Pages

Saturday, October 20, 2012

இசையோடு இசையாக...தொகுப்பு 8!


ஓடி வந்து உன்னைச் சந்திக்க தேக்கி வைத்திருக்கும் ஆசைகள்தான் எத்தனை எத்தனை...!!! என் வாழ்க்கையின் சொர்க்க நிமிடங்கள் எல்லாம் உன் நினைவுகளால்தான் நிரம்பிப் போயிருக்கிறது. காதலைச் சொல்ல வார்த்தைகள் தேவையில்லை என்று நான் என் விழிகளால் உனக்கு சொன்ன செய்தியை வாங்கிக் கொண்டு புன்னகைத்த உன் விழிகளை விட ஒப்பற்ற கவிதையொன்றை இது வரையில் நான்  வாசித்திருக்கவில்லை. ப்ரியங்களைச் சுமந்த ஒரு கவிதை ஒன்றை உனக்காக எழுதிவிடத் துடிக்கும் என்  உணர்வுகள் எல்லாம் தோல்வியில் உன் முன் மண்டியிட்டு உன் பாதங்களை முத்தமிட்டு மெளனத்தையே கவிதையாக உன் பாதங்களில் சமர்ப்பிக்கின்றன.

உடலைத் தொலைத்து விட்டு உணர்வுகளோடு வாழும் வாழ்க்கை ஒன்றை உன்னோடு வாழ்ந்து தொலைப்பதில் இருக்கும் செல்லமான அவஸ்தையை எப்படி நான் வர்த்தைகளுக்குள் கொண்டு வருவது.....? எதுவுமே பேசாமல் உன் விழிகளைப் பார்த்துக் கொண்டே நான் அடைந்த பரவச நிலையை எப்படி மொழி பெயர்ப்பது? காதலென்ற அற்புத  உணர்வை ஒரு சிற்பியாய் நான் செதுக்குகையில் கிடைக்கும் அற்புத சிலையை ஒத்த வார்த்தைக் கோர்வைகள் எல்லாம் மிக சாதாரணமானவைகள்தான்....

இளஞ்சூரியனின் கதிர்களை உடலெல்லாம் வாங்கிக் கொண்டு ஒரு கடற்கரை மாலையில் உன்னோடு கவிதையாய்ப் பேசிக் கிடக்கும் சுகத்தினை உணர்ந்த எனக்கு சொர்க்கம் கூட நரகம்தான்...! ஸ்பரிசங்களில் தொலையும் காதலை நீ தூரங்களிலேயே வாழ வைப்பதுதான் எனக்கு மிகவும் பிடித்தமானதாய் இருக்கிறது என்பதாலேயே உன் தூரங்களை நீ அதிகப்படுத்திக் கொள்வது இன்னும் அழகானது....

உதடுகள் சேர்க்கும் ஸ்தூல முத்தங்கள் கூட்டிச் செல்லும் காமம் காதலை கொன்று போட்டு பிரபஞ்ச நகர்விற்குப் பயன் படும் கருவிகளாய் நம்மை மாற்றிவிடுமென்றறிந்துதான் நாம் கருவிகளாய் மாறப் பிறந்தவர்கள் இல்லை கர்த்தாவின் மூலத்தை அறியப்பிறந்தவர்கள் என்று நீ சொன்ன போதுதான் நான் மோட்சமடைந்தேன் என்பது உனக்குத் தெரியுமா? மோட்சமென்பது உடல் மறந்து ஒரு பஞ்சு பறப்பது போல இலக்குகளின்றி காற்றில்  தாவித் தாவி பறப்பது போன்றதென்று உன்னால் தானே உணர்ந்தேன்..

