருவரின் மன திருப்திக்காக மேலும் மன வலுவுக்காக.....!

அரசியலையும் இலக்கியத்தையும் பேசுவது உங்களது ஈகோவுக்குக் தீனி போடுகிறது, சுவாரஸ்யமாயிருக்கிறது என்றால் ஒரு நடிகனை நேசிப்பதும் அவனுக்காக கதறுவதும் இன்னொருவனுக்கு சுவாராஸ்யமாய் படுகிறது.

கடவுளை மறுப்பது ஒருவரின் சுவாரஸ்யம் என்றால் ஏற்பது இன்னொருவரின் சுவாரஸ்யம். உங்களுக்கு எப்படி அவர் அபத்தமாய் தெரிகிறாரோ அப்படித்தான் அவருக்கும் நீங்கள் தெரிகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

கொஞ்சம் விசயம் தெரிந்துவிட்டால் போதும் உலகில் இருக்கும் எல்லாவற்றையும் சரி தவறு என்று நிறுவி பேசி விடலாம். இப்படி கொஞ்சம் விசயம் தெரிந்த மிகைப்பட்ட பேர்கள் உலாவும் இடமாக இணைய உலகம் இருப்பதால் எல்லோரும் தனக்கு நிறையவே தெரியும் என்று எண்ணிக் கொள்கிறார்கள்...

நான் சொல்வதே இறுதி உண்மை என்று தத்தமது அகங்காரங்களை எடுத்து உரசிக் கொள்கிறார்கள், ஆனால் உலகில் எத்தனை கோடி மனிதன் இருக்கிறானோ அத்தனை கோடி கொள்கைகளை மனம் ஏற்படுத்தி வைத்திருக்கிறது. இங்கே ஒவ்வொருவரின் வசதிக்கு ஏற்ப அதனை எடுத்து கையாளுகிறார்கள்.

கொடி பிடித்து ரோட்டில் இறங்கி ஒரு கட்சிகாக வாழ்க, ஒழிக என்று கோசம் போடுபவனை கோவிலில் கற்பூரம் ஏற்றி சாமி கும்பிடுபவன் முட்டாள், பைத்தியக்காரன் என்று சொல்கிறான், கற்பூரம் ஏற்றி சாம்பி கும்பிடுபவனை எனக்கு உலக அரசியல் எல்லாம் தெரியும் இவன் என்ன முட்டாளாக இருக்கிறானே என்று கொடி பிடிப்பவன் நினைக்கிறான்.

இதுதான் மாறி மாறி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இவையெல்லாம் கடந்து வர வாழ்க்கையின் அனுபவங்களின் மூலம் புலன் மயக்கத்தால் தோன்றும் மமதைகளை விட்டொழிக்க வேண்டியிருக்கிறது. கூவி, கூவி பேசுகிறார்கள், விரல் நுனியில் உலக விசயங்களை ஒரு இயந்திரத்தைப் போல ஒப்பிக்கிறார்கள். நான் யார் தெரியுமா? என்று கொக்கரிகிறார்கள்...இவன் செய்தது சரியில்லை என்றூ ஒரு கூட்டம் குதிக்கிறது அவன் சொல்வது சரியில்லை என்று ஒரு கூட்டம் குதிக்கிறது

மொத்ததில் எல்லாமே அபத்தங்களின் கூட்டாய் ஒரு சர்க்கஸ் கூடாரத்தின் கோமாளிக் கூத்தாய் வெளிப்படுகிறது. அதிகம் புத்தகம் வாசித்தவன் அதிகம் விசயங்கள் தெரிந்தவன் அடங்கியிருக்க வேண்டாமா? இவன் புத்தியை அறியாதவர்களிடம் காட்டி கொக்கரிக்கவா பயன்படுத்துவது? பண்படு என்பதிலிருந்து வந்ததுதானே பண்பாடு என்ற சொல். கல்வி பண்பை கொடுக்க வேண்டாமா? மாறாக அகங்காரத்தை கொடுத்தால் கற்றது கல்வியா?

உவப்ப தலை கூடி உள்ளப் பிரிய வேண்டாமா? உவப்பத் தலை கூடத் தெரியவில்லை எனில் நீ என்ன புலவர்? உம்மிடம் உள்ளது என்ன புலமை? நீ என்ன கல்விமான்?

மனிதராய் பிறந்து விட்டால் ஏதேனும் ஒரு நிலைப்பாடு எடுத்து ஒரு சித்தாந்த கொட்டிலுக்குள் அடைபட்டு வாழ வேண்டுமென்ற பொது புத்தியில், எனக்கு எந்த நிலைப்பாடுமில்லை, உமது கூச்சல்கள் எல்லாம் எமக்குத் தேவையுமில்லை என்று ஒதுங்கி கூட இருக்க விடுவதில்லை ஆணவத்தை மனமாகக் கொண்ட மனிதர்கள்....

நீ கருத்து சொன்னாயா நீ இப்படிப்பட்டவன், சொல்லவில்லையா அப்படிப்பட்டவன், மெளனமாய் இருக்கிறாயா நீ ஒரு கோழை என்று விமர்சனங்களை நம்மை நோக்கிப் பாய்ச்சும் மடைமைகளின் பின்னால் ஒரு விலங்கின் புத்திதானே இருக்க முடியும்?

