Pages

Sunday, December 1, 2013

தேடல்....01.12.2013!


ஒன்றும் இல்லை என்று தோன்றிய கணத்தில்தான் எனக்கான சுதந்திரப் பெருங்கதவுகள் திறந்து கொண்டன. யாரும் யாருக்கும் எதுவும் செய்து விட முடியாது என்று உணர்ந்த போது சுற்றி இருக்கும் எந்த ஒரு மனிதரையும் சூழலையும் குறை சொல்ல எண்ணம் வரவில்லை. இது ஒரு பரிபூரணமான விடுதலை. செயல்களுக்குள் நின்று கொண்டு விளைவுகளைக் கணக்குப் போட்டுக் கொண்டிருந்த, உருவாக்கிக் கொண்ட சிக்கல்கள் நகர்ந்த நிலை. எந்த ஒரு கற்பனைக்குள்ளும் சிக்கிக் கொள்ளாத தத்துவங்களுக்குள்ளும் சித்தாந்தங்களுக்குள்ளும் அடைபட்டுக் கொள்ளாத பெரும் திறப்பு.

கருத்துக்களைக் கொண்டு அந்த கதவினைத் தட்டத்தான் வேண்டும் ஆனால் அந்த திறப்புக்கும் கருத்துகளுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. தத்துவங்களின் மீதேறி பயணித்துதான் அங்கே செல்லவேண்டும் ஆனால் அங்கே இருப்பது தத்துவங்களுக்கும் சித்தாந்தங்களுக்கும் சற்றும் தொடர்பில்லாதது. ஒரு நொடியில் எல்லாம் கழற்றி எறிந்தால் மட்டுமே அந்த பெருவெளிக்குள் ஊடுருவ முடியும். யாரும் யாருக்கும் சொல்லி மாற்ற முடியாது என்ற புரிதலை அந்த கதவிற்கு அப்பால் போனபின்பு உணர முடிந்தது.

தேடிக் கொண்டிருப்பவர்கள் தேடி வருவார்கள். கேள்விகள் கேட்ட பின்பு சொல்லும் பதிலுக்குதான் அர்த்தம் இருக்கிறது. பதில்களை சொல்லிக் கொண்டே இருந்தால் கேள்விகளே தெரியாதவர்களுக்கு அது அனாவசியமாய் தெரியும். இங்கே இந்த வாழ்க்கையில் துன்பப்பட ஒன்றுமே இல்லை. ஆனந்தத்தில் மூழ்கி அனுபவிக்க மட்டுமே எல்லாமே படைக்கப்பட்டிருக்கிறது. இன்பத்தை இயற்கை உருவாக்குகிறது. துன்பத்தை மனிதன் உருவாக்கிக் கொள்கிறான். துன்பங்கள் யாவுமே நாம் உருவாக்கிக் கொண்டவை. எல்லோரும் ஒரே மாதிரியாய் இருக்க முடியாது. ஒவ்வொரு  மனிதருக்கும் ஒவ்வொரு வாழ்க்கை அவரவர் சூழலுக்கு ஏற்றார் போல, அவர் உடல் தாங்கி இருக்கும் ஜீன்களில் பொதிந்து கிடக்கும் பாரம்பரியத்துக்கு ஏற்றார் போல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இன்னொருவர் போல நான் இருக்க ஆசைப்பட்டு என் முன் இருக்கும் வாழ்க்கையை மாற்ற முயலும் போது....பிறக்கிறது சிக்கல்.

ஒரு மிகப்பெரிய மலர்ச்சி என்னுள் இருக்கிறது என்று உணர்ந்த தருணத்தில் புறத்தில் நான் உருவாக்கி வைத்திருந்த கட்டுப்பாடுகளும், சமூகம் திணித்து வைத்திருந்த சட்ட திட்டங்களும் உடைந்து விழ ஆரம்பித்தன. இயல்பே சத்தியம் என்று இருக்கையில் இங்கே சத்தியத்தை போதிக்க ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் ஓராயிரம் வழிமுறைகள் எனக்கு அபத்தமாய் தெரிந்தது. கடவுள் என்னும் கோட்பாடு வெகு சிக்கலாக்கப்பட்டு காலம் காலமாய் மனித மனங்களின் ஆழத்தில் இருந்து அழிக்க முடியாத அளவிற்கு அது பதிந்து போயிருப்பதை உணரமுடிந்தது. தேவைகளுக்காக, மனதின் பயத்திலிருந்து விடுபட, குற்ற உணர்ச்சி இன்றி வாழத்தான் கடவுள் இங்கே பயன்படுகிறார் அதனைக் கடந்த ஒரு பேரானந்தத்திற்குள் இந்த கடவுள் என்னும் வரைமுறையற்ற பெருவெளி கூட்டிச் செல்லும் என்பதுதான் இதுவரை மிகையானவர்கள் அறியாத பேருண்மை.

