Pages

Tuesday, October 30, 2012

ராஜாவின் கனடா இசைக்கச்சேரியும்...மட்டுப்பட்ட மனித பார்வைகளும்..!
கட்டுக்கடங்கா காட்டாறு அவன். திக்குகளின்றி சுற்றித் திரியும் காற்று அவன். பற்றி, பற்றி பற்றிக் கொள்பவரை எல்லாம் தீயாய் மாற்றும் பெரு அக்னி அவன். கணிதக் கூட்டுக்களைக் கொண்ட கட்டுப்பட்ட நிலையைக் கொண்ட மட்டுப்பட்ட மனிதனில்லை அவன். எல்லோரும் சாதாரணமாய் சுவாசிக்க. அவன் சுவாசம் எங்களுக்கு ஸ்வரமாகிப் போனது. வார்த்தைகளைக் கடந்த பெரும் மெளனத்தை சுமந்து கொண்டிருக்கும் பிரபஞ்சத்திலிருந்து அதை பிழிந்தெடுத்து இசையாக்கிக் கோர்த்துக் கொடுக்கும் பிரம்மா அவன்....

அவன், அவன் என்று விளிப்பதாலேயே அவன்  ஒன்றும் அவன் இல்லை. அவன், அவள், அது, இது, என்று சுட்டியுணரமுடியாத பேரியக்கத்தின் இசை வெளிப்பாடு அவன். 1970களுக்குப் பிறகு பிறந்த பிள்ளைகளை எல்லாம் யார் யாரோ பெண்கள் பெற்றெடுத்து தாயென்று அறிவித்துக் கொண்டாலும் அத்தனை பிள்ளைகளையும் அவன் இசைதான்  தாலாட்டியது. கர்நாடக சங்கீத பாரம்பரியத்துக்குள் பாடல்கள் சாமானியனுக்கு எட்டாக்கனியாய் இருந்த போதும் சரி, அதே இசை தபேலாக்களுக்குள் நின்று கதைகள் பேசிய போதும் சரி, சங்கீதம் என்பது நமக்கு அன்னியமாய்த்தான் இருந்தது.

அவன்..... ஆர்மோனியப் பெட்டியைத் திறந்த போது அதிலிருந்து வெளிப்படட் அற்புத இசை வடிவங்கள் நமக்கெல்லாம் வாழ்க்கையாகிப் போனது. அவன் வாழ்க்கையை இசையாய்க் கொடுத்தான்.. அது சந்தோசத்தையும் கண்ணீரையும் சரிபாதியாய் நமக்கு வழங்கியது.

முதல்படத்தின் டைட்டிலிலேயே துள்ளிக் குதித்து குத்தாட்டம் போட்டபடியே பிறந்த அவனின் திரை இசை அன்னக்கிளி உன்னைத் தேடுதே... என்று அந்தப் பெண்குரல் திரையில் தேடிய கணத்திலிருந்து ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களும் அந்த இசை அரசனை தேட ஆரம்பித்தார்கள். தமிழ் சினிமாவில் பிரளயத்தை உண்டு பண்ணிய பெரும் புயல் அவன்.


ஆயிரம் தாமரை மொட்டுக்களே என்று .... கிராமியத் தெம்மாங்குப் பாடல்களை எல்லாம் திரைக்குள் கொண்டு வந்து கொடுத்த மிகப்பெரிய ஜனரஞ்சக சக்கரவர்த்தி அவன். அவன் இசையால் அழ வைப்பான், சிரிக்க வைப்பான், ஆட வைப்பான், பாட வைப்பான், மெளனித்து பெரும் தியானத்திற்குள் சென்று சேரும் பாக்கியத்தை சாமானியருக்கும் பெற்றுக் கொடுப்பான்....! ஏழு ஸ்வரங்களும் அவன் ஏறி இறங்கி விளையாடும் படித்தளங்கள்.