காலம் காலமாக அறிவினை உணர்ச்சியைத் தூண்டுவதற்கே பயன் படுத்தி பயன்படுத்தி மழுங்கிப் போய் கிடக்கிறது நமது சமுதாயம் மாறாக அறிவினை கொண்டு நமது உள்ளுணர்வை எழுப்பும் ஒரு பயிற்சி பற்றி யாருக்கும் தெரியாது. உள்ளுணர்வு விழித்தால் எதிராளியின் உள்நோக்கம் தெரியும், எதிராளியின் தவறுகள் புரியும், தவறுகள் புரிந்த பின் அவரிடம் எப்படி சண்டையிட மனம் வரும்?

புரிதல்களின்றி வழியைத் தவறவிட்ட ஒரு மனிதனை வழிகள் தெரிந்த மனிதன் தண்டித்தலும், எள்ளி நகையாடுதலும், எப்படி சரியான வழிமுறையாகும்? வழியற்றவனின் வாதங்களை எல்லாம் கொண்டு கோபம் கொண்டால் வழியை அறிந்திருந்தும் நாம் மூடர் தானே? முரண்களற்றது அல்ல வாழ்க்கை அதே நேரம் எல்லோரும் எல்லாமும் அறிந்திருப்பர் என்று எதிர்பார்த்தலும் சரியன்று.....

புரியாத மனிதர்களின் கோபங்களில் அவரை சரிசெய்ய முனையாதீர். காத்திருங்கள் சரியான தருணத்திற்காக, சரியான தருணத்தில் உமது தெளிவினை ஒரு கூர்வாளை நெஞ்சில் இறக்குவது போல இறக்கியே விடுங்கள். தெரிந்தவன் தெரியாதவன் என்று எல்லோரும் ஒரே இயல்பினன் தான்....சூழல்கள் விதைத்த பாடங்களில் மூளைகள் இடமாறி அவர்களை சிந்திக்க வைத்திருக்கலாம்....

நான் சரியானவன் என்று ஏகபோக உரிமை கொண்டு உரக்க உரக்க சப்தமிட்டு கூட்டத்தை கூட்டி தன் புஜ பலம் காட்டுபவன் முட்டாள்....

அன்பால் தன் புரிதலை வெளிப்படுத்தி, சத்தியத்தை மூளைகளுக்கு ஏற்றி தமது செயலால் சுற்றியிருப்பவர்களை கவர்பவன் ஞானி....!

ஞானிகள் முக்காலமும் போற்றப் படுவார்கள்!!!!


தேவா. S


5 comments:

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//மனதிடன் - அகங்காரங்கள் அற்றது, நிலையாமை உணர்ந்தது, சக மனிதரில் தவறு செய்தவர் இருந்தாலும் மன்னித்து அரவணைத்து செல்வது, மன்னிப்பு கேட்க தெரிவது,//

.....இப்படி மனோதிடன் இருந்திட்டா எந்த பிரச்சினையும் இல்லைங்க. கவர்ந்த வரிகள்..!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//கூவி, கூவி பேசுகிறார்கள், விரல் நுனியில் உலக விசயங்களை ஒரு இயந்திரத்தைப் போல ஒப்பிக்கிறார்கள். நான் யார் தெரியுமா? என்று கொக்கரிகிறார்கள்..//

....இப்படி நிறைய பேர் பார்த்து இருக்கிறேன்.. நுனிப்புல் மேய்ஞ்ச மாதிரி.. ரெண்டு நியூஸ் பேப்பர்-ல ஹெட் லைன் நியூஸ் படிக்க வேண்டியது.. அப்புறம் தனக்கு தான் உலக விஷயம் அத்தனையும் தெரயும்னு குதிக்க வேண்டியது..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//நீ கருத்து சொன்னாயா நீ இப்படிப்பட்டவன், சொல்லவில்லையா அப்படிப்பட்டவன், மெளனமாய் இருக்கிறாயா நீ ஒரு கோழை என்று விமர்சனங்களை நம்மை நோக்கிப் பாய்ச்சும் மடைமைகளின் பின்னால் ஒரு விலங்கின் புத்திதானே இருக்க முடியும்?//

...வாவ்.. எவ்ளோ பெரிய கருத்தை ,எளிமையா...ரொம்ப அழகா சொல்லிட்டீங்க.. :)))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

// உள்ளுணர்வு விழித்தால் எதிராளியின் உள்நோக்கம் தெரியும், எதிராளியின் தவறுகள் புரியும், தவறுகள் புரிந்த பின் அவரிடம் எப்படி சண்டையிட மனம் வரும்?//

....உள்ளுணர்வை எழுப்ப என்ன பயிற்சி செய்யனும் சொல்றீங்க?

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//அன்பால் தன் புரிதலை வெளிப்படுத்தி, சத்தியத்தை மூளைகளுக்கு ஏற்றி தமது செயலால் சுற்றியிருப்பவர்களை கவர்பவன் ஞானி....!//

...Simply great.. Wonderful post.. :)