எதையுமே யாருக்கும் சொல்ல வேண்டாம். பகிர்தல் கூட ஒருவிதமான அபத்தம். தற்பெறுமை பேசுதல் போல அது என்று எனக்கு ஒரு வினோதமான மனோநிலை கடந்த சில வாரங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. என்ன இது..? அது இப்படி இது இப்படி என்று சொல்லுக் கொள்வது. எனக்கு சரி என்றால் நான் போகவேண்டியதுதானே...? ஊருக்கு என்ன உபதேசம் என்று ஒரு குரல் என்னை உறுதியாய் தடுத்து நிறுத்திக் கொண்டே இருக்கிறது இப்போது எல்லாம். எழுத்து என்பது ஒருவித தந்திரம். செய்தி பகிர்ந்து கொண்டே எனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு கர்வம்.  தன்னை உயர்த்திக் கொண்டு சக மனிதர்களை இரட்சிக்கவே இங்கே நிறைய பேர்கள் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

தொடர்பற்று இருக்கும் ஒரு மிகப்பெரிய வேட்கை ஒன்று என்னை பொதுவான நியதிகளுக்குள் இருந்து விலக்கியே வைத்திருக்கிறது. சுற்றி நிகழும் அனுபவங்களை கூர்மையாக கவனித்து உள்வாங்கிக் கொண்டு சிறு துரும்பென நகரும் அற்பனுக்கு எதற்கு பேச்சு என்று ஒரு கேள்வி இடைவிடாது கேட்டுக் கொண்டிருக்கிறது உள்ளுக்குள். எது சுகமோ அதைச் செய் என்று உறுதி எடுத்துக் கொண்டிருக்கிறேன். ஓய்வு என்பதை முழுமையான மனதுக்கும் உடலுக்குமான ஓய்வாய் நான் மாற்றிக் கொண்டுவிட்டேன். காற்றில் இறகு மிதப்பது போல ஒரு தாளகதியில் அறிவற்று இருப்பது சுகம். அறிவு ஆராய்கிறது. ஆராய்தல் எப்போதும் அழகுணர்ச்சியை மழித்து விட்டு.....டெக்னிக்காலிட்டி பல்லை காட்டுகிறது.

எனக்கு இங்கே ஒன்றும் புரியவே வேண்டாம். எது எப்படி நிகழ்கிறது என்ற நான் அறிந்து கொள்ளவே வேண்டாம். மெல்லிய காற்று உடல் தடவி செல்லும் சுகத்தை நான் அனுபவித்துக் கொள்கிறேன். நல்ல இசை ஒன்று என் காதுகளைத் தடவிச் செல்லட்டும். பகலைப் போன்ற நிலவொளியில் ஏதேனும் நட்சத்திரங்கள் தெரிகிறதா என்று தேடி தேடி அதோ அங்கொன்று.. இதோ இங்கொன்று என்று கண்டுபிடித்து மகிழ்ந்து கொள்கிறேன். சுற்றி நிகழும் எல்லாம் நிகழட்டும். என் தொடர்பு என்பது சாட்சியாய் இருப்பது மட்டுமே...! உருவமோ அருவமோ எதோ ஒன்றாய் இருந்து விட்டுப் போகட்டும் கடவுள். இந்த பூமியில் நான் ஜனித்து இதுவரையில் வாழ்ந்து வளர்ந்து பின் இங்கேயே மடிந்து போகப் போகிறேன்.