திட்டமிட்டு செயல்படவேண்டிய அவசியங்கள் அற்றவன் மட்டுமல்ல அவன், எந்த ஒரு இன, சாதி, மொழிகளுக்கு மட்டும் அவன் சொந்தகாரன் அல்ல...பிராணன் எப்படி மனிதர்களுக்கு பொதுவோ, அதே போல அவனின் இசையும் யாவருக்கும் பொது. நில் என்று சொன்னால் நிற்பதற்கும், போ என்று சொன்னால் போவதற்கும் அவன் என்ன ஆதாயங்களைத் தேடும் அரசியல் கட்சியையா நடத்திக் கொண்டிருக்கிறான்...? கூட்டிக் கழித்துப் பார்த்து தேவைகளை அமைத்துக் கொள்ள.......

அவன் மானுட சந்தோசங்களை வார்த்தைகளைக் கடந்த தன் பெரும் இசையால் கட்டியமைத்த பிரம்மா....அவன் யாருக்கும் கட்டுப்படவேண்டிய அவசியம் இல்லை. தேவையும் அவசியமும் இல்லாமல் இசையின் மீது களங்கம் சுமத்தி அவனின் இசைக்கச்சேரியைக் கொச்சைப்படுத்தும் மனிதர்கள் எல்லாம் விசாலபார்வை பார்க்கிறேன் பேர்வழி என்று மனிதநேயத்தை புதைத்து விட்டு இறுகிப் போன மனதோடு துக்கத்தை தோளில்  எப்போதும் சுமக்கச் சொல்லும் குரூர புத்திகளுக்குச் சொந்தக்காரர்கள்.

இசை காயம் பட்ட மனிதர்களுக்கு மருந்து என்பது உண்மையானால் கனடாவில்  இருக்கும் தமிழர்களின் இரணத்தை அவனின் இசை போக்கிவிடுமென்ற பயத்திலேதான் தேதி மாற்றச் சொல்கிறார்களா....? சந்தோசமாய்  வலிகளை மறக்கும் மனிதர்கள் சுயமாய் எழுந்து நின்று வலிவு பெற்று விடுவார்கள், அப்படி வலிவு பெற்று விட்டால் அவர்களின் சோகத்தை மூலதனமாக்கி பிழைப்பவர்களின் சோற்றில் மண் விழுந்து விடுமென்ற பயம் அவர்களின் நெஞ்சைக் கவ்விப் பிடித்திருக்க வேண்டும்.

இசை எப்போதும் மனிதர்களின் இயல்புக்கு எதிரானது அல்ல... அதுவும் தமிழர்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த அவனின் இசை காயம் பட்ட மனிதர்களை வருடிக் கொடுத்து எழுச்சி மிகுந்த மாதத்தில் வீறு கொண்டு எழச்செய்யுமே தவிர அவர்களை முடக்கிப் போட்டுவிடாது என்பதை தமிழர் உணர்வு பற்றி பேசும் அரை குறைகள் விளங்கிக் கொள்ளவேண்டும்.

களங்கமற்ற இசைத்தாயின் ஞானப்பிள்ளையின் மீது களங்கம் சுமத்த நினைக்கும் அத்தனை பேரும் அறுவெறுப்பான உணர்வுகளுக்குச் சொந்தக்காரர்களாய் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். குரூரமாய் சிந்தித்து சிந்தித்து தன் தாயையே சந்தேகப்படும் கரடு முரடான முரட்டுப் பிள்ளைகளையும் தாய் தன் பிள்ளையாய்த்தான் பார்ப்பாள்.

இளையராஜா என்னும் இசைப் பிரம்மா....

தன்னை சாடுபவர்களையும் இசையால் தாலாட்டத்தான் செய்வார். கத்துக்குட்டிகளும் கரப்பான் பூச்சிகளும் தன் முன் தோன்றும் சிறு மக்கள் கூட்டத்தைக் கண்டு தங்களைக் கடவுளாய் எண்ணிக் கொண்டு கர்ஜிக்கிறேன் பேர்வழி என்று ஊளைகளிடும் போது நிஜ ஜாம்பவன்.. கர்வத்தோடு இருப்பதில் தவறு ஏதும் இல்லை தானே...? அவன் படைப்பவன். இல்லாததிலிருந்து இசையைப் படைத்து மனிதக் குழந்தைகளுக்கு தூளி கட்டி தாலாட்டிய தாய்......