ஒரு நாள் அனிச்சையாய் உன் கை கோர்த்து நடந்த அந்த நேரத்தில் காலம் நின்று போக, ஐன்ஸ்டீன் பிராயசைப்பட்டு கண்டு கொண்டு பெரும் அறிவியல் சாதனையாய்ச் சொன்ன காலம் பற்றிய சார்புக் கொள்கையை நாம் அசாதரணமாய் கடந்து சென்றோம்...என்பதை நீ இல்லாதபோது நீண்டு கொண்டே சென்று தன் கோரப்பற்களைக் காட்டிய காலம் உறுதி செய்தது. கவிதைகள் செய்வது ஒரு ஆண் பெண்ணைக் கவர்வதற்காக மட்டும் அல்ல.. ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தான் இருப்பதை உணர்வதற்காக என்று நீ சொன்ன நிமிடத்தில் நான் எழுதிய வார்த்தைகள் எல்லாம் உயிர் பெற்று எழுந்து உனக்காய் ஒரு நடனமாடியேதான் முடிந்திருந்தன...

இரவுகளைக் கொளுத்திக் கொளுத்தி நான் பற்ற வைக்கும் பகல்களில் உன் நினைவுகள் எல்லாம் குளிர்ச்சியாய் என்னைத்  தழுவ உதயமாகும் அந்தி நேரத்தில்தான் எனக்குள் பூக்கும் உன் நினைவுகள் இரவைத் தருவித்து விடுகின்றன. உன்னோடான நிமிடங்கள் அற்புதமென்றால் நீயில்லாத பொழுதுகள் அதி அற்புதமாகிப் போய்விடுவதால்தான்...

நான் காற்றைக் கொஞ்சம் நிற்கச் சொன்னேன், பூப்பறித்துக் கோர்க்கச் சொன்னேன்... ஓடிவந்து உன்னைச் சந்திக்க, மெத்தை ஒன்று தைக்கச் சொன்னேன், மேகம் அள்ளி வைக்கச் சொன்னேன், கண்ணை மூடி உன்னைச் சிந்திக்க....

நீதானே என் பொன் வசந்தெமென்று காலங்கள் கடந்தும்  காதல் பேசும் இசை ராட்சசனின் ஆளுமையில் சிக்குண்டுப் போய் என்னிடமிருந்து வார்த்தைகள் பிறந்து வந்த கதையை நான் சொல்லித்தான் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமா.. என்ன? காதலின் இசை வடிவத்தை ப்ரியங்களோடு அள்ளிப் பருகும் உங்களுக்கு வாழ்த்துக்களைச் சொல்லிக் கொண்டு நான் தற்காலிகமாக வாய் மூடிக் கொள்வதுதானே நாகரீகம்...!!!!

இனி...காதலை இசையாய் பருகுங்கள்....!


'  நேரில் பார்த்து பேசும் காதல் ஊரில் உண்டு ஏராளம்...
நெஞ்சில் பார்த்து பேசும் காதல் நின்று வாழும் எந்நாளும்.
தள்ளி தள்ளி போனாலும்
 உன்னை எண்ணி வாழும்
ஒரு ஏழை இதயம் நெஞ்சத்தை பாரடி..
தங்க மெத்தை போட்டாலும்
உன் நினைவில் என்றும் தூக்கம் இல்லை
ஏன் என்று சொல்லடி…
சாத்தி வைத்த வீட்டில் தீபம் ஏற்றி வைக்க நீ வா...
மீதி வைத்த கனவை எல்லாம் பேசி தீர்க்கலாம்.. .. '


தேவா. S


4 comments:

சிட்டுக்குருவி said...

அருமையான பதிவு....
பொன்வசந்தம் பொன் வசந்தம்தான்

சுபத்ரா said...

ரம்மியம்..

மாதேவி said...

காதல் பூ மணம்பரப்பி நிற்கின்றது.

புலவர் சா இராமாநுசம் said...

காவியமா கட்டுரையா கவிதை வடிவா
காணுமிரு கண்களுமே கண்டக் காட்சி ஓவியமாய் உயிர்பெற்று வரவும் முடிவா
உணர்வுதனை தூண்டும் உரிய மாட்சி