இங்கே ஒரு ஜீவனாய் நான் வாழ நிறைய கருணைகள் எனக்கு உதவியிருக்கின்றன. நிறைய நேரடியாகவும் மறைமுகமாகவும், நான் வாழ்ந்த சமூகத்தினரிடமிருந்தும் என்னை சூழ்ந்திருக்கும் இயற்கையிடமிருந்தும் பெற்றிருக்கிறேன். எனக்குள் நன்றியுணர்ச்சி இருக்கிறது. ஏதோ ஒரு சுகம், வலி, துக்கம் சந்தோசம் என்று எப்போதும் எனக்கு நிறைய, நிறைய இந்த இயற்கை கொடுத்திருக்கிறது. நான் அதற்கு நன்றி சொல்லிக் கொண்டே இருக்கிறேன். சிவா....சிவா.... சிவா என்று இந்த பிரபஞ்சத்தை இழுத்துப் பிடித்து எங்கும் ஊடுருவியிருக்கும் அந்த சக்தியை சிறு நெய்விளக்கேற்றி பூக்களைக் கொண்டு பூஜித்து அஉம் நமசிவாய என்ற ஐந்தெழுந்து மந்திரத்தை ஓதி ஓதி உள்ளுக்குள் இருக்கும் அதிர்வுகளை சமப்படுத்திக் கொள்கிறேன். அமைதியடைந்து கொள்கிறேன்.

ஒரு மயானத்தில் இழுத்துக் கொண்டு போய் விறகு கட்டைகளின் மீது அடுக்கி மேலே சாண விரட்டிகளை வைத்து மூடி, அதற்கும் மேல் சாணத்தை மெழுகி வைக்கோல் பிரிகளை வைத்து மூடி கூட்டமாய் வந்து எரித்து விட்டு பின் குளித்து விட்டு வீடு திரும்பி விடுகிறார்கள். அதோடு முடிந்து போகும் இந்தப் பயணத்தில் யார் கூட வருவார்கள்...? நீதானே.....நீதானே...நீதானே... என்று கண்ணீர் மல்க ஒரு பெரும் பேரமைதியை நோக்கி கதறிக் கதறி சப்தமின்றி ஒடுங்கி ஒரு மூலையில் அமர்ந்து கொள்கிறேன். பத்தி வாசனையும், சாம்பிராணி வாசனையும் புற உலகினை விட்டு எங்கோ உள்ளுக்குள் கூட்டிச் சென்று ஒரு பெருங்கருணைக் கடலுக்குள் தள்ளி விட்டு விடுகின்றன. தியானத்தின் உச்சம் அழுகையாகிறது. கேவிக் கேவி அழும் ஒரு அழுகை.

ஏன் அழுகிறேன்...? தெரியாது....

யார் அழச் சொல்கிறார்கள்....? தெரியாது.

ஏன் இதை இங்கே பேசிக் கொண்டிருக்கிறேன்...? தெரியாது.

தெரியாதுகளில் நகர்ந்து கொண்டிருக்கிறது.... என்னுடைய 37 வது வருட வாழ்க்கை. குறையோடிருக்கும் வரையில் நீ பேசிக்கொண்டிருப்பாய் என்று உள்ளுக்குள் ஆதி குரு சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறான்.

ஓய்விற்குள் விழுந்து கிடக்கையில் பாலகுமாரன் ஐயாவின் உடையார் ஐந்தாவது பாகம் நேற்று முடித்து ஆறாம் பாகமான இறுதி பாகம் கையிலெடுத்திருக்கிறேன். சுமார் இரண்டு வருடங்களாக படித்துக் கொண்டிருக்கிறேன். படித்து இந்த ஆறு பாகமும் முடிந்து விட்டால் இந்த அனுபவத்திலிருந்து வெளியே வந்துவிடுவோமோ என்ற பயம் எனக்கு. அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டு மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கிறேன். ஐந்தாம் பாகம் இறுதியில் உபதளபதி வைணவதாசன் ஒற்றறிய சென்று மேலைச் சாளுக்கியர்களால் கொல்லப்படுகிறார். இந்த முறை ஊருக்கு போய்விட்டு வரும் போதுதான் பாலகுமாரன் ஐயாவின் சொர்க்கம் நடுவிலே புத்தகம் வாங்கி வந்தேன். 

உடையார் ஐந்த்தாம் பாகம் படிக்கும் போதே சொர்க்கம் நடுவிலேயேவையும் ஆரம்பித்து விட்டேன். சொர்க்கம் நடுவிலே கதையில் வைணவதாசன் மரணித்த பின்பு பித்ருலோகம் என்னும் உலகத்தில் இருந்து கொண்டு மரணத்திற்கு பின்னான வாழ்க்கை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். அதைப் படித்துக் கொண்டே வைணவதாசன் என்னும் அந்தண ஒற்றனின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்று உடையாரில் படித்த போது இன்னும் நெகிழ்ச்சியாய் இருந்தது. பாலகுமாரன் ஐயா என்பவர் புறத்தில் எப்படிப்பட்டவர் என்று எனக்குத் தெரியாது. தொடர்பில்லை. அகத்தில் எனக்கு நல்லதொடர்பிருக்கிறது. அகத்தொடர்பே போதும் என்றும் தோன்றுகிறது. அவர் என்னை சூட்சுமமாய் ஆசிர்வதித்திருக்கிறார். புறத்தில் வெளிப்படுத்திக் கொள்ளாத ஒரு பேரன்பு எனக்கு எழுத்துச் சித்தர் மீது இருக்கிறது.

மிகப்பெரிய கண்மாய் மாதிரி பாஸ் இந்த வாழ்க்கை .......தீரத் தீர முங்கி முங்கி குளிக்கணும்.கை கால் எல்லாம் ஊறிப் போய் கண்கள் சிவக்க கோடை காலத்துல குளிக்கும் போது எப்டி இருக்கும் அப்டி இருக்கு இப்போ எனக்கு. சில நேரம் ஆழத்துல போய் தண்ணிய குடிச்சுடுறேன்...அப்புறம் மூச்சு திணறி இருமி, இருமி தண்ணிய வெளில எடுக்குறேன். சில நேரம் ஆழம் தெரியாம உள்ளுக்குள்ள போய் மாட்டிக்கிட்டு திக்கித் திணறி யாராச்சும் காப்பத்துவாங்களா என்று பதறி வெளியே ஓடி வருகிறேன். 

சில நேரம் யார் யாரோ வந்து கை கொடுத்து காப்பத்துறாங்க. நெகிழ்ச்சியா கை பிடித்து கண்ல ஒத்திக்கிட்டு நன்றி சொல்றேன். சில நேரம் மல்லாக்க படுத்துக் கொண்டு பூமிக்கும் ஆகாயத்துக்கும் தொடர்பற்று மிதக்கிறேன். தெரிஞ்ச வரைக்கும் நீச்சலடிக்கிறேன் தெரியாம ஒரு பயம் வரும் போது கரையோரமா ஆழம் குறைஞ்ச பகுதியில வந்து தேமேன்னு உட்கார்ந்துக்கிறேன்.....

குளிச்சது போதும் வாடான்னு ஒரு நாள் அம்மா மாதிரி கம்பெடுத்துக்கிட்டு வந்து ஒரு சக்தி கூப்பிடும் பொது.....அச்சச்சோ அடிப்பாளேன்னு வந்து ரொம்ப நாழி ஆயிடிச்சேன்னு சொல்லி அவ கையப் புடிச்சுக்கிட்டு கிளம்பிறப் போறேன்....

அவ்ளோதான் பாஸ் வாழ்க்கை....! 

விளக்கவோ...பெருமைப்பட்டு சொல்லவோ இங்க ஒண்னுமே இல்லை...அன்பு செலுத்துறதும், நன்றியோட வாழ்றதும் மட்டுமே இங்க மிகப்பெரிய தேடலுக்கு எனக்கு கிடைச்ச விடை.....

சுழலானேன்... ஒரு சுழலானேன்...
பெருங்காற்றினூடே ஒரு சுழலானேன்...
திசையறியேன்...நான் திசையறியேன்....
சுற்றிச் சுழன்று செல்லும் திசையறியேன்...
வகையறியேன்...வாழ்வின் வகையறியேன்....
கணத்தில் மாறும் நிலையறியேன்...
கணத்தில் மாறும் நிலையறியேன்...
உடலானேன்...நான் உயிரானேன்...
யாரென்று என்னை நானறியேன்....
யாரென்று என்னை நானறியேன்....!

சம்போ....!!!!!!!தேவா சுப்பையா...

2 comments:

சே. குமார் said...

மிகவும் அருமை அண்ணா...
ரொம்ப எதார்த்தமாய்... ஆழமாய் சொல்லிச் சென்றிருக்கிறீர்கள்...

கவிதை சொல்கிறது பதிவின் அர்த்தத்தை...

உடையார் படிக்க வேண்டும்...

அருமை...

J Mohaideen Batcha said...

அனுபவப்பூர்வமான நிதர்சனத்தை உணர்த்தும் பதிவு!