இளையராஜாவின் கனடா இசைக் கச்சேரியின் மீது அவதூறு பரப்பும் செயல்களைச் செய்பவர்களிடம் அன்போடு எடுத்துக்கூறி....அவன் காயம்பட்ட உணர்வுள்ள தமிழ்ச் சொந்தங்களை தன் இசையால் வாரி அணைத்துக் கொள்ள வருகிறான் என்று சொல்லுங்கள்...! தமிழர்களின் நெஞ்சில் இன்னமும் ஒட்டிக் கொண்டிருக்கும் ஈரத்திலும், நேசத்திலும், காதலிலும், வீரத்திலும், திமிரிலும், கோபத்திலும் சோகத்திலும் அவனின் இசை  ஆளுமையே அதிகம் என்று உரக்கச் சொல்லுங்கள்...!

தமிழர்களுக்கு எல்லாம் தன் ஒப்பற்ற இசையால்  முகவரி கொடுத்த இளையராஜா என்னும் சுடரை எப்போதும் போற்றுவோம்....இசை என்னும் அற்புத உணர்வால் ஒன்று கூடி அன்பான சமூகத்தின் ஒப்பற்ற அடையாளம் ஆவோம்...!

" நெஞ்சம் விளையாடுது நித்தம் இசைபாடுது
எங்கும் சுகமானது எங்கள் வசமானது
விழியில் தெரியும் அழகு எதுவும் இனிமேல் நமது
விடியும் வரையில் கொண்டாட்டம் தான்
நிலவும் மலரும் செடியும் கொடியும்
கடலும் நதியும் கவிதை சொல்லும்

ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா.."


தேவா. S

8 comments:

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

அருமை...அருமை...!

பராசக்தி said...

சோகம் நம்மை தாக்கிய போதும் அதை ஊரறிய கொண்டாடிய வகையிலும் இசையின் பங்கு இல்லாமலா மாவீரர் தினம் கொண்டாடினார்கள்? சோகத்தில் யாரும் மௌனம் சாதிக்கவில்லையே? இழப்பின் சோகம் உலகமெல்லாம் பரவ இன்றும் பழைய நினைவை மீட்க காரணம் இசை தன் பெரும் பங்கை செய்யவில்லையா? இசை தரும் சோகம் மட்டும் வேண்டும் ஆனால் இசையைப் படைக்கும் இசைதேவன் மட்டும் என்ன பாவம் செய்தார்

Anonymous said...

super ah sonninga.. avarai vaithu arasiyal seiyya ninaikirargal.. avarin isai dhaan makkalukku marundhu endru avargal unara vendum

Vignesh S R said...

களங்கமற்ற இசைத்தாயின் ஞானப்பிள்ளையின் மீது களங்கம் சுமத்த நினைக்கும் அத்தனை பேரும் அறுவெறுப்பான உணர்வுகளுக்குச் சொந்தக்காரர்களாய் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்

Super sir.... Sariya sonneergal

Anonymous said...

சான்டி புயல் காரணமாக இளையாராஜா நிகழ்ச்சி ரத்து

http://tamil.oneindia.in/movies/news/2012/10/ilayaraaja-s-canada-concert-cancelled-163910.html

இசைஞானி பக்தன் said...

முதலிரண்டு பத்திகளை குறைந்தது 10 முறையேனும் வாசித்துவிட்டேன். இவ்வளவு அற்புதமான மொழிநடையுடன் ஒரு பதிவினை வாசித்து நீண்ட நாட்களாகின்றன. அமர்க்களப்படுத்திவிட்டீர்கள். இன்னும் நிறைய எழுதுங்கள் சகோ. :-)

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்துப் படித்தேன்...

ராஜா ராஜா தான்...

நன்றி...
tm8

saidaiazeez.blogspot.in said...

ராஜா கைய வெச்சா அது ராங்கா போவதில்